‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும்

pathivu1a

முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம்.

‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு முன்னரே மலேசியா வந்துவிட்டார் ஷோபாசக்தி. ஏற்கனவே சில முறை மலேசியா வந்திருந்தாலும் இலக்கிய நிகழ்வுக்காக ஷோபா வருவது இது இரண்டாவது முறை.

இதுதான் மலேசியா என ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் காட்டப்படும் உயர்ந்த கோபுரங்கள்; உயர் ரக உணவகங்கள், மேன்மை பொருந்திய மக்கள் என்பதனையே நாங்களும் ஷோபாசக்திக்கு காட்ட விரும்பாமல் கட்டமைக்கப்பட்ட காட்சிகளின் மறுபக்கமான சீரழிந்து கிடக்கும் தோட்டங்கள்; கூலி வேலை செய்கின்றவர்கள் என நிதர்சனங்களைக் காட்டினோம். மலேசியத் தமிழர்களின் வாழ்வை புரிந்துகொள்ள அவருக்கு அதுதான் உதவியாக இருக்கும்.

பிரிக்பீல்ட் நாகாஸ் உணவகத்தில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டிய பெயரினை பதியும்படி கேட்டுக்கொண்டதால்; எதிர்ப்பார்த்த நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்துரையாடலுக்கு வந்திருந்தனர்.

‘குவர்னிகா’ தொகுப்பில் இடம்பெற்றிருந்த மலேசிய படைப்புகள் குறித்து தங்களின் கருத்துகளை கலந்துரையாடலில் பதிவு செய்ய, கே.பாலமுருகன், பூங்குழலி வீரன், பாண்டியன் அன்பழகன், சல்மா தினேஷ்வரி ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் பேசியது கடந்த வல்லினத்தில் பிரசுரமாகியிருக்கிறது.

அவர்களின் கருத்துப்பதிவுக்கு பிறகு, ஷோபாசக்தி குறித்த அறிகமுகத்தை எழுத்தாளர் கே.பாலமுருகன் செய்தார்.

ஷோபாசக்தியுடனான கலந்துரையாடல் தொடங்கியது, ஷோபா இவ்வாறு தனது உரையைத் தொடக்கினார்:

“நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் வல்லினம் தோழர்களிற்கும் இந்த அவைக்கும் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தோழர்களே! நானொரு சிறந்த சொற்பொழிவாளன் கிடையாது. ஆனால் நான் எப்போதுமே இப்படியிருந்தவனல்ல. எனது பதின்ம வயதுகளில் நான் ஒரு தீப்பொறிப் பேச்சாளனாகத்தான் இருந்தேன். உணர்சியும் உறுதியும் கொப்பளிக்கக் கூட்டங்களில் நான் கர்ச்சனை செய்த காலமொன்றிருந்தது. அப்போது என்னிடம் குழப்பங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை, வரித்துக்கொண்ட கொள்கையின்மீது முழுவதுமாக விசுவாசம் இருந்தது. கேட்டுக் கேள்வியற்ற நம்பிக்கையிருந்தது. இயக்கம் சார்ந்து உறுதியான இலட்சியமொன்றிருந்தது. கேள்விகளே என்னிடம் இருக்கவில்லை. அதனால் எந்தச் சபையிலும் ஆற்றொழுக்காகப் பேசிச் செல்வேன், அடித்துப் பேசுவேன்.

ஆனால் இப்போது அப்படியல்ல. எனக்கு எல்லாவற்றிலும் சந்தேகமும் கேள்விகளும் உண்டு. எந்தக் கோட்பாட்டையும் இலட்சியத்தையும் உறுதிபடச் சொல்ல இயலாதவனாகயிருக்கின்றேன். கடந்தகால அனுபவங்கள் என்னைத் தெளிவுக்கு இட்டுச் செல்வதற்கு மாறாக என்னை முற்றிலும் குழப்பமான நிலைக்கே இட்டு வந்திருக்கின்றன. பேசிக்கொண்டிருக்கையிலேயே நான் சரியாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேனா என எனக்குச் சந்தேகமாகிவிடுகிறது. என்னோடு நானே முரண் உரையாடலை தட்டுத்தடுமாறி நிகழ்த்த வேண்டியிருக்கிறது. இந்தத் தயக்கங்களோடுதான் நான் இங்கே பேச வந்திருக்கின்றேன்.

pathivu1bகுவர்னிகா தொகுப்பு நூலில் இடம்பெற்ற மலேசியத் தமிழ் எழுத்துகளைக் குறித்து இங்கே திறனாய்வு செய்த நான்கு தோழர்களும் ஆழமான தயாரிப்புடனும் கை நிறைந்த குறிப்புகளுடனும் மிகச் சிறப்பாக உரையாற்றினீர்கள். இப்போதெல்லாம் நூல் திறானாய்வுக் கூட்டங்களிலோ விமர்சனக் கூட்டங்களிலோ இவ்வாறு பொறுப்புணர்வுடனும் சிரத்தையுடனும் பேசுவது கொஞ்சம் அரிதான காட்சியாகிவிட்டது. பொதுவாகவே ‘நேற்றுதான் புத்தகத்தை கொடுத்தார்கள், அட்டை அழகாக இருக்கிறது, ஆயினும் சில அச்சுப்பிழைகளுள்ளன’ என்று ஆரம்பிப்பார்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு யாரையெல்லாம் திட்டவும் ஏசவும் பிடித்திருக்கிறதோ அதைச் செய்கிறார்கள். மேடையிலேயே புத்தகத்தைக் கிழித்துப் போடுவதுமுண்டு… அதெல்லாம் செய்ய வேண்டியதுதான், ஆனால் புத்தகத்தை குறித்து விளக்கிவிட்டு செய்ய வேண்டிய கருமம் அது.

குவர்னிகா தொகுப்பை வெளியிட முடிவு செய்தபோதே மலேசிய தமிழ் எழுத்துகளையும் சாத்தியமான அளவு அதிகளவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். எங்களது வேண்டுகோளையேற்று குவர்னிகா ஆசிரியர் குழுவில் இணைந்த ம.நவீன் மிகுந்த சிரத்தையுடன் மலேசிய எழுத்துகளைத் திரட்டித் தந்தார். குவர்னிகாவை மலேசிய வாசகர்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்க உழைத்த வல்லினம் தோழர்களோடு நான் இந்தத் தருணத்தில் 41வது இலக்கியச் சந்திப்புக் குழுவினரின் மகிழ்சியைப் பகிர்ந்துகொள்கிறேன்.

குவர்னிகா தொகுப்புக்கு வந்த சில பிரதிகளை ஆசிரியர் குழுவினுடைய இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் நாங்கள் நிராகரிக்க வேண்டியிருந்தது. மிகவும் கறாரான அளவுகோல்களை நாங்கள் கையாளாவிட்டாலும் முதிராத எழுத்துகள் என நாங்கள் கருதியவற்றை தொகுப்பில் நாங்கள் சேர்த்துக்கொள்வில்லை. ஆனால் மலேசியாவிலிருந்து எழுதப்பட்ட பிரதிகளில் ஒன்றுகூட நிராகரிக்கப்படவில்லை.

பதிப்பாசிரியர் என்ற முறையில் ஒவ்வொரு பிரதியையும் ஆகக் குறைந்தது நான்கு தடவைகள் நான் படிக்க வேண்டியிருந்தது. தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் கவிதையும் கிட்டத்தட்ட எனக்கு மனப்பாடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கே அவை குறித்து திறனாய்வு செய்த தோழர்கள் மிக விரிவாகவே அவை குறித்த உங்களுக்குச் சொன்னார்கள். எனினும் அவை குறித்த எனது மனப் பதிவுகளையும் மிகச் சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னை இங்கே அழைத்துவிட்டீர்கள், தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கள்ளு வாங்கிக் கொடுத்தீர்கள், மலாக்கா செட்டி கடையில் நண்டு வாங்கிக் கொடுத்தீர்கள் என்ற நன்றியுணர்வு ஒருபுறம் எனது மனதிற்குள் கிடந்து தத்தளித்தாலும் அந்த நன்றியுணர்வின் ஒருதுளிகூட எனது இலக்கிய மதிப்பீடுகளின் மீது சிந்தாது என நீங்கள் உறுதியாக நம்பலாம்.

நவீன தமிழ் இலக்கியத்தில் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் நூறு வருடங்களிற்கும் மேலான ஆழமான வேரும் நீண்ட வரலாறுமிருக்கின்றன. புலம் பெயர்ந்த நவீன தமிழ் இலக்கியத்திற்குக் கூட முப்பது வருட வரலாறுண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களாக அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்றவையும் இந்தப் பரப்புகளில் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் என்னுடைய வாசிப்பை வைத்து மதிப்பீடு செய்தால் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு அவ்வாறு ஒரு வரலாறு இல்லையென்றே சொல்வேன். அகிலன்- சிவகங்கரி – வைரமுத்து வகையறா எழுத்துகளிற்குள்ளேயே நீண்டகாலமாக மலேசியத் தமிழ் எழுத்துகள் அமிழ்ந்துகிடந்தன. மலேசியாவின் சமூக -பொருளியில் -கல்விச் சூழல்கள், பெருந்தோட்டங்களுக்களுடன் கட்டிப்போடப்பட்டுக் கிடந்த தமிழர்களின் வாழ்வு, பண்பாட்டு வாழ்வில் இந்துக் கலாசாரத்தின் வலிமையான தாக்கம், இடதுசாரி அரசியல் முற்றுமுழுவதுமாக அரசால் தடைசெய்யப்பட்டிருப்பது, மதச்சார்புள்ள அரசு இயந்திரம், இனரீதியாகச் சிறுபான்மைச் சமூகங்கள்மீதான புறக்கணிப்புகள், ஊடகங்களின் மீதான அரசின் இறுக்கமான கண்காணிப்பு எனப் பல்வேறு காரணிகள் இந்தத் தேக்கத்திற்குக் காரணங்களாகயிருக்கலாம் எனக் கருதுகின்றேன்.

எனினும் இரண்டாயிரங்ளில் இந்தத் தடைகளை உடைத்துக்கொண்டு இங்கே இளையவர்கள் நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் பிரவேசித்திருக்கிறார்கள். அதைச் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களது எழுத்துகளும் இலக்கியச் செயற்பாடுகளும் வெளியீடுகளும் அவர்கள் நடத்தும் கருத்தரங்குகளும் நிரூபணம் செய்கின்றன. அவர்களில் முதன்மையான குழுவாக வல்லினம் குழுவினர் இருப்பதை நான் பார்க்கிறேன்.

நான் நான்காண்டுகளிற்கு முன்பு இங்கு வந்திருந்தபோது வல்லினம் குழுவில் இருந்தவர்களில் சிலர் இப்போது இங்கில்லை. வேறு பலரை வல்லினம் குழுவில் புதிதாகக் காண்கிறேன். பழையவர்களில் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் எங்கே என நான் கேட்டபோது ‘அவர்கள் கருத்து வேறுபாடுகளால் விலகிச் சென்று இயங்குகிறார்கள்’ என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் எனக்கு மிகுந்த குதூகலமாகிவிட்டது. பொதுவாகவே இலக்கியத்தில் குழு மோதல்களை வரவேற்கக்கூடியவன் நான்.

குழுக்கள் இல்லாமல் சிறுபத்திரிகை இயக்கம் கிடையாது. முரண்களும் கருத்து மோதல்களும் இல்லாமல் சமூக இயக்கமே கிடையாது. இவை நடக்காவிட்டால் சமூகம் அசைவற்றுத் தேங்கிக் கிடக்கிறது என்று பொருள்.

நான்கு வர்க்கமும் நாற்பது சாதியும் பாலின சமத்துவமின்மையும் ஆண்டானும் அடிமையும் இருக்கும் சமூகப் பரப்பில் எப்போதும் மோதல்களும் முரண்களும் இருந்தேயாகும். சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இருப்பதுபோல இலக்கிய வெளியிலும் இந்த ஏற்றத்தாழ்வுகளும் கீழறுப்புகளும் இருந்துகொண்டேயிருக்கும். எண்பதுகள்வரை ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய வெளியையும் பார்ப்பன -வெள்ளாள ஆண்கள்தானே தமது பிடிக்குள் வைத்திருந்தார்கள். அந்த ஆதிக்கப் போக்கை எதிர்த்து தொண்ணூறுகளில் நிமிர்ந்து எழுந்ததுதான் தலித் இலக்கியம். எழுத்தாளர்களென்றால், இலக்கியவாதிகளென்றால் அவர்கள் நிச்சயமாக முற்போக்காளர்களாகவும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரானவர்களாகவும்தான் இருப்பார்கள் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்கக்கூடாது. சமூகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பிற்போக்கும் கசடுமுள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது எழுத்தாளர்களிடமுமிருக்கும். எழுத்தாளர்கள் ஒருபடித்தானவர்களல்ல. “எழுத்தாளர்கள் என்றொரு வர்க்கமில்லை, மாறாக ஒவ்வொரு வர்க்கமும் தனக்கான எழுத்தாளர்களை உருவாக்கிக்கொள்கிறது” என்பார் கிராம்ஷி. அதேபோல ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு பாலினமும் தனக்கான எழுத்தாளர்களை உருவாக்கிக்கொள்கிறது. அதனால்தான் ஒவ்வொரு எழுத்தாளனும் வர்க்க – சாதிய தற்கொலை செய்யும்வரை எழுத்தாளர்களுக்கிடையேயான ஒற்றுமை, கூட்டு அரசியற் செயற்பாடுகள் எல்லாம் சாத்தியமேயில்லை என்கிறேன் நான்.

கிராம்ஷி இன்னொன்றும் சொல்வார். பிற்போக்கு எழுத்துகளை எழுதுபவனும் இலக்கியத்திற்குத் தேவை என்பார் அவர். சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை இலக்கியத்தில் பதிவு செய்யும் பாத்திரம் அவனுடையது. யோசித்துப் பார்த்தால் அதுவும் சரிபோலத்தான் தோன்றுகிறது. அந்தவகையில் சாருநிவேதிதாவும் சுஜாதாவும் நமக்குத் தேவைதான். பெரிய ஆபத்து என்ன வந்துவிடப்போகிறது? சாருவுடைய ராசலீலாவையோ, தேகத்தையோ படித்துவிட்டு ஒருவன் உடனே கிளம்பிப்போய் ‘ரேப்’பா செய்யப்போகிறான்? மிஞ்சி மிஞ்சிப்போனால் கரமைதுனம் செய்துவிட்டுப் படுத்துவிடுவான்… இதனால் சமூகத்திற்கு என்ன பெரிய ஆபத்து வந்துவிடப்போகிறது சொல்லுங்கள்!

எனது தத்துவாசிரியர்களில் மிகச் சிறந்தவரென நான் கருதும் த்ரொக்ஸி இலக்கியம் குறித்துச் சொல்லும்போது இலக்கியவாதிக்கு உண்மையை எழுத வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நிபந்தனைகளும் கிடையாது என்பார். இங்கே எனக்கு முன் பேசிய தோழர் ஒருவர் பின்நவீனத்துவ எழுத்துமுறை என்றெல்லாம் சில கேள்விகளை எழுப்பிப் பேசினார். அந்த முறையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்… முதலில் எங்களது எழுத்துகளில் உண்மைகளைப் பேசுவோம். அதை மட்டுமே பேசுவோம். எதுவரினும் அஞ்சாமற் பேசுவோம். ‘ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா, காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லிக் காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்’ என்ற எழுத்தறிவேயற்ற ஒரு கிராமத்தானின் வரிகைளைத் தாண்டிச் செல்லக்கூடிய வரிகளை இதுவரை எந்தவொரு பின்நவீனத்துவவாதியோ அல்லது வேறெந்த எழுத்தாளனோ இலக்கியத்தில் எழுதிவிடவில்லை என்பதைக் குறித்துக்கொள்வோம்.

குவர்னிகாவில் வெளியாகியிருக்கும் மஹாத்மனின் ‘கடன்’ என்ற கதை அவ்வாறே உண்மையை அறைந்து பேசும் கதை. மலேசியாவில் ஒரு தமிழன் சந்திக்கும் சிங்கள வயோதிபத் தம்பதிகளைப் பற்றிய கதையது. கதைச் சுருக்கத்தையெல்லாம் இங்கே சொல்ல விரும்பவில்லை. நீங்கள் படித்திருப்பீர்கள், அல்லது இனிப் படிப்பீர்கள். சமீப காலங்களில் தமிழ்நாட்டுக்குச் செல்லும் சிங்கள யாத்திரிகர்களையும் பவுத்த துறவிகளையும் ரொம்பவும் வீரத்துடன் கும்பலாகச் சேர்ந்து உதைக்கும் மறத் தமிழர்கள் இந்தக் கதையைப் படிக்க வாயப்பில்லை என்றாலும் அந்த மறத் தமிழர்களை மவுனமாயிருந்து ஆதரிக்கும் நம்முடைய தமிழகத்துச் சிந்தனைச் சிற்பிகள் அவசியம் படித்துப் பார்க்கவேண்டிய கதையிது. மலேசியத் தமிழ் எழுத்துகளிற்கு என்றொரு தனித்தன்மை உருவாகி வருகின்றதென்றால் அதனுள்ளும் தனித்து நிற்கும் விளிம்புநிலை மனிதனின் மொழி மஹாத்மனுடையது.

நவீனுடைய ‘இழப்பு’ கதை எழுதப்பட்ட களமான புத்ரஜெயாவையும் அந்தச் செயற்கை ஏரியையும் நவீன் நேற்று என்னை அழைத்துச் சென்று காட்டினார். உலகமயமாக்கல் மலேசியாவில் நடத்தியிருக்கும் உச்சக்கட்டப் பாதிப்புத்தான் அந்தக் கட்டடக்காடு. வீடியோ கேம்களில் வரும் நகரம்போலயிருக்கிறது இது என யவனிகாவிடம் சொன்னேன். ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கான படிமங்கள் கதை முழுவதும் பொதித்து வைக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் சாதிச் சங்கங்களின் பெருக்கத்தையும் தமிழர்களது அரசியல் கட்சிகளில் சாதியின் தாக்கத்தையும் நண்பர்கள் என்னிடம் உரையாடல்களில் சொன்னார்கள். குவர்னிகாவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் சண்முகசிவாவினது நேர்காணலிலும் அதை அவர் விரிவாகப் பேசியிருக்கிறார். எனினும் ‘இப்பல்லாம் யார் சாதி பார்க்கிறாங்க..’ என்று மென்று முழங்குபவர்களிடையே உண்மையை அறைந்து பேசும் இன்னொரு கதை பாலமுருகனின் பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு. பாலமுருகன் எப்போதுமே தனது கதைகளில் வடிவத்திற்கும் கதை சொல்லும் உத்திக்கும் வித்தியாசங்களையும் புதிதையும் காட்டுபவர். குறிப்பாக கதையின் மலேசியக் கம்பத்து நிலவியல் சித்திரிப்பு துல்லியமானது.

லதாவின் ‘அலிசா’ கதை எனக்குப் பேராச்சரியம். நான் லதாவை ஒருமுறை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர் இலங்கையைப் பூர்வீமாகக்கொண்டவர். அவரது வாயிலிருந்து ஒரு வாரத்தையைக் கேட்க நான் ஆகக்குறைந்தது அய்ம்பது வார்த்தைகள் பேசவேண்டியிருந்தது. நூறு வார்த்தைகளை நான் பேசிய பின்புதான் இரண்டாவது வாரத்தையை அவர் பேசினார். ஆனால் இந்தக் கதையில் வார்த்தைகள் இருளில் தரையில் சிந்திய பாதரசம் போல மின்னி உருள்கின்றன. எழுதுவதற்காகத்தான் சொற்களை அவர் வீணாக்காமல் சேமித்து வைத்திருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு பெண்ணுடைய ஆளுமை எவ்வாறு உருவாகின்றது என்ற கலையமைதி கொண்ட சித்திரம் ‘அலிசா’.

‘மலேசிய மலாய் சிறுகதை இலக்கியம்: ஒரு பார்வை’ என்ற பாண்டியனின் கட்டுரை மலேசியாவுக்கு வெளியே வாழும் எங்களுக்கெல்லாம் மிகவும் புதிய செய்திகளைக் கொடுத்திருக்கிறது. கட்டுரையின் இறுதியில் “இது முழுமையான கட்டுரை அல்ல, அறிமுகம் மட்டுமே” எனப் பாண்டியன் தன்னடக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிப்புப் புத்தகத்தில் இருக்காது. மிகச் செறிவான முறையில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருப்பதாகவே நான் மதிப்பிடுகிறேன்.

குவர்னிகா கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என நான்கு பிரிவுகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்புகளில் நேர்காணல் பிரிவே எனக்கு மிகவும் பிடித்தமானது. அந்த நேர்காணல்களிலொன்று ‘மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று’ என்ற மருத்துவர் சண்முகசிவாவின் நேர்காணல். அந்த நேர்காணலைப் பற்றிப் பேசுவதானால் மலேசியாவில் நவீன இலக்கியத்தின் சுவடுகள் இரண்டாயிரம்களுக்கு முன்பு இருந்ததில்லை என நான் ஏற்கனவே சொன்னதைப் பகுதியளவாவது சண்முகசிவா அவர்களுக்காக மட்டுமாவது நான் மீளப்பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இப்படித்தான் அடிக்கடி என்னை நானே மறுக்கவேண்டியதாகப் போய்விடுகிறது. அதற்கான காரணங்களை அந்த நேர்காணலில் நீங்கள் கண்டடைவீர்கள்.இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் சமூகச் செயற்பாட்டாளராகவும் இயங்கும் சண்முகசிவாவின் நேர்காணல் உண்மையை அறைந்து பேசும் இன்னொரு ஆவணம். மலேசியச் சமூகம் குறித்து மட்டுமல்ல தனிமனிதனாகத் தன்னைக் குறித்தும் அவர் திறந்து வைக்கும் உண்மைகள் நம்மை நெகிழ்ச்சியூட்டக்கூடியவை.”

ஷோபாசக்தியின் பேச்சு தொடர்ந்து குவர்னிகாவை வெளியிட்ட யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்புக் குறித்துத் திரும்பியது:

“கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த 41வது இலக்கியச் சந்திப்பில் இந்தக் குவர்னிகா இலக்கியத் தொகுப்பு வெளியிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியச் சந்திப்புத் தொடர் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை உங்களுக்குத் தர நான் விரும்புகின்றேன்.

இலங்கையின் இனமுரண்கள் முற்றிப் போராக வெடித்த நிலையில் அய்ரோப்பாவிற்கு புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் இலக்கிய வாசகர்களால் இந்த இலக்கியச் சந்திப்பு தொடக்கி வைக்கப்பட்டது. 25 வருட காலத்துக்குள் நாற்பத்தொரு சந்திப்புத் தொடர்களை நாங்கள் நிறைவு செய்திருக்கின்றோம். அய்ரோப்பாவில் தொடக்கப்பட்ட இந்தச் சந்திப்பு கனடா, இலங்கையென்று விரிந்த பரப்பில் இப்போது அகலக்காலை, ஆனால் ஆழமாக வைத்துள்ளது. எதிர்காலத்தில் மலேசியாவுக்கும் நீங்கள் இலக்கியச் சந்திப்பை எடுத்துவந்து நடத்த வேண்டும். மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கும் சர்வதேசத் தமிழ் இலக்கியத்திற்குமான பரிமாற்றங்களுக்கு அது மேலும் துணைசெய்யும்.

இலங்கையிலே சுதந்திரமாகப் பேசவும் எழுதவும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பிற ஆயுதக் குழுக்களும் தடைவிதித்திருந்த, மீறிப் பேசியவர்களைக் கொன்று புதைத்த கொடிய காலகட்டத்தில் அகதிகளாகப் புலம் பெயரந்தவர்களால்அய்ரோப்பாவிலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நடந்தப்பட்ட சிறு பத்திரிகைகள் சனநாயகத்திற்கும் மனதவுரிமைகளிற்குமான குரலைத் தம்முடன் விடாப்பிடியாக வைத்திருந்தன. இந்த மாற்றுக் குரல்களைப் வெறும் ‘புலி எதிர்ப்புக் குரல்’ என இன்றுவரை புலிகளின் ஆதரவாளர்கள் திரிக்க முயன்று தோற்றுக்கொண்டேயிருக்கிறார்கள் என்பது வேறுகதை.

நாங்கள் புலிகளை மட்டும் எதிர்த்தவர்களல்ல. சிங்களப் பேரினவாதத்தையும் தமிழ்க் குறுந்தேசிய வாதத்தையும் ஒருங்கே எதிரத்தவர்கள். போரை முழுவதுமாக எதிர்த்தவர்கள். பண்பாட்டுத்தளங்களில் காலாசார அடிப்படைவாதத்தையும் சாதியத்தையும் எதிரத்துநின்றவர்கள். சர்வதேச இடதுசாரிகளுடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள்.அவர்களோடு இயங்கியவர்கள்.

எனினும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நிகழ்த்திய முதன்மையான சக்தி சிங்கள இனவாத அரசாங்கம் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல தமிழில் மாற்றுக் கருத்துகளையும் மாற்று அரசியலையும் பேசியவர்களை ஒடுக்கியதில் முதன்மையான சக்திகளாகப் புலிகளே இருந்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. புலிகளின் அடக்குமுறை இலங்கையைத் தாண்டி புலம்பெயர் தேசங்களிலும் நடந்தது. எழுத்தாளர்கள், சிறுபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள், அவர்கள் நடத்திய நூலகங்கள் எரிக்கப்பட்டன. கொலையும் நிகழ்ந்தது. எனவே எங்களது எழுத்து -கருத்து வெளிப்பாடுகளை நேரடியாக தங்களது அமைப்புப் பலத்தால் ஒடுக்கமுயன்றவர்களில் முதன்மையானவர்களாகப் புலிகளாகவேயிருந்தார்கள். இவ்வளவுக்கும் நடுவில்தான் எந்த அமைப்புப் பலமுமற்ற சிறுபத்திரிகையாளர்கள் இயங்க வேண்டியிருந்தது.

பலமாகக் கட்டியெழுப்பட்டிருந்த வலதுசாரித் தமிழ்த் தேசியவாதத்தையும் இடதுசாரித் தமிழ்த் தேசியவாதிகளின் வாய்ப்பாடு வரட்டுவாதங்களையும் சமூகத்தின் கலாசாரப் புனிதங்களையும் சாதிய அமைப்புமுறையையும் இந்தச் சிறுபத்திரிகையாளர்கள் எதிர்த்து நிற்க வேண்டியிருந்தது. இது தண்ணீருக்குள்ளால் நெருப்பு எடுத்துச் செல்கின்ற வேலையாயிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் புலம்பெயர்ந்த சிறுபத்திரிகையாளர்களிற்கும் மாற்று அரசியல் சிந்தனையாளர்களிற்குமான இணைப்புச் சக்தியாக இலக்கியச் சந்திப்பு இருக்கிறது. இலக்கியச் சந்திப்பு கட்டற்ற கருத்துச் சுதந்திரற்கான சனநாயகக் களமாக இருக்கிறது. கட்டற்ற கருத்துச் சுதந்திரம் என்பதை கண்டதுக்குமான களமென நீங்கள் தட்டையாகப் புரிந்துகொள்ளமாட்டீர்கள் என நம்புகின்றேன். பேசக் களங்கள் மறுக்கப்பட்டவர்களிற்கான களமென இலக்கியச் சந்திப்பைச் சொல்லலாம்.

யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். முப்பது வருடங்களிற்குப் பின்பு, யாழப்பாணத்திலிருந்து புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் எழுத்தாளர்களும் சிங்களச் சமூகத்தின் முற்போக்காளர்களும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு முதற்தடவையாக உரைகளை நிகழ்த்தினார்கள். முழு இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பிலும் சந்திப்பு புத்துணர்ச்சியைப் பாய்ச்சியிருப்பதாகச் சந்திப்பில் கலந்துகொண்ட தோழர்கள் அறிக்கையிடுகிறார்கள். இலங்கையில் வடமகாணசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது, பொதுநலவாய மாநாடு நடக்கப் போகிறது. இவை நடப்பதாலெல்லாம் இலங்கையில் மனிதவுரிமைகள் கொடிகட்டிப் பறக்கின்றதென புத்திசுவாதீனமுள்ள யாரும் கூறிவிடப்போவதில்லை இல்லையா!

சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது பத்திரிகையொன்று ஒரு கேள்வியைக் கேட்டது. இலங்கையில் சனநாயகமின்மையும் மனிதவுரிமை மீறல்களும் நடக்கும்போது இந்தச் சந்திப்பை நடத்துவது சரியா எனக் கேட்டார்கள். “ஆம் அந்தச் சனநாயகமின்மையையும் மனிதவுரிமை மீறல்களையும் குறித்துப் பேசத்தான் இந்தச் சந்திப்பு” என இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் அந்தப் பத்திரிகைக்குப் பதிலளித்தனர். இது வெறும் பத்திரிகைக்கான பதிலாக மட்டும் இருக்கவில்லை. அந்தப் பதிலைச் சந்திப்பு நிகழ்வுகள் நிரூபித்தும் காட்டின.

யாழ்ப்பாணத்தில் இலக்கியச் சந்திப்பை நடத்துவதற்கு எதிராக ஊடகங்களில் சில சலசலப்புகள் எழுந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இலக்கியச் சந்திப்பின் பிறப்பிலிருந்தே அது இலங்கை அரசின் ஆதரவாளர்களாலும் புலி எதிர்ப்பாளர்களாலும் நடத்தப்படுகிறது என்ற அவதூறை இலக்கியச் சந்திப்பு எதிர்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் அதை இந்த இருபத்தைந்து வருடங்களிலும் யாராலும் கருத்துரீதியாகவோ அமைப்புரீதியாகவோ நிரூபிக்கத்தான் முடியவில்லை. தோழர்களே இப்போது உங்களது கைகளில் யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு வெளியிட்ட 808 பக்கங்களைக் கொண்ட குவர்னிகா தொகுப்பு இருக்கிறது. இதைப் படித்த பின்பு இலக்கியச் சந்திப்பு இலங்கை அரசுக்கு ஆதரவானதா என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!”

pathivu1dஷோபாசக்தியுடனான கலந்துரையாடல் பின்னர் சினிமா குறித்து சென்றது. அதன் உண்மையற்ற நிலை குறித்து பேசினார். தொடர்ந்து கேள்வி நேரம் இருந்தது. கலந்துரையாடலுக்கு வந்திருந்தவர்கள் தத்தம் கேள்விகளை முன்வைத்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கு தகுந்த விளக்கத்துடன் ஷோபாசக்தி பதில் கொடுத்தார்.

கலந்துரையாடல் நிறைவுபெற்றது. வந்திருந்தவர்களின் ஒவ்வொருவர் கையிலும் ‘குவர்னிகா’ தொகுப்பு இருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...