மை ஸ்கீல் அறவாரியம் குறித்தும் அவ்வரவாறியம் மூலம் நடத்தப்படும் பிரிமூஸ் கல்லூரி குறித்தும் புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. இன்று மலேசியாவில் தமிழ்ச்சமுதாயத்துக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் உருப்படியானதாகவும் உயர்வானதாகவும் பலதரப்பினராலும் போற்றப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் பசுபதி மற்றும் மருத்துவர் சண்முகசிவா போன்றோர் முன்னெடுப்பில் இயங்கும் இக்கல்லூரி மாணவர்கள் பலரும் பள்ளியில் பாதியிலேயே தங்கள் கல்வியை நிறுத்தியவர்கள். பல்வேறு காரணங்களுக்காகக் கல்விச்சூழல் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் மேற்கல்வியை பிரிமூஸ் கல்லூரியில் தொடரும் இவர்களைக் கொண்டு நாடகம் ஒன்று தயார் செய்வதென்றால் சவாலானதுதான். அந்தச் சவாலை மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்தே எதிர்க்கொண்டன.
இந்தச் சவாலை ஏற்று நடத்த பொறுத்தமான ஆளுமை குறித்து யோசித்தபோது பிரளயன் நினைவுக்கு வந்தார். கலையை அதன் உக்கிரத்தோடு முன்னெடுக்க தீவிரமான அரசியல் பார்வை முக்கியம் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லாதவன் நான். அவ்வகையில் பிரளயனின் நேர்காணலை ஆதவன் தீட்சண்யா வழியாக ஏற்கனவே வாசித்திருந்ததால் அவரின் பின்புலத்தை ஓரளவு அறிய முடிந்திருந்தது. இம்மாணவர்களை இயக்க இவரே பொறுத்தமானவர் என முடிவெடுத்தப்பின் பரபரவென வேலைகள் நகர்ந்தன.
மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்ட பிரளயன் தொடர்ந்து பத்து நாள்கள் மை ஸ்கீல் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினார். பயிற்சி வழங்கப்பட்ட இறுதி ஐந்து நாள்கள் நான் அங்கிருந்ததன் வழி பெரும்பாலும் வசனங்களை மாணவர்களிடமிருந்தே பெற்று அதை நெறிப்படுத்தி நடிப்பாக்கினார். ‘இவங்களுக்கெல்லாம் படிப்பு வராது’ என முத்திரைக்குத்தப்பட்ட மை ஸ்கீல் மாணவர்கள் வசனங்களையும் பாடல்களையும் மிகத் தெளிவாக உச்சரிப்பது கண்டு அதிசயமாக இருந்தது.
‘பவுன் குஞ்சு’ எனத் தலைப்பிடப்பட்ட அந்நாடகம் இன்றையக் கல்வி சூழலை தீவிரமாக விமர்சனம் செய்யும் வகையில் உருப்பெற்றிருந்தது. இறுக்கமாகிவிட்ட இன்றையக் கல்விச் சூழல் வெறும் தகவல்களை மாணவர்களின் மூலைக்குள் திணிக்கும் இயந்திரமாகிவிட்டதையும் மாணவர்களின் உண்மையான ஆளுமையை அது விரிவாக்கத் தயார் இல்லாததையும் ‘பவுன் குஞ்சு’ விமர்சனம் செய்தது.
‘பவுன் குஞ்சு’ நாடகத்தின் சிறப்பே அதன் குறியீடுகள்தான். ஆசிரியர் மாணவர்களின் வாயில்தகவல்களை ஊற்றி விழுங்கச்சொல்வதாகட்டும், கல்வியின் திணிப்பை விரும்பாத மாணவன் அதை வாந்தியெடுப்பதாகட்டும், மாணவர்கள் அணிந்துள்ள பல்வேறு வடிவ தொப்பிகள் மூலம் மாணவர்களின் புரிதலும் வாழ்வும் பல்வகைப் படுகின்றன என சொல்வதாகட்டும், ஆசிரியர் ஒரே அளவிலான அளவு கோளின் வழி மாணவர்களின் திறனை அளக்க முயல்வதாகட்டும் அனைத்துமே குறியீடுகளின் மூலம் நகைச்சுவையாக சொல்லப்பட்டதில் கல்வி நிறுவனங்களின் அதிகார தொணியை பார்வையாளர்கள் எளிதாகப் புரிந்துகொண்டனர்.
‘மலேசியாவின் முதல் வீதி நாடகம்’ என்ற அடைமொழியுடன் நாடகம் இயற்றப்பட்டாலும் இம்முதல் முயற்சி பத்துமலை மண்டபத்தில்தான் நடைபெற்றது. ஆனால் எவ்வித ஒலிபெருக்கி சாதனங்கள் இல்லாமல், மேடைத்தன்மை இல்லாமல் மண்டபத்தின் மையத்தில் வீதி நாடகச் சூழலில்தான் அரங்கேற்றம் கண்டது. ஆனால் இந்த நாடகம் அடுத்தடுத்து வெவ்வாறு ஊர்களில் அரங்கேறும் போது வெட்டவெளியில் செய்துப்பார்க்கும் திட்டமும் அமுல்படுத்த வாய்ப்புகள் உண்டு.
நாடகத்தின் பலமே அதன் நடிகர்களான மை ஸ்கீல் மாணவர்கள்தான். தொடக்கத்தில் அவர்களுக்கு நாடகம் சொல்லப்போகும் அரசியல் புரியாமல் இருந்தாலும் பயிற்சி வழங்கப்பட்ட இறுதி நாள்களில் அவர்கள் தத்தம் பங்களிப்பை உணர்ந்திருந்தனர். ஒரு கூட்டுமுயற்சியில் இருக்கவேண்டிய கவனிப்பையும் ஒத்துழைப்பையும் அறிந்து செயல்படத்தொடங்கினர்.
இசை ஒரு நாடகத்திற்கு வலு சேர்ப்பதை நேரில் கண்டபோதே அறிய முடிந்தது. காட்சியுடன் இசையையும் பொறுத்தமாக இயக்கியதின் வழி நாடகம் பார்வையாளர்களின் கவனம் குவிய ஆதாரமாக இருந்தது. போதுமான கால அவகாசம் இல்லாது போனாலும் மிக நேர்த்தியான வெளிப்பாடாக ‘பவுன் குஞ்சு’ இருந்தது.
பிரளயன் போன்ற ஆளுமைகளுடன் மட்டுமே இதுபோன்ற மாற்று அரசியல் பேசும் கலைப்படைப்புகள் சாத்தியம். பொதுபுத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அதிகார வர்க்கங்களின் குரலாக வெளிப்படுகின்ற கலை வெகுஜனத்தால் ரசிக்கப்பட்டாலும் அது சமூகத்துக்கு எந்த ஏற்றத்தையும் தரப்போவதில்லை. ஏற்கனவே கல்வி சூழலில் இறுக்கத்தை நன்கு உணர்ந்த பிரளயன் போன்றவர்களால் மட்டுமே மாற்று கல்விக்கான சூழலின் அவசியம் குறித்தும் இன்றையக் கல்விச் சூழல் எதை நோக்கி நகர்கிறதென்றும் விரிவாக பேச முடிகின்றது. அவ்வகையில் பிரளயன் மலேசியாவுக்குத் தொடர்ந்து தேவைப்படுவார் என்பது உறுதி.