டாக்டர் மா.சண்முகசிவா கெடா மாநிலத்தில் உள்ள அலோஸ்டார் நகரில் பிறந்தவர். தமிழகத்தில் மானாமதுரையில் (சிவகங்கை மாவட்டம்) பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தை கெடாவில் ‘ஜெய் ஹிந்த் ஸ்டோர்’ எனும் மளிகை கடை நடத்துவதிலிருந்து தன் வாழ்வை தொடங்கியுள்ளார். ஆரம்பக்கல்வியை ஆங்கிலப்பள்ளியில் கற்றாலும் இராமசாமி செட்டியார் எனும் தமிழ் ஆசிரியர் வீட்டில் வந்து சண்முகசிவாவுக்குத் தமிழ் போதித்தார். ஆசிரியர் இராமசாமி இலக்கியம் குறித்து பேசும்போதெல்லாம் தானும் தமிழ் படித்து அவ்விலக்கியங்களை வாசிக்க வேண்டும் என மா.சண்முகசிவா மனதில் எண்ணங்கள் விதைந்தன. பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பு படிக்கும் போது மொழி மீதான காதல் ஏற்பட்டு அதுவே இலக்கியத்தில் இணைத்துள்ளது. மதுரை மருத்துவ கல்லூரியில் பயிலும் பொழுது அங்கு இயங்கிய இலக்கிய வட்டம் ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு இலக்கிய ஆளுமைகளைச் சந்திப்பதிலும் கலந்துரையாடுவதிலும் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். இன்று சரும நோய் நிபுணராகவும் சமூகப்பணியாளராகவும் நாட்டின் முக்கிய எழுத்தாளராகவும் விளங்கும் அவரை விரிவாக நேர்காணல் செய்தோம்.
—–
கேள்வி : எத்தனையோ கலை வடிவங்கள் இருக்கும்போது எழுத்தையும் இலக்கியத்தையும் நீங்கள் அணுகிய காரணம் என்ன?
மா.சண்முகசிவா : நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு பாடகனாக வேண்டும் என்ற ஆவலே என்னிடம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் என் அம்மா. அவர் சாஸ்திரிய சங்கீதம் படித்திருந்ததால் அடிக்கடி பாரதியார் மற்றும் வள்ளலார் பாடல்களைப் பாடி எனக்கு விளக்கமளிப்பார். முதலில் நான் பாடிப்பார்த்தபோது என் குரலுக்கு அது சரிவரவில்லை போல தோன்றியது. எனவே அம்முயற்சியை நிறுத்திக்கொண்டேன்.
இது தவிர எனக்கு ஓவியத்திலும் ஆர்வம் இருந்தது. எனது ஓவிய ஆசிரியர் நான் நன்றாக வரைகிறேன் எனச்சொன்னது எனக்கு ஊக்கம் ஊட்டியது. வரைவதில் ஆர்வம் காட்டினேன். குறிப்பாக கேலிச்சித்திரங்கள் வரைவது எனக்குப் பிடித்திருந்தது. ஓவியம் குறித்த சில நூல்களை வாங்கி வரையவும் முனைந்தேன். ஆனால் நான் அதை வளர்த்தெடுக்கவில்லை.
பின்னர் மதுரையில் உள்ள மருத்துவர் கல்லூரியில் படித்தபோது நானும் என் நண்பரும் வயலின் பழக சென்றோம். இசை பயிற்சி என்பது இளமையிலேயே தொடங்கியிருக்க வேண்டும். எனக்குப் போதித்த ஆசிரியை உட்பட சக மாணவிகள் அனைவருமே பெண்களாக இருந்ததால் அவ்வயதிற்கே உரிய கூச்ச சுபாவம் என்னைத் தொடர விடாமல் தடுத்தது.
அம்மா போல இசையில் ஈடுபட முடியாவிட்டாலும் பாடலின் வரிகளுக்குப் பொருள் தெரிந்ததால் சொற்களில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. சுதேசமித்திரனில் இடம்பெற்ற பாரதியின் பாடல்களை அம்மா தொகுத்து வைத்திருந்தார். அவற்றை வாசித்து , அது போல எழுத முனைந்தேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள்கூட பாரதியில் கவிதைகளில் அவை புதிய பரிணாமம் எடுக்கின்ற அந்த அற்புதம் நிகழ்வது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. என்னாலும் கூட எழுத முடியும் என எண்ணத் தோன்றியது. என்னைச் சுற்றியுள்ளவர்களின் ஊக்குவிப்பு அதை வளர்த்தெடுத்தது.
நமது சமூகத்தில் இதுதான் நிகழ்வதில்லை. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு கலைஞன் இருக்கிறான். சுற்றி உள்ளவர்கள் அதை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் எனக்கு அண்ணன் கி.நாராயணன் போன்ற சில நல்ல உறவுகள் கிடைத்தன. பள்ளி பருவத்தில் அவரைப் போன்ற ஒரு இளம் கவிஞரோடு பேசுவது பழகுவது இலக்கியத்திற்கான அகத்தூண்டலை ஏற்படுத்தியது. பின்னாளில் அவர் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். கிரியா அகராதியைத் தொகுத்தவர்களில் அவரும் ஒருவர்.
கேள்வி : மருத்துவர் என்பவர் அறிவியல் துறையைச் சார்ந்தவர். அறிவியல் நிரூபணத்தைத் தேடுகின்றது. அதை தர்க்கபூர்வமாக ஆராய்கிறது. ஆனால் கலை தர்க்கங்களின் எல்லைகளைத் தாண்டிச்செல்கிறது. காரணங்கள் இல்லாத வாழ்வின் பெருவெளியைப் பேசுகிறது. ஒரு மருத்துவரான நீங்கள் எப்படி அறிவியல் – கலை எனும் முரண் இயக்கங்களில் ஈடுபடுகிறீர்கள்?
மா.சண்முகசிவா : இலக்கியமும் மருத்துவமும் இருவேறு மாறுபட்டத் துறைகளாகத் தோன்றினாலும் அடிப்படையில்ல் இரண்டும் ஒன்றுதான். இரண்டின் மையப்புள்ளியும் ‘மனிதன்’ அவனது ‘வாழ்வு’ என்பதிலிருந்து தொடங்கி பின் விரிவடைகிறது. மருத்துவம் என்ற அறிவியல் துறை நம்மை ஆராயச் சொல்லித்தருகிறது. உடற்கூறு, அதில் வரும் இயற்கையான மாற்றங்கள், நோய்க்கூறுகள், அதற்கான காரண காரணிகள், வராமல் தடுக்கும் முறைகள், வந்தபின் நோயினை எதிர்த்துப் போராடும் வழிமுறைகள், வலியின்றி வாழ்வைத் தொடரவைப்பதற்கான சிந்தனை மற்றும் செயல்முறைகள்… இதுதானே மருத்துவம். இதில் மனக்கூறு பற்றி பேசும் மனோவியல் இலக்கியத்தில் அடிப்படை கூறுகளில் ஒன்றாகிறது. இலக்கியம் மனம் – மனம் இயங்கும் விதம். தனிமனித மனம் மட்டுமின்றி சமூக மனம் பற்றியும் பேசுகிறது. சமூக உறவுகள் அதன் பிறழ்வுகள் பற்றியும் பேசுகிறது. வாழ்வு தரும் வழி பற்றியும் அதன் காரண காரணிகள் பற்றியும் அதன் முரண்கள் பற்றியும் போராட்டங்களைப் பற்றியும் பேசுகிறது. இரண்டின் குவி மையமும் Human Behaviour எனப்படும் மனித மனமும் அதன் செயல்பாடும் பற்றியதுதானே. இது குறித்து The Psychology And Sociology Of Literature என்ற நூல் விரிவாகப் பேசுகிறது.
கேள்வி : இலக்கியத்தில் ஈடுபட உங்கள் குடும்ப சூழல் எத்தகை காரணியாக அமைந்தது?
மா. சண்முகசிவா : அம்மா பினாங்கில் பிறந்து அங்குள்ள தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள்தான். அந்தக் காலங்களில் பெரிய மாமா பினாங்கின் தலைமை போஸ்ட் மாஸ்ட்ராக இருந்தவர் . நகரப் பிரமுகர் ஜவகர்லால் நேரு முதல் அன்றைய காலங்களில் மலாயா வந்திறங்கும் ஆன்மிகவாதிகள் வரை எல்லோரையும் வரவேற்று உபசரிக்கும் மனம் படைத்தவர். வள்ளலார் அடிமை எனத் தன்னைச் சொல்லிக்கொள்வார். தமிழக விருந்தினர் முன்பாக சிறுமியாக இருந்த அம்மாவை அழைத்து தமிழிசைப் பன்னோடு திருவாசகம், திருப்பாவை, பாடச்செய்து பெருமை பட்டுக்கொள்வார். தமிழகத்திலிருந்து தங்கைக்கு வரவழைக்கப்பட்ட ஆன்மிக சைவ சித்தாந்த நூல்களில் நாவல்களும் இருந்திருக்கின்றன. மாமாவிற்குத் தெரியாமல் அம்மா நாவல்களையும் ஒளித்து வைத்து படித்திருக்கின்றார். யோகி . சுத்தானந்த பாரதி, பினாங்கில் செந்தமிழ் கலாநிலையம் ஸ்தாபித்த புலவர் சுவாமி இராமதாசர் இவர்களையெல்லாம் அம்மா நினைவு கூர்வார். ஆனால், வேடிக்கை என்னவென்றால் அப்பா பகுத்தறிவாளர். பெரியார் பக்தர்.
சிறுவனாக நான் அண்ணன் நவரத்தினமும் தமிழாசிரியர் ராமசாமி செட்டியாரும் டாக்டர் மு.வவின் நாவல்கள் பற்றி சிலாகித்திப் பேசுவதைப் பார்க்கையில் டாக்டர் மு.வவைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் விதைக்கப்பட்டதை இப்போது உணர்கிறேன். என் மனைவிக்குப் பிடித்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அவர் காட்டும் கிராமிய மக்கள், அவரது எளிய மொழி நடை, அவர் எழுத்தில் இழையோடும் நகைச்சுவை, இந்த மக்கள் மீது அவர் கொண்ட அன்பு, இவை போன்ற அம்சங்கள் என் எழுத்துகளில் இல்லை என்பது அவரது ஆதங்கம்.
கேள்வி : நீங்கள் மலேசியாவில் இலக்கியத்தில் இயங்கத்தொடங்கிய சூழல் எப்படி இருந்தது?
மா.சண்முகசிவா : நான் மலேசியாவில் பிறந்து தமிழகத்தில் கல்வியைத் தொடர்ந்தேன். அங்குப் பல இலக்கியவாதிகளையும் சந்தித்து, வாசிப்பையும் தீவிரப்படுத்தியிருந்தேன். மீண்டும் மலேசியா திரும்பியபோது இங்கு நவீன இலக்கியத்தில் ஆர்வம் உள்ள யாருடனாவது பேசி பழக வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது. ஆனால் இங்கு அப்படி யாரையுமே பார்க்க முடியாதது சோர்வளித்தது. எனவே அச்சமயத்தில் ஞாயிறு தோறும் கவிதை களம் எனும் பெயரில் காரைக்கிழார், பாவலர் பா.மு.அன்வர், பாதாசன், மைதீ சுல்தான், அருசுஜீவா போன்றவர்கள் மரபுகவிதை குறித்து நடத்தும் உரையாடலில் கலந்துகொண்டேன். என் இலக்கிய ஆர்வத்துக்கு அவ்வமர்வு கொஞ்சமேனும் ஆறுதலாக இருந்தது. ஆனால், இலக்கியம் குறித்த அவர்கள் புரிதலோடு நான் கொண்டிருந்த சில அபிப்பிராயங்கள் முரண்பட்டிருந்ததால் என்னால் அவர்களோடு அதிக தூரம் பயணிக்க முடியவில்லை. அப்போது வடக்கில் எம்.ஏ.இளஞ்செல்வன் புதுக்கவிதை குறித்த அறிமுகத்தை தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது புதுக்கவிதையில் தீவிரமாக இயங்கிய ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி, கோ.முனியாண்டி போன்றவர்களின் ஈடுபாடும் கூட மு.மேத்தா, வைரமுத்து என்ற அளவிலேயே நின்றுவிட்டது.
அன்றையக் காலக்கட்டத்தில் புதுக்கவிதையை முற்றிலும் எதிர்த்த மரபு கவிஞர்கள் ஒரு பக்கமும் புதுகவிதையை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாத புதுக்கவிதையாளர்களுக்கும் இடையில் பாவம் அந்தப் புதுக்கவிதை வெறும் வசன நடை காதல் கவிதைகளாக தேங்கி நின்றது.
1985ல் இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பை அருசு. ஜீவாநந்தன், சாமி மூர்த்தி, சை.பீர்முகமது, அன்புச்செல்வன், மலபார் குமார் போன்றவர்கள் இணைந்து நடத்திக்கொண்டிருந்தனர். நான் அங்கு ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். அவர்கள் சுந்தர ராமசாமியை மலேசியாவுக்கு அழைத்து வந்தனர். அது ஒரு முக்கியமான நிகழ்வு. அவர் இங்கே ஒரு கட்டுரை வாசித்தார். முக்கியமான படைப்பாளிகளின் பட்டியலெல்லாம் கொடுத்தார். அதில் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தமிழகம் செல்லும் பொழுதெல்லாம் தேடி வாசித்து வந்திருக்கின்றேன். ஆனால், அக்குழுவினர் அதற்குப்பின் தீவிரமாக இயங்கவில்லை. அதன்பின்னர்தான் 1987 ‘அகம்’ எனும் இலக்கிய அமைப்பைத் தொடங்கினோம். தொன்னூறுகளின் தொடக்கத்தில் உற்சாகமாகச் செயல்பட்டோம். அதில் நான், சாமி மூர்த்தி, அருசு .ஜீவாநந்தன், ரெ.சண்முகம், கந்தசாமி என சேர்ந்து இயங்கினோம்… விவாதித்தோம். நூல்களை வாங்கிவந்து வாசித்து பரிமாறிக்கொண்டோம்.தலித் இலக்கியம், பெண்ணியம், இசை, நாடகம், நவீன இலக்கியம் என எங்கள் உரையாடல்கள் விரிந்தன. எங்கள் உரையாடலைப் பதிவு செய்ய ஒரு இதழ் தேவைப்பட்டது. அப்போதுதான் நாங்கள் மயில் இதழை அணுகினோம். அவ்விதழ் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு மலேசிய எழுத்தாளரை அழைத்து அவருடன் கலந்துரையாடல் செய்வோம். சடங்கான கேள்விகளாக இல்லாமல், ஏன் அவர் எழுதத் தொடங்கினார், அவரது எழுத்தின் மூலம் எது? வாசிப்பு பின்னணி? எழுதுவதற்கான சாதக பாதகச் சூழல்கள் பற்றியெல்லாம் பேசுவோம். இப்படியாகக் காணாமல் போயிருந்த எழுத்தாளர்களை எல்லாம் அழைத்துவந்து மரியாதை செய்து பேச வைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் கொடுத்தது. அன்றையக் கால எழுத்தாளர்களின் வழிக்காட்டியாக திகழ்ந்த கு.அழகிரிசாமி மற்றும் சிறுகதை வகுப்பு நடத்திய ‘இரு’ நாராயணன்கள் போன்றவர்களுடனான அனுபவங்களை அந்தப் பழம் எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.
இந்த நேர்காணலில் மூலமாக எவ்வகையிலும் சாதகமற்றதொரு சூழலில்தான் மலேசிய எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருந்தனர் என்பது புரிந்தது. எழுதவேண்டும் என்ற அவர்கள் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டத்தோன்றினாலும் நவீன இலக்கியம் குறித்த அவர்களது புரிதல்களில் இருந்த பலவீனமும் மரபு சார்ந்த இலக்கியப் பார்வைகளும் மலேசிய இலக்கியத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுச்செல்வதில் தடையாக இருந்தது.
அதே சமயத்தில் அறிவார்ந்த தளத்தில் இங்கு இலக்கியம் தொடர்பான பகிர்வுகள் நடக்கவில்லை என்றும் தோன்றியது. அந்த இடைவெளியை நிரப்ப தமிழகம் சென்று கவிஞர் மீரா, வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களுடம் உரையாடிவந்தேன். எஸ்.வி.ராஜதுரை, கு.சின்னப்ப பாரதி, எஸ். என் .நாகராஜன் போன்ற ஆளுமைகளை மலேசியாவுக்கு அழைத்து வந்து கலந்துரையாடல் நடத்தினோம். ஆனால், மிக குறிப்பிட்ட சிலரே இதில் பங்கேற்றனர். பலர் அவர்களின் ஆளுமை அறியாதவர்களாக இருந்தனர். சிலர் இறுகி போன ஒரு மனநிலையுடன்தான் இலக்கியத்தை எதிர்க்கொண்டனர். புதுமையை ஏற்க யாரும் தயாராக இல்லை. மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ் புல தலைவராக இருந்த இரா. தண்டாயுதம் அடையாளம் காட்டிய அகிலன், மு.வ வைவிட்டு முன்னகர யாரும் தயாராக இல்லை. அதே போல எழுத்தாளர் சங்க நிகழ்விலும் மலேசியாவில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த கவிதைகள், கதைகளின் உள்ளடக்கம், வடிவம் குறித்த பார்வை தீவிரமடைய வேண்டும் என்று எண்ணினேன். தமிழில் விமர்சனப் போக்கு என்று ஞானி, கைலாசபதி, வெங்கட்சாமி நாதன் , கோ.கேசவன், சுந்தர ராமசாமி, நுஃமான், கா.நா.சு போன்றவர்களைக் குறிப்பிட்டுக் கட்டுரை வாசித்தேன்.என் கட்டுரைக்கு எதிர்வினையாக அப்போதைய சங்கத் துணைத்தலைவரால், ‘இலக்கியம் என்பது பொழுது போக்குக்குதானே; இதை ஏன் தீவிர இலக்கியம், வணிக இலக்கியம் என்று குழப்புகின்றீர்கள்’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது மிகுந்த மனச்சோர்வை தந்தது. இத்தகையச் சூழலில் எந்த இயக்கத்துடனும் கல்வி நிலையங்களுடனும் இணைந்து இயங்க முடியாமல் தனியனாகதான் இருந்தேன்.
இத்தகைய சூழலில் அகம் மூலமாகவும் தனிப்பட்ட முறையில் என்னுடன் இருந்த தொடர்பிலிருந்து புதிய எழுத்தாளர்கள் உருவானார்கள். அவர்கள் காதல் எனும் இதழைத் தொடங்கி பின்னர் வல்லினம் எனும் இலக்கிய இதழில் தொடர்ந்தார்கள். வல்லினம் இதழாக வந்த வரையில் நான் அதற்கு முன்னுரை எழுதியுள்ளேன். என்னாலான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்பதில் திருப்தி.
கேள்வி : எழுத்தென்பது ஒரு தனிமனித இயக்கம்தான். ஆனால் ஒரு படைப்பாளியாக நாம் ஒவ்வொரு காலத்திலும் பிற நல்ல படைப்புகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நீங்கள் அவ்வாறான செயல்பாடுகளில் இறங்கினீர்களா?
மா.சண்முகசிவா : எழுதுவது ஒரு மனநிலை. அதுபோலவே பிறரை எழுத வைப்பதும் ஒரு மனநிலை. வாசிப்பென்பது ஒரு கூட்டு மனநிலை. ஆனால், இந்நாட்டு படைப்பாளிகளிடம் பெரும் சிந்தனை வரட்சி இருந்ததை அறிந்தபோது இயல்பாகவே அவர்களிடம் முரண்பட தொடங்கினேன். மார்க்ஸிய சிந்தனை வேண்டும் என சொல்லும்போது ‘நீ ஒரு கம்யூனிஸ்ட். உங்களைப் பிடித்து உள்ளே வைத்து விடுவார்கள் ‘ என சொல்ல மட்டுமே அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தலித் இலக்கியம் பற்றி பேச ஆரம்பித்தால், ‘தமிழ் நாட்டில்தான் அத்தகைய வேறுபாடுகள் உண்டு. இங்கே அப்படி ஒன்றும் கிடையாது ‘என்று மழுப்புவார்கள். அதேபோல நவீன இலக்கிய சிந்தனைக்காக கா.நா.சு, ஞானி, எம்.ஏ.நுஃமான், சி.சு.செல்லப்பாவின் விமர்சனங்கள் வழி படைப்பாளிகளை அணுகுவோம் என சொன்னபோது மரபார்ந்த சிந்தனை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் மு.வாவையும் அகிலனையும் விட்டு வரத் தயார் இல்லை. இந்நிலையில்தான் நான் இளைஞர்களை அணுகலாம் என முடிவெடுத்தேன். இளைஞர்களைக் காண ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று பேசினால் ஏதோ வெட்டவெளியில் யாருமே இல்லாத இடத்தில் பேசுவது போல அத்தனை வெறுமையாக இருந்தது. தொடர்பாடல் இல்லாத பேச்சாய் அது முடிந்தது.
பல்கலைக்கழகங்களில் நடக்கும் பட்டிமன்றம் போன்ற இடங்களில் கூட மாணவர்கள் சுதந்திரமாய் பேச தடைவிதிக்கப்பட்டிருந்தது, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு குறித்தும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் ஒரு பய உணர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. அத்தகைய கூட்டங்களில் நான் நடுவராக பொறுப்பேற்றிருந்த காலத்தில்கூட மிகத்தீவிரமான விமர்சனங்களை முன்வைக்க முயலும்பொழுதெல்லாம் அங்குள்ள பேராசிரியர்களுக்கு அது பிடிக்கவில்லை. நான் வியன்னாவிலும் மதுரையிலும் பயின்ற போது அதிகார மையத்தை நோக்கி விமர்சித்து பேசும் இளைஞர்களின் வேகம் இங்கே பார்க்கக் கிடைக்காத ஒன்று. எனவே அதிலும் என்னால் இயங்க முடியவில்லை. நான் யாரையும் எதிரிகளாக எண்ணுவதில்லை. ஆனால் நட்புக்காக நான் சமரசம் செய்துகொள்வதுமில்லை. ஒதுங்கிவிடுவேன்.
இச்சூழலில் வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் சென்று நல்ல படைப்புகளை அடையாளப்படுத்தவே முயன்றேன். அவ்விடம் எனக்கான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால் விலகிவிடுவேன்.
கேள்வி : ஒரு சமூக மனிதராக இந்நாட்டில் தமிழை உயர்க்கல்வியாகக் கொண்டுள்ள கல்லூரிகளையும் அதன் பாடத்திட்டத்தையும் எப்படிப்பார்க்கின்றீர்கள். கலை இலக்கியத்திற்கான சாதகப் போக்குண்டா?
மா.சண்முகசிவா : ஒரு கனத்த மனதோடு வேதனையோடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்ற பல மாணவ மாணவிகளோடு பேசியிருக்கின்றேன். பரிட்சைக்காக மட்டுமே மிக மொண்ணையாக சொல்லிக்கொடுக்கப்பட்டு படிக்கப்பட்டு பரீட்சை எழுதி தேர்வாகியுள்ள இவர்களிடம் என்ன இலக்கிய வளர்ச்சியை எதிர்ப்பார்க்க முடியும்? இதற்கு நாம், நமது சமூகம், நமது பல்கலைகழகம் , நமது பேராசிரியர்கள் எல்லோருடைய தோல்விதான் இது.
கேள்வி : சிலர் இந்நாட்டில் சாதி இல்லை என்கிறார்கள். சிலர் இப்போது மிகுந்தள்ளதாகக் கூறுகின்றனர். நீங்கள் இந்நாட்டின் சாதியப்போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மா.சண்முகசிவா : முன்பைக் காட்டிலும் மிகவும் வெளிப்படையாகவும் அதிகமாகவும் இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் எந்த ஒரு சமூக நிகழ்விற்கும் மலேசியாவில் ஒரு எதிரொலி இருக்கவே செய்கிறது. அங்குள்ள சாதியக் கட்டமைப்பே இங்கும் கொண்டுவந்து நிருவுவதற்கு இரண்டு பக்கமும் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர். இது ஆரோக்கியமற்ற செயல். இந்த சாதி சங்கத்தைச் சேர்ந்தவன் எனக் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் கூறிக்கொள்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றிய பகுத்தறிவாளர் கூட்டம் காணாமல் போய்விட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு சாதி சங்கங்களின் விளம்பரங்கள் அருவருக்கத்தக்க வகையில் நாளிதழ்களில் பிரசுரம் ஆகிறது. இதற்கு ஓரளவு எதிர்வினையாற்றிய ஆதி.குமணன் போன்ற இதழியலாளர்கள் கூட இன்று இல்லாமல் போய்விட்டார்கள். மலேசியாவில் இருக்கின்ற அரசியல் கட்சிகளும் இந்த சாதிய மனப்பான்மை ஊடுறுவியே உள்ளது.
கேள்வி : மதம், அமைப்புகள், சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற அதிகார மையத்தில் இருந்துகொண்டு இலக்கியத்தில் இயங்குவது சாத்தியமா? உங்கள் இலக்கிய வாழ்வில் அதுபோன்ற சங்கடங்கள் நேர்ந்துள்ளதா?
மா.சண்முகசிவா : சின்ன வயதிலிருந்தே எனக்கு சில தீர்க்கமான முடிவுகள் இருந்தன. எந்த அமைப்புகளுக்குள்ளும் மாட்டிக்கொள்வதில்லையென முடிவெடுத்திருந்தேன். காரணம் அமைப்புகளில் போட்டிகள் அதிகம் இருந்தன. செயலாற்றுவதைவிட பதவிகளுக்கான பரிதவிப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது. இம்மாதிரியான மன நிலை கொண்டவர்களிடம் இயங்க என்னால் இயலவில்லை. தனியனாக இருப்பதும் சிந்திப்பதும் சுதந்திரமானது. பதவிகளை ஏற்றுக்கொள்ளும் மனம் உள்ளவர்களுக்குதான் சங்கங்கள் உருவாகின்றன. எனக்கு சங்கங்கள் தேவைப்படுவதில்லை. சங்கங்களுக்கு நான் தேவைப்பட்டால் என்னாலான உதவிகளை செய்துவிட்டு விலகிவிடுகிறேன். சமூகத்தில் நிகழும் அனைத்தின் மேலும் நமக்கு விமர்சனம் இருக்கும் போது இறுக்கமான கட்டமைப்பு கொண்ட இயக்கங்களில் இயங்காமல் இருப்பதே நல்லது.
கேள்வி : இயக்கங்கள் ஒரு புறம் இருக்க… மதம் எவ்வாறு உங்களைக் கட்டுப்படுத்துகிறது?
மா.சண்முகசிவா : நான் சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை உடையவந்தான். ஆனால் எது கடவுள் யார் கடவுள் என்ற புரிதல்தான் கால மாற்றத்துக்கு ஏற்ப என் மனதில் மாறிக்கொண்டே வருகிறது. மதம், கடவுள் பற்றிய கட்டுமானங்கள் பெரியாரைப்படிக்க, மார்க்ஸைப் படிக்க ஆட்டம் கண்டு விடுகின்றன. கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் மையப்படுத்தி கோவில் கட்டி அதைச் சுற்றி நடக்கும் அரசியலை மலேசியாவில் எந்தக் கோவிலிலும் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். பாவம், இவர்களிடம் சிக்கிக் கொண்ட கடவுளுக்கு விடுதலை வாங்கித் தர வேண்டும். மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று. இறுதியாக வள்ளலார் வழிகாட்டுகிறார். மனித நேயம் வழியாகத்தான் இறை நேயம் என்று. தூய்மையான வாழ்வுதான் பிரார்த்தனை என்று. மதங்களைக் கடந்தால்தான் மதங்களுக்கு அப்பால் இருக்கும் இறைவனைப் புரிந்துகொள்ள முடியும் என்று. அன்புதான் சிவம் என்று.
கேள்வி : மனித விடுதலைக்கு இலக்கியம் மட்டும் போதும் என கருதுகிறீர்களா?
மா.சண்முகசிவா : மனித விடுதலை என்பது பெரிய வார்த்தை. பலர் சாதியத்தால் ஒடுக்கப்படுபவர்களையும் பெண்களையும் திருநங்கைகளையும் மனித வர்க்கத்தில் வைத்து பார்ப்பதே இல்லை. எனவே யாருக்கான விடுதலை… யாரிடம் இருந்து விடுதலை என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது. அதன்பின்பே சாதிய விடுதலை, பெண் விடுதலை , அரசியல் விடுதலை என பேச வேண்டியுள்ளது. மனிதவிடுதலைக்கு பெரும் தடையே மதம்தான். அடுத்து மொழிப்பற்று இனப்பற்றுகூட ஒரு மனிதனின் விசாலமான மனதின் வளர்ச்சிக்குத் தடையாகவே உள்ளது. இவை எல்லாவற்றிலும் உள்ள அரசியலை கவனிக்க பெரிய அறிஞராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் மனசாட்சியுடன் இருந்தாலே போதுமானது. நான் முன்பே சொன்னதுபோல மலேசியா இப்போது சாதிய சங்களால் சூழப்படுகிறது. இதை எதிர்க்கும் பொருட்டு பகிரங்கமான பேச்சுக்கூட இங்கு தொடர்ச்சியாக நடக்கவில்லை. இதை மாற்றியமைக்கும் முயற்சிகளில் எழுத்து ஒரு பகுதி மட்டுமே . அரசியல் மற்றும் சமூக போராட்டத்தின் வழியேதான் மனித விடுதலைக்கான சிந்தனையை விதைக்க முடியும்.
கேள்வி : தீவிர இலக்கியம் குறித்து உங்கள் பார்வை என்ன?
மா.சண்முகசிவா : ஆரம்ப காலத்தில் ஜெயகாந்தனையும் நா.பார்த்தசாரதியையும் சாண்டில்யனையும் வாசித்து ரசித்து ஒரு ரசனை மனப்போக்குடன் மூடிவைத்துவிடுவேன். பின்னர் மார்க்ஸிய சிந்தனை கொண்ட எழுத்தாளர்களைச் சந்திக்கும் போது பல புதிய கேள்விகள் அவர்களிடமிருந்து பிறக்கின்றன. ஒரு கலை வடிவம் யாருடைய வாழ்வைப் பற்றி பேசுகிறது? ஒடுக்கப்படுபவர்கள் வாழ்வை பேசுகிறதா? அல்லது மேட்டுக்குடி மனப்போக்கில் எழுதப்பட்டுள்ளதா? என்ற கேள்வி முதலில் முன்வந்து நிற்கும். அப்போதுதான் ரசனையிலேயே நிற்பது எவ்வளவு பிற்போக்கானது எனப் புரிந்தது. அதன் பின்னரே நான் இலக்கியம் குறித்த என் பார்வையை மாற்றிக்கொண்டேன். கா.நா.சு, கோவை ஞானி, சுந்தர ராமசாமி, கேசவன், தமிழவன், அ.மார்க்ஸ் போன்றவர்களை வாசிக்கும் போது அவர்களது இலக்கியப்பார்வை மூலம் நமக்கு வேவ்வேறு புரிதல்கள் கிடைக்கிறது. அங்கிருந்துதான் ஜனரஞ்சக படைப்பின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்வின் தீவிரத்தை ஜனரஞ்சகம் சொல்வதில்லை என்றும் அது வணிகத்துக்காகவும் வாசகனுக்குத் தீனி போடவும் உதவுகின்றன என அறியும் போது எனது வாசிப்பின் எல்லைகள் விரிவடைகின்றன.
கேள்வி : எல்லாவிதமான சாத்திய நிலைகள் இருந்தும் நீங்கள் இலக்கியத்தில் மிக சாவகாசமாக இயங்குவதாகவே தோன்றுகிறது. குறிப்பாக நூல்கள் பதிப்பிப்பதில். அது குறித்து கூறுங்கள்?
மா.சண்முகசிவா : ஒரு படைப்பிலக்கியம் எழுதும் போதும் எழுதி முடிக்கும்போதுமே எழுதுவதால் உண்டாகும் இன்பம் கிடைத்துவிடுகிறது. யாராவது வாசித்து அதுகுறித்து பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், நூலை பதிப்பிப்பதை நானே முன்வந்து செய்யும் அவசரம் எனக்குத் தோன்றுவதில்லை. கி.ரா சொல்வது போல ‘ எழுத்து இன்னும் பழுக்கவில்லை’ என்பது எனக்கும் பொருந்துமோ எனத்தோன்றும்.
ஆனாலும் மனோவியல் குறித்து எழுதவும் பேசவும் எனக்குள் எப்போதும் ஆர்வம் அதிகம் உண்டு. தோன்றுவதையெல்லாம் எழுதுவதில்லை… அதற்கான வடிவம் நமக்கு வசமாகும் வரையில் .
கேள்வி : உங்கள் பலவீனமாக எதை கருதுகிறீர்கள்?
மா.சண்முகசிவா : நான் சௌகரியமாக இருக்கிறேன். சந்திக்கும் அனைவரும் என்னிடம் அன்பை கொட்டிவிட்டு செல்கின்றனர். வாழ்வின் பெரும் துயரங்கள் என்னிடம் இல்லை. இதுவே எனக்குக் குற்ற உணர்வாகிவிடுக்கின்றது. எனவேதான் நான் மீண்டும் மீண்டும் துன்பம் நிறைந்த முகங்களைத் தேடிச் செல்கிறேன். அவர்கள் வாழ்வை பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் துன்பங்களை என்னிடம் வர அனுமதிக்கிறேன். செம்பருத்தி, ‘மை ஸ்கீல் அறவாரியம்’ போன்றவற்றில் இணைந்து இயங்க அதுவே அடிப்படை காரணம். அது எளிய மக்களிடம் விழிப்புணர்வையும் அவர்களுக்கான புதிய பாதைகளையும் அமைத்துக்கொடுக்கிறது. குறிப்பாக நண்பர் பசுபதியுடன் இணைந்து நடத்தும் ‘பிரிமுஸ்’ கல்லூரி மூலம் கல்வியில் பிந்தங்கிய மாணவர்களுக்கு தொழிற் கல்வி புகட்டி , அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடிகிறது.
இந்தியர்களிடையே குற்றச்செயல்கள் அதிகமாகிவரும் ஒரு காலக்கட்டத்தில், சிறைச்சாலைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகிவருகின்ற இந்த நேரத்தில் இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற மன அழுத்தம் அதிகமாகி வருகிறது. சனிக்கிழமைகள் தோறும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளிடம் நான் நடத்தி வரும் உரையாடல் எனக்கு இந்தச் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் அவலங்களுக்குப் புதிய புரிதல்களைக் தருகின்றது. அந்தப் புரிதலே இந்தச் சமூக அமைப்பில் உள்ள அடிப்படை காரணிகளுக்குக் கொண்டுச் சென்று செயலாற்றவும் வைக்கிறது. செயலூக்கம் பெறாத சமூக அக்கறை வெறும் எழுத்தும் பேச்சுமாக மட்டுமே இருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
கேள்வி : உங்கள் வாசிப்பு பரிணாமம் குறித்து கூறுங்கள்.
மா.சண்முகசிவா : சிறுவர் இலக்கியத்தில் தொடங்கிய வாசிப்பு தமிழ்வாணனிடம் தொடர்ந்தது. நான் படித்த பள்ளியில் அப்போது நூலகம் இருந்தது. அங்கு ஜெயகாந்தன் , நா.பா, காண்டேகர்,சாண்டில்யன், ஜெகசிற்பியன் போன்றவர்கள் வாசிக்கக் கிடைத்தார்கள். அதேபோல சில இலக்கிய இதழ்களும் கிடைத்தன. நான் நண்பனுடன் போட்டி போட்டுக்கொண்டு வாசிப்பேன். பின்னர் வழவழப்பான அட்டையுடன் சோவியத் ரஷ்ய இதழ்கள் வீட்டுக்கு வரத் தொடங்கின. மார்க்ஸிய நண்பர்கள் உறவால் சோவியத் எழுத்தாளர்களின் இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினேன். இடையில் கொஞ்ச காலம் சுஜாதாவின் நடை பிடித்தது. வணிக எழுத்தின் அரசியலை புரிந்துகொள்ள கா.நா.சு வழிகாட்டினார்.
தியாகராஜர் கல்லூரில் படித்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அ.கி.பரந்தாமனார், இலக்குவனார் போன்ற பெரிய ஆகிருதிகளைப் பார்க்கும் போது பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. என் வீட்டுக்கு அருகில்தான் நா.காமராசன் இருந்தார். காலையில் கல்லூரிக்குச் செல்லும் போது அவருடன் நடந்து செல்வேன். புதுக்கவிதை குறித்த அவரது பார்வை விரிவாகவும் விசித்திரமாகவும் இருந்தது. என் ஊர் பக்கத்தில்தான் சிவகங்கை இருந்தது. அங்கே அகரம் பதிப்பகம் இருந்தது. அங்கும் சென்று நூல்களை வாங்கி மீராவோடு உரையாடுவேன். இதுபோன்ற ஆளுமைகளின் சந்திப்பே எனது வாசிப்புக்கு உதவின. அதன் பின்னர் மலேசியாவில் பத்து வருடங்கள் இருண்டகாலமாக இருந்தது. எனது பரபரப்பான தொழில் முறையும் எனது மேல் படிப்புக்காக வியன்னா சென்றதும் அதற்குக் காரணம். மீண்டும் எனது வாசிப்பு பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், சுந்தரராமசாமி, நாஞ்சில் நாடன், பாமா, அம்பை என நகர்ந்தது. இன்று என் வாசிப்பு சிறுகதைகளையும் கவிதைகளையும் மையமிட்டுள்ளது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகரன், மனுஷ்ய புத்திரன், ஆதவன் தீட்சண்யா, சுதிர் செந்தில் என நீண்ட பட்டியல் உள்ளது. நாவல் வாசிப்பு குறைந்துள்ளது. எதையுமே தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்.
கேள்வி : கலை என்பதை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?
மா.சண்முகசிவா : புலன்கள் வழியாக மூளைக்குச் சென்று உணர்வெழுச்சியை ஏற்படுத்தி புரிதலுக்கு இட்டுச்செல்வது கலை. அது உணர்ச்சி மயமானது. நமது அன்றாட வாழ்க்கையில் கூட நாம் பார்க்கும் எல்லா விசயங்களிலும் கலையின் உட்கூறு இருக்கிறதுதான். இதோ நாம் அணிந்திருகும் சட்டை, இந்த மேசை, அறையின் அமைப்பு, என எல்லாவற்றிலும் மனிதனின் அழகியல் உணர்வு ஊடுருவிதானே நிர்க்கிறது. கலை ஒரு படைப்பாக்கச் செயல். மனிதன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வாய்த்த ஒரு வடிகால். ஆனால் இந்தக் கலை என்பதான பேச்சு தொடர்ச்சியான ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுக்கொண்டே வரும். உருவமும் உள்ளடக்கமும் இணைந்ததுதான் கலை. உருவம் ஒரு கலைஞனின் தேர்வு. உள்ளடக்கம் அவன் என்ன சொல்ல வருகிறான் எப்படி சொல்ல வருகிறான் என்பதைப் பொருத்தது. உள்ளடக்கத்தின் மூலம் மதம், அரசியல், தனிமனித உணர்வு சமூகம் என்று எதுவாகவும் இருக்கலாம். இலங்கை போரின் அவலத்தை தூரிகை மூலம் சொல்லவந்தபுகழேந்தியின் ஓவியங்கள் நம்முள் கோபம், விரக்தி, இயலாமை, சொல்லொன்னா துயரம் என்று எத்தனையோ விதமான உணர்வுகளை எழுப்புகின்றது. இங்கே கலை நம்மை நுட்பமாகப் பார்க்கச் செய்கிறது. எல்லோராலும் பார்த்து உணர முடியாததை கலைஞர் உள்வாங்கி உணர்ந்து தன் கலையின் மூலம் உணர்த்துகிறான். கலை ரசிக்க ,உணர, உணர்வு வயப்பட , உணர்வை இடமாற்றம் செய்ய பரவசம் அடைய , சிந்திக்க தன்னை வெளிப்படுத்திக்கொள்ள , தான் பார்த்த விதத்தை மற்றவர்களும் பார்க்கச் செய்ய என பல தளங்களில் இயங்குகிறது. உள்ளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வெளியே வரத் தவிக்கின்றது. அது தெருப்பாடகனின் பாடலாக இருக்கலாம், கிராமியப் பெண்ணின் ஒப்பாரியாக இருக்கலாம், ஒரு தேர்ந்த எழுத்தாளனின் கதையாக இருக்கலாம். கலை மகிழ்ச்சிக்காக இருக்கலாம். புரட்சிக்காக இருக்கலாம். கலை விடுதலைக்காகவும் இருக்கலாம். ஒரு ஆழ் நிலை தியானமாகவும் இருக்கலாம். இப்போதெல்லாம் நோய் தீர்க்க மருந்துடன் கலையும் நோய்த்தீர்க்கிறது. புற்று நோய் வந்த பெண்களையெல்லாம் குழுவாக அமைத்து கவிதை எழுதச் சொல்லி நூலாக்கி வெளியிட்டுள்ளார்கள். அதில் ஒரு கவிதையைக்கூட மொழிபெயர்த்து எனது மருத்துவ கேள்வி – பதில் நூலில் (மனதிலிருந்தும் மருந்திலிருந்தும்) வெளிவந்துள்ளது.
கேள்வி : ஓர் இளம் எழுத்தாளனுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
மா.சண்முகசிவா : அபூர்வமாக இன்று மலேசியாவில் உருவாகியுள்ள இளம் எழுத்தாளர்கள் இதற்கு முன்பு உள்ள எழுத்தாளர்களைவிட புதிதாகச் சிந்திக்கவும் எழுதவும் கற்றுள்ளார்கள். வல்லினம் அவர்களுக்கு வளமான களம் அமைத்துக்கொடுத்துள்ளது. இலக்கியம் குறித்த அவர்கள் பார்வை சரியாக உள்ளது. அது இன்னும் தீவிரமாக வேண்டும். கடந்த தலைமுறை எதை செய்யாமல் விட்டது என அவர்களுக்குத் தெரிய வேண்டும். மலேசியத் தமிழர்களின் அசலான வாழ்வை அவர்களை கலை நுட்பத்துடன் பதிவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அவர்கள் அதற்கான மூலப் பொருளுடன் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. இன்றைய இணைய வாய்ப்பு பரந்துபட்டுக்கிடக்கும் தமிழ் எழுத்தாளர்களோடும், ஆளுமைகளோடும் உறவாடவும் முரண்படவுமான இன்றையச் சூழல் மகிழ்ச்சியைத் தருகிறது. அன்றையக் காலங்களில் தமிழகத்திலிருந்து அழைத்துவரப்படும் வணிக எழுத்தாளர்களுக்காக கட்டமைக்கப்படும் பிம்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையற்றவர்களாக இவர்கள் இருப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான சூழலாக நினைக்கின்றேன்.
கேள்வி : இலக்கியத்தை ஒட்டிய உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
மா.சண்முகசிவா : ஒரு நாவல் எழுதும் எண்ணம் உண்டு. அதைவிட முக்கியமாக இளம் தலைமுறை எழுத்தாளர்களிடம் என் அனுபவத்தையும் வாசிப்பையும் வாழ்க்கையையும் பகிர்ந்து அவர்கள் மூலமாக நல்ல எழுத்துகள் வர வேண்டும் என்பதே என் ஆவல். எனக்குத் தோட்ட வாழ்க்கை அனுபவம் இல்லை. ஆனால் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தவர்களின் வாழ்வு தெரியும். நகரமயமாக்களில் நிகழ்ந்த மனித சிக்கல்கள் தெரியும். ஒவ்வொரு காலத்திலும் மலேசியத் தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு விதமாக மாறிவருகிறது. இதை இளைஞர்கள் அறிந்து எழுத வேண்டும். என்னிடமிருந்து இலக்கியம் வருவதைவிட இளைஞர்களிடமிருந்து வருவதுதான் எனக்கு திருப்தி. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இலக்கியம் குறித்த பார்வையில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் கடந்து இலக்கியம் மேலெழுந்து செல்ல வேண்டும்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் முன்பு போல பிரதிகளை மட்டும் படித்துவிட்டு தேங்கிவிடாமல் தமிழகம் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் எழுத்தாளர்களை நேரடியாகச் சந்தித்து பழகி அவர்களது ஆளுமைகளை உள்வாங்கி தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறேன்.இன்றைய மலேசியத் தமிழர்களின் வாழ்வையும் அதன் சிக்கல்களையும் அதன் தீவிரத்தோடு அவர்களுடைய எழுத்துகள் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.
நன்றி : குவர்னிகா
நேர்காணல் / படங்கள்: ம.நவீன்
————–
டாக்டர் மா.சண்முகசிவாவின் படைப்புக்களை வாசிக்க : http://vallinam.com.my/shanmugasiva/
unggalin aal manatin aatanggatinai unargiren. unggal manitattin unarvugal, puttarin sittantam, komunism pondra karuttugal enakku migavum pidittirukkiratu. anpillata kadavul bakti, alagukku kovil, pugalukku sambiratayanggal anaittum oliya vendum. miindum oru putiya ulagam tondra vendum. anggu unggalai pondra sintanaiyalargal talamai tangga vendum. nanggal anggu manitargalaga pirakka vendum. KAVERI-JASIN
இலக்கியம் பற்றிய தெளிவு, மாறுபட்ட சிந்தனை, சமுதாயத்தின்மீது பரிவு, இளைஞர்கள்மீது நம்பிக்கை, சமுதாயத்துக்குத் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற துடிப்பு, மனித நேயம் முதலியவற்றை வெளிப்படுத்து அருமையான நேர்காணல்.
படைப்பாளர் மா.சண்முக சிவா அவர்களுக்கு, தங்களுடைய ” மனித விடுதலை போன்று கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று ” என்ற தலைப்பில் வெளிவநதுள்ள (பேட்டியாளர் ம.நவீன்) பேட்டியின் மூலம் உங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றேன். உங்களுடைய வெளிப்படையான முகமூடி அணியாத கருத்தியல் தெளிவுடன் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி குற்ற உணர்வையும் கிளறியுள்ளது. 1983 ஆக இருக்கலாம். மானாமதுரையில் என் மனைவி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். மானாமதுரை நவனியம்மா வீட்டிற்கு வந்திருந்தீர்கள். அப்போது தங்களைச் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு ‘வீடும் விழுதுகளும்’ தந்தீர்கள். உங்கள் பேட்டியைப் படித்துவிட்டு அந்தத் தொகுப்பை எடுத்து என் முன்னால் வைத்திருக்கிறேன். பெரும் குற்ற உணர்ச்சி என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சிறந்த சிந்தனையாளர், மனிதத்தை நேசிப்பவர், சமூக அக்கறையுள்ள ஒருவரின் படைப்பை ஒதுக்கி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி. மன்னிக்க. இனி உங்களைத் தொடர்கிறேன்.