கடன்

அமைதி நிலவியது.

நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது.

விழித்துக்கொண்டேன்.

கண்ணிமைகளை இலேசாய்த் திறந்தபடியே எதிரில் இருப்போரைக் கண்ணோட்டமிட்டேன். அழுக்கு உடைகளைத் தரித்திருந்த ஒரு சீனன் சன்னக் குரலில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நடுவில் பயணி ஒருவர் தன் அகலமான நீண்ட துணிப் பெட்டியின்மீது தலையைக் கவிழ்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். இடது மூலையில் தன் எச்சிலை இங்குமங்குமாகத் துப்பிக் கொண்டிருந்தான் ஒரு கிழ சீனன்.

கருமம் பிடித்தவன். எத்தனை ஆண்டுகள் போனாலும் இந்தப் பழக்கத்தை விட மாட்டேன் என்கிறான். அவனுக்கு முன்னே ஓர் ஆண் மடியில் பெண்ணொருத்தி தலைவைத்து விசும்பிக்கொண்டிருந்தாள். இதனால்தான் அந்தக் கருமம் பிடித்தவன் எச்சில் துப்பிக்கொண்டிருக்கிறான் எனப் புரிந்தது. அவன் அப்படித்தான். தனக்கு இடையூறாக யாராக இருந்தாலும் எங்கு இருந்தாலும் எச்சில் துப்புவான். இதனாலேயே பல பேரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கியிருக்கிறான். பல இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டிருக்கிறான். இங்குப் புடுராயாவில்கூட அவன் பின்னிரவு இரண்டுக்குமேல்தான் வந்து படுப்பான்.

விடிந்ததும் அவர்களைப் பார்த்துக்கொள்வோம், அப்படி அவர்கள் இருந்தால், என மனம் முடிவெடுத்துக்கொண்டது. தலையைத் திருப்பிக்கொண்டு, விட்ட இடத்தில் கனவைத் தொடர்ந்தேன்.

பேருந்துகளில் இரைச்சல் காதுகளுக்கு எட்டியதும் எழுந்துகொண்டேன். இலவச கழிப்பறைக்குச் செல்வதற்காக முன்னோக்கிச் செல்கையில் விசும்பிய பெண்ணையும் மடிதந்த ஆணையும் கவனித்தேன். இருவரும் கண்ணயர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பாக மூன்று பெரிய துணிமணிகளும் பயணச் சாமான்களும் அடங்கிய பெட்டிகள் இருந்தன. “அடப் பாவமே, தங்களையும் மறந்து இப்படித் தூங்குகிறார்களே… இந்தப் பெட்டிகளை இவர்களின் கடவுள்தான் காக்க வேண்டும்” என்று மனதுக்குள் எண்ணியவாறே மேம்பாலம் ஏறி இறங்கி 24 மணி நேரமும் செயல்படும் குளிரூட்டிய உணவகத்திற்குள் நுழைந்தேன். எல்லாம் முடிந்து கோர்ட்டுமலைப் பிள்ளையார் கோவிலில் கொடுக்கப்பட்டதைப் பசியாறி, குழாய் நீரைக் குடித்து அவ்விருவரையும் பார்த்து வர மீண்டும் மேம்பாலம் ஏறினேன்.

அவர்கள் இருவரும் தங்கள் முகங்களைக் கழுவியிருந்தனர். சொல்லமுடியாத ஒரு சோகம் அவர்களின் முகங்களில் அப்பிக்கிடந்தது. புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு இருவருக்கும் மத்தியில் நின்ற வண்ணம் “உங்களை நா ரெண்டு மூனு நாளா கவனிச்சுக்கிட்டு வர்றேன். என்ன நடந்துச்சு?” என்று கேட்டதற்கு ஆண்மகனார் பெண்ணைப் பார்க்க, பெண் அவரைப் பார்க்க இருவரும் என்னைப் பார்த்தனர். பெண்ணே முதலில் வாய்த் திறந்தார்.

“எங்கள் அண்ணன் மகன், ஏமாத்திப் போட்டான். இரண்டு நாள் இரண்டு வாரமாகி மாசமாச்சு. போனை அடைச்சுப் போட்டான். என்ன செய்யிறது எண்டே தெரியல. கெடந்து தவியாய்த் தவிக்கிறோம்.”

“இவர் உங்கள் கணவரா”

“ஓம்”

“ஏன் அவர் பேசமாட்டாரா”

“அது… அது… அவருக்குத் தமிழ்ப் பேச வராது”

“சிலோனிஸ்ட்டா”

“ஓம்”

“நீங்க தமிழ்ப் பேசறீங்களே”

“கொஞ்சம் அறிவோம். கொழும்புவில் பேசிப் பழகினது மட்டும்…”

தமிழ்ப் பேசும்போதுகூட ஒரு நிதானம். யோசித்துச் சொல்வதுபோல, இழுத்துப் பேசியது, இந்தப் பெண்ணும் சிலோன் இனத்தைச் சேர்ந்தவள் என்ற உறுதி ஏற்பட்டது. போயும் போயும் இவர்களுக்கா நான் உதவி செய்ய வேண்டும். இதற்குப் பதில் ஒரு தெரு நாய்க்கும் இலக்குத் தெரியாமல் திரியும் பூனைக்கும் உணவிட்டுப் போகலாம். வந்து விட்டார்கள். வேறு வேலை இல்லாமல்… தமிழன் என்ன இளிச்சவாயனா? எக்கேடு கெட்டுப் போங்கள். இங்கேயே கிடந்து சாவீர்களா… என்று மனம் வஞ்சனமில்லாமல் சபித்தது. இடத்தைக் காலி பண்ண எத்தனித்தேன்.

“அவசரமா ஒரு வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன்.”

“ஓம் நல்லது.”

கொஞ்சம் புன்னகைத்தனர் இருவரும். நானும் புன்னகைத்து நகர்ந்தேன். ‘ஓமாவது சோமாவது. இரக்கமின்றிச் சுட்டுத்தள்ள வேண்டும்’ மனம் வெறித்தனத்தில் எகிறிக் குதித்தது.

புக்கிட் நானாஸ் கெத்தர்டல் தேவாலயத்தின் உணவு தரப்படும் பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது வெத்த£லை பெட்டியும் பாஞ்ஞானும் மெது நடையில் மேட்டை ஏறிக்கொண்டிருந்தனர். வெத்தலைப்பெட்டி என்னைப் பார்த்தும் நின்று விட்டார்.

“அப்புறம் என்ன கதை..?”

“சிலோன் ஜோடி ஒண்ணு புடுராயாவுல பார்த்தேன். உதவி செய்யல. கண்டுக்காம வந்துட்டேன்.”

“ஆமா… நானும் பார்த்தேன். ஏற்கனவே யாழ்ப்பாணத்துக்காரங்க நிறைய பேரு இறங்கிக்கிட்டு இருக்காங்க… இதுல இவங்க வேறயா… இங்க சண்டை போடாம இருந்தா சரி…”

பாஞ்ஜான் அமைதியே உருவானச் சாதுவாய் நடந்து வந்தான். அவன் இன்னும் தை ஸோங் போடவில்லை. போட்டான் என்றால் கழுத்து நரம்புகள் புடைக்க தொண்டையில் அழுத்தம் கொடுத்துத் தடித்த குரலில் பேசுவான். இந்த நாட்டிற்குள் தை ஸோங் வந்தாலும் வந்தது, வயது வித்தியாசமின்றி உள்நாட்டினரும் வெளிநாட்டினரும் குடித்து வெறித்து நாய் மல்லாக்கப் படுத்துக் கிடப்பதுபோல தெருவோரத்திலும் குப்பைத் தொட்டி அருகினிலும் மெய்மறந்து கிடக்கிறார்கள். தாய் ஸோங் என்ற சொல்லே மருகி தை ஸோங்காயிற்று. வெளியூர்க்கார்களும் அயல்நாட்டுச் சுற்றுப்பயணிகளும் இந்தக் கோலத்தைப் பார்த்து முகஞ்சுளித்து சென்றதை அநேக முறை கண்டதுண்டு. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால் அவ்வழியாகத்தான் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த காவலர்கள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். மேலும் மூலைக்கு மூலை ஒரு காவல் சாவடியும் உண்டு. போதாதற்கு, மாநகர் மன்ற சீருடயணிந்த பணியாளர்களின் நடமாட்டத்திற்கும் இங்கு குறைவில்லை. எல்லாம் இருந்தும் ஒரு புண்ணியமுமில்லை.

தேவாலயத்தின் உணவுக் கூடத்தில் பல தை ஸோங்கள் இருந்தனர். குளிப்பதும் துணி துவைத்துக் காயப் போடுவும் கதை பேசுவதும் அரசியல் பேசுவதுமாய் 12 மணி வரைக் கழிந்தது. தேவாலயத்தின் மணியோசை கேட்கப்பட்டதும் எல்லாரையும் எழுந்து நிற்கச் சொல்லி, கிறிஸ்தவ – ஹிந்து – இஸ்லாமிய பிரார்தனைகள் செய்யப்பட்டன. சிலர் இரண்டு முறையும் இன்னும் சிலர் கடைசியாய் மிச்சமிருக்கும் உணவு வகைகளைப் பொட்டலங்கட்டி வெளியேறினர். நூற்றம்பதுக்கும் மேற்பட்டோர் இருந்த தடயமே இல்லாமல் இடம் காலியாகிக் கொண்டிருந்தபோதே ஊதியக்காரர்கள் இங்குமங்குமாகப் பரபரப்பாக செயல்பட்டுச் சுத்தம் செய்தனர்.

என் எதிரே வரும் என்னை அறிந்தவர்களிடமும் நான் அறிந்தவர்களிடமும் நேரத்தைக் கடக்கும் நோக்கில் அளவலாவி இரவு ஏழானதும் பாடாங் மெர்போக்கினருகிலுள்ள சீக்கிய கோவில் வளாகத்தில் உணவுண்டு இரண்டு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு எப்போதும்போல புடுராவிற்குச் சென்றேன்.

காலியான இருக்கைக்காக இடம் வலமாக மீண்டும் வலமிடமாக வருகையில் இரு ஜப்பானியப் பெண்கள் இருக்கையை விட்டு எழுந்து நடந்து என்னை வழி மறித்தனர். பெட்டாலிங் ஸ்டிரிட்டுக்கு வழி கேட்டனர். சும்மா இருப்பதற்குப் பதில் இவர்களுக்கு உதவலாமே என்றெண்ணி என்னைப் பின்பற்றச் சொல்லி அவ்விடத்துக்கு அழைத்துச் சென்றேன். அவ்விடத்தைக் கண்டதும் பெருமகிழ்ச்சியின் அறிகுறி அவர்களின் முகத்தில் கண்டேன். அவர்களின் பாஷையில் நன்றியெனக்கூறி குனிந்து நிமிர்ந்தனர். நானும் குனிந்து நிமிர்ந்தேன். மீண்டும் அவர்கள் குனிந்து நிமிர, நானும் அப்படிச் செய்ய, மீண்டும் அவர்கள் தொடர, என்னடா வம்பாப் போச்சு என்று சலித்துக்கொண்டே இரு கரம் கூப்பி நின்றேன். அவர்களும் இரு கரம் கூப்பி குனிந்து நிமிர்ந்தனர். நான் ஓரடி பின்வைத்ததும் அவர்கள் குறிப்பறிந்து இருவரும் தங்களின் கைப்பையைத் திறந்து பத்து வெள்ளி நீட்டினர். இருவரும் சகோதரிகள் போலத் தோற்றமளித்தனர். ஆனால் ஒருத்தி குட்டைப் பாவாடையுடன் கூந்தலுடன் இருந்தாள். இன்னொருத்தி ஒட்டி நறுக்கிய தலைமுடியை மூடும் தொப்பியுடன் இருந்தாள். கூந்தல் பெண்ணின் பணத்தை மட்டும் வாங்கி, ஆங்கிலத்தில் போதுமென்றேன். இருவரும் சிரித்தபடியே கையசைத்து நகர்ந்தனர். பேசாமல் இந்த வேலையை மட்டும் பார்க்கலாம் போல. பத்து நிமிடத்தில் பத்து வெள்ளி. இந்தப் பண்பாடும் கலாசாரமுமுடைய இனமா ஒரு காலத்தில் நம் நாட்டுக்கு வந்து அராஜக படுகொலைகளைப் போர் என்ற பெயரில் செய்தது…? நம்பவே கஷ்டமாக இருக்கிறது என்றெண்ணி ஆச்சரியப்பட்டுக்கொண்டேன்.

மறுபடியும் புடுராயா சென்றடந்தேன். காலியான இருக்கையைத் தேடி அமர்ந்து பார்வையை ஓடவிட்டேன். எனக்கு நேரே எதிரில் அந்தச் சிலோன் தம்பதிகள் சோகத்தோடு அமர்ந்திருந்தனர். வேறு காலியான இருக்கை தென்படுகிறதா எனக் கண்ணோட்டமிட்டேன். இல்லை. அவர்களைப் பார்க்க பார்க்க வெறுப்பு உண்டானது.

பாஞ்ஜான் அவ்வழியே வர, நான் கையசைத்து வரும்படி சொல்ல, அவன் பின்னால் வெத்தலைப் பெட்டியும் காணப்பட்டார். இருவரும் எனனருகே வந்ததும் சட்டைப் பையிலிருந்த பத்து வெள்ளியைப் பாஞ்ஜானிடம் கொடுத்து மூவருக்கும் தேநீரும் உண்ண ஏதாவதும் வாங்கி வரச் சொல்ல, வெத்தலைப் பெட்டி தன் பங்குக்கு வெத்தலைப் பாக்குச் சுண்ணாம்பு வாங்கும்படி சொன்னார்.

பாஞ்ஜான் போய் வந்ததும், கால் மேல் கால் போட்டுக்கொண்டும் ஆட்டிக்கொண்டும் தேநீரையும் சிறு ரொட்டியினையும் மற்றவர் அறிய சுவைக்கும் ஒலியெழுப்பி சாப்பிட, பாஞ்ஜானும் வெத்தலையும் ஆச்சரியமாய் என்னையே பார்த்தனர். என் நிலைக் குத்திய திசையை அறிந்த பிறகு வெத்தலைப் பெட்டி தலையை ஆட்டிக்கொண்டார். சோழி ஏன்டா ஆடுதுன்னு பார்த்தா… ஆஹா அப்படியான்னு கேட்டுச்சாம் கிழட்டுக் கட்டை… என்று தனக்கேயுரிய அடிவயிற்றிலிருந்து எழும்பின சிரிப்புடன் சொன்னார். அவரின் மேற்பற்களும் கீழ்ப்பற்களும் கருங்காவி நிறத்தில் வெற்றிலைச் சாறுகளோடு தெரிந்தன.

தூரத்தில் முருகா வருவதைப் பார்த்ததும் பாஞ்ஜான் உற்சாகமாகி தெய்வமே என்னோட தெய்வம் வந்தாச்சு என்று சொல்லிக்கொண்டே கிளம்ப, முருகா இவனைப் பார்த்ததும் நின்று திரும்பியதும் இருவருமான் ஆறுமாதம் பார்க்காத நண்பர்கள் சந்திதித்துக்கொண்டதுபோல கட்டிப்பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டே புறப்பட்டுப் போனார்கள். அன்றாடம் இதே காட்சியைக் காணும் எனக்கு வியப்பளிக்கவில்லை.

நானும் வெத்தலையும் அந்தக் கதையும் இந்தக் கதையும் அவன் கதையும் இவன் கதையும் பேசி நேரத்தைக் கழித்துக் கொண்டோம். நள்ளிரவு வரை அந்தச் சிலோன் தம்பதியினர் அவ்வப்போது எங்களைப் பார்ப்பதும் தங்களின் மொழியில் பேசிக் கொள்வதுமாக இருந்தனர். நான் அக்கறையேதும் காட்டவில்லை. சனியன்கள் ஒழியட்டும்.

நடுச்சுவரின் பெருங்காற்றாடி தன் வேலையை நிறுத்திக்கொண்டதும் உஷ்ணமும் புழுக்கமும் அதிகரிக்கத் தொடங்கியது. எல்லாரும் நீள் இருக்கையில் சாயத் தொடங்கினர். ஒரு சிலர் சமூக நல இலாகா அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைக்குப் பயந்து உட்கார்ந்தபடி தலையை இரும்புச் சட்டத்தில் சாய்த்துப்படுத்தனர். சில நிமிடங்களுக்குள்ளாகவே அவர்களின் வாய்கள் பிளந்து கொண்டன. ஈ புகுந்து வெளியேறினாலும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். என் பின்புற நீள் இருக்கையில் ஒருவன் இன்னொருவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தன் தலைமாட்டில் கால் வைத்துப் படுப்பது சரியல்ல என்று எவ்வளவோ சொல்லியும் அந்த நபர் கற்பாறை மனமாகக் கேட்காததுபோல படுத்துக்கிடந்தான். புகார் செய்தவன் இயலாமையில் முனகிக்கொண்டே இருந்தான்.

கண்களைக் கூசும் ஒளிப் பிரகாசத்தை மறைக்க சிறு துண்டினால் முகத்தை மறைந்துக்கொண்டுக் கண்ணயர்ந்தேன். வெவ்வேறானத் தொடர்புகளற்ற வினோத கனவுகள் தோன்றி மறைந்தபடி இருந்தன.

அதிகாலை இருக்கும். என் தோளைத் தட்டியபடி யாரோ எழுப்புவதை உணர்ந்து கண்விழிக்க, சிலோன் தம்பதியரை மிக மிக அருகினில் கண்டு விருட்டென்று எழுந்தேன்.

அப்பெண்மனி கண்ணீர் மல்க, எங்களோட லக்கேஜு காலைத் திருட்டுப்போச்சு எனச் சொல்லி கைகளை நெஞ்சினில் வைத்து அழ ஆரம்பித்தாள். வெத்தலைப் பெட்டியைப் பார்த்தேன். அவர் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். மூடப்பட்ட கடையின் கண்ணாடித் தடுப்பினூடே சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி நான்கு நாற்பதைக் காட்டியது.

“போலிஸ் ரிப்போர்ட் பண்ணனும்” என்றாள்.

“உங்களுக்கு ரிப்போர்ட் மட்டும் வேணுமா இல்ல உங்களோட லக்கேஜ் வேணுமா”

“லக்கேஜ்”

“அப்ப என்கூட வாங்க. லக்கேஜ் உங்க கைக்குக் கிடைக்கிற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் பேசக்கூடாது. ஓகேவா” என்றதும் அப்பெண்மணி கண்களைத் துடைத்துக்கொண்டுத் தன் கணவனிடம் விளக்கிக் கூறி என் பின் வந்தாள்.

என் நடையை வேகப்படுத்தினேன். இருவரும் ஓடாத குறைதான். பார்க்கப் பாவமாக இருந்தது. புடுராயாவிலிருந்து வெளியேறி பெட்டாலிங் சந்தைப் பகுதிக்குள் நுழைந்ததும் குறுக்குத் தெருவொன்றை அடைந்தோம். அந்தப் பகுதியைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் பய உணர்வு ஏற்பட்டது. இருவரும் தங்கள் கரங்களைப் பற்றிக்கொண்டனர். தங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்ளும்போது நான் என் ஆள்காட்டி விரலை வாயருகே கொண்டு வந்து பேசாதிருக்கும்படி சைகைக் காட்டியதும் மவுனமாயினர். இருவரையும் வலதுகோடியுள்ள பூட்டப்பட்ட குளிர்பதனப் பெட்டிக்குப் பின்னால் மறைந்திருக்கச் செய்து, எவராவது அவர்களின் துணிப்பைகளைக் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் அவனறியாமல் கையசைத்து எனக்கு அறிவிக்கும்படி சொன்னேன். அவர்களுக்கு எதிர்ப்புறமாக நடுப்பகுதிக்கு வந்து அங்கிருந்த மரப்பலகையிலானக் கால்கள் உடைந்த மேசைக்குப் பின்னால் முழங்கால் படியிட்டு இடது புறம் ஒரு பார்வையும் எதிர்ப் புறத்திலிருந்து அவர்களின் சைகையையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.

என் உருவம் வெளியே தெரியாதபடிக்கு ஒடுக்கிக் கொண்டேன். காத்திருக்க காத்திரக்க கால் வலித்தது. கொசுக்கள் தொல்லைக் கொடுத்தன. எந்தவொரு சத்தமும் எழுப்பாதபடிக்கு மிக எச்சரிக்கையாக இருந்தேன். தெருவிளக்கு வெளிச்சத்தில் உருவம் ஒன்று நடந்து வரக்கண்டேன். இரண்டுக் கைகளிலும் பாரமானதை இழுத்து வரக் கண்டதும் தயார் நிலையில் என்னை இருத்திக்கொள்ளவும் அவ்வுருவத்திற்குப் பின்னால் சிலோன் தம்பதியர் தங்கள் கைகளை அசைத்துக்கொண்டே இருப்பதையும் கண்ணுற்ற கணத்தில் அவனும் பின்னால் பார்த்து விட்டான். இனியும் தாமதிப்பதில் பயனில்லை என்று முடிவெடுத்துப் பாய்ந்தோடவும் அவன் செய்வதறியாது திகைக்கவும் எனக்குச் சாதகமாக அமைந்தது.

ஒரே பாய்ச்சலாகக் குறி பார்த்து எய்வதுபோல பலங்கொண்டு வயிற்றில் குத்துவிட, அம்மா என்று அலறி குனிய, அவன் கழுத்தைச் சுற்றி கரத்தை வைத்து இறுக்கிக்கொண்டேன். கீழே அவனைச் சாய்த்து இலேசாகப் பிடியை விடும்போது, டேய் பேப்புண்ட வுட்றா… ஙொம்மாலே… என்றவன் கத்தியதும் அவன் முகத்தைப் பார்த்து எட்டி உதைத்தேன். முகத்திலும் வாயிலும் மிதித்துக்கொண்டே இருந்தேன். சிலோன் தம்பதியர் வந்து தடுத்தனர்.

கீழ்முச்சு மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்த அவனிடம், “மவுனே உன்னை இனி இந்த ஏரியாவுல பார்த்தேன்…மூஞ்சிலேயே பாறாங்கல்ல போட்டுக் கொன்னுடுவேன், புரிஞ்சிதா…” அவன் தலையை இடித்துக் கேட்டதற்கு… “அண்ணே வுட்றுங்கண்ணே எங்கம்மா மேல சத்தியமா வரமாட்டேண்ணே…” என்றான்.

தம்பதியர் அவர்களின் துணிப்பை சாமான்களை எடுத்து நகர, நானும் ஒன்றை எடுத்து இழுத்துப் போனேன்.

புடுராயா இருக்கையில் அமர்ந்ததும் மணி பார்த்தேன். ஆறாகியிருந்தது. எல்லாரும் எழுந்திருந்து உட்கார்ந்து கொண்டிருந்தனர். தம்பதியர் பேச்சுக்குப் பேச்சு நன்றி தெரிவித்த வண்ணமிருந்ததால் எரிச்சல் ஏற்பட்டது. கொஞ்சம் சலித்துக்கொண்டதும் பேச்சை நிறுத்த அமைதி காத்தனர்.

“உங்க ஊருக்கு நீங்க திரும்பிப் போகணுமா இல்ல இங்கேயே இருக்கப் போறீங்களா?”

“ஐயோ நாங்கள் போயிடணும். பட்ட கஷ்ட் அதிகம். ரிட்டன் டிக்கெட் இருக்கு. இங்க இருந்து சிங்கப்பூர் போகணும். கையில காசு இல்ல. சங்கிலியும் மோதிரமும் வித்தாச்சு” யோசித்து யோசித்து மெதுவாகப் பேசும் இவர் நெடுக்காலம் தமிழையே பேசாதிருந்திருக்கிறார் என்று புலப்பட வைத்தது. அவர் கணவர் பேசின ஆங்கிலமும் நொண்டியடித்தது.

அவர் குறுந்தாடியுடன் பட்டணவாசிபோலவும் மெத்தப் படித்தவர் போலவும் தெரிந்தார். அப்பெண்மணியைச் சிஸ்டர் என்றே அழைத்தேன். சுமாரான அழகுதான் என்றாலும் கவரக்கூடிய விதத்தில் புருவங்களும் பல்வரிசையும் அமைந்திருந்தன. தன் கணவரைவிட இவள் சற்று உயரம்தாம்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது வெத்தலைப் பெட்டியும் பாஞ்சானும் முருகாவும் முக இறுக்கத்துடன் பார்த்துக்கொண்டே சென்றனர்.

தம்பதியரை கோர்ட்டுமலை பிள்ளையாரின் பிரசாத உணவையும் சுடச்சுட தேநீரையும் கிடைக்கும்படி செய்தேன்.அப்போது மூவரின் பார்வையிலும் வெறுப்பும் ஆத்திரமும் தெரிந்தது.

லெபோ அம்பாங் பாபா மையத்தில் தம்பதியரின் உடமைகளை தற்காலிகமாக ஒரு மூலையும் அனுமதி கேட்டுப் பெற்றோம். ஆளாளுக்கு ஒரே ஒரு ஜோடி உடையை மட்டும் எடுத்துக்கொள்ளச் செய்து புக்கிட் நானாஸுக்கு நடந்தேறினோம்.

அங்கு ஏற்கனவே அம்மூவரும் மற்றவர்களோடு இருந்தனர். எங்களைப் பார்த்ததும் பேச்சு நின்றது. ஜயன், கபாளி, குடை, பிளேடு, மற்றும் சீரா யாவரும் எப்போதும் என்னைப் பார்த்ததும் நலம் விசாரித்து ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். இப்போது கப்சிப். ஈயாடவில்லை.

தம்பதியரை குளிக்கவும் துணி துவைக்கவும் காயப்போடவும் வழிவகைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.

பாஞ்சானும் முருகாவும் விறுவிறுவென்று வெளியேறுவதைக் கண்டும் காணாமல் இருந்தேன். உள்ளுணர்வு ஏதோ எதையோ உறுத்தியது.

உணவு உண்டபின் தம்பதியரை அவ்வலுகத்துக்கு அழைத்துச் சென்று சிங்கப்பூர் வரை போகப் பண உதவி கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.

வரிசையாக நின்று உணவை எடுத்து அகலமான நீள்மேசையில் வைத்து உட்கார்ந்து உண்ணும்போது பாஞ்ஜானும் முருகாவும் நுழைந்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை எடுத்து எனக்கு முன்னே நின்று கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் சோற்றுத் தட்டை என்மீது விட்டெறிந்து, “துரோகி பச்சைத் துரோகிடா நீ… டேய் மயிராண்டி, நீ ஒங்கம்மாவுக்குத்தான் பொறந்தியா” என்று கேட்டதும் அவர்கள் மீது பாய்ந்து சண்டையிட , அந்த இடமே அல்லோல கல்லோலப்பட்டது. சீன, மலாய்க்கார வாலிபர்கள் உடனே வந்து எங்களை இழுத்துத் தடுத்தனர். அம்மையத்தின் பொறுப்பாளரானக் கார்ல்ஸ் எங்கள் மூவரையும் இடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார். அவ்விடமே கசமுசாவாக மாறியது. அமைதிப்படுத்தும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

நான் வெளியேறும்போதே தம்பதியரும் வெளியேறினர். தண்ணீர் குழாய் அருகே சென்று தலை முதல் கால் வரை ஒன்றும் பாதியுமாகச் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது இருவரும் என் பின்புறத்தைத் தண்ணீர் தெளித்தும் கழுவியும் சுத்தப்படுத்தினர். வெத்தலைப் பெட்டி என்னைக் கடக்கும்போது, தேவையா இது என்று தலையை ஆட்டிக்கொண்டே போனார். கபாலி என்னைப் பார்த்துக் கை நீட்டி , “டேய் சுண்ணி, உன்னால இப்ப ஒரு மாசம் மூடப்போறாங்க… சோத்த நீயா போடுவ இனிமே… புண்ட” என்றதும் மண்டைக்கு ஏறியது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டேன். காரியம் ஆக வேண்டும். இனி சண்டை போட்டால் பொது மக்களே போலிசுக்குப் போட்டுக் கொடுத்துப் பிடித்தும் கொடுப்பார்கள். மறுநாள் செய்தியாகப் பத்திரிகையில் வெளிவரும். பொது ஜனம் ஹீரோவாகி விடுவார்கள். தண்டத்துக்கு ஓராண்டுச் சிறையை அனுபவிக்க வேண்டும்.

இனி எங்குமே உதவிக்குப் போக இயலாது. இந்தச் சம்பவம் காட்டுத் தீயைப் போல பரவி விட்டிருக்கும். வீண் அலைச்சல். நான் உதவிக்காக எங்கெல்லாம் போவேனென்று அம்மூவருக்கும் தெரியும். என் பெயரையும் உருவ அமைப்பையும் தொலைநகல் அனுப்புவதுபோல வாய் மூலம் அனுப்பி வைத்திருப்பார்கள்.

முதல் வேலையாகச் சிலோன் தம்பதியரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் இன்றிரவே. தாமதித்தால் அவர்களுக்கும் ஆபத்து வரும். துரித கதியில் மூளை யோசிக்க ஆரம்பித்தது. எனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் தோழிகளிடமும் சம்பவத்தை விவரிக்காமல் நூற்றைம்பது வெள்ளியைக் குறுஞ்செய்தி மூலமாகக் கேட்டுப் பார்த்தேன். மிஞ்சியது ஏமாற்றம். வழவழா கொழகொழா பதில்கள். சரி வேறு வழியில்லை, கடவுளிடம் போவோம் என்றெண்ணி தம்பதியரை அவர்களின் மூட்டை முடிச்சுகளோடு மே பேங்க் மரத்தடியினில் அமர்த்தி எங்கும் போக வேண்டாம் பணத்தோடு வருகிறேன் என்றும் சொல்லிச் சென்றேன்.

வெள்ளிக் கிழமை தொழுகை இன்னும் அரை மணி நேரத்தில் ஆரம்பமாகும். என் முழு பலத்தையும் பிரயோகித்துக் குறுக்குத் தெருக்களைக் கடந்து நடந்து, ஓடி, ஓடி நடந்து, அல் புக்காரி மசூதிக்குச் சென்றடைந்தேன். இடையில் ஒருவர் பாலத்தின் ஓரம் அநாதரவாய் நின்றுக்கொண்டிருந்தார். எல்லாம் முடிந்தபிறகு அவர் அங்கு இருந்தால் ஏதாவது உதவி வேண்டுமா என விசாரிக்க வேண்டும். வேலைகள் அதிகம்தான் உள்ளது.

அங்குள்ள இமாமிடம் நிலைமையை விவரித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர் சிறிது நேரம் அமைதி காத்தார். தேவைப்படும் பணத்தைக் கடனாகக் கேட்டதுதான் தாமதம், தன் பையிலிருந்து இருநூறு வெள்ளியைக் கொடுத்து, “அல்லாஹ் உனக்குக் கொடுக்கிறார். நீ அவருக்கு இதன் மூலம் கடன்பட்டிருக்கிறாய்,” என்றார். தலை வணங்கினேன். அவரின் ஆங்கில உச்சரிப்பு என்னைக் கவர்ந்தது. நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

தம்பதியரை பேருந்தில் ஏற்றி அமர வைத்து, மிச்சப் பணத்தை அப்படியே கொடுத்தேன். “பத்திரமாய்ப் போய்ச் சேருங்கள்” என்று சொல்லும்போதே இருவரின் விழிகளிலிருந்தும் கண்ணீர்த் துளிகள் முட்டிக்கொண்டு வழிந்தன.

விரைவுப்பேருந்து புறப்பட்ட தருணத்தில் ” ஐயோ ! மறந்தே போனோமே… அவர்களின் பெயர் என்னவாக இருக்கும்?!

நன்றி : குவர்னிகா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...