பகுதி 3
கேள்வி : கவிஞர்கள் தொடர்பாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. “கவிஞர்கள் பிறக்கும்போதே கவிஞர்களாக பிறந்துவிடுகின்றார்களா அல்லது படிப்படியாக கற்று, பழகி கவிஞர்கள் ஆகின்றார்களா!” ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், கவிதைமீதான ஈர்ப்பின் காரணமாக அதன் அடிப்படையான விசயங்களை தேடியபோது அப்படி எதுவும் கண்ணில்படவில்லை, கவிஞர்களும் அப்படி ஒரு விசயத்தை கடந்து வந்தாகவே காட்டிக்கொள்வதில்லை. கவிதையை கற்றுக்கொள்வதற்கான நேரத்தையும் உழைப்பையும் கொடுக்கத்தயார் என்றாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரியவில்லையே!
இரண்டாவது கம்பராமாயணம் போன்ற செய்யுள் வகைகளை படிக்கும்போது அதன் உரையைதான் படிக்கமுடிகிறதே தவிர நேரடியாக செயுளை படித்து பொருள் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படி படிப்பதற்கான வழிமுறை அல்லது கல்வி இருக்கின்றதா.
– பா.பூபதி, தமிழ்நாடு
மனிதர்கள் பிறக்கும் போது விலங்குகளைப் போலத்தான் பிறக்கிறார்கள். சமூகம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒவ்வொன்றும் கற்றுக் கொடுக்கப்படுவதும் கற்றுக் கொள்ளப்படுவதும்தான். கலை, இலக்கியம் என்பவையும் பயிற்சியால், ஈடுபாட்டால், தொடர்ந்து கற்பதால் உருவாகும் திறமைகளே. கவிதை மொழி சார்ந்த ஒரு கலை என்பதால் கற்பனையும் புதியதாக ஒன்றைச் சொல்ல வேண்டும் என்ற ஈடுபாடும் இருந்தால் எவரும் கவிதையை எழுதலாம். பிறகு கவிதையின் அரசியல் உங்களை யாரென்று அடையாளம் காட்டும். சிலர் மிகச்சிறு வயதில் எழுதக் கற்கலாம், சிலர் சற்றுத் தாமதமாக பணி ஓய்வு பெற்றப்பின் தொடங்கலாம். கவிதைதான் உங்கள் மொழி என்றால் தொடர்ந்து கவிதையோடு இருங்கள்.
எழுதப் படிக்க தெரிந்தவர்களெல்லாம் எப்படி மருத்துவத்துறை நூலை படித்து புரிந்துகொள்ள முடியாதோ அப்படிதான் இலக்கியத்துறையும் இதற்கு முறையான பயிற்சித்தேவை. தமிழர் சமூகவியலும், வரலாறும், தமிழ் இலக்கிய கலைச்சொற்களும் மற்றும் தமிழ் இலக்கணமும் தெரிந்திருக்க வேண்டும். பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்க முறையான பயிற்சி இருந்தால் போதுமானது. தமிழில் மட்டும் இல்லை எல்லா மொழியிலும் தற்கால இலக்கியத்தைப் படிப்பது போல் இல்லாமல் பழங்கால இலக்கியங்களைப் படிக்க தனிப் பயிற்சி வேண்டும். தமிழில் உள்ள இலக்கியங்களை முதலில் உரையுடன் படித்துப் பழகி பின் பாடல் வடிவில் படிக்க முடியும் என நினைக்கிறேன். சொற்களைப் பொருளுடன் படித்துப் பழகுவது நினைவாற்றல் பயிற்சி உள்ளவர்களுக்கு இலகுவாக இருக்கும். தேவை ஏற்படும் போது எவரும் இதனை கற்றுக் கொள்வார்கள்.
கேள்வி : பெரியார், அம்பேத்கார் யார் உங்களை அதிகம் கவர்வது? இன்று உள்ள முற்போக்கு வாதியாக யாரைக் கருதுகிறீர்கள்?
– வேணுகோபால், மலேசியா
சமூக, பொருளாதார, கருத்தியல் விடுதலை என்ற மிகப் பரந்த, கடினமான களத்தில் போராடியவர் அம்பேத்கர். தீண்டப்படாத ஒரு சமூகம் இந்தியாவில் இருக்கும்வரை நவீன இந்தியா உருவாக முடியாது. மனித ஒடுக்குமுறையற்ற, ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகம் உருவாக இந்துமதமும் இந்துத்துவமும் தடையாக உள்ளன. அதனால் அவற்றை அழித்தால்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று தனது போராட்டத்தைத் தொடர்ந்தவர். ஒட்டுமொத்த ஆதிக்கசாதி இந்தியாவும் அம்பேத்கருக்கு எதிராக நின்றது. அம்பேத்கர் சமூக விடுதலைக்கான, சமூக நீதிக்கான போராளி. பெரியார் கருத்தியல் விடுதலையால் சமூக விடுதலையை உருவாக்க முடியும் என்று நம்பியவர். இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்ற அளவில் தனது போராட்டத்தை குறுக்கியதால் பெரியாரின் அரசியல் தேக்கமடைந்தது. பெரியாருக்கு தீண்டாமை ஒழிப்பு மிக முதன்மையான கொள்கைத்திட்டமாக இல்லாமல் போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. பெரியார் ஒரு கலாச்சார சீர்திருத்தவாதி.
வழிகாட்டிகளோ, அம்பேத்கர், பெரியார் போன்று தலைவர்களோ இல்லாமல் போனது இந்த தலைமுறையின் பேரவலம்.
கேள்வி : “ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், அ.மார்க்ஸ் புத்தகங்களை வாசிப்பதில்லை. இப்போழுது சேரன், அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இந்தப்பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள்…” தங்களின் இந்தப் பதிலுக்குத் தெளிவான விரிவான பதிலை எதிர்ப்பார்க்கிறேன். காரணம் இவர்கள் அனைவரும் அரசியல் ரீதியில் முரண்பட்டவர்களே. அவ்வகையில் தங்கள் புறக்கணிப்புக்கு என்ன காரணம்?
– முகமட் ஹுசேன்
இவர்கள் வெவ்வேறு எதிர் அணி அரசியலில் இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்திக் குரூர மகிழ்ச்சி அடைவதிலுள்ள ஒற்றுமை என்னை அதிர்ச்சியடைய வைத்தவை. யார் என்ன விதமான முற்போக்கு முகமூடிகளைப் போட்டாலும் அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் ஒருகட்டத்தில் அவரவரின் சுய ரூபத்தைக் காட்டிவிடும்.
ஜெயமோகன் இந்துத்துவத்தையும் இந்துமதத்தையும் தூக்கி நிறுத்த பெரிய வேலைத்திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெண் படைப்பாளிகளைக் இழிவுபடுத்தி மகிழும் குரூர ஆணாதிக்கவாதி. கமலாதாஸையும் அருந்ததி ராயையும் குறித்து எழுதிய கட்டுரைகளில் இலக்கியம் ஆண்களின் துறை பெண்களால் அதில் ஒன்றும் சாதிக்கமுடியாது. பெண்களால் எழுதப்பட்டவையெல்லாம் சிறந்த இலக்கியம் கிடையாது. அதெல்லாம் பெண்களுக்கு வராது. ஏதோ அதிர்ஷ்டத்தில் இவர்கள் உலகப் புகழ் அடைந்துவிட்டார்கள் என்று பொறாமையைக் கக்கியிருப்பார். ஆனால் புகழ்பெற்ற ஆண் எழுத்தாளர்களைக் குறித்து வன்மத்துடன் எழுதியதில்லை. பெண்கள் இலக்கியத்துறையில் புகழடைந்து விட்டார்களே என்பதுதான் இவரின் பிரச்சினை. மனித அறம், மனித விழுமியம் என்று திரும்பிய பக்கமெல்லாம் புலம்பிக்கொண்டிருப்பார். சபரிமலைக்குச் செல்ல விரதமிருந்து முடிக்கட்டுவது போல இவர் நடத்தும் இலக்கிய கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. ஆனால் இவரின் சகவாசமும் சுகவாசமும் அறத்துக்கும், பேரொழுக்கத்துக்கும் முன்னுதாரணமாக உள்ள கோடம்பாக்கத்து படைப்பாளிகளுடன்.
சபரிமலைக்கு முடிகட்டுவது தவிர பிற அனைத்து விஷயங்களிலும் ஜெயமோகனின் அரசியலுக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் வேறுபாடு கிடையாது. சண்டக்கோழி பட விவகாரத்தில் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் குழுவினரின் ஆண்திமிரைக் கண்டு மிக அருவருப்படைந்தேன். இதுவரை இவர்கள் அப்பிரச்சினைக்காக வருத்தம் தெரிவிக்காததுடன், எங்களை உங்களால் என்ன செய்துவிட முடியும் என்று திமிர் கொண்டு அலையும் இவர்களை மனிதர்களாகவே மதிக்கத் தோன்றவில்லை, பிறது இவர்கள் எழுதியதை எங்கே படிப்பது. உலக மகா படைப்பாளிகளை குறித்து சமீப காலமாக ராமகிருஷ்ணன் பேருரைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். டால்ஸ்டாயையும் தாஸ்தாவெஸ்கியையும் உலக கலைஞன் என்னும் இவர் ரஜினிகாந்தையும் உலக கலைஞன் என புகழ்கிறார். ரஜினியுடன் குலுக்கிய தன் கையை “இந்தக் கையாலா ரஜினியுடன் கைக்குலுக்கினே” என்று தன் மகன் ஆசையுடன் தடவிப் பார்த்தாக எழுதியிருந்தாராம். இந்தச் செய்தியைப் பற்றி ஜமாலனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சிரித்துக்கொண்டே “ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையாருக்கு” என்றார்.
சாருநிவேதிதா பற்றி அவரது முன்னாள் மனைவி அமரந்தா எழுதியதையும், இன்னாள் மனைவி பிரேமானந்தா சாமியாருக்கு எழுதிய கடிதத்தையும் வாசித்துப் பாருங்கள். அப்புறம் ஆபிதீன் சாருநிவேதிதாவைப் பற்றி எழுதியவையும் வாசியுங்கள். சாருநிவேதிதா தன் குற்றங்களில் பெருமை கொள்ளும் ஒரு நோயாளி என்பது புரியும்.
அ. மார்க்ஸ், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இவர்கள் மூன்று பேரும் அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள். இலங்கையில் புலிகளால் தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றை திரித்துக் கொண்டிருப்பவர்கள். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின் அரசியல் நிலைப்பாடு என்றால் இவர்களின் அரசியல் பிழைப்புவாத அரசியலாகத்தான் இருக்க முடியும். தமிழச்சி பிரச்சினையில் ஷோபாசக்தியின் புரட்சியாளர் வேடம் கலைந்துவிட்டது. யோ. கர்ணன் பிரபாகரனை விமர்ச்சிக்கிறேன் என்று அவரது மகள் மனைவியை அவமானப்படுத்தி எழுதியதை மன்னிக்க முடியாது. இவர்கள் பன்முக பார்வையற்று ஈழ விடுதலைப் போராட்டத்தைத் திரும்பத் திரும்ப புலிகளின் தவறுகளால் மட்டுமே நிகழ்ந்த வன்முறையாக எழுதி வருகிறார்கள்.
அ. முத்துலிங்கம் ஒரு வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டுடன் நடுநிலைமைவாதி என்ற தோற்றத்துடன் எழுதி வருபவர். புதுமைப்பித்தன் பாணியில் தனது கதைகளைச் சொல்ல முயற்சிப்பவர். நான் யாருடைய எழுத்தையும் முன்முடிவுகளோடு வாசிப்பதில்லை. யார் என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே படிப்பேன். அவர் கதைகளில் கதாநாயகன், கதாநாயகி இருப்பார்கள். கதாநாயகி கண்டிப்பாகப் பேரழகியாக இருப்பாள். கதைச்சொல்லிக்கு பிடிக்காத பெண்கள், ‘பாவித்த செருப்பு போன்ற முகத்துடன்‘ இருப்பாள் என்று எழுதுவார். என்ன பவுடர் போட்டு நடிச்சாலும் இளவரசியா நடிக்க ‘ஒரு மொகர வேணும் இல்ல‘ என்று எழுதுவார். எப்படி ஒரு நவீன மனிதர் இப்படி எழுத முடியும்?
சேரன் மிக நவீன இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்கிறார். அவருடன் பழகிய பெண்களைப் பற்றி அவர் பேசுவதை சிலர் சொல்லும் போது அவருடைய எழுத்து படிக்கத் தக்கதாக எனக்குத் தோன்றவில்லை. பெண்கள் இலக்கிய சந்திப்புக்காக சுமதி ரூபன் அழைப்பில் கனடா சென்றிருந்தபோது, ஒரு பெண் கவிஞரை பற்றி மிகத் தவறாக அங்கு எல்லோரிடமும் பேசிவருகிறார் என்று தெரிந்தது. தன் ஆண்திமிரை விளம்பரப் பலகை வைத்துக் கொண்டாடும் வெறும் ஆணாக அவர் மதிப்பிழந்து போனார்.
கேள்வி :சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள்?
– கவிதாயினி, தமிழ்நாடு
லீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்ப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களைக் கட்டவிழிப்பு செய்தது போல் முதலாளித்துவ புனித மூலவர்களையும் கட்டவிழ்ப்பு செய்திருக்க வேண்டும். டாடா போன்ற பரமாத்மாக்களையும் கோடம்பாக்கத்து கடவுள்களையும் கட்டவிழிப்பு செய்யாமல் இருப்பது இவரின் படைப்பு அறம்.
வணக்கம் மாலதி மைத்ரி வல்லினம் இணைய இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு நீங்கள் அளித்துவரும் பதிலை தொடர்ந்து படித்துவருகிறேன். அருமை. குறிப்பாக தமிழக மற்றும் புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்கள் சத்தியமான உண்மை.
பிரியமுடன்,
அகில்.