குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை… (பகுதி 2)

சென்ற மாதத்தின் தொடர்ச்சி…

1930-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரை

இக்காலக்கட்டத்தில் நிறைய சிறுகதைகள் மேல்நாட்டுத் தாக்கத்தைக் கண்டித்து வந்தது எனலாம், வெள்ளையர்களால் பகடைக்காயாக உருவாக்கப்பட்டவர்களின் கதைகள், அடிமைகளாக வாழும் மலாய்க்காரர்களின் நிலை. மேல்நாட்டுப் பழக வழக்கங்களைப் பின்பற்றும் மலாய்க்காரர்களின் அவலநிலைப் முதலியன கருப்பொருளாக அச்சிறுகதைகள் கொண்டுள்ளன.

1930-ஆம் ஆண்டுகளின் சிறுகதை வளர்ச்சியில் ‘ராம்நாத்’ (Ramnad) என்ற சிறுகதையின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாரித் புந்தாரில் உள்ள நாகலிங்கம் என்ற ஓர் இந்தியரின் இச்சிறுகதையானது ‘Bahtera’ எனும் இதழில் 24 மே 1932-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அவரின் பங்கு சிறிதாக இருந்தாலும் மலாய் சிறுகதை இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக எழுத்தாளர் Hashim Awang குறிப்பிடுகின்றார்.

இன்றைய சூழலில் மலேசியாவில் இஸ்லாம் மத வேலியைத் தாண்டி சிறுகதைகள் வர தொடங்கியிருந்தாலும் மதம் மாறி இஸ்லாமியர்கள் வேறு மதத்திற்கு செல்லும் கதைகள் நம் நாட்டில் தடைசெய்யப்படுபவைகளாகவும், பெருங்குற்றமாகவும் சாயம் பூசி அரசியல் ஆளுமையினை உள்புகுத்தி தனி மனித உரிமையைப்பறிக்கும் களமாகவே இருந்து வருகிறது எனில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ஆனால் இதற்கு மாற்றுச்சிந்தனையாக 14 மார்ச் 1938-ஆம் ஆண்டு ‘Warta Malaya’ வில் வெளியாகிய சிறுகதை அமைந்துள்ளது.‘Bertukar Agama Kerana Cinta’ (காதலுக்காக மதம் மாறுதல்) என்ற அச்சிறுகதை Abdul Fatah என்ற இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவன் Miss Amelia என்ற பெண்ணைக் காதலித்து தன் மதத்தை விட்டு கிருஸ்துவ மதத்தைத் தழுவி தன் பெயரை Mr. Mad என்று வைத்து கொள்கிறார். என்று இக்கதை சித்திரிக்கிறது. இருப்பினும் மதம் மாறி சென்றதால் இருண்ட வாழ்வே கொண்டதாகக் கதை கொண்டு செல்லப்படுகிறது. மதம் மாற்றம் என்ற ஒன்றை எதிர்க்காத காலகட்டம் இந்த மண்ணில் உண்டு என்பதை இந்தக் கதை அம்பலப்படுத்துகிறது. இவ்வாறு மதம் மாறி , தடம் மாறி போன கதை கருவைக் கொண்ட கதைகள் 30-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நிறைய எழுதப்பட்டன.

1940-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை

1940-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளி வந்த சிறுகதைகள் பெரும்பாலும் வெள்ளையர்களை எதிர்த்து எழுதப்பட்டதாக அமைகின்றன. எழுத்துக்கள் சுதந்திரத்தாகம், மக்கள் மேல் வெள்ளையர்கள் புரியும் கொடுங்கோல், அதற்கு எதிரான குரல்கள், நாட்டுப்பற்று என கருவைக் கொண்டதாக அமைந்தது. அதனால் ஜப்பானியர்களின் வருகையை முதலில் ஆதரித்து எழுதிய சூழல் அக்காலக்கட்ட சிறுகதை இலக்கியங்களில் காணலாம்.

ஜப்பானியர்களின் கொடுமைகளையும் அரசியல் நோக்கத்தையும் அனுபவித்து உணர்ந்த பின்னர். 1945- களில் வெளி வந்த சிறுகதைகள் மறைமுகமாக ஜப்பானியர்களை எதித்து எழுதப்பட்டவையாகவே இருந்துள்ளன. ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாளிதழ்கள் வந்த பிறகு, எழுதும் சுதந்திரம் மலாய் எழுத்தாளர்களுக்குப் பறி போனது. சுதந்திர வேட்கையும் அதன் முக்கியத்துவத்தையும் அப்போதுதான் எழுத்தாளர்கள் உணர ஆரம்பித்தனர்.

1948- இல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தியவுடன், எழுத்து மூலம் எழுச்சியைக் கொண்டு வர முடியாது என்று உணர்ந்த அன்றைய தீவிர எழுத்தாளர்களான Keris Mas, Usman Awang, Asraf, Wijaya Mala போன்றவர்கள் சிங்கைக்குத் தப்பித்து ஓடினர். ‘Angkatan 45’ என்ற பெயரில் இந்தோனேசியாவில் எழுத்தாளர்கள் உருவாக்கிய கூட்டணியின் தாக்கத்தால் ‘Angkatan Sasterawan 50’ (Asas 50) என்று எழுத்தாளர்களின் கூட்டணியை ஆரம்பித்து சுதந்திர வேட்கையோடு தீவிரமாக மக்களின் மூளையைச் சலவைச் செய்து சுதந்திர அதிர்வினைக் கொண்டு வந்தனர். இக்காலக்கட்டத்தில் நாட்டுப்பற்றை ஊட்டும் கதைகளே முதன்மை வகித்தன. இச்சுதந்திர தாகம் எழுத்தாளர் Keris Mas எழுதிய ‘ Pemimpin Kecil Dari Kuala Semantan’ ‘Menjelang Merdeka’ போன்ற சிறுகதைகளிலும் , A.Samad Said எழுதிய ‘Bang Leman’ என்ற சிறுகதைகளிலும் காணலாம். இவர்களைத்தொடர்ந்து ‘Seni Untuk Masyarakat’ (இலக்கியம் சமுதாயத்திற்காக) என்ற கோட்பாட்டோடு எழுதும் Zulastry, Shanon Ahmad, Rokiah, Abu Bakar, Othman Kelantan, Arenawati, A.Samad Said, Anis Sabirin போன்ற எழுத்தாளர்கள் தோன்றினர்.

‘Angkatan Sasterawan 50’ என்ற மலாய் எழுத்தாளர்களின் கூட்டணி இயக்கம் மட்டுமல்லாது ‘PENA’ (Persatuan Penulis National Malaysia’ எனப்படும் மலாய் தேசிய எழுத்தாளர் சங்க அமைப்பும் ‘GAPENA’ (Gabungan Persatuan Penulis Nasional Malaysia) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட மலாய் எழுத்தாளர் சங்கமும் மலாய் சிறுகதை இலக்கியத்தில் பெரும் பங்கை வகித்தது எனலாம். ‘

1960-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரை

மலேசிய நாட்டில் சுதந்திரம் கிடைத்த பின் மலாய் சிறுகதைகளின் இலக்கியப் போக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் அவசியத்தையும் மலாய்க்காரர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் வழியுறுத்துவதாக அமைந்தது எனலாம். விவசாயிகளாகவும் ,மீனவர்களாகவும் இருந்த மலாய்க்காரர்களின் நிலை உயர்வு பெற்று மாற்றங்கான வேண்டும் எனும் கருபொருளில் பல சிறுகதைகள் எழுதப்பட்டன. மே13 நடந்தேறிய இனக்கலவரத்திற்குப் பிறகே இன ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து மலாய் நாட்டின் ஒற்றுமையைக் காக்கும் பொறுப்பில் எழுத்தாயுதத்தைக் கொண்ட எழுத்தாளர்கள் பெரும் பங்கையாற்றினர் எனில் மிகையில்லை. இதன் தொடர்ச்சியாக அரசாங்கமும் ஒற்றுமையை வளர்க்கும் வண்ணம் தேசிய கோட்பாடினை அறிமுகப்படுத்தியது. எழுத்தாளர்கள் இன ஒற்றுமையைப் பாதுகாக்கும் உணர்வை மக்களுக்கு உணர்த்த தங்களின் சிறுகதைகளில் மூவின மக்களின் கதாபாத்திரங்களை இணைத்து இன ஒற்றுமை என்ற கரு பொருளில் இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினர்.

1970-ஆம் ஆண்டு முதல் 1990 -ஆம் ஆண்டு வரை

தொடர்ந்து 1970- ஆம் ஆண்டுகளிலேயே பின்நவீனத்துவ அலை மலாய் சிறுகதை இலக்கியங்களில் வீசத்தொடங்கின எனலாம். 1988-ஆம் ஆண்டு ‘Ario’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகளில் பின்நவீனத்துவப் போக்கை காணமுடிகின்றது. அச்சிறுகதை தலைப்பு சிறுகதையில் வரும் ஆரோக்கியசாமி என்ற காதாப்பாத்திரத்தின் பெயரே சுருக்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Mana Sikana’ (Abdul Rahman Nabiah) என்ற எழுத்தாளரும் பின் நவீனத்துவ ஆளுமைகளில் மிக்கியமானவராக அறியப்படுகிறார். இவர் இருத்தலியல்,அபத்தவாதம் (Absurdisme), மாயவாதம் போன்ற பின்நவீனத்துவக் கோட்பாடுகளை தன் எழுத்துகளில் வெளிபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலக்கட்டத்தில் பல இளம் எழுத்தாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் கதையமைப்பு, களம், பாடு பொருள் அனைத்தும் புதியவையாக அமைந்தன. Fatimah Busu, Johan Jaafar, Zaen Kasturi, Othman Ali, Othman Kelantan போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இக்கால கட்ட எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாகவும் மலாய் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்தனர். பெண்ணியம் தொடர்பான தரமான சிறுகதைகளையும் இக்காலக்கட்டத்தில் பல பெண் எழுத்தாளர்கள் வழங்கினர். Fatimah Busu, Adibah Awang, Khatijah Hassim போன்றவர்கள் சிறந்த பெண் படைப்பாளராக அடையாளங்காணப்பட்டனர்.

இக்கால கட்டத்தில் மேற்கத்திய நாடுகளிலிருந்து பல பின்நவீனத்துவ கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதை உள்வாங்கிக் கொண்டுதான் பல எழுத்தாளர்கள் பின்நவீனத்துவ கோட்பாடுகளைக் கொண்ட மலாய் சிறுகதைகளை எழுதி வந்தனர். இருப்பினும் சில கோட்பாடுகள் இஸ்லாம் மதத்திற்கு ஏற்புடையதாக இல்லாத நிலையில் சில அறிஞர்கள் மலாய்மொழிக்கும் இஸ்லாம் மதற்திற்கும் ஏற்புடைய கோட்பாடுகளைச் சுயமாக உருவாக்கத் தொடங்கினர். அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கோட்பாடுகள் Affandi Hassan அவர்களின் ‘Teori Persuratan Melayu’ மற்றும் Shafie Abu Bakar அவர்களின் ‘Teori Takmilah’ ஆகும். பின்நவீனத்துவத்தைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு தன் மொழி மற்றும் மதத்திற்கேற்ப புதிய கோட்பாட்டை உருவாக்கி சிறுகதை இலக்கியத்தில் புது போக்கினை உருவாக்கினர் என்பது பாராட்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றது.

1990-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை

தொடக்கத்தில் நாளிதழ்கள், இதழ்கள், சிறுகதைதொகுப்புகள் என அச்சு ஊடகங்கள் வழி வளர்ந்த சிறுகதை இலக்கியம் கால மாற்றத்திற்கேற்ப தொழிற்நுட்ப வசதி மோலம் வளர்ந்து வருகிறது எனில் மிகையில்லை. வலைப்பூக்கள், இணைய இதழ்கள் என வளரத்தொடங்கியப்பிறகு சிறுகதை இலக்கியம் இன்னும் பரந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது எனலாம். கட்டுப்பாட்டில் இருந்த சிறுகதை இலக்கியம் எந்த ஒரு வரையறையற்று எழுதும் வாய்ப்பை இணையம் வழங்கியதால் தனிமனிதர்களின் தளங்களில் பல்வேறு வகைப்புனைவுகளையும் நாம் காண முடிகின்றது. எடுத்துக்காட்டாக இதற்கு முன் எழுதப்படாத ஓரின சேர்க்கை, கொச்சையான மொழிப்பயன்பாடு,கலாச்சார வேலிகளைத்தாண்டி வாழும் போக்கு போன்ற பாடு பொருள்களைச் இக்கால சிறுகதைகளில் இடம்பெறுகிறது. 2010-ஆம் ஆண்டு வெளியான ‘orang Macam Kita’ என்ற சிறுகதை தொகுப்பு ஓரினச்சேர்க்கையாளர்களை மையப்படுத்தி வந்த முதல் மலாய் நூல் ஆகும். ஆனாலும் இந்நூல் அரசாங்கத்தடையை எதிர்நோக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றங்கள். இருப்பினும் ‘Fixi’ எனும் பதிப்பகத்தில் வெளியாகிய சில சிறுகதைகள் அரசாங்கத்தடையை எதிர்நோக்கியுள்ளன.

மலாய் சிறுகதை இலக்கிய போட்டிகளும் பரிசு தொகையும்

ஆரம்ப நிலைகளில் கல்விக்கூடங்கள் மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்களும் மலாய் சிறுகதை போட்டிகளை நடத்திவந்துள்ளன. இவை வங்கிகள், பெற்றோலிய நிறுவனங்கள், நாளிதழ்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இருப்பினும் ‘Maybank’, ‘Esso’, ‘Bank Rakyat’ ஆரம்பநிலையில் சிறுகதை போட்டிகளை நடத்தினாலும் கடந்த 10 வருட காலக்கட்டத்தில் போட்டிகளை நடத்தவில்லை. ‘ExxonMobil’ மற்றும் ‘Utusan’ நாளிதழ் மட்டுமே இணைந்து தொடர்ந்து சிறுகதை போட்டியினை நடத்தி வருகிறது.

‘Dewan Bahasa Dan Pustaka’ நடத்தும் சிறுகதை போட்டியைத் தவிர்த்து ‘SAYEMBARA’ எனும் பிரபலமான இலக்கிய போட்டிகளிளும் சிறுகதை இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது மட்டுமல்லாது பல மலாய் சிறுகதைகள் தென்கிழக்காசிய இலக்கிய விருதில் (SEA) பரிசும் பெற்றுள்ளன. ‘Hadiah Sastera Perdana Malaysia’ என்ற இலக்கிய போட்டியும் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது 1981-ஆம் ஆண்டு தொடங்கி மலேசிய அரசாங்கம் தேசிய இலக்கியவாதி விருதையும் வழங்கி வருகிறது. ஆரம்பக்காலத்தில் மலேசிய ரிங்கிட் 30000 –ஆக இருந்த இவ்விருது 2011 –ஆம் ஆண்டு முதல் மலேசிய ரிங்கிட் 60000 –ஆக வழங்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலாய்மொழியில் எழுதும் இந்திய – சீன எழுத்தாளர்கள்

மலாய் சிறுகதை இலக்கியத்தில் இந்திய மற்றும் சீன எழுத்தாளர்களும் பங்கை வகிக்கின்றனர். தேசிய மொழியான மலாய்மொழியைக் கைவரப்பெற்று தங்களின் பண்பாடு, தனித்தன்மை போன்ற அடையாளங்களை அச்சிறுகதைகள் தாங்கி வருகிறது எனில் மிகையில்லை. இருப்பினும் சர்ச்சைக்குரிய இனவாத பிரச்சனைகள், பாகுபாடு, சிறும்பான்மையினர் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவைகளை நேரடியாகவும் கூர்மையாகவும் தங்களின் எழுத்துகளில் காட்டவும் விமர்சிக்கவும் தயங்குகின்றனர் என்பதே உண்மை.

மலாய் மொழியில் எழுதும் சீன எழுத்தாளர்களாக லீம் சியூ தின், லீ சியோங் பெங், வூ தெக் லொக் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாது சீன மொழியில் எழுதப்படும் சீன இலக்கியங்களை ‘ Persatuan Penterjemahan Dan Penulisan Kreatif’ எனப்படும் சீன மொழி எழுத்தாளர்களில் மொழிப்பெயர்ப்பு கழகம், மொழிபெயர்த்து வருகிறது. அதனை ‘ MAHUA’ (Malaysian Tionghua) கதைகள் என்று Dewan Bahasa Dan Pustaka தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதுவரை ஆறு மொழிபெயர்ப்பு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மலேசிய வாழ் இந்தியர்களும் மலாய் சிறுகதை இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஜோசப் செல்வம், என்.எஸ் மணியம், ஆ.நாகப்பன், பி.பழனியப்பன், இஃநேசியஸ் டேவ், ஜி.சூசை போன்ற எழுத்தாளர்கள் ஆவர். ஜோசப் செல்வம் என்பவர் 1970 களிலேயே மலாய் சிறுகதை இலக்கியத்தில் கால்தடம் பதித்தவர். மேலும் சரோஜா தேவி, S.B உதய சங்கர், சி. கமலா மகேந்திரன், இராஜ ராஜேஸ்வரி போன்றவர்களும் மலாய் சிறுகதை உலகில் பெயரைப் பதித்துள்ளனர். S.B உதய சங்கர் என்பவர் ‘KAVYAN’ (காவியன்) எனும் இயக்கம் வழி மலாய் தீவிர எழுத்தாளராகவும் பல இலக்கிய நிகழ்ச்சிகளை வழி நடத்தியும் வருகிறார்.

2002-ஆம் ஆண்டு சில தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு ‘வணக்கம்’ எனும் சிறுகதை தொகுப்பாக ‘Dewan Bahasa Dan Pustaka’ வெளியிட்டது. இருப்பினும் 10 வருடங்கள் ஆகியும் இவ்வாறான தமிழ் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு அதன் பிறகு வெளியிடப்படவில்லை என்பது வருத்தத்தையே அளிக்கிறது. சீன மலாய் சிறுகதை மொழிபெயர்ப்பு நூல் தொடர்ந்து வருவதைப் போல் தமிழிலும் தொடர்வது இலக்கிய தேவையாகவே உள்ளது எனலாம்.

முடிவு

இன்றைய காலக்கட்டத்தில் பலதடைகளை மீறி மலாய் சிறுகதை இலக்கியங்கள் வளர்ந்து வருகின்றது என்பது முற்றிலும் உண்மை. மலாய் எழுத்தாளர்கள் நவீன இலக்கியக் கோட்பாடுகளை மலாய்மொழிக்கும் இஸ்லாம் மதத்திற்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டு செயல்பட்டாலும் இணையத்தைத் தளமாகப் பயன்படுத்தி கட்டுபாடுகளை மீறி கட்டற்ற பல எழுத்தாக்கங்கள் இளம் தலைமுறையினர் உருவாக்கி வருகின்றனர் எனில் மிகையில்லை. நவீனத்துவம், பின் நவீனத்துவம் எனும் வெளியைத் தாண்டி மலாய் சிறுகதை இலக்கியம் ‘Hypermodernisme’ என்னும் அடுத்த கட்டத்திற்கு நகர ஆயத்தமாகி வருவதை ‘Mana Sikana’ தன் ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

—————————————-

மேற்கோள் நூல்கள்

  1. Ahmad, K. (1979). Dialog Dengan Sasterawan. Kuala Lumpur : Pena Sdn. Bhd.
  2. Maniam, K. (1993). Cerpen Tamil Dan Melayu (1957-1970). Kuala LUmpur: Dewan Bahasa Dan Pustaka.
  3. Puteh, O. (1983). Cerpen Melayu Selepas Perang Dunia Kedua, satu analisa tentang pemikiran dan struktur . Kuala Lumpur: Dewan Bahasa Dan Pustaka.
  4. Sikana, M. (1982). Teras Sastera Melayu Moden. Kuala Lumpur : Sarjana Enterprise.

கட்டுரையின் முதல் பகுதி : https://vallinam.com.my/version2/?p=671

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...