புறப்பாடு

10291819_img-20170912-130450-663-1505387987213அபத்தக் கனவுகளின் மாய உலகிலிருந்து தப்பி விழிப்புத் தட்டிய போது டிஜிட்டல் சுவர் கடிகாரத்தில் காலை 11.15 என்று காட்டியது. கண்ணாடி அணியாத கண்களினூடே அதையே சற்று நேரம் மங்கலான காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் எப்போதும் அவனைத் தாக்கும் அபாரமான உத்வேகம் அன்றும் தாக்கியது. படுத்துக் கொண்டே பல எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான். பெங்களூருக்குப் போன பின் செய்ய வேண்டிய பல செயல்களைத் திட்டமிட்டான். கதிர் வெளிச்சம் அறையின் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. அவ்வெளிச்சம் ஏதோ ஒரு நம்பிக்கையைத் தருவதாக இருந்தது. ஏனென்று தெரியாது வந்த உவகையின் மீறல் குறும்புன்னகையாக உதடுகளில் நின்றது. இப்படியே திட்டமிட்டுக்கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய பேரானந்தத்தைத் தருகிறது. எதுவுமே செய்ய தேவை இல்லை. வெறுமனே மனம் போன போக்கில் யோசித்துக்கொண்டிருத்தல் எவ்வளவு பெரிய சுகம். இப்படியான எதிர்காலம் பற்றிய முதிரா பகற்கனவுகள் உணர்வு நிலைகளைச் சமன் இழக்கச் செய்யும் போது சத்தமே இல்லாமல் வந்த குற்ற உணர்வு அவன் மனதைக் கனக்கச் செய்தது. எண்ணமும் செயலும் ஏன் இவ்வளவு தொலைவில் இருக்கிறது. அதற்கான பாலத்தை எப்படி அமைப்பது என்ற தனது வழக்கமான கேள்வி நிரை அன்றும் அவனை வருத்தியது.

அடுத்த 20 நிமிடங்கள் கழித்து, அவனுடைய அப்பா மெதுவாகக் கதவைத் திறந்தார். “சார். மணி 11.30. எழுந்திருக்கலாமா?” என்று செல்லமாக வினவினார். அவருடைய வருகை தனது சிந்தனையை ரத்துச் செய்ததை எண்ணி அவன் உள்ளூர ஆசுவாசமடைந்தான். தன்னால் ஏன் இந்த வெற்றுச் சோம்பல் சிந்தனைத் தொடரை நிறுத்த முடியவில்லை? ஏன் இன்னொரு மனிதனின் குறுக்கீடு தேவை படுகிறது? என்று சட்டென்று அவனுள் தோன்றி மறைந்தது. “ஹான். வர்றேன். 10 நிமிஷம்.” என்று எப்போதும் உள்ள விலகளுடனே பதிலுரைத்தான். “சரி. எண்ணெயை தேச்சு குளிக்கணும், டிரஸ் துவைச்சாச்சு, சாயந்தரம் கோவிலுக்குப் போகணும். டைம் இருக்குமானு பாத்துக்கோ. டைம் ஆயிடுத்து”. அலுவலகத்தின் மேல் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு அவருடைய காரியதரிசி கூறுவது போல் மிகவும் பவ்வியமாகக் கூறிவிட்டு கதவை ஓசை வராதவாறு சாத்தி விட்டுச் சென்றார்.

எழுந்து ஏ.சி.யை அனைத்து விட்டுப் படுக்கையில் அமர்ந்து கொண்டான். ‘அப்பா ஏன் இப்படி இருக்கிறார்? இவரால் தான் நாம் எந்த வித சாகசங்களையும் புரியாமல், வெறும் இன்டெலக்ட்ச்சுவல்  மாஸ்டர்பேஷன் செய்து கொண்டிருக்கிறோம்.’ எந்த வித தர்க்க ரீதியான விளக்கமும் இல்லாமல் கோபம் பொங்கி எழுந்தது. ‘அப்பாவை நான் வெறுக்கிறேனா? அவருடைய கொஞ்சலை, அன்பை அருவருக்கிறேனா?’ என்று இருள் புக தொடங்கும் கேள்விகள் அவன் மனதில் ஓட ஆரம்பித்தன. அக்கேள்விகள் உண்மையிலேயே தனது அப்பாவின் மீது எழும்பிய கோபம் தானா என்று மீண்டும் கேட்டுக்கொண்டான். மீண்டும் படுத்தான். மனம் முழுவதும் இருள் வியாபிப்பதற்கு முன் இதைத் தடுத்தாக வேண்டும் என்றெண்ணி அப்பாவைக் கூப்பிட்டான்.

அப்பா கதவைத் திறந்து “கூப்டியா?” என்றார்.

“இங்க வா.” அழைப்பில் வாஞ்சை கலந்த குழைவு இருந்தது.

அப்பாவிற்கு அடுத்து என்ன நடக்கும் என்பது வெகுத் தெளிவாகத் தெரியும். அவர் மனதில் சட்டென்று எழுந்த உவப்பை மிகுந்த சிரமத்துடன் வெளிக்காட்டாமல் அவனருகே படுக்கைக்குச் சென்றார். அவர் உதடுகளில் பிரகாசம் மிக்க ஒரு புன்னகை கீற்று ஒளிந்திருந்தது அவனுக்கும் தெரியும். அருகே வந்தவுடன் அவரை அப்படியே கட்டிக்கொண்டான். அவன் முகம் அவருடைய அக்குளிற்குச் சற்றுக் கீழே புதைந்தது. கையை அவருடலைச் சுற்றி அணைத்துக்கொண்டான். அப்பாவின் வலது கை சந்தோஷின் முதுகை லேசாகத் தடவிக் கொண்டிருந்தது. எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும்.

அணைப்பின், ஸ்பரிசத்தின் முழு வெம்மையையும் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவருடைய இதய துடிப்பு சந்தோஷின் காதுகளில் உலகின் மற்றனைத்த சத்தங்களையும் பின்னுக்குத் தள்ளி பேரொலியாகக்  கேட்டுக் கொண்டிருந்தது. அவனால் முகத்தை புதைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. அந்தத் தொடுகை, இன்னொரு உடல் தரும் உஷ்ணம் இவனைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. அனைத்து லௌகீக செயல்களும் வீண், இந்த ஸ்பிரிச அனுபவம் மட்டுமே அர்த்தமுள்ளது என்று எண்ணத் தொடங்கினான். அப்பாவை அப்படியே பெங்களூருக்குத் தூக்கிச் சென்று விட்டால் என்ன? என்று தோன்றும். ஒவ்வொரு நாளும் காலையில் இது போன்ற அணைப்பின் வெப்பம் பெறக்கூடும் என்று நினைத்தான்.

தங்கை எதையோ படித்துக் கொண்டிருக்கும் போது எதேச்சையாகப் படுக்கை அறையைக் கண்டு இந்தக் காட்சியை சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள். “அம்மா இங்க வந்து பாரேன் இந்த கூத்த.” அவன் மேலும் அப்பாவை இறுகக் கட்டிக் கொண்டான். எப்போதுமேவா அப்பாவை இப்படிக் கட்டிக்கொள்ள முடிகிறது. இது போன்ற ஞாயிறு காலை அதற்குத் தேவையாகிறது. அம்மா சற்று நேரம் கழித்து வந்து பார்த்து விட்டு அவளும் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள். “நல்ல கோலம்டா. எழுந்து பல்லத் தேயி. காபி கலக்குறேன்”. அவனுக்கு வெட்கம் பிடுங்க, முகத்தை இன்னும் ஆழமாக அப்பாவின் அக்குளின் அடியில் புதைத்துக் கொண்டான். “சரிடா. எழுந்திரு. டைம் ஆயிடுத்து. கெளம்பனும். ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கணும், சாப்பிடணும்”. “இன்னும் 2 நிமிஷம்” என்றான். தங்கையும் அம்மாவும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

இந்த அணைப்பு ஏன் தனக்கு இவ்வளவு பெரிய பாதுகாப்பைத் தருகிறது? உலகில் உள்ள அனைத்தும் தன்னால் சாத்தியம் என்று எண்ணினான். அப்பாவின் நிழலில் இருந்தால் வரும் உத்வேகம் நம் அக உந்துதலைப் பெருக்கி பல இடர்களைத் திறமையாகச் சந்திக்கலாம் என்று நம்பிக்கை வரும். ‘ஸ்டார்ட் அப்’ என்ற தன் பெரும் லட்சியத்தை இந்த ஸ்பரிசம், அணைப்பின் துணையோடு நிறைவேற்றிவிடலாம் என்று அவன் எண்ணத் தொடங்கும் போதே, ‘இல்லை. இந்த அன்பு தான் தன்னைக் கட்டி வைக்கும் பலவீனம். தன்னை எந்தச் செயலையும் செய்யாமல் தடுத்து வைக்கும் எதிர் சக்தி. பாதுக்காப்பு உணர்வை ஏங்கி மனம் தவிக்க ஆரம்பித்தால், நான் இங்கேயே நின்று விடுவேன். என்னை மென்மேலும் நகர்த்திச் செல்லும் சக்தி மட்டுமே தேவை’ என்று சட்டென்று எதிர் திசை நோக்கிப் பயணித்தான்.

சௌமியாவுடன் இருந்த காலம் ஒரு கொண்டாட்டமாக அமைந்தது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஆழ்ந்த ரகசியம். அவளின் அருகாமை கொடுத்த உஷ்ணம் அவனைப் பல கனவுகளைக் காண வைத்தது. சௌமியா, யூ.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிக்கச் சென்று 1 வருடம் ஆகி விட்டது. அதற்கு முன்னே, சந்தோஷிடம் “நீ ரொம்ப நல்லவன் தான்டா. எனக்கு உன்னைய புடிக்கும். ஆனா, என் கூட டிராவல் பண்ற ஆள் என்னைய புஷ் பண்ணனும்னு நினைக்கிறேன். ஐ டோன்ட் வாண்ட் டு செட்டில் டௌன் ஃபார் சம்திங்…..” என்று கூறி நிறுத்தும் போது  அவன் மனம் “லோ” என்று முடித்தது. சந்தோஷ் சௌமியாவைப் பிரிந்த பிறகே ‘ஸ்டார்ட் அப்’ என்ற கனவை வளர்த்துக் கொண்டான். அருகில் இருந்த நண்பர்கள் எல்லாம் “டே… தெருவுக்கு ஒரு ஸ்டார்ட் அப் வந்தாச்சு. உனக்கு கிளைண்ட்ஸ் காண்டாக்ட் இருக்கு. இவ்வளவு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஈஸி டா”. சந்தோஷிற்கு ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது என்பது வெறும் காசு சம்பாதிக்க மட்டும் அல்ல என்று நண்பர்களுக்குப் புரிவதில்லை. அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இறங்க வேண்டும். மக்களுக்கு உபயோகமுள்ள ஒரு நிறுவனமாக மாற வேண்டும். தான் பார்க்கும் தற்போதைய டேட்டா சயன்ஸ் பணியையே முன்னெடுத்துச் சென்று தனி நிறுவனமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணினான்.

அப்பாவின் தற்போதைய ஸ்பரிசத்திற்கும், சௌமியாவிடமிருந்து சில வருடத்திற்கு முன் கிடைக்கப்பெற்ற ஸ்பரிசத்திற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரியது. அப்பா தன்னை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் என்று அவனுக்குத் தெரியும். அவரிடமிருந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சௌமியா இவனைத் தூக்கி எறிந்ததே இவன் சாதாரணன் என்பதால். இவனிடம் ஆரம்ப காலத்தில் என்னென்னவோ எதிர்பார்த்துக் கடைசியில் இவன் வெறும் ‘அக்ரஹாரத்துப் பையன்’ என்று ஒதுக்கி விட்டாள். சௌமியாவுடன் உறவில் இருந்த போதே சந்தோஷ் இதை உணர்ந்திருந்தாலும், சௌமியாவின் அருகாமை கொடுத்த உத்வேகம் இதற்கு முன் இவனறியாத பல எல்லைகளைக் கடக்க உதவியது. ஆனால் சந்தோஷால் சௌமியாவை எந்த எல்லையையும் கடக்க வைக்க முடியவில்லை.

சட்டென்று அப்பாவிடமிருந்து பின் வாங்கிக் கொண்டான். அப்பா எழுந்து சென்றார். இனிமேலாவது போடும் திட்டத்தை ஒழுங்காகச் செயல் படுத்த வேண்டும் என்று தனக்குள் கூறிக் கொண்டான். பதற்றமும், உத்வேகமும் கொண்ட மனம் ஹாலிற்கு சென்றவுடன் மங்கியது. ‘என்ன எழவு இது? 5 நிமிஷத்துக்கு ஒரு தடவ மாறிக்கிட்டே இருக்கு.’ என்று வெறுத்துக் கொண்டான்.

அன்றைய நாள் முழுக்க ‘இன்று வீட்டில் இருக்கப் போகும் கடைசி நாள்’ என்று அவன் மனதினுள் பசையைப் போல் ஒட்டிக்கொண்டது. நாளை தன் அறைக்குச் சென்றவுடன் இந்தப் பாதுகாப்பு உணர்வும், சோம்பல் தன்மையும், மனம் உந்தித் தள்ளும் சிந்தனைகள் எதுவும் இருக்காது என்பது அவனுக்குத் தெரியும். வீட்டில் அவனின் புலன்கள் அனைத்தும் வெகுவாகத் திறந்துவிடப்படுகின்றன. காண்பவை, சுவைப்பவை, கேட்பவை, வாசிப்பவை, சிந்தனை செயல் முறை, உரையாடல் என்று அனைத்தும் அதன் முழு வீச்சில் செயல்படும் விந்தை புரிவதே இல்லை. பெங்களூரில் தன்னுடைய தனி அறையில் சகல சுதந்திரத்துடன் எதையாவது யோசிக்கும் போது இப்படியான சிந்தனைகள் எதுவும் அவனை அண்டாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறான். சுதந்திரம் என்பது உண்மையிலேயே வெறுப்பு நிலைக்கு மட்டுமே அழைத்துச் செல்லும் ஒன்றா? என்ற சிந்தனையைச் சமீப காலங்களில் தன்னுள் கேட்கத்தொடங்கியிருந்தான்.

அப்பா அவனை எண்ணெய் தேய்த்துக் குளிக்க அழைத்தார். இன்றும் அவனுடைய அப்பா அவனை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது பற்றி மட்டும் அவன் எந்தவித கூச்சமும் இல்லாமல் ஒப்புக்கொள்வான். இதைப் பற்றிய குறைகள் அம்மாவிடமும், கிண்டல் சொற்கள் தங்கையிடமிருந்தும் வந்தாலும் அவன் பொருட்படுத்த மாட்டான். குளியலறைக்குச் சென்று, பழைய கிழிந்த ஜட்டியுடன் காத்திருப்பான்.

எண்ணெயைக் காய்ச்சி எடுத்துக் கொண்டுவந்தார் அப்பா. முதலில் எண்ணெயை அவன் தலையில் நன்கு அழுந்த தேய்த்து விட்டு, உடல் பகுதிக்குப் போனார். அப்போதே சந்தோஷிற்குள் ஒரு வித மடை திறப்பு நடக்க எத்தனித்தது. தன்னை மறந்த நிலையின் வகையறாவைச் சேரும் ஒரு தருணம் அது. சொல்ல முடியாத ஏதோ ஒன்று முட்டிக்கொண்டு வருவது போல இருந்தது. அதை உட்கிடங்கிலிருந்து வெளியே எடுத்து வர பல்லாயிரம் உந்துதல்கள் எங்கிருந்தோ வந்து கொண்டே இருந்தன. அதற்குள் தலையில் எண்ணெய் தேய்த்து முடிக்கப்பட்டது. தேய்த்துமுடித்த பிறகும் சில நொடிகள் அவனுடைய தலை லேசாக ஆடிக்கொண்டிருந்தது. உடலில் எண்ணெய் தேய்க்கும் போது அவன் தீண்டக்கூடாத எதையோ தன் உடல் முழுக்க பூசிக்கொண்டிருப்பது போன்று தோன்றியது. எண்ணெய் கொடுக்கும் வழுவழுப்பு, உடல் உறுப்புகள் பிசுபிசுப்புடன் ஒட்டிக்கொள்ளும் அவஸ்தைகள் என அவன் சில நிமிடங்கள் அருவருப்பாக உணர்ந்தான். இதைத் தெரிந்திருக்கும் அவனது அப்பா விரைவில் வெந்நீருடன், சீகைக்காயைச் சரியான அளவில் தண்ணீரை விட்டுக் கலந்து எடுத்து வர முனைந்தார். இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் அவன் குளியலறையில் தனித்து விடப்பட்டான். ரோமங்கள் அனைத்தும் உடலுடன் ஒட்டப்பட்டிருந்தது. எதையேனும் நினைத்து மயிர்க்கூச்சம் அடைந்தால் இப்போது ரோமங்கள் எழுந்து கொள்ளுமா என்று வினவிக்கொண்டான். உடனடியாக ‘என்ன இது, ஒண்ணுத்துக்குமே ஆகாத சிந்தனை?’ என்று சலிப்புற்றான்.

“டே, வெந்நீர் சூடு போதுமானு பாரு?” கதைவைச் சட்டென்று திறந்து கொண்டு அப்பா வந்தார். சிந்தனைகள் கலைந்தவாறு, வெந்நீரை தொட்டுப் பார்த்து “ஹான். போதும்.” சீகைக்காயைப் பிசைந்து கொண்டே ஒரு சொம்பு வெந்நீரை எடுத்து அவன் உடம்பில் ஊற்றினார். “சூடு ரொம்ப இல்லைல?” இவன் சற்று பெருமூச்சுடன் “இல்லப்பா.” என்பான். “சரி சரி.” என்று அவனின் எரிச்சலை சற்றுக் குறைக்கும் விதமாகக் கூறினார். தலையில் சீகைக்காயை எடுத்துத் தேய்க்கும் போது மனம் விம்மி எழக் காத்திருந்தன.

தலையைத் தேய்த்துக் கொண்டே “வேலைலாம் எப்படி போறது. ஒன்னும் பிரச்னை இல்லையே. வண்டி நல்லா ஓடுதுல்ல. இல்ல கம்பெனி மாறணுமா.” என்று அப்பாவே ஆரம்பித்தார்.

“ஹ்ம்ம். அதுக்கென்ன. போகுது ஏதோ”. சிறிது இடைவெளிவிட்டு

“அதே வேல, அதே கிளைன்ட், பாத்த முகத்தையே திரும்ப திரும்பத் டெய்லி பாத்துக்கிட்டு.” என்று இழுத்து முடிக்காமல் விட்டான்.

“அதுக்கு என்ன பண்றது நான் கூட தான் 35 வருஷமா பேங்க்ல இருந்தேன். அப்பப்போ வர்ற ட்ரான்ஸ்ஃபர் தான் கொஞ்சம் மாறுதல கொடுக்கும். அதுவும் உன் அம்மா, இவளுடைய படிப்புக்குனு ஒத்தி வச்சதெல்லாம் எவ்வளவோ இருக்கு.”

இவன் கோபத்தின் உச்சத்திற்குப் போனான். இந்த வகையான சலிப்புற்ற, தியாக வாழ்க்கைக்கே உண்டான தொனி அவனைக் கடுப்பேற்றி அருவருக்கச் செய்தன. அதை முழுதும் கட்டுப்படுத்த முடியாமல்,

“நீ, அப்புறம் உங்க காலத்துல இருந்த எல்லாரும் அப்டியே இருந்துட்டீங்க. உங்க ஜெனெரேஷன்ல சொந்தமா ஒரு வீடு கட்டி அதுல குடியேறுனா போதும், யூ ஆல் திங்க் தட் யூ ஹேவ் அச்சீவ்ட் சம்திங் பிக். எங்க காலத்துல ஒவ்வொருத்தனும், நிறைய கண்ட்ரீஸ்லாம் டூரிஸ்ட் மாதிரி சுத்திப் பாக்குறத பெருசா நெனைக்குறான். ரெண்டுமே ஒன்னு தான்.”

தன்னுடைய 35 வருட வாழ்க்கையை இவ்வாறு அப்படியே தரையில் கரப்பானை நசுக்கியது போல் மிதித்தாலும்,

“அதுக்கு என்ன பண்றது. எனக்கு அப்டியே ஓடிடுத்து. உங்க அம்மா, நீ, உன் தங்கனு.”

இந்த சுய பட்சாதாப குரல் சந்தோஷிற்குள் பரிதாபத்தைக் கொண்டு வந்து ஒரு நொடியில் அவனுடைய பேசும் பொருளை மாற்றியது.

“உனக்கு சுகர் லாம் எப்படி இருக்கு?” கேட்கும் போதே அவனுக்குள் அப்பாவிடமிருந்து விலகவே முடியாத  பிணைப்பொன்றின் குரலாக மாறியது.

“அதுக்கு என்ன? அது பாட்டுக்கு இருக்கு.”

“காலைல நடக்குறியா?”

“அப்பப்போ.”

“டெய்லி நடக்கறதுக்கு என்ன.” என்று சற்று எரிந்து விழுந்தான்.

“இல்லடா இவளுக்கு காலேஜ் லாம் இருக்குல்ல.”

“அது இருந்தா என்ன.” “நீ சும்மா இவா ரெண்டு பேரையும் காரணம் காட்டி ஒண்ணுத்தையும் செய்யாம இரு. இட் ஜஸ் டு டேக் தி ஈசியஸ்ட் பாத்” என்று மீண்டும் அன்பின் சொற்கள் கசப்பைக் கொடுத்தன. அதைச் சட்டென்று உணர்ந்தவாறு அவன் மீதே அவன் எரிச்சல் கொண்டான். அன்பின் முடிவில் மிஞ்சுவது அடுத்தவர் மீதான எரிச்சலும் அதிகாரமும் மட்டுமே என்று உணராதவன் அல்ல சந்தோஷ்.

“அப்டி இல்லடா. வீடு, ஆஃபீஸ்னு நேரம் சரியா இருக்கே.”

“ஹ்ம்ம். சரி.” “நான் வேலைய விட்டுடலாம்னு இருக்கேன்.”

கண நேரம் மௌனம் நிலவியது. அப்பா காத்திருந்தார் சந்தோஷின் அடுத்தடுத்த சொற்களுக்காகக் காத்திருந்தார்.

“ஏதாவது ஸ்டார்ட் அப் மாதிரி.”

அவனின் வார்த்தைகள் முழு அர்த்தத்துடன் அப்பாவிடம் செல்லாது என்பது சந்தோஷிற்குத் தெரியும்.

மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் “அதாவது நானும் இன்னும் சில ஃபிரண்ட்ஸ்லாம் சேர்ந்து தனியா கிளையண்ட் காண்டாக்ட்ஸ்லாம் புடிச்சு வேலை செய்யுறது.”

“ஓ. அப்படியா. உனக்கு எது சரினு படுதோ அத செய்யுடா.” கண்ணிமைக்கும் நொடிகளில் மௌனத்தைக் கடந்து “வீட்டு லோன் சீக்கிரம் அடைச்சிடலாம். இல்லைனா என் பி.எஃப் லாம் எடுத்து அடைச்சிடலாம்.” என்றார்.

சிறுவயதில் சுயமைதுனம் செய்யத் தொடங்கிய காலத்தில் எதேச்சையாகக் கவனிக்க நேர்ந்த போதும், கல்லூரியில் படிக்கும் போது சினிமாவில் சேர வேண்டும் என்று சொன்ன போதும், வேலை பார்க்கும் போது மேல் படிப்புக்கு அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்று கூறிய போதும், அசைவ உணவு சாப்பிட தொடங்கியாயிற்று என்று சொன்ன போதும், சிகரெட் பழக்கம் உண்டு என்று ஒப்புக்கொண்ட போதும், வேறொரு ஜாதி பெண்ணின் மீது ஆசை இருந்தது என்று சொன்ன போதும் அப்பா சந்தோஷிடம் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனத்தின் ஊடாகவோ அல்லது “ஓ  அப்படியா.” என்று சம்மதம் தெரிவித்தோ மட்டுமே எதிர் வினையாற்றியது ஒரே நொடியில் வந்து போனது.

தலையைத் தேய்த்து முடித்தவுடன் தண்ணீர் ஊற்றி முடித்தார். பூ பறிப்பது போல் சில முடிகளைப் பற்றி எண்ணெய் விலகிவிட்டதா என்று விரலில் சொடுக்குப் போட்டுப் பார்த்துச் சோதித்தார்.  சந்தோஷிற்குள் விளக்கவே முடியாத உணர்வுகள் வந்து போயின. ‘சிறு எதிர்ப்பை கூட ஏன் தன் மேல் காட்ட மாட்டேன் என்கிறார். கெடுபிடியே இல்லாத இவ்வளவு சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எதை நோக்கி நான் போராடுவது? அப்பா, என்னை எதிர்த்து நில். நான் உன்னிடம் சண்டையிட வேண்டும். என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கடிந்து விழுந்து எதை நோக்கியோ போராடுவது போல் உன்னை எதிர் திசையில் நிறுத்தி நான் முரண்டு பிடிக்க வேண்டும். இப்படி நீ எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினால் நான் எப்படி எனக்குப் பிடித்ததை நோக்கிச் செல்வேன். தடைகளே இல்லாத பாதையில் செல்ல எனக்கு என்ன பைத்தியமா?’ என்று மனதினுள் பலவாறு கற்பனை சொற்களை உலாவ விட்டுக் கொண்டிருந்தான்.

“வீட்டு லோன்லாம் பாத்துக்கலாம். ஸ்டார்ட் அப் ஐடியா இப்போதைக்கு எனக்கு மட்டும் தான். இன்னும் சில ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசி பாக்கணும்.” நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தான் “இது முன்ன மாதிரி இல்லப்பா. கண்டிப்பா எடுத்து பண்ணனும். நான் இப்போ மெச்சூர்ட் ஆயிட்டேன்ப்பா” என்று கூறிவிட்டு அவன் தன்னையே சந்தேகப்பட்டுக் கொண்டான்.

“சரிடா. தாராளமா. பணம் விஷயம்லாம் எப்படி? மாசா மாசம் வருமா?”

“அதெல்லாம் அவ்ளோ ஈசியா வராது. கொஞ்சம் கஷ்டப்படணும்.” என்று சற்று எரிச்சல் கலந்த தொனியில் கூறினான்.

கைகள், முதுகு மற்றும் மற்ற உடல் பகுதிகளை லேசாகத் தேய்த்துவிட்டு “சரி. நீ குளிச்சுட்டு வா.” என்று விடைபெற்றுக்கொண்டார்.

சந்தோஷ் அப்பாவின் அருகாமை விலகியதை ஆசுவாசமாக உணர்ந்தாலும் மனதிற்குள் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிக்கொண்டிருக்கலாம் என்றும் தோன்றியது. அப்பாவிடம் கனவுகள் மற்றும் லட்சியங்களைப் பற்றிப் பேசும் போதே அது நிறைவேறிவிட்டதாக அவனுக்குள் தோன்றும். அதை அரங்கேற்றுவதெல்லாம் உலகியல் பிரச்சனைகள் தானே என்றும் இத்தனை தூரத்திற்கு நாம் கனவு கண்டு சென்றிருக்கிறோம் என்றும் பெருமை பட்டுக்கொள்வான்.

இப்படியான ஞாயிற்றுக்கிழமைகளில் சமையல் தடல் புடலாக இருக்கும். அசைவ உணவு உட்கொள்ள தொடங்கிய போது அவனுள்ளே தன் குடும்ப ஒழுக்கத்தை மீறிய பெருமிதத்தை தந்தாலும் தற்போதெல்லாம் அது வெறும் வெற்று அகங்காரமாகவே தோன்றியது. தட்டின் முன் அமரும் போது சிகப்புச் சாயல் சற்றுத் தூக்கலாக இருக்கும் வத்தக்குழம்பு, பூண்டு ரசம், வெண்டைக்காய், பருப்பு உசிலி, அரிசி அப்பளம் என்று பார்க்கவே அவனுக்குள் பரவசம் ஏற்படும்.

சந்தோஷ் அம்மாவிடம் பேசுவதெல்லாம் சொற்பமான வார்த்தைகளே. இவன் வரும் இரு நாட்களிலும் இவனுடைய அம்மா சமையல் கட்டிலேயே புழங்கிக் கொண்டிருப்பாள். உலகில் உள்ள அனைத்து அம்மாக்களைப் போல இவளும் உணவில் மட்டுமே தன் அனைத்து அன்பையும் பகிர்வாள். தங்கைக்கு இது போன்ற அருமையான உணவென்பது சந்தோஷ் வரும் போது மட்டும் அரங்கேறும் ஒரு நிகழ்வாக ஆகிப் போனது. பரப்பி வைக்கப்பட்டிருக்கும் உணவை பார்க்கும் போது இவ்வளவு ருசியாக உணவுண்டு ஒன்றும் பெரிதாக ஆகி விட போவதில்லை என்றும் தோன்றியது. அவன் அகத்தினுள் இரு வேறு மனிதர்கள் எப்போதும் அவனைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்.

ஆவி பறக்கும் சாதத்தில் நெய் விட்டு அதிலெழும் மணம் அவனைக் கிறங்கடித்தது. நெய் அனைத்துப் பருக்கைகளுக்கும் கூடுமானவரை செல்லுமாறு பார்த்துக்கொண்டான். நால்வரும் சாப்பிடும் அறையில் சொற்பமாகப் பேசிக் கொண்டனர். பேச்சு அவனைச் சுற்றியே இருந்தது. பல வருடங்கள் ஆகியும், இன்னும் அவனுடைய சாப்பாடு வழக்கங்கள், அறையின் சௌகரியம் என்று கேட்ட கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். சந்தோஷ் அனைத்திற்கும் தலையை குனிந்தவாறு சாப்பிட்டபடியே பதில் கொடுத்துக் கொண்டிருந்தான். முடிந்த வரை பதிலை “ம்” என்ற சொல்லுடன் நிறுத்திக் கொண்டான்.

“சனிக்கிழமை ஞாயித்துக் கிழமை எல்லாம் என்ன பண்ற இப்போ??”

“என்.ஜி.ஓ வேல இருக்கு.”

“ஓஹோ. என்ன வேலடா.”

“அது சொன்னா புரியாதுமா.”

“சரி. ஹ்ம்ம்ம். சாப்பாடெல்லாம் கெடைக்கறதுல அங்க?”

“ஹ்ம்ம்.”

“உன் ஃபிரண்ட்ஸ் லாம் இருக்காளா. கூட?”

“ஹ்ம்ம்.”

“ஆஃபீஸ்லாம் சீக்கிரம் முடிஞ்சுருதுல்ல இப்போல்லாம்.”

“ஹ்ம்ம்ம்.”

சிறிய இடைவெளிக்குப் பின் “கொஞ்ச நாள் முன்னாடி மாடில இருந்த பழைய புக்ஸ் லாம் தூக்கிப் போட்டேன். அதுல உன் நோட்ஸ் நிறைய இருந்ததுடா.”

“அய்யய்யோ. அதையுமா தூக்கிப்போட்ட?”

“ஆமாம். ஏன்?”

“அதுல நான் நிறைய கவிதலாம்  எழுதி வெச்சுருந்தேன். என் கிட்ட ஒரு தடவ கேட்கறதுக்கு என்ன? ஏன் தூக்கிப் போட்ட.” சற்றுக் கடுமையான குரலிலேயே வினவினான்.

“கவித தான. திரும்ப எழுதிக்கோ.” என்று பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அம்மா பதிலுரைத்தாள்.

சந்தோஷ் சில நொடிகள் இடப்புற புருவத்தைத் தூக்கியவாறு அம்மாவை முறைத்துக்கொண்டிருந்தான்.

“அப்புறம் முறைச்சுக்கோ. சாதம் போடட்டா. ரசத்துக்கு?” என்றாள் மெல்லிய சிரிப்பினூடே.

இப்படியாகச் சாப்பிட்டு முடித்தப் பின் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான். வீட்டில் பல வருடங்களுக்கு முன்னரே வாங்கிய 55 இன்ச் டி.வி யில் படங்கள் காண்பது இவனுக்குப் பிடித்தமான ஒன்று. கார் வாங்குவது பற்றி பல முறை யோசித்துப் பார்த்தும் வீட்டிற்கு அதன் தேவை பற்றிய சந்தேகம் எழ அவ்வெண்ணத்தை உதறி விட்டனர். சந்தோஷின் வருமானம் மூலம் குடும்ப பொருளியல் நிலை உயர் மத்திய தரத்திற்கு எப்போதோ உயர்ந்து விட்டாலும் அப்பா எதை வாங்கச் சொன்னாலும் “எதுக்குடா அதெல்லாம் நமக்கு. இருக்குற பொருளையே ஒண்ணும் பெருசா உபயோகம் இல்லாம இருக்கு” என்று சலித்துக்கொள்வார்.

14gray-superJumboடிவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண்கள் சொக்க ஆரம்பித்தன. உள்ளுக்குள் எரிச்சல் புகுந்து கொண்டது திடீரென்று. டிவியை அனைத்து விட்டு, லேப்டாப் எடுத்துத் தனது புதிய ஸ்டார்ட் அப் பற்றி எழுதத் தொடங்கினான். அறிமுக மின்னஞ்சல், அவர்களுக்குத் தான் செய்து கொடுக்கப் போகும் திட்டங்கள், அவற்றின் பயன்கள், நிதி பற்றிய விளக்கங்கள் என்று எழுதிக்கொண்டிருக்கும் போதே அவனுள் இருண்மை எட்டிப் பார்த்தது. இவை அனைத்தும் தன்னை நிரூபிப்பதற்கு மட்டும் தானா? யாரிடம்? தன்னைத் தானே தனக்குள் நிரூபித்து என்ன கண்டுவிட போகிறோம்? மாதா மாதம் தனக்கு வரும் 1.5 லட்சம் சம்பளம் என்பது அவனே கற்பனை செய்து பார்க்காத ஒன்று. அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு இக்கட்டான, வலிந்து ஏற்றுக்கொள்ளும் இந்த அலைச்சல் தேவை தானா? என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த எண்ணத்தை அகற்றும் விதமாக, யூ ட்யூபை திறந்து ஏதோ ஒரு உத்வேகமான செயலூக்கம் பற்றி யாரேனும் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான். பார்த்து முடித்தவுடன் அவன் மனதில் தோன்றும் முதல் எண்ணம் ‘இத்தனை முயன்று நம்முள் வரும் உத்வேகம் எத்தனை நாள்?’.

பின் மத்திய பொழுதென்பது சந்தோஷிற்கு சகிக்க முடியாத ஒன்று. அனைவரும் மதிய உறக்கத்திற்குச் சென்றனர். இவன் தனியாக விடப்பட்டான். அவன் மீது அன்புருகும் மூவர் இருந்தாலும் தன்னை இங்கிருக்கும் எவருடனும் தொடர்புப்படுத்திக் கொள்ள தயங்கும் உணர்வை எப்படி விளங்கிக்கொள்வதென தெரியாமல் சிந்தனைகளை ஓட விட்டுக் கொண்டிருந்தான். ‘எப்போது ஒருவன் மானசீகமாக வீட்டை விட்டு விலகுகிறான்? எப்படி சில நண்பர்களால் இன்றும் பெற்றோருடன் ஒரு நெருங்கிய  தொடர்பைத் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது? எங்கு எப்போது நாம் இவர்களை முற்றாக விளக்கி வைத்தோம்? இவர்களிடமிருந்து வரும் எந்த வித எதிர்பார்ப்புமில்லாத அன்பென்பது அவர்களுடைய வயோதிக காலத்தின் நிச்சயமற்ற தன்மையின் பயம் தானா? குடும்ப உறவுகள் என்பது ஏன் இவ்வளவு மொண்ணையாகவும், சோபையாகவும் தன்னுள் பதிவாகியிருக்கிறது?’ என்று கேள்வி நிரை மீண்டும் அவனை அரித்துக்கொண்டே இருந்தது. அவனிடம் மட்டும் ஏதேனும் மாய சக்தி இருந்தால், இந்தப் பின் மத்திய பொழுதுகளை அப்படியே வெட்டி விட்டு, ஒரு நாளின் பிற பொழுதுகளில்  மட்டும் உலாவிக் கொண்டிருப்பான்.

எதையோ யோசித்து எங்கெங்கோ சென்று ஏதோ ஒரு புள்ளியில் அவனுடைய மனம் காம உணர்ச்சியில் சிக்கியது. அலைபேசியில் ஒரு போர்ன் தளத்தை திறந்து சத்தமின்றி பார்க்கத் தொடங்கினான். ஆனால், ஐந்து நிமிடத்திற்குள் அவனுடைய மன நிலை மாறி அதை உடனே மூடி விட்டான். மாலை நெருங்கும் சமயம் வந்ததும் அது வரை நச்சரித்துக் கொண்டிருந்த கேள்விகள் மற்றும் காம உணர்வுகள் சற்று நீர்த்து வேறு ஒரு உலகிற்குள் நுழைந்தான். புத்தகங்களை எடுத்துப் புரட்டினான். அந்த ஞாயிற்றுக்கிழமைக்கென்றே ஒரு பிரத்யேக உணர்வு நிலை உண்டென்பதால், அவன் வாசிக்கும் அனைத்தும் அவனுள் பல மென்னுணர்வுகளைத் தூண்டிவிட்டன. சுகுமாரன் எழுதிய கவிதை ஒன்றைப் படித்து விட்டு அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

சிணுங்கி கூம்பியிருந்த

சொற்ப காலத்துக்குப் பிறகு

முகம்நோக்கி முகம் இழுத்து

என் தாப உதடுகளில்

ஈரமாய்ப் பதிந்த உன் இதழ்ச் சுவைக்கு

எந்த இனிப்புக்குமில்லாத மகாருசி

 

விலைகளுக்குப் பின்பு

நெருங்கிய பரவசப் பொழுதில்

இறுக்கியணைத்த உன் கைகளின்

இதமான தீண்டலுக்கு

எல்லா வழியையும் நீக்கும் ஆறுதல்

 

உடற்பணி உருகிக் கரைந்தோடிய நாளில்

முயக்கத்தில் மூடிய உன் விழிகள்

உச்ச கணத்தில் திறந்ததும் வழிந்த

அமிர்ததாரைக்கு

எல்லாப் பசியையும் தீர்க்கும் காருண்யம்

 

உன்னிடம் பெற்றுத் திளைத்த இனிமையை

உயிர்ப்பின் தீண்டலை, மாலாகி கருணையை

உனக்குத் திருப்பியளிப்பது எங்ஙனம்?

பிறகு சில இசை கோர்வைகளை கேட்கத் தொடங்கினான். அப்பா அவனுக்காகக் காபி போட்டு எடுத்து வந்தார். அவன் அறிமுகம் செய்ததினால் அவனுடைய அப்பாவும் மியூசிக் மோஜோ என்ற யூ ட்யூப் தளத்திற்குப் பழக்கமாகி விட்டார். அவனுடைய அப்பாவிற்குப் பிடித்தமான ஒரு பாட்டை வீடலர வைத்தான். அவனுடைய அப்பா இசைக்கு ஏற்ப தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். இவனுக்கும் அவர் அப்படி ரசித்துக் கேட்பதை விரும்பி அவருக்குப் பிடித்தமான பாடல்களை வைத்துக்கொண்டிருந்தான். பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம் கிருஷ்ணா என்று வரிசை நீண்டு கொண்டே இருந்தது.

திடீரென்று இசையை நிறுத்தினான். அவனுள் மீண்டும் குடும்பத்துடன் ஒட்டிக்கொள்வது போல் தோன்றியது. இந்த ஓட்டுதல் வேண்டாம் என்று தனக்குள் கூறிக் கொண்டான். “என்னடா ஆச்சு. நிறுத்திட்ட??” “போதும். அலுப்பா இருக்கு.” “சரி சரி.”

மாலை ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்வதென்பது இருவருக்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம். அம்மா அவனுக்குத் தேவையான உணவு பண்டங்களைப் பெங்களூருக்கு எடுத்துச் செல்வதற்காகத் தயார் செய்யத் தொடங்கினாள். கோவிலுக்கு வண்டியில் செல்வதென்பது மாற்றக்கூடாத விதி. சந்தோஷ் மனம் விட்டுப் பேசக் கூடிய நிறைய தருணங்களை இந்த குறைந்த கால வண்டிப் பயணம் அவனுக்கு அமைத்துத் தரும். அப்பாவைத் தொடும் சில சந்தர்ப்பங்களும் இதில் அமையும். சிறு வயதிலேயே சந்தோஷ் பவுடர் போட்டுக்கொள்ளும் பழக்கத்தை விட்டுவிட்டான். ஆனால் அவனுடைய அப்பா இன்றும் கொஞ்சம் கழுத்திலும், முகத்திலும் பூசிக்கொள்வார். வண்டியில் பின்னே அமரும் போது சந்தோஷ் அந்தப் பவுடர் மணத்தை முழுதாக முகர்ந்துகொள்வான். அப்பாவின் வாசனையாக அம்மணம் அவன் மனதில் பல ஆண்டுகளுக்கு முன்னே பதிந்து போனது.

அந்தி மறையும் நேரம் என்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பின் மத்திய பொழுதின் இருண்மையிலிருந்து தன்னை விடுவிக்கவே இந்த அந்தி வெயில் தோன்றி பின் மயங்கி இருள் தோன்றுகிறது என்று எண்ணிக்கொள்வான். வண்டியில் செல்லும் போது மிக இயல்பாக சந்தோஷினால் அப்பாவிடம் உரையாட முடியும்.

“அடுத்தது அமெரிக்கா எப்போ?”

“தெரியலப்பா.”

சில நேர மௌனத்திற்குப் பிறகு “ஆனா அங்க உள்ளவனுங்களும் ஒன்னும் பெரிய வித்தியாசமான ஆளுங்களாம் இல்லப்பா. அவனுங்க கிட்ட காசு ஜாஸ்தி. அவ்வளவு தான். எவன பாத்தாலும் ‘எப்படி இருக்க நல்லா இருக்கியானு’ சிரிச்சு பேசுவானுங்க. ஆனா அதெல்லாம் வெறும் நடிப்பு. அவனுங்க கல்ச்சர்ல அப்டி இருக்கு. அவ்ளோ தான். தே ஆர் மீடியாக்கர்”

“ஏண்டா நல்லது தானடா. உங்க அம்மாவலாம் பாரு, யாராவது பார்த்து பேசி சிரிக்க மாட்டாங்களானு ஏங்குவா.”

“அட அது அப்டி இல்லப்பா. மொத அஞ்சு நாள் நல்லாருக்கும். அப்புறம் இதெல்லாம் அலுத்துப் போயிடும்.”

“அப்டி பாத்தா எல்லாமே அலுத்து தான்டா போகும்.”

“அலுத்து போகாத மாதிரி எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்.”

“பண்ணலாம், அதுவும் கொஞ்ச நாள்ல அலுத்துடுமே.”

“அப்போ வேற ஏதாவது பண்ணனும். பழக்கம் தான் பிரச்சினை. அதே சமயம் அதுவே தான் கம்ஃபர்ட்”

“ஆமா. கம்ஃபர்ட் முக்கியம்ல.”

‘அதனால தான் 35 வருஷமா பேங்க்ல உட்கார்ந்து ஒரே வேலைய பாத்துட்டு இருந்த நீ.’ என்று சொல்ல எண்ணுவான். இப்படி நேரடியாக அவரைக் காயப்படுத்த சந்தோஷ் இப்போது துணியவில்லை.

“இங்க பாருப்பா. கம்ஃபர்ட் முக்கியம் தான். ஆனா அது அலுப்பக் கொடுக்கும்”

சில நொடி மௌனத்திற்குப் பின்

“ரிலேஷன்ஷிப் கூட அப்டி தான்.” என்று இழுத்தான்.

“அப்டி பாத்தா யாருமே சேர்ந்திருக்க முடியாதேடா.”

“எஸ். அப்ஸலூட்லி. எதுக்கு ரெண்டு பேரு கடைசி வரைக்கும் சேர்ந்திருக்கணும்?”

“அப்புறம் எதை நம்பி யாரை நம்பி இருக்கறது. மனுஷா முக்கியம்டா. அதுவும் கடைசி காலத்துல.”

“அப்படிலாம் இல்லப்பா. இதெல்லாம் இன்செக்யூரிட்டில வர்ற பேச்சு. எனக்கு தெரிஞ்ச ரெண்டு பேர் கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துக்கல. ஒரு என்.ஜி.ஓ ஸ்டார்ட் பண்ணாங்க. இப்போ நிறைய பேருக்கு தே ஆர் ஹெல்பிங்.”

“நல்லது. ஆனா எல்லாராலயும் அப்டி இருக்க முடியாதே.”

“முடியும். ஆனா நாம இருக்க பயப்படுறோம்.”

” கரரெக்ட் தான். இப்போ நான் பாங்க்லயே குப்பைக் கொட்டியாச்சு. உன் தாத்தாவும் கணக்கு வாத்தியாரா இருந்து ரிட்டையர் ஆயிட்டா. நீ ஏதாவது புதுசா செய்யுறதுனா செய்யு. நான் ஹெல்ப் பண்றேன்.”

“சொல்றேன். பாப்போம். அந்த ஸ்டார்ட் அப் பிளான் இருக்கு. அதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படலாம்.”

“சரி சரி. தாராளமா.”

உரையாடல் அம்மாவின் உடல்நலம், தங்கையின் படிப்பு என்று வேறொரு தளத்திற்குச் சென்றது. சில குடும்ப சிக்கல்களையும் உறவு பூசல்களையும் ஆர்வமாக சந்தோஷ் கேட்டுத் தெரிந்துகொண்டான். கோவிலை வந்தடைந்ததும் இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ள மாட்டார்கள். பிரகாரத்தைச் சுற்றி விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கோவில் அக்ரகாரத்தை சுற்றத் தொடங்கினர். சந்தோஷ் ஒவ்வொரு வீட்டின் முகப்பையும் பார்த்துக் கொண்டிருந்தான். பழங்கால வீட்டிற்கு உள்ள ஒரு அழகு அவனை என்றுமே வசீகரிக்கத் தவறவில்லை. இந்த வேடிக்கை பார்த்தலை அறிந்த அப்பா வண்டியை மிக மெதுவாகச் செலுத்திக் கொண்டு சென்றார்.

“உன் ஃபிரண்ட் ரங்கநாதன் இருக்கானே. டி.சி.எஸ் வேலைய விட்டுட்டு இங்க பெருமாள் சேவைக்கு வந்துட்டானாம்.”

சந்தோஷிற்கு இந்த செய்தியைக் கேட்டவுடன் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு வந்தது.

“வாட் த ஃபக்?” என்று தன்னை அறியாமலேயே கூறி விட்டான். பின்னர் சற்று நிதானித்து,

“எப்போ, எதுக்காம். லூசா அவன்.?”

“அப்டி இல்லடா. அவனுக்கு தோணிருக்கு. அவா ஃபேமிலி பட்டர் ஃபேமிலி வேறல்ல. அதனால அவன் இதே போதும்னு வந்துட்டானாம்.”

“நீ எப்போ அவன பாத்த.?”

“போன வாரம் சக்கரத்தாழ்வார் சன்னதில அவன் தான் தீர்த்தம் கொடுத்துட்டு இருந்தான்.”

சந்தோஷிற்கு சொல்லவே முடியாத அருவருப்பு ஊறிக்கொண்டிருந்தது.

“அவன் தண்டம்ப்பா. கொஞ்சம் கூட வலிக்காம வாழ்க்கையை வாழனும்னு நினைக்கிற ஒருத்தனால மட்டும் தான் இந்த மாதிரி குடும்ப தொழில்லாம் எடுத்து பண்ண முடியும். ஸ்கூல் படிக்கும் போது எப்படி இருந்தானோ அப்டியே தான் இன்னும் இருப்பான்னு நினைக்கிறேன்.”

“அப்டி இல்லடா. அவனுக்கு புடிச்சு தான செய்யுறான். புடிச்சு ஒரு விஷயம் பண்ணா. நல்லது தான.?”

அப்பா அவன் நண்பனுக்காக வாதாடிக் கொண்டிருக்கும் போதே, தெருவில் பெரிய நாமம் இட்டு, தொந்தி முன்தள்ளி, மேலுடம்பில் ஆடை அணியாது, பூணூல் கறைபடிந்து, குடுமி வைத்து, ஒரு ஜோல்னா பையைத் தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் ஒரு நடுத்தர வயது இளைஞனைப் பார்த்து, கீழ்மையான ஒன்றை பார்த்துவிட்டதைப் போல் உணர்ந்தான்.

“தெரியலப்பா. எப்படி இவனுங்க மாதிரி ஆளுங்களால முடியுது? ஒரே ஊருல. ஒரு பெருமாள் சிலைக்கு காலம் முழுக்க பூஜ பண்ணி, அதே சுலோகத்தை சொல்லி, சாப்டுட்டு, அரட்டை அடிச்சுட்டு. என்னால நெனச்சு பாக்கவே முடியல.”

“கரரெக்ட் தான். அவாளுக்கு பெருமாள் கூட இருக்கறதுல ஒரு பரம திருப்தி இருக்கே. காலைல எழுந்து, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுனு சொல்றப்போ அவா மனசு குளிர்ந்து போகுமோல்யோ. நாங்களும் தான் ஒரே வேலைய செஞ்சுட்டு இருந்தோம்ல. வேலைங்கறது என்னைக்குமே மோனோடானஸ் தான்டா.”

சந்தோஷ் சட்டென்று தன்னை எதிர்த்துப் பாயும் சொற்றொடர்களாக இதை எண்ணிக்கொண்டான். தான் தினமும் ஒரே விதமான வேலையைக் கடந்த ஒரு வருடமாக எழுதி அதை ஓட வைத்துக்கொண்டிருப்பதில் உள்ள சலிப்பு அவனை கூசச் செய்தது.

“என்ன தான் இருந்தாலும். இந்த வயசுலேயே, உலகத்தை பாக்காம, எக்ஸ்போஷர் இல்லாம, ஒரே எடத்துல சுத்த ஆரம்பிக்கப் போறான்”

“அது கரரெக்ட் தான். போன மாசம் என் கூட வேல செஞ்ச ஸ்டாஃப் ஒருத்தர் அவர் பையன் கனடால இருக்கான்னு போயிட்டு வந்தார். வந்து எங்க கிட்ட பொலம்பு பொலம்புனு பொலம்புறார். பயனுக்கு ஆஃபீஸ், வீடு, வேலை. இப்படியேதான் போகுதுனு சொல்றார். அவரால இருக்கவே முடியல. அவருக்கு இங்க வந்ததுக்கு அப்பறம் தான், உலகத்தையே கண்ணால பாத்து, அது கூட பேசுற மாதிரி இருக்குனு சொன்னார்.”

“இப்போ எதுக்கு இதை சொல்ற.”

“சும்மா சொன்னேன்டா. அவாவாளுக்கு எது உலகம்னு தோன்றதோ அது தான் உலகம். சிலருக்கு இந்த நாலு தெரு தான் உலகம். உங்க அம்மாவுக்கு சமையல் கட்டு தான் உலகம். சிலருக்கு நிறைய நாடு சுத்திட்டே இருக்கறது ஹாப்பி. அந்த ஸ்டாஃப் பையன் மாதிரி எங்கெங்கேயோ போய் ஒன்னும் அனுபவிக்காம அப்டியே இருக்கிறவாலும் உண்டு. இங்கயே இந்த நாலு தெரு அக்ராகாரத்துக்குள்ளயே இருந்து பல விஷயங்களை கத்துக்கிட்டவாலும் உண்டு.”

10706734_confused“இதெல்லாம் சும்மா சால்ஜாப்புப்பா. என் ஃபிரண்ட்ஸ்லாம் பல நாடு சுத்தி வந்துட்டா. ஒருத்தன் இத்தாலில ரோட்ல படுத்து தூங்கிருக்கான். எவ்வளவு பெரிய எக்ஸ்பீரியன்ஸ் தெரியுமா அதெல்லாம். இன்னொருத்தன் ஒரு ஸ்ட்ரிப் கிளப் போயிட்டு அவ கூடவே கொஞ்ச நாள் சுத்திட்டு, அவளுடைய லைஃப் பத்தி அவ்ளோ சொன்னான். இன்னொரு பொண்ணு, கேட்டுக்கோ ஒரு பொண்ணு. தனியா யூரோப் டிராவல் பண்ணிட்டு வந்திருக்கா. எல்லா இடத்துலயும் பசங்க கூட தைரியமா தங்கி, அவங்க கூட பழகி, அங்க இருக்குற எல்லா ஃபுட் வெரைட்டீசும் டேஸ்ட் பண்ணி. ஓ மை காட். எவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ். எக்ஸ்பீரியன்ஸ்லாம் அக்ராகாரத்துக்குள்ளயே இருந்தா வராது. ஆல்சோ, லுக் அட் தி பீப்பிள் ஹியர். இவங்க மைன்ட்செட் மந்தமானது. ஒண்ணுத்துக்கும் உதவாது. “

அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

“நானும் ஒரு ஷார்ட் ட்ரிப் யூரோப் போகலாம்னு இருக்கேன்.”

“ஹ்ம்ம். போயிட்டு வாயேன்.”

“ஹ்ம்ம்.”

வீடு வந்து சேர்ந்தவுடன் தான் அன்றைய ஞாயிறின் முகம் மீண்டும் நினைவிற்கு வந்தது. ‘இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டு போகலாமா?’ என்று தோன்றியது. அலுவலகத்தில் அவனிலில்லாமலேயே வேலைகள் அனைத்தும் நடக்கும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஓரிடத்தில் தான் இப்படி ஒரு வேண்டாப்பொருளாகவும், தான் இல்லாவிடில் அந்த இயந்திர உலகம் கூட வெகு சுலபமாக அரங்கேறும் என்பதும் சில நொடிகளில்  இவனுக்கு இருண்மையைக் கூட்டி வந்தது. அலுவலக மேலதிகாரிக்கு ஒரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். பெரிய சங்கடம் ஏதும் இல்லாமல் அவனால் விடுப்பு எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் இதே போல், கனவு கண்டு, அப்பாவையும் உதாசீன படுத்தி, சில புத்தகங்களை புரட்டிக் கொண்டு, இன்னும் சுவையான சாம்பார்களையும், ரசங்களையும் விழுங்கிக் கொண்டு, அந்தி வேலைகளை ரசித்துக் கொண்டு, இரு சக்கர வாகன உரையாடல்களை நெகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டு, இரவு முழுக்க ராஜாவின் இசையிலும், மேற்கத்திய இசையையும் மாறி மாறி கேட்டுக்கொண்டு, மூளை சலித்து சொக்குவது வரை சிந்தனைகளை ஓட விட்டுக்கொண்டு இருக்கலாம். ஆனால், சந்தோஷிற்கு அப்படியான ஓர் அதிரடி முடிவை எடுக்க என்றுமே முடிந்ததில்லை. இன்னும் இரண்டு நாட்கள் என்பது வீட்டில் அடைபட்டு கிடக்கும் சிறைவாசத்தின் நீட்டிப்பு  என்றும் மனம் கூறும். இரண்டு பின் மத்திய பொழுதுகள். அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள அவன் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் என்று அவனை இன்னொரு மனம் பயமுறுத்தியது.

திடீரென்று வீடே கொதி நிலையில் இருப்பது போல் காணப்பெற்றது. தன்னை சுற்றி எங்கும் அவசர கதியில் 3 பேரும் அவனுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்கள். இவன் அனைத்தையும் உட்சபட்ச சோம்பல் மனநிலையுடன் எதிர்கொண்டிருந்தான். “பஸ் எத்தனை மணிக்கு?”, “கொண்டு வந்த எல்லாத்தையும் துவைச்சாச்சு, ஒரு தடவ எல்லாம் சரியா இருக்கானு பாக்கணும்” “குளிருக்கு குல்லா மறக்காம எடுத்துண்டு போகணும்டா.” இப்படி பல சொற்றொடர்கள் அவன் காதில் வந்த படியே இருக்கும். மத்திய வர்க்க குடும்பங்களுக்கே உரிய பதற்றமும், பாதுகாப்பின்மை மனப்பாங்கும் அந்த மூவரையும் விட்டு அகலவே அகலாது என்றெண்ணிக்கொண்டான்.

சந்தோஷிற்குச் சட்டென்று இப்படி தோன்றியது. ‘நானும் அப்பாவாக மாறும் காலம் வரும் போது இப்படியே தான் இருக்க போகிறேனா? ச்சே. இல்லவே இல்ல’. பாதுகாப்பான கூட்டிலிருந்து பறந்து செல்வதென்பது ஒவ்வொரு முறையும் அவனுக்குச் சங்கடம் அளிக்கும் ஒன்றாகவே உள்ளது. அதற்கென்று கூட்டிற்குள்ளே அடைந்து கிடக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை.

எல்லாம் முடிந்து பேருந்துக்கான நேரம் இன்னும் அரை மணி நேரமாவது இருக்கும். சந்தோஷின் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்துக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றால் வெறும் ஐந்தே நிமிடங்கள் தான். ஆனால் 10 நிமிடம் முன்பே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பேருந்து பொறுமையாக 15 நிமிடங்கள் கழித்து வரும் என்பது அவர்கள் நன்கு அறிந்ததே.

“விபூதி எட்டுண்டு போயேண்டா.” என்றார் அப்பா.

சந்தோஷ் வெறுப்புடன் பூஜை அறைக்குச் சென்று ஒரு முறை அனைத்துக் கடவுள் படங்களையும் பார்த்தான். ‘இதற்கெல்லாம் உண்மையிலேயே பொருள் இருக்கிறதா? தினம் பூஜை செய்து கடவுளை நிதமும் நினைத்துச் சரணாகதி அடைகின்ற அனைவரும் ஒரு வகையில் கோழைகள் தானே? இல்லை, உண்மையிலேயே இந்த அருவங்களிடம் மனிதர்களுக்கு ஏதேனும் தொடர்பு ஏற்படுவதுண்டா?’ சில நேர கண்மூடலில் பல கேள்விகள் வந்து சென்றது.

அப்பா மற்றும் அம்மாவிற்கு நமஸ்காரம் செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறும் நேரம் ஆசுவாசத்தை உணர்ந்தான். பல வருடங்களாக நடக்கும் மன நாடகம் இம்மிப் பிசகாமல் ஒவ்வொரு முறையும் அரங்கேறியது. ‘நான் பாதுகாப்பற்ற, திறந்த மன அமைப்புடைய, கனவு கண்டு கொண்டே இருக்கும் ஆத்மாக்கள் இருக்கும் ஊருக்கு போகப் போகிறேன். இப்போது நான் வெளியேறுவது என்னுடைய மரபை விட்டு’ என்று தனக்குள் ஓருணர்வை அடைந்தான். வண்டியில் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போது இட்டுக்கொண்ட விபூதியைக் கவனமாக அழித்துக்கொண்டான்.

பேருந்து நிலையத்திற்கு வந்ததும், சந்தோஷிடமிருந்து பயணப் பையை அப்பாவே வாங்கிக்கொண்டார். வண்டியை நிறுத்திவிட்டுப் பேருந்து எப்போதும் வந்து காத்திருக்கும் இடம் வரை கிட்டத் தட்ட ஓடிப்போனார்.  இவன் பொறுமையாக நடந்து சென்றான். “பஸ் நம்பர் என்ன? மெசேஜ் அனுப்பி இருப்பானே. பாத்து சொல்லு”

சந்தோஷ் கே.எஸ்.ஆர்.டி.சி அனுப்பியத் தகவலைப் பகிர்ந்தான். பேருந்து வரும் வரை காத்திருக்கும் சமயங்களில் முக்கியமான உரையாடல்கள் பகிரப்படும்.

“நிறைய எடத்துலேர்ந்து வரன் வர்றது. நீ எப்போ ஓகெ சொல்றியோ. பாக்க ஸ்டார்ட் பண்ணிடலாம் டா.”

“அதுக்கென்ன இப்போ அவசியம். சொல்றேன்.”

“சரி.” சிறிய மௌனத்திற்குப் பின் “சிகரெட் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோடா. வயிர ஏதாவது பண்ணிட போறது.”

“சரிப்பா.” பனித்துளி அளவிற்கான குற்றவுணர்வு சந்தோஷினுள் வந்துப் போனது.

“நீயும் உடம்ப பாத்துக்கோப்பா. காலைல எழுந்து நட.”

“அதெல்லாம் பாத்துக்கலாம். சுகர் லாம் அதுவா போயிடும்.”

“எப்படிப்பாப் போகும்?”

இப்படியாக பேசிக்கொண்டிருக்கும் போது சந்தோஷின் கவனம் சுற்றியுள்ள மனிதர்களை நோட்டம் விட்டது. இவன் வயது ஆண்களும் பெண்களும் ஏற்றி விட யாருமின்றி தன்னந்தனியாகப் பேருந்துக்காக ஆங்காங்கே காத்துக் கொண்டிருந்தனர். பார்த்தவுடனே அனுமானிக்கும் அளவிற்கு அவர்கள் அனைவரும் மென்பொருள் தொழிலில் இருப்பவர்கள் என்று தெரிந்தது.

எங்கிருந்தோ பேருந்து திடீரென்று வந்து நின்றது. நதியின் போக்கில் ஒரு சிறு கிளை பிரிந்து தனியே வேறொரு பாதையில் செல்வது போல் ஒரு கூட்டம் அந்தப் பேருந்தை நோக்கி நகர்ந்தது. அப்பா அவர்களிருவரும் நின்றிருக்கும் இடத்திலிருந்து பேருந்தை நோக்கி மீண்டும் பையை சந்தோஷிடமிருந்து பிடிவாதமாக வாங்கிக்கொண்டு அவசர கதியில் ஓடினார். இவன் அவரைக் கிட்டத்தட்ட துரத்திக் கொண்டே,

“அப்பா. இப்போவாவது கொடு என்கிட்டே பைய. பஸ் எங்கயும் போகாது. கொஞ்ச நேரம் நிக்கும்.”

“நீ பஸ்ல ஏறுடா. நான் கொண்டு வந்து சீட்ல வைக்கிறேன்.”

“இல்லப்பா. நீ பைய கொடு. நானே கொண்டு வர்றேன்.” என்றான் சந்தோஷ். அவனைச் சுற்றி ஒரு முறை நோட்டம் விட்டான். அப்போது தான் அது நடந்தது. சற்று அருகிலே 25 வயது மதிக்கத்தக்க ஜீன்ஸ் மற்றும் பெரிய வாசகங்கள் தாங்கிய டி – ஷர்ட் அணிந்த இரு பெண்கள் பேருந்தை நோக்கிப் போய் கொண்டிருக்கும் போது இவனையும் இவன் அப்பாவையும், இவர்களுக்குள் பை தூக்குவது பற்றி நடந்த சிறிய உரையாடலையும் கண்டு லேசாகச் சிரித்தது போல் இருந்தது. அதை சந்தோஷும் கவனித்து விட்டான்.

சந்தோஷிற்கு எங்கிருந்து என்றெல்லாம் தெரியவில்லை. குரலின் தொனி கடுமையாக மாறி எதிர்பாராவிதமாக உயர்ந்து,

“அப்பா. ரொம்ப சீன் போடாத. நீ பைய என் கிட்ட கொடு. சும்மா, இப்படியெல்லாம் ஷோ காட்டாத.” என்றான். சுற்றி இருப்பவர்கள் சிலர் இவன் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தனர்.

கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்த அப்பா அப்படியே நின்றார். அவரின் முகம் விகாரமாக மாறியது. பேருந்துக்கு அருகில் வந்துவிட்டார்கள். அப்பா பையைத் தரையில் வைத்து விட்டார். சந்தோஷ் பையை எடுத்துக்கொண்டு கண்டக்டரிடம் சென்று கைபேசியில் உள்ள தகவலைக் காண்பித்து இருக்கை எண் பார்த்து அமர்ந்து கொண்டான். ஜன்னல் வழியாக அவன் அப்பாவைப் பார்த்தான். அப்பா அவன் ஜன்னலின் அருகில் நின்று கொண்டு வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். முகம் அந்த விகாரச் சாயலை விட்டு விலக மறுத்தன. சந்தோஷிற்கு இப்போது தான், எப்படி கத்தினோம் என்று உரைத்தது. “சீன் போடாத.” “ஷோ காட்டாத.” அவனுள் ஒரே நொடியில் தாங்கவே முடியாத பாரம் ஒன்று குடிபுகுந்து கொண்டு அவனைப் படுத்தியது. பரிதவித்து, அல்லலுறும் மன நிலைக்குச் சென்றான். முட்டிக் கொண்டு அழுகை வருமென்று தோன்றியது. உடனே இறங்கிப் போய் அப்பாவைக் கட்டி அணைத்து “சாரிப்பா.” என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இருக்கும் இடத்தை விட்டு எழவே முடியவில்லை. பெங்களூருக்குச் சென்றவுடன் குறைந்தது 10 நாட்களாவது இந்நிகழ்வு அவனைத் தொந்தரவு செய்யப்போவதை இப்போதே கணித்திருந்தான்.

ஜன்னலைத் திறந்து “அப்பா.” என்றழைத்தான்.

அப்பா நினைவு மீண்டவராக “ஹாங். உட்கார்ந்துட்டியா. சரி. பைய எங்க வெச்சுருக்க. காலுக்கு அடியில வெச்சுக்கோ.” என்றார்.

சந்தோஷிற்கு நிலை கொள்ளாத அவஸ்தை. “அதெல்லாம் நான் வெச்சுக்குறேன். அப்பா. நான்..:” என்று மிகவும் இழுத்துக் கொண்டே இருந்தான்.

“சொல்லுடா. என்ன.” என்று வினவினார் அப்பா.

“இல்ல. ஒன்னும் இல்ல”

“சரி. காலைல சில்க் போர்டுல எறங்குனதும் மெசேஜ் பண்ணு. ஆல் தி பெஸ்ட்.” என்று ஜன்னலருகில் வந்து கை குலுக்க தன் வலது கையை மேலே தூக்கினார். அவர் ஏகத்துக்கும் காயப்பட்டிருப்பதை அவரின் முகம் நன்றாகவே காட்டிக்கொடுத்தது. அவன் தனது வலது கையை ஜன்னலின் வழியாக விட்டு அவர் கையைப் பற்றிக்கொண்டான். அடுத்த முறை வரும்வரைக்கும் இந்த ஸ்பரிசம் அவனுக்குப் போதுமென்று அவனுக்குத் தோன்றியது. அவரின் கையின் உஷ்ணத்தை அவன் மனதினுள் பத்திரப்படுத்தி வைக்க முயன்றான். அப்பாவின் முகம் அவ்வளவு பாவமான ஒன்றாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். யாரோ அவரை நடுத்தெருவில் நிர்கதியாகத் தள்ளிவிட்ட முக வார்ப்பைத் தரித்துக்கொண்டிருந்தார். பேருந்தின் எஞ்சின் சத்தம் உறுமியது. எதையோ தூக்கி இவன் மனதில் யாரோ வைத்து விட்டுச் சென்றது போல் குமைந்து கொண்டிருந்தான். இந்தக் குமைதல் பெங்களூரில் தனது தனி அறைக்குச் சென்ற பின் பேருருக் கொள்ளும் என்று நடுங்கினான்.

“நீ கெளம்புப்பா. நேரமாரதுல.” என்றான் கெஞ்சல் தொனியில்.

“போறேன் போறேன். பஸ் கெளம்பட்டும் முழுசா.”

சந்தோஷ் இன்னும் தர்மசங்கடமாக உணர்ந்தான். அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா கையைக் கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நோட்டம் விட்டுக்கொண்டு, அவ்வப்போது அவனையும் பார்த்துக் கொண்டிருந்தார். பேருந்து மெதுவாகக் கிளம்ப ஆரம்பித்தது.

சந்தோஷ் மிக தயக்கத்துடன் மீண்டும் தன் வலது கையை ஜன்னல் வழியே வெளி நீட்டினான். அப்பா மீண்டும் ஜன்னலருகே வந்து வலது கையை மேலே தூக்கி அவனுடன் கை குலுக்கினார். சந்தோஷ் உடையும் குரலில்

“சாரிப்பா.” என்றான்.

“ச்சீ. பைத்தியம்.” என்று சிரித்து விட்டுத் தனது வண்டியை நோக்கி விரைவாக நகர்ந்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...