1
1565
“மண்ணையும், பெண்ணையும் காக்காமல் போன நாட்டிற்கு, அவை இரண்டும் உதவாமல் போக. இனி எந்த மண்ணிலும் இப்பேரரசு நிலையாய் நிற்கப் போவதில்லை. இம்மண்ணில் இனி ஒரு சொல்லும், பொருளும் விழையாது, இவ்வரசின் எந்தப் பெண்ணும் மகவை ஈனப்போவதில்லை. அவ்வாறு நடந்தாலும் அதனைப் பேணும் பேறு அவளுக்கு வாய்க்காது. இக்கையறுநிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரத்தின் தலைமுறைகளுக்கும் இது பொருந்தும். இவ்வஞ்சமெல்லாம் ஒன்றை ஒன்று அழிப்பதை இனி வரலாறு காணும். இது இவ்வுதிரத்தின் மீது ஆணை.” வலிப்பு வந்தவன்போல் அவ்வரிகள் நின்று கொண்டிருந்த என் உடலை உலுக்கியது.
மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்து வந்து கொண்டிருந்த ஆயிரம் கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு பெண்ணாக மாறி என்னை நோக்கி வருவது போலிருந்தது. மண்டபத்தின் தரை தளத்தில் சிதறியிருந்த மண் அனைத்தும் ரத்த நிறம் கொண்டிருந்தன அல்லது என் கண்களுக்கு மட்டும் அவ்வண்ணம் தெரிந்தன.
இங்கிருந்து, அத்தனை கட்டுகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் ஓடிவிட வேண்டும். மீண்டும் காஞ்சிபுரத்திற்கே திரும்பிவிட வேண்டும். “வஞ்சம்” எவ்வளவு அபத்தமான வார்த்தை. இத்தனை நாள் இம்மதுரை மண்டலத்தின் தளவாய் அரியநாதன் என்ற கர்வத்தோடு, எத்தனை போர்களை வேண்டி விரும்பி என் தலைமையில் நடத்தியிருப்பேன். இன்று அத்தனைக்கும் பொருளில்லாமல் போவானேன். எங்கோ யாரோ நிகழ்த்தும் அரியணைக்கான சூழ்ச்சியில் சிக்குண்டு இன்று ஏதுமற்றவனாக இங்கே நான் நிற்பது ஏன்?
விடுதலை என்பது எத்தனை மகத்தான நிலை. சிறகை விரித்து மேகத்தை விலக்கிச் செல்லும் பறவையின் நிலை. என் வாழ்வில் நான் இதுவரை அறிந்திடாத என்றும் அறிந்திட முடியாத ஒரு நிலை. வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஒரு சொல்லால், ஒரு பொருளால் நிரப்பப்பட்டு அதன் விசையாலே அர்த்தம் கொள்ளப்பட்டு வந்தன. இன்று அத்தகைய ஒரு சொல்லும் பொருளற்றுப் போவது ஏன்? கட்டுண்டு, கடமையைச் செய்து பின் ஏதுமற்ற நிலை. நேர் சரடில்லாமல் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்த சிந்தனையைப் பின்னாலிருந்த நிழலுரு வந்து தடுத்தது.
“நயினா தாங்கள் விடியற்காலையிலேயே திரும்பி விட்டதாகச் செய்தி வந்தது. எழுந்ததும் உங்களை வந்து அரண்மனையின் தங்கள் தனியறையில் தேடினேன். நீங்கள் இங்கிருப்பதாகச் செய்தி வந்தது. உடனே இங்கே வந்துவிட்டேன். தங்கள் பாதம் பணிகிறேன்.” என்று பணிவாகத் தலை வணங்கி என் கால்களைத் தொட்டு என் பின்னால் நின்றான் மதுரை மாநகரின் மண்டலேஸ்வரன் கிருஷ்ணப்ப நாயக்கன்.
அவனை நோக்கித் திரும்பாமல் என் கைகளை மட்டும் உயர்த்தி, “நலம் சூழ்க கிருஷ்ணப்பா.” என்றேன்.
முதற்கனத்தில் அவனிடம் பேச்சைத் தவிர்க்கவே விரும்பினேன். எந்தச் சொல்லும் என்னை எழுந்துவந்து நிரப்பவில்லை. என் மனமறிந்து அவனே தொடங்கினான், “நீண்ட நாட்கள் நயினா, தங்கள் வரவை எதிர் நோக்கியே இம்மதுரை நகரம் இத்தனை நாள் காத்திருந்தது. இம்மதுரை நாயக்கர் பெருமண்டலத்தின் மூத்த தளவாய் அரியநாதரைக் காணும் நாளையே இங்குள்ள ஒவ்வொருவரும் எண்ணி காத்திருந்தனர்” என்றான்.
முறைமையான சொற்கள். அந்த முறைமையே எனக்குள் ஒரு கண சலிப்பையும், மறு கண விடுதலையையும் ஒரு சேரக் கொண்டு வந்தது. என் அத்தனை வருடங்களில் அதற்காக நான் பழகியிருந்தேன், இல்லை பழக்கப்பட்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் இன்று எனக்கும் அந்த முறைமைச் சொற்கள் தேவைப்பட்டன.
“நான் இங்கே வந்தே வருடம் ஒன்றைக் கடந்துவிட்டது, அங்கிருக்கும் போதெல்லாம் இங்குத் திரும்பும் நாளையே எண்ணி நானும் காத்திருந்தேன். வர முடியாத சூழ்நிலையில் இத்தனை நாள் சிக்கிவிட்டேன் என்பதையும் நீ அறிவாய் அல்லவா?” என்றேன்.
தெரியும் என்பது போல் அவன் தலை மட்டும் அசைந்தது. முதல் முறைமைகளைக் கடந்த பின்னர் என் மனம் சொற்களைத் தேடிக் கொண்டது, நான் அவனிடம் பேச விழைந்தேன். பேசி பேசி சொற்களால் நியாயப்படுத்தியே இதிலிருந்து என்னால் வெளிவர முடியுமெனத் தோன்றியது.
“போரின் செய்தியைப் பற்றி நீ அறிந்திருப்பாய். அதிலிருந்து மீளா வண்ணம் நான் என்னுள் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதனைத் தவிர்க்கவே இங்கு வந்தவுடன் பொழுது தாழ்த்தாமல் இம்மண்டபப் பணிகளை மீண்டும் தொடங்கிவிட்டேன். எப்போதும் பெருஞ்செயல் சிந்தனையைக் கலைக்கும் அருமருந்து. மாறாக இங்கு வந்தப் பின்பும் அதே சிந்தனையோட்டங்கள், திரும்பத் திரும்ப கரையையே அணுகி வரும் கடலலையைப் போல, அவை மாறாமல் மீண்டும் மீண்டும் என்னைச் சுழற்றி அறைகின்றன.” என்றேன்.
“நயினா, அனைத்துச் செய்தியும் என்னை வந்தடைந்தது. புதிய தலைநகரம் பெணுக்கொண்டாவில் எழுந்து கொண்டிருப்பதாக அறிந்தேன். ஆனால் இந்தப் போர் இப்படித் திசைத் திரும்புமென என்னால் இன்றும் நம்ப முடியவில்லை. இராம ராயரின் மரணம் அதன்பின்னான நம் படை சிதறலுமே நான் நீங்கள் வரும் வரை பொய்யென்றே எண்ணியிருந்தேன். இத்தனை பெரும் படை கொண்டு இரண்டு நாளில் வென்று திரும்பிவிடுவீர்கள் என்றே எண்ணியிருந்தேன்.” என்றான்.
இளமையின் துடிப்பும், வேகமும் நிரம்பப் பெற்றவன், அதனாலே வென்று கடந்து பறக்க நினைக்கிறான். போர் என்ற சொல்லே அவனுள் இத்தனை கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது அவை தோல்வியில் முடிந்தாலும். இந்நாட்டிற்குத் தேவையான மீண்டுமொரு பெருவீரன்.
“அவை அனைத்தையும் மறக்க நினைக்கிறேன், இன்று அவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு பெரும் வஞ்சம் என் நெஞ்சைத் தைத்துள்ளது கிருஷ்ணப்பா” என்றேன்.
அங்கே நடக்கும் சிற்ப வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை அந்த வரி திசைத் திருப்பியது. என்னை அப்போது தான் அவன் உண்மையாகக் கவனிக்கத் தொடங்கினான். மருண்டவன் போல் அவன் இரு கண்கள் வந்து என் கண்களைச் சந்தித்தன.
“இனி பெணுக்கொண்டாவில் தொடரப் போகும் மொத்த நாயக்கர் வம்சத்தின் மீது கறை ஒன்று விழுந்தது கிருஷ்ணப்பா. விஜயநகரத்திலிருந்து வெளியேறி வந்த ஒரு குருதி விடாமல் அந்தக் கறையின் எச்சங்களை அங்கே சுமந்து சென்றிருக்கிறது. வேடிக்கையாக ஒவ்வொரு அரசும் அதற்கு முந்தைய வம்சத்தின் சாபத்தின் மேலேயே தங்கள் அரியணையை அமைக்கின்றன. விஜயநகரத்தில் நேற்றிருந்த துளுவ வம்சமும், அதற்கு முன்னிருந்த சாளுவ வம்சத்தை வஞ்சித்தே வந்திருக்கும், அவர்களுக்கு முன் சங்கமம், இப்படி ஒரு வஞ்சம் மற்றொன்றை வெட்டி நிறைத்தே இங்கே அரியணைகள் அலங்கரிக்கப்படுகின்றன. அதனை நான் அன்று நேரில் கண்டேன்.” என்றேன். அவன் என் சொற்களிலிருந்து மீளாதவன் போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் தொடர்ந்தேன், “அது போரே அல்ல; வெறும் அபத்தம், மொத்த மனித இனத்தின் மேல் நடந்த பெரும் கொடூரம். இத்தனை நாள் நாமும் அதனையே செய்து வந்தோம், இப்போது நடந்தது அதுவல்ல பெருவஞ்சம். அதற்கான கூலியை அவர்கள் தலைமுறைகளும் சுமக்கப் போகிறது. ஆம், பலியொன்று விழுந்தது, விஜயநகர சன்னதியின் கடைசி குருதி வரைத் தாக்கும் பெரும் பலி, குருதி விடாய் கொண்ட ஒரு பெண்ணின் பலி. அனைவரின் நெஞ்சைக் கிழிக்கும் குருதி, தீக்குருதி… ஆம் தீக்குருதி அதனையே அங்கே நான் இறுதியாகக் கண்டது பெரும் விடாய் கொண்ட அனலின் குருதி. நீரின் மேல் எங்கும் நிறைந்திருக்கும் அனலின் குருதி.”
2
2020
உடைந்து, நிறைந்த அவள் கன்னங்கள் எதிர்படும் வாகனங்களின் ஹை பீம் வெளிச்சத்தில் பொன்னிறமாக மின்னின. மதியம் மதுரையிலிருந்து கிளம்பும் போது தொடங்கியது பெங்களூர் தாண்டியும் நிற்கவில்லை. அவளுக்குச் சமாதானம் சொல்லும் மனநிலையும் என்னிடத்தில் இல்லை. யோசித்துப் பார்த்தால் இப்போது எல்லாக் குடும்பங்களிலும் சாதாரணமாகிப் போன ஒரு பிரச்சனை எங்கள் இருவரை மட்டும் விடாது வாட்டி வதைக்கிறது.
“கொஞ்ச நேரம் தூங்குறியா துர்கா, நாம போய் சேர காலைல ஆயிரும்” என்று காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினேன். எந்தப் பதிலுமில்லாமல் கண்ணாடி வழியாக வெளியே பார்த்துக் கொண்டு கீழுதட்டை மேற் பற்களால் கடித்து எனக்கு எதிர் பக்கம் உடலைத் திருப்பிய வண்ணம் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அது அவள் என்னிடம் எதுவும் பேசப்போவதில்லை என்பதைக் குறிக்கும் நிலை.
லீலாமாவின் கடும் சொற்கள் எந்நாளும் உள்ளது என்றாலும் இன்று அவை வார்த்தை தரம் மீறிச் சென்றுவிட்டன. சிறு வயதிலிருந்து அம்மாவைப் பார்த்திடாத எனக்கு அம்மா ஸ்தானத்திலிருந்து வளர்த்த பெரியம்மாவை எதிர்த்துப் பேச ஒரு நாளும் வார்த்தை எழுந்ததில்லை. நான் அவ்வாறு பெரியம்மாவை எதிர்க்க மாட்டேன் என்ற நினைப்பே துர்காவைத் தன்னுள் மேலும் புழுங்கச் செய்திருக்கும். பெரியம்மாவும் என்னைத் தவிர குடும்பம், உலகமென ஏதும் அறியாததால், என் மேலுள்ள அதீத பாசத்தால் தான் இப்படி நடந்துக் கொள்கிறாள்.
அந்த இறுக்கமான நிலையை மாற்ற வேறு வழி தெரியாமல் அவளை அழைத்து வந்துவிட்டேன். மேலும் இது நாங்கள் நீண்ட நாள் தள்ளிப் போட்டு வந்த பரிகாரமென்பதால் இதனையும் இன்றே செய்து முடித்துவிடலாம் எனத் தோன்றியது.
இப்போது அவள் சமாதானமாகியிருந்தாள், அந்தப் பாட்டிலை எடுத்து மீண்டும் அவளிடம் நீட்டினேன். எதுவும் சொல்லாமல் அதனை வாங்கிக் குடித்தாள். சிரித்த அவள் முகத்தைப் பார்த்தே வருடங்கள் பல கடந்துவிட்டன. தினமும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அவளிடம் இந்த முள்ளையே தைத்துக் கொண்டிருந்தனர்.
“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னைய இந்த பரிகாரத்த பண்ண சொன்னாங்க நான் தான் அப்போ இதெல்லாம் பெருசா கண்டுக்கல. சாரி, என்னாலதான் உனக்கு எல்லா பிரச்சனையும்” என்றேன். அந்தச் சமாளிப்பு வார்த்தைகள் அவளுக்கே அழுத்திருக்கும். அத்தருணத்தில் அதைத் தவிர எந்த வார்த்தைகளும் எங்களை மீட்பதில்லை.
“அருண், எனக்கு இதுலலாம் நம்பிக்கையே போயிருச்சி. நமக்கு இதுக்கு மேலே குழந்தை பிறக்கும்ன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை. அப்படியே பிறந்தாலும் அதுக்கப்பறம் என்ன நடக்கும்ன்னு உனக்கே தெரியும். தெரிஞ்சும் உங்க வீட்டில எல்லாரும் முள்ள தச்சி பேசுறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.” என்றாள்.
“அத நீ பெருசா எடுத்துக்காதே மா. அவங்க பிரச்சனை நாம இந்த பரிகாரம் செய்யலன்றது தானே இதையும் செஞ்சிருவோம் அப்பறம் அவங்க எதுவும் பேச மாட்டாங்கல்லா” என்றேன்.
அவள் என்னை மறுப்பது போல் தலையசைத்தாள், பதிலேதுமில்லை. பேசாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தவள், கார் இன்னும் கொஞ்சம் சென்றதும் தூங்கிவிட்டாள்.
3
1565
துளுவ வம்சத்தின் சதாசிவராயர் அரியணை ஏறியதிலிருந்தே நாட்டில் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கின. தெற்கே தென் திருவிதாங்கூர், பாண்டிய சிற்றரசர்களைக் கயத்தாறிலிருந்து துரத்தியடித்தது. வடக்கு மலபார் கடலோர பகுதிகளில் பிரான்சிஸ் சேவியர் தலைமையிலான ஏசு சபையின் ஆதிக்கம் தொடங்கியது. சோழ மண்டலத்தில் சிற்றரசுகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. காஞ்சிபுரம் கோவிலைச் சூறையாடக் கோவாவிலிருந்த போர்ச்சுகல் படை சமயம் பார்த்துக் காத்திருந்தது. இப்படிச் சுற்றிலும் குழப்பங்களுடனே பேரரசு சதாசிவராயரின் தலைமைக்கு வந்தது. நீ அறிந்திருக்க மாட்டாய் கிருஷ்ணப்பா இத்தகைய சூழலின் விழைவுகளை, நான் அன்றே ஊகித்திருந்தேன் இப்பேரரசுக்குப் பேராபத்து ஏற்படுமென. எனது அந்த எண்ணம் அரச நிந்தனை என்பதால் அதனை நான் வெளிக்காட்டவில்லை. உனது தந்தை, விசுவநாதரிடம் கூட நான் இதனைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை.
அன்று அதனை இராமராயர் திறம்பட சமாளித்தார். தெற்கே உள்ள அனைத்துக் கழகங்களையும் சீரமைத்துத் திரும்ப சின்ன திம்பா தலைமையில் படையொன்றை அனுப்பினார். அவர் அதனை நிதானமாக ஒவ்வொன்றாய் செய்தார், பாண்டிய சிற்றரசிற்கு இழந்த கயத்தாறு பகுதிகளை மீட்டுத் தந்தார். சோழ மண்டலத்திலுள்ள சிற்றரசுகளின் ஆதிக்கத்தை அடக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார். இதனால் போர்ச்சுகல் படை பயந்தது.
இதற்கான விலையாக விஜயநகரம் சதாசிவராயரின் அரியணையே இராமராயருக்கு அளிக்க வேண்டியிருந்தது. மெல்ல மெல்ல ஆரவீட்டுப் படை பிரிவின் ஆதிக்கம் விஜயநகரத்தில் தொடங்கியது. இராமராயர் படை பிரிவின் மூத்த தளபதிகளாகத் தன் தம்பிகளையே நியமித்துக் கொண்டார். அன்றிலிருந்து அரசன் சதாசிவராயரை இராமராயர் தன் கை விளையாட்டுப் பாவையாகவே இயக்கத் தொடங்கினார். சதாசிவராயருக்கு வாரிசுமில்லாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.
போர் முடிந்து நான் தலைமறைவாக வாழ்ந்த காலகட்டத்தில் எனது நண்பனும், விஜயநகரப் படைத்தளபதியுமான திம்மப்பனை சந்தித்த போது அதன்பின்பு நிகழ்ந்த அனைத்தையும் விளக்கினான். “இங்கே அரசுகளின் பிரச்சனையே தன்னகங்காரங்களை நிலைநாட்ட நினைப்பது தான்” என்றான் திம்மப்பன். அப்போது அரசென்பது மக்களின் பிரதிநிதி என்ற நிலை தெற்கிலும், வடக்கிலுமாக மொத்த பாரதமெங்கும் மறையத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவரும் தனது அதிகாரத்தை நிலைநாட்டவே மக்களை இரையாக்கிக் கொண்டிருந்தனர். இராமராயரும் அதனையே செய்தார். தெற்கில் நிலை ஓரளவு சீரடைந்த பின்பு அவர் கவனம் வடக்கு நோக்கித் திரும்பியது. அப்போது பாமினி பேரரசு ஐந்தாகப் பிளந்து ஆமதுநகர், கோல்கொண்டா, பிஜபூர், பீடார், பீரார் என ஐந்து தனி நாடுகளாகி ஒன்று மற்றொன்றுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். இராமராயர் அந்தப் பகைமையை மேலும் வளர்க்க விரும்பினார்.
முதலில் கோல்கொண்டா, ஆமது நகர் சுல்தான்களை ஆதரித்தார். அவர்களோடு சேர்ந்து கொண்டு பிஜபூர்ச் சுலத்தானைத் தாக்கிப் பிஜபூரில் பேரழிவுகளை உருவாக்கினார். பிஜபூர் நகரின் அழிவு அவருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. இப்பிளவின் மூலம் மொத்த பாமினி ராஜியத்திலும் விஜயநகர ஆதிக்கத்தைச் செலுத்தி அவர்களைச் சிற்றரசுகளாக அடிபணிய வைக்கலாம் எனக் கணக்கிட்டிருந்தார். அதனை விஜயநகரப் படைக் கொண்டு முற்றழித்திருக்க முடியும். ஆனால் அவர் சூழ்ச்சிகளை விரும்பினார். அதன் சுவை பிஜபூர் அழிவில் தெரிந்தது. பின்பு பிஜபூருடன் சந்து செய்து கொண்டு ஆமது நகரைத் தாக்கினார். அங்கே சென்ற படைகள் ஆமது நகரை முற்றாக அழித்தனர்.
இப்படி சூழ்ச்சிகள் அதன் நஞ்சை ஒன்று திரட்டின. அப்போது அவர் எதிரிகள் பலம் குன்றிவிட்டதாக எண்ணினார். அவர்கள் யாரும் ஒருவரோடு ஒருவர் இணையப் போவதில்லை என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தார். சிலநாட்களில் நிலைமை தலைக்கீழாகியது. ஐவரில் பீரார் சுல்தானைத் தவிர மற்ற நால்வரும் ஒன்றிணைந்தனர்.
அவர்களின் போரறிவிப்பு அவரை எந்த நிலையிலும் கலங்கச்செய்யவில்லை. வரும் படைகளைத் துரத்தியனுப்பப் போதுமான படைகள் நம்மிடமிருந்தன. அதுவே அவரது அகங்காரத்தை அதிகரித்தது. இப்போது சொல்வது போல் விஜயநகரப் படைகள் கிருஷ்ணௌ நதியைக் கடந்து சென்று தலைக் கோட்டையில் அவர்களுடன் போரிடவில்லை. நதியைத் தாண்டி வருபவர்களைத் துரத்தியடிக்கவே கிருஷ்ணையின் தெற்கு எல்லையில் ராஷசி – தங்கடிப் பகுதிகளில் பத்தாயிரம் குதிரைப் படைகள், இரண்டாயிரம் யானை படைகள், ஒரு லட்சம் காலாட்படைகள் என முன்னரே பாடி வீடமைத்துக் காத்திருந்தது.
அது வெறும் முகாமிடுதல் மட்டுமே அதனைத் தாண்டி அங்கே செய்வதற்கு ஒன்றுமில்லை. அனைவரின் நம்பிக்கையும் இரண்டு நாளில் வருபவர்களைத் துரத்திவிட்டுச் செல்வதாகவேயிருந்தது. இராமராயரின் அலட்சியம் அதனை மேலும் வளர்த்தது.
போர் ஒரு மாதக் காலம் நீண்ட போதுதான் அனைவருக்கும் அதன் விளைவுகள் புரியத் தொடங்கின. அப்போது நிலைமை கையை மீறிச் சென்றிருந்தன. திடீரென பீடார் படையும் பின் வந்து இணைய மொத்த கணக்கும் தவறாகியது. ஒரே நாளில் நமது படைகளைத் தாக்கி அதனை முன் நின்று நடத்திய இராமராயரைச் சிறைபிடித்தனர்.
சிறை பிடித்த அக்கணமே அங்கே நம் படைகள் சூழ அவர் தலை இரண்டாகத் துண்டிக்கப்பட்டது. தலையில்லாத அவர் உடல் சுற்றியிருந்த அனைத்து வீரர்களுக்கும் தூக்கிக் காட்டப்பட்டதும், அவர்கள் சிதறியோடத் தொடங்கினர்.
4
2020
விடியலின் முதல் கதிர் எழுவதற்கு முன்பாகவே நாங்கள் ஹொசாபட் எனும் சிற்றூருக்கு வந்தடைந்திருந்தோம். நான் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அங்கே ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் முன்பதிவு செய்திருந்தேன். இரவு முழுவதும் காரை ஓட்டி வந்தக் களைப்பும், அறையின் ஏசியும் கண்களை ஒருசேரச் சுழற்றியது. சிறிது தூக்கம். அவள் குளித்துத் தயாராகியதும் நானும் எழுந்து புறப்பட்டேன்.
இன்றும் அவள் அமைதியிழந்திருப்பதை முகமே காட்டியது, அவள் அவ்வாறு இல்லாத நாட்களே ஆச்சரியம். சிறு குழந்தைபோல் முகத்தை வைத்துக் கொண்டு அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன்.
கார் நேராகச் சென்று ஹம்பி தாண்டி வடக்காக இருந்த அனக்குந்தி மலைக்கோட்டையை அடைந்தது. இது தான் நான் முதல் முறையாக இங்கே வருவது, முன்பு அப்பா அம்மாவுடன் வந்திருப்பதாகச் சொல்லி இந்த இடத்தைக் கேள்விப்பட்டிருந்தேன். அவரும் பரிகாரம் செய்யவே இங்கே வந்திருக்கக் கூடும்.
எங்கள் குடும்பம் ஆரவீட்டு நாயக்கர் குடும்பமென்பது, எங்கள் வீட்டைச் சுற்றி மிகபிரபலம், தொன்மையான வரலாறு கொண்ட குடும்பமென்பதாலல்ல. தொல் சாபமொன்றைச் சுமந்து வருவதனால். எங்கள் முன்னோர்கள் ஆரவீட்டுப் படைப் பிரிவில் பெரும் பதவி வகித்ததாக எங்கள் வீட்டில் கிடைத்த பழைய நூல்களிலிருந்த தகவல் கொண்டறிந்தேன். நாங்கள் மத்திய ஆந்திர, கன்னட பகுதியிலிருந்து தொடர் போரில் இங்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. வேலூரில் இறுதியாக இருந்ததாகவும் அங்கிருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கட்டுகள் அனைத்திலிருந்தும் விடுபடவே முன் வரலாற்றை ஒவ்வொன்றாய் தேடி ஆராய்ந்தேன். ஆனால் இன்று என்னால் எதனையும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
என்னை வீட்டில் கல்யாணத்திற்கு முன்பே இந்தப் பரிகாரத்தைச் செய்யச்சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இது எங்கள் குடும்பத்துக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். முதலில் நான் அறிவியல் யுகத்தில் இந்தப் பழம்பெருமை, பரிகாரமெல்லாம் பிற்போக்குச் சிந்தனையென்றே இவை எல்லாவற்றையும் தவிர்த்து வந்தேன். ஆனால் அதன்பின்பாகச் சூழல் மெல்ல மாற்றங்கண்டது. அவர்கள் சொல்வதையெல்லாம் செய்துவந்தாலும் இங்கு வருவதை மட்டும் எண்ணமில்லாமல் தவிர்த்து வந்தேன். இன்று அதற்கான சூழலும் உருவாகியது.
பயணம் எளிதாக இருக்குமென்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்தக் கோட்டையின் முக அமைப்பே அதற்கு மாறான எண்ணத்தைத் தந்தது. கோட்டை வாசலில் நான் முன்பே போனில் தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருந்தவர் வந்து நின்றிருந்தார். வாட்சப்பில் அவர் புகைப்படமிருந்ததால் முகத்தை அடையாளம் காணவும் எளிதாகயிருந்தது. நான் அவரைப் பார்த்துக் கையசைத்ததும், எங்களை நோக்கிக் கையசைத்தார். “துர்கா அவருதான் நான் சொல்லி வச்சிருந்தது வா போகலாம்” என்றேன். பதிலேதுமில்லை அவள் உடன் நடந்தாள்.
அவர் அருகே சென்றதும் கைக் குலுக்கி, “நான் தான் மதுரையில இருந்து நேத்து கூப்டது” என்றேன்.
“நீங்கதானா அது, சரி சரி எல்லாம் ரெடி சார் நாம போனா ஆரம்பிச்சரலாம்” என்றார் உதிரியான தமிழில். கன்னடமும், ஆந்திரமும் கலந்த தமிழ் வாடை. நான் ஓசூரில் வேலைச் செய்யும் போது கேட்டுப் பழகியவை அவை. போகலாம் என்பது போல் கையசைத்தார்.
கோட்டையிலிருந்து கோவிலைத் தொடும் போது பயணம் நினைத்தது போல் எளிதாகயிருக்கவில்லை. பல குகைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது, சில இடங்களில் ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்குத் தாவ வேண்டும். எல்லா இடங்களிலும் அவள் சிரமப்பட்டாள். “அருண் மெதுவா போலாம். முடியல கஷ்டமா இருக்கு” என்றாள்.
வெயில் மதுரையைத் தோற்கடித்தது, கோவிலை அடைந்த போது நானும் களைத்திருந்தேன், இரவு தூக்கத்தைத் தவிர்த்தது கண்களைச் சுழட்டியது. மலைக்கு நடுவே என்பதால் சிறிய கோவிலாக இருக்குமென்றே எண்ணியிருந்தேன். அதற்கு மாறாக அங்கே ஒரு சிறிய குகை மட்டுமே இருந்தது அதனுள் சிறிய புற்று, பின்னால் வெவ்வேறு வடிவில் துர்க்கை, காளி மற்றும் சாமுண்டேஸ்வரி படங்கள். சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு மேல் தர்க்கம் செய்யும் நிலையிலும் நாங்கள் இல்லை அவர்கள் சொல்வதைச் செய்துவிட்டுத் திரும்ப வேண்டும்.
அங்கே உள்ளேயிருந்த பூசாரி எங்களை முகமனோடு வரவேற்று தீபாராதனைக் காட்டினார். அதன்பின் அவர் கையிலிருந்த பால் பாக்கெட்டை பிய்த்துப் புற்றினுள் ஊற்றிக்கொண்டே, “இவள் பூமாதேவி, ருத்ர வடிவாக இங்கே வந்தமர்ந்தவள், ரஜோகுணமுடையவள். இவள் பெரும் தீயை உண்டவள். முதலில் தண் வடிவிருந்தவள் பெரும் ஏக்கத்தோடும், தவிப்போடும் இங்கே வந்தமர்ந்தாள். இவளை நம்பி மனமார தொழுதால் உங்கள் ஏக்கமும், தவிப்பும் நீங்கும். எண்ணிய காரியம் கைகூடும்” எனக் கன்னடத்தில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கதையைச் சொல்லலானார். அவர் பேசும் கன்னடம் எனக்கே தெளிவாகப் புரிந்தது. நான் துர்காவைத் திரும்பி பார்த்த போது அவள் கண்கள் அந்தப் புற்றையே வெறித்து நோக்கி மன்றாடிக் கொண்டிருந்தன.
பூசாரி எங்களருகில் வந்து நாங்கள் செய்ய வேண்டிய முறைமைகளை விளக்கினார், “இங்கே இருவரும் ஒருங்கே அமர்ந்து பூமாதேவியின் கதையைக் கேட்க வேண்டும், அவள் கதை கேட்டு அவள் அகம் குளிர்ந்த பின்னே மற்ற பூசைத் தொடங்கும். அதனைக் கேட்கும் போது நீங்கள் இருவரும் நீரில் நனைந்து முழுதும் குளிர்ந்திருக்க வேண்டும் அதன் பின்னே கதைத் தொடங்கும். இவை இங்குள்ள சடங்கு முறை.” என்று சொல்லி அவர் அந்தக் குகையின் ஓரத்திலிருந்த குடங்களைக் காட்டினார். ஒரு கணம் விசித்திரமாக இருந்த அந்தப் பூஜை, வேடிக்கையாகவுமிருந்தது. அது என்னுள் சிறு சிரிப்பை வரவழைத்தது.
எத்தனை பரிகாரங்கள், எத்தனை பரிசோதனைகள், எத்தனை கோவில்களில் எத்தனை விதமான மன்றாடல்கள் உண்மையில் நாங்கள் இருவரும் செய்த தவறுதான் என்ன? எல்லாப் பரிசோதனையும் தெளிவாக இருந்தும் ஏன் இவள் மலடி என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டும். அப்படி என்ன சாபம் பொல்லாத பரம்பரை சாபம், இப்போது இங்கே எதற்கு வந்திருக்கிறேன். யாரிவள், ஏன் இவர் என்னை வழிநடத்த வேண்டும் பேசாமல் இங்கிருந்து ஓடி விடலாமா? எண்ணங்கள் என்னைத் தவிக்கச் செய்தன.
ஆனால் எந்தத் தயக்கமுமில்லாமல் துர்காவின் உடல் அந்த நீர்க் குடத்தை நோக்கிச் சென்றது.
5
1565
போரென்பது எண்ணிக்கையினாலானது என்றே அன்று வரை எண்ணியிருந்தேன். அந்தப் பெரும் படை சிதறியோடும் வரை. ஒருங்கிணைக்கும் ஒருவனில்லாத படைகள் போர்ப்படைகளேயில்லை அவை வெறும் தனித் தனி மானுடர்கள். அவை ஒவ்வொன்றாகத் தனி திரலாகச் சிதறத் தொடங்கின.
அதுவரை அங்கே நிகழ்ந்தது வெறும் போர் மட்டுமே இரண்டு பேரரசுகளுக்கு எதிரான அதிகார மோதல். இரண்டு அகங்காரங்கள் ஒன்றை ஒன்று முட்டி மோதி ஒன்றை வீழ்த்தியது. ஆனால் அதன் பின் நிகழ்ந்தவையே நான் இன்றும் மறக்க நினைக்கும் கனவாக என்னுள் எஞ்சுகிறது. அங்கே நிகழ்ந்தது அதிகார மீறலல்ல அறமீறல்.
இராமராயர் இறந்த பின்பும் விஜயநகரத்தைக் காக்க வழியிருந்தது. அவரின் இரண்டாவது தம்பியான ஆரவீட்டுப் படைத் தளபதி திருமலை ராயர் அதனைச் செய்திருக்கலாம். சிதறிச் சென்ற படைகளை மீண்டும் ஒன்று திரட்டியிருக்கலாம். குறைந்த பட்சம் எதிர்த்து வந்தவர்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பியிருக்கலாம். மாறாக அவர் ஆட்சியை விரும்பினார், அதிகாரத்தைத் தன் கையிலெடுக்க எண்ணினார். தெற்கே சென்று ஆட்சியமைத்துப் பின் இழந்த நகரத்தை மீட்டுவிடலாம் எனக் கணக்கிட்டார். களத்திலேயே அரசர் சதாசிவராயரைச் சிறைச் செய்து தன்னுடன் திரண்டு கொண்ட படைகளை விஜயநகரத்தை நோக்கித் திரும்பச் செய்தார்.
அவர்களைத் துரத்தி வந்த மொத்த பாமினி படைகளையும் அவை உண்டாக்கப் போகும் சேதத்தையும் அவர்கள் ஓரளவும் பொருட்படுத்தவில்லை. அங்கிருந்த பெருஞ்செல்வத்தை ஆயிரத்தைநூறு யானைகளில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர். அன்று விஜயநகர மக்கள் திடீர் படைத் திரும்பலைச் செய்வதறியாது திகைத்து நோக்கிக் கொண்டிருந்தனர்.
“என்னால் இதனைச் சொற்களால் விளக்கிவிட முடியுமா எனத் தெரியவில்லை கிருஷ்ணப்பா. அங்கே அந்த வஞ்சத்திற்கான முதல் ஊற்று முளைத்தது. அதற்கான கூலியை நான் அன்றே கண்ணெதிரில் கண்டேன்.”
வடக்கிலிருந்து வரும் பாமினி படை ஒருபுறம், தெற்கு நோக்கிச் செல்லும் விஜயநகரப் படை எதிர்புறமென, இரண்டு வேட்டை மிருகங்களுக்கு நடுவில் இரையாகி நின்றது நாடு. ஒன்றை ஒன்று வேட்டையாட விஜயநகரமே பலியாகிக் கொண்டிருந்தது. எழுந்தது தீ நாற்புறமும், கட்டி மேலெழுந்த ஒவ்வொரு கற்களும், தூணும் ஒன்றொன்றாக மண்ணிறங்கத் தொடங்கின.
புனலே வடிவான அப்பெருநகரம் அன்று அனலை உண்டது. அங்குள்ள ஒவ்வொன்றாய் அனல் உண்டு உண்டு மேலெழுந்தது, அவை ஒவ்வொன்றாய் உண்டு செறித்து மண் நிறைத்தது. யாரும் தப்புவதற்கு ஏதும் வழியின்றி குன்றுகளால் சூழப்பட்ட அந்நகரம் எரிந்து சிவந்தது.
அரண்மனையிலிருந்து அனைத்துச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு அரசக்குடும்பத்தினர் அனைவரும் தெற்கு நோக்கிக் கிளம்பினர், திருமலை ராயர் அவசரமான சூழ்நிலையிலும் தன் அரியணைக்கான அனைத்துச் செயல்திட்டங்களையும் தீட்டினார். அந்த சூழ்ச்சிக்கான வலைகளை அவருடனிருந்த ஒவ்வொருவரும் திறம்படச் செய்தனர். துளுவ வம்சத்தின் எச்சத்தை அன்றே முடித்துவிட விரும்பினர். அது தொடங்கவிருக்கும் புதிய விஜயநகர பேரரசிற்கு மற்றொரு இடையூறு எனக் கணித்தனர்.
கிளம்பிச் செல்லும் போது அரசப் பெண்ணான பூமாதேவி ஏறி வந்த யானையை வடக்கு முகமாகத் திருப்பிவிட்டனர். தங்கள் மேல் பலி விழாமலிருக்க அவை ஒவ்வொன்றையும் தற்செயல்களாகவே செய்தனர். சிறைப்பட்டிருந்த சதாசிவராயர் அருகிலிருந்த என்னிடம் அவளைக் காப்பாற்றும் படி கைகூப்பி வேண்டினார். அப்போது தான் அவள் யாரென்பதை நான் உய்த்தறிந்தேன். மேலும் அவள் கருவுற்றிருக்கும் செய்தியை என்னிடம் மட்டும் அவர் சொல்லி இறைஞ்சி வேண்டினார்.
“அவன் வாழ வேண்டும், அவளுள் இருக்கும் என் மகன் அரசனாக வேண்டாம். துளுவ வம்சத்தின் பேரரசனாக இல்லாமல் எங்கேனும் ஒரு காட்டில் நாடோடியாக வாழட்டும், ஆனால் என் குருதியாக அவன் மண்ணில் நிலைக்கட்டும்” என்றார் சதாசிவர்.
அவ்வார்த்தைகள் என்னை இளக்கின. நான் அங்குள்ள கட்டுகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு அவளைப் பின் தொடர முயற்சித்தேன். ஆனால் நான் அவளைக் கண்டடைந்த கணம் அனைத்தும் கையை மீறிச் சென்றிருந்தது.
அவள் சென்ற யானையை மதங்கொள்ள செய்திருக்கின்றனர் உடன் சென்ற ஆரவீட்டுப் படை வீரர்கள். அது திமிறி துங்கபத்திரையை நோக்கி ஓடத் தொடங்கிய போது. நான் அவளைக் கண்டு கூச்சலிட்டேன், யானையின் மேலிருந்து செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தவள் இரண்டு உயிரைக் காப்பாற்ற அதிலிருந்து குதித்துவிட்டாள். நான் என் குதிரையின் விசையைக் கூட்டி அவளை நோக்கி ஓடினேன். அவளைச் சூழ்ந்த வீரர்களுடன் தன் இடைக் கத்தியைக் கொண்டு தனியாகப் போராடிக் கொண்டிருந்தாள்.
குதிரையில் விரைந்து கொண்டே அங்கே நான் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் திட்டமிட்டுக் கொண்டு விரைந்தேன். ஆனால் நான் செல்லும் முன் இரும்பு கவசமணிந்த கால் முட்டியைக் கொண்டு மூவர் அவள் அடிவயிற்றில் எத்தி மிதித்தனர்.
என் வாளால் அவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு அவளருகில் சென்ற கணம் அவள் மூச்சிரைத்திருந்தாள். ரத்தமே வடிவாக என்னெதிரிலிருந்தது அவள் உடல். அவளுள் இருந்த கருவும். அதனைக் கண்டு செய்வதறியாது திகைத்து அங்கேயே நின்றேன்.
அப்போது அவள் எழுந்து வந்தாள். இன்று அது என் உளமயக்கா எனச் சொல்லத் தெரியவில்லை. அனலுருவான கொற்றவை தெய்வம் மண்ணிலிருந்து எழுந்து வருவதைப் போல். விரித்தக் கூந்தலும், வெறித்த கண்களுமென அவள் நடந்து வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவளைக் கண்ட கணம் என் உடலெங்கும் நடுக்கம் பரவத்தொடங்கின. ஏதுமற்றது போல் அவளென்றான நித்தியமொன்று அங்கே படர்ந்தது.
அங்கே நிற்கும் அவள் யாரென்பதை நான் அப்போது அறிந்தேன். தண்னென இங்கே இக்கோவிலில் வீற்றிருக்கும் மீனாட்சியின் மாற்று வடிவம். துர்க்கை, சாமுண்டி, மகிஷாசூரனி. அவளையே அங்கே ஒவ்வொரு ஆலயத்திலும் கல்லாக நிறுவியிருந்தனர், அவளெழுந்து வந்தாள். சொல்லேதுமில்லாமல் என்னைக் கடந்து சென்று துங்கபத்திரையில் இறங்கினாள். அவள் உடலிலிருந்து உதிரம் அனலாகச் சொட்டிக் கொண்டேயிருந்தது.
அக்கலவரத்திலும் எச்சலனமுமில்லாமல் நதியினுள் மெல்ல இறங்கிச் சென்றாள். எவ்வித அசைவுமின்றி என்னுடல் அதனையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆற்றிலிறங்கித் தரையில் நடப்பதுபோல் மெல்ல காலெடுத்து வைத்து வடக்காக நடந்தாள். உதிரம் அவளுடலிலிருந்து வெளியேறி நதியை நிறைத்துக் கொண்டேயிருந்தது. முகம் மட்டும் மிஞ்சியிருக்கும் போது திரும்பி என்னை நோக்கி அவ்வரிகளைச் சொன்னாள்.
“என் இந்நிலை தங்களோடே மறைந்து போகட்டும். ஆனால் என் இக்கையறு நிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரமும் அதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இதே நிலை ஆரவீட்டு வம்சத்திற்கும் வரும். அன்று அது வரலாற்றில் அழியாமல் என்றுமென நிற்கும். பெண்ணையும், மண்ணையும் காக்காமல் சென்ற வம்சத்திற்குப் பெண்ணும், மண்ணும் உதவாமல் போக. இம்மண்ணில் இனி ஒரு சொல்லும், பொருளும் விழையாது. இப்பேரரசு இனி எந்த மண்ணிலும் நிலைக்கப் போவதில்லை. ஒரு பெண்ணும் மகவை ஈனப்போவதில்லை. அவ்வாறு நடந்தாலும் அதனைப் பேணும் பேறு அவளுக்கு வாய்க்காது. இக்கையறுநிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரத்தின் தலைமுறைகளுக்கும் பொருந்தும். இவ்வஞ்சமெல்லாம் உருதிரண்டு இனி ஒன்றை ஒன்று அழிப்பதை இனி வரலாறு காணும். இது இவ்வுதிரத்தின் மீது ஆணை”
மெல்ல அவளிதழ்கள் நீருள் அமைந்து மறைந்தன. கண்கள் மட்டும் வெறித்து அவ்வெற்றித் திருநகரையே நோக்கிக் கொண்டிருந்தன. அணைந்து அணைந்து அவளுடல் முழுவதும் மறைந்த கணம், சூழ்ந்திருந்த என்பெருந்திசைகளிலிருந்து குன்றுகள் அவள் சொற்களையே எதிரொலித்தன, சொற்கள் கோர்த்துக் கோர்த்துத் தீயின் பெரு விடாயாய் மாறின. துங்கபத்திரை உதிரத்தீயால் நிறைந்து சிவந்திருந்தது.
6
2020
அவர் சொல்லி முடித்த கதையைக் கேட்டதும் எனக்கு உடலில் ஒரு வித நடுக்கம் ஏற்படத் தொடங்கியிருந்தது. வலது கையின் ஒரு தசை தன்னிச்சையாக ஆடிக் கொண்டிருந்தது. எனக்கு அம்மா ஞாபகம் வந்தது, என் முன்னோர்களில் நான் கதையாய் கேட்ட ஒவ்வொரு பெண்களின் முகமாக வந்தன. இந்தக் கதையை நான் இது நாள் வரை அறிந்திருக்கவில்லை. குலமுறையாக வெறும் பெண் சாபமென்றே சொல்லப்பட்டு வந்தது. இதற்கான எந்தச் சான்றுகளும் நான் தேடிய வரை கிடைக்கவில்லை. ஆனால் வீட்டில் அனைவரும் இதனை அறிந்திருக்கின்றனர். இந்த ரகசியம் இந்நாள் வரை இந்த மலைக்கு மட்டுமென காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒருவர் கூட இதனைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல துணிந்ததில்லை. என் தலை பாரமாக இருந்தது நான் மயங்கி விழுந்துவிடுவேன் என்றே நினைத்தேன். அருகிலிருந்த பாறையைக் கைதாங்கலாய் பிடித்து நின்றேன்.
பூஜை முடிந்து செவ்வரளிப் பூக்களை எடுத்து அவர் தனியாக எடுத்துவைத்திருந்த தட்டில் நிரப்பி, தீபாராதனைக் காட்டினார். என்னருகே வந்தவர் என் கையில் ஒரு குண்டூசியைக் கொடுத்து, “அம்மையின் கையிலிருந்து மூன்று துளி ரத்தத்தை இதிலிடுங்கள்” என்று தீபத்தைக் காட்டினார்.
அதனை வாங்கிய எனது கைகள் நடுங்கத் தொடங்கின. அதனை இறுகப் பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்தச் சலனமுமில்லாமல் அவள் அந்தப் புற்றை வெறித்து நோக்கிக் கொண்டு, வலது கை ஆள் காட்டி விரலை என்னிடம் நீட்டினாள். நான் விருப்பமில்லாமல் விலகிச் சென்ற போது “ம்ம்ம்” என்ற உறுமலோசை அவளிடமிருந்து எழுந்தது. அதனைக் கேட்டு நான் மேலும் பின்னகர்ந்தேன்.
என்னிடமிருந்து அதனைப் பிடுங்கி தன் கையை அறுத்துக் கிழித்து இரத்தத்தை அந்தத் தீயில் வடியச் செய்தாள்.
திரும்பி வரும் போது என்னிடமிருந்து சொல்லேதுமெழவில்லை. நீரில் குளிர்ந்த உடலும், தீயில் சிவந்த கண்களுமென என்னருகில் நடந்து வந்த அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் உடல் முழுவதும் நடுக்கம் பரவத் தொடங்கியிருந்தது. அவளின் அந்த நித்தியமான உக்கிரமுகம், அது நாள் வரை நான் கண்டிராத ஒரு துர்கா என் பக்கத்தில் நின்றாள். பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் கண்ட என் அம்மாவின் முகம் கண் முன்னே வந்து சென்றது.
மலையிலிருந்து கீழிறங்கி வரும் வரை இருவரும் ஒரு சொல்லும் பகிரவில்லை. நான் பேசாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். திரும்பும் போது தான் அதனைக் கவனித்தேன். கீழே சலனமில்லாமல் சென்று கொண்டிருந்த துங்கபத்திரை குருதியால் படிந்திருப்பதுபோல் சிவப்பு எரிந்து நின்றன.
என்னருகில் அமர்ந்திருந்த துர்காவைத் திரும்பிப் பார்த்தேன் அவள் கண்களும் அவ்வாற்றையே வெறித்திருந்தது. காய்ச்சல் கொண்டவள்போல் அருகில் அமர்ந்திருந்தாள். என் நோக்கி, “கொஞ்சம் காரை நிறுத்து அருண், அந்த ஆறு ரம்யமா இருக்கு கொஞ்ச நேரம் அங்க போலாம்” என்றாள். அவளின் அந்த நிதானமும் என்னை நிலைகுலையச் செய்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் ஆற்றின் படித்துறை நோக்கிச் சென்றோம்.
அவள் அங்கே அமர்ந்து கைகளால் நீரை அலைந்தாள். நான் ஆற்றின் மறு எல்லையில் சிதைந்து நின்ற ஹம்பி கோவில்களையும், கோட்டைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அதனைக் கவனித்தேன். அந்நகரத்தின் பிம்பம் ஆற்றில் முழுவுரு கொண்டு நிற்பதை. போக போக அவை நன்றாகத் தெளிந்து வந்தன, ஒவ்வொரு கோவில் கோபுரம், கோட்டை என அப்போது அதன் முழு சித்திரமும் கிடைத்தது. துர்காவின் அருகில் நீருள் அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன், எழுந்து சென்ற அலைகளில் அந்தப் பிம்பம் மட்டும் தெளிவில்லாமலிருந்தது. கண்மயக்கு என திரும்பத் திரும்ப அதனையே கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவள் அங்கே அமர்ந்திருந்தாள் அருகில் சிறு குழந்தையுடன் அந்நகரையே நோக்கிக் கொண்டிருந்தாள்.
அவள் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகையித்தாள். நீருள் ஒன்று, நூறு, ஆயிரமென நான் கண்ட காணாத பெண்களின் முகமாய் எழுந்து வந்தன. அவர்கள் அனைவரும் என்னை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தனர். அதற்குள் துர்கா தள்ளிவிட்ட நீரலைகள் வந்து அதனை மறையச் செய்தன.
அங்கிருந்து எழுந்து வந்த துர்கா என் கைகளைப் பற்றி போகலாமென்று இழுத்து வந்தாள். திரும்பி நடந்த போது என் கண்கள் சிவந்து நிறைந்திருந்த ஆற்றையே நோக்கிக் கொண்டிருந்தன, நீருள் ஒவ்வொரு முகமாக மீண்டும் சிவந்து அலைந்தன.
நிதனமான நடை. துல்லியமான விவரிப்பு. நுணுக்கமான காட்சிப்படுத்தல். அற்புதமான சிறுகதை.