பட்டுத்துணி

ostereier-mit-gesicht-puppenமணி அடித்தும் வீட்டுக்குப் போகும் அவசரமோ வழக்கம்போல் பேருந்து வரும்வரை பையன்களுடன் ‘தூஜோ காசுட்’ விளையாடும் எண்ணமோ வரவில்லை. ஒரு பட்டுத்துணி வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அம்முவின் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.

கடைசி ஆளாக வகுப்பிலிருந்து வெளியில் வந்தாள். தோளில் புத்தகப் பை. காலையில் அம்மா கொதிக்கவைத்து ஊற்றிய தண்ணீர் கொக்கோகோலா நெகிலி புட்டியில் அப்படியே கையில் இருந்தது. குதிரைவால் கொண்டையை உயர்த்தி இறுக்கியிருந்த கித்தாக்களில் ஒன்று அறுந்துவிட, கொண்டை கோணலாகி முடிகள் வெளியேறி திசைக்கொன்றாய் சிதறிக்கிடந்தன. உச்சந்தலையிலிருந்து கன்னம்வரை வலி கனகனத்துக்கொண்டிருந்தது. வெகு நேரம் மேசைமீது ஒரே பக்கமாகத் தலை சாய்த்திருந்ததால் கழுத்துச் சுழுக்கிக் கொண்டதுபோல் இருந்தது. கண்களிலிருந்து வழிந்த நீர் மேசையில் வடிந்ததில் வலதுப்பக்கக் கன்னம் பிசுபிசுத்தது.

வானம் கருத்து, பேய்க் காற்று ஊதியதில் அசோக மர இலைகள் சடசடத்துக் கொட்டிக் கொண்டிருந்தன. பள்ளிக்கூட நுழைவாயில் நெடுக விடைத்து ஓங்கியிருந்த மரங்கள் சலம்பல் இல்லாமல் காற்றுக்கு ஒத்திசைந்து ஆடின. தன் உடலின் பாகமொன்று துண்டித்துப் பிரிவதில் மரங்களுக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நிலத்திலும் சூரிய ஒளியிலும் ஊட்டத்தை உறிஞ்சி உறிஞ்சி தழைக்க வைத்திருந்த இலைகளவை. ஒரேயொரு பேய்க் காற்று மரங்களின் அத்தனை உழைப்பையும் அர்த்தமற்றதாக்கி விட்டிருந்தது. அதுவரை வெயில் அடித்ததற்கான அடையாளமே இல்லாமல் நிலம் துப்புரவாய் குளிர்ந்திருந்தது. அம்முவின் உடல் மட்டும் ஓயாமல் பொங்கி வியர்த்துக் கொட்டியது. பட்டுத்துணியை எங்கே தேடுவது எனக் குழம்பியிருந்தாள்.

தன் காலடிகள் பூமியில் பதியவில்லைபோல தோன்றியது அவளுக்கு. கவலை, பதற்றம். எவரிடமும் வார்த்தைகளால் சொல்லிப் புரியவைக்க முடியாத அவமானம். அதைவிட அதிகமாய் பயம். நாளை முட்டைத்தலை பெண்ணுக்குப் பட்டுப்பாவாடை அணிவித்து வந்தால் ஐயா சாரின் கோபம் கொஞ்சமேனும் குறைய வாய்ப்புள்ளது. அவரிடம் இதற்குமேல் தன்னால் அடிபட முடியாது எனத் தோன்றியது. காற்றில் மிதந்துவந்த இலையொன்று அவள் முகத்தில் உரசி விழுந்தது. ஊடே, சோகியின் குரல்போல கேட்டது. நெருங்கி வர வர அழைப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். அம்மு எதுவும் பேசாமல் நடந்துகொண்டே இருந்தாள்.

“அம்மு, உனக்கு விசயம் தெரியுமா? உன்னோட பெங்ஙாவாஸ் பதவிய எடுக்கப் போவதா டீச்சர்ஸ் ரூம்புல தமயந்தி டீச்சரும் ஐயா சாரும் பெரிய வாத்தியார்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க. நீ என்ன செஞ்ச…?”

அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. எந்தப் பதிலைச் சொல்லிச் சமாளிப்பது என்றும் தெரியவில்லை. பின்னர் சொல்வதாகக் கூறிவிட்டு நகர்ந்தாள். சோகி, முனியாண்டி சாரின் மகன். எப்போதும் பள்ளி முடிந்து அவன் அப்பாவுக்காக ஆசிரியர் அறை முன்புதான் காத்திருப்பான். எனவே, அவன் சொன்னதைத் துளியும் சந்தேகிக்க வேண்டியதில்லை. அதுவரை அம்முவின் கற்பனைகளில் வந்துசென்ற தர்க்கங்களை உடைத்துச் சிக்கல் பெரிதாகிக் கொண்டிருந்தது. நின்று நிதானித்து யோசிக்க அவகாசமே இல்லாமல் எல்லாமும் ஒரு கணத்தில் பரபரப்பாய் சுழலத் தொடங்கியதில் பதற்றம் அவளுள் புகுந்து நடுங்க வைத்தது. கண்களை இறுக மூடிக்கொண்டு அப்படியே சாலையில் படுத்து உறங்கிவிட வேண்டும்போல் தோன்றியது. பெங்காவாஸ் பதவி போய்விடுமா?  ஐயா சாரின் கோபம்தான் காரணம். அவர் கோபத்தைக் குறைக்க ஒரு பட்டுத்துணி போதுமென தோன்றியது.  எப்படியாவது அவர் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்து முடித்து விட வேண்டும்.

காலையிலிருந்து நடந்த ஒவ்வொரு சம்பவமும் இன்னொன்றாய் உருமாறி சில இரவுகள் தனக்கு பயங்கர கனவுகளாக வந்து திணற வைக்கும் என்ற நினைப்பு வந்தபோது தலை கூடுதலாகக் கனத்தது.

“ஏய் அம்மூ!”

அடித்தொண்டையிலிருந்து அதிர்ந்து வெளிவந்த குரல் அவளது நெஞ்சுக்கூட்டை உலுக்கியது. வகுப்பிலிருந்த பதினாறு மாணவர்களுடன் சேர்ந்து சன்னல் கம்பியில் உட்கார்ந்திருந்த சிட்டுக்குருவியும்கூட ஒரு கணம் மிரண்டிருக்க வேண்டும். அதுதான் ஐயா சார் குரல். நடுத்தொண்டையில் எச்சில் உருண்டு பந்துபோல் அடைத்துக் கொண்டது. கூன் விழுந்ததுபோல நிமிரவே முடியவில்லை அவளால். கொட்டு விழாமலே தலை கனத்தது. ‘ஐயா’ என்றாள். சொற்களில் ஒலியில்லாமல் உதட்டிலேயே வறண்டு முடிந்தது.

“டீச்சர்ஸ் ரூம்புக்கு வா…!”

ஐயா அலுவலகத்தினுள் நுழைந்து அவர் இருக்கையில் அமருவதற்குள் அவள் அங்கு இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அதற்கும் தனியாய் கொட்டு விழும்.

நாற்காலியைப் பின்னால் நகர்த்தி எழ முயன்றாள். நெகிழி நாற்காலியின் பின்னங்கால்களைச் சோகி அழுத்திக் கொண்டிருந்ததால் நாற்காலி திமிறி எழுந்து தொப்பென விழுந்தது. எவரும் கவனிப்பதற்குள் சோகி கால்களை மேசைக்கடியில் இழுத்துக் கொண்டான். குனிந்து நாற்காலியை எடுத்து வைப்பது பல மணி நேரங்களை விழுங்கிவிடும் செயலாகத் தோன்றியது. குனிய முயன்றாள். உள்ளிழுத்த சுவாசம் வயிற்றில் திரண்டு உப்பிக்கொண்டதில் குனிவது சிரமமானது. உடலின் மொத்த அசைவும் வழக்கத்திற்கு மாறாய் மட்டுப்பட்டிருந்தது. திடுமென வகுப்பறையைச் சூழ்ந்துகொண்ட அடர்ந்த நிசப்தம் உடலின் நடுக்கத்தை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. வகுப்பிலிருந்து வெளியேறி அலுவலகத்திற்குச் செல்வது நெடிய பயணம் போலிருந்தது.

ஒருமுறை கோபால் கொட்டு வாங்கிய அடுத்த நொடி நின்ற இடத்திலேயே கழிந்துவிட்டான். அதற்குப் பின் கழிஞ்சான் கோபாலு என்ற புனைபெயரிலேயே அனைவராலும் அழைக்கப்பட்டான். தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நினைத்தபோது அம்முவுக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு அடிவயிறு வலிகொடுக்கத் தொடங்கியது.

கை விரல்களை இறுக மடித்து நடுவிரல், மோதிர விரல் முட்டிகளை நெட்டி ஐயா சார் ஓங்கி நங்கென்று உச்சந்தலையில் வைக்கும் கொட்டுக் கோலாமூடா வட்டாரத்தில் ஏகப் பிரபலம். ஐயா சார் கையில் குட்டு வாங்கியதால்தான் நல்ல நிலைக்கு வந்திருப்பதாக எவனோ சொல்லப்போக அதன்பிறகு ஐயா கொட்டு வைப்பதைச் சமூக சேவையாகவே செய்யத் தொடங்கியிருந்தார்.

பள்ளிக்கு மட்டம் போடுவது தொடங்கிப் பாட நேரத்தில் கழிவறைக்குச் செல்வதுவரை மாணவர்களின் அனைத்துச் சித்து விளையாட்டுகளும் ஐயா சார் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஒரே வாரத்தில் கடகடவென குறைந்தது. கொட்டு வாங்கிய மாணவர்கள் வலியின் வேதனைகளை விவரிக்கும்போது கேட்பவர்களும் உச்சந்தலையைத் தேய்த்துக் கொள்வதுண்டு. இதற்கு மத்தியில் ஐயா சாரிடம் கொட்டு வாங்காமல் இருப்பவர்கள் என  பெருமைப்பட்டுக் கொண்டு ஒரு கூட்டம் பள்ளியில் அலைந்தது. அதில் அம்முவும் இருந்தாள்.

விழிகளின்மீது கோர்த்திருந்த நீர்த்துளிகள் பெருக்கெடுத்து வழித்தடத்தை அவளது பார்வையிலிருந்து மறைத்தன. கழுத்துப் பட்டை நுனியில் கண்களை அழுத்தி ஒத்திக் கொண்டாள். அலுவலகத்தினுள் நுழைந்தபோது ஐயாவுடன் மேலும் சில ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். நுழைந்ததுதான் தாமதம், சட்டை காலரைப் பிடித்திழுத்து அருகில் நிறுத்தினார் ஐயா.

“போன வாரம் பாத்ரூம்ல என்ன நடந்துச்சி? நீயென்ன ரவுடியா?”

கேள்விகளை முன்னமே தயார் செய்து வைத்திருந்தார் போல. அம்முவிடம்தான் பதில்கள் பலவகையாய் சிதறிக்கிடந்தன.

கேள்விகளை மனதுக்குள் சிலமுறை கேட்டுக் கொண்டு பதில்களை உற்பத்தி செய்ய முயன்றாள். அப்படியும் சரியான பதிலைச் சொற்பமான வார்த்தைகளில் அடக்க முடியாமல் திணறினாள். நீண்ட கதைபோல் இருந்தது அவளது பதில். சொன்னால் அதற்கும்கூட கொட்டு விழும். மீண்டும் விழிகளிலிருந்து பிதுங்கிய கண்ணீர் சரசரவென்று கொட்டியது. பயத்திலும் அவமானத்திலும் பெரிய பெரிய துளிகளாய் பூமியில் விழுந்து சிதறியது. மனதிலிருந்து அல்லாமல் தொண்டையிலிருந்து சொற்கள் தோன்றி உதிர்ந்தன.

“பாத்ரூம்ல காஞ்சனாதான் என்ன வம்புக்கு இழுத்துச்சி. அதுதான் என்னை முதல்ல அடிச்சிச்சி,” அழுதுக்கொண்டே பேசும்போது அவளது குரலை அவளுக்கேகூட பிடிக்கவில்லை.

“ஏய்! பொய் சொல்லாத. உங்கூட பாத்ரூம்ல இருந்த நாலு பேருகிட்டயும் விசாரிச்சிட்டேன்.”

“இல்லங்க ஐயா. அவங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து என்னய மாட்டி விடுறாங்க. காஞ்சனாதான் ஆரம்பிச்சிச்சி.”

இம்முறை பொய்களுக்கு மத்தியில் கொஞ்சம் உண்மைகளையும் கலந்து விட்டாள். அப்படியும் நம்பிக்கை வராததால் ஐயா சார் தனது முதலாவது பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்தார். ஐயாவின் முதல் கொட்டு அம்முவின் நடு மண்டையைப் பதம் பார்த்தது. மண்டையை அழுத்தித் தேய்த்துக் கொண்டாள். நீண்ட நேரம் தேய்த்தால் அடுத்தக் கொட்டுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் சட்டென மீண்டும் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டாள். அழுகை சத்தம் அலுவலகம் கடந்து எதிரில் இருக்கும் தனது வகுப்பறைக்குப் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

“என்ன… மண்ணு மாதிரி நிக்கிற. பதில் சொல்லு…”

ஐயா கிடுக்குப்பிடி விசாரணையைத் தொடங்கினார். இந்த முறை திடலிலேயே காஞ்சனா தன்னை தாக்க முயன்றதாக பதில் சொல்லிப் பார்த்தாள். ஆனால் தொடக்கத்திலேயே பொய் சொல்லியிருந்ததால் அவையெல்லாம் அவள்மேல் புழுப்போல நெளியத்தொடங்கியிருந்தன.

ஐயா நிதானமடைந்தாலும் அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள்தான் அம்முவை விடுவதாக இல்லை. ஒருவர் பின் ஒருவராக அலுவலகத்துள் நுழைந்துக்கொண்டிருந்த ஆசிரியர்களிடம் அம்மு கழிவறையில் காஞ்சனாவின் முகத்தில் குத்திய கதையைச் சொல்லிச் சொல்லி சூடேற்றிக் கொண்டிருந்தார்கள். ஐயா சார் பல கோணங்களில் துருவித் துருவி விசாரித்து இடையிடையே தண்டனைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கையில் கட்டொழுங்கு ஆசிரியர் தமயந்தி அலுவலகத்திற்குள் நுழைந்தார். அவர் பங்குக்குச் சம்பவங்களை வரிசைப்படுத்தி விளக்கத் தொடங்கினார். அவைகளில் முக்கியமானது, அம்மு காஞ்சனாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியது. இதற்குமுன் சொல்லப்பட்ட கதைகளில் அது மட்டும் விடுபட்டிருந்தது. அதைக் கேட்டபோதுதான் ஐயா சார் அம்முவின் கழுத்துப் பட்டையைப் பிடித்திழுத்து அறைந்தார். எத்தனை முறை அறைந்தார் என்பதை கணக்கெடுக்க முடியவில்லை. ஆனால் கொட்டியதைக் காட்டிலும் அறைந்தது இன்னும் வலித்தது. அவர் விரல்கள் காப்புக்காய்த்து இரும்பு துண்டுகள் போல இருந்தது. தலையைத் தேய்ப்பதைவிட கன்னத்தைத் தேய்க்கும்போது கூடுதல் அவமானத்தை உணர முடிந்தது. கட்டுப்பாடில்லாமல் கண்ணீர் துளிகள் வழிந்து அவளது சீருடையின் முன் கழுத்துப் பகுதிகளை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.

அடுத்து, சாட்சிக்காரர்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்து அம்மு மீதான குற்றத்திற்கான வாக்குமூலங்களை உருவிக்கொண்டிருந்தார். வந்துபோன அதே நால்வரும் மருந்துக்கும்கூட தன்மீது கரிசனம் காட்டாதது அம்முவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. விசாரணைகளை முடித்துக் கொண்ட ஐயா சார் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாமல் அம்முதான் குற்றவாளி என குற்றப்பத்திரிகையும் வாசித்தார். அதில், பள்ளியின் தலைமை மாணவி எப்படிக் கட்டொழுங்குமீறி நடந்துகொள்ள முடியும் என்பதாகக் குற்றச்சாட்டின் எல்லைகள் விசாலப்படுத்தப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் சிலரும் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள்.

அந்தச் சண்டை அம்முவின் விளையாட்டுக் காற்சட்டையிலிருந்துதான் தொடங்கியது. பள்ளி போட்டி விளையாட்டு நெருங்கிவிட்ட நாள்களில் தினமும் மாணவர்கள் விளையாட்டு உடையை அணிந்து வரவேண்டும் என கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. பள்ளியிலிருந்து கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருந்தது விளையாட்டு மைதானம். அது பள்ளிக்காக உருவாக்கப்பட்ட மைதானமல்ல. தோட்டத்து இளைஞர்கள் பந்து விளையாடவும், திருவிழா, காமன் விழாவென்றால் திரை கட்டி படம் ஓட்டவும் தோட்ட நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்த நிலம். அங்குதான் பள்ளியின் போட்டி விளையாட்டும் மாணவர்களுக்கான உடற்கல்வி வகுப்பும் நடைபெறும். காலை நேரத்தில் மைதானம் செல்லும் வழியில் மனித நடமாட்டமும் இருசக்கர வாகனங்களின் வரவும் போக்கும் அதிகமிருக்கும். பெரட்டுக்குப் போகும் அவசரத்தில் மோட்டாரிலும் சைக்கிளிலும் காண்டா வாளிகளைப் பின்கம்பிகளில் கட்டிக் கொண்டு மரம் வெட்டும் தொழிலாளர்கள் செம்மண் சாலையையே அளந்துகொண்டு போவார்கள்.

அதே சமயத்தில்தான் காலை ஒன்றுகூடல் முடிந்து எல்லா மாணவர்களும் வரிசையாக மைதானம் செல்ல வேண்டியிருந்தது. பாதுகாப்புக்காக அன்று அம்முவும் காஞ்சனாவும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்பைக் கண்காணிக்கப் பணிக்கப்பட்டிருந்தார்கள். காஞ்சனாதான் முதலில் பேசத் தொடங்கினாள். தனக்கு அப்பா புதிய விளையாட்டுக்குக் காற்சட்டை வாங்கித் தந்ததாகக் கூறினாள். முந்தைய ஆண்டு காற்சட்டைகளுடன் இவ்வாண்டு வாங்கித் தரப்பட்ட இரு காற்சட்டைகளையும் சேர்த்துத் தன்னிடம் ஐந்து காற்சட்டைகள் இருப்பதாகச் சொல்லி பெருமைபட்டுக் கொண்டாள். இன்று அணிந்திருப்பது நேற்று வாங்கிய புதிய காற்சட்டை என்றும் கூறினாள். புதிய காற்சட்டைக்கான எல்லா அடையாளங்களையும் அதில் பார்க்க முடிந்தது. உன்னிடம் எத்தனை காற்சட்டை இருக்கிறது என்று கேட்டுவிடுவாளோ எனும் பதற்றத்தில் கண்காணிப்பு மாணவர் அவதாரத்துள் நுழைந்து அவளருகில் தன் இருப்பை அம்மு காலி செய்துகொண்டாள்.

அத்துடன் அந்த உரையாடல் முடிவடைந்திருக்கலாம். பள்ளிக்குத் திரும்பிimages, கழிவறையில் உடை மாற்றும்போதும் காஞ்சனா அதே பேச்சை எடுத்தாள். இம்முறை நிறைய மாணவர்கள் கழிவறையில் உடை மாற்றிக் கொன்டிருந்தார்கள். அப்போது கண்ணாடி முன்நின்று காலர் பக்கம் நைந்துபோய் நூல்வெளியேறி பல்லிளித்துக் கொண்டிருந்த பகுதியை மறைக்கும் முயற்சியில் முடியைச் சரிசெய்து கொண்டிருந்தாள் அம்மு. முடியைச் சரிசெய்து கொண்டிருந்தாலும் கவனம் முழுக்கவே மற்றவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறியும் பரபரப்பில் இருந்தது. சிலர் மூன்று என்றும் மற்றவர்கள் குறைந்தபட்சம் இரண்டு காற்சட்டை இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருக்க “ஒன்னு மாத்தி ஒன்னு போடணும்னு சொல்லி எங்கப்பா புதுசா ரெண்டு ட்ரேக் சூட் வாங்கித் தந்தாரு. பழசையெல்லாம் அம்மா மூட்டைக் கட்டி வச்சிட்டாங்க. யாருக்காச்சம் துணிமணியில்லாதவங்களுக்கு குடுத்துருவாங்க,” காஞ்சனாவின் உயிர் சினேகிதி பேசினாள்.

கதவைத் திறந்து வெளியேறி விடுவதற்குள் காஞ்சனா மிகச் சரியாய் அம்முவை குறிவைத்தாள்.

“அம்மு, உங்கிட்ட எத்தனை சுலுவாரு இருக்கு?”

“ரெண்டு,” கூடுதலாக ஒரு சொல்கூட பேசிவிடக்கூடாது என்று நினைத்தபோதுதான் காஞ்சனா தன் ஏளனப் பேச்சை ஆரம்பித்தாள்.

“பொய் சொல்லாத. நீ நேத்து போட்டுட்டு வந்த சுலுவார்தான் இன்னிக்கும் போட்டுருந்ததானே… .”

“ஒனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத,” அவள் கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தன் தரப்பையும் தற்காக்கும் ஓர் பதில் யோசிக்காமலேயே வந்து விழுந்தது.

“உன் சுலுவாரு முட்டிக்கிட்ட மூனு கலரு கோடு இருக்கும்தானே. நீலம், பச்சை, மஞ்சள் கலரு. இந்த வாரம் முழுக்க நீ அதே சுலுவார போட்டிருந்தத நான் பாத்தேன்.”

காஞ்சனாவின் கண்களைக் குத்தி பொட்டையாக்க வேண்டும்போல் தோன்றியது.

“அதுகூட தீபாவோட பழைய சுலுவாராமே…,” காஞ்சானா சொல்லியப்பின் எல்லாரும் காத்திருந்ததுபோல சிரிக்கவும் அவளால் பொறுக்க முடியவில்லை.

காஞ்சனாவின் கண்ணைக் குறிவைத்துப் பாய்ந்தாள். அவள் உயரத்துக்குக் காஞ்சனாவின் மூக்குவரைகூட போக முடியவில்லை. கழுத்துப் பட்டையைப் பிடித்து இழுத்தபோது குனிந்தவளின் முடி மட்டும்தான் அப்போது கைக்கு அகப்பட்டது. அதற்குப்பின் அம்மு சுயபுத்தியில் இருக்கவில்லை.

வெளியில் காயம் தெரிந்ததால் மறுப்புக்கு இடமின்றி அம்மு குற்றவாளியானாள். கட்டொழுங்கு ஆசிரியர் தொப்புளைப் பிடித்துத் திருகியதுடன் இரண்டு பிரம்படியையும் தண்டனையாகக் கொடுத்துவிட்டார். அதே சம்பவத்துக்காக மீண்டும் இப்போது தண்டிக்கப்படுவது அம்முவுக்கு அநியாயமாகத் தோன்றியது. அதிலும், இரண்டு முறையும் தன் பக்க நியாயத்தை எவருமே நிதானமாகக் கேட்கவில்லை. விழிகளிலிருந்து சுரந்துகொண்டிருந்த கண்ணீர் மேலும் சூடேறியது. தன்னைப் பெங்காவாஸாக தேர்வு செய்தபோது  ஐயா சார், தமயந்தி டீச்சர் எல்லாரும் மதிப்பாகச் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது. இப்போது அவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற நினைப்பு அவளுக்கு அழுகையைக் கூட்டியது.  ஓய்வு நேரம் முடிந்து அடுத்த பாடம் தொடங்கவிருந்ததால் அத்துடன் வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். அப்பா அம்மாவைப் பள்ளிக்கு அழைத்துவரச் சொல்லவில்லை என்ற அளவில் பயம் அவளை அண்டாமல் இருந்தது.

அடுத்து வந்த இரண்டு பாடவேளைகளும் மொழிப்பாடத்திற்கான பயிற்றுச் சோதனைகள் என்பதால் எவரையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் அவளுக்கிருக்கவில்லை. வலது கையை மேசையில் நீட்டி, ஒருப்பக்கமாகத் தலையை அதில் சாய்த்தபடி முகத்தைப் பாதி மறைத்துத் தேர்வெழுதிக் கொண்டிருந்தாள். விடைத்தாளின் வலப்பக்கக் கடைசி எழுத்துகள் சில மட்டும் கண்ணீரில் ஊறிக் கருமை மங்கிக் கொண்டிருந்தன. கடைசி பாட வேளையில் ஆசிரியர்கள் எவரும் வகுப்புக்குள் நுழையவில்லை. அம்முவுக்கு எதிராய் வாக்குமூலம் கொடுத்த மாணவர்கள் ஒன்றுகூடி குசுகுசுத்து, ஒரேநேரத்தில் வெடித்துச் சிரித்தார்கள்; அடிக்கடி வாயைப் பொத்தியும் சிரித்தார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் வீட்டுப்பாடம் செய்யும் பரபரப்பிலும், சிலர் மட்டும் ஜில்லி விளையாடுவதிலும் மும்முரமாக இருந்தார்கள். அம்மு மேசைமீது கைகளால் முட்டுக்கொடுத்துத் தலை கவிழ்த்துப் படுத்துக் கொண்டாள்.

ஐயா சாரின் குரல் திரும்பக் கேட்டதும் அவளுக்கு மூத்திரம் முட்டியது. அடிவயிற்றில் கையை வைத்துக்கொண்டு திடுக்கிட்டு எழுந்தாள். உச்சந்தலையில் சுர்ரென வலித்தது. அவர் அவளைப் பார்க்கவில்லை; நேராகக் கரும்பலகையின் அருகில் இருந்த ஆசிரியர் மேசை பக்கம்போய் நின்றார். அவருடைய கையில் குட்டியாய் முட்டைத் தலையுடன் மனித உருவம் ஒன்று இருந்தது. நாளை ஓவியப் பாடத்திற்கு முட்டை ஓட்டில் மனித உருவம் செய்வது குறித்த கட்டளைகளை ஐயா சார் விளக்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

“சார், அதுக்குச் சட்டைப் போட்டு விடலாமா?” என்றான் தர்மா.

குரல் வந்த திசை நோக்கி திரும்பியவர் மேல்வரிசை பற்கள் தெரிய சிரித்தார். சட்டென தொண்டையில் அடைத்திருந்த எச்சில் உள் இறங்க, அவளது மனம் கோபாலை நினைவுக்குக் கொண்டு வந்தது. ஐயா சார் எல்லா நேரமும் கண்டிப்புடன் நடந்துகொள்வதில்லை. அவர் கொடுக்கும் வேலைகளை நன்றாகச் செய்யும் மாணவர்களைப் பாராட்டியதுண்டு. கொட்டு வாங்கி கழிந்துவிட்ட கோபால் மற்றொரு சமயம் தென்னம் ஓலையில் பாய்பின்னி கொண்டுவந்தபோது முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டியது அவள் நினைவுக்குத் தட்டுப்பட்டது.

“ஆமா ஆனா எல்லாரும் வேற வேற சட்ட போடனும்,” என்றவர் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை சொன்னார். பாஜு கூருங், ஜியோங் சாம், கிமோனோ.. என பல இன மக்களின் உடைகளை வரிசையாகச் சொன்னார். அவளுக்குப் பட்டுப்பாவாடை அணிந்த முட்டைப்பெண்.

பாதங்களின் அடியில் உடைபட்டு நொறுங்கும் காய்ந்த இலைகள் அவளது மனதை மிகத் துள்ளியமாய் பிரதியெடுத்துக் கொண்டிருந்தன. மாணவர் தலைவர் பதவி பரிக்கப்பட்டால் கேலியையும் கிண்டலையும் கீழான பார்வையையும் தாங்கி அலைவது எளிதில்லை. அந்தப் பதவி கிடைத்த கணங்களை நூறு முறையாவது நினைத்து நினைத்துப் பரவசப்பட்டிருந்தாள். முதலாம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு தவணைச் சோதனையிலும் சிறந்தபுள்ளிகள் பெறுவது, போட்டி, புறப்பாட நடவடிக்கைகளில் பரிசுகள் பெறுவது என அனைத்திலும் சிறந்து விளங்கியதால் தலைமை ஆசிரியர் கட்டளைபடி அவள் தலைமை மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். அம்மாவிடம் அழுதும் கெஞ்சியும் அவளால் அப்போதைக்கு நீல நிற சட்டை மட்டுமே வாங்க முடிந்தது. எப்படியும் அடுத்தமாதம் கறுப்புநிற காலணியும் காலுறையும் வாங்கித் தருவதாக அம்மா வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனாலும் பொறுப்புக் கிடைத்த நாளில் இருந்து அவள் தன் கடமையை நிறைவாகவே செய்து வந்தாள். மாணவர்களை எப்பாடு பட்டேனும் ஒழுங்குப்படுத்தி வரிசையில் நடக்க வைத்தாள். சபைக்கூடலில் தேசிய கீதத்தை உற்சாகமாக முன் நின்று பாடினாள்.

இதுவரை சேகரித்து வைத்திருந்த நல்லப் பெயர், பாராட்டு, பரிசுகள், வெற்றிக் கோப்பைகள், சான்றிதழ்கள் ஒவ்வொன்றும் அழுகி துர்வாடை வீசுவதுபோல் தோன்றியதில் அம்முவுக்கு நெஞ்சடைத்து வலித்தது. விசயம் தெரிந்தால் குளியல் அறையில் மடக்கிக் பிடித்து கித்தா குழாயில் தோலை உறித்துவிடுவார் அம்மா. நினைக்கும்போதே உடலில் சூடு கிளம்பி வெந்தது. வீட்டுக்குத் திரும்பி அம்மாவை எதிர்கொள்வதுபற்றி சிந்திக்கையில் திகில் கிளம்பியது.

எப்போதும் முன் வாசல் வழியாக செல்பவள் முன்னெச்சரிக்கையாகவே பின் வாசல் பக்கம் வந்து ஏதாவது நடந்தால் ஓடிவிடுவதற்கு வசதியாகக் காலணியையும் காலுறையையும் சந்தடி சத்தமில்லாமல் கழட்டிக் கையிலேயே வைத்துக் கொண்டாள். நல்ல வேளையாகப் பக்கத்து வீடு, பின் வீட்டு கதவுகள் அடைத்திருந்தன. இல்லாவிட்டால் மறைந்து வேவு பார்ப்பது அவ்வளவாகச் சாத்தியப்படாது. உடல் முழுவதையும் சுவர் பக்கம் மறைத்துக் கொண்டு தலையை மட்டும் சற்று சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்தாள். அம்மா தங்கச்சி பாப்பாவுக்கு கஞ்சி ஊட்டிக் கொண்டிருந்தார்; அப்பா இல்லை. அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் கோலாலம்பூர் போயிருக்கிறார். வீடு திரும்ப மூன்று நாட்களாவது ஆகும். காலணியை ஓரமாகச் சாய்த்து வைத்துவிட்டு உள்ளே நுழைந்து, விறுவிறுவென கடைசி அறைக்குள் நுழைந்தாள்.

“ஏய்… அம்மூ, எத்தனை முறை சொல்லிருக்கேன். ஸ்கூல் முடிஞ்சி வந்தா நேரா போய் குளிக்கனும்னு. போ… போய் குளி.”

குளியல் அறைக்குப் போகாததற்காக அம்மா திட்டியது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. பள்ளியில் நடந்த விசயம் அதுவரை வீடுவந்து சேரவில்லை. குளித்துவிட்டு வெளியே வந்தபோது சோறு தயாராய் மேசையில் இருந்தது. அம்மா பாப்பாவைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அம்மு வாளியில் கழட்டிப் போட்ட பள்ளிச் சீருடையைப் பாப்பாவின் உடலிலிருந்து வெளியேறிய சவர்க்கார நுரையில் கசக்கி, கும்மிவிட்டு பாப்பாவின் காலருகில் வைத்தார். அடுத்தடுத்துப் பாப்பாமீது ஊற்றப்பட்ட நீரிலேயே துணியையும் அலசிக் கொடிக் கம்பியில் சற்றே மறைவான பகுதியில் காய வைத்தார். எப்போதும் அடிக்கும் இரண்டறை மணி வெயில்  இல்லை. வானத்தில் மேகங்கள் முட்டி முட்டி முனகிக் கொண்டிருந்தன. காற்றும் வீசாததால் சட்டை காய்ந்துவிடும் என்ற நம்பிக்கை முழுவதும் அற்றிருந்தது அம்மாவுக்கு.

“என்னடி… ஒன்னும் பேச மாட்டீங்கிற. எப்பவும் வீட்டுக்கு வந்தா வாயே ஓயாது. மூட சொன்னாலும் அளந்துகிட்டே இருப்ப. இன்னைக்கு என்னாச்சி? ஒனக்கு ஒரு பரிசு இருக்கு,”என்றார்.

அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்கவே இடதுபக்க இடுப்பில் பாப்பாவை உட்கார்த்திக்கொண்டு உடலைக் கோணியபடி வந்து அம்முவின் இரு கன்னம், நெற்றி, கழுத்தில் புறங்கையால் தொட்டுப் பார்த்தார்.

“ஒடம்பு ஏன் இவ்வளோ சூடா இருக்கு? சாப்புட்டு ரெண்டு கொவல நெறய தண்ணி குடிச்சிட்டு படு. இனிமே அழகா கோயிலுக்கு போவலாம் நீ,” என்றபடி அம்மா அம்முவின் தலையை மேல்வாகாகக் கோதிவிட்டாள்.

அவள் அம்மா சொல்லும் எதையும் காதில் வாங்கவில்லை. உச்சந்தலையில் மின்னல் தாக்கியது போல் சுர்ர்ரென்று வலி. தாங்க முடியாத வலியுடன் வேதனையும் சேர்ந்து தொற்றிக்கொண்டது. பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவங்கள் முட்டித்தள்ளி அம்முவின் கண்முன் நிழலாடத் தொடங்கின. கண்ணீர்துளிகள் கோர்த்து, உப்பி விழிகளில் தேங்கி கன்னத்தில் உருண்டுவிட தயாராயின. தரையிலிருந்த சோற்றுத் தட்டை மடியில் ஏந்தி அதில் நீர்த்துளிகளைச் சொட்டவிட்டாள்.

“எனக்கு பட்டுத்துணி வேணும்,” அவளை அம்மா வினோதமாகப் பார்த்தார்.

“என்ன?”

“பட்டுத்துணி.”

“இப்ப கேட்டா நா எங்க போறது…”

“முத்து ஆண்டி கடையில துண்டுபோட்டு விக்கும்.”

“யான வெல போடுவாங்க.”

அம்முவுக்கு எரிச்சலாக இருந்தது. அம்மா எப்போதும் இப்படித்தான். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பித்தாள். கலைப்பாடத்திற்குப் பட்டுப்பாவாடையுடன் முட்டை பெண்ணை அழகாக செய்து காட்டினால் ஐயா சார் கோபம் குறைய வாய்ப்புள்ளது என்று மட்டும் அவளது சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. அவர் கையில் வைத்திருந்த முட்டை பொம்மை பாஜூ கூரோங் அணிந்திருந்ததை நினைத்துக் கொண்டாள். ஐயா சார் காகிதத்தாலும் ரஃபியா கயிறாலும் அதன் உடலை உருவாக்கியிருந்தது ஆச்சரியமாக இருந்தது. விறைப்பாக இருந்தாலும் அது அசைவது போலவே அவளுக்கு அப்போது தோன்றியது.  எல்லோரும் காகிதங்களிலும் ரஃபியா கயிறுகளிலும் பொம்மைகளை உருவாக்க வேண்டுமென கட்டளையிட்டு சில நுணுக்கங்களையும் சொல்லியிருந்தார்.

தொட்டிலின் அருகில் தலையணையைப் போட்டு அம்மா படுத்துவிட்டது அம்முவின் பார்வைக்குத் தட்டுப்பட்டது. வலது கையின் ஆள்காட்டி விரல் தொட்டில் கைலியின் வளையில் மாட்டிக் கொண்டிருக்க, இடது கை நெற்றியில் குறுக்காக விழுந்து அம்மாவின் கண்களை மறைத்திருந்தது. அம்மா ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்று விட்டதைத் தோராயமாகக் கணித்துக் கொண்டாள்.

வீட்டில் முட்டைக்கே வழியில்லை எனும்போது முட்டை ஓட்டுக்கு எங்கு செல்வது. வேறுவழி யோசித்தாள். ரொகைதா அக்கா வீட்டில் வளர்க்கும் கதலைச் செடிகளின் கூர்முனைகளில் முட்டை ஓடுகளைச் சொருகி வைப்பது சட்டென நினைவுக்கு வர பின்வாசல் வழியாக ஓடினாள். மூன்று வீடுகள் தள்ளி ரொகைதா அக்கா வீட்டில்போய் நின்றாள். மறுப்பே இல்லாமல் ரொகைதா அக்கா சில முட்டை ஓடுகளைச் செடிகளிலிருந்து உருவித் தந்தார். திரும்பி, வீட்டுக்குள் நுழையும்முன் அம்மா நட்டு வைத்திருந்த மரவள்ளிக் கிளங்கு செடியின் இலைகள் சிலவற்றைத் தண்டுடன் உடைத்துக் கொண்டாள். இலைகளைக் கிள்ளி வீசிவிட்டு தண்டுகளைச் சிறுசிறு துண்டுகளாக உடைத்து நார்பிரித்து சங்கிலி, தோடு, கைவளையல்கள் எனத் தனித்தனியாகச் செய்து வைத்தாள். பழைய நோட்டுப்புத்தகங்களிலிருந்த தாள்களைக் கிழித்து நீள்சுருள்களாக உருட்டி உறிஞ்சுக் குழாய்கள்போல் செய்து கொண்டாள். ஒரு கைப்பிடி அளவு  சேர்ந்தபின் அவைகளைச் சேர்த்துக் கட்டி, உச்சும் முனையும் சம அளவில் வெட்டிக் கொண்டாள். அதைவிட நீலம் கம்மியாக, தடிமன் குறைந்த இன்னொன்றையும் செய்து வைத்தாள். பின் இரண்டையும் சிலுவை வடிவில் வைத்துக் கட்டினாள். முழுவதும் பழுப்பு வண்ணம் பூசி மேல்வாகாக முட்டைத் தலையையும் சொருகி ஒட்ட வைத்தாள். தலை அங்குமிங்கும் அசையாமலிருக்க காகிதங்களைச் சுருட்டித் முட்டையோட்டினுள் திணித்து முட்டுக் கொடுத்தாள். ரஃபியா கயிறுகளை வெட்டி முட்டையின் தலையில் ஒட்டி, ஊசியில் கீறல்கள் செய்தாள். முடி பதியும் பக்கங்களிலும் முடியாக உருகொண்ட ரஃபியா கயிறுகளிலும் கருப்பு நிறத்தைப் பூசி, காய வைத்தாள். அம்மா எழுந்துகொள்வதற்குள் அனைத்தும் தயாரானது. எஞ்சியது பட்டுத்துணி ஒன்றுதான்.

அரவமற்றுப்போன கணம் மெதுவாக முதல் அறையில் நுழைந்து அம்மா புதிய துணிகளை வைத்திருக்கும் அலமாரி கதவைத் திறந்தாள். பாசைகுண்டுகளின் மணம் தவிர்க்கவியலாதபடி மூக்கினுள் நுழைந்தது. மடித்து வைக்கப்பட்டிருந்த சன்னல் துணி, கட்டில் விரிப்பு, போர்வை, தீபாவளிக்கு மட்டும் பயன்படுத்தும் கால் மிதிகளுக்கு மத்தியில் அப்பு மாமா சில வருடங்களுக்கு முன் அவளுக்கு வாங்கித் தந்த தீபாவளி சட்டைகளும் இருந்தன. அலமாரி அடுக்குகளின் கீழ்வரிசையில் கடந்த முறை பின்வீட்டு சீன ஆண்டி கொடுத்த சட்டைகள் தெரிந்தன. கோபம் அழுகையாய் மாறி அம்மாவைப் பலவாறாய் மனதில் திட்டத் தொடங்கினாள்.  இப்போது அந்தச் சட்டைகள் அவளுக்குச் சேராது. ஆனால் அம்மா அதைப் பாதுக்காத்து வைத்திருப்பது தங்கச்சி பாப்பாவிற்காக என்பது அம்முவுக்குப் புரிந்தது. வளர்ந்தபின் தங்கச்சி பாப்பா புதுத்துணி என நம்பிப் போடும் அளவுக்கு அம்மா பதுசாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அதுவரையிலும் பட்டுத்துணி ஒன்றும் கண்ணுக்கு அகப்படவில்லை. துணிக்கடையில் பார்வைக்கு வைத்திருக்கும் துணிகள்போல் வரிசை பிசகாமல் இருந்ததால் கலைக்காமல் நோட்டமிட அம்முவுக்குச் சிரமமானது. சட்டென கைகளைப் பற்ற அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“பட்டுத்துணி இல்லாம போனா வாத்தியாரு கொட்டுவாரும்மா,” சொல்லி முடிக்கும்போதே மொத்த அழுகையும் பொத்துக்கொண்டு வந்தது. அம்மா அவளை அணைத்துக்கொண்டார். கையில் வைத்திருந்த உடையற்ற பொம்மையை வாங்கிப் பார்த்தார். அம்மாவின் முகத்தில் தெரிந்த சிரிப்பு அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

“கைய கழுவு… போ,” என்றார் சாந்தமாக.

கையில் ஒட்டியிருந்த சாயத்தைக் கழுவிவிட்டு வருவதற்குள் படுத்துணி மேசையில் தயாராக இருந்தது. கூடவே சில பொத்தான்களும், ஜரிகைகளும் இருந்தன. அம்மா கைப்பின்னல்போட ஆரம்பித்தார். அம்மா அவளிடம் ஒன்றும் பேசவில்லை. ஆனால் கண்களில் மிகுந்த அக்கறை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக்கொண்டிருந்த பாவாடையை அவள் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் மடிப்புகள், வளைவுகள், விரிவுகள் என ஆச்சரியம் ஓயாமல் உருவாகிக்கொண்டிருந்தது. இருட்டுவதற்குள் பட்டுப்பாவாடை அணிந்த முட்டைப்பெண் தயாரானாள்.

“கோயிலுக்கு பட்டுப்பாவட கேட்டன்னு எடுத்துவச்சேன். சரி என்னா பண்ணுறது,” என்ற அம்மாவை அம்மு கட்டிக்கொண்டாள்.

காகிதத்தில் சுற்றி, அட்டைப் பெட்டியில் வைத்திருந்த முட்டை பொம்மையை மறுபடியும் பிரித்துப்பார்த்தாள் அம்மு. அன்றிரவில் அம்முவுக்கு கனவுகள் எதுவும் வராவிட்டாலும் இரண்டுமுறை நெஞ்சுலுக்கி அதிர்ந்து எழுந்தாள். எழும்போதெல்லாம் அட்டைப்பெட்டியைப் பார்த்தாள்.

ஐயா சார் வர இன்னும் சில நிமிடங்கள்தான் இருந்தது. எல்லா பிரச்சனைகளும் தீர்ந்தால் வீட்டுக்குப் போகும்போது சாலையோரம் இருக்கும் நாகம்மன் கோயில் புற்றில் மிட்டாய் ஒன்று வைப்பதாக வேண்டிக்கொண்டிருந்தாள். கைவசம் அவளிடம் ஒரு பால் மிட்டாய் இருந்தது. பாம்பு பால் குடிக்கும். அதனால் பால் மிட்டாயையும் விரும்பி சாப்பிடும் என்பது அவள் நம்பிக்கை.

காஞ்சனாவின் கூட்டாளிகள் அவளை அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொள்வதும் பேசுவதுமாக இருந்தார்கள். எதற்கோ எழுந்து வந்தவள் போல சட்டென தீபா அம்முவின் மேசையருகில் வந்தாள். அம்மு முட்டைப்பெண்ணை மேசைக்குக்கீழ் பதுக்க,

“அம்மு… உம் பொம்மய காட்டேன்,” என்றாள்.

“ஐயாகிட்ட கொடுக்குறப்ப பார்த்துக்கோ,” என்று சொல்லி காட்ட மறுத்தாள். அவளுக்கு யாரிடமும் தன் முட்டை பொம்மையைக் காட்ட விருப்பமில்லை. காலையிலிருந்து ஒவ்வொருவரும் தத்தம் முட்டை பொம்மையைக் காட்டி சந்தோசப்பட்டுக்கொண்டாலும் அவள் யாரிடமும் தன்னுடையதைக் காட்டவில்லை. நேற்று நடந்த ஒவ்வொன்றும் அவளுக்கு அதன் தீவிரம் மாறாமல் நினைவில் இருந்தது.

அவள் மேசை அறையில் கையை விட்டு பொம்மையைப் பிடுங்கியவள் “பொம்மைக்கிக்கூட என் பாவாடை சட்டையதான் போடுவியா,” என்றாள். அடுத்த நொடி பேசி வைத்ததுபோல் காஞ்சனா கெக்களித்துச் சிரித்தாள்.

அம்மாவின் மீது எரிச்சலும் கோபமும் கொப்பளித்தது. முகமெல்லாம் சிவந்து பின் கருத்தது. ஐயா சார் வகுப்பில் நுழையும்போது அம்மு ஆங்காரமாக முட்டை பெண்ணின் பட்டுப்பாவாடையைப் பிரித்து வீசிக்கொண்டிருந்தாள்.

 

3 comments for “பட்டுத்துணி

  1. Manoharan
    September 1, 2020 at 7:19 pm

    அக்கா, உங்கள் சிறுகதையைப் படித்து கண் கலங்கிவிட்டேன். அது என் சிறுவயதை சொல்வதுபொல இருந்தது. ஜிப் போட , தைக்க காசில்லாமல் ஊக்கு குத்தி சென்ற நாட்களை எண்ணி கொஞ்ச நேரம் யாரிடமும் பேசவில்லை. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் அக்கா.

  2. விஸ்வநாதன்
    September 2, 2020 at 10:39 pm

    குழந்தைகளின் மனநிலையை எழுதுவது சாதாரணமல்ல. விஜயலட்சுமி அதனை தக்க வைத்துள்ளது சிறப்பு. அண்மையில் நான் வாசித்த கதைகளில் சிறந்த ஒன்று.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...