மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

அட்டைஎனது இலக்கிய வாசிப்பை 2006க்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். என் பதினேழாவது வயதில் நான் பணியாற்றிய வீரா புத்தகக் கடை வழியாக சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் என ஒரு ஜனரஞ்சக வாசிப்புப் பின்புலம் உருவாகியது. பௌத்தத்தில் ஆர்வம் ஏற்பட்ட காலகட்டத்தில் வாசிப்பு ஓஷோவை நோக்கி நகர்ந்தது. ஓஷோ என்னை ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து மீட்டார். அவர் உருவாக்கும் வினாக்கள் ஆழ்மனதைச் சீண்டுபவை. முன் முடிவுகளைக் களைத்துப் போடுபவை. ஒருவகையில் விமர்சனபூர்வமான பார்வையை அவரது உரைகள் உருவாக்கிக்கொடுத்தன. புவியரசுவின் மொழிபெயர்ப்பில் வந்த அவரது நூல்கள் வழி எனது சொற்களஞ்சியம் பெருகியது போலவே புனைவின் மொழியும் இயல்பாக மாறியது. ஆனால் ஓஷோவை நான் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியதும் செயலற்றவனாகிப் போனேன். எதுவும் அர்த்தமற்றதாகத் தோன்றியது. என் இயல்பு அதுவல்ல. எனவே உடலில் சக்தி தேக்கம் கண்டது. கோலாலம்பூருக்கு மாற்றலாகி வந்தவுடன் காதல், அதைச் சார்ந்த சிக்கல்களெல்லாம் என்னைப் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கின. சண்முகசிவாவின் நட்பு என் வாசிப்பை மறுவடிவமைப்பு செய்தது.

புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜானகிராமன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன் என தமிழ் நவீன இலக்கிய ஆளுமைகளை அவசர அவசரமாக வாசிக்கத் தொடங்கினேன். அவர்களது புனைவுகளை ஒட்டி எழும் கேள்விகளை சண்முகசிவாவிடம் மூர்க்கமாக விவாதிப்பேன். அவர் நிதானமாகப் பதில் சொல்வார். அதன்பின்னர் மெல்ல மெல்ல கட்டுரைகள் பக்கம் வாசிப்புத் திரும்பியது. சுந்தர ராமசாமி, எம்.ஏ.நுஃமான், கோவை ஞானி எனத் தொடர்ந்தேன். இலக்கிய விமர்சனம் குறித்து அறிமுகமானது அங்குதான். பின்னர் உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்ற அச்சு இதழ்களிலும் திண்ணை, திசைகள் போன்ற இணைய இதழ்களிலும் விமர்சனக் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். நூல் அறிமுகம் – நூல் விமர்சனம் என்பவற்றுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் புரியத்தொடங்கியது.

ரெ.கார்த்திகேசுவின் ‘விமர்சன முகம்’ நூல் வெளியீட்டு விழாவில் மா.சண்முகசிவா ஆற்றிய உரை எனக்கு பல வகையிலும் திறப்பாக இருந்தது. அவர் கோட்பாட்டு விமர்சனத்திலிருந்து ரசனை விமர்சனம் எவ்வாறு மாறுபட்டுள்ளது என விளக்கமாகக் கூறினார். சண்முகசிவா ஆற்றியவற்றில் சிறந்த உரை அது. எனக்கு கோட்பாட்டு விமர்சனத்தின் மேல் பெரும் ஈர்ப்பு உண்டானது. அதில் அடங்கியுள்ள கலைச்சொற்களை உச்சரிப்பதே என்னை ஓர் அறிவுஜீவியாக உணர போதிய கிரக்கத்தைக் கொடுத்தது. தமிழவனின் அமைப்பியல் கோட்பாட்டு விமர்சனங்கள் மற்றும் ரமேஷ் – பிரேம், அ.மார்க்ஸின் பின்நவீனத்துவக் கோட்பாட்டு விமர்சனங்கள் ஆகியவை மட்டும் அப்போது வாசிக்கக் கிடைத்தன. மலேசியாவின் முனைவர் கிருஷ்ணன் மணியம் கோட்பாடுகளை முன்வைத்து இலக்கியங்களை விமர்சிப்பவராக இருந்தார். நான் பல கோட்பாட்டு விமர்சனக் கலைச்சொற்களை என்மேல் அள்ளி அள்ளிப் பூசிக்கொண்ட காலமது.

இன்று இதை வாசிப்பவர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் இரண்டாயிரமாம் ஆண்டின் தொடக்கத்தில் புனைவைக் கோட்பாட்டுக்கு ஏற்ப உருவாக்குவதென்பது மலேசியாவில் கவர்ச்சிகரமானதொரு முயற்சி. இலக்கியச் சந்திப்புகளில் புனைவை விடவும் கோட்பாடுகளின் பெயர்களே அதிகம் உச்சரிக்கப்பட்டன. அதற்கேற்ப தமிழகத்திலும் பல எழுத்தாளர்களின் புனைவுகள் கட்டுடைக்கப்படுவதாகக் கூறப்பட்டு அவர்கள் சாதியவாதிகளாக, பிற்போக்காளர்களாக விமர்சிக்கப்பட்டனர். இனி அவர்களுக்கு இலக்கியத்தில் இடமில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. உண்மையில் எனக்கு இதுபோன்ற திடுக்கிடும் திருப்பங்களின் மீது பெரும் கவர்ச்சி உண்டானது. என் முதல் கவிதைத் தொகுப்பில் அந்தத் திடுக்கிடல்கள் வருவதை உறுதி செய்துகொண்டேன்.

ஆயினும் சிறிது காலத்திலேயே கோட்பாட்டு விமர்சனம் இலக்கியத்தினுள் ஒன்றை நிரூபிக்கும் பங்கை மட்டுமே ஆற்றுவதாக எனக்குத் தோன்றியது. உதாரணமாக, ஒரு கோட்பாட்டு விமர்சகரால் அரு.சு.ஜீவானந்தன் ‘புள்ளிகள்’ சிறுகதையில் அதிகபட்சம் அதில் யார் பூர்ஷுவா என்று மட்டும்தான் அடையாளம் காட்ட முடிந்தது. அதன் வழி அக்கதை தொழிலாளர் வர்க்கத்தினர் படும்பாட்டை சொல்வதாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இதே நிலைதான் சீ.முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதைக்கும் நிகழ்ந்தது. எல்லாக் கதைகளும் ஒரு கோட்பாட்டில் வந்து நின்றன. அதுவே அதன் முடிவாகியது. ஓர் இலக்கியப்பிரதியின் இறுதிக் கண்டடைவு அதுவாகவே இருந்தது. கோட்பாட்டு விமர்சனம் ஒரு தொழில்நுட்ப செயல்பாடுபோல் ஒரு படைப்புக்குள் புகுந்து தன் அளவுகோலுக்கு ஏற்ப பிரதியை அணுக முயல்கின்றது. ஆனால் அந்த அணுகுமுறை பல நேரங்களில் அபத்தமான முடிவுகளைக் கொண்டுவருகின்றது. கோட்பாட்டு விமர்சகர்கள் முன்னரே தைத்த உடைக்குள் குழந்தையைத் திணிப்பதுபோல தாங்கள் அறிந்துகொண்ட கோட்பாட்டுக்குள் புனைவுகளைத் திணிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்குள் எழத்தொடங்கியது.

***

2006க்குப் பின்பான ஜெயமோகனின் வருகை, பின்னர் என் தமிழகப் பயணத்தில் தமிழினி வசந்தகுமார் பரிந்துரையின் வழி பெறப்பட்ட நூல்கள் என்னை நானே மறுபரிசீலனை செய்துகொள்ள காரணமாக அமைந்தன. ஜெயமோகனின்  ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ நூல்களை பாட நூல்போல வாசித்தேன். அதுவரை நான் இலக்கியங்களை வாசித்த முறை பிழையெனப் புரிந்தது. வாசிப்பின் வழி பெற்ற அகங்காரமெல்லாம் ஒன்றுமில்லை என்று அறிந்த கணம் நான் மீண்டும் முதலில் இருந்து தொடங்கத் தயாரானேன்.  நிதானமும் கவனமும் கொண்ட வாசிப்பு அதன் பிறகே சாத்தியப்பட்டது. கூடவே எனக்குள் நான் நிகழ்த்திக்கொண்ட ஜெயமோனின் கருத்துகளுக்கு எதிரான வாதிடல்களும் விவாதங்களும் என்னைக் கூர்மையாக்கின. ஓர் இலக்கிய வாசகன் எதைக் கொண்டு ஓர் இலக்கியப் படைப்பை அணுக வேண்டுமென நான் மெல்ல மெல்ல உணரத்தொடங்கினேன். அதன் பின்னர்தான் மலேசியப் படைப்புகளில் நிகழ்ந்திருக்கும் அரசியல் எனக்குப் புரியத்தொடங்கியது.

தொடக்கம் முதலே என்னால் மலேசியாவில் யார் முக்கியமான படைப்பாளி என ஊகித்தறிய முடிந்தாலும் அது ஏன் என்பதைச் சொல்லப் போதுமான சிந்தனையும் தெளிவான பார்வையும் இருக்கவில்லை. பிரேத பரிசோதனைபோல அமைந்த கல்வியாளர்களின் திறனாய்வு முறையும் கோட்பாட்டு விமர்சனமும் மேம்பட்ட வாசிப்புக்குத் தடையாக இருந்தன. கருத்துகளை விமர்சனமாக முன்வைப்பதில் என்னிடம் உள்ள குறைபாடுகளை  ஜெயமோகனின் ‘முதல் சுவடு’ நூல் எனக்கு தெளிவுபடுத்தியது. அந்நூலில் உள்ள முதல் கட்டுரையே ரசனை விமர்சனம் குறித்து மிகத்தெளிவான வரையறைகளை எனக்குச் சொல்லிக்கொடுத்தது. அன்றுதான் மலேசியாவில் தீவிரமான ரசனை விமர்சனம் உருவாக வேண்டிய அவசியத்தை நான் அறிந்துகொண்டேன்.

அந்நூலில் ஜெயமோகன் ரசனை விமர்சனம் குறித்து கூறுவதன் சாரத்தை ஆறாகச் சுருக்கிக்கொள்ளலாம்.

அ. அறிவுத்துறை என்பதும் கலை என்பதும் வேவ்வேறு வெளிப்பாடுகள். அறிவுத்துறை ஓர் உண்மை எப்படி நிறுவப்பட வேண்டும் என வரையறை செய்யும். கலையின் அடிப்படை குறியீடு. இலக்கியம் என்னும் கலை, மொழியைக் குறியீடாகக்கொண்டது. எனவே மொழியை கலையின் மூலப்பொருளாகப் பாவித்துப் புனையப்படும் ஒன்று திட்டவட்டமான அர்த்தத்தைக் கொடுக்காது.

ஆ. ஓர் அறிவுத்துறையை அணுகுபவனுக்கு ‘புரிதலே’ அடிப்படை. கலையை அணுகுபவனுக்கு ‘கற்பனையே’ அடிப்படை. எனவே புரிதலில் சரியான புரிதல் நிகழும். கற்பனையில் சரியான கற்பனை என ஒன்று இல்லை.

இ. இலக்கியம் கலையாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் அறிவுத்துறை. இலக்கியத்துள் வரலாறு, அறிவியல், மொழியியல் என்ற அறிவுத்துறை உண்டு. ஆனால் இலக்கியப்படைப்பு அந்த நோக்கத்தைக் கொண்டு உருவானதல்ல. எனவேதான் நல்ல இலக்கியப் படைப்பு புதிய அர்த்தங்களுடன் தொடர்ந்து வளர்கிறது.

ஈ. கற்பனையற்ற வாசகருக்கு மொழியின் வழி சொல்ல வந்தது மட்டுமே புரியும்; உணர்த்த வருவது புரியாது.

உ. எனவே ஒரு சமூகம் இலக்கியப் படைப்புகளை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சியின் விளைவே இலக்கிய விமர்சனம். ஒரு வாசகர் தன் ரசனையைப் பகிர்ந்து, சமூக வாசிப்பு நிகழ்ந்து, ஒட்டுமொத்த மதிப்பீடு உருவாக ரசனை விமர்சனம் உதவுகிறது.

ஊ. இலக்கிய விமர்சனத்தின் அடிப்படைச் செயல்கள் மிகச்சிறந்த வாசிப்பை அளித்து அதன் அடிப்படையில் மதிப்பீட்டைக் கூறுவது. ஒட்டுமொத்த மதிப்பீட்டில் தன் பங்களிப்பை வைப்பது.

எனக்கு ஓரளவு ரசனை விமர்சனத்தின் முக்கியத்துவம் புரிந்தது. இலக்கியம் எனும் கலையை அறிவுத்துறைபோல நான் அணுகியதன் போதாமையை உணர்ந்தேன். இலக்கியத்தின் உச்ச தருணங்களை அடைய அதன் வாசகனாய் இருந்து அணுகுவதே சிறந்த வழியென அறிந்தேன். ஆனால் அது வெறும் அந்தரங்க நிகழ்வாய் மட்டும் இருந்துவிட்டுப்போவதில் மலேசிய இலக்கியத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அது ஓர் உரையாடலாக வேண்டுமென விரும்பினேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

மலேசியாவில் படைப்புக்குள் இருக்கும் தகவல்களின் தொகுப்புகள் வழியும் ஒப்பிலக்கிய ஆய்வுகள் வழியும் கல்வித்துறை விமர்சனம் மலேசிய இலக்கியத்தின் பெரும்பட்டியல் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தது. பேசுபொருளும் வெளிப்படுத்தும் முறையும் இவற்றில் சிலாகிக்கப்பட்டிருந்தன. கல்வித்துறையின் இந்த இலக்கிய வரலாற்றுப்பட்டியல் உருவாக இலக்கிய அமைப்புகளும் நாளிதழ்களும் பெரும் பங்கு வகித்தது அடுத்த துர்நிகழ்வு.

தங்கள் வணிகத்துக்கு உதவக்கூடியவர்களை நட்சத்திர எழுத்தாளர்களாக நாளிதழ்கள் கட்டமைத்தன என்றால் தங்கள் அமைப்புக்கு விசுவாசமானவர்களின் ஆளுமையை அமைப்புகள் ஊதிப் பெரிதாக்கின. இவ்விரு வழியில் வந்தவர்களே மலேசியாவின் முதன்மைப் படைப்பாளிகளாக மலேசியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் காட்டப்பட்டார்கள். அதற்கு வலுவான தரப்பு உருவாக கல்விச்சூழலில் உள்ளவர்களின் துணை தேவைப்பட்டதால் அவர்களும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். விளைவாக, கல்வியாளர்களின் அங்கீகாரத்துடன் மலேசியாவில் மொண்ணையான எழுத்தாளர்களெல்லாம் ஊடகங்களாலும் நாளிதழ்களாலும் தூக்கி நிறுத்தப்பட்டு மலேசிய இலக்கியத்தின் அடையாளமாகக் காட்டப்பட்டார்கள்.

இந்தப் பெரும் சக்திகளுக்கு எதிராக தனி மனிதனின் ரசனை விமர்சனம் என்பது எழுந்து நிற்கக்கூடியதா என்ற கேள்வி எனக்கு முதலில் ஏற்பட்டது. காரணம் ரசனை விமர்சனத்தின் அடிப்படையான சிக்கலே அது எவ்வகையான முறைமையையும் (methodology) கடைப்பிடிக்கவில்லை என்பதே.

***

இந்தத் தொகுப்பில் வரும் கட்டுரைகளை என் தளத்தில் வாசித்த முனைவர் சபாபதி, ‘எதன் அடிப்படையில் ஒரு நாவலை நிராகரிக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை தமிழ் கூறு நல்லுலகம் ஏற்காது’ என ஒருமுறை என்னிடம் கூறினார். அவர் கூறிய “தமிழ் கூறு நல்லுலகு’ என்பது கல்விக்கூடங்களாக இருக்கலாம். அப்படி என்றால் அவர் சொல்வது வாஸ்தவம்தான்.

இங்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ரசனை விமர்சனத்தை ‘வெறும் அபிப்பிராயம்’ அல்லது ‘தனி நபர் பார்வை’ எனக்கூறி புறக்கணிப்பதுண்டு. ஆனால் தமிழிலக்கியத்தின் சத்தான பகுதிகளை இன்றளவும் ரசனை விமர்சனங்கள்தான் அடையாளம் காட்டி வருகின்றன. கல்வித்துறை விமர்சகர்களால் முன்வைக்கப்பட்ட மு.வரதராசன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றவர்களுக்கு இன்று இலக்கியச் சூழலில் எந்த மதிப்புமற்று போய்விட க.நா.சுவினால் முன்வைக்கப்பட்ட புதுமைப்பித்தன், மௌனி, தி.ஜானகிராமன் போன்றோர் இன்றும் மறுவாசிப்பில் புதிதாகப் பேசப்படுவதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

இப்படி ரசனை விமர்சகர்களால் முன்வைக்கப்படும் படைப்பு பற்றிய கருத்துகளும் தீர்ப்புகள் ஆவதில்லை. ஒரு ரசனை விமர்சகன் அச்சூழலில் உள்ள பல வாசகர்கள் மத்தியில் இருந்து உருவாகும் சிறந்த வாசகன். எனவே அவனது கருத்து பல்வேறு வாசகர்கள் மூலம் வாசிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. ஒரு சமயத்தில் அதன் குரல் கல்விச்சூழலிலும் ஒலிக்கிறது. மெல்ல மெல்ல கல்விச்சூழலில் வரும் அடுத்தடுத்த தலைமுறையினர் இந்தப் படைப்பாளிகளை அடையாளம் காண்கின்றனர்.

ரசனை விமர்சகனிடம் கோட்பாடு என்ற ஒன்று இருப்பதில்லை. க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, பிரமிள்,  ராஜமார்த்தாண்டம் என யாருமே ஒரு கோட்பாட்டை முன்வைத்து ரசனையை அளப்பதில்லை. ரசனை விமர்சகன் அளவீடாகக்கொள்வது மூன்று விடயங்கள் என ஜெயமோகன் வரையறை செய்கிறார்.

அ. தன் வாழ்க்கை மூலம் தானறிந்த அனுபவ விவேகம்

ஆ. இலக்கிய வாசிப்பின் வழி பெற்ற அறிவு

இ. அறிவுச்சூழலில் இருந்து பெற்ற பொதுவான அறிவு.

ஒரு ரசனை விமர்சகன் அதுவரைக்குமான இலக்கியப் படைப்புகள் மீதான தன் அவதானிப்புகளை தொகுத்து; ஒரு தர்க்க முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் ஓர் இலக்கியப் படைப்பின் மீது மதிப்பீட்டை முன்வைக்கிறான். ஒரு படைப்பை அச்சூழலில் எழுதப்பட்ட  பிற சிறந்த படைப்புகளுடனும் உலக அளவில் கவனம் கொள்ளப்பட்ட சிறந்த படைப்புடனும் ஒப்பிடுகிறான். இப்போது கேள்வி அப்படி ஒப்பீடு செய்யும் ஒருவனின் கருத்தை ஏன் நம்ப வேண்டும்? அவனது கருத்துக்கான மதிப்பு எப்படி உருவாகிறது என்பதுதான்.

***

முதலில் இலக்கிய விமர்சனம் இலக்கியப் போக்கைத் தீர்மானிப்பதில்லை. அதன் ஆகச்சிறந்த பங்களிப்பே கூட்டு ரசனையை உருவாக்குவதுதான். இந்தப் பணியைச் செய்யும் ஒருவருக்கு இருக்க வேண்டியது தீவிரமான வாசிப்புப் பயிற்சி. எனவே ரசனை விமர்சனத்தை முன்வைக்கும் ஒருவர் தன்னை அதற்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

நானும் அவ்வாறே செய்யத் தொடங்கினேன்.

தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம் என வாசிப்பை விரிவுபடுத்துவதும் அப்படி வாசிப்பதில் நான் கண்டடைந்தவைகளை எனது தனித்த பார்வையாகப் பதிவு செய்வதையும் முனைப்பாக முன்னெடுத்தேன். அதற்கு முக்கியமான காரணம் ரசனை விமர்சனத்தில் அது யாருடைய ரசனை எனும் கேள்வி எழும் என்பதால் விமர்சகனின் ஆளுமை முக்கியமானது. ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’, ‘உலகின் நாக்கு’ எனத் தொடங்கி புனைவுகள் குறித்த விரிவான கட்டுரைகள் எழுதினேன். பிற விமர்சன முறையில் கோட்பாடும் முறைமைகளும் கொண்டுள்ள இடத்தைத்தான் ரசனை விமர்சனத்தில் ‘ஆளுமை’ பிடித்துக்கொள்கிறது. எனவே அதற்கான பயிற்சி அவசியம். அந்த ஆளுமை வலுவாக இருப்பதால்தான் க.நா.சு, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் என வரும் வரிசையில் வைக்கப்படும் பட்டியல்கள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.

ஆம் அதன் நோக்கம் உரையாடல்களையும் விவாதங்களையும் உருவாக்குவதுதான். ரசனை இலக்கிய விமர்சனம் என்பது ஒரு வாசகன் ஒரு புனைவின் மேல் சிறந்த வாசிப்பை வழங்கும் முயற்சி. அவன் அதில் உள்ள காட்சிகளைக் கற்பனையால் நிகழ்த்திப் பார்க்கிறான். மேம்பட்ட ஒரு பார்வையை வைக்கிறான். அது விவாதமாகின்றது. பின்னர் அங்கிருந்து புதிய வாசிப்பு முறை உருவாகிறது.

ஓர் உதாரணம் சொல்லலாம்.

சீ.முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதையில் குடிகாரக் கணவனை இழந்தபின் கால் ஊனமான கிருஷ்ணனோடு சேர்ந்து வாழலாம் என முடிவெடுக்கும்  லட்சுமிக்கு இருப்பதெல்லாம் சிவப்பு அடையாள அட்டையும் அதைப் பயன்படுத்தும் மேனஜரின் காம இச்சையும் எனும் சிக்கல்கள் மட்டுமே என இதுவரை அக்கதையின் கண்டடைவாக மலேசியாவில் பேசப்பட்டது.

நான் அதன்மேல் புதிய வாசிப்பு ஒன்றை முன்வைத்தேன். இக்கதை, சிவப்பு அடையாள அட்டை, பெர்மிட், தோட்டச் சிக்கல் என எதையும் முதன்மைப்படுத்திச் சொல்லவில்லை. கிருஷ்ணனுக்காகத் தன்னையே இழக்கும் லட்சுமியின் தியாகத்தையும் பேசவில்லை. எனக்கு இக்கதை லட்சுமி இரையாவதன் சுதந்திரத்தைப் பேசுகிறது என்றே எண்ண வைத்தது. அவள் முன்பு கணவனுக்கு இரையாக இருந்தாள். இரையாவதன் வலி என்னவென்று அவளுக்குத் தெரியும். அதைப் பற்றியே அவள் அதிகம் நினைக்கிறாள். ஆனால் அது பழக்கமான வலி. ஒப்புக்கொடுத்துவிட்டு மௌனமாக அனுபவிக்கும் வலி. கிருஷ்ணன் வாழ்வில் நுழையும் தருணம் உண்டாகும் வலி அவளுக்குப் புதியது. அவள் தன் இயல்பை முற்றிலும் இழந்தவளாகிறாள். ஒப்புக்கொடுத்துப் பழகிவிட்ட அவளுக்குப் போராடி ஒன்றை தக்கவைத்தல் இனி சாத்தியமில்லை. அவள் மீண்டும் இரையாகவே நினைக்கிறாள். அதுவே அவளுக்கு சம்மதம். தொடர்ந்து பல இரவுகள் எழப்போவதின் தொடக்கம்தான் இக்கதையின் முடிவு. அப்படி எண்ணுவதற்கான எண்ணற்ற காட்சிகளைக் கொண்டுள்ள கதை இது. இதை நான் ஊட்டி முகாமில் என் பார்வையாக முன்வைத்தேன். நான் அவ்விடத்தை அடைய கதைக்குள் உள்ள குறியீடுகளைச் சுட்டிக்காட்டினேன். அப்படி ஒரு வாசிப்புக்கான வாய்ப்பு உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

கல்வியாளர்களுக்கு இக்கதையில் உள்ளதெல்லாம் தகவல்கள். தங்களின் திறனாய்வு வழி, காட்சிகளைத் தகவல்களாக மாற்றிக்கொள்கின்றன. அவர்கள் அதற்குத் திட்டவட்டமான தீர்ப்புகள் எழுதுகிறார்கள். அதோடு அக்கதை நின்றுபோகிறது. ஆனால் தேர்ந்த வாசகனுக்கு அவை குறியீடுகள். அந்தக் குறியீட்டின் வழியே மேம்பட்ட வாசிப்பை அடைகிறான். நாளை மற்றுமொரு வாசகன் இதே கதையில் புதிய இடங்களைத் தொடலாம். சிறந்த வாசகனே ரசனை விமர்சகன். அவன் வழியாகத்தான் ஒரு புனைவு நெடுகாலம் வாழ்கின்றது.

ஒரு விமர்சனத்தில் வாசிப்பின் உச்சமான சாத்தியங்களை முன்வைக்க வேண்டும் எனும் விதி இருக்க, நான் எதிர்மறை விமர்சனங்களையும் வைக்கக் காரணம் உண்டு.

***

என் பார்வையில் எழுபதுகளில் மலேசிய நவீன இலக்கியத்தில் எழுந்த அலை சகதியாகத் தேங்க வானம்பாடி எனும் ஜனரஞ்சக நாளிதழின் வருகையும் மு.வரதராசனை பெரும் இலக்கியவாதியாக முன்வைத்த பேராசிரியர் இரா.தண்டாயுதம் அவர்களின் வருகையும் முக்கிய பங்காற்றின. விளைவாக ‘இலக்கிய வட்டம்’ எனும் சிற்றிதழ் முயற்சி, நவீன இலக்கியச் சிந்தனை போன்ற குழுவின் எழுச்சி என எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து இலக்கியம் என்பது கொண்டாட்டமாக மாறியது. சிறிய குழுக்கள் மத்தியில் நிகழும் காத்திரமான உரையாடல்களை சில இதழ்களிலும் நூல்களிலும் காண முடிகிறது. பின்னர் அது வளர்த்தெடுக்கப்படவில்லை. எல்லாக் குழுக்களிலும் மீடியக்கர் படைப்பாளிகள் நுழைந்து அதன் தீவிரத்தை மொண்ணைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது என் ஊகம். தங்களைத் தனித்தவர்கள் என அடையாளம் காட்ட முடியாத மாற்றுச்சிந்தனை கொண்ட எம்.ஏ.இளஞ்செல்வன் போன்றவர்கள் ஜனரஞ்சக இலக்கியத்துடன் கலந்தனர். அவ்வாறு இணைய முடியாத சீ.முத்துசாமி போன்றவர்கள் ஒதுங்கிக்கொண்டனர்.

ஆங்காங்கு இலக்கியப் படைப்புகள் ஒட்டிய ரசனை விமர்சனங்கள் இருக்கவே செய்தன. மா.சண்முகசிவா அதை மலேசிய இலக்கியத்தில் மென்மையாகவே முன்னெடுத்தார். அவரிடம் எதிர்மறை விமர்சனங்கள் உருவாகவில்லை. அது தீவிரம் அடைந்தது வல்லினம் வழியாகத்தான். இந்த கோஷக் கும்பலால் மறைக்கப்பட்ட தரமான புனைவுகளை மீட்டுக்கொண்டு வருவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாராட்டுகளை அரிதாரமாக்கி மினுக்கும் பலவீனமான புனைவுகளை அடையாளம் காட்டுவது என்றும் தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டாலும் விருதுகளைப் பெற்றாலும் கல்விக்கூடங்களால் பாட நூல்களாக்கப்பட்டாலும் அவற்றின் இலக்கியத் தரத்தை அளவிடுவது என்றும் வல்லினம் அறிந்தே செயல்பட்டது.

இந்தப் பணி மலேசிய இலக்கியத்தில் நிகழ்வது புதிதென்பதால் அதன் அழுத்தங்களும் அதிகம். தமிழகத்தில் ரசனை விமர்சனத்திற்கான ஒரு மரபு இருப்பதாலும் அதை முன்னெடுக்க சிற்றிதழ்கள் இருந்ததாலும் மக்களிடம் பெரும் செல்வாக்குச் செலுத்திய கல்கி போன்றவர்களைவிட புதுமைப்பித்தன் முக்கியமான படைப்பாளி என நிரூபணம் செய்யப்பட்டதாலும் அடுத்தடுத்த விமர்சகர்கள் மேம்பட்டு தங்கள் வாசிப்பை எடுத்துச் செல்ல வாய்ப்பு அமைந்தது. அந்த வாய்ப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மலேசியாவிலும் அமையும் என்ற நம்பிக்கையில்தான் இப்பணியைச் செய்ய வேண்டியுள்ளது. தமிழ்க் கல்வியும், தமிழில் இலக்கியப் படைப்பாக்கமும் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் வாழ்வும் நிலைபெற்றுள்ள மலேசியாவில் இத்தகைய மேம்பாடு, சமூகத்தின் கல்வி சார்ந்த மேம்பாட்டுக்கும் அதற்கப்பாற்பட்ட சிந்தனை வளர்ச்சிக்கும் அவசியம் என்றே நம்புகிறேன்.

மேலும் ரசனை விமர்சனம் செய்யக்கூடாத ஒரு பணியையும் நான் இத்தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளில் செய்துள்ளேன். அது எழுத்தாளர்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவது. அது விமர்சனத்தின் பணியல்ல என்றாலும் விருதுகள் மூலம் தங்கள் நூலின் இடத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் உள்ள சூழ்ச்சிகளையும் அடையாளம் காண வேண்டியுள்ளது. முழுமையானதொரு இலக்கியம் குறித்த உரையாடல்களுக்கு இந்த இலக்கிய நேர்மை தேவைப்படுகிறது. குறிப்பாக, மலேசியா போன்ற பன்மொழிச் சூழலில். இங்கே தமிழ் அதிகாரத்துவ மொழியாக இல்லையென்றாலும், தமிழ் மூலமாகக் கிடைக்கும் எத்தகைய அங்கீகாரத்தையும் தேசிய அங்கீகாரமாக்க, அல்லது தேசிய அளவிலான சில பல தகுதிகளுக்கான படிக்கற்களாக்கப் பயன்படுகின்றன. உலக  அளவிலான தமிழ் இலக்கிய மேடைக்கும் இத்தகைய அடையாளம் காணல்கள் முக்கியமாகின்றன. இத்தகைய சூழல்நிலைகளில் விருதுகளும் பாராட்டுகளும் படைப்பின் கனத்தைத் தீர்மானிப்பவையாக தொடக்கத்தில் இருக்கின்றன. பின்னர் அதன் சாயம் வெளுக்கும் போது, அது ஒட்டுமொத்தமான மலேசிய தமிழ் இலக்கியத்துக்கும் அவமானத்தைத் தேடித்தருகின்றது. தரமற்ற படைப்பு விருதுகளின் வழி தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலும் சூழ்ச்சியை எந்த இடத்திலாவது நிச்சயம் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. அதன் வழி தரமான நல்ல படைப்புகளும் நிராகரிக்கப்படும் சாத்தியங்களைத் தவிர்க்க முடியும்.

***

இந்த நூலில் மொத்தம் பத்து எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கணிசமானவை குறுநாவல்கள் எனும் வகைமையில் வரும். மலேசிய நாவல் உலகில் மறுபடி மறுபடி குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஐ.இளவழகு, கா.பெருமாள், ஆர்.சண்முகம் ஆகியோரின் நாவல்கள் தொடங்கி மலேசியாவைக் கடந்து அறியப்பட்ட படைப்பாளிகளான ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது, அ.ரெங்கசாமி ஆகியோரின் நாவல்களும் மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் எம்.ஏ.இளஞ்செல்வன், எம்.குமாரன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களும் விரிவாகவே இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளன. அதோடு மூத்த படைப்பாளிகளாக இருந்தாலும் இன்றளவும் இலக்கியத்தில் துடிப்புடன் இயங்கும் சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான் ஆகியோரின் நாவல்களையும் இந்த ரசனை விமர்சனத்துக்கு உட்படுத்தியிருக்கிறேன். இவர்கள் அனைவரும் ஏறக்குறைய முதல், இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்கள் என்பதால் இக்கட்டுரைகளை முதல் தொகுதியாக இணைத்துள்ளேன்.

என்னளவில் நான் இன்னும் முழுமைபெற்ற வாசகன் இல்லை என அந்தரங்கமாக அறிவேன். ரஷ்ய இலக்கிய வாசிப்பில் இன்னும் நான் முழுமையடையவில்லை. எழுத்தாளர் ஷோபா சக்தி உட்பட சில எழுத்தாளர்கள் என்னுடைய இந்தப் போதாமைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயினும் தமிழிலும் இந்திய மொழிகளிலும் எழுதப்பட்ட முதன்மையான நாவல்களை வாசித்தும் அவை குறித்து எழுதியும் இருக்கின்றேன். அந்த நம்பிக்கையில் மட்டுமே இப்புனைவுகளை மதிப்பீடு செய்ய முயன்றுள்ளேன். இதில் நான் வைக்கும் கருத்துகளை மீறி உருவாகும் புதிய பார்வைகளும் முரண்பட்டு என் போதாமைகளைச் சுட்டும் புதிய கண்டடைவுகளுமே இந்நூல் உருவான காரணத்தை மெய்ப்பிக்கும்.

இக்கட்டுரை வெளிவந்த காலத்தில் இதன் பலம், பலவீனங்களைச் சுட்டிய எழுத்தாளர் ஜெயமோகன், அ.பாண்டியன், சு.வேணுகோபால், ஈரோடு கிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றிகள்.

இவ்வருடம் வெளிவரப்போகும் ம.நவீனுடைய ‘மலேசிய நாவல்கள்’ நூலில் இடம்பெற்ற முன்னுரை

1 comment for “மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

  1. Sunthari Mahalingam
    November 8, 2020 at 12:13 am

    இக்கட்டுரை பகுதியை வாசிக்கும் போது நான் இன்னும் வாசிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. திரு.நவீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply to Sunthari Mahalingam Cancel reply