விலங்குகள் திரியும் கதைகள்

cover 00சமகால மலேசிய புனைவிலக்கிய வெளியில் ம.நவீனின் எழுத்துகள், எண்ணிக்கையாலும் அது அடைந்திருக்கும் வாசகப் பரப்பாலும் கவனம் கொள்ள வைக்கின்றன. ஆழமற்ற நேர்கோட்டுக்கதைகளை அதிகம் வாசித்துப் பழக்கியிருக்கும் மலேசிய வாசக சூழலில் ம.நவீனின் புனைவுகள் மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தருபவை. வாசகனின் உழைப்பைக் கோருபவை.

காலத்தால் நிகழக்கூடிய அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியே இலக்கியம் பரிணமிக்கிறது. மொழி, சொல் முறை, கதைக்களம், பேசுபொருள், படிமங்கள் என பல உட்கூறுகளின் அடிப்படையில்தான் இப்பரிணாமம் இலக்கியத்தில் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. ம.நவீனின் ஒவ்வொரு படைப்பிலும் அத்தகைய மாற்றங்களைக் கவனிக்க முடிகிறது. அவரது மண்டை ஓடி, போயாக் சிறுகதைத் தொகுப்புகள், பேய்ச்சி நாவல், வெளியீடு காண உள்ள உச்சை சிறுகதைத் தொகுப்பு ஆகிய ஒவ்வொன்றிலும்  மொழி, வடிவம், பேசு பொருள், என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து அவற்றை வாசித்ததன் வழி அவதானித்துள்ளேன்.

‘மண்டை ஓடி’ தொகுப்பு  முழுக்கவே ஒரு விளையாட்டுச் சிறுவனின் மனப்போக்கில் எழுதப்பட்டக் கதைகளாக இருக்கின்றன. ‘போயாக்’ தொகுப்பு  அதிலிருந்து பெரும் இடைவெளியில் நிற்கக்கூடிய புனைவுகளாக அமைந்துள்ளன. கூர்மையான மொழி, வடிவக் கச்சிதம், நுட்பமான குறியீடு  என வாசகனின் வாசிப்புக் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பனவாகவே அவை அமைந்திருந்தன. ‘பேய்ச்சி’ நாவலை ஒரு கட்டற்ற கலைவடிவமாகவே வகைப்படுத்த முடிகிறது. மொழி ஒரு காட்டாறுபோல அதில் பாய்ந்து பிரவாகம் எடுக்கிறது.  மிக அண்மையில் எழுதப்பட்டு வெளியீடு காணவுள்ள ‘உச்சை’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் அடர்த்தியும் உள்ளடுக்குகளும் அவரது சிறுகதைகளில் இதற்கு முன் நிகழாதவை.

இலக்கியத்தில் விலங்குகள் காலம்காலமாக இடம்பெற்று வருகின்றன.  ஆனால் விலங்குள் அதில் இணைப் பாத்திரமாக வந்துபோகும் உயிரா, அல்லது கதையலங்கார பொருளா என்பதுதான் முக்கியமான அம்சம்.  மகாபாரதம், ராமாயணம், ரிக்வேதம் போன்ற நமது தொன்ம இலக்கியங்களிலும்  விலங்குகளுக்கு முதன்மை இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகாபாரத்தின் இறுதிப் பகுதியில் சொர்க்கம் நோக்கி நடந்து செல்லும் பாண்டவர்களோடு ஒரு நாயும் பயணமாகிறது. தர்மனுடன் அந்த நாய் மட்டுமே இறுதியில் சொர்க்கத்தை ஊனுடலோடு சென்றடைகின்றது. அதே போல ரிக் வேதத்தில் இந்திரன் வளர்த்த சரமா என்ற நாய் இடம்பெறுகிறது.  ராமாயணத்தில் குரங்கு, கழுகு, மான், கழுகு, கரடி, எருமை காகம், அணில் போன்ற விலங்குகள் முக்கிய பாத்திரங்களாக உள்ளன. இதில் அனுமர் எனும் குரங்கும் ஜடாயு என்ற கழுகும் மிக முக்கிய பாத்திரங்கள். கோயில்களில் வணங்கப்படும் தெய்வமாக விளங்குமளவுக்கு அனுமர் உள்ளார். சங்க இலக்கியத்தில் யானையின் பெருந்தோற்றமும் பலமும் மன்னரின் ஆட்சி பலத்திற்கு உவமையாகி  வந்துள்ளன.   இப்படி  அநேகமான முன்னோடி இலக்கியங்களில் விலங்குகள் இணைப் பாத்திரங்களாக வந்துபோகின்றன.  நவீன் தன் கதைகளில்  விலங்குகளை தத்துவார்த்தமான படிமமாகவோ அல்லது இன்னொன்றின் நிகர் குறியீடாகவோ கையாளுகிறார். அதுவே  அப்புனைவின் கலைத்தன்மையைக் கூர்மைப்படுத்துகிறது.

பேய்ச்சி மற்றும் போயாக் ஆகிய புனைவுகளிலும் விலங்குகள் குறியீடாகவும் படிமமாகவும் எடுத்தாளப்பட்டுள்ளன. போயாக் தொகுப்பில் முதலை, வண்ணத்துப்பூச்சி, நாகம்  ஆகிய விலங்குகள் ஓர் தரிசனத்தைக் கொடுப்பவை. கதையின் ஆன்மாவை அவைதான் இழுத்துப்பிடித்திருக்கும். அவற்றின் மேல் ஏற்றி வைத்துள்ள படிமமே கதைக்கான படிமம். அதே போல பேய்ச்சியிலும் கருப்பனாகிய நாயும் மற்ற பல வளர்ப்பு விலங்குகளும் வந்து போகின்றன. அவ்விலங்குகளின் கூக்குரல்கள் இன்றளவும் என் மனச் செவிகளைத் துளைத்துக்கொண்டே இருக்கின்றன.

‘உச்சை’ சிறுகதை தொகுப்பில் எல்லாக் கதைகளுமே ஒரு விலங்கை முதன்மையாகக் கொண்டு நகர்கின்றவையாகவே அமைந்துள்ளன.  வாழ்வின்  மிக நு்மையான தருணங்களையும் முரண்களையும் விலங்குகளைக் கொண்டே ம.நவீனால்  சொல்ல முடிந்துள்ளது. இது இன்னொரு நிலையில் அவருக்கு இந்த உலக உயிரினங்களின் மீது இருக்கும்  பற்றுதலையும் அதன் மீதான அவரது ஈர்ப்பையுமே காட்டுகிறது.

ஜப்பான் காலத்துக்கும் ஆங்கிலேயே காலத்துக்கும் இடைப்பட்ட காலப்பின்னணியில் நிகழும் கதைதான்  உச்சை சிறுகதை. கதையின் தலைப்பே குதிரைதான். இக்கதையில்  குதிரை   அதிகாரத்தின் அடையாளமாகவும் அதிகாரத்தின் ஆபத்தான இன்னொரு முகமாகவும் உள்ளது. கதையின் இன்னொரு தளத்தில் குதிரைக்கு  நிகர் முரணான கோவேறு கழுதை வருகின்றது. குதிரை, கழுதை இந்த இரு வேறு விலங்கினங்களும் கதையில் ஒரு பெரும் முரண்பாடுகளின் அடையாளமாகவே இருக்கின்றன. ஆனால் அந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒரு சின்ன இணைப்பும் இருக்கவே செய்கிறது. அவை இரண்டு இரு வேறு நிலைபாட்டிலான  அதிகாரத்தைக் காட்டுகின்றன. முத்தண்ணன் தனது சிறு வயதில் துணி மூட்டை சுமக்கும் கழுதையின் மீது ஏறி அமரவும் சவாரி செய்யவும் சாதியின் காரணமாக ஒரு நாள் கூட அனுமதிக்கப்பட்டதில்லை. அது அவனுக்கு மட்டுமான தடை. துரையின் அதிகாரத்தின் அடையாளமாகத் தோட்டத்திற்கு வரும்  குதிரையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவன் பெரும் கௌரவத்தோடு ஏற்றுக்கொள்கிறான். எல்லா பணிவிடைகளையும் மிகுந்த மனத்திருப்தியோடு செய்யும் அவனால் எந்தச் சூழலிலும் அதன் மீது ஏற முடியவில்லை. அது துரையின் கௌரவத்திற்கே இழுக்கு. ஒரு வேளை அது நிகழ்ந்தாலும் நிச்சயம் முத்தண்ணனின் உயிர் தப்பிக்காது. ஆனாலும், கழுதையின் மீதேற முடியாத அந்த ஆசை இப்பொழுது குதிரைக்குரியதாக மாறி  அவன் மனதோடு கனன்று கொண்டேதான் இருக்கிறது.

ஜப்பானியர்களின் வருகையால் நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் துரைக்கு ஏற்படுகிறது. அவன் தன் அடையாளமாகிய குதிரையைத் தோட்டத்தில் விட்டுச் செல்லமுடியாத மனநிலையில் அதைக் கொல்ல முடிவெடுக்கிறான்.  தனதான ஒன்றை தோட்டத்து மக்களில் யாரேனும் உரிமைக் கொண்டாடுவது துரைக்குப் பெரும் இழிவு. அது அவன் கண்ணுக்கெதிரே நடக்காவிட்டாலும்கூட. எனவே, முத்தண்ணன் குதிரையின் நெற்றியில் துப்பாகி முனையை நீட்டிப் பிடிக்கும் தருணத்தோடு கதை முடிகிறது. அது துரையின் பக்கமும் திரும்பலாம் என்ற சாத்தியத்தையும் கதை கொண்டுள்ளது. காரணம் முத்தண்ணனுக்கு துரையைப் போலவே குதிரையும் கடவுள். இரண்டு கடவுளில் எந்தக் கடவுள் வேண்டும் என்பதே அவன் முன் இருக்கும் கேள்வி.

இத்தொகுப்பில் வரும் ஒலிப்பேழை கதையும் விலங்குகளுக்கான ஒரு தனித்த இடத்தைக் கொண்டுள்ளது. கதையில் வரும் சாம்பல் கிளி தொடக்கத்திலிருந்தே உடன் வருகிறது. ஆனால், கதையின் இறுதியில் அந்தக் கிளியும்,  அவரது தலைக்கு மேல் பறக்கும் இன்னும் பல ஆயிரம் கிளிகளும் ஒரு சாட்சியாகி அரூபக் கலைவடிவை நிரூபிக்கின்றன. ஒரு விதத்தில் இக்கதை வாசகர் மனதில் தொடக்கம் முதல் ஒரு விவாதத்தின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பியபடியே இருக்கின்றது. உள்ளிருந்தெழும் அத்தனை கேள்விகளுக்குமான பதில்களாகக் கிளிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அத்தனை மூர்க்கமாகத் தன்னை முட்டிக் காயப்படுத்திக்கொள்கிறது அந்தக் கிளி. அந்த இசையின் தூண்டலும் துலங்கலுமாகக் இக்காட்சி அமைந்துள்ளது. கதவுக்கு வெளியே ஓசையற்ற நிலையில் பாடுவதுபோல் பாவனையாற்றும் இஸ்மாயில் தலைக்குமேல் ஆயிரக்கணக்கான கிளிகள் உண்மையில் ஒலியற்ற இசைக்கு ஒலிக்கொடுத்துள்ளன. எந்த விவரணைகளும் அதற்கு மேல் அவசியமற்றதாகிறது. கலையின் இன்னொரு வடிவத்தைத் தரிசிக்க விலங்குகள் கற்றுத்தருகின்றன. சில மனித மனங்களால் நெருங்க முடியாத நுண்மையான கலையுணர்வை விலங்குகளால் நெருங்கிக் காட்டுகிறார் ம.நவீன். அதற்கான அறிவியல் நிரூபணங்கள் கதையை வலுவாக்குகிறது. கிளிகளில் சாம்பல் நிற ஆப்பிரக்க கிளிகளே அறிவில் முதன்மையானவை என்பதும் இசையின் பேதம் அறியக்கூடியது என்பதும் ஒரு சாத்தியம் என்றால் காடுகள் அடர்ந்த ஜெராந்துட்டில் கிளிகள் கூட்டம் கூட்டமாக வருவதும் சாத்தியம் என்பது மற்றுமொரு முக்கியமான அம்சம். இதில் அது அடர்ந்த காடுள்ள நிலப்பகுதி எனக் காட்ட இரவுகளில் யானை நடமாட்டம் உள்ளதாகக் குறிப்பிடுவதுதான் கதையை நிகர் அனுபவம் கொடுக்கும் புனைவாக்குகிறது.

‘பட்சி’ கதை துல்லியமான வனக்காட்சியையும் அதனுடன் இயற்கையாகிய அன்னையின் தரிசனத்தையும் ஒரு பறவையின் உருவில் நுட்பமாகத் தந்துள்ளது. இக்கதையோட்டத்தில் வாசகர் அறிதலுக்கு மிக சுவாரசியமான பறவைகள் சார்ந்த தகவல்கள் கிடைக்கின்றன. அது இக்கதையின் கூடுதல் பலம். ஆனால், இயற்கையின் ஓர்  உருவாகிய பறவையின் அருகாமையால் பச்சையம்மனின் தரிசனத்தைக் கதை மெய்சிலிர்க்கும் வண்ணம் வழங்கியுள்ளது.  இறை சக்தி, இயற்கை சக்தி என இரு நிலை சக்திகளுக்கும் இணை உருவாய் மஞ்சன் பறவை வந்து போகிறது. பச்சையம்மனாகவும் இயற்கையின் அருளாகவும் இக்கதை இருநிலை வாசகர்களுக்கும் பட்சியால் சாத்தியப்பட்டுள்ளது. கதைகள் என்பது புனைவுதான். ஆனால் இந்தப் பட்சி கதைக்குள் அவர் கொண்டு வரும் பிரேசர் மலை குறித்தான நிலக்காட்சி, பறவைகளுக்குச் சொல்லும் ஒலிப்பு முறை, புருணை நாட்டு அரசியல் சூழல் எல்லாம் அந்தப் புனைவுடன் இணைந்து அசாதாரண வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது. ஆனால் இதற்கு முற்றும் முழுதுமாகத் தொன்மங்களைக் கொண்டும் நவீன் கதை புனைந்துள்ளார்.

ராசன் கதையில் பாம்பு இருப்பதற்கு ஈடான சாத்தியப்பாடுகள் அத்தனையும் அது இல்லாமல் இருப்பதற்கானதாகவும் அமைகிறது. உறுதியாகவோ, அல்லது நேரிடைக் காட்சியாகவோ பார்க்கவியலாத ஒன்றின் மீதான படிமத்தை மிக வலுவாக இக்கதை வாசகர் மனதில் மிகச் சாதூர்யமாக ஏற்றி வைத்துள்ளது. அதுவே ஒரு கலைவடிவின் பலம். இலக்கியத்திலும் சமயம் சார்ந்த நம்பிக்கைகளிலும் நாகத்திற்கான இடம் மிகத் தீவிரமானது. மகாபாரதத்தின் தொடக்கம் நாகங்களின் அழிவில் நிகழ்வதுதான். அதுபோல பைபிளிலும், சீனர்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளிலும் நாகம் வலுவான இடத்தைப் பற்றியுள்ளது. இதைத்தாண்டி நாகம் பல்வேறு சூழலில் காமத்தின் படிமமாகி நிற்பதையும் பார்க்கிறோம். ஆனால் இக்கதையில் வரக்கூடிய நாகமானது அத்தொன்மத்திலிருந்து நகர்ந்து  ராசனுக்குரிய அடையாளமாகி நிலைக்கிறது.  அமீர்கான் என்ற அமிர்தலிங்கம் வளர்ப்பதாகச் சொல்லும் ராசன் பாம்பைப் பற்றி விவரிக்கும் சூழல் முக்கியமானது. இக்கதையில்  உடைமையை எதிராளியிடம் போராடி இழக்க நேரிடும்போது தோல்வியை ஏற்றுக்கொண்டு உயிர்நீக்கும் என ராசன் பாம்பின் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த விவரணையைக் கொண்டே அவரின் குணநலன்களை அனுமானிக்க முடிகிறது. கதையின் முடிவில் அவரது மரணம் சார்ந்த கணிப்புகளையும் இந்தப் பாம்பின் தன்மைகளோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. அதற்கு ஈடான ராச குணமே தனது ஜமீன் வம்சத்துக்குமானது என்கிறார் அமிர்தலிங்கம். அதேபோல அபகரித்தலையும் ஒரு ராஜனுக்குரிய தன்மையாகவே அமீர்கான் என்ற அமிர்தலிங்கம் விவரிக்கிறார். ஒரு விதத்தில் அவர் குறிப்பிடும் அந்த ராஜா என்ற தன்னுணர்வே தீபனுக்கானதும். அவன் அந்த விபச்சார விடுதி இருக்கும் சாலைக்கே தன்னை ராஜாவாக உணர்கிறான். எனவே இக்கதை தானே ராஜா என்ற தன்னுணர்வை ராசன் என்ற பாம்பின் கோணத்திலிருந்து படிமமாக்கியுள்ளது.

ராசன் சிறுகதையைப் போலவே டிராகன் சிறுகதையும் சீனர்களின் தொன்ம விலங்காகிய டிராகன் எனப்படும் நாகம் படிமமாக்கப்பட்டுள்ளது. ஜப்பான் காலத்தில் தோட்டத்து மக்களின் பசியைப் பல்வேறு நிலையிலிருந்து காட்டுகிறது டிராகன் சிறுகதை. வயிற்றிலிருந்து மேலெழுந்து வரும் அந்தப் பசியின் தீவிரத்தைக் காட்டும் படிமமாக டிராகன் கையாளப்பட்டுள்ளது. பசியின் அடையாளமாக வயிற்றில் அவ்வப்போது நெளியும் டிராகனின் கூரிய செதில்களும் நகங்களும் பசியின் தீவிரத்தை நமக்கு அரூபமாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. இக்கதையில் டிராகன் என்ற ஒரு தொன்ம விலங்கு கதையில் எங்கும் எதிர்ப்படாமல் பசிப்பிணியை அரூபமாகவே உணர்த்துகிறது. பசியின் வேதனையைப் பசி என்ற சொல்லுக்கு  அப்பால் சென்று இன்னொரு நிஜ அனுபவமாக வாசிப்பது இக்கதையில்தான். பசியின் வலியை, அவஸ்தையை உணர்த்துவதில் இப்படிமம்  வென்றுள்ளது. அது மனிதனை மிருகமாக்கிக்கொண்டிருக்கும் பசியின் தன்மையை விளக்கும் குறியீடாகவும் நிலைக்கிறது.

‘கழுகு’ கதையில் வரக்கூடிய அமிர்தலிங்கம் ஐயாவின் தோற்றத்தைக் கழுகின் தோற்றத்தைக்கொண்டே நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. இக்கதையில் கழுகு பெரும் கம்பீரமும் கர்வமுமுடைய விலங்காகக் தோற்றமளிக்கிறது, பின் அதுவுமே இரை வேட்டைக்கொள்ளும் ஒரு சாதாரண உயிரென கதைச்சொல்லியால் உருவகிக்கப்படுகிறது. அதற்குப் பின் அதன் அத்தனை கம்பீரமும் அர்த்தமற்றதாகிறது. கழுகு இக்கதையில் அமிர்தலிங்கம் ஐயாவுக்கே படிமமாகி வருகிறது.   காமிராவில் தலைதொங்கி இருக்கும் அமிர்தலிங்கம் ஐயா ஒரு பிணந்தின்னிக் கழுகாகத் தோற்றமளித்து புகைப்படக் கலைஞனை அச்சமூட்டுகிறார். தன் ஆளுமையை சொற்களாலும் செயலாலும் விரித்துக்காட்டுகிறார். ஆனால் அந்த அச்சத்துக்குண்டான கம்பீரத் தோற்றமும், பிணந்தின்னிக் கழுகுபோல இறுதியில் அர்த்தமற்றாகிறது  என்பதையே இக்கதை நகைச்சுவைத் தன்மையோடு சொல்கிறது. ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று சற்றென்று மிகச் சாதாரணமான உயிராகி அர்த்தமற்றுப் போவதை கதை பிணந்தின்னிக் கழுகைப் படிமமாக்கிக் கலைத்தன்மையோடு உரைக்கிறது.

‘பூனியான்’ ஒரு விவாதத்தின் அடிப்படையில் சரி தவறு என்ற முடிவை நோக்கிச் செல்லும் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய கதை. இக்கதையிலும் விலங்குகள் முதன்மையான படிமங்களாக வார்க்கப்படவில்லை. எனினும். நுண்  உயிர்களென சொல்லப்படும் பூனியான்களை அறிய உலகில் வாழும் வேறு சில உயிர்களோடு ஒப்பிடப்படுகிறது. பூமியின் காந்த அதிர்வை அறிந்து அதன் நேர் எதிரில் எச்சிலைப் பீச்சி பல மைல் பறக்கும் சிலந்திகளைப்போல தன்னாலும் இளவரசனாகிய பூனியானின் வரவை உணர முடியும் என்றும்  சூரிய ஒளியில் உள்ள ஆரஞ்சு, சிவப்பு நிறங்களை மரத்தின் இலைகள் உறிஞ்சிக்கொள்வதால் மனிதக்குரங்கின்  உரோமம் நிறப்பதில்லை என்பதும் விவாதத்தின் வலுவுக்காக  கதையில் வந்தமைகிறது.

‘சியர்ஸ்’ கதை  தாய்மை என்ற மிகத் தொன்ம உணர்வின் அடிப்படையில் யதார்த்தத்தைப் பேசும் கதை. பர்மாவில் தன் தாயைத் தேடி ஓடும் சாலையில் மூர்த்தி சாலையில் காணும் வயதான பெண்களை எல்லாம்  கருணையோடு பார்க்கிறார். கதையின் இறுதில் அவர் கண்டது அவரது அம்மா இல்லாமல்கூட இருக்கலாம் என்ற யதார்த்தத்தின் சாத்தியப்பாடுகளுக்கு சாலையில் பார்க்கும் அத்தனை கிழவிகளின் மீதும் அவருக்கு ஏற்படும் கருணை உணர்வு சாட்சியாகி நிற்கிறது. அப்படி அவர் கடந்து வந்த சாலையில் பார்த்த ஒரு தாய் நாயின் காட்சியமைப்பு முக்கியமானது. அந்த நாயின் மீதான அவரது பார்வையும் முக்கியமானது. அந்த உணர்வின் பால் அவர் முழுக்கவே ஆட்கொள்ளப்பட்டுவிட்டதைக் காட்டுகின்ற தருணங்கள் அவை.  கதையின் முடிவிலிருந்து மேல்நோக்கி மீட்டுப் பார்க்கும்போது  அந்தக் காட்சி, உண்மைக்கு அப்பால் இருக்கும் உள உணர்வைத் தீண்டக்கூடியது. அந்த உணர்வின் தீவிரத்தில் அவர் கண்டடைந்த அந்தத் தாயையே தன் அம்மா என நம்பத் தொடங்குகிறார்.  உள்ளார்ந்த,  உணர்வு சார்ந்த தேடலின்போது எதிர்படும் எல்லா பிம்பங்களும் நமக்கு நிஜம்போல ஆகிவிடுவதுண்டு. அல்லது அந்தரங்கமாக அதை நாம்  அறிந்திருந்தாலும் அந்த அறிதலை அறிந்தே அலட்சியம் செய்வதுண்டு. போலியான ஒன்றைக் கொண்டு தன் தேடலை நிகர் செய்ய தயாராகும் உணர்வு தீண்டலைக் காட்டுவதில் சாலையில் கடந்து போகும் அந்தத் தாய் நாயும் ஒரு சிறு பங்கு வகிக்கிறது.

இறுதியாக இத்தொகுப்பில் வரும் ‘கன்னி’ சிறுகதையின் வழி புனைவுலகின் சாத்தியங்களை நவீன்  இன்னும் அகலப்படுத்துகிறார். ஆண்களின் சுயநலத்துக்காகக் கொல்லப்பட்ட கன்னிப்பெண்களையே கன்னி தெய்வங்களாக்கி நாட்டாரியல் வழிபாடு நடக்கிறது. இவ்வாறான சிறு தெய்வ கோவில்கள் இக்கதையில் ஆண்களின் குற்ற உணர்வின் அடையாளமாகி நிற்கின்றன. ஆனால் இக்கதையில் வரும் கன்னிக் கோயிலில் ஒரு பசு ஐந்தாவது கன்னியாகி நிற்பதுதான் ஆச்சரியம். இக்கதை பசுவிற்குத் தெய்வீகத் தன்மையை ஏற்றி வைக்கிறது. ஊரின் நலம் கருதி மற்ற கன்னிகளுக்குப் பலி கொடுக்கப்பட்ட அந்தப் பசுவும் ஐந்தாவது கன்னியாக வழிபடப்படுகிறது. இக்கதையில் நிகழ்த்தப்படும் அந்தப் பலி  சடங்கில் தலையற்று முண்டமாக சில கணம் அசையும் பசுவின் காட்சி வாசகர் மனதை உலுக்கி எடுப்பது.  நுகர்வுத் தேவைக்காக மிருகங்களுக்குப் பொருந்தாத பல மிகை ஆற்றல்களை வலியப் பொருத்தி சாகசங்கள் செய்யும் பல படைப்புகள் வெகுசன கலைகளில் ஏராளம் இருக்கின்றன. ஆனால் இக்கதை அரூபமான உள்ளுணர்வின் ஆட்கொள்ளலால், பயங்களால், உயிர்களின் மீதான பற்றுதலால், பாசப்பிணைப்பால் பசுவைத் தெய்வமாக்கியுள்ளது. ஆண்டாண்டு காலமாக மனிதனால் கட்டவிழ்க்க முடியாத ஒரு பெரும் நம்பிக்கைக்குள் பிற உயிருக்கும் இடமுண்டு என்பதை இப்புனைவு சாத்தியப்படுத்தியுள்ளது.

விலங்குகளால் விரிந்து படர்ந்து செல்லும் ம.நவீனின் புனைவுகள் விலங்குகளை அறிவதற்கும்,  அவற்றை நெருங்கிப் பார்ப்பதற்குமான ரசனையை வாசகர் மனதில் விதைப்பவை. பொதுவாகவே மனிதர்களை மட்டுமே பாத்திரமாகக் கொண்டியங்கும் படைப்புகள் ஒரு விதத்தில் சலிப்பை ஏற்படுத்தக்கூடியவை.  எனவே, இலக்கியங்களில் உலாவும் விலங்கின்மீது ஒரு அதீத ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. அவை இன்னும்கூட அப்படைப்புக்கு இயல்புத்தன்மையை உண்டாக்கித் தருகிறது. அது நமக்குள்ளான குழந்தமை  உணர்வை மீட்டுத் தருகிறது. என்னதான் வளர்ந்துவிட்டாலும் விலங்குகளை இன்னும் இன்னும் வியப்போடே பார்க்கக்கூடிய ஒரு குழந்தையின் மனம் நமக்குள் இருந்துகொண்டே இருப்பதை இது போன்ற இலக்கியங்களே நமக்கு நினைவூட்டுகின்றன. காலகாலகாம இருந்துவரும் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் மனிதனுக்குமான பிணைப்பையும், இந்தப் பிணைப்பினால் மனிதன் பெறும் உயிர்ப்பையும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லும் நவீனின் கதைகள்  தொன்மத்தின் தொடர்ச்சியாக மலேசிய இலக்கியத்திற்கு பலம் சேர்க்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *