திருமுகம்

jevaaயாருமே இல்லாத அறையில் தன்னை யாரோ அழைத்தது போல் இருந்தது, அவனுக்கு. க்வாரண்டைனால் முடங்கிப் போய்விட்ட அருங்காட்சியகம் என்பதால் அந்நியக் குரல் ஒன்று ஒலிப்பது சாத்தியமே இல்லை.

“குஞ்ஞூ” என்று அதே சப்தம் மீண்டும் ஒருமுறை ஒலிக்க, பிடரி மயிரிலிருந்து கணுக்கால் வரை சிலிர்த்தது. கையில் இருந்த பிரஷை அப்படியே போட்டுவிட்டு, கதவைத் திறந்து வெளியே வந்தான். அருங்காட்சியகத்தின் மேலாளர் மலையாளி என்ற போதும் ஒருமுறை கூட அவர் மலையாளத்தில் அவனிடம் பேசியது கிடையாது தவிர அவர் குரல் ஒரு பழைய செட்டிநாட்டு வீட்டின் பராமரிக்காத மரபீரோவைத் திறந்து மூடும் கதவு ஒலி போல் சன்னமாக இருக்கும், இந்தக் குரல் பிரம்மாண்டமானது.

‘அது ஒரு பிரம்மையாகத்தான் இருக்க வேண்டும்’.

அது அம்மாநகரத்தின் எல்லைக்கு வெளியே இருக்கும் வாழ்வியல் அருங்காட்சியகம். நாட்டின் பல மாநிலங்களிலும் இருக்கின்ற மறைந்து போன, நலிந்து வரும் கலை, கைவினைகள், கைத்தொழில்கள், பாரம்பரியமிக்க கட்டடங்கள், தொழிற்கூடங்கள், பட்டறைகள் என எல்லாமுமே மீட்டெடுக்கப்பட்டும் ஆவணப்படுத்தப்பட்டும் இருக்கும்.  ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவர்களது இருப்பிடங்கள். அவர்கள் அவ்வூரில் இல்லாததாலோ, இருக்க முடியாததாலோ அவர்களுடன் சேர்ந்தே இடம்பெயர்ந்து அந்த அருங்காட்சியத்திற்கு  வந்துவிடும். அது போக கலை சார்ந்த வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள், ஆலோசனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள் என தொடர்ந்து நடக்கும். கைவினைக் கலைஞர்களுக்கான சிறிய சந்தை, புத்தக அங்காடி, நூலகம், முக்கியமாக ஓவியங்களைக் காட்சிப்படுத்த ஐந்து கலைக்கூடங்கள் இருக்கும். பெரிய அளவில் அயல்மாநில, அயல் தேசத்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வார்கள். எளிமையான ரிசார்ட்டுகள் கூட இருக்கின்றன.

அப்படி நிறுவப்படும் வீடுகளில் இருக்கும் எல்லாவற்றையும் அமைத்தப் பின்னர் பழமை மாறாமல் அப்படியே கொண்டு வந்துவிட உழைக்கும் அணியில் அவனது பங்கு முக்கியமானது. அது கலைப்பொருட்களை மீட்டுருவாக்கம் செய்யும் பணி. அதில் நிறைய ஆய்வுகள் நடக்கும். பெரும்பாலும் அவனுக்கு ஆய்வுக்கூடத்தில்தான் வேலை. அதனால்தான் மற்ற துறையினர் வேலை செய்யாமல் இருந்த காலத்திலும் அவன் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. எனினும் அவனுக்கு அப்போது ’டீம் ப்ளேயர்’ எனும் சொல் தந்த பயம் இருந்ததால், தனியாக வேலை செய்வதை ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டான்.

அவனை எல்லோரும் ரீஸ்டோரேஷன் ஆர்டிஸ்ட் என்று அழைப்பார்கள். அது ஒரு சவாலான பணி, இத்தகைய வேலையில் இருக்கும் ஒருவன் வெறுமனே கலையை மட்டும் தெரிந்து கொள்வதில்லை. வரலாறு, அரசியல், பண்பாடு குறித்தப் புரிதல்களும் இலக்கணங்களுக்கு நிகராக அறிவியலும் அறிவியலோடு ரசனையும் ஏன் கொஞ்சம் ஏமாற்றவும் கூட தெரிந்துகொள்ள வேண்டும்.

அவன் பணியாற்றும் ஆய்வுக்கூடம் அவ்வருங்காட்சியகத்திலுள்ள பெரிய கலைக்கூடத்தின் பின்புறமாக அமைந்திருப்பதால் வேறு எங்கே சொல்லவேண்டுமென்றாலும் அவன்  முதலில் கலைக்கூடத்தைதான் கடந்து செல்ல வேண்டும். கலைக்கூட தளத்தின் பிரத்தியேக வடிவமைப்பு ஒவ்வொரு காலடி ஓசையையும் இரண்டு மூன்று முறை எதிரொலிக்கச் செய்யும். பெரும்பாலும் நடமாட்டம் உள்ள அருங்காட்சியகமாக, மேலே இருக்கின்ற தளத்தில் வகுப்பறை, ஆய்வுக்கூடம், அலுவலகம், நூலகம் போன்றவை இருந்ததால் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும். அருங்காட்சியகம், அந்த ஊரடங்கு கட்டுப்பட்டால் ஐ.சி.யூவில் இருக்கும் நிம்மதியற்ற அமைதியை ஒத்த நிலையில் கலைபடைப்புகள் சூழ இருந்தது.

மெல்ல மெல்ல பூனை நடைபோட்டு ஹாலின் மையத்திற்கு வந்தான். அது ஒரு வழக்கமான ஓவியக்காட்சியாக அமையவில்லை. சுவரோவியத்திற்காக ஒரு சுவரையே இன்ஸ்டலேஷன் செய்திருந்தார்கள். எனினும் அந்தக் கூடத்தில் நடக்கவிருந்த பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சி, தொடங்கிட ஒருவாரம் இருக்கையில் ஊரடங்கின் காரணமாக நின்று போயிருந்தது.  பல வேலைகள் முழுதுமாக முடிக்கப்படாமலேயே தூசு படிந்து தன் அடுத்த பரிணாமத்தை அவை எட்டியிருந்தன.

அது பிரபல ஓவியர் ஒருவரின் கைவண்ணத்தில் செயற்கையாக சுவரெழுப்பி வரையப்பட்டிருந்த  முழுமை பெறாத ஃப்ரெஸ்கோ ஓவியங்களும் புடைப்புச் சிற்பம் போன்ற கலை வேலைப்பாடுகளும் பாழடைந்த கோயிலின் வாசனையைக் கடன் வாங்கியிருந்தது போன்ற உணர்வை அளித்தது. நான்கு மாதங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூசு படிந்து கொண்டிருந்ததும் அதன் காரணமாக இருக்கலாம். அவர் பிரபல ஓவியர் என்பது கூட வழக்கமான ஒரு சொல்தான். அந்த அருங்காட்சியகத்தின் மிக முக்கியமான டோனர்களில் ஒருவர் என்பதும் கூடுதல் அம்சம்.

அண்ணாந்து பார்த்தால் அரங்கின் டூம் பிரம்மாண்டமாய் தெரியும். ஆனால் இந்த ஓவியரோ இயற்கை வண்ணங்களாலான மண்டல ஓவியங்களை மேலைநாட்டு பாணியில், செயற்கை கூரையை வைத்து அதிலே அவ்வோவியங்களை வரைந்து வைத்திருத்தார்.  அரங்கினை விட்டு வெளியேறும் போது அவன் பால்யத்திலிருந்து வெளியேறியது போன்று இருந்தது.

***

அவன் பால்யத்தில் மூன்று நான்கு முறை மட்டுமே போய் வந்த அந்த ஆதிகேசவனின் கோயிலின் ஞாபகமே அக்கலைக்கூடத்தைப் பார்க்கையில் வந்தது. அந்த ஓவியரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அவனுக்கு இந்த ஞாபகம் வந்திருக்கலாம். அந்தக் கோயில் ஏனோ சின்ன வயதிலிருந்தே அவனுக்கு பயத்தை மட்டுமே நினைவூட்டுவதாக இருந்தது. அந்தப் பிரம்மாண்ட தூண்கள் கொண்ட பிரகாரமும் சதா பிளிறிக்கொண்டிருக்கும் யானையின் நினைப்பும் கதகளி கலைஞர்களின் புருவ அசைப்பும் அக்கோயில் மீதே ஒரு வெறுப்பைத் தந்தது. எல்லாவற்றையும் விட கடவுளை தரிசிக்க மூன்று செங்கல் அளவு உள்ள துளை வழியாக எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற விதி. விளக்கொளியில் தகதகக்கும் என்று சொல்வார்கள், அது கடவுளின் எந்தப் பாகம் என்று ஒருமுறை கூட அவன்  அறிந்ததில்லை. ஆனாலும் அவன் அம்மாவிடம் ‘பார்த்தேன்’ என்று பொய் சொல்லி வைப்பான்.

அப்பாவுக்குக் கிடைத்த வேலை மாற்றத்தால் அவ்வூரை விட்டு வந்ததில் பரம திருப்தி. ஆனால் ஏதோ ஒருநாள் அவன் டீ.வி பார்க்கச் செல்லும் வீட்டின் அருகேயுள்ள வீட்டில் இருந்த ஒரு பூசாரி (அப்போது நம்பூதிரிகளை அவன் கொண்டை பூசாரி என்று சொல்வான்) பற்றிய டீ.வி செய்தியை அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும் போது, அன்றைய இரவு முழுவதும் கதகளி நடனம் செய்யும் ஒரு கலைஞர் தன்னை அழைப்பதாக பயந்து பயந்து எழுந்தான். அவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது, அவனது தம்பி அவர்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் பெண்ணிடம் ‘அண்ணன் டவுசர்ல ஒன்னுக்குப் போய்ட்டான்’ என்று சொல்ல அவர்கள் இருவரும் கை கொட்டி சிரித்தனர்.

அவனுக்குப்                       பால்யத்தில் பல விசயங்களில் பயம் இருந்தது. ஏன் அந்த வீட்டு உரிமையாளரின் பெண், அவன் வயதுக்காரி. ஒருநாள் அவன் குளிக்கும்போது அவள் எட்டிப் பார்த்துச் சிரித்துவிட,  அவன் குளிக்கச் செல்லும்போதெல்லாம் பயத்துடனேயே இருந்தான். தான் குளிக்கச் செல்லும்போதெல்லாம் அவள் தலைகீழாகவும், தண்ணீர் குழாய் வழியாகவும், ஓட்டைப் பிரித்தும், பக்கெட்டுக்குள் இருந்தும், கதவை உடைத்துக் கொண்டும் எட்டிப் பார்த்துச் சிரிப்பதாக அவனுக்குக் காட்சிகள் தோன்றும். சட்டையோடே தண்ணீர் ஊற்றிக் குளித்ததற்காக அம்மாவிடம் அடி வாங்கிய ஒருநாள்  “அவ எட்டிப் பார்த்தா நீ ஏண்டா பயப்படுற, அவ மேலயே பேய்ஞ்சிடு” என்று சிரித்தான் அவன் தம்பி. அதற்குப் பின்னர் வெகு நாட்களாக அவள் எட்டிப் பார்த்தால் பேய்ஞ்சிடணும் என்றே தயாராக இருந்தான்.

இப்படியாக ஒரு பயம் வருவதும், அது நீங்குவதும் என சுவாரஸ்யமான வாழ்வில் கல்வி, உயர்கல்வி, வேலை, நிரந்தவேலை என்கிற அசலான பயங்கள் வந்தவுடன் பழையன மறந்துவிட்டன.

ஆனால் அசரீரி போன்றே ஒரு வெங்கலக் குரலுக்கு பயந்துபோய், அருங்காட்சியத்திலிருந்து வெளியேறி வெளியே அமைக்கப்பட்டிருந்த புல்வெளியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டான். தலைக்குப் பின்னே ஒரு செயற்கை குட்டையும், அதை குளமென நம்பச்சொல்லி நமட்டுச் சிரிப்பில் ஒரு கிராணைட் புத்தனும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

புத்தனைப் பார்த்ததும் அமராவதி ஞாபகமும் தன் முதல் வேலையும் ஞாபகம் வந்தது, முதல் வேலையாக சில காலம் அமராவதியிலும் பின்னர் விசாகப்பட்டினத்திலும் இருந்தான். தொடர்ந்து ஒரு டிசைனிங் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். பின்னர் ஆறு மாதத்தில் இன்னொரு வேலை, ஒரு வருடத்தில் மற்றொரு வேலை, அடுத்த மாதமே பழைய நிறுவனத்தில் வேலை என தொடர்ந்தது. ஒருநாள் வீட்டில் கடன்வாங்கி இங்கிலாந்து சென்று வந்தான். 6 மாத பட்டயப்படிப்பு நிழற்படத்துறையில். நல்ல வேலைகள் கிடைத்தபோதும் அவன் சொந்த ஊரில் வேலை செய்ய விரும்பினான். இரண்டு வருடம் வரை அவன் அந்தப் புகழ்பெற்ற ஸ்டுடியோவில் புனரமைப்பு செய்யும் துறையில் வேலை பார்த்தான். அவனை ஒவ்வொரு முறையும் இடமாற்றம் செய்யப் பணிப்பது அவனது பயம் தான். அங்கிருந்து இந்த அருங்காட்சியத்திற்கு வந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன.

மதம் மாறி, ஊர் மாறி, மாநிலம் மாறி தன் தந்தையின் வேலைக்கு ஏற்ப அவன் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டது. அவ்வாறே அவன் வாழ்வில் பயம் வெவ்வேறு வடிவங்களில், பல்வேறு மனிதர்கள் வாயிலாக மாறிக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு சிறுமியில் ஆரம்பித்து, பள்ளியில் பயாலஜி ஆசிரியர், ட்ரில் மாஸ்டர், ப்யூன்கள் கொடுக்கும் சர்குலர் மீதான பயம் என தொடர்ந்து வந்தது.

அருங்காட்சியகத்தில் இவனது வேலையை முழுமையாக ஏற்றுக்கொண்ட நிர்வாகம் அவனது கோரிக்கைக்கிணங்கி சவுண்ட் ப்ரூஃப் ஆய்வுக்கூடமாக மாற்றியிருந்தது. சத்தம் போட்டு அவன் அழைத்தாலும் வெளியில் நடமாடும் யாரும் கேட்கவும் முடியாது, யாரும் நடமாடப்போவதும் இல்லை.

“குஞ்ஞூ” பழக்கப்பட்ட குரல் இல்லை என்ற போதும், அவனுக்குப் பரிச்சயமானது போன்ற ஒரு சந்தேகமே பயம் தருவதாய் இருந்தது. முன்பு போல் அல்லாமல் அவன் மனம் அவனது நிலை, பயம் இரண்டையும் கவனிக்கும் மூன்றாவது மன அடுக்கு ஒன்றைப் பக்குவமாக வைத்திருந்தது. இதற்கு முந்தைய பணியில் அவன் சந்தித்த ஒரு நபர், அவனுக்கு அளித்த கவுன்சிலிங்கும் சில பயிற்சிகளும் அவனுக்கு உதவின. நான்கு வருடம் ஒரே இடத்தில் வேலை பார்த்தது, இவன் வாழ்வில் இதுதான் முதன்முறை. பக்குவப்பட்ட மன அடுக்கைத் தயார் செய்து வைத்திருப்பதன் மூலம் அவன் சூழல் அவன் பயம் இரண்டையும் ஆய்வு செய்வதற்குப் போதுமான அமைதியை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும் அவன் வெகுவிரைவாக வெளியே வந்துவிடுவான்.

‘என்ன தியானம் செய்யுறியா’ என்று கேட்டால் அவனுக்குக் கோபம் வரும். முதலில் தனக்குப் பயிற்சி கொடுத்தவரும் ‘தியானம் செய்’ என்றபோது அது தங்களுக்கு எதிரானது என்றான். அதனால் அவனுக்காகவே இந்த மூன்றாம் மன அடுக்குப் பயிற்சி என்கிற வகுப்பை எடுத்தார். அவர் அவனிடம் கட்டணம் கூட வாங்கவில்லை. அவனும் அவர் மீட்டுருவாக்கம் செய்ய விரும்பிய சித்தர்கள் பற்றிய ஆவணப்படத்தை மிகமிகக் குறைந்த கட்டணத்தில் செய்து தந்தான்.

புத்தனைப் பார்த்தபடி கண்களை மூடிக்கொண்டிருந்தவன் மூன்றாம் மன அடுக்குப் பயிற்சியை செய்யத் தொடங்கினான். பின்னர் பயம் கலைந்து மீண்டும் ஆய்வுக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். கலைக்கூடத்தின் முடிவுறா படைப்புகளைக் கண்கள் பார்த்தாலும், அதன் மீது எந்த நாட்டமும் கொள்ளாமல் உள்ளிருந்து குரலெழுப்பியவாறே கவனத்தை மாற்ற அவற்றைத் தவிர்த்தான். பொதுவாகவே அங்கு நிறுவப்படும் வீடுகளின் வரலாற்றை, அந்த வீட்டு உரிமையாளரின் பெயரை அவர்கள் அரங்கினுள் வைப்பார்கள். ஆனால் அந்த வீட்டிற்கு அப்படியான முழுமையான தகவல் இல்லை. தமிழக – கேரள எல்லையில் இருக்கும் ஒரு அக்கிரஹாரத்து வீட்டில் இருக்கின்ற கலாச்சார சங்கமம் என்று அந்த வீட்டிற்குத் தலைப்பை வைத்திருந்தார்கள். நியாயமாக அவர்கள் சொன்னதன்படி பாலக்காடு அருகேயுள்ள ஒரு தமிழக கிராமம் எது என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்றுதான் அவனுக்குத் தோன்றியது. முதற்கட்டப் பணிகள் ஆரம்பித்தபோது பாலக்காடு அருகே என்றுதான் சொன்னார்கள். ஆனால் மேலாளர் இந்த வீட்டில் மட்டும் ஊர் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

jeeva 02அந்த வீட்டில் தமிழகத்தின் கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள் என்று ஒருபுறமும், மற்றொரு பக்கம் கேரளத்துப் பொருட்கள் என்றும் (கேரளாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது) பிரித்து வைக்கும் குறிப்புகள் வேலை முடிந்திருந்தது. பெயர்த்து எடுத்த அந்த வீட்டில் வழக்கமாகக் கிடைக்கும் பொருட்களைக் காட்டிலும் கணிசமாகவே இருந்தது. தேவைக்கு மிஞ்சிய பொருட்களை விண்டேஜ் ஏஜென்சியில் விற்பதற்காக வாங்கிப் போய்விடுவார்கள் அல்லது எடுத்துப்போய் விடுவார்கள். அந்த வீட்டின் இன்ஸ்டலேஷன் முடிவதற்கு இறுதி வேலைகள் இவனுடையதே. மூன்று தொடிக்குளம் ஃப்ரெஸ்கோ ஓவியங்களின் பதிப்பு – பழைய  மர சட்டகத்தால் ஆனது, கண்ணாடி உடைந்த போது ஓவியங்களும் கிழிந்திருக்கின்றன.  ஆதிகேசவன், பரசுராமன், த்ரிவிக்ரமப் பெருமான் ஆகிய ஓவியங்களை மறுபடி வரைய வேண்டும். இணையத்தில் கிடைக்கும் மாதிரிகளை photoshop-ல் distort செய்தே கிட்டத்தட்ட சரியான அளவில் மாதிரிகளை உருவாக்கிட முடியும். இல்லாமல் போன பாகங்களில் அவற்றை ஒட்டி டச்சப் செய்தால் அது முடிந்துவிடும். நிழற்பட வேலைகள் முடிந்ததும் ஓவியங்களைச் சரிசெய்யத் தொடங்குவான். ஏற்கனவே ஆதிகேசவனின் படத்தைத் தரவிறக்கம் செய்து ப்ரிண்ட் செய்தும் வைத்திருந்தான்.

அவ்வீட்டில் பொருத்த வேண்டியது இரண்டே நிழற்படம்தான். ஒன்று சிறுமி, இரண்டாவது க்ரூப் ஃபோட்டோ.

அவ்வீட்டில் சிறுவயதில் இறந்துபோன சிறுமியாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டின் கன்னிதெய்வமென வணங்கிட பொட்டு வைத்திருந்ததால் முகம் மறைந்து போக, க்ரூப் போட்டோவில் அவள் சாயலில் இருக்கும் ஒரு பெண்ணின் முகத்தை அதில் வரைந்து கொண்டிருந்தான். ஈரம் காய்ந்து முடித்ததும் முகத்தை மீத பாகங்களின் தன்மைக்கு ஏற்ப பழையதாக்க வேண்டும். அதுவரை மற்றொரு வேலையைப் பார்க்கலாம் என்று உட்கார்ந்த போதுதான் அவனுக்குள் இத்தனை களேபரம்.

“family of Nampūtiri” எனும் க்ரூப் போட்டோவில் நம்பூதிரியின் முகம் மட்டும் அழிக்கப்பட்டது போன்று இருந்தது. வரைய வேண்டிய முகத்தின் referenceக்காக வேறு ஒரு படத்தை தந்திருந்தார்கள். உடற்கூறின்படி பொருத்தமில்லாமல் இருந்தாலும் அதுபற்றியெல்லாம் அவன் புகார் செய்யாமல் வாங்கிக்கொண்டான். அவனிடம்  “நீயாக ஏதாவது ஒன்றை வரை” என்றாலே இறந்து போன சிறுமியின் தந்தை முகம் எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஒன்றை வரைந்து இருப்பான். ஏனோ அவர்களும் சொல்லவில்லை அவனும் ஏன் என்று கேட்கவில்லை.

வாதுமைக் கொட்டைகளோடு ஆளிவிதைகளைச் சேர்த்து அரைத்துத் தயாரித்த இயற்கையான எண்ணை கொண்டு மவுண்ட்டிலிருந்து பிரிக்கப்பட்ட நிழற்படத்தின் வெண் பஞ்சினால் ஒற்றியெடுத்துத் துடைத்தான். கையில் வைத்திருந்த ட்ரையர் கொண்டு உலர்த்திவிட்டு பென்சிலால் நம்பூதிரியின் முகத்தில்  ஒரு புள்ளியை வைக்கும்போது மீண்டும் அதே குரல்,

“குஞ்ஞூ, நீ என்னே அறியுமோ?”

அவன் பின்னால் ஒரு உருவம் இருப்பதை அவன் முதுகின் நுண்புலன்கள் அவனுக்கு உணர்த்தின. சூழல், பயம், விழிப்பான அமைதியை நாடும் உள்மனம் கண்களை மூடியே இருந்தான். இப்போது மீண்டும் வெளியே செல்லக்கூடாது என்று தீர்மானித்து இருந்தான்.

“அச்சனும் அம்மையும் சுகமல்லே”

‘சூழல், பயம், விழிப்பான அமைதி… அவன் கெடக்கான் கிறுக்கன், நீ ஓடுரா டேய்..’

அவனுடைய புதிய கடவுளின் பெயரை உரக்கச் சொல்லியபடி மீண்டும் வெளியே செல்ல யத்தனித்தான். கணப்பொழுதில் அந்த உருவம் தன் இடத்தை மாற்றிவிட்டு கதவின் அருகில் சென்றது.

“பயப்படண்டா குஞ்ஞே”

அவன் வெளியே போக முடியாது என்றே தெரிந்தது. அவனது பால்யத்திலிருந்தே ஆச்சாரியார்கள், நம்பூதிரிகள் போன்ற எந்தப் பூசாரிகளைப் பார்த்தாலும் ஒருவித அச்சம் கௌவும்போது, இப்படி ஆவியாகவே ஒருத்தரை காணும்போது அவனையும் மீறி கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

“குஞ்ஞே, நீ என்னே அறியுமோ?”

அந்த உருவம் நம்பூதிரி போல இல்லையென்றாலும், அவனைத் தெரிந்தவனாகக் காட்டிக்கொள்ளும் அதனை என்னவென்று சொல்ல முடியாமல் பதட்டமடைந்தான்.  சற்றைக்கெல்லாம் கொஞ்சம் தைரியத்துடன்.

“வாட் டூ யூ வாண்ட் ஃப்ரம் மீ” என்றான்.  ஆவிக்கு என்ன மொழி தெரியும் என்கிற குரல் அவனுக்குள் கேட்டது.

அவ்வுருவம் மேஜையிலிருக்கின்ற அலுவலகம் கொடுத்த நம்பூதிரியின் போட்டோவைப் பார்த்து கையினை நீட்ட அந்த நிழற்படம்  காற்றில் பறந்து குப்பைக்கூடையில் விழுந்தது.

“இனி நீவரைஞ்ஞோளு”  என்றது.

உள்ளேயெழும் எந்தக் குரலுக்கும் பதில் சொல்லாமல் மேஜையின் மறுபுறம் சென்று கதவின் அருகில் இருக்கின்ற அவ்வுருவத்தைப் பார்த்தே அந்த நிழற்படத்தை வரைய ஆரம்பித்தான்.

அவ்வுருவத்தின் முகமும் அவனுக்கு ஏற்கனவே பரிச்சயமானது போன்றே இருந்தது.  ஆனால், அவனது சந்தேகத்தின் தடயங்களைப் புரிந்துகொண்டது போல அந்த உருவம் லேசாக சிரித்தபடியே நின்றது.

“மோனே… நிங்களொரு கலாக்காரன் அல்லே?”

‘அதே’ என்றான். புள்ளிகளை வரையும் பொழுது நிறைய துர்காட்சிகள் மனத்திரையில் ஓடின. ஒரு சிறுமியின் மரணம், தற்கொலை, அநாதைப்பிணம், துர்மரணமென பழைய திரையரங்குகளின் ஸ்லைடுகளாக ஒவ்வொன்றும் சம்பந்தமில்லாத காட்சிகள்.

“ஆ புறத்துள்ள  சித்திரங்களெல்லாம் நீ வரைஞ்ஞதாணோ”

‘ அல்ல’ என்று கோபமாகத் தலையாட்டும் போதே வரைந்து முடித்திருந்தான்.

“ஓ அங்கனையானோ. பக்ஷெ  நீ இனியும் என்னே  மனசிலாக்கிட்டில்லா”

மூன்றாவது முறையாக அது கேட்டபோது. கட்டுப்பாடு இழந்தவனாய் கத்த ஆரம்பித்தான். கையில் வைத்திருந்த பிரஷ்ஷினை அந்த உருவத்தின் மீது தூக்கியெறியும்போதே அவ்வுருவம் காணாமல் போனது.

அடுத்த கணமே அலுவலகம் நோக்கி ஓட ஆரம்பித்தான். ஆய்வுக்கூடத்தைத் திறந்ததும் அவன் பார்த்த காட்சி அவனை உறைய வைத்தது. உடனேயே கதவைச் சாத்தினான். அவனுக்குப் பழக்கமுள்ளவர்போல் பேசிச்சென்ற உருவம், தான் வேலை செய்யும் புது ப்ரொஜக்ட், தன் பால்ய நினைவுகள், கலைக்கூடத்தில் இருக்கும் ஓவியக்காட்சி இவைகளுக்குள்ளே இருக்கின்ற தொடர்பு குறித்த குழப்ப ரேகைகள் ஒரு அரூப கோட்டுச்சித்திரத்தை கேன்வஸ் இல்லாமலேயே வரைய ஆரம்பித்தது.

கொண்டு வந்து இன்ஸ்டால் செய்யும் வீடுகளெல்லாம் அதில் வாழ்ந்தவர்களின் கதையையும், வாழ்க்கையையும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது என்று லைப்ரரியன் சொல்வார். அவர்களின் சாபங்களைதான் நாம் கட்டணம் கட்டி போட்டோ எடுத்து ரசிக்கிறோம் என்று அவர் பேசியது அவனுக்கு நினைவில் வந்தது. அதனாலேயே பெயர்த்து எடுத்துவந்த சுடலைமாடன் கோயில் அருகே அவர் எப்போதும் செல்வதில்லை.

அப்போது அவன் வேலை  செய்யும் ப்ரொஜக்ட் வீட்டில் பொட்டு வைத்த சிறுமியின் போட்டோவை எடுத்துப் பார்த்தான். அந்த வீட்டின் கன்னி தெய்வம் என்கிற டேக்லைன் கொடுத்து அதற்குக் கதை சொல்லும் ஒரு ஸ்டிக்கரும் ஒட்டுவதற்காக எடுத்து வைத்திருந்தார்கள். அந்தப் படத்தை திருத்தும் போதும் மேனேஜ்மெண்ட் கொடுத்த படத்தில் இருக்கின்ற முகங்களோடு ஒத்துப்போகாமல் வேறொரு முகம் அதில் இருந்தது. சொல்லப்போனால் அது அவன் பால்யத்தோழியின் முகம். அவளது அம்மா தன் கணவனின் குடிபோதை தகராறு பொறுக்காமல் அவளது மகளையும் சேர்த்துக் கொளுத்திக் கொண்டாள். அவன் அம்மா அம்முகத்தைப் பார்த்து வாந்தி எடுத்தபடி மயங்கிப்போனாள். ஆனால், அவனது இத்தனை கால அனுபவத்தில் வேலையில் நிகழாத பிழைகள் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்தன.

கொஞ்சம் தைரியத்தை வளர்த்தபடி மீண்டும் கேலரியின் கதவுகளைத் திறந்து முன்னேறினான். அவன் முன்னே இருந்தது பால்யத்தின் நினைவில் இருந்த அந்த பிரம்மாண்ட கோயிலின் பிரகாரம். அப்போது ஐந்தாவது முறையாக அவன் கோயிலுக்குள் செல்வது போல இருந்தது. யானைக்கு வைத்திருந்த தீவனம் சிதறிக்கிடந்தன, பசுஞ்சாணமும் ஒரு ஓரத்தில் இருந்தது. துவாரங்கள் வழியே வீசும் சில்லென்ற காற்றும் மேலேபடுவதை உணர்ந்தான். துலாபாரத்தின் நோய்மையுற்ற ‘க்ரீச்’ சப்தம் அவனிடம் ஏதோ ஒன்றை செய்யச் சொல்லியது.

மீண்டும் ஆய்வுக்கூடத்திற்குப் போகலாமா என்கிற தன் குரல் அவனை வந்த பாதையிலேயே திரும்பப் பணித்தது.

அப்போது எதிர்குரலாய்.

மீண்டும் “குஞ்ஞூ”. மீண்டும் முன்னேறினான்

எண்ணெய், நெய், மஞ்சள், சந்தனம் கலந்த கருவறை வாசனை, தன்னை எப்போதும் அழைத்துச் செல்லும் தாத்தாவின் உச்சாடனம் காதில் கேட்டது. “நமோ நாராயணாய”. அவன் நான்கு முறை மட்டுமே சென்றிருப்பதாக அவன் அதுவரை நினைத்து வந்தது தவறு. அவன் சிலநூறு முறையாவது அங்கு சென்றிருக்க வேண்டும் என்று புரிந்தது. கருவறை என்பது வாசனையில் தான் தெரியும், எப்போதும் எரியும் அந்த பிரம்மாண்ட குத்துவிளக்கு கூட எரியவில்லை. ஏதேதோ துளைகள் வழியே கம்பிபோல பாய்ச்சிய ஒளியைப் பிடித்து மேலும் நடந்தான். சாஸ்திரம் என்று சொல்லி இருள்படுத்தப்பட்டிருந்த அக்கோயிலின் கருவறை வாசலுக்கு அருகேயுள்ள இரண்டு செங்கல் அளவுள்ள துவாரம் வழியே எட்டிப் பார்த்தான். பிரகாரத்தில் நடக்க ஆரம்பிக்கும்போது உடன்வந்த, தான் எட்டிப்பார்க்க தூக்கிவிடும் தாத்தாவின் வாசம் அந்த கணமே மறைந்தது. தன் கையிலிருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தைக் கொண்டு, சுவற்றின் ஓட்டை வழியே ஆதிகேசவனைப் பார்த்தான். இதற்கு முன் எட்டிப்பார்த்த போதும் தெரியாத கேசவனின் திருமுகம் அவன் செல்போன் ஒளிபடுகையில் தகதகவென அவன்மீதே வேறொரு மஞ்சள் வண்ணத்தில் பிரதிபலித்தது, அவன் முகத்தில் பட்ட ஸ்வர்ண ரேகையில் பல இரத்தப்பலிகளின் திட்டுகள் வாசம் குன்றாது இருந்தன. கேசவனின் பாதங்களில் தன் தலையால் முட்டிக்கொண்டிருந்த ஒரு உருவத்தின் கேவல் உரத்துக் கேட்க ஆரம்பிக்க. மென்னியைப் பிடிக்கும் கோபம் கொண்டான். சட்டென்று தன்னை விடுவித்துக்கொண்டு கலைக்கூடத்தை விட்டு வெளியேறினான். கழற்றப்பட்டிருந்த தன் சட்டைப் பொத்தான்களும், வியர்த்தே நனைந்து போன அவன் சட்டையும் அவனை மேலும் பயமுறுத்தியது.

விறுவிறுவென்று அலுவலகத்திற்குள்ளே சென்றான். மேலாளர் வெளியே சென்றிருப்பதையறிந்து,  போனில் அழைத்தான்.

“சொல்லு மோனே”

‘சார் நம்ம கேலரியில ஒரு ஷோ, இன்னும் இனாகரேஷன் பண்ணாமலேயே இருக்கே சார்’

“ஆமா நம்ம சுபாஷ் மேனனோடது”

‘ஆமா நம்ம சுபாஷ் எந்த ஊர் சார்?’

அவன் எதிர்பார்த்த ஊரின் பெயரையே அவரும் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *