கூத்து

pandiyan 01“சரி…. இறங்கு” என்றான் சேகர்.

நான் அவசரமாக இறங்கி நின்றேன்.

தலைக்கவசத்தைக் கலற்றியபோது ‘டும் டும்டும் டும் டும்டும்’  என கதி மாறாமல் முரசு அதிரும் சத்தம் கேட்டது. ஒலிபெருக்கியில் சீனத்தில் ஆண் குரல் எதிரொலிகளோடு கேட்டது.

அவன் மோட்டர் சைக்கிளை பர்கர் வண்டிக்குப் பின்னால் சாய்வாக நிறுத்தி விட்டு சாவியை உருவிக் கொண்டு வந்தான். தலைக்கவசத்தைக் கையில் எடுத்துக் கொண்டோம். அவன் பாய்ச்சலாக முன்னே நடந்தான்.

சாலை விளக்கின் மஞ்சள் ஒளியின் கீழ் பழைய நகரம் மர்மங்கள் நிரம்பியதாகத் தெரிந்தது

“இன்னைக்கு செத்தான்டா அவன்…” சேகர் சொன்னான்.

நான் சேகரின் பக்கமாக நடக்கத் தொடங்கினேன்.

பெரிய சாக்கடையின் மேல் போடப்பட்டிருந்த இரும்பு பாலத்தில் நடந்து இரண்டு கட்டிடங்களுக்கு இடையிலான சந்தில் நுழைந்தான். பாதாள சாக்கடையில் நீர் சலசலத்துக் கொண்டு ஓடும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. பகலில் காலணி தைக்கும் மலாய்க்கார்கள் தங்கள் கடையைப் பெட்டிக்குள் அடக்கி ஓரமாக வைத்திருந்தனர். பக்கமாக, அட்டைப் பெட்டியை விரிப்பாக்கிக் கொண்டு கிழவன் ஒருவன் ஆழ்துயிலில் இருந்தான். காலையில் அவன் மார்கேட் பக்கம் சென்று சாப்பாட்டுக் கடைகள் ஓரமாக அமர்ந்து கொள்வான்.

சற்று நேரத்தில் பழைய கடைவரிசையின் பின் வாசலுக்கு வந்து நின்றோம். சில கடைக்காரர்கள்  பின்வாசல்  விளக்குகளை எரியவிட்டிருந்தனர். அவை பிரகாசம் குறைந்து மங்கலாக வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தன. குழிகள் விழுந்த தார் பாதை நீண்டு கிடந்தது. எங்களைக் கண்டதும் குப்பைத்தொட்டிகளின் அருகில் இருந்த பூனைகள் பதுங்குவதைப் பார்த்தேன்.

சந்தன மணம் பரவத்தொடங்கியது. கொஞ்ச தூரம் நடந்ததும் நெடுகிலும் முனை எரிந்து கனன்று கொண்டிருக்கும் ஆளுயர ஊதுபத்திகளைக் காண முடிந்தது. அவை நாளை மாலைவரை நின்று எரியக்கூடும். இது விழாக்காலம். நரகலோகத்தின் வாசல் இந்த பதினைந்து நாட்களுக்குத் திறந்துவிடப்படும். மூதாதையரின் ஆவிகள் அங்கிருந்து புறப்பட்டு வரும். அவர்களுக்கு உணவு தேவை. நீர் தேவை. உடைதேவை. பணமும் பகட்டும் தேவை. அவற்றை பூமியில் வாழும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சரியாக செய்து வைக்க வேண்டும்.

காலையோ மதியமோ தர்பனமாக எரிக்கப்பட்ட தங்கநிற காகித நோட்டுகளின் சாம்பல்கள் வரிசையாகக் குவியல் குவியலாகக் கிடந்தன. காற்றின் வேகத்தில் அவை சாலை முழுதும் பறந்து பறந்து விழுந்துகொண்டிருந்தன.  தரையில், காலையில் வைக்கப்பட்ட படையலின் எச்சங்கள் மீதம் இருந்தன. கண்ணாடி கிலாஸில் சீனத்தேனீரும் இனிப்பு பிஸ்கட்டும் ஒரு ஆப்பிள் பழமும் பேப்பர் தட்டில் ஓரமாக இருந்தன. தூரத்தில் நாய்கள் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டது.

சேகர் அவற்றை சலிப்பாக பார்த்தான்.

“போன வருசமும் இதே மாதிரி ஹங்கிரி கோஸ்ட் டையத்துலதான் இவன தேடிக்கிட்டு போனோம்….”

எனக்கு அது நன்கு நினைவிருந்தது. “ஆமான்டா அதுக்குள்ள ஒரு வருசம் ஓடிடுச்சி…”

“ஆனா இந்த நாயி நம்மல ஏமாத்திகிட்டு திரியிது…. இன்னைக்கு செவுனியிலேயே உட்ர அரையில பய அங்கியே பீ மூத்திரம் போவனும். மயிராண்டி என்னா பேச்சு பேசறான்”  சேகருக்குக் கைகள் முறுக்கேறியதை உணர முடிந்தது.

“நீ அவங்கிட்ட திரும்ப பேசுனியா?”

“இப்ப ஃபோன் நம்பர மாத்திட்டான் போல… கெடைக்க மாட்டுது”

சேகருக்கு லேசாக மூச்சு வாங்குவது தெரிந்தது. ஆனாலும் நடையில் வேகம் கூட்டினான்.

“அவன் இங்கதான் இருப்பான்னு உனக்கெப்படி தெரியும்…”

“நல்லா தெரியும். இந்த வாரம் அவனுக்கு இங்கதான் வேலை… கூத்து ஆரம்பிச்சிடுச்சில… அவன் பார்கிங்ல இருப்பான்”

நாங்கள் கொஞ்சதூரம் நடந்தோம். ஆள் நடமாட்டம் இல்லை. கடைகளின் பின் வரிசையில் இருந்த மண்பரப்பில் எழுமிச்சை செடிகளையும் நெல்லி மரங்களையும் சிலர் வளர்த்திருந்தனர். மண்சாடிகளில் பலவகை பூச்செடிகளும் சிராய் போன்ற தாவரங்களும் இருந்தன.  மார்கேட் இருக்கும் திசை நோக்கி நாங்கள் போனோம்.

திடீர் என்று சைய்ய்ய்ய்ய் என்ற பெரிய இரைச்சலோடு ஒரு பெண் கீய்ய்ய் என்று கத்தும் சத்தமும் ஒன்றாய் கேட்டது… ஒரு கடையின் பின் வாசல் கதவை யாரோ படார் என்று திறந்து டமார் என்று மூடினார். கதவு ஓரத்தில் இருந்த பெருத்த எலி ஒன்று கிரீச்சிட்டுக் கொண்டு மண்சாடிகளுக்குப் பின்னால் ஓடியது.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

சீனர்கள் சாமி கும்பிடும் மாதம்.  இறந்தவர்கள் ஆவியெல்லாம் பூமியில் அலையும். வெளியே சுற்ற வேண்டாம் என அம்மா சொன்னது மனதில் பளிச்சென தோன்றியது.

சேகரைப் பார்த்தேன். அவன் டமார் என்று சாத்திக் கொண்ட கதவை எரிச்சலாகத் திரும்பிப் பார்த்துவிட்டு மேலே நடந்து கொண்டிருந்தான்.

என் சட்டை பையில் இருந்து சிகரெட்டை எடுத்து அவனுக்கு ஒன்று கொடுத்து விட்டு நான் ஒன்றை பற்றவைத்துக் கொண்டேன். எதிர் காற்றில் சிகரெட் புகை என் முகத்திலேயே படர்ந்தது.

எங்களுக்கு ஆச்சாயை அறிமுகப்படுத்தியவன் டேவிட்.

“அதெல்லாம் பிரச்சனை இல்லை மச்சான்… ஆச்சாயிக்கு புக்கிட் அமான்காரனுங்கல தெரியும். அவன் தைக்கோ…நெரைய கொண்டேக் இருக்கு. இதெல்லாம் சின்னாங்கா செட்டல் பன்னி குடுத்துடுவான்… நாளைக்கு நான் அவன பார்க்க கூட்டிப்போறேன். தொப்போய் கடையிலதான் இருப்பான்”

டேவிட் அவ்வளவு நம்பிக்கையாகச் சொன்னான். மறுக்கவோ சந்தேகிக்கவோ முடியாத தொனி.

சேகருக்கும் எனக்கும் ஒரே மாதிரி பிரச்சனை இருந்தது. அடுக்கு அடுக்காக இருக்கும் சாலை போக்குவரத்து சம்மன்கள். சேகர் சொந்தமாக லாரி வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கியது முதல் எனக்குப் பழக்கம். நான் கொஞ்ச நாள் அவனுடன் வேலை செய்தேன். பிறகு நானும் ஒரு டன் லாரி வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கினாலும் நான் அவனைப் போல தூர ஓட்டம் ஓடுவதில்லை. செபராங் பிறையில் இருந்து ஜூரு, கூலிம், தைப்பிங், பாயான் லெப்பாஸ் இப்படி சுத்திலும் தொழிற்சாலைகள் இருப்பதால் நான் அந்த வாடிக்கைகளை மட்டும் எடுத்து செய்வது வழக்கம். கூடுதலாக வீடு மாற்றலாகி போகிறவர்களின் பொருளை எடுப்பதும் உண்டு. அவ்வளவுதான். போதுமான வருமானம் உண்டு. ஆனால் என்னதான் சாமர்த்தியமாக லாரியை ஓட்டினாலும் எப்படியாவது சம்மன் வந்துவிடுகின்றது. போன ஆண்டு நான்கு பங்களா காரன்களை லாரியில் ஏற்றியதற்காக  சாலை தடுப்பில் சம்மன், ட்ராபிக் விளக்கில் இரண்டு சம்மன்.  கைப்பேசியில் பேசியதற்காக இரண்டோ மூன்றோ சம்மன்கள்… இப்படியாக சம்மன்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

சேகர் ராத்திரி ஓட்டம் அதிகம் ஓடுவான். இரவில் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு லாரி ஓட்டும் போது வேக கட்டுப்பாடெல்லாம் பார்க்கவா முடியும்? பட்டர்வெத்தில் இருந்து சிரம்பான் வரைக்கும் ஓடுவான்.  சில முறை பாசிர் கூடாங் போனதாகவும் சொன்னான். எங்கேயாவது சாலை போக்குவரத்துத் தடுப்பு இருந்தால் முதலில் நிறுத்தப்படுபவை லாரிகள்தான். கூடுதல் சுமைக்கு பயந்து பழைய சாலையிலேயே போனாலும் சில சமயங்களில் மாட்டிக் கொள்வதுண்டு. ஜேபிஜேவிடம் மாட்டினால் உடனே சம்மன்தான். அங்கேயே தடித்த டைரிக்கு  கீழ்  ஐம்பதோ நூறோ வைத்து சில நேரங்களில் செட்டல் செய்து விடலாம், சில நேரங்களில் முடியாது. எது எப்போது முடியும் அல்லது முடியாது என்பது அங்கு நிற்கும் போலீஸ்காரர்களுக்குத்தான் வெளிச்சம். கூடாங்கில் சுமையை இறக்கிவிட்டால் சுமை குறைந்துவிடும். ஈப்போ மேட்டில் கூட லாரி காற்று மாதிரி பறக்கும்.

முன்பு ஜமீல் அவனுடன் உதவிக்கு இருந்தான். ஜமீல் பண்ணும் சேட்டைகளை சேகர் என்னிடம் சமயங்களில் சொல்வான். சேகர் பாதி தூரத்தில் லாரியை அவனிடம் கொடுத்து விட்டு ஜேக்கேட்டை இழுத்துத் தலையை மூடிக்கொண்டு படுத்து விடுவானாம். சேகர் திடுக்கிட்டு விழித்துப் பார்க்கும் போது லாரி சிறுத்தை போல பாய்ந்து கொண்டிருக்குமாம்.  பதறிக் கொண்டு லாரியை நிறுத்தி சேகரே ஓட்டத்தொடங்குவான்.  ஜமீல் கெத்தும் தண்ணீர் குடித்து விட்டால் லாரியை ஃபொர்மிலா ஒன் போல ஓட்டத்தொடங்கிவிடுவானாம். “ஒரு போத்தையில ஆயேர் கெத்தும எங்கிருந்தோ வாங்கிட்டு வந்து மறைச்சி வச்சிக்குறான். அத குடிச்சிட்டா சூருல  எண்ணெயிலேருந்து காலு நவுறாதுபோல.” என்று ஒருமுறை சேகர் சொன்னான்.

பிறகு நிதானமாக ஒரு நாள் சம்மன் நோட்டீஸ் வீட்டுக்கு வந்து தொலையும்போது சேகர் என்னிடம் புலம்புவான். பழைய சம்மன்கள் பல இழுவையில் கிடக்கும் போது புதிதாகக் கூடும் சம்மன்கள் கலவரப்படுத்தும்… லாரியை அவ்வப்போது பழுதுபார்க்கும் செலவோடு இந்த சம்மன்களுக்கும் வேறு அழ வேண்டியிருக்கும். ஆனாலும் எப்படியாவது சில சம்மன்களுக்காவது தண்டம் செலுத்தி கருப்புப் பட்டியலுக்குள் பெயர் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லாரி சாலையில் ஓடியே ஆகவேண்டும். லாரிதான் எங்களுக்கு மொத்த முதலீடுமே… சேகர் இரண்டு குடும்பங்களை இந்த லாரியை நம்பி ஓட்டிக் கொண்டிருப்பவன்.

சாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் அடையாள அட்டையைக் கொடுத்தால், சம்மன் விவரங்களைப் பிரிண்டெடுத்துக் கையில் கொடுத்து விடுவார்கள். கூடவே நாம் கேட்டால் பணத்தை எப்படி கட்டி சமாளிக்கலாம் என்று அறிவுரைகளும் கிடைக்கும்.  சில வருடங்களுக்கு முன்பு, முகப்பில் கூரிய மூக்கு உள்ள ஒரு பெண் அமர்ந்திருப்பாள். முகத்தில் எந்த சலனமும் இல்லாது கணினி திரையையே பார்த்தபடி இருப்பாள். அவள் நம்மை பார்க்கிறாள் என்பதுகூட நமக்குத் தெரியாது.  அவளிடம்….. “எப்படி புவான்” என்று குழைவாகக் கேட்டால் அவள் அந்தச் சொற்களின் சமிக்ஞையைப் புரிந்து கொள்வாள். தனி தாளில் நம் விபரங்களை எழுதிக் கொடுத்தால் சம்மனில் உள்ளதில் பாதியை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவாள். பிறகு சில நாட்கள் சென்று மீண்டும் சோதித்துப் பார்த்தால் குறிப்பிட்ட சம்மன்கள் இருக்காது. எல்லாம் மாயம்தான். அதைப்பற்றியெல்லாம் அதிகம் யோசித்துக் கொண்டிருப்பதில்லை.

ஆனால், திடீர் என்று அவளை முகப்பிடத்தில் காணவில்லை. வேலை மாற்றலாகி போய்விட்டாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் அதே பாலாயில் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்ட விபரம் பிறகு தெரிந்தது.  புதிதாக வந்த நபர் சரியான கடுகடுத்தான். நானும் “தோலோங்  இஞ்சே… தோலோங் துவான்”  என்று பலவித குழைவுகளுடன் சிக்னல் கொடுத்தும் ‘நீ தவறு செய்தால் நீதான் அனுபவிக்க வேண்டும்” என்று கிண்டலாகச் சொல்லி அனுப்பிவிட்டான்.  எனக்கு செம எரிச்சல்.  ‘போடா இவனே’ என்று மனதுக்குள் ஏசிக் கொண்டு வந்து விட்டேன்.

ஆனால், லாரிக்கு சாலை வரி எடுக்கும் போதுதான் பிரச்சனை வந்தது. என் பெயர் கருப்புப் பட்டியலில் இருந்தது.  சேகருக்கும் இதே பிரச்சனைதான். சில சம்மன்களை மொத்தமாகத் தீர்த்தால்தான் ரோட் டெக்ஸ் எடுக்க முடியும் என்ற இக்கட்டில் இருந்த போதுதான் டேவிட் வந்தான். திருட்டு ஸ்க்ராப்ட் ஏற்றி மாட்டிக் கொண்ட கேஸை டேவிட், ஆச்சாயை வைத்துதான் சரிபடுத்திக் கொண்டதாகச் சொன்னான்.

தொப்போய் கடையில் ஆச்சாய் எங்களுக்காகக் காத்திருந்தான். மீன் குளத்துக்குப் பக்கத்தில் இருந்த மேசையில் தனியாக அமர்ந்திருந்தான்.  பெரிய தொந்தியும் முன் தலை வழுக்கையும் இருந்தது. கருப்புத் தோல் என்றாலும் சீனனுக்குரிய சப்பை மூக்கும் சுருங்கிய கண்களும் அவன் தோற்றத்தை வித்தியாசப்படுத்தின.

முன்கையில் கடல்நாகம் பச்சைகுத்தியிருந்தான். அது கை முட்டிவரை வாய் பிளந்து நீண்டிருந்தது.  கழுத்தில் முறுக்கிக் கொண்டு வெள்ளிச் சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது. உடலைப் பிடித்தபடி டீசர்ட் போட்டிருந்தான்.  பீர் பாட்டிலுக்குப் பக்கத்தில் இரண்டு கைப்பேசிகள் இருந்தன. நாங்கள் அவனுடன் எந்த மொழியில் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினோம். டேவிட்தான் ஆரம்பித்தான். மலாயில் பேசினான்.

ஆச்சாய் கொச்சையான மலாயில் பேசினான். சில தமிழ் சொற்களையும் கலந்து பேசினான். பெரிய குரல். சத்தமாகத்தான் பேசினான்.

“எனக்கு எல்லா இடத்துலயும் ஆளுங்க இருக்காங்க… உங்க பேர்ல இருக்குறpandiyan 02  எல்லா சம்மானையும் மொத்தமா எடுத்துட முடியும். இதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர். டாத்தாவை கிலீன் பன்னிடுவாங்க. ஆளுக்கு ஆயிரம் கொடுத்தா போதும். நான் உதவிதான் செய்கிறேன். எனக்கு ஒன்னும் வேணாம். இன்னிக்கி சனிக்கெழமை… ஆபீஸ் சாத்தியிருக்கும். நாளைக்கு ஞாயித்துக் கிழமை. திங்கக்கிழமை காலையில் முடிச்சிடலாம். ஓக்கேவா. நீங்க திங்ககிழமை சாயங்காலம் ரோட் டெக்ஸ் எடுத்துக்கலாம்”

அவன் மிக நிதானமாகப் பிசிறு இல்லாமல் விளக்கினான். திங்கள் கிழமை எங்கள் சம்மன்கள் முழுவதும் நீங்கிவிடும் என்றது நிம்மதியாக இருந்தது. அதில் பல ஆண்டுகள் கிடப்பில் இருக்கும் சம்மன்களும் உண்டு.  நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை.   கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டோம். பெயர் விபரங்களையும் எழுதிக் கொடுத்தோம். டேவிட்டைத் தனியாக அழைத்துப் போய் அன்று இரவு பீர் குடித்தோம். அப்போது டேவிட் ஆச்சாயைப் பற்றி கொஞ்சம் தகவல் சொன்னான்

“அவன் சின்டியன் மச்சான்… தோலுதான் கருப்பு. ஆனா சீனம்தான் பேசுவான். அப்பன் சீனன். பொண்டாட்டியும் சீனச்சிதான். தைக்கோ மாதிரி இருப்பான். தங்காய் வச்சிருக்கான் போல.. ஆளுக்கு நெரைய நெட்ர்வெர்க் இருக்கு…” என்று சொன்னவன், மார்கேட்டில் நடந்த சண்டை, வங்கி கடன் கட்டாமல்  இழுத்துச்செல்லப்பட்ட வாகனங்களை ஆச்சாய் மீட்டுக் கொடுத்தது என சில கதைகளைத் தத்ரூபமாகச் சொன்னான்.

ஆனால் அது நடந்தது போன வருடம். இதே ஜுலை மாதம். அப்போதும் இப்படிதான் ஹங்ரி கோஸ்ட் விழா நடந்து கொண்டிருந்தது. சீனர்கள் வீட்டுப் புழக்கடையில் வாட்டிய வாத்து, கோழி, பன்றி என ஊதுபத்தி புகைக்கு நடுவே படையலாகப் படுத்துக் கிடந்தன. முன்னோர் ஆவிகள் வந்து அவற்றைச் சாப்பிட காத்திருந்தன.

ஆச்சாய் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. எங்கள் பணத்தைதான் ஆச்சாய் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டான். நாங்கள் தடுமாறிப் போனோம். கையில் இருந்த பணத்தையும் ஆச்சாயிடம் கொடுத்து ஏமாந்துவிட்டோம். சேகர்தான் ரொம்பவும் அல்லாடினான். ரோட்டெக்ஸ் இல்லாமல் தூர ஓட்டம் ஓட அவன் பயந்தான். அந்த மாதம் புதிதாகக் கிடைத்த மூன்று ட்ரீப்களை அவன் கைவிடவேண்டியதாகிவிட்டது. பின்னர்,  எப்படியோ தட்டுத்தடுமாறி கடன்வாங்கி  சாலைவரியைப் புதுப்பித்துக் கொண்டாலும் சம்மன்களின் பட்டியல் அப்படியேதான் இருப்பது கடுப்பேத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு சாலை வரி எடுக்கும்போது மீண்டும் சிக்கல் வரலாம்.

ஆச்சாயிடம் கொடுத்த பணத்தை மீட்டுவிட ஒரு வருடமாகப் போராடிக் கொண்டுடிருக்கிறோம். டேவிட் சிங்கப்பூருக்குப் போய் விட்டான். ஆச்சாய் அடிக்கடி கைப்பேசி எண்களை மாற்றிக் கொள்கிறான். அப்படி இப்படி தேடி கண்டுபிடித்து அழைத்தாலும் திமிரான பதில்தான் அவனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது.

கடைசியாக சேகர் அவனுக்கு அழைத்த போது சேகரையும் அவன் அம்மாவையும் கெட்டவார்த்தையில் திட்டியதோடு ‘முடிந்தால் போய் போலீஸில் புகார் செய்து கொள்’ என்று சாவால் விட்டதாக சேகர் கண்கள் சிவக்கச் சொன்னான்.

நாங்கள் மார்கெட் சாலைக்கு அருகில் வந்ததுமே மின்சார பல்புகளின் வெளிச்சமும் பெரும் ஆரவாரமுமாக இருந்தது.  சீன முரசின்  டொங் டொங்  அதிர்வும் சிம்பல்களின் சிலிர்ப்பும் இரவு நேரத்தை உற்சாகமாக்கிக் கொண்டிருந்தன.  பெண் ஒருத்தி கீச்சுக் குரலில் இழுத்து இழுத்துப் பாடிக்கொண்டிருந்தாள்.  அது ஈனமான அழுகை போலவும் கேட்டது. பல்வேறு இசைக்கருவிகள் விட்டு விட்டு இசைக்கப்பட்டன.

கூத்து மேடை மார்கேட்டுக்கு எதிர்புறம் இருந்த துவா பே கோங் கோயிலை மறைத்துக் கொண்டிருந்தது.  ஒருமீட்டர் உயரத்திற்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது.  கூரையும் மின்சார விளக்குகளும் பொருத்தப்பட்ட உறுதியான மேடை. வழக்கமாக அது லாரிகள் நின்று சரக்குகளை இறக்கும் இடம்.  இனி,  கூத்து மேடை பதினைந்து நாட்களுக்கு அங்குதான் இருக்கும்.

நாங்கள் சுற்றிக் கொண்டு கூத்து மேடையின் முன்புறம் வந்த போது மேடை பிரகாசமாக இருந்தது. சிவப்பும் கருப்பும் தங்கநிறமும் கலவையாகக் கண்ணைப் பறிக்கும் ஜோடனைகளால்  மேடை நிரம்பியிருந்தது. பெரிய வெள்ளைத்துணிகளில் சீன எழுத்துகள் கருப்பு மையில்  மேலிருந்து கீழாக எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தன.  வெளிர் நீலத்தில் நீண்ட ஆடை உடுத்தியிருந்த பெண்தான் கையில் காகித விசிறியுடன் பாடிக்கொண்டிருந்தாள். அவள் முகம் அடர்த்தியான வர்ணங்களில் ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. கன்னங்கள் வட்டமாக இளஞ்சிவப்பாகத் தெரிந்தன. புருவங்கள் நீண்டு வரையப்பட்டிருந்தன. தலை முடி கால்வரை நீண்டு அலைபோல அசைந்து கொண்டிருந்தது.

சேகர் விடுவிடுவென்று மேடையின் இடது பக்கம் நடந்தான். வலது பக்கம் நீண்ட கூடாரத்தின் கீழ் பலவகை உணவுகள் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. எண்ணெய் சட்டிகள் சூடாக இருந்தன. டியூப் விளக்கு வெளிச்சத்தில் சிறு பூச்சிகள் சுற்றிச் சுற்றி வந்தன.   மேடைக்கு முன் நீண்ட மரநாற்காலிகளிலும் வட்டமான இரும்பு நாற்காலிகளிலும் மக்கள் அமர்ந்திருந்தனர்.  பெரும்பாலும் முதியவர்கள்.  சிலர் கையில் பீர் கேன்களும் சிகரெட்டும் இருந்தன. கடைக்கார சிறுவர்கள் ஓடி ஓடி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.  நான் சேகரைத் தொடர்ந்து சென்றேன்.

இரவு நேரத்தில் மார்கேட்டைச் சுற்றிலும் வாகனங்களை நிறுத்திக் கொள்ள அனுமதியுண்டு. ஆனால் அதை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வாகனம் கோணல் மாணலாக நின்றாலும் மற்ற கார்கள் நகரமுடியாமல் ஆகிவிடும்.

நானும் சேகரும் அந்த மங்கிய ஒளியின் வழியாக ஆச்சாயைப் பார்த்துவிட்டோம். சேமப்படை சீருடை போல ஆடை அணிந்திருந்தான். ஆனாலும் தொந்தி பிதுங்கி தெரிந்தது. அவனைப் போலவே வேறு சிலரும் இருந்தனர்.  எல்லார் கையிலும் வாக்கி தோக்கியும் கைவிளக்கும் இருந்தன. மோட்டார்,  கார்களை ஒழுங்குபடுத்துவதிலும் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதிலும் அவர்கள் கவனமாக இருந்தனர்.

நாங்கள் அவனருகில் போய் நின்றோம். சேகர் அவசரத்தில் ஏதாவது செய்துவிடக்கூடாது என்கிற பதற்றம் எனக்கு இருந்தது. பிறகு அது  இன்னொரு கேஸாகிவிடும்.

ஆச்சாயிற்கு எங்களை அடையாளம் தெரியவில்லை.  அவன் மீது பீர் வாடை அடித்தது. கையில் இருந்த வாக்கி தோக்கி விட்டு விட்டு அலறிக்கொண்டிருந்தது.

நான்தான் முதலில் ஆரம்பித்தேன்.

“ஆச்சாய், எங்களை தெரியலையா… டேவிட் ஞாபகம் இருக்கா…”

அதற்குள் சேகர் முந்திக் கொண்டான் “ எப்படா எங்காச கொடுக்கப்போற… ஓடி ஒளிஞ்சிகிட்டா தப்பிச்சிடலாமுன்னு நெனைச்சியா” சேகர் கெட்ட வார்தையில் திட்டினான்.

ஆச்சாய் சுதாகரித்துக் கொண்டான். சட்டென்று ஒரு அடி பின் நகர்ந்தான்.

அவன் முகம் மாறியது. “நான் இப்ப வேலையில இருக்கேன். நான் சின்னாங் இல்ல. ஆளுங்க இருக்காங்க. இங்க வந்து பிரச்சனை பன்னாதீங்க”

“டேய் ரொம்ப நடிக்காதடா… யாரு பிரச்சனை கொடுக்குறா?  மொதல்ல காச எட்றா… இல்ல… நான் வாயில பேச மாட்டேன்” என்றான் சேகர் சத்தமாக. நான் சேகரோடு நெருங்கி நின்றேன்.

ஆச்சாய் சட்டென்று  குரலை மாற்றினான். “பிரதர் இங்க பேச வேணாம்… ஆளு இருக்கு… அங்க  மீ கடை கிட்ட பேசலாம்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்தான்.

மீ கடை பெட்டரி விளக்கொளியில் மங்கி இருந்தது. நாங்கள் மீ கடைக்கு அருகில் சென்றோம். பெரிய சட்டியில் மீயை கொட்டி கிழவன் கிண்டிக் கொண்டிருந்தான். ஆச்சாய் இருட்டான இடத்தில் நின்று கொண்டான். அப்போது   அவன் பின்னால் மேலும் இரண்டு பேர் இருப்பதைப் பார்த்தோம். அவர்கள் எங்களை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆச்சாயிக்குப் பின்னால் மேடை தெரிந்தது. முன்பு பாடிய பெண்ணைக் காணவில்லை. இப்போது மஞ்சள் நிற நீண்ட உடை உடுத்திய பெண் ஒருத்தி ஈட்டி போன்ற ஆயுதத்துடன் சுழன்று கொண்டிருந்தாள்.   நீண்ட தாடியும் மீசையும் வைத்த ஆணுடன்  அவள்  சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். ஆணின் கையில் பட்டாக்கத்தி பளபளத்தது. அவர்கள் இசைக்கு ஏற்ப மேடையில் ஆயுதங்களைச் சுழற்றிக் கொண்டிருந்தார்கள்.  முரசு வேகமாக அதிர்ந்து கொண்டிருந்தது. பின்னணியில் ஒரு பெண் பாடுவது போல வசனம் பேசிக் கொண்டிருந்தாள்.

ஆச்சாய்  சத்தமாக “இப்ப உங்களுக்கு  என்னா வேணும்?” என்று கேட்டான். அவன் கேள்வியின் பொருள் எங்களுக்குப் புரிந்தது.  இரண்டு பேர் இப்போது நான்கு பேராக ஆகியிருந்தனர். விபரீதம் சுளீர் என்று மண்டைக்கு எட்டியது.

சூழல் தெளிவாகத் தெரிந்து விட்டது. சேகர் பேச்சைக் கேட்டு ஆத்திரத்தில் அவசரப்பட்டு வந்து விட்டோமோ என்று நான் நினைத்தேன். இப்போது பணத்தைப் பற்றி யோசித்துப் புண்ணியம் இல்லை. அங்கிருந்து சென்றுவிடுவது நல்லது. ஆனால் சேகரைக் கட்டுப்படுத்த சிரமமாக இருந்தது.

“ஆச்சாய் நீ எங்ககிட்ட பணத்த வாங்கி இருக்க அத ஒழுங்கா குடுத்திடு. அவ்வளவுதான். நாங்க பிர்ச்சனை பன்ன வரல”

சேகர் நான் எதிர்பார்த்ததைவிட நிதானமாகப் பேசியது ஆச்சரியமாக இருந்தது.

“எங்கிட்ட இப்ப பணம் இல்ல… கொடுக்க முடியாது” ஆச்சாய் முடிவாகச் சொன்னான். அத்தனை திமிர்த்தனமும் அவனது பதிலில் இருந்தது.

சேகர் ஒரு அடி முன்னே வைத்ததும் ஒருத்தன் சேகரின் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினான்.  நான் கையில் இருந்த தலைக்கவசத்தை இறுகப் பற்றினேன்.

அப்போது,  பக்கத்தில் இருந்த காப்பிக் கடையில் இருந்து ஒரு பெண் வேகமாக வெளியே வந்து எங்களுக்குக் குறுக்கே நின்றாள். நடுத்தர வயது. கை இல்லாத கெளன் அணிந்திருந்தாள். அவள் எங்களைக் கூர்ந்து பார்த்தாள்… மை பூசிய கண்களில் கிரக்கம் தெரிந்தது. மூக்கு நுனியும் முகமும் சிவந்திருந்தது. அவளும் குடித்திருக்கிறாள் என்பது தெரிந்தது.  ஆச்சாய் அவளைக் கண்டதும் பதற்றம் ஆனான்.

“ என்ன பிரச்சனை” அவள் சத்தமாகக் கேட்டாள்

நாங்கள் ஒன்றும் சொல்லாமல் ஆச்சாயைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அவள் மீண்டும் எங்களைப் பார்த்து “என்ன பிரச்சனை? ஆச்சாய் என் கணவன்”  என்று ஆங்கிலத்தில் சொன்னாள். அவள் பேச்சு சற்றே குழறுவதை உணர முடிந்தது.

“ஆச்சாய் எங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டான்” என்றேன் நான்.  என் குரல் மிக சன்னமாகி விட்டிருந்தது. மேடையில் சண்டையின் உக்கிரம் கூடியிருப்பதை இசையின் வேகத்தில் உணர முடிந்தது.  பெண் குரல் வார்த்தைகளை அழுத்தி அழுத்தி வசனங்களைப் பாடிக்கொண்டிருந்தது.

அவள் நெற்றியைச் சுருக்கியதில் நான் சொன்னது கேட்கவில்லை என்று புரிந்தது.  மீண்டும் சொன்னேன்.

“எவ்வளவு?”

“ரெண்டாயிரம் வெள்ளி”

அவள் எங்களை முறைத்துப் பார்த்தாள்.  பின் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆச்சாயை ஓங்கி அறைந்தாள்.  அந்த அறையின் சத்தம்  என் காதில் முரசின் சத்தத்தையும் மீறி தெளிவாகக் கேட்டது. அவன் நிலை தடுமாறிப் போனான். ஆனால் எந்த எதிர்வினையும் இல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு சிறுப் பிள்ளைபோல் நின்றான்.  மற்ற யாரும் குறுக்கே வரவில்லை.

நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட நினைத்தோம். அந்தப் பெண் தன் கைப்பையில் கைவிட்டு “இப்ப என் கிட்ட முன்னூறு வெள்ளிதான் இருக்கு.” என்று நீட்டினாள்.

சேகர் “வேண்டாம்” என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.  நான் ஆச்சாயைப் பார்க்க முயன்றேன். அவன் தரையையே பார்த்துக் கொண்டு நின்றான்.  மேடையில் அந்த மஞ்சள் ஆடை பெண் தன் ஈட்டியை லாவகமாகச் சுற்றி மேலே வீசி இடது கையால் பிடித்தாள்.

அதன் பின் நாங்கள் இருவரும் எங்கள் ரெண்டாயிரம் வெள்ளி பணம் பற்றியோ ஆச்சாய் பற்றியோ எதுவும் பேசிக் கொண்டதில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...