மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்

கண்களைப் பாதி மூடியபடிதான் வண்டியை ஓட்டினேன். காற்றில் மாலைநேரத்திற்குண்டான ஏதோ ஒலியிருந்தது. இசைக்கருவியின் மென்னொலி போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது காற்று. முன்னால் அமர்ந்திருந்த முகிலனின் வலது கையில் பேட். அதை கால்களுக்கு இடையே வைத்துப் பிடித்திருந்தான். இடது கையில் புதிய ஸ்மைலி பந்து இருந்தது. அதை அவன் பிடித்திருந்தவிதம் அழகிய கண்ணாடி பொருளைப் பத்திரமாகப் பிடித்திருந்தது போலிருந்தது. பந்தோடு கையை கவனமாக ஸ்பீடோமீட்டர்மேல் வைத்துக் கொண்டிருந்தான்.

பிளேக் ஹை ஸ்கூல் எதிரே, அவன் விரும்பி சென்று விளையாட நினைத்த, மைதானம் மக்கும் மண் வாசனை சூழ்ந்த இடமாக இருந்தது. அந்த மாலை தொடங்கும் வேலையில் யாருமற்ற வெளியில் மரங்கள் தனித்து விடப்பட்டிருந்தன. எல்லா இடத்திலும் கனத்த போர்வைபோல மரங்களின் நிழல்கள் தரையில் விரித்து அவை ஆழ்ந்து நின்றிருந்தன. எந்த மரத்தின் கீழ் நம் வேலையைத் தொடங்குவோம் என முகிலன் சற்றுக் குழப்பமாக யோசித்துக் கொண்டிருந்தான். என் பின்புறம் சுவர் எதாவது இருக்கட்டும் என நினைத்தேன். பந்துவீசுவதால் அதிக தூரம் செல்லவேண்டியிருக்காது. ஆனால் அவன் தனக்கு முன்னால் நீண்ட இடம் இருக்க வேண்டும்  என நினைத்திருந்தான்.

“அப்பா நீங்க இங்கேந்து போடுங்க”, என்று பெரிய இடத்தைக் காட்டினான்.

பந்தைத் தூக்கிப் போட எத்தனித்தபோது “அப்பா இவ்வளவு பக்கத்திலயா நிப்பீங்க, போய் தூரமா இருந்து போடுங்கபா” என்றான்.

“உன்னால அடிக்க முடியாதுடா”.

“அதெல்லாம் அடிப்பேன்பா நீங்க போடுங்க”, முதல் பந்துலயே அவன் தூக்கி அடித்தான் பந்து என்னைத் தாண்டி சென்றது. இரண்டாவது பந்தைச் சற்று வேகத்துடன் போட்டவுடன் அதை லாவகமாக தடுத்து நிறுத்தினான். பந்து வரும் திசையையும் அதன் வேகத்தையும் அவனால் கணிக்க முடிந்தது ஆச்சரியமாக இருந்தது.

“இப்ப பாரு நீ அடிக்கவே முடியாது”.

“முதல்ல நீங்க போடுங்க” என்றான்.

போட்டதும் வலது பக்கத்தில் சரியாகத் தூக்கி அடித்தான். அது பறக்கும் திசையை நோக்கி ஓடியபோது அங்குவந்த ஒரு சிறுவன் அதை எடுத்து என்னிடம் தூக்கி எறிந்தான்.

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த பந்தை வீச நினைத்தபோது அவன் அருகில் வந்து நின்று கொண்டான். “அங்கிள் நா இங்கிருந்து பீல்டிங் பண்றேன்” என்றான். “மேல படும்பா வேண்டாம்” என்றேன். “சரி கொஞ்சம் பின்னாடி நின்னுக்கிறேன்” என்று நின்றுக் கொண்டான்.

உண்மையில் அவனை விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் முகிலன், “அப்பா இவன் வேணாம்பா, பந்த தூக்கிட்டு ஓடிடுவான்” கிட்டவந்து அவனுக்குக் கேட்காமல் காதில் மெதுவாகச் சொன்னான்.

“அங்கிள் நான் எதுவும் தப்பா பண்ணமாட்டேன், நல்லா பீல்டிங் பண்ணுவேன், நீங்க போடுங்க” என்றான்.

முகிலனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் ஒத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு பந்தையும் அவன் தூக்கி எறிந்தது எனக்கான ஓட்டதைக் குறைத்திருந்தது. விளையாடி முடித்ததும் சற்று ஓய்வெடுப்போம் என அமைதியாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தோம். ஆனால் அவனால் அப்படி இருக்க முடியவில்லை.

01 ashokஅங்கே நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய நாயின் பின்னங்காலைப் பிடித்து தரதரவென்று இழுத்துவந்தான். நாங்கள் இருவரும் பயந்து போனோம். அது அவனைக் கடிக்கக்கூடும் என பயந்தேன். மாறாக நாய் பலவிதமான ஓலத்தோடு அவனிடமிருந்து துள்ளி தப்பிக்க நினைத்து கதறியது. கிட்டதட்ட அது அழுதது போன்றிருந்தது. “அது ஒன்னும் பண்ணாது அங்கிள்” என்று சொல்லியபடி இருந்தான். “அத விட்டுடு” என்று அவனிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. அதை அவன் போனால் போகிறது என விட துள்ளி தப்பித்து ஓடுவதுபோல் ஓடியது. பெரிய கல்லைத் தேடி எடுத்து எறிந்தான். பயந்து கால்களுக்கிடையே வாலுடன் ஓடி மறைந்தது நாய்.

“நாயெல்லாம் அடிக்கலாமா அது வாயில்லாத ஜீவன் தானே” என்றேன்.

“அது மோசமான நாயி இங்க எல்லோரையும் கடிச்சிருக்கு தெரியுமா, கடிக்கிற நாய அடிக்காம உடலாமா” என்றான்

“சரி உட்கார்ந்து விளையாடுங்க என்றேன்”

அப்போது அவ்வழியே வந்த அந்துப்பூச்சியைப் பிடித்தான். அது அவனைத் தேடி வந்தது போன்று அவன் அருகே வந்தது. “இத பார்த்தியா” பயத்தில் சற்றுத் தொலைவு சென்ற முகிலனிடம் காட்டினான். “இங்க பாரு” என்று கூறியபடி இறக்கையில் ஒன்றைத் தூக்கி அதன் மடிந்த கால்களில் ஒன்றைப் பிடித்து இழுத்து அதன் உடலிலிருந்து பிரித்து எடுத்தான்.

அவன் செய்த செயல் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறானா என தோன்றியது. “டே தம்பி இந்தமாதிரி பண்ணக்கூடாது பாவம்ல”, “அது ஒன்னும் பண்ணாது அங்கிள், இனிமே அது ஓடாது, பறக்காது பாருங்க” என்றான். “இத அந்த பள்ளத்துல போட்டு மூடிட்டோம்னா அது செத்துபோயிடும்” என்று அதை பள்ளத்தில் வைத்து மூடினான்.

அவன் அமர்ந்து பரபரப்புடன் ஈரமண்ணை நோண்டிக் கொண்டிருந்தான். பழைய பொருட்களின் அழுகல் போல வாசம் எழுந்தது. அவ்வாசத்தை எங்கோ எப்போதோ நுகர்ந்தது நினைவில் இருந்தது. ஒரடிவரை தோண்டியிருந்தான். “தம்பி வேண்டாம்பா, எதுக்கு தோன்ற கை அழுக்காயிடும்” என்றேன்.

“இப்படியெல்லாம் பண்ணினா சாமி உன்ன கண்ண குத்தும்” என்றான் முகிலன்.

அவன் நின்று யோசித்தான். பலமுறை இப்படி பாவங்களைச் செய்த அவனுக்கு, இதுவரை எத்தனை முறை கண்களை குத்தியிருக்குமே என யோசித்திருப்பான்.

“அப்படி பண்ணமாட்டார்”

“நீ எந்த சாமிய கும்பிடுவ” என்றான் முகிலன்

“நான் யேசுவானவரதான் கும்பிடுவேன் நீ”

“நா பெருமாள கும்பிடுவேன், எந்த பெருமாள தெரியுமா ஒப்பிலியப்பன் பெருமாள”

“நா ஞாயித்து கிழமை ஜபம் பண்ணுவேன், யேசுவானவரு அப்ப எங்கள சொஸ்தப் படுத்துவாரு”

“அப்படின்னா”

“அப்படின்னா, என்ன தெரியுமா? ம்ம்… மன்னிப்பாரு, நாம பண்ணுன பாவத்த எல்லாம் மன்னிப்பாரு”

“எதப்பண்ணினாலும் மன்னிப்பாரா”

“மன்னிப்பாரு”

“கண்ண குத்தமாட்டாரா, அப்ப நிறைய தப்பு பண்ணலாமா? இந்த பூச்சிய கொன்னியே அதுக்கு மன்னிப்பாரா”

“ஆமா மன்னிப்பாரு”

“ஒம் பேரென்ன” என்று முகிலன் தான் முதலில் கேட்டான்.

“ஜான் பிரட்ரிக் பீட்டர்”

“என்னப்பா பெரிய பேரா இருக்கு” என்றான் முகிலன் என்னைப் பார்த்து. நான் அப்படிச் சொல்லக்கூடாது எனும் ரீதியில் தலையைத் தடவிக்கொடுத்தேன். வியர்வையில் நனைந்திருந்தது.

“எங்கப்பா பேர் என்ன தெரியுமா ஜெபின் டக்ளஸ் பீட்டர்”

“சரி உன்ன எப்படி கூப்பிடுவாங்க”

“ஜான்னு கூப்பிடுவாங்க இல்லேன்னா ஜக்குன்னு கூப்பிடுங்க”

மூவரும் சிரித்துவிட்டோம். சொல்லிய அவனும் சிரித்தான். அப்போது தான் அவனைக் கூர்ந்து கவனித்தேன். முகிலனைவிட சிறியவனாக இருந்தான், ஆனால் அவன் உயரம் சராசரியைவிட குறைவாக இருந்தது. சற்றுத் தாட்டியான உருவம், முன்நெற்றி அதிக முடிகள் இல்லாமல் அவன் கண்கள் சிறியனவாக இருந்தன. வாய் எந்நேரமும் திறந்திருந்தது. அதில் பற்கள் சற்றுத் தள்ளி இடைவெளிவிட்டு இருந்தன. விளையாட்டு வீரர்கள் அணியும் குளிர்கால உடைகள் போன்ற உடையை அணிந்திருந்தான். கால்சிராய் அதிக அழுக்குடன் காணப்பட்டது. கால்கள் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பைப் பூசியது போல காணப்பட்டன. துடுக்கான சிறுவனாகத் தோற்றங்கள் அனைத்தும் கொண்டிருந்தான். பொறுமையை அசெளகரியமாக நினைக்கும் நிதானமின்மை இருந்தது. அனைத்தையும் தாண்டி அவன் முகமும் உடல்மொழியும் வசீகரமாக இருந்தது. எதையாவது மற்றவர்களுக்கு மெய்பித்துக் காட்டும் முயற்சி அதில் தெரிந்தது.

“சரி தம்பி, உங்க வீடு எங்க இருக்கு”

“அதோ அங்க இருக்கு பாருங்க”

அவன் காட்டிய திசையில் மைதானத்தின் கடைசியில் சில வீடுகள் தெரிந்தன.

“லைட்டுபச்ச கலரா ஒரு வீடு தெரியுது பாருங்க, அதுதான் எங்க வீடு”

மைதானம் ஒரு பக்கத்தில் மரங்களையும் மற்றொரு பக்கம் சில வீடுகளையும் கொண்டிருந்தது. வீடுகள் நெருக்கமற்று சற்றுத் தள்ளியிருந்தன, இரவு நேரங்களில் பயத்தை உண்டுபண்ணும் என தோன்றியது. அங்கு தெருவிளக்கில்லை, வீடுகளில் இருக்கும் விளக்குகள்தாம்.

லேசாக சென்ட் வாசனை அடிக்க பதறி திரும்பினேன். சிறிய தொப்பையுடன் கூடிய அலட்சியமான பார்வையுடன் ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார். அவர் எப்போது வந்தார் என்றே தெரியவில்லை. அவரைப் பார்த்ததும் ஜான் கையில் இருந்த மண்ணை உதறி விட்டு வந்து அமர்ந்தான்.

“வணக்கம் சார். நானு ரிட்டயர்ட்டு போலீஸ்மேன். டேரைக்ட் செலக்ஷன். கவர்னர்ட மெடலெல்லாம் வாங்கியிருக்கேன்” என்றார். முதலில் புரியவில்லை அவர் யாரிடமோ சொல்கிறார் என நினைத்தேன். ஜான் காதில் வந்து “தாத்தா” என்றதும் அவர் எல்லோரிடமும் இப்படித்தான் அறிமுகம் செய்துக்கொள்வார் என்று தோன்றியது.

அடிப்பகுதி வெண்ணிறம் கொண்ட அவரது மீசை சற்றுப் பக்கவாட்டில் நீண்டு பெரியதாக இருப்பது தெரிந்தது. எண்ணெய் தடவி ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குவர சிரத்தை எடுத்திருந்தார். ஆனால் அவரது மீசைக்குப் பொருத்தமில்லாமல் சாந்தமான கண்கள். உயரம் குறைந்த அவர் போலீஸ் என்பதை நம்பமுடியவில்லை. அவரது மீசைதான் அவரை இனங்காட்டியது. சிறிய தொப்பை வெளிதெரிய பழைய மாடல் பேண்ட் அணிந்து சிவப்பு வெள்ளை வண்ணங்கள் இடைப்பட்டைகளாகக் கொண்ட டீ-சட்டை இன் செய்திருந்தார். அங்கிருக்கும் வீடுகள் கடந்து செல்வதற்கு மைதானம் வழியேதான் செல்லவேண்டும். அவர் வேறு எங்கோ செல்பவர் போலும்.

“சரிங்க அய்யா, நல்லா இருக்கீங்களா? ஜானோட தாத்தாவா நீங்க”. சம்பரதாய வார்த்தைகள்தாம் ஆனால் இயல்பாகவே வாயிலிருந்து வெளிவந்தது. ஆனால் அப்படி கேட்டதே அவரை உற்சாகத்தில் ஆழ்த்திவிட்டது.

“எங்கசார், ஏதோ போயிக்கிட்டு இருக்கு. நாளெல்லாம் இந்த பயலநினைச்சுதாம் கவல” நினைவு வந்தவர் போல “இந்த பய எதாவது சேட்ட பண்ணுனானா? சும்மா இருக்க மாட்டானே” என்றார்.

 “அதெல்லாம் இல்லீங்க, ரெண்டு பெரும் விளையாடிட்டுதான் இருங்காங்க”

முகிலன் எதாவது சொல்லிவிடப்போகிறான் என பயந்தேன். ஆனால் முகிலன் அமைதியாகத் திடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை. அவன் முகத்தில் தெரிந்த தெளிந்த பார்வை அவன் தன்னை அப்பழுக்கற்ற நல்லவன் என நம்புகிறான்.

“எழுபத்தி ஆறுல கான்ஸ்டபுளா மாயவரத்துல முதல்ல சேர்ந்தேன் சார். அப்புறம் பல ஊருக்கு மாத்தலாயி போனேன். ஹெட் கான்ஸ்டபுள் ஆனேன், அப்புறம் சுப்ரண்டண்ட். எவ்வளவு திருட்டு, ரெளடிங்கிறீங்க, எவ்வளவோ பாத்தாச்சு சார். ரிட்டயர்ட் ஆனோன்ன தஞ்சாவூருக்கே வந்துட்டேன் சார்”.

“நல்ல விஷயம்தான் சார்”.

“சார் நா அவ்வளவு ஸ்டிரிக்ட், நா இருந்த ஊர்ல இருந்த களவானிப்பயலுவோ எல்லாம் என்னய பார்த்தா தெறிச்சு ஓடுவானுக. எம் பொன்னுகிட்ட கேட்டுப்பாருங்க, அவளையும் போலீசாக்கனும்னு நினைச்சேன். கடைசி டெஸ்ட்ல மிஸ்ஸாயிடுச்சு, மருமகனும் போலீஸ்தான்”.

இன்னும் சொல்ல விஷயங்கள் இருக்கின்றன என அவரது முகம் காட்டியது. தலையை ஆட்டியபடி துப்பிவிட்டுத் தொடர்ந்தார்.

“இவன் எம்பொன்னோட பையன் தான். கொஞ்சம்கூட சொல்பேச்சு கிடையாது. எத செய்யாதன்னு சொல்றமோ அததான் செய்றது. என்ன புள்ளையோ”

“குழந்தைதானே சார், வளரும்போது சரியாயிடுவாங்க”

ஜான் முகம் அப்போது வேறு மாதிரி இருந்தது. தன்மீதான இரக்கத்தை இறைஞ்சும் முகமல்ல அது. வலிமையான எண்ணத்தைக் கொண்டிருக்கும் முகம். எளிதில் தன் தோல்வியை ஒப்புக்கொடுக்கத் தயாராகவில்லை அவன். அவன் மீது தாத்தா வைக்கும் குற்றச்சாட்டுகள், அவன் சிறு குழந்தையாக இருக்கும்போதிலிருந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என தோன்றியது. சிறிய புன்னகையுடன் அவன் அதை எதிர்கொள்பவனாக இருந்தான்.

“இவங்க அப்பாவும் போலீசா, போலீஸ் குடும்பமா இருக்கீங்க”

“ஆமா, ஆமா. போலீஸ்ன்னுதான் இவன் அப்பனுக்கு எம் பொண்ண கட்டிக் கொடுத்தது” சற்று சின்ன இடைவெளிக்குப் பின், “ஆனா ரொம்ப மொரடன்சார் அவன்”. அவர் முகம் முற்றிலுமாக மாறியிருந்தது. பெரிய தவறைச் செய்துவிட்டுத் தவிக்கும் குற்றஉணர்ச்சியுடன் பேசுவதுபோல் இருந்தது. “என்னேரம் பொண்டாட்டிய போட்டு அடிக்கிறது புள்ளைய போட்டு அடிக்கிறது தான் அவன் வேலை. சந்தேகபுத்தி, என்னேரமும் பொண்டாட்டி மேல சந்தேகம். அதிகாரம், பணபலம், போலீஸ் திமிரு வந்துபோச்சுன்னு வையுங்க, இதெல்லாம் பண்ண சொல்லும். நாள் முழுசும் வீட்டுல சண்ட, அதான் பொண்ணு வீட்டுக்கு வந்திடுச்சு, டைவர்ஸுக்கு அப்ளை பண்ணிருக்கு”.

“அடடா, சாரி சார்”

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க, அவன் பிறவி குணம் அதான், போலீஸ்ல எடுத்த டிரைனிங்க எல்லாத்தையும் பொண்டாட்டி புள்ளைக்கிட்ட காட்டுனா, தாங்குங்களா? பாவம் ரெண்டும் ஓடிவந்துடுச்சுங்க”

“ஒரு பையன் தானா உங்க பொண்ணுக்கு”

“ஆமா, ஒன்னுதான் அதுவும் அவன் அப்பன மாதிரியே கொண்டிருக்கு. எல்லா இடத்திலயும் திருடுறது, சின்ன புள்ளைங்க, பெரிய புள்ளைங்களை போட்டு அடிக்கிறது. அவன மாதிரியே முரடன்.”

“பயல வீட்டுக்குள்ள வெச்சுக்க முடியல, அதாம் அப்படியே விட்டுடுறது. எங்கேயும் துரத்திதான் விடுவாங்க, எங்கனா போயி வம்ப விலைக்கு வாங்கிட்டு வருவான், இவனால எங்க குடும்ப பேரே கெட்டுப் போச்சு”

ஜானின் முகம் அப்போது எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தது. தன்னைப் பற்றிய பேச்சுகள் தன்னைப் பாதிக்கவில்லை என்பதுபோல. அவன் தினம் சந்திக்கும் வார்த்தைகள் போலும்.

முகிலன் எங்கே படிக்கிறான், படிப்பு எப்படி போன்ற விஷயங்களைக் கேட்டு அறிந்துக் கொண்டார். பேச்சில் இருந்த பொறுமை அவர் சிறந்த பேச்சாளர் என காட்டியது. பல சமயங்களில் அவரே இன்ன கேள்வியைக் கேள் என்பது போன்று பேச ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவர் எப்போது போவார் எனத் தோன்றியது.

“சார் எங்க வேல பாக்குறீங்க”

“பேங்குல, கிளார்க்கு, இப்பதான் மாத்தலாயி வந்திருக்கேன்”

“சரிசார் நா கிளம்புறேன். வாடா ஜான், வீட்டுக்கு போலாம்” என்றார்

“நா வரல, நா விளையாடிட்டு வாரேன்”

“இருக்கட்டும் சார் அவன், சும்மாதான் விளையாடுறான்”

“ஏ எதுவும் சேட்ட பண்ணக்கூடாது, இல்ல உங்க அம்மாளத்தான் அனுப்புவேன். அவ வந்து போட்டான்னா தெரியும் உனக்கு”

அவன் சிரிக்காமல் அமைதியாகவே இருந்தான். என்னிடம் “எதாவது பண்ணான்னா வீட்டுக்கு துரத்தி விட்டுடுங்க” என்றார். தலையசைத்துக் கொண்டேன்.

“சரிங்க சார் நா கிளம்புறேன்”. இரண்டு தப்படி நடந்ததும் திரும்பி “டே எதுவும் விளையாட்டுதனம் பண்ணக்கூடாது” என்று ஜானிடம் குரலை உயர்த்தி கூறிவிட்டுக் கிளம்பினார்.

அவர் போனதும், அவனிடம் “அப்படி என்னப்பா பண்ணின, ரொம்ப அடம் பண்ணுவியா”

“அதெல்லாம் இல்லங்க அங்கிள், அவரு சும்மா சொல்றாரு” அவன் குரலில் அவர் சொல்வதை முழுமையாக மறுக்கும் ஆவேசம் வெளிப்பட்டது.

“அப்பா போலாம்பா இருட்டிடுச்சு” என்றான் முகிலன். சூரியன் மேற்கே லேசாக மறைய ஆரம்பித்திருந்தது. “சரிதம்பி, நாங்க கிளம்புறோம்” என்றேன்.

“இல்ல அங்கிள், கொஞ்ச நேரம் இருங்க விளையாடுவோம்” என்று கைகளை02 ashok விரித்து வழியை மறித்து நின்றான். “இருட்டிடுச்சுல்ல நாளைக்கு வாரோம்” என்றேன். “சரி நா உங்க வீட்டுக்கு வரேன், அங்க போயி விளையாடுவோம்” என்றான். குனிந்து அவனை கவனித்தேன். ஆர்வமும் விளையாட்டுதனமும் இருந்த முகம் கைகளைக் கட்டியபடி என் பதிலுக்குக் காத்திருந்தான். வேண்டுமென்றே சற்றுத் தீவிர முகத்துடன் “இல்ல நாங்க போறோம்” என்றவுடன் சற்றும் யோசிக்காமல் முகிலன் கையில் இருந்த ஸ்மைலி பந்தைப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். அவன் தாத்தா கூறியதை நிரூபிக்க அப்படி செய்தானா தெரியவில்லை.

நாங்கள் மோட்டார் வண்டியில் அவனைத் துரத்திக் கொண்டு சென்றோம். அவன் அதிக தூரம் சென்றிருக்கவில்லை. முன்பு காட்டிய அவன் வீட்டினருகில் இருக்கும் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். எங்களைப் பார்த்ததும் கேலியாகச் சிரித்தான். எனக்கும் அந்த பந்தை பிடிங்கும் எண்ணமில்லை. அவ்வளவு சீக்கிரம் என்னை ஏமாற்றிவிட முடியாது என நிரூபிக்க நினைத்தேன்.

மோட்டார் வண்டியில் சென்றாலும் எங்களுக்கு மூச்சு வாங்கியது. அவன் சிரித்தபடி பந்தை வீசிப்பிடித்துக்கொண்டிருந்தான். எங்களை அலையவிட்டதில் மகிழ்ச்சி என்பதுபோன்ற சிரிப்பு. ஒன்றும் பேசாமல் அவன் அருகில் சென்று அமர்ந்தேன். முகிலனுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. பந்தையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீ எந்த ஸ்கூல்ல படிக்கிற” என்றேன்.

“சுப்பையாபிள்ளை ஸ்கூல்ல” என்றான். அது இங்கிருந்து சற்றுத் தொலைவானது.

“எப்படிப்பா இங்கிருந்து போவே” என்றேன்.

“நடந்தே போய்டுவேன் அங்கிள்” என்றான்.

“ரொம்ப தூரமாச்சேப்பா”

“ஆமா ஆனா இங்கிருந்து நடந்தே போவேன் காலு எனக்கு வலிக்கவே வலிக்காது”.

இப்போது அவன் மண்ணை மீண்டும் தோண்ட ஆரம்பித்தான். அவனுக்கு அதில் அலாதி பிரியம் இருந்தது. பூச்சிகளை, வண்டுகளைப் பிடித்து முடமாக்கினான், சிலவற்றைத் திருகிக் கொன்றான். ஒரு மண்புழு கிடைத்ததும் இங்க பாரேன் என்று சொல்லி தூக்கிக் காட்டினான். மாலைவெய்யில் அதன் உடலில் புகுந்து ஒளிரவைத்தது. உள்ளிருக்கும் பாகங்கள் தெரிய நெளிந்தது. சட்டென ஒரு பாறையில் வைத்து கிடந்த சோடா மூடியால் சிறுசிறு பாகங்களாக அதை வெட்டினான். பதற்றத்தில் இருவரும் சேர்ந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டோம்.

“இப்படி பண்ணினே நாங்க போயிடுவோம். வாப்பா முகிலன் நாம் போவோம்” என்று கூறியதும் அவன் முகபாவனை மாறியது. “இல்ல அங்கிள், நா வெட்டமாட்டேன். இத பாருங்க இது நல்லா இருக்குல்ல” என்று மற்றொன்றை எடுத்துக் காட்டினான். அந்த மண்புழு சற்றுக் கரும்பழுப்பு நிறத்தில் இருந்தது.

“ஏன் அங்கிள் இதுக்கு காலே இல்ல” என்றான்.

கொல்வதிலிருந்து கவனத்தைத் திருப்ப நினைத்தேன். “இந்த மண்புழு, நிலத்துல குழி தோன்டி உள்ளார வரைக்கு போகும். இதுக்கு கால் இல்லாததால, வளைஞ்சு உள்ளே போயிடும். எந்த பக்கமும் அதால நெளிஞ்சு நடக்கமுடியும். இதுக்குக் கண்ணு கிடையாது ஆனா எல்லாத்தையும் முகர்ந்து புரிஞ்சுக்கும்”

“அப்பா இது என்னப்பா தின்னும்”

“மண்ணு, நாம் வேஸ்டா போடற உணவு பொருளெல்லாம் தின்னும், அதனால நிலத்துல அதனோட கழிவு நல்ல உரமா மாறுது. அதனால மரம் நல்லா வளருது, நமக்கு நல்லா சாப்பாடு கிடைக்குது. நமக்காக உழைக்குது அது”

“இதுக்கு மூச்சி முட்டாதா”

“இல்ல, குறைவாதான் சுவாசிக்கும், ஆனா இதுக்கு ஐந்துலேந்து பத்து இதயம் வரைக்கு இருக்கும், அதனால பிரச்சனையில்ல”

முகிலன் அருகில் சென்று கூர்த்து கவனித்தான். ஜான் அதை என்ன செய்வது என்று குழம்புவது போல பார்த்தான். அவன் கண்களில் இருந்த விளையாட்டுதனம் மாறியிருந்தது. முகிலனிடம் அதை ஒரு குச்சியால் தூக்கி சூரிய ஒளியில் காட்டி கருப்பு பகுதிகள் இதயம் என கூறிக் கொண்டிருந்தபோதும் ஜான் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். நாம் அவனைப் பார்க்கிறோம் என்கிற பிரக்ஞை இல்லாதிருந்தான். அவன் தீவிரமாக யோசிப்பது போல தோன்றியது. எதையும் குறிப்பிட்டு பார்க்கவில்லை என்பதைப் போலிருந்தான். அவனுக்கு இதில் குழப்பமாக இருக்க வேண்டும், ஆனால் புத்திசாலித்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டான்.

“மண்புழுவுக்கு அவ்வளவு இரக்கம் இருக்கும்தானே அங்கிள்”

குழந்தைதனத்திற்குரிய எளிய புரிதலுடன்தான் இருக்கிறது என்றாலும் அதன் பின்னணி ஆழமாக ஏதோ ஒன்றை உணர்த்துவதாக இருந்தது. தான் இதுவரை கொண்டிருந்த புரிதல்களை மறுபரீசிலனை செய்பவனாகத் தெரிந்தான். விரிந்த அவன் கைகளின் அசைவின்மை அசையும் பெண்டுலம் நிலை கொண்டுவிட்டது போன்றிருந்தது.

 “ஆமா அப்படி சொல்லலாம்”

“எங்க யேசுவானவர் மாதிரி அவ்வளவு இரக்கமா, அங்கிள்”

முகிலன் அவனை ஆழ்ந்து கவனித்தான். யாரிடமும் எந்தப் பேச்சும் இல்லை, அவன் சொன்னதுகூட யாரிடமோ சொன்னது போல் மனதில் ஒலித்தது.

“ஏண்டா கூமுட்ட கழுத, இங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க, சொன்னா சொன்னபேச்ச கேட்க மாட்டியா நீயீ”

அதிர்ந்து மூவரும் திரும்பிப் பார்த்தோம். கவுன் போன்று நீளமான உடையணிந்த பெண் ஒருவர் சத்தம்போட எழுந்து நின்றுவிட்டான் ஜான். அவன் தப்பித்து ஓடக்கூடும் என்கிற பயம்போல அவசரமாக அவனை எட்டிப் பிடித்தார். அவன் வலது அக்குளை இறுக்கிப் பிடித்திருந்த அவர் கை தரதரவென்று இழுத்துச் சென்றது. அவன் கால்கள் மண்ணில் புதைய ஆழமான இருகோடுகள் கிழிக்க அவன் கூடவே சென்றது.

நாங்கள் பார்த்துக் கொண்டேயிருந்தோம். சட்டென அவன் அம்மாவின் கைகளை உதறி கீழே விழுந்தான். அரக்கபறக்க ஓடிவந்து என் காலைப் பிடித்துக் கொண்டான். நான் அதிர்ந்து அவன் அம்மாவைக் காண அவள் திகைத்துத் தயங்கி நின்றிருந்தார். காலைப் பிடித்திருந்த அவன் தலைதூக்கி என்னைப் பார்த்தான். அதுவரையில்லாத அமைதியுடன் இறைஞ்சும் முகமாக மாறியிருந்தான்.

 

1 comment for “மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்

  1. November 2, 2020 at 10:59 am

    மனம் கனத்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *