கங்காபுரம்: வரலாற்றின் கலை

gangapuram_FrontImage_960வரலாற்றை நாவலாகப் புனைவதில் ஒரு வசதியுள்ளது போலவே சிக்கலுமுள்ளது. இதில் வசதியென குறிப்பிடுவது நாவலுக்கான தகவல்கள். வரலாறு நமக்கு தகவல்களை நம் முன் அறுதியிட்டு தருகிறது. திரண்டு கிடக்கும் அந்த தகவல்களை நம் புனைவு யுக்தியின் மூலம் கேள்விகளை எழுப்பி மேல் சென்றால் போதுமானது. அந்த தகவல்களைப் புனைவாக்கும் தருணங்கள்தான் அதில் ஆசிரியன் எதிர்க்கொள்ளக்கூடிய சிக்கல்.

இந்த இரண்டு சாத்தியங்களையும் உள்வாங்கிக்கொண்டே கங்காபுரம் நாவலை அணுகவேண்டியுள்ளது. எனது வசதிக்காக இதனை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறேன். ஒன்று நாவலின் கட்டமைப்பில் இந்த இரு சாத்தியங்களும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது. இரண்டு இந்த சாத்தியங்களைக் கொண்டு நாவல் எவ்விதமான தரிசனங்களை உருவாக்கியுள்ளது என்பது.

வரலாற்று நாவல்:

ஒரு வரலாற்று நாவலென்பது, ஒரு வரலாற்றுத் தருணத்தை அல்லது தகவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாவலாசிரியன் தன் கற்பனை மூலம் அந்த வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுவதாகும். முழுவதும் கற்பனையான ஒரு வரலாற்றை எழுதுவதென்பது வரலாற்று நாவலல்ல. உதாரணம் விஷ்ணுபுரம். அது ஒரு  ஒரு மிகைபுனைவு. அங்கே வரலாற்றாசிரியர் எந்த வித வரலாற்றுத் தகவல்களையும் பேணவில்லை. இங்கிருந்தது போல் ஒரு வரலாற்று உலகை தன் கற்பனை மூலம் உருவாக்கி நாவலாக நமக்குத் தருகிறார். அப்படியென்றால் எது வரலாற்று நாவல்? எந்த ஒரு நாவல் தன் அடித்தளத்தில் நிஜமான வரலாற்றுத் தகவல்களைப் பேணி அதன்மூலம் வரலாற்றுக்குறிப்புகளை பாதிக்காமல் ஆசிரியரின் கற்பனையால் மேலெழுந்து செல்கிறதோ அதுவே. தமிழில் அதற்கு உதாரணமாக பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும், சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், ஜெயமோகனின் வெள்ளையானை, அ.ரெங்கசாமியின் இமையத்தியாகம் ஆகிய நாவல்களை உதாரணமாகச் சொல்லலாம். மேலே சொன்ன நாவல்கள் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் வழியில்தான் கங்காபுரம் நாவலை ஆராய முடியும். எப்போதுமே ஒரு வெற்றிப்பெற்ற கலைப்படைப்புடனான அந்தரங்க ஒப்பீடு நவீன வாசகனுக்கு நிகழ்கிறது. ரசனை விமர்சனத்தின் தவிர்க்க முடியாத அடிப்படை குணம் இது. இலக்கியங்கங்களைக் கொண்டு இலக்கணம் வகுக்கப்பட்டதுபோல நவீன இலக்கியப் படைப்பின் வரையறைகள் அப்படைப்பில் நிகழ்ந்த சில சாதனைகளின் வழியே வாசகனின் மனதில் உருவாகிறது.

நாவலின் கட்டமைப்பு

வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தை எடுத்துக் கொண்டு அதனைப் புனைய நினைத்ததே மிகப் பெரிய சவாலான காரியம் தான். அதற்காக authentic தகவல்களைச் சேர்த்து, வாசகனை வாசிப்பின்னூடாக அந்த காலத்தில் கொண்டு நிறுத்துவதே வரலாற்று நாவல்களின் முதன்மையான சவால். கங்காபுரம் அதனைத் திறம்படக் கையாண்டிருக்கிறது.

நாவலின் கதையோட்டமாகட்டும், நாவலில் வரும் உணவு வகைகளாகட்டும், சிற்பங்களைப் பற்றிய தகவல்கள், அரண்மனையின் விவரணைகள், தஞ்சையைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகள், கங்கைக் கொண்ட சோழீசுவரம் பகுதிகள், இரண்டு பெரிய கோவில்களின் கட்டமைப்பு, தில்லை கோவிலுள்ள வடவர், தென்னகர் பூசல், நார்த்தா மலை பகுதியின் விவரணை என அனைத்தும் சமகால தன்மையை அறுத்து வரலாற்றின் காலத்தில் கொண்டு வாசகனை நிறுத்த நாவல் தவறவில்லை. ஆனால் சில இடங்களில் கதையோட்டத்தில் நிகழ்வுகளைக் காட்சியப்படுத்தியிருக்கும் தன்மைக்கு மேலாக தகவல்கள் மேலொங்கியிருக்கிறது. அவை ஆசிரியன் நாவலுக்கான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் புனைவாசிரியன் சென்றடையும் பாதையை மூடிவிட்டது. அதனால் அவற்றை வாசிக்கும் போது சில சமயம் வரலாற்றை நிகழ்காலத்திலிருந்து பார்க்கும் தன்மை எழுகிறது.

உதாரணமாக ஆதித்திய கரிகாலனின் பள்ளிப்படை பற்றி குறிப்பிடுமிடத்தில் ஆசிரியர் தெளிவாக அதனை விளக்குகிறார். அவரின் தலை வடக்கு நோக்கி வைக்கப்பட்டதையும், ராஜராஜனின் தலை தெற்கு நோக்கி வைக்கப்பட்டத்தையும் அதன் அமைப்பைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கப்படுகின்றன. மற்றொரு இடத்தில் கங்கைக் கொண்ட சோழீசுவரத்தின் பெருந்தச்சனான குஞ்சரமல்லன் கோவிலை எழுப்பிக் கொண்டிருக்கும் போதே அங்கு வரவிருக்கும் சண்டிகேஸ்வரருக்கு சிவனும், பார்வதியும் பதவி பிரமாணம் செய்யும் சிற்பம் பற்றிய தெளிவான விவரணைகள் வருகிறது. இங்கே தகவல்களுக்கு இத்தனைத் தெள்ளத்தெளிவான இடம் கொடுத்து, அதன் மூலம் புனைவு சென்றடையும் சாத்தியத்தை தொடாமல் நாவல் விட்டுவிட்டது.

தெளிவான தர்க்கமான சரியான தகவல் களஞ்சியங்கள் குடவாயில் பாலசுப்ரமணியன் அவரது அபுனைவில் வாசகனுக்குச் சொல்ல வேண்டியவை. அது அவரது பணியும் கூட, ஆனால் நாவலாசிரியனின் அந்த தகவல்களை தன் நாவலுக்கான விசைப் பொருளாகக் கொண்டு மேலெழ செய்ய வேண்டும், அதுவே நாவலில் வரலாற்று தகவல்கள் மேலேற்றும் புனைவிற்கான இடங்கள். கங்காபுரம் நாவலின் அடிப்படைச் சிக்கலே இந்த தகவல் சுமைதான். சுமையை ஏந்தியுள்ள எழுத்து புனைவுவிசைக்கு ஏற்ப துலங்காமல் உள்ளது. மேலதிகமான தகவல்களை தன்னளவில் நிரப்பிக்கொண்டு அவை ஸ்தம்பித்து நிற்கின்றன.

உபகதைகள்

இந்த நாவலின் முதல் பாகத்தில் வரும் உபகதைகள் ராஜேந்திரனின் பயணத்தின் ஊடாக நிகழ்பவை. உப கதைகள் நாவலின் மையத்துடன் சேராமல் தனிக்கதைகளாக விரிந்து பின் இணைவதென்பது நாவலின் இயல்புதான். ஆனால் ராஜேந்திரனின் பயணத்தை ஒட்டி உருவாகியுள்ள இவை நாவலின் மைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்ப்பதாகவோ நாவலின் கட்டமைப்பிற்கு வலு சேர்ப்பதாகவோ அமையவில்லை.

உதாரணமாக, ஆளவந்தான் என்ற கதாபாத்திரம். அவன் நாவலின் பதினேழாவது அத்தியாயத்தில் உப்பு வணிகனாக மல்லையிலிருந்து இளவரசன் ராஜேந்திரனுடன் உப்பு வணிகத்தை அரசே எடுத்துக் கொண்ட பஞ்சாயத்திற்காக வருகிறான். பஞ்சாயத்து முடிந்ததும் இளவரசன் அவன் மருத்துவ ஆர்வத்தைக் கண்டு திருமுக்கூடல் வைத்திய சாலைக்கு அவனைப் போகச் சொல்கிறான். அதன் பின் ஒரு பத்து பதினைந்து அத்தியாயங்கள் கடந்து மீண்டும் இக்கதாபாத்திரம் வைத்தியசாலையில் நடக்கும் ஒரு பூசலில் வருகிறது. அதே அத்தியாயத்தில் ஆளவந்தான் கொலையுண்டு கிடக்கிறான். அதன் பின் அவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட நாவலில் இல்லை. இறுதி அத்தியாயத்தில் அவன் கொலையுண்ட காரணத்தை ஒற்றை வரியில் நாவல் விளக்கிச் செல்கிறது. இந்த கதாபாத்திரம் நாவலின் மைய கதாபாத்திரங்களுக்கோ, நாவலின் கட்டமைப்பிற்கோ வலு சேர்க்கவில்லை.

மற்றொன்று நாவலின் இறுதி பாகத்தில் ராஜேந்திரன் சோழீசுவரத்தில் கோவில் கட்டத் தொடங்கிய பிற்பாடு அர்த்த மண்டபத்தின் இளம் சிற்பி ஆதித்தியனும், அவன் சிற்பம் வடிக்க உதவியாய் வரும் நடன மங்கை அழகியும் வருகின்றனர். ஆதித்தியன் அழகியைக் கொண்டு கங்கைக் கொண்ட சோழீசுவரக் கோவிலின் சரஸ்வதி சிற்பம் வடிக்கிறான். அந்த பயணத்தின் ஊடாக அவர்கள் இருவரின் நடுவிலும் காதல் மலர்கிறது. அது ஆதித்தியன் மரணத்திற்குப் பின் அழகி தன்னை மாய்த்துக் கொள்ளும் தருணத்தில் முடிகிறது. இந்தக் காதலுக்கு பின்பான மரணமென்பது ஒரு நாவலின் மிகப் பெரிய நாடகத் தருணம். அவை சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் கூட நாவலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தருணம்தான். ஆனால் இவை எதையும் செய்யாமல் அவர்கள் இருவரின் சாவும் ஒரு விபத்தாக முடிந்து விடுகிறது அதன் பின் அதனை ஒரு அமங்கலமாக மட்டுமே கருதுகின்றனர். மாறாக இருவரின் சாவும் கோவிலின் கட்டமைப்போடு அல்லது ராஜேந்திரனின் மனவோட்டப் போராட்டத்தோடு ஏதோ ஒரு புள்ளியில் இணைத்திருந்தால் அந்த உபகதை சென்று தைக்கும் குறியீட்டுத் தளமே வேறு.

இவர்கள் இருவரும் வரும் இறுதி அத்தியாயத்தில் நடைபெறும் மகேந்திர பல்லவனின் மத்த விலாசப் பிரகசனம் நாடகமும் அப்படி தான். நாடகம் அரங்கேறுகிறது, அதே தருணத்தில்தான் ஒரு விபத்தில் ஆதித்தியன் இறக்கிறான். இரண்டு சம்பவங்களுக்கும் குறியீட்டுத் தளத்தில் ஏதோ ஒரு பொருளுணர்த்தி நிற்க வேண்டும். அவ்வாறில்லாமல் நாடகம் வெறும் காட்சி சம்பவமாகப் பின்னணியில் வரும் போது அதன் பலத்தை இழக்கிறது. அத்தனைப் பக்கம் கடந்து செல்லும் நாடகம் நாவலுக்கு எந்தவித பொருளுமில்லாமல் போகிறது.

இதன்காரணம் நாவலின் ஒற்றைப்படை தன்மையே. நாவல் என்பது நான்கு பக்கமும் சுழன்று ஏற்படுத்தும் பின்னல் அ.வெண்ணிலா எழுத்தில் நிகழவில்லை. ராஜேந்திரனுக்கு நிகழும் அனுபவங்களுக்கு அர்த்தமில்லாமல் வந்துபோகும் கதாபாத்திரங்களாக அவர்கள் எஞ்சுகிறார்கள்.

ராஜேந்திரனின் பயணம்

நாவலின் முதல் பாகத்தில் வரும் ராஜேந்திரனின் பயணம் நாவலுக்குள் எந்தAvennila பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. விதிவிலக்காக தில்லை கோவிலில் நடக்கும் பூசலை தீர்க்க அவன் செல்வது மட்டுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்பின்பான நார்த்தா மலையில் நடக்கும் பஞ்சாயத்து, உப்பு வணிகர்களுடனான பஞ்சாயத்து, அந்தணர்களுக்கு நில தானம் வழங்கியதற்கான பஞ்சாயத்து போன்ற இடங்கள் நாவலைக் கடந்து செல்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில் பிரதாப முதலியும் அவர் மனைவியும் ஒவ்வொரு ஊர்களாகச் சென்று அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துத் திரும்புவது போலவே இதிலும் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பிரச்சனைகள் ஏதோ ஒரு வகையில் ராஜேந்திரனைத் தைக்க வேண்டும், அவன் பயணிக்கும் மன அலைகலைப்பின் ஒரு பகுதியாக வேண்டும், இல்லையென்றால் நாவலாக வளராமல் ஒரு நீல் தொடர் கதையாக மாறிவிடும். கங்காபுரத்துக்கு அதுதான் நிகழ்ந்துள்ளது.

நாவலின் இரண்டாம் பாகம் இந்த சிக்கலை மீறி வந்துள்ளது . ஆதி நகர் அரசன் இந்திர ரதன் மீதான போர் அதற்கு ஒரு சான்று. தந்தை ராஜராஜன் இல்லாத சோழ நகரம் பலம் குன்றிவிட்டதாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர். அது ராஜேந்திரனின் இரண்டாம் இடத்தை ஏதோ ஒரு மூலையில் கொண்டு தொடுகிறது. கடாரத்தின் மீதான போர் கூட அவன் அகங்காரத்திற்கும், நிலைப்பாட்டிற்கும் சவால் விடும் பகுதிகளே. அதன் மூலம் ராஜேந்திரனின் மனம் தஞ்சையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கங்கைக் கொண்ட சோழீசுவரத்திற்கு நகர்கிறது. அந்த வகையில் இரண்டாம் பாகத்தின் கட்டமைப்பு முதல் பாகத்தை மீறி வந்துள்ளது.

நாவல் கட்டமைப்பில் சிறந்த இடங்களென சில உள்ளன. உதாரணமாக ராஜேந்திரனை சோழீசுவரத்திற்கு தலைநகரை மாற்றும் மனநிலைக்குக் கொண்டு செல்லும் காரணிகள். அதில் முதன்மையானது லோக மாதேவியின் கதாபாத்திரம். அக்கதாபாத்திரத்தின் இருமை நிலையே நாவலை மேலும் வளர்த்துச் செல்கிறது.

நாவலின் தரிசனம்

நாவலில் வரும் தகவல்கள் நாவல் எழுப்பும் கேள்விகளுக்குச் சரியான விகிதம் இடமளிக்க வேண்டும். கங்காபுரம் அதனைத் தவறவிடுகிறதோ என்ற ஐயம் வருகிறது. விதிவிலக்கு இரண்டு கதாபாத்திரங்கள், ஒன்று லோக மாதேவி, மற்றொன்று ராஜேந்திர சோழன்.

இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டும் நாவலுள் முழுமை பெறுகின்றனர். லோக மாதேவியின் இருமை மனநிலையே நாவலின் உச்சம். ராஜராஜசோழனால் கூட அந்த இடத்தை தொட முடியவில்லை. அவன் வெறும் நடைமுறை சிக்கல்களினால் மட்டுமே நாவல் முழுவதும் அலைகலைக்கப்படுகிறான். ராஜேந்திரனுக்கு ஐம்பது வயது வரை இளவரசு பட்டம் ராஜராஜனால் மறுக்கப்படுகிறது. ராஜராஜனும் அந்த அகவை வரை காக்கவைக்கப்படுகிறான். அதன் வலி நன்கு உணர்ந்து இருந்தும் அவன் மகனுக்கு ஏன் அவன் இதனைச் செய்கிறான் என்ற கேள்வி எழுகிறது. அவன் அதனை விரும்பி செய்தானா? இல்லை அவன் செயல்களால் அலைகலைப்பட்டானா? என்ற கேள்விகள் நாவலில் எழவே இல்லை. அதாவது ராஜேந்திரனின் அலைகலைப்புகள் மீதான ராஜராஜனின் பார்வை. அதனைத் தவறவிட்டு பட்டத்திற்கும், பட்டத்தரசி தாய்மைக்கும் நடக்கும் சூழ்ச்சிகளான எளிய நடைமுறை சிக்கலையே ராஜராஜன் மீது நாவல் தைக்கிறது. நாவலின் பெரிய கதாபாத்திரங்களான வீரமா தேவி, குந்தவை ஆகியோரிடமும் இதே சிக்கலே அவர்கள் நாவலின் நடைமுறை சிக்கலை ஆராய்ந்து தீர்க்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்.

லோக மாதேவியின் அனைத்து பக்கங்களும் அலசப்படுகின்றன. அவளின் தாய்மை திரிபுவன மாதேவியின் மகனாக இருந்தாலும் ராஜேந்திரனின் மீதான அவளின் அளவு கடந்த பாசம், அவன் இளவரசனுக்கான வயதை அடைந்தவுடன் அவன் மேல் கொள்ளும் வஞ்சம், அதற்கான சூழ்ச்சி, அவளின் தாய்மை ஏக்கம் என அனைத்து பக்கங்களும் பேசப்படுகின்றன. இரண்டு, மூன்று அத்தியாயத்தில் மட்டும் பேசப்பட்டிருக்கும் லோக மாதேவியின் கேள்விகள் நாவலில் இன்னும் பேசப்பட்டிருக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்தின் அலைகளிப்பைப் போல் மற்ற முக்கிய கதாபாத்திரங்களும் அமைந்திருக்க வேண்டும். அதனை விட்டு ஒவ்வொன்று ஒவ்வொரு எளிய நடைமுறை சிக்கலில் கொண்டு முட்டி நிற்கும் போது நாவலின் தாக்கம் குறைகிறது.

சிறந்த நாவலென்பது அது எழுப்பும் கேள்வியின் அனைத்து பக்கங்களையும் பார்க்க வேண்டும். அவை பகடை ஆட்டத்தில் சோவியின் அனைத்து சாத்தியங்களையும் பார்ப்பதற்கு நிகரானது. இங்கே கங்காபுரத்திற்கான தேவையும் அதற்கான ராஜேந்திரனின் மனநிலையும் மட்டுமே நாவல் முழுவதும் பரிசீலிக்கப்படுகின்றன. குறிப்பாக ராஜேந்திரனின் அனைத்து வெற்றிகளின் மேலும் ஏறி நிற்கும் இரண்டாம் இடத்தினை மட்டுமே.

ராஜேந்திரன், பிறப்பிலிருந்து இறப்பு வரை அவன் மீதான இரண்டாம் இடம், அதன் மேல் அவன் கொள்ளும் அலைகலைப்புகள். கங்காபுரம் என்னும் அவனது முதலிடத்திற்கான கனவு, அது அவன் மேல் ஏற்றும் நடைமுறை சிக்கல்கள், அதன்வழி அவன் மீண்டும் தொட்டு நிற்கும் அதே இரண்டாவது இடம் என அவன் அகம் சார்ந்து வரும் பகுதிகள் நாவலின் சிறந்த பகுதிகளாக அமைகிறது. இந்த உணர்வுகள் நாவல் முழுதும் வியாபித்து உணர்வின் வழி நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவை சில பகுதிகளில் மட்டும் தேங்கி விடுவதே நாவல் ஓர் அனுபவமாக மாற மறுத்துவிடுகிறது.

வரலாறு பல முடிச்சுகள் கொண்ட பெரும் கம்பளம். நாவலாசிரியர் எல்லா முடிச்சுகளின் பின்னும் செல்வது சாத்தியமல்ல. ஆனால் ஒரு முடிச்சைப் பற்றிக்கொண்டு அங்கிருந்து பல திக்குகளிலும் பயணிக்கலாம். உதாரணமாக, வெள்ளையானை நாவலின் பிரச்சனை எய்டன், நீலமேகம் இருவருக்குமாகத் தொடங்குகிறது அது வளர்ந்து வளர்ந்து ஒட்டுமொத்த சமுதாயப் பிரச்சனையாக மாறி அதன் அனைத்து தரப்பும் பார்க்கப்படுகிறது. இது கங்காபுரத்தில் நிகழாமல் போவதே அது நாவலாக வாசிக்க முடியாத படிக்கு வெளியே தள்ளுகிறது.

உதாரணமாக போந்தன் கோவிலுள் தன் மேல் தீவைத்துக் கொள்கிறான். அதற்கான காரணங்களை ராஜேந்திரன் கேட்டறியும்போது திடுக்கிடுகிறான். போந்தன் மலைக் கிராமத்திலிருந்து கோவில் பணிக்காக அங்கே வந்தவன், எந்தவித கூலியுமில்லாமல் தன் வேலையைவிட்டு அங்கே பணி செய்வேன் அவன் குடும்பச் சூழலால், குழந்தைகளின் பட்டினியால் தீவைத்ததை அறிந்து கொண்ட பிறகு அவன் பிரச்சனையைத் தீர்த்துவிட்டுத் திரும்பி வரும்படி சொல்கிறான். அவனுக்கான சலுகைகளை அளிக்கிறான். ஆனால் ராஜேந்திரன் கோவில் கட்டுவதிலுள்ள மிகப் பெரிய சவால் என அதனை நினைக்கவே இல்லை. தஞ்சைப் பெரிய கோவிலின் பிரச்சனையும் அது தான். அது நாவலில் பரிசீலப்படவேயில்லை, மாறாக அந்தந்த பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகளையே நாவல் சொல்கிறது.ஒவ்வொரு தருணங்களும் அதற்கான நடைமுறை தீர்வை நோக்கியே நகர்கின்றன.

ஆதித்தியன் அழகி காதல் பகுதிகளும் அவ்வாறே, அவன் ஒரு சிறு விபத்தில் இறந்து விடுகிறான். இது அவர்களின் பிரிவின் ஏமாற்றத்தையும், இருவரின் காதலின் உன்னதத்தையும் மட்டுமே பேசுகிறது. அந்த பிரிவு வேறு எந்த குறியீடு தளத்திலும் சென்று அந்த கதாபாத்திரங்களை நிறுத்தவில்லை.

நாவலின் தொடக்கத்தில் வரும் தில்லை கோவிலுள்ள வட அந்தணர் செய்யும் வேத ஆகமங்களும், சோழ அந்தணர்கள் செய்யும் தேவார பூஜைகளும் கூட அப்படி தான். அந்த பிரச்சனை நாவலின் வெவ்வேறு பகுதியில் பேசப்படுகிறது. அவையெல்லாம் சமகால பிரச்சனைகளை நினைவு படுத்தலாம், ஆனால் நாவலுக்குள்ளான சிக்கல்களுக்கு அவை எந்த பொருளேற்றமும் நிகழ்த்தவில்லை. ராஜராஜன், ராஜேந்திரன் காலத்தின் மிகப்பெரிய பிரச்சனையான வலங்கை, இடங்கை பிரச்சனையும் நாவலில் எளிய தீர்வுகளாகவே முற்றுப் பெறுகிறது.

ஒரு வரலாற்று நாவலில் தகவல்களும், நாவலுள் நம் புனைவின் மூலம் ஏற்றும் authentic தன்மைகளும் மிகப் பெரும் பலம். ஆனால் சிறந்த நாவல் அத்தகவலின் அடர்த்தியால் மட்டும் பேசப்படுவதல்ல. நாவலின் ஆழமென்பது அது எழுப்பும் கேள்வியின் ஆழத்தைக் கணக்கில் கொண்டது. தகவலின் ஆழம் செறிந்து கிடக்கும் கங்காபுரம் நாவல். அதனுள் வரும் கேள்விகளின் பக்கங்களைப் பரிசீலிக்காமல் அதற்கான எளிய தீர்வுகளோடு மட்டுமே நின்று விடுகிறது.

1 comment for “கங்காபுரம்: வரலாற்றின் கலை

  1. A.Anbarasan
    November 5, 2020 at 12:46 am

    நாவலை எழுதியது. ஒரு பெண் என்று தெரிந்திருந்தும் நாவலாசிரியன் என்று கட்டுரையாளர் சொல்லியுருக்கிறார்.வாசகன் என்கிறார்.பெண் எழுத்தாளர் என்பதால் பெண் பால் சொற்களைப் பயனபடுத்தலாம்.அல்லது பொதுப்பெயரில் சுட்டுவைப. பயன்படுத்தலாம்.
    அப்புறம் விமர்சனம் என்பதை மட்டை அடியாக அடித்துள்ளார்.குறை சொல்வதைப் பற்றித் தான் கட்டுரையே ஒழிய மற்றது எதற்கும் பயன்படுகிற மாதிரி தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *