பிச்சைப் புகினும்

indexஇந்தக் கொரோனா காலகட்டத்தின் அளவுக்கு மோசமில்லை என்றாலும், பத்தாண்டுகளுக்கு முந்தைய சிங்கப்பூரிலும் பலருக்கும் எங்கே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றொரு பயம் இருந்தது. அதற்குக் காரணம் 2007-2009 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம், அதைத்தொடர்ந்த ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள்.

எனக்குப் பரவாயில்லை. அதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் இருந்ததுபோல நிறுவனத்தில் கூடுதல்பணி கிடைக்கவில்லை. அதனால் கூடுதல் வருமானமும் இல்லை, அவ்வளவுதான். விளைவாக ஓய்வுநேரம் கணிசமாக அதிகரித்தது. அப்போது ஊட்லண்ட்ஸில் வசித்துக்கொண்டிருந்ததால் அடிக்கடி அங்குள்ள தேசிய நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தேன். இலக்கிய வாசிப்பு சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்தக் கருமத்த படிக்கிறதுக்கு எங்கூட சேர்ந்து என்யூஎஸ்ல பார்ட் டைம் படிக்கலாமில்லைங்க’

நூலகத்தில் அமர்ந்து ‘காதுகள்’ நாவலை மெய்மறந்து வாசித்துக்கொண்டிருந்த எனக்குப் பின்னாலிருந்து, அசரீரி போல ஒலித்துச் சென்ற, அந்தக் கோயம்புத்தூர் நண்பரின் குரல் கடுப்பைக் கிளப்பியது உண்மை. ஆனாலும் உள்ளுக்குள் சமாளித்துக்கொண்டு நூலக அமைதி கெடாமல் சன்னமான குரலில், ‘ஆமாங்க நிச்சயம் சேரணும். எனக்கும் ரொம்ப வருஷமா ஆசதான். சீக்கிரம் சேந்துர்றன்’ என்று அவரிடம் சொல்லி அனுப்பினேன்.

அப்போதைக்கு அவரை அங்கிருந்து வெட்டிவிட்டு அனுப்புவதற்காகச் சொன்னதுதான் என்றாலும் ஏனோ அவரின் குரல் அன்றிலிருந்து என் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமனுக்கு அப்படித்தான் காதுகளில் யாரோ பேசுவதுபோலக் கேட்டுக்கொண்டே இருந்ததாம். அதைத்தான் அவர் ‘காதுகள்’ நாவலில் எழுதினார்.

ஊரில் இயந்திரவியல் பட்டயப் படிப்பு முடிந்ததும் தொடர்ந்து பட்டப்படிப்பு படிக்கத்தான் விரும்பியிருந்தேன். ஆனால் ‘ஃப்ரீ சீட்’ என்று அழைக்கப்பட்ட குறைந்த கட்டணப் பிரிவில் இடம் கிடைக்காததால் முதலில் வேலைக்குப்போகலாம், பிறகு பகுதிநேரமாகப் பட்டப்படிப்பைப் படித்துக்கொள்ளலாம் என்று நினைத்தது 1998ஆம் ஆண்டு. கோயம்புத்தூர்க்காரரின் அசரீரி சிங்கப்பூரில் ஒலித்தது 2008ஆம் ஆண்டு. அந்தப் பத்தாண்டுகளில் பலமுயற்சிகள் செய்திருந்தபோதும் பகுதிநேரப் பட்டப்படிப்பு என்பது கனவாகவே நீடித்தது.

அறந்தாங்கிப் பக்கம் ஒரு சர்க்கரை ஆலையில், 2000ஆம் ஆண்டை ஒட்டிய காலத்தில் பணிபுரிந்தேன். உடன் பணிபுரிந்த சில நண்பர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் பொறியியல் பட்டப்படிப்பிற்குச் சேரலாம் என்று முனைந்தார்கள். அறந்தாங்கியிலிருந்து காரைக்குடிக்கு சுமார் ஒருமணிநேரப் பயணம். வகுப்புத் தோழர்களாக நண்பர்களே வரக்கூடும் என்பதால் சில வகுப்புகளைத் தவறவிட்டாலும் அவர்களிடம் குறிப்புகளைப் பெற்றுச் சமாளிக்கமுடியும். பெற்றோரிடம் பணம்வாங்காமல் சொந்த வருமானத்திலேயே படிக்கலாம் என்ற எண்ணமும் சேர்ந்து எனக்கு ஓர் உற்சாகம் பற்றிக்கொண்டது.

மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பகுதி நேர மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் ஆனால் நல்லவேளையாக அழகப்பா பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்துவிட்டது. வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினேன்.

சில பாடங்கள் ஒன்றுமே விளங்கவில்லை. இதையெல்லாம் நான்காண்டுகள் சமாளித்துக் கரைசேர முடியுமா என்ற சந்தேகம் அரித்தது. போதாக்குறைக்குப் பாடத்தில் கவனம்செலுத்த இயலாதபடி வேலையிடத்திலும் சில பிரச்சனைகள் எழ ஆரம்பித்தன. மேற்பார்வையாளர்களிடம் முறைத்துக்கொண்டேன். அதனால் உண்டான உளைச்சலில் வகுப்புகளுக்கு மட்டம்போடத் தொடங்கினேன். எதையும் நிதானமாகப் பார்க்கமுடியாத வயது அது.

ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட வேலையை  ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கச்சொன்னார் மேற்பார்வையாளர். நானும் எழுதிக்கொடுத்தேன். ஆனால் நான் அளித்திருந்த காரணம் உண்மையல்ல என்று மறுத்த அவர் உண்மையான காரணத்தை எழுதித்தரச் சொன்னார். எனக்குள் எங்கிருந்தோ கிளம்பியது ஆத்திரம். நான் எழுதியிருந்த காகிதத்தை அவர் கண்முன் கிழித்தெறிந்தேன். ‘வெள்ளைத்தாளில் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். உங்கள் விருப்பத்துக்கு எதைவேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்’ என்றேன். அச்சம்பவம் அவரை மிகவும் பாதித்தது.

இன்னொரு அதிகாரியிடம் வேறொரு பிரச்சனை. என் பணிநேரம் முடிந்ததும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, அடுத்த ஷிஃப்ட்டுக்கு வரவேண்டியவர் அவசரமாக மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதால் மேலும் ஒரு ஷிஃப்ட் (8 மணி நேரம்) பார்க்கவேண்டும் என என்னிடம் கேட்டார். ஏற்கனவே எரிச்சலில் இருந்த நான் எனக்கும் உடம்பு சரியில்லை என்றேன். நான் பொய் சொல்கிறேன் என்பது எங்கள் இருவருக்குமே தெரிந்தது. அவருக்கும் என்மீது கோபம்.

பிறகு வேலையிடத்தில் ஒரு விபத்தில் சிக்கினேன். நல்ல காயம். பாதுகாப்பு வழிமுறைகளை நான்  ஒழுங்காகப் பின்பற்றாததுதான் விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களுக்கும் மேலிடத்தில் நெருக்கடி. அவர்கள் கண்டுபிடிப்பில் உண்மையும் இல்லாமலில்லை. ஒரு வேலையைக் குறுக்குவழியில் விரைவாகச் செய்வதுதான் திறமை என்ற எண்ணம் எனக்கு இருந்த காலம்.

இன்னொரு சம்பவம். அது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பித்துப்பிடித்துத் திரிந்தகாலம். அன்று இரவுப் பணிக்குச் செல்லவேண்டும். இரவு பத்து மணிக்குத் தொடங்கி காலை ஆறு மணிக்கு வேலை முடியும்.  ‘அலைபாயுதே’ படம் வெளியாகியிருந்தது. திருச்சிக்குப் போய் மதியக்காட்சி பார்த்துவிட்டு மாலை திரும்பிவிடலாம் என்றும் இரவு பத்துமணிக்குச் செல்வதற்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்றும் கூறி இரண்டு நண்பர்கள் வற்புறுத்தினர். நானும் போனேன்.

திருச்சியில் கூட்டம் அலைபாய்ந்தது. மதியக்காட்சிக்கு நுழைவுச்சீட்டுக் கிடைக்கவில்லை. கள்ளச்சந்தையில் வாங்கலாம் என்றால் ஆகாத விலை. இரவுக்காட்சி சீட்டு ஓரளவு கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைத்தது. ‘நான் வேலைக்குப் போகணும். நீங்க படம் பாத்துட்டு வாங்க’ என்றேன் ஆனால் நண்பர்கள் விடவில்லை. ‘இவ்வளவு தூரம் வந்துட்டு படம் பாக்காம போனா எப்டி? வேலைக்கு அவசர விடுப்பைச் சொல்’ என்றனர். எனக்கும் சபலம். ஒரு பொய்யைச் சொல்லி விடுப்பெடுத்தேன். அதுவும் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.

எல்லாமுமாகச் சேர்ந்து வேலையிடப்பாதுகாப்பு விதிகளை மதிக்காத, அதிகாரிகளை மதிக்காத, நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு அவசரகாலத்தில் ஒத்துழைக்காத, பொறுப்பில்லாமல் விடுப்புகள் எடுக்கும் ஊழியர் என்ற பெயர் அழுத்தமாக விழுந்தது. பெயர்தானே இருக்கட்டும் என்று அலட்சியமாக இருந்தேன். ஆனால் அதன் விளைவாக நிறுவனத்தை விட்டே நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நானும் மன்றாடிப் பார்த்தேன். அவர்கள் மசிவதாக இல்லை.

வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் படிப்பைத் தொடர்வதில் சிக்கல் உண்டானது. சென்னையைப் போன்ற நகரமாக இருந்திருந்தால் இது இல்லை என்றால் இன்னொரு நிறுவனம் என்று வேலையை மாற்றிக்கொண்டு படிப்பைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அப்போது அறந்தாங்கி, புதுக்கோட்டை, காரைக்குடி வட்டாரத்தில் சொல்லிக்கொள்ளும்படியான தொழில்வளர்ச்சி இல்லை. முழுநேரமாகப் படிப்பை மாற்றிக்கொண்டு மீண்டும் முழுநேர மாணவனாக எனக்கு விருப்பமில்லை. சொந்தக்காலில்தான் படிக்கவேண்டும் என்றொரு வைராக்கியம். ஒரு செமஸ்டர்கூட முடிக்காத நிலையில் பல்கலைக்கழகத்திலிருந்து விலகிக்கொண்டேன்.

பிறகு கர்நாடக மாநிலத்தில் ஒரு வேலை கிடைத்ததால் அங்கு சென்றேன். சில மாதங்கள் கழிந்தபின் சென்னைக்கு அருகில் ஶ்ரீபெரும்புதூரில் வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்திலும் சில நண்பர்கள் சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பைத் தொடர முயற்சி செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு சுமார் ஒருமணி நேரப் பயணம். எனக்கு மீண்டும் சபலம் தட்டியது. ஆனால் அவசரப்படாமல் முதலில் வேலை நிலைக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்.

அங்கு பணியும் சற்றுக் கடுமை. வேலை முடிந்ததும் ஓய்வெடுத்தால் போதும் என்று இருந்தது. பகுதிநேரப் படிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்ற எண்ணம் வலுவாகியது. ஒருவேளை நம் ஜாதகத்தில் மேற்படிப்பு இல்லையோ? அப்படி நான்கைந்து ஆண்டுகள் ஓடிய நிலையில்தான் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. இரண்டாண்டுகள் மட்டும் வேலைபார்த்துக் கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு திரும்பிவிடலாம் என்று 2006ஆம் ஆண்டில் சிங்கை மண்ணில் காலடி வைத்தேன்.

இந்திய ரூபாய்க்கு மாற்றினால் ஊரில் கடைசியாக வாங்கிக்கொண்டிருந்த ஊதியத்தோடு ஒப்பிடும்போது பத்துமடங்கு. நிறுவனத்தில் கூடுதல்பணி செய்ய அதிகவாய்ப்புகள் கிடைத்ததால் வருமானம் மேலும் கூடியது. பல நண்பர்களோடு அறையைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்ததால் செலவும் அதிகமில்லை. ஆகவே மேற்படிப்புப் படித்து, பணியில் உயர்ந்து, அதிக ஊதியம் பெறுவது என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்குப் பதிலாக வெளிநாட்டுவேலை என்கிற உபாயத்தின் வழியாக நேரடியாகவே தொட்டுவிட்டதால் இனி மேற்படிப்பெல்லாம் அவசியமா என்கிற அடிப்படைக் கேள்வியும் எழுந்தது. வீம்புக்குப் படிப்பானேன்? இப்படியே காலத்தை ஓட்டிவிட்டால் என்னதான் கெட்டுவிடும்?

அப்படி இனி நமக்குப் பட்டப்படிப்புத் தேவையில்லை என்று அமைதியாக சிங்கப்பூர் நூலகத்தில் இலக்கியம் வாசித்துக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த போதுதான் அந்தக் கோயம்புத்தூர் நண்பரின் அசரீரி ஒலித்தது. ‘சரி, அழகப்பா, அண்ணா இல்லையென்றால் என்ன? என்யூஎஸ்ஸைப் பாரேன்’ என்று ஒரு பழையகுருடி உள்ளே கதவைத் தட்டத் தொடங்கினாள்.

சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேரப் பட்டப்படிப்பில் சேரவேண்டுமானால் உயர் கணிதப் பாட நுழைவுத் தேர்வில் தேறவேண்டும். அதுவும் ‘வகை நுண்கணிதம்’ எனப்படும் கால்குலஸ் ஒரு மாயகணிதம். ஏற்கனவே பல பலமுறை முயன்றும் அத்தேர்வில் தேறவியலாமல் இருந்த நண்பர்கள் சிலரையும் அறிவேன். கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் கணித வாசனையே இல்லாமலிருந்ததால் மீண்டும் முதலிலிருந்தா? என்று முதலில் மலைப்புத் தட்டியது. ஆனால் மனமிருந்தது என்பதால் மார்க்கமும் இருந்தது.

ஏற்கனவே நுழைவுத் தேர்வில் தேறியிருந்த ஒரு திருநெல்வேலிக்காரர் என்னைப்போலப் புதிதாக முயற்சிப்பவர்களுக்குக் கணிதப்பாடம் சொல்லித் தருகிறார் என்று கேள்விப்பட்டேன். நான் அவரிடம் சரணாகதி அடைந்தேன். அரிச்சுவடியிலிருந்து கணிதப் பாடத்தை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதிகாலையிலேயே அவரது அறைக்குச் சென்றுவிடுவேன். அவரும் தயாராக இருப்பார். பொறுமையாகச் சொல்லிக்கொடுப்பார். சமயங்களில் மாலையில் தொடங்கி நள்ளிரவைத்தாண்டி வகுப்புகள் நீளும். இரண்டுமாத காலம் அப்படி என்னைத் தயார்ப்படுத்தினார்.

நுழைவுத்தேர்வு சுமாராகத்தான் எழுதினேன். ஆனால் பொருளாதாரச் சுணக்கத்தால் தேவையான அளவில் பகுதிநேரப் படிப்பிற்கு மாணவர்கள் வரவில்லையோ என்னவோ எனக்கு இடம் கிடைத்துவிட்டது. 2009ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து பட்டப்படிப்புக் கனவு சிங்கப்பூரில் நனவாகத் தொடங்கியது. கூடுதல்பணி இல்லாததால் கையில் காசு புரளவில்லை. ஆனால் நல்வாய்ப்பாக வங்கியில் மேற்படிப்பிற்காகக் கடன்பெறும் வசதி இருந்தது. பிச்சைப் புகினும் கற்கச் சொல்லியிருக்கின்றனர் நம் முன்னோர்கள், கடன்தானே பரவாயில்லை.

இந்த முறை எக்காரணம்கொண்டும் விட்டுவிடக்கூடாது என்ற கவனத்தோடு அடுத்த நான்காண்டுகளுக்குப் பகுதிநேரப் படிப்பை கவனமாகத் தொடர்ந்தேன். அந்த நான்காண்டுக் காலத்தில் வேலை மாற்றம், திருமணம், குழந்தை என்று பொறுப்புகள் விரிவடைந்தபோதும் படிப்பு இடைநிற்காமல் தொடர்ந்தது. ஒருவழியாகப் பட்டம்பெற்று, தொடர்ந்து அதே பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பும் படிக்கமுடிந்தது. கோயம்புத்தூர்க்காரர் அன்று கொளுத்திபோட்ட தீப்பொறிதான் எல்லாத்துக்கும் காரணம்.

ஆனால் அவர்சொன்ன ‘கருமம்’ பட்டமேற்படிப்பு முடிந்ததும் இன்னும் தீவிரமானது. இலக்கிய வாசிப்பு முன்னெப்போதைக் காட்டிலும் தீவிரமாக உள்ளிழுத்துக்கொண்டது.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஒரு சம்பவம். ஊரில் ஒரு நண்பர். நடுத்தர வயதுக்காரர். வேலை வேலை வேலை என்று ஓய்வொழிச்சல் இல்லாமல் பம்பரமாகச் சுழன்றவர். சுயதொழில் என்பதால் வாரயிறுதி ஓய்வுகூடக் கிடையாது. சொல்லப்போனால் வாரயிறுதியில்தான் அவருக்கு வேலை அதிகம், வருமானமும் அதிகம். ஒரேயொரு நாள்கூட அவர் சுணங்கியதில்லை. அதனால் அவர் தொழிலும் சுணங்கியதில்லை. கொரோனா வந்து முதலில் அவர் தொழிலைப் பாதித்ததோடு பிறகு அவரையும் தாக்கியது. பத்து நாட்கள் ஒரே அறையில் அதுவும் தொழில்செய்யாமல் இருப்பது என்பது அவரது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது.

மனிதர் உடைந்துபோய்விட்டாராம். பொருளாதாரக் கஷ்டமெல்லாம் இல்லை. ஆனால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டதாகப் புலம்பத் தொடங்கிவிட்டாராம். உடல்நலம் தேறியபின்னும் உறங்குவதே இல்லையாம். முன்னைப்போலத் தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லையாம். தன்னைத்தானே ஒரு பத்து நாட்கள் நேருக்குநேர் எதிர்கொண்டதும், பொருளீட்டுவது ஒன்றைமட்டுமே மையமாகக்கொண்ட அவரது உள்ளீடற்ற வாழ்க்கையின் பொருளின்மையை அவர் கண்டுகொண்டுவிட்டார்.

அந்தத் தொழில் இல்லையென்றால் அவருக்கு வாழ்க்கையில் சிந்திப்பதற்கோ, பேசுவதற்கோ, செய்வதற்கோ எதுவுமே இல்லை. பிள்ளைகளும் வளர்ந்துவிட்டதால் முன்னைப்போல அவருடைய அன்றாட கவனிப்பு அவர்களுக்குத் தேவைப்படவில்லை. திடீரென்று அவருக்குத் தன் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றிவிட்டது.

எனக்கு நம் முன்னோர்கள் பிச்சைப் புகினும் கற்கச் சொன்னது எது என்பது உறைத்தது. அவர்கள் பட்டப்படிப்பைச் சொல்லவில்லை. எந்தச் சூழலிலும் அந்தக் ‘கருமத்தை’ விட்டுவிடாதீர்கள் என்றுதான் சொல்லியிருக்கின்றனர். எந்த நிலையிலும் வாழ்க்கைக்குத் தொடர்ந்து ஏதாவது ஓர் அர்த்தத்தை அந்தக் ‘கருமம்’ கற்பித்துக்கொண்டே இருக்கிறது.

 

3 comments for “பிச்சைப் புகினும்

  1. M. Velmurugan
    November 1, 2020 at 11:18 am

    ஆர்வமூட்டும் எழுத்து. எதாவது படிக்க வேண்டும் என்ற என் ஆழ் மன ஆசையை மீண்டும் தூண்டியுள்ளது

  2. Shana
    November 6, 2020 at 9:59 pm

    சும்மா இரு என்று சொல்லி கையில் நூறு புத்தகங்களைத் தந்தால் இவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *