போரின் கதைகள் : தாசெக் ஷாஹ்டு

‘தாசெக் ஷாஹ்டு மற்றும் வேறு சில கதைகள்’ (Tasik Syahdu dan cerita-cerita lain) தேசிய இலக்கியவாதியும் மூத்தபடைப்பாளியுமான சமாட் சாய்ட் எழுதிய சிறுகதை தொகுப்பு. 2003 -இல்  பிரசுரிக்கப்பட்ட இத்தொகுப்பின் 22 கதைகளும் அவரே தேர்ந்தெடுத்து பிரசுரித்தவை. இத்தொகுப்பில் ‘ரிம்பா செனி செவோராங் செனிமான்’ அதாவது ஒரு கலைஞனின் கலை வனம் என்ற தலைப்பிலான  சமாட் சாய்ட் அவர்களின்  அனுபவக்குறிப்புகள் கவனிக்கத்தக்கதன்னுரையை எழுதியுள்ளார். ஒரு கலைப்படைப்பில் அமைந்திருக்கும் கலைஞனின் சுயக் குறிப்புகள்  எப்போதுமே ஈர்ப்பானவை. நான் இச்சுயக்குறிப்பின் வழி ஒரு கலைஞனுக்கே ஆன அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொள்கிறேன். வேற்று தேசம்,  வேற்று இனம் என எத்தனை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் கலைஞர்களின் மனம் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துவிடுவதை இப்பதிவின் வழி அறிந்தேன். 

“வாசிப்பு என்னையும் என் அன்பையும் தனக்குள் விதைத்து துளிர்க்கவைத்தது. வாசிக்காமல் இருக்கும் தருணங்களில் காதல்தோல்விக்கு ஈடான பிரிவின் வழியை உணர்கிறேன்” என அவர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இள வயதில் அவருக்கு இருந்த திக்குவாய் சிக்கல் இயல்பாகவே அவரை அதிகம் பேசாதவராகவே அடையாளப்படுத்தியுள்ளது. அந்த அமைதியை அவர் ஈடு செய்து கொண்ட இடம் வாசிப்பு. ஹஸ்ஸான் தானி என்ற வகுப்பு நண்பர் இரவல் கொடுத்த  புத்தகங்களே சமாட் சாய்ட் என்ற தேசிய எழுத்தாளனை வாசிப்புக்குள்  வார்த்திருக்கின்றது. அப்படி அவருக்குக் கிடைத்த வாசிப்பனுபவமே அவரை மேலும் உலக இலக்கியங்களை வாசிக்கத் தூண்டியுள்ளது. 

இத்தொகுப்பில்  மொத்தமாக 22 கதைகள் இருந்தாலும் அதில் குறிப்பிட்டு முன்னிருத்தத்தக்க கதைகளாக போர்சூழலை மையமிட்ட எட்டு கதைகளைச் சுட்டலாம். இக்கதைகள் போர்ச்சூழலைப் பல்வேறு பின்னணியிலிருந்து முன்வைக்கின்றன. இன்னும் சில கதைகள்  போருக்குப் பின்பான மக்களின் வாழ்வையும் சராசரியர்களின் தினசரிகளையும்,  எளிய மக்களின் இடப்பெயர்வு, வறுமை,  குடியிருப்புச் சூழல், முதலாளி வர்க்கத்தின் உழைப்பு சுரண்டல்,  என ஒட்டுமொத்த வாழ்வின் மீதும் ஓர் எழுத்தாளனுக்கு இருக்கும் பார்வையையும் மெல்லுணர்வையும்  காட்டுகின்றன. அவை பெரும்பாலும் திட்டுத் திட்டான காட்சிப்பதிவுகள். அந்தக் காட்சிகள்  மிக துள்ளியமாக அமைந்து நம்மை அந்தக் காலத்துக்கும் அந்த மக்களின் உரையாடலுக்குள்ளும் இழுத்துச் செல்கின்றன.    இக்கதைகளில் அவரது பார்வை சிறு சிறு பகுதிகளாக உடைந்து அதன் மிக நுண்ணிய இடைவெளிக்குள் ஊடுருவி, வெவ்வேறு நிலை மக்கள் வெவ்வேறு நிலையில் எதிர்நோக்கிய வெவ்வேறு சிக்கல்களை, கையறுநிலைகளை  கூர்ந்து காட்டுகின்றன.  

இத்தொகுப்பின் முதல் கதையாகிய ‘தாசெக் ஷாஹ்டு’ (Tasik Syahdu) தான்  முதன்மையாகக் கருதும் கதை என ஆசிரியரே குறிப்பிட்டிருக்கிறார். இத்தொகுப்பை ஒட்டுமொத்தமாக வாசித்தப் பின் உருவாகும் என் மதிப்பீடும் அதுவே.  இக்கதைத் தலைப்பு தமிழில் ‘துயர் படிந்த ஏரி’ என பொருள்படுத்தலாம். தாசெக் ஷாஹ்டு உண்மையில் போர் தர்மத்தின் மீது கேள்விகளை எழுப்பக்கூடிய கதை. போர்க்கால பாவச் செயலின் குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியாத ஒரு தனிமனிதனின் உளபதிவு.   கொத்துக்கொத்தான மரணங்களும் கொலைகளும் போரின் இயல்பு. அதன் அநீதிகள் பாவக்கணக்கில் சேர்வதில்லையோ என்ற கேள்வியைக் கொண்டு எழுந்து வரும் கதையாகவும் உள்ளது. இந்த உண்மைக்குள்ளும் வெளியிலுமாக  நின்று தவிக்கும் ஒரு தனிமனிதனின் மனப்போராட்டத்தை இக்கதை குறியீடுகளால்  கூர்ந்து  சொல்கிறது.

தன் அழகான குடும்பத்தைக் கண்ணெதிரே இழக்கும் சிறுவன்தான் அத்தனிமனிதன். அந்தப் பேரிழப்பின் தாக்கம் அவனுக்குள்ளேயே   தங்கிவிடுகிறது.   அந்த அபாயகரமான தருணத்தின் அலறலோசை தூக்கத்திலும் அவனை திடுக்கிட்டு  எழவைக்கிறது. அப்படி அவன் திடுக்கிடாது  சீர்மையாக உறங்கியதே இல்லை.  தன் குடும்பத்தை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் மீது அவனுக்கு வஞ்சம். என்றாவது அவர்களைத் தன் கையால் பலிதீர்க்க வேண்டும் என்ற எண்ணம் முதுமையிலும் மாறவே இல்லை.  பாவம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனச் சொல்கிறான்.  இக்குரல் அவனுக்குள்ளிருந்து எப்போதும் கேட்கிறது. உறவுகளைப் பலிகொடுத்த இடத்துக்கு  ஆண்டுக்கு ஒரு முறையேனும் செல்கிறான். அது அடர்காட்டுக்குள் இருக்கும் ஒரு பெரும் ஏரி. அங்கே சென்று அந்த அலறலையும் கொலைகளையும் மீட்டுப்பார்க்கிறான்.  அப்படி அங்கு செல்வதன் வழி அவன் தன் வஞ்சத்தைத் தக்க வைத்துக்கொள்கிறான். குற்றம் புரிந்தவர்கள் குற்றம் செய்த இடத்துக்கு நிச்சயம் வருவார்கள் என்பதையும் அவனே அவனுக்குச் சொல்லிக் கொள்கிறான்.  ஒரு நாள் வானொலி செய்தியில் கொலையாளிகள் மன்னிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தியை கேட்கிறான். பாவம் புரிந்தவர்களை எப்படி மன்னிக்க முடியுமென்ற கேள்வி அவனை இன்னும் அலைக்கழிக்கிறது. பின்னர் அந்த கொலையாளிகள் தோற்றத்தை தொழிலை வாழ்க்கை முறையை என எல்லாவற்றையும் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு விட்டனர் எனவும் அவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டனர் எனவும் அவரது மனக்குரல் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. இதுவே  இக்கதையின் பெரும் திறப்பு எனலாம். உண்மையில் கதையில் அவர் தேடும் அந்த கொலையாளி  இந்த சமூகமெங்கும் நாடெங்கும் உலகெங்கும் நிறைந்திருக்கிறான். அவனைத் தனியாக அடையாளம் கண்டு தண்டிப்பெதன்றால் இந்த உலகமே தண்டிக்கப்பட வேண்டும். போர்க்காலத்தில் கொலைகள் செய்யும் மனிதன் ஒரு குழு மிருகம். அவனுக்கான தனித்த அறம் என ஒன்றுமே இல்லை. விதிக்கப்பட்ட கட்டளையின்படி செயல்படும் போர்வீரர்களின் எதிர்நிலையில் கொலை செய்யத் துடிக்கும் ஒரு தனிமனிதனின் மன அலைக்கழிப்புகளை சமாட் சாய்ட் நுட்பமாகக் கூறியுள்ளார்.  உண்மையில் அவர் குறிப்பிடும் அந்தக் குற்றவாளி வெளியே இருக்கும் வேறொரு தனி மனிதன் அல்ல. அது அவனும்தான். அவருக்குள்ளான குற்ற உணர்ச்சியின் வெளிபாடுதான் அந்தத் தனிமனிதனின் அலைக்கழிப்பு.    

‘டி சிசி ரிண்டா’ (Di sisi Rinda) – தலைப்பில் வரும் ரிண்டா ஒரு பூனைக்குட்டியின் பெயர். ஒரு பெரும்  குண்டு வெடிப்புக்குப் பின் அரவமற்று சிதறிக்கிடக்கும் சாலைகளையும் அந்த நிசப்தத்தின் வெறுமையையும் இக்கதைக்குள் நுகர முடிந்தது. டெலியா என்ற சிறுமி தன்னுடைய உலகம், பாதுகாப்பு என நம்பியிருந்த உறவுகளை ஒரே இரவில்  இழந்து அனாதையாகிறாள்.  அவளின் குழந்தைமையே இக்கதையின் மீதான இரசனையைக் கூட்டுகிறது. போர்ச்சூழலை எதிர்க்கொள்ளும் ஒரு குழந்தையின் இழப்பும் பரிதவிப்பும் வாசகனின் கண்ணீரைக் கோருபவை. ரிண்டா என்ற ஒரு பூனைக்குட்டி மட்டும் எப்போதும் அவளோடு இருக்கிறது.   ஜுமரி ஜிப்பான் என்ற வயதானவர் அவளை  அரவணைக்கிறார். அவர் அவளது தாத்தாவின் பாலிய நண்பர்.  அவள் ரிண்டா என்ற பூனைக்குட்டியையும் அவரையுமே தனக்கானவர்களாக நம்புகிறாள். ஆனால் இக்கதை  இவர்களைப் பற்றியது மட்டுமல்ல. அழிவுசக்திகளால் ஆக்கிரமிக்கப்படும் ஒரு போர்ச்சூழலில் மக்களின் நம்பிக்கைகளிலிருந்து எழுந்து வந்து  காக்கும் சக்திகளைப் பற்றியதும்கூட.  மிக உச்சமான, அவசியமான சூழலில் உதவியாகத் தோன்றும் ஒரு மாய ‘க்றீஸ்’ இக்கதையின் ஜுமாரி ஜிப்பானையும் டெலியாவையும் காப்பாற்றி பின் மறைகிறது. அந்தக் ‘க்றீஸ்’ அச்சிறுமியின் தாத்தாவுக்கு கனவில் வெள்ளைப்பசுவேறி வந்த  கிருஷ்ணரால்  வழங்கப்பட்டது. அந்த ‘க்றீஸ்’ சிறுமியின் கனவிலும் வருகிறது. அதே போல அந்நிலப்பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இறந்துபோன போர் வீரர்களாகிய ஹாங் துவா, ஹாங்ஜெபட் ஆகிய பல வீரர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் மக்களிடையே ஒரு பேச்சு நிலவுகிறது. கையறு நிலையில் மக்களைக் காத்தருளியிருக்கும் அரூப சக்திகளையும் அதனூடே அவர்களின் நம்பிக்கையையும்   காட்டிச்செல்கிறது இக்கதை. இது அப்போதைய மக்களின் நம்பிக்கையில் வாழ்ந்த சக்திகள் என அவரே குறிப்பிட்டுள்ளார்.  யதார்த்த பாணி கதைகளுக்கு மத்தியில் சமாட் சாய்ட் ஒரு பெரும் படைப்பாளியென உணர்த்தும் கதையாகவே இதை நான் கருதுகிறேன். உண்மையில் பெரும் கலைஞர்கள் தங்கள் புனைவுகளில் பல்வேறு சாத்தியங்களை உருவாக்க முனைகின்றனர். கற்பனையை இயன்றவரை விரிக்கின்றனர். தமிழில் புதுமைப்பித்தனை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். சமாட் சாய்ட் அவ்வகையில் கதைக்குள் மாயங்களை நிகழ்த்திக்காட்டுவது சுவாரசியமான புனைவு உத்திதான். 

‘சாஹட் தெராக்ஹிர்’ (Saat Terakhir) – ‘இறுதி நிமிடங்கள்’ என்று அர்த்தப்படும் இக்கதையும் போர் சார்ந்த இன்னொரு சிறுகதைதான். இது ஜப்பானியரிடம் ஆங்கிலேய அரசு தோல்வியடையும் போர்ச்சூழலை மையம்கொண்டதென கதாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். போர் முடியும் இறுதி நிமிடங்களுக்காகக் காத்திருக்கும் மக்களின் பரிதவிப்புமிக்க காத்திருப்பை உணர்த்தும் கதை இது. குறிப்பாக இக்கதை ஒரு குண்டு வெடிப்பில் இறந்துவிட்ட மனைவியின் உடலை அவர் விரும்பியதுபோல அடக்கம் செய்ய முடியாமல் உடலை மறைத்துவைத்து போர் முடியக் காத்திருக்கும் ஒரு  கணவனின் காத்திருப்பையும் மகளின் காத்திருப்பையும்  மையமிட்டுள்ளது. அது ஒரு சீனக்குடும்பம். தன் உடலை புதைத்துவிட வேண்டும் என்பதே இறந்த மனைவியின் கோரிக்கை. அந்த சீன மாதுவின் மரணம் பேரிழப்பாக மாறி மகளுக்கும் தந்தைக்கும் வெறுமையை மட்டும் நிலைநாட்டுகிறது. உண்மையில் போர் முடியப்போகிறது என்ற காத்திருப்பு இறந்துபோன அந்த மனைவிக்கும்  இருக்கவே செய்தது. ஆனால் அந்த முடிவுக்கு முன்பாகவே குண்டு வெடிப்பில் இறந்துவிடுகிறார். அவர் ஒரு நல்ல மனைவியும் அம்மாவும் ஆவார். அவரின் இழப்பால் நிலைக்குழையும் கணவன்  ஒரு அப்பாவாக தனது பொறுப்பை பற்றிய ஆழ்ந்த சிந்தனை ஏற்படுகிறது.  மகளுக்கு முன்னே தன் துயரை ஒரு போதும் காட்ட விரும்பவில்லை அவர். அடக்கம் செய்யமுடியாத சூழலில் ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் மனைவியின் உடலை எண்ணி அவருக்கும் மகளுக்கும் வருத்தம். மனைவி மகளின் கனவில் வந்து தன் உடலை புதைக்கச் சொல்லி நினைவுறுத்துகிறார். கதையின் இருதிவரை போர் நீண்டு கொண்டே செல்கிறது. பிணம் காத்துக்கொண்டே இருக்கிறது. காத்திருப்பு என்பது ரணமானதுதான் அதன் படபடப்பை கருணை அர்த்தமற்றுப் போன ஒரு காலத்தில் சமாட் சாய்ட் புனைந்து காட்டுகிறார். 

‘டோச பெஜுவாங்’ (Dosa Pejuang) – ‘போராட்டவாதிகளின் பாவங்கள்’ என்ற இக்கதையும் இத்தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு கதை. இக்கதை போர்க்கால அனுபவங்களை ஆவணம் செய்யும் முயற்சியில் ஒரு இளைஞன் மத போதகரின் ஆழ்மன இரகசியங்களை மீட்டெடுக்கும் சூழலால் அமைந்தது. போர்க்காலத்தையும் மக்களின் வாழ்வையும் பேசும் கதைகளுக்கு மத்தியில் இக்கதை போர்க்காலத்து போராட்டவாதிகளின்  மேன்மைகளையும் நெறி வாழ்வையும் நோக்கி கேள்விகள் எழுப்பும் ஒரு புதிய திறப்பு.  மேன்மையானவர்களெல்லாம் குற்றமற்றவர்கள் அல்ல என்ற கூற்றை மறைநிலையில் வழியுறுத்துகிறது.  இக்கதை  சமய ஆசிரியரின்   பாவச்செயலைக் காட்டுகிறது. அவருக்கு இன்னொரு பெண்ணின்பால் ஏற்படும் ஈர்ப்பை காட்டுகிறது. தற்காலிகமாக மனைவி தன்னுடன் இல்லாத ஒரு தனிமை சூழலில் வாழ்கிறார் அவர். இரண்டு குழந்தைகளோடு கணவனைப் பிரிந்து வாழும் ஒரு தமிழ் பெண்ணின் மீதான அவரது கரிசனை சில சமயம் கேள்விகளை ஏற்படுத்துகிறது. அவளின் நெருக்கத்தை வாயளவில் அழுத்தமற்று மறுக்கும்  தொனி அவரது மனவோட்டத்தை வாசகர்கள் கணக்கிட உதவுகிறது. ஒரு சராசரியனின் இச்சைக்கும் ஈர்ப்புக்கும் அவர் மனம் இடம் கொடுக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய அவ்விந்திய மாது அவரிடம் எடுத்துக்கொள்ளும் நெருக்கமும் உரிமையும் அந்த உறவின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அப்பெண்ணின் கணவன் எங்கே சென்றான் என்ன ஆனான் என்பது அவள் உட்பட யாருக்குமே தெரியவில்லை. அந்தப் பள்ளிவாசலில் இதற்கு முன்னர் சமய போதகர்களாக இருந்த சிலர் குடி, சூது போன்ற சில நெறியற்ற செயல்பாடுகளால் பதவி நீக்கம்  செய்யப்படுகின்றனர். சிலர் தலைமறைவாகின்றனர். அந்த நெறி மீறலைத் தட்டிக்கேட்கும் முதன்மை குரல் இவருடையதாகவும் இருக்கின்றது. கண்ணில் படாத சில நெறி மீறல்களால்தான் இன்னமும் சில புனிதங்கள் காக்கப்பட்டுள்ளன.  போர்க்காலத்திற்குப் பின் தன்னுடைய 60-ஆவது வயதிலும் ஆழ்மனதில் சிக்கித் தவிக்கும் பெரும் இரகசியங்களாகவே இவைக் கிடக்கின்றன. போராட்டவாதிகள், பெரும் ஆளுமைகள் அல்லது பெரியமனிதர்கள், சமய போதகர்கள், தர்மவான் என எத்தனை எத்தனையோ மேன்மை முகங்களின் உள்திரை இரகசியங்கள் பெரும்பாலும் வரலாற்றில் அறியக்கிடைப்பதில்லை. இக்கதை தான் சொல்ல வரும் கருவாலும் அதைக் கோர்த்து வழங்கிய கலை நுட்பத்தாலும் தனி இடம் பெறுகிறது. 

‘டரி தானாஹ் கெ தானாஹ்’ (Dari Tanah ke Tanah ) – ‘நிலத்திலிருந்து நிலத்துக்கே’ என்ற கதை போர் சூழலை நேரடியாகக் காட்டாவிட்டாலும் போருக்குப் பின் ஆங்கிலேய அரசு ஆட்சியின் போது இருந்த அவசர காலகட்டத்தில் மக்கள் எதிர்நோக்கிய சிக்கலைப் பேசுகிறது. அவசர காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மையாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் தூர தேசம் சென்று வேலை செய்யும் நிர்பந்தம் சார்ந்த கதை இது. அப்படி சிங்கப்பூருக்குச் சென்ற ஒருவரின் மனைவிக்கு உடல் நலமில்லாமல் போகிறது.  வேலையிடத்தில் கெடுபிடிகள். அந்த கெடுபிடிகளைக் கடந்து புறப்பட்டும் விடுகிறார் கணவன். ஆனாலும் மனைவியைச் சந்திக்க முடியாமலேயே போகிறது. அவரின் புறப்பாட்டுக்குப் பிறகு பிரசவத்தின் போது மனைவி இறந்து விட்ட தந்தி அவர் பணிப்புரிந்த இடத்துக்கு வருகிறது. அவசர பிரகடனத்தின் போது மக்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.அப்படி அவர்கள் எதிர்நோக்கிய பல உச்ச நிலை சிக்கல்களில் மனைவியைப் பார்க்கவியலாத ஒரு நிரந்தர பிரிவின் வலியும் அடங்கும். காத்திருந்து காத்திருந்து முடிவுற்ற ஒரு போருக்குப் பின்னும் நீளும் ஒரு வாழ்வு போராட்டம் சோர்வைக்கொடுக்கக்கூடியது. அது வாழ்வின்மீதான பற்றை அர்த்தமற்றதாக்குகிறது. 

‘தாசெக் ஷாஹ்டு’ சிறுகதை தொகுப்பு போர்ச்சூழலின் பன்முகத்தைக் காட்டுவதாலேயே தனித்து நிற்கிறது. அந்த பன்முகம் என்பது  தனி மனிதர்களின் பல்வேறு சிக்கல்களும் சூழல்களும் ஆகும். போர்க்காலத்தில் வறுமை, உயிர் பயம், பிரிவு, என்ற  பொத்தம்பொதுவான பார்வைகளுக்கு மத்தியில்  யார் அந்த மக்கள்? அவர்கள் ஏன் அழுதார்கள்? அதற்கு அப்பால் அதன் நீட்சியாக எதிர்நோக்கிய சீக்கல்கள் என்ன? இறந்த உறவுகளின் உடல்களை என்ன செய்தார்கள்? குடும்பங்களை இழந்த குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்களின் வளர்ப்புப் பிராணிகள் அதற்குப் பின்னும் பேணப்பட்டதா? அப்போதைய போராட்டவாதிகளில் யாருமே நெறி மீறவில்லையா? போராட்டவாதிகளின் பாவங்கள் ரகசியங்கள் என இத்தொகுப்பின் கதைகள் பல நூறு கேள்விகளின் ஊசி முனைப்போல ஊடுருவிச் சென்றுள்ளது. 

இத்தொகுப்பில் போர் சூழல் சாராத கதைகளுள் ‘லொங்காங்’ அதாவது சாக்கடை என்ற சிறுகதை முக்கியமானது. இது சமாட் சாய்ட் அவர்களின் படைப்புகளிலேயே அருவருக்கத் தக்க காட்சிகளைக் கொண்டமைந்ததென வாசகர்களால் விமர்சிக்கப்பட்ட சிறுகதை. கதையை வாசித்தப்பிறகு சிறுவர்களின் மலம் கழிக்கும் சூழலை நுண்மையாகக் காட்சிப்படுத்தியிருப்பதே அப்படிக்கூற காரணமென புரிந்தது. இக்கதை போருக்குப் பிறகு இந்த வாழ்வின் மீதான மக்களின் தேர்வு சார்ந்த தடுமாற்றத்தை விவாதிக்கிறது. எனினும் ஒரு கிராமத்தின் சித்தரிப்பு இக்கதையை உயிர்ப்பாக்குகிறது. கோழிகளின் கொக்கரிப்பு, வாத்துகளின் கத்தல், அழுக்கு நீரின் துர் வாடை, ஒரு கிராமத்தின் நுண்மையான இயங்கல் இதற்கிடையில்  மூராட் பானாவ் மற்றும் அப்துல் கரிம் ஆகிய  தனிமனிதர்களின் சாதாரண உரையாடல் வழியே மக்களின் நிலைபாடின்மையையும் நிறுவியுள்ளார். குப்பைகள் தேங்கி தேங்கி துர்வாடை வீசிக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் சாக்கடையைப் பற்றியே அவர்களின் உரையாடல் அமைந்திருக்கிறது. சாக்கடையில் மலம் கழிக்கும் சிறுவர்களையும் அவர்களைக் கண்டிக்காத பெற்றோர்களையும் சொல்லிக்காட்டுகிறார் மூராட் பானாவ். சற்று முன் அச்சாக்கடையில் மலம் கழித்த சிறுவர்களில் அவரது மகனும் இருக்கவே செய்தான். ஆனால் அவரது பேச்செல்லாம் மற்ற பெற்றோர்களைப் பற்றியே இருக்கிறது. அப்துல் கரிம் அதை தெரிந்தும் தெரியாதவராகவே பாவனை செய்கிறார்.   சாக்கடையை சுத்தம் செய்து கிராமச் சூழலைப் பாதுகாக்க விரும்பும் இருவரும் அதன் தேவை பொருட்டு விவாதிக்கின்றனர். பின்னர் தற்போதைய கிராமத் தலைவரின் பொறுப்பின்மையை  விவாதிக்கின்றனர். சாக்கடையின் சுத்தம்பேண சாத்தியப்படும் எளிய திட்டங்களை அவர்களுக்குள்ளாகவே கலந்துரையாடுகின்றனர். இறுதியாக புதிய தலைவரை கூட்டம் கூட்டி தேர்ந்தெடுக்க வேண்டுமென முடிவெடுக்கின்றனர். இந்த உரையாடலில் மூராட் பானாவ் என்ற நபரே கருத்துகளை அதிகம் எடுத்து வைப்பவர். இன்னொருவர் அதிகம் செவிமடுத்தவர் மட்டுமே. அவருக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. அவ்வப்போது மனைவி அவரது வேலைக்கு நேரமாகிவிட்டதை நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறார்.  உரையாடிக் களைத்த  மூராட் பானாவ் வீடு திரும்பியதும் தன்னைவிட மூன்று மடங்கு பருமனான மனைவி அந்த உச்சி வெயில் காலையில் இன்னமும் குளிக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு எரிச்சலடைகிறார். பின் அவரும்  மனைவியோடு சேர்ந்து உறங்கிப் போகிறார்.  வெளியே அழும் தன் மகனை யார் சென்று பார்ப்பது என்று அரைதூக்கத்தில் அந்த கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய விவாதம் நடந்து பின் மீண்டும் தூங்கிப்போகின்றனர். அப்போது  ஈக்கள் சில அவர்களின் உடலில் மொய்த்துக்கொண்டிருப்பதாகக் கதை முடிகிறது. தன் சுய வாழ்வின் மீதே பெரும் தேர்வுகளற்று வாழும் மக்கள் இந்த சமூகத்தின் மீதும் தலைவர்களின் மீதும் வைக்கும் விமர்சனமும் அக்கறையும்  வேடிக்கையானது. தன் சுய வீட்டைப் பேணத் தெரியாதவர்கள் வெளியே சாக்கடை சுத்தத்தை விவாதிப்பதும்  அதன் மீது அக்கறை செலுத்துவதும்கூட வேடிக்கைதான்.  மக்களின் வாழ்வு குறித்த இந்த ஆழமான விமர்சனத்தை  ஒரே உரையாடலில் சாக்கடை மற்றும் வீட்டுச் சூழலை மட்டுமே வைத்து நுட்பமாக சொல்லியமைதான் ஒரு கலையின் கச்சிதம். ஒரு கிரமாத்துச் சூழலை, ஒன்றாகக் கூடி மலம்கழிக்கும் சிறுவர்களை, அவர்களின்  கூச்சல்களை, சண்டைகளை, கால்நடைகளின் நடமாட்டத்தை, அவைகளின் சத்தங்களை, அழுக்குகளின் தேக்கத்தை, மொய்க்கும் ஈக்களை என  விரித்துக் கூறி அழுக்குகளாலும்கூட கிராமம் அழகாகிறது போன்ற இரசனையை விதைத்துள்ளது இக்கதை. 

இது போல ஒரு சூழலுக்குள் கூர்ந்து செல்லாமல் போகிற போக்கில் தன்னைப் பாதித்த ஒரு காட்சியைப் பதிவு செய்கின்ற சிறுகதைகளும் இத்தொகுப்பில் இருக்கவே செய்கின்றன. ‘டரி திங்காப் செபுவா பஙுனான்’ (Dari Tingkap Sebuah Bangunan) ஒரு கட்டிடத்தின் ஜன்னல் வழியே என்ற சிறுகதை வேலைக்கிடைக்காத  மனச்சோர்வோடு அவர் பதிவு செய்யும் ஜன்னல் காட்சிகள். அவை அந்த நகரின் இயக்கத்தை காட்டுகிற காட்சிகள்.  அதன் வழி தனது இயங்காமையை எண்ணி சோர்வடைகிறார். ஆனால், புதிதாக கட்டிடம் நிறுவும் ஒரு இடத்தில் அவருக்கு எதிர்ப்பாராத விதமாக வேலைக்கிடைக்கிறது. இனி தனது உணவுக்குச் சிக்கல் இல்லை என மகிழ்கிறார். எனினும் அவரது சம்பளம் 65 ரிங்கிட்தான் என்பதை எண்ணிமட்டும் வருந்துகிறார். அதுவே மலாய் பள்ளி தேர்ச்சி சான்றிதழுக்கான சம்பளம் எனவும் சொல்கிறார். இது சிங்கப்பூரில் வேலைதேடி களைப்புற்ற அவரது ஒரு நாளின் பதிவாகும். அதேபோல ‘பாகி’ அதாவது  காலை என்ற இன்னொரு சிறுகதை ஒரு காலைப்பொழுதில் அடுக்கு மாடிக் குடியிருப்புச் சூழலைக் காட்டுகிறது. அங்கே வாழும் மக்களின் தினசரி காலைப் பொழுதை பதிவும் செய்யும் சாதாரண காட்சிகள் அவை. ஆனால் இது போன்ற கதைகள் ஒரு குறிப்பிட்ட  வாழ்வை அறியும் ரசனையைத் தூண்டுகின்றன. கழிப்பறைக்குக் காத்திருக்கும் எரிச்சல் மிக்க தருணங்கள், வெளியே சண்டை கூச்சல்கள், பல்வேறு விதமான கிசு கிசுப்புகள் என  குடியிருப்பின் உயிர்ப்பான கலைப்பொழுதைக் காட்டுகிறது. அதே வேளை அவ்வாழ்வின் இக்கட்டுகளையும், எரிச்சல் மிக்க தருணங்களையும் அறியமுடிகிறது.  விழிக்கொண்டு நேரடியாகப் பார்ப்பதைவிட எழுத்துகள் வழி அறியும் காட்சிகள் நுட்பமானவை.

ஒட்டுமொத்தமான பார்வையில் இச்சிறுகதைத் தொகுப்பு இந்நாட்டு மக்களின் வாழ்வு குறித்த ஒரு பெரும் கலைஞனின் அவதானிப்பு எனலாம்.  அப்பார்வையை தன் இனத்துக்குள்ளாகவே குவித்துக்கொள்ளாமல் மலாய், இந்திய, சீன சமூகம் என எல்லா சமூகத்தினரும் சமாட் சாய்ட் படைப்புகளில் வியாபித்துள்ளனர்.  அவர்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளையும் சில கதைகளில் காண முடிந்தது. போருக்குள்ளும் போருக்கு வெளியேயும் நிற்கும் எல்லா கதைகளும் சராசரியாக அவரது போர்க்கால அனுபவங்களால் அல்லது அதன் நீட்சியால் விளைந்த கதைகளாவே அவரால் அடையாளம் காட்டப்படுகின்றன. அவற்றில் சில அவரது சிங்கப்பூர் அனுபவம் சார்ந்ததாகவும் இருக்கின்றன. மிக முக்கியமாக இத்தொகுப்பில் இருக்கும் சில முக்கியமான கதைகள் வழியும் அதன் சொல்முறை வழியும், அவர் கையாண்டிருக்கும் மொழி வழியும் அவரை ஒரு நவீன எழுத்தாளராகவே அடையாளம் காண முடிகிறது.  அவரது ஒவ்வொரு கதைகளிலும் பழமை  பூத்த மங்கிய மஞ்சள் வண்ணம் படிந்துகிடக்கின்றது. அதிலிருந்தெழும் மட்கிய வாசனையில் துயரங்கள் மட்டுமே சுழன்று வருகின்றன. 

2 comments for “போரின் கதைகள் : தாசெக் ஷாஹ்டு

  1. சௌந்தர்
    March 2, 2021 at 4:25 pm

    ஒரு படைப்பாளியை முன்வைத்து எழுதப்படும் தரமான, கட்டுரை என்பது ,இலக்கிய பயணத்தில் பலருக்கு, வழிகாட்டியும், மைல்கல் என்றும் அமைகிறது. அவ்வகையில் பவித்ரா அவர்களின் கட்டுரை சிறப்பான ஓன்று
    வாழ்த்துக்கள்
    நன்றிகள்

  2. Bama
    March 2, 2021 at 6:29 pm

    தெளிவான மொழியில் எழுதப்பட்ட சிறந்த கட்டுரை. தொடர்க

    பாமா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...