இளவெய்யில்

வெய்யில் படியத் தொடங்கியதும் கடையின் கண்ணாடிச் சுவரில் படிந்திருந்த பனித்துளிகள்  மெல்லக் கரையத்தொடங்கின. எதையோ மறந்துவிட்டோமா என நீலமலர் மங்கியிருந்த வெளிச்சூழலைக் கூர்ந்து பார்த்தாள். ஒரே ஒரு துளி மேலிருந்து கீழ் இறங்கி பனிப் போர்வையின் மேல் கோடிழுத்துச் சென்றது. நீலமலர் வெளிப்புறத்தில் இருந்திருந்தால் அதில் ஏதாவது வரைந்திருப்பாள். அவளுக்குப் பூக்களை வரைவது பிடிக்கும். சுலபமானதும்கூட. ஐந்து இதழ்களை வரைந்து நடுவில் புள்ளி வைத்தால் அழகாக இருக்கும். காப்பி வாசனை உசுப்பியதும் வெளியிலிருந்து பார்வையை அகற்றினாள்.  

இப்போதுதான் கொண்டு வந்து வைத்தார்களோ என சுற்றும் முற்றும் பார்த்தாள். கடை ஊழியர் எவரும் அவள் கண்ணில் படவில்லை. முன்னமே வந்துவிட்டதோ என்ற யோசனையுடன் காப்பிக் குவளையைக் கையிலெடுத்தாள். அந்த மெக்டோனால்ட்ஸ் கடை காப்பிக் குவளையின் மீது அவளுக்குத் தனி ஈர்ப்பிருந்தது. பால்வெள்ளை நிறத்தில் அது காப்பியின் சுவையை அதிகரிப்பதாய் தோன்றும். அதெப்படி நிறம் சுவையைக் கூட்டுமெனத் தோழி கேட்டிருக்கிறாள். அதெல்லாம் தெரியாது. ஆனால் அவள் அப்படித்தான் உணர்வாள்.

இன்னும் சூடு இருந்தது. கண்களை மூடி அதன் வாசனையை உள்ளிழுத்தாள். அவளுக்கு காப்பி, மெல்லிய கசப்போடு, சரியான சூட்டில் இருக்க வேண்டும். நாக்கில் சுடக்கூடாது. ஆனால், வெதுவெதுப்பு தொண்டையைக் கடந்து வயிறு வரை செல்ல வேண்டும். கால் தேக்கரண்டி பிரவுன் சீனியைப் போட்டு, காப்பி மேலும் ஆறிவிடாமல் லேசாகக் கலக்கினாள். இரு கைகளிலும் குவளையை ஏந்தி, மெல்ல உள்ளிழுத்தாள். பல யுகங்களுக்குப் பிறகு இப்படி உட்கார்ந்து ரசித்து, காப்பி குடிப்பதாகத் தோன்றியதும், உள்ளிருந்து ஒரு சின்னக் கேவல் வெளிப்பட்டது. தலையை அசைத்து விட்டு காப்பியின் நிறத்தை நோக்கினாள். அதிகம் கறுப்பாக இல்லாமல், வெளுப்பாகவும் இல்லாமல், சரியான கலவையில் இருப்பதன் திருப்தியோடு, ஒவ்வொரு சொட்டாகக காப்பியை மெல்லக் குடித்து முடித்தாள். காலிக் குவளையை மேசையில் வைத்தபோது அவளையும் மீறி அவளது முகம் மலர்ந்தது. மறுகணமே அது தவறுபோல் முகத்தை இறுக்கிக்கொண்டு பக்கவாட்டிலும் பின்னாலும் திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.

மூச்சை இழுத்துவிட்டவள் கைப்பை இருக்கிறதா எனப் பார்த்தாள். பக்கத்தில் இல்லை. கைப்பையை விட்டுவிட்டோமோ என ஒரு கணம் மனம் பதறியது. மறுகணமே தோளிலேயே பை தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவள், அதைக் கழற்றி மேசையில் வைத்தாள். கைபேசியைத் தேடினாள். மேசை மீது ஓரமாக இருந்த கைபேசியில் அப்போதுதான் அழைப்பு ஓய்ந்து அணைந்திருந்தது. ஓசை நிறுத்தப்பட்டிருந்த கைபேசியில் பல அழைப்புகள் வந்திருந்தன. அம்மா 10 முறை அழைத்திருந்தார். அவரை அழைக்க நினைத்தவள், இப்போது வேண்டாம் என கைபேசியைத் திறந்தாள். 

நிறைந்து வழிந்துகொண்டிருந்த டெலிகிராம், வாட்ஸ்அப், மெசேஞ்சர் தகவல் பெட்டிகளைப் புறக்கணித்தபடி, இன்ஸ்டகிராமைத் திறந்தாள். கடைசிப் பதிவு இரண்டு மாதங்களுக்கு முன்பாக இருந்தது. செடிகளும் மரங்களும் காற்றில் அசைந்துகொண்டிருக்கும் காலை பின்னணியில், செல்ஃபி எடுத்து, ‘ரிலாக்சிங்’ என்று ஸ்டேடஸ் போட்டாள். பின்பக்கம் இருந்த கண்ணாடி வழி பொத்துக்கொண்டு வந்த சூரிய வெளிச்சத்தினால் அவள் முகத்தில் படர்ந்த நிழல் கருமைகூட அப்படத்துக்கு அழகு செய்வதாய் தோன்றியது. 

தன்னியல்பாய் டயானாவின் நினைவு வந்தது. அவள்  அன்று அம்மாவின் சாம்சங் கைபேசியை பள்ளிக்கு எடுத்து வந்திருந்தாள்.  பைக்குள் ஒளித்து வைத்திருந்த கைபேசியை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும், மேசைக்கடியில் குனிந்து செல்ஃபி எடுப்பதுமாக இருந்த டயானாவை நீலமலர் முதலிலிருந்து கவனித்துக்கொண்டுதானிருந்தாள். பின்தங்கி இருக்கிறாள் என்பதால் அவளை முன்வரிசையில் உட்கார வைத்திருந்தாள் நீலமலர். வகுப்பில் போன் பேசக்கூடாது என்று முதலில் பொதுவாகச் சொன்னாள். பிறகு “டயானா பாடத்தைக் கவனி,” என்றாள்.  அவளின் ஆர்வம் பைக்குள் இருந்த கைபேசியிலேயே இருந்தது. “டயானா” நீலமலர் கூப்பிட்டபோது, வழக்கம்போல  முகத்தைத் திருப்பி சிரிக்கத்தொடங்கினாள். மற்ற மாணவர்களும் சேர்ந்து சிரித்தனர். எப்போதும் நடப்பதுதான், ஆனால் அன்று அவர்கள் அதிகமாகச் சிரித்ததுபோல் தோன்றியது. “அமைதி” என்று கடுமையாகச் சொன்னவள் டயானாவின் எதிரே இருந்த நோட் புத்தகத்தை எடுத்தாள். எல்லாப் பக்கங்களிலும் பென்சில் கிறுக்கல்கள். இத்தனை மாதங்களாக அவள் நடத்திய எந்தப் பாடக்குறிப்பையும் அவள் எழுதவில்லை. முன்னமே பலமுறை அந்த நோட்டைப் பார்த்து அவளைத் திட்டியிருக்கிறாள். மீண்டும் நோட்டைப் புரட்டினாள். பிறகு அவளது பையைப் பிடுங்கி, உள்ளே இருந்த கைபேசியையும் நோட்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.  “மிஸ் மலர்,  அது அம்மாவின் போன். அம்மாவுக்குத் தெரிந்தால் என்னை அடிப்பார், ப்ளீஸ், நான் யூஸ் பண்ண மாட்டேன். ப்ளீஸ்…” என்று அழுதுகொண்டே டயானா அவளைப் பின்தொடர்ந்தாள்.

கொடுத்திருக்கலாம். கொஞ்சம் பயம் காட்ட நினைத்தவள் கையில் இருந்து கைபேசி தவறி விழுந்தபோது திரையில் விழுந்த கீறலைப் பார்த்து டயானாவின் அழுகை அதிகமானது. நீலமலருக்கு பதற்றம் ஏற்படவில்லை. அவளுக்கு என்னவோ ஏற்கனவே அந்த கைபேசி திரை நொறுங்கியிருந்ததாகவே தோன்றியது. ஆனால் டயானா நீலமலரை எல்லோரும் பார்க்கும்படி அழுதுகொண்டே சபித்தாள். அவளை விசாரித்த பிற ஆசிரியர்களிடமெல்லாம் ‘அதெல்லாம் இல்லை; அதன் திரையில் கோடு விட்டே இருந்தது’ என்றாள். பின்னர் தனிமையில் ஆயிரம் முறை யோசித்துப் பார்த்தாலும் தன்னால் அது உடையவில்லை என்றே தோன்றியது.   

காலை இளவெய்யில் பளிச்சென்றுதான் படர்ந்திருந்தது. எல்லா உயிர்களும் அந்த மஞ்சள் ஒளியைப் பார்க்கவே காலையில் எழுவதாக அவளுக்குத் தோன்றியது.  குட்டிச் சிறகுகளைப் படபடத்தபடி, மஞ்சள் பூக்களுக்குள் மூக்கை நுழைத்துத் தேன் குடித்துக்கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் ஒரு நொடிக்குள் பலமுறை தலையைத் தூக்கிக் தூக்கி கீச்சிட்டன. எத்தனை என்று எண்ணத்தோன்றிய எண்ணத்தை மறுதலித்தாள். மறுநொடியில் எல்லாம் ஒன்றாகப் படபடவென்று வலது பக்கமாகப் பறந்தன. ‘குளத்துப் பக்கம் போகும்போல’ எனச் சொல்லிக்கொண்டவள், குருவிகள் பறந்த திசையூடாக குளம் தெரிகிறதா என்று பார்த்தாள். கடையிலிருந்து வலது பக்கமாக நடந்தால், மொட்டவிழாத அல்லிப்பூக்களும் நீரை மறைத்திருக்கும் இலைகளும் நிறைந்த குளம் இருக்கும். பட்டாம்பூச்சிகள் பறந்தபடி இருக்கும் அந்தக் குளத்தின் நீர் காலை நேரத்தில் பளபளவென்றிருக்கும்.

“நீங்கள் இங்கு வந்து பல நாட்களாகின்றன” அவளது காப்பிக் குவளையை எடுத்துக்கொண்டு மேசையைச் சுத்தம் செய்த சீன மூதாட்டி ஆங்கிலத்தில் கேட்டபடி அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

“இந்த இளவெய்யில் எவ்வளவு இதமாக உள்ளது,” என்றாள் நீலமலர்.

“இளவெய்யிலா? நீங்கள் கறுப்புக்கண்ணாடி மறைவில் இருந்து பார்க்கிறீர்கள். இவ்வருடம் அதிக வெய்யில். இரவுகளில் யாரால் உறங்க முடிகிறது?” என்றாள் மூதாட்டி. அதற்கு மேல் நீலமலருக்கு அவரிடம் பேசப்பிடிக்கவில்லை. அவர் இன்பத்தை அப்படியே துடைத்துக் கழுவி விட்டதாகத் தோன்றியது.

இந்த அங் மோ கியோ பூங்காவுக்கு எதிரேதான் நீலமலர் குடியிருக்கும் அடுக்குமாடி இருக்கிறது. ஐந்து நிமிட தூரம். வியன் பிறப்பதற்கு முதல்நாள் வரையில், வேலை முடிந்து வந்ததும் மாலை நேரங்களில் அவளது கண்மணியைக் கூட்டிக்கொண்டு இங்கு நடக்க வருவாள். வெய்யில் தணிந்திருந்தால் குளத்தைச் சுற்றி நடப்பாள். வெய்யில் இருந்தால் மரங்கள் அடர்ந்திருக்கும் சைக்கிளோட்டப் பாதையில் நடப்பாள். கண்மணியும் அவளுக்கு ஈடுகொடுத்து நடக்கும். வேலையை நேரத்தோடு முடித்துவிட்டால் அன்புச்செல்வனும் வருவான். பெரும்பாலும் அவனுக்கு வேலை முடிய வெகுநேரமாகும். அம்மா, தம்பி, அக்கா, மாமியார், மாமனார் என்று யார் அவளைப் பார்க்க வந்தாலும் அவளுடன் நடக்க கூட்டி வந்துவிடுவாள். வியன் கருத்தரிக்கும் வரையில் ஓடுவாள். கண்மணியும் ஓடும். நடந்து களைத்ததும் இங்கு காப்பி குடித்துவிட்டுத்தான் கிளம்புவாள். பூங்காவில் அமைந்திருக்கும் இந்தக் கடைக்குள் கண்மணியை விட மாட்டார்கள். ஆனால் வெளியில் போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் கண்மணியோடு அவள் உட்கார்ந்து காப்பி குடிக்கலாம். கண்மணியின் நினைவு தொண்டைக்குள் அடைத்தது. முகத்தில் புன்னகையை வரவழைத்தபடி, “நேரம் இல்லை” என்றவள், மூதாட்டிக்குக் கொடுக்க எடுத்த இரண்டு டாலரை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு எழுந்தாள்.

“எடை  போட்டு விட்டாய். நடக்கத் தொடங்கு,” என்றார் அவர்.

“நேரம் இல்லை” என எரிச்சலாகச் சொல்லிவிட்டு கைப்பை, கைபேசி எல்லாம் இருப்பதை உறுதிசெய்துகொண்டாள். இவரோடு இன்னும்  பேசியதால்தான் மனம் கலக்கமாகிவிட்டதாக நினைத்தவள் வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.

பூங்காவிலிருந்து சாலையைக் கடந்து வந்தபோது எதிர்வரிசையிலிருந்த பூக்கடை திறந்திருந்தது. புதிதாக வந்திருந்த பூக்களைப் பார்த்ததும் உற்சாகமானது. வீட்டில் பூ வாங்கி வைத்து எத்தனை நாளாகிவிட்டது, என்று  சொல்லிக்கொண்டே தனது அடுக்குமாடிக்கு வந்தவள், மின்தூக்கி மாற்றப்பட்டிருப்பதையும் அதன் முன்இருந்த தரைப்பகுதியில் புதிதாக கல்பதிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தாள். அவற்றைப் படமெடுத்து, “தவறவிட்டவை” என்று இன்ஸ்டாவில் பதிவிட்டபோது, அவளின் முதல் பதிவுக்கு பலர் பின்னூட்டமிட்டிருந்ததை கவனித்தாள். மின்தூக்கியில் ஏறும்போது பின்னால் சிமெண்டு மூட்டைகளைத் தள்ளிச்செல்லும் சக்கர வண்டியை ஒரு வினாடி நின்று பார்த்தாள். 

மின்தூக்கித் தளத்துக்கு அருகிலேயே அவள் வீடு. வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. பூட்டாமலா போனோம் என்று வந்த மெல்லிய பயத்தை  பல மாதங்களுக்குப் பிறகு மெக்டோனால்ட்ஸ் சாப்பிட்ட திருப்தி மேலெழுந்து கலைத்தது. காப்பியின் சுவை வாயில் இன்னும் இருந்தது. சோபாவில்  சாய்ந்தபடி இன்ஸ்டகிராமைத் திறந்து அவள் பதிவிட்ட படங்களை மீண்டும் பார்த்தாள். 

“நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறோம்”

“எங்கே போயிட்ட”

“அழகான காலை”

“சரியாக 52 நாள் கழித்து உன் படத்தைப் பார்க்கிறேன், தொடரட்டும்..”

…. 

68 பேர் பின்னூட்டமிட்டிருந்தனர்.

பதிவுகளைப் படித்துக்கொண்டிருந்தபோதே தூக்கம் வந்தது. எப்போது தூங்கினோம் என்று யோசிக்கத் தொடங்கினாள். நேற்று, நேற்றுமுன் தினம், அதற்கு முதல்நாள்… தூங்கிய நாள் எங்கோ நெடுங்காலத்துக்கு முன்னிருப்பது போலிருந்தது. 

***

“நீ இன்னும் தூங்கல? ஏன் இவன் அழுதிட்டே இருக்கான்… உடம்பு சரியில்லையா?

“தெரியல. பால் கொடுத்தேன். வாந்தியெடுத்திட்டான். கிரேப் வாட்டர் கொடுத்துப் பார்த்தேன். ஒன்னும் சரிப்பட்டு வரல,”

“டாக்டர் கிரேப் வாட்டர் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல”

“அவரா வந்து பாத்துக்கிறாரு”

“ஆமா நீ எதையாவது கொடு. அவன் அழுதுகிட்டே இருக்கட்டும்,”

“ஏன் நீதான் ஒருநாளைக்குப் பார்த்துக்கிறது… எப்பயும் நாந்தான் பாத்துக்கனுமா?”

“பேச்ச முதல்ல நிப்பாட்டுறியா! அழுதழுது பிள்ளக்கு தொண்ட கட்டிப்போச்சி,” என எரிந்துவிழுந்தவன், ஒரு கையால் வியனைத் தூக்கியபடி, மறுகையால் கதவைத் திறந்து வெளியே நடக்கத் தொடங்கினான். அவள் பால் பாட்டில், வெந்நீர், பாம்பர்ஸ் எல்லாம் அடங்கிய வியனின் பையைத்  எடுத்துக்கொண்டு அன்புச்செல்வன் பின்னால் நடந்தாள். மருத்துவரைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, மருந்து கொடுத்து அவன் தூங்கத்தொடங்கும்போது காலை 6 மணி ஆகியிருந்தது. வீடு வந்ததுமே இரண்டு மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று அன்புச்செல்வன் படுத்துவிட்டான். 

அவனுக்குத் தூக்கம் முக்கியம். 

வியனின் அழுகைச் சத்தத்திலும் குறட்டை விட்டுத்தூங்குவான். “ராத்திரி முழுக்க தூங்கினேதானே, இப்ப கொஞ்சநேரம் பாத்துக்க. நான் கொஞ்சம் கண் அசருறேன்” என்றாள், “எங்க தூங்கினேன்… தூங்கவிடாம அவனை அழவெச்சிட்டிருந்தியே” எனக் கடுப்படிப்பான். பிறகு, “பிள்ள வளக்கத்தெரியல இத்தினி வருசமா என்னதான் டீச்சரா இருந்தியோ. பால் கொடுத்திட்டே தூங்க வெச்சிடனும்… கொஞ்ச நேரம் அப்படியே மாரோட அணைச்சு வெச்சிருந்தா உடம்பு சூட்டிலே அசந்திடுவான்… பால் குடிச்சதும் நீ வெளயாடத் தொடங்கினா…  எப்படித் தூங்குவான்… எல்லாம் நம்ம பழக்குறதிலதான் இருக்கு…” என்று  வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவான். 

வியனை மார்பில் போட்டபடி, சோபாவிலேயே நீலமலர் படுத்திருந்தாள். தாகமாக இருந்தது. கழிவறைக்குப் போக வேண்டும்போலிருந்தது. எழுந்தால் வியனின் தூக்கம் கலைந்துவிடும். நாள் முழுக்க அழுதவன் இப்போதுதான் தூங்குகிறான். அவன் முதுகில் மென்மையாகத் தடவிக்கொடுத்தபடி காலையின் வெளிச்சம், சாலை இரைச்சல் எல்லாவற்றோடும் அவள்  தூங்கத் தொடங்கினாள்.

வியன் அவளது கனவு. அவளது  உலகம். அவளது தாகம்.

உதட்டைக் குவித்துச்  சிரிக்கிறான். அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்த அவன், முகத்தைச் சுளித்து சிணுங்குகிறான்.  தனது சின்னக் கைகளையும் கால்களையும் மேலே தூக்கி அசைக்கிறான். வாயைக் குவித்து அவளிடம் பேசுகிறான். அப்படியே கண்ணுக்குள் அவனைப் பொத்திக்கொள்கிறாள். இந்தத் தருணங்கள் இனி இல்லையோ என்று அவளுக்குப் பயமாக இருக்கிறது. அவன் தூங்குகிறான். தூக்கத்திலும் அவன் சிரிக்கிறான். குட்டி மீனைப்போல உதடுகளை மெல்ல மூடி மூடித் திறக்கிறான். பூனைக்குட்டிபோல கைகால்களை நீட்டி நெட்டி முறிக்கிறான்… அவன் மீண்டும் மெல்லச் சிணுங்கத் தொடங்குகிறான். 

அவன் அழுவது  ஓர் அழகான இசை. அவன் உணவைத் தேடி உரிமையோடு அவளது சட்டையை இழுக்கிறான். அவளுக்குள் ஒரு கர்வம் கனல்கிறது. பட்டுக்குவியலாக அவனை அள்ளிக்கொஞ்சுகிறாள். அவள் உடல் சிலிர்க்கிறது. அவன் அவளுடையவன், அவளது ரத்தம், அவளது சதை, அவளது உயிர்… அவளால்  நம்ப முடியவில்லை… அவளது உயிரிலிருந்து இன்னோர் உயிர்… இந்த தருணங்கள் இப்படியே உறைந்துவிடாதா… 

அவளுக்கு சின்ன வயதிலிருந்தே குழந்தைகளை ரொம்பப் பிடிக்கும். காதல், திருமணம், வீடு வாங்குவது, நல்ல வேலை என்பதையெல்லாம்விட குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றியும் தாயாவதைப் பற்றியும்தான் பள்ளிக்காலத்தில் தோழிகளுடன் அதிகம் பேசுவாள்.  காதலிக்கும்போதே மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்வேன் என்று அன்புச்செல்வனிடம் சொல்லிவிட்டாள்.

அவளது இரண்டாம் ஆண்டு திருமண நாள். பூக்கொத்தோடும் காப்பியோடும் எழுப்புகிறான் அன்புச் செல்வன். அவன் கழுத்தைக் கட்டியணைத்து அவனுக்கு திருமணநாள் வாழ்த்துச் சொன்னபோது “உன் பிரெண்ட் இன்னும் வரலபோல…” என்று ரகசியமாகக் கேட்டான். அவள் கணக்குப் பார்த்தாள். 34 நாள் ஆகியிருந்தது. கட்டியணைத்திருந்த அவன் கழுத்துக்குள் புதைந்து அழுதுகொண்டே இருந்தாள். எத்தனை தவிப்பு… எத்தனை குத்தல் பேச்சுகள்… எவ்வளவு காத்திருப்பு… ஒவ்வொரு கணமாய்… ஒவ்வொரு நாளாய்…


அவள் உடலும் மனமும் சிந்தனையும் அவளுக்கு புதிதாக ஆனது. ஒவ்வொன்றும் அவளது கவனத்தை ஈர்க்கப் போட்டிபோட்டன.

எதை வாயில் வைத்தாலும் முழு உடலுமே திரண்டெழுந்து அதை வெளியே தள்ளிவிட்டது. உணவின் மணத்தையே வெறுக்க வைத்தது. இணையம் முழுக்கத் தேடி, தோழிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் சொன்னதையெல்லாம் செய்து பார்த்தாள். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. வாந்தி, குமட்டல், எப்போதும் உடம்பெல்லாம் வலி.  நடக்க முடியவில்லை. நிற்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. தூங்க முடியவில்லை. வேலைக்குப் போக முடியவில்லை. வீட்டலிருக்கவும் முடியவில்லை. மெத்தையைவிட்டு எழுவதே அவளுக்கு அசதியாக இருக்கிறது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இப்போதும் அவளுக்கு வலிக்கிறது. தூங்கிக்கொண்டே இருக்கலாம்போல. 

“அம்மா என்னால முடியலம்மா?” என்று தொண்டை அடைக்க அவள்  ஒருநாள் சொன்னபோது, “என்னா அதிசயமா பிள்ள பெத்திட்ட… நான் உங்க ரெண்டு பேரையும் ஒண்டியா வளக்கல்லியா? தம்பி பிறந்ததுமே அப்பா போயிட்டாரு. பிறவு நாந்தானே 10 மணி நேரம் சேலக்கடயில நின்னுட்டு வந்து உங்களையும் வளத்தேன்… ஒரு பிள்ளைக்கே இப்படி அலுத்துக்கிறே…”

அதற்குமேல் அவள் அம்மாவிடம் எதுவுமே சொல்வதில்லை.  

குழந்தைக்கு வயிறு கொஞ்சம் பெரிதாகி, பால் நிறையக் குடிக்கத் தொடங்கிவிட்டால், அடிக்கடி பால் கொடுக்க வேண்டியதில்லை என்று மருத்துவர் சொன்னார். ஆனால் ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் வியன் அடிக்கடி அழுதுகொண்டே இருக்கிறான். அவனுக்கு கொஞ்சம்கூட ஈரமாகக்கூடாது. உடனே பாம்பர்சை மாற்றிவிட வேண்டும். லேசாக ஈரமாக இருந்தாலும் முகத்தைச் சுளித்துக்கொண்டு அழுவான். வாயைக் குவித்து, முகத்தைக் கோணலாக்கி அவன் அழுவதைப் பார்க்க அவளுக்கு சிரிப்புவரும். அவனை ரப்பர் ஷீட்டில் தூக்கி வைத்து, ஈரமான பாம்பர்சைக் கழட்டி, ஈர டிஷ்ஷுவால் சுத்தம் செய்து,  கிரீம் பூசி,  புதிய பாம்பர்சை போட ஏழு, எட்டு நிமிடங்கள் ஆகிவிடும். சில நேரம், பாம்பர்சை அவள் மாற்றி முடிக்கும்போது மீண்டும் நனைப்பான் அல்லது மலம் கழிப்பான். சில நேரம் பாலுக்கு அழுவான். 

ராத்திரி அவனுக்குப் பால் கொடுக்கும்போது, “வேலைக்குத்தான் போகலியே ஒரு வருஷமாவது பால் கொடு” அம்மா, மாமியார், மருத்துவர் அன்புச்செல்வன் என ஒருவர்விடாமல் சொல்வது எண்ணத்தில் தோன்ற, பொங்கல் நேரத்தில் தேக்காவில் கண்காட்சிக்கு கொண்டு வரப்படும்  மாடு நினைவுக்கு வந்தது. அவனைத் தொட்டிலில் போட்டுவிட்டு கண்ணாடியில் பார்த்தாள். இரவு விளக்கின் நீல ஒளியில்  அவள் ஒரு பேருருவமாகத் தெரிந்தாள். முன்னும் பின்னும் திரும்பி திரும்பிப் பார்த்தாள். எல்லாப் பக்கமும் உடல் பெருத்திருந்தது. நாலு காலில் நின்று பார்த்தாள். முலைகளும் வயிறும் பெருத்த மாடு அவளைப் பார்த்து தலையாட்டியது.

“ரெண்டு பிள்ள பெத்தும் ஏன் அம்மாக்கு சதையே போடல… நான் மட்டும் பெருத்திட்டே போறேன்.”

“நீ உயரம். உன் உயரத்துக்கு உடம்பு போட்டாலும் தெரியாது… ம்ம்ம்.. பால் கொடுக்கறல்ல. உடம்பு போடத்தான் செய்யும்.  சத்தான சாப்பாடு சாப்பிடனும்… என்னதான் பண்ணுவியோ.. எப்பவும் ஆர்டர் பண்ணி சாப்பிடற. சுறா, காய்கறின்னு சமைச்சு சாப்பிட வேணாவா… எக்ஸ்சர்சை செய்யனும்… பிள்ள பிள்ளன்னு ஒரேயடியா உருகாத. உனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கு.”

“மீனா, உனக்கு கல்யாணமாகி அஞ்சு வருசமாச்சி. பிள்ளை இல்ல. உனக்கு என்ன தெரியும்,” என்று போனை வைத்ததுமே ஏன் அப்படிச் சொன்னோம் எனத் தோன்றவும், ‘இவளிடம் போய் என் சாப்பாட்டைப் பத்தி சொன்னோமே… அம்மாவிடமும் அன்பிடமும் வத்தி வைப்பாள்’ எனச் சலித்தபடி, தன் கட்டுப்பாட்டில் இருந்த உடல் எப்போது மாறத் தொடங்கியது என்று யோசிக்கத் தொடங்கினாள்.

வியன் கருத்தரித்த சில மாதங்களில் உடல் மெல்ல மாறத் தொடங்கியது.


கால் வீங்கியது, முதுகு வலித்தது, எப்போதும் வயிற்றுவலி. சாப்பிட்டால் நெஞ்செரிச்சல்.  கழுத்து கறுத்தது. வயிறு பெருக்க பெருக்க மூச்சு முட்டத் தொடங்கியது. புரண்டு படுக்க முடியாமல், தூங்க முடியாமல் பட்ட சிரமம். ஒரு வாய் தண்ணீர் குடித்தாலும் சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. கொஞ்ச நேரம் அடக்கினாலும் தன்னால் வெளியேறியது. மருத்துவர் எந்த மருந்தும் கூடாது என்றார். அவளுக்கும் குழந்தைக்கு ஏதும் பாதிக்குமோ என்று எதைச் செய்வதற்கும்  பயமாக இருந்தது.  

மனம் அறியாத திக்கிலெல்லாம் அவளை இழுத்துச் சென்றது. அழுகை வந்தது. வேதனை தொண்டையை அடைத்து நின்றது.  தனக்குள் மற்றோர் உயிர் இருப்பதை உணரும்போது பேருவகை ஏற்பட்டது. குழந்தையின் அசைவுகள் அவள் நரம்புகளைச் சிலிர்க்கச் செய்தது. குழந்தை அசைவையும் உதைப்பதையும் கூர்ந்து அவள் அனுபவித்து தன்னை மறந்திருந்தாள். காத்திருப்பு மாதங்களிலிருந்து நாட்களாகி மணிக்கணக்கானபோது எதுவென்றே சொல்லமுடியாத சந்தோஷமும் வேதனையும் வலியும் குழப்பமும் அவளை வாட்டியது. 

அம்மா ஏன் இப்படியெல்லாம் இருக்கும் என்று சொல்லவே இல்லை? டாக்டரும் சொல்லவில்லை. யாருமே சொல்லவில்லை. வலிக்கும் என்றார்கள். ஆனால் இப்படி வலிக்கும் என்று யாரும் சொல்லவில்லை. சூறாவளி பற்றி டாக்குமென்டரி படங்கள் பார்த்திருக்கிறாள். அது இப்படித்தான் உருவாகும் என்பதை அவள் அன்றுதான் தெரிந்துகொண்டாள். அடி வயிற்றில் சுழித்தெழுந்து உடம்பெங்கும் பரவியது. அவளது எந்தக் கற்பனைக்கும் எட்டாத அந்த வலியை அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு நாள் முழுக்க சொல்ல முடியாத, தாங்க முடியாத வலி உடலைத் துவட்டி எடுக்கும்போது, உள்ளே இருக்கும் தன் குழந்தையும் இப்படி வலியில் துடிக்குமா அல்லது வெளியில் வரப்போகும் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டிருக்குமா என யோசித்தாள். குழந்தையின்  சிரித்த முகம் மனக்கண்ணில் தோன்ற, முதுகுத்தண்டு சில்லிட, அடிவயிற்றைக் கசக்கிப் பிழிந்து, இடுபெலும்புகளை உடைத்து உயிர்வலி எடுத்தது. ‘நீ உள்ளேயே இரு,’ என உடலின் எல்லா வாசல்களையும் மூட எத்தனித்தாள். மறுகணம் எல்லா வலிகளையும் வெளித்தள்ளுவதில் உடல் மூர்க்கமானது.

அந்த வலி எப்படியிருந்தது என்று அவளால் இப்போது யோசிக்க முடியவில்லை. வியனை கையிலேந்திய  முதல் கணத்தின் உணர்வு அவளுள் மீண்டும் கிளர்ந்தது. வலி அடங்கிய அந்த  விடுதலை உணர்வு அதுவரையில் அவள் உணர்ந்திராதது. நெட்டோட்டைத்தை முடித்த பெருங்களைப்பு. அத்தனை காலமாக அவளுள் எழுந்த உணர்ச்சிகளையெல்லாம்  விஞ்சியதாக இருந்தது அந்த உணர்வு. உடல்முழுவதும் அதிர்ந்தது. 

குழந்தையின் பிஞ்சுக் கைகளைப் பற்றிக்கொண்டது நினைவுக்கு வரவும்,  கைகளைத் துழாவி வியனைத் தேடினாள். காணவில்லை. தூங்கட்டும் என்று எண்ணியபடி மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள். 

ஆகஸ்ட் மாதத்தில் வியன் பிறந்ததால் நவம்பர் வரையில் பேறுகால விடுப்பு கிடைத்தது. ஜனவரியில் பள்ளி தொடங்கியதும் வியனை குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் விட்டு விட்டு வேலைக்குக் கிளம்பினாள்.

அந்த ஆண்டு அவள் துணை முதல்வர் ஆக வேண்டியது. நேர்முகத் தேர்வும் முடிந்துவிட்டது. தேடிச் சென்று உதவும் அவளைப் பள்ளியில் எல்லாருக்குமே பிடிக்கும். வியன் பிறக்கும் நாள் வரையிலும் அவள் இரவு வரையில் பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவள்தான். ஆங்கிலப் பாடப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த அவள், வகுப்புகள் முடிந்ததும், அத்துறை ஆசிரியர்களுடன் உரையாடுவது,  பாட விவாதம், பாடங்களை வடிவமைப்பது என்று பள்ளியில் இருந்து கிளம்ப இரவு 7 மணிக்கு மேலாகி விடும்.  வீட்டுக்குப் போன பிறகும் வேலைகளை முடித்துவிட்டு, நள்ளிரவு வரை மீண்டும் பள்ளி வேலைகளைத் தொடர்வாள்.

“குழந்தை. புதிய பதவி. வாழ்த்துகள்…!,” அவள் ஆசிரியர் அறைக்குள் நுழைந்ததுமே மிஸ் கோ அவளை  வாழ்த்தினார்.

“நன்றி” என்று முறுவலித்தபோது, ‘திஸ் இஸ் மை லக்கியஸ்ட் இயர்’ என்று உத்வேகம் பிறந்தது.

“உங்கள் ஒருவருக்காக நான் அன்றாடம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஊழியர்கள் எல்லாரும் கிளம்பிவிடுகிறார்கள். எனக்கும் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள்.  வேலை இருந்துகொண்டேதான் இருக்கும். நாம்தான் திட்டமிட்டுச் செய்யவேண்டும்,” என்று சொல்லிச்சொல்லிப் பார்த்த குழந்தைப் பராமரிப்பு நிலையப்-பொறுப்பாளர், ஒரு மாதத்திலேயே வேறு நிலையம் பார்க்கச் சொல்லிவிட்டார். 

புதிய நிலையம் இன்னும் தூரத்திலிருந்தது. இடம் மாற்றியதில் வியனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொண்டது. சாதாரண சளி என்றாலும் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்ப முடியாது. அம்மா இரண்டொருமுறை விடுப்பு எடுத்துக்கொண்டு பார்த்துக்கொண்டார். தோழி மீனா சில நாட்கள் பார்த்துக்கொண்டாள். வியனுக்கு காய்ச்சல் குறையாமல் மருத்துவமனையில் சேர்த்தபோது, நீலமலர் ஒருநாள் முழுதும் தூங்காமல் பள்ளிக்குப் போக வேண்டியிருந்தது.

“உங்களுக்கு பணிப்பெண் வைத்துக்கொள்வதில் உடன்பாடில்லை…” மிஸ் கோதான் ஆரம்பித்தார். 

“நாமே மற்றப் பெண்களை அடிமையாக்கினால் எப்படி… பணம் கொடுத்தாலும், நம் வீட்டு வேலையை இன்னொருவரைச் செய்யச் சொல்வது என்ன நியாயம்…” எப்போதும்  சொல்வது வாய்வரையில் வந்தாலும், “எல்லா அம்மாக்களும் கடந்து வருவதுதான்…” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவாறு நகர்ந்துவிட்டாள்.

முப்பது செய்யும்வரை அம்மாகூட இருந்தார். அம்மா வேலைக்குப் போகிறார். அதோடு தம்பியின் இரண்டு பிள்ளைகளும் அம்மா வீட்டில்தான் வார நாட்களில் இருக்கிறார்கள். 

“பேரப்பிள்ளய வளத்தெடுக்க ஆசதான். ஆனா இந்த  சீக்கு உடம்ப வெச்சிக்கிட்டு என்னாத்த செய்ய முடியுது..,” என்று மாமியார் அவள் கேட்கும் முன்னரே சிவப்புக்கொடியை உயர்த்திப் பிடித்துவிட்டார். அவரிடம் பேரனைக் காட்ட வாரவாரம் அவள்தான் போகவேண்டும். பாதி நாள் அன்புச்செல்வன் வேலை என்று கூட வரமாட்டான். அவருக்கு மருத்துவ சோதனை இருக்கும் நாட்களில் அவளை வரச்சொல்லுவார். வியனையும் தூக்கிக்கொண்டு அவரோடு நான்கைந்து மணி நேரம் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டும்.

ஒலித்துக்கொண்டே இருக்கும் கைபேசியை அடைத்துவைக்க கண்களைத் திறக்காமல் கைகளாலே நீலமலர் தேடினாள். கிடைக்கவில்லை. கைபேசிதான் தொலைந்துவிட்டதோ என்று மீண்டும் நினைத்தாள். பிறகு எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்க்க நினைத்தவளால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. ‘அஞ்சி நிமிஷம் சத்தம்போடாம இரு’ என்றபடி சோபாவிலிருந்த தலையணையால் இருகாதுகளையும் மூடிக்கொண்டாள். போன வாரம் அம்மா பேசியது காதில் ஒலித்தது.

“என்ன கேம் விளையாடிட்டு இருக்கியா? எத்தினி வாட்டி அடிக்கிறது…”

“என்ன சொல்லுங்கம்மா”

“ஏன்தான் இந்த சனியன்பிடிச்ச கேம விளையாடிட்டு இருக்கே சின்ன பசங்க மாதிரி? எப்படித்தான் இதுக்கு அடிமயானியோ.. முன்னெல்லாம் புத்தகமும் கையுமா இருப்பே.. இப்ப எதுவுமே இல்ல.. நாளு முழுக்க கேமுலையே இருக்கே… நீதான் போனடிக்கிறதில்ல… அடிக்கிற போனயாவது எடுக்கலாமில்ல…”

“அம்மா இப்ப உங்களுக்கு என்னா வேணும்?”

“எத்தன தடவ போன் போடறது… நா என்ன சும்மாவா இருக்கேன்…”

“சரி நீங்க போனே செய்ய வேண்டாம்…”

“உண்மய சொன்னா உடன பொத்துக்கிட்டு வந்திடும்…”

கைபேசியில் ‘மோபைல் லெஜன்ட்’ விளையாடியபடிதான் வியனுக்கு பால் கொடுப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.  பத்து விநாடிகளில் குழு சேர்ந்து, 10 நிமிடங்களில் சண்டை போட்டு வெற்றி பெறுவதை அவள் மிக விரும்பினாள். அவன் பால் குடிப்பதற்குள் அவள் தன் குழுவுக்கு வெற்றி தேடித் தந்துவிடுவாள். 

இப்போது என்ன சொல்ல அம்மா கூப்பிடுகிறார் என்று எண்ணியவளுக்கு  “மிஸ் மலர் வீ மிஸ் யூ” என்று அவளின் வகுப்பு மாணவர்கள் அனுப்பியிருந்த வாட்ஸ்அப் செய்தியை பார்க்கவேண்டும் போலிருந்தது. ஆனால், கண்ணைத் திறக்க முடியாமல் இமைகள் அழுத்தின. 

வியன் கைகளையும் கால்களையும் ஆட்டி ஆட்டி சிரித்து விளையாடுவதை பராமரிப்பு நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த கேமிரா வழி அவ்வப்போது பார்க்கும்போது அவளுக்கு ஏக்கமாக இருக்கும். தூங்கிக்கொண்டிருக்கும் வியனைத் தூக்கிவருவதும், தூக்கத்தோடே அவனைக் கொண்டு விடுவதுமாக வியன் அவளுக்கு ஒரு பொம்மை மாதிரி ஆகி வருவதாக  உணர்ந்தபோது அவளுக்கு திடுக்கென்றிருந்தது. யோசித்துக்கொண்டே பள்ளி அலுவலகத்துக்குள் சென்றவளை, முதல்வர் பேசவேண்டும் என்று கூப்பிட்டார்.

எதிரே அமர்ந்தவளிடம் “சட்டையை அயர்ன் செய்யாமல் போட்டு வந்திருக்கிறீர்கள்,” என்றார்.

“….”

“மிஸ் மலர், ஓராண்டுக்கு உங்கள் பதவி உயர்வைத் தள்ளி வைக்க கோரியிருக்கிறேன். இந்த ஆண்டு திரு ரேமெண்டே துணை முதல்வராகத் தொடரட்டும். மிஸ் கோ, ஆங்கிலத் துறை தலைவராக இருக்கட்டும்.  நீங்கள் இந்த ஆண்டு உங்கள் வகுப்பை மட்டும் கவனித்துக்கொள்ளுங்கள்,” முதல்வர் என்ன சொல்கிறார் என்பது புரிய அவளுக்கு சில கணங்கள் ஆனது.

“நல்லதுதான். வைஸ் பிரின்சிபல்ன்னா வேலை ரொம்பவாயிடும். பிறகு பிள்ளையைப் பார்க்க நேரமே கிடைக்காது. உனக்குத்தான் பிரின்சிபலோட சப்போர்ட் இருக்கே. எப்ப வேணாலும் புரோமஷன் கிடைக்கும்,” என்று கிளம்பும்போது கிளார்க் கோகிலா சொல்ல அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

கழிவறைக்குச் சென்று முகத்தைக் கழுவினாள். ஆசிரியர் அறைக்குச் சென்றவள் இரண்டாண்டுகளுக்கு சம்பளமில்லா விடுப்புக்கேட்டு அமைச்சுக்கும் முதல்வருக்கும் மின்னஞ்சல் அனுப்பினாள். முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு இரவு 9 மணிக்குப் பள்ளியிலிருந்து கிளம்பினாள்.

அவள் வேலையைவிட்ட இந்த இரண்டு மாத காலத்தில் அன்புச்செல்வன் பெரும்பாலும் வெளியூரில்தான் இருக்கிறான். அவளும் வியனும்தான். 

அவன் விளையாடும்போது, “நம்ம ரெண்டு பேர்தான்… ஜ லவ் வியன்.. வியன் லப் மம்மா… லெட் அஸ் என்ஜாய்” என்று கொஞ்சுவாள். அழுதுகொண்டே இருந்தானென்றால், “இங்க யாருமில்ல. ஓன் தொண்டதான் காஞ்சிபோகும். அப்புறம் உன் பாடு,” என்பாள். ஆனால், அவள் கோபப்பட்டுப் பேசும்போது அவன் இன்னும் அதிகமாக அழுகிறான். அவனுக்கும் கோபம் வருகிறது. 

அன்று வீட்டில் எவரும் இல்லை. வியனைத் தூங்க வைத்து, குளிக்கச் சென்றாள். ஷவரைத் திறந்து உடம்பு முழுதாக நனையக்கூட இல்லை. அழத்தொடங்கிவிட்டான். துண்டைச் சுற்றிக்கொண்டு வந்து அவனைத் தூக்கவும் துண்டின் முடிச்சு அவிழ்ந்து விழவும் திறந்திருந்த வாசலைத் தாண்டிச் சென்ற பக்கத்து வீட்டு சீனன் அதிர்ச்சியோடு அதை பார்த்தபடி கடக்கவும் சரியாக இருந்தது. அவள் பதற்றமடையவில்லை. தன் உடலின் மீது தனக்கே எந்த ஈர்ப்பும் இல்லாமல் போனதை  இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு குளித்தபோதுதான் உணர்ந்தாள். 

இப்போது ஒரு வாரமாக இங்கேயே இருக்கும் அன்புச்செல்வன் எப்போது  கிளம்புவான் என யோசித்தாள். 

அவன் வியனைப் பார்க்க  வீடியோ கால் செய்யும்போது, வியனுக்கும் அவளுக்கும் சட்டைகள், வியனுக்கு பஞ்சடைத்த எழுத்துகள், அவளுக்கு புது ஹேண்ட்டாக், செருப்பு… இன்னும் என்ன வாங்க வேண்டும்  என பட்டியல் போட்டாள்.  

***

அம்மா ஓயாமல் அழைத்துக்கொண்டிருப்பது அவளுக்கு வெறுப்பாக இருந்தது. கையில் போனை எடுக்காமல் ஆன் செய்துவிட்டு “ம்” என்றாள்.

“என்னாடி செஞ்சி வச்ச நேத்து” என ஆரம்பித்தாள்.

“என்ன?”

“எனக்கொன்னும் தெரியாதுன்னு நினைக்கறியா? போன வாரம் அப்படிதான் வியன  மார்கெட்டுல வண்டியோட உட்டுட்டு வந்துட்டியாம். நேத்து கோயில்ல உட்டுட்டு நடந்து வரப்ப உன் புருஷன் பாத்துட்டு கேட்டப்ப ரோட்டுலயே அழுதியாம்… என்னாடி நெனச்சிட்டு இருக்க. நா ஃபோன நேத்துலேருந்து அடிக்கிறேன் எடுத்துத் தொலைய மாட்டுற… இப்ப எங்க எம் பேரன்… ஹலோ ஹலோ”

நடுக்கத்தில் கால்கள் பின்னின. காதுகள் அடைத்தன. உடல் வியர்த்துக்கொட்டத் தொடங்கியிருந்தது. எதிரில் வந்த அண்டைவீட்டுக்காரரை இடித்துத்தள்ளியபடி படிகளில் தாவி ஓடத்தொடங்கினாள்.

8 comments for “இளவெய்யில்

  1. Sumi rathnam
    March 2, 2021 at 3:38 pm

    அருமை லதா.இதை ஒரு பெண் மட்டுமே உணரவும், எழுதவும் முடியும். வெளிப் பிம்பங்கள் மட்டுமல்ல மனிதின் உள் பிம்பங்களும் காட்சியாய் விரிகின்றது.

    பெண்ணின் மனவழுத்தங்களுக்குள் ஒரு சுற்றுச் சுற்றி வந்தது போல் இருக்கிறது.

    படிக்கும் போதே அந்தப் பெண்ணின் மன அழுத்தம் நம்மை ஆட்கொள்கின்றது.

    செறிவான எழுத்து. மனம் ஏனோ கனத்துப் போனது.

    வாழ்த்துகள்.

  2. Vengadeshwaran Subramaniam
    March 2, 2021 at 4:38 pm

    நல்ல கதை. தாய், மகள், மனைவி போன்ற பல உறவுகளுக்கிடையே ஒரு பெண் எதிர்நோக்கும் இன்ப, துன்பங்களைப் பற்றி ஆழமாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள். சிறப்பு லதா.

  3. Vengadeshwaran Subramaniam
    March 2, 2021 at 4:41 pm

    நல்ல கதை. தாய், மகள், மனைவி போன்ற பல உறவுகளுக்கிடையே ஒரு பெண் எதிர்நோக்கும் இன்ப, துன்பங்களைப் பற்றி ஆழமாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள். சிறப்பு லதா.

  4. அனு
    March 2, 2021 at 6:18 pm

    மிக அழகான எழுத்து லதா. தொடர்ந்து எழுதுங்க.

  5. March 8, 2021 at 11:59 am

    வாசிக்கும்போது ஆர்வமும் ஆழமும் கூடிக்கொண்டேபோய், வாசித்து முடித்ததும் திகைப்புற்று, பிறகு மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும் வைக்கும் ஒரு சிறுகதை ‘இளவெய்யில்’.

    தாய்மை என்பது ஒரு பெண்ணுக்கு உயிரியல் ரீதியில் நிறைவையும் மலர்தலிலுள்ள மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடியது. அதுவும் நீலமலர் போன்ற ஒரு பெண் தாய்மைக் கனவுகளில் வெகுகாலமாக சஞ்சரித்தவள் எனும்போது அது மேலும் உள்ளார்ந்த மகிழ்ச்சிக்குரியதாக ஆகக்கூடும். ஆனால் தாய்மை ஒரு சுகமான சுமை என்று அமைவதற்கு மாறாக உடல் நலம், உறக்கம், அறிவுச்செயல்பாடு, ஆசாபாசங்கள், அடையாளம் உட்பட வாழ்க்கையின் மற்ற அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அடகுவைத்துப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக நீலமலர்களுக்கு இன்றைய நவீன வாழ்க்கைமுறை மாற்றிவைத்திருப்பது சோகமானது.

    பிள்ளையை சரியாகப் பார்த்துக்கொள்கிறோமா இல்லையா என்கிற அலைக்கழிவில் உண்டாகும் – Mother’s guilt – தாயின் குற்றவுணர்ச்சி ஒருபக்கம் (ஊனுறக்கமின்றி பிள்ளையை அழுகைபோக்கி அமைதிகொள்ளச்செய்வது, வரமாகக் கிடைத்த பிள்ளை தனக்கு ஏதோ ஒரு பொம்மை போல ஆகிவிட்டதே என்றுணர்ந்து தானே கவனிக்க நீலமலர் பணியிடத்தில் நீண்டகால விடுப்பெடுப்பது),

    நவீன வாழ்க்கைமுறை சமூகத்திலும் வேலையிடத்திலும் ஒரு பெண்ணுக்குக் கூட்டிக்கொண்டே செல்லும் எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் (எடைபோட்டுவிட்டதால் மெக்டொனால்ட்ஸ் மூதாட்டி நடக்கச்சொல்வது, வீட்டில் சமைத்து சாப்பிடவும் உடற்பயிற்சி செய்யவும் தோழி அறிவுறுத்துவது, சட்டையை அயர்ன் செய்யாமல் போட்டுவந்ததை முதல்வர் சுட்டிக்காட்டுவது),

    தனித்திறனையும் அடையாளத்தையும் வெளிக்காட்ட வாய்ப்புகள் அற்றுப்போவதால் அதற்கு வடிகாலாக நட்பூடகங்கள், மெய்நிகர் விளையாட்டுகளில் ஆறுதல்தேட முயல்வது ஒருபக்கம் (பணிவுயர்வு தாமதப்படுவதைத் தன் தோல்வி என்றுணர்ந்து அதை ஈடுகட்ட மொபைல் லெஜண்ட் கைபேசி விளையாட்டில் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டுவது, எல்லாவற்றையும் சமாளிக்கமுடிகிறது என்று பிறருக்கு நிரூபிக்கவேண்டி ‘ரிலாக்ஸிங்’ நிலைத்தகவல்கள் போடுவது),

    அந்த குறைந்தபட்ச ஆறுதலையும் ஒரு பிரச்சனையாகக் காணும் குடும்பத்தினர் ஒருபக்கம் (பால்கொடுத்துக்கொண்டே பிள்ளையை உறங்கவைக்காததற்கு கேம்தான் காரணம் என்று கணவன், அடித்தவுடன் கைபேசியை எடுத்துப் பேசாததற்கு கேம்தான் காரணம் என்று அம்மா சொல்வது),

    என நீலமலர்கள் பல்வேறு பக்கங்களிலும் தாக்குண்டு சுருண்டு உடலாலும் உள்ளத்தாலும் நைந்துபோய் ஒருகட்டத்தில் ‘என்னால முடியலம்மா?’ என்று துக்கம் தொண்டையடைக்க இருகரம் நீட்டி உதவி கோரினாலும் ‘என்ன அதிசயமா பிள்ள பெத்திட்ட’ என்று கேட்டும், வேலையை விட்டுவிட்டாளே இனி என்ன பிரச்சனை என்று ஒரு ஒத்தாசை அனுசரணைக்குக்கூட வீடுதங்காமலும் குடும்பம் கைவிரித்துவிடுகிறது. தவமிருந்து பெற்ற தாய்மையைப் பாதுகாக்கத் தன்னையே அழித்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் நீலமலர்களைப் பலகாலமாகக் கண்டும்காணாமல் விட்டுவரும் நமது பாவத்தை இக்கதை எடுத்துக்காட்டுகிறது.

    சமூகத்தில் எல்லாத் தாய்களும் நீலமலர்களாகவா இருக்கிறார்கள் என்பது நாம் கேட்கவேண்டிய கேள்வி அல்ல. நீலமலர்களே இல்லாமலிருக்க நம்மாலியன்ற அளவில் நம் குடும்பத்திலும் சமூகத்திலும் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் கேள்வி. அக்கேள்வியைப் புறந்தள்ளவியலாத வகையில் வாசிப்பவரிடம் உணர்வுபூர்வமாக எழுப்புகிறது என்பதே இப்படைப்பின் வெற்றி. அதுவே கலையின் அடையாளமும்கூட.

    சிறுகதை வடிவம், எழுத்து நுட்பம் என்று பார்த்தாலும் பல விஷயங்களைச் சொல்லலாம். எடுத்துக்காட்டாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறேன்.

    முதலில் இக்கதையின் பாத்திரப் படைப்புகள். ஒரு சிறுகதைக்கு இரண்டு, மூன்று அதிகம்போனால் நான்கு கதாபாத்திரங்கள் போதும். அதற்குமேல் இருந்தால் அக்கதையின் மையம் சிதறிப்போகும். ஆனால் இக்கதையில் நீலமலரைத்தவிர குழந்தை வியன், மாணவி டயானா, சீன மூதாட்டி, அன்புச்செல்வன், அம்மா, மாமியார், மீனா, பள்ளி முதல்வர், மிஸ் கோ, கிளார்க் கோகிலா என்று பத்து பேருக்குக் குறிப்பிடத்தக்க இடமுண்டு. இருப்பினும் ஒரே வசனம் பேசிச்செல்லும் பாத்திரம்கூட கதையின் மையத்தோடு சென்றிணைவதைக் காணமுடிகிறது. இந்தப்பட்டியலில் வசனமேதுமின்றி ஒரு பார்வையோடு ஒருகணத்தில் கடந்து சென்றுவிடும் பக்கத்துவீட்டு சீனரையும் சேர்க்கவேண்டும். நாயாகத்தான் இருக்கும் என்று ஊகிக்கக்கூடிய கண்மணியையும் சேர்க்கவேண்டும். இது ஒரு படைப்பில் அரிதாகவே நிகழும்.

    இரண்டாவதாக நறுக்கென்ற வடிவம். முதல் பத்தியின் இரண்டாவது வரியிலேயே எதையோ மறந்து விட்டோமோ என நீலமலர் யோசிப்பதாக வருகிறது. கடைசியில் அவள் மறந்தது எதுவென்று தெரிந்துபோவதுடன் கதை முடிகிறது.

    இத்தகைய சிறுகதைகளால் சிறுகதை என்கிற இலக்கிய வடிவம் இன்றும் காலப்பொருத்தமுள்ளதாக நீடிப்பதுடன் தொடர்ந்து மேன்மையும் அடைகிறது என்பேன்.

    லதாவின் மற்றுமோர் உன்னத இலக்கியப் படைப்பு என்பதில் எனக்கு ஐயமில்லை.

  6. March 8, 2021 at 6:29 pm

    லதா,இளவெய்யில் கதையை இப்போதுதான் படித்தேன். தாய்மை உணர்வை, நாலாபுறமும் அவள் எதிர் கொள்ளும் நெருக்கடியை மிகச்சிறப்பாக கதையில் கொண்டுவந்திருக்கிறாய். உன் எழுத்து அசலாக இருக்கிறது.தொடர்ந்து எழுத வேண்டும்.அதுவே பயனாக அமையும்.

  7. Swathimohan
    March 26, 2021 at 1:52 pm

    அருமையான கதை, தாய்மைக்கே உரிய நெருக்கடிகளை எழுதி இருப்பது சூப்பர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...