எச்சம்

சன்னதி தெருவின் நான்காவது வீட்டை நெருங்கிய போது, “ஏட்டி, நாளான்னைக்கு பத்திர பதிவாக்கும். கேட்டிச்சா” என்ற சிவராமன் குரல் உள்ளிருந்து எழுந்தது. வேண்டுமென்றே உரத்து சொல்வது போல் செயற்கையாக இருந்தது அவன் குரல். அந்நேரத்தில் அவன் வீட்டிலிருப்பானென நான் ஊகித்திருக்கவில்லை. உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்ற இரட்டை மனதோடு வாசல் நடையை தாண்டினேன்.

உள்ளறையிலிருந்து வெளிபட்டவன் என்னைக் கண்டும் காணாதது போல் விரைவாக அடுக்களைக்குள் நுழைந்தான். 

“சேதி தான் தாமதம், நந்தி வந்து நீக்கி பாரு நடுவீட்டில” அடுக்களையிலிருந்து சிவராமன் குரல் தெளிவாக கேட்டது. “இத்தன வருஷத்துக்கப்பறம் என்ன புது ஒறவு?” கிசுகிசுத்தான்.

“செலம்பாம்ம சும்மா கெடங்க, காதுல கேட்டு காரியம் கெடப்போகுது” என்ற பத்மாவின் கீச்சு சத்தமும் தெளிவாக காதில் விழுந்தது. தவறான நேரத்தில் வந்துவிட்டோம் திரும்பியிருக்கலாமென அப்போது தான் மண்டையில் உறைத்தது. விசுவாசி என்ற நாமம் மட்டும் சூட்டப்படாமலிருந்தால் நான் இப்போது இங்கே வந்து நிற்பதற்கு எந்த தேவையும் இருந்திருக்காது. அண்ணாச்சி அழைத்திருந்த காரணத்தினாலே இங்கே நிற்கின்றேன். கடலலை இட்டுச் செல்லும் சங்கென அவரின் ஒவ்வொரு சொல்லும் என்னை கரை தொடாமல் வெவ்வேறு திசைக்கு இட்டுச் சென்றுள்ளது. 

“வாங்கண்ணே. அண்ணி, பிள்ளேல் எல்லாஞ் சொமா?” என்ற பத்மாவின் குரல் கேட்டு எண்ணத்திலிருந்து மீண்டேன். கடைசியாக இருவரையும் திருமணத்தில் பார்த்தது. அப்போதிருந்த பொலிவு அவள் முகத்தில் மொத்தமாக மறைந்திருந்தது. கழுத்தில், காதில் மின்னியது எல்லாம் காணாமல் போயிருந்தது. 

“எல்லாஞ் சொகம். நீ சொமா இருக்கீயா?”

“ம்ம்ம்” என்பது போல் தலையசைத்தாள். 

“உக்காருங்க, காப்பி குடிக்கீகளா?” என்றவளை வேண்டாம் என்பது போல் கையசைத்து, “வழியில சம்முவம் அண்ணே கடையில குடிச்சிட்டு தான் வாரேன்” என்றேன். 

“சேதி சொன்னாவலா? வாரது பெரிய இடமாக்கும், தெக்கு தெருவுல உள்ள மாறி பெரிய ஜவுளிக்கடை கெட்ட போறாவ. நாமலும் வர்ற லட்சுமிய வேண்டாம்னு சொல்லபிடாதுல்லா. எப்படி கணக்கு போட்டாலும் நமக்கு லாபந்தான், மிச்சம் வாரத வச்சி இவிக வாபாரம் தொடங்கலாம்னு இருக்காவ” என்றாள். சிவராம் விறைப்பாக அவளருகில் நின்றுக் கொண்டிருந்தான். ஆனால் எவ்வளவு நிமிர்ந்து நின்றாலும் அண்ணாச்சியின் கம்பீரம் ஒட்டாததை கவனித்தேன். அவர் நல்ல உயரம். உயரத்துக்கேற்ற பணம் சம்பாதிக்கிறார் என்று கூட பேச்சு இருந்தது. அவர் படுத்தபிறகு எல்லாவற்றையும் வியாபாரத்தில் போடுவதாக கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கடன்காரனாகிவிட்டான் சிவராமன். 

இதற்கு நான் என்ன பதில் சொல்வேனென எதிர்பார்க்கிறாள்? எனக்கு அங்கே நின்று பேச பேச கால் நடுக்கம் கொண்டது. சீக்கிரம் அங்கிருந்து வெளியேற விரும்பினேன்.

“அண்ணாச்சிய பாக்கலாமா?” என்றேன். 

அவளின் முகம் மாறியது. “இன்னும் எந்திக்கல பின்னாடி படுத்திருக்காவ, இரீங்க பாக்கேன்” என்று சிடுசிடுப்புடன் பின்னறைக்கு திரும்பியவள் மீண்டும் என்னை நோக்கி, “கண்டதையும் சொல்லி அவீக மனச கலைக்காதீக. நாங்க பட்டவரையும் போதும், புத்தி சொல்ல வந்தவகெல்லாம் பவுசா தான் இருக்காவ” என்றாள். அதை சீற்றம் இல்லாமல் சொல்ல அவள் குரலை அடக்கினாலும் முகத்தில் அப்பட்டமாக வெளிபட்டது. சிவராமனுக்கும் அந்த கடுப்பிருக்கும். அவன் திட்டம் என்னால் கெடுமென ஊகித்திருக்கலாம். 

“செரி பாத்துகிடுதேன்” என என்னை நோக்கி முறைத்துக் கொண்டிருந்தவளை தாண்டிச் சென்றேன். 

எனக்கு பின்னால் இருவரும் கிசுகிசுத்தது காதில் கரைந்தது.

பின்னாடி தொழுவத்தை தாண்டிய தனியறையில் மடக்கு கட்டிலின் ஒரு மூலையில் அண்ணாச்சி படுத்திருந்தார். கண்களின் ஓரம் நீர் கோர்த்த பூலைகள் கண்களை மூடி மறைத்திருந்தன. வயதிற்கான நடுக்கம் உறங்கும் போதும் உடலை அசைவில் வைத்திருந்தது. கைகள் இரண்டையும் கால் இடுக்கில் விட்டு சாய்ந்து அறை வாசலை நோக்கி படுத்திருந்தார்.

அருகில் சென்று மேல்லைத் தொட்டு உலுக்கி, “அண்ணாச்சி… ஆருமுவம் வந்திருக்கேன்” என்றேன். அவர் கண்கள் விழிப்பதற்கு திணறின. அவர் நினைவிலிருந்து வெகுநாட்களுக்கு முன்னால் மறைந்த முகங்களில்  ஒன்று என்னுடையதாகவும் இருக்கக்கூடும். என்னை மறந்தால் என்ன, ஆறுமுகமென்ற பெயர் அவருடன் வாழ்ந்தது, அந்த நினைவால் தான் என்னை அழைத்து வர ஆழ் அனுப்பியிருந்தார். அவருடன் வாழ்ந்த அந்த அழகிய நினைவுகளை, அதன் எச்சங்களை அவர் ஒரு போதும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மெல்ல கண்ணாடியை எடுத்து பக்கதிலிருந்த துணியால் அழுத்தித் துடைத்துக்கொண்டே இருந்தார். நினைவில் மங்கிப்போன என் உருவத்தைத் துடைத்து துலக்குகிறார் என நினைத்துக்கொண்டேன். முகத்தில் அதனை அணிந்துகொண்டபோது அவர் கண்கள் வெளிச்சத்திற்கு மெல்ல பழகி திறந்து வந்தன. 

“வாடே ஆருமுகம், இரீ இங்கண, எப்ப வந்த?” என்று எழுந்தமர்ந்து கட்டிலில் என்னை உட்காரும் படி செய்கைக் காட்டினார்.

அவர் கைகள் வந்து என் இடது கையை இறுகப் பற்றிக் கொண்டன. அவரில் மாறாமலிருந்த அந்த புன்னகையும், அதன் மிடுக்கும், கம்பீரமும் அவரை மீண்டும் எனக்கு அடையாளப்படுத்தின. அவர் என்னை முழுவதுமாக உணர்ந்துக்கொண்டார் என விரிந்த பாவையில் மின்னிய ஒளியில் புரிந்தது.

“நல்லா தொப்பையும், சதையுமா ஆளே அடையாளங் காங்க முடியலைய” என்றார்.

“நமக்கும் வயசாவுதுல்லா” என்றேன்.

“அது செரி” என தலையசைத்தார். மீண்டும் அதே எடுப்பான சிரிப்பு.

“இப்ப எங்க தென்காசிலயா? தொழிலெல்லா எப்படி போவுது?” எனக் கேட்டார்.

“ஆமா, வீடெல்லாம் பாவூரலயாக்கும். நா மட்டும் தென்காசி பெயிட்டு வாரது. தேட்டருல ஒன்னும் பெருசா இல்ல. மத்த மளிக கட நல்ல ஓட்டமாக்கும்” என்றேன்.

“அதும் செரி தான். வீடு, பிள்ளயலுன்னு ஆனம்பறம் ஒன்னுக்கு, ரெண்டன்னம் இரிக்கது நல்லதாக்கும்.” என்றார். அவரை ஆமோதிப்பது போல் தலையசைத்தேன். 

வந்த விஷயத்தைப் பற்றி எங்கே எந்த புள்ளியில் தொடங்குவதென தெரியவில்லை. வரும் வழியில் பேச நினைத்து யோசித்து வந்தது யாவும் அவரை கண்ட கணத்தில் மறந்துவிட்டது. அவரும் மௌனம் காத்தார். நான் என்ன பேச வேண்டுமென எண்ணுகிறார்? எதற்காக என்னை அழைத்து வரச் சொன்னார்?

நானே தொடங்கினேன், “கேள்விப்பட்ட மத்த சங்கதியெல்லா நெசமா?” என்றேன்.

“எதப் பத்தி?” என்றார்.

“இல்ல இப்ப வாரப்ப கூட வீட்டில என்னமெல்லாமோ பேசிக்கிட்டாவ, நானுஞ் செய்தி அறிஞ்ச பெறவு தான் இங்க வந்தேன்” என்றேன்.

“தெரிஞ்சி தானா வந்திருக்க அப்பறம் எங்கிட்ட எதுக்கு பீடிக, நேரடியா கேக்க வேண்டி தானே” என்றார். அவரே தொடர்ந்தார், “ஆமாடே அவீக தேட்டர கை மாத்தலாம்னு முடிவு பண்ணிட்டாக. நீ தானே இப்ப சொன்ன தேட்டருல ஒன்னும் பெருசா ஓட்டமில்லன்னு” என்றார்.

“ஆமா அதுக்காக” என்றேன். 

“அதுக்காக தான் விக்கராவ. வருமானம் வேண்டாமா?” என்றார்.

“நா பாத்திக்கிடுதேன்”

“என்னத்த பாப்ப?”

“அதுக்காக சம்மதிச்சிட்டீகளா?” என்றேன். 

“இன்னு எத்தன காலம் இந்த கட்ட ஓடும்னு நினைக்கிற? பேசாம தேட்டர நீ வாங்கிக் கிடுதியா?” எனக் கேட்டார்.

“அதுக்கு வக்கிருந்தா நா ஏன் இங்க வந்து நிக்கப் போறேன். காச விட்டெறிஞ்ச பின்ன தானே உங்கள பாக்க வந்திருப்பேன்?” என்றேன். எதிர்புறம் மௌனம்.

“செரி என்ன எதுக்கு இப்ப வர சொன்னீக?” எனக் கேட்டேன்.

அவர் அதற்கு பதில் பேசவில்லை. இருவருக்கும் இடையே மெல்லிய அமைதி நிலவியது. நான் அதனைக் கலைக்க விரும்பினாலும் அவர் என்னை அழைத்ததற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள விரும்பினேன். அப்போது அவரை பேச வைப்பதே சரியெனப்பட்டது. மெல்ல அதனூடாக அவரை என் பக்கம் இழுத்துவரும் திட்டமும் வகுத்திருந்தேன். 

“நாடோடி மன்னன் படம் நெனவிருக்கா?” என்றார். 

எண்ணிய இடத்தில் சட்டென அடிக்கும் பம்பரம் போல நான் எதிர்பார்த்த திசைக்கே அவரும் வந்தார். நெல்லையப்பர் ஹை ரோட்டின் இரண்டாவது பிரதான முகமாக செண்ட்ரல் தியேட்டர் மாறியிருந்த நாட்கள் அவை. ஒவ்வொரு செங்கலாக மீறி மீறி வரலாற்று சின்னமாக திருநெல்வேலியின் அடையாளமாக நின்றிருந்தது. உலகிலேயே பெரிய தியேட்டர் திருநெல்வேலியில் அமைய வேண்டுமென அண்ணாச்சி ஆசைப்பட்டார். அதற்கான ஊற்று  முகத்தை மதுரையில் பிச்சைமுத்து கோனார் நிறுவியிருந்தார். அன்று மீனாட்சி கோவிலே மறந்து போகும் அளவிற்கு தங்கம் மதுரையின் பிரதான அடையாளம். சென்னையிலிருந்தும் படம் பார்க்க மக்கள் மதுரைக்கு வந்த நாட்கள் அவை. அதே பித்து அண்ணாச்சிக்கும் தொற்றியிருந்தது. படம் பார்க்க மதுரை சென்றவர், திரும்பி வந்த கையோடு தியேட்டருக்கான பணியை தொடங்கினார். 

“எனக்கிருக்கு நம்ம தேட்டருல ஒடுன மொத படமுல்லா. ஒங்களுக்கு இருக்கா?” என்றேன்.

“பின்ன நினைவில்லாமைய. நின்னுட்டேலா படத்த பாத்தேன். ஒரு மட்டமா, ரெண்டு மட்டமா ஒரு நாளைக்கி ஆறு மட்டம்லா” என்றார். 

“அதெல்லாம் ஓர்ம இருக்கா” என்றேன்.

“ஓர்ம இல்லாம பின்ன. அப்பலாம் நீ பொடிப்பய, நரையானாட்டம் கால சுத்திட்டு திரிஞ்ச. துரைக்கு ஆப்ரேட்டருன்னு பவுசு வேற. அன்னைகெல்லாம் நா சன்னதம் வந்து தான் அலைஞ்சேன், இப்ப நெனைச்சாலும் கனவு மாறி இருக்கு. பத்து, நூறு நாளு சோறு தண்ணி யில்லாம படத்த பாத்திருக்கேன். இன்னுஞ் சொல்லப் போனா படத்த எங்க பாத்தேன். ஜெனத்த தான் பாத்தேன். எம்.சி.யாரு வசனம் பேசுறது எங்கோ தூரத்துல இருந்து காதில கேக்கும். மத்ததெல்லா ஜெனத்தோட சத்தந் தான். குய்யோ, மூய்யோன்னு, ஓன்னு கத்துவானுக. அத்தாம் பெரிய தேட்டர கெட்டியும் எனக்கு உக்கார ஒரு எடங்கெடைக்கல. நின்னுட்டே ஒவ்வொரு முகமா பாத்திட்டு அதில தெரியிர சிரிப்ப கண்டிட்டிருப்பேன்” என்றார் என்னை பார்க்காமல், அங்கில்லாமல் நினைவில் வாழ்பவராக.  

உண்மையில் அன்று செண்ட்ரலை விட பெரிய தியேட்டர் இந்தியாவிலேயே இல்லை. அண்ணாச்சி தியேட்டரை அமைக்க கட்டிடக் கலை நிபுணர்களை அமெரிக்காவிலிருந்து கூட்டி வந்திருந்தார். பார்த்து பார்த்து ஒவ்வொரு இருக்கைகளாக அமைத்து மொத்தம் ஐயாயிரம் இருக்கைகள் அமைந்திருந்தன. தூண் இல்லாமல் அவ்வளவு பெரிய அறையென்பது அன்று எல்லோராலும் பேசப்பட்டது. கட்டிடத்தைப் பார்ப்பதற்காக உலகின் அனைத்து மூலையிலிருந்தும் வந்தனர். கனக சபாபதி என்ற பெயர் இந்திய சினிமா வட்டத்திலேயே பேசு பொருளாக மாறியிருந்தது. தமிழ் சினிமாவில் எந்த படம் ஓடும் எதனை எடுக்க வேண்டும் என தீர்மானிப்பவராக அண்ணாச்சி திகழ்ந்தார். நாடோடி மன்னன் விழுந்து விடுமென அனைவரும் கணித்தாலும், விடாபிடியாக அண்ணாச்சி முதல் ஆளாக சென்று படத்தை வாங்கினார். செண்ட்ரல் தியேட்டரில் முதல் படமாக நாடோடி மன்னன் அரங்கேறியது.

“நான் அன்னையின் ஆணை எடுக்கலாம்னு சொன்னேன்” என்றேன் அவரிடம்.

“இல்ல என் நெனவு செரின்னா, சாரங்கதாரா எடுக்கலாம்னு சொன்ன” என்றார். கெழம் இன்னும் வீழ்ந்துவிடவில்லை வாழ்வின் ஒவ்வொரு பொட்டும் மண்டையில் ஆணி அறையப்பட்டிருக்கிறது.

“ஆமா நீங்க தான் நாடோடி மன்னன்னு விடாபிடியா நின்னீங்க” என்றேன்.

அவர் தொடர்ந்தார், “அன்னைக்கி ஒனக்கு வெவரம் பத்தல, நாம நெனைக்கிறது ஜெனங்க பாப்பாங்கன்னு நினைச்ச. கடேசில நாஞ் சொன்னது தானே செரியா இருந்திச்சி. நம்ம தேட்டருலயே எத்தன நாள் நாடோடி மன்னன் ஓட்டுனோம். நூறு, இரநூறு, முன்னூறுன்னு ஓடுச்சே. வரிச கெட்டி வந்தில்லா பாத்தாங்க. நாம நெனைக்கிறது கணக்கில்ல அவங்க நெனைக்கனும் அதாக்கும் கணக்கு. படம் பாக்க வாரவன் ஒவ்வொருத்தணும் கதாநாயகன பாக்க வரல, எம்.சி.யாரு, சிவாஜி குள்ள இருக்க தன்ன தான் பாக்க வாரான். தன்ன மாரி ஒருத்தன் அங்க இருந்தா தான் படம் ஓடும். படத்தோட பேரப் பாரு நாடோடி மன்னன். அந்த பேரே அன்னைக்கெல்லாம் என்ன என்னமோ பண்ணிச்சி. அப்பறம் நா புடச்ச நெரம்பும் செரியா இருந்திச்சி. அதிக்கப்பறம் எத்தன சில்வண்டு பசங்க அவர போல மூக்க உறிஞ்சிட்டு திரிஞ்சாங்க. அனேமா தமிழ் நாட்டில அந்த படத்த பாக்காத ஒரே ஆள் நாந்தான்.” 

ஊர் ஊராக சென்று சினிமா பார்த்து வளர்ந்தவர். தமிழகத்தின் ஒரு தியேட்டர் விடாமல் சென்றவர். பராசக்தி மட்டும் பத்து தியேட்டரில் பார்த்துள்ளார். தன் கனவு தியேட்டர் உருவானதும் ஆள் மொத்தமாக மாறினார். நாடோடி மன்னன் இறங்கி முதல் பத்து நாள் தியேட்டரை விட்டு வெளியே வரவேயில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று அங்குள்ள யாவரும் மறந்து போயிருந்தோம். இடைஇடையே ஆப்ரேட்டர் அறையிலிருந்து அவரை எட்டிப் பார்ப்பேன். கண்களின் மின்னும் பரவசத்துடன் ஒவ்வொரு முகங்களாக பார்த்துக் கொண்டிருப்பார். முதல் குழந்தையை தந்தை கையில் கொள்ளும்போது ஏற்படும் கிளர்ச்சியை அவர் முகத்தில் அக்கணம் கண்டேன். தானும் ஒரு குழந்தையாக மாறி அங்கே தவழ்ந்துக் கொண்டிருந்தார். பத்து நாள் கழித்து வெளியே வந்தார், அதற்கு பின் படம் ஓடும் போது தியேட்டரினுள் செல்வதை நிறுத்திவிட்டார். 

“அதுக்கபறம் நீங்க தேட்டரு குள்ளயே போறத நிருத்தீட்டிகளே” என்றேன்.

“ஆமா, நம்ம தேட்டருல நெறஞ்ச ஜெனத்த பாத்தப்பொறவு எனக்கு படத்துல போதையில்ல, தேட்டருலயாக்கும் அத நெரச்சிருக்கிற ஜெனத்திலயாக்கும், அதோட சத்தமாக்கும் போதை. அது எனக்கு தேட்டருக்கு வெளியவே கேக்கும் அதனால போறத நிப்பாட்டிட்டேன்” என்றார்.

சிறு சிரிப்புடன் அவர் கேட்டார், “இப்போ என்னமோ நாடோடி மன்னன் பாக்கணும் போல இருக்கு. கூட்டிபோறியா?”

பேச்சுக்கு சொல்லவதாக முதலில் எண்ணினேன், பின் அதையே விடாபிடியாக கேட்டுக் கொண்டிருந்தார். இது என்ன விபரீத ஆசை. இந்த வயதில் இவரால் நடந்து வர முடியுமா? ஏதோ பேச வந்தவன் நினைவின் பாதையில் இவரை எங்கோ கொண்டு சென்று விட்டுவிட்டேன். இல்லை இவர் என்னை அங்கே கூட்டி வந்தாரா? இப்போது இவரை வீட்டை விட்டு வெளியே கூட்டிச் சென்றால் இங்கே கலவரம் வெடிக்கும். அதுவும் நல்லது தான், இவரை ஒரு முறை படம் பார்க்க அழைத்துச் சென்றால் இவர் மனம் மாறலாம். 

“செரி கூட்டியோறேன். இப்ப புதுசா பாம்பே தேட்டருல மார்னிங் ஷோ மட்டும் நாடோடி மன்னன் கலருல எறக்கிருக்காவ போவோமா?” என்றேன்.

“ஏலே, எவனுக்குலே வேணும் உங்க கலரு. நா நம்ம செண்ட்ரல்ல நா மட்டும் ஒத்தையில ஒக்காந்து படத்த பாக்கணும். எனக்கு அப்பவே அப்டி ஒரு ஆச, அதான் அந்த படப் பெட்டி நல்ல ரேட்டுக்கு வந்தப்பக் கூட விக்காம தனியா எடுத்து வச்சிருக்கேன்” என்றார்.

பெருசு ஏதோ திட்டத்தோடு தான் என்னை அழைத்திருக்கிறது, “இப்ப நா உங்களுக்கு என்ன செய்யணும்” எனக் கேட்டேன்.

“என்ன நீ தேட்டருக்கு கூட்டி போ, எனக்கு அங்க ஆபரேட்டெல்லாம் பண்ண தெரியாது அதுக்கொசரமாக்கும் உன்ன அழைச்சது. எனக்கு ஒரு மட்டம் படத்த போட்டு காட்டுல” என்றார். ஆணையிடும் அண்ணாச்சியை மட்டுமே பார்த்து பழகிய எனக்கு முதல் முறையாக அவர் குரல் கெஞ்சும் தொனியில் கேட்டது.

அவர் கேட்டபின் மறுப்பேதும் இல்லை. “பிளிம் எங்க இருக்குன்னு தெரியுமா?” 

“தெரியும் தனியா என் ரூம் அலமாரில வச்சி பூட்டிருக்கேன்” என்றார்.

“எப்ப போவணும்”

“இன்னைக்கி, இப்ப” என்றார்.

“இரண்டொரு நாளுல தேட்டரு கை மாறுது. நாம இன்னைக்கே போனா தான் உண்டு கேட்டுக்க” என்றார்.

“அப்போ அது மாறுறது ஒரப்பு தான் இல்ல” என்றேன். அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. அதற்கு மேல் அவரிடம் மல்லுக் கெட்டவும் நான் விரும்பவில்லை அங்கிருந்து அவரை அழைத்து செல்வதே பிரதானமானது அதன்பின் அவரை என் வழிக்கு கொண்டுவருவது சுலபம். 

“பத்து வருஷம் பூட்டி கெடந்து ரூமாக்கும், இப்ப தேட்டருல ஓட்டமில்லேல. நா இன்னைக்கி போயி எப்படி இருக்கு பெட்டி என்ன கண்டிஷன்ல பிளிம் இருக்கு, ஓடுமான்னுலா பாத்து வைக்கிறேன். நாளைக்கு காலைல வெல்லனமே வந்து அழைச்சிட்டு போறேன்.” என்றேன். சரியென அவர் தலை மட்டும் அசைந்தது. 

அவரிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினேன். வீட்டை கடக்கும் போது சிவராமும், பத்மாவும் பீதி கொண்ட முகத்தோடு என்னை எதிர் நோக்கினர். அவர்களிடம் எதுவும் சொல்லாமல் நடந்தேன். அண்ணாச்சியின் ஆசை, அந்த தவிப்பு எனக்குள்ளும் குடியேறியது. 

நான் ஓட்டிய முதல் படம் ஆபரேட்டர் அறையில் இருந்து எத்தனை முறை விசிலடித்து பாத்திருப்பேன். முதல் நாள் பிளிம் பெட்டியை வாங்கும் போதே கைகள் நடுங்கின. முதல் காட்சி ஓடிய பின்னால் என்னுள் எழுந்த நம்பிக்கை. இரண்டாம் நாளிலிருந்து அண்ணாச்சி படக் காட்சியை ஒரு நாளுக்கு ஆறாக மாற்றினார். அன்றெல்லாம் நான்கு காட்சிகளுக்கே தியேட்டர் தயங்கிய காலம். அவ்வளவு பெரிய தியேட்டரில் அத்தனை கூட்டத்தை நிரப்பி ஆறு காட்சிகள் சாத்தியமா என்ற கேள்வி இருந்தது. அனைத்தையும் புறந்தள்ளி படத்தை மாபெரும் வெற்றியாக்கினார். ஆறு ஷோவும் ஹவுஸ் ஃபுல் அட்டையோடு ஓடியது.

நெல்லையப்பர் ஹை ரோட்டின் பிரதான சாலையில் இடதுபுறத்தில் உள்ளொடுங்கி இருந்த செண்ட்ரல் கண்ணில் பட்டது. அதனைப் பார்த்த போது காலையில் அண்ணாச்சி படுத்திருந்த கோலம் நினைவிற்கு வந்தது. கால்கள் ஓயாமல் கடந்து சென்ற பாதைகள் அவை இன்று ஒரு காலடி தடமில்லாமல் வெறும் மண் பதிந்திருக்கிறது. பத்தாண்டு காலமாக தியேட்டர் ஓடாமல் நின்றுவிட்டது. அதன் காரணத்தாலே அண்ணாச்சியும் உடல் தளர்ந்துவிட்டார். 

பார்த்த முதல் கணம் எனக்கு பீதியாக இருந்தது. சூனியம் குடியேறி, இருள் அதன் மேல் அப்பியிருந்தது. இதனை எப்படி ஒரே நாளில் சீரமைத்து அவரை அழைத்து வருவது. மனதின் ஒரு மூலையில் முடியுமென்ற நம்பிக்கை இருந்தது. செயல்களை துரிதப்படுத்த விரும்பினேன். சண்முகம் அண்ணன் கடைக்கு சென்று தியேட்டரை சுத்தம் செய்ய ஆட்களை உடன் அழைத்து வந்தேன்.

கொட்டகையினுள் நுழைந்ததும் எழுந்த வௌவால் எச்சத்தின் மணமும், புளிச்ச மணமும் குடலை பிரட்டியது. அண்ணாச்சி ஒரு ஷோ முடிந்து சுத்தம் செய்யாமல் அடுத்த ஷோவிற்கு ஆட்களை உள்ளே அனுமதிக்க மாட்டார். அன்று சூழ்ந்திருந்த சினிமா நெடி மொத்தமாக மறைந்திருந்தது. உள்ளே கவ்வியிருந்த அமாவாசையின் இருளைக் கண்ட பின்னர் தான் கரெண்டுக்கான நியாபகம் வந்தது. இ.பி. முருகேசண்ணனை அழைத்து விஷயத்தை சொன்னேன். இரண்டு குவார்டருக்கு சம்மதித்த பிற்பாடு ஒத்துக் கொண்டார். 

நீண்ட இடைவேளைக்கு பின் எழுந்த முதல் வெளிச்சத்தில் என் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. செண்ட்ரல் தியேட்டரின் ஒவ்வொரு செங்கலும் ஒரு கனவை அள்ளி தன்னுள் பூசிக் கொண்டவை இன்று எந்த சலனமுமில்லாமல் ஜடமாக நின்றன. 

திரையின் ஓரம் கிழிந்திருந்தது எலியின் வேலையாக இருக்கும். ஒரே நாளில் புதிய திரை மாற்ற சாத்தியமில்லை. அந்த கிழிச்சல் இருந்து பகுதிக்கு மட்டும் ஒட்டு போட்டேன். படம் தெளிவாகவே தெரிந்தது. அண்ணாச்சி அங்கே வரும்போது குறைந்த பட்சம் பழைய பொலிவை காட்ட விரும்பினேன். இருக்கைகள் பெரும்பாலும் சேதமடையவில்லை. பிரிட்டிஷ் காலத்து இருக்கைகள், அண்ணாச்சி மலேசியா, பர்மா, தாய்லாந்திலிருந்து முதல்தர மர இருக்கைகளை இறுக்குமதி செய்திருந்தார். பழுதாகியிருந்த இருக்கைகளை அகற்றும் படி சொன்னேன். 

ஒவ்வொன்றாய் சரி செய்த பின்பும் அங்கே நிரம்பியிருந்த ஒட்டடையும், அழுக்கும் எருக்கம் முல்லைப் போல் நெஞ்சை கிழித்துக் கொண்டிருந்தன. அனைத்தையும் சுத்தம் செய்த பின் என்னை அழைக்கும் படி சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன். 

நான் இங்கிருக்கும் போது தங்கியிருந்த ஆப்பரேட்டர் ரூம்மை நானே தண்ணீர் விட்டு சுத்தம் செய்தேன். புது பொலிவுடன் ரீல் மிஷின் என்னிடம் பேசத் தொடங்கியது. 

அண்ணாச்சியின் அறைக்குச் சென்று படப்பெட்டியைப் பார்த்தேன். பிளிமில் பழுதேதும் ஆகவில்லை, முதல் நாள் என் கையில் பட்ட அதே பொலிவுடன் இருந்தது. நாடோடி மன்னன் பாதி படத்திற்கு மேல் ஆர்.ஓ.பிளிமில் வெளிவந்தது. அன்று சரோஜா தேவியை கலரில் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் வந்தது. அந்த ரீல் பெட்டியை என் அறைக்கு எடுத்து சென்று ஒரு முறை சுற்றிப் பார்த்தேன். பழுதேதுமில்லை, காட்சிகள் பிரியாமல் இயங்கியது. அனைத்தும் சரியாகிய திருப்தி, அண்ணாச்சி இப்போது வந்தால் இங்கிருந்து திரும்பவே மாட்டார் எனத் தோன்றியது.

வேலை அனைத்தையும் முடிக்க நள்ளிரவை தாண்டியது. இரவு என் அறையிலேயே உறங்கினேன். அதிகாலை என்னை அறியாமலே விழித்துக் கொண்டேன்.

வாழ்க்கை சுழன்று மீண்டும் தொடங்குவது போலிருந்தது. தொழில் அறியாமல் இந்த தியேட்டர் வாசலில் வந்து நின்ற சிறுவன் என்னுள் குடியேறியிருந்தான். குளித்து கிளம்பி படப் பெட்டியின் முதல் ரீலை மாட்டிவிட்டு சன்னதி தெரு நோக்கி கிளம்பினேன். அண்ணாச்சி எனக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். சிவராம் அவரை தடுத்து வசைப்பாடிக் கொண்டிருந்தான். 

நான் சென்று அவரின் விருப்பத்தை சொன்னேன். அவன் முகம் அதனை நம்பவில்லை என்பதை காட்டியது. 

அண்ணாச்சி வாசல் திண்ணையில் அமர்ந்து கோபாவேசமாக கத்தத் தொடங்கினார், “செவராமு ஒனக்கு அம்புட்டு தான் மரியாத இப்ப நீ என்ன விடலேன்னுவை நாளைக்கு நான் பத்திர ஆபிசுக்கு வர மாட்டேன்” என்றார். கோபத்தில் அவர் முகம் கோணியது. பேச்சில் சிறு நடுக்கம் தெரிந்தது. 

பத்மா உள்ளிருந்து சிவராமை அழைத்தாள். திரும்பி வந்தவன், “பாத்து அப்பாவ கூட்டி பெயிட்டு வாங்கண்ணே” என்றான்.

“செரி” என தலையசைத்து அண்ணாச்சியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

“நா வேனுன்னா கூட வரவா” என்றான். வேண்டாமென அவனை மறுத்து அங்கிருந்து இருவரும் கிளம்பினோம். அவன் எங்களை அவனது மோட்டார் சைக்கிலில் பின் தொடர்வது கார் சைடு கண்ணாடியில் தெரிந்தது. இருவருக்கும் அது ஒரு பொருட்டாகவில்லை.

சன்னதி தெருவின் முக்கு தாண்டும் வரை அண்ணாச்சி எதுவும் பேசவில்லை. ஆனால் காரின் முன்னிருக்கையில் அமர்ந்த போது வரும் அவரது தோரணை உடலில் கூடியிருந்தது. நேற்று கண்ட உடல் நடுக்கம் இன்றில்லை. புது வேட்டி, சட்டை அணிந்திருந்தார். முகமும் நன்கு சவரம் செய்யப்பட்டிருந்தது.

“என்ன அண்ணாச்சி ஆளு டிப் டாப்பா மாறீட்டீகளே” என்றேன்.

“எல்லா உள்ள இருக்கது தாம்லே நேரத்துக்கு வெளிய வரும்” என்றார்.

அவரிடம் நான் மீண்டும் அந்த பேச்சை தொடர விரும்பினேன், “அண்ணாச்சி, தேட்டர விக்க தான் வேணுமா? ஒடல நாளும் ஒங்க நியாபகமா ஒரு கட்டடம் நின்னுக்கிட்டு இருக்கு. நீங்க ஒரு முற ஏன்ட்ட சொன்னது நெனவிருக்கா, ’சபாபதி, ஆருமுகமேல்லா மண்ணுக்குள்ள பெயிட்டா தடமில்லாம மறைஞ்சிருவோம். ஆனா இது நிக்கும் காலத்துக்கும் நிக்கும் நம்ம பேரச் சொல்லி நிக்கும்ன்னு’ இப்ப இங்க ஒரு ஜவுளிக் கட வர போவுதாம் அது யாரு பேர சொல்லி நிக்க போவுது?” அவரை சீண்டினேன்.

நான் பேசியது எதுவும் அவர் காதில் விழுந்தது போல் தெரியவில்லை, “கடசியா நீ என்ன படத்துக்கு ஏங்கூட இருந்த” என்றார்.

“கடசியா, வருஷம் பதனாறு” என்றேன்.

“அது போயே வருஷம் முப்பது இருக்குமில்ல” என்றார்.

“இருக்கும்” என்றேன். 

அவர் மனதின் ஓட்டத்தை என்னால் பின் தொடர இயலவில்லை என்னைவிட்டு தூரம் வெகு தொலைவில் நின்றிருந்தார். மீண்டும் பழைய அதிகார தோரணை கூடியது.

இது தான் சமயமென, “அண்ணாச்சி இறுதியா கேக்கேன் விக்க தான் வேணுமா” என்றேன்.

ஆமாம் எனத் தலையசைத்தார். அவர் மேல் எனக்கு ஆத்திரமாக வந்தது. அவரின் கையாளாகாத தனத்தின் மீதும் கூட. அவரது அந்த உறுதியை நான் எதிர்பார்க்கவில்லை. நேற்று இங்கே கிளம்பி வரும் போது அவர் மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையிலேயே வந்தேன். அவரது இந்த திடமான உறுதி என்னை சற்று அசைத்தது. இதற்கு மேல் இதனை நான் வம்படியாக பிடித்து இழுத்து ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. என் இறுதி முயற்சி செண்ட்ரல் தியேட்டர் தான். அது அவரிடம் சொல்லட்டும் இனி நான் அவரிடம் பேச ஒன்றுமில்லை.

இருவரும் தியேட்டரை நெருங்கினோம். அவர் அங்கிருந்து உள்ளே செல்லும் வரை எந்த சலனமும் முகமாற்றமும் ஏற்படவில்லை. அந்த கட்டிடத்தை நான் கண்டபோது ஏற்பட்ட தவிப்பும், ஏக்கமும் கூட அவருள் ஏற்படவில்லை அல்லது அதனை வெளிக்காட்டாமல் மறைக்கிறாரா? பத்து வருட பிரிவின் ஒரு சலனமும் அவர் முகத்தில் தெரியவில்லை.

அவர் கையை பிடித்துச் சென்று பின்னிருக்கையின் முதல் வரிசையில் அமர வைத்தேன். 

“நா போய் படத்த ஓட்டுரேன்” என்றேன்.

“ஆட்டும்” என தலையசைத்தார்.

படம் ஓடத் தொடங்கியது, ‘மன்னராட்சி ஒழிக… மக்களாட்சி வாழ்க…’ அந்த வரியும் சத்தமும் நேற்று கேட்டது போல் இருந்தது. அங்கிருந்து துளை வழியாக கீழே அண்ணாச்சியை பார்த்தேன். அங்கிருந்து பார்ப்பதற்கு அவர் உறங்குவது போல் தெரிந்தது. உடலில் எந்த சலனமுமில்லை.

என் அறையிலிருந்து கீழே இறங்கி வந்தேன். அருகே சென்ற போது அவர் உடல் ஆடிக் கொண்டிருந்தது. வலிப்பு வந்தவர் போல் உடல் ஒரு பக்கமாக இழுத்தது. என்னிடம் ஏதோ சொல்ல முயன்றார். படத்தின் சத்தத்தில் அது என் காதில் விழவில்லை. கூர்ந்து அவர் வாயசைவை கவனித்தேன். 

“வெளிய, வெளிய” என்றார். 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது, முதல் நாள் முதல் காட்சியில் ஆப்ரேட்டர் ரூமில் இருந்து எட்டிப் பார்த்த போது தெரிந்த அண்ணாச்சியின் குழந்தை முகத்தையே நான் எதிர்பார்த்தேன். அவர் கைகளைப் பிடித்து வெளியே அழைத்து வந்தேன். திரும்பும் போது ஒவ்வொரு சுவரோரமாக பார்த்துக் கொண்டு வந்தார், தொலைத்த எதையோ தேடுவது போல அலைப்பாய்ந்தது அவர் கண்கள். அவர் உடலின் வலிப்பு குறைந்திருந்தது. நடுக்கம் மெல்ல தணிந்தது.

“என்ன ஆச்சு அண்ணாச்சி” என்றேன். 

“ஒன்னுமில்ல வீட்டுக்கு போலாம்” என்றார். மறுப்பேதும் இல்லாமல் அவர் கைகளைப் பிடித்து கூட்டிச் சென்றேன். என் இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்திருந்தது.

“கொஞ்ச நாளா இந்த வலிப்பு வருது” என்றார். நான் எதுவும் சொல்லவில்லை.

“ஜெனங்க இல்லாம என்னால ரெண்டு நிமிஷங் கூட படத்த பாக்க முடியல” என்றார். எனக்கு அவரது மனநிலை பிடிப்பட்டது.

“அண்ணாச்சி செண்ட்ரல் தான் ஒங்க ஹீரோ. அது உயிரோட இல்லாம ஒங்களால திரையில தெரியிற பொம்மைய பாக்க முடியாது” என்றேன்.

“வாஸ்துவந்தான்” என்றார்.

இருவரும் மௌனமாக நடந்தோம். அவர் அறைக்குள் அவரைக் கூட்டிச் சென்று படுக்க வைத்தேன். மீண்டும் அதே ஒடுங்கிய நிலையில் ஒரு சாய்த்துப் படுத்துக் கொண்டார். நான் அறை மூலையில் சென்று நின்றேன்.

கண்களை மேலே தூக்கி என்னைப் பார்த்து பேசினார், “செண்ட்ரல் தான் நம்ம ஹீரோல்ல” என்றார். அதன் பின்னர் அவர் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவர் தனக்குள் ஏதோ பினாத்திக்கொண்டே வந்தார்.

அவரிடம் விடைப் பெறும் போது, “சனி கெழம வாரீயா” என்றார்.

“எங்க?” எனக் கேட்டேன்.

“பம்பாய் தேட்டருல கலருல ஓடுதுன்னு சொன்னியே ஒரு மட்டம் செனத்தோட ஒக்காந்து பாத்திட்டு வந்திருவோம்” என்றார். சரியென தலையசைத்தேன். அவர் முகத்தில் அரும்பிய சிரிப்பில் சிரிப்பு மட்டும் இருந்தது.

1 comment for “எச்சம்

  1. அருள்
    March 1, 2021 at 3:07 am

    ஆறுமுகம் சிவராம் இருவரும் காக்க அளிக்க நினைக்கும் திரையரங்கு என்னும் பிம்பம் மனிதர்களை அறிந்த அண்ணாச்சியால் எளிமையாக புறக்கணிக்க படுகிறது. சிவராமன் மற்றும் அண்ணாச்சி இருவரையும் எதிரீட்டு கதாபாத்திரங்களாக சித்தரித்து இரு தலைமுறைகள் இடைவெளியில் உருவாகியுள்ள பண்பாடு கலாச்சார மாற்றங்களை எண்ணங்களில் கிளறி விட்டு செல்கிறது கதை.
    மிக குறைவான கதாபாத்திரங்களுடன் கதையின் மையத்தை விட்டு சிறிதும் நழுவாமல் அதே நேரத்தில் செறிவான மற்றும் நேரடியான காட்சிகளின் மூலம் சிறந்த கதையனுபவத்தையும் தந்து மீண்டும் சிறந்த கதையாசிரியராக தன்னை நவீன் நிறுவியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...