கடந்த ஆண்டு கோவிட்19 நோய்க் காரணமாக நாடு திடீர் முடக்கத்திற்கு உள்ளாகியிருந்த காலகட்டத்தில் ம.நவீன் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியிருந்தார். தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதி சுடச்சுட என் வாசிப்புக்கு அனுப்பி வைப்பார். நானும் அதே வேகத்தில் அந்தக் கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்து என் கருத்துகளை குறிப்பிட்டு அனுப்புவேன். அதில் சில விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. இப்போது அந்த விமர்சன கட்டுரைகளில் ஒரு பகுதியை தொகுத்து ‘மலேசிய நாவல்கள்(தொகுதி 1)’ என்ற நூலாக்கியிருக்கிறார்.
தனி கட்டுரைகளாக வாசித்த தொடக்க கட்டத்திற்குப் பிறகு இப்போது செம்மையாக்கம் செய்யப்பட்ட நூலாக வாசிப்பது மேலும் சிறப்பாக இருக்கின்றது. எல்லா கட்டுரைகளையும் மொத்தமாக ஒரே நூலாக வாசிக்கும் போது ம.நவீன் முன்வைக்கும் இலக்கிய விமர்சனங்களின் தீவிரமும் கூர்மையும் தெளிவாக புலப்படுகின்றன. இதுவரை மலேசியாவில் ஒரு சொல்லில் சுருக்கி புகழ் விமர்சனங்கள் செய்யப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ள நாவல்களை கூர்மையான வாசக பார்வையுடன் ஆழம் பார்த்துள்ளார். அப்படி ஆழம் பார்த்ததில் தான் கண்டடைந்தவற்றை திறந்த மனத்துடன் பிற வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமரசமற்ற விமர்சனங்கள் இங்கு என்ன மாதிரியான தாக்கத்தை விளைவிக்கும் என்பதை இலக்கிய விவாதங்களில் புழங்குபவர்கள் உணர்ந்திருப்பர். இலக்கிய விமர்சனம் என்பது முதுகு சொறிந்து கொள்ளும் கலை என்ற புரிதலுடன் இருப்பவர்களுக்கு இக்கட்டுரைகள் கடும் கொந்தளிப்பை கொடுக்கக்கூடியவையாக இருக்கலாம்.
நன்கு அறியப்பட்ட மலேசிய நாவல்கள் குறித்து சமரசங்களுக்கு இடம் வைக்காமல் எழுதப்பட்ட கட்டுரை தொகுப்பாக இது அமைந்துள்ளது. எழுத்தாளர், பத்து புகழ்பெற்ற முன்னோடி எழுத்தாளர்களின் நாவல்கள் (குறுநாவல்கள் உட்பட) அனைத்தையும் வாசித்து தன் இலக்கிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஒருவகையில் இக்கட்டுரைகள் புகழ் பெற்ற அந்த படைப்பாளிகளின் ஒட்டுமொத்த இலக்கிய பங்களிப்பையும் மதிப்பிடும் வகையிலேயே அமைந்துள்ளன.
மலேசியாவில் ஒரு எழுத்தாளர் பிற எழுத்தாளர்களின் படைப்புகளை மெனக்கெட்டு வாசித்து இலக்கிய விமர்சனம் எழுதுவது குறைவு. பொதுவாக இங்கு நூல் விமர்சனம் என்பது நூல் அறிமுகம் என்ற அளவிலோ, நூல் வெளியீட்டில் வாசிக்கப்படும் நேர்மறை கருத்துகளின் தொகுப்பாகவோ இருக்கும். அவை ஒரு தேவையின் அடிப்படையில் முன்வைக்கப்படும் அலங்கார சொல்களாக இருப்பது இயல்பு. மாறாக ஒரு தீவிர இலக்கிய ரசிகனின் பார்வையில், படைப்பு தன் வாசிப்பில் எவ்வாறு இருந்தது என்று எழுதப்படும் ரசனை விமர்சனங்கள் மிகமிகக் குறைவு. ஒரு படைப்பை எல்லாரும் அப்படி எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நவீன இலக்கியத்தில் தீராக்காதல் கொண்ட ஒருவன் முன்வந்து எழுதும் போது அது முக்கியத்துவம் பெறுகின்றது. அது ஒரு படைப்பின் பல கோணங்களை வெளிப்படுத்திக் காட்டுவதோடு அதன் போதாமைகளையும் முன்வைத்து விவாதிக்கின்றது. ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சிக்கு இதுபோன்ற சத்தான விவாதங்கள் அவசியமாகின்றன.
படைப்பில் காணப்படும் குறையை விமர்சனமாக சொல்லவே பலரும் தயங்குவதும் தவிர்ப்பதும் நாம் எப்போதும் காணும் ஒரு நடைமுறை. நமட்டுச் சிரிப்புடன் ‘எழுத்தாளர் மனம் புண்படும்’ என்பதாக ஒரு சமாதானம் சொல்லி எழுத்தாளர் மேல் தங்கள் பச்சாதாபத்தை காட்டிக் கொள்பவர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு விமர்சன கட்டுரையின் கடைசி பத்தியில் படைப்பின் இடர்களை ஒரு வரியில் சொல்லி முடித்துக் கொள்ள வேண்டும் என்னும் எழுதா விதி ஒன்று மலேசிய இலக்கிய உலகில் உண்டு. கதை சுருக்கத்தை எழுதிவிட்டு ‘மனதை உருக்கும் நல்ல படைப்பு’ என்று எழுதுவதே இங்கு ஏற்பான விமர்சன முறை. அல்லது ‘நான் கண்ட அதே வாழ்க்கையை எழுத்தாளர் எழுத்தில் வடித்திருக்கிறார்’ என்று தன்னை எழுத்தாளருடன் ஒப்பிட்டு பெருமைபட்டுக்கொள்ளும் இழிவான நிலையையும் விமர்சனங்களில் சாதாரணமாக பார்க்கலாம். ஒரு படைப்பாளி இலக்கியத்தில் ஓர் இடத்தை அடைந்து பேர் போட்டவர் என்றால் அவரது எல்லா படைப்புகளையும் கண்ணை மூடிக் கொண்டு புகழப்படுவதே வழமை. என்றோ எழுதிய ஒரு நல்ல கவிதை வரியை மேற்கோள் காட்டி ஒரு எழுத்தாளரின் அத்தனை படைப்புகளும் சிறந்தவை என்றே அறிமுகப்படுத்தப்படும்.
படைப்புகளில் காணப்படும் வெளிப்படையான போதாமைகளைக் கூட சுட்டிக்காட்ட யாரும் விரும்புவதில்லை. காரணம் மிக எளிமையானது. இங்கு இலக்கியப்படைப்புகளில் அவ்வளவு சுலபமாக யாரும் எதிர்மறை கருத்துகளை முன்வைத்துவிட முடியாத இறுக்கம் மிக நீண்ட காலமாக நிலவி வருகிறது. கல்வியாளர்களும் போலி இலக்கியவாதிகள் சிலரும் அமைத்துக் கொடுத்த வழிமுறை இது. கல்விக் கூடங்களில் பயன்படுத்தப்படும் இலக்கிய திறனாய்வு என்பது மாணவர்களுக்கு இலக்கியத்தின் கூறுகளை விளக்கி கல்விபோதிக்க ஏற்ற பாடபோதனை முறை என்பதில் மாற்று கருத்து இல்லை. இலக்கிய திறனாய்வு முறை, கட்டு செட்டான சட்டகத்துக்குள் வைத்து படைப்பின் உட்கூறுகளை ஆராய்ந்து பார்க்கும் முறையாகும். அது இலக்கியம் பயிலும் மாணவர்கள் பயிலவேண்டியது. ஒருவகையில் அதை இலக்கியத்தில் பாலபாடமாக எடுத்துக் கொள்ளலாம். அதன் மதிப்பு அவ்வளவுதான். அந்தக் கல்வி இலக்கிய வாசகனுக்கானதல்ல. அவ்வகையான திறனாய்வால் வாசகன் இலக்கியத்தை வெளிப்புறமாகத்தான் பார்க்க முடியும். உட்செல்ல முடியாது. ஆகவே இலக்கிய வாசகன் அதில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வகையான மதிப்பீடுகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டியதில்லை. இலக்கிய வாசகனின் மனம் கலைரசனை சார்ந்து தன் ஏற்பையும் மறுப்பையும் முன்வைத்து விவாதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
கல்வி திறனாய்வுகளில் ரசனை சார்ந்த மதிப்பீட்டிற்கு இடம் இல்லை. ஆனால் நவீன இலக்கியம் என்பதே ரசனையின் அடிப்படையில் எழுந்துவரும் கலைப்படைப்பாகும். இந்த முரண் இங்கு பொருள்படுத்தப்படுவதில்லை. கல்வியாளர்கள் தங்கள் சட்டகத்துக்குள் தெளிவாக தெரியும் கூறுகளை முன்வைத்து ஒரு படைப்பை சிறந்தது என்று முடிவு செய்து அதையே நிலைபெறச் செய்கின்றனர். உதாரணமாக படைப்பில் இருக்கும் வலுவான சமூக கருத்து அல்லது வரலாற்று உண்மையை அடிப்படையாக கொண்டு அப்படைப்பின் தரம் முடிவு செய்யப்படுவதைச் சொல்லலாம். ஒரு கட்டுரையை அணுகும் அதே கண்ணோட்டத்தோடு புனைவையும் பார்க்கும் அவர்களின் அபத்த வாசிப்பு பற்றி இங்கு விமர்சனகள் இல்லை. மலேசியாவில் எல்லா இலக்கிய படைப்புகளும் துருத்திக் கொண்டு தெரியும் அதன் கருத்துகளால் மட்டுமே மதிப்பிடப்படுகின்ற துயரம் இன்றும் தொடர கல்வியாளர்களின் இலக்கிய மதிப்பீட்டு முறையும் அவர்களை பின் தொடரும் போலி இலக்கியவாதிகளும்தான் காரணம். மாறாக இலக்கிய வாசகன் அந்த படைப்பில் முன்வைக்கப்படும் கருத்தைவிட அது வெளிப்படும் கலைத்தன்மையையும் அழகியலையும்தான் கருத்தில் எடுத்துக்கொள்வான். அதன் அடிப்படையிலேயே படைப்பின் தரத்தை முடிவு செய்வான். படைப்பில் வெளிப்படையான கருத்து என்பது மிக சாமானிய எழுத்துவகைக்குரிய தன்மை என்பதை புரிந்திருப்பான்.
மலேசிய எழுத்துலகில் நல்ல விமர்சனங்கள் வருவது குறைவு என்றாலும், மலேசிய எழுத்தாளர்கள் விமர்சனத்தின் பலம் அறியாதவர்கள் அல்ல. ஆகவே பலகீனமான தங்கள் படைப்புகளை முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்த சோடனையான சொற்களில் கயிறு திரிக்கும் போலி விமர்சனங்களை சிலர் நாடுவார்கள். அல்லது தனிமனித சாடலை விமர்சனம் என்ற பெயரில் எழுதி தங்கள் வன்மத்துக்கு வடிகால் தேடுவோரும் உண்டு. பொதுவாக விமர்சனம் என்பது முகநூல் பயனர்கள் எழுதும் ‘சிறப்பு’, ‘அறுமை’, ‘அற்புதம்’ என்ற ஒற்றைச் சொல் புகழ்ச்சியை ஒத்தே இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
இலக்கியப்படைப்பை கூர்ந்து கவனித்து எதிர்மறை கருத்தைக் கூறுவது ஒருவகை ‘மட்டம்தட்டும்’ முயற்சி என்றே புரிந்துகொள்ளப்படுகின்றது. விமர்சனமாக எதிர்க்கருத்து சொல்பவர் தீவிர தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவார். ‘உனக்கு என்னா தகுதி இருக்கு’ என்ற கேள்வி பல திசைகளில் இருந்து வரும். ஆகவே தன் மீது திரும்பக்கூடிய வசைகளுக்கு பயந்தும் எதிர்கால நன்மைகளை மனதில் வைத்தும் எழுத்தாளர்கள் விமர்சன திசைக்கே வருவதில்லை. மேலும், தங்கள் படைப்பும் இவ்விதமாக விமர்சிக்கப்படலாம் என்ற முன் யோசனையாலும் எழுத்தாளர்கள் ரசனை சார்ந்த விமர்சனங்களை முன்வைப்பதில்லை. ஆகவே ‘நல்லவாறு சொல்லி நல்லனவற்றை பெற்றுக் கொள்ளும் நல்லவர் உலகமே’ இலக்கிய விமர்சன தளமாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் இது அப்பட்டமான பாவனையன்றி வேறில்லை. தங்கள் எழுத்து திறத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரையும் விமர்சிக்காமல் ஒதுங்கிப் போவதன் வழி தாங்கள் விமர்சிக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று நம்பி விளையாடும் அசட்டு விளையாட்டு. இவர்களால் சோபையான ஒரு இலக்கிய பரப்பையே உண்டாக்க முடியும்.
ஒரு படைப்பாளியை மேடையில் நிறுத்தி பொன்னாடை சார்த்தி பெருமை படுத்துவதில் பலருக்கும் இருக்கும் முனைப்பு அவரது எழுத்தை வாசித்து அதுபற்றி தீவிர உரையாடலை முன்னெடுப்பதில் இருப்பதில்லை. மேடை கவர்ச்சிக்கு இலக்கியத்தை ஊடகமாக பயன்படுத்திக் கொள்வதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கின்றது. ஆனால் ஒரு தீவிர இலக்கிய வாசகன் படைப்பாளிகளின் எழுத்தை வாசிப்பதையும் அவை பற்றிய குறை நிறைகளை விமர்சனபூர்வமாக பேசுவதையும் மட்டும்தான் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாக நினைப்பான். ஒரு படைப்பு வாசிக்கப்பட்டு அது பல கோணங்களில் விவாதிக்கப்படுவதே அந்த படைப்புக்கு கிடைக்கும் மிக உயரிய கெளரவம். ஏற்பாகவோ மறுப்பாகவோ பேசப்படும் போதுதான் அந்த படைப்பு உயிர்துடிப்பு பெற்று வாசகரிடம் உலவுகின்றது.
நவீன் தனது விமர்சன கருத்துகளுக்கு எவ்வகையான எதிர்வினைகள் வரும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டே இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இக்கட்டுரைகள் தொடர்பாக முன்வைக்கப்படக்கூடிய எல்லாவகை அபத்த குற்றச்சாட்டுகளுக்கும் விடைகளை நூலின் முன்னுரையில் கொடுத்துள்ளார். மிகுந்த அவையடக்கத்துடனும் நிதானத்துடனும் எழுதப்பட்டுள்ள அந்த முன்னுரை நூலின் பிற கட்டுரைகளை எப்படி வாசித்து புரிந்து கொள்ளவேண்டும் என்ற கையேடு போல் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அந்த முன்னுரை நூலின் கட்டுரைகளுக்கு வாசல்போல அமைந்துள்ளது. அதோடு நவீன இலக்கிய வாசிப்பில் நுழைபவர்களுக்கும் அது ஒரு வாசலாக இருக்கூடிய தகுதி பெற்றுள்ளது.
நவீன் தேர்வு செய்துள்ள படைப்பாளிகள் அனைவரும் ஆண்கள். முன்னோடி எழுத்தாளர்கள். ஏன் பெண் படைப்பாளிகளை இந்த விமர்சனத்தில் அவர் இணைத்துக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. மலேசியாவில், அக்காலம் தொட்டு ஆண்களுக்கு இணையாகவே பெண்களும் எழுதிக் கொண்டிருப்பதால் அவர்களையும் இணைத்துக் கொண்டிருக்க வேண்டியதே ஞாயம். அப்படி இணைத்திருந்தால் மலேசிய நாவல்களின் பன்முகம் புலப்பட வாய்ப்பாக அமைந்திருக்கும். அதோடு தங்கள் நாவல் விமர்சனத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதில் பெண் எழுத்தாளர்களுக்கு மனக்குறையும் ஏற்படக்கூடும்.
இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்கள் மலேசிய இலக்கிய வளர்ச்சியோடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையவர்கள். வாசகர் பரப்பில் நல்ல அறிமுகம் உள்ளவர்கள். இலக்கியச் செயல்பாட்டாளர்களாக பங்காற்றியவர்கள். அச்சு இதழ்களில் அதிகம் எழுதியவர்கள். இதில் உள்ள பல நாவல்களும் இதழ்களில் முன்பு தொடர்கதையாக வந்தவை. இந்த நாவல்களில் பெரும்பாலானவை வரலாற்று நிகழ்வுகளை கதையாக சொல்பவையாக உள்ளன. இவர்களை வெகுஜன எழுத்தாளர் தீவிர எழுத்தாளர் என்றெல்லாம் பகுத்து கூறும் வழக்கம் இருந்ததில்லை. அதோடு ‘எழுதப்படுவதெல்லாம் இலக்கியம்தான்’ என்ற சமரசப் பார்வை இன்றுபோல் அன்றும் வலுவாகவே இருந்தது. ஆகவே, நூலாசிரியர், நவீன எழுத்து என்ற பெயரில் வெளிவந்த எல்லா நாவல்கள் குறுநாவல்களையும் தன் விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.
வெகுஜன படைப்புகள் உண்மையில் விமர்சனத்துக்கு வெளியே இருப்பவை. அவை வாசகனின் தேவையையும் ருசியையும் உணர்ந்து வாசகனின் தரத்திற்கே எழுதப்படுவதால் அவற்றை விமர்சிப்பது பொருளற்றது. ‘பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை’ என்ற வாசகனின் நிலைபாடுகளைத் தாண்டி அவற்றில் பேச ஒன்றும் இருக்காது. வாசகனுக்கு போதுமான உல்லாசத்தையும் தேவைக்கு தீனி போடும் கூறுகளையும் கொண்டிருக்கும் படைப்புகள் வாசக விருப்பத்துக்குரியனவாக ஆகிவிடும். அவ்வளவுதான்.
ஆனால் வெகுஜன தன்மையுடன், சந்தைக்கு ஏற்ற பண்டமாக, எழுதப்பட்டாலும் தீவிர இலக்கியப் படைப்பு என்ற இடம் நோக்கி வெளிப்புற செல்வாக்குகளால் பாசாங்காக முன் நகர்த்தப்படும் படைப்புகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். வாசகன் படைப்பின் உண்மை தரத்தை அறிந்து கொள்ள அது பயன்படும். தீவிர இலக்கிய நோக்கோடு எழுதப்படும் படைப்புகளை விமர்சிப்பது இலக்கியத்தை செழுமையாக்கும் பணி. சில மன கசப்புகளும் பகையும் விளையும் என்றாலும் அதை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இலக்கியம் சுறுசுறுப்பாக செயல்படவும் தன்னைத் தானே தூர்வாரிக் கொள்ளவும் தீவிர இலக்கிய விமர்சனம் தேவையாகின்றது.
இந்நூலில் உள்ள கட்டுரைகள், நாவல்களை பல கோணங்களில் அணுகி அவற்றின் கலையமைதியை ஆராய்கின்றன. சிறப்புகளையும் போதாமைகளையும் ஒரே தொனியில் சொல்கின்றன. ஆங்காங்கே மெல்லிய பகடிகளோடு சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சீண்டல்களும் இல்லாமல் இல்லை. ஆனால், பெரும்பாலான நாவல்கள் பற்றிய நவீனின் விமர்சனங்கள் இட்டுக்கட்டிய அதிகப்படியான கருத்துகள் அல்ல. சற்றே கூர்மதியுடன் வாசிக்கும் வாசகர் யாரும் கண்டு சோர்வுறக்கூடியவைதான். அவை ஏன் இத்தனை காலம் வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை என்பதுதான் வியப்பு.
நான் அறிந்து, பல காலமாக தீவிர இலக்கிய வாசகர்களின் எண்ணத்தில் எழுந்த கருத்துகளாகவே அவை உள்ளதை உணர முடிகின்றது. நான் சந்தித்த தீவிர வாசகர்கள் பலரும் எழுத்தாளர் நவீன் முன்வைக்கும் கருத்துகளோடு உடன்படக்கூடியவர்களாகவே இருந்துள்ளனர். நேர்பேச்சில் பல உதாரணங்கள் பேசப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மலபார் குமாரின் ‘செம்மண்ணும் நீலமலர்களும், சீ முத்துசாமியின் மண்புழுக்கள்’ ஆகிய நாவல்கள், மலேசிய படைப்பிலக்கியத்தில் ஒரு பாய்ச்சல் என்பதை பல காலமாகவே பலரும் வலியுறுத்திவருகின்றனர். அ.ரெங்கசாமியின் எழுத்தில் உள்ள ஆவணத்தன்மையும் பிரச்சாரமும் கூட விவாதிக்கப்பட்டுள்ளன. அதே போல் ஆர். சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்’ எனும் நாவல் துளிகூட வரலாற்று உணர்வில்லாத ஜனரஞ்சக நாவல் என்ற கருத்து பலருக்கும் உள்ளது. எம்.ஏ இளஞ்செல்வனின் வெளிப்படையான அதிர்ச்சி மதிப்பீடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. சை. பீர் முகம்மதின் ‘பெண் குதிரை’ நாவலில் உள்ள பிழையான பெண்ணியம் குறித்த புரிதல்களும் நுட்பமான வாசகர்கள் எல்லாரும் உணர்ந்து சொல்லியதுதான். ‘செலாஞார் அப்பாட்’ நாவலில் காணப்படும் காலப்பிழை, சற்றே கவனமுடன் வாசிக்கும் யார் கண்ணிலும் மிக எளிதில் படக்கூடியது. ஆனால் அவற்றை குறிப்பிட்டு விமர்சனம் எழுதப்படும் போது சிலருக்கு முகம் சுருங்குவது வியப்பு. இவர்களின் வாசிப்பு சந்தேகத்துகுரியது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது.
பல வாசகர்கள் உணர்ந்தும் பேசாமடந்தைகளாக எழுதாமல் விலகிச் சென்றனவற்றை நவீன் முன்வந்து தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார். ‘நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல’ என்ற வழக்கமான மழுப்பல்களை உடைத்து எது சிறந்த இலக்கியம் என்று உதாரணங்களுடன் விளக்குகின்றார். நீண்டகாலம் தீவிர இலக்கிய பரப்பில் மறைவான பேச்சு பொருளாக இருந்த பல விமர்சனங்களை நவீன் எழுதி அவற்றை பிரதான இலக்கிய விவாதத்திற்கு விட்டிருப்பது பாராட்டத்தக்கது. அவர் தன் கருத்துகளை முடிவான தீர்ப்புகளாக சொல்லவில்லை. ரசனை விமர்சனத்தில் எல்லாருக்கும் வாய்ப்புண்டு. மாற்று கருத்துகளுக்கும் இடம் உண்டு. ஆகவே புதியவர்கள் மேலும் மேலே சென்று புனைவுகளை விமர்சிக்க இந்நூல் பயிற்சி நூலாக அமையும்.
இதே நூலில் மலேசியாவின் சிறந்த பத்து நாவல்கள் என்ற பட்டியலையும் நவீன் முன்மொழிந்திருக்கலாமே என்ற யோசனை வருகின்றது. க.ந.சு. சி.மோகன், வெங்கட்ராமன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என நவீன படைப்பாளிகள் பலரும் தங்கள் வாசிப்பின் வழி ஒரு நூல் பட்டியலை முன்மொழிவது மிகவும் ஆரோக்கியமான இலக்கிய செயல்பாடாக அமைந்துவருகின்றது. அவை நிரந்தரமான வரிசைகள் அல்ல. ஏற்பும் மறுப்பும் உள்ளவை. என்றாலும் அதிகப்படியான மாற்றங்கள் இன்றி பரிணாமம் கண்டு வருகின்றன. வாசகர்களுக்கு அவை சிறந்த வழிகாட்டிகளாக அமைகின்றன. மலேசியாவில் அப்படியான ஒரு வரிசையை இதுவரை யாரும் முன்மொழிந்ததில்லை என்று நினைக்கிறேன். ‘எழுதப்படுவது எல்லாம் இலக்கியம்’ என்ற பொத்தம் பொதுவான மனப்பான்மையோடு இருக்கும் மலேசிய இலக்கிய பரப்பில் ரசனை சார்ந்து ஒரு நாவல் பட்டியல் முன்மொழியப்படுவது அவசியம் என்றே நினைக்கிறேன். இந்நூலின் இரண்டாம் தொகுதியில் நவீன் அதை செய்வார் என்று நம்புகின்றேன்.
இந்த கட்டுரைகளை மீள்வாசிப்பு செய்யும் போது சில விடயங்களை நவீன் மேலும் விளக்கியிருக்கலாம் என்று தோன்றியது. இளம் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் குழப்பங்கள் இல்லாமல் இருக்க இது தேவை என்று நினைக்கிறேன். முக்கியமாக பக்கம் 27-ல் வணிக இலக்கியம் என்ற துணைத்தலைப்பில், //வணிக எழுத்துகளை சாகசக் கதைகள், குற்றவியல் கதைகள், மெல்லுணர்ச்சி கதைகள், லட்சியவாத கதைகள் என நான்காக வகுக்கலாம்// என விளக்கியுள்ளார். நவீன் சொல்லும் இந்த பகுப்பு சற்றே பழமையானதாக நினைக்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தீவிர இலக்கிய வாசகரின் பார்வை இவ்வாறு வரையறை செய்தது உண்மை. ஆனால், இன்று வணிக இலக்கியத்துக்கும் தீவிர இலக்கியத்துக்குமான எல்லைகள் வெகு நுட்பமாக மாறியிருப்பதை கவனிக்க வேண்டியுள்ளது. சிற்றிதழ் காலத்து இறுகிய நிலை இன்று இல்லை. புனைவுகளின் புதிய சாத்தியங்களை நோக்கி படைப்புகள் நகர்ந்துள்ளன. இன்று தீவிர இலக்கியத்தை அதன் வகைமை(genre) அல்லாமல் உட்செறிவு சார்ந்து மட்டுமே முடிவு செய்ய முடியும்.
முன்பு அறிவியல், அமானுஷம், குற்றவியல் புனைவுகள் வெகுஜன எழுத்தாக மட்டுமே இருந்தன. காரணம் அவை சுவரஸ்ய தகவல்களையும், திடுக்கிடல்களையும், பரபரப்பான திருப்பங்களையும், கொண்ட வணிக இலக்கியமாக எழுதப்பட்டன. அவற்றை ருசிகரமாக எழுத அதிக மெனக்கெடல்கள் தேவையில்லை என்பதால் பலரும் அவ்வகை கதைகளை எழுதினர். இன்றும் பலருக்கு அது எளிதில் புகழ் அடையும் சூத்திரமாக இருக்கிறது. அதிகமான வாசகர்களை விரைவில் பெற்றுவிட இவ்வாரான மலின எழுத்து அவர்களுக்கு உதவுகின்றது.
ஆனால் தீவிர எழுத்தாளனுக்கு பல வகைமைகளில் எழுதுவது என்பது ஒரு சவால். வெகுஜன எழுத்தால் அடைய முடியாத தூரத்தை தனது கற்பனையாலும் கொந்தளிப்பாலும் மெய்நிகர் வாழ்க்கையாக ஆக்கிகாட்டுவதிலேயே அவனது வெற்றி அமைகின்றது. வாசகனுக்கு அது அபூர்வ அனுபமாக ஆகிவிடுகின்றது. ஆகவே அறிவியல் புனைவு அமானுஷ மனோவியல், குற்றவியல் என பல்வேறு வகைமைகளில் தீவிர கதையாடல்களை நிகழ்த்த முடியும் என்பது இன்று நிரூபனமாகியுள்ளது. கடந்தாண்டு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘பத்து லட்சம் காலடிகள்’ சிறுகதை, அந்த வகையில் மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளலாம். ஒரு துப்பறியும் கதைக்குரிய சட்டகத்தில் எழுதப்பட்ட அந்த கதையின் உள்ளடக்கம் புனைவின் புதிய எல்லைகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. அதேப் போல புதுமைபித்தன், நீல பத்மநாபன், ஜெயமோகன் என பலரும் அமானுஷ கதைகளை தீவிர மனோவியல் உள்ளடக்கத்தில் எழுதிக்காட்டியுள்ளனர். ஆகவே, இன்று வணிக இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற வேறுபாட்டை படைப்பின் கலை நேர்த்தியும், செறிவும், காத்திரத்தன்மையும்தான் முடிவு செய்வதாக அமையும். இலக்கியவகைமைளைக் (genre) கொண்டு முடிவு செய்யக் கூடாது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இக்கட்டுரைகளில் திரைப்படக்காட்சி எடுத்துக்காட்டுகளை நவீன் தாராளமாக பயன்படுத்தியுள்ளார். ஒரு விடயத்தை, திரைப்படக் காட்சி உதாரணத்தின் துணையுடன் வெகு சுலபமாக விளக்கிவிட முடியும் என்றாலும் ஒரு தீவிர கட்டுரையில் அது தவிர்க்கப்படவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இது நான் எப்போதும் எல்லா கட்டுரைகளிலும் எதிர்பார்ப்பதுதான். அவ்வகையான எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் பகடியையும் நையாண்டி தொனியையும் கொடுப்பதால் அது கட்டுரையின் வீச்சையும் நேர்மையையும் பாதிக்கச் செய்யும் என்று நினைக்கிறேன். ஒரு தீவிர கருத்தையும் வாசகர்கள் நகைத்து கடந்திடக் கூடிய ஆபத்தும் உண்டு.
உண்மையில் ரசனை விமர்சனத்தின் தேவை முன்பைவிட இப்போது மேலும் கூடியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இலக்கிய தரத்தை முடிவு செய்யும் சக்திகளாக அச்சு இதழ்கள் இருந்தன. அதனால் பல தீமைகள் விளைந்தன என்றாலும் புதிதாக எழுதுவோர் போதுமான பயிற்சி பெற்ற பின் அவையேறும் கட்டுப்பாடுகளை நாளிதழ்கள் கொண்டிருந்தன. ஆனால், இரண்டாயிரத்தாம் ஆண்டுக்கு பின்னான மின்னூடக பண்பாட்டில், எல்லா கட்டுப்பாடுகளும் தகர்க்கப்பட்டுவிட்டன. ஆகவே, எல்லாரும் தாங்கள் விரும்பியதை எந்த நேரத்திலும் எழுதி உடனுக்குடன் வாசக பார்வைக்கு கொண்டுசெல்லக் கூடிய வசதிகள் இன்று உள்ளன. இதன் பாதகமான வெளிப்பாடாக, சொத்தையான படைப்புகள் அதிகரித்துள்ளது போலவே சந்தைபடுத்தும் உத்தியோடு முன்வைக்கப்படும் போலியான விமர்சன குறிப்புகளும் வாசகனை குழப்பக்கூடிய ஆபத்து அதிகரித்துள்ளது.
இந்த ஜனநாயக இலக்கிய வெளியில் தரமான இலக்கியத்தை தேர்வு செய்ய ஒவ்வொரு வாசகனும் தனக்குள் தீவிர கலை ரசனையை வளர்த்துக் கொண்டு அதன் ஊடாக இலக்கிய படைப்புகளை மதிப்பிட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே, ‘மலேசிய நாவல்கள்’ போன்ற கட்டுரைகளும் நூல்களும் அதிகம் எழுதப்படவேண்டும். அதன்மூலமே புதிய வாசகர்களும் எழுத்தாளர்களும் சரியான செல்திசையை கண்டடைய முடியும்.
.
இந்நூலை இன்னும் வாசிக்கவில்லை. இருப்பினும், தயாஜி இது குறித்து தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். விமர்சனம் என்பது ஒரு படைப்பின் குறைகளை மட்டுமன்றி நிறைகளையும் பேச வேண்டும். தனக்கு வேண்டியவர் என்ற ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு அவர் படைப்புகளைப் புகழ்வதும் வட்டத்திற்கு வெளியே உள்ளவரை இகழ்வதும் சிறந்த விமர்சனமாகாது. விமர்சனம் என்பது ஒருவரை வளர்க்க உதவ வேண்டுமேயன்றி, வீழ்த்தும் ஆயுதமாக மாறக்கூடாது. ஒரு தடவை, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகதை எழுதி ‘புகழ்பெற்ற’ எழுத்தாளர் ஒருவரிடம் கருத்து கேட்டேன். ஒரே மூச்சில் படித்த அவர், என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்து, அதைப் பற்றி மிக மட்டமாகப் பேசினார். அதில் உள்ள குறைகளையோ நிறைகளையோ கொஞ்சமும் கூறவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை, எழுத எடுத்து பாதியிலேயே வீசிய படைப்புகள் பல!
வணக்கம்…
முனியாண்டி ராஜ் அவர்கள் இந்த நூலை வாசித்தப்பின் தன் கருத்தை பதிவிடுவது அனைவருக்கும் நலம் பயக்கும் செயலாக அமையும். விமர்சனம் குறைகளை மட்டுமல்லாது நிறைகளை பேச வேண்டும், தனக்கு வேண்டியவர் வட்டம் அமைத்து புகழ்வது விமர்சனம் ஆகாது போன்ற அவரது கருத்துடன் எனக்கு உடன் பாடுதான். ஆனால் இங்கு அந்தக் கருத்தை பதிவிடும் போது அது எழுத்தாளரின் விமர்ச்சன நூல் குறித்த மறுப்பு வாக்கியங்களாகவே நான் வாசிக்கிறேன். அப்படி ஒரு எண்ணத்தை மட்டுமே அவர் வரிகள் உருவாக்கும் என்பதால் நூலை முழுமையாக வாசித்து அதில் ஆழ்ந்த வாசகியாக என் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
மலேசிய நாவல்கள் என்ற நூலில் குறை நிறை என இரண்டுமே பேசப்பட்டுள்ளது என்பதை பத்து கட்டுரைகள் வாசித்த வழி வந்தவள் என்பதால் சொல்லிக்கொள்கிறேன். மேலும் தனக்கு பிடித்தவர் பிடிக்காதவர் என வட்டமிட்டு நவீன் அவர்கள் எழுதவில்லை என்பதும் உறுதி. காரணம் சி.முத்துசாமி மற்றும் சை.பீர்.முகம்மது அவர்களை பாராட்டும் அவரே அவர்களது பிற நாவல்களையும் விமர்சிக்கிறார். இதே நிலைதான் அ.ரெங்கசாமிக்கும். எனவே இது முனியாண்டி ராஜ் அவர்களின் பொதுக்கருத்தாக இருந்தாலும் இந்த கட்டுரைக்கு கீழ் வாசிக்காமல் பதிவது தவறான எண்ணத்தை பிரதிபளிக்கும்.
அதோடு விமர்சனம் என்பது எழுத்தாளரை வளர்க்கும் பணியைச் செய்யவில்லை அது பிற வாசகனுக்கு ஒரு நூலின் தரத்தை சொல்லவே எழுதப்பட்டுள்ளது என விரிவான முன்னுரையை வாசித்தாலே புரியும்.
இனி பொறுப்பாக எழுதவும். நன்றி
வணக்கம். நான் எழுதியது பொதுவான கருத்து. இங்கு நான் பாண்டியனின் கட்டுரை குறித்து விமர்சனம் செய்யவே இல்லையே. நம் நாட்டில் நடக்கும் விமர்சனம் பற்றித்தானே எழுதினேன். ஏன் அவசரம் உங்களுக்கு ? பொறுப்பாக எழுதுவது எப்படியென சொல்லிக் கொடுங்கள். அந்நூலைக் கண்டிப்பாக படிப்பேன். படித்து பிறகு வேண்டுமானால் எழுதுகிறேன்.
நான் மேலே எழுதியதற்கும் பாண்டியனின் இந்தக் கட்டுரைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை என்பதை அறிந்து கொள்ளவும். பொதுவான நிலையில்தான் என் கருத்து அமைந்தது.
தங்களை என் கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் ஐயா. மலேசியாவில் உள்ள விமர்சன சூழல் எனச் சொல்கிறீர்கள். இப்படி ஒரு கருத்தை ஒளிந்து கொண்டு பொதுவில் சொல்வதால்தான் என்னைப்போன்றவர்கள் அவசரப்பட்டு விடுகிறோம். உங்களுக்கு நடந்த தனிப்பட்ட அனுபவம் மலேசிய இலக்கியச் சூழலுக்கு பொருந்துமா என யோசிக்க வைத்துவிட்டீர்கள். எது எப்படி இருப்பினும் இந்நூல் குறித்தோ அன்பழகன் பாண்டியன் கட்டுரை குறித்தோ தங்கள் குறிப்பிடவில்லை எனத் தெரிகிறது. முகநூலில் பதிவிட வேண்டிய கருத்தை இங்கு சொல்லியுள்ளீர்கள். நல்லது.