மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி,  விமர்சன அளவுகோல்  மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின் படி இலக்கியத்தை மதிப்பிட அவசியமில்லை என்ற கருத்தும் மலேசியாவில் பிரபலமானவை. இக்கருத்துகளில் உண்மை உண்டு. ஆனால் இவை ரசனை இலக்கியத்தைப் புரிந்துகொள்ளாதவர்களின் பொருந்தாத எதிர்வினை மட்டுமே. இந்தப் பொருந்தா கருத்துகளுக்கு வலு சேர்க்க மொழிப்பெருமித உணர்வு, ‘மலேசியாவுக்கே உரிய தனித்துவம்’ என்ற உணர்ச்சிக்கூறுகளைக் கலந்து விமர்சனத்தில் சலுகைகளை எதிர்பார்க்கும் போக்கும் வெளிப்படுவதுண்டு. இவை மெல்ல வளர்ந்து ‘வாசகர்கள் மதிப்பிடுவார்கள்’ என்ற தன்னிரக்கக் கோரிக்கை என்பதில் வந்து முடிவடைகிறது.

புனைவுகளில் வாழ்வுக்கான விழுமியங்களைக் கண்டடைதலையும் கதையோட்டத்தைக் கோட்பாடுகளுடன் தொடர்புறுத்தும் கல்வியியல் விமர்சனப் போக்கும் மலேசிய இலக்கிய உலகில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. கல்வியியல், கோட்பாட்டு விமர்சனங்களின் வாயிலாகப் புனைவின் கட்டுமானத்தையும் குறிப்பிட்ட கோட்பாட்டின் அணுகுமுறையையும் புரிந்து கொள்ள இயலுகிறது. ஆனால், அவ்வாறான விமர்சனமே மேலோங்கும்போது படைப்புகள் குறித்த காத்திரமான உரையாடல்களும் விவாதங்களும் எழ இயலாச் சூழலே ஏற்படுகிறது. காரணம் அவை படைப்புகளைத் திறந்து காட்டி இன்னும் உள்ளே சஞ்சரிக்கும் வசதிகளை உருவாக்குவதில்லை. ஒரு படைப்பின் ஆன்மாவை அவை நெருங்குவதில்லை. இத்தகைய சூழலில் நிகழ்ந்த பெரும் முன்னெடுப்பாகவே ம.நவீனின் மலேசிய நாவல்கள் எனும் ரசனை விமர்சன நூலைக் காண முடிகிறது.  

1960 தொடங்கி 2019 வரை 10 எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் பல்வேறு வகைமையிலான  29 நாவல்களை வாசித்துத் தனது ரசனை விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் நவீன். தமது நூல் விமர்சனத்துக்குக் குறிப்பிட்ட வகைமை அல்லது அழகியலை ஒட்டிய நாவல்களைத் தெரிவு செய்யவில்லை. மாறாக, மலேசியாவில் இதுவரை குறிப்பிடத்தகுந்த நாவல்களாகச் சொல்லப்பட்டவற்றை தன் ரசனை விமர்சனம் மூலம் அணுகியுள்ளார்.

விமர்சனத்தின் முதன்மை தேவை என்பது அவ்விலக்கியம் படைக்கப்படும் சமூகத்தின் அதுவரையிலான இலக்கியமரபை அடிப்படையாகக் கொண்டு புதிய இலக்கியத்தை மதிப்பீடு செய்வது என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். எனவே, தமிழில் நிகழ்ந்திருக்கும் இலக்கிய மரபுகள், செல்திசை ஆகியவற்றை அம்மொழியில் வெளிவந்திருக்கும் பிற படைப்புகளுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதென்பது மரபுடன் அப்படைப்பினை இணைக்கும் முயற்சியாகவே இருக்கிறது. மேலும், முன்னரே கட்டமைப்பட்டிருக்கும் பொது வாசக ரசனையைக் கேள்விக்குள்ளாக்குவதும் நிராகரிப்பதுமே விமர்சனத்தின் பணியாக இருக்க முடியாது. மாறாக, ஒரு புனைவை ஒட்டிய சிறந்த வாசிப்பை அளித்து வாசக ரசனையை மேம்படுத்தச் செய்தலே அதன் முதன்மைப் பணியாக இருக்க முடியும். வாசிப்பை நிகழ்த்திக் கொள்வதற்கான சட்டகம் ஒன்றைப் போதிப்பது என்பது கல்வியியல், கோட்பாட்டு விமர்சனத்தின் வழியாக இருக்கிறது. தேர்ந்த வாசகன் நிச்சயமாகச் சட்டகம் ஒன்றுக்குள் வாசிப்பைச் சுருக்கிக் கொள்ள மாட்டான். புனைவு வாசிப்பில் தவறவிடக்கூடாத நுண்மையான புள்ளிகள் சிலவற்றை அவதானித்துத் தன்னுடைய வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போதே வாசிப்பின் மீதான உரையாடல் சாத்தியமாகிறது. வாசகனின் கற்பனையின் வாயிலாகவே ஆசிரியன் உணர்த்தும் நுட்பமான புனைவு உச்சங்களையும் தரிசனங்களையும் உள்வாங்க இயலுகிறது. அவ்வாறான தருணங்களையும் படைப்புடனான உரையாடலையும் நிகழ்த்திக் கொள்வதற்குத் தேர்ந்த வாசகர் ஒருவரின் ரசனை விமர்சனம் உதவுகிறது. 

ரசனை விமர்சனம் என்பதைப் பல்வேறு அறிவுத்துறைகளை ஒட்டி எந்தவிதமான திட்டவட்டமான முறைமையுமின்றி அந்தரங்கமான வாசிப்பை நிகழ்த்திப் பார்க்கும் நுண்ணுணர்வுமிக்க வாசகப்பார்வை. அவ்வகையில், நவீன்,  நாவல்களை ஒட்டிய தமது விமர்சனத்தில் தன்னுடைய வாழ்வில் பெற்ற அனுபவத்தையும், மலேசிய, உலக இலக்கியங்களை வாசிப்பதன் வாயிலாகப் பெற்ற அறிவையும், வரலாறு, சமூகம் போன்ற பல்வேறுபட்ட அறிவுத்துறைகளில் இருந்தும் பெற்ற பொதுவான அறிவு ஆகியவற்றையே தன்னுடைய முதன்மைத் தகுதியாகக் கொள்கிறார்.  தன்னுடைய விமர்சன அளவுகோல்படி, நாவல்களை கலைத்தன்மை உடையவை x கலைகுறைபாடு உள்ளவை என்ற எதிரீட்டில் அணுகுகிறார். கலைகுறைபாடு கொண்ட நாவல்களிலும் முக்கியமான பகுதிகளை எடுத்துக் காட்டுகிறார். வணிக இலக்கியம் X தீவிர இலக்கியம் என்ற எதிரீட்டில் வணிக இலக்கியத்துக்குரிய நாவல்களையும் அடையாளப்படுத்துகிறார்.

ரசனை விமர்சகனாக நவீன் சிறந்த நாவல் குறித்து முன்வைக்கும் கூறுகள் ஒட்டிக் காத்திரமான உரையாடலை அவசியம் முன்னெடுக்க வேண்டியதாகிறது. ஒருவகையில் இந்தக் கூறுகளை அறிந்துகொள்வதன் வழியே தரமான புனைவுகளையும் வாசகன் உள்வாங்க முடியும். கட்டுரைகளில் நவீன் குறிப்பிடும் அவற்றை ஒருவசதிக்காக நான்காகப் பிரித்துக்கொள்கிறேன்.

அனுபவங்கள் அல்லது தகவல்கள் வாயிலாகச் சாத்தியப்படவேண்டிய அகவுண்மை. 

நாவல் என்பது விரிந்த வாழ்வைச் சொல்லிச் செல்லும் புனைவு வடிவமாகக் கருதப்படுகிறது. அவ்வாறான விரிந்த வாழ்வைச் சொல்வதற்கு, மலேசியப் படைப்பாளிகள் பலரும் தன்னனுபவம் அல்லது தங்களுக்கு நன்கு தெரிந்த தகவல்களையே துணைகொள்கின்றனர். உதாரணமாக, ‘செலாஞ்சார் அம்பாட்’ எனும் நாவல் செம்பனைக் காட்டுக்குள் நிகழ்கிற கொத்தடிமைக் கதையாக இருக்கிறது. ஆனால், செம்பனைக் காட்டின் தன்மைகள், சுற்றுசூழல் ஆகியன சரியாக அதில் வெளிப்படவில்லை எனக் குறிப்பிடுகிறார். வரலாற்றுத் தகவல்கள், செவிவழிச் செய்திகள், ஆய்வுகள் எனச் சிலவற்றின் மூலம் புனைவொன்றைக் கட்டி எழுப்ப முடியும். நாவலில் தகவல்கள் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு நம்பகத்தன்மையை மட்டுமின்றி கலைத்தன்மைக்கும் வித்திடுகின்றன. அவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு காட்சிப்படுத்தல், நுண்தருணங்களின் சித்தரிப்பு எனக் கற்பனையால் எழுத்தாளன் வாசகனுக்குத் தொட்டுக் காட்ட வேண்டிய இடங்கள் இந்நாவல்களில் தவறவிடப்பட்டிருக்கின்றன என்பதையே நவீன் சுட்டுகிறார். ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலில் புதிய வாழிடத்தில் இயல்பாகவே உணரக்கூடிய அந்நியத்தன்மை தவறவிடப்பட்டிருக்கிறது என பல்வேறு உதாரணங்கள் வழி நிறுவுகிறார். என் வாசிப்பில் ‘மானுடம் வெல்லும்’ என்ற தமிழின் சிறந்த வரலாற்று நாவலை நினைவு கூர்கிறேன். இந்நாவல் பிரெஞ்சுப்படைகளின் ஆளுகைக்குட்பட்ட புதுவையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஆனந்தரங்கம்பிள்ளை அவர்களின் நாட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அரசுரிமைச் சிக்கல்கள், படையெடுப்புகள் ஆகிய பெரும் வரலாற்றுச் சம்பவங்கள் பேசப்படும் சூழலில் பண்ணையடிமை முறைச் சூழலின் அபத்தம், மேலை நாட்டு நீதி வழங்கல் முறை ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கை, வீட்டிலே கழிவறைக் கட்டச் சொல்லும் கவர்னரின் கட்டளை உணரச்செய்யும் அந்நியத்தன்மை என மிக விரிவான வரலாற்றுச் சித்திரத்தை நாவலில் இருக்கும் தகவல்கள் ஏற்படுத்துகின்றன. நாவல் ஒரு வாசகனுக்கு வாழ்தலுடைய நிகர் அனுபவத்தை உண்டாக்குவது. எனவே நிலமும், காலமும், வெளியும் துல்லியமாக விவரிக்கப்படவேண்டியது அவசியமாக உள்ளதையே நமது முன் உதாரணங்கள் காட்டுகின்றன. இதுபோல ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவல் கடற்கரையை ஒட்டி வாழும் பரதவ இன மக்களின் ஐம்பது ஆண்டு கால வாழ்வை முன்வைக்கும் நாவல். அந்த நாவலில் விரிவாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் கடலின் நீரோட்டம், அலைகளின் சீற்றம், மீன் பிடிக்கும் நுட்பம், கட்டுமரம் கட்டும் தொழில்நுட்பம் ஆகியவை  வாசகனைத் தனக்கு முற்றிலும் புதிய நிலத்தின் முன் கொண்டு நிறுத்திவிடும் தன்மையானதாக இருக்கும். அவ்வனுபவச் சித்திரிப்பின் வாயிலாகக் கடற்கரை வாழ் மக்களின் தத்தளிப்பு மிக்க வாழ்வை நாமும் வாழ்ந்து பார்த்த அனுபவத்தைப் பெற முடியும். இந்த அனுபவத்தை கொடுப்பவைதான் அடிப்படையில் நல்ல நாவல்களாக இன்றளவும் முன்னெடுக்கப்படுவது நம் முன் உள்ள வரலாறு.

வாசக ஆழ்மனத்தை நோக்கி எழுப்பும் கேள்வி

தத்துவத்துக்குரிய கலைவடிவாகக் கருதப்படும் நாவலில் வாசகனின் வாழ்க்கை குறித்த முன்முடிவுகளும் பார்வைகளும் தொடர்ந்து கலைத்துப் போட்டு மீள்பரிசீலனை செய்ய படைப்பாளன் தூண்டுகிறான். மலேசிய நாவல்கள் நேரடியாக அறிவுறுத்தும் பாணியில் அமைந்திருக்கின்றன. கதைமாந்தர்களைக் கருத்துப் பிரதிநிதிகளாக உருவாக்கி தத்துவத்தை மேற்கோள் வரிகளாக முன்வைப்பதிலே அமைந்திருக்கிறது என நவீன் குறிப்பிடுகிறார். படைப்பின் வாயிலாக வாசகன் தத்துவத்தைத் தானே கண்டடைய வேண்டும். வாசகன் கண்டடையும் தத்துவத்தின் வாயிலாக அவனது ஆழுள்ளத்துடன் உரையாடல் நிகழ்த்தும் போதே நாவல் கலைத்தன்மை எட்டுகிறது. மலேசிய நாவல்களில் அதற்கான சிறந்த உதாரணங்களையும் நவீன் முன்வைக்கிறார். முதலாவது, எம்.குமரனின் ‘செம்மண்ணும் நீலமலர்களும்’. இந்நாவலின் நாயகன் தன் வாழ்வின் அபத்தத்தைப் போக்கிக் கொள்ள எண்ணி செய்யும் முயற்சிகளில் நம்பிக்கையற்று மீளா வெறுமையில் சிக்கித் தவிக்கிறான். வாழ்வு மீதான இலட்சியவாதப் பார்வையைக் கேள்விக்குள்ளாக்கும் தளம் நுண்ணிய அவதானிப்பு வெளிப்படுகிறது. வாசகனின் ஆழுள்ளத்துடன் உரையாடும் இடமான அவ்விடத்தை நவீன் அடையாளப்படுத்துகிறார். அதுபோல அக்கினி வளையங்கள் நாவலில் வரும் சண்முகப்பிள்ளையின் கதாபாத்திரம் குறித்தும் இக்கட்டுரைத் தொகுப்பில் சிலாகிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மலாயாவில் வட்டிக்கடைக்கு வந்து மெல்ல பெருமுதலாளியாகச் சண்முகம் பிள்ளை உருவெடுக்கிறார். இந்த நூலின் மைய இழையாக கம்யூனிசப் போராட்டத்துக்குள் இணைத்துக் கொள்கிற முத்து என்பவனின் வாழ்வு அமைந்திருக்கிறது. அந்த மைய இழைக்கு முற்றிலும் நேர்மாறாக முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக சண்முகம் பிள்ளை பாத்திரம் அமைந்திருக்கிறது. தன்னுடைய செல்வாக்கின் குறியீடாக ஜெயாவை அமைத்துக் கொள்வதற்குச் செலுத்துகிற மோகம், தத்தளிப்பு, உள்ளூரக் கனன்று கொண்டிருக்கும் வன்மம் எனச் சண்முகம் பிள்ளையின் பாத்திர வார்ப்பு ரத்தமும் சதையுமானதாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற கதாபாத்திரங்கள் வழி வாசக மனதில் மனிதனின் அகசிக்கல்களை விவரிக்கும் பாங்கு அவசியமானது என நவீன் குறிப்பிடுகிறார். காரணம் மனித மனம் அத்தனை சிக்கல்களையும் சிடுக்குகளையும் கொண்டுள்ளது.

விரிந்த வாழ்வின் சித்திரம்

நாவலில் அவதானிக்க வேண்டிய மற்றொரு மிகமுக்கிய கூறாக நவீன் விரிவான வாழ்க்கைச் சித்திரத்தைக் குறிப்பிடுகிறார். சிறுகதையில் ஒருமையும் கச்சிதத்தன்மையும் வாழ்வின் சிறு தருணத்தைப் பிளந்து காட்டுவதாகவே அமைந்திருக்கிறது. ஆனால் புலியின் பசியையும் மானின் வலியையும் ஒருசேர முன்வைப்பது எனும் கூற்றைப் போல நாவல் விரிவான புலத்தில் வாழ்வை முன்வைக்கிறது. அந்தந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றை நாவல்கள்தான் முன்வைக்கின்றன என அசோகமித்திரன் குறிப்பிடுவார்.  வெகுசன வாசகர்கள் அல்லது பொழுதுபோக்கு வாசகர்களுக்கு நாவலின் சுவாரசியமே பிரதானமானது. ‘ஒரே வாசிப்பில் முடித்தேன்’ என்பது இங்கு நல்ல நாவல் என்ற தகுதிக்குள் வருவதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. நவீன் நாவல் என்பது அன்றாடத்தின் விரிவுடன் நுண்மையும் விளங்குமாறு அமைய வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். அவ்வகையில் ‘இலட்சியப்பயணம்’  நாவலில் தோட்ட மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் குறித்த விரிவான சித்திரத்தை ஐ.இளவழகு புனைவாக்கியுள்ளதை நேர்மறையாகக் குறிப்பிடப்பிடுகிறார். இந்நாவல் தோட்ட மக்களின் வாழ்வு, கொண்டாட்டங்கள், வரலாறு என விரிந்த பரப்பைக் காட்டுவதை கட்டுரை வழி உணர முடிகிறது.  உண்மையில் நல்ல நாவல்கள் எனச் சொல்லப்படும் புனைவுகள் அனைத்தும் இத்தகைய விரிவான வாழ்க்கைச் சித்திரத்தையே அறிமுகப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக,  சுதந்திரத்துக்கு முந்தைய ஒருங்கிணைந்த வங்க மாநிலத்தில் மேலோங்கும் விடுதலைவேட்கையும் இந்து முஸ்லிம் பிரிவினையும் என வரலாற்றுப் பின்னணிகள் ஒருபுறமிருக்க மனித மனத்தின் காமத்தையும் அபோதத்தையும் நுட்பமாகச் சொல்லும் விரிந்த வாழ்வை முன்வைக்கும் நீலகண்ட பறவையைத் தேடி நாவல் எய்திருக்கும் கலையுச்சத்தைக் குறிப்பிடலாம். மனித வாழ்வின் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாக இருக்கும் காமத்தின் முடிவற்ற பக்கங்கள் இந்நாவலில் அமைந்திருக்கின்றன. இளம்விதவையாகி ஆச்சாரங்களுக்குக் கட்டுப்பட்டுப் போகின்ற மாலதியின் மனத்தில் திமிர்வு கொள்ளும் காமத்தின் தவிப்பு காட்டப்படுகிறது. பெரும் வீரனாக இருக்கும் பேலுவின் கை செயலிழந்து போனதால், தன் மனைவி இன்னொருவனுடன் வைத்திருக்கும் உறவையறிந்தும் தலாக் கொடுக்க முடியாத இயலாமைக்குத் தள்ளப்படுகிறான். பதின்மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தும் உள்ளிருந்து உடற்றும் காமத்தினால் தத்தளிப்பு கொள்கிறாள் ஜோட்டன். சமைத்துக் கொண்டிருந்த ஜலாலியின் வயிற்றுப்பகுதியைக் கண்டு காம இச்சையால் தூண்டப்பட்டு உறவு கொள்கிறான் அவளது கணவன் ஆபேத் அலி. அடுப்பில் இருந்த தீ பரவி குடிசைப்பகுதியை அழித்துவிடுகிறது. காமத்தின் நுண்மைகளையும் ஆழங்களையும் மட்டுமே விரிவுப்படுத்தி மனித வாழ்க்கையின் விரிந்த சித்திரத்தை இந்நூல் முன்வைக்கிறது.

நாவலின் கலைத்தன்மை

இவ்விமர்சன நூலின் வாயிலாக நவீன் பல இடங்களில் பேசுவது நாவலின் கலைத்தன்மை குறித்துதான். மலேசிய நாவல்களில் வெளிப்படும் போலி இலக்கியப்பாவனைகளை நவீன் தகுந்த ஆதாரத்துடன் முன்வைக்கிறார். தீவிர இலக்கியப் படைப்புகள், பாலியல் சித்திரத்தின் மூலமாக மனித இயல்பையும், முரண்களையும் ஆராய்கின்றன, இலக்கிய வகைமைகளில் ஒன்றான பிறழ்வு இலக்கியத்தின் (transaggressive) முகமாகவும் பாலியல் வெளிப்படுகிறது.   இதைத் தவிர்த்து நாவலில் பாலியலைக் கிளர்ச்சிக்காகவும் அல்லது அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவும் மட்டுமே முன்வைக்கும் போது வணிக உத்தியாகவும் மெல்லிய உணர்வெழுச்சியாகவுமே எஞ்சுகிறது. உடலைச் சமூக அற ஒழுக்கவியல் மதிப்பீடுகளுக்கு எதிரானப் பார்வையுடன் இலக்கியத்தில் முன்னிறுத்திய படைப்பாளராக ஜெயகாந்தன் விளங்குகிறார். அந்த அழகியலை மலேசியாவில் முன்னெடுத்த படைப்பாளியாக எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன் குறிப்பிடப்படுகிறார்.  ஆனால், இளஞ்செல்வன் கதைகளில் பாலுணர்வு என்பது எளிய மீறல்களின் உத்தியாகவே பயன்படுத்தப்படுவதைக் கதைகளின் வாயிலாக நவீன் முன்வைக்கிறார். அதுபோல, ஆர் சண்முகம் எழுதிய சயாம் மரண ரயில் நாவல் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் தாய்லாந்தில் ரயில் பாதையை அமைக்க மலேசிய தோட்டத் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற விரிந்த வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டது. 20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பெரும் மனித வதைகளில் ஒன்றென குறிப்பிடப்படும் நிகழ்வு அது. அந்தத் தளத்தில் தனிமனித இருத்தலியலுக்கான சிக்கல், வாழ்வின் பெறுமதி, மரணத்தின் பொருளின்மை என நாவலில் உருபெறவேண்டியவை நிறையவே இருக்கின்றன. ஆனால், தகவல்களின் துணை கொண்டு காதல் கதையொன்று மட்டுமே ஆசிரியரால் எழுதப்பட்டிருப்பதாக ம.நவீன் குறிப்பிடுகிறார். மாபெரும் மனித வதைக்கூடமாக இருந்த நிலத்தை மெல்லுணர்வு சார்ந்த களமாக மாற்றுவது வரலாற்றுத் திரிபாக அமைவதை அவர் கட்டுரையின் வழி அறிய முடிந்தது. இவ்வாறு கலைத்தன்மை அற்ற புனைவுகள் எவ்வாறு காலகாலமாக மலேசியாவில் ஜீவிக்கின்றன என்றும் அதன் பின் இயங்கும் இதழியல், கல்வியாளர்கள்,  மற்றும் அமைப்புகளின் பலம் எவ்வாறு அதற்கு உதவுகின்றன என்றும் நவீன் சுட்டிக்காட்டுகிறார்.

இந்நூலின் நோக்கங்களில் ஒன்றாக எழுத்தாளர்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதையும் நவீன் குறிப்பிட்டிருந்தார். நாவலாசிரியர்களின் கலை இலக்கியச் செயற்பாடுகளை ஒட்டிய கேள்விகளாகவே அவற்றை எழுப்பியிருந்தார். மலேசிய இலக்கிய உலகின் முகமாக வணிக இலக்கியங்கள் தொடர்ந்து அமைப்புகளாலும் இதழ்களினாலும் கல்விகூடங்களினாலும் முன்னிறுத்தப்படுகின்றன. அதனைப் பயன்படுத்தித் தங்களுக்கான இலக்கிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்களையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். நவீன இலக்கிய வாசிப்பு உள்ளவர்கள் யாவரும் எளிதில் அம்மாதிரியான வேறுபாட்டையும் கேள்வியையும் முன்வைக்கலாம். அந்த வேறுபாட்டை உருவாக்கிக் கொள்ள இலக்கிய உலகில்  அப்படைப்பாளியின் படைப்புகளின் இடம், தனிப்பட்ட ஆளுமை, மலேசிய இலக்கிய உலகுக்குள் வணிக இதழ்களின் செல்வாக்கு, வாசகர்களின் மனப்பார்வை என விஸ்திரணமான பார்வையை முன்வைக்கிறார். அந்த விரிவான புலத்திலே நாவலாசிரியர்களின் கலையிலக்கியச் செயற்பாட்டின் நேர்மையைக் கேள்வி கேட்கிறார். இதன் மூலம் வாசகனாக மலேசிய இலக்கிய உலகின் ஒட்டுமொத்தச் சித்திரத்தைப் பெற முடிகிறது. 

இந்நூல் பலவீன படைப்பாளிகளை கோபப்படுத்தியிருக்கிறது. பொழுதுபோக்கு வாசகர்களுக்கு ஒவ்வாமையாகியிருக்கிறது. அதுவே இந்நூல் நிகழ்த்தவேண்டிய முதல் பங்களிப்பு எனக் கருதுகிறேன். அந்தக் கசப்பை அதிகமாக்கச் சொல்லப்படும் வதந்திகளுக்கு இந்நூலின் முன் எந்த இடமும் இல்லை. காரணம் இந்நூல் மலேசிய படைப்பாளிகளை கீழ்மை படுத்த எழுதப்பட்டதல்ல. அ.ரெங்கசாமி, சீ.முத்துசாமி, சை.பீர்முகம்மது, எம்.குமாரன் போன்ற படைப்பாளிகளை மலேசிய நாவல் இலக்கியத்தின் முதன்மை பங்களிப்பாளர்களாக விமர்சனத்துடன் முன்னிறுத்துகிறது. அதன் வழி இலக்கிய வடிவத்தின் போதாமைகள், பலவீனங்கள் குறித்த உரையாடலை தொடக்கி வைப்பதோடு தரமான நாவலாசிரியர் வரிசை ஒன்றையும் உருவாக்குகிறார். அவ்வகையில் நவீனின் ரசனை விமர்சன நூல் என்பது இலக்கியப் படைப்புகளை ஒட்டி எவ்வித பாசாங்குமின்றி எழ வேண்டிய காத்திரமான உரையாடலுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது. அதோடு எழுந்துவரும் ஆரோக்கியமான இளம் படைப்பாளிகளுக்கு இந்நூல் நல்ல ஒரு மேற்கோளாகவும் திகழ்வது திண்ணம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...