அடிமை

மீண்டும் ஒருமுறை எண்ணிப்பார்த்தேன். ஐம்பது டாலர் சரியாக இருந்தது.நான் மூங்கில் கேட் வழியாக நுழைந்து ஆர்கிட் தோட்டத்துக்குச் சென்றேன். செதுக்கிய கல் தட்டைகளை புதைத்து பாதை அமைக்கப்பட்டிருந்தது. நான் நடந்து நடந்து சலித்த பாதைதான். 

கடந்த இரண்டு மாதங்களிலேயே மூன்று முறை மேடத்தை சந்தித்து பேச வந்துவிட்டேன். ஆனால் எதுவும் நான் நினைத்தது போல அமையவில்லை. என் உறுதி மேடத்தின் பேச்சில் குலைந்து விடுகின்றது. எதுவும் சொல்லாமல் பழைய பண்ணையடிமையாகவே திரும்பிச் செல்கிறேன். இன்றும் அப்படி நடக்கக் கூடாது என நினைத்துக்கொண்டேன்.

இங்கு வருவது இது கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. ‘சீக்கிரம் கிளம்ப வேண்டும்’ என்ற எண்ணம் வந்ததுமே மேடம் என்ன சொல்வாரோ என்ற சந்தேகமும் எழுந்து என்னை பதற்றமடையச் செய்தது. ரொம்லா கூறிய நம்பிக்கையான வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன். பண்ணையில் வேலை முடிந்து ரொம்லா காத்திருப்பாள். இன்று எனக்கும் அவளுக்கும் மகிழ்ச்சியான நாளாக மாறவேண்டும். ஓர் அடிமைக்கு, விடுதலை கிடைக்கும் நாளைவிட மகத்தானதாக வேறு எது இருக்க முடியும்.

ஆர்கிட் செடிகள் காண்டா கழிகளில் தொங்கிக்கொண்டிருந்தன. ஊதா, வெள்ளை, குங்குமம், அடர் மஞ்சள் என பல நிறங்கள். செங்கல்துண்டுகளும், கரிக்கட்டைகளும் நிரப்பிய சிறிய மண் சாடிகளில் அவை செழித்துக்கிடந்தன. அவற்றின் நுனி வேர்கள் சாடியின் சின்ன துவாரங்களில் நீட்டிக் கொண்டு தெரிந்தன. மேடம் இந்த புதிய பங்களாவுக்கு குடிவந்த பிறகு உருவான தோட்டம் இது. இப்போது அந்த ஆர்கிட் தோட்டத்தில் உள்ள பிரம்பு நாற்காலியில்தான் அவர் சாய்ந்திருப்பார் என்பது என் யூகம்.

நான் என் பழைய ஜாவா கைலியை இறுக கட்டிக் கொண்டேன். சட்டை இல்லாத என் உடலில் வியர்வையின் பிசுபிசுப்பு இருந்தது.  கணுக்காலுக்கு மேலே கோணலாக இருந்த கைலி மடிப்பில் கை வைத்து பணம் இருக்கிறதா என மீண்டும் ஒரு முறை சோதித்துக் கொண்டேன். வெற்றிலை போல சுருட்டி வைத்த ஐம்பது டாலர் நோட்டு பத்திரமாக இருந்தது.  

நான் ஆர்கிட் தோட்டத்துக்குள் சென்றபோது மேடம் அங்கு இல்லை. பளிங்கு வட்ட மேசையின் மேல்  நீள்சதுர வடிவில் மது பாட்டில் ஒன்றும் கிலாஸ் ஒன்றும் ஜோடியாக இருந்தன. பக்கதில் இருந்த ஏஷ் ட்ரேயில் இருந்து மெல்லிய புகை வந்துகொண்டிருந்தது. வியப்பாக இருந்தது. இது மேடம் மது அருந்தும் நேரம் அல்ல. இன்று ஏனோ சீக்கிரமாக ஆரம்பித்திருக்கிறார். 

மீன் பொரியலின் வாசம் வந்தது. செங் போய் மாலை நேர சமையல் வேலையை ஆரம்பித்திருக்கக்கூடும். நிச்சயமாக அது விராலாக இருக்க வேண்டும். அதன் வாசம் தனித்துவமானது.

வேலிச்செடிகளுக்கு அப்பால் குதிரை வண்டி ஒன்று குலுங்கி குலுங்கி செல்வதைப் பார்க்க முடிந்தது. வாசலில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அது ரோஜரின் குரல். அதன் குரல் எனக்கு பரிச்சயம். சீசர் அப்படி கணீர் என்று குரைக்காது. அது வழக்கம் போல பழுப்பு நிற கண்களை அரை செருகலில் வைத்துக் கொண்டு தன் பெருத்த உடலை எங்காவது சாய்த்து படுத்துக் கிடக்கும். 

நான் சற்று நேரம் தயங்கி நின்றேன். உள்ளே பேச்சுக் குரல் கேட்டது. மேடம்தான் யாருடனோ பேசினார். சொற்கள் உரத்து கேட்டன. குரலில் கடுமை இருந்தது. 

“எனக்கு விருப்பம் இல்லை”

“ சரி… நான் இனி இங்கு வர மாட்டேன்”

அது லனூனுடைய குரல்… மேடத்தின் கடைசி மகன்.  

“அது உன் விருப்பம்” மேடம் குரலை உயர்த்திச் சொல்லிவிட்டு வருவது தெரிந்தது. என் கால்கள் தன்னியல்பாக பின்வாங்குவதை இழுத்துப்பிடித்து நிறுத்தினேன்.

மேடம் ஆர்கிட் தோட்டத்துக்கும் பின் வராந்தாவுக்கும் இடையில் உள்ள நிலைப்படியில் வந்து நின்றார். அவர் முகம் சிவந்திருந்தது. சின்ன கூரிய மூக்கு புடைத்து அடங்குவது தெரிந்தது. மேடத்தின் மனநிலையை நான் உணர்ந்தேன்.  

வேலியின் ஓரத்தில் இருந்த மாதுளைச் செடியின் பக்கத்தில் நின்று கொண்டேன். மேடம் பூச்செடிகளில்தான் அதிக கவனம் செலுத்துவார். இது ஏலோய் நட்டதாக இருக்கலாம். நான் என் வளர்ந்த உடலை கொஞ்சமாக வளைத்துக் கொண்டு நின்றேன். தோளில் தொங்கிய மெல்லிய துண்டை எடுத்து உடலை மூடிக் கொண்டேன். கைகள் இயல்பாக மார்பில் பிண்ணிக் கொண்டன.  

மேடம் என்னைக் கண்டு கொண்டார். 

“ஓ ஜோன்… எப்போது வந்தாய்….!” 

“இப்போதுதான் மேடம்” தடித்த ஆங்கிலத்தில் சுருக்கமாக சொன்னேன்.

மேடம் பிரம்பு நாற்காலியில் கைகளை ஊன்றி அமர்ந்தார். பின் அப்படியே சாய்ந்து கொண்டார். அவரது தடித்த சரீரத்தை பிரம்பு வளைந்து தாங்கிக் கொண்டது.

“இன்று காலையிலேயே முட்டி வலி ஆரம்பமாகிவிட்டது….” என்று சலிப்பாக கூறியபடி கால் மூட்டில் கைவைத்து அழுத்திக் கொண்டார். அவர் முகம் கூடுதலாக சிவந்தது. கண்களை மூடிக் கொண்டார்.

இன்றும் அவர் அழகிய சாரோங் அணிந்திருந்தார். பெரணி இலை வடிவ ஓவியங்கள் அந்த கைலியில் நிரம்பியிருந்தன. அவரது வெள்ளை கெபாயா சட்டையை பல வண்ண பின்னல் பூக்கள் அலங்கரித்தன. கைகளில் தங்கக் காப்புகள் முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தன. நரைத்த தன் நீண்ட கூந்தலை அள்ளி உச்சியில் கொண்டை போட்டிருந்தார். ஒரு சிறிய பிரமனை அளவு அது வட்டமாக இருந்தது. அந்த நரைத்த கொண்டையை வேலைப்பாடுகள் உள்ள ஒரு நீண்ட வெள்ளிக் கொண்டை ஊசி இடம் வலமாக துளைத்துச் சென்று துருத்திக் கொண்டு தெரிந்தது.

மெல்ல கண் திறந்தவர் என்னிடம் எதுவும் பேசாமல் தகரப்பெட்டியில் தயாராக இருந்த புகையிலை சுருட்டை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்தார். சுருட்டு முனையில் நெருப்பு மெல்ல மெல்ல கனன்று அவர் வாயில் புகையாக வந்தது. அந்த சுருட்டின் மனம் எனக்கு மிகவும் பிடிக்கும். சாதிக்காயின் கூரிய மணம் அதில் இருக்கும். நானும் ரொம்லாவும் புகைக்கும் மலிவான சுருட்டின் மனம் இவ்வளவு இதமாக இருப்பதில்லை. புகை தொண்டைக்குப் போனதும் இரண்டு முறை காரித் துப்பிவிட்டுதான் மேலே புகைக்கை முடிகின்றது.  

நான் “மேடம்….” என்றேன்.

அவர் என்னை ஏறிட்டு பார்த்தார். பின் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார். கண்கள் சிவந்திருந்தன. காலையில் இட்ட புருவ மை களையாமல் இருந்தது. அவரின் மஞ்சள் நிறம் படர்ந்த முகத்துக்கு அது எடுப்பாக இருந்தது.  

நான் மறுபடியும் “மேடம்….” என்றேன்

“ஜோன்… உனக்கு வில்லித்தை ஞாபகம் இருக்கிறதா?” என்றார்.

எனக்குத் திடுக்கிட்டது… மேடம் ஏன் இந்த நேரத்தில் என்னிடம் இந்த கேள்வியைக் கேட்கிறார் என்று புரியவில்லை.

“ஓரளவு இருக்கிறது மேடம்… சுட்டிப் பையனாக இருந்தார்” நான் வில்லியம் லைட் என்கிற சிறுவனின் முகத்தை கடந்த காலத்தில் இருந்து இழுத்துவர முயன்றேன். மங்கலாக ஒரு முகம் தெரிந்தது. அது யாருடைய முகம் என்பது எனக்கே குழப்பமாக இருந்தது.

ஒரு முறை வில்லியத்தின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது ஞாபகம் இருக்கிறது. பழைய அத்தாப்பு வீட்டை விளக்குகளால் அலங்கரித்தோம். பெரிய மனிதர்கள் பலர் வந்திருந்தனர். நானும் மற்ற வேலைக்காரர்களும் வெகு நேரம் வேலை செய்து விருந்தினர்களை உபசரித்தோம். இரவில் எங்களுக்கும் மாட்டிறைச்சியும் சாராயமும் கிடைத்தன.     

“நான் அவனைப் பார்த்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கிறான். இப்போது கடிதம் எழுதுவதும் குறைந்துவிட்டது. மேடத்தின் முகச்சுருக்கம் திடீர் என்று கூடி விட்டது போல் தெரிந்தது.

“அவர் இப்போது பெரிய மனிதர் ஆகிவிட்டாராம் மேடம்…. பெரிய துரையின் பெயரைக் காப்பாற்றி விட்டார். அப்பாவைப் போலவே கடல்கடந்து சென்று புதிய நகரை உருவாக்கிவிட்டார். பண்ணையில் விக்டர் சொன்னான்” 

“ஆமாம் எல்லாரையும் போல அவனும் பெரிய மனிதன் ஆகிவிட்டான்.  பெற்றவளை விட்டு தூர தேசம் போகிற பெரிய மனிதன்”.  அவர் குரல் கம்மியது.

மேடம் எதுவும் பேசாமல் இருந்த இடைவெளியில் நான் பேச வாயெடுத்தேன். 

“மேடம்…”

“நீ இங்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ஜோன்?” அவரே முந்திக் கொண்டார். என் பேச்சு மீண்டும் தடை பட்டது. எனக்கு அச்சம் கூடியது. மேடம் தெரிந்தே என் பேச்சை தடை செய்வதுபோல் இருந்தது. சற்று தயங்கி பதில் சொன்னேன்.

“முப்பது வருடங்கள் இருக்கும் மேடம்… எனக்கு அப்போது பதினைந்து வயது.” 

“ம்ம்… முப்பது வருடங்கள் எவ்வளவு வேகமாக கடந்து விட்டன”. புகை வளையங்கள் அவர் முகத்தை மறைத்தன. 

“ஆமாம்… நீண்ட காலம்தான். நான் என் அப்பாவுடன் வந்தேன்.” 

“ என்ன சொன்னாய்?…நீ வந்தாயா? கொண்டுவரப்பட்டாய் என்று சொல்.” மேடம் விஸ்கி கோப்பையை நிரப்பிக் கொண்டே சொன்னார். அவர் குரலில் நகைப்பு இருந்தது. விஸ்கியில் நீரைக் கலந்தபோது மெல்லிய நெடி மூக்கை தீண்டியது. 

அவர் சொல்வது எனக்குப் புரிந்தது. மேடத்தின் நகைப்பின் அர்த்தம் பெரியது. அது நான் மறைக்க முடியாத பழைய கதை. என் பிள்ளைகளின் பிள்ளைகளும் அந்தக் கதையைப் பேசக்கூடும். நான் சொல்லாவிட்டாலும் யாராவது அவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள். ஆனாலும் உள்ளூர கிளர்ந்த எரிச்சல் தனிய சில நொடிகள் ஆனது. 

ஆமாம்… நாங்கள் கொண்டுவரப்பட்டோம் என்பதே உண்மை. அதைவிட சரியாக சொல்வதென்றால் நாங்கள் விற்கப்பட்டோம். துறைமுகத்தில் அரபிய மனித சந்தை வியாபாரிகளால் ஆங்கிலேயர்களிடம் கூட்டமாக விற்கப்பட்ட காஃப்ரிகள் நாங்கள். எனக்கு இப்போது எல்லாம் கனவுபோல் இருக்கிறது.

மடகாஸ்கர் என்கிற எங்கள் நாட்டிலிருந்து நாங்கள் இருநூற்று ஐம்பது பேர் கப்பலில் ஏற்றப்பட்டோம்.  என் கிராமத்தில் மொத்தமாக எழுபத்தைந்து குடும்பங்களை அவர்கள் வியாபாரம் செய்தார்கள். எங்கள் தலைவரை அவர்கள் கொன்றுவிட்டார்கள். எங்கள் தெய்வங்களையும் அவர்கள் எரித்துவிட்டார்கள். நாங்கள் கைதிகளானோம். நாங்கள் ஒரு கப்பலின் அடி தளத்தில் அடைபட்டுக் கிடந்தோம். சங்கிலி பூட்டிய கால்களுடன் பெரியவர்கள் குந்தியிருந்தனர். சிறுவர்களுக்குக்  காலில் சங்கிலி இல்லாததால் நானும் மற்ற சிறுவர்களும் கப்பலில் இருந்த சின்ன திறப்புகளின் வழி மோதிச் சிதறும் அலைகளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் பெயர் மூகத். அவ்வளவு அகண்ட நீர்பரப்பை நான் கதைகளில் மட்டுமே கேட்டுள்ளேன். ஆபி சொன்ன பல கதைகளில் கடல் உண்டு. அது வேறு ஒரு உலகம் என்று ஆபி சொல்வாள். கடல் அரசன் சக்தி வாய்ந்தவன். அவன் நினைத்தால் பூமியை உள்ளே இழுத்துக் கொள்வான் என்று ஆபி சொல்வாள். நாங்கள் அந்த வேறு உலகத்துக்குப் போய்கொண்டிருப்பதாக அப்போது நினைத்துக் கொண்டோம்.  

ரொட்டியும் காப்பியும் கொடுத்தார்கள். சோளக் கஞ்சி நாங்களே சமைத்துக் கொண்டோம். கப்பல் பல துறைமுகங்களில் நின்றபோது எங்களில் பலர் பிரித்துக் கொண்டுசெல்லப்பட்டனர். என் அண்ணனும் அக்காளும் அப்படி எங்கோ கொண்டு செல்லப்பட்டனர். தடுக்க முயன்ற தந்தையை ஒரு சிப்பாய் பிரம்பால் அடித்தான். சில நாட்களில் நாங்கள் பயணம் செய்த கப்பல் இந்த தீவில் வந்து நின்றது. இது வேறு உலகம்தான். இங்கே பல வகை மக்களைப் பார்த்தோம். எங்களைப் போன்றே பாத்தா இன மக்களும் குழுவாக பக்கத்து நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தனர். கூலித் தொழிலாளிகள் பலர் படகுகளிலும் கப்பல்களிலும் வந்துகொண்டே இருந்தனர். எங்களுக்கு புது பெயர் வழங்கப்பட்டது. காட்டை அழித்து வீடுகளும் சாலையும் அமைக்கும் வேலைகளை இரவு பகலாக செய்தோம். கிணறு வெட்டும் போது பாறை இடிந்து அப்பா செத்துப் போனார். எங்களுக்கான குடிசைகளை நாங்களே கட்டிக் கொண்டோம். அது அடிக்கடி இடம் மாறிக் கொண்டிருந்தது. 

“ஜோன், உன்னை ஏன் இங்கு கொண்டுவந்தார்கள் என்று உனக்கு தெரியும்தானே”

மேடத்தின் குரல் என்னை துணுக்குறச் செய்தது.  

“தெரியும் மேடம். இந்த தீவை மாநகரமாக மாற்றும் பெரிய துரையின் கனவை நிறைவேற்ற…” 

“அது மட்டும்தானா?”

“உங்கள் பண்ணையில் வேலை செய்வதும்…”

“பெரிய துரையின் கனவை நிறைவேற்றி விட்டாயா?”

“இப்போது இது உலகம் அறிந்த ஒரு தீவு இல்லையா மேடம்?”  

“ஆமாம், பிரின்ஸ் ஓஃப் வெல்ஸ் உலகம் அறிந்த தீவுதான். ஆனால், ஒருவரின் கனவை நிறைவேற்ற இன்னொருவர் உழைக்க வேண்டியுள்ளது அல்லவா?” 

அவர் சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை. ஆனாலும்

“உழைப்பு பழகிப் போய் விட்டது. உழைக்காமல் எப்படி வாழமுடியும் மேடம்?” என்றேன் 

“உண்மைதான். உழைக்காமல் வாழமுடியாதுதான் . ஆனால் நீ திருடியிருக்கிறாயா ஜோன்?” 

மேடம் மிக இயல்பாக அப்படி கேட்டாலும் எனக்கு தூக்கிவாரி போட்டது. அவர் என் மேல் ஏதோ குற்றச்சாட்டை வைப்பது போல பதறிப்போனேன். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று கலவரமானேன். ஐம்பது டாலரைத் தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.

“இல்லை மேடம்… நான் அப்படி செய்தது இல்லை. அது பெரிய தவறு”

“நீ மிகவும் சின்ன மனிதன் ஜோன்… பிறர் சொத்துகளை சாமர்த்தியமாக அபகரித்துக் கொள்ள பெரியமனிதர்களால்தான் முடியும். உன்னால் முடியாது” 

நான் சற்று ஆசுவாசம் ஆனேன். அவரது சொற்களில் மறைந்துள்ள அனுபவ வேதனையை நான் உணர்ந்து கொண்டதால் தலைகுனிந்து அமைதியாக இருந்தேன்.  

முன்பு நான் பெரிய துரையின் மிளகு தோட்டத்தில் வேலை செய்தேன். அதன் மத்தியில்தான் பெரியதுரையின் அத்தாப்பு வீடும் இருந்தது. ஐந்து பிள்ளைகளுடன் மேடமும் அங்குதான் வாழ்ந்தார். துரை மேடத்தின் மேல் மிகுந்த காதல் கொண்டிருந்தார். காதலிக்க ஏற்ற நளினமான பெண்தானே அவர்.

என்னைப் போன்றே பலரும் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டோம். நாங்கள் பல ஆங்கில முதாலாளிகளின் பண்ணை அடிமைகளாக இருந்தோம். லவங்கை, கிராம்பு, ஜாதிக்காய் மரங்களை நாங்கள் பயிர் செய்தோம். காடுகளையும் புதர்களையும் சதுப்பு நிலங்களையும் விவசாய நிலங்களாக மாற்றினோம். ஆடு மாடு கோழிகளை வளர்த்தோம். எஜமானர்களை பல்லக்கில் சுமந்துகொண்டு காடுகளுக்குப் போனோம்.  உள்ளூர் ஜாவாக்காரர்களின் மூலம் நெல் பயிரிடப்பட்டது. பல இடங்களில் இருந்தும் வந்த  கூலித் தொழிலாளர்கள் கோட்டையை எழுப்பினர். சாலைகளையும்  தேவாலயங்களையும் அமைத்தனர். 

காலரா, மலேரியா, இன்னும் பல பெயர் தெரியாத நோய்களால் பல தொழிலாளர்களும் அதிகாரிகளும் செத்தனர். நாங்கள் கட்டாயமாக குய்னா மருந்தை விழுங்கினோம். 

இந்த தீவு நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பல மாற்றங்களை அடைந்தது. துறைமுகத்தில் சின்ன சின்ன நாட்டுப் படகுகளைப் போலவே பெரிய சரக்கு கப்பல்களும் தினமும் வந்து போயின. சாக்கு மூட்டைகளிலும் இரும்பு பெட்டிகளிலும் பொருட்கள் வந்து குவிந்தன. வெள்ளை துரைகளின் பங்களாக்களும் சீன தெளக்கேகளின் குடியிருப்புகளும், இந்திய வியாபாரிகளின் கடைவீடுகளும் கட்டப்பட்டுக் கொண்டே இருந்தன. சாலையில் குதிரை வண்டிகளின் எண்ணிக்கை அதிகமானது. 

நாங்கள் ஞாயிற்றுக் கிழமை காலையில் கூட்டமாக திருச்சபைக்குப் போவோம். பண்ணை அடிமைகளுக்காக தனியாக பிரார்தனைக் கூட்டம் நடைபெறும். பிறகு கடைத்தெரு வழியாக நடந்து வருவது எங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு. கடைத்தெருவில் எப்போதும் கூட்டமும் பரபரப்பும் இருக்கும். சாலை ஓரம் பல ஊர்களில் இருந்தும் வந்த வியாபாரிகள் கடைவிரித்திருப்பார்கள். இந்த தீவே ஒரு பெரிய சந்தைபோல் ஆகிக் கொண்டிருந்தது. 

ஆனால் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில் பெரிய துரைக்கு காய்ச்சல் வந்தது. அவர் மலேரியா காய்ச்சலால் படுத்த படுக்கையானார். அவருக்கு பல பெரிய மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் காப்பாற்ற முடியாமல் போனது. இப்போது ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.  

எங்கிருந்தோ பறந்து வந்த காகம் சாலை ஓர மருத மரக்கிளையில் அமர்ந்து கரைந்தது. நான் நினைவு களைந்து மேடத்தைப் பார்த்தேன்.

மேடம் விஸ்கி கோப்பையைப் ஆழ்ந்து பார்த்தவாறு சிந்தனையில் மூழ்கி இருந்தார். எனக்கு இடைமறிக்க துணிச்சல் எழவில்லை. இப்படி மணிக்கணக்கில் நிற்பதும் ஒன்றும் எனக்குப் புதிதில்லை. ஆனால் இன்று ரொம்லா காத்திருக்கிறாள். எத்தனை இடைஞ்சல்கள் வந்தபோதும் இந்த ஐம்பது டாலரின் எண்ணிக்கைக் குறையாமல் பாதுகாத்தது அவள்தான். ஒரு பெட்டை முட்டையைக் காப்பதுபோல. 

மேடம் மிகவும் கனிவானவர். பண்ணையாள்களிடமும் வேலைக்காரர்களிடமும் அன்புடன் பழகுபவர். ஆனால் சில நேரங்களில் அவரது கோபம் மிக பயங்கரமாக வெளிப்படும். கடந்த சில ஆண்டுகளில் அவர் முற்றிலும் மாறிவிட்டதாகவே தெரிந்தது. எல்லாரிடமும் எரிந்து விழுகிறார். அவரிடம் பேசவே எல்லாரும் அஞ்சுகின்றனர்.  

செங் போ நிலையில் வந்து நின்றாள். சாப்பாடு தயாராகிவிட்டது என்று சயாம் மொழியில் சொன்னாள். பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று மேடம் கூறியதும் அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.  

அந்த அமைதி எனக்கு மிகப்பெரிய சுமையாக ஆகிக் கொண்டிருந்தது. நான் அங்கு இருப்பதை மேடம் மறந்து விட்டதுபோல் இருந்தது. எனக்கு சற்று படபடப்பாக இருந்தது. வந்த நோக்கத்தை சட்டென்று கூறி விடைபெற மனம் துடித்தது.

“உனக்கு பெரிய துரை இறந்த நாள் நினைவிருக்கிறதா ஜோன்?”  

“இல்லை மேடம்” என்றேன். சட்டென அப்படி சொல்லியிருக்கக் கூடாதோ என்றுத்தோன்றியது.

“அதற்கு முதல் நாள் அக்டோபர் 20……”  

……..

“நிச்சயம் ஞாபகம் இருக்கும். உனக்கும் உன் நண்பர்களுக்கும் அது மகிழ்ச்சியான நாள்தான்… உங்கள் விடுதலைக்கான வழி பிறந்த நாள் இல்லையா?” என்றார்.  குரலில் ஏளனம் இருந்தது.

எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அவர் மனம் கொதிப்பதை நான் எப்படி தடுக்க முடியும்.? அமைதியாக நின்றேன். அவர் அந்த தேதியில் எழுதப்பட்ட முக்கியமான உயில் பற்றி பேசுகிறார் என்று எனக்குப் புரிந்தது. 

“நீ இப்போது இங்கு வந்திருப்பதும் அதற்குத்தானே..?” 

“மேடம்….”

“எனக்குத் தெரியும் ஜோன்”

எனக்கு நாக்கு ஒட்டிக் கொண்டது போல் இருந்தது. சொற்கள் வரவில்லை.

“நான் முடியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வாய்?” மேடம் பெரிதாக சிரித்து விட்டு கோப்பையை மீண்டும் நிறைத்தார்.

நான் சிலைபோல நின்றேன். 

“பயப்படாதே ஜோன்… இப்போது எல்லாரும் என்னை விட்டு போகின்ற காலம் இல்லையா? என்னிடம் இப்போது சொத்துகள் இல்லை.  செளஃபால்க் பண்ணை இனி என்னுடையது இல்லை. நீதிமன்றம் முடிவு செய்து விட்டது. ஜேம்ஸ் எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டார். நான் அவரின் உற்ற நண்பனின் துணைவி என்பதையும் அவர் மறந்துவிட்டார். இல்லை அவரின் பேராசை மறைத்து விட்டது. நான் தோல்வியடைந்து விட்டேன். எல்லாரும் விலகிச்செல்ல பல ஞாயங்கள் உள்ளன. உனக்கும் ஒரு ஞாயம் இருக்கும் அல்லவா? சற்று முன் லனூன் வந்தான்…அவனும் அதைத்தான் சொல்லிவிட்டுப் போகின்றான். உனக்கும் கேட்டிருக்குமே..?” அவர் குரலில் கரகரப்பு கூடியிருந்தது. அழுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. 

நான் பேச்சை மாற்ற நினைத்தேன். 

“ரொம்லா உங்களிடம் அன்பைச் சொல்லச் சொன்னாள் மேடம். அவள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்”

“ஓ நல்லது. பெரியவனுக்கு என்ன வயதாகிறது?

“பத்து வயதாகிவிட்டது”

“எருமைமாடுகளிடம் அவளை போக விடாதே. நீயே பார்த்துக் கொள்… நீ அவளை முறைப்படி திருமணம் செய்து கொண்டாய் தானே”

“ஆமாம் மேடம். போன வருடம் திருச்சபை போதகர்தான் எங்கள் திருமணத்தை நடத்திவைத்தார்”.

மேடம் கிலாஸை காலி செய்திருந்தார். என்னை நேராக பார்த்தார். கண்கள் மாலை சூரியனைப் போல சிவந்திருந்தன.

“ஒரு கத்தோலிக்கனின் வாழ்வில் திருமணம் எவ்வளவு முக்கியமானது. அது ஒரு சிறப்பு அங்கீகாரம்.  எல்லாருக்கும் அந்த அங்கீகாரம் வேண்டும். உனக்கு மட்டும் அல்ல எனக்கும்தான்.”

அவர் மீண்டும் மீண்டும் தன் மனசுழற்சிக்குள் ஆழ்ந்து போகிறார் என்பது புரிந்தது. என்னால் வேறு பேச்சுகளில் அவரை கொண்டுபோக முடியவில்லை. 

“நான் லைட்டுடன் இருபத்து இரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அவருக்கு என்னை பூக்கேட்டில் இருந்த போதே தெரியும். என் குடும்ப பின்னணியும் என் உடலில் ஓடுவது போர்த்துகீசிய-மலாய் கலப்பு ரத்தம் என்பதும் அவருக்குத் தெரியும். என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்த பெரியவர்களுக்கும்  தெரியும். அவரின் ஐந்து பிள்ளைகளை பெற்றுக்கொண்டேன். ஆனால் என்னை தன் மனைவி என்று அவரால்  உலகத்துக்குச்  சொல்ல முடியவில்லை.  அவர் திருச்சபைக்கு பயந்தார். மேல் அதிகாரிகளுக்கு பயந்தார். ஆமாம்… ஒரு புதிய தேசத்தை உருவாக்க துணிந்து கடல்தாண்டி வந்த ஃபிரன்சிஸ் லைட் இந்த சமூகத்துக்கு பயந்தார். கலப்பு ரத்தம் ஓடும் ஒரு கத்தோலிக்க பெண்ணான என்னை அவரின் மேல்தட்டு சமூகம் அங்கீகரிக்கவில்லை. அந்த உயிலில் இருக்கும் ‘என்னுடன் இணைந்து வாழ்ந்த மார்தினா ரோஸேல்’ என்ற அந்த சொற்கள் என்னை அவமானப்படுத்துகின்றன. என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுவிட்டது”. அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  

நானும் அந்த செய்திகளை அறிந்து வைத்திருந்தேன். அவை பழைய செய்திகளாகி விட்டன.  பண்ணையில் நாங்கள் கிசுகிசுத்துக் கொள்ளும் கதைகளில் அது முக்கியமானது. மச்சுவீட்டுக் கதை. வதந்தி போல் பரவி வந்தது. லைட் துரை இறந்து போகும் முன் எழுதிவைத்த  உயிலில் கூட  மேடத்தை தன் மனைவி என்று குறிப்பிடாமல் சேர்ந்து வாழ்ந்தவள் என்று குறிப்பிட்டது எங்கள் எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  அதே உயிலில் பண்ணை அடிமைகளான எங்களுக்கான விடுதலைக்கு வழியும் இருந்தது. நாங்கள் மேடத்துடன் இருந்து சேவகம் செய்யலாம்,  அல்லது  ஐம்பது டாலரை இழப்பீடாக கட்டி எங்களை விடுவித்துக் கொள்ளலாம்.  

இந்த தகவல்கள் எங்களுக்கு எப்படியோ வந்து சேர்ந்தபோது நாங்கள் பலவகையிலும் பணம் திரட்ட தொடங்கினோம். பலர் சீன தௌக்கேகளிடம் ஏவல் வேலை செய்தனர். துறைமுகத்தில் மூட்டை சுமந்தனர்.  கப்பல்களை சுத்தம் செய்தனர். பணம் சேர்ந்ததும் அதை கட்டிவிட்டு தங்கள் அடிமை சங்கிலியை தாங்களே அறுத்துக் கொண்டனர்.  நான் மேடத்திடம் தொடர்ந்து வேலை செய்தேன். ஆனால் இப்போது பல மாற்றங்கள் நடந்து முடிந்துவிட்டன. அதோடு நான் ஐம்பது டாலர் சேர்த்துவிட்டேன்.

“உன் நாட்டுக்குத் திரும்ப போய் விடப்போகிறாயா?” மேடம் நிதானமாகி இருந்தார்.

“இல்லை மேடம்… ரொம்லா சம்மதிக்க மாட்டாள். அவள் ஜாவாக்காரியாயிற்றே”

அப்படி என்றால் நீ ஏன் ஜாவாவுக்கு போய் விடக் கூடாது?

“இங்கேயே பழகிவிட்டது…வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம்…”

“எனக்கு சியாமுக்கு போய் விட ஆசை இருக்கிறது… ஆனால் அது நடக்காது”

நான் மேடம் போதையில் உளறுகிறாரோ என்று திகைத்து நின்றேன்.

“ஜோன் இந்த தீவு இன்று உலகம் அறிந்த தீவாக மாறியிருக்கிறது என்று சொன்னாயல்லவா?”

“ஆமாம் மேடம்” 

“அது உண்மையா?”

………

“பொய் சொல்கிறாய்… அப்படி என்றால் ஜோனை எல்லாருக்கும் தெரியுமா?”

“இல்லை மேடம்”

“மார்தினா ரோஸேலை….?” 

……..

“அடிமையை யாருக்கும் தெரியாது ஜோன்”

நான் மேடத்தைப் பார்த்தேன். அவர் தன் கண்களை மூடிக் கொண்டு பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்தார். வலதுகை கால் முட்டியை இறுகப் பற்றியிருந்தது. அவருக்கு என் பதில் தேவையில்லை என்பது புரிந்தது. வெளியில் மங்கும் ஒளியால் நான் வந்து நெடுநேரமாகிவிட்டதை உணர்ந்தபோது படபடப்பு கூடியது. 

நான் கைலி மடிப்பில் சுருட்டி வைத்திருந்த ஐம்பது டாலரை எடுத்து அந்த பளிங்கு மேசையில் வைத்தேன்.  அது காற்றில் பறக்காமல் இருக்க சிகரெட் டப்பியை அதன் மேல் ஓசை எழுப்பாமல் வைத்தேன்.  மேடம் கண்களை இறுக மூடியே இருந்தார். நான் மூங்கில் வேலி கதவை மெல்ல திறந்து கொண்டு வெளியேறினேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...