சிவப்பு நிற பிளவுசும் அதே நிறத்தில் ஸ்கார்ட்டும் அணிந்திருந்த அந்தச் சீனப்பெண்ணைச் சற்று முன்புதான் காண்டினில் பார்த்தேன். அந்த மருத்துவமனையில் அவளது உடையின் வண்ணம் பொருந்தாமல் துருத்தி நின்றது. புத்தகம் ஒன்றைப் படித்தபடி பசியாறிக்கொண்டிருந்தாள். இறுக்கமான பிளவுசில் அவள் முலைகள் பருத்து, மதர்த்து நிற்கும் தோற்றத்தை தந்தன. பிளவுசின் முதல் பொத்தான் திறந்துக் கிடந்தது. வேண்டுமென்றே அப்படி திறந்துவிட்டிருக்கிறாளோ என்று தோன்றியது. அதைப் பார்க்க எனக்கு மிகவும் அருவெருப்பாய் இருந்தது. அதுவே எனக்கு பெரும் அசூயை உணர்வை ஏற்படுத்தியது.
உண்மையில் அவளைப் பார்த்தபிறகு எனக்கு எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. ஒரே பதற்றமாகவும் பயமாகவுமே இருந்தது. வெண்ணீர் போதுமென்று சொல்லிவிட்டேன். சிவப்பு வண்ணத்தில் அப்படி என்ன இருக்கிறது என எனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டேன். அது ஏதோ அபாய குறியீடாக எனக்குத் தோன்றியது. அவர், ‘நாசி லெமாவும்’, ‘நெஸ்காப்பி தாரேவும்’ ஆர்டர் செய்துக்கொண்டார். ருசியாக இருக்கிறதென்று அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வெறுப்புடன் காண்டினை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் சீனப்பெண் இருப்பு ஓர் உறுத்தலாகவே இருந்தது. அவள் உடையில் இருந்த சிவப்பு எங்கும் படர்ந்து அவ்விடமே சிவப்பாகி விட்டதாக பிரம்மை தட்டியது.
கொஞ்ச நேரம் கண்களை மூடி திறந்தேன். ஒன்றாக இணைத்த இரண்டு மேசைகளைச் சுற்றி அமர்ந்து நீல சீருடை தரித்த தாதியர் மூவரும், கழுத்தில் ஸ்தெதஸ்கோப் தொங்கிய இளம் டாக்டர்கள் இருவரும் உற்சாகமாகப் பேசி பசியாறிக் கொண்டிருந்தனர். மற்ற மேஜைகளில் உட்கார்ந்திருந்த யாருடைய முகங்களிலும் காலை நேரத்திற்குரிய மலர்ச்சியில்லை. என்னிடமிருந்த இறுக்கத்தையே அவர்களின் முகங்களிலும் கண்டேன். சிலர், மேசையில் இருந்த காப்பியை மறந்து எங்கோ அலைந்துக்கொண்டிருந்தனர். சிலர், பெரிய பழுப்பு நிற காகித உறையை கட்கத்தில் வைத்துக்கொண்டு எங்கோ வெரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் நினைவெல்லாம் உள்ளேயிருந்த எக்ஸ் ரேயின் நிறம் படிந்து கிடக்குமோ என நினைத்துக் கொண்டேன். நான் எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவள் ஒவ்வொரு மேசையாக வந்து எல்லாரிடமும் இயல்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் எங்கள் மேசைக்கும் வரக்கூடும். அவளிடம் இருந்து தப்பிக்க வேகமாக காண்டினை விட்டு வெளியேறினேன். நேராக மூன்றாவது மாடிக்குச் சென்றேன். அந்தத் தளத்தில்தான் நான் பரிசோதனை முடிவை பெற வேண்டிய பகுதி இருந்தது. கழிவறைக்குச் சென்று ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட அறையைத் தேடி நுழைந்தபோது அவள் அங்கிருந்த ஒரு தாதியிடம் பேசிக்கொண்டிருந்தாள். மூன்றாவது மாடிக்கு பறந்து வந்திருப்பாளோ.
***
சம்பளம் போட்ட வாரத்தின் மாலைகளில் போதையில் வீடு திரும்பும்போது அவருக்கு இளமை மீள்வதுண்டு. மூன்று வயதான பேத்தி தூங்கிக்கொண்டிருந்தபோதும் அவரது கை முதலில் என் மார்பைத்தான் துழாவியது. பழைய நினைவின் தீவிரத்துடன் ஸ்பரிசித்தபோது, ‘சுளீர்..’ என்று ஒரு வலி.
“ஸ்… வலிக்குதுய்யா…” என்று அவரின் முகத்தை தள்ளி விட்டேன். சட்டென உணர்ச்சிகள் வடிந்த உடல், வலியின் அதிர்வலையில் துடித்துக்கொண்டிருந்தது. அவர் எரிச்சலடைந்து திரும்பி படுத்தார். அவர் நினைவுகளில் தகித்த உடலல்ல இது என தெரிந்திருக்க வேண்டும். ‘சுளீர்’ என்று வலித்த பகுதியை அடிக்கடி தடவிப் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்திலெல்லாம் அவரது குறட்டை சத்தம் கேட்டது.
காலையில், குளித்துவிட்டு உடைகள் மாற்றிக்கொள்ள அறைக்குள் போனேன். அவர் படுக்கையில் அமர்ந்து, கைப்பேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்..
“ஏய்யா, கொஞ்சம் இங்க வாங்களேன்” என்று நான்தான் கதவிற்கு பின்னால் நின்று, எட்டிப் பார்த்துக் கூப்பிட்டேன்.
எனது குரலா அது? கம்மி, உடைந்த குரலை செருமி மீட்டுக் கொள்ள முயன்றேன். கலவரத்தில் கண்கள் விரிந்து இமைகள் சிமிட்ட மறந்தன.
“என்னடி..” என்று என்னிடம் வந்தார். நேற்றிருந்த எரிச்சல் முகத்தில் இல்லை. நான், இடுப்பிற்குமேல் அம்மணமாக என் முலைகளைபோல் வற்றிக் கிடந்தேன். உடனே அவரது வலது கரத்தின் ஆட்காட்டி மற்றும் நடு விரல்களை, எனது இடது முலையைச் சுற்றி அழுத்தித் தேய்த்து, “ஏதோ கட்டி இருக்கிற மாரி அருவுதா?..” என்று கேட்டேன். அவர் நெற்றியின் சுருக்கம் நான் கேட்டதை சந்தேகப்பட்டது.
“இல்லியே… எனக்கு அப்படி ஒன்னும் தெரியிலியேடீ!” என்றார்.
“எனக்கென்னமோ ஏதோ சரியா படலய்யா. ராத்திரி சுளீர்ன்னு வலி எடுத்துறிச்சி. அதான்…” என “ஞாவகம் இல்லியாய்யா?“ என்றேன். அவர் அதுபற்றி பேச விரும்பவில்லை எனப்புரிந்தது. வலித்த இடத்தில் மீண்டும் விரல்களை வைத்துத் தடவிக் காட்டினேன். அவர் விரல்களை பற்றியிருந்த என் கை இப்போது நடுங்க ஆரம்பித்திருந்தது.
“இங்க பாருடீ… டாக்டர பாக்காம நம்பளா எந்த முடிவுக்கும் வர்றது சரியில்ல. நீ தேவையில்லாம பயப்படறதா எனக்கு தோனுது.” என்றவர் மாலைவரை சாதாரணமாகத்தான் இருந்தார். ஒரு சில வேளைகளில், கைப்பேசியில் பாட்டெல்லாம் கேட்டுக்கொண்டு உற்சாகமாகவே இருந்தார். என்ன நினைத்தாரோ மறுநாளே, “கிழம்புடீ” என கோலாலம்பூருக்கு ‘ஸ்பெஸலிஸ்ட்டை’ பார்க்க அழைத்துச்சென்றார்.
குடும்பத்தில் அக்காவிற்கு புற்று கண்டிருந்த வரலாறு இருந்ததால் டாக்டர் உடனே ‘பயோப்ஸி’ செய்து பார்ப்பது நல்லதென்று முதலில் ஸ்கேன்செய்துப் பார்த்தார். சில திசுக்களின் திரட்சி சந்தேகத்திற்குரியதாய் இருக்க, வலித்த இடத்திலிருந்து சில திசுக்களை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டார். ஒரு வாரத்திற்கு பிறகே ஏதும் தீர்மானமாக சொல்லமுடியுமென்று டாக்டர் சொல்லியிருந்தாலும், எனக்கு அவ்வளவு நாட்களுக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றியது.
சந்தேகமே இல்லை, அது புற்றுநோய்தான். அக்காவுக்கும் இப்படிதானே இருந்தது. எனக்கு அந்த ஸ்கேன் முடிவு ஒரு புகைப்படம் போல நன்றாகவே நினைவில் இருந்தது.
வீட்டிற்கு திரும்பி வந்த உடனேயே நான் ஒரு தொட்டாற்சிணுங்கியைப்போல் மூடிக்கொண்டேன். சாவிற்கு ஒத்திகைபோல் எப்போதும் படுத்தே கிடந்தேன். இமைகளின் ஓரங்களில் துளிர்ந்த கண்ணீர் உலர்ந்து பிசுபிசுத்து ஈக்களை கவர்ந்ததால் நான் காற்றை விரட்டிக்கொண்டிருந்தேன். அவர் முதலில் ஆதரவாகச் சொல்லிப் பார்த்தார். “என்னான்னு தெரியாமலியே அதுக்குள்ளியும் நீ ஏன்டீ இப்படி பயந்து சாவுற?” என்று ஆத்திரமாகக் கத்தினார். அந்தக் கோவத்துடன்தான் இரவு பாதுகாவலர் வேலைக்குக் கிளம்பிப் போனார். நான் எதையுமே கேட்டுக்கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை. என் வேதனை எனக்கு என என்னுள்ளே ஒளிந்துக்கொண்டேன். டாக்டர் நோயை மறுஉறுதி படுத்துவதற்காக காத்திருந்தேன். ஒரு வாரம், ஒவ்வொரு வினாடிகளாக நீண்டு நீண்டு போனது.
மகளுக்கு, இரண்டு பிள்ளைகள். காலையில் பாதுகாவலர் வேலை முடிந்து வந்த கையோடு அவர், பேரனை அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவர போயிருந்தார். மகளுக்கு வேலைக்கு மணி ஆகிக்கொண்டிருந்ததுபோல பதற்றத்துடன் கைபேசியையும் வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தாள். மூன்று வயதே நிரம்பிய பேத்தி வேறு எழுந்து அடம்பிடித்தழுது ஆத்திரத்தை மூட்டிக்கொண்டிருந்தாள்.
நேற்று வரை நான் உடனே ஓடி தூக்கிக்கொள்வேன். “ஏங்கிட்ட உட்டுட்டு நீ மொத கெளம்புமா..” என்று சொல்லக்கூட இப்போது வாய் வரவில்லை. பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொள்வதை நினைத்தாலே ஒரே சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. ஆனால் மனசு கேட்கவில்லை. அவிழ்ந்து நழுவும் கைலியைப்போல் உற்சாகம் நழுவிப்போன மனசோடு பேத்தியைத் தூக்கிக்கொள்ள எழுந்தபோது சரியாக அவரும் உள்ளே நுழைந்தார். சமையல் எல்லாம் செய்துவிட்டதாகவும் சோறு மட்டும் பொங்கிகொள்ளும்படி சொல்லி, மகள் அவசரமாக கிளம்பிப் போனாள். மகளுக்கு என் மேல் கொஞ்சம் வருத்தம் இருந்தது. நானாக கற்பனை செய்துக்கொண்டு முடங்கிக்கிடப்பதாக அவரிடம் எரிச்சலாகச் சொன்னாள்.
மகள் போனதும் பேத்தி இன்னும் அதிகமாக அடம்பிடித்து அழத் தொடங்கினாள். கைபேசியில் டோம் & ஜெர்ரீயை போட்டு மேஜையில் வைத்ததும் அமைதியானாள். நான் மீண்டும் படுத்துக்கொண்டேன். அவர் குளித்துவிட்டு வந்து, பேத்தி கைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நெஸ்டத்தை ஊட்டிவிட்டார். பார்க்க கஷ்டமாக இருந்தது. கண்ணீர் பார்வையை மறைத்தது. இதையெல்லாம் அவர் இதுவரை செய்ததேயில்லை. என்னை மறைமுகமாக தண்டிப்பதாகவும் என் குற்ற உணர்ச்சியை மேலெழ முயல்வதாகவும் தோன்றியது. அவர் என்னிடம் எதுவுமே பேசாமல் இயல்பாக இருப்பதைப் பார்த்து எனக்குதான் உறுத்தியது. இன்னும், சோறு வடிக்கவேண்டும். மத்தியானம் பேத்திக்கு ஊட்டிவிட வேண்டும். குளிப்பாட்டவேண்டும். தூங்க வைக்கவேண்டும். எப்படி செய்யப்போகிறார்? அடக் கடவுளே!
என்னால் எழுந்து நடக்க முடியுமென எனக்கே தெரியும். ஆனால் உடல் கனமாகி பூமியை நோக்கி அழுத்தியது. அப்படியே அழுத்தி அழுத்தி பூமியின் இருள் துளைக்குள் சென்று விடுவேனோ என பயமாக இருந்தது. கால் பூமியில் படாமல் அப்படியே சுருண்டு கிடப்பதையே பாதுகாப்பாக உணர்ந்தேன்.
ஐயோ, ராத்திரி வேலை முடிந்து வந்த அவர், இன்னும் பரியாறக்கூட இல்லியே? அவர் குடிக்கும் நெஸ்காப்பியின் பதம், என் கைகளுக்கு மட்டுமே தெரிந்தவை எனத் தோன்றியபோது என்னால் படுத்திருக்க முடியவில்லை. ‘இருய்யா, தண்ணி கலக்கி குடுத்திர்றேன்’ என்று எழுந்துப் போனேன். அவரும் அந்த ஒரு வார்த்தைக்கு காத்திருந்ததுபோல், சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தார். பசியாறுவதற்கு ‘மாசிமோ’ ரொட்டி வாங்கி வைத்திருந்ததைப் பார்த்ததும் என் மனசு அந்த ரொட்டியைபோல் துண்டுகளாகிப் போனது. நேற்றுவரை இட்லி, தோசை, பூரி மற்றும் புட்டு என்று மட்டுமே சாப்பிட்ட மனுஷன் அவர். ஒரு துண்டோடு உதட்டைத் துடைத்துக்கொண்டார்.
எத்தனை மணிக்குத் தூங்கிப்போனேன்… பேத்தியை யார் பார்த்துக்கொண்டது… ஒன்றுமே தெரியவில்லை. இரவில் தூக்கத்தை தொலைத்த கண்கள், பகலில் அதைக் கண்டெடுத்தன. பேச்சுக் குரல் கேட்டு விழித்தபோது பேத்தி, சாப்பிடும்போதெல்லாம் என்னைப் பாடச்சொல்லி கேட்கும் அதே பாட்டை, அவரைப் பாடச் சொல்லி ஆங்கிலத்தில் அடம்பிடித்துக்கொண்டிருந்தாள். நான் என் தாய் மொழியில் எடுத்துக்கட்டியிருந்த அந்தப் பாட்டு, அவருக்கும் மனப்பாடமாகியிருந்தது எனக்கே இப்போதுதான் தெரிந்தது.
‘ ஒக்கட்டி… ரெண்டு… மூடு…
இக்கடா கொஞ்சும் சூடு…
பேகா தினாலா கூடு… –தரவாத்தா,
பாட்டா ஒயிட்டி பாடு… ‘
பேத்தி சாப்பிட்டு முடிந்ததும், பேரனைக் கூட்டிவர அவர் பள்ளிக்கு ஓடினார். நான், பேத்தியைப் பார்த்தபடி மார்பைத் தடவிக்கொண்டிருந்தேன். அவர் பேரனை அழைத்து வந்த கையோடு பேத்தி, தூங்குவதற்கு தயாராக சிணுங்கிக்கொண்டிருந்தாள். எப்போதும் போல பாட்டு பாடச்சொல்லி நச்சரித்தாள். நான் சங்கடத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘ அம்மா தல்லி ஹீரண்யா…
இப்புடு நித்தர போத்..தா..தி…
அந்தரு வல்லக்கா உண்டண்டீ…
ஹீரண்யாக்கி நித்தர வச்சிந்தீ…. ‘
அவரின் குரல் தூக்க அழுத்தத்தில் சுரத்தில்லாமல் ஒலிப்பது சட்டென எனக்கு ஒப்பாரியை நினைவு மூட்டியது.
உண்மையில் நான் கற்பனைதான் செய்துக்கொள்கிறேனா? இவர்கள் எல்லாம் சொல்வதுபோல எனக்கு அப்படி ஒன்றும் கொடிய நோய் இல்லையோ. எல்லாவற்றையும் உதறி எழுந்துவிட்டு தலைக்கு நன்றாக குளித்துவிட்டால் பழைய படி உற்சாகம் ஆகிவிடுவேனோ. வேகமாக எழ முயன்றபோது பெரும் கனம் ஒன்று என்னை மீண்டும் கட்டிலில் தள்ளியது. அப்போதுதான் அந்த கனம் நெஞ்சில் நின்று அழுத்துவதை உணர்ந்தேன்.
பேரன், அவன் அம்மா வாங்கிக் கொடுத்திருந்த கைப்பேசியில் கார் பந்தயம் விட அறைக்குள் போனான். மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம். அவர்தான் சோறு ஆக்கியிருக்க வேண்டும். மகள், சமையலென்று ரசம் வைத்து, முட்டை பொரித்திருந்ததைப் பார்த்ததும் சாப்பிடும் ஆசையே விட்டுப்போனது. சாப்பாட்டு நேரத்திற்கு மேசையில் ஏதாவது இருந்தால் போதும் என்பதாகவே மகளின் சமையல் இருந்தது. பசிக்குமே என்ற பயத்தாலேயே அவர், ஒரு பிடி சாப்பிட்டு எழுந்ததாக தெரிந்தது. மத்தியான நேரம், அவர் சோபாவிலேயே தூங்கிப்போனார். நான் பக்கத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக் கிடந்தேன்.
எதுவுமே நிச்சயமாக தெரியாமல், ஒன்றுமே செய்யப்பிடிக்காமல் நானாக இப்படி படுத்துக்கிடந்த ஒரே நாளில் நானில்லாத வீடு எப்படியெல்லாம் சிதைந்துப் போகும் என்பதைப் பார்க்க ஒரே பீதியாய் இருந்தது. உலை கொதித்து வழிந்து, அணைந்துப்போன அடுப்பைப்போலானது வீடு. ஒருவகையில் நான் அதைதான் அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறேனோ என என்னை நானே கேட்டுக்கொண்டேன். போதிய தூக்கம் இல்லாமல் ராத்திரி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு போகும்போது அவருக்கு ஏதும் நடந்துவிட்டால்? நினைக்கவே எனக்கு ‘திக்’கென்றது. உடலில் சக்தி இருக்கும்வரை நானே எப்போதும்போல் வீட்டை பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். அதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி. நான் தீர்மானித்துக்கொண்டேன் ஆனால் மனம் போன வேகத்திற்கு உடல் வராமல் தொந்தரவு செய்தது.
என் இரண்டாம் மகளுக்கு பத்து வயதிருக்கும்போது, அக்காளின் தலையில் அந்த இடி விழுந்தது. வந்த சுவடே தெரியவில்லை. குடும்பப் பின்னணியும் இல்லை. உத்தரவின்றி உள்ளே ஈசலைப்போல் வந்த புற்றை, விரல்கள் தெரிந்துக் கொண்டபோது அது, நாலாவது நிலையில் இருந்தது. ஏதோ கொழுப்புக் கட்டியென்றே தன்னைச் சமாதானப் படுத்திக்கொண்டு என்னிடம் காட்ட கூச்சப்பட்டவள், இடது முலைக்காம்பு வலிக்க, ரத்தம் தோய்ந்த திரவம் வெளிப்பட ஆரம்பித்ததும் பயந்துப் போனாள். உடனே டாக்டரிடம் காட்டியபோது, எல்லோருடைய பயமும் உறுதியானது. அந்தக் கணமே அக்காள் செத்துப் போனாள். பின் தொடர்ந்த சிகிச்சைகள் யாவுமே அவளை சின்னாபின்னமாக்கவே உதவின. நோய் நிச்சயமான மறுவாரமே அவளின் உயிரைக் காக்க, இடது முலை நீக்கப்பட்டது. ஒரு மாதம் ‘அன்பெய்டு’ லீவு எடுத்துக்கொண்டு நான்தான் அக்காளைப் பார்த்துக்கொண்டேன். அழுதுக்கொண்டே இருந்தாள். வீட்டு ஆண்களைப் பார்ப்பதையே தவிர்த்தாள். வந்து இரண்டு நாட்களாகியும் குளிக்காததால் வேர்வையில் நாறினாள். அன்று நான், பலவந்தமாக ஈரத்துணி கொண்டு உடம்பைத் துடைத்துவிட்டேன். ரவிக்கையை அவிழ்க்கும்போது கையைப் பிடித்துக்கொண்டு மறுத்தாள். நான், ‘உடன்பிறப்பிற்குள் என்னக்கா கூச்சமென்று’ அவிழ்த்தேன். அவள் ஒரு கையால், இருந்த மாரை மறைத்துக் கொண்டாள். அவள் கையின் ஒரு பிடியே அதற்கு போதுமானதாய் இருந்தது. இன்னொன்றோ, இருந்த இடத்தின் அடையாளமாய் பேண்டேஜ் மூடிக்கிடந்தது. அக்காள், முகத்தை திருப்பிக்கொண்டு அழலானாள். எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவள் துக்கத்திலிருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை.
புற்று நோய்க்கு சல்மொன் மீன், ப்ரோக்கோலி, பீட் ரூட், சோயா பீன், கற்றாலை, சீத்தா பழம் என்று யாரெல்லாம் என்னவெல்லாம் நல்லதென்று சொன்னார்களோ அதையெல்லாம் சமைத்தோ, சூப் செய்தோ கொடுத்துக்கொண்டிருந்தேன். அக்காளுக்கு மிகவும் பிடித்த பசும்பாலை முற்றாக தவிர்த்திருந்தேன். பால் சாப்பிட்டால் புற்று நோய் வருமென்றும், பாலுண்ணிகளில் மனிதன் மட்டுமே வளர்ந்த பிறகும் பால் குடிக்கிறான் என்றும் யாரோ சொல்லக் கேட்டிருந்தேன். இரண்டாவது வாரத்திலிருந்து அக்காளின் நிலைமையில் முன்னேற்றம் தெரிந்தது. காலை, மாலைகளில் வீட்டிலேயே நடமாட ஆரம்பித்தாள்.
சரியாக ஒரு மாதத்தில், கீமோ மற்றும் ரெடியேஷன் சிகிச்சைகள் ஆரம்பமாயின. ஒரு வாரத்திற்கு 5 ரெடியேஷன் என்று 25 ரெடியேஷன்களும் 3 வாரங்களுக்கு 1 சைக்கல் என்று 4 சைக்கல் கீமோவும் பரிந்துரைக்கப்பட்டன. கீமோ ஆரம்பமானவுடனேயே மிகுந்த அசௌகரியங்களுக்கு ஆளாகி மிகவும் சோர்ந்து, சக்தியெல்லாம் தீர்ந்துப்போனதுபோல் உலர்ந்துப் போனாள். கடுமையான தலைவலியால் சிடுசிடுத்தாள். நாக்கு தடித்து ருசி மரத்துப் போனது. ஒரு வார முடிவில் ரப்பை, புருவம் மற்றும் தலைமுடி எல்லாம் கொட்டி, பட்ட மரம்போல் உதிர்ந்துப் போய் அக்காள், மீண்டும் மரண பயத்தில் வாழ ஆரம்பித்தாள். இம்முறை சிரம்பானிலிருந்த தங்கை, ஒரு மாத லீவு எடுத்துப் பார்த்துக்கொண்டாள். ஆனால், தன் அங்கஹீனத்தை தங்கையிடமும் அம்பலப்படுத்த அக்காள் தயாராக இல்லை, என்னை மட்டுமே சுத்தப்படுத்த அனுமதித்தாள்.
ஒரு நாள், நன்றாக சுத்தப்படுத்தப்பட்டு உடம்பெல்லாம் தூவிவிட்ட ‘குட்டிகூரா புட்டாமாவில்’ அக்காள் மணந்துக்கொண்டிருந்தாள். திருமணமாகாத அவள் வாழ்க்கையில் கண்ட சுகம்தான் என்ன? பெருமூச்சுடன் நான் தூங்கப் போனேன்.
சிகிச்சைகள் முற்றாக முடிந்திருந்தன. நம்பிக்கையை கொடுத்தும் பறித்துக்கொண்டும் வாரங்கள் போய்க்கொண்டிருந்தன. ஐந்தாவது மாதம், அக்காளின் நிலைமை மிகவும் மோசமானது. அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன இரண்டாவது நாளே, இனி பிழைப்பது கடினம் என்று, வீட்டிற்கு கூட்டிப்போகச் சொல்லிவிட்டனர். பிறரின் உதவியில்லாமல் தனது அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்திசெய்துக்கொள்ள முடியாத இன்னலுக்கு ஆளாகிப் போனாள். கட்டிலைச் சுற்றி எப்போதுமே அடித்த துர்நாற்றம் அக்காளின் பிரத்தியேகமான வாசமாகிப் போனது.பேம்பர்ஸ் அவளின் நிரந்தர உள்ளாடை ஆனது.
சமயத்தில் அவள் உணர்விலிருக்கும்போது, ‘என்னிய சனியன்னுல்லாம் சொல்லி சபிக்காதிங்க. என்னால சொந்தமா செஞ்சிக்க முடியிலியே நா என்ன செய்வேன்?..’ என்று விம்மிக்கொண்டே ஓசை செத்துப்போன குரலில் சொன்னது நெஞ்சை பிழிந்தது. சமயங்களில், கட்டுப்படுத்த முடியாமல் படுக்கையிலேயே மலமும் ஜலமும் கழித்தபோது, உதவிக்குப் போன என்னைப் பார்த்து மிரண்டு நடுங்கினாள். சில மாதங்களுக்கு முன்புவரை எல்லா வீட்டு வேலைகளையும் செய்துக்கொண்டு என் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்ட அக்காளா அவள்? நான், அக்காளின் மரணத்தை பார்க்க ஆரம்பித்தேன். நிற்கும் சக்தியை இழந்தாள். திரவ ஆகாரமும் செரிக்காமல், விடாது வாந்தி எடுத்தே ஒரு நாள், செத்துப் போனாள். அந்த அவஸ்தைக்கு அத்தாட்சியாய் நிற்கும் அவகதிக்கு, நான் வேறு ஆளாகிப் போனேன். நோய் கண்ட ஆறே மாதங்களில் செத்துப்போய் இப்போது சுவரில் ப்ளாஸ்டிக் மாலை தரித்து, லட்சுமிகரமான பொழிவுடன் ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறாள். அவளின் நிஜ முகத்தை, போட்டோவைப் பார்த்தே ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டிய அவலத்திற்கு சிதைந்துப் போயிருந்தாள்.
இல்லாது போன அக்காள், உடனே அவள் அறையின் வெறுமையில் போய் குடி புகுந்துக்கொண்டாள்.
அக்காளின் முதல் வருட திவசம் முடிந்தக் கையோடு எங்கள் அபார்ட்மெண்டை விற்று ராவாங்கிற்குக் குடி வந்தோம்.
ஒவ்வொன்றாக என் நினைவுகளில் வந்து என்னை சிதைத்தன. என்னை சிதைப்பது நினைவா வலியா என முடிவெடுக்க முடியவில்லை. சில சமயம் அக்காவுக்கு இருந்தால் எனக்கும் வருமா என்ன என்று தோன்ற தேறி அமர்வேன். ஒரு வினாடிதான். வானில் சட்டென தோன்றி மறையும் வால் நட்சத்திரம் போன்ற ஒளி, அந்த நம்பிக்கை. மெல்ல மெல்ல அகன்று சாம்பலாகிவிடும். அந்தச் சாம்பல் உடல் மனம் என கலந்து துவர்க்கும்.
அவரை நினைத்துப் பார்த்தேன். மாதத்திற்கு ஒரு முறையாவது பழைய நண்பர்களை சந்திக்கும் போது, போதையில் இளமைக் காலங்களைப் பேசிக்கொள்வார்களோ என்னவோ? வரும்போதே இளமையுடனேயே வருவார். அவர் சொற்களால் கூட்டி கூட்டி சேர்த்துக்கொண்ட இளமை. அவரின் ஆர்வத்தில் குறையில்லாமல் இறுக்கிப்பிடிக்க இன்னும் இரு கரங்களாக முலைகள் இருந்தன. அதன் சிதைவுக்குப் பிறகு அவர் என்னை எப்படி எதிர்கொள்வார் என நினைக்கவே மனம் துடித்து துடித்து அடங்கியது.
நான் படுக்கையில் கிடக்கும்போது யார் என்னைச் சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவும் வந்த தூக்கமெல்லாம் விலகி ஓடியது. அவரது கண்களில் என்னைப் பார்த்து அருவருப்பு தோன்றுமா என நினைத்த கணம் கண்ணீர் வந்தது. ஏதோ ஒரு அதிசயம் நடந்து இந்த பயத்துக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் போகுமென நினைத்துக்கொண்டேன். அப்போது நானே அவரைக் கட்டிக்கொள்வேன். இந்த தினத்தில் கஷ்டப்படுத்தியதற்காக அழுது மன்னிப்புக்கேட்பேன் என மனதினுள் நிகழ்த்திப்பார்த்தேன். நிம்மதியாக இருந்தது.
எனக்கு என் மார்பை முகர்ந்து பார்க்கத் தோன்றியது. முதல் குழந்தை பிறந்தபோது அதில் பால்மணம் வீசியது. குழந்தையின் தாகத்தை தீர்த்து பெருமை கொண்டன. சுரந்து நிறைந்த பாலால் அவை, விம்மி கனத்தன. தானாகவே பால் வடிந்து நனைந்த ஆடைகளைக் காணும்போது சிலிர்ப்பாய் இருக்கும்.
ஏழு நாட்களும் நான் என் முலைகளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். அவற்றுக்கு இறக்கைகள் முளைத்து பறப்பது போன்ற கனவுகள் வந்தன.
***
சிவப்பு நிற பிளவ்ஸ் அணிந்த சீனப் பெண், அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தாள். இன்னும் சட்டையின் மேல் பொத்தான் திறந்துதான் இருந்தது.. முன்பதிவு செய்துகொண்ட நோயாளிகள் மட்டுமே வர முடியும் என்பதால் குறைவான இருக்கைகளே இருந்தன. சிறிய அறை என்பதால் எங்கும் குளிர் போர்த்தியிருந்தது.
“அதான், எட்ற மணிக்கெல்லாம் போலாம்ன்னு சொன்னன்…” என்று அவர் காதில் கிசுகிசுத்து சினந்தேன். அவர் கையுடன் கோர்த்து மேலே சாய்ந்தபடி காலி இடத்தைத் தேடினேன். ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்த அந்தச் சிவப்பு பிளவ்ஸ் பெண் சற்று தள்ளி நகர்ந்து, சோபாவைத் தட்டிக் காட்டி, ஒரு வசீகரப் புன்னகையில் என்னைப் பார்த்துத் தலையசைத்து பக்கத்தில் அமரச் சொன்னாள். கவர்ச்சியான புன்னகை. மருத்துவ விற்பனையாளராக இருக்கக்கூடும். கடுமையான முகத்துடன் அமர்ந்தேன். அருகில் பார்க்கும் போது சிவப்பு உடை கண்களைக் கூசாவிட்டாலும் சுட்டது.
அவர், நான் பார்வைக்குத் தெரியும் அளவில் வெளியே சோபாவில் போய் உட்கார்ந்து என்னையும் கைப்பேசியையும் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் நான் எந்த டாக்டரைப் பார்க்கப் போனாலும் பக்கத்திலேயே அவர் இருந்தாக வேண்டும். எனக்கிருக்கும் சங்கடங்களை அவர்தான் டாக்டரிடம் சொல்லவேண்டும். அக்காளின் அகால மரணத்திற்குப் பிறகு, டாக்டரைப் பார்ப்பதென்றாலே எனக்கு ஒரே பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது.
நான் சக நோயாளிகளைப் பார்த்தேன். கம்பளி தலையுறை அணிந்த சிலர் யாரையுமே பார்க்க விரும்பாததுபோல் கண்கள் மூடிக் கிடந்தனர். இன்னும் சிலர், கைப்பேசியை தேய்த்துக்கொண்டிருந்தனர். கிளீனிக் சுவரில் ஒட்டப்பட்டிருந்த மார்பக புற்று நோய் விழிப்புணர்வு சுவரொட்டி, தேவையான தகவலை விட தேவையற்ற பீதியையே அதிகம் தந்ததால், நான் அதைப் படிக்காமல் தவிர்த்தேன். பயோப்ஸி எப்படி இருக்குமோ என்ற பீதியில் நிம்மதியில்லாது நெளிந்துக்கொண்டிருந்தேன்.
“ஐ எம் மிஸ் ஹோப்.” என்று அந்தச் சீன மாது தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.
நான் சடங்காக என்னை அறிமுகப்படுத்திவிட்டு வேறெங்காவது பார்க்க முயன்றேன்.
“பரிசோதனைக்கு வந்தீர்களா?” என்றாள்
“நான் ப்யோப்சி முடிவு தெரிந்துகொள்ள வந்துள்ளேன். நீங்கள் மருந்தக முகவரா?” என்று நான் கேட்டதில் என்ன ஹாஸ்யமோ வாயைப் பொத்திக்கொண்டு அப்படி சிரித்தாள். ஒரு கணம், எல்லோருமே எங்களைத் திரும்பிப் பார்த்தனர். எனக்கு மிகவும் தர்ம சங்கடமாய் போனது.
“நல்ல நகைச்சுவை. நான் ஒரு நான்காம் கட்ட மார்பக புற்றுநோயாளி” என்றாள். அவள் அழகான ஆங்கிலத்தில் சொன்னாள். நான் அவளை வியப்புடன் பார்த்தேன். “குணமாக்கிவிட்டார்களா?” என்றேன்.
“ஓ… ஐந்து வருஷத்துக்கு முன்பே இரண்டு மார்பையும் வருஷத்துக்கு ஒன்று என வெட்டி எடுத்து…” எனச்சொல்லி மீண்டும் சிரித்தாள்.
“இரண்டு மார்பிலுமா?” என்றேன். எனக்கு குரல் நடுங்கியது. உடனே கழிவறைக்குச் சென்று இன்னொரு மார்பையும் சோதிக்க வேண்டுமென தோன்றியது.
“இரண்டு ஆப்பரேஷன்; 16 கீமோ; இரண்டு தடவை முடியெல்லாம் கொட்டி மறுபடியும் வளர்ந்திருக்கிறது.” என்றாள் சாதாரணமாக.
“கணவர்?” என்று கேட்டு, அவரை மெல்ல நோட்டம் விட்டேன். ஃபோனில் மூழ்கியிருந்தார்.
“போன வருஷம்தான் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டேன். மார்பு இல்லா விட்டால் என்ன? பிறக்கும் போதே இவ்வளவு பெரிய மார்போடவா பிறந்தோம்?” எனக்கூறினாள். ஆனால் இம்முறை வாயை மூடிக்கொண்டு அடக்கமாகச் சிரித்தாள். நான் அவளிடம் என்னென்னவோ கேட்க நினைத்தேன். அவளாக பேசினாள்.
“இப்பொழுது வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஒரு சிறுமியைப்போல் பிரா போடாமல் எவ்வளவு காற்றோட்டமாகவும் இருக்க முடிகிறது தெரியுமா? உணவகங்களில் சாப்பிடப் போகும்போது, பொத்தான் திறந்துக் கிடக்கும் மார்புக் குழியையே திருட்டுத்தனமாப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்களைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் முன்னால் போய் நின்று, ‘என்ன, என் முலைகளைப் பார்க்க விருப்பமாக இருக்கிறதா? இதோ, உன் ஆசைத் தீர பார்த்துக்கொள்..’ என்று ப்ளவுசைதிறந்துக் காட்ட வேண்டும்போல் இருக்கிறது…” என்றாள். இம்முறை அவள் சிரிக்கவில்லை. கண்களில் தீவிரம் இருந்தது.
நான், வாயடைத்துப்போய் அவளையே பார்த்துக் கிடந்தேன். அழகாக இருந்தாள். எனக்கு மகளாக இருக்கக்கூடிய வயதுதான் இருக்கும். மடியில் ஓர் ஆங்கிலப் புத்தகம் வைத்திருந்தாள். தலைப்பைப் பார்த்தேன். ‘The Biology Of Believe By Dr. Bruce H. Lipton’ என்றிருந்தது. அவளின் பெயர் அழைக்கப்பட்டது. புன்னகையுடன் எழுந்து சென்றாள். ஏனோ எனக்கு, அவளின் மார்பை பார்க்கவேண்டும்போல் தோன்றியது. பார்த்தேன். இல்லாத முலைகள், இருப்பதுபோல் முழுமையான வடிவத்தில் நிமிர்ந்து நின்றன.
அவள் மீண்டும் வருவாள் என எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதற்குள் என் பெயர் அழைக்கப்பட்டது. நான் அவரைப் பார்த்தேன். அவர், எழுந்து வர ஆயத்தமானார். நான், கையைக் காட்டி அவரை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, நான் மட்டும் டாக்டரைப் பார்க்கப் போனேன்.