சுரேஷ் நாராயணன் பெரும் பயணி. இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணித்திருக்கும் இவர் அகன்று விரிந்த உலகின் பெரு நிலப்பரப்புகளில் தன்னைத் தொலைத்து மீண்டும் தேடிக்கண்டு பிடிப்பதை பல ஆண்டுகளாகச் செய்து வரும் பயணி. உலகின் பார்வையாளனாக மாறி, அவ்வனுபவம் விதைக்கும் தெளிவின் நீட்சியோடு அடுத்தடுத்த பயணத்தைத் தொடர்கிறார். sureshexplorer.com என்ற அகப்பக்கத்திலும் Suresh Explorer எனும் யூ-டியூப் வழியாகவும் அவ்வப்போது தன் பயண அனுபவங்களைப் பதிவிட்டு வரும் சுரேஷ் கடந்த ஆண்டு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி மூன்று மாதங்களாக சைக்கிளில் மலேசியாவைச் சுற்றி வந்துள்ளார். சுரேஷின் பயண அனுபவங்களை அறிய வல்லினத்திற்காக ஒரு நேர்காணல் செய்தோம்.
கேள்வி: பயணத்தின் சுகத்தை அல்லது அது தரும் அலாதியான அனுபவத்தை எப்போது எந்த வயதில் உணர்ந்தீர்கள்?
சுரேஷ்: ஏறக்குறைய ஏழு வயது இருக்கும். தினந்தோறும் காலை நான்கு மணிக்கு, கையில் சீன மெழுகுவர்த்தியை ஏந்தியவாரே அம்மாவின் பின்னாலேயே ரப்பர் மரத் தோட்டம் நோக்கி விரைந்த நாட்களே எனது கால்கள் பயணத்தைக் கற்ற நாட்கள் என்று சொல்லலாம். ஆறுகள்தான் பெரும்பாலும் எஸ்டேட்களின் எல்லைகள். “நம்ம எஸ்டேட் பவுண்டரிய தாண்டிச் செல்லாதே” என்ற அம்மாவின் கட்டளையை மீறி கால் நனைந்ததுண்டு. ரப்பர் தோட்டத்தைத் தாண்டி பயணம் எங்கே நீள்கிறது, அந்த உலகம் எப்படியிருக்கும், அந்த உலகத்தில் மனிதர்கள் என்ன செய்கிறார்கள், என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அந்த சிறிய வயதிலேயே துளிர்விட ஆரம்பித்தது.
கேள்வி: உங்கள் குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் பயணம் குறித்த ஆர்வம் இருந்ததா? அதற்கான அறிகுறிகளையாவது பகிர்ந்துள்ளார்களா?
சுரேஷ்: இல்லை. அப்படி எதுவும் இருந்ததாகத் தோன்றவில்லை.
கேள்வி: உங்களை நீங்கள் ஒரு பயணியாக எப்போது கண்டடைந்தீர்கள்?
சுரேஷ்: 2000-ஆண்டில். பட்டவர்வொர்த்தில் தொடங்கி பேங்கோக் வரை சென்ற எனது முதல் ரயில் பயணத்தின்போது. அப்போதுதான் எனக்கும் ரயிலுக்கும் உண்டான ஆத்மபூர்வமான தொடர்பை உணர்ந்தேன். போன ஜென்மத்தில் ஒருவேளை ரயில் ஓட்டுனராக இருந்திருப்பேனோ என்னவோ. ஒரு சமயம் ரயில் பெட்டி சுத்தம் செய்பவராக இருந்திருக்கலாம்.
ரயிலில் அமர்ந்து பயணம் செய்வதென்பது, மன்னன் ஒருவன் யானையின் மேல் அமர்ந்து ஊரை வலம் வருவது போன்றது எனக்கு. ரயில் இருக்கை எனக்கு சிம்மாசனம் போலத் தோன்றும். அந்த சுகம் வார்த்தையில் அடங்காதது. ரயில் பெட்டி, ஜன்னலோர இருக்கை, கையில் தேநீர், இது போதும் எனக்கு. உலகை மறந்துவிடுவேன். ஸ்குபா டைவிங் செய்யும்போது, 100 அடி ஆழத்தில் நாம் பார்க்கின்ற வண்ணங்கள் யாவும் நிலத்தில் பார்க்க இயலாத வண்ணங்களாக இருக்கும், புதிய உலகத்திற்குச் சென்றுவிட்டதுபோலத் தோன்றும். மண்ணுக்கும் நமக்கும் உள்ள தொப்புள்கொடி உணராமல் போகும். அதுபோல, ரயில் பெட்டிக்குள் நுழைந்தவுடன் நான் இன்னொரு உலகத்திற்கு தள்ளப்பட்டாதாய் உணர்வேன். பட்டவர்வொர்த்தில் தொடங்கி பேங்கோக் வரையான ரயில் பயணம் மட்டும் ஏறக்குறைய 15 முறை சென்றுவிட்டேன். இப்போது மறுபடியும் போக வேண்டி வந்தால், ‘புதிதாய் திருமணம்’ முடித்ததுபோல இருக்கும் எனக்கு. அதுமட்டுமின்றி, ரயில் சினேகங்கள் எனக்கு அதிகம் பிடிக்கும். தொட்டுவிட்டு மட்டும் போகிற உறவைத் தருவதால்.
கேள்வி: உங்கள் கண்டடைவை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி எதிர்க்கொண்டனர்?
சுரேஷ்: எனக்கு ஏதும் ஆகும் என்ற அவர்களின் பயத்தைவிட, எனக்கு எதுவும் ஆகாது என்ற எனது நம்பிக்கையே என்னை மீண்டும் மீண்டும் பயணிக்க வைத்தது. தோட்டப்புற வாழ்க்கை எந்த அளவுக்கு என்னை அழகாய் செதுக்கியதோ, அதே அளவுக்கு ஆழமாய் காயப்படுத்தியும் இருக்கிறது. நான் காயம் என்று கூறுவது தோட்டப்புற வாழ்க்கை இலவசமாய் கொடுத்து பட்டணத்திற்கு வழியனுப்பிய தாழ்வு மனப்பான்மையைக் கூறுகின்றேன். இதை விட்டு முழுமையாக வெளிவரவே எனக்கு இருபது வருடங்களுக்கும் மேற்பட்ட காலங்கள் தேவைப்பட்டன. எனது தனிப் பயணங்கள் எனக்களித்த சிகிச்சையை எந்த மருத்துவரும் எனக்கு செய்திருக்க முடியாது. எனவே எனக்குத் தடையாக இருந்தது நான்தான். அதிலிருந்து என்னை விடுதலை செய்துகொண்டதும் நான்தான்.
கேள்வி: உங்கள் பயணத்துக்கென நண்பர்கள் வட்டம் உள்ளதா? குழுப்பயணம் அல்லது தனிப்பயணம் என்பதை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?
சுரேஷ்: என்னுடய தனிப் பயணங்களில் நான் மகா சுயநலவாதியாக செயல்படுவேன். யாரேனும் உடன் வருகிறேன் என்றால் என் தனிப் பயணத்தின் நோக்கத்தைக் விரிவாக எடுத்துக் கூறி நிராகரித்து விடுவேன். சில நேரங்களில் சாலை ஓரத்தில் படுத்துத் தூங்க வேண்டிவரும், எல்லையைக் கடப்பதில் ஏற்படும் அசௌகரியங்கள் போன்ற உண்மைகளை எடுத்துக் கூறுவேன். இதனால் முகம் சுழித்தவர்கள் அதிகம். அதேவேளையில் குறிப்பிட்ட சில நண்பர்களுடன் எனது தனிப் பயணத்தைக் குழுப் பயணமாக்கிக் கொள்வதுண்டு. அதற்குக் காரணம் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கப் பிடிக்கும் என்பதுதான். உதாரணத்திற்கு, நண்பர் /திரைப்பட இயக்குனர் ஷான். நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பயணம் செய்ய அதிகம் விரும்புவோம். பயணத்தின்போது ஏற்படும் எதார்த்த நிகழ்வுகளினால் உண்டாகும் மன மாற்றங்களை அதிகம் ஆராய்வோம். சுவாரசியமான சம்பவம் ஏதும் நடந்தால் அதை அலசவும் அசைபோடவும் செய்வோம்.
மற்றொருவர் காந்தி காசிநாதன். மொழியாற்றலும் அரசியல் ஆய்வும் கொண்ட இவருடன் பயணிப்பதும் எனக்கு அதிகம் பிடிக்கும். எனது தவறான/வித்தியாசமான உலகியல் சார்ந்த கண்ணோட்டத்திற்கெல்லாம் முகத்திற்கு நேரே பிழை என்று கர்ஜிக்கும் அறிவாற்றல் இவரிடத்தில் உண்டு.
சுந்தரம் காத்தவராயன் என்ற மற்றொரு நண்பருடன் என் பயணம் செய்யப் பிடிக்கும் என்று சொல்லியே ஆகவேண்டும். சுந்தரம் அடிப்படையில் ஒரு திறமையான புகைப்பட நிபுணர். இவருடன் பயணம் செய்யும் வேளைகளில் என்னுடைய புகைப்பட திறமையை மென்மேலும் மெருகேற்றிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். எனது கண்கள் பார்த்து ரசித்த அழகை நிறைய புகைப்படங்களாக கிளிக் செய்திருக்கிறேன். ஆனால் என்னை அழகாய் கிளிக் செய்தவர் சுந்தரம் மட்டும்தான்.
கேள்வி: பொதுவாக வெளிநாட்டு பயணம் என்றால், அதை உல்லாச சுற்றுலாவாகத்தான் பலரும் நினைப்பது வழக்கம். பிரபலமான சுற்றுப்பயண இடங்களுக்குச் செல்வதை தங்கள் கனவாகச் சொல்வர். அமெரிக்கா என்றால், ஹாலிவூட், ரஷ்யா என்றால் செஞ்சதுக்கம், இந்தியா என்றால் தாஜ்மஹால் போன்றவற்றைக் கூறுகின்றேன். உங்கள் தொடக்ககாலத்தில் இதுபோன்ற கனவுகள், ஆசைகள் இருந்ததுண்டா? அதில் இருந்து நீங்கள் எப்படி மாறுபட்டீர்கள்?
சுரேஷ்: உல்லாசப் பயணத்திலும் சொகுசான பயணத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. கட்டிடங்களோ அல்லது சுற்றுலாத்தளங்களோ ஒரு நாட்டின் வரலாற்றையும் தற்போதைய நிலவரத்தையும் விரிவாக சொல்லிவிடுமா என்று கேட்டால், இல்லை என்றே சொல்வேன். சுற்றுலாத்தளங்கள் இப்போதெல்லாம் வியாபாரத் தளங்களாக மாறியிருப்பது என் பயணத்தை பரிணமிக்கச் செய்துள்ளது. நீங்கள் கூறியதைப்போல ஆரம்பத்தில் தாஜ்மஹால் என்னை ஈர்த்ததுண்டு, ஆனால், 2018-ல் ஆக்ரா சென்றடைந்தும் தாஜ்மகாலைப் பார்க்க ஆர்வம் இல்லாமல் வெறுமனே ஒதுக்குப்புறமான தேநீர் கடையில் எனது நேரத்தைச் செலவழித்தேன்.
பொதுவாக ஒரு நகரம் சென்றடைந்த மறு நாள் காலை, நான் செல்ல நினைக்கும், அதிகம் ஆசைப் படும் இடம் அந்த நகரத்தில் உள்ள மார்க்கெட்தான். நம்ம ஊரில் உள்ள பசார் பெசார் போல. இதற்குக் காரணம், அங்குதான் ஒரு நகரத்தின் மனித வாழ்க்கையைப் பற்றிய உண்மை நிலவரத்தை மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த மார்க்கெட்தான் உண்மையான விலைவாசியைக் காட்டும். அங்குதான் மலிவான விலையில் அந்த நகரில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளும் பொருட்களும் கிடைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மார்க்கெட் பயணிகளுக்கு ஏற்ப இயங்கும் இடமாய் இல்லாமல் அங்கே வசிக்கும் மக்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். அங்குதான் அந்நாட்டு சமூகத்தின் உண்மை நிலை ஓரளவாவது புலப்படும்.
கேள்வி: இதுவரை எத்தனை இடங்களுக்கு பயணம் செய்திருப்பீர்கள்? இவற்றில் எது உங்களைக் கவர்ந்தது? ஏன்?
சுரேஷ்: இதுவரை 25 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளேன். திரான்ஸ் – சைபீரியன் ரயில் பயணம், சில்க்ரோட், சிரம்பானிலிருந்து தென்கொரியா, நேபாளம் தொடங்கி ஹரித்துவார், ரிஷிகேஷ், வாரணாசி, கொல்கத்தா வரை என தனியான பயணங்களை மேற்கொண்டுள்ளேன். இவை அனைத்தும் தரைவழியாக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள். இதுபோல தரைவழியாகக் குழுவுடன் சிரம்பானிலிருந்து கம்போடியா அங்கோர் வாட்வரையும் சென்றதுண்டு. இன்னும் நினைவுகளில் இருந்து மீட்டால், கேரளா கண்ணூர் தொடங்கி திருவானந்தபுரம், அன்னபூர்ணா பேஸ்கேம் டிரெக்கிங், எவரெஸ்ட் பேஸ்கேம் டிரெக்கிங், தீபகற்ப மலேசிய சைக்கிள் பயணம் என ஏராளமாக வந்து ஒன்றன் மேல் ஒன்றாக விழுகின்றன. பயணங்களுக்குதான் குறிப்பிட்ட பாதைகள்; நினைவுகளுக்கு இல்லையே.
கேள்வி : நிச்சயம் இவை அபாரமான பயணங்கள்தான். இவற்றில் உங்களைக் கவர்ந்த இடம் என சட்டென நினைவுக்கு வருவது ஏதேனும் உண்டா?
சுரேஷ்: கிர்கிஸ்தான்(kyrgystan). 90 விழுக்காடு மலைகள் கொண்ட நாடு. மக்களின் நாடோடி (nomadic) வாழ்க்கை முறை, சுத்தமான காற்று, Issyk-kul ஏரியின் அழகு என இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நிமிடமும் குளிர்ச்சி சூழ்கிறது.
கேள்வி: உலகின் மிக நீளமான ரயில் பாதையான டிரான்ஸ் – சைபீரியன் ரயில்வேயில் ஐந்து நாட்கள் பயணம் செய்திருக்கிறீர்கள். இது பலருக்கும் கிடைக்காத அரிய அனுபவம். இதற்கு எப்படி உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொண்டீர்கள்? உடலாலும் மனதாலும்? ஏனென்றால் சைபீரியா பகுதி கடுங்குளிரானது. அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். மற்றது சீனா, மங்கோலியா, ரஷ்யா என்று நீங்கள் போன பகுதிகளில் ஆங்கிலம் பேசுபவர்கள் அரிதாகவே இருப்பார்கள். எப்படி சமாளித்தீர்கள்?
சுரேஷ்: சைபீரியன் ரயில் பயணம் எனது முதல் தனிப் பயணம் என்பதால், தயக்கம், நடுக்கம், பயம் எல்லாமே என்னை சுற்றியிருந்தது. நிறைய சவால்கள், தடங்கல்கள், கடைசியில் நான் வென்றது பயணத்தை அல்ல; என் பயத்தை. நீங்கள் குறிப்பிட்டதுபோல, மொழி என்பது பெரும் பிரச்சனை. இந்த இடங்களில்தான் முன்பின் தெரியாத மனிதர்கள் கடவுள்களானார்கள். ‘தி அல்கெமிஸ்ட’ கதையில் வரும் சிறுவனுக்கு நடந்த அதிசயங்கள் போல எனக்கும் நடந்தன. அச்சிறுவன் கண்ட பிரபஞ்சத்தை நானும் கண்டேன்.
கேள்வி: இந்தப் பயணத்தில் நீங்கள் சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றிருக்கிறீர்கள். இரு நாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
சுரேஷ்: என் பார்வையில், மங்கோலியா என்ற நாடு, சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நடுவில் மாட்டி அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் நாடு. இரு உத்தம வில்லன்களின் பிடியிலிருந்து வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் நாடு. ஆனால், ஜெங்கிஸ்கான் மறுபிறவி எடுத்தால் மட்டுமே இது சாத்தியம். இரு நாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக மங்கோலியா எழுத்து முறை Cyrillic script போன்றது. ரஷ்யா, மத்திய ஆசியாவின் ஆதிக்கம் அதிகம்.
கேள்வி: உங்களின் பட்டுப் பாதை பயணம் பற்றிக் கூறுங்கள். இயற்கையின் அற்புதங்களைத் தேக்கி வைத்திருக்கும் மலைப் பாதைகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட இப்பாதை எத்தனை அழகானதோ அத்தனை ஆபத்தானதும்கூட. முதலில் இன்றைய காலகட்டத்தில் இந்தப் பாதையே ஆபத்தானது. அடுத்து தலிபான்கள், கொள்ளைக்காரர்கள், இயற்கைச் சீற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் என்று பலவற்றையும் சமாளித்துச் செல்ல வேண்டும். இதையெல்லாம் சமாளிக்க எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்? எப்படி உங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டீர்கள்?
சுரேஷ்: சில்க்ரோட் என்பதை பட்டுப் பாதை என குறிப்பிடலாம் என்று உணர்த்தியதற்கு நன்றி நவீன். பட்டுப் பாதை அனுபவத்தை ஒரு பக்கத்தில் அடக்கிவிட முடியாது. எனக்கு குருட்டு தைரியம் அதிகம். குதித்துவிடு கடலில், அந்த கடல் உனக்கு நீச்சல் சொல்லித்தரும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளவன். எனவே, எனது பயணங்களில் தயார்நிலை என்பது குறைவாகவே இருக்கும். வீட்டிலிருந்தே பாடத்தை கற்றுக்கொண்டால், பள்ளிக்கு செல்ல வேண்டியநிலை இருக்காது. இந்த உலகம் ஒரு மாபெரும் பல்கலைக்கழகம். ஒரு விஷயத்தை தெளிவாக உள்வாங்கியிருந்தேன். பயம் என்பது நாம் செல்லவிருக்கும் நாடுகளிலிருந்தோ அல்லது பார்க்கும் மனிதர்களிடமிருந்தோ வருபவை அல்ல; மாறாக நம்முடய எண்ணகிணற்றிலிருந்து அளவே இல்லாமல் ஊற்றெடுக்கும் ராட்சத எண்ணங்களே என்று. அப்படிப்பட்ட பயத்தைப் போக்கக் கூடிய சக்தி நம் அறிவுக்கு மட்டுமே உண்டு என்று உறுதியாக நம்புகிறேன். ஆபத்தான நாட்டில்/பாதையில் ஏற்கனவே பயணித்தவரின் அனுபவத்தை வாசித்து அங்கிருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதையே நான் அறிவு என்று குறிப்பிடுகிறேன்.
கேள்வி: பயணங்கள் பலருக்கும் அமையாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் முதலாவது நிதி, அடுத்து வேலை மற்றது உடல் நிலை, குடும்பப் பொறுப்புகள். இதையெல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள், பயணங்கள் எல்லாருக்குமே சாத்தியமானது எனக் கருதுகிறீர்களா?
சுரேஷ்: உண்மை. சிலருக்கு பயணம் செய்ய குறைந்த வாய்ப்புகளே கிட்டுகின்றன. என்னுடைய பயணம் எப்பொழுதும் ‘கற்றல்’ அடிப்படையில்தான் இருக்கும். ஒவ்வொரு பயணமும் எனக்கு ஒரு கல்வியாளர் தகுதியை மீட்டுத் தருவதாகவே உணர்கிறேன். ஆகவே, பயணத்திற்காக செலவிடப்படும் பணத்தை, என் கல்விக்குச் செலவிடும் முதலீடாகவே பார்க்கிறேன். எனது சம்பாத்தியத்தை பொருட்கள்/உடமைகள் வாங்கச் செலவிடுவதைவிட பயணத்திற்குச் செலவிடுவதையே அதிகம் விரும்புகின்றேன். இதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் எனது மனைவியும் மகனும். அவர்களின் ஆதரவின்றி என் தனிப்பட்ட தரைவழிப் பயணங்கள் சாத்தியமற்றவை.
கேள்வி: இது குறித்து இன்னும் அறிய விளைகிறேன். திருமணம் இயல்பாக உலகியல் சார்ந்து நம்மை இழுத்துப் பிடிக்கக்கூடியவை. நோக்கற்ற பயணங்கள் ஒருவகையில் இதிலிருந்து விடுபடுவதுதான். இது எப்படி சாத்தியமாகியது எனக் கேட்கிறேன்.
சுரேஷ்: என் மனைவியின் பெயர் பிரேமலதா கோபாலன். திருமணமாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது. திருமணம் நம்மை இழுத்துப்பிடிக்குமா இல்லையா என்ற விவாதத்தில் என திருமண வாழ்க்கை விதிவிலக்கு என்றே சொல்ல வேண்டும். திருமணம் முடித்த காலம் தொட்டு என் தனிப் பயணங்கள் இன்று வரை தொடர்ந்துகொண்டும், பெரிதாய் வளர்ந்துகொண்டும்தான் இருக்கிறதே தவிர, எந்தக் காரணத்திற்கும் தொய்வு கண்டதில்லை. இதற்குக் காரணம் எங்கள் இருவரைப் பொறுத்தமட்டில், ஒருவரை ஒருவர் இழுத்துபிடித்துக்கொண்டு, தனக்குப் பிடித்ததை செய்யவிடாமல் “உன்னை அதிகம் நேசிக்கிறேன், உன்னை சுவாசிக்கிறேன்” அதனால்தான் என்று, அதற்கு possessivenessதான் காரணம் என்று சமாதானம் கூறுவது நியாமற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் கருதினோம்.
மாறாக, ‘பறப்பதற்கு சிறகைக் (freedom) கொடுத்துவிட்டு, உல்லாசமாய் பறக்கவும் விட்டுவிட்டு, உயரத் தனியே பறப்பது “என் வீட்டு சீட்டுக்குருவிதான்” என்று மார்தட்டிக்கொண்டு, மறுகணமே அந்த சிட்டுக்குருவி தன்னிடம் திரும்பி வரக் காரணத்தைக் கொடுப்பதுதான்’ உண்மையான காதலாக இருக்க முடியும் என்பதை உறுதியாக நம்பினோம். அதை செயல்படுத்தினோம். இது சாத்தியப்படும், ஆனால் எல்லோருக்கும் அல்ல என்பதே எனது பதில். என் மனைவிக்கு பயணத்தில் ஆர்வம் குறைவு என்றே சொல்லவேண்டும். அதுவும் எனது பயணங்களைப் போன்ற வீதிகளிலும் படுத்து தூங்கும் பயணங்களில் ஆர்வம் சற்றும் இல்லாதவர்.
கேள்வி: அதுகுறித்துதான் கேட்க நினைத்தேன். Backpackers என குறிப்பிடப்படும் பயணிகளின் பொதுவான முன் திட்டங்கள் என்ன? இதில் உங்கள் சுய அனுபவம் சார்ந்து இல்லாமல் பொதுவான தன்மைகளைக் கேட்கிறேன்.
சுரேஷ்: மிகவும் சுவாரசியமான கேள்வி.
என்னுடைய பார்வையில் முன் திட்டங்கள் போடுவது backpackers மத்தியில் அதிகம் வேறுபட்டே இருக்கும். ஆனால், பணம் என்ற விஷயத்திற்கு உட்படும் பொழுது, பொதுவான முன் திட்டங்கள் உள்ளன.
எங்கே குறைவான விலையில் தரமான விடுதிகள் கிடைக்கும், எந்தப் பாதை சுவாரசியமாக இருக்கும், எந்த ஊருக்குச் சென்றால் அங்கு மக்களோடு மக்களாகச் சேர்ந்து சில மாதங்கள் வாழக்கூடிய வாய்ப்பு கிடைக்கும், போன்ற முன் திட்ட பட்டியல் நீளும்.
குறைவான விலையில் அதிக நாட்கள் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் பெரும்பாலும் எல்லா backpackers-ன் தாரக மந்திரமாக இருக்கும். அடிப்படையில் அவர்களின் ஆசை/நோக்கம் அதிக நாட்கள் பயணம் செய்வதே. அதிக நாட்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால் குறைந்த செலவுப் பயணத்தில் மட்டுமே அது சாத்தியப்படும். இதன் விளைவாகத்தான் hitchicking, couchsurfing, போன்றவை உருவாயின.
Backpackers மத்தியில் பொதுவாகவே கவனம் முழுவதும் பயண அனுபவத்தில் அதிகமாகவும், சுற்றுலாத்தளங்களின் மோகம் குறைவாகவும் இருக்கும். வாடகை வண்டிக்கு ஐந்து டாலர் கொடுத்து ஐந்து கிலோமீட்டர் பயணிப்பதைவிட, அந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சென்று, ஐந்து இடங்களைப் பார்த்து விட்டு, ஐந்து பேரிடம் உரையாடிவிட்டு, அந்த ஐந்து டாலருக்கு ஐந்து வகையான உணவை வயிறு நிறையச் சாப்பிட்டுவிட வேண்டும் என்கிற போக்கு உள்ளவர்கள் backpackers. நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தால் பயணம் செல்லும் நாட்டின் மொழியைக் கற்றுக்கொள்வது, அந்த நாட்டின் இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வது, யோகாசனம் எனப் பழகிக்கொள்வார்கள்.
நானறிந்து தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு கற்றுக் கொடுக்கும் ஆர்வமும் இவர்களிடம் அதிகம் இருக்கும் உதாரணத்திற்கு, நேபாள ஆதி குடிவாசிகளுக்கு ஆங்கிலம், கணினி கற்றுத் தருவதை நான் பார்த்துள்ளேன். ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தாலும், Backpackers பொதுவாக முற்போக்கு சிந்தனையாளர்களாகவே இருப்பார்கள். பெரும்பாலும் கார்ல் மாக்ஸ் ரசிகர்களாக இருப்பவர்களைச் சந்தித்துள்ளேன். சிந்தனையாளர்களாக இருப்பதாலேயே பெரும்பாலும் ஆழமான தேடல் அவர்களிடம் காணப்படும். சில நேரங்களில் இத்தேடல் உள் நோக்கி இருக்கும். இதனால்தான் ரிஷிகேஷ், வாரனாசி போன்ற இந்து திருத்தலங்களில் இவர்கள் அதிக நாட்கள் தங்கி தியானம்,யோகசனம் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
ஏற்கனவே போட்ட துவைக்காத சட்டையும் அழுக்கடர்ந்திருக்கும் ஜீன்ஸும் திசை அறியாமல் வளர்ந்து நிற்கும் தாடியும் என எதுவுமே அவர்களைப் பாதிப்பதில்லை. மிகப்புதிதாக அறிமுகமாகும் ஒருவரோடு அறையை ஷேர் செய்துகொள்ள கொஞ்சமும் தயங்காத மகா தைரியசாலியாக இருப்பார்கள்.
கேள்வி: hitchicking, couchsurfing என்பது பற்றி விளக்குங்கள்?
சுரேஷ்: Hitchiking என்பது முன்பின் பழக்கமில்லாதவரின் கார்களிலோ அல்லது வாகனங்களிலோ உதவி கேட்டு பயணம் செய்யும் முறை. பெரும்பாலும் பணம் கொடுக்கத் தேவையில்லை. சில நேரங்களில் நீண்ட தூரம் பயணம் செய்யும் சரக்கு லாரி ஓட்டுநர்கள் பேச்சுத் துணைக்கு hitchikingசெய்யும் பயணிகளுக்கு இடம் தருவார்கள். பயணிக்க இடமும் கொடுத்து சாப்பாடும் வாங்கி கொடுக்கும் லாரி ஓட்டுனர்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்தப் பயண முறை பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும், போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஆதரிக்கப்படுகிறது. Hitchiking செய்வதற்கென்று குறிப்பிட்ட கை சைகை உண்டு. கட்டை விரலை உயர்த்தி மற்ற நான்கு விரல்களையும் உள்ளங் கைக்குள் மடக்கி நாம் போக நினைக்கும் திசையை இந்தக் கையால் நீட்டினால் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் புரிந்துகொள்வார்கள், இவர் ஒரு hitchiker என்பது.
Couchsurfing என்பது hitchhiking போன்று இலவசமாக பெறப்படும் சேவையே. Couchsurfing இலவசமாக ஒருவரின் வீட்டில் சில நாட்களுக்கு தங்கிக்கொள்வது. இந்த வசதியைப் பெற பயணத்திற்கு முன்பே மின்னஞ்சல் வழியோ அல்லது குறிப்பிட்ட Apps மூலமாக அந்த நாட்டின் வாழும் அறிமுகம் இல்லாத ஒருவருடன் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த சேவையை வழங்குபவர்கள் பெரும்பாலும், இதற்கு முன் வேறு யாரிடமோ இந்த சேவையைப் பெற்றவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பயணிகளாக இருப்பார்கள். நேற்று எனக்கு வேறொருத்தர் உதவினார். இன்று நான் உனக்கு உதவுகிறேன். நாளை நீ யாருக்காவது உதவு எனும் கொள்கையில் இந்தச் சேவை இப்பொழுது வெற்றிகரமாக உலகம் முழுதும் courchsurfing Apps மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பயண முறை என்றாலும் இதில் முன்பின் பழக்கமில்லாதவர்களின் உதவி என்ற உறுதிமொழி சில நேரங்களில் சங்கடங்களுக்கு இழுத்துச் சென்ற கதைகள் அதிகம் உண்டு. எனவே, கவனம் தேவை.
கேள்வி : உங்கள் பயணங்கள் அதிக நாட்களை உள்ளடக்கியவையாக உள்ளன. பயணம் செல்ல பணியிட விடுமுறையில் கிக்கல் இருப்பதில்லையா?
சுரேஷ்: இதற்கு முன்பு நான் ஒரு அரசு ஊழியர். சிரம்பான் பொது மருத்துவமனையில் histotechnologist (புற்றுநோய் ஆய்வாளராக) பணியாற்றி வந்தேன். வருட விடுமுறை 25லிருந்து 30 நாட்கள் வரை கிடைக்கும். வருட விடுமுறைகளை வெறுமனே எதற்கும் பயன்படுத்தாமல் என் தனிப் பயணத்திற்கு சேகரித்து வைத்து ஒரே மூச்சாக ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் தனிப் பயணம் சென்றுவிடுவேன்.
கேள்வி: சில நாடுகளில் கூகுள் பயன்பாடு இருப்பதில்லை. அதுபோன்ற இணைய வசதி இல்லாத நிலையில் அல்லது ஆங்கிலப் புழக்கம் அறவே இல்லாத சூழலில் எப்படி நிலையைச் சமாளிப்பீர்கள்?
சுரேஷ்: கூகுள் பயன்பாடு அறவே இல்லாமல் நான் அவதிக்குள்ளான நாடு சீனா என்றே சொல்லவேண்டும். “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே, கூகுள் இல்லாத நாட்டிற்கு தனியே பயணம் செல்லாதே” இப்படி அடிக்கடி முனகிக்கொண்டாலும், என்னுடய அதிகப்படியான பயணங்கள் சீனாவை நோக்கியே இருந்துள்ளது.
முகநூல் பக்கமாக தகவல் தேடலாம் என்றால் அதற்கும் வழி இருக்காது. யாஹூ சொல்ல வேண்டியதில்லை. சீன அரசாங்கத்தை இப்போது நன்கு அறிந்துக்கொண்டேன். இது சீனாவின் குறைபாடல்ல, அவர்களின் கெட்டிக்காரத்தனம் என்றே சொல்வேன். ஒரு பில்லியன் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் சீரமைக்கவும் கம்யூனிசம் ஒன்றே சிறந்த தீர்வு; மக்களாட்சி அல்ல என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன். கூகுள் பிரச்சனைக்கு வருவோம். கூகுள் இல்லாத நிலையில் பைடு (baidu) போன்றவற்றை பயன்படுத்த வேண்டியது வரும். கூகுல்தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு கவலை வேண்டாம், VPN (virtual private networks) கைகொடுக்கும். ஆனால், இந்தச் சேவையைப் பெற தனிக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். ஆகவே, எனது சாய்ஸ் vpn அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும்.
சீனாவில் எல்லா backpackers விடுதிகளிலும் ஆங்கிலம் கொஞ்சமாவது புழக்கத்தில் இருக்கும். எனவே, விடுதியை விட்டு வெளியே செல்வதற்கு முன்பாக அதன் முகப்பில் எல்லா தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வேன். பெரும்பாலும் என்னுடைய பயணங்கள் எல்லாம் எனது கால்களை நம்பியே இருக்கும். அதிகப்படியாக 30 கிலோமீட்டர்கூட ஒரு நாளைக்கு நடந்திருக்கிறேன். அப்படி நடந்துச் செல்லும் பாதையில் வழித் தவற நேர்ந்தால், ‘வழியில் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது, எனக்கு சீன மொழி புரியாது’ என்ற நிலைதான் மிஞ்சும். எனவே, அந்த சமயங்களில், என் கண்கள் தேடி அலைவது அருகாமையில் நட்சத்திர ஹோட்டல்கள் ஏதும் உண்டா என்றுதான். பெரும்பாலும், ஹோட்டல் முகப்பில் இருப்பவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அதுவே ஐந்து நட்சத்திர விடுதி என்றால், கண்டிப்பாக ஆங்கிலம் பூத்துக் குலுங்கும் அல்லவா. அங்கே சென்று வழி கேட்டு அறிந்துகொள்வேன். மற்ற வேளைகளில் கைஜாடை கை கொடுக்கும்.
கேள்வி : இணையம் இல்லாத காலத்தில் உங்கள் பயண அனுபவம் எப்படி இருந்தது?
சுரேஷ்: இணையம் இல்லாத பயணம்தான் சிறப்பான பயணம் என்று சொல்ல ஆசையாக இருந்தாலும் இணையம் வந்த பிறகு சில விஷயங்கள் சுலபமாகிவிட்டதை பாரக்கும்பொழுது, அப்படிச் சொல்ல இயலவில்லை. உதாரணத்திற்கு விமான டிக்கெட், இணையம் வந்த பிறகு அது மலிவான கதை எல்லாம் அறிந்ததே. ஆனால் ஒரு விஷயத்திற்காக இணையம் இல்லா பயணத்தை நான் ஆதரிக்கிறேன். இணையம் இல்லாக் காலகட்டத்தில் பயணம் செய்யும் நாடுகளில் பயணம் செய்பவருக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் நல்லதோர் தொடர்பு இருந்தது. உதாரணத்திற்கு, கூகுள் மேப் இல்லாத காலகட்டத்தில் மக்களிடம் பேசியே ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தது. பேசும்பொழுது கருத்துப் பரிமாற்றமும், புதிய உறவுக்கான விதைகளும் ஆங்காங்கே விழுந்துகொண்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கான சாத்தியம் குறைந்துகொண்டே போகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மனிதநேயத்தை தொலைத்தே ஒவ்வொரு பயணமும் முடிகிறது.
கேள்வி: இனி வாழ்க்கை முடிந்தது என படபடத்த அனுபவமோ இனி ஊருக்குத் திரும்பவேகூடாது என ஸ்தம்பிக்க வைத்த மனநிலையோ பயணத்தில் ஏற்பட்டதுண்டா?
சுரேஷ்: படபடத்துப்போன அனுபவங்கள் நிறைய உண்டு… ஆனால் இதோடு வாழ்க்கை முடிந்தது என்ற நிலைக்கு நான் இன்னும் தள்ளப்பட்டதில்லை. படபடக்கச் செய்த அனுபவங்கள் பெரும்பாலும் எல்லை தாண்டும் சமயங்களில் மிகவும் சர்வசாதாரணமாக நிகழும். குறிப்பாக சீனா, கசகஸ்தான் போன்ற நாடுகளில். பணயக் கைதிகளைப்போல தடுத்து வைத்து, விசாரணை (interrogation) என்ற பெயரில் சில எல்லைகளில் நடக்கும் கொடுமை, எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாதது. எனக்குப் பழகிவிட்டது. அதிலிருந்து கடந்து செல்லும் வழிமுறைகளை அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டேன். ஒருமுறை mahendranagar என்ற நேபால் -இந்தியா எல்லையில் தீவிரவாதி என்ற சந்தேகத்தில் 2 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டேன். இதுபோன்ற நேரத்தில் பதட்டத்தை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதே கேள்வி. எதற்காக எங்கள் நாட்டிற்குள் உங்களுக்கு அனுமதி இல்லை என்று விளக்கம் கூறாமல் வெறும் சந்தேகத்தின் பேரில் நம்மை வெளியேற்றவும் சில நாடுகளுக்கு அதிகாரம் உண்டு. குறிப்பாக சீனா.
அன்னபுர்னா டிரெக்கிங் சமயத்தில் சில இடங்களின் /மலைகளின் அழகில் ஸ்தம்பித்து போய் இங்கே தங்கிவிட்டால் என்ன என்றெல்லாம் தோன்றியதுண்டு. ஆனால், சென்ற இடத்தில் என்னை, குறிப்பாக என் எண்ணங்களைப் புதுப்பித்த பிறகு, நான் செல்ல நினைக்கும் அடுத்த இடம் என் குடும்பமாகவே இருக்கும். மேலே விட்டெறிந்த பந்து கீழே திரும்பி வந்தால்தான் அது தரையை மோதி மறுபடியும் உயரப் போக முடியும். பயணம் முடித்து வீடு திரும்புவது தனி சுகம். புத்துணர்ச்சியின் விளிம்புக்கு நான் எப்பொழுதும் தள்ளப்படுவேன். தேங்கிக் கிடைக்கும் வேலைகளை மறுபடியும் உற்சாகமாய் தொடங்குவேன். அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாவேன். ஒரு பயணத்தின் முடிவில்தான் இன்னொரு பயணம் தொடங்குகிறது… ஆதலால் பயணங்கள் முடிவதில்லை.
கேள்வி: இப்படியான பயணங்கள் உங்களுக்கு என்ன கற்றுத் தருகின்றன? இதைத் தொடர எது உந்துதலாக உள்ளது?
சுரேஷ்: கண்களில் படும் வேற்றுமை அழகானது. ஒரு தோட்டத்தில் பல வர்ணங்களில் பூத்திருக்கும் பூக்களைக் கண்டு ரசிப்பதுபோல; ஆனால், அதே வேற்றுமை ஆபத்தானது நம் மனதில் பூத்திருந்தால். இதையே எனக்குப் பயணங்கள் போதிக்கின்றன. மற்றபடி நொடிக்கு நொடி பரிணமித்துக்கொண்டிருக்கும் என் கனவுகளும், பரிணாமமே இல்லாத என மனைவியின் மனதும், என பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தனது கேள்விகளால் என்னை திணறடிக்கும் எனது மகனும் என் பயணத்துக்கு உந்துதலாக உள்ளனர்.
கேள்வி: பொதுவாக சிறுவர்களுக்கு புதிய இடங்களுக்குப் பயணம் செய்ய அதிக ஆர்வம் இருக்கும். உங்கள் மகனுக்கு எப்படி?
சுரேஷ்: ஆம், எனது சிறிய வயதின் மறுபிரதியை என் மகனிடம் பார்க்கிறேன். ஆனால், என் பயணங்களில் அவனையும் உடன் கொண்டு சென்று, இந்த உலகத்தை சுற்றிக் காட்டுவதில் எனக்கு உடன்பாடு குறைவு என்றே சொல்ல வேண்டும். அவன் பார்க்க வேண்டியதை அவன் முயற்சியிலே அவன் பார்க்கட்டும். இந்த உலக கதவை அவன் கைகள் கொண்டே அவன் திறக்கட்டும். அவன் என வழி வந்தவன் ஆனால் அவன் மேல் எனக்கு உரிமை இல்லை. அமேசான் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட என் மகனின் ‘Among The Stars’ by Sameer Monn என்ற கவிதை புத்தகம், அவனை ஒரு இளங் கவிஞர் என்ற அந்தஸ்திற்கு 14 வயதிலேயே உயர்த்தியிருக்கிறது. அவனின் இரண்டாம் புத்தகம் நாவல் வடிவில் கூடிய சீக்கிரம் வெளிவரவுள்ளது. அவ்வகையில் அவனும் பயணிதான். அக உலக பயணி.
கேள்வி: சுரேஷ், உங்கள் பேச்சில் இயல்பான கவித்துவம் உள்ளது. உங்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டா?
சுரேஷ்: பள்ளிப் பிராயத்தில் கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். காரணம் தெரியாமல் எல்லாமே காணாமல் போயிற்று காலப்போக்கில்.
கேள்வி: பிரயாண அனுபவ நூல்களை அல்லது திரைப்படங்களைப் பார்ப்பதுண்டா? உங்களைக் கவர்ந்தவை அல்லது முக்கியமானவை என்று ஏதும் உள்ளதா?
சுரேஷ்: நான் தமிழில் படித்த முதல் பயண அனுபவ நூல், என்றால் அது ம.நவீனின் மனசிலாயோ என்ற நூல்தான். அந்த நூல்தான் நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் என பயண அனுபவ நூலின் ஒரு reference என்று சொல்லலாம். மனசிலாயோ புத்தகத்தை அறிமுகப்படுத்திய நண்பர் ஹரிராஸ்குமார் ஹரிஹரன் அவருக்கு நன்றி. ஆங்கிலத்தில் விரும்பி படித்த நூல் தி ஆல்கெமிஸ்ட, பாவுலோ கவ்லோ.
பயணம் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. குறிப்பாக The secret life of walter mitty என்னை வெகுவாகக் கவர்ந்த படம் என்றே சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் இறுதிக்காட்சி முக்கியமானது.
பல வருடங்களாக காட்டு வாழ்க்கையைப் படமெடுக்கும் ஒருவர் குளிர் மலைப் பிரதேசத்தில் வெண்புலியைப் (ஸ்னோ லெப்பர்ட்) புகைப்படம் எடுக்கத் தவமாய் தவமிருந்து காத்திருப்பார். வெண்புலி கண்ணில் படுவது குதிரைக் கொம்பு. எதேச்சையாக படத்தின் கதானாயகனை அவர் கேமரவோடு வெண்புலியைப் புகைப்படம் எடுக்கக் காத்திருக்கும் அந்த இடத்தில் சந்திக்கிறார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்கிறது. பல வருடமாக காத்திருந்த வெண்புலி அவரின் கண்முன் தோன்றுகிறது. கேமராவின் Shutter-ஐ அழுத்தாமல் உறைந்து போய் வெண்புலியைப் பார்த்த கண்ணை அசைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது படத்தின் கதாநாயகன் அந்த புகைப்படக்காரரைப் பார்த்து “இதற்குத்தானே ஆசைபட்டாய், இதற்குத்தானே இவ்வளவு நாட்கள் தவமாய் தவமிருந்தாய், விசையை அழுத்து அழுத்து என்று வற்புறுத்த, அந்த புகைப்படக்காரர் கொடுத்த பதில் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது.
“இந்தக் காட்சியும் இந்தத் தருணமும் எனக்கு மட்டும்தான்.”
அதைத் தவிர்த்து, ஈரானியப் படங்கள் என்னை எப்பொழுதும் கவரும். அவை உலகத் தரம் வாய்ந்த படைப்புகள். மிகவும் எளிதான கதையம்சத்தில் பெரிய தாக்கத்தைக் கொடுத்துச் செல்வார்கள் ஈரானிய இயக்குனர்கள். உதாரணத்திற்கு, children of Heaven, white ballon, runner, where is my friend’s house, color of paradise, song of sparrows போன்ற படங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக இயக்குனர் மஜீத் மஜீடியின் படங்கள் என்றால், கட்டாயம் பார்த்துவிடுவேன். ஈரானியப் படங்களின் சிறப்பு என்னவென்றால், பெரும்பாலும் 80 சதவிகித திரைப்படங்கள் சிறுவர்களைச் சார்ந்தே இருக்கும். அங்கு ரொமான்டிக் மசாலாக்களுக்கு அனுமதி இல்லை. சிறுவர்களை நம்ம கமலஹாசனை விழுங்கும் அளவுக்கு நடிக்க வைப்பதில் ஈரானிய இயக்குனர்களுக்கு நிகர் யாரும் இல்லை.
கேள்வி: பயணங்களால் நீங்கள் எப்படி மாறியிருக்கிறீர்கள், உடலாலும் சிந்தனையாலும் செயல்பாட்டாலும்?
சுரேஷ்: எனது மனம் வளர்ந்ததும் தளர்ந்ததும் பயணத்தில்தான். வளர்ந்ததால் பெருமை கொள்கிறேன், தளர்ந்ததால் நிம்மதி கொள்கிறேன். மாற்றம் பெரிதாக இல்லை. குருட்டுத் தைரியம் கூடியிருக்கிறது அதிகமாக. அந்த ஏழு வயது சுரேஷ்தான் இன்னும் பயணம் செய்துகொண்டிருக்கிறான். அதே ஆசை, அதே தேடல், அதே ஆர்வம், பயம் மட்டும் குறைந்து.
கேள்வி : உங்கள் சிந்தனை வளர்ச்சி என்ன? தளர்ச்சி என நீங்கள் குறிப்பிடுவது எதை?
சுரேஷ்: சிந்தனை வளர்ச்சி என்று கூறுவது, பயணம் எனது பார்வையை அகலப்படுத்தியதைத்தான். ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்கின்ற ‘ஞானப் பார்வை’ கிடைத்திருக்கிறது. பயணத்திற்கு முன்பு, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று வீண் விவாதம் செய்துகொண்டிருப்பேன். பயணத்திற்கு பின்பு பகுத்தறிவு சிந்தனை (rational thinking) பயணத்தின் இலவச இணைப்பாகக் கிடைத்திருக்கிறது.
தளர்ச்சி என்று நான் குறிப்பிடுவது வேலைச் சூழல் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் இறுகிப்போயிருந்த மனம் எப்படி தளர்ந்தது என்பதையே. உதாரணத்திற்கு, பயணத்திற்கு முன்பு அதிகம் கோபப்படுவேன், பயணத்திற்கு பின்பு புத்தரின் சாயல் என்னிடம் கொஞ்சம் தென்படுகிறது. பயணத்திற்கு முன்பு அதிகம் பதட்டப்படுவேன், பயணத்திற்கு பின்பு பரமபிதாவின் பொறுமை சேர்ந்துள்ளது.
கேள்வி: உலகில் பல மதங்களும் யாத்திரை என்ற பெயரில் நீண்ட பயணங்களைச் செய்யச் சொல்லி மக்களை தூண்டுகின்றன. உங்கள் அனுபவத்தில் நீங்கள் உங்களை ஒரு யாத்திரீகராக உணர்ந்துள்ளீர்களா?
சுரேஷ்: யாத்திரிகனாக எனக்கு ஆசைதான். ஆனால் அதற்கு நான் தகுதி உள்ளவனா என்று கேட்டால் கொஞ்சம் தயங்குவேன். யாத்திரிகன் என்ற தகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்வதே நியாயம் என்று தோன்றுகிறது. ஏனென்றால், தீவிரமான யாத்திரிகர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் தேடல் மிகவும் ஆழமாக இருக்கும். அவர்களின் பயணம் ஆண்டுகளாய் நீண்டிருக்கும். அனுபவங்கள் புத்தகத்திலும் அடங்காது.
கேள்வி: பயணங்கள் உங்கள் ஆன்மிக வாழ்வில் பங்காற்றுகின்றனவா?
சுரேஷ்: என்னைப் பொறுத்தமட்டில், ஆன்மிக வாழ்க்கை ஆன்மிகமற்ற வாழ்க்கை என்று இல்லை. ஒரு நிலை மட்டுமே உண்மையானது.
“அவர் ஆன்மிக வாழ்க்கையைப் பின்பற்றுகிறார். அவர் ஆன்மிக வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறார்” என்பதெல்லாம் எப்படியென்றால், ஒருவர் ஏற்கனவே கட்டி வைத்து வாழ்ந்த வீட்டிற்கு,‘ஆன்மிக மாளிகை’ என்று புதிதாய் பெயர் சூட்டி, அதற்கு கிரகப்பிரவேசம் செய்யும் முயற்சி போன்றது. ஏற்கனவே பெற்றிருப்பதை இப்போதுதான் பெற்றேன் என்று சொல்வதைப் போல
ஆன்மிகம் என்ற விஷயத்தைத் தள்ளி வைத்துவிட்டு, வாழ்க்கை என்ற அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்தினாலே போதும். சந்தோஷம் நம் சொந்தமாகும். நாம் வேண்டினாலும் வேண்டாமல் போனாலும், நமது உறுப்புகளில் ஒன்றைக் கூட நம்மால் இயக்க முடியாது, நம் சொல் பேச்சை ஓர் உறுப்புகூட கேட்காது. அவை ஏதோ ஒரு சக்தியினால் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படி இயங்கும் உறுப்புகளை ஒழுங்காக பராமரித்துவிட்டாலே பெரிய விஷயம். மற்றபடி நான் நாத்திகனெல்லாம் இல்லை.
என்னுடைய பயணத்தில் ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாக புலப்படுகிறது. என்னுடைய ஆன்மா தேடவேண்டியதை எல்லாம் தேடிக்கொண்டிருக்கிறது. அது அதன் வழி பயணிக்க எனது சரீரம் உதவிக்கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
கேள்வி: புதிதாக தனிப்பயணங்களை மேற்கொள்ள விரும்பும் ஒருவர் கவனத்தில்கொள்ள வேண்டியவை என்னென்ன?
சுரேஷ்: தனிப் பயணம் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டார் என்றால், அவரின் ஆன்மா எதையோ தேடுகிறது என்றே அர்த்தப்படும். அந்தத் தேடலில் வெற்றி காண முன் ஏற்பாடுகளுக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். புதிதாக தனிப் பயணம் செய்ய விரும்புவர்களுக்கு முன் ஏற்பாடுகள் கொஞ்சம் பலமாகவே இருக்க வேண்டும் என்று சொல்லமாட்டேன். காரணம், முன் ஏற்பாடுகள் அதிகமாகிவிட்டால் உங்களின் தனிப் பயணம் சுற்றுலாப் பயணமாகிவிடும். சுவாரசியம் குறைந்துவிடும். எதார்த்தங்கள் விலகிவிடும். உங்கள் ஆத்மா தேட நினைத்ததொன்று நீங்கள் தேடியது ஒன்று என்றாகிவிடும். ஆகவே, முன் ஏற்பாடுகளைக் குறைத்துக்கொள்வதே நலம்.
உங்களுடைய பட்ஜெட் என்ன, எத்தனை மாதங்கள் உங்கள் பயணம், எந்த நாடுகள் என்பதை தெளிவு செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட நகரத்தில் சராசரி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எவ்வளவு செலவாகும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் பட்ஜெட் போடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
தரைவழிப் தனிப் பயணம் என்றால் எல்லையைத் தாண்டுவதில் எழும் பிரச்சனைகளை முன் கூட்டியே அறிந்துகொள்ளுங்கள், அங்கே பொதுவாக நிகழக்கூடிய ஏமாற்றுகள் என்னென்ன என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். தாய்லாந்து- கம்போடியா (Arranyapratet) எல்லையில் நான் ஏற்கனவே பிறர் அனுபவத்தில் நடந்த ஏமாற்றுகளில் ஒன்றைப் படித்து தெரிந்து வைத்திருந்ததால், அந்த அனுபவம் எனக்கு நடக்கும்பொழுது சுதாரித்துக்கொள்ள முடிந்தது. இல்லையேல், தேவையில்லா பண விரயத்திற்கும் ஆளாகவேண்டியிருந்திருக்கும்.
செல்லவிருக்கும் நாடுகளின் பழக்க வழக்கங்களையும் கலாச்சாரத்தையும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஊதாரணத்திற்கு, ரஷ்யாவில் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிப்பது வழக்கமல்ல. அப்படி யாரும் முன்பின் பழக்கமில்லாதவர்கள் உங்களைப் பார்த்து சிரித்தால், ஒன்று அவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவராக இருக்கமாட்டார்… இல்லையேல் அவர் குடித்திருக்கக்கூடும்.
அந்த நாடும் அந்த இயற்கையும் என்ன உங்களுக்கு வழங்குகிறதோ அதை முழு மனதாக ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள்தான் அந்த இடத்திற்கும் இயற்கைக்கும் ஏற்றவாறு மாறவேண்டுமே தவிர அந்த இடம் உங்களுக்காக மாற வேண்டியதில்லை. கனிம நீர் கிடைக்கவில்லையே என்று முனகுவதை நிறுத்திக்கொண்டு, குழாய் நீரிலும் தாகம் தீரும் என்று நம்புங்கள். கலாச்சார அதிர்ச்சி ஏற்படும்போதெல்லாம் ஒன்றை ஞாபத்தில் கொள்ளுங்கள். பயணம் செய்யும் நாட்டின் கலாச்சாரத்தையோ பழக்கவழக்கத்தையோ விமர்சிக்க எந்தத் தகுதியும் நமக்கு இல்லை. இயற்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையும் சவால் விடுவதையும் நிறுத்திக்கொண்டால் எல்லாமே சாதகமாக முடியும்.
ஆபத்து வேளைகளில் உங்களின் பணமோ, அல்லது உங்களின் சொந்த நாடோ உடனே உங்களைக் காப்பாற்றப் போவதில்லை, ஆனால், உங்களின் பணிவு, உங்களின் அடக்கம் அத்தருணத்தில் கண்டிப்பாகக் கைகொடுக்கும். எனவே, பணிவாகப் பேச, பழக தயார் படுத்திக்கொள்ளுங்கள். தீர்க்க முடியாத பிரச்சனைகள் வரும் தருணத்தில், உங்கள் நாட்டின் எம்பசியை தொடர்புகொள்ளலாம். அப்படியே நீங்கள் போலீஸ்காரர்களால் தடுத்து வைக்கப் பட்டால், உங்கள் நாட்டின் எம்பசியை தொடர்பு கொள்ள அனுமதி கேளுங்கள். அது உங்களின் உரிமை. முன்கூட்டியே எம்பசியின் தொடர்பு எண்ணை சேமித்து வைத்துக் கொள்வது அத்தியாவசியம். நீண்ட நாட்கள் சில நாடுகளில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், முன் கூட்டியே மின்னஞ்சல் மூலமாக உங்கள் நாட்டு எம்பசிக்கு தெரிவித்து விடலாம். பயணத்திற்கு முன்பு உங்களின் சர்வதேச பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். சர்வதேச பாஸ்போர்ட் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, எம்பசியை தொடர்புகொண்டு தற்காலிக பாஸ்போர்ட் விரைவில் பெற உங்களின் ஸ்கேன் பிரதி உதவியாக இருக்கும்.
கேள்வி: பயணம் தொடர்பான குழுக்களிலோ பிற பயணிகளுக்கு ஆலோசகராகவோ செயல்படுவதுண்டா?
சுரேஷ்: ஆம், என்னுடய மலையேற்றம் சம்பந்தப்பட்ட பயணங்களில், குறிப்பாக அன்னபுர்னா பேஸ் கேம்ப், எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பயணங்கள் யாவும் என்னுடைய ஏற்பாட்டில் இருக்கும். பயண ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறேன். 2017-ல் நான் தனியாகப் பயணம் செய்த ‘கோலாலம்பூர் முதல் தென்கொரியா வரை’யான தரைவழிப் பயணத்தை சென்ற 2020, ஜனவரி மாதம் RTM தொலைக்காட்சிக்காக 13 பாகங்களாக வடிவமைத்தும், ஒருங்கிணைத்தும் கொடுத்துள்ளேன்.
கேள்வி: ஏ.கே செட்டியார் என்பவர் 1940களில் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற பெயரில் தன் உலகப் பயண அனுபங்களை நூலாக எழுதியுள்ளார். அது இன்றும் வாசிக்கப்படுகின்ற நல்ல நூல். உங்கள் மலேசிய சைக்கிள் பயண அனுபவங்களை உடனுக்குடன் யூடியூப்பில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தேன். அவ்வகையில் பயண நூல் எழுதும் எண்ணம் ஏதும் உள்ளதா?
சுரேஷ்: எனது மலேசிய சைக்கிள் பயண நூலூக்கான எழுத்து வேலை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் உங்கள் கைகளைச் சேரும் என்று நம்புகிறேன். மற்ற பயணங்களைக் காட்டிலும் இந்தச் சைக்கிள் பயணம் என் ஆன்மாவிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. மற்ற பயணங்கள் சார்ந்த எழுத்து வடிவங்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் யாவும் பயணங்கள் முடிவதில்லை என்ற தலைப்பில் எனது தமிழ் வலைத்தளத்தில் sureshexplorer.com பதிவு செய்து வருகிறேன். படிக்கவும், பகிரவும்.
கேள்வி: அடுத்து என்ன பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
சுரேஷ்: நான் பிறந்த என் லின்சம் தோட்டத்தில் தொடங்கி ஐரோப்பாவில் முடிவடையும் எனது தனி சைக்கிள் பயணம். இது எந்த வகையில் சாத்தியம் அல்லது சாத்தியமில்லை என்று தெரியவில்லை. ஆனால் மனசு அசைப் போட தொடங்கிவிட்டது, மிகவும் அழகான screenplay ஒன்று மனதுக்குள் ஓடத் தொடங்கிவிட்டது.
கேள்வி: ஆனால் இன்று சூழலில் நாம் பக்கத்து மாநிலத்துக்குக்கூட போக முடியாத சூழலில் தனிமைப்பட்டுக் கிடக்கிறோம். கோவிட் தொற்று உள்ள இந்த நேரத்தில் நீங்கள் பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். இப்படியே தொடர்ந்தால் இனி உங்கள் திட்டம் எப்படி அமையும்?
சுரேஷ்: கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர், கண் சிமிட்டும் நேரத்துக்குள் நம் கதையை முடித்துவிடும். அடுத்து ஏதும் உண்டா என்றால், வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்ல வேண்டும். எனவே, கோவிட்டுக்கு பிறகு பயணங்களை மக்கள் அதிகம் நேசிக்கத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். இந்த வைரஸ் ஒரு வருட காலமாக, உலக மக்களை வெகுவாக பயமுறுத்தியிருந்தாலும் மாறாக பயணத்திற்கு அவர்களை அதிகம் ஏங்கச் செய்திருக்கிறது என்பதே உண்மை. இணைய வகுப்பறைகள்போல இணைய பயணம் (virtual travel) மனிதனை சந்தோஷப்படுத்த வாய்ப்பு அறவே இல்லை. ஆன்லைன் வகுப்பறைகள் போல virtual travel மனிதனை சந்தோஷப்படுத்த வாய்ப்பு அறவே இல்லை. மண் வாசனை நுகரவேண்டுமென்றால் மண்ணில் கால் மிதித்தே ஆகவேண்டும். கண்டம் தாண்டவேண்டுமென்றால் விண்ணில் பறந்தே ஆக வேண்டும். இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாம் பழைய நிலைக்கு மாறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.
நேர்காணல்:
ம.நவீன்
அ.பாண்டியன்
இந்த நீளமான நேர்காணலை இரு முறை வாசித்தேன். பயணம் செய்த அனுபவத்தைக் கடந்து அவர் அதை சொல்லியுள்ள விதம் ஈர்ப்பானது; கவித்துவமானது. மலேசியாவில் தனிப்பயணம் போக ஏற்ற இடம் எதுவென கேட்டிருக்கலாம்.