மலேசிய கவிஞர்கள் வரிசை – 3 : கோ.புண்ணியவான்

‘உங்கள் கையில் இருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால், எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவே கண்ணில் படும்’ என்று உளவியலில் ஒரு கூற்று உண்டு. உங்கள் கையில் சுத்தியும் அரிவாளும் மட்டுமே இருக்குமென்றால் எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவும் தலைகளாகவும் தென்படும் என்று அதை நகைச்சுவையாகவும் சொல்வார்கள். சமூகத்தின் பிரச்சனைகளைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கைகளில் இருக்கும் கருவிகளையும் அவற்றின் எண்ணிக்கையையும் பொறுத்து வெவ்வேறு விதமாகக் கையாண்டு வந்துள்ளனர்.

தமிழின் கவிதையியலில் அகம் புறம் என்ற பகுப்புமுறை இருந்துள்ளது. காதலும் பிரிவும் அகத்திணைக்கான பாடுபொருட்கள் என்றால் வீரமும் கொடையும் புகழும் நன்னெறியும் புறத்திணை பொருட்களாக அமைந்தன. இப்பகுப்பு முறையை ஒட்டி நவீன கோட்பாடுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. அவை வெற்றிகரமாக அமையாவிடினும், நவீனத்தமிழ்க் கவிதை விமர்சனத்தில் இந்த வகைப்பாடு தோராயமாக பெரும்பாலும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதே உண்மை. பழைய காலத்தின் ஐந்திணை உரிப்பொருள்களைத் தாண்டி, நவீன காலகட்டத்தில், தனிமை, இருத்தலியல் சோகம், உளத்திரிபுகள், ஆன்மிக தேட்டம் போன்ற தனிமனித நெருக்கடிகள் அனைத்தும் கவிதையின் அகத்தினைப்பொருள்கள் ஆயின. மறுபுறம் அரசியல், சமூக விமர்சனம், கருத்தியல் சார்புநிலைகள், சீர்திருத்தம், அதிகாரம் என சகல வித சமூக உள்ளடக்கங்களைக் கொண்ட கவிதைகளும் புறத்திணைப்பொருட்களைப் பயன்படுத்துபவையாகப் பார்க்கப்பட்டன.

இத்தகைய புறவயக் கவிதைகளில் இரண்டு உட்பகுப்புகளை வகுக்கலாம். ஒன்று சமூக உணர்வுடன் கூடிய விமர்சனக்கவிதைகள். இன்னொன்று ஏதோவொரு தரப்பின் அல்லது மக்கள் திறளின் குரலாக ஒலிக்கும் அரசியல் கவிதைகள். இவை தவிர ஆங்கிலத்தில் டாப்பிக்கள் கவிதைகள் என அழைக்கப்படும் சம்பவக்கவிதைகள் / எதிர்வினைக்கவிதைகள். எதாவது ஒரு சம்பவத்தையோ,அல்லது முக்கிய நிகழ்வையோ ஒட்டி எதிர்வினையாக எழுதப்படும் கவிதைகள்.

பாரதியின் கவிதைகளிலே இந்த பகுப்பை செய்து பார்க்கமுடியும். அவரது தேசிய கீதங்கள் புற வகையறாவைச் சேர்ந்ததென்றால், மெய்ஞானப்பாடல்கள், கண்ணன் பாட்டு போன்றவற்றை அகத்துறையாகக் கொள்ளலாம். பின்வந்த காலத்தில் சமூகம் சார்ந்த கவிதைகளுக்கும் தீவிர நவீனக்கவிதைகளுக்கும் இடையே தொடர்ச்சியான வாக்குவாதம் இருந்துவந்தது. எண்பதுகளில் இத்தகைய முரண்கள் கூர்மையிழந்து, தொன்னூறுகளில் இந்த கருத்தியல் மோதல்கள் விமர்சனத்தளத்தில் பெரிதும் வலுவிழந்தன எனலாம். சோவியத் யூனியனின் உடைவு, இடதுசாரி கருத்தியல் தரப்பைப் பலவீனப்படுத்தியது இதற்கொரு காரணமாகக் கூறலாம். ஆயினும் பின்னர் பின்நவீனத்துவம் தலித்தியம் பெண்ணியம் போன்றவற்றின் எழுச்சியால் புறம் சார் கவிதைகளின் புதுவெள்ளம் தமிழ்க்கவிதையில் நிகழ்ந்தது. இந்த தரப்பு, அந்த தரப்பு என்ற நிரந்தர நிலைபாட்டுக்களங்கள் இல்லாவிடினும் இன்று எழுதப்படும் பெரும்பாலான கவிஞர்களின் படைப்புகள் சமூக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவே செய்கின்றன. இவ்விடத்தில், இப்பகுப்பிற்குள் ஒன்றான அரசியல் கவிதைகள் பற்றி ஒரு டைவெர்ஷன் எடுக்க வேண்டியுள்ளது.

அரசியலில் மொழியின் பங்கு முக்கியமானது. உரையாற்றும் திறன் ஆட்சியாளர்களுக்கு அவசியம் என்று பண்டைய கிரேக்கத்தில் கருதப்பட்டது. ஆட்சிபீடத்திற்கு வர வாய்ப்புள்ளவர்களுக்கு மொழித்திறனைப் பயிற்றுவிக்கும் நபர்கள் இருந்துள்ளனர் ரோமானிய காலகட்டத்தில்.இலக்கியம் என்பது மொழி வழி இயங்கும் கலைத்துறை.’ரெட்டாரிக்’ எனும் அணியியல் சாதனம் கலைக்கும் அரசியலுக்கும் பொதுவாக வலியுறுத்தப்பட்ட ஒன்று. ஏனெனில் மொழியில் உள்ள இயங்கு விசை மன உணர்வுகளைப் போலவே மக்கள் திறளையும் திரட்ட வல்லது. எனவே ஆட்சியாளர்களுக்கு எப்போதும் இலக்கியவாதிகள் மேல் ஒரு கண் இருந்துவந்திருக்கிறது. பிளேட்டோ கவிஞர்களை வெளியேற்ற நினைத்ததையும், அதன்படி கமிஸார்கள் அவர்களை சைபீரியாவிற்கு நாடுகடத்தியதையும் நாம் பார்த்திருக்கிறோம். தமிழ் பாரம்பர்யத்தில் புலவர்கள் என்போர் மன்னர்களது மகிமையைப் பாடுவதற்கும் அவர்களது பெருமையை வரலாற்றிலும் வாழும் மக்களிடமும் நிறுவுவதற்கும் பெரிதும் பயன்பட்டுள்ளனர். பாடாண் திணை என்று ஒரு வகைமையே இருந்துள்ளது இதற்கு. இந்த வழக்கம் முன்நவீன காலம் வரைக்கும் நீண்டுள்ளது,ஏன் இப்போதும் அரசியல் மேடைகளில் புலவர் புளகாங்கிதங்களைக் கேட்கிறோம் தானே.

இதற்கு மறுதலையாக கவிதையில் வலியுறுத்தப்படும் அறன் என்பது நீதியின் குரலாக அதனாலேயே ஆள்வோருக்கு எதிர்நிலையில் நின்று உரைக்கப்பெறுவதாக உள்ளது. ’அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வதைத் தேய்க்கும் படை’ என்பது அதிகாரப்பீடத்திற்கும் வலியோர்க்கு எதிராகவும் எழுந்த குரலாகவே இருக்கமுடியும். இந்த அறன் வலியுறுத்தும், நீதி நிலைநாட்டலின் குரலின் நீட்சியாகவே நவீனத்திற்கு பிறகான அரசியல் கவிதைகள் எழுதப்பட்டன. ஜனங்களின் குரலாக ஒலித்ததன் மூலம் தங்கள் தரிப்பிடத்தை பழைய புலவர்களிடம் இருந்து நவீன கவிஞர்கள் எதிர்நிலைக்கு நகர்த்திக்கொண்டனர். முதலில் ஜனநாயகத்தின் குரலாகவும், பின் அதைச் சீராக்கி மேம்படுத்துபவனது குரலாகவும் ஒலிக்கத்துவங்குகின்றனர். எழுத்தாளன் என்பவன் ஆட்சியதிகாரத்தை மட்டுமின்றி சமூகத்தையும் விமர்சிப்பவனாகவும் தன்னை இருத்திக்கொள்கிறான். அந்தக் கொடிவழியே சமூக விமர்சன படைப்புகள் உருவாயின. சொல்லப்போனால் நவீனத்துவத்தின் தொடக்க படைப்புகளில் சீர்திருத்தத்திற்கான, மறுமலர்ச்சிக்கான, சமூக விமர்சனத்திறகான எத்தனிப்பே பெரிதும் ஓங்கியிருந்தது. அவை மக்களைச் சென்று சேர வேண்டும் என்ற அவாவினாலேயே படைப்புகள் உரைநடையில் எழுதப்பட்டன.ஆக, நவீன இலக்கியம் கருத்து பிரச்சாரமாகவே தொடங்கிற்று.

அரசியலின் பார்வைக்கு உட்படும் விஷயங்களைத் தாண்டி காணும் கண்கள் கலைக்கு உண்டு. அப்படியான காணியல்பே கலையின் பலம். அரசியல், அது எவ்வளவு பரந்துபட்ட பார்வையைக் கொண்டிருந்தாலும், இருமை நிலைகளை உருவாக்கியபடியே இருக்கும். ஏனெனில் அதற்கு நடைமுறை தளத்தில் கடப்பாடு இருக்கிறது. தீர்வு காணவேண்டிய நிர்பந்தம் உள்ளது. எனவே செயற்தளத்தில் அது நடவடிக்கைகாக ரெட்டைகளைப் புனைகிறது. மாறாக எழுத்தாளன், ’க்ரே ஸ்கேல்’ என்று சொல்லக்கூடிய இடைநிலை வர்ணபேதங்களைக் காண்பதிலேயே ஆர்வமுறுகிறான். இருமைகளின் ஊடே ஒரு குழப்பநிலைக்குச் செல்கிறேன். அந்தக் குழப்பத்தைக் கடந்து மேலெழும்பி எதிரிடைகளின் புறச்சிக்கல்களையும், உள்முரண்களின் இயக்கத்தையும் கண்டு அதனினும் அகன்ற அடிப்படைத்தளத்திற்குள் புகுகிறான்.அரசியலின் தீர்வைத் தாண்டிய ஒரு விகாசமான தரிசனத்தை முன்வைக்கிறான்.அது அந்த அரசியலிற்கு எதிரானது என்பதில்லை. அதன் இயங்குதளம் வேறு, அவ்வளவுதான். மேலும் அதன் பார்வைத்தொலைவு என்பது அரசியலினுடயதை விட ஆழ்ந்தகன்றது. ஏனெனில் தீர்வை எட்டுவதற்கோ, அதற்காக இருமை நிலைகளை உறுதிப்படுத்தவோ கலை இலக்கியம் முனைவதில்லை. அது சகலவித சமூக எளிமைப்படுத்தலுக்கும் எதிரானதாக இருக்கிறது.

இதைத் தாண்டி அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக அல்லது அதற்கு ஆளாகும் ஒரு மக்கட்குழுவின் பிரதிநிதியாக ஒலிக்கும் கவிதைகளும் உள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இப்படியான கவிதைகள் இப்போது அதிகமாக எழுதப்பட்டுவருகின்றன.எங்கும் அப்படியான அரசியல் சூழல்தான் நிலவி வருகிறது என்பதன் பின்னணியில் அக்கவிதைகளையும் அக்கவிதைகளுக்கான தேவையையும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

ஆனால் அரசியல் கவிதை என்பது அடிப்படையில் கவிதையாக இருக்கவேண்டும்.அது ஒன்றே நிபந்தனை. அப்படி இருக்கையில் அது அரசியலைப் பற்றி மட்டுமல்ல எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். அப்படைப்பில் தனித்துவமான நோக்குதிறனும் நுண்ணர்வும் தொழிற்பட்டிருத்தல் வேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அதேநேரம் கவிதையின் பாடுபொருளினாலே, அது சுமந்துவரும் நற்கருத்தினாலே அல்லது அதன் நிலைபாட்டினாலேயே அதற்கு இலக்கிய மதிப்பு ஏற்படுவதில்லை. அது உண்டாக்கும் கவித்துவ விளைவே கவித்துவ மதிப்பை ஏற்றுகிறது. 

தமிழில் சமூக உள்ளடக்கம் கொண்ட கவிதைகள் புத்தெழுச்சியுடன் அதிகம் எழுதப்பட்டது வானம்பாடி கவிஞர்களால். சொல்லப்போனால் வானம்பாடி இயக்கம் மக்களிடையே பிரபல்யம் பெற்றதற்கு அதுவும் ஒரு காரணம். சமூக உணர்வுக்கு முதன்மை தந்து கவிதை படைப்பது தான் வானம்பாடிகளின் பாணி, வீரியம் தான் வானம்பாடி உணர்வின் மையம் என்கிறார் அவ்விதழின் பங்களிப்பாளர்களில் ஒருவரான கோவை ஞானி.வானம்பாடி கவிதைகளின் நகல் பெருக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல அயலக தமிழ்நிலங்களிலும் நிகழ்ந்துள்ளது. வானம்பாடிகளின் தாக்கத்தால் அதே பெயரில் ஓர் வார இதழ் மலேசியாவிலும் நடத்தப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. எனவே மலேசியாவில் நவீன கவிதைப்புலம் அதன் முழுமையான பரிமாணத்தில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. தவிர மொழிபெயர்ப்புகளின் வழி உலகளாவிய கவிதைகளின் செல்நெறியும் அறியப்பட்டுள்ளதாய் தோன்றவில்லை.

கோ.புண்ணியவானின் ‘சூரியக் கைகள்’ எனும் புதுக்கவிதை தொகுப்பினை வாசித்தபோது அவற்றில் பெரும்பாலான கவிதைகள் இரண்டாம் வகை வானம்பாடி விமர்சனக் கவிதைகளின் சாயல் பெற்றிருப்பவை. அவை போலவே பெரும்பாலும் சமூக உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பவை. ஆனால் வானம்பாடி உணர்வின் மையமாக ஞானியால் குறிப்பிடப்படும் வீர்யம் இல்லாதவை. மாறாக சற்று எள்ளல் தொனிப்பவை. சுவையுணர்வோ சுவாரஸ்யமோ குன்றியவை என்பதை உணர முடிகிறது

கொலைகளை மறைக்கும் வழி

எல்லாம் முடிந்த பின்னர்

நன்றி கூறி

வாழ்த்துச்சொல்லி

கட்டியணைத்து

கண்ணீர் உகுத்து

அஞ்சலி பாடி

கடைசியாக

சரித்திரமாக்கிவிடுகிறோம்

வெட்கமில்லாமல்

இந்தக்கவிதையில் உள்ள முரணும் கருத்தும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு ஒரு செய்தி கூட அல்ல. இந்தக்கவிதைகள் யாரை நோக்கி எழுதப்பட்டன என்பது முக்கிய கேள்வி. ஏனெனில் சமகால உணர்திறனைப் பெற்றிருக்கும் நவீன இலக்கியம் அறிந்த ஒருவருக்கு இவை கவிதைகளாகத் தோற்றமளிக்க முடியாதவை. சுருக்கமான காரணம், அவர் நன்கறிந்த விஷயங்களின் தொகுப்பாகவே இது போன்ற கவிதைகள் தோற்றமளிக்கும். கவிஞன் சமூக எதார்த்தத்தின் நுண்ணிய தளங்களுக்குள் நுழைய வேண்டும் அப்போதுதான் நுட்பமான கவித்துவ நகர்வுகளை கணிக்கமுடியும். மாறாக மேலோட்டமான பொது புகாரளிப்பு மனநிலையிலேயே தங்கியிருந்தால் அத்தகைய தேய்வழக்கான விமர்சனக்கருத்துகளையே உதிர்க்கமுடியும். உதாரணத்தில் இத்தொகுப்பில் உள்ள இப்படியொரு கவிதை:

கொம்பு முளைத்தவன்

ஆளாள கண்டன்

அசகாய சூரனெல்லாம்

காலி செய்த

நாற்காலியில்

அமர

பலர்

அடித்து பிடித்து

வரிசையில் நிற்கின்றனர்

அதிகாரம் குறித்து தமிழில் அதிக எண்ணிக்கையில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அதிகாரம் என்ற வார்த்தை ஒரு பத்தாண்டு தமிழ்க்கவிதையின் மையமாகவே வீற்றிருந்தது எனலாம். யவனிகா ஸ்ரீராம் போன்ற கவிஞர்களின் படைப்புகளில் இருந்து அதிகாரத்தின் நுண்ணிய சலனங்களைக் கண்டறிய முடியும். கோ.புண்ணியவானின் கவிதைகள் இத்தகைய பாடுபொருட்களைப் பற்றிப்பேசுவது பிரச்சனையில்லை. ஆனால் அவை எந்தவித நுட்பத்தையும் சென்றுதொடுவதில்லை என்பது தான் குறைபாடே. உணர்ச்சிகரத்திலோ, அனுபவத்தளத்திலோ அல்லது அறிவார்த்தமாகவோ எப்படி இருப்பினும் நுண்மையின் மிளிர்வில் தான் கவிதை ஜீவிக்கிறது.

இதைப் போலவே நாற்காலியைப் பற்றி இன்னொரு கவிதை ‘நாற்காலியின் எண்ணற்ற கால்கள்’ என்ற பெயரில்.அவை கவிதைகள் அல்ல வாரமலரில் வரும் துணுக்குகளின் தொகுப்பு போன்றது.பொட்டுவெடி போன்ற இத்தகைய எள்ளல் துணுக்குகளை வானம்பாடிக்கவிஞர்கள் சிலரும் அப்போதே எழுதியுள்ளனர். கீழே உள்ளது போலந்து கவிஞர் ஸ்பிக்னியூ ஹெர்பெட்டின் கவிதை:

கூழாங்கல் ஒரு பூரணமான உயிரி

தனக்குநிகர் தானேயானது.
தன் எல்லைகளை நன்கறிந்தது.

கூழாங்கற் தன்மையினால்

முழுமையாக நிறைந்தது

எதையும் நினைவுபடுத்தாத ஒரு வாசனை அதனிடம்
எதையும் பயப்படுத்தி விரட்டாதது; எந்த ஆசையையும் தூண்டாதது

அதன் ஊக்கமும் குளிர்ச்சியும்
தக்கவை கண்ணியமானவை

என் கையில் அதை எடுக்கையில் கனமான
வருத்தத்தை உணர்கிறேன்.
அதன் மேன்மையான உடலில்
என் பொய்யான உஷ்ணம் ஊடுருவுகிறது

கூழாங்கற்களை யாரும் அடக்கியாள முடியாது
அமைதியான, நிர்மலமான கண் கொண்டு

இறுதி வரை அவை நம்மை பார்த்திருக்கும்.

இந்தக் கவிதை எதிர்ப்புக்கவிதைகளின் தலைசிறந்த உதாரணங்களில் ஒன்று. ஆனால் கவிஞர் இதில் நேரடியாக எதையும் சொல்லவில்லை. வெறுமனே ஒரு கூழாங்கல்லை விவரிக்கிறார். துல்லியமாகவும் தன்மையாகவும் விவரிப்பதன் மூலம் கூழாங்கல்லின் பற்றுறுதியையும் சமரசமின்மையையும் உணர்த்தி விடுகிறார். கண்ணியமான எதிர்ப்புணர்வின் குறியீடாக அக்கூழாங்கல் அமைந்துவிடுகிறது.ஆனால் ஏன் கோ.புண்ணியாவனின் நாற்காலி அப்படி ஆகவில்லை? ஏனெனில் உயிரிருப்பும் அதன் கவித்துவ உந்துகையும் என்ன சொல்ல வருகிறது என்று கவிஞன் செவி மடுக்க வேண்டும்.தான் சொல்லவருவதை அள்ளி நிரப்பி தள்ளி விடுவது நற்கவிதையாகாது? மூங்கில்களைப் பற்றி மூங்கில்களிடம் இருந்தே கற்க வேண்டும் என்று பாஷோ சொல்லியது போல இங்கே கவிஞர் கூழாங்கல்லைப் பற்றி கூழாங்கல்லிடம் இருந்தே கற்றுகொள்கிறார். நூல்களில் கற்றதையோ தனக்குத் தெரிந்ததையோ கவிதை என்ற பேரில் சொல்லிக்காட்டவில்லை. அதற்கு முன் தெரிந்தது அல்ல அந்தக்கணத்தில் அடைவதுதான் கவிதை.

சமூக விமர்சனத்தை முன்வைக்கும் கவிதைகளை உருவாக்குகையில் நாம் சமூகம் பற்றிய எந்த விதமான புரிதலைக் கொண்டிருக்கிறோம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. நம் பார்வையானது வெறுமனே மத்தியவர்க்கத்தின் நொய்ந்த எதிர்பார்ப்புகளால் ஆனதா, அல்லது அதிகார இயங்கியலைப் புரிந்துகொள்ளாத தட்டையான நன்நம்பிக்கைகளின் தொகுப்பா என்பதெல்லாம் கவனிக்கவேண்டியவை. சமூக அரசியலை மையமிட்டு எழுத உள்ளோம் என்கிற பட்சத்தில் சமூகத்தின் இயங்கியலையும், நுண்ணரசியலையும், வரலாற்றையும், உளவியலையும் இணைத்துப்பார்க்கிற அறிவார்த்த பலம் வேண்டியிருக்கிறது. யவனிகா ஸ்ரீராமின் கீழ்காணும் கவிதையைப் பாருங்கள்:

ஆடைகளை வடிவமைப்பவன்

ஆமை ஓடுகளைச் சுமப்பவன்

இடி மின்னலை அளவிடுபவன்

மூவரும்

ஒரு நெல்மணியைத்தான்

பரிசோதிக்கிறார்கள்.

கடல் கடந்து வாணிபம் செய்பவன்

கிழிபட்ட காயங்களைத் தைப்பவன்

சொற்களைப் புதுப்புது நூலாகத் தொகுப்பவன்

மூவரும்

இறந்தவர்களின் எச்சங்களைத் தான்

சேகரிக்கிறார்கள்.

பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பவன்

குரங்குகளை கூண்டில் வைத்து அறுப்பவன்

அனைத்தையும் ஒளிவேகத்தில் தொலைவிட்டவன்

மூவரும்

ஒரு பெண்ணின் கர்ப்பப்பை குறித்தே

அங்ஙனம் நடந்துகொண்டார்கள்.

வானம்பாடி சமூகக் கவிதைகளில் இரண்டு போக்கைக் காணலாம். ஒன்று எதிர்காலம் நோக்கியவை. இன்னொன்று நிகழ்காலம் மீது கவனம் செலுத்துபவை.முதல் வகை இலட்சியக்கனவுகளால் கட்டப்பட்டவை கோஷங்களாய் முழங்குபவை.கொந்தளிக்கும் நேரிய உணர்ச்சிகரத்தைக் கொண்டவை .மு.மேத்தா எழுதுகிறார்:

வீசும் புயற்காற்றை

விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்.

நின்றெதிர்த்த முடிவினில் நான்

நிலத்தில் விழுந்துவிட்டால் என்

கன்றெதிர்க்கும் கன்றுகளின்

கன்றெதிர்க்கும் கன்றுடைய

கன்றெதிர்க்கும்!

இரண்டாம் வகைக் கவிதைகள் சற்று எள்ளலும் கசப்பும் கலந்த விமர்சனக்குரலாய் கடிந்தொலிப்பவை. நகைமுரண்களால் கோர்க்கப்பட்டவை. ‘இந்தியப்புதல்வர்கள், ஜனநாயகப் பசுவிடம், அரசியல் இடையர்கள், ஆதாயப் பால் கறக்க உதவும்,  நகரத்துக் கன்றுகள்’ போன்ற கவிதைகள்.

முதல்வகைக்கவிதைகள் எண்பதுகளுக்கு பிறகு வானம்பாடிகளிடமே குறைந்துவிட்டன. தொன்னூறுகளுக்கப் பின்னர் சமூக எதார்த்தத்தைப் பேசும் கவிதைகளில் இரண்டாம் வகையின் தொனியே மிகுந்திருந்தது. அதற்கு முக்கியமான காரணம் இலட்சியவாதத்தின் வீழ்ச்சி. அது எதிர்காலக்கனவுகள் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்தது. எஞ்சியிருப்பவை நகைப்பும் நையாண்டியும். இப்போது தமிழில் சமூக உள்ளடக்ககவிதைகள் பெரும்பாலும் இப்படியான குரலிலேயே எழுதப்படுகின்றன. இன்னும் இலட்சியத்திற்கான களங்கள் உயிர்த்திருப்பதாலோ என்னவோ தலித்திய பெண்ணிய கவிதைகளில் நேர்மறைத்தீவிரம் இப்போதும் கேட்கிறது.மற்றபடி சமூகவியலைப் பொறுத்தவரை இது நகைமுரண்களின் காலம். லட்சியங்களற்ற அரசியலின் காலம்,அதற்கான கவிதையோ உலர்ந்த விமர்சனமாக எஞ்சுகிறது. 

கோ.புண்ணியவானின் கவிதைகளும் பெரும்பாலும் இரண்டாம் வகை நகைமுரண் விமர்சனக்கவிதைகளின் போக்கையே ஒட்டியுள்ளன.

நீ அன்னாந்து பார்

நான் செம்மாந்து இருப்பேன்

நீ ஆழ்கடலில் மூழ்கி

மூச்சடக்கி முத்துகொண்டு வா

நான் கப்பலில் மதுக்கோப்பையைக்

கையில் ஏந்தியபடியே

அதை வாங்கிக்கொள்கிறேன்

…….

நீ பழங்கொண்டு வா

நான் உனக்கு கொட்டை தருகிறேன்

இந்தா..

மேதினப் பூ

காதில் வைத்துக்கொள்

வாழ்த்துகள்

இப்படியாக விரிந்து செல்லும் கவிதைகள். என்னவானாலும் ‘எங்கள் இதயம் கனிந்த ஆளுங்கட்சிக்கே எங்கள் ஓட்டு’ என்று கேலி செய்யும் வரிகள். ஆனால் இவை எதுவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளத்தக்க கவிதைகளாகப்படவில்லை. சின்ன சமத்கார துணுக்குகள், நல்லெண்ண வெளிப்பாடுகள், தட்டையான விமர்சன விசனிப்புகள், அவ்வளவு தான். கலை என்பது அடிப்படையில் வாழ்வின் மீதான விமர்சனம் என்பது மேலை விமர்சகர் மேத்யூ ஆர்னல்டின் வாசகம்.ஆனால் அதற்கு கலை முதலில் கலையாக இருக்கவேண்டும்.

’இன்னும் வேண்டுமா ரத்தம்’ என்ற கவிதையில் ரத்த ஆறே ஓடுகிறது.நமக்கு அதில் கிஞ்சித்தும் பாதிப்பு நேரவில்லை.மனுஷ்யபுத்திரனின் புகழ்பெற்ற கவிதை இது:

நீரடியில் கிடக்கிறது

கொலைவாள்        

இன்று இரத்த ஆறுகள்

எதுவும் ஓடவில்லை

எனினும்

ஆற்று நீரில் கரிக்கிறது இரத்த ருசி

இடையறாத

நதியின் கருணை

கழுவி முடிக்கட்டும் என்று

நீரடியில் கிடக்கிறது

கொலைவாள் 

ஒரு நல்ல படிமம் போதும் மாயத்தை நிகழ்த்துவதற்கு. அதைப் பெறுவதற்கான கவித்துவ ஊக்கமும் விழிப்பும் அதிர்ஷடமும் கிட்டவேண்டும் அவ்வளவும்தான். புதுக்கவிதை என்பது மரபு களைந்து உரைநடையில் எழுதக்கூடிய ஒரு வசன வகைமை என்கிற பழைய நம்பிக்கையில் எழுதப்பட்டுள்ளவையாக உள்ளன இக்கவிதைகள். 

ஒரு சமூக உயிரியாக இருப்பது என்றால் என்ன? இக்காலத்தில் அது எத்தகைய அந்தரங்க மற்றும் கூட்டு அனுபவத்தை ஏற்படுத்துகிறது? பொதுவெளியில் நான் எப்படி உணர்கிறேன்? என் அச்சங்களும் சந்தோஷங்களும் என்னென்ன? இத்தகைய பதிவுகளைத் தான் சமூகக்கவிதைகள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அது முன்வைக்கும் விமர்சனம் உயிரோட்டம் உடையதாய் இருக்கும். உயிர் உள்ள ஒன்று தான் வாசகனிடம் வினையை உற்பத்தி செய்யும். மாறாக இக்கவிதைகளில் எத்தகைய உத்வேகமும் செயல்படவில்லை. உரையாடல்களிலோ செய்திகளிலோ நாம் எதிர்கொள்ளும் அறிந்த சமாச்சாரங்களை உடைத்து போட்டு எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது. தேவதேவனோ, ’தன் உடலின் எல்லாப் பாகங்களிலும் ஜீவ ஓட்டம் ததும்பும் உயிர் போன்றதே ஆகும் கவிதை’ என்கிறார்.

1 comment for “மலேசிய கவிஞர்கள் வரிசை – 3 : கோ.புண்ணியவான்

  1. Mohammad Sirajudin
    March 2, 2021 at 6:22 pm

    கவிஞர் சபரிநாதன் மறுபடியும் ஒரு சிறந்த கட்டுரையை வழங்கியுள்ளார். பக்கத்து நாடாக இருந்தாலும் மலேசியாவின் கவிஞர்களைப் பற்றியும் அவர்களது கவிதைகள் பற்றியும் அறிய இத்தொடர் பயனுள்ளதாக உள்ளது. ஐயா சை.பீர்முகம்மது கவிதைகள் குறித்த கட்டுரையும் இடம்பெற வேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...