1
அ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்கும்போது பறவைகளின் ஞாபகம் வருகிறது. வலசைபோகும் பறவைகளில் அந்தந்தத் தேசத்து நீர்த்தேக்கங்களில் அமர்ந்து காதல் வாழ்வைத் தொடங்குகின்றன. அந்த நிலத்து சிறு குச்சிகளை, பட்டைகளை எடுத்துக் கூடு பின்னி, அந்த நிலத்துத் தானியங்களை உண்டு, அந்த நிலத்து வெய்யிலையும் குளிரையும் நீரையும் குடித்து, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அருகிருந்து மிக விழிப்புடன் காவல் காத்து, இரையூட்டி இரையூட்டி இரையூட்டி சிறகு முளைத்து பறக்கவிடும் தாய்ப் பறவையின் சித்திரம் போன்றன இவரது கதைகள். வலசை வந்த இடத்தில் உண்டான குஞ்சுகள், பறவைகளாகி தன் பூர்வீகம் நோக்கிப் பறப்பதுபோல முத்துலிங்கத்திடமிருந்து பிறந்த கதைகளில் சுயமாகப் பிரிந்து பறக்கின்றன. முத்துலிங்கம் வலசை போகும் பறவை. உண்டு வாழ்ந்து உருவான விதத்தை சொல்லியபடியே அதன் இலக்கு ஒன்று தன்னியல்போடு வெளிப்படுவதைப்போல முத்துலிங்கத்தின் கதைகள்.
பூ மலர்வது போல, மரம் கிளைவிரித்து அடர்வதுபோல கதைகளில் வாழ்க்கைப்பாடுகளில் சித்திரங்களாக விரிகின்றன. ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு மரத்திற்கும் உரித்தான வாழ்க்கை பற்றிய விமர்சனப் பார்வை உருவாகி மணக்கிறது. பிரச்சனையின் மையம் விரிந்து விரிந்து வாழ்க்கையாக அடர்த்தி கொள்கிறது. இந்த அடர்த்தியிலிருந்து வாழ்க்கை பற்றிய ஆழமான கேள்வியை இவரின் சிறுகதைகள் முன்வைக்கின்றன. கதையின் ஓரிடத்தில் வெளிப்படும் சின்னச்சின்ன சித்திரங்களில், தகவல்களில், குறிப்புகளில் அத்தனையும் அவ்வாழ்க்கைக்கே உரித்தான கிளைகளாகச் செழிக்கின்றன. கதை முடிந்ததும் சொல்லப்பட்ட தகவல்களில், குறிப்புகளில் காட்சிகளில் அனைத்தும் கண்களாக விழிப்படைவது இவரின் படைப்பாற்றலின் தனித்துவம். தூக்கணாங்குருவி கூடுகட்டுவதுபோல பிசிறில்லாமல் அவ்வளவு நேர்த்தியாக அந்த விசயத்தின் இன்னபிற அம்சங்களிலும் தோய்ந்து தோய்ந்து கதையை உருவாக்குகிறார். மிகமிகத் துல்லியமாகச் சொல்லிவிட வேண்டும் என்ற தீரா ஆவல் படைப்பாக்க மனநிலையில் பின்னின்று தொழிற்பட்டிருப்பதாலேயே முதலில் அது ஒரு படைப்பாகவும், பின் அது வாழ்வின் எதிர்வினை என்ற இரு உயர்ந்த எல்லைகளைத் தொடுகின்றன.
‘ஒரு சாதம்’, ‘வம்சவிருத்தி’, ‘யதேச்சை’, ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ போன்ற கதைகள் இந்த வகையில் சாதனைகள். ‘வடக்குவீதி’, ‘பூமாதேவி’, ‘ஒட்டகம்’, ‘ஐந்தாவது கதிரை’, ‘ராகுகாலம்’, ‘அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை’ போன்றவை கணிப்புகளால் அடைத்துவிட முடியாத விசித்திர எண்ணங்களின் ஊற்றுக்கண்களைத் திறக்கும் சிறந்த கதைகள் எனலாம்.
புதிய நாகரிகம் நேற்றைய மதிப்பீடுகளை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் உதறிவிட்டு சுயநலத்தை மட்டுமே தாவிப் பற்றி விரைவதை ஒரு கையறுநிலையில் சொல்கின்றன. விரிந்திருந்த உறவின் இழைகளில் அறுபட்டு அறுபட்டு, தான் என்ற தன்முனைப்பு மட்டுமே வீங்கத் தொடங்கும் மானிட உலகை இவரின் கதைகள் முன் வைக்கின்றன. ‘ரி’, ‘மகாராஜாவின் ரயில் வண்டி’ ‘தொடக்கம்’ முதலிய கதைகள் வாழ்வில் நேர்ந்துவிடும் – திரும்பக் கிட்டாத அபூர்வத் தருணங்களைச் சொல்கின்றன. இந்தக் கணங்களில் ஏதோ வகையில் வாழ்க்கையைத் தொடர்ந்து அர்த்தபூர்வமாக்குகின்றன.
முத்துலிங்கம் இன்றளவு 150 கதைகள் எழுதியிருக்கக்கூடும். முக்கியமான தமிழ்ச் சிறுகதை ஆளுமையாளர்களின் சாதனைகளைப்போல சிறந்த – தரமான – நல்ல – கதைகளைத் தந்திருக்கிறார். தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், வண்ணதாசன் இவர்களுக்கு நிகரானவர். எடுத்துரைக்கும் விதத்தில் இவர்களில் சிலர் வித்தைகள் செய்திருக்கலாம். வித்தைகள் மட்டுமே இலக்கியம் ஆகா.
புலம்பெயர்ந்த தமிழர்களின் துயரவாழ்வு ஒருபக்கம் இருந்தாலும், அவர்களிடம் தலைகாட்டும் துர்குணங்களை எவ்விதப் பட்சாதாபமும் இல்லாமல் போட்டுடைக்கிறார். புதுமைப்பித்தனைப் போன்ற குணம் இது என்றாலும் அவசரமற்ற, வேகமற்ற, மிக நிதானத்தோடு வாழ்வின் பின்னலிலிருந்து உருவாகி வந்த படைப்பு விமர்சனமாக இருக்கின்றது. புதுமைப்பித்தன் கருத்தியல் விமர்சனத்திற்காகக் கதையை ஒரு வடிவமாகக் கையாண்டார் என்றால் முத்துலிங்கம் சிறுகதை வடிவத்தினுள் விமர்சனத்தைப் புதைத்து வைக்கிறார். ஒருவகையில் கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், கி.ரா. இவர்களின் தொடர்ச்சி முத்துலிங்கம் எனலாம். கி.ரா. இடைச்செவல் கரிசல்நிலத்து மக்களை வைத்து எழுதினார் என்றால் முத்துலிங்கம் உலக நிலத்து மக்களை திணையியல் அடிப்படையில் படைத்தார் எனலாம்.
உலகின் வெவ்வேறு நிலத்து மக்களின் பிரச்சனைகளை உலகின் பொதுவாசகன் முன்வைக்கிறார். தமிழ்த்திணை இலக்கியம் போல உலகை ஒரு திணை இலக்கியமாக மாற்றி பக்கத்துப் பக்கத்து நில மக்களின் பாடுகள் போல தூரதேசம் மிக அருகில் வந்து நிற்கின்றது. அந்நிலத்திற்கே உரிய வேறுபாடுகளோடும், தனித்துவங்களோடும் இருக்கின்றன. குறிஞ்சிநில வாழ்க்கைப் பின்னலை மருதநிலத்தவன் பார்ப்பதுபோல நெருக்கம் கொள்கின்றன. ஆப்பிரிக்க மக்களைப்பற்றி எழுதிய கதைகள், தமிழ்நாட்டுக் கதைகள்போல இருக்கின்றன. உரிப்பொருளில் திணைமயக்கம் கொண்டதுபோன்ற உறவு வெளிப்படுகிறது. ஐம்பதுகளின் இறுதியில் (1959) பத்துக் கதைகள் எழுதியிருக்கிறார். இவை மட்டுமே தொடக்ககாலக் கதையாக இருக்கின்றன. பின் 35 ஆண்டுகளில் கழித்து 1994வாக்கில் பணி ஓய்விற்குப்பின் ஓர் இளைஞனின் உற்சாகத்தோடு வேகவேகமாக எழுதத்தொடங்குகிறார். ஆரம்பகாலக் கதைகளில் அடர்த்தியும் பார்வையும் மெல்லிதாக உள்ளன. என்றாலும் வாழ்வை ஒரு பக்குவத்தோடு அணுகியிருப்பது இளம்பருவத்து எழுத்துக்களிலேயே வெளிப்பட்டிருக்கிறது.
ஏழைச் சிங்களப்பெண் தமிழன்மீது கொண்ட தூய காதலையும் ஆணுக்கே உரிய குறுகல் எண்ணங்களோடு (பாசாங்கு காதல்) காதலைக் கையாண்ட விதத்தையும் நுட்பமாக அவரின் ஆரம்பகாலக் கதையான ‘அனுலா’வில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஏய்த்துப் பிழைக்கும் கிழவியை மகள் ஏய்த்துவிடும் சாகசத்தைச் சொல்லும் ‘கோடை மழை’ கதையையும் சேர்த்துப் பார்க்கலாம். 1994க்குப்பின் எழுதத்தொடங்கிய கதைகள் மிகச்செறிவானதாகவும் வாழ்வின் பின்னல்களில் மிக நெருக்கமாகவும் நுட்பமாகவும் கூடி வந்திருக்கின்றன. முத்துலிங்கத்தின் தொடர் இயக்கம் என்பது 1994லிருந்து இன்றுவரையிலானது. இக்காலகட்டம் இடைறயாத படைப்பெழுச்சிக் காலகட்டமாக விரிகிறது. பணி நெருக்கடியில் 35 ஆண்டுகள் சிறுகதைகளில் ஏதும் எழுதாது ஓய்விற்குப்பின் ‘படைப்பின் கனவு’ எழுச்சியோடு பொங்குகிறது என்றுதான் கூறவேண்டும். இது தமிழ்ச்சூழலில் வெகு அபூர்வம்.
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்து படைப்பாளியாக இருப்பதால் அவர் மீது இயல்பான ஒரு விமர்சனம் வைக்கக்கூடும். 50 ஆண்டுக்கால இலங்கை இனமோதல்களில் பல்வேறு நெருக்கடிகளை, வரலாற்றின் கோரமுகங்களை, அழிவுகளை, இழிவுகளை தமிழ்ச்சமூகம் சந்தித்து வந்திருக்கிறது. அந்த வரலாற்றின் அவலம் முத்துலிங்கத்தின் கதைகளில் இல்லை எனக் கூறலாம். இது ஒரு எதிர்பார்ப்பு சார்ந்த விமர்சனம். அவர் எழுதிய கதைகளுக்கு இதனை ஒரு அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடவும் முடியாது எனச் சொல்லியாகவேண்டும்.
இந்திய – பாகிஸ்தான் பிரிவினையில் மனிதர்களிடம் வெளிப்பட்ட கோரமுகங்களை சதக்ஹசன் மண்டோ தீவிரமாக எழுதினார். சுதந்திரப்போராட்டச் சிக்கல்களை எழுதவில்லை. பிரிவினையில் விழைந்த சீரழிவுகள் மண்டோவை மிகவும் பாதித்ததால் அவை படைப்புகளாக வெளிவந்திருக்கின்றன. பிரிவினைக் காலகதைகளில் வெளிப்பட்ட உக்கிரம் அவரின் பிற கதைகளில் இல்லை. முத்துலிங்கம் இலங்கைப் போர்ச்சூழலில் வாழாததால் – அதன் அனுபவம் இல்லாததால் அதுபற்றி எழுதாமல் ஒதுங்கியிருந்திருக்கிறார் என்பது நேர்மையான விசயம்தான். எனவே ஒரு படைப்பாளியிடம் இன்னவகையான படைப்புகள் வெளிவரவில்லை என்பதாக காரணம் வைத்து மட்டும் மதிப்பிட முடியாது. இதெல்லாம் படைப்பு மனம் சார்ந்த விசயம். படைப்பாளியின் உள்ளத்திற்கு நெருக்கமில்லாத பிரச்சனைப்பாடுகள் படைப்புகளாக உருவாவதில்லை. அதே சமயம் ஈழப்போர்ச்சூழல் காரணமாக உயிர்தப்பி மேலைநாடுகளில் அகதிகளாக நுழைந்து பிழைக்க அவர்கள் பட்டபாடுகளை வலியோடு சில கதைகளில் சொல்லியும் இருக்கிறார். பண்பாட்டாலும் நிலவியல் சூழலாலும் முற்றிலும் அந்நியப்பட்ட – உடலாலும் மனதாலும் ஒன்ற முடியாத நிலையிலும் வேறு கதியற்றுக் கிடைத்த வேலையைப் பற்றிக்கொண்டு உயிரைத் தக்கவைக்கவேண்டிய வரலாற்று சோகத்தை (கறுப்பு அணில்) சில கதைகளில் காட்டியிருக்கிறார்.
முத்துலிங்கத்தின் மனசை அதிகமும் அழுத்துவது திரும்பமுடியாத – பார்க்கமுடியாத மீண்டும் வாழ முடியாத ஈழத்துக் கிராம வாழ்க்கைதான். தனது நினைவுகளில் மட்டுமே உறைந்து கிடக்கும் அம்மனிதர்களின் உலகங்களைப் பல கதைகளில் உயிர்பெற வைத்திருக்கிறார். அவர்களின் மர்மங்களை, எழுந்தாடிய தீமைகளை, நெஞ்சைப் பரவசப்படுத்திய செயல்களை, நடைஉடை பாவனைகளை அழிக்கமுடியாத சித்திரங்களாகக் காட்டுகிறார். இனமோதலோ, போர் ஓலமோ கேட்காத காலகட்டத்து தமிழர்களின் வாழ்க்கையாக அவை இருக்கின்றன. இந்த இந்த இடத்தில் இவர்கள் இப்படி வாழ்ந்தார்கள் என்று இன்று வரலாற்றிலிருந்து துடைக்கப்பட்ட நிலமாக இருப்பதை நினைக்கும்போது பெருஞ்சோகம் கவ்வுகிறது. விலகி நின்று புறஉலகின் நுட்பமான மொழியில் அகப்படுத்துகிறார். இவை மகத்தான கதைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நினைவுகளை அழுத்தும் கதைகளாக இருக்கின்றன. ஏழ்மையை, குரூரத்தை காதலை, களங்கமின்மையை, கள்ளத்தனத்தை, விடுதலையை நினைவிலிருந்து எழுதும்போது எழுத்தில் நிதானம் கூடிவந்துவிடுகிறது. இந்த நிதானம் அன்றைய பதட்டத்தையும் சார்பையும் ஒதுக்குகிறது. அன்றைய தீமையைக் கூட விலகி நின்று இன்று எழுதும்போது அதன் ஆட்டத்தை முழு சுதந்திரத்தோடு ஆடவிடுகிற பக்குவம் வந்துவிடுகிறது. ஒளிக்கவேண்டாம் என்று முடிவெடுத்தபிறகு அதனை ரசித்து ஆக்கவேண்டும் என்கிற கலை ஆர்வத்தால் விழைந்தவைதான் இவரின் கதைகள். ஈழத்து மண்ணின் நினைவுகளிலிருந்து எழுந்த ‘அம்மாவின் பாவாடை’, ‘வடக்குவீதி’, ‘தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில்’ போன்ற கதைகளும், அங்கே வாழ்ந்தபோதே எழுதிய ‘அனுலா’, ‘அக்கா’, ‘கோடைமழை’ முதலிய கதைகளும் உடனே நினைவிற்கு வருகின்றன.
2
அ.முத்துலிங்கம் தொழில் காரணமாக பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, இந்தியா எனச் சில நாடுகளில் சில ஆண்டுகள், சில மாதங்கள் இருக்க நேர்ந்தவர். இளம் பருவம் அவரது பூர்வீக பூமியான யாழ்ப்பாணத்தில். இப்படியான அனுகூலங்கள் புதிய அனுபவங்களைப் படைப்பாளிக்கு வழங்குகின்றன. புதிய வாழ்க்கை முறைகளை அறிய வைக்கின்றன. வாழ்க்கை பற்றிய புதிய புரிதல்களை உண்டாக்குகின்றன.
இந்த வாழ்விட அனுபவங்களின் பின்னணியில் அவர் தனது கதைகளைப் படைத்திருக்கிறார். இக்கதைகள் மூன்று நான்கு விதங்களில் அமைகின்றன. முதலாவதாக ஒரு தமிழ் மனிதனாக, இரண்டாவது வேற்றுப் பிரதேசத்து மனிதனாக, மூன்றாவது அகமனிதனாக, நான்காவது பணத்தின் மீது மோகம்கொண்டு மதிப்புகளைப் பொருட்படுத்தாத மனிதனாகக் கண்டு படைத்திருக்கிறார். பிரதேசத்து மனிதன் என்பது அந்தந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் முத்துலிங்கம் என்ற யாழ்ப்பாணத்து மனிதனின் தலையீடும் எண்ணமும் அற்ற அந்த நிலத்து மனிதனின் வாழ்வை விலகி நின்றும் அதே சமயம் உள்ளத்தின் (பாத்திர உள்ளம்) துணைகொண்டும் பிரச்சனையை அணுகிப் படைத்திருக்கும் பாங்கு; அரசியல், தொழில் காரணங்களால் புதிய வாழ்விடச் சூழலில் யாழ்ப்பாணத்து அல்லது ஈழத்து மனிதனின் வாழ்க்கைப்போக்கு மாற்றமுறுவதைக் காணுவது; யாழ்ப்பாணப் பிரதேசம் என்ற நிலச்சாரத்திற்கு அப்பால் மனிதன் என்னவாக இருக்கிறான் என அறிய முயல்கிற கதைகள் என வகைப்படுத்திவிடலாம்.
முத்துலிங்கத்தின் படைப்பாக்கத்திறனில் அவரது ஆழ்மனதில் படிந்திருக்கும் இலக்கிய வாசிப்பின் சாரம் பொருத்தமான இடத்தில் கதைப்பின்னலோடு பிறப்பெடுக்கிறது. வாக்கியங்களில் அமைகிறபோது மனிதன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற குரூரம் – மகத்துவம் என்ற இரண்டையும் காண விழைந்திருக்கிறார். புதிய காலம் மனிதர்களின் பண்புகளை, மாண்புகளை உருமாற்றிக்கொள்ளும்போது, முன்தலைமுறையினரிடம் அவர்களை நிலைநிறுத்திய மாண்புகள் கழன்று போவது முத்துலிங்கத்தின் கதைகளில் அடிநாதமாக ஒலிக்கின்றன. சுவாரஸ்யமான தகவல்கள் போலத் தெரியும் அத்தனை பண்பாட்டு நிகழ்வுகளும் கதை வைக்கும் விமர்சனத்திற்கான அங்கங்களாக மாறியிருப்பதை இவரின் கதைகளில் காணலாம். வெவ்வேறு நாடுகளின் பண்பாட்டு விழுமியங்களை, முரண்களை, நிகழ்கால வரலாறுகளை, நம்பிக்கைகளை, கோபதாபங்களை அந்நாட்டின் கண்களிலிருந்து முடிந்த மட்டும் முழுமையாக ஒரு சிறுகதைக்குள் கொண்டுவந்து விடுகிறார். அந்தந்த தேசத்து நிலமும் கருப்பொருளும் உறவு முறைகளும் வழக்காறுகளும் பழமொழிகள், முதுமொழிகள், பாடல்கள், நடை உடை பாவனைகளில் எல்லாம் இணைந்து உருவாகும்போது அந்த மண்ணுக்கே உரிய கதைகளாக உருவாகியிருக்கின்றன. அந்தப் பண்பாட்டு விழுமியங்களை விரும்பி உணர்ந்து, தோய்ந்து படித்து வராமல் படைப்பழகு கூடி வராது. பிற பண்பாடுகளின் நுட்பங்களில் படைப்பாளியான முத்துலிங்கத்தை வசீகரிப்பதினாலேயே இதனைச் செய்ய முடிந்திருக்கிறது. இது தமிழ் எழுத்தாளன் செய்திருக்கும் ஒரு சாதனைதான். முத்துலிங்கம் கதைகளுக்குத் தரும் தலைப்புகள்கூட ஆழ்ந்த பொருளுடையதாக அமைந்திருக்கின்றன.
உலகம் பல்வேறு பண்பாட்டுக் கலப்பால் வேறொரு புதிய பண்பாட்டை உருவாக்கிக்கொண்டிருப்பதை இவர் கவனித்திருப்பதால் இந்தப் புதிய போக்கை இவரின் கதைகள் சொல்கின்றன. தனித்துவமான பண்பாட்டு இழைகளில் பிற சமூகத்தவரால் உள்வாங்கப்பட்டும் அல்லது வெளித்தள்ளப்பட்டும், சிதைந்த வடிவில் பாதி ஏற்று – பாதி தள்ளியும் விருப்பம்போல உள் வாங்கப்பட்டும் புதிய சமுக வடிவம் கொள்வதை இவரின் கதைகள் உணர்த்துகின்றன. சில சமயம் மோஸ்தர் மனநிலையில் புதியவற்றை ஏற்றுக்கொண்டு சொந்த அடையாளங்களை உதறவும் செய்கின்றார்.
1977-ல் இலங்கை இனக்கலவரத்தில் இந்தியா வந்து அங்கிருந்து அகதியாக கனடா சென்ற புத்திக்கூர்மை மிக்க கணக்குத் தணிக்கையாளர் ஒரு வாட்ச்மேன் வேலையில் அமர்ந்து உயிர்வாழ்வதற்கான பிடிப்பை ஏற்படுத்தவே சில வருடங்களில் ஆகின்றன. அமெரிக்காவிலும் தணிக்கைக் கணக்காளருக்கான படிப்பைப் படித்தும் உரிய வேலை உடனே கிட்டுவதில்லை. பெரிய நிறுவனத்தில் கணினி, டைப் அடிப்பதில் செய்த சிறுபிழையை நீக்குவதற்குரிய சந்தர்ப்பத்தைப் பெறமுயன்று அத்தருணத்தைப் பெற்று நீக்குகிறான். அதுவரை கம்பெனி இழந்த தொகையையும், பெற்றிருக்க வேண்டிய லாபத்தையும் இயக்குநரிடம் சமர்ப்பிக்கிறான். இந்த ஆற்றலைக்கண்ட கம்பெனி முதலாளி பட்பட்டென பெரும் பதவிகளில் அமர்த்துகிறான். இந்த உழைப்பின் பயணம் நெடியது. ஓட்டைக்கார், சிறிய வீடு என்ற சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த இடத்திற்குச் செல்கிறான். இந்தத் திருப்புமுனை நிகழ்ந்ததற்கு ஞாபகார்த்தமாக அவன் கட்டிய வீட்டிற்கு ‘ஒரு சதம்’ எனப் பெயர் வைக்கிறான். இவனைப் பார்க்க வருகிற பால்யகால நண்பன் ஆங்கில வார்த்தையைத் தவறாக ‘ஒரு சாதம்’ என வாசிக்கிறான். கதை இந்த இடத்தில் தொடங்குகிறது. நண்பன் (பரமனாதன்) யாழ்ப்பாண சாப்பாட்டுப் பிரியன். ஆனால் விருந்தினருக்கு சமைத்துப்போடும் காலம்போய் ஆர்டரின் பேரில் யாழ்ப்பாணச் சாப்பாட்டுக் காய்கறி வகைகளோடு பெற்று உபசரிக்கும் நாகரிகம் காலூன்றி இருப்பதை சொல்லி கதை மேலே ஒரு பரிணாமம் கொள்கிறது. கனடாவில் பனிக்காலம்; தெருக்களில் தோன்றும் மாற்றம்; வீட்டின் அமைப்பு; அதற்குரிய உடைகளில் தமிழன் தகவமைவதும் புதிய அனுபவமாக மாறுகிறது.
1990களுக்குப்பின் கனடா வந்த சில அகதிகள் எடுத்த உடனே நல்ல வேலையில் அமர்ந்து உயர்தர காரில் பவனிவரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதுவும் காலத்தின் கோலம்தான். இந்தக்கதையில் ஒருவன் வெற்றியடைந்ததற்கான புத்திக்கூர்மை, இலக்கியப்படிப்பின் அனுபவம், விடாமுயற்சி எனப் பல்வேறு அம்சங்களில் கூடி உச்சத்தை அடைந்த மனிதனையும் – இவ்விதமான எந்த குணவிசேசங்கள் இல்லாமல் கூட வாய்ப்பு அமைந்து உயர்ந்துவிடுகிற வேடிக்கையையும் பார்க்க முடிகிறது. கனடாவில் உதவித்தொகையை அதிகரிக்க மனைவியை ஒதுக்கிவிட்டதாக செய்கிற ஊழல் புதிய வாழ்விடத்தில் தலைதூக்குகிறது. James எழுதிய ‘chsos’ நூலின் சாரம், ஔவையின் ‘வரப்புயர நீர் உயரும்’ பாடலின் நுட்பம், ஹெமிங்வே எழுதிய ‘கடலும் கிழவனும்’ நூலின் சாரம், மகாத்மாகாந்திக்காக லண்டனுக்கு ஆடு கொண்டு செல்லப்பட்ட சம்பவம், ராவணன் இதயத்தில் பாய்ந்த அம்பு, காதலைத்தேடிய கம்பனின் பாடல், பென்சீனுடைய அடுக்குமுறையின் அமைப்பு என வாசிப்பில் கிடைத்த சாரமெல்லாம் இந்தக் கதாபாத்திரத்தின் வாழ்வோடு இயைந்து சிறந்த சிறுகதையாக ‘ஒரு சாதம்’ உருவாகி இருக்கிறது. உலகத்தின் இரு வேறு இயற்கை என சங்கப்புலவன் சொன்னதுபோல எந்தவிதக் குற்றச்சாட்டையும் முன் வைக்காமல் அறவழியிலும், அறமற்ற வழியிலும் ஒரு சமூகம் நகர்கிறது என்பதையும் சொல்ல எத்தனிக்கிறது. ஒரு எழுத்தாளனாக, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறிய ஈழந்தவர்களைப் பச்சாதாபத்தோடு பார்க்காமல் அவர்களில் எப்படியெல்லாம் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்களில் என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் முன் வைக்கவே செய்கிறார்.
‘பூமாதேவி’ கதை இரண்டு தலைமுறையின் எண்ணத்தைப் பற்றிய கதை. யாழ்ப்பாணத்திலும், அமெரிக்காவிலும் அப்பா தான் வாழ்ந்த ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு பொருளையும் உயிருள்ள ஜீவனாக நினைவில் தேக்குகிறார். அமெரிக்காவில் பிறந்த மகள் சிறுவயதில் ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு பொருளையும் நேசித்தவள்தான். ஆனால் அவற்றை சுகமான சுமைகளாக, நினைவுகளாகக் கொளில்வதில்லை. அடுத்தடுத்த பருவத்தில் முந்தைய பருவ நேசிப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு முன்நகர்கிறாள். மாறும் நவீனக் கருவிகளுடனும் மனநிலையுடனும் அப்பா பொருந்தாமல் இருக்கிறார். மகள், நிகழும் நவீன காலத்தின் வேகத்தையும் தாண்டிப் பறக்கிறாள். நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள நியூஜெர்சியிலிருந்து ஒகஸ்டாவுக்கு அப்பாவுடன் செல்ல நியூயார்க்கிலிருந்து அவரை வரவைத்து காரில் பயணம் செய்கிறதுதான் கதை வடிவம். இந்த உத்திக்குள் காலத்தின் வேகத்தில் முன் தலைமுறையின் நினைவுகள் இளம் தலைமுறையினருக்குப் பொருளற்றுப் போய்விட்டதை உணர்வதுதான் கதை. அப்பா பிறந்த யாழ்ப்பாணம் என்ற பூமாதேவியை மட்டும் மகள் நினைவிலிருந்து உதறவில்லை! அமெரிக்காவில் அவள் வாழ்ந்த பழைய இடங்களின் நினைவுகளைக் கூட உதறிவிட்டுச் செல்லும் மனப்பான்மை உருவாகி இருப்பதை உயர்வு தாழ்வு என்ற கண்ணோட்டத்தில் எடைபோடாமல் காலத்தின் இயல்பாக மென்சோகத்துடன் முத்துலிங்கம் தனது பார்வையை வைக்கிறார்.
ஈழத்துப் போர்ச்சூழலிலிருந்து தப்பிவந்து கனடாவில் அகதியாக நுழைந்து கம்பெனியில் துப்புரவுத் தொழிலாளியாக இடம்பிடித்த உழைப்பவனின் கதைதான் ‘கருப்பு அணில்’. பனிக்காலத்தின் அழகியல் மாற்றம் வாசிப்பவர்களுக்கு ஒரு ரம்மியத்தைத்தரும். அந்த ரம்மியம் வாழ்க்கையில் இல்லை. லோகிதாசனுக்கு அந்தக்குளிர் உயிரைப் பறிப்பதாக இருக்கிறது. கணப்பு இல்லா வீடு தூக்கத்தை விரட்டுகிறது. மஞ்சள் நிறச் சீனர்கள், வெள்ளையர்கள் சொகுசாகவும் நல்லுணவு உண்டும் வாழ்கிற தேசத்தில் குடும்பச்சுமையோடு தாயின் துயர் போக்க வந்தவன் கருப்பன் என்ற வெறுப்பின் அடையாளத்தோடு வாழ நேர்கிறது. சக ஊழியர்களால் மதிக்கப்பெறாத கடைநிலை ஊழியனாக, தனியனாக நாட்டின் பருவகாலத்திற்கு உவப்பில்லாதவனாக சம்பந்தமற்றவனாக அந்நியனாக வாழநேர்கிற துக்கம் – ஒரு சீன இளம்பெண்ணிற்கு இருக்கிற மதிப்பு ஏன் கருப்பனுக்கு இல்லை என்கிற ஏமாற்றம் – இந்த அழகிய தேசத்தில் அழகிய வாழ்க்கையாக இல்லை என்பதை உணர்கிற தருணங்களை இக்கதை வெளிப்படுத்துகிறது.
புதிய நாகரிக நதியில் தமிழன் சுரணை அற்றவனாகப் போகும் நிலையை ‘ஐந்தாவது கதிரை’ கதை சொல்கிறது. அமெரிக்கா வந்த அகதிகளில் தங்களுக்கான மணமகன் மணமகளை முகவர்மூலம் தமிழர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். யாழ்ப்பாண முறையில் கூட திருமணம் நடக்கிறது. கிடைக்காத பொருட்களுக்கு (பிளாஸ்டிக் வாழைமரம்) பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றனர். மணமகள் வேலைக்குச் செல்லும்படியான சந்தர்ப்பம் நிகழ்ந்தவுடன் படுவேகமாக மேலைநாட்டுக் கலாச்சாரப் புயல் புகுந்து வீசுகிறது. தமிழர் மரபுகள் பொலபொலவென உதிர்கின்றன. அதே சமயம் பெண் ஒரு கொலாம்பியா, கொஸ்டாரிகா பெண்ணைப்போல மாற விரும்புகிறாள். முடி அலங்காரம், முகச்சாயம் என ஒப்பனைகளிலும் நடைஉடை பாவனைகளிலும் – மனப்போக்கிலும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறாள். இந்த மாற்றம் உறவில் கசப்பைத் தோற்றுவிக்கிறது. கொலம்பியா பெண்ணைப்போல மார்பில் ட்ராகன் பச்சை குத்திக் கொள்கிறாள். இந்த மாதிரி மாற்றத்தைத் தவிர்க்க முடியாமல் ஏற்று வாழும்படியான சூழலுக்குள் தமிழ்ப்பெண்கள் நகர்கின்றனர். ஒரு சோபாசெட்போல அதன் மடியில் புதிய கலாச்சாரம் அமர்வதைத் தூக்கி எறிய முடியாமல் தாங்குவதாக, ஏற்றுக்கொள்வதாக மாறுகிறது தமிழர் வாழ்க்கை.
ஈழத்தில் குக்கிராமத்தில் பிறந்து அரசியல் நெருக்கடியால் அகதியாக ஐரோப்பிய தேசங்களில் ஏற்கெனவே குடியேறியவர்களைத் தொடர்புகொண்டு தஞ்சமடைவது தொடரும் நிகழ்வு. அப்படி தஞ்சம் அடைந்த தேசத்தில் மனிதர்களிடம் வெளிப்படும் தீமையின் ஆட்டங்களை முத்துலிங்கம் கதைகள் சொல்கின்றன. அகதிக்கான பணம் பெற்று, சிறுவேலையில் அமர்ந்து மிச்சம்பிடித்து ஓட்டும் வாழ்க்கையில் மற்றொரு தமிழன் சுரண்டிவிரட்டுவதுதான் ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ கதை. கொழுந்தியாள் வீட்டில் தங்கி வேலைக்குச் செல்கிறவன் அவர்கள் நடத்தும் சீட்டில் மிச்சம் பிடிக்கிறான். யாழ்ப்பாணத்தில் மனைவி குழந்தைகளுக்கு அனுப்ப ஒரு நல்ல தொகை சேர்கிறது. கொழுந்தி, கணவன் இல்லாதபோது எதேச்சையாக கவர்ச்சிகாட்டி வீழ்த்துகிறாள். அவளுடைய குழந்தை கில்லாடியாக வளர்கிறது. அல்லது வளர்த்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் குழந்தைகள் விளையாடும் ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ விளையாட்டை விளையாட வீம்பு பிடித்து அழைக்கிறது. வயது பத்து. பெரியப்பன் வேறு வழியில்லாமல் கட்டிலைச் சுற்றி விரட்டி விளையாடுகிறான். விளையாட்டில் ஆடை நழுவி கட்டிலில் விழுகிறது. திடுக்கென கொழுந்தியின் கணவன் உள் நுழைந்து அவனை அடிக்கிறான். குழந்தையைப் பாலியலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக காவலில் மாட்டிவிடுகிறான். குழந்தை பெரியப்பாதான் இதற்குக் காரணம் என அழுது பாசாங்கு செய்கிறது. அவன் சீட்டில் சேமித்த பணத்தை அமுக்கிக்கொள்கின்றனர். ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ என்ற விளையாட்டை குழந்தை மட்டுமல்ல பெரியவர்களும் விளையாடி ஏமாற்றும் ஒரு போக்கு அகதி தேசத்தில் உருவாகிறது. உயிர்த் தப்பி வாழ வந்த அகதிகள் மெல்ல பணமோகத்தில் வீழ்ந்து அறம் பிறழ்ந்த வாழ்வை விரும்பித் தழுவத் தயாராகவும் இருக்கின்றனர்.
ஈழத்தில் போர் உண்டாக்கிய அவலம் பெருங்கொடுமையானது. சிதறடிக்கப்பட்டது தமிழ் இனம். உயிர்பிழைக்க எங்கெங்கோ விழுந்தோடினர். சென்ற இடங்களில் கடுமையாக உழைத்தனர். காலூன்றினர். நேர்மைமிக்க அவர்களின் வாழ்வின் ஊடே போக்கிரித்தனங்களும் வெளிப்படுவதை தமிழ்ப்பெருமை பேசாது வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார் முத்துலிங்கம். படைப்பாளி எப்போதும் தேடுவது உண்மையை மட்டுமே. அந்த உண்மை நாடும் கலைஞனாக முத்துலிங்கம் இருக்கிறார். பச்சாதாபம் கலைக்கும் உண்மைக்கும் எதிரி என்பதை உணர்ந்த கலைஞன் அவர். இசுலாமியப் பண்பாட்டு இழைகளின் நுட்பங்களை நெய்தபடி வேற்று மதத்து எழுத்தாளன் எழுதுவது – அதுவும் மதக்காழ்ப்புணர்வு இல்லாமல் வாழ்வை அணுகுவதும் விமர்சிப்பதும் ஒரு சவாலான காரியம். இந்தக் காரியத்தை தனது கதைகளில் பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், சோமாலியா, போன்ற நாடுகளின் பின்னணியில் வைத்துப் படைத்திருக்கிறார்.
ஆண்மகன் பிறந்து பனிரெண்டு வயது அடையும்போது அவன் ஆண் மகன் என்பதை நிரூபிக்க வேட்டையாடி விலங்கை வீழ்த்துவது ஒரு வழக்கம். முக்கியமாக பாகிஸ்தானின் வடபிரதேசத்து மலைமக்களின் பண்பாடு. இந்தப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாம் அறியாத இசுலாமியப் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் திருமண முறைகளையும், பெண்களின் நிலைகளையும், ஆண்களின் மூர்க்கத்தனங்களையும், பாகிஸ்தானிலேயே நிலவும் வட்டார குணத்தையும், துப்பாக்கி கலாச்சாரத்தையும், ஆண்வாரிசுப் பெருமையும் ஆண்ஆதிக்கப் பெருமையும், தலைமுறை – குடும்பப் பெருமையும், காம வெளிப்பாட்டின் நுண்மைகளையும் அதன் விழைவுகளையும் வேட்டைக் கொண்டாட்டங்களையும் தேசப் போராட்ட வரலாற்றின் கீற்றுகளையும் வெகு நுட்பமாக கதையின் இயல்பின் அங்கமாக மாற்றியபடி எழுதப்பட்டிருக்கும் கதை ‘வம்சவிருத்தி’ ஒரு ஆண்வாரிசுக்காக பண்பாட்டு – வரலாற்று – தலைமுறைபேசும் மக்களில் அதே பிரதேசத்திற்கு மட்டுமே உரித்ததான அழிந்துவரும் மலை ஆட்டை இடருற்ற உயிரினம் (endanjered Species) வேட்டையாடத் தடைசெய்யப்பட்ட அபூர்வ ஆட்டை வேட்டையாடி ‘வம்சவிருத்தி’ இல்லாமல் அழித்தொழிப்பதை விமர்சிக்கிறது. ‘ஒரு வேட்டைப் பண்பாட்டை வாழ்க்கைப் பண்பாட்டை சிறப்பாகக் காட்டி அந்நிலத்திற்கே உரிய மலையாட்டின் அழிவை நிகழ்த்துவது என்ன பண்பாடு என உள்ளுறையாகக் கேட்கிறது. இரண்டு மூன்று வரிகளிலேயே அழியும் எண்ணிக்கையைக் காட்டி மொத்தக் கதையையும் மொத்தப் பண்பாட்டையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளும்படி வைத்துவிடுகிறார். அல்லது அந்தப் பண்பாட்டை புதிய பாதையில் மேன்மைப்படுத்திக்கொள்ள படைப்பின் வழி வற்புறுத்துகிறார்.
‘பூங்கொத்து கொடுத்த பெண்’ பாக்கிஸ்தானில் நடக்கிற கதை. ஸைரா என்ற பெண், கதை சொல்லியின் அலுவலகம் வெளியிடும் பணிக்கான விளம்பரங்களில் எதுவந்தாலும் விண்ணப்பிப்பவள். கதைசொல்லி பாகிஸ்தானில் இருந்த 4 1/2 ஆண்டுகளும் அவளுக்கு வேலை கிடைப்பதில்லை. அவள் நல்ல அழகி. இளம் வயதினள். வேலை கிடைக்காத போதும் கதைசொல்லிக்கு பூங்கொத்தைத் தந்து ஒப்படைக்கச் சொல்கிறாள். இந்த ஸைராவுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை? இரண்டு முறை திருமணம் செய்த, பேரழகியான, முக்காடுபோடாத, முடியை பாப்வெட்டிக்கொண்ட கால்மேல் கால்போட்டுப் பேசுகிற, நாகரிகம் மிக்க எந்த வேலைக்கும் துணிகிற (ஓட்டுநர் வேலைக்கும்) அவளை இவற்றிற்கெல்லாம் தகுதியற்றவளாகக் கருதி நேர்முகத்தேர்விற்கு வரும் அதிகாரிகளும் நிராகரிக்கின்றனர். இதனை அறிந்தவளாக இருந்தும் தொடர்ந்து வேலைக்குப் போராடுகிறாள்.
இந்தக் கதையில் ஸ்ரீதேவியின் சினிமாப்பட போஸ்டர்களைச் சந்து பொந்துகளிலும் வண்டிகளிலும், பேருந்துகளிலும் ஒட்டியிருக்கின்றனர். அதனை ரசிக்கின்றனர். திருமணங்களில் தடைசெய்யப்பட்ட ராஜஸ்தானிய முஜ்ரா நடனத்தை ரகசியமாக இரவில் நடத்தி ரசிக்கின்றனர். இப்படியான நிகழ்வுகள் கதையின் பின்னணியில் வருகின்றன. இதை ஏற்றுக்கொள்கிறவர்கள், ஓர் இசுலாமிய இளம் விதவை நவீனமாக உடுத்துவதை வெறுக்கின்றனர். இந்தத் தகவல்களில் அவர்களின் இரட்டை வேடத்தை விமர்சிக்கிறது.
ஸைரா என்பதற்கு ‘சிரிப்பு அகலாதவள்’ என்று பொருள். ஸைரா என்று பெயர் வைக்க உரிமை உண்டு. ஆனால் அவளுக்குரிய இடம் சமுதாயத்தில் இல்லை. அந்தச் சிரிப்பை அர்த்தப்படுத்த எந்த ஆணும் விரும்புவதில்லை. நவீனமனம் கொண்ட – உழைத்து சொந்தக்காலில் நிற்க விரும்புகிற இளம் பெண்ணின் முயற்சியை இசுலாமிய அடிப்படைவாதிகள் விரும்புவதில்லை. எந்தப் பணியும் கிட்டாதபோதும் பரிவுடன் தன்னை நடத்திய கதை சொல்லிக்குப் பூங்கொத்து வாங்கிவந்து ஒப்படைத்துவிடும்படி தருகிறாள். அந்தப் பூங்கொத்து மென்சிவப்பு நிறம் கொண்ட கார்னேசன் மலர்களால் ஆனது. அந்தப் பூங்கொத்திற்கு ‘உன்னை என்றும் மறக்கமாட்டேன்’ என்ற பொருள் உண்டு. தன்னை மதித்த ஒரு மனிதனுக்கு அவள் தந்த மரியாதை அது.
தலிபான்களின் கை ஓங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் சூழலில் விதவைப் பெண்ணிற்கும் (ரஸீமா) அவளுடைய சிறுபிராயத்துத் தோழனுக்கும் (காசிம் அலேமி) பனிக்காலப் பின் மாலையில் சுள்ளி பொறுக்கச் சென்ற இடத்தில் காமநுகர்வு சம்பவிக்கிறது. காசிம் அலேமி ரஸ்யப் படைகளை விரட்டியடித்த முஜாஹிதின் படையில் இருந்த தேசப்பற்றாளன். ரஸீமாவின் கணவன் ரஷ்யப்படைகள் வீசியிருந்த கண்ணிவெடியில் மாட்டி மரணமடைந்தவன். அவனோடு வாழ்ந்த வாழ்க்கை இரண்டு வருடம் மட்டும். ஆப்கானிஸ்தான் வழக்கப்படி (பத்து வயது இளவயதினனான) கணவனின் தம்பியை 18 வயது நிரம்பவும் மணக்க இருக்கிறாள். அவனைத் தூக்கி வளர்த்தவளே இவள்தான். இந்த சூழலில்தான் ரஸீமாவிற்கும் காசிமிக்கும் நடந்த உறவு கொழுந்தனுக்குத் தெரியவருகிறது. இந்த விசயம் முழுக்க மறைக்கப்பட்டு – ஆனால் இதனைக் காரணமாக வைத்து தண்ணீர் பாய்ச்சும் வயல் பிரச்சனையில் வருங்காலக் கணவன் மோதுகிறான். காசிம் அவனைச் சுட்டுக்கொல்கிறான். இதற்குத் தண்டனை ரஸிமாவின் மாமனார் மூன்று குண்டுகளைப் பயன்படுத்தி பொதுஇடத்தில் வைத்து சுடலாம். தலிபான்களின் நீதி இது. சுட்டுக்கொல்லும் நிகழ்ச்சியை மையமிட்டுத்தான் ‘யதேச்சை’ முழுக்கதையும் நிகழ்கிறது. தலிபான்கள் பற்றி, ரஷ்யப் படைகள் பற்றி, போராட்டம் பற்றி, மணஉறவுகள் பற்றி, பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட உரிமைகள் பற்றி, கட்டுப்பாடான ஆடைகள் பற்றி என இசுலாமிய மத அடிப்படையிலான தலிபான்களின் ஆட்சி நடக்கும் நெருக்கடியான சூழலில்தான் அந்த பாலியல் உறவும் நிகழ்கிறது. விசயத்தை வெளியே விடாததால் கல்லெறிந்து கொல்லும் வைபவம் தவிர்க்கப்படுகிறது. 15 வயதில் விதவையான ரஸிமா நீண்டகாலத்திற்குப் பின் 25வது வயதில் – ஒரு சந்தர்ப்பத்தில் பழைய சிறுவயதுக் காதலன் காசிமுடன் உறவு கொள்கிறாள். ரஸிமாவின் மாமனார் சுட்ட ஒரு குண்டு குறி தவறுகிறது. ஒரு குண்டு தோளைப் பிய்த்துப் போகிறது. அவன் கதறுவதைப் பார்த்த கூட்டம் ‘அல்லாவிடம் விடு’ சுடாதே என்கிறது. மூன்றாவது குண்டை பூமியில் பாய்ச்சுகிறார். காசிம் தப்பிக்கிறான். மிச்ச தண்டனையை முடித்து காசிம் திரும்பி வர 15 ஆண்டுகள் ஆகலாம். அப்படி அவன் திரும்பி வந்து ரஸிமாவை விரும்பினால், திருமணம் நடப்பதாக இருந்தால் – மீண்டும் ரஸிமா ஒரு ஆணுடன் தனது இச்சையைப் பகிர்ந்துகொள்ள 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 15 வயதிலிருந்து 40 வயது வரை ஆணுடன் பகிர்ந்துகொண்ட காமம் ஒரே ஒருமுறைதான். இந்தப் பேசப்படாத மௌனத்தைப் பேசுகிறது கதை.
தலிபான் ஆட்சியில் இசுலாமிய வாழ்வின் நுண் தகவல்கள் எல்லாம் ஒன்றுகூடிய திரண்ட இக்கதையில் பாலியல் ஒடுக்குமுறையில் பட்டழுந்தி ஒடுங்கும் பெண்களின் உலகத்தை பரிவுடன் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறது. விமர்சனமாக இல்லாமல் அவர்களின் அசலான வாழ்க்கையிலிருந்து உருவாகிவரும் படைப்பின் எதிர்வினை இது எனலாம். ஆனால் ஆப்பிரிக்கக் கருப்பினத்து இசுலாமியர்களிடம் இவ்வளவு கறாரான பாலியல் ஒடுக்குமுறை இல்லை.
‘ஒட்டகம்’ கதை சோமாலியப் பெண்களில் குடிநீருக்காக அலைவதைச் சொல்கிறது. எட்டும் எட்டும் பதினாறு கிலோமீட்டர் நடந்து சென்று பக்கத்து ஊரில் தண்ணீர் எடுத்துத் திரும்புகிற மைமூன் தனது இளம் வயதுக் காதலனை நிராகரித்து – ஐம்பது வயது நிரம்பியவனுக்கு மூன்றாவது மனைவியாகப் போவதற்கு உளப்பூர்வமாகச் சம்மதிக்கிறாள். இளம் வயதுக் காதலனுக்கு பரிசப் பணம் தர 50 ஒட்டகங்கள் இருக்கின்றன. பக்கத்து ஊர் அவன் என்பதால் தாய் தந்தையை அடிக்கடி சென்று பார்க்கமுடியும். இதையெல்லாம் விட்டு ஒருநாள் பயணத் தொலைவில் அதுவும் கிழவனாகும் வயதினனைத் தேர்கிறாள். இரண்டு காரணங்களால் இந்த முடிவுக்கு வருகிறாள். கிழவனை மணந்தால் தண்ணீர் எடுக்க வெயிலில் வெகுதூரம் நடக்க வேண்டியதில்லை. தன் தாயைப்போல 11 பிள்ளைகள் பெற வேண்டியதில்லை. 2 குழந்தைகளுடன் முடிந்துவிட வாய்ப்புண்டு.
மைமூனின் ஊருக்கு கிணறு தோண்டித்தர ஐ.நா.குழு வந்த போது, ஊர்த்தலைவனான இவளுடைய தகப்பன் ‘மசூதி கட்டித் தாருங்கள்’ கிணறு தோண்டுவதை அல்லா பார்த்துக்கொள்வார் என்கிறார். வந்த அந்த வாய்ப்பு பக்கத்து ஊருக்குப் போய்விடுகிறது. வாய்ப்பை மைமூனின் தகப்பன் கெடுக்கிறான். அவள் தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் ஒரு மரத்தடி. அதில் தாயும் குழந்தையும் 5 ஆண்டுக்கு முன் கடுமையான வறட்சியில் தண்ணீர் கிட்டாமல் இறந்துபோகின்றனர். அவர்களின் எலும்புக்கூடுகள் நீண்ட நாட்கள் கிடப்பதை தண்ணீர் எடுக்கச் செல்லும் மைமூன் பார்ப்பதான தகவல் கதையில் வருகிறது. உயிர் வாழ்தலின் அடிப்படையான தேவை தண்ணீர். அதை நாடித்தான் உயிரினங்கள் இடம்பெயர்கின்றன. பாலைவனத்தில் ஒட்டகத்தின் நினைவு தண்ணீரை நோக்கியே இருக்கும். தண்ணீரைத்தேடி ஓடி நிரப்பிக்கொள்ளும். மைமூன் இந்த அடிப்படைப் பிரச்சனையை உணர்ந்து வாழ்நாள் முழுதும் சீரழிய வேண்டாம் என முடிவெடுத்து பிற இன்பங்களை நிராகரிக்கிறாள். சோமாலிய மக்களில் ஒரு இனக்குழுவை ஆதாரமாகக்கொண்டு பண்பாட்டுப் பின்னணியோடு உருவாக்கி இருக்கிறார். அரபு நாட்டு மத அழுத்தம் இந்தப் பெண்களுக்கு இல்லை. இனக்குழு வாழ்வில் இன்னும் தங்கியிருக்கும் சுதந்திரத்தோடு இருப்பதை ‘ஒட்டகம்’ கதை சொல்கிறது. தமிழ்க் கலாச்சாரத்திற்கு இயைந்த வாழ்க்கையாக ஆப்பிரிக்க வாழ்க்கை அமைந்திருப்பதை இவரின் கதை வழி அறியமுடிகிறது.
‘எதிரி’ ஒரு ஆப்பிரிக்க கதைதான் என்றாலும் தமிழ்நாட்டு வாழ்க்கைபோல இருக்கிறது. ஒரு வித்தியாசம்; காதலித்துக் குழந்தை பெற்றபின் திருமணச் சடங்கை மகன் மலர்ச்செண்டு பிடித்து முன் செல்ல நடத்த விரும்பும் பண்பாடு இருக்கிறது. கோழிகளின் முட்டைகளைக் குடித்து ஏப்பம் விடும் ஒரு பாம்பை அடிக்க கணவன் பல்வேறு உத்திகளைக் கையால்கிறான். தோல்விதான். பாம்புபற்றி அறிந்த பக்கத்து வீட்டு யோசேப் முட்டைகளுடன் பிளாஸ்டிக் பந்துகளை (பிங்பாங்) வைக்கச் சொல்கிறான். இந்த யோசனை வெற்றிபெறுகிறது. பாம்பு விழுங்கிய பந்தை நொறுக்கவோ, செறிக்கவோ முடியாமல் தலையால் அடித்து அடித்து உயிர் துறக்கிறது. பெரும் பிரயத்தனங்கள் செய்கிற ஒருவனால் செய்யமுடியாத காரியத்தை வழிப்போக்கன் செய்து விடுவது உண்டு. இந்த வேடிக்கைதான் இந்தக்கதை. எளிய கதைதான். ஆனால் இந்த கருப்புஇன மக்களின் பழமொழிகள், பாடல்கள், அலங்காரங்கள் எல்லாம் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் புதுமையாகவும் இருக்கின்றன. முத்துலிங்கம் தனது இம்மாதிரியான வெவ்வேறு நாட்டு கதைகளை ஒரு சுற்றுப்பயணி மனநிலையில் எழுதவில்லை. வாழ்ந்துபட்ட வாழ்வின் சித்திரங்களை ஈர்ப்பான தகவல்களுடன் உண்டாக்குகிறார். அதில் படைப்பாளியாக தனது பார்வையை குரல் உயர்த்தாத தொனியில் உள்ளுறை விமர்சனமாக வைக்கிறார்.
வெவ்வேறு உலக நிலத்து வாழ்வை அதன் இயல்போடு எழுதிய முதல் தமிழ் எழுத்தாளன் அ.முத்துலிங்கம், சங்கத்திணை இலக்கியத்தின் இன்னுமொரு பரிமாணம் இது.
3
அமெரிக்கா, கனடா பல் தேசத்தவர்களின் சங்கமமாக இருக்கிறது. பல நாட்டவர்கள் பிழைப்புத் தேடி வருகின்றனர். போர் காரணமாக, அரசியல் நெருக்கடி காரணமாக, வறுமை காரணமாக, கல்வி காரணமாக, பணத்தாசை காரணமாக. சொகுசு காரணமாக, உறவு காரணமாக (காரணம் காட்டி) வருகின்றனர். அவர்களுடனே அவர்களது நம்பிக்கைகள், பண்பாட்டு அம்சங்கள் மற்றொரு சமூகத்துடன் இணைகின்றன, நினைவு கூறப்படுகின்றன, பிடிவாதமாக போற்றப்படுகின்றன, கைவிடப்படுகின்றன, வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டு நகர்கின்றன. இந்த அம்சங்கள் இங்கு பணி இடச் சுழலில் முட்டிமோதி உருமாறுகிற தன்மையை பல கதைகளில் காட்டியுள்ளார். இதில் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இத்தேசத்தின் புதிய பண்பாட்டுடன், நடைமுறை பழக்கவழக்கங்களுடன், தொழில்நுட்ப வளர்ச்சியுடன், பல்சமூகக்கலப்புடன் பண்பாடு சார்ந்து உரசிக் கொள்வதும் ஒன்று கலப்பதுமான இரண்டாம் தலைமுறையை இயல்பாக பார்க்கிறோம். கலக்க முடியாதபோது வெளியேறும் பழைய தலைமுறையினரையும் காணமுடிகிறது. முத்துலிங்கத்தின் கதை உலகம் மாறி நிற்கும் சமூகத்தை நமக்குக் காட்டுகிறது. தமிழ்க் கதை உலகிற்கு இது புதுசான தன்மையைக் காட்டுகிறது.
இக்கதைகளின் ஊடே எழுந்துவரும் புலம் பெயர்ந்தவர்களின் வரலாற்றின்பின் உள்ள வலிகள், வேறு வழியற்று செய்ய நேருகிற வேலைகள், அவர்களின் பண்பாடு சார்ந்த அபூர்வமான நம்பிக்கைகள், வரலாற்றுத் தகவல்கள் கதைகளுக்குக் கூடுதல் வலுவை ஏற்படுத்துகின்றன. வறுமையை வறுமை என்று ரொம்பவும் அழுத்தாமல், இனக்கலப்பை இனக்கலப்பு என்று அழுத்தாமல் இருபுற அலைகளின் ஆட்டத்தை வாழ்வில் வைத்து சாகசமாக எழுதிச் செல்கிறார். எல்லா வகையிலும் மாற்றங்களை ஏற்று நகரும் புதிய வாழ்க்கைச் சுழலை மனத்தடையின்றி எழுதுகிறார். பருவமகள் இருக்க ஆண்துணையை சுதந்திரமாக தேடிக்கொள்ளும் தமிழ்ப் பெண்ணை, (மூளையால்யோசி) துருக்கி, கிரீஸ் நாடுகளில் மாஃபியா கும்பலில் சேர்ந்து கள்ளக்கடத்தலில் ஈடுபடும் தமிழ் இளைஞனை (ஓணானுக்குப் பிறந்தவன்), சிங்கள இராணுவப் பணியை உதறிவிட்டு டொரோண்டோ சாலையில் உதிரி வேலைகேட்டு நிற்கும் சிங்களவனை (சூனியக்காரியின் தங்கச்சி) என்று வேறு பக்கங்களையும் காட்டுகிறார்.
இலக்கியப் புத்தகங்களிலிருந்து, அறிவியல் உண்மையிலிருந்து, உலகச் சமூக வரலாற்றிலிருந்து, நம்பிக்கைகளிலிருந்து எடுத்துக்கொள்ளும் தகவல்களைப் புனைவிற்குச் சாத்தியமான விதத்தில் கையாள்கிறார். அவை வெற்றுத் தகவல்களாக மிதக்காமல் அக்கதைமாந்தர்களின் வாழ்வோடு கலந்திருக்கும் விதமாகப் புனைந்து விடுகிறார். இது கதைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. போர்ஹே தனது கதைகளில் கையாளும் இவ்விதமான தகவல்களைவிட, முத்துலிங்கம் தரும் தகவல்கள் அழுத்தமாகவும் உணர்வோட்டத்துடனும் பொருத்தமாகக் கூடிவந்திருக்கின்றன. சிலசமயம் கதைகளில் தரப்படும் புள்ளி விபரங்கள் கடந்துவந்த பாதையைப் பரிசீலிக்கின்றன. கதையிலே படுத்திருக்கும் ஒரு நாய், வானிலே பறக்கும் பறவைகள், மரம், பனி, சுவர் கூட அர்த்தபூர்வமான குறிப்பீடுகளாக மாறிவிடுகின்றன. முத்துலிங்கத்தின் நினைவுச் சுரங்கத்திலிருந்து கதையோட்டத்தில் மேலெழுந்து வரும் முதுமொழி போன்ற கற்ற வாசகங்கள் கதையைத் திறக்க ஏதுவாக இருக்கின்றன.
‘ஆமைபூட்டு’, ‘சீஸ்பீக் நாய்’, அஸ்பென் செடி, திரோஸ் அரசன், பாஸோவர் நாள், ஜாதகப்பித்து, காதலன் காப்பாற்ற வேண்டிய இரகசியம், இரகசியமான ஜாதிக் கலப்பு, அழியும் நிலையில் இருக்கும் அராபிக் மொழி, சர்வதேச தேசிக்கோடு, கிரீன்விச் நகரில் இருக்கும் மெரிடியன் கோடு, வியட்னாமியரின் சந்திரக் கிழவனின் திருமணசாட்சி, காதலுக்காக இழந்த 1600 மைல், 290 மணி நேரங்கள், இரவில் பிறப்பவருக்குச் சேரும் இராட்சசகுணம் என்று எத்தனை எத்தனையோ தகவல்கள் கதைகளை உயிர்ப்புள்ளதாக ஆக்குகின்றன.
கிரீஸ் நாட்டிலிருந்து வந்து முப்பத்தைந்து ஆண்டுகள் துப்புரவுப் பணி செய்யும் ஹெலன், விதவிதமான உணவு தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட சலோனிக்காக நகரத்திலிருந்து வந்த சாரா, முடிதிருத்தும் வேலை செய்யும் இரான் தேசத்து ரோனி, எந்தப் பொருளையும் கணக்குப் போட்டுப் பார்க்கும் உக்ரேன் தேசத்து நடாஷா, குதிரைப் பண்ணையில் வேலை செய்யும் பிலிப்பைன் தேசத்து மார்ட்டென் என்கிற மார்ட்டின், சொந்த நாட்டில் அயல்தேசத்து புலம் பெயர்ந்தவர்களிடம் அடிமை வேலைசெய்யும் உக்கோ, ஈழதேசத்திற்காக சமர் புரிந்து வெறுங்கையுடன் கனடா வரும் சைமன், கனடா கனவுடன் வந்து கிரீஸ் எல்லையில் சிக்கி வெனீஸ் நகரில் பசிபசி என்று ஓடும் மகேஷ். இப்படி உலகெங்கிலும் இருந்து தப்பித்து வந்தவர்களின் புலம் பெயர் கதைகளுக்குப் பின்னால் இனவாதமும், போரும், வறுமையும், அதிகார மோதல்களும் துரத்தித்துரத்தி அடித்த கனமான வரலாற்றின் ஆறாத வடுக்களை சுமந்து திரிபவர்களாகத் திறந்து வைக்கிறார். முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்கும்போது புலம்பெயர்ந்து, அங்கு குடியேறிய ஒவ்வொரு தேசத்தவரும் ஒரு வேதனையான கதையை சொல்லாமல் சுமந்து கொண்டு இருப்பவர்களாகவே நமக்குத் தோன்றுகிறார்கள். முத்துலிங்கம் தம் கதைகளின் வழியாக பிரமாண்டமாகக் காட்டுவது மானுட துக்கம். ஈழத்து விடுதலைப் போரில் பங்கேற்ற பெண்களின் ஆண்களின் வீரம் செறிந்ததும், இலட்சியக்கனவு கலைந்ததுமான போர்க்கால கதைகளைப் பிற்காலத்தில் தொடர்ந்து எழுதி இருக்கிறார். இலக்கியத்தை மதிப்பார்ந்த இடத்தில் வைத்து நோக்கும் அவரது கலை உள்ளம் சமுகத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது.
தன் கதைகளின் வழியே உலக மனிதர்களின் வாழ்வியல் சித்திரங்களைப் பெரிய அளவில் நமக்குத் தந்திருக்கும் முதன்மையான தமிழ் படைப்பாளி அ.முத்துலிங்கம். விதவிதமான மானுடச் சீரழிவுகளுக்கிடையே வாழ்ந்துவிடத் துடித்த, துயரத் தத்தளிப்புகளின் இலக்கிய சாட்சியங்களைத் தந்திருக்கிறார். அடைக்கலம் தேடி வந்த இடங்களில் ஏமாற்றப்பட்டதும், இளைப்பாறுதல் கிட்டியதும் நேர்கிறது. அதை மிகையில்லாமல், சார்பில்லாமல் சொல்லத்தெரிந்த கலைஞனாகவும் இருக்கிறார். உலகத்தின் உறைந்த கண்ணீர் இலக்கியமாகியிருக்கிறது.
முத்துலிங்கம் பணிசார்ந்து இருக்க நேர்ந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஸ்வீடன், பிரான்ஸ், நைரோபி, ஆப்ரிக்கா, சோமாலிய, ரம்பூர் பள்ளத்தாக்கு என்று பல்வேறு தேச நிலங்களில் வைத்து எழுதப்பட்ட கதைகளில், இலங்கை மண்ணின் கதைகளில், புலம் பெயர்ந்து கனடா வந்த தமிழர்களின் கதைகளில் பின்னணியும் விசயமும் வலுவாகக் கூடி வந்திருக்கின்றன.
அமெரிக்கா, கனடாவில் குடியேறிய பிறநாட்டு மாந்தர்களின் கதைகளில், விசயம் வலுவாக இருந்தாலும், கதைகள் அதிகமும் சந்திப்புகளில் நிகழும் உரையாடல் வழி விரிகின்றன. விசயங்கள் கொட்டப்படுகின்றன, மலரவில்லை. புனைவின் சாத்தியங்களை மற்ற கதைகள் போல விரித்துக்கொள்ளவில்லை. நிலம் வலுவாக உருவாகவில்லை. தமிழ்ச்சிறுகதை உலகிற்குப் புதுசாக இருப்பதால் மட்டுமே முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. தமிழ் எழுத்தாளனின் பார்வையில் எழுதப்பட்ட சர்வதேசக் கதைகள் இவை.
முத்துலிங்கம் இக்கதைகளை தன் பாதுகாப்பில் அழகாக உருவாக்கி விடுகிறார். (சுவருடன் பேசும் மனிதர், மயானப் பராமரிப்பாளர், ஐந்துகால் மனிதன், புளிக்க வைத்த அப்பம், ஓணானுக்குப் பிறந்தவன், வேட்டை நாய், இரயில் பெண், அமெரிக்காக்காரி….) சென்று முடிய வேண்டிய இடத்தைச் சரியாக செலுத்திவிடுகிறார். அவரது வாசிப்பும், வித்தியாசமான தகவல்களை கதையில் இழைத்து விடுகிற கைவண்ணமும் இக்கதைகளை ஈர்க்கும்படியாக ஆக்கிவிடுகின்றன. இது இலக்கிய வாசனை அறிந்த அவரின் பலமாகக் கருதுகிறேன். ஆனால் கதைக்குள் நிகழும் எதேச்சைகள் இல்லை. எழுத்தாளனின் கட்டுப்பாட்டை மீறிச்சென்று நிகழும் கண்டடைதல்கள் இல்லை. சுயானுபவம் சாராத பிறத்தியாரின் கதைகளை தன் வழியாகச் சொல்லப்பட்ட முறையில் இருப்பதால் வேறு அம்சங்கள் கூடிவரவில்லை என்று நினைக்கிறேன். அகப்பாய்ச்சலுக்குப் பதிலாக புறப்பாய்ச்சலில் விளைந்த கதைகள் அதிகம். மர்மங்களைத் திறப்பதில்லை. வரலாற்றைத் திறக்கின்றன. நடைமுறை வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகின்றன. இத்தோடு தமிழ்ப்பண்பாட்டில் ஊறியவர்கள் மேலைநாட்டு நடைமுறைகளில் ஒட்டமுடியாது உரசும் கதைகளில் வெளிப்படும் வேடிக்கை படிக்கவைக்கிறது என்றாலும் அவை மிகச்சிறந்த கதைகள் என்று சொல்வதற்கில்லை. அதில் நெருக்கடியான முரண்களை எதிர்கொண்ட கதைகள்தான் எனக்குச் சிறப்பாகத் தோன்றுகின்றன. இதையெல்லாம் மீறி மயானப் பராமரிப்பாளன், புளிக்க வைத்த அப்பம், சூனியக்காரியின் தங்கச்சி கதைகள் நன்றாக இருக்கின்றன. வேட்டைநாய் நல்ல கதைதான். அக்கதையில்கூட நடாஷா காதல் கணவனுடன் சண்டையிட்டு அவன்மேல் ஏறியமர்ந்து தாக்கப் பார்த்து தாக்கமுடியாமல் திகைக்கிற இடத்தில் “கழிவு விலையில் வாங்கிய வேட்டை நாயைப்போல பாதியிலேயே பரிதாபமாக விழித்தாள்” என்று மீண்டும் நாய் வர்க்கத்தைத் தொட்டுக்காட்டாமலே சொல்லப்பட்டிருக்கலாம். ஏனெனில் அதில் கூடி வந்திருக்கும் உளவியலே அக்கதையை உயர்த்தி விடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுது சிறந்த கதைகள், நல்ல கதைகள் நிரம்ப உண்டு. இனி அவரிடமிருந்து மகத்தான கதைகள் வரவேண்டும் என விரும்புகிறேன்.
முத்துலிங்கத்திற்கு வாய்த்திருக்கும் மெல்லிய குறும்பு நடை வாசிப்பதில் வசீகரத்தைக் கூட்டுவது. குதியாட்டம் போடாமல் எள்ளுவது. எள்ளல் என்றாலும் மறைந்து வெளிப்படும் தன்மையில் ஆனது. ஒருவிசயத்தை சுவாரஸ்யமாக விவரித்துக்கொண்டே போய் இறுதியில் தலைகீழாகிப்போன இக்கட்டைக் காட்டும்போது மனத்தைக் கவ்விப் பிடிக்கிறது. எனக்குச் சிலசமயம் இப்படித்தோன்றும்; இந்தநெருக்கடியை இப்படிச் சொல்ல இந்த துள்ளலான குறும்புநடை தேவையா என்று. அதில் காலம் பங்காற்றுவதை கவனிக்க முடிந்தது. உரிய சம்பவத்திலிருந்து வெகுதூரம் கடந்து வந்து பார்க்கும் மனநிலையில் சொல்லப்படும் போது எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவத்தை காலம் தந்திருப்பதை உணரவும் முடிகிறது. எங்கள் வீட்டு நீதிவான், மூளையால் யோசி, தாழ்பாள்களின் அவசியம் போன்ற கதைகளை இவ்விடத்தில் சொல்லலாம்.
அ.முத்துலிங்கத்தின் ஒட்டுமொத்த கதைகளைப் படிக்கின்றபோது கி.இராஜநாராயணன் கதைகளோடு அருகில் வைத்துப் பார்க்கத் தோன்றியது. அவரது கதைகள் உள்ளூர் கரிசல் மண்ணின் கதைகள். தோட்டங்களில் ராகியோ, மல்லியோ, பருத்தியோ தனித்து நிற்பது போன்ற தோற்றத்தைத் தருவன. அவற்றின் தினுசுகளில் வெவ்வேறு தனித்தன்மைகளை காட்டுவதாக இருகின்றன. ஒரே புலத்திலேயே வெள்ளைச்சோளமும், கம்பும், கேழ்வரகும், சாமையும், சம்பாநெல்லும், தினையும், குதிரைவாலியும், இருங்குச் சோளமும், அவரையும், துவரையும், பாசிப்பயிறும், உளுந்தும் கல்லுப்பயிரும், தட்டாம்பயிரும் கலந்து விளைகிற தோற்றத்தைத் தருகின்றன முத்துலிங்கத்தின் கதைகள். ஒரு தாழ்வாரத்தின் கீழே உலகமக்களின் வெவ்வேறு முகங்களை, வெவ்வேறு பாணிகளை, வெவ்வேறு பிரச்சனைகளை சர்வதேச சங்கு முகமாகக் காட்டுகிறார். கி.இராஜநாராயணனின் கரிசல் இலக்கியம் ஒரு தனித்துவம் என்றால், அதன் நேர் எதிர்நிலையில் பன்மைத்துவமான மானுட சங்கமம் அ.முத்துலிங்கத்தின் கதைகள். வெவ்வேறு பூக்களில் தேனை உறிஞ்சி கொண்டு வந்து சேர்த்த தேனடை. எதிர்பாராது விழுந்து கடலில் தத்தளிப்பவர்களை எங்கிருந்தோ நீந்திவந்து சுற்றி முட்டித் தூக்கி ஆசுவாசத்தோடு அன்பு பாராட்டும் டால்பின். தமிழ்ச் சிறுகதை பரப்பை இவ்விதம் விஸ்தாரமாக்கிய கலைஞன் அ.முத்துலிங்கம்.
உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு கருத்தரங்கம்,
மதுரை, 14.03.2015