மலேசிய நவீன கவிஞர்கள் (4) : பூங்குழலி வீரன் கவிதைகள்

பூங்குழலி வீரன்

எங்கோ படித்த யூதக்கதை ஒன்று: மாணவன் ஒருவன் யூதகுருமாரான ரபி ஒருவரிடம் வந்து ‘பழைய காலங்களில் எல்லாம் மனிதர்கள் கடவுளைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் கதைகளில் படிக்கிறோம். இப்போது ஏன் கடவுள் யாருக்கும் தெரிவதில்லை,யாருடனும் பேசுவதில்லை’ என்றான். அதற்கவர் ‘ஏனென்றால் இப்போது யாராலும் அவ்வளவு தாழ குனிய முடிவதில்லை. அதனால் தான்’ என்று பதிலளித்தார். கடவுளைக் காணமுடியுமோ முடியாதோ, ஆனால் குழந்தைகளுடன் பேச, ஒருவர் நன்கு குனிய வேண்டியுள்ளது. அவர்களின் உலகிற்குள் நுழைய தம் உயரத்தையும் எடையையும் குறைக்க வேண்டியுள்ளது. பத்து தலைகளுடன் ஒருவர் எந்த சிற்றில் உள்ளும் நுழைய முடியாது.

கலை இலக்கியம் எப்போதும் குழந்தைகளை, குழந்தைமையை தமது நேசசக்தியாகவே கருதுகிறது. ஒருவகை லட்சிய நிலையாகக் கூட. மறைஞான ஆன்மிகமும் அத்தகைய நம்பிக்கையைக் கொண்டதே. கரமசோவ் சகோதரர்களின் இறுதிக்காட்சியில் அல்யோஷா அநேக குழந்தைகளுடன் அந்த மாலை வேளையில் மகிழ்ந்திருப்பது தாஸ்தேயவஸ்கியின் தீர்வு மட்டுமல்ல, ஏசுவின் உபாயமும் அதுவேதான். கலை, ஆண்களின் உலகைச் சேர்ந்ததல்ல அது அன்னையரின் மண்டலத்தில் உதிப்பது என்கிறார் உளவியலாளர் யுங். அதே போல நாம், அது வளர்ந்தவர்களின் உலகைச் சேர்ந்ததன்று குழந்தைகளின் உலகைச் சேர்ந்தது என்றும் கூறமுடியும்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாளர் என்று சொன்னது யார் என்பது நினைவிலில்லை. அதைப்போல், எல்லோருமே பிறவிக்கலைஞர்களுக்கான சாத்தியம் உடையவர்கள்தாம். குழந்தைப்பருவமானது விதிவிலக்கின்றி அந்த நல்வாய்ப்பை யாவருக்கும் வழங்குகிறது. பிறகு மெதுவாக நாம் பெரியவர்களின் பாதைகளில் நடக்கத் தொடங்குகிறோம். சமூகமும் அதன் நிறுவனங்களும் அதை விரும்புகின்றன. பெரியவர்கள் குழந்தைகளை விழுங்குகிறார்கள். சமூகம் பெரியவர்களை விழுங்குகிறது. காந்தியின் கைத்தடியைப் பற்றி ஒரு பாலகன் அவரைக் கூட்டிச்செல்வது போல் உள்ள புகைப்படத்தைக் காணுந்தோறும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. குழந்தைகள்தாம் பெரியாட்களை வழிநடத்தி கூட்டிச்சென்று பத்திரமாக வீடுசேர்க்க வேண்டுமென்று. ஏனெனில் அவர்களுக்குத்தான் நமது வீடு தெரியும். தேவதேவன் எழுதுகிறார்

குழந்தைகள் தங்கள்
குழந்தைமையைக் காத்துக்கொண்டதெப்படி?
காத்துக்கொள்ள முடியாத துர்ப்பாக்கியக் குழந்தைகள் தாமோ
நிலமெங்கும் தம்மைத் தாமே கூறுகட்டிச்
சிதைத்துக்கொண்டு வாழும் இம்மனிதர்கள்

கவிதை எழுத குழந்தைக்கண்களையும் மனதையும், தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது பொதுவாகவே வளர்கவிஞர்களுக்கு வழங்கப்படும் அறிவுரை. கவிஞர்களுக்கு இருக்கவேண்டிய திறந்த மனநிலையும், கற்பனையும் சிறார்களுக்கு இயல்பிலேயே வாய்த்துள்ளது. கவிஞர்கள் சாதகமாகவோ, பணிநிமித்தமாகவோ அடையமுனையும் பல அம்சங்கள் குழந்தைகளின் சகஜ இருப்பிலேயே பொதிந்துள்ளது. உதாரணத்திற்கு  கவிஞன் உருவகத்தை உருவாக்குகிறான். குழந்தை பெரும்பாலும் உருவகத்திலேயே சிந்திக்கிறது. அவன் பற்பல காரியங்கள் நிறைவேற்றும் பொருட்டு மொழியை நெகிழ்ச்சி செய்கிறான். அதற்கோ, மொழி என்பதே நீர்மையான விளையாட்டு விஷயம்தான். ஒருவகைப் புனலாடல்.

ஏனெனில் அவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு நினைவும் அறிவும் கனக்கவில்லை. மனதிலோ புலன்களிலோ பழக்கம் என்கிற புரை இன்னும் விழவில்லை. தேவதச்சன் எழுதுகிறார்.

இன்னும்
தாதி கழுவாத
இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின்
பழைய சட்டை என்று ஏதும் இல்லை
பழைய வீடு என்றும் ஏதும் இல்லை
மெல்லத் திறக்கும் கண்களால்
எந்த உலகை புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி
அதை எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி.

இதைத்தான் பூங்குழலி வீரனும் இப்படி சொல்கிறார்:

ஒவ்வொரு அறிதலின்
உச்சத்திலும்
கண்களை அகல விரித்து
அதிசயிக்கின்றாய்
கொஞ்சமாய் விரிந்து

***

நாம் புதியவற்றை அஞ்சுகிறோம், முடிந்தமட்டும் அவற்றைத் தவிர்க்கிறோம். அலுவலகம் செல்லும் வழியில் முளைத்த ’வேலை நடக்கிறது வேறு பாதையில் செல்லவும்’ என்ற அறிவிப்புப்பலகை நம்மை எரிச்சலுறச் செய்கிறது. உலகம் என்பது அறிந்த இடம். மக்கள் என்போர் இதனிடம் இருந்து விவாகரத்து பெற்று தமக்கே உரிய கற்பித அறையில் வாழ்பவர்கள், குழுக்குழுவாகவோ அல்லது தனியாகவோ. மாறாக குழந்தை ஒவ்வொன்றையும் அறிய விரும்புகிறது. அவ்விருப்பம் அதன் உயிரூக்கத்திற்கு அவசியமான ஒன்று. என்பதனால் அவை புதியவற்றை விரும்புகின்றன. அவர்களுக்கு இவ்வுலகம் திறந்திருக்கிறது, நமக்கது பூட்டியிருக்கிறது. கவிதைகளானவை, அப்பூட்டிய உலகின் பெரும்பரப்பில் சிறிய சிறிய சாவித்துவாரங்களைத் தீட்டி, அதைச் சுற்றி கதவுகளை வரைந்து, அங்கங்கே அவ்வுலகைத் திறந்து காட்டுகின்றன.

அதே போல குழந்தைகள் தம் மழலைக் கேள்விகளால் அதர்க்க சேட்டைகளால்,பெரியவர்களின் கண்களையும் மூளையையும் சிரித்து நாளான வாய்களையும் அவ்வப்போது திறக்கிறார்கள். இப்படியாகப் பெற்றோர்களுக்கு குழந்தைகள் அளிக்கும் பயிற்சியைப் பற்றி முகுந்த் நாகரஜன் இந்தக்கவிதையில் குறிப்பிடுகிறார்:

குட்டித் தலையணை, குட்டிப் போர்வை,
குட்டி டம்ளர் மற்றும்
குட்டிக் கொட்டாவியுடன்
குழந்தைகள் உருவாக்குகிறார்கள்
ஒரு குட்டி உலகத்தை,
அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு
குட்டிக் கவளங்களைச் செய்யும்
பயிற்சியைத் தருகிறார்கள்

பூங்குழலி வீரனின் கவிதைக் குழந்தையும் மூத்தோர் உலகில் இப்படி நல்லதொரு இடையீட்டைச் செய்கின்றது:

நான் மிக கவனமாக
ஒதுங்கி
நடக்க வேண்டியிருக்கிறது
வீடெங்கும்
நடமாடித் திரிகிறது
அவளது
களிமண் பொம்மைகள்

வனம் என்பது ஆன்மாவின் பிரார்த்தனை என்றார் பால் செலான். குழந்தைகள் நம்மிடம் கவனமாக இருக்கச் சொல்கின்றனர். நம்மை அழைத்து அழைத்து, காகத்தையும் நாயையும் காணும் ஒவ்வொன்றையும் காட்டுகின்றன. நாம் கவனிப்பதில்லை, சந்நதி முன்னில் கூட மணியெழுப்பி இக்கணத்திற்கு இழுத்துவரப்பட வேண்டிய நாம் வேறெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் போல. ஒன்றுமில்லை கொஞ்சம் கவனம், அது இருந்தால் எல்லா இடத்திலும் கவிதையைக் காணமுடியும். போர்ஹே சொல்கிறார்:கவிதை வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஒன்றல்ல, அது இங்கு தான் ஒளிந்து திரிகிறது, எப்போது வேண்டுமானாலும் நம் மீது பாயலாம்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடவுள் இன்னமும் மனித குலத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது என்ற பிரபலமான தாகூரின் மேற்கோள் சுட்டுவது அதைத்தான். யோசித்து பாருங்கள், குழந்தைகளின் வருகை முற்றிலும் நின்றுவிட்டால், இந்த மனிதர்கள் எப்படி நடந்துகொள்வார்கள். தங்களது துருப்பிடித்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் கொண்டு போர்களையும் பேரழிவையுமே உருவாக்குவார்கள். எனவே தான் இவ்வுலகிற்கு ரிஸெட் பொத்தானும் ரிஃப்ர்ஷ் பொத்தானும் தேவைப்படுகின்றன. இந்த உலக நடப்பை மறுசுழற்சி செய்துகொண்டே இருக்க வேண்டியுள்ளது. நம்பிக்கை மற்றும் நிலையிருப்பிற்கான உத்திரவாதத்துடன் புதிய பார்வையும் புதிய கேள்விளும் வேண்டியுள்ளன. புதிதாக பார்ப்பதன் மூலம், அனுபவிப்பதன் மூலம் புதிய எதார்த்தத்தை சிருஷ்டிக்க முயல வேண்டியுள்ளது. சொல்லப்போனால் கவிஞர்களும் இந்த வேலையைத் தான் மேற்கொள்கிறார்கள் அல்லது பரிச்சயமழிப்பு என்றழைக்கப்படும் இது அவர்களது அடிப்படை பணிகளில் ஒன்று. நான் விளையாட்டாக எண்ணுவதுண்டு, கவிஞர்கள் சுயபுலம்பலாகக் கவிதை எழுதுவது எல்லாம், தங்களைக் குழந்தைகளாக நடத்துங்கள் என உலகிடம் கோருவது தானோ என்று. கலைஞர்களிடம் சிறுபிள்ளைக் குணாம்சங்கள் நிறையவே இருக்கும் என்பது தானே உளவியலாளர்களின் கணிப்பும்.

***

தமிழில் பிள்ளைத்தமிழ் என்று ஒரு சிற்றிலக்கிய வகையே உண்டு. பாடாண் திணையின் நீட்சியாக வரையறுக்கப்படுவது என்றாலும், அதற்கு முன்பே அகத்திணையின் நீட்சியாக பக்தி இலக்கியங்களில் பெருந்தெய்வங்களைக் குழந்தைகளாக்கி கொஞ்சி விளையாடி சேவிப்பது ஆரம்பமாகியுள்ளது. (பெரியாழ்வாரில் தொடங்கி  பெரும்பாலும் பிள்ளைத்தமிழ் ஆசிரியர்கள் ஏன் ஆண்களாகவே உள்ளனர்?) வடமொழி கவிதையியலில் இத்தகு உறவுநிலையையும் பாவத்தையும் வாத்சல்ய ரசம் என்ற கலைச்சொல்லால் குறிக்கின்றனர்.

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?

நவீனக்கவிதையில் குழந்தைகள் உலகம் அதிகம் பதிவானவை என்றால் தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், கல்யாண்ஜி, ஷங்கர்ராம சுப்ரமணியன், யூமாவாசுகி, முகுந்த் நாகராஜன் போன்றோரின் படைப்புலகங்களைச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக முகுந்த் நாகராஜனின் வருகை இத்தகு பார்வைக்காகவே மிகுந்த கவனத்தைப் பெற்றதுடன் இவ்விதக் கவிதைகளின் மீது புதிய ஆர்வத்தையும்  பெருக்கியது.

குழந்தை உலகின் அழகுகள் ஒளிகூடும் தருணங்கள் பதிவாகி இருந்ததுடன் பெரியவர்களின் உலகிற்குள் சிறுவர்கள் தமது நிகழ்த்தும் இடையீடுகளும் இக்கவிதைகளில் இடம்பெற்றிருந்தன. கூடவே இருவேறு உலகங்கள் மாறுபட்ட உலகப்பார்வைகள், இவை உரசிக்கொள்ளும் கணங்களின் தெறிப்புகளும்.

இத்தகைய கவிதைகளில் இருப்பதென்ன. இவற்றில் விளக்குவதற்கோ, விரித்துரைத்து ரசிப்பதற்கோ பெரிதாக எதுவும் இல்லை. இவை நிர்வாணமாய் உள்ள கவிதைகள். பெரிய பெரிய சொற்களோ சொற்றொடர்களோ இன்றி படிமம் உருவகம் ஆகிய அணிமொழி ஆபரணங்கள் துறந்து பேச்சு மொழியில், ஒரு திறப்பளிக்கும் தருணத்தை முன்வைத்து முடியும் விவரணைக் கவிதைகள். கூர்த்த/ந்த அவதானத்தைத் தமது கருவியாகக் கொண்ட படைப்புகள். கவிதையைக் கண்டுபிடித்தால் போதும் அதை வெளிப்படுத்த எந்த பிரயாசையும் படவேண்டியதில்லை. குழந்தைகள் புதிதாகத் தாங்கள் கண்டுபிடித்ததைச் சொல்வது போல் நேரடியாக சொல்லிவிடலாம்.

தமிழில் இப்படியான plain poetry கவிதைகள் ஓர் அலையென எழுதப்பட்டமைக்கு முக்கியமான காரண கர்த்தாவாகச் சொல்லப்படுபவர் பிரஞ்சு கவிஞர் ழாக் பிரெவெர். வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த, பேர் பெற்ற சொற்கள் தொகுப்பில் இருந்தொரு கவிதை:

மக்குப் பையன்

வேண்டாம் என்று தலையை ஆட்டுகிறான்
ஆனால் சரி என்கிறது அவன் இதயம்
அவனுக்குப் பிடித்ததற்கெல்லாம் ‘சரி’
ஆசிரியருக்கு ‘வேண்டாம்’
நின்றுகொண்டிருக்கும் அவனிடம்
கேள்வி கேட்கப்படுகிறது
எல்லாப் பிரச்சனைகளும் அவன்முன்
வைக்கப்படுகின்றன
திடீரென ஒரு பைத்தியக்காரச் சிரிப்பு
அவனைப் பற்றிக்கொள்கிறது
எல்லாவற்றையும் அழிக்கிறான்
எண்களை சொற்களை
தேதிகளை பெயர்களை
வாக்கியங்களை சிக்கல்களை
பிறகு ஆசிரியரின் மிரட்டலையும் மீறி
மேதைச் சிறுவர்களின் ஆரவாரத்தினூடே
பல வர்ணப் பென்சில்களைக் கொண்டு
இன்னல் எனும் கரும்பலகையில்
அவன் வரைவது மகிழ்ச்சியின் முகம்.

இந்த வகைமையிலுள்ள இன்னொரு துறை, குழந்தைகள் சூழ்உலகை எதிர்கொள்வதைப் பற்றியது. மொழியை எதிர்கொள்வதில்(மொழியில் இறங்குவதில்) இருந்து விலங்குகளைப் பார்ப்பது (சந்திப்பது) வரை இந்நேர்வுகள் நிகழலாம். மாற்றுப்பாலை, மதத்தை, விதிகளை, நிறுவனங்களை எதிர்கொள்வது என நீட்டிக்கொண்டே போகலாம் அச்சந்தர்பங்களில் ஏற்படும் அனுபவத்தையும் மனப்பதிவையும் சித்தரிப்பவை இந்த வகைப்பட்ட கவிதைகள். அப்படிப் பார்க்கையில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு பெருநாயகன்/நாயகி என்பதையும், சாகசக்கார வீரதீரர் என்பதையும் நாம் உணரமுடியும். பூங்குழலியின் ஒரு கவிதை இது:

விடை

கணிதப் புதிர் ஒன்றுக்கு
விடையளிக்கத் தொடங்குகிறாள்
குழந்தை
ஒவ்வொரு விரலாக உதடு
மீது வைத்துக்
கணக்கிடுகிறாள்
எதையோ மனதில் வைத்துக்கொள்வதாக
மெல்ல
முணுமுணுக்கிறாள்
கணிதப்புதிர்
இப்போது மெல்ல அவிழத் தொடங்குகிறது

கவிதைசொல்லி ஒரு கவித்துவ தருணத்தின் முன் நிற்கிறார். குழந்தை கணிதம் எனும் மர்ம உலகை எதிர்கொள்கிறது. அது தன்னளவிலேயே அழகிய கவிக்கணம். அக்கணமானது பார்க்கப்படுகிறது ஆயினும் காணப்படவில்லை. பிரத்யட்சத்தைக் கண்ணுறும் கவிஞர் கவிதையை கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார். கவிதை என்பது பிரத்யட்சத்திற்கு உள்ளும், தன்னுள்ளும் நிகழும் ஒரு மறைநிகழ்வு. அதைக் காண்பதைத் தான் நாம் கவிதையைக் கண்டடைவது எனச் சொல்கிறோம். கணிதமும் குழந்தையுமாக எழுதப்பட்ட ஒரு முகுந்த் நாகரஜனுடைய ஒரு கவிதை:

பூஜ்யவாத்து

இருந்த நான்கு வாத்துக்களுமே
குளத்தில் குதித்து விட்டனவாம்.
“ஸீரோ வாத்துதான்
பாக்கி இருக்கும்” என்றாள் நேயமுகில்.
அந்த ஸீரோ வாத்து
எப்படி இருக்கும் என்று கேட்டேன்.
“அது ரொம்ம்ம்ம்ப
குட்ட்ட்டியா இருக்கும்” என்றாள்.
ஒரு வாத்தாக
வளர்ந்து விடாதே,
என் பூஜ்ய வாத்தே.

இன்மையே ஓர் இருப்பாக ஆகியுள்ளது இக்கவிதையில் என்று தத்துவமெல்லாம் தருவிக்க விரும்பவில்லை. ஆனால் இதைப் படிக்கிற போது முதல் ஆறு வரிகளிலேயே ஒரு சின்ன சிறகடிப்பு கேட்டு விடுகிறது. மெந்நகை தோன்றி மறைகிறது. அதுவே இவை உண்டு செய்யும் கவித்துவ விளைவு. அது பூங்குழலியின் மேற்சொன்ன கவிதைகயில் நிகழ மறுத்திருக்கிறது. 

பொதுவாகவே விவரணைக் கவிதைகளில் இந்த ஆபத்து உண்டு. எந்த கவித்துவ விளைவையும் உண்டுசெய்யாது அவை வெறும் விவரணையாக முடிந்துவிடக்கூடும். அப்படியான நேரிடல்கள் இங்கும் சிலவிடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. முதன்மையான விதி:பந்தை சும்மா தூக்கி போடுவதல்ல, அதை கூடைக்குள் போடுவதுதான் விளையாட்டு.

***

குழந்தைகள் முதன்முதலாக ஒன்றைச் சந்திப்பது பற்றிய கவிதைகள் எல்லா மொழிகளிலும் உண்டு. நெருப்பைப் பார்ப்பது, கடலைப் பார்ப்பது, விமானத்தைப் பார்ப்பது என.. இந்த முதற்சந்திப்புகள் யாவுமே ’பாடல்’ தருணங்கள். மர்மமும் ஆழமும் நிறைந்த புனைவுப்பொழுதுகள். ஆனால் அந்தப் பொழுதில் தூண்டப்படும் வியப்பையும் கிளர்ச்சியையும் அக்கவிதைகள் ஏற்படுத்துகின்றனவா அல்லது வெறும் சுவைமணமற்ற எடுத்துரைப்புகளாக முடிகின்றதா என்பது முக்கியம். ஷங்கர்ராம சுப்ரமணியனின் கவிதை இது:

அம்மா நீங்கிய அறையில்

முதல்முறை
குழந்தை தன்முகம் ஸ்பரிசிக்கிறது
கண்ணாடியில்
மற்றொரு குழந்தையின் முகமென
பாப்பா எனக் குதூகலத்துடன்
முத்தமிடுகிறது
தன் கைவளைகள் ஆடியில் தெரிய
கொலுசுக்கால்களை
உயர்த்திப் பிடித்து சந்தோஷிக்கிறது
குழந்தை
எச்சில் வழியக் கடவுளைத் தீண்டுகிறது
முதலும் முடிவுமாய்.

குழந்தை தன்னைத்தானே கண்டுகொள்வது மட்டுமல்ல அம்மா இல்லாததால் அவ்விடத்தில் தன்னை ஒரு தனிமனிதனாகவும் அடையாளம் காண்கிறது. கூடவே அங்கு ஓர் அமானுஷ்யமான இருப்பையும் ஊகிக்கிறது. தன்னைத் தானேயோ அல்லது கடவுளையோ முதலும் முடிவுமாய்த் தீண்டுவதை, ஒருவர் தமது அறிதலுக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் புரிந்து அசைபோட்டுக் கொள்ளலாம். அது ஒவ்வொரு வாசகரின் தனிப்பிரயாணம்.

இப்போது பூங்குழலியின் பசு என்ற தலைப்பிலான கவிதையைப் பார்ப்போம்:

அது காடுகள் சூழ்ந்த சாலையில்
குழந்தையின்
முதல் பயணம்
கண்கள் விரிய பார்த்துக்கொண்டு
வந்தவள்
சிங்கத்தைப் பார்த்ததாக சிலிர்க்கிறாள்
வெளியே தூரத்தே ஒரு பசு
புல்மேய்ந்து கொண்டிருந்தது
மட்டும் என்னால் காணமுடிந்ததாய் இருந்தது

இக்கவிதை நடந்ததின் அறிக்கையாகவே தொனிக்கிறது எனக்கு. ஒருவேளை அக்கணத்தில் கவித்துவமான ஒன்றை கவிஞர் கண்டிருக்கலாம். ஆனால் அது வெளிப்பாட்டில் உள்ள குறைப்பாட்டினால் தவறிப்போய்விடுகிறது. உணர்வெழுச்சியையோ இனிய வியப்பையோ அவர் அடைந்திருக்கலாம். அதை இங்கே சந்தேகிக்கவில்லை. ஆனால் அது பிரதியாக முன்வைக்கப்படும் போது, வாசிப்பவர்களிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொஞ்சம் யோசிக்கவேண்டியுள்ளது. இதே கவிதையை அவர் இன்னும் சிறப்பான எடுத்துரைப்பினூடே வெளிப்படுத்தும் போது, வேண்டப்படும் கவித்துவ விளைவைக் கூட இது உண்டாக்கக்கூடும். ஆனால் படைப்புச்செயல்பாட்டில் உள்ள கசப்பான உண்மை என்னவென்றால், எழுதுபவருக்கு நல்ல படைப்பாக படுவதனாலேயே, அது வாசிப்பவருக்கும் அப்படியே தோன்றும் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கு தான் எழுத்தாளனுக்கு, தன் படைப்பை தானே விலகி நின்று பார்க்கும் புறவயப்பார்வை அவசியமாகிறது. சொல்லும் அளவிற்கு அது எளிதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். நான் சொல்லவருவது, குறைந்தபட்சம் அது பற்றிய பிரக்ஞையாவது இருப்பது நல்லது என்பதைத் தான். 

தவளைக்கதை என்றொரு கவிதையிலும் இப்படியான உலர்ந்த எடுத்துரைப்பே எஞ்சுகிறது. பிரபலமான தவளை இளவரசன் கதையை கவிதை சொல்லி குழந்தைக்கு சொல்கிறார். கேட்டுவிட்டு அக்குழந்தை எனக்கு ஒரு தவளை வேண்டும் என்கிறது. அவ்வளவுதான். கதைசொல்லி சிரித்தபடி அக்குழந்தைக்கு முத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் வாசகனுக்கு திகைப்பையோ, சின்ன மலர்ச்சியையோ அடையும்படிக்கு ஏதாவது இருக்கவேண்டுமே கவிதையில். எனக்கு மிகப்பிடித்த ஆத்மாநாமின் கவிதை இது. இதிலும் ஒரு கதை சொல்லப்படுகிறது:

ஹலோ என்ன சௌக்கியமா..
இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டு கண்டுபிடித்துள்ளாய்?
உன்னுடைய scamp எப்படி இருக்கிறது?
பூச்செடிகளுக்கிடையே
புல்தலைகளின் மேல்
நெடிய பசும் மரங்களின் கீழ்
சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி
மரச்சுவர்களுக்கிடையே,
சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து
scamp எட்டிப் பார்க்கிறான்.
வெளியே பழுப்புநாய் இருந்தான்.
என்ன விஷயமென்று scamp வெளியே வந்தான்.
தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்

சீக்கிரம் வந்துவிடு என்றான்.
பலவர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான்.
கேட்டது ஒரு கேள்வி
எங்கள் தலைவனை கௌரவிக்க
நாமெல்லோரும் கூடியிருக்கிறோம்
அவர் கண்டுபிடித்ததென்ன?
அடக்கத்துடன் scamp சொன்னான்
பின்னால் சுமக்கும் பை
கூட்டம் கலைந்தது
அடுத்த கதையை நீ சொல்
அன்புடன் என்றும் உன்

என்ன இருக்கிறது இதில். இதுவரைக்கும் கூட எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறை இதை வாசிக்கும் பொழுதும் நான் குழந்தையாகி விட்டதாய் உணர்கிறேன். ’அடக்கத்துடன் scamp சொன்னான்/பின்னால் சுமக்கும் பை..’ என்ற இடத்தை எப்போது படித்தாலும் ஒரு மலர்ச்சியும் குழந்தைக் குதூகலமும் என்னைத் தொற்றிக்கொள்ளத் தவறியதே இல்லை. கார்ட்டூன் உலகிற்குள்ளேயே நுழைந்துவிட்டதாய் ஓர் ஆனந்தம், பாதுகாப்பு, எளிமை. என்ன இருக்கிறது இக்கவிதையில்.. ஒன்றுமில்லை ஒரு அபாரமான குரல், குழந்தைமை, அதன் அழகு அவ்வளவுதான்.

குழந்தைகளைப் பற்றிய படைப்புகளில்  பல நேரம் இனிப்பான கற்பனாவாத மிகைப்படுத்தல் நிகழ்ந்துவிடுகிறது. இயற்கை பற்றிய கவிதைகளிலும் இது நேர்கிற ஒன்று. நம்மிடம் இருக்கிற அல்லது நாமே நம்மிடம் எதிர்பார்க்கிற அனைத்து நல்லியல்புகளையும் நாம் இயற்கை மீது ஏற்றிவிடுகிறோம். அதாவது அதற்கு தெய்வீகத்தைச் சூட்டுகிறோம். இதே பாணியில், குழந்தைகளை கிட்டத்தட்ட தேவதூதர்களாக மாற்றிவிடக்கூடும். குழந்தைகளைப் பற்றி எழுதும் போது நாம் மனிதர்களைப் பற்றி எழுதுகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. எல்லா தீவினைகளுக்கான வாசனைகளையும் நாம் குழந்தை எனும் ஜீவனுக்குள்ளும் காணமுடியும். சில கவிதைகள், குழந்தைகளின் மனிதாயக் கறைகளை முற்றிலும் நீக்கி கியூட்டான பொம்மை படங்களாக மாற்றி விடுகின்றன. போலந்து கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா ‘ஹிட்லரின் முதல் புகைப்படம்’ என்றொரு கவிதை எழுதியுள்ளார். அதை ஹிட்லரது பிறந்த ஊரான ப்ரானில் உள்ள ஒரு வரலாற்று வாத்தியாரை வைத்து இப்படி முடித்திருப்பார் ’..ஒரு வரலாற்று ஆசிரியர் காலரை தளர்த்திவிட்டு, வீட்டுபாட நோட்டுகளின் முன் கொட்டாவி விடுகிறார்’. அந்த வரலாற்று ஆசான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும், கவிஞர்களும் தான். ’Death of a Naturalist’ என்ற ஷீமஸ் ஹீனியின் பிரசித்தி பெற்ற கவிதையும் இத்துடன் வைத்து வாசிக்கத்தக்கது. பூங்குழலியின் ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற கவிதையிலும் இப்படியான சாயை நாம் காணலாம். ’மிக அன்பான அவள் ஒரு கொலை குறித்து பேசியது பயம் அளித்தது’என்று கவிஞர் சொல்கையில் குழந்தைகள் பற்றிய நேரிய கற்பனை நமது கவிஞருக்கும் இருப்பது தெரிகிறது. ஆனால் இனியவள்  வாழ்வை பின்னமின்றி ஏற்றுக்கொண்டவள். அவள் தொடர்புறுத்தியது ஓர் உண்மை ஏனெனில் அது ஓர் இயற்கையான உயிரிய எதிர்வினை. தேவதேவன் இப்படியும் ஒரு கவிதை எழுதியுள்ளார்:

தட்டான்களைப் பிடித்து
இறக்கைகளைப் பாதி கிள்ளிவிட்டும்

வால்களில் குத்திய முட்களுடனும்
ஒரு முழம் நூலில் இரண்டு தட்டான்களை
நுனிக்கொன்றாய்க் கட்டிப் பறக்கவிட்டும்
இறக்கைகளைப் பிடித்துக்கொண்டு
அதன் கால்களால்
கற்களைத் தூக்கவைத்தும்
இரு இறக்கைகளையும்
திசைக்கொன்றாய்ப் பற்றி இழுத்து
விலா மாமிசத்தை
மற்றொரு தட்டான் கொண்டு புசிக்கவைத்தும்
கொடுமைகள் நிகழ்த்தும் சிறுவனே
எங்கிருந்தாய் கற்றாய் நீ இவைகளையெல்லாம்?

நாம் எண்ண விரும்புவது போல அவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து மட்டும் இதை கற்கவில்லை. நாம் அறிய விரும்பாத இடங்களில் இருந்தும் அதை அவன் பெற்றிருக்கிறான். அவையும் கலை எட்டிப்பார்க்கத்தக்க இடங்களே.

சிறு குழந்தையொன்று பிறந்திருந்ததை வரவேற்பதற்காக
சென்றிருந்தோம்
தன்னை எப்போதும் குட்டிப்பாப்பாவாக
அறிமுகப்படுத்தி கொள்ளும்
5 வயது இனியவளுக்கு
புதிதாய் பிறந்திருந்த அந்த குழந்தைதான்
குட்டிபாப்பா என அறிமுகப்படுத்தினேன்.
ஒரு குட்டிபாப்பாவாக
தனது இருப்பு மறுக்கப்படுவதன் வலி அவள்
கண்களில் தெரியத் தொடங்கியது
’தான் பெரிய குட்டிப்பாப்பா’ என்பது
உங்களுக்குத் தெரியாதா
என்றவளை
அள்ளி அணைக்க மட்டுமே முடிந்தது
வளர்ந்து விட்ட நம்மால் மட்டும்தான்
நமது
இருப்பினை உறுதிப்படுத்த முடிவதில்லை
இப்படியான தருணங்களில்.

இதில் கவிதைசொல்லி ’நம்மைப்’ பற்றி கூறும் கடைசி வாக்கியம் கவிதைக்குத் தேவையற்றது. ’தனது இருப்பு மறுக்கப்படுவதன் வலி’ போன்ற உணர்ச்சிகளை விளக்கும் வரிகளும் அப்படியானவையே. பொதுவாக கவிதைகளை நீட்டித்துக்கொண்டு செல்வது ஆபத்தானது. கவிதையே அதைக் கோராத பட்சத்தில் எவ்வளவு சுருக்கமாய் முடியுமோ அவ்வளவு விரைந்து முடிப்பது நன்று. ஒன்று கூடுதலான வரிகள் கவிதையின் மையக்கருவிற்கு வலுக்கூட்டுவதாக இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவை தம்மளவிலேயே கவித்துவ மதிப்புடையவையாக இருக்கலாம். அப்படி இல்லையெனில் கவிதைகள் சிறியதாக இருப்பதே நலம். ’மௌனம்’, ‘நீள்கதைகள்’ போன்ற கவிதைகளில், அவற்றின் நீளம் கவிதைக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. இக்கவிதையை ஒட்டி தேவதச்சனின் இன்னொரு கவிதை நினைவு வருகிறது:

நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்.
இல்லை. நில்லா என்கூட வருகிறது
இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.
வீட்டிக்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே
அவள் சின்ன அலையை போல சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி
எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை

இனியவள் என்ற குழந்தையின் உலகை பாசாங்கற்ற கீற்றுகளால் வரைந்துகாட்டும் முயற்சி என்று இத்தொகுப்பைக் கொள்ளலாம். அது கவிஞரின் நெருங்கிய உறவாக இருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கவிதைகளிலேயே உள்ளன. குழந்தையுலகை மையமிட்டு எழுதப்படும் படைப்புகளில் பொதுவாக வெவ்வேறு பருவம் கொண்ட வெவ்வேறு பிள்ளைகளைக் காணமுடியும். ஆனால் ’பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்‘ தொகுப்பு முழுக்க இனியவள் பாப்பா மட்டுமே என ஊகிக்கிறேன். அது இத்தொகுப்பிற்கு ஓர் அந்தரங்கத்தன்மையையும் அந்நியோன்யத்தையும் வழங்குகிறது. இனியவள் வரும்போதெல்லாம் அவளது பொம்மைகளும் கூட வந்துவிடுகின்றன.

பொம்மைகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆன  உறவு அலாதியானது. நாமெல்லோருமே பொம்மைகளோடு விளையாடியவர்கள் எனினும் அந்த உறவுப்புரிதலை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம் அல்லவா. ஸ்பீல்பர்கின் ’ஈ.டி’ திரைப்படத்தில் தமது வீட்டிற்குள் இருக்கும் வேற்றுகிரகவாசியை அந்த வீட்டுப்பிள்ளைகள் பொம்மைகளோடு பொம்மையாய் நிற்கவைத்திருக்கும் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. வளர்ந்தவர்களுக்கு பொம்மைகள் யாவுமே வேற்றுகிரகத்தவைதான்.அப்படத்திலுள்ள இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், தமது வீட்டிற்குள் வின்னுலகவாசியே வந்தால் கூட பெரியாட்கள் கவனிப்பதில்லை என்பது. பொடுசுகள் தான் உட்கார வைத்து அவர்களுக்கு இப்படி இப்படி என்று விளக்க வேண்டும் போல. பூங்குழலியின் ’தூக்கம்’ என்றொரு கவிதையோடு இதை முடித்துக்கொள்ளலாம்:

அம்மாவை நினைத்தபடி
பொம்மையோடு
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
அரைத்தூக்கத்தில்
பொம்மையைத் தவறவிட்ட
குழந்தை
கண்கள்
திறக்காமலே கைகளைத்
துழாவத் தொடங்கியது…
கை என நினைத்து பொம்மையில்
கால் பிடித்து
தூக்கம் தொடர்ந்தது…
எப்போதும் போல்
கண்களை விரித்து
குழந்தையைப் பார்த்தபடி
பொம்மை…

கவிதை பற்றி பேசும் போது தவிர்க்க இயலாமல் நிறைய முரண்களைக் கடக்கும்படி ஆகிறது. ஒருமுறை அப்படி என்கிறோம், இன்னொரு முறை இப்படி என்கிறோம்.  ஒருவர் அது அரிதானது என்கிறார்.ஒருவர் அது மிக எளிதில் காணக்கிடைப்பது என்கிறார். வேதாந்தம் பேசுவது போல் ஒலிக்கிறது. என்னதான் உண்மை? போர்ஹே ஓர் உரையில் இதைக்குறிப்பிடுகிறார்:புனித தாமஸ் அகஸ்டின் சொல்வதுண்டு ‘யாராவது என்னிடம் வந்து காலம் என்றால் என்ன எனக் கேட்காத போது ,காலம் என்றால் என்ன என்று எனக்கு தெரியும், அப்படி யாராவது வந்து  கேட்கையில் எனக்கு காலம் என்றால் என்னவென்று தெரியாது ’ கவிதை பற்றியும் நான் இப்படித்தான் எண்ணுகிறேன்.

2 comments for “மலேசிய நவீன கவிஞர்கள் (4) : பூங்குழலி வீரன் கவிதைகள்

  1. S.venugopal
    May 2, 2021 at 4:21 pm

    சிறப்பான கவி எழுச்சி மிக்க கட்டுரை சபரி

  2. Viji
    May 9, 2021 at 8:32 pm

    அதற்குள் முடிந்துவிட்டதா என்கிற தாக்கதை ஏற்படுத்திய, கவிதை நடையில் குழந்தை மனதுடன் எழுதப்பட்ட கட்டுரை.
    ஸ்ரீவிஜி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...