கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டு கால வாழ்க்கையில் சந்தித்த சூழல், நசுக்கிய நிகழ்வுகள், உரசிச்சென்ற அரக்ககுணம் கொண்ட மனிதர்கள், அனுபவித்த அவமானங்கள், செய்த தவறுகள், ஏற்பட்ட தவிப்புகள், எதிர்க்கொண்ட அழுத்தங்கள், ஏமாற்றங்கள், முதுகில் குத்திய சம்பவங்கள், மனித அவலங்கள் என எனக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களோடுதான் நான் மிக இலகுவாக ‘செல்லாத பணம்’ நாவலில் புகுந்து கொண்டேன்.
வாசித்து முடித்தவுடன் சாதி, அந்தஸ்து, பணம், படித்தவர், நிறம், புகழ், பட்டம், பதவி என எதையாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு நம் சமுதாயம் எத்தனை எத்தனை மனங்களை ரணமாக்கி அந்தக் குருதியைக் குடித்து தமது அந்தஸ்து மோகத்தை நிலை நாட்டிக்கொண்டிருக்கிறது என ஒரு கணம் பெருமூச்சு விம்மியது.
இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவே நடக்கின்ற பல நல்லது கெட்டதுகள் அத்தனையிலும் தம்மை மற்றவர்களைவிட ஒரு படி மேலாக நினைத்து அதை நிலைநிறுத்துவதற்கு மனிதகுலம் போடுகிற கோமாளிக்கூத்துகள் அருவருப்பின் உச்சம். இப்படி கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்கிற பெயரில் பிறரைத் தம்மோடு வேறு படுத்திக் காட்ட நடக்கிற நாடகங்களில் சுற்றி இருக்கின்ற எத்தனை மனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி நாவலை வாசித்த முடித்த ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டது.
இந்நாவலை வாசித்த பலரும், நாவலில் வருகிற கதாபாத்திரங்களின் யதார்த்தங்கள், அவர்கள் படுகிற வலிகள், தங்களைக் கலங்க வைத்துவிட்டதாகப் பதிவு செய்திருந்தனர். ஏன் இந்தக் கலக்கம் நடக்கிறது? ஆம்! நாவலின் கதாபாத்திரங்கள் கண்ணாடி போல்; அது நம்மைதான் பிரதிபலிக்கிறது. சமுதாயம் என்பது நம்மையும் சேர்த்துத்தானே. எனவே நாவல் நம்மைப்பற்றியே பேசுகிறது. நமது ஆழ் மனதுடன் உரையாடுகிறது. நாவலில் வெந்து நாறி குற்றுயிரும் குலையுயிருமாக கிடப்பது நாயகிமட்டுமல்ல, நாம் கடந்துவந்த பாதையில் நாம் வீசிய தீப்பிழம்புகளால் வெந்து செந்த மனித மனங்களும்தான் என்ற உண்மையே ஒவ்வொருவரையும் சலனப்படுத்துகிறது.
எழுத்தாளர் இமையம், அவரது பிற புனைவுகளைப் போலவே இதிலும் யார்மீதும் பழிபோடவில்லை. யாரையும் குற்றம் சுமத்தவில்லை. யார்மீதும் கோபம் கொள்ளவில்லை. நல்லவர் கெட்டவர் என்று யாரையும் அடையாளப் படுத்தவில்லை. வில்லன் கதாநாயகன் என்று யாரையும் அவர் பிரிக்கவில்லை. வாழ்வை அப்படியே நமக்குக் காட்டியிருக்கின்றார். அந்தப் பாத்திரங்கள் விதைகளாக நம் மனதில் புகுந்து எந்த வடிவில் முளைக்கிறது என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். அதுவே ஒரு வாசகராக நாம் அந்த நாவலுக்குச் செய்யும் மரியாதை.
எழுத்தாளர் இமையம் சமுதாயத்தில் நடக்கின்ற மிகப்பெரிய அவலத்தை சீர்கேட்டினை நம் பார்வைக்கு கதையாகக் காட்சிப் படுத்தியிருக்கின்றார். பாத்திரங்களை நான் உள்வாங்கியபோது, அதில் பயணிக்கின்ற அனைவரும் ஒருவித மனப்பிறழ்வு கொண்டவர்களாகவே தென்படுகிறார்கள். அவர்கள்தான் நாம் இன்றளவும் கடந்து கொண்டிருக்கின்ற கோளாறு மனித கூட்டங்கள். நன்றாக சிந்தித்தால் இப்படி இதுவரை நான் கண்டு வெதும்பிய பலரை இக்கதையினூடே காண்கிறேன். எனவே கதையில் உள்ள யாரையும் என்னால் நேசிக்கமுடியவில்லை. வாசிப்பினூடே என் மனது கோபத்தால் கொதித்தது. மேலும் மேலும் இதுபோன்ற மனிதர்களைக் காண்பதற்குப் பிடிகாமல் எங்கேயாவது மனிதர்களே இல்லாத இடத்திற்கு ஓடி ஒளிந்துகொள்ள மனம் துடித்தது. ஆனால் அந்த மனித கூட்டத்தில் நானும் ஒரு அங்கம் என்ற எண்ணம் வரும்போது இமையம் நம் மனசாட்சியுடன் உரையாடுவது புலனாகிறது.
முழுதும் மனித குணங்களை மையப்படுத்தும் இந்நாவலை அதன் கதாபாத்திரங்களின் வழி புரிந்து கொள்வதே சரியான வழியாக எனக்குத் தோன்றுகிறது. கண்டிப்பாக அது சோகம் கவலை மனபாரம் போன்ற உணர்வுகள் அல்ல. கோபமும், வெறுப்பும் விரக்தியும் கலந்த மனங்களோடு உலாவும் இந்த கதாமாந்தர்கள் நம்மை நாமே பல கோணங்களில் பரிசீலித்துக் கொள்ள உதவுகிறார்கள். கலப்பட உணர்வினை (mix feelings) ஏற்படுத்துகிறார்கள்.
ரேவதி தன்னை காதலிக்கும் ரவி என்ற இளைஞனை வேண்டாம் என்று அக்குடும்பமே போராடுகிறது. அவனது சமூக நிலையினை அக்குடும்பம் எடுத்துரைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவன் குடும்பம் பர்மாவில் இருந்து வந்தது. அடித்தட்டு வாழ்க்கை வாழும் அவன் ஆட்டோ ஓட்டி பிழைக்கிறான். ஆனால் ரேவதி பிடிவாதமாக இருக்கிறாள். அவள் தன் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க அவள் கற்ற கல்வி எதுவும் உதவவில்லை. அவளது முடிவை எண்ணி இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்கிற தாய்க்கு ரேவதி கொடுக்கின்ற அழுத்தம் நாவலில் பதற்றமடைய வைப்பது. ரவியோடு திருமணம் நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுகிறாள்.
ஒரு மகளாக இதை என் தாயிடம் நான் செய்திருக்கிறேன். காதலால் அல்ல. என் அம்மா, அவளின் அழுத்தங்களை பெண்பிள்ளைகளான எங்களின் மேல் திணித்து தீர்த்துக்கொள்வாள். அப்போதெல்லாம் இளரத்தம். உடனே அம்மாவுக்கு தண்டனை வாங்கித்தர துடிக்கும். அதற்குத் தீர்வாக நான் கையில் எடுத்த ஆயுதம்தான் தற்கொலை முயற்சி. கதவைச் சாத்திக்கொண்டு சேலையை கையில் ஏந்திக்கொண்டு தூக்கு மாட்டிக்கொள்ள இடம் தேடியிருக்கிறேன். ஆனால் தைரியம் இல்லை. ஒருமுறை க்லொரக்ஸ் திரவத்தை எடுத்துக் குடித்து முயற்சி செய்திருக்கிறேன். கொஞ்சமாகக் குடித்ததால் சாகவில்லை. அதற்கே வாய்வெந்துபோனது.
இப்படிச்செய்கிறபோது நம்முடைய உணர்வுகளுக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதற்குப் பின்னால் நடக்கவிருக்கும் மிகப்பெரிய துயரத்தை தாய் படுகிறவேதனையை என் மகள் அதே அழுத்தத்தை என்மீது திணித்தபோது தாயின் மனநிலையில் இருந்து பார்த்தபோதுதான் உணர்ந்தேன். நியாயமாக கோபப்படுவதற்குக்கூட உரிமைதராத நிலை ஒவ்வொரு அன்னைக்கும் கொடுமையான காலகட்டம்.
அப்படி என் மகள் என்னை மிரட்டிய சமயத்தில், அவள் வருவதற்குள் அறையில் இருக்கின்ற நீளமான துணிமணிகளை என் அறைக்குக்கொண்டு வந்துவிடுவதும், பென்சில் சீவ வைத்திருக்கும் கூர்மையான கத்திகளை வீசுவதும், க்லொரக்ஸ் வாங்கிவைக்க யோசிப்பதும் என ஊண் உறக்கமில்லாமல், அறையில் எதாவது சத்தம் கேட்கிறதா என்று அறைக்கதவையே வெறித்த காலம் அது. இப்படி மகளாகவும் தாயாகவும் இருந்து ரேவதியினுள்ளும் அவள் அம்மா நிலையிலும் புகுந்து உணர்வினை உள்வாங்க முடிந்தது. நரகவேதனை அது. இதுவே வாசிப்பில் ஒருவித படபடப்பைத் தந்தது
இந்நாவலில் அண்ணனின் பாத்திரமும் வலுவானது. சாகக்கிடக்கின்ற தங்கைக்காக அழுகிறான். இருப்பினும் தங்கையின் கணவனை கடுஞ்சொற்களால் அபிஷேகம் செய்தவண்ணமாகவே இறுதிவரை வருகிறான். குடும்பத்தைக் காக்கின்ற பொறுப்பு அவனது என்றாலும், ரேவதியும் குடும்பத்தில் ஒருவள்தானே பிறகு ஏன் அவளின் குடும்பத்தில் அக்கரை செலுத்தாமல் இருந்தான் என்ற கேள்வி துளைக்கிறது. அவளிடம் ஆறு வருடங்கள் பேசாமல் இருக்கிறான். சுற்றங்களின் சுயபுராணம் அவனையும் முற்றாக சீர்கேட்டு சமுதாயத்தின் உறுப்பினராக மாற்றி உடன்பிறப்பையும் புறக்கணிக்க வைத்தது. இந்த அண்ணனின் இன்னொரு கோணம்தான் ரேவதியின் தந்தை. அவர் சமயம் தெரிந்தவர். தேவார திருவாசகங்களை ஓதுபவராக இருக்கின்றார். நிறைய புத்தகங்களை வாசிப்பவராக இருக்கின்றார். பள்ளியில் தலைமை ஆசிரியர். சமூகத்தில் உயர்ந்த மதிப்பில் உள்ள அவர் நன்முறையில் கோவில் வழிபாடுகள் எல்லாம் செய்பவர். ஆனாலும் அவரால் எதையும் மாற்ற முடியவில்லை. ஏன் ஆட்டோ ஓட்டுபவன் மனிதனில்லையா? என்ற கேள்வி அவரது ஆன்மிக மனதில் எழவே இல்லை.
கிட்டத்தட்ட தொன்னூறு விழுக்காடு எரிந்த நிலையில் இருந்த அவள் பிழைக்கமாட்டாள் என்பது உறுதி. காப்பாற்ற மருத்துவமனை எடுக்கிற முடிவைவிட அவளின் குடும்பம் எடுக்கின்ற முடிவு இன்னும் விரைவாக நிகழ்த்தப்படுகிறது. பணத்தை இரைப்பதற்கு தயாராகும் சூழல். மருத்துவர்களுக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் லஞ்சம் கொடுக்க எற்பாடுகள் செய்கிற விதம் என எல்லாம் அதிவேகமாக நடக்கிறது. எப்படியாவது பிழைக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் வேண்டுதல். இந்தக் காட்சிகள் வலிகள் மிகுந்தவை நாவலில். அவளின் எரிந்த உடலை நம்மிடம் காட்சிப்படுத்துகிறபோது மனது கனக்கிறது. அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போன மகளைக் காண்கிற தாய் படும் வேதனை நம் மனதைப் பிசைகிறது. கதறுகிறாள். தான் சுமந்து பெற்ற அழகிய மகள் எங்கே என்று பதறுகிறாள். மயக்கமுற்று விழுகிறாள். சிந்தித்துப் பார்க்கவே முடியாத அந்தக்காட்சி எந்தத்தாயிற்கு வரக்கூடாத நிலை. அக்காட்சிகள் வாசகனை நிலைகுத்த வைக்கிறது. தீயில் எரிந்த மகளைவிட தாயின் வயிறும் இதயமும் தீயே இல்லாமல் வெந்து புண்ணாகிக்கொண்டிருக்கின்ற வெப்பத்தை நம்மீதும் ஏற்றிவைக்கிறார் இமையம்.
உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வெந்துநொந்த மகள் தாயிடம் பேசநினைக்கிறாள். பேசுகிறாள். ஆனால் தாயிற்கு அது விளங்கவில்லை. அவள் வாய்வழி பேசவில்லை. மனதின் வலி பேசுகிறாள். அம்மா என்னை விட்டுப்பிரிந்து விடாதே. என் கூடவே இரு. உன்னிடம் நிறைய பேசவேண்டும்போல் உள்ளது அம்மா. என்னைவிட்டுப்போகாதே. தனியாக இருக்க எனக்குப் பயமாக இருக்கிறது. உடலெல்லாம் வலிக்கிறது அம்மா என்று பேசுகிறாள். ஆனால் தாயிற்கு எதுவுமே கேட்கவில்லை. நமக்கு கேட்கிறது. ஓயாமல் கண்ணீர் வடிகிறது.
ரேவதியின் கணவன் ரவி குடிகாரன்தான். ஆட்டோ ஓட்டிதான். அவன் நிலையில் அவன் சரியாகவே வாழ்கிறான். கதை, பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசுகிற பேச்சுகளின் வழி நிகழ்த்தப்படுவதால், அவன் ஒரு பொறுக்கிபோல் காட்டப்படுகிறான். பொறுக்கியே என்று நாம் உள்வாங்கிக்கொண்டாலும், ஒரு இடத்தில் அவன் ரேவதியின் அண்ணியிடம் பேசுவது நிதர்சன பேச்சு. அதில் ரேவதியை கொலை செய்தது தானல்ல; அவர்கள் குடும்பம்தான் என்கிறான். அவர்களின் பணம், அந்தஸ்து, செய்த உதாசினம் என்கிறான். தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல், தன் குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடாமல், தன் மனைவியை வாசலிலேயே வைத்து அவமதித்து, தன்னையும் அவமானப்படுத்திய அவர்கள் குடும்பத்தின் மேல் மொத்த பலியையும் போடுகிறான். தொடர் நிராகரிப்பு அவனின் மனதை எப்படி எல்லாம் அரித்து அவனை இன்னும் கீழ்நிலைக்குத்தள்ளி உள்ளது என்பதை இந்த உரையாடலில் உள்வாங்கலாம். இங்கே தான் பணமும் மதிப்பிழக்கிறது. செல்லாத பணமும் இங்கேதான் புரிந்துகொள்ளப்படுகிறது. பணம் தேவைப்படுகிற நேரத்தில் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைக்கப்படுகிறபோது, தேவையில்லை என்கிற இடத்தில் எவ்வளவு கொடுத்தாலும் சரிசெய்யலாம் என்று நினைக்கிற மனநிலை எற்படும்போது அது அதன் மதிப்பை இழக்கிறது. இந்த இடம் என்னைப்புரட்டிப்போட்ட இடம். பாடம் புகட்டிய இடம். படைபாளியாக இமையத்தின் மீது மதிப்பு கூடிய இடம்
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட (பெரும்பாலும் பெண்கள்தான் பலியானவர்கள்) உறவுகளின் உரையாடல்கள் பலகதைகளை நாவலில் சொல்லும். கதைக்குள் கதைகள் இடம் பெறும் இடமுண்டு. அவசரசிகிட்சை பிரிவில் நடக்கின்ற காட்சிகள் இதற்குமுன் மருத்துவமையில் தங்கியிருந்தவர்கள் கண்ட அனுபவங்கள்தான். அரசு மருத்தவமனை கொஞ்சம்கூட தயவுதாட்சண்யம் காட்டாமல் கெடுபிடியான சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பது வருகையாளர்களுக்கு இடையூறுபோல் காட்டப்பட்டாலும், நோயாளிகளின் பாதுகாப்புக்கருதி கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய சட்டதிட்டங்கள்தான் அவை. என்றாலும், அவசியத்தேவை என்று வருகிறபோது அவர்களின் நடவடிக்கை அடாவடித்தனமாக நமக்குப்படும். அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே போகலாம் என்று பலமுறை சொல்லியும் ஒரே அனுமதி அட்டையில் பலரும் முண்டியடித்துக்கொண்டு நுழைகிற மருத்துவமனை சூழல் கொடுமையானது. நாம் முண்டியடித்துக் கொண்டு நோயாளியைப் பார்ப்பதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை ஆனால் நம் பார்வை அவர்களின் மேல் விழுவதால் அவர்களுக்கு விரைவாக குணமாகுமென்று நாமே நினைத்துகொள்வோம். கொடுமையான சூழல் அது. நொடிகள் நாட்களாய் நகரும் நரகம் அச்சூழல். இந்தச்சூழலை மிகத்துள்ளியமாக எழுதியிருக்கிறார் இமையம்
பாத்திரங்களின் மனங்களுக்குள் புகுந்து அவரவர் நிலையில் அவர்களாகவே யோசித்து அவர்களின் மனம் பேசுவதைப்போல் மிக நிதர்சனமாக கதையினை நகர்த்தியுள்ள நாவல் செல்லா பணம். இவ்வளவு நுணுக்கமாக மனித யதார்த்தங்களைச் சொல்லமுடியுமா என்று மலைத்துவிட்டேன்.
நாவலை இமையம் பக்கச்சாய்வுகள் இன்றி சமூக அடுக்குகளில் இயங்கும் மனிதர்களின் ஆழ் மனங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள கீழ்மையான மனநிலையினை மிக அழுத்தமாகச் சொல்கிறார். பணம் எனும் சக்தி வாய்ந்த ஆயுதம் தன் அத்தனை ஆற்றலையும் இழந்து நிற்கும் இடத்தைச் சொல்கிறார். அது வாசிக்கும் நம் மனதில் ஆயிரம் கேள்விகளை உண்டாக்குகிறது. வாழ்வின் அத்தனை நம்பிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
“தீ என்றால் சுட்டு விடுமா?” என்பது ஒரு பழைய சொலவடை. ஆனால் ஒரு நல்ல இலக்கியப்படைப்பாளன் இச்சொலவடைக்கு “ஆம்” என்றே பதில் சொல்வான். தீ என்றால் சுடவேண்டும்; பனி என்றால் குளிர வேண்டும், என்பதே இலக்கிய மனதின் தேர்வாக இருக்கும். தான் எழுதும் ஒவ்வொரு சொல்லும் வாசகனை தீண்டி செல்லத் தக்கதாகவே இருக்க வேண்டும் என்பதில் கவனம் வைப்பவனே எழுத்தாளன். செல்லாத பணம் என்னும் இந்த நாவலில் இமையம் ஒரு கொடுமையான தீச்சம்பவத்தைக் காட்டுகிறார். அதன் வழி அவர் எல்லா வாசக மனங்களையும் தீயின் வெப்பத்தை உணரவைத்து விடுகிறார்.
நூலை வாசித்த படபடப்போடு எழுதப்பட்ட பதிவாக இந்த கட்டுரை சிறக்கிறது.