முடிவற்றுச் சுரந்து கொண்டே இருக்கும் புனைவு மனத்தில் இருந்து மீள முடியாமல் திளைத்திருக்கும் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. தங்களின் வாழ்வு கொடுக்கும் ஆழ் மனப்பதிவுகளாலும் புற உலக வாழ்வை அவதானிப்பதாலும் வாழ்ந்து பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, தங்களுக்கான தன்னிறைவைக் கலையின் வழியே அடைகிறார்கள்.
வெண்முரசு நிறைவுற்றபோது பிறப்பு முழுமையடைந்த மனநிலையை அவரிடம் பார்க்கமுடிந்தது. அதிலிருந்து முற்றிலும் விடுபடும் மன உணர்வை தொடர்ச்சிறுகதைகள் வாயிலாக ஜெயமோகன் அடைந்திருக்கக் கூடும். அதனை பெரும் தவத்துக்குப் பின்பு அடையும் வெறுமையுணர்வாகக் குறிப்பிடலாம். மொழியாலும் கற்பனை ஊடுறுவல்களாலும் அடையும் தவச்செயலாகவே ஜெயமோகன் போன்ற பெரும் படைப்பாளிகளுக்கு இலக்கியச் செயற்பாடு அமைகிறது. அத்தகையப் பெருமுயற்சிக்கும் ஒருவித விடுதலைக்கும் பிறகு அண்மையில் ஜெயமோகன் எழுதிய 25 சிறுகதைகளையும் ஆர்வமாக வாசித்தேன்.
‘இன்னொருவர் புனைவைவிடவும் தன் புனைவே தனக்கு நிறைவை அளிக்கிறது’ என்று இத்தொடரைத் தொடங்கும் முன்னரே ஜெயமோகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் அடைந்த நிறைவை நம்மோடும் பகிர்பவை இக்கதைகள். வாழ்வின் யதார்த்தத்தையும் அதற்குள்ளான மனித மனதின் குரூரங்களை, மானுட மனங்களின் முரண்பாடுகளை, அன்பை, அன்பின்மையை, நட்பை, கணிக்கவியலாச் சந்தர்ப்பங்களை, சந்தர்ப்பவாதிகளை, அறச்செயலை, புறக்கணிப்புகளை என வாழ்வின் மிகச் சிறிய தினசரிக்காட்சிகளுக்குள் நுழைந்து விரித்துக் காட்டியுள்ளார். அவற்றில் சில ஆழம் நீண்டு அர்த்தம் புதைந்த கதைகளாகவும் இருக்கின்றன. நான் அவற்றின் உள்மடிப்புகளை இன்றில்லாவிட்டாலும் என்றாவது முழுமையாகக் கண்டடைவேன். இந்த 25 கதைகளில் எளிய மக்களின் வாழ்வை அவர்களின் தினசரிகளையும் அவர்கள் முரண் மிக்க மனங்களையும் காட்டும் கதைகளே எனக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்தேன். அவை எனக்கு முழுமையாகப் புரிவது ஒரு காரணமாக இருக்கலாம்.
என் ரசனையின் அளவில் ‘ஏழாம்கடல்’ சிறுகதை அவற்றில் முதன்மையானது. ‘ஏழாம்கடலில்’ நிலைக்கொண்டிருக்கும் வியாகப்பன், பிள்ளை நட்பின் ஆழம் இக்கதை. அவர்களுக்கு இடையிலான நட்பை ஒரு சிப்பிக்குள் எஞ்சும் துளி நஞ்சும் துளி முத்துமெனவே அளவிட முடிகிறது. வியாகப்பன் மீனவன், பிள்ளை காவல் அதிகாரி. நான்காம் வகுப்பு வரை மட்டுமே ஒன்றாகப் பயின்றவர்களின் நட்பு அவர்களின் இறுதி காலம் வரையிலும் தொடர்கிறது. அவர்களின் மரணம்கூட அமுதும் நஞ்சுமாகிய அவர்களின் நட்பின் பொருட்டே அமைந்து விடுகிறது. பிள்ளை, நட்பின் பொருட்டே வியாகப்பன் கொடுத்த சிப்பிகளை உண்டு நஞ்சால் இறக்கிறார். வியாகப்பனோ தான் கொடுத்த சிப்பியின் விஷம் தன் நண்பனைக் கொன்ற குற்ற உணர்வில் இயற்கையாகவே இறந்துபோகிறார். இக்கதை இவர்களின் நட்பைச் சிப்பி துளிக்குள் இருக்கும் நஞ்சும் முத்துமாகவே பொருள்படுத்த முடிகிறது. அத்தனை தூய நட்பாகவே காட்டப்பட்ட இவர்களின் நட்புக்குள் கண்ணுக்கு தெரியாத துளி நஞ்சு இருக்கிறது. அது பிள்ளையின் ஆழ்மனத்தில் உறைந்த நஞ்சு. வியாகப்பன் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மீன் பிடித்து தன் மிதிவண்டியில் பிள்ளையின் வீட்டுக்கு வருகிறார். அங்கே தான் கொண்டு வந்த மீன்களை அவரே சுத்தம் செய்து வெட்டியும் தருகிறார். அவற்றில் கொஞ்சம் பிள்ளையின் மற்ற பல நண்பர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அதன் பின் அந்தச் சனிக்கிழமை முழுக்க வியாகப்பனும் பிள்ளையும் இரவு தூங்கும் வரையிலும் சிலசமயம் விடியும்வரை கூட பேசுகின்றனர். அவர்களின் அந்த உரையாடல் அத்தனை சுதந்திரமானது. விடிந்தபின் வியாகப்பன் தன் வீட்டுக்கு மிதிவண்டியில் புறப்பட்டுவிடுகிறார். முதுமை வரையிலும் அவர்களின் சனிக்கிழமைக் கூடலில் மாற்றமில்லை. ஆனால், முதுமையினால் மீன் பிடிக்க முடியாத சூழலில் சில சமயம் வியாகப்பன் சிப்பிகளைப் பொறுக்கி வருகிறார். இன்னும் சில சமயம் மீன்களை வாங்கியேனும் வருகிறார். மேலும் அவர் இப்போதெல்லாம் மிதிவண்டியில் வருவதில்லை அவர் ஆட்டோவில்தான் வருகிறார். எதெப்படி இருந்தாலும் சனிக்கிழமையில் எதையாவது எடுத்துக்கொண்டு பிள்ளையைப் பார்ப்பதில் ஒரு போதும் மாற்றம் நிகழவில்லை. அப்படி ஒரு நாள் அவர் கொண்டு வந்து கொடுத்த சிப்பிகளே பிள்ளைக்கு எமனாகியது. சிப்பிகளில் விஷம் இருப்பதாகவே மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் கூறுகின்றன. வியாகப்பன் விசாரணைக்காகக் கைது செய்யப்படுகிறார். லட்சத்தில் ஒரு சிப்பியின் வயிற்றில் விஷம் இருப்பது இயற்கை. அது தான் கொடுத்த சிப்பியில் இருந்திருக்கிறது என வியாகப்பன் கூறுகிறார். ஆனால் வியாகப்பன் பிள்ளைக்கு விஷம் வைக்க மாட்டார் என அவர்களின் நட்பை உடன் இருந்து பார்த்த பிள்ளையின் மனைவி உறுதியாக நம்புகிறார். உண்மையில் வியாகப்பன் தான் கொண்டு வரும் சிப்பிகளில் ஏதாவதொன்றில் என்றாவதொருநாள் நிச்சயம் முத்து இருக்கும். அதைப் பிள்ளை பார்த்துப் பூரிக்க வேண்டும் மறுநாள் தன்னை அழைத்து அதைக் காட்ட வேண்டும், அப்போது இது உன்னுடையது, உனக்காக கடல் கொடுத்தது எனச் சொல்ல வேண்டும் என்ற ஆசையில்தான் சிப்பிகளை சுத்தம் செய்யாமல் அப்படியே கொடுக்கிறார். ஆனால் தான் நம்பிய அந்தக் கடல் முத்துக்குப் பதிலாக விஷம் உள்ள சிப்பியை நண்பனுக்குக் கொடுத்துவிட்டதே என்று பதறுகிறார்.
அவரை விசாரணை செய்த அதிகாரி பிள்ளையின் மகன்தான். வியாகப்பன் விடுவிக்கப்பட்ட அன்றே வீட்டில் இறந்து போகிறார். உண்மையில் அவர் விரும்பிய முத்து பிள்ளைக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டிருக்கிறது. பிள்ளை இறந்து ஓராண்டு கழித்து அந்த முத்து பிள்ளையின் அறையில் அவரது மகனால் கண்டெடுக்கப்படுகிறது. அது வியாகப்பனிடம் காட்டப்படாமலேயே அவரது அறையில் ஒரு வெள்ளிச் சிமிழில் வைக்கப்பட்டிருந்தது. வியாகப்பன் நம்பியது போலவே ஒரு முத்தை தன் நண்பனுக்காகவே கொடுத்திருந்த கடல் சிப்பியின் ஒரு துளி விஷத்தையும் அவன் நண்பனுக்காகக் கொடையளித்துள்ளது. அந்த விஷம் பிள்ளையின் உள்ளத்தில் உள்ள விஷம். முத்தை மறைத்து வைத்த பிள்ளையின் ஒரு துளி நஞ்சு மனதை அறிந்த கடலின் கொடை. தான் கொடுத்த சிப்பிகளில் எப்போதோ தான் நம்பியதைப் போலவே முத்து இருந்திருப்பதை அறியாமலேயே வியாகப்பன் இறந்து போகிறார். அதேபோல தன் உயிர் நண்பனின் உள்ளத்துத் துளி நஞ்சையும் அவர் உணரவே இல்லை. வியாகப்பன் முத்தை அறியாததுபோலவே நஞ்சையும் அறியவில்லை.
கதை நஞ்சும் அமுதும் ஆகிய நட்பின் எல்லைகளைக் காட்டிச்செல்கிறது. மீனவனாகிய வியாகப்பனின் தூய நட்பின் அருகே அத்தனை ஆண்டுகள் தூயதாய்ப் பாவனை செய்துகொள்ள முடிந்த இன்னொரு போலி நட்பை சொல்கிறது. அப்படி அந்த நட்பின் போலி முகத்தை அறியாமலேயே இருந்துவிடும் அளவில் வியாகப்பன் பாக்கியசாலி.
‘அறமென்ப’ அறச்செயலை விமர்சிக்கின்ற கதை எனலாம். ஒரு தனி மனிதனின் அறச் செயல் என்பது அவனது தன்னிறவை சார்ந்தே அவனுள்ளிருந்து அவனை இயக்குவது. நமக்கு அணுக்கமான அணுக்கமில்லாத எல்லா சூழலிலும் உடன் வருவதே அறம் எனக் கூறுகிறது இக்கதை. உண்மையான அறத்தையும் காட்டுகின்றது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோலவே அறம் என்பது எந்தச் சூழலிலும் நம்மை விட்டுப் பிரியாதிருப்பது.
செல்வா என்ற ஒருவனின் கருணையும் அறமும் சந்தர்ப்பவாதிகளால் அவனுக்கே எதிராக மாறி நிற்பதுதான் கதை. ஆனாலும் இதைத் தாண்டி ஒரு தனி மனிதனின் அறம் என்பது இவ்வுலகில் இன்னமும் எதைப்பற்றிக்கொண்டு நிலைக்கிறது என்பதற்கான கேள்வியும் பதிலுமாக இக்கதை அமைந்துள்ளது. எதன் பொருட்டும் தன்னைத் தளர்த்திக்கொள்ளாதது தூய அறம். இக்கதையில் இரவில் யாருமற்ற சாலையில் ஒருவர் அடிபட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறார். அவ்வழியே செல்லும் செல்வா கொஞ்சம் வசதியானவர், அவரை இரத்த ஒழுகலுடன் தன் காரில் ஏற்றி மருத்துவமனைக்குச் செல்கிறார். ஆனால், மருத்துவமனையில், காவல் நிலையத்தில் அறிவித்து அவர்கள் அறிக்கை இருந்தால் மட்டுமே சேர்க்க முடியுமென கூறிவிடவே அப்போது நேரமில்லை என்பதால் அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்குச் செல்கிறார். அவர் காப்பாற்றவும்படுகிறார். செல்வா மனநிறைவுடன் அதிகாலையில் வீடு திரும்புகிறார். மறுநாள் காலை காவல் நிலையத்திலிருந்து விசாரணைக்காக அழைப்பு வருகிறது. வக்கீல்கள் ஓரிருவர் சேர்ந்து காப்பாற்றிய அவரே காரில் மோதி காயப்படுத்தியுள்ளதாக கேஸ் போட முடியும் எனவும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். அவர் அதை எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால், அவரது மனைவி அதை முன்னமே கணித்துப் பதறினாள். அவர் கொஞ்சம் வசதி படைத்தவர் என்பதை அறிந்திருந்ததாலும் உண்மையான குற்றவாளி யார் என்று கண்டுப்பிடிக்க முடியாத இயலாமையாலும், நஷ்ட ஈட்டுக்காகவும், வக்கீல்களின் லாபத்திற்காகவும் செல்வா பொறிவைக்கப்படுகிறான். இரவில் மருத்துவமனையில் சேர்த்த பின்னோ முன்போ போலீஸில் புகார் எதுவும் செய்யாத சூழலை மட்டுமே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொள்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் லட்சங்களைக் கொடுத்தால் மட்டும் இதிலிருந்து விலக முடியும். இறுதி நம்பிக்கையோடு தான் காப்பற்றியவரையும் அவரது குடும்பத்தையும் சென்று பார்க்கிறார். அங்கே அவர்களின் பதில் ‘எங்களுக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் அவங்கக்கிட்டயே பேசிக்குங்க’ என்பதாக இருக்கிறது ஒரே இரவில் அவர் செய்த அறம் அர்த்தமற்றுப்போன சூழல் அது. அவர்கள் தங்கள் வாழ்வில் கிடைத்த அந்த சின்ன துடுப்பின் அறத்தை கண்ணீரைக் கொண்டே துடைத்துக் கொள்ள முடிவு செய்திருந்தனர். அவர்கள் அந்த துரோகத்திற்குத் தங்களின் ஏழ்மையை விலையாக்குகின்றனர். அவன் அங்கிருந்து புன்னகையோடு வெளியேறுகிறான். மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போதும் உதவியென்று கேட்ட ஒரு கிழவியை எரிச்சலுடன் தூர செல்ல சொல்கிறான். ஆனால் அந்தக் கிழவியின் முகம் அவனைத் தொந்தரவு செய்யவே அவளை அழைத்துக் கையிலிருந்து 2000-த்தைக் கொடுத்து உதவுகிறான். அவன் இறுக்கமற்ற இயல்பினனாக இருக்கிறான். இறுதியாகத் தனது பழைய வக்கீல் நண்பனின் பீட்டரின் உதவியில் 2 இலட்சத்தோடு சிக்கல் முடிகிறது. இனி உதவ வேண்டாம் எனச் சொன்ன வக்கீல் நண்பனிடம் செல்வா அதைச் செய்யும்போது அடையும் நிறைவைச் சொல்கிறான். அந்த நிறைவே அறத்தின் சாரம். இனி எந்தச் சூழலிலும் செல்வாவின் அறம் நீர்த்துப்போகாது. ஒரு துரோகத்தை இன்னொரு அறத்தைக்கொண்டு நிறைவு செய்துகொள்ளும் கதை இது. அதுவே அவனின் இயல்பு. சாயம் போகாத அறம் அது.
‘இருளில்’ என்ற கதை ஒரு நள்ளிரவின் நெடுஞ்சாலைப் பயணத்தில் இணையும் மூவரின் உரையாடல்களால் ஆனது. இக்கதை வாசகர்களிடையே நெடுஞ்சாலைப் பயணத்தை ஒட்டிய ரசனையை வளர்க்கிறது. இக்கதையில் லாரி ஒட்டுனர், அவருக்கு துணையாக உடன் வரும் உதவியாளன், பயணத்தின்போது உதவிக்கேட்டு உடன் இணைந்துக்கொண்ட மேலும் இருவர். அந்த இரவோடு முடிந்து போகும் அவர்கள் உறவும் உரையாடலும் இக்கதையில் சுவாரசியத்தைக் கொடுப்பவை. இரவு நெடுஞ்சாலைப் பயணமே இக்கதையை எனக்கு இன்னும் அணுக்கமானதாக்குகிறது. இன்று தொடங்கி இன்றே முடிந்து போகும் அந்த உறவுக்குள் ஏற்படும் அணுக்கமும் அந்த அந்தரங்கமான உரையாடலும் வியப்பூட்டுபவை. நிஜத்துக்கு மிக பக்கத்திலும் நிஜத்துக்கு மிக அப்பாலும் என இவர்களின் அனுபவங்கள் ஒரு விவாதத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
அப்துல் தான் ஒரு பெருங்காதல் கொள்ளாத மனைவி இறந்துவிட்ட பிறகு வேறு பெண்ணை பார்க்கவோ நெருங்கவோ திருமணம் செய்ய முடியாத நிலையில் அவஸ்தைப்படுகிறார். அவரால் தன் மனைவியின் இடத்தில் வேறொரு பெண்ணை பொருத்திப்பார்க்கமுடியவில்லை. அது அன்பின் பொருட்டோ காதலின் பொருட்டோ வரும் இயலாமை அல்ல என்பதுதான் முரண். மறுதிருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழும் ஆசை மனம் நிறையவே இருக்கிறது. ஆனாலும், அப்படி, முயற்சிக்கும்போதெல்லாம் கனவில் சோறு என வாயிலிட்டு மண்ணென உணர்ந்து துப்பிக்கொண்டே இருக்கிறார். பயணத்தின் இடையே இணைந்து கொண்ட தருணின் அனுபவமும் இதற்கு ஒப்பானதே. இயல்பாகவே நெடுஞ்சாலை பயணத்தில் பெரும் ஈர்ப்புகொண்டவன் தருண். அப்படி ஒரு நெடுஞ்சாலை பயணத்தின்போது தங்கிய ஒரு விடுதியில் முகம் பார்க்கமுடியா இருளில் அவன் அறைக்கு அவனைத் தேடி வந்து உறவு கொள்கிறாள் ஒரு பெண். தன் முகத்தைக் காட்டாமலேயே அவனோடு உறவு கொண்டு தன்னை ஒரு போதும் பின்தொடரக்கூடாது எனக்கூறி அங்கிருந்து விடைபெறுகிறாள். அவனுக்கு அந்த அனுபவம் பூரணமானதும் பாதிப்பானதுமாக ஆகிறது. ஒரு கனவு போலவும் நிஜம்போலவும் நிகழ்ந்த பரிபூரண கூடல் அது என்கிறான். அவன் கூறுவது அத்தனையும் நிஜம் என நம்பும் அதே மனம் ஒரு புள்ளியில் அவை கனவோ என்ற கேள்வியையும் ஏற்படுத்திக்கொள்கிறது. அந்த ஓர் இரவின் அந்த ஒரு தருணத்தைச் சார்ந்தே அதற்குப் பின்பான தருணின் வாழ்வு அமைந்துவிடுகிறது. அவன் எல்லாவற்றையும் இழந்து அந்த ஒரு தருணத்தைமட்டுமே இன்றளவும் தரிசித்தும் தேடியும் வாழ்கிறான். கடந்து வந்து விட்ட நாட்களென்பது முழுக்கவே எல்லாராலும் கடக்கப்படுவதில்லை. நம்மில் சிலர் ஏதோ ஒரு கணங்களுக்காக அதிலேயே அங்கேயே நின்றுவிடுகிறோம். இக்கதை அப்படி ஒரு மாயையைத் தனக்குத் தானே கட்டிக்கொண்டு வாழும் மனிதர்களின் நம்பிக்கையை முன்வைக்கிறது. மனித நம்பிக்கை என்பது உயிர்ப்பானது. எண்ணங்களின் ஆழம் பொருட்டே அது நம்மை ஆளத்தொடங்கிவிடுகிறது. அப்படி அப்துல்லின் எண்ணத்திலும் நம்பிக்கையிலும் உருவாகி வரும் நனைவலி மனம் இத்தனை ஆண்டுகளாக நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டும்போது தூங்கிவிடும் அவரை சரியான நேரத்தில் விழிக்கச் செய்து காக்கிறது. இக்கதை ஒரு நீராவிப்புகைப் போல மனிதர்களின் சந்திப்பை நிகழ்த்திப்பயணத்தை நீட்டுகிறது. இறுதியில் நீர்த்துளிகளாக மட்டுமே சில கணம் எஞ்சப்போகும் சந்திப்புகள் அவை. இக்கதையின் நெடுஞ்சாலை பயணம் என் மனதளவில் முடிவற்றதுதான்.
‘விருந்து‘ இன்னமும் என்னளவில் உள்ளுக்குள் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் சிறுகதை. இக்கதையில் சிறைக்கைதியாக வரும் சாமிநாதன் ஆசாரி இசை, சித்திரம், கதை என்ற கலைகளைக் கைவரப்பெற்றவன். இவ்வுலக வாழ்வை விரும்புபவன்கூட. அதன்பொருட்டே தூக்குத் தண்டனைக் கைதியான அவன் கருணை மனுவை விண்ணப்பிக்கிறான். ஆனால் அவனுக்குத் தூக்கு தண்டனையே உறுதிப்படுத்தப்படுகிறது. அதை அவன் அறிந்தும் வைத்திருக்கிறான். எனினும், வாழ்க்கையின் மீதான பற்றுதலால் விண்ணப்பிக்கிறான். அவனது மரணத்துக்கான நாள் குறிக்கப்படுகிறது. கைதியான அவனுக்கும், சிறைக்காவலராக இருக்கும் தாணப்பன் பிள்ளைக்கும் இடையே ஒரு சிறிய அன்பும் நட்பும் இருக்கிறது. பல சமயங்களில் அவனின் பாட்டும், கதையும் அவருக்கும் மற்றவர்களுக்கும் பொழுதுபோக்காக அமைகிறது. அவனின் துக்கத்தைப் போக்கிக்கொள்ளும் ஒரே மாற்று வெற்றிலைப்பாக்குதான். அதற்கு அங்கே அனுமதி இல்லையென்றாலும் கதைச்சொல்லியின் தாத்தாவாகிய தாணப்ப பிள்ளை ரகசியமாக அவனுக்கு அதைக் கொடுக்கிறார். இறுதியில் மரணத்துக்கு முன்னதாக ஆசாரி தான் ஒரு ஆட்டுக் கிடாவை வெட்டி விருந்து கொடுக்க விரும்புவதாகக் கூறுகிறான். அது ஒப்புக்கொள்ளப்படுகிறது. அவனே ஒரு ஆட்டை அன்பாகப் பாசமாக சில நாட்கள் வளர்க்கிறான். அவனுக்குச் சிறையில் கொடுக்கப்படும் கம்புச்சோறு களிகட்டிகளையும் உண்ணக்கொடுக்கிறான். பின்னர் அவன் கையாலேயே அதை வெட்டிப் பலிகொடுக்கிறான். ஆனால், அப்படி அதைப் பலி கொடுப்பதற்கு முன்னர் அதன் காதில் மந்திரம் போல ஏதோ சொல்கிறான். அவன் ஆட்டுக்குத் தன் பெயரைச் சூட்டியிருக்கிறான் என்பதைப் பிறகு அவனிடமே தாணப்பன் பிள்ளை கேட்டறிகிறார். ஆடு அவன் விரும்பியது போலவே அனைவருக்கும் விருந்தாகிறது. மறுநாள் தூக்குமேடைக்குச் செல்லும் முன் வழக்கம்போல பல்துலக்கி முகம்கழுவி கொள்கிறான். அந்த ஆசாரி ஆட்டின்வழி தன் மரணத்தைப் பார்த்துவிடுகிறான். அது ஒரு வகையில் அவன் மரணத்தின் ஒத்திகை. அத்தனைநாள் அதை அன்பாகப் பார்த்தவர்களுக்கு அது சமைக்கப்பட்டவுடன் வெறும் உணவாகிவிடவதுபோல அவன் எத்தனை அணுக்கமாக இருந்தாலும் அங்கே தான் ஒரு தூக்குக் கைதிதான் என்பதை உணர்கின்ற வினை அது. எத்தனைப் பெரிய துக்கங்களையும் பிரிவுகளையும் மிக எளிதில் மறக்கச் செய்யும் காலம்.
இத்தொகுப்பில் ‘விசை’ என்ற சிறுகதை முற்றிலும் மாறுபட்ட மனித மனங்களையும் அவர்களின் வியப்பூட்டும் செயல்பாடுகளையும் காட்டுகிறது. இக்கதையில் ஓலைக்காரியாக வரும் கிழவி ஒவ்வொரு நாளும் கொஞ்சமும் மாற்றமில்லாமல் தென்னை ஓலைகளை மிக மூர்க்கமாக முடைகிறாள். ஒரு இயந்திரத்தின் செயல்பாட்டை ஒத்தே அமைகிறது அவளது முடைதல். அது அத்தனை நேர்த்தியாகவும் நெருக்கமாகவும் அமைகிறது. அவள் அதிகம் பேசுவதில்லை. இறப்பதற்கு முதல்நாள் வரை அவள் ஓலை முடைந்தாள். ஓலை முடைதலே அவளது இருத்தலின் அடையாளமாகிறது. விசைபோட்டு இயங்கும் ஓர் இயந்திரம் போல எந்த சலனமுமற்று அவள் ஓலை முடைகிறாள். அவளது அன்றாடங்கள் திட்டமிட்டது போலவே மிக நேர்த்தியாக மாற்றமில்லாமல் நிகழ்கிறது. யாராலுமே அவளது இயக்கத்தைத் தடுக்கவியலவில்லை. தன்னுடைய வெறுமையை நிறைவு செய்துக்கொள்ளும் ஒரு விசையாகவே அந்த ஓலைக்காரியின் அத்தனை இறுக்கமான ஓலைப்பின்னலைப் பார்க்கிறேன். அதே போல அவள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகு ஓலைக்காரியின் மகனில் அது போலொரு விசை துளிர்க்கிறது. அதுவே அவனைச் சாலையில் ஓலைகளைப் பொறுக்கத் தூண்டுகிறது. இயங்குதலை உறுதி செய்துகொண்டே இருக்க விரும்பும் முதுமையின் விசை அது.
இத்தொகுப்பில் ஜெயமோகன் எழுதியிருக்கும் சிறுகதைகள் ஒவ்வொன்றுமே வாழ்வின் பன்மையான வண்ணங்களால் ஆனவை. ஈர்ப்பற்று மங்கி வெளுத்துப்போனதாலும் இருளுக்குள் மறைந்திருந்ததாலும் இதுவரை கவனிக்காதிருந்த பல வண்ணங்களை அவர் புனைவுகளின் வழி கவனிக்கிறேன். நம்மால் வாழ்ந்து பார்க்க முடியாத எத்தனை எத்தனையோ சூழல்களைத், தருணங்களை, வாழ்வுகளை வாழ்ந்துவிட்ட நிகர் அனுபவத்தையே அவரது புனைவுகள் கொடுக்கின்றன. விசையில் வரும் கிழவியாக, விருந்தில் ஒரு தூக்குக் கைதியாகவும் கூட ஒரு கணம் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கதைகள் இவை.
தொடக்கநிலை வாசகியாக ஜெயமோகனின் அடர் புனைவுக்குள் சென்று அதன் அடிவேரை அறிவதே என் முன் இருக்கும் பெரும் சவால். அவரது எல்லா புனைவுகளின் ஆழ் அர்த்தங்களும் ஒரு நாள் வசப்படும் என்ற பெரும் நம்பிக்கையில்தான் அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். எனினும் ஒரு புனைவு கொடுக்கக்கூடிய மன உணர்வையும் சிந்தனை மாற்றத்தையும், அலைகழிப்பையும் அவரது ஒவ்வொரு புனைவிலுமே நான் கடந்து வந்திருக்கிறேன். ஏழாம் கடல் சிறுகதையில் நான் இந்த இயற்கை உண்மைக்குச் செய்யும் மரியதையையும் அங்கீகரிப்பையும் கண்டு வியக்க முடிந்தது. வஞ்சத்தால் ஆன இவ்வுலகில் நல்லவர்களாய் வாழவியலாது என்ற எத்தனையோ ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இக்கதைகள் நம் உலகை நம் வாழ்வை நம் இயல்புகளே நிர்ணயிக்கின்றன என்பதை உணர்த்துகின்றன.
‘அறமென்ப’ சிறுகதை நான் செல்வாவின் இடத்தை இன்னும் தொடவில்லை, அதை தொடும் தூரம் மிகத் தொலைவு என என்னை எனக்கே மீட்டுணர்த்தியுள்ளது. ‘விசை’ சிறுகதை வாழ்வில் தொடர் இயங்கலையும் அதன் மூலம் தன்னை இவ்வுலகில் இருத்திக் கொண்டே இருக்கும் மானுடத்தையும் பார்த்தேன். அதன் வழி என் பாட்டியையும் பார்க்கிறேன். இருளில் சிறுகதை இனி எப்போதுமே பதில் கிடைக்காத ஒன்றைத் தேடித் தொலையும் மனித வாழ்வின் இருண்ட திசைகளை அவதானித்தேன். ‘விருந்து’ சிறுகதை எல்லாவற்றையும் தின்று செரித்துவிடும் காலத்தின் நகர்ச்சியைப் பார்க்கிறேன். இப்படி வாழ்வின் நிதர்சனத்தைப் பேசும் கதைகள் வழி என்னையும், என் வாழ்வையும், என்னைச் சார்ந்தவர்களையும், என்னைச் சாராதவர்களையும் புது புது முகவரிகளோடு அறிந்துகொண்டே இருக்கிறேன். இந்த அறிமுகங்களே என் வாழ்வை அகலப்படுத்துகின்றன.