இரவு பத்து மணிக்கு நட்சத்திர விடுதியை விட்டு வெளியே வருபவனின் தனிமையை, பாங்காக்கின் டாக்ஸி ஓட்டுனர்கள் சரியாக இனம் கண்டுக்கொள்கிறார்கள். காரில் ஏறியவுடன் செல்லுமிடம் பற்றி எந்த வினாவுமின்றி வண்டியை சுக்கும்வித் சாலையில் இறக்கினார் அந்த ஓட்டுனர். சிறிது தூரம் சென்றவுடன், சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினார். பிறகு, பின்பக்கம் திரும்பி என்னை பார்த்து சிரித்தார். அவர் முகத்திலிருந்த கோணல், சிரிப்பிலும் தெரிந்தது. மெதுவாக பூம்… பூம் என்று சத்தமெழுப்பி ஸ்டியரிங்கை முட்டுவது போல் இடுப்பை அசைத்து, என்னை பார்த்து சிரித்தார். ஜெர்கின் உள் பாக்கெட்டிலிருந்து சராலென்று, அந்த பாம்ப்லெட்டை உருவி என்னிடம் நீட்டினார். நான்கு மடிப்பாக இருந்த அந்த வண்ண புகைப்படங்களில், விதவிதமான தாய்லாந்து பெண்கள் நிர்வாணகோலத்தில் இருந்தனர். பாத்டப்பில் நுரையுடன், வாயில் விரல்வைத்து கலவிக்கு அழைத்தனர். அதை திரும்பவும் அவரிடம் நீட்டினேன். இருப்பவற்றில் உயர்தரமான விடுதிக்கு செல்லும்படி கோரினேன். ”ஒகே..ஒகே”, என்றார் அதே கோணல் சிரிப்புடன்.
சாலைகளில் விரையும் துக்துக் எனப்படும் ஆட்டோக்களில், அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் வந்து குழுமியிருந்த வெள்ளைக்காரர்கள் மந்தகாச புன்னகையுடன் வீற்றிருந்தனர். பெரும்பாலும் அரைக்கால் டிரவுசர் மற்றும் முண்டா பனியன், ரப்பர் செருப்பு சகிதம் திரிந்தனர். சில ஆட்டோக்களில் பெண்களுமிருந்தனர். பெண்கள், பாங்காக் இரவு சந்தையில் வாங்கிய பட்டாயா என்று பெயர்போட்ட பனியனும், நீண்ட காட்டன் ஸ்கார்ட்டும் அணிந்திருந்தனர். சுக்கும்வித் நாணா இரவு சந்தை கடைகளில் கூட்டம் குழுமியிருந்தது. விதவிதமான ஸ்டிலேட்டோ கத்திகளை ஒருவன் கடை விரித்திருந்தான். கூடவே பல அளவுகளில் டில்டோ சிந்தடிக் ஆண்குறிகள். கத்திகளையும், ஆண்குறிகளையும் ஒருங்கே விற்கும் அவனது மனநிலை புன்னகையை வரவைத்தது. நான் சிரிப்பதை கண்ணாடியில் பார்த்த கோணல் சிரிப்புகாரர், என்னிடம் திரும்பி, கைகளில் சைகை செய்து, நயம் விடுதிக்கு கூட்டிசெல்வதாக மறுபடியும் உறுதி கூறினார்.
கார், சிட்லொம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே விரைந்தது. கிராண்ட் ஹயாத் விடுதி அருகே, நான்கு தலை புத்தர் என்றழைக்கபடும் எரவான் பிரம்மாவின் சிலை தெரிந்தது. அந்த நேரத்திலும் சிலர் பிரம்மாவின் சிலை முன், ஊதுபத்தி கொளுத்தி வணங்கி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் புன்னகை தவழ, பிரம்மா சாலையோரங்களில் நிற்கும் பெண்களிடம் பேரம்பேசிக்கொண்டிருந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
இருபது நிமிடத்துக்கும் மேல் கார் விரைந்து சட்டென்று ஒரு காம்பவுண்டில் நுழைந்தது. அங்கே ஏற்கனவே நிறைய டாக்ஸிகள் நின்றன. அண்ணாந்து கட்டிடத்தை பார்த்தேன். ஹோட்டல் சுவேனா என்றிருந்தது. புதிய டாக்ஸியை பார்த்தவுடன் கருப்பு பேண்ட், கருப்பு ஜெர்கின் அணிந்திருந்த இருவர் ஓடிவந்தனர். இருவருமே அந்த இரவில் கூலர்ஸ் அணிந்திருந்தனர். கோணல் சிரிப்புடன் ஓட்டுனர், என்னை காட்டி ஏதோ சொன்னார். கதவை திறந்து கும்பிட்டு வரவேற்றனர்.
கையில் வாக்கி டாக்கி வைத்திருந்த ஒருவன் என்னிடம் வந்து கையை நீட்டி, ”என் பெயர் வுட்” என்றான். பெரும்பாலும் தாய்லாந்தில் யாரும் சொந்த பெயர்களை சொல்வதில்லை. வெளிநாட்டுகாரர்களுக்கென்றே சுருக்கிய பெயர்களை வைத்திருந்தனர். படிகளில் ஏறியவுடன் தங்க நிறத்தில் மிகப்பெரிய இரு கதவுகள் தெரிந்தன. அதை திறந்தபடி வாக்கி டாக்கியில் ஏதோ சொன்னான் வுட். கதவை திறந்தவுடன் உள்ளே ஒலித்த லுக் துங் இசை காதில் விழுந்தது. பிரமாண்டமான அந்த மைய அரங்கம் முழுவதும் நீல நிற விளக்குகளால் மின்னியது. தாய்லாந்தின் பாரம்பரிய உடையான சுட்தாய் அணிந்த, தேவதை போன்ற இரு பெண்கள் வந்து வணக்கம் சொன்னார்கள். கீழே கரும்நீல நிற பட்டுதுணியில் பாவாடை போல் அணிந்து, நடுவில் வெள்ளி நிறத்தில் வேலைபாடுகள் கொண்ட பெல்ட் அணிந்திருந்தனர். மேலே வெள்ளி நிற பட்டுதுணியை தாவணி போல் சுற்றியிருந்தனர். மிகப்பெரிய அந்த ஹால் நடுவே சோபாக்கள் போட்டிருந்தனர். ஆங்காங்கே ஆண்கள் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். வுட், என்னை காலியாக இருந்த ஒரு சோபாவில் அமரவைத்தான். அமர்ந்த பின்புதான் எதிரில் பார்த்தேன். மாபெரும் கண்ணாடி தடுப்புக்கு அந்தப்பக்கம், நூற்றுக்கணக்கில் அழகான இளம்பெண்கள் பல வரிசைகளில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தோளில் இலக்கமிடப்பட்டிருந்தது. அனைத்து வரிசையிலுள்ள பெண்களும் பார்வையில்படும்படி அந்த இருக்கைகள் மேலிருந்து கீழே இறங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பெண்கள் அனைவரும் புதிதாக நுழைந்த என்னை நோக்கி புன்னகைத்தனர். உயரமாக இருந்த ஒரு பெண் கைவிரலை ஆட்டி சிரித்தாள். அவள் இளம்பிங்க் நிறத்தில் ஸ்கார்ட் அணிந்து மேலே தங்க நிறத்தில் சட்டையணிந்திருந்தாள். அவளுடைய நீளவாக்கு முகம் வரும்போது பார்த்த நியான் போர்டு பெண்ணை ஞாபகப்படுத்தியது. அவளை உற்றுப்பார்ப்பதை பார்த்து, தன்னுடைய இலக்கத்தை தொட்டு காண்பித்தாள். சட்டென்று வெட்கமடைந்து தலையை குனிந்துக்கொண்டேன்.
வுட், மெனு கார்டை நீட்டினான். சிங்கா பியர் சொன்னேன். கிளாஸ் முழுவதும் ஐஸ்துண்டங்களை போட்டு அதில் பியரை நிரப்பி கொண்டு வந்தான். பியரில் ஐஸ்துண்டு போட்டு குடிப்பது ஆரம்பத்தில் விசித்திரமாக இருந்தது, இப்போதெல்லாம் சென்னையில் கூட அப்படிதான் குடிக்கபிடிக்கிறது. எதிரிலிருந்த கண்ணாடி தடுப்பை போலவே, ஹாலின் இரு பக்கங்களிலும் சிறிய கண்ணாடி தடுப்புகளில் பெண்கள் இருந்தனர். எதிரிலிருந்த பெண்களை காட்டி, ”ஆறாயிரம் பாட்” என்றான் வுட். இரு பக்கங்களிலுள்ள கண்ணாடி தடுப்பிலுள்ள பெண்களுக்கு ”நான்காயிரம் பாட்”. விலையிலுள்ள வித்தியாசம் அவர்களுடைய வயதை பொறுத்தது என்பது தெரிந்தது. நான்காயிரம் பாட் பெண்கள் சற்று பருமனான உடல் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தவுடன், நடு வரிசையில் இருந்த பெண் வேண்டுமென்றே குனிந்து வணக்கம் சொன்னாள். அருகிலுள்ள பெண்கள் அவளது தோளைதட்டி சிரித்தனர். ”நேரமெடுத்து தேர்வு செய்” என்று சொல்லிவிட்டு, வுட் வேறு மேஜை பக்கம் போனான்.
பேச்சும் சிரிப்புமாக, நான்கு இளம் அமெரிக்கர்கள் உள்ளே வந்தார்கள். நால்வருமே அரைகால்சட்டையணிந்திருந்தனர். உள்ளே வந்தவுடன் சட்டென்று பேச்சு நின்றது. எதிரில் நூற்றக்கணக்கான பெண்களை பார்த்தவுடன் அடையும் பேச்சின்மை. பிறகு, சகஜமாக காட்டிக்கொள்ள உரத்த குரலில் அபத்தமாக ஏதோ சொல்லி சிரித்தனர். அவர்களை பார்த்தவுடன் ஆறாயிரம் பாட் வரிசையில் இருந்து சில பெண்கள் எழுந்து மற்றொரு பக்கம் போவது போல் ஒய்யாரமாக நடந்து காட்டினர். சிலர் கைகளால் கூப்பிடுவது போல் சைகை செய்தனர். அமெரிக்க இளைஞர்கள், ஒவ்வொருவராக பெண்களை தேர்வு செய்தனர். குறுந்தாடி வைத்திருந்த ஒருவன், வுட்டை அழைத்து இலக்கத்தை சொன்னவுடன், அவன் வாக்கி டாக்கியில் அந்த எண்ணை கூறினான். அந்த குரல் கண்ணாடி தடுப்புக்குள் விழுந்தவுடன், அந்த இலக்கத்துக்குரிய பெண், சிரிப்புடன் எழுந்து குறுந்தாடி இளைஞனை பார்த்து குனிந்து வணக்கம் சொன்னாள். பிறகு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கண்ணாடி அறையை விட்டு, வெளியே வந்து குறுந்தாடியின் கையை பிடித்துக்கொண்டாள். பிறகு இருவரும் மூலையில் இருந்த கவுண்டர் அருகே செல்ல, குறுந்தாடி பணம் செலுத்தினான். வுட் போல மூன்று, நான்கு கருப்பு உடைகாரர்களை தவிர அங்கு முழுவதும் பெண்களே வேலைக்கு இருந்தனர். பணம் கட்டியவுடன், மாடியில் உள்ள அறைக்கு செல்ல லிப்ட் அருகே சென்றார்கள். லிப்ட் ஆப்ரேட்டராக நின்ற முதிய பெண், வணங்கி வணக்கம் சொன்னாள். பிறகு, தேர்ந்தெடுத்த பெண்ணுக்கு மட்டும் புரியும்படி, அந்த குறுந்தாடியை காட்டி குறும்பாக ஏதோ தாய் மொழியில் சொன்னாள். அந்த பெண், ஆப்ரேட்டர் தோளில் அடித்து சிரித்தாள்.
இந்த லிப்ட் ஆப்ரேட்டர், முன்பு இதே விடுதியில் ஆறாயிரம் பாட் வரிசையில் இருந்திருக்க கூடும். பிறகு, காலப்போக்கில் நான்காயிரம் வரிசைக்கு வந்து இறுதியாக மற்றவர்களை இன்பலோகத்திற்கு இட்டு செல்லும்பணியில் விழுந்திருக்கவேண்டும். எத்தனை பேர், லிப்ட் ஆப்ரேட்டர்களாக முடியும்? மீதமுள்ளவர்கள், நள்ளிரவு பிங்-பாங் ஷோக்களில் பலூன் ஊதி காட்டிக்கொண்டிருக்க கூடும்.
சராசரியாக அந்த மேஜைகளில் அமர்ந்தவர்கள் ஐந்து நிமிடங்கள் அல்லது ஒரு மக் பீர் தீர்வதற்குள் தங்களுக்குரிய பெண்ணை தேர்ந்தெடுத்தனர். என்னுடைய பியர் தீர்ந்ததை கண்டு, வுட் அருகில் வந்தான். “மீண்டும் ஒரு பியர்”, என்றேன். முதலில் கொஞ்சம் தயங்கி சிரித்தபடி கவுண்டருக்கு எதிரிலிருந்த பார் உள்ளே சென்று ஒரு மக்கில் நுரை பொங்க பீர் கொண்டு வந்தான். இரண்டாவது பீர் வருவதை கண்டு ஆர்வமிழந்த பெண்கள் புது வாடிக்கையாளர்களை நோக்கி கவனம் செலுத்தினர்.
”இங்கு வரும் மனிதர்கள் மிகுந்த பசியுடன் வருகிறார்கள். அதைவிட அதிகமான பசியுடன் வெளியேறுகிறார்கள்.” என்று ஜப்பானிய மொழியில் ஒரு குரல் வந்தது. அப்போதுதான் இடது புறம் இரண்டாவது மேஜையில் அமர்ந்திருந்த ஜப்பானியரை பார்த்தேன். அவர் முன் மூன்று காலி விஸ்கி கோப்பைகள் இருந்தன. அவர் தன்னுள் பேசிக்கொள்கிறார் என்பது தெரிந்தது. நான் அவரை நோக்கி சிரித்து, ”ஏன், இது மாதிரியான இடங்கள் ஆண்களுக்கு அதிக போதையை தருகிறது?” என்று ஜப்பானிய மொழியில் கேட்டேன். அவர் ஒருகணம் திகைத்தார்.
பிறகு சகஜமாகி “நீ ஜப்பானில் வசிக்கிறாயா?” என்று கேட்டார்.
என் பெயர் சித்தார்த், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் என்னுடைய விளம்பர நிறுவனத்தின் பொருட்டு பல நாடுகளுக்கும் செல்வேன். தோக்கியோ அடிக்கடி வந்திருக்கிறேன். ஜப்பானிய மொழியை பயின்றிருக்கிறேன். தென்னிந்தியாவிலிருந்து வருகிறேன்.
”ஓ, ஜப்பானிய மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறாய்” என்று கிளாஸ் உயர்த்தி “கம்பாய்” என்றார். பிறகு விஸ்கியுடன் எழுந்து என் மேஜைக்கு வந்தார். “என் பெயர் கிமுரா. நான் இங்குள்ள ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர். பல ஆண்டுகளாக பாங்காக்கில் வசிக்கிறேன்.” என்றார். எழுந்தபோது தான் அவரது உயரம் தெரிந்தது. காக்கி நிறத்தில் பொடிகட்டம்போட்ட சட்டையை, க்ரிம் கலர் பேண்டில் இன் செய்திருந்தார். மேலே காக்கி நிறத்தில் ஓவர் கோட் போட்டு, தலையோடு ஒட்டிய தட்டை தொப்பியணிந்திருந்தார். எப்படியும் அறுபது வயது இருக்குமென்று தோன்றியது.
என் அருகில் அமர்ந்தவுடன், “நீ ஏதோ கேட்டாயே?” என்று கேட்டார் கிமுரா.
“ஏன் இது போன்ற இடங்கள் ஆண்களை கவர்ந்திழுக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.” என்றேன்.
ஏனென்றால், இங்கு காமம் மட்டுமே உள்ளது. அன்பு, பாசம் போன்ற எந்த பூச்சும் இங்கில்லை. காமத்திற்காக மட்டுமேயான உறவில் மனிதர்கள் தங்களது ஆதி நிலையை அடைகிறார்கள். அதில் மட்டுமே பரிபூரணமான காமத்தை துய்க்கிறார்கள். எல்லாவித வேடங்களையும் களைந்து, வெறும் காமமே உருவானவர்களாய் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். எல்லாம் முடிகையில், இது காமத்திற்க்கு மட்டுமேயான மகிழ்ச்சி என்பதால், முடிவில்லா குற்ற உணர்ச்சியை அடைகிறார்கள். அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, இங்கிருந்து வெளியேறியவுடன் உடனடியாக மனைவியை அழைக்கிறார்கள். குழந்தைகளுடன் பேசுகிறார்கள். தங்களது இருப்பை அர்த்தப்படுத்திகொள்ள விழைகிறார்கள். அறைகளில், கழட்டி மாட்டி வந்த வேடங்களில் மறுபடியும் பொறுத்திக்கொண்டு, அன்பான கணவனாய், அப்பாவாய் தங்களது குடும்பத்திற்கு பரிசுபொருட்களை வாங்கி வீடு திரும்புகிறார்கள்.
“பரிபூரணமான காமத்தின் பொருட்டு என்றால் அது ஆண்களுக்கு மட்டும் ஏன் ?” என்று கேட்டேன்.
”ஏனெனில் அதுதான் ஆண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு வேறுவிதமான உன்னதங்கள் இங்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றன, நண்பா” என்றார் கிமுரா.
“இது ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நியாயங்கள்”, என்றேன்.
“தாய்லாந்தின் நாட்டுபுறக்கதை ஒன்று உண்டு. சொல்கிறேன், கேள்”, என்றார் கிமுரா.
“காமத்தில் முழுஇன்பமும் சுவைக்க விரும்பிய ஒருவன் கடவுளை நோக்கி தவமிருந்தான். அவனுடைய கடுமையான தவத்துக்கு மனமிறங்கி, கடவுள் கண்ணேதிரே தோன்றினார். “உன்னுடைய பக்தியை மெச்சினோம். மூன்று வரங்கள் உனக்கு தருகிறேன். சீக்கிரம் கேள்”, என்றார் கடவுள்.
இன்பத்தில் முடிவில்லாமல் திளைக்க எனக்கு நிறைய ஆண்குறிகள் வேண்டுமென்றான் அவன். “அருளினேன்”, என்றார் கடவுள்.
அவனது உடல்முழுவதும் ஆண்குறிகள் தோன்றின. அவனை பார்த்த பெண்கள் பயந்து ஓடினார்கள். எனவே காமமின்றி துயருற்றான். மீண்டும் கடவுளிடம் இரண்டாவது வரத்தை கேட்டான். “இந்த ஆண்குறிகள் மறைய வேண்டும்” “அருளினேன்” என்றார் கடவுள். அனைத்து லிங்கங்களும் மறைந்தன. கடைசியாக “என்னுடைய ஆண்குறியை மட்டும் திருப்பி தந்துவிடு” என்று மூன்றாவது வரத்தை கேட்டு தொலைத்தான்” விழுந்து விழுந்து சிரித்தார் கிமுரா, பிறகு கிளாஸை உயர்த்தி “கம்பாய்” என்றார்.
எங்கள் புராணத்தில் இது இந்திரனுக்குரிய கதை .
ஆம், இது எல்லா இந்திரன்களுக்குமான கதையென்றார், கிமுரா.
நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அருகே வந்தான் வுட். “எனது இந்திய நண்பனுக்கும் சேர்த்து பியர் கொண்டு வா, எனது கணக்கில்” என்றார் கிமுரா. வுட் தயக்கமாக திரும்பி நடந்தான்.
நீங்கள், உங்களுக்குரிய பெண்ணை தேர்வு செய்யவில்லையா, கிமுரா?
சிறிதாக சப்தமெழுப்பி சிரித்தார் கிமுரா. “சில நூற்றாண்டுகளுக்கு முன் எங்கள் மண்ணில் சாமுராய்கள் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஓயாது படையெடுத்து சென்று அடுத்த இனக்குழுவை தாக்கி அவர்களது பகுதியை தம்முடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள். தோல்வியடைந்த இனக்குழுவின் தலைவன், அவனுடைய தளபதிகள் அனைவரும், குடலை கிழித்துக்கொண்டு உயிரைவிடுவார்கள். அவர்களுடைய தலைகளை தட்டில் வைத்து அலங்கரித்து, வெற்றி பெற்ற இனக்குழு தலைவனின் முன்பு ஒவ்வொன்றாக காட்டுவார்கள். எனக்கு இந்த கண்ணாடி தடுப்பிலுள்ள முகங்களை பார்க்க அந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது. பிறகு எந்த தலையை தேர்ந்தெடுப்பது”, என்றார்.
“பிறகு இங்கு எதற்கு வந்தீர்கள்?”
நான் என்னுடைய நண்பியை பார்க்கவந்தேன். அவளை சில வருடங்களுக்கு முன் நாணா பிளாசாவில் பார்த்தேன். பிறகு தொடர்ந்து சந்தித்தோம். அவள் இங்கு பணிபுரிகிறாள். நான் டோக்கியோவுக்கு சென்று திரும்பும்போதெல்லாம் அவளை சந்திப்பது வழக்கம். அவள் வாடிக்கையாளருடன் மேலே சென்றிருக்கிறாள். அவளுக்காக காத்திருக்கிறேன்.
எங்கள் மீது நம்பிக்கையிழந்திருந்த வுட், நாங்கள் அமர்ந்திருந்த மேஜையை தவிர்த்துவிட்டு மற்றவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். கண்ணாடிக்கு அப்பாலுள்ள முகங்களை மீண்டும் பார்த்தேன். சிவப்பு நிறத்தில் தோள்வரை வந்து கழுத்தை சுற்றி ஒற்றை ரிப்பனில் கட்டப்பட்டிருந்த ஆடையணிந்த பெண் மட்டும் என்னை பார்த்து சிரித்தாள். மற்றவர்கள் புதிதாக உள்ளே நுழைந்திருந்த மத்திய கிழக்கு நாட்டுக்கார்களை நோக்கி குவிந்திருந்தனர்.
லிப்டிலிருந்து கீழே வந்த பெண், தன்னுடன் இருந்த பச்சை நிறகண்கள் கொண்டவனை பிரியும்பொருட்டு கட்டி தழுவிக்கொண்டாள். அவன் தன்னுடைய பர்ஸை பிரித்து ஐநூறு பாட் தாளை எடுத்து அந்த ஆப்ரேட்டர் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, வாசலை நோக்கி வெளியேறினான். அவன் வெளியேறும்வரை கையசைத்து விடைகொடுத்த அந்த பெண், நாங்கள் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஓடி வந்தாள். “கிமுரா சான்”, என்று சொன்னபடி கட்டி தழுவிக்கொண்டாள். கிமுரா, கண்களில் சிரிப்பு ஒளிர, நலமா? என்று தாய் மொழியில் கேட்டார். என்னை காட்டி “இந்திய நண்பன்” என்றார், அவளிடம். அவள் கைகளை நெஞ்சில் வைத்து குனிந்து வணக்கம் சொன்னாள். அவள் மாநிறத்தில், மெலிதான உடல்வாகை கொண்டிருந்தாள். கழுத்துவரை புரண்ட முடியில் தங்க நிறத்தில் சாயமேற்றியிருந்தாள். சிவப்பு நிற மேல் டாப்ஸும் கறுப்பு நிறத்தில் ஸ்கார்ட்டும் அணிந்திருந்தாள். கீழ் உதடு பெரிதாக இருந்ததால், அவளது சிரிப்பு வசீகரமாக இருந்தது. கிமுரா தான் கொண்டு வந்திருந்த பையை அவளிடம் நீட்டினார். அவள், “ஓ, டோக்கியோ பனானா” என்று கண்கள் ஒளிர கூறினாள்.
கிமுரா, என்னை பார்த்து, “சியமந்தகாவின் மகனுக்கு இந்த க்ரிம் பன் மிகவும் பிடிக்கும். எனவே எப்போதும் டோக்கியோவிலிருந்து கொண்டு வருவேன்”, என்றார்.
அப்போது, சியமந்தகாவின் முகம் வேறொன்றாய் மாறியிருந்தது. கண்களில் பூரிப்பு தெரிந்தது. அவள் “டோக்கியோ பனானா” க்ரிம் கேக்கை மகனிடம் கொடுத்தவுடன், அவன் அடைய போகும் மகிழ்ச்சியை கண்டுக்கொண்டிருந்தாள். அதுவரை தெரிந்த சியமந்தகாவிலிருந்து வேறொருவள் எழுந்திருந்தாள். மறுபடியும் கிமுராவிடம் நன்றி கூறினாள். அந்த பையை கட்டித் தழுவிக்கொண்டாள். பிறகு கிமுராவிடம் விடைபெற்று கண்ணாடியறைக்கு சென்றாள்.
கிமுரா, “இந்திய நண்பனே, நாம் பிறகு எப்போதாவது சந்திப்போம். அவள் கண்ணாடியறைக்குள் போவதற்குள் நான் கிளம்பிவிடவேண்டும்”, என்று சொல்லி கவுண்டருக்கு சென்று பணத்தை செலுத்தினார். பிறகு என்னிடம் தொப்பியை கழட்டி காண்பித்து போய் வருவதாக சொன்னார். வாசலில் வெளியேறினார்.
நான் மெதுவாக கண்ணாடிக்கு அப்பாலுள்ள முகங்களை பார்த்தேன். தட்டில் வைக்கப்பட்ட தலைகளில் ஒன்று புன்னகைத்தது.
“இங்கு வரும் மனிதர்கள் மிகுந்த பசியுடன் வருகிறார்கள். அதைவிட அதிகமான பசியுடன் வெளியேறுகிறார்கள்.”
நல்ல கதை செந்தில்.
நன்றி
ஒரு வேசி பெண்ணாக, தாயாக மாறிய தருணத்தில் தாய்மை ஒளிர்ந்தது. அதே வேளை, தனது தோழியை ஒரு காட்சிப் பொருளாக, தட்டில் வைக்கப்பட்ட தலையாக பார்க்க விரும்பாமல் நழுவியதில் நட்பின் மரியாதையை கிமுரா அழகாக வெளிக்காட்டினார். ரா. செந்தில்குமார் சாருக்கு நன்றி.
அருமை. தாய்மையும், நட்பும் இணையும் இடங்கள் அபாரம்.