ஆங்கில ‘U’ எழுத்தை தலைகீழாக நிறுத்திவைத்தது போலிருந்தது அந்தக் கோவில். சிறு மாடம் போன்ற அமைப்பு. மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருந்தது.
அதன் நடுமையத்தில் அருவாச்சாமி பளபளப்போடு குத்தி நின்றிருந்தது. மூக்கில் எலுமிச்சம் பழம் அழுத்தி செருகப்பட்டிருந்தது. நடுமையத்தில் விபூதிப்பட்டை, அதன் நடுவில் குங்கும தீற்றல்.
வளைவான தலைப்பகுதியில் ஒருமுழ கதம்ப மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கீழே ஒரு சூட தட்டு. சூடம் எரிந்த இடம் கறுப்பேறிக்கிடக்க, ஓரத்தில் விபூதி அரைவெள்ளையில் சிதறிக்கிடந்தது.
கோவில் வாசலில் அலமேலு தண்ணீர் தெளித்து கன்னாபின்னாவென்று இழைகள் இழுத்து கோலமிட்டிருந்தாள். கோவிலைக்கடந்து செல்லும் எவரும் ஒருநிமிடம் நின்று கும்பிடாமல் போகமாட்டார்கள்.
அடி நசுங்கிய பித்தளை குட உண்டியல் நிறமிழந்து சில்லறைக்காகக் காத்து கிடந்தது. எப்போதாவது வரும் சில்லறைகள் அதன் வயிற்றை நிரப்பப் படாத பாடுபட்டன.
மைலாப்பூர் சாயிபாபா கோவிலை அடுத்த சந்தில் வரிசையாக பத்து, பதினைந்து குடிசை வீடுகள். கடந்து செல்லும் வாகனப்புழுதியில் குடிசைகளின் சுவர்கள் கெட்டிப்பட்டு ஸ்திரமாகியிருந்தன.
அடிக்கடி மேலே விரையும் விமானங்களைக் காக்கைகள் பறப்பதுபோல் சட்டை செய்வதில்லை அந்தக் குடிசை ஜனங்கள். கதவு எண் 5/53ஏ யிலிருந்து ஜெகா வெளியே வந்தான். அப்போதுதான் குளித்திருந்தான். காவி வேஷ்டியும், மார்பில் பட்டை திருநீறும் அணிந்திருந்தான்.
நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு, வெற்றிலை மென்று கரையேறிய பற்கள் ஜெகாவுக்கு ஒரு அடையாளத்தைத் தந்திருந்தன. யாரும் அவனை பெயர் சொல்லி அழைப்பதில்லை. சாமி என்று பயபக்தியோடுதான் விளிப்பர்.
ஜெகா அந்த சிறிய சாலையில் நடந்து சந்தின் மறுகோடிக்கு வந்தான். அலமேலு கொடுத்த நீர்டீ குடித்து வாயெல்லாம் கசந்தது. பால் கால், தண்ணீர் முக்கால் விகித நீர்டீயில் சர்க்கரைக்கு எப்போதுமே பஞ்சம்தான்.
“ஒம்மாமனா சக்கர ஆல வச்சிருக்கான். ரேசன்ல போடுற சக்கர பத்து நாளைக்கி காண மாட்டேங்குது. பெருசா பேசுறியே…” என்று அலுத்து கொள்பவள்,
“மாசத்துக்கு முப்பது நாளுன்னு யாருய்யா வகுத்தது… பாஞ்சு நாளுன்னு வச்சிருக்ககூடாது” என்று எப்போதாவது தத்துவம் பேசுவாள்.
ஜெகா சந்தின் வலது கோடியிலிருந்த அருவாச்சாமி கோவிலுக்கு வந்தான். தட்டில் யாரோ இரண்டு வாழைக்காய்களை வைத்துவிட்டு சென்றிருந்தனர். இரண்டும் கச்சைக்காயாய் இருந்தது. பழுக்குமா என்பது சந்தேகமே.
இரண்டையும் தரையில் வைத்து மேலே இரு ஊதுபத்திகளை செருகிவிட்டான். இரண்டும் கொள்ளித்தலைகளோடு வளைவு கோடுகளாய் புகையை கசியவிட்டன. காற்றில் சந்தன வாசத்தின் கலப்பு சுவாசிக்க சுகமாகத்தானிருந்தது.
‘நிஜ சந்தனமோ, வேதிப்பொருட்களின் கூட்டோ… யார் கண்டது. எப்படியிருந்தாலும் கூவத்தின் வீச்சத்துக்கு இது இதம்தான்’ என்று ஜெகாவுக்குத் தோன்றிற்று.
ஜெகா தோளில் கிடந்த துண்டை உருவித் தரையை தூசு தட்டி அமர்ந்தான். கோவிலையொட்டிய சிறிய சிமெண்ட் திட்டு அவன் அமருமிடம். அங்கே அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதும். சாமி கும்பிட வருபவர்களுக்கு சூடத்தைக் காட்டி, விபூதி வழங்குவதும், தட்டில் விழும் சில்லறைகளை எண்ணி இடுப்பில் முடிவதும் அவனுடைய வேலை.
அவனுடைய அப்பா வீராச்சாமி பார்த்த வேலையைக் கடந்த பத்து வருடங்களாக அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
வீராச்சாமி சொந்த ஊரில் பிழைக்க வழி தெரியாமல் சென்னை வந்தவர். ஆரம்பத்தில் ஏதேதோ செய்து வயிற்றுப்பாட்டை பார்த்து வந்தவருக்கு திடீரென்று உதித்த யோசனைதான் இந்த அருவாச்சாமி கோவில். அதற்கு அவர் மிகப்பெரிய வியாக்கியானம் வைப்பார்.
“எங்கூரு கருப்பு எங்கனவுல வந்து, நான் உங்கூட்டு அருவாள்ல வந்து எறங்கியிருக்கேன்டா, மொறப்படி எனக்கு கோயிலக் கட்டி பூச பண்ணு, நான் இந்த ஊரக்காப்பாத்துறேன்னு சொல்லுச்சி. சரின்னு என் வசதிக்கு தகுந்தாப்ல கோயிலக் கட்டிப்புட்டேன்” என்று போவோர், வருவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்.
பொதுவழியில் ஒரு சிறு ஆக்ரமிப்புதான் அந்தக்கோவில். கோவிலை பொது வழியில் கட்டியதற்காக யாரும் சண்டைக்கு வரவில்லை. போலீஸ் கூட தொப்பி கழற்றி நின்று கும்பிட்டதே தவிர கேள்வி கேட்கவில்லை.
கருப்பு என்றால் எல்லோருக்கும் பயம். அரிவாளில் கருப்பு இறங்கியிருப்பதாக ஒருமுறை வீராச்சாமி சாமியாடியபடியே கூற, எல்லோருக்கும் அதன்மேல் ஒரு பக்தி. அந்தவழியாக போகும்போது கும்பிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு, தட்டிலோ, உண்டியலிலோ சில்லறைகளை போட்டுவிட்டு செல்வார்கள்.
வீராச்சாமி விபூதியை அள்ளி அவர்கள் நெற்றியில் அனாயாசமாக பட்டை இழுத்து விடுவார்.
“நீ போற காரியம் சித்தியடையும். கருப்பு சொல்லிருச்சி. தைரியமா போ….” என்ற வார்த்தைகளையும் சொல்லத் தவறமாட்டார். சிலருக்கு அதுவே பெரிய பலம். காரண,காரியமின்றி செல்லும் ஒரு சிலருக்கு வீராச்சாமியின் வாக்கு சந்தேகத்தைக் கிளப்பும்.
கருப்புக்கு பயந்துபோய் கம்மென்று செல்வர். ஜெகாவும் ஒருவேலையையும் விட்டு வைக்கவில்லை. பத்தாவது பெயிலானவன் மூட்டை தூக்கி, வாடகை ஆட்டோ ஓட்டி, கூரியர் சர்வீஸில் பார்சல் சுமந்து, மளிகைக்கடையில் பொட்டலம் கட்டி ஏதேதோ செய்துவிட்டான். களவு மட்டும்தான் கற்று மறக்கவில்லை.
திருமணமாகும்வரை வந்த காசை வைத்து அபிராமி மாலில் சினிமா பார்த்து, குப்பண்ணாவில் பிரியாணி தின்று ஓரளவு உல்லாசமாகத்தானிருந்தான். அலமேலு வந்து, உடனேயே நண்டு, சிண்டாய் இரண்டு பிள்ளைகளும் பிறந்தபிறகு தடுமாற்றம் உண்டானது.
சம்பாதிக்கும் காசு போதவில்லை. ஆனால் வீராச்சாமியிடம் தட்டுப்பாடின்றிச் சில்லறை புழங்கியது. எல்லாம் அருவாச்சாமியின் அருள்.
“பொண்ணுக்கு கலியாணம் வச்சிருக்கேன். மொத பத்திரிகை சாமிக்குதான்” என்று தட்டில் பத்திரிகை வைத்து நூறு ரூபாய் நோட்டையும் அதன்மேல் வைத்து வீராச்சாமியிடம் கொடுத்து கோவிலின்முன் நமஸ்கரிப்பார்கள்.
“புள்ளக்கி கலியாணமாம். ஒனக்குதான் மொத பத்திரிகை வச்சிருக்காரு. நீ கலியாணத்த நல்லபடியா நடத்தி குடு. புள்ள சந்தோசமா வாழணுமுன்னு ஆசீர்வாதம் பண்ணு” என்று வீராச்சாமி தட்டை கையில் வைத்தபடியே சக நண்பனிடம் பேசுவதுபோல் அருவாச்சாமியிடம் பேசுவார். சாமி கும்பிட வந்தவருக்கு மேனி சிலிர்க்கும்.
“கருப்பு ஒங்ககிட்ட பேசுமா சாமி…?” என்று ஒருமுறை ஒருவர் கேட்டபோது வீராச்சாமி சுவாதீனமாய் தலையசைத்துவிட்டுச் சொன்னார்.
“பொழுதுக்கும் நானும், அதுவுந்தான் பேசிக்கிட்டு கெடக்கோம். பொழுது போவணுமில்ல…”
“கருப்பு எங்ககிட்ட பேசுமா சாமி?” கூட வந்திருந்தவன் குத்தலாகக் கேட்டான்.
“அது… அது எப்புடி பேசும்… ஒரு தீட்டு, தொடக்கு ஆவாது அதுக்கு. சுத்த, பத்தமா இருக்கணும். மனசாலயும், ஒடம்பாலயும் சுத்தமாயிருக்கணும் தம்பி. வெளையாட்டுல்ல இது. ஒன்னால முடியுமா… ஆனா நான் அப்புடித்தான் இருக்கேன். அதனாலதான் அதும்பக்கத்துல நின்னு பேசிக்கிட்டிருக்கேன். என்னா கேள்வி கேட்டுப்புட்ட…”
” மன்னிச்சிக்குங்க சாமி. சின்னப்பய, தெரியாம பேசிப்புட்டான். மனசுல வச்சிக்காதீங்க….”
வந்திருந்தவர் அந்த குசும்புக்காரனை இழுத்துக் கொண்டு நகர்ந்தபிறகே வீராச்சாமி நிம்மதி பெருமூச்சு விட்டார்.
வீராச்சாமி இருந்தவரை கோவிலில் வரும்படி நன்றாகவே இருந்தது. அவர் உடம்பு முடியாமல் படுத்துக் கொண்டபிறகு ஜெகா கோவில் பொறுப்பை கையிலெடுத்துக் கொண்டான். ஆரம்பத்தில் அவனுக்கும் நல்ல வரும்படிதான். உட்கார்ந்த இடத்திலேயே நாலு காசு பார்க்க முடிந்ததில் அவனுக்கு ஏக சந்தோஷம். நாள் முழுக்க உழைத்தும் கிடைக்காத வருமானம் ஒரு வேலையும் செய்யாமல் பத்து தடவை சூடம் சுற்றியதில் கிடைத்தது.
தட்டிலும், உண்டியலிலுமாக விழுந்த காசுகள் அவனுடைய இல்லறத்தேவைகளை தாராளமாய் பூர்த்தி செய்தன. அப்படி செழிப்பாய் இருந்த வேளையில்தான் சாமிக்கு பேர் வைக்க வேண்டுமென்கிற எண்ணம் அவனுள் உருவானது.
அதற்குமுன் வரை அது வெறும் சாமிதான்.அருவாச்சாமி என்கிற பெயரை தேர்ந்தெடுக்க அவன் அதிகம் சிரமப்படவில்லை. அரிவாளில் சாமி இறங்கியிருக்கிறது. அப்படித்தானே வீராச்சாமி சொல்லி வைத்திருக்கிறார். அதனால் அது அருவாச்சாமி.
“இம்புட்டு நாளும் எனக்கே தோணாத யோசன ஒனக்கு தோணியிருக்கு. நல்ல விசயந்தான். நம்ம காளிகிட்ட சொன்னா வந்து எளுதி வச்சிட்டு போயிருவான். அஞ்சோ, பத்தோ குடுத்துரலாம். நாளைக்கி மொத வேலையா அவன வரச்சொல்லு.”
படுக்கையில் கிடந்த வீராச்சாமி சொல்லவும் ஜெகா ஏகமனதாய் தலையசைத்தான்.பின், ” நாளைக்கி நெறஞ்ச அமாவாச. நாளைக்கே அவன வரச் சொல்லிடுறேன் ” என்றான்.
பெயிண்டர் காளி மறுநாளே பெயிண்ட் டின், பிரஷ் சகிதம் வந்து சேர்ந்தான்.
“ரத்த செவப்புல பேர எளுதிடுறன்பா. கறுப்புன்னா பயம், ரத்தம்னாலும் பயந்தான். சரியா…?” கேட்டான்.
” என்னவோ செய்யி… ஆனா பேரு பளிச்சின்னு தெரியணும். அம்புட்டுதான்.”
“செஞ்சிரலாம். நீ பேசுனபடி நூறு ரூவா குடுத்துடணும்.”
காளி பீடியை பற்றவைத்துகொண்டு குத்துகாலிட்டு அமர்ந்து வேலையில் மும்முரமாக இருந்தார். ஜெகாவுக்கு தூக்கம் வந்தது. ஒரு டீ அடித்தால் தேவலாமென்று தோன்ற, “இதோ வந்துடுறன்…” என்றபடி எழுந்து தெருமுனை டீக்கடை நோக்கி நடந்தான். அவன் எழுதித்தந்த துண்டு சீட்டை தரையில் வைத்துப் பார்த்து, அருவாச்சா வரை எழுதிவிட்ட காளி திடீரென்று ‘மா…’ என்று வெகு அருகாமையில் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டுப்போனான்.
கறுத்த எருமைமாடு ஒன்று பெரிதாய் கத்திவிட்டு தட்… என்று கோவிலின்முன் வட்டமாய் சாணமிட்டுவிட்டு அசட்டையாய் நகர்ந்து போனது. குறைந்தது ஆறு வரட்டிகளாவது தட்டிவிடலாம். அவ்வளவு சாணம்.
பார்த்ததும் காளிக்குக் கைகள் பரபரத்தன. அவன் மனைவி பழவந்தாங்கலில் வீட்டின் பின்பக்க சுவற்றில் வட்ட வட்டமாய் வரட்டி தட்டி காய வைத்திருப்பாள். எலக்ட்ரிக் ட்ரெயினில் செல்பவர்கள் அதை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி செல்வார்கள்.
ஒரு வரட்டி ஆறு ரூபாய். வரட்டியை வாங்குவதற்காக டிப்- டாப் ஆசாமிகள் வருவார்கள். பேரம் பேசாமல் வாங்கிக்கொண்டு போவார்கள்.
காளி, சாணியைப் பார்த்தான். ஒரு பிளாஸ்டிக் கவர் கிடைத்தால் அதை அள்ளிக்கொண்டு போய்விடலாம் என்று தோன்றியது. அதே யோசனையுடன் அருவாச்சா….க்கு பக்கத்தில் ‘ ணி’ போட்டான்.
டீ குடித்துவிட்டு காளிக்கும் ஒன்று வாங்கிக்கொண்டு வந்த ஜெகா கோவிலருகே வந்ததும் அப்படியே நின்றுவிட்டான்.
“இன்னாபா… அசந்துட்டியா… இதெல்லாம் எனக்கு சகஜம்பா… என் கையெளுத்து நல்லாயிருக்கும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லிக்கினே இருக்கும். அதவச்சே பொளச்சிக்குவேன்னு எங்க நைனா சொல்லுவாரு. அது உண்மையாயிடுச்சி பாத்தியா…” காளி சலசலத்தான்.
” நிறுத்துடா….மொதல்ல நீ என்னா எளுதியிருக்கேன்னு படிச்சி பாரு.” ஜெகா கோபத்தோடு காட்ட, பார்த்தவன் அலறிவிட்டான்.
“அ…ரு…வா…ச்…சா…ணி….ஐயய்யோ… சாரிபா… தப்பா எளுதிட்டேன்.”
அவசரமாய் பிரஷ் எடுத்து ‘ணி’ யை அழித்துவிட்டு ‘மி’ போட்டான்.
” கருப்புக்கு எம்மேல கோவம் வந்துருக்குமாபா…?” பயத்தோடு கேட்டான். அவன் முகம் வெளிறிப்போயிருந்தது.
” தெரியாம செஞ்சதுக்கெல்லாம் கருப்பு கோவப்படாது. இருந்தாலும் பத்து ரூவா உண்டியல்ல போட்டுடு. பரிகாரம் மாதிரி ஆயிரும்.”
” சரிபா…” என்றவன் பிரஷை கீழே வைத்துவிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டான்.
பிடி விபூதி அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டான். கருப்பு என்றால் எல்லோருக்கும் அப்படியொரு பயம். ஆனால் வர, வர கோவிலுக்கு வரும் கூட்டம் குறைந்துபோனது. அதே ஏரியாவில் செல்லாண்டியம்மன், விருபாச்சியம்மன், வரசித்தி பிள்ளையார், மாப்பிள்ளை விநாயகர் என்று ஏகப்பட்ட சாமிக்கள் முளைத்ததுதான் காரணம்.
“பேசாம கோயில இழுத்து மூடிட்டு வேலைக்கிப் போற வழியப் பாருய்யா. எத்தினிநாளுதான் அரவயிறும், காவயிறுமா கெடக்குறது…” என்று அலமேலு நச்சரிக்க ஆரம்பித்தாள். ஜெகா அசைந்து கொடுக்கவில்லை.
பல வருடங்களாக உட்கார்ந்தே பழகிவிட்டவனுக்கு உடம்பு வளைந்து வேலை செய்ய பயம்.
“இனிமே என்னால வேலைக்கெல்லாம் போவமுடியாது. கோயில்ல என்னா வருமானம் வருதோ அதவச்சிதான் குடும்பத்த நடத்தணும். இஸ்டம்னா இரு. இல்லீன்னா ஒங்கப்பன் வூட்டுக்கு மூட்டைய கட்டு” என்றான் அழுத்தமாக. அலமேலுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
“சொல்றத கேளுய்யா. ரெண்டு புள்ள பெத்து வச்சிருக்கோம். நாளைக்கி அதுங்களுக்கு ஒரு நல்லது செய்யணும்னா நாலு காசு வேணாமா…இந்தக் கோயிலே கதின்னு கெடந்தா காசு எங்கேயிருந்து வரும்?” கோபத்தை அடக்கி தணிவாகக் கேட்டாள்.
“வரும்படி வந்தப்ப கருப்பு, கருப்புன்னு உருகுன நீ இன்னிக்கி அத எடுத்தெறிஞ்சு பேசுற. நல்லாயிருக்குடி ஒன் நியாயம்.”
” இதுலேருந்தே ஒனக்குப் புரியலியா… காசு இருந்தாத்தான் சாமிக்கே மதிப்பு. இல்லீன்னா அது வெறும் உலோகம்தான். நான் சொல்றத கேளு. பேசாம ஊரப்பாக்க போயிரலாம். அங்க போனா ஏதாவது ஒரு வேல செஞ்சி பொளச்சிக்கலாம். இம்மாம் பெரிய பட்டணத்துல குந்தி திங்க முடியுமா சொல்லு.”
அலமேலு இறங்கிவந்து இறைஞ்ச, ஜெகா அழுத்தமாய் தலையசைத்தான்.
“இருவது வருசமா இந்தூர்ல இருந்து பளகிட்டேன். இனிமே என்னால எங்கியும் போவமுடியாது. அத மாதிரி வேலைக்கி போவறதும் நடக்காத காரியம். தொண, தொணன்னு பேசாம அந்தாண்ட போ.”
ஜெகா எரிந்து விழ, அலமேலு ஆற்றாமையுடன் நகர்ந்தாள். ஜெகாவுக்கு சென்னையென்றால் உயிர். சென்னையின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கெல்லாம் அவனுக்கு அத்துபடி. இருபது வருட சென்னை வாசத்தில் அவனுக்கு பிடிபடாதது இவ்வூர் பேச்சு வழக்கு மட்டுமே.
“நான் இருவது வருசமா மெட்ராஸ்காரனாயிருந்தும் இந்த பாசை மட்டும் பேசவரமாட்டேங்குது” என்பான் அடிக்கடி.
இண்டிகா காரில் திணித்துக்கொண்டு வந்திருந்த அந்த ஏழு பேரும் கோவில்முன் உதிர்ந்தனர். ஜெகா பார்த்துக் கொண்டிருக்கும்போதே துரிதகதியில் கட்டைப்பைகளிலிருந்து தேங்காய், பூ, பழம் இத்தியாதிகளை அள்ளி, கொண்டு வந்திருந்த தட்டுகளில் நிரப்பினர்.
“நாங்க செங்குன்றத்துலேருந்து வர்றோம். போனவருசம் கருப்பு சாமி கோவிலுக்கு வந்து பூச செஞ்சிட்டு போனநேரம் எங்க பொண்ணுக்கு கொழந்த உண்டாயிருச்சி. பத்து வருசமா ஒரு புள்ளைக்காக தவங்கெடந்து கருப்புசாமி கண்ணத் தொறந்து பாத்ததுமே அது நெறவேறிடுச்சி. போனமாசம் வெள்ளிக்கெழம , மக நச்சத்திரத்துல பொம்பளப்புள்ள பொறந்துச்சி. சொகப்பிரசவந்தான். அதான் சாமிக்கு நன்றி செலுத்திட்டு போவலாமுன்னு வந்தோம்.”
அந்த கனத்த சரீர பெண்மணி மூச்சிரைத்தபடியே கூறி முடித்தாள். ஆளுக்கொரு தட்டெடுத்து சாமி முன் வைத்தனர். ஒரு பெரிய எவர்சில்வர் தூக்கை ஒருவர் பவ்யமாக ஜெகாவிடம் கொடுத்தார்.
” இதுல பொங்கலு இருக்கு. சாமிக்கு படைச்சிருங்க.”
ஜெகாவுக்கு உள்ளூர ஏக குஷி. அதை வெளிக்காட்டாது தூக்கை வாங்கி கீழே வைத்தான். அடுத்த அரைமணிநேரமும் அந்த இடமே ஏக அமர்க்களமாயிருந்தது.
சாமிக்கு பூஜை செய்து, வீராச்சாமி சொல்லிக்கொடுத்திருந்த சில மந்திரங்களை வந்திருந்தவர்கள் காதுபட உரக்கச் சொல்லி, நைவேத்தியம் முடித்து, அர்ச்சனை செய்து, கற்பூரம் காட்டி, மணியடித்து நிமிர்ந்த ஜெகா சாமி வந்தவன்போல் பற்களைக் கடித்து, கண்களை இறுக மூடியபடியே விபூதியை அள்ளி, அள்ளி எல்லோருடைய கையிலும் போட்டான். உடம்பு மெலிதாய் நடுங்கிக்கொண்டேயிருந்தது.
” பூசாரி மேல சாமி வந்து எறங்கியிருக்கு. அதான் இப்புடி இறுக்கமா இருக்காரு.” ஒருவன் இன்னொருவன் காதில் கிசுகிசுத்தது ஜெகாவுக்கு கேட்டது. உடன் குதிகால்களை உயர்த்தி, உடம்பை முறுக்கி, தலையை இடவலமாக அசைத்து அதை ஊர்ஜிதப்படுத்தினான்.
இதெல்லாம் அவனுக்கு கைவந்த கலை. பத்து வருடத்தில் இதுகூட செய்ய வரவில்லையென்றால் அவன் என்ன பெரிய பூசாரி. இரு நிமிடங்களுக்குப் பிறகு மெல்ல அவன் நிதானம் வந்தவன்போல் கண்விழிக்க, வந்திருந்தவர்கள் பயபக்தியுடன் கரம்கூப்பி நின்றிருந்தனர்.
“அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்.” ஒரு பெரிசு வாய் பொத்தி சொன்னது.
“சந்தோசமா போயிட்டு வாங்க. உங்க காணிக்கைய கருப்பு ஏத்துகிடுச்சி. அதுக்கு அறிகுறியா அஞ்சு நிமிசம் எம்மேல அது எறங்கியிருந்தத நீங்க பாத்திருப்பீங்களே…..”
“பாத்து புல்லரிச்சி போயிட்டோம். இதுதான் எங்களுக்கு வேணும்” என்றவன் தட்டில் ஐம்பது ரூபாய்த்தாளை வைக்க, ஒவ்வொருவராய் ஐம்பதும், நூறும் வைத்துவிட்டு அகன்றனர்.
அலமேலுவை வரவழைத்த ஜெகா பெருமையாய் எல்லாம் காண்பித்தான்.
“இந்த தூக்குல பொங்கலு இருக்கு. மத்தியான சாப்பாட்டுக்காவும். தூக்கு ஒனக்குதான். வச்சிக்க சொல்லி குடுத்துட்டு போயிட்டாங்க……” என்ற ஜெகா ரூபாய் நோட்டுக்களை அவளெதிரே நீட்டினான்.
“இதுல ஆயிரம் ரூவா இருக்கு. இந்த மாச செலவுக்காச்சி. வேலைக்கி போவச் சொல்லி உசிரெடுத்தியே. நிமிசமா ஆயிரம் ரூவா சம்பாரிச்சிட்டேன் பாத்தியா…”
பெருமையடித்துக் கொண்டான். அலமேலு அவனையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள். திடீரென்று சிறு, சிறு தூறலாக ஆரம்பித்த மழை அடுத்த அரைமணிநேரத்தில் கனத்து பொழியத் தொடங்கியது.
இப்போது விடும், அப்போது விடும் என்று எதிர்பார்த்து ஆங்காங்கே ஒதுங்கியிருந்த ஜனங்கள் நம்பிக்கையை கைவிட்டு சாலையில் ஆறுபோல் ஓடிக்கொண்டிருந்த நீரில் நனைந்தபடி பயணிக்க தொடங்கினர்.
நண்பன் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ள நொளம்பூர் சென்றிருந்த ஜெகாவை அலமேலு அலைபேசியில் அழைத்து விபரம் சொன்னாள்.
“பேய்மழ அடிக்கிது. தெருவெல்லாம் மொழங்கா முட்டும் தண்ணி ஓடுது. நானும், புள்ளைங்களும் வூட்டவுட்டு வெளில வரல. கதவ சாத்திக்கிட்டு உள்ளயே அடஞ்சி கெடக்கோம். நீ பேசாம ராத்தங்கிட்டு நாளைக்கி காலையில வா…”
பதட்டமாய் சொல்ல, ஜெகா சரி என்றான். மறுநாள் விடியற்காலையிலேயே கிளம்பிவிட்டவன் இரண்டு பேருந்து மாறி மைலாப்பூர் வந்து சேர்ந்தபோது பொழுது லேசாய் புலர்ந்திருந்தது. மழை பெய்ததற்கு அடையாளமாக சாலைகள் மினுமினுத்து நீண்டு கிடந்தன. ஓரங்களில் சிறு, சிறு வட்டங்களாய் தண்ணீர் தேங்கல்கள். தேங்கிய தண்ணீர் இருட்டை பூசிக்கொண்டது போல் கறுத்து கிடந்தது.
காலை நேரத்திற்கே உரிய மெல்லிய இரைச்சலோடு ஊர் மந்தமான பரபரப்பிலிருக்க, ஜெகா சந்துக்குள் நுழைந்தான். பத்தடி நடந்து கோவிலருகே வந்தவன் திடுமென அதிர்ந்தான்.
கோவில் இடிந்து கிடந்தது. எப்போதும் உள்ளே தொங்கிக்கொண்டிருக்கும் விளக்கு அறுந்து கீழே விழுந்துகிடந்தது. அருவாச்சாமியையும் காணவில்லை.
” கடவுளே…..சாமிய காணலியே….நான் என்னா பண்ணுவேன்.”
ஜெகா தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். சத்தம் கேட்டு குடிசைக்குள், ஆழ்ந்த நித்திரையிலிருந்த ஜனம் பதறியடித்து எழுந்தோடி வந்தது.
” இந்த அநியாயத்த பாத்தீங்களா…”அவன் கோவிலை கைக்காட்ட, பார்த்த ஜனம் பதறியது.
” அடக்கடவுளே! இதென்ன கொடும…”
“கோவிலு இடிஞ்சி கெடக்கே… ராத்திரி கனமழ பேஞ்சதுல பழைய கட்டடம்
பெலமில்லாம இடிஞ்சிருச்சி போல…”
” உள்ள சாமியக்காணுமே. செல கடத்துறவன் எவனாவது கடத்திட்டு போயிருப்பானோ…”
“அதெல்லாம் கருப்புகிட்ட நடக்காது. திருடுனவன் ரத்த வாந்தி கக்கி சாவப்போறது நிச்சியம்.”
ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள். ஜெகா அப்படியே அமர்ந்து அழுது கொண்டேயிருந்தான். ஒருவன் அவன் தோள்தட்டி சமாதானம் செய்தான்.
“சரியா பூச செய்யலீன்னா சாமிக்கு கோவம் வந்து இருந்த எடத்துக்கே போயிரும். இப்புடித்தான் எங்கூர்லேயும் ஆச்சி…” என்று அந்த வழியே போன பால்பாக்கெட்காரன் புதிதாய் ஒன்றைச் சொன்னான்.
” மனச வுட்ராத ஜெகா. தைரியமா இரு. தெரியாம தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிருன்னு கருப்புகிட்ட மானசீகமா மன்னிப்பு கேளு.”
சாமி என்று பவ்யமாய் கூப்பிட்டது போக ஜெகா என்று உரிமையாய் அழைத்தார்கள். ஜெகா குலுங்கி, குலுங்கி அழுதான்.
வீட்டு வாசலிலிருந்து அலமேலு சகலமும் பார்த்து கொண்டிருந்தாள். மெல்லப் பார்வை விலகி கூவத்தருகே சென்றது.
ஆக அலமேலுதான் அருவா சாமி.