நமது புராணங்களில் வரும் உருவகங்கள், படிமங்கள், எப்போதும் நம்மை நிலைக்குலையவும், நிலைபெறவும் செய்பவை. அன்றாட செயல்பாடுகளினூடாக, இன்றும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ளவை. நம் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும், காலண்டரிலும், வீதிகளின் விளம்பரங்களிலும், மக்கள் நாவில் எழுந்து வந்து செல்லும், வார்த்தைகள் ஊடாகவும் என எண்ணிலடங்கா உருவக வெளி அது.
அப்படி ஒரு திகைப்பையும், நிறைவையும் தரும் இரண்டு முரண் கொண்ட சித்திரங்கள் எனில் – ஒன்று, ஆயிரங்கோடி கரங்களுடன், எண்ணற்ற நாவுகளுடன், திகைத்தும், வெறித்தும் நோக்கும் விழிகளுடன், பிரபஞ்சம் அனைத்தையும், உண்டுவிட திறந்த வாய்களுடன், உயிருள்ள, உயிரற்ற, பொருட்கள் அனைத்தையும், தன் உடலில் ஒட்டிக்கொட்டிருக்கும் ஒட்டுண்ணிகள் என, விராட ரூபனாக “இதோ பிரளயம் ஏற்படுத்த போகிறேன்” என்கிற தோரணையில் நிற்கும், விஷ்வ ரூப தரிசனம்
மற்றொன்று, எந்த ஆர்ப்பாட்டமும், அசூயையும் அற்ற, தூய, மழலை வடிவில் ஆழிலையில் தவழும், ஆனந்தத்தின் வடிவான அதே விஷ்ணு.
சமீபத்தில் வாசித்த ‘பேய்ச்சி’ நாவல் அதுபோல ஒரு திகைப்பையும், வியப்பையும் அளித்தது.
புலம்பெயரும் அத்தனை மனிதர்களும், தங்களுடன் அவர்களின் மொழியையும், தெய்வங்களையும், மட்டுமே கொண்டு செல்கின்றனர், சென்ற இடத்தில், மொழிகள் இலைகள், கிளைகள் என தழைக்க, தெய்வங்களோ வேர்கள் என காத்து நிற்கின்றன.
இதில் நாம் கைவிட்ட தெய்வம் , நம்மை கைவிட்ட தெய்வம் என்கிற இருமுனை கூர்வேலின் ஆட்டம் தான் ‘பேய்ச்சி’
கொப்பேரன் மாந்தரீகமும் மருத்துவமும் தெரிந்த, ஊர் தலைவருக்கு நிகரான மனிதர், பேச்சியம்மனை தன் தெய்வமென கொண்டவர், அவர் வாழ்வில், தான் ஒரு அனாதை என்கிற வடிவில் வருகிறாள் காத்தாயி.
ஊருக்கே மருத்துவம் பார்க்கும் கொப்பேரனுக்கு, ஐந்து குழந்தைகள் பிறந்ததும், பதினாறாவது நாளில் இறந்து விடுவது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
இது பரம்பரை சாபம் எனவும் அநாதை வடிவில் வந்தவள் அந்த ‘பேய்ச்சியே’ என்றும், அவருக்கு தோன்ற, பிறந்த ஆண் மகவை தூக்கிக்கொண்டு, காத்தாயிக்கு தெரியாமல் ஊரை விட்டு மலேய தோட்ட காடுகளுக்கு, வந்து சேர்கிறார்.
இப்படி தொடங்கும் நாவல், முன்னும், பின்னுமாக இரண்டு தலைமுறை வாழ்வை, சொல்லியபடி தொடர்கிறது. பேச்சியம்மன் போன்ற இந்த மண்ணின் தெய்வங்களை, வேறு நிலத்தில் காலூன்ற வைக்க எளிய மனிதர்களின் நம்பிக்கையும் சடங்குகளும் மட்டுமே கருவிகள் என்பதால், பேச்சிகள் சில நேரங்களில், பேய்ச்சிகளாக உருமாறி, எளிய மக்களை மிரட்டி, நோய்கள் தந்து, பயம் காட்டி, படையல்கள் பெற்று, தங்களை அங்கே நிறுவிக்கொள்கின்றன.
காவு கொண்டபின் அதே தெய்வம் கனிந்து, மகிழ்ந்து, செல்வங்களை தந்து தலைமுறைகளை காக்கிறது.
இந்த ஆட்டத்தை நவீன் மிக கவனமாகவும், கச்சிதமாகவும் கையாண்டிருப்பது அவருடைய முதல் நாவல் தானா? என்கிற வியப்பை தருகிறது.
கொப்பேரனின் மகனான, அடுத்த தலைமுறை மாந்தரீக, மற்றும் மருத்துவம் தெரிந்த ராமசாமி, அந்த தோட்டத்து மக்களுக்கு, எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் மணியம்,
ஒரு போராளியாக, லட்சியவாதியாக, களசெயல்பாட்டு வீரராக என நாவல் முழுவதும் பயணிப்பவர்.
தோட்டத்து மக்களுக்கு மாதம்தோறும் திரைகட்டி சினிமா பார்க்கும் உரிமையை பெற்றுதந்ததால், தலைவர் என முன்னிற்பவர்.
பேச்சியம்மனும், மருத்துவமும் ராமசாமிக்கு அந்த தோட்டத்தில் அவருக்கு மரியாதையையும், மதிப்பையும், வழங்கியது போலவே, திரைகட்டி ஓட்டிய படங்கள், மணியத்திற்கு அதே தோட்டத்தில் பெரும் மதிப்பை, தலைமை பொறுப்பு, அல்லது கதாநாயகன் அந்தஸ்தை வழங்கியது. இந்நாவலின் மையம் ‘ஓலம்மா’ பேச்சியம்மனின் பல்வேறு வடிவங்கள் ஒவ்வொரு மாந்தரிலும் நொடிப்பொழுதில், மின்னி மறைவது போல, ஓலம்மாவில், பேய்ச்சி எழும் தருணம் நாவல் உச்சம் பெற்று நிறைகிறது.
நாவலின் மையம் ஓலம்மா எனில் அவளை தாங்கும் அச்சாணி அல்லது மொத்த நாவலை தாங்கும் அச்சாணியாக வரும் சிறுவன் ‘அப்போய்’ தான். அவனது உலகம் காடும், கற்பனையும் ஆக்கிக்கொடுத்த ஆனந்த உலகம்,
ரப்பர் தோட்டத்தை தாண்டி, காட்டிற்குள் செல்லும் அனைவரையும், பூனியான் காவு வாங்கி விடுகிறது, ’அப்போய்’ க்கு அந்த காடு ஒரு விளையாட்டு பூங்கா. நாவலில் சிறுவனின் இருப்பு நம்மை குழந்தையாக்கி, மனித அவலங்களுக்கு நடுவே, வாழ்வை சுவைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கிறது.
வரலாற்று, அறிவியல், தகவல்கள் மூலம் தொடமுடியாத, உணர்வு ரீதியால் மட்டுமே சில படைப்புகளை அணுகமுடியும், பேய்ச்சி அத்தகைய ஒன்று.
இளம் படைப்பாளியான நவீனின், எழுத்தில் இரண்டு பெரிய ஆளுமைகளின், கைரேகைகள் நாவல் முழுவதும் தென்படுகின்றன. முதலில் ஜெயமோகன் அவர்களின் ‘காடு’ நாவல் போன்ற கட்டமைப்பில் உருவாகப்பட்ட பேய்ச்சி எனும் ஆக்கம், நுண்ணிய அவதானிப்புகள், புறப்பொருட்கள் அனைத்தையும் மனித வாழ்வின் அகத்துக்கு அருகே இணைத்து வைத்து கதை சொல்லல், கதையின் உக்கிரமான பகுதிகளையோ, உறவு, பாலியல், சித்தாந்த, சிக்கல்களை சமரசம் செய்து கொள்ளாமல் முன்வைத்தல். அதுவே பல இடங்களில், ஜெயமோகனின் காடு நாவலுக்குள் வந்து விட்ட பிரமிப்பையும், சற்று தலையை உலுக்கிக்கொண்டு, மீண்டும் கேரள காட்டிலிருந்து மலேய தோட்டத்திற்கு செல்ல வேண்டிய தேவையை கோருகிறது. அவ்வகையில் நாவலின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ பகுதியில் முதல் கைரேகை ஜெயமோகனுடையது.
இரண்டாவது, மலேசிய முன்னோடியான சீ. முத்துசாமி அவர்களுடையது. ‘மலைக்காடு’ நாவலின் மையம் புலம்பெயர் வாழ்வும், அதன் அடுத்த தலைமுறைகளும். பா. சிங்காரம் அவர்களின், ‘புயலிலே ஒரு தோணி’ கவனம் பெற்ற அளவுக்கு, மலைக்காடு பேசப்படவில்லை எனினும் அதுவும் ஒரு முதன்மை படைப்பு எனலாம். அந்த கைவண்ணம் பேய்ச்சியின் சில உச்சங்களில் காண முடிகிறது.
ஆக, இரண்டு முன்னோடிகளின் தடத்தில், முதல் நாவலே ஒரு உயரத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் மலேய அல்லது தமிழின் இலக்கியதரமான நாவலாசிரியர்களின், வரிசையில் தனக்கான இடத்தை பிடித்துக்கொள்கிறார். இன்னும் வருங்காலங்களில், உன்னதமான படைப்புகளை கொடுத்து ஒரு முதல்தர நாவலாசிரியராக மிளிரும் பொழுது நமக்கு பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றும் இருக்காது, நமது நம்பிக்கை பலித்துவிட்ட மன சாந்தியும், திருப்தியும் உண்டாகும். ஆம் அவ்வாறே ஆகுக.