பிளாச்சான்

நேற்று மாலை லீ சாய் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து என் முன்னால் நின்றான். சில வாரங்களுக்குப் பின் இன்றுதான் அவனைப் பார்க்கிறேன். வழக்கமாக பெரிய கேரியர் சைக்கிளில் வருபவன் நேற்று தலைதெறிக்க ஓடி வந்திருந்தான். அந்தப் பெரிய உடம்பு மழையில் நனைந்த  பூனைக்குட்டி போல உதறிக் கொண்டிருந்தது. உயிர் பயம் அவன் உடலெங்கும் படர்ந்திருக்க வேண்டும்.  முகம் முழுதும் கிளம்பியிருந்த பருக்களின் தழும்பு அவன் முகத்தை மேலும் பயங்கரமாக காட்டியது.  சப்பை மூக்கு சிவந்து சளி ஒழுகியது. சின்ன கண்களை மேலும் இடுக்கி என்னை பரிதாபமாக பார்த்தான். என்ன ஏது என்று நான் கேட்பதற்கு முன்பே என்னைத் தள்ளிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் ஓடினான். 

என்னையும் பயம் பற்றிக் கொண்டது. நாட்டு நிலைமை சரியில்லை என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாரும் ஏதோ ஒரு பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். புதிது புதிதாக ஏதாவது அவலக் கதைகள் வந்து கொண்டிருந்தன. போலீஸ் ரோந்து அதிகரித்திருந்தது. ராணுவ வண்டிகளை சாலையில் அதிகம் பார்க்க முடிந்தது. கோலாலம்பூரில் இனக்கலவரம் ஒரு பெருந்தீயாக வெடித்து தனிந்திருந்தது. தீயின் கனகனப்பு இன்னும் அடங்கவில்லை.  நான் மாலை நேரத்தில் எண்ணை கடையில் வேலை செய்வதையும் அப்பா நிறுத்தி வைத்திருக்கிறார். மாடுகளை பார்த்துக் கொண்டு வீட்டில்தான் இருந்தேன். முன்பை விட சற்று சீக்கிரமாகவே மாடுகளை ஓட்டி வந்து தொழுவத்தில் கட்ட வேண்டியிருந்தது. 

லீ சாய்யை யாராவது துரத்திக் கொண்டு வருகிறார்களா என்று தார் சாலையையும் மண் பாதையையும்  உற்று கவனித்தேன். வீட்டில்  அம்மா தையல் மெசினை தடதடவென ஓட விட்டுக் கொண்டிருக்கும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.  தொழுவத்தில் மாடு ஒன்று கத்தியது. புதிய மனிதர்கள் யாரும் அங்கு இல்லை. 

“என்னடா சத்தம்” என்று உள்ளே இருந்து அம்மா கேட்டார்

“அந்த புது மாடுமா” என்று சொல்லிவிட்டு  வீட்டின் பின்னால் ஓடினேன்.

அங்கு பதுங்கிக் கொள்ள தோதான இடம் இருக்கும் என்று லீ சாய்க்கு தெரியும். அவன் அடிக்கடி வீட்டுக்கு வருபவன். இந்த இடத்தின் சந்து பொந்துகளை நன்றாக அறிந்திருந்தான்.  மாட்டுக் கொட்டாய் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி  தார் தோம்புகளின் இடுக்கில் லீ சாய் உட்கார்ந்திருந்தான்.  உடலை குறுக்கிக் கொண்டு பலகீனமாக இருந்தான். வெள்ளை பனியன் வேர்வையில் நனைந்து பூண்டு வாடை வீசிக் கொண்டிருந்தது.

“என்ன மூனு மலாய்காரனுங்க துரத்திட்டு வரானுங்க” என்று அரைகுறை தமிழிலும் மலாயிலும் கலவையாக கிசுகிசுத்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது. பெரும்பாலும் அவனால் கொச்சையான தமிழிலேயே பேச முடியும். இன்று பதற்றத்தில் மேலும் உளறினான்.

“கம்பத்தில் இருந்தா?” என்று  நானும் சன்னமாகவே கேட்டேன்.

‘ஆமாம்’  என்று தலை அசைத்தான். “சுலைமான் என்ன பார்த்துட்டான்”  பல்லைக் கடித்தான்.

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அதை மறைத்துக் கொண்டேன். 

“அடிச்சானுங்களா?”

“.அவனுங்க கட்டையை எடுக்கறதுக்குள்ள ஓடியாந்துட்டேன்”.

“இந்த நேரத்தில் நீ அங்கு போயிருக்கக் கூடாதே… ரொம்ப ஆபத்த்தாச்சே”

லீ சாயின் அப்பா சிமினி கடைவீதியில் ரப்பர் பால் சீட்டிகளையும் ஒட்டுப்பாலையும் மொத்தமாக வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அந்த தெருவே ஒட்டுப்பால் வாடையில் நிறைந்திருக்கும். லீ சாய் ஒட்டுப்பாலையும் ரப்பர் சீட்டியையும் வாங்க கம்பங்களுக்குள் செல்வது வழக்கம். 

“தவறுதான்… அடிபாதான் என்ன அவசரமா வரச்சொன்னா…. அப்பாவுக்கு தெரியாது……..”  அவன் பேச்சில் சலிப்பு இருந்தது.

நான் அதிர்ச்சியானேன். என் சிரிப்பு சுத்தமாக மறைந்தது.

“யார் வரச்சொன்னா?”  சத்தமாகவே கேட்டேன்

“அடிபாதான்… ஏன்?” அவன் குழப்பமாக என்னைப் பார்த்தான்.

அவன் பயம் குறைந்து சற்று தெம்பாக இருப்பதுபோல் தெரிந்தது. இருள் மெல்ல படரத்தொடங்கியிருந்தது. கொட்டாயில் இருந்த மூன்று மாடுகளும் உடலை அசைத்து எங்களை அலட்சியமாக பார்த்துக் கொண்டிருந்தன. புதிதாக அப்பா வாங்கியிருந்த கருப்பு மாடு மட்டும் நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் உடலை அசைத்துக்  கொண்டிருந்தது. நீர் வாளியை முகர்ந்து தலையை சிலுப்பிக் கொண்டது.

“உளறாதே லீ …. அடிபாவை நீ பாத்தாயா?”

“நான் அவ்வளவு நேரம் அடிபா கூடத்தான் இருந்தேன். நாங்கள் பழைய கிணத்துக்கு பக்கத்தில ஒக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். அது மறைவான இடந்தான். ஆனால் எப்படியோ  சுலைமான் அங்கு வந்துட்டான்.”

எனக்கு தூக்கிவாரி போட்டது… நான் மீண்டும் “அடிபாவை நீ பார்த்தாயா” என்று அவன் தோளை உலுக்கி கேட்டேன்.

“ஆமாம், அதில் உனக்கு என்ன பிரச்சனை…” கடுப்பாக கேட்டான்.

என்னால் அங்கு அதற்கு மேல் நிற்க முடியவில்லை. உடல் சிலிர்த்து வயிறு கலக்குவது போல் இருந்தது. யாரோ என் முதுகுக்கு பின்னால் இருந்து என்னை கூர்ந்து பார்ப்பது போல் ஒரு பிரம்மை. 

நான் லீ சாயிடம் ஒரு வார்த்தை பேசாமல் வீட்டுக்கு ஓடிவந்தேன். அவன் என்னை அழைத்த சத்தம் காதில் கேட்டது. ஆனால் திரும்பி பார்க்க மனம் வரவில்லை.

அம்மா வீட்டில் கேஸ் லைட் விளக்கை சொந்தமாக ஏற்றி, வீட்டு நடுவில் தொங்க விட்டிருந்தார். பெரும்பாலும் வேலைக்கு போகாத நாட்களில் அந்த விளக்கை ஏற்றி வைப்பது நான்தான். அதன் பம்மை அடித்து காற்று நிரம்பியதும்  ‘உஸ்ஸ்ஸ்….’ என்ற சத்தத்துடன் சருகு போன்ற அதன் திரி பிரகாசம் ஆவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். இன்று என்னை ஏவாமல் அம்மாவே அந்த வேலையைச் செய்து விட்டார்.  சாமி மேடையில் இருந்து ஊதுபத்தி வாசனை வந்து கொண்டிருந்தது. தையல் இயந்திரம் ஓரமாக இருந்த வானொலி கொர கொரப்புகளுக்கிடையே முனகிக்கொண்டிருந்தது. 

நான் அவசரமாக குளித்துவிட்டு சாமி படங்கள் முன்னால் அமர்ந்து திருநீறு பூசிக் கொண்டேன்.  எனக்கு அது மன ஆறுதலாக இருந்தது. யாருக்கும் எந்த ஆபத்தும் நேராது என்று எப்படியோ ஒரு நம்பிக்கை பிறந்தது. 

அம்மாவிடம் எதாவது கூறவேண்டும் என்று நினைத்தாலும் ஏனோ ஒரு வார்த்தையும் வராமல் போனது. லீ சாய் மாட்டு தொழுவத்தில் ஒளிந்திருப்பதை அம்மாவிடம் கூறாமலே மறைத்தேன். அம்மா இரவு சாப்பாட்டுக்கு கறியை சூடாக்கி வைத்தார். சந்தேகம் எழாமல் இருக்க, வழக்கம் போல இரண்டு தட்டு சாப்பிட்டு விட்டு தட்டை கழுவிவைத்தேன்.

அம்மாவுக்கு தெரிந்தால் பெரிய ரகளையாகும்… அவனை உடனே அங்கிருந்து போகச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்துவிடுவார்.

போன வாரம்தான் முத்து மாமா கோலாலம்பூரில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்லி அதிர்ச்சியாக்கிவிட்டுச் சென்றிருந்தார். அவர் கோலாலம்பூரில் டாக்சி ஓட்டிக் கொண்டிருந்தார்.

“அங்க இங்க போக முடியல…அவன் வீட்டுக்குள்ளையே கெடக்க வேண்டி இருக்கு… வருமானமும் கொறைஞ்சி போச்சி” என்றார்.

“ஏன் மாமா” நான் ஆர்வமாக கேட்டேன்

“எல்லா பயலும் பிசாசா மாறிட்டானுங்க டா…. தியேட்டர்லையும் ரோட்டுலயும் பேய் உலாவுது அப்பு… எல்லாம் ரத்தம் குடிக்கிற பேய்” எதோ மர்ம கதை போல சொன்னார்

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

அப்பாவும் மாமாவும் பேசிக் கொள்வதை புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

“கொமுனிஸ்காரன் திட்டம் மச்சான் இதெல்லாம்..”

“அதெல்லாம் இருக்கட்டும் மச்சான்… மனுசனுக்கு சொந்த புத்தி வேணாமா… ஆத்திரம் வந்தா கும்பலா சேர்ந்து இன்னொருத்தன கொன்னு போடுவியா..?

“ …எல்லா இனத்தானுக்கு இதுல பங்கு இருக்குள்ள…”

“மனுசனுக்கு  வெறிபுடிச்சி போச்சி… கலி காலம்.  ரத்தம் பார்க்க ஆசை வந்துடிச்சி.  கோப்பி தண்ணி கொடுக்க வந்த சின்னப் பையன கொன்னு போட்டானுங்கலாமே… பொம்பள ஆளுங்கனு கூட பாக்காம குத்தி ஆத்துல வீசிட்டானுங்களாமே… கழிசடைங்க… நம்ம பொஞ்ஜாதி புள்ளைங்கனா சும்மா இருப்பமா… அதிகாரம் கைக்கு வந்ததும் அராஜகம் பன்னனும்னு ஆசை வந்திடுச்சி பாத்தியா…”

“இதுக்குதான் வெள்ளக்காரன் நாட்ட கொடுக்க ரொம்ப யோசிச்சான் போல..”

“அதுவுஞ் சரிதான்… நீங்க எதுக்கும் ஜாக்கிரதையாவே இருங்க… கம்பங்காடுனு சுத்தாதிங்க”

மாமா சென்ற பின்னரும் அப்பா அம்மாவிடம் ஆவேசமாக பேசி கொண்டிருந்தார்.

அம்மா அந்தக் கதைகளால் அதிகமாக பயந்து போயிருந்தார். அதுவும் இது அப்பா வீட்டில் இல்லாத நேரம். ரவாங்கில் மாடு பார்க்க காலையில் சென்றவர் நாளைதான் வருவார். இரவில் நடமாட தடை இருந்தது.  அண்ணனையும் அம்மாதான் அப்பாவுடன் அனுப்பி வைத்தார். 

எனக்கு கோலாலம்பூரில் பேய்கள் உலாவுவதாக மாமா சொன்னது, இரவில் ஒரு கனவு போல  தொடர்ந்து வந்து பயமூட்டியது. ரத்தம் குடிக்கும் பேய்கள் இங்கும் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றம் ஏற்பட்டது.

அப்பா போகும்போது பல முறை சொல்லிவிட்டுதான் போனார். 

“இது ரோட்டோரம் உள்ள வீடு புள்ள…  பொழுதுபட்டு வெளியாளுங்க யார் வந்தாலும் கதவ திறக்காத… நாட்டு நெலம பழைய மாதிரி இல்ல.  அங்க நடந்தது இங்க நடக்க எவ்வளவு நேரம் ஆவும்? சிமினி என்னா வெளிநாட்டுலியா இருக்கு?”

விஷயம் தெரிந்தால் அம்மா, லீ சாய்யை எப்படியும் அங்கே இருக்க விட மாட்டார். சத்தம் போட்டு விரட்டி விடுவார். அதிலும் அவன் என்னிடம் சொன்னது போல ‘அடிபாவிடம் பேசிவிட்டு வந்தேன்’ என்று சொன்னால் என்ன நடக்கும் என்றே என்னால் யோசிக்க முடியவில்லை. அம்மா பதறிவிடமாட்டாரா?

அவனை இங்கிருந்து போகச் சொல்லவும் பாவமாக இருந்தது. வழியில்  ஏதாவது ஆகிவிடலாம் என்று கவலை வந்தது. அதைவிட கோபத்தில் அவன்  என்னைப் பற்றி அம்மாவிடம் கோள்மூட்டி விட்டால் என்ன ஆவது என்கிற பயமும் பெரிதாக இருந்தது.

அடிபா எங்கள் வீட்டுக்கு சமயங்களில் வருவாள்.  பழங்கள், கோழி முட்டை,  புளி, ஆற்று ஊடான், நெத்திலி  என  ஏதாவது பொருட்களோடு  அம்மாவிடம் ரகசியமாக ‘பிலாச்சானையும்’ விற்று விட்டு போவாள். சவர்கார கட்டி போல சருகு  நிறத்தில் இருக்கும் பிலாச்சான் கட்டிகளை வாழை இலை துண்டில் மடித்து பழைய நாளிதழில் சுற்றி அம்மா ரகசியமாக பானைக்குள் பதுக்கி வைத்துக் கொள்வார்.  ‘பிலாச்சான்’  வீட்டில் இவ்வளவு ரகசியமாக புழங்குவதற்குக் காரணம் அப்பாவுக்கு பிலாச்சான் வாடையே பிடிக்காது என்பதுதான்.

அடிபாவின் தாத்தா பிலாச்சான் தயாரிப்பதில் பிரபலமானவர். அந்தக் கிழவன் தயார் செய்யும் பிலாச்சானின் ருசி  சாதாரணமாக கடைகளில் வாங்கும் பிலாச்சானின் ருசி போல இருக்காது என்று அம்மா கண்டுபிடித்து வைத்திருந்தார். சின்னாங்குன்னியை அளவான உப்பில் ஊறவைத்து பக்குவம் கெடாமல் அந்த கிழவன் செய்யும் பிலாச்சானுக்கு ஈடு இல்லை என்று அம்மா புகழ்வார்.

அப்பா இல்லாத நேரத்தில் வெளி அடுப்பில் ஒரு துண்டு பிலாச்சானை சுட்டு புளியும் ஊசிமிளகாயும் சின்ன வெங்காயமும் சேர்த்து இடித்து சுடு சோற்றில் அம்மா சாப்பிடும் போது அண்ணனும் பங்குக்கு போய்விடுவான். ஆனால் அப்பா வீட்டுக்குள் வந்ததுமே அவர் மூக்குக்கு அந்த வாடை தெரிந்துவிடும்.  அன்று வீட்டில் ரகளைதான். “என்னா எழவெடுத்த நாத்தண்டா இது…. எப்பிடிடீ இத சப்பு கொட்டி தின்ற…. மனுச திம்பானா இத” என்று மங்கு தட்டையெல்லாம் வீசி அடிப்பார்”. அப்பா போடும் கூச்சல்களால் எனக்கும் பிலாச்சான் பிடிக்காத பண்டம் ஆகியிருந்தது.

ஆனாலும் அடிபா வீட்டுக்கு வருவதும் போவதும் எனக்கு எந்த அர்த்தமும் கொடுக்காமல்தான் இருந்தது. அவளுக்கு நான் “பிளாச்சான்” என்றே பட்டப்பேர் வைத்திருந்தேன். அவள் அழகானவளா இல்லையா என்றெல்லாம் நான் கவனிக்காமல்தான் இருந்தேன்.  இடுப்பு வரை வளர்ந்த கூந்தலை அள்ளி குதிரை வால் கட்டியிருப்பாள். முகத்தில் ‘பெடாக் செஜு’ வை அப்பியிருப்பாள். பல நிற கலவையில் கைலியும் தொலதொலப்பாக சட்டையும் போட்டுக் கொண்டு வரும் அவள் மேலும் பிலாச்சான் வாடை அடிப்பதாக நான் நினைத்துக் கொள்வேன்.

ஆனால், லீ சாய் ஒரு நாள் என் காதோரம் வந்து “அவ பேரு என்னானு தெரியுமா? செம்மையா இருக்கா” என்று ரகசியமாக விசாரித்து விட்டு போனதில் இருந்து நானும் அவளை கவனிக்கத் தொடங்கினேன்.  அவள் வீட்டுக்கு வரும் போது அம்மாவுக்கு தெரியாமல் ரகசியமாக அவளை நோட்டம் விடுவது வாடிக்கையானது. அவள் பேச்சும் நடையும் சிரிப்பும் அழகாக இருப்பதாகவே தோன்றியது.

“அவ ஒடம்ப பாத்தியா… என்னா மாதிரி இருக்கா அவ…” என்று கண்கள் கிரங்க லீ சாய், அடிபாவைப் பற்றி பேசத் தொடங்கினான்.  அவள் இறுக்கமாக கட்டியிருக்கும் கைலியில் பிதுங்கித் தெரியும் பிட்டத்தையும் வளவளவென்று இறங்கும் கழுத்து வளைவையும் காண்பதில் எங்களுக்கு அலாதி சுகம் ஏற்பட்டது.  தொலதொலப்பான சட்டையை மீறி திமிரித்தெரியும் அவள் மார்புகளை நாங்கள் வெறித்துப் பார்த்தோம். அவள் குனிவதும் நிமிர்வதும் எங்களுக்குள் புது வெள்ளம் போல புரண்டு ஓடியது.

ஒரு நாள்,  அதாவது கோலாலம்பூரில்  இருந்து மாமா வந்து பேய் கதைகள் சொன்ன சில வாரங்களுக்கு  முன்,  லீ சாய் அதிக உட்சாகத்தோடு என்னைப் பார்க்க வந்தான். கண்கள் மின்னிக் கொண்டிருந்தன.  என்னை தனியே அழைத்துக் கொண்டு போனான். “நான் அடிபா குளிக்கிறத பாத்துட்டேன்… ஈரத்துல அவள பாத்துட்டு  எனக்கு மயக்கமே வந்துடுச்சி… என்னால தாங்க முடியல…” கிரக்கத்தில் மூழ்கி வார்த்தைளை சுவைத்து சொல்லிக் கொண்டிருந்தான். 

அவன் சன்னமாக சொன்ன வார்த்தைகள் எனக்குள்ளே நுழைந்து மனசை புரட்டிப் போட்டது. தரையில் மோதிய ரப்பர் பந்து போல இருதயம் எகிறத் தொடங்கியது. உடம்பு திக்கென்று தீ பற்றி கொண்டது போல் எரிந்தது. அடிபாவின் நிர்வாண உடல் என் மனக்கண்ணில் தெரிந்தது. உடலுக்குள்ளே காளைமாடு துள்ளி ஓடுவதுபோல அலாதி கிளர்சியில் மனம் அலைபாய்ந்தது.

“எப்படி பார்த்தே… நீ அவள் வீட்டுக்கு போனியா?” நான் அபூர்வ புதையலை அடையத் துடிக்கும் ஆர்வத்தோடு கேட்டேன்.

“அவ வீட்டுக்கு வெளியதான் கிணறு இருக்கு… சுத்தி மூங்கில் தடுப்புதான்… கூரை இல்லை… நான் ரம்புத்தான் மரத்துல ஏறி அவ குளிக்கிறத பார்த்தேன்”

நான் மேலே என்ன கேட்பது என்று தயங்கி நின்றேன். லீ சாய் மிகச்சரியாக  என் எண்ணத்தைப் புரிந்துகொண்டான்.

“நாளைக்கு நீயும் வா… அவ சாயந்தரம்தான் குளிப்பா”

அவன் அப்படி அழைத்ததே எனக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது.  போக வேண்டும் என்று மனம் விரட்டியது. ஆனாலும் அது அவ்வளவு சுலபமான வேலை அல்ல என்பது எனக்குத் தெரியும். கம்பத்துக்குள் சென்று மரம் ஏறும் தைரியம் எனக்கு இல்லை. மாலை நேரத்தில் அப்பாவும் அண்ணனும் வீட்டில் இருப்பார்கள் என்பது இன்னொரு சிக்கல்.

ஆனாலும் நான் அடிபா ஆடை இல்லாமல் குளிக்கும் காட்சியை கற்பனையில் உருவாக்கி மீட்டும் மீட்டும் பார்த்துக் கொண்டேன். இரவில் வெறுமனே கண்ணை மூடி கிடந்தேன். அவள் உடலில் உருண்டோடும் நீர் துளிகள் துல்லியமாக எனக்குத் தெரிந்தன. கனவுகளில் அடிபா மிக அழகாக தோன்றினாள். மினுமினுப்பான அவள் தேகம் என் உடல்மேல் கிடந்தது.  விதவிதமான கிளர்ச்சிகளில் நான் ஆழ்ந்து போனேன். லீ சாயை விட நான் மிக அருகில் அவளை நிர்வாணமாக பார்த்து விட்டதாகவே எனக்குத் தோன்றியது.

லீ சாய் வீட்டுக்கு வரும் போதெல்லாம், அவன் அடிபாவைப் பற்றி எதாவது சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு  இருந்தது. அவனும், அவள் குளியல் அறைக்குள் வருவது முதல் ஆடை களைந்து குளித்து விட்டு வெளியே செல்வது வரை ஒவ்வொன்றாக விவரித்து என்னை கொந்தளிப்பில் ஆழ்த்தினான். 

நான் அந்த நிமிடத்துக்காகக் காத்திருந்தபோது லீ சாய் புதிய கதை ஒன்றைச் சொன்னான்.

“டேய் மச்சான்… அடிபா என்னை காதலிக்கிறாடா…” என்று என் தோளை தட்டி சொன்னான்.

எனக்கு ஏனோ பகீர் என்றது.  “எப்பிடி?” என்று அலட்சியமாக கேட்டேன்.

கட கடவென்று சிரித்துக் கொண்டான். “அதெல்லாம் பெரிய கதை மச்சான்…”  என்று சொல்லிவிட்டு மீண்டும் பெரிதாக சிரித்தான். அது ஒரு மாபெரும் வெற்றிச் சிரிப்பாக எனக்குத் தோன்றியது. அவன் இடுக்கிய கண்களில் என்னை ஏளனமாக பார்ப்பதுபோல் இருந்தது.

நான் மெளனமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். அடிபா மேல் திடீர் வெறுப்பு எழுந்தது. அவள் மேல் பிலாச்சான் நாற்றம் வீசும் என்று மெல்ல சொல்லிக் கொண்டேன்.  லீ சாயின் மீதும் இப்போது பிளாச்சான் வாடை வீசுவதுபோல உணர்ந்தேன். அதன் பிறகு லீ சாய் வீட்டுக்கு வரவில்லை… இன்றுதான் வந்திருக்கிறான்.

அப்பாவும் அண்ணனும் இன்று வீட்டில் இல்லாததால் இதற்கு மேல் யாரும்  மாட்டு கொட்டாய் பக்கம் போக மாட்டார்கள். லீ சாய் அங்கே காலைவரை ஒளிந்து  இருப்பது யாருக்கும் தெரியாது என்று முடிவுசெய்தேன். 

அவனை அங்கேயே விட்டுவிட்டு நான் படுக்கையில் விழுந்தேன். கேஸ் லைட் விளக்கை அணைத்து விட்டு மண்ணெண்ணெய் விளக்கை அம்மா ஏற்றியிருந்தார்.  அதன் கரி புகையோடு கலந்து வீட்டுக் கூரையில் படிந்து கொண்டிருந்தது.  மண்ணெண்ணெயின் மெல்லிய வாடை வீடு முழுதும் பரவியிருந்தது. வீடு கம்மிய மஞ்சள் வெளிச்சத்தில் இருளுக்குள் புதைந்து கிடந்தது.

என்னால் எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. ஏதேதோ குழப்பங்கள் மண்டை நிறைய  நிறைந்துவிட்டதுபோல் தலை கனத்தது.  லீ சாய் அடிபாவை பார்த்து பேசியதாக சொன்னது மிகப்பெரிய பொய்யாகத்தான்  இருக்க வேண்டும். எப்படி அவனால்  இவ்வளவு சாதாரணமாக அவ்வளவு பெரிய பொய்யை சொல்ல முடிந்தது என்று யோசித்த போது எரிச்சலாக இருந்தது. அப்போதே அவனை அங்கிருந்து விரட்டாமல் வீட்டுக்கு ஓடிவந்தது தவறு என்று தோன்றியது.  

எனக்கு தூக்கம் வரவில்லை. வீடு இன்று அதிக உஷ்ணமாகி விட்டதுபோல் இருந்தது. தகரக்கூரை சூட்டை முழுமையாக கீழே இறக்கிக் கொண்டிருந்தது. மனம் கட்டுப்பாடு இல்லாமல் பல சம்பவங்களில் தாவித் தாவி சென்றது.  

போன வாரம் வியாழக்கிழமை அதிகாலையில் அக்கம் பக்கத்தில் பரபரப்பு அதிகரித்திருந்தது. யாரும் எங்கும் சுற்றித் திரியமுடியாதபடி ஊரடங்கு சட்டம் இருந்தும் தகவல் கசிந்து எல்லாருக்கும் பரவியிருந்தது. கம்பத்தில் ஓடும் ஆற்றில் பெண் ஒருத்தியின் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.  எப்படியோ மாலை நேரத்துக்குள் அது அடிபாவின்  உடல்தான் என்பது  எல்லாருக்கும் தெரிந்து போனது. உடலை போலீஸ் எடுத்துச் சென்றுவிட்டதாக பேசிக் கொண்டார்கள்.

“ஐய்யோ அந்த புள்ளையா”  அம்மா அதிர்ந்து போனார்.

“கொலையாத்தான் இருக்கும்னு சொல்லிக்கிறாங்க” என்றார் அப்பா.

“எந்த பாவியோ தெரியலையே”  என்று  அம்மா வெகு நேரம் அரற்றிக் கொண்டிருந்தார்.

நான் யார் முகத்தையும் பார்க்காமல் மாட்டு தொழுவத்தில் நேரத்தை கடத்தினேன்.  எனக்கு அடிபா யாரென்றே தெரியாததுபோல பாவனை செய்து கொண்டேன்.  ஆனால் மனதில் திடீர் சஞ்சலங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. லீ சாயும் அவளும் காதலிப்பதை ஓடிச்சென்று போலிஸிடம் சொல்லலாமா என்றுத் தோன்றியது. அவன் சொன்னது பொய்யாக இருக்குமா என்று குறுகுறுத்தது. அவனை போலீஸ் கைது செய்ய வேண்டும் என்று ஒரு ஆவல் பொங்கி எழுந்தது.  நான் தோட்டத்தில் எதேதோ வேலை செய்து என் மனகொந்தளிப்புகளை கடத்திக் கொண்டிருந்தேன். அவன் என்னை ஏளனமாக பார்த்தது நினைவுக்கு வந்து ஆத்திரமூட்டியது.

நேற்று மாலை லீ சாய் என் எதிரில்  வந்து நிற்கும் வரை அடிபா பற்றிய நினைவுகள் சற்று ஒதுங்கியே இருந்தன. ஆனால் இன்று அவன் நம்ப முடியாத கதைகளுடன் மாட்டு தொழுவத்தில் ஒளிந்து கொண்டிருப்பது என்னை முற்றாக குழப்பிவிட்டது.

“இந்த மாதிரி இறுமாந்து பேசாதடா… பேயிங்க இருக்குறது உண்மடா…. அனுபவசாலிங்க சொன்னா கேட்கனும்… அதுங்க பல ரூபத்துல வரும்” என்று என்றோ முனியம்மா பாட்டி தன் பொக்கை வாயை பல கோணங்களில் இழுத்து சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வந்து அச்சமூட்டியது. அந்த அதிகாலை நேரத்தில் வீட்டின் பின்கதவை மெல்ல திறந்து கொண்டு மாட்டுத் தொழுவத்துக்குப் பதுங்கிச் சென்றேன். நடந்து பழக்கப்பட்ட பாதை என்றாலும் ஏதோ ஒரு தடுமாற்றம் உள்ளுக்குள் அழுத்தியது. சாமி பாடல் ஒன்றை முனகிக் கொண்டே முன்னுக்குச் சென்றேன்.  லீ சாய் இன்னமும்  அங்குதான் மறைந்திருப்பான் என்று நான் நினைத்தேன்.  அவன் இப்போது உண்மையில் அகோர பசியில் இருக்கக்கூடும். அல்லது மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஒருவேளை செத்து போயிருந்தால் என்ன செய்வது என்ற பீதி பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகளும் கதையும் பயத்தை அதிகமாக்கியது. 

மெல்ல மாட்டு தொழுவத்தின் பின்னே சென்றேன். காலை குளிரிலும் என் உடல் வேர்த்திருந்தது. லீ சாய் எங்கும் தென்படவில்லை. அவன் அங்கிருந்து ஓடி விட்டிருக்கக் கூடும் என்று நினைத்தேன். ஆள் நடமாட்டம் உணர்ந்த மாடுகள் உடலை சிலிப்பிக் கொண்டு எழுந்து நின்றன. ஒரு மாடு தர தரவென சிறுநீர் பெய்தது.

நான் சற்று முன்னேறி சென்ற போது லீ சாய் நீர் தொட்டியின் ஓரமாக கல்லில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். சோர்வு இல்லாமல் உற்சாகமாகவே இருந்தான்.  என்னைப் பார்த்ததும் கை சைகை செய்து ‘அங்கேயே நில்’ என்றான். நான் தயங்கி நின்றேன். நீர் தொட்டியில் இருந்து யாரோ குளிக்கும் சத்தம் சட சட வென்று வந்து கொண்டிருந்தது.  நான் திடுக்கிட்டு லீ சாயைப் பார்த்தேன்.

“குளிச்சிகிட்டிருக்கா” என ஓசையற்ற உடல் பாவனையுடன், அவன் கையில் வைத்திருந்த பாத்தேக் கைலியையும் சட்டையையும் எடுத்து காட்டினான்.

1 comment for “பிளாச்சான்

  1. Georgegp
    October 20, 2021 at 3:12 pm

    அருமையான கதை..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...