எலி

வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட பேசாமல் என்னையும் எதிரிலிருந்த மணி அண்ணனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெலிசியா. அவள் கண்களின் கீழே விழுந்திருந்த அழுத்தமான கரிய ரேகைகள் கணினித் திரையில் விழுந்த கோடுகளாகத் தெரிந்தன. அறையில் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் இரண்டு மூன்று சாமிபடங்கள் எண்ணெய் படிந்ததைப்போல இருந்தன. சாம்பிராணி புகையின் நெடி காட்டமாக இருந்தது.

காவி நிற வேட்டியொன்றை அணிந்து சட்டை அணியாத வெற்றுடம்புடன் அமர்ந்திருந்தார் மணி அண்ணன். நான் அவிழ்ந்த முடியும் மண்டையோட்டு மாலையுமாய் ஆங்காரத்துடன் நின்று கொண்டிருக்கும் காளி தேவியின் படத்தையும், வெள்ளையம்மாளும், பொம்மியும் இருபுறம் நின்றிருக்கும் பழுப்பேறிப்போயிருந்த மதுரைவீரன் படத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். தரையிலிருந்து நான்கடி உயரமுள்ள ஒரு மனைப்பலகையில் இருந்த படங்களின் முன்னால் முட்டிப் போட்டுக் கைகளைக் கூப்பியவாறு சில நிமிடம் நின்றிருந்தார் மணி அண்ணன்.

இருபடங்களுக்கும் நடுவாக இருந்த சிறிய விளக்கொன்றின் திரியில் சுடர் எரிந்துகொண்டிருந்தது. வாயில் ஏதோ மெல்லிய முணுமுணுப்பாகத் தொடங்கி சிறிய அலறலுடன் கூப்பிய கைகளை நெஞ்சுக்கு நேராகச் சேர்த்து உடலையே உலுக்கிக் கொண்டு மனைப்பலகையில் அமர்ந்தார். எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல் நேரடியாகவே பெலிசியாவைப் பார்த்துக் கொச்சையான  மலாய் மொழியில் என்ன பிரச்சினை என்று கேட்டார். அந்த நேரடியான மொழி அவளை ஆசுவாசப்படுத்தியிருக்க வேண்டும். எந்தவிதமான இடைநிறுத்தல்களும் இல்லாமல் அவள் சீராகச் சொல்லிச் சென்றாள். அவளால் அப்படி சீராகப் பேச முடியுமென்பதே ஆச்சரியமாக இருந்தது.

அவள் சொல்வதை நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த மணி அண்ணன், அருகிலிருந்த பையனிடம் பென்சிலையும் தாள் ஒன்றையும் கேட்டார். மணி அண்ணனை மீசைக்காரர் என்றுதான் அங்கிருந்தவர்கள் அழைத்தனர். நாற்பது வயது வரை இருக்கலாம். நாளிதழ் ஒன்றில் வடிவமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மலேசியாவுக்கு வந்து நான்காண்டுகளில் அதிகபட்சமாகச் சாப்பாடு பெயர்கள் அனைத்தையும் சரியாகச் சொல்லும் அளவிலே மலாய் மொழி அறிவு இருந்தது. அதிகம் பேசாமல் கண்களை மூடித் தியானிப்பதுபோல சிறிது நேரம் மெளனமாக அமர்ந்திருந்தார். கிடைமட்டமாக ஒரு கோடு, சாய்வாக ஒரு கோடு என மாறி மாறி கோடுகளால் இழுத்துக் கொண்டே இருந்தார். முதல் கோடு வாலைப் போன்று இருந்தது. கோடுகள் ஒன்றையொன்று தொட்டும் விலகியும் நடனம் ஒன்றை நிகழ்த்தி கொண்டிருந்ததாகவே இருந்தது. நிசப்தமான அறையில் தாளில் மோதும் பென்சிலின் மெல்லிய ஒலி பேரொலியாக ஒலித்தது. அவரின் கையசைவையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்த பெலிசியாவின் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. அவள் கைகளில் இருந்த மயிர்பரவல் குத்திட்டு நின்றது. எதையோ ஆமோதிப்பவள் போல தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.

வழக்கமாக நான்கு வார்த்தைகளுக்குள்ளாகவே குபிரென வெடிச்சிரிப்பு உதிர்த்துவிட்டே பெலிசியா பேசுவாள். என்னைவிட நான்கைந்து வயது மூத்தவள். வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே, வெடிச்சிரிப்புடன் ‘முதல் வேலையா?’ எனக் கேட்டு விட்டுச் சென்றாள். அவளின் கேள்வி ஏளனமாகவே பட்டது. அமெரிக்காவில் இயங்கும் கணினி மென்பொருள் நிறுவனத்துக்கு மலேசியாவில் இருக்கும் பயனீட்டாளர் அழைப்பு நிறுவன பணியில் எனக்கு பெருஞ்சம்பளம் கிடைக்கிறது என்பதை தவிர எந்தவிதமான ஊக்கமும்  இருந்ததில்லை.

சேர்ந்த இரண்டே வாரங்களில் வேலையை ஓரளவு புரிந்துகொண்டேன். எந்தக் கேள்விகளுக்கு எம்மாதிரியான பதிலைத் தரவேண்டும் என்பதை இருபது பக்கங்களில் கேள்வி பதிலாகக் கொடுத்திருந்தனர். எந்த மாதிரியான கேள்விகளைப் பயனீட்டாளர் கேட்டாலும் இருபது முன் தயாரிப்பில் இருந்த ஏதாவது கேள்வியொன்றில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும். கைப்பேசியை எடுப்பதற்கு முன்பாக ஒருமுறை அனைத்தையும் மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொள்வேன்.

சிறப்பான சேவையை அளிக்கக் கூடிய பயனீட்டாளர் அழைப்பு நிறுவனம் பல அடுக்குகளாகவே இருக்கும். இந்த நிறுவனத்தில் மொத்தம் நான்கடுக்குகள் இருந்தன. கண்ணுக்குத் தெரியாத ஓரடுக்கு, அமெரிக்காவிலும் பணியாளர்களை நேரடியாகக் கட்டுப்படுத்தும் மேலடுக்கு, அழைப்புகளைப் பிரித்தளித்து நாள்தோறும் ஒரே மாதிரியான ரிப்போர்ட்டை மாற்றி மாற்றிச் செய்யும் அடுக்கு, அதன் கீழ் என்னைப் போன்றவர்கள் பணியாற்றும் அடுக்கு என அவற்றைப் பிரிக்கலாம்.

நான் இந்த அடுக்குகள் பற்றி அறிந்துகொண்டதை எனக்கு நேர் முன்னால் எப்பொழுதும் தீவிரமான கவனத்துடன் கணினி திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் யோங்கிடம்தான் முதலில் சொன்னேன். இந்த நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகளாக வேலை செய்யும் யோங், அன்றாடம் அடுக்கில்தான் உணவை கொண்டுவருவார். எந்தவிதமான உணர்ச்சியுமின்றி ஒரே மாதிரியாக உணவடுக்கைத் தனித்தனியாகப் பிரித்துச் சாப்பிடுவார். ஒய்ஸ்டர் சாஸ் ஊற்றப்பட்டுக் கிண்டப்பட்டிருக்கும் கீரை, வெள்ளை முள்ளங்கி, நீர் விட்டான் கிழங்கு சேர்த்த சூப், முட்டை இல்லையென்றால் அவித்த கோழி இதனைச் சோற்றில் வைத்துச் சாப்பிடுவார். இந்த மாதிரியான அடுக்கில்தான் நாம் இருக்கிறோம் என்று சொன்னேன்.

எந்தவிதமான முகமாற்றமும் இன்றி ‘இருக்கலாம்’ என்று சொன்னார். வரிச் சீர்திருத்தம், முதலீட்டுத் தந்திரம் குறித்து யோங் பேசும்போது இயல்பாகவே சிறியதாக இருக்கும் அவன் கண்கள் அகல விரிந்திருக்கும். அவனது முன்னாள் காதலிதான் பெலிசியா. இந்த சிடுமூஞ்சுடன் குப்பை கொட்ட முடியாது என இரண்டு வாரத்திலேயே அவனை விரட்டி விட்டாளாம். பெலிசியா பெண்ட்ரியில் எப்பொழும் நான்கைந்து பேர் சூழவே அமர்ந்திருப்பாள். அவளின் பேச்சுக்குரலும் உற்சாகமான சிரிப்பும் இரண்டு மேசை தாண்டியும் ஒலிக்கும். மொத்த உடலே சிரிப்பதைப் போல இருக்கும். தொலைப்பேசியில் மற்றவர்களிடம் பேசத் தொடங்குகிறோம் என்றவுடன் உடலில் வந்துசேரும் இறுக்கம் கொஞ்சமும் இல்லாமல் முழு உடலையும் அசைத்துதான் பேசுவாள். ஆனால் பழகிய வேலையை மாற்றி மாற்றிச் செய்வதே எனக்குப் பெருஞ்சோர்வைத் தரக்கூடியதாக இருந்தது.

பெலிசியாவுடன் சற்று விலகி நின்றே பேசுவேன். ஏழாவது மாடியில் இருக்கும் பெண்ட்ரியில் வாரம் இருமுறை சந்தித்துக் கொள்ளும் போது தலையாட்டலும், சாப்பாடு, வேலை நேரம் எனக் கொஞ்ச நேர விசாரிப்புகள் தவிர பெரியதாக உரையாடல் ஒன்றும் நிகழ்ந்ததில்லை.  மலாய் பெண்கள் இயல்பாகவே அணியும் தொளதொளப்பான நீண்ட உடைகளைச் சற்றே தன் உடற்கட்டுக்கு ஏற்ப இறுக்கமாக அணிவாள். அவளின் மொத்த உடல் அசைவுகளே பிறர் பார்வையைத் தன் பக்கம் திருப்பிக் கொள்ளச் செய்யும். எதிரிலிருப்பவர்களின் பார்வையைத் தான் விரும்புகின்ற மாதிரியாக அமைக்கச் செய்யும் வித்தையும் அவளிடம் இருந்தது.

பெலிசியாவின் மீது எல்லோருக்கும் ஒரு கண் இருந்தது. எனக்கும்தான். கண் என்றால் அவளுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பது தொடங்கி பாரில் சென்று குடிப்பது வரை நீண்ட பட்டியல் இருந்தது. ஆனால் யோங்ஙின் மனம் துன்புறக்கூடாது என கொஞ்சம் கட்டுப்படுத்தியிருந்தனர். எனக்கு அந்தச் சிக்கல் இல்லை. நான் அவளிடம் அதுபற்றி உரையாட தயாராக இருந்தபோதுதான் அவள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தாள்.  மீண்டும் வேலைக்கு வந்தபோது வேறொரு ஆளாக மாறியிருந்தாள். முகமே உள்ளொடுங்கி போயிருந்தது. உடலில் ஒருவிதமான கூடுதல் பிரக்ஞை உணர்வு கூடி போயிருந்தாள். எளிய கையசைவுகளும் பார்வையுமே தொந்தரவுபடுத்துவதைப் போல சிடுசிடுத்தாள். எதையோ தேடிச் சலித்துப் போனதாகப் பார்வை அமைந்திருந்தது. அவள் கண் இமைகளில் நீர் கோர்த்திருப்பது போல வீங்கி இருந்தன. காய்ந்து போயிருந்த உதட்டில் வெண்புள்ளிகள் போலத் தோல் உரிந்து கொண்டிருந்தது. என் பார்வையைத் தவிர்ப்பதற்காக உடைகளைக் கூட நீவி சரி செய்து கொண்டிருந்தாள். முற்றிலும் வேறொரு ஆளாக மாறியிருந்தாள். குடும்பம், உடல்நலம் ஆகிய சிக்கலால் அவளுக்குள் ஏற்பட்டிருக்கும் இயல்பான மனவிலக்கமாக இருக்கும் என்றே ஊகித்துவிட்டுச் சென்றேன்.

ஒருநாள் இரவில் புதிய எண் ஒன்றிலிருந்து வாட்சாப்பில் மெசெஜ் வந்திருந்தது.  ‘இந்தியர்களில் மாந்திரீகம் செய்யும் யாராவது தெரியுமா?’. நான் வாட்சப்பில் இருந்த படத்தை பெரிது செய்து பார்த்தே அது பெலிசியா என்று கண்டுப்பிடித்தேன்.

சிறுவயதில் வீட்டில் காணாமற் போகும் பணம், நகைகளுக்காக அடிக்கடி சாமியாடிகளிடம் சென்று குறி கேட்க அப்பாவுடன் சென்றிருக்கிறேன். நான் கோலாலம்பூர் வந்த பிறகு அதற்கான அவசியம் உருவாகவில்லை. இங்குக் குடியிருக்கும் பிளாட் வீட்டின் மூன்றாவது வீட்டில் வெள்ளிக்கிழமைத்தோறும் மணிச்சத்தமும் புகை மணத்தையும் உள்வாங்கியிருக்கிறேன். எனக்கு அங்கு செல்லும் ஆர்வம் இருந்ததில்லை. அங்கு வருபவர்களில் சரிபாதி பேருக்குச் சிக்கலையே சரியாக தமிழில் சொல்லத் தெரியவில்லை என  மணி அண்ணனின் கையாள் ஒருமுறை உதவிக்கு அழைத்தார். அவர்களிடம் ஆங்கிலமே பேசும் மொழியாக இருந்தது. மணி அண்ணன் உடம்பில் வந்திருக்கின்ற சாமிக்கோ அவர் உதவியாளருக்கோ அம்மொழி தெரியவில்லை என்பதால் நான் மொழிப்பெயர்ப்பாளராக அவ்வப்போது உதவியுள்ளேன்.

சிக்கல்களை மணி அண்ணன் கையாளும் விதம் மிக எளிதானது. எலுமிச்சைக்கனி அல்லது புட்டி நீரே பல சமயம் அவருக்குப் போதுமானதாக இருக்கும். அப்படியே மிகவும் இக்கட்டான மனச்சோர்வுடன் வருபவர்களுக்கு மட்டும்தான் பிரத்யேகமான சடங்குகள் எதையாவது செய்யச் சொல்வார். சிறிய வெள்ளிக் குவளைகளில் உப்பையும் மஞ்சளையும் சேர்த்து வீட்டின் எட்டு மூலைகளிலும் கண்ணுக்கு மறைவாக வைக்கச் சொல்வார். அந்த மறைவு என்பதையே எதிரிலிருப்பவர்கள் மிகக் கவனத்துடன் கேட்டுக் கொள்வர். தலை மாட்டுக்குக் கீழே வைக்கும் சில பாக்கெட்டுகளையும் அளிப்பார்.

நான் அங்கிருப்பதை ஒருநாளும் சாமி ஏறிய மணி அண்ணன் கேள்வி கேட்டதில்லை.  நான் ஒருமாதிரியான உதவியாளாகவே மாறியிருந்தேன். அது எனக்குப் பிடித்திருந்தது. இறுக்கமான என் பணியில் இருந்து ஆசுவாசப்படுத்தியது. அங்கு வருபவர்களில் மணி அண்ணன் முன்னால் அமர்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தால் வெளியே சென்று நின்றுவிடுவேன்.  மணி அண்ணன் எவ்வாறு சிக்கல்களைக் கையாள்வார் என்றுகூட முன் அனுமானம் இருக்கும். அந்த முன் அனுமானம் பெரும்பாலும் பொய்ப்பதில்லை. ஒரு சில புதிய சடங்குகள், வார்த்தைகள் தவிர மற்றவற்றை மனத்தில் ஒட்டிப் பார்த்தப்படியே நடக்கும்.

‘எதேனும் உடனடித் தேவையா’ என்று கேட்டேன். அப்படி கேட்கும்போது என் மனதில் மெல்லிய காதல் கீதம் ஒலித்தது. அது நன்கு பழகிய இசையில் அமைந்ததாக இருக்க வேண்டும். அவள் பதில் ஏதும் சொல்லாததால் நான் ‘தெரியும்’ என மறுபடியும் அனுப்பினேன். அவள் ஸ்மைலி குறியை அனுப்பினாள். இப்பொழுது இன்னும் தெளிவாக இளையராஜாவின் இசை ஒலித்தது.

மறுநாள், சாப்பாடு நேரத்தில் பார்த்தப்போது ஒரு விநோதமான சம்பவம் ஒன்றைச் சொன்னாள். அவள் தன் பாட்டியின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறாள். ஜாவாக்காரியான அவள் பாட்டி இறந்து நான்காண்டுகளாகின்றன. கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருக்கும் கம்பத்து வீடு அது. இவள் மட்டுமே தனியாக இருக்கிறாள். அந்த வீட்டில் தொடர்ந்து மூன்று வாரங்களாக எலி சத்தம் கேட்பதாகச் சொன்னாள். “அதைப் பொறி வைத்துப் பிடிக்கலாம்தானே?” எனக் கேட்டேன். எத்தனையோ முயற்சிகள் செய்தும், இதுவரையில் அதனைக் கண்ணால் பார்த்ததில்லை என்றாள். “கம்பத்து வீடுகளில் எலிகள் இருப்பது இயல்புதானே” என்றேன்.

என்னைக் கூர்ந்து பார்த்தவள் விரிவாக அவள் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். நிச்சயமாக இல்லை. ஒரு கீச்சொலி. முதல் கீச்சொலி. அதை மட்டும்தான் என்னால் தெளிவாகக் கேட்க முடியும்… அதற்குப் பின்னர் விடாதப் பெருங்குரலென அதன் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். அதி ஒலியுடன் பாடலை ஒலிக்கச் செய்து கேட்பேன். இரண்டு மூன்று தொடர் ஒலிகள் கூட ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டிருப்பேன். அதன் ஒலி இன்னும் துல்லியமடைந்து கேட்பது போல இருக்கும். உடலில் பிரிந்த பெரிய கட்டியொன்று உடலில் ஊர்வதைப் போல எண்ணி நடுஇரவில் எழுந்து அலறி விழித்திருக்கிறேன். இரவில் அணியும் ஆடையில் கைகளை நீவி கொண்டே இருப்பேன். ஆடையின் மொத்த இடைவெளிகளையும் இறுக்கிக் கொண்டு போர்வையால் சுற்றிப் படுத்திருப்பேன். அப்படியும் இரவில் கறுப்பாக என் மேல் ஊர்வதுபோலிருக்கும். இதனாலே, என் கூந்தலைக் கூட வெறிபிடித்தவள் போல இரவில் கொஞ்சமாக வெட்டிக் கொண்டிருக்கிறேன் எனத் தலையைக் கோதிக்கொண்டாள்.  கைகளை அசைத்தால் எழுகிற நிழலில் கூட அதன் உரு தெரிந்துவிடும் என்பதால் கைகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன் எனச் சொல்லி முடிக்கும் போது அவள் உடலின் இயல்பான அசைவுகள் சற்றே தெரிந்தன. பெலிசியாவின் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல அகன்று கொண்டிருப்பதைப் போலிருந்தது. அந்த சிறு இடைவெளியில் சூழலை இன்னும் இயல்புக்குக் கொண்டுவர ‘ வேலையிடச் சுமை அல்லது மன இறுக்கம் கூட காரணமாக இருக்கலாமே இல்லையென்றால் அது சாதாரண எலியாகக் கூட இருக்கலாம்’ என்றேன். அந்தக் கேள்வி அவளை இன்னும் இறுக்கமடையச் செய்தது. கண்களில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீருடன் தழுதழுக்கும் குரலில் கோபாவேசமாக ‘கத்தியின் கூர் முனையால் உடம்பில் விழும்  கீறல் போல அதன் வாலால் கழுத்தில் நான்கைந்து கீறல் விழுந்து, கைகளில் ரத்தத்துடன் இரவில் மினுக் மினுக் என்ற ஒலியைக் கேட்டு… எனக் கழுத்தில் கைகளை இறுக்கிக் கொண்டு சொல்லி முடிக்கும் முன்னரே கேவிகேவி அழுதாள்.  அவள் சொன்னவற்றிலிருந்து உருவகப்படுத்திக் கொண்ட எலியின் உருவம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவளைச் சமாதானம் செய்யும் வழியைத் தெரிந்திருக்கவில்லை. நீ மீண்டும் முன்பைப் போல ஆகவேண்டும் என்ற பொருத்தமில்லாதச் சமாதானம் ஒன்றைச் சொன்னேன். கைகளால் உடையை நீவிவிட்டுக் கொண்டே சென்றாள்.

இரண்டு வாரங்களாக, நிறுவனத்தில் ஓயாத வேலை. வருடம் தோறும் நடக்கும் ஆடிட் பணிக்காகக் கோப்புகளை அடுக்கி வைக்க வேண்டும். ஐந்தாவது மாடியில் இருக்கும் அறையொன்றிலிருந்து அத்தனையையும் தூக்கி மின்னேற்றியில் மேலே கொண்டு வந்து கொண்டிருந்தோம். அறையின் முன்னாலே பெலிசியா சோர்வுடன் அமர்ந்திருந்தாள். உடலில் இருந்த பொலிவு எல்லாம் உதிர்ந்து போய் வேறொரு ஆளாக ஆகியிருந்தாள். பேசும் போது உடலில் இருக்கும் அசைவுகள் இன்றி கைகளையும் கால்களையும் இறுத்தி வைக்க முயன்று கொண்டிருந்தாள். கைகளைக் கழுத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தாள். கைகளில் மெல்லிய நடுக்கம் கூட இருந்தது. இப்படியே சில நாட்கள் போனால் பெரும் விபரீதம் ஒன்றை அவளே நிகழ்த்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். வார்த்தைகளைக் கூட முழுமையாகச் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவளின் அந்தத் தோற்றம் என்னை உலுக்கிவிட்டது. தொண்டையில் காற்று அடைத்திருப்பதைப்போலச் செய்யும் துயரை உணர்ந்தேன். மணி அண்ணனைப் பற்றித் தயக்கத்துடன்தான் சொல்லத் தொடங்கினேன். எந்தவிதமான மாற்றத்தையும் முகத்தில் காட்டாமல் சரி போகலாம் என்றாள். மணி அண்ணனுக்கு வாட்சாப்பில் குரல் பதிவு ஒன்றைச் செய்திருந்தேன். கைகளைக் கூப்பும் குறியொன்றை அனுப்பியிருந்தார். வேலை முடிந்தவுடன் எனக்காகக் காத்திருந்தாள். இருவரும் ஒன்றாகக் கிரேபில் மணி அண்ணன் வீட்டிற்கு சென்றோம்

அண்ணன் ஒரு மஞ்சள் நிற காகிதத்தை எடுத்து நீட்டினார். நான்கு மூலைகளிலும் குங்கும திட்டுகள் தெரிந்தன. தாளில் ஒரு

 எலியின் படம் வரையப்பட்டிருந்தது.  உண்மையிலே ஓர் எலி தாளில் அமர்ந்திருப்பது போலவே இருந்தது. மணிக்கண்களும் அதில் இருக்கும் ஓடுவதற்கான எத்தனமும் கூட இருந்தது. வால் பகுதியில் தோல் உரிந்து இருந்தது. தலையைத் தாண்டிய உடலில் தோள் பகுதி சிலிர்த்தெழுந்து ஒடுவதற்கான தயார்நிலையுடன் கண்முன்னால் எலியொன்று நிற்பதாகவே இருந்தது. பெலிசியாவின் கண்கள் அகல விரிந்து ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டினாள். பெருஞ்சோர்வு மிகுந்த குரலில் ‘இதை உன்வீட்டிலே வைத்து கொளுத்திவிடு… அது உன்னை விட்டு அகலும்… அதுவும் இறந்து போகும்’. நான் அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தேன். அவர் முன்னால் ஐந்நூறு வெள்ளி நோட்டை வைத்து விட்டு நன்றி சொல்லி வெளியேறினோம். நானே  அந்த மஞ்சள் காகிதத்தை நான்கு மடிப்புகளாக மடித்து அவளிடம் கொடுத்தேன். அதைக் கைப்பைக்குள் வேகமாகத் திணித்துக்கொண்டாள். எந்தவிதமான உரையாடலும் இல்லையென்றாலும், அவளின் உடல்மொழியில் பெரிய மாற்றமில்லை. கைப்பேசியில் அவளது வீட்டு முகவரிக்குக் கிரேப் வண்டியொன்றுக்குப் பதிவு செய்தேன். கைகளை உதறி கொண்டும் தலையை அசைத்துக் கொண்டும் இருந்தாள். காதைப் பொத்திக் கொண்டு சாலையின் ஓரத்திலிருந்த தடுப்புச்சுவரில் அமர்ந்துவிட்டாள். அவளின் கைப்பையை வாங்கி அதிலிருந்த தாளை எடுத்துப் பாக்கெட்டுக்குள் செருகி கொண்டேன். கிரேப் வண்டியில் ஏறியவுடன் சற்று நிதானமாக இருந்தாள். அவளின் வீட்டுக்கு முன்னால் இருந்த சாலை வளைவிலே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி கொண்டாள்.

வீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்றாள். அங்கிருந்த கடையொன்றில் அமர்ந்தோம். பச்சை, நீலம், சிவப்பு எனப் பலவகையிலான வண்ணம் கொண்ட நீண்ட பல்புகளின் வெளிச்சத்தில் கடை மூழ்கியிருந்தது. எனக்குப் பெரிதாகப் பசியொன்ரும் இல்லை. அவளும் எலுமிச்சைத் தண்ணீர் ஒன்று மட்டுமே சொன்னாள். நானும் அதையே சொன்னேன். கடையில் உள்ளே நிறைந்திருந்ததால், வெளியே கால்வாயை ஒட்டி மேசையை விரித்து நாற்காலி போட்டிருந்தான். நாற்காலியில் அமர்ந்து, கைப்பேசியில் நேற்றிரவு பாதிவரை பார்த்திருந்த நகைச்சுவைக் காணொளி ஒன்றைத் தொடரவிட்டிருந்தேன். அதன் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.

கால்வாயிலிருந்து எலியொன்று வெளியே வந்ததை நான் அப்போது கவனித்திருக்கவில்லை. அவள்தான் என் கையைச் சுரண்டினாள். முன்னிருக்கைக்கு அருகிலிருந்த கண்ணாடியில் பார்த்தப்போது எனக்கு நேர் முன்னாகவே எலி வருவதாகத் தெரிந்தது. நான் பார்த்தபோது சாலையின் ஓரம் நின்ற காரின் பின் டயருக்குக் கீழே இருந்தது. நான் தாளை எடுத்துப்பார்த்தேன். அசப்பில் அதே எலியைப் போன்றே இருந்தது. மணி அண்ணனின் மகிமையை எண்ணி வியந்துகொண்டேன். பெலிசியா அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்சமாக அவள் கண்களில் அப்பியிருந்த மிரட்சி குறைந்தது. என் விரல்களைப் பற்றிக்கொண்டாள். மெல்லிய இளஞ்சூடு படர்ந்தது. எல்லாம் சரியானவுடன் அவளுடன் வெளியே சுற்றும் வாய்ப்பு கிடைக்குமென தோன்றியது. இன்னும் சில வாய்ப்புகளும் கிடைக்கலாம். அவள் கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தியிருந்தது. கார் எஞ்சின் முடுக்கப்பட்டபோதுதான் உள்ளே ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தோம். ஆனால் அந்த சத்தத்திற்கு எலி நகரவில்லை. பின் டயர் நகர்ந்து அதன் வால்பகுதியில் ஏறியது. அதன் கண்களில் எந்தவிதமான மிரட்சியும் இல்லை. அதை எதிர்பார்த்தைப் போலவே நின்றது. பின்னர் ஏதோ பிரக்ஞை வந்து தப்பிக்க திணறியபோது அதனால் விடுபட முடியவில்லை. இப்போது எலியின் கண்களில் மரண பயம். மிரட்சி. வீள் என அலறினாள் பெலிசியா. காரோட்டி ஏதோ நடந்ததை ஊகித்துக்கொண்டு வெளியில் காட்டப்பட்ட செய்கையை அறிந்து காரைப் பின்னெடுத்தார். எலி கால்வாயின் அருகிலிருந்த சாலைப்பிளவில் சென்று மறைந்தது.

என்னிடமிருந்த தாளை வெடுக்கென வாங்கி கொண்டாள். அந்தத் தாளை கைப்பையில் வைத்துவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டாள்.

2 comments for “எலி

  1. manohar
    May 2, 2021 at 7:16 am

    சுவாரசியமான சிறுகதை. ஒருவிதமான தொந்தரவுக்கு பழகிவிட்ட பின்னர் அது தனிமையில் இன்பமான துணையாகிவிடுகிறது போலும். வாழ்த்துகள்

  2. Krishnan
    May 4, 2021 at 11:32 am

    நவீன் இக்கதையை சிறந்த சிறுகதை என சொல்லியிருந்தார். மாற்றமில்லை. வாசித்து முடித்தபின் அந்த பெண்ணின் உளவியல் சிக்கலுக்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என நினைத்தேன். ஆனால் தப்பிக்க முடியாத சுழலை மனிதன் விரும்புவது அழகாக வெளிவந்துள்ள கதை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...