மோட்சம்

“என்ன டே, புது கெராமவாசி பொறச்சேரி பக்கமா வந்து நிக்க,” என்றார் மருத்துவரான முதுக்கடசர். அவர் பேச்சில் சிறிது ஏளனமும், காட்டமும் தெரிந்தது. அதையும் மீறி அவர் உடைந்து அழுது விடுவார் என்பதை அவர் உடல் மொழி உணர்த்தியது.

மாரனின் கழு உறுதியானதால், புதுக்கிராம தெருவினுள் நுழைய எத்தனித்தபோது மருத்துவருக்கு நூறு சவுக்கடிகளே பரிசாகக் கிடைத்தது. அதுவும் மருத்துவர் என்ற கரிசனத்தால்.

கடசர்கள் வாழும் புறச்சேரி ஊரின் மேற்கு எல்லையாகிய நித்யகல்யாணி அம்மன் கோவில் தாண்டி மேற்காக அமைந்த பொதிகை மலைத் தொடரின் விளிம்புகளில் அமைந்த குடிகளுள் ஒன்று. ராம நதியின் மேற்குப்புறமாக அமைந்த மேலகடையம், கோவிந்தம்பேரி, கிருஷ்ணப்பேரி, சம்பன்குளம், கணியான்குளம், புறச்சேரி என ஆறு மலையடிவார குடியிருப்புகளை உள்ளடக்கியது மேலகடையம்.

கிழக்காக புதிய ஊர் உருவாகி வந்ததும் மேலகடையத்துவாசிகள் யாருக்கும் கடையம் ஊருக்குள் புழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊர் பொதுவாகிய நித்யகல்யாணி அம்மன் கோவிலுக்குள்ளும் செல்ல மேலகடையம்வாசிகளுக்கு அனுமதியில்லை. ஊர் பூசாரியான முத்துப்பட்டர் அந்திக் கருக்களுக்குள் பூசையை முடித்துக்கொண்டு வீடு திரும்பி விடுவார். அதன் பின்னே மேலகடையத்துவாசிகள் அம்மனை வெளியிலிருந்து தரிசித்துக் கொள்ளலாம். மீறி மாங்காய் பறிப்பதற்காக கோவிலினுள் சென்ற இரண்டு சிறுவர்கள் மாயமாய் மறைந்த கதை ஊரில் பலவாறாகப் பரவியது.

மாடத்தியும், அம்பட்டனும், வண்ணானும் ஊருக்குள் சென்று வர அனுமதியிருந்தது. அவர்களுக்கும் கூட முப்பிடாதி அம்மன் கோவிலை ஒட்டி தென்னாற்றின் கரை ஓரமாக வந்து செல்ல சிறு பாதை தனியாக அமைந்திருந்தது. வீட்டின் பின்வாசல் வரை மட்டுமே அவர்களுக்கு அனுமதி.

மருத்துவருக்கு மட்டுமே ஊர் வீதிகளில் நடக்க அனுமதியிருந்தது. அவரும் ஊருக்குள் வருவதற்கு அவருக்கான சொல் ஊரிலிருந்து சென்றிருக்க வேண்டும். அவர் வரும்போது யார் எதிர்பட்டாலும் தன் வழிவிட்டு விலகி, சிரம் தாழ்த்தி, கையால் நாசியை மறைத்து, “நான் தீட்டானவன்” எனச் சொல்லிக்கொண்டு, தான் செல்லும் வீட்டு முகவரின் பெயரை சொல்லிக்கொண்ட பின்னே செல்ல வேண்டும். பொதுவாக முந்தைய நாளே மருத்துவரின் வருகை முரசறைந்து அறிவிக்கப்பட்டுவிடுமாதலால் அவர் வரும்போது கிராம வீதிகளில் எந்த ஆள் நடமாட்டமும் இருக்காது.

ஒருமுறை எனக்கு காய்ச்சல் கண்டு நான் படுத்தபடுக்கையாகியபோது என் அப்பா கண்டிவீர நாயக்கர், மருத்துவரை அழைத்து மூன்று நாள் எனக்கு விபூதியிடச் சொன்னார். நான் விழித்தெழுந்த ஆறாம் நாளே மருத்துவர் வீதியில் எதிர்பட்டபோது எச்சில் உமிழ்ந்து காறித்துப்பிக்கொண்டே நடந்தார். போன காரியத்தை முடிக்காமல் பாதியிலேயே வீடு திரும்பினார், திரும்பி வரும் வரை காறிக்கொண்டே வந்தார்.

எனக்கு மருத்துவரின் முகத்தைப் பார்ப்பதற்கே வெட்கமாக இருந்தது. அவர் கைகளை இறுகிப்பற்ற முன் நகர்ந்தேன். சவுக்கடியால் அவர் கைகளும், முதுகும் தடித்து வீக்கம் கொண்டிருந்தது. முகத்தின் மேல் பல் விழுந்ததால் இடது கன்னம் தடித்திருந்தது, உதடு கிழிந்து தொங்கியது.

***

மாரனின் கழுவேற்றம் ஸ்ரீ சூட்சமுடையார் சாஸ்தா கோவிலுக்கும், குருந்துடையார் அய்யனார் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ள ஊர் பொது மன்றில் ஜமீன்தாரின் தலைமையில் நடந்தது. அங்குள்ள ஆலமரத்தின் அடியில் ஜமீன்தார் மர நாற்காலியில் அமர்ந்திருக்க ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் சுற்றி நின்றனர். ஜமீந்தாருக்கு ஊரின் மேல் அத்தனை அதிகாரத்தையும் கம்பெனிக்காரர்கள் வழங்கியிருந்தனர். ஜமீன் அருகே அவரது கணக்கர் கணபதியாப் பிள்ளை நின்றுகொண்டு புகையிலைக்காக பாக்கு சீவிக்கொண்டிருந்தார். ஊர் முழுவதும் கூடி அதனை வேடிக்கை பார்ப்பதற்கு ஜமீன் காரணத்தை உருவாக்கியிருந்தார். அதுவே மற்றவர்களுக்கு பயத்தை உருவாக்குமென அவர் கருதினார். மேலகடையம்வாசிகள் கோவிலுக்கு இடப்புறமாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.

திருச்செந்தூர் தாண்டியுள்ள பிச்சுவளை தேரி மணல் கழுவேற்றத்திற்காகவே பிரத்யேகமாக வரவழைக்கப்படுவது. சிவனாண்டி தேவர் மாட்டு வண்டியில் சென்று அதனை அள்ளி வந்திருந்தார். நான்கடிக்கு வட்டமாக கோடிடப்பட்டு அதனுள்ளே சிவந்த தேரி மணலை பரப்பி ஒரு வட்டக் குன்றுபோல் அமைத்தனர். அதன் மேல் தண்ணீர் உற்றி இறுகச் செய்தனர். தண்ணீர் ஊற்ற ஊற்ற மண் அதனை உறுஞ்சி உதிர்ந்துக்கொண்டே வந்தது. அத்தனை வெப்பத்தை தன்னுள் தாங்கிய மண்.

கழுவென்ற சொல்லை நாங்கள் தாத்தா தலைமுறையில் கேட்ட கதைகளின் வழியாகவே அறிந்திருந்தோம். எங்கள் தலைமுறையில் அப்படி ஒன்று நிகழ்வது, சாவென்பதையும் மறந்து அங்கிருந்தவர்களிடம் ஒரு கொண்டாட்ட மனநிலை உருவாக்கியது.

“ஏலே இத்தன தண்ணீ ஊத்தியும் இறுகல பாத்தியா? அது அதுக்கூட கொணமாக்கும். ரெத்தங் குடிச்சு செலிச்ச மண்ணுல்லா இது… இறுகவே இறுகாது, பெரம்ப நட்டுறதுக்கு ஒசரம் இதெல்லாஞ் செய்யுதாக. பெரம்பு நின்னுகிட்டதும் மறுபடியும் உளத்திருவாக. அப்பதான் வெயிலுல ஒக்காரும்போது குண்டி வெந்து தணலாவும்” என்றான் என்னுடன் நின்ற கந்தன். அவன் பேச்சில் அதனை ரசித்து சொல்வது தெரிந்தது.

கழுவில் அமரப் போவது எங்களுடன் நாலு மாதம் முன்னர் வரை கல்லூரியில் ஒன்றாக அமர்ந்து பயன்றவன் என்ற பிரக்ஞை அவனிடமில்லை. பாளையாங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் தமிழ் வகுப்பின் இரண்டாம் ஆண்டில்தான் மாரனுடனான நட்பு மலர்ந்தது. கமலாவுடன் அவன் மதுரை செல்லும் வரை அது நீடித்தது.

நான் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தேன். அதனை நிறுத்த என்னால் முடிந்த மட்டும் போராடிக் கொண்டிருந்தேன். அப்பாவிடம் சொன்னபோது, “குலங்கெட்டவனுக்கு இவன் வக்காளத்தா? இவனையுஞ் சேத்து கழுவேத்த சொல்லுதேன் பாரு” என்றார்.

கூட்டத்தில் நான் மௌனமாக அசையாமல் நிற்பதைக் கண்டு அவர் தொடர்ந்தார், “எடே, அது பெரிய எடத்து வெவகாரம். அவன் தொட்டு தூக்கிட்டு போனது சமீன் வீட்டு கணக்கர் கணபதியாப் பிள்ளையோட மகளாக்கும். பிள்ளை சும்மாயிருப்பானா. பழுக்கட்டும் நாலு பேத்துக்கு பழுத்து, புழுத்து செத்தாதான் எல்லாவனுக்கும் புத்தி வரும்” என்றார். அச்சொற்கள் என்னை உறைய வைத்தது. அதற்கு மேல் யாரிடமும் பேசிப் பயனில்லை என்பது தெளிவாகியது.

நான் மேலகடையம் போய் வர, வீட்டிலும் ஊரிலும் எதிர்ப்பெழாத து இங்கே ஒரு யுக மாற்றம் நிகழ்வதாக கற்பனை செய்துகொண்டேன். மாரன் வீடுவரை சென்று அவனோடு சரிசமமாக அமர்ந்து பேச என் தலைமுறையில் என்னால் மட்டுமே முடிந்தது. அதனைக் குறையெனச் சொல்லவும் தடுத்து நிறுத்தவும் இங்கே யாரும் எழவில்லை.

பலி களம் ஸ்ரீ குருந்துடையார் அய்யனார் கோவில் வாசலில் அமைந்துள்ள சங்கிலி பூதத்தானுக்கும், சொற்கேளா வீரனுக்கும் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்தது. கையில் பள்ளி வாளுடன் நின்றுகொண்டிருந்த சொற்கேளா வீரனைச் சுற்றி கற்குவியலாக நிறைந்திருந்தது. பதினாறாம் நாள் பலி முடிந்த பிறகு சொற்கேளா வீரனுக்கு பலியை அளித்துவிட்டு அருகே சிறிய உருண்டை கல்லை நட்டுச் சென்றுவிடுவர்.

பனை மரக்கட்டையால் ஆன பிரம்பை ஒல்லியாகச் சீவி மணலில் நட்டு மேல் முனையை கால் அடிக்கு கூர்மையாக்கியிருந்தனர்.

என் அருகே வந்த கந்தன், “பெரம்ப நல்லா நாளு அடிக்கு உள்ள யெரக்கி, ரெண்டு அடிக்கு தான் மேல விடுவாக, அதுக்கு மேல விட்டா பெரம்பு வாய் வெளியா வந்து ஒடனே செத்திருவான், பெரம்பு கொடலோட நிக்கனும் அப்ப தான் உள்ளுக்குள்ள ரெத்தம் இறுகி நாலாம் நாளுல இருந்து சீள் வச்சி வலிக்க ஆரம்பிக்கும். இவக பத்து நாள் வச்சு துடிச்சு சாவ வைப்பாங்க,” என்றான் ஒவ்வொன்றாக ரசித்தவாறு. அவனை அறைய வேண்டும் போலிருந்தது. அவனை விட்டு விலகிச் சென்றபோதுதான் அதனைக் கவனித்தேன் மாரனை கை கால்களைக் கட்டி வேப்பமரத்தில் கட்டிவைத்திருந்தனர். அவன் உடல் முழுவதிலும் இருந்து இரத்தம் வடிந்து சொட்டியது. அது மணலின் மேல் பட்டு மணல் ரத்த பொறுக்காக உறைந்துகொண்டிருந்தது. நான் திரும்பி பலி மணலைப் பார்த்தேன். அதே இரத்த சிவப்பை தன்னுள் கொண்டது லட்சோப லட்சங்கோடி இரத்தங்களை தன்னுள் விழுங்கியது.

ஊர் மொத்தமும் சங்கிலி பூதத்தானின் பலி பூஜையில் ஆழ்ந்திருந்தது. மாரனின் அப்பா சங்கிலி பூதத்தான் அருகில் அமைந்த புளியமரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தார். நான் அவனருகே செல்வதை யாரும் கவனிக்கவில்லை. அவனைச் சுற்றி ஜமீனின் மறவர் படை மட்டும் காவல் நின்றது.

“கூட படிச்சவனாக்கும், அஞ்சி நிமிஷம் பேசிக்கிடுதேன்,” என்றேன் மறவன் முத்தையா அண்ணனிடம். அவர் சீக்கிரம் என தலையசைத்தார்.

நான் அவனருகே சென்றேன். மெலிந்து எலும்பாக இருந்த தேகத்தை அடித்து அடித்து வீங்க வைத்திருந்தனர். அவன் வெற்று உடல் முழுவதும் சதை கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது.

“ஏலே மாரா உனக்கென்ன தலைல எழுத்தா. நீ பெசாம உண்மைய சொல்லிருலே” என்றேன் குனிந்து அவன் முகத்தருகே அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில். சுற்றியிருப்பவர்கள் யாராவது எங்களைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தேன். எல்லோரும் எங்கள் இருவரிடமிருந்து பத்தடி தூரத்திலேயே இருந்தனர்.

“என்னத்த சொல்ல” என்றான் அவன் உதடு கோணி முறுவலித்தது. பின் அவனே தொடர்ந்தான், “ஜமீன் மின்னாடி அவளே எல்லாத்தையும் சொல்லிட்டா. நாந்தான் அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திட்டு போன்னேன்னு சொல்லிட்டா,” என்றான்.

நான் ஒரு கணம் செயலிழந்து போனேன். பின் என்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்து தொடர்ந்தேன், “அது அவளா சொல்லிருக்க மாட்டா. பிள்ளை கட்டாயப்படுத்தி சொல்ல வச்சிருப்பாரு,” என்றேன்.

“எதுவோ. அவ சமீன் மின்னாடி எல்லாம் சொல்லியாச்சு. என்ன இன்னும் கொஞ்ச நேரத்துல கழுவில நெருத்திருவாங்க,” என்றான்.

“எல்லாம் இந்த பிள்ளயோட வேலையாக்கும். காதும் காதும் வச்ச மாறி தம் பொண்ணக் காப்பாத்திக்கிட்டாரு. அவ செமீன கல்யாணம் பண்ணிக்க போறதாவும் ஒரு பேச்சு ஆரம்பிச்சிருக்கு. நா வேணுன்னா அவகிட்ட பேசி பாக்குதேன்,” என்றேன்.

“செரி பேசு,” என்றான். அது என்னால் முடியாது என அவனுக்கு தெரிந்திருந்தது. அந்நிலையிலும் என்னைக் கேலி செய்கிறானா எனப் பார்த்தேன். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

“செரி டே அப்ப நா போயி சொல்லுதேன்,” என்றேன்.

“நீ சொன்னாலும் என்ன கழுவுலதான் ஏத்துவாங்க,” என்றான். என் கையறு நிலையை அவன் ரசித்துக் கொண்டிருக்கிறானா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்தது. அவன் மாறாமல் அதே சிரிப்புடன் இருந்தான்.

“வேணாம் டே அங்க அதப் பாத்தாலே எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது,” என்றேன்.

“உனக்கு புதுசு, நா இத பத்து நூறு மட்டம் பாத்து பழகியாச்சு. சொல்லப்போனா நானே கற்பனைலய ஐஞ்சாறு மட்டம் ஏறிப்பாத்தாச்சு,” என்றான்.

அங்கிருந்து குலவையிடும் ஓசை எழுந்தது. பூசாரி சொற்கேளா வீரனுக்கான பூஜையைத் தொடங்கினார். அவருக்கான பூஜை முடிந்து பலிக்கான கிடா கொண்டு வரப்பட்டது. அது தலையைப் பிடித்து கை கால்களைக் கட்டிக்கொண்டு ஓரே வெட்டில் தலையை அறுத்தனர். ஓர் உயிர் துடித்துச் சாவதை இன்னொரு உயிரின் கொலையால் நிகர் செய்தனர்.

நான் அவனிடம், “போய் வீரன் மின்னாடி உண்மைய சொல்லுலே. அவன் தான் உன்னைய காப்பாத்தனும். அவன் மின்னாடி சத்தியஞ் செஞ்சி உண்மைய சொல்லு ஊர் கேட்கும்,” என்றேன். அவன் என்னை நோக்காதவனாக எதிர்திசையில் கண்களை செலுத்தி புன்னகைத்தான்.

முத்தையா அண்ணன் வந்து என்னை விலகச் சொன்னார். அவன் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு அவன் மேல் தண்ணீரை ஊற்றிக் கூட்டிச் சென்றனர். நான் அங்கேயே நின்றிருந்தேன். வேண்டாம் என்பது போல் என் கைகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன.

அவர்கள் அவனை சங்கிலியால் இழுத்துச் சென்றனர். அவன் எந்த எதிர்ப்பு விசையும் காட்டவில்லை. வீங்கி ரத்தம் வற்றிப் போய் நின்ற கால்களை மெல்ல அடியெடுத்து நடந்தான். அவன் ஒரு சொல்லும் எழாது மாறா புன்னகையுடன் அவர்கள் முன் நிர்வாணமாக நின்றான். எனக்கு இக்கணம் கனவென மறைய வேண்டும் போலிருந்தது. நிஜம் அத்தனை கற்பனைகளை தாங்கும் சக்தி கொண்டதல்ல. அவனைக் கழுவில் அமரச் செய்யும்படி ஜமீன் கையசைத்தார்.

அங்கே என்னை நானே முழு நிர்வாணமாக கண்டேன். என் குத வாயில் விரித்து கூர் முனைகொண்ட பிரம்பினுள் இறக்கினர். என் ஒவ்வொரு இரத்தநாளங்களும் அதிர்வை உண்டாக்கின. அவன் ஒரு சொல், ஒரு முனகல் எழுப்பாது அதன் மேல் அமர்ந்தான். கையை நெஞ்சோடு அணைத்து கூப்பிய வண்ணம் அமர்ந்திருந்தான்.

***

எண்ணி ஆறாம் நாள் வரை பனங் கள்ளும், கருப்பட்டி நீரும் உணவாகக் கொடுக்கப்பட்டது. நீர் உள்ளே இறங்கி உறைந்திருக்கும் இரத்தத்தோடு சேர்ந்து சீள் கட்டிக்கொண்டிருக்கும். எனக்கு எல்லாம் என்னுள் நிகழ்வதுபோல் இருந்தது. உடல் மொத்தமும் செயலிழந்து அங்கேயென அமர்ந்திருந்தேன்.

ஒவ்வொருநாள் இரவும் கதைப்பாட்டு பாட கணியான்குளத்திலிருந்து முத்தம் பெருமாள் வந்தார்.

அவரையும் என்னையும் தவிர அங்கே கழுமடலில் யாருமிருக்கவில்லை. மருத்துவரின் உடலும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகியிருந்தார். பதினாறாம் நாள் ஊர் மறுபடியும் கூடியபோது அவர் கட்டாயமாக அழைத்துவரப்பட்டார். அப்போது உடல் சற்றுத் தேறியிருந்தார். அவர் கண்களில் குடிக்கொண்டிருந்த பரிதவிப்பும், ஏக்கமும் மறைந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிதர்சனத்திற்குள் மீட்டு வந்திருந்தார்.

அத்தனை நாள் வரை அவன் உயிருடன் இருப்பானென யாரும் எதிர்பார்க்கவில்லை. முத்தம் பெருமாள் அண்ணன் என்னிடம் வந்து, “ஆளு கிண்ணரனாக்கும், இத்தன நாள் ஒருத்தன் மூச்சு நின்னு நாம் பாத்ததில்ல,” என்றார்.

பின் அவரே, “இளங்கண்ணுல அதான் ஏதோ நிறைவேறாத ஆசையோட இருக்கான். ஆனா இன்னைக்கு போய் தான் ஆகணும் பதினாறாம் நாளு, பௌர்ணமி வேற,” என்றார். அந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. அதன் பின்னே ஊர் முழுவதும் மீண்டும் அங்கே கூடியது. அது ஜமீன் காதுக்கு எட்ட நீண்ட நேரம் பிடிக்கவில்லை.

அவரே நேராக வந்து, “அவன கழுவுல இருந்து வெளியேத்துங்கல,” என்றார்.

“ஐயோ, வெளியெடுத்தா செத்துருவான்,” என்றேன். அந்த வரி அங்கே எத்தனை அபத்தமானது என்பது அதன்பின்னர்தான் உரைத்தது. அப்பா என் கைகளைப் பிடித்து இழுத்தார்.

அவனை அங்கிருந்து வெளியெடுத்து அதன் மேல் ஒரு சேவலை இறக்கினர். அது இறக்கையை விசிறிக்கொண்டு அங்கிருந்து திமிற எத்தனித்தது. முத்தையா அண்ணன் அதன் இறக்கைகளை காலோடு இணைத்து பிடித்துக்கொள்ள கோவில் பூசாரி அதனை உள்ளிறக்கி பிரம்பின் கூர் முனையை வாய் வழியாக வெளியே கொண்டு வந்தார்.

நான், “அவன கொன்னு போடுங்க படுத்தாதிக, கொன்னுடுங்க,” எனக் கதறினேன்.

ஜமீன் திரும்பி, “இருடே அதுக்குதானே வந்திருக்கோம். பைய்ய பண்ணுவோம்” என்றார். அப்பா என் கைகளைப் பின்புறமாக இறுகப் பிடித்திருந்தார். நான் செயலிழந்து அங்கே அமர்ந்தேன்.

மாரனின் உடல் பனையோலையால் சுற்றப்பட்டு முன் முகம் மட்டும் வெளியே தெரியும் படி உடல் பனை நாரால் கட்டப்பட்டிருந்தது. அவனைப் படுக்க வைத்திருந்த இடத்தின் அருகே குழிதோண்டி அதன் மேல் வெந்துகொண்டிருக்கும் கங்குளை நிரப்பினர். மூன்றடி ஆழம் மொத்தமும் வெந்த கங்கு கட்டைகளால் நிரப்பப்பட்டது.

எனக்கு அப்போதுதான் அது புரிந்தது, “வேண்டா அவன கொன்னுடுங்க, அவன கொன்னுடுங்க” என அணத்தத் தொடங்கினேன். அப்பா என்னை மாறி மாறி அறைந்தார்.

அவன் உடலைச் சுற்றிய பனையோலையோடு குழியில் இறக்கினர். அப்போதும் அவன் முகம் அதே புன்னகையோடு மாறாமல் இருந்தது. எனக்கு போய் அவன் சங்கை அறுக்க வேண்டும் போலிருந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்துகொண்டிருந்தேன்.

ஜமீன் பாட்டுக்காரர் முத்தம் பெருமாளை அழைத்து, “இன்னைக்கி இராத்திரி கர்ண மோட்சம் பாடு. பைய நாளைக்கி விடியலுக்குள்ள முடிஞ்சிருவான்,” என்றார். அவர் திரும்பி பூசாரியிடம் நாளைய பூஜைக்கான ஏற்பாட்டை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

அன்று இரவு ஊர் முழுவதும் திடலில் கூடியது. மருத்துவரும் அங்கே அழைத்துவரப்பட்டிருந்தார் அவர் இப்போது எந்த உணர்வுமின்றி, சலனமேயற்றவராக நிலைத்திருந்தார். நான் அப்போது ஒன்றை உணர்ந்திருந்தேன் இனி இங்கே நின்று அனைத்திற்கும் சாட்சியாக நிற்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்பது தெளிவாகியது. பூசாரி குருந்துடையார் அய்யனாருக்கும், சூட்சமுடையார் சாஸ்தாவுக்கும் சாமத்து பூஜையை ஆரம்பித்தார். இருவருக்கும் படையல் படைக்கப்பட்டு, சாமத்து பூஜை முடிந்து இருவருக்கும் திரையிடபட்ட பின்னர் முத்தம் பெருமாள் பாட்டைத் தொடங்கினார்.

“வந்தான் அங்கே ராசக்குமாரன், காஞ்சி மா நகரின் எல்லையிலே.
ராசனென்றால் அவன் ராசனுக்கும் ராசன் கர்ண மகாராசன்.
பொன்னுருவியை மனங்கொள்ள வந்தான் அங்கு காஞ்சி மா நகருக்கு.
பெண்டாள வந்தான் அங்கு காஞ்சி மா நகருக்கு.
படைக் கொண்டு வந்தானா, பெருந் தோள் கொண்டு வந்தானா,
அவன் வாள் கொண்டு வந்தானா, தன் தேரோடு வந்தானா,
யாருக்காக வந்தானோ, அவன் யாரை எதிர்க்க வந்தானோ.
வந்தானே வந்தான் அங்கு கர்ண மகாராசன்.”

“அம்மா பொன்னுருவி நீ என்னுடன் வா நான் உன்னை பெண்டாளவே இங்கே வந்தேன்” என்றான் கர்ணன். ரதியின் வடிவாக, பளிங்கு சிலையாக, பாவை முகமாக பென்னுருவி கட்டிலில் அமர்ந்திருந்தாள், “சீ, பெண்டாள வந்தாயா சண்டாளா. குலமிலியின் குரல் கேட்கவே என் உடல் கூசுகிறது, நீ என்னையாள வந்தாயா. நீசனே செல் இங்கிருந்து.” என்றாள்.

“செல்ல மாட்டேன். சென்றால் அது உன்னோடுதான். பொன்னுருவி நீ நான் என் நண்பன் துரியனுக்கு அளித்த வாக்கம்மா. கர்ணன் வார்த்தை மண்ணுலகில் பொய்க்குமா. என்னோடு வந்துவிடு. என் சொல்லை வாழவிடு” என்றான்.

பொன்னுருவி வாளை உருவினாள். “வா என்னுடன் துவந்தத்திற்கு. என்னை வென்று என்னை கூட்டிச் செல்” என்றாள். அவள் கோபாவேசத்தால் சீறியெழுந்தாள். சீற்றம்கூட கூட அவள் கைகள் வலுவிழந்தது. கர்ணன் அவளுடன் போரிடவேயில்லை. வண்ண மலர்கள் நிறைந்த மலர் சோலையில் மெல்ல மெல்ல பூக்கள் பறித்துக் கொண்டேயிருந்தான். அவன் மேனி தன் கைப்படாமல் அவளைத் தீண்டாமல் விலகிக்கொண்டேயிருந்தான்.

அவள் வலுவிழந்து சோர்ந்து இறுதியில் அவனுடன் வரச் சம்மதித்தாள். கர்ணன், பொன்னுருவியை துரியோதனிடம் சென்று நிறுத்தினான்.

“அரசர்கரசே” எழுந்தான் அவையில் மகாமந்திரி. “அரசே, குரு குலத்தின் இளையோனே, கௌரவர்களின் மூத்தோனே. வந்தவள் மகாமங்கையானாலும், ரதியானாலும் உடன் கூட்டிவந்தது மாற்றான் அல்லவா” என்றான்.
அரியணை விட்டெழுந்தான் துரியோதனன், “மாற்றான் என்ற சொல் என் அவையில் வேண்டாம். மதிகெட்டு அதனை யார் சொன்னாலும் சிரமின்றி போவர்” எனச் சீறினான். பின் அவனே, “ஆனால் துரியோதனனாகிய நான் குரு குலத்தின் இளையோன் அன்றோ. என் தனியாசையும், சொல்லும் இவ்வவையில் இல்லையன்றோ” என்றான்.

துரியோனதனன் அவையில் கர்ணனை பொன்னுருவியை மணம் செய்யும்படி சொன்னான்.

கர்ணன் பொன்னுருவியின் மணம் நிகழ்ந்தது.

“நாளாம் நாளாம் இது கர்ணன் மண நாளாம்
வந்தாளே வந்தாள் அங்கு பொன்னுருவி
மணங்கான வந்தாள் அங்கு காஞ்சி மகா ராணி
அங்க நாட்டின் பட்டத்தரசியாக வந்தாளே…
அதிரதன் வாழ்த்து சொல்ல, ராதை குங்குமமிட
நடந்ததங்கே திருமணமாம் திருமணம்
மாவீரனின் திருமணம்”

காஞ்சி மாநகர ராஜன் பொன்னுருவிக்கு மணக்கொடையை மறுத்துவிட்டான். மணங்கண்ட நாள் பொன்னுருவி மாயா ரூபமெடுத்தாள். குலமிலியின் அரசில் ஒரு சொல் சொல்லமாட்டேனென்றாள். அவன் விரல் அவள் மேல் படக்கூடாதென்று சத்தியம் வாங்கிக்கொண்டாள்.

“நீ தொட்டால் நான் தீட்டாவேன். உன் கைபட்டால் நான் தீயிற்கே இரையாவேன். உன்னோடு ஒரு சொல்லும் இனி எனக்கில்லை. என் பெயரைச் சொல்லும் அருகதைக்கூட குலமிலியே உனக்கில்லை. நீ நீசானாகவோ, கயவனாகவோ இருந்தால்கூட பரவாயில்லை. நீயோ குலமே தெரியாமல் நிற்கும் அற்பன். உன் ஒரு சொல் இனி என் செவி கேளாது செல் இங்கிருந்து,” என்றாள்.

நான் மாரனைப் பார்த்தேன். அவன் அதே புன்னகையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்தான். மருத்துவரும் கதையில் ஆழ்ந்திருந்தார். அங்குள்ள ஒவ்வொருவரும் கதைக்குள் சென்றுவிட்டிருந்தனர். நானே அத்தனை நேரம் அனைத்தையும் மறந்து கதையிலேயே இருந்தேன். இரவு உச்சி பூஜைக்காக கதை நிறுத்தப்பட்டபோதே மீண்டேன். மாரனும் அங்கிருந்து முத்தம் பெருமாள் அண்ணன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான். அவனிடமிருந்து வலியின் ஒரு அசைவோ முனங்கலோ வரவில்லை. அத்தனை நிலைத்திருக்க என்னால் முடியாது. அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கருகிக்கொண்டிருக்கும் வேளையிலும் அவன் கதைப்பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

பூசாரி பூஜைகளை முடித்ததும் முத்தம் பெருமாள் அண்ணன் தொடர்ந்தார்.

அன்று சென்றவன் அதன் பின் அங்கே திரும்பவேயில்லை. நாட்கள், வருடங்கள் என ஓடின. அவள் அங்க நாட்டின் மாளிகையிலிருந்து வெளியே வரவேயில்லை. பொன்னுருவி என்ற சொல் கர்ணனின் காதுக்கு கேளாமல் பார்த்துக்கொண்டாள். கர்ணனின் கண் ஒவ்வொருநாளும், பொழுதுமென அவள் மேல் இருந்தது. அவளின் தேவைகளை சிரம் மேற்கொண்டு செய்தான்.

இறுதியாக வந்தான் அங்கு அவளைக் காண, “அம்மா பொன்னுருவி இன்று பாரதப் போரின் பதினேழாம் நாள். நான் இன்று கவுரவப் படைக்குத் தலைமை தாங்கப் போகிறேன்” என்றவனை இடைமறித்து, “செல் நீசனே, இன்று அர்ச்சுனன் அம்பால் உன் நெஞ்சம் பிளக்கப்படும் அத்தோடு என் வஞ்சம் அடங்கிவிடும். குலமிழந்தவன் வாழ்வு எப்படியிருந்தாலும் சாவு இத்தனை கொடியதாகத்தான் இருக்கும்,” என்றாள்.

கர்ணன், “அம்மா, அதுவே உன் ஆசையென்றால் அதை நான் உனக்கு அருள்கிறேன். ஆனால் ஒரே ஒருமுறை உன்னிடம் மட்டும் சொல்லிச்செல்ல ஒன்றுண்டு எனக்கு. நான் குலமிலியில்லை அம்மா, நான் பாண்டுவின் மைந்தன், குந்திதேவியின் மைந்தன். பாண்டவர்களின் அண்ணன். என் சாட்சியாக வானில் நிற்கிறான் பார் சூரியன் அவன் சொல்வான் நான் யாரென்று, அவன் சொல்வான் நான் பாண்டவர்களின் முதல்வனென்று” என்றான்.

கர்ணனின் சொல்லால் பொன்னுருவி செவியிழந்து, செயலிழந்து போனாள், “நான் கொண்ட மணாளன் பாரதத்தின் முதல்வனா, பட்டத்தில் முடிச்சூட்டப்பட வேண்டியவனா? பெருங்குலத்தோனா. இதையறியாமல் தவறிழைத்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் அரசே என்னை மன்னியுங்கள். இதோ திலகம்! வென்று வா நீ அரசே. நான் அறிவிக்கிறேன் நீ யாரென்று உலகிற்கு! குலமிலி என்று தூற்றப்பட்டவன் குரு குலத்தின் முதல்வனென சொல்கிறேன் நான்!” என்றாள்.

கர்ணன், “அது வேண்டாம்மா, அப்படி நடந்தால் நீ என்னிடம் கேட்ட வாக்கு பொய்த்துவிடும். உன் ஆசை நான் தம்பி அர்ச்சுனன் அம்பால் நெஞ்சம் பிளக்கப்பட வேண்டுமென்று அது நடக்கட்டும். கர்ணனிடம் கேட்ட வாக்கு மண்ணில் பொய்ப்பதில்லை. நான் குரு குலத்தவனல்ல, குலமிலியும் அல்ல. கொடுப்பதால் கர்ண குலத்தவன். அனைத்தையும் தந்து செல்வதாலேயே கர்ணன். வருகிறேன் அம்மா,” என்று பொன்னுருவியிடம் விடைபெற்று கர்ணன் போருக்குச் சென்றான்.

முத்தம் பெருமாள் அண்ணன் பாடப் பாட பின்பாட்டு சென்றுகொண்டேயிருந்தது. காலை விடியல் தொடங்கியிருந்தபோது, மாரனின் உடலிலிருந்து, “குய்யோஊஊஊஊஊ….” என பெருங்கேவல் எழுந்தது. முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் எழுந்த அந்த கேவல் என்னை உலுக்கியது. அமைதியாக ஒலித்துக்கொண்டிருந்த பாட்டு முடங்கி மக்களிடம் ஒரு சலசலப்பு எழுந்தது. அங்கிருந்த அனைவரும் அங்கே நடக்கப்போவதை அறிந்திருந்தனர். மௌனமும், சலசலப்பு கலந்து அமைதி அங்கே உருவாகியது

அவன் கண்ணசைவால் என்னையும், மருத்துவரையும் அழைத்தான். அருகே சென்றபோது அவனுடல் முழுதும் வெந்திருந்தது அவனுடலை சுற்றியிருந்த பனையோலை கங்கில் கருகிச் சருகாகியிருந்தது. அவன் வெற்றுடல் வெந்து கருஞ்சிவப்பில் கனன்றிருந்தது. மருத்துவர் அவனருகே சென்றார், சொல் எழுகிறது, ஒலி எழுகிறதா என்றே தெரியாமல் அவரின் காதில் அவன் ஏதோ சொன்னான்.

பின் கண்களால் என்னை அழைத்தான், நான் அவனருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தேன், “கர்ணன் பொன்னுருவிய கல்லாணம் பண்ணிக்கிட்டான்ல,” என்றான். எனக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது அவன் பேசட்டும் எனக் காத்திருந்தேன், “அவா அன்னைக்கு இராத்திரி முழு சம்மதத்தோடதான் வந்தா. இராத்திரி முழுக்க மதுரைக்கு போய் என்னலாம் பண்ணனும்னு சொல்லிக்கிட்டு வந்தா,” என்றான். அவன் சொற்கள் ஒன்றொன்றாக உதிர்ந்தன. அதனை நான் முன்னரே உய்த்தறிந்திருந்ததால் எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை.

“கர்ணனோட கடசி நாள்லதான் பொன்னுருவி அவன கைகளால தொட்டுரா,” என்றான். எனக்கு அவன் சொல்வதனைத்தும் புரிந்தது, என்னால் ஒரு சொல்லும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

“அவ நீ வருவான்னு எதிர்பார்த்தா?” என்றான்.

நான் அவனைப் பார்த்தேன். அதே புன்னகை. ஒரு சிறு மாற்றம்கூட அவனிடம் நிகழவில்லை. நான் அங்கிருந்து என்னை விலக்கிக்கொள்ள விரும்பினேன். அவனிடம் அதற்கு மேல் பேசும் சக்தியும் எனக்கு எழவில்லை.

நான் திரும்பி நடந்தபோது மருத்துவர் புளியமரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். நான் அவர் பார்வையைத் தவிர்க்க விரும்பினேன். அவர் என்னருகே வந்து பீடியை பற்ற வைத்துக்கொண்டு, “கர்ணன் துரியோதனனுக்கு ஒசரம்தானே பொன்னுருவியைத் தூக்கியாந்தான்,” என்றார். ஓர் மெல்லிய அதிர்வு உச்சியில் தொடங்கி என் பாதம் வரை சென்றது. நான் திரும்பி மாரனைப் பார்த்தேன்.

அவர், “அவஞ் சொல்லல நானா ஊகிச்சேன்,” என்றார்.

நான், “ஆமா கடசா, என்ன இருந்தாலும் கர்ணன் மட்டும்தான் கர்ண குலம், துரியோதனன்லாம் குரு குலம்தானே” என்றேன். என் பேச்சு எனக்கே கசந்தது. நான் அவரிடமிருந்து விலக விரும்பினேன்.

எதிரில் நின்ற சொற்கேளாவீரனை நோக்கி பார்வையை செலுத்திய அவர், “அது அப்படித்தான் துரியோதனனுக்கு தொட துடி, கர்ணனுக்கு மீச துடியாக்கும்,” என்றார். பின் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். என் தொடையிரண்டும் தன்னிச்சையாக ஆடின. திரும்பி மாரனைப் பார்த்தேன் அவன் முகம் அதே நிலைத்த புன்னகையுடன் என்னை நோக்கி சிரித்துக்கொண்டிருந்தன.

முத்தம் பெருமாளின் ஓசை காற்றில் கரைந்தது,

“தேர் பாகன் என்றவன் இன்று தேரேறி செல்கிறான்.
பரதேசி என்றவன் இன்று பல்லக்கிலே செல்கிறான்.
யாருக்காக வந்தான் இங்கு அவன் ஊருக்காக வந்தானம்மா.
பாருக்காக செய்தான்னம்மா அவன் பார் போற்ற சென்றானம்மா.
கவசத்தையும், குண்டலத்தையும் அவன் ஊருக்கே தந்தானம்மா…
தன்னுயிரையும் தந்தானம்மா… அவன் தன்னுயிரையும் தந்தானம்மா…”
அவர் குரலோசை மெல்ல அடங்கி பறையோசை எழுந்தது.

[சமர்ப்பணம்: கணியான் தங்கராசுவிற்கு]

10 comments for “மோட்சம்

  1. ராஜமாணிக்கம் வீரா
    May 1, 2021 at 8:36 am

    மிக அற்புதமான கதை. பொன்னுருவியை கூத்து பார்ப்பவர்கள் , ஆய்வாளர்கள் தவிர பலருக்கு தெரியாது. கச்சிதமாக பின்னப்பட்டிருக்கும் கதை. புதிய கதைக்களத்தில் நுட்பமாக விளையாடி ரசிக்க வைக்கிறார் நவீன். வாழ்த்துக்கள் நவீன்.

  2. இளம்பரிதி
    May 1, 2021 at 9:39 pm

    அன்புள்ள நவீன்,

    மோட்சம் கதை படித்தேன், ஆரம்பத்தில் வாசிக்கையில் மாடன் மோட்சம், கழுமாடன் ஆகிய கதைகளையே நினைவுபடுத்தியது. உங்கள் மொழியில் அக்கதைகளின் மறுஆக்கமோ என எண்ணிக்கொண்டேன்,

    “பழுக்கட்டும் நாலு பேத்துக்கு பழுத்து, புழுத்து செத்தாதான் எல்லாவனுக்கும் புத்தி வரும்” என்ற வரியிலிருந்து கதையின் கோணம் வேறு திசையில் செல்கின்றதென அறிந்துகொண்டேன்.. இந்த வரி என்னை மிகவும் உலுக்கியது, வஞ்சத்தின், மேட்டிமையின் ஊறலை உடல் முழுதும் பரப்பி ஒருகணம் கூச செய்தது..

    “அது மணலின் மேல் பட்டு மணல் ரத்த பொறுக்காக உறைந்துகொண்டிருந்தது. நான் திரும்பி பலி மணலைப் பார்த்தேன். அதே இரத்த சிவப்பை தன்னுள் கொண்டது லட்சோப லட்சங்கோடி இரத்தங்களை தன்னுள் விழுங்கியது.” என்ற குறிப்பும் அற்புதமான ஒன்று.

    செம்மண் நிலத்தில் கூர்கொண்ட நீர் துளி உடல் கிழித்து குருதி தெறிக்க செய்திடும் மாரியின் சமர் கட்சி வந்து சென்றது.. மேல உள்ளவன் என எண்ணிக்கொள்பவன் கீழ் உள்ளவன் என என்ன படுபவனை தெய்வநிலை அடையச்செய்யும் பெரும் மோட்சமாக அந்த குருதி தடங்களை காண்கிறேன்.

    “ஐயோ, வெளியெடுத்தா செத்துருவான்,” என்னும் தருணம் உணர்வு கொந்தளிப்பின் பெரும் அலை ஒன்றை மேல வீசி சென்றது, மாரணை காப்பாற்ற கெஞ்சிய அதே நா அவனை கொன்று விட மன்றாடும் மானுடத்தின் குரல் என் உணர்வுகளை நிலைகொள்ளாமல் ஆக்குகிறது..

    மாரனின் கழுவேற்றம் பற்றி மட்டும் இக்கதை பேசி இருந்தால் இது மற்றுமொரு கதையாகி கவனிக்கப்படாமல் சென்றிருக்கும். இக்கதையுடன் கணியன் கூத்தின் சாரம் இணையும் இடம் உங்களின் வாசிப்பனுபவமும் நீங்கள் நேரில் பெற்ற அனுபவமும் இணையும் தருணமாக மாறுவதை உணர முடிந்தது, ஒருவகையில் நீங்களே உங்களை அங்கே கண்டடைகிறீர்கள் என எண்ணுகிறேன்..

    முத்தம் பெருமாளின் ஓசை கர்ணனின் காதை வழி செவியை நிரப்புகிறது, குலமிலி ஒருவன் திகமெனும் பெருங்குளத்தின் செங்கொடையாக மாறிவரும் காவியம் அது. மாரனும் கர்ணனும் வேறில்லை தியாகமெனும் நதியாகும் பெரும் ஊற்று என்பது உங்களின் மொழியின் வழி ஒழுகி செல்கிறது.

    மாரன் என்னும் பெயர் மன்மதனை குறிப்பது, கதையிலும் முத்தம் பெருமாள் அவனை “கிண்ணரனாக்கும்” என்றே விளக்குகிறார் , பௌத்தத்தில் மாரன் பெண்களை கவரக்கூடியவன் இக்கதையிலும் அவ்வாறே, இத்தொன்மையும் என்னை கவர்ந்த ஒன்று.

    வரப்போகாத அவளின்மேல் அவன் வெந்தும் தணியாத கொண்டுள்ள ஏக்கமும், எதிர்பார்ப்புமே அவனின் மோட்சம், மோட்சம் பெற்று அவன் வீசும் புன்னகை அவளுக்கு அவனளிக்கும் பெரும் சாபம்..

  3. May 2, 2021 at 12:11 pm

    நேற்று நள்ளிரவைத் தாண்டிதான் இக்கதையை வாசித்தேன்.இரவின் பேரமைதியும் மோட்சம் கதையின் உயிர் வலியும் சேர்ந்து பிறடியின் ஓரங்களில் ஏதோ ஊர்ந்து சிலிர்ப்பை உண்டாக்கிக்கொண்டே இருந்தது.கழுவேற்றம் கதை ஒன்றை ஜேமோ 100 கதைகள் வரிசையில் எழுதியிருக்கிறார். அதனை வாசித்த அனுபவம் இருந்ததால் இக்கதை அதன் பீதியை நீட்டிக்கச்செய்து கொண்டே இருந்தது. கதை கழுவேற்றத்துக்கான் ஏற்பாடுகள் நடந்துகொண்டே இருக்க நவின் மோட்சம் கதைக்கு ஈடான தொன்ம நிகழ்வுக்குக் கதையை நிகழ்த்துகிறார்.அதனால் அதன் செல்திசையின் சீற்றம் சற்று ஆசுவாசப்படுத்தியது அல்லது உக்கிரமாக்கியது. வலியைத் தாங்கிகொள்ளும் ஆற்றல் மாறனுக்கு எங்கிருந்து வந்தது என்று யோசிக்கும்போது அவன் நெஞ்சில் தேங்கித் ததும்பிக்கொண்டே இருந்த உண்மைதான் காராணமாகிறது என்று உணர்கிறேன். கதையில் தொன்மக் கூறு மேலும் அவன் சத்தியத்தை நிறுவிவிடுகிறது. இது ஜி எஸ் வி நவீனின் மிக சிறந்த கதையாக பேசப்படும்.

  4. May 3, 2021 at 2:27 pm

    சிறந்த கதை.கழுவேற்றம் தொடர்பானஒவ்வொரு கதையும் உருக வைக்கிறது.( இது நான் வாசிக்கும் மூன்றாவது கதை) கர்ணன் –பொன்னுருவி கதை மேலும் ஆழம் தருகிறது.வாழ்த்துக்கள்,நவீன்! ——— சாந்தமூர்த்தி

  5. ப. பாலசுப்பிரமணியன்
    May 13, 2021 at 8:18 am

    அறபுதமான கதை! வாழ்த்துகள்

  6. May 13, 2021 at 12:22 pm

    Excellent

  7. Vijayaragavan
    May 13, 2021 at 2:25 pm

    கணியான்கூத்தின் கதைபாடலின் தொன்மம்,
    என்றும் உள்ள சாதீய ஏற்றத்தாழ்வு,
    தனிமனித தியாகம் ( இதைப்பற்றி யோசிக்கும்தோறும் கோட்டிக்காரத்தனமாக தோன்றினாலும்,எல்லா காலக்கட்டங்களிலும் இப்படியான கோட்டிக்கார தியாகிகளால் தான் இந்த பூமி சுழல்கிறது)
    ஆகியவை கலந்து மனதை கனக்க வைக்கும் கதை.

    உண்மையான இலக்கிய ஆக்கம் என்பது,அறம்,நேர்மை,ஒழுக்கவிழுமியங்கள்,நேர்மறைகூறுகள் போன்றவைகளின் பயன்மதிப்பு அதிகாரத்தின் முன் வலுவிழந்து போவதை அப்பட்டமாக படம் பிடித்துக்காட்டுவதுதான்.

    அம்மாதிரியான ஆக்கம் இது.

    நேற்று நாயாட்டு படம் பார்த்தேன்.
    அதன் தாக்கத்தால் விரக்தி.
    இப்போது இக்கதையால் திக்பிரேமை…

    வாழ்த்துக்கள்.

  8. May 14, 2021 at 1:45 am

    அன்புள்ள நவீன்,
    இது நான் வாசிக்கும் உங்கள் முதல் கதை. காத்திரமான கதை. இதில் உள்ள நிலமும், அதன் மக்களும் கனவும் என்னுள் விரிந்தனர். கர்ண மோட்சத்தைக் கதையின் போக்குடன் அற்புதமாக இணைத்திருக்கிறீர்கள். கழு பற்றி இக்கதையில்தான் முதலில் விரிவாக வாசிக்கிறேன். மெல்லிய அதிர்வுடன் உங்கள் விவரணைகளை வாசித்தேன். உங்கள் மொழிநடையை மிகவும் ரசித்தேன். மாரனின் மாறாத புன்னகை சொல்லத் தவிர்த்த அவ்வுண்மை இறுதியில் பொன்னுருவியை, கர்ணன் கொணர்ந்தது துரியனுக்காகவே என்று தெளிதலில் வெளிப்படுகிறது. நீங்கள் நிறைய எழுதியிருக்கிறீர்கள். சிறிது சிறிதாக வாசிக்கிறேன்.
    ஜெகதீஷ் குமார்.

  9. விஜி
    May 17, 2021 at 1:51 pm

    இச்சிறுகதையினை வாசித்து முடித்த போது இவ்வளவு நாட்களாக நான் கொண்டிருந்த அபத்த சிந்தனை ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, ஏன் இலக்கியவாதிகள் புரியாத பேச்சு மொழியை வட்டார வழக்குப் பயன்பாடு என்று சொல்லி கதைக்குள் புகுத்துகிறார்கள்.! இது உலகத் தமிழ் வாசகர்களுக்கு பெரும் தலைவலியினை கொடுக்கின்ற விஷயம் ஆயிற்றே, என்று.

    ஆனால் கதையினை அவர்கள் பேச்சு வழக்கிலேயே உள்வாங்குகிற போது வாசக மனதாகப்பட்டது அங்குள்ள அக மற்றும் புறச் சூழலுக்குள் புகுந்து அங்கே வாழ்கிற மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்து கதைக்குள் பயணிக்கும். இது இலக்கிய வாசிப்பின் பரவச நிலை. அது கொடுக்கிற புதிய அனுபவம் நம்மைச் சலவை செய்து புத்துணர்ச்சி பெற வைக்கும்.

    கதை வாசிப்பில் கதாப்பாத்திரங்கள் வழி கதையினை அப்படியே புரிந்துகொள்வது ஒரு புறமிருக்க, கதாசிரியர் எதை நோக்கிப் பயணிக்கின்றார் என்பதை கொஞ்சம் ஆழமாகச் சென்று உள்வாங்குகிறபோது ஏற்படும் பரவசம் என்பது நமக்குள் மிகபெரிய தேடலை விதைத்துவிட்டுச் செல்லும். விதை நிலமாய்.

    கழுவேற்றம் என்பது எப்படி இருக்கும் என்பதை உள்வாங்கியபோது நமது உயிர் நாடியில் கூர்மையான ஆயுதம் ஒன்று பாய்வதைப் போன்ற மின்வெட்டு உடலுக்குள் ஊடுருவுவதை ஒரு கணம் உள்வாங்கலாம்.

    கதையில் பாண்டவர்களையும் இடைசருகல் செய்திருப்பதின் சூட்சமம் எனக்கு மட்டும் புரிகிற உண்மையாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

    ஸ்ரீவிஜி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...