சூப்பர்மேன் மற்றும் சில சாபங்கள்

essay2“இவரு பெரிய சூப்பர்மேனு வந்துட்டாரு காப்பாத்த…” என்று பலர் கிண்டலாகவும் கேலியாகவும் பேசிக்கேட்டிருப்பீர்கள். நாம் அறியாமலேயே நம் வார்த்தைகளுக்கு நடுவில் வந்து அமர்ந்து கொள்ளும் ஒரு கதாப்பாத்திரம்தான் இந்த “ சூப்பர்மேன்” பாத்திரம். சாகசங்களின் குறியீடாக ‘சூப்பர் மேன்’ எனும் பெயர் மாறியுள்ளது. 

யார் இந்த சூப்பர்மேன்? 1938-இல் இரண்டு உயர்க்கல்வி மாணவர்கள் வெர்ரி சீகன் (Verry Siege) ஓவியர் ஜோ சுஸ்டர் (Joe Shuster) அவர்களில் கற்பனையாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் சூப்பர்மேன். பத்திரிகைகளுக்குச் சித்திரக்கதைகளாக உருவாக்கி கொடுத்துக்கொண்டிருந்தார்கள் இவர்கள். முதல் சூப்பர்மேனால் பறக்க முடியாது. ஆனால் உயரமாக தாவும் சக்தியைக்கொண்டிருந்தான் . வேகமாக கட்டடத்திற்குக் கட்டடம் தாவித்தான் சூப்பர்மேன் சாகசம்புரிவார்.

மனிதன் தன் தேவைக்கு ஏற்ப கடவுள் எனும் உருவத்திற்கு எப்படியும் சக்தியை கூட்டியும் குறைத்தும் கற்பனைக்கான அத்தனை சுதந்திரத்தையும் பயன்படுத்திக்கொண்டவன். சாதாரண மனிதனைவிட சக்தியில் ஆற்றலில் மிகுந்திருக்கும் ஒன்றை மிகுதிப்படுத்திக் காட்டும் உக்திதான் ‘சூப்பர் மேன்’ விசயத்திலும் நடந்தது.

ஆம்! காலப்போக்கில் சூப்பர்மேனை மெருகேற்ற நினைத்து கவர்ச்சியான வண்ணங்களில் உடைகளை மாற்றி நெஞ்சில் ‘S’ என்ற எழுத்தைப் பதித்ததுடன் பறக்கும் சக்தியையும் கொடுத்தார்கள் இந்த இரு நண்பர்கள். தொடர் சித்திரக் கதைகளாக வந்து பிரசித்திபெற்று 1948-இல் பெரிய திரைக்கும் வந்தது. அன்று தொடங்கிய சூப்பர்மேனின் பயணம் சமீபத்தில் திரைக்கு வந்த “மேன் அப் ஸ்டீல்” வரை தொடர்கிறது.

இப்போது வந்திருக்கும் “மேன் அப் ஸ்டீல்” இதற்கு முன் வந்த சூப்பர்மேன் படங்களின் கட்டமைப்பை உடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதற்கு முன் வந்த படங்களில் ‘கிறிப்டான்’ என்ற கிரகத்தில் பிறந்து அழிந்து கொண்டிருக்கும் கிறிப்டானிலிருந்து தன் தாய் தந்தையினரால் ஒரு சின்ன விண்கலத்தில் வைத்து பூமிக்கு அனுப்பப்படும் குழந்தையாக காட்டப்படும். அந்த விண்கலம் அமெரிக்காவின் ஒரு கிராமத்தில் வந்து விழும். அந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியர் அவனை “நல்லவனாக” வளர்ப்பார்கள். பையன் வளர்ந்து தன் பூர்வீகத்தை அறிந்து தன் சக்தியை புரிந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்வான் ; சாகசம்புரிவான்.

‘மேன் அப் ஸ்டீல்’ படம் சூப்பர்மேனின் வலியையும் அவனின் மனகுழப்பத்தையும் சொல்கிறது. அவனின் வாழ்வு சுகமானதில்லை என்பதைச் சொல்கிறது.

கிறிப்டானிலிருந்து பூமிக்கு வந்து வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்படும் சூப்பர்மேன் “நான் ஏன் மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் வேறாக இருக்கிறேன்?” “என் சக்திகளை ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்றெல்லாம் வளர்ப்புத் தந்தையிடம் கேட்கிறான். அதற்கெல்லாம் வளர்ப்புத் தந்தை விளக்கம் தருகிறார். கண்டிப்பாக உன் சக்திகளை வெளிக்காட்டக்கூடாது. உன்னை புரிந்து கொள்ளும் சக்தி இந்த பூமி மக்களுக்கு கிடையாது என்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வளர்ப்புத்தந்தை சூறாவளி ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். காப்பாற்றப்போகும் சூப்பர்மேனை தடுக்கிறார் வளர்ப்புத் தந்தை “நீ என்னை காப்பாற்றுவதை அனைவரும் பார்த்தால் உன் ரகசியமெல்லாம் அனைவருக்கும் தெரிந்துபோகும். வேண்டாம்” என்று சூப்பர்மேனை தடுத்துவிட்டு உயிரிழக்கிறார்.

சக்தி இருந்தும் தந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்ற விரக்தியில் தாடி வளர்த்துக் கொண்டு திரிகிறார் சூப்பர்மேன். தேடி அலைந்து தன் பூர்வீகத்தை அறிந்து கொள்ளும் சூப்பர்மேன் தன் இனத்தினாலேயே பூமிக்கு பேராபத்து வருவதை உணர்ந்து செய்வதறியாது தவிக்கிறான்.

சூப்பர்மேனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் பூமியை அழித்து விடுவோம் என்று மிரட்டுகிறது வில்லன் கூட்டம். சூப்பர்மேன் அமெரிக்க ராணுவ உதவியோடு வில்லன்களை அழிக்கிறான். தவிர்க்க முடியாமல் உலக மக்களுக்காக வில்லன்களின் தலைவனை சாகடிக்கிறார் சூப்பர்மேன். (பொதுவாக சூப்பர் ஹீரோக்கள் யாரையும் சாகடிப்பதில்லை. ஒரு சூப்பர் ஹீரோ கொலை செய்வது இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன்.) பூமி மக்களுக்கு விசுவாசமாகவும் பாதுகாப்பாகவும் நான் இருப்பேன். நீங்கள் நான் யார் என்பதை ஆராயக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறார் சூப்பர்மேன். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கோர்ட், சூட், டை, கண் கண்ணாடியுடன் மக்களோடு மக்களாக கலக்கிறார் சூப்பர்மேன்…. தி மேன் அப் ஸ்டீல்.

சூப்பர்மேன் சாபம்

ஹாலிவூட்டில் சூப்பர்மேன் சாபம் என்று ஒரு சொல் உண்டு. ஏன் இப்படி ஒரு சொல் என்று பார்த்தால் சூப்பர்மேன் பாத்திரத்தில் நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையில் நிம்மதி இழந்ததுதான் காரணம்.

Kirk Alyn

முதன்முதலில் திரைக்கு வந்த சூப்பர்மேன் படத்தில் நடித்தவர் கேர்க் அலின் (Kirk Alyn) இந்த படம் 1948-ல் வந்து வெற்றிகரமாக ஓடியது. இரண்டு வருடங்கள் கழித்து 1950-ல் இரண்டாம் பாகமாக அதோம் மேன்Vs சூப்பர்மேன் (Atom Man Vs Superman) படம் திரைக்கு வந்தது அதன்பிறகு கேர்க் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தலைகாட்டினார். ஆனால், அந்த படங்கள் எதுவும் சூப்பர்மேன் அளவுக்கு அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.

சூப்பர்மேன் 1951-ல் சூப்பர்மேன் தொலைக்காட்சித் தொடராக எடுக்க முடிவானது. அப்போது மீண்டும் சூப்பர்மேனாக நடிக்க கேர்க்கை அழைத்தபோது அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஏன் என்று காரணம் தெரியவில்லை.

மார்ச் 14,1999-ல் தனது 88-வது வயதில் அவர் காலமானார். இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்ற பதிவு எதுவும் சரியாக இல்லை.

George Reeves

1951-ல் சூப்பர்மேன் தொலைக்காட்சித் தொடராக நடித்தவர் ஜோர்ஜ் ரீவ்ஸ் (Gerge Reeves) 1958 வரை இத்தொடர் ஒளிபரப்பானது. இவருக்கு பெரியவர்களை விட குழந்தை ரசிகர்கள்தான் அதிகமாக இருந்தனர். அதனாலேயே பொது இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களில் குடிப்பதையும் புகைப்பதையும் தவிர்த்தார் ஜோர்ஜ். முதலில் சந்தோசமாகவே நடித்த ஜோர்ஜ் காலப்போக்கில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். சூப்பர்மேன் தவிர்த்து வேறெந்த படங்களும் அமையாமல் போனது. கிடைத்த சில படங்களும் சரியாகப் போகவில்லை. 1958-ல் சூப்பர்மேன் தொடரும் நிறுத்தப்பட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் அவரை சூப்பர்மேன் என்றே அழைத்தனர். சூப்பர்மேன் பிம்பத்திலிருந்து வெளிவர முடியாமல் ஜூன் 16,1959-ல் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

Christopher Reeve

1978-ல் பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு திரைக்கு வந்து சக்கைபோடு போட்ட படம் ‘சூப்பர்மேன் தெ மூவி’ (Superman the movie). அதில் சூப்பர்மேனாக நடித்தவர் கிரிஸ்டபர் ரீவ் (Christopher Reeve).

சூப்பர்மேனாக நடிப்பதற்காகவே பிறந்தவர்போல் அந்த பாத்திரத்திற்கே ஒரு புத்தம் புதிய கம்பீரத்தைக் கொடுத்தார் கிறிஸ்டபர் ரீவ். இவரைப்போல் சூப்பர்மேன் வேடத்திற்கு கச்சிதமாய் பெருந்தியவர் வேறு யாரும் இல்லை என்றொரு பேச்சு இன்றும் ஹாலிவூட்டில் உண்டு.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1980-ல் சூப்பர்மேன்-2 1983-ல் சூப்பர்மேன்-3 திரைக்கு வந்தது. நன்றாகவே ஓடியது. ஆனால் 1987-ல் திரைக்கு வந்த சூப்பர்மேன்-4 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் கிறிஸ்டபருக்கு தோல்வி இல்லை. சூப்பர்மேன் தவிர்த்து அவர் நடித்த மற்ற படங்களும் நன்றாக ஓடியது. அவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சினிமா தவிர்த்து சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அதோடு நின்று விடாமல் அவர் மனைவியோடு சேர்ந்து சொந்தமாக சமூகசேவை மையம் ஒன்றை நிறுவி சேவையில் ஈடுபட்டார்.

சைக்கிள் ஓட்டம், குதிரைச்சவாரி இன்னும் இதரபல விளையாட்டுகளிலும் சுறுசுறுப்பாக தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் கிறிஸ்டபர் ரீவ். திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் சூப்பர்மேன்தான் என பத்திரிகைகளும் ரசிகர்களும் பாராட்டி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் சூப்பர்மேன் சாபம் இவரை வேறுவிதமாக தாக்கியது. குதிரைச்சவாரி செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்து முதுகுத்தண்டில் பலத்த அடிபட்டு கழுத்துக்கு கீழ் செயல் இழந்து போனது.

எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் போனது. இருந்தும் அவர் துவண்டுவிடவில்லை. நம்பிக்கையோடு இருந்தார். சக்கரநாற்காலியில் அமர்ந்துகொண்டே ஒரு படத்தை இயக்கி நடித்தும் வெளியிட்டார். அவரின் சேவை மையம் தொடர்ந்து இயங்கியது. அவரின் காதல் மனைவியும் பிள்ளைகளும் துணையாக இருந்தனர். பத்து வருடங்கள் சக்கரநாற்காலியிலேயே காலத்தைக் கழித்தவர் அக்டோபர் 10, 2004-ல் 52-வது வயதில் காலமானார்.

Dean Cain

1993-ல் சூப்பர்மேன் மீண்டும் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பானது. அதில் நடித்தவர் டீன்கேய்ன் (Dean cain) தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. அவரும் பிரபலமானார். 1997-ல் தொடர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சில படங்களில் தலை காட்டினார். சில தொலைக்காட்சிப்படங்களில் நடித்தவர். தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். ரொம்பவும் பிரபலமாகாமலும் ஒரேயடியாக காணாமல் போகாமலும் இருந்து வருகிறார் டீன்கேய்ன். சூப்பர்மேன் சாபம் இவரை மன்னித்து விட்டுவிட்டது என்றே தோன்றுகிறது.

Tom Welling

2001-ல் சூப்பர்மேனின் இளமைக் காலத்தை மையமாக வைத்து உருவான Smallville என்ற தொலைக்காட்சித் தொடரில் இளம் சூப்பர்மேனாக நடித்தவர் டோம் வில்லிங் (Tom Welling) சிவப்பு, நீல வண்ண உடை அணிந்து பறந்து சாகசமெல்லாம் புரியாமல் ஒரு சராசரி இளைஞனாக தன் சக்திகளை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு தன் ஊர் மக்களுக்கு வரும் ஆபத்தை அவர்களுக்கே தெரியாமல் தடுத்து, தன் படிப்பு, நண்பர்கள் என்று வாழும் இளைஞன் வேடத்தை கச்சிதமாகவே செய்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

2011-ல் இத்தொடர் முடிவுக்கு வந்தது. நீண்ட காலம் சூப்பர்மேனாக நடித்தவர் என்ற பெருமையைத் தவிர வேறெதுவும் இவருக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை.

Brandon Routh

நீண்டகாலத்திற்குப் பிறகு 2009-ல் திரைக்கு வந்த படம் சூப்பர்மேன் ரிட்டர்ன் (Superman Return) இதில் நடித்தவர் பிராண்டன் ரூத் (Brandon Routh).

புதுமுகமாக இருக்க வேண்டும், அதே சமயம் கிரிஸ்டபர் ரீவ் ஜாடையிலும் இருக்க வேண்டும் என்று தேடிப் பிடிக்கப்பட்டவர்தான் பிராண்டன் ரூத். கிறிஸ்டபர் ரீவ் ஜாடை இருந்து. ஆனால் அவரின் நடிப்புத்திறமை இல்லை என்று விமர்சிக்கப்பட்டார். படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் பிராண்டனும் எங்கோ போய்விட்டார்.

Henry Cavil

அண்மையில் திரைக்கு வந்து சக்கைபோடு போட்ட மேன் ஆப் ஸ்டீல் (Man of Steel) நடித்தவர் ஹென்றி கேவில் (Henry Cavil) இதற்கு முன் இருந்த சூப்பர்மேன் செண்டிமென்டை எல்லாம் உடைத்துவிட்டு புதிய தோற்றத்துடன் திரையில் தோன்றி மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். மேன் ஆப் ஸ்டீல் இரண்டாம் பாகத்திலும் இவர்தான் நடிக்கப் போகிறார் என்கிறது ஹாலிவூட் வட்டாரம். சிவப்பு ஜட்டியை வெளியே அணியாமல் உள்ளே அணிந்த முதல் சூப்பர்மேன் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ஹென்றியை சூப்பர்மேன் சாபம் தாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...