அவள் பெயர் அம்பிகை

essay1நான் ஓர் இயற்கை விரும்பி என்பதால் சுற்றுலா செல்வது மட்டுமல்ல சுற்றுப்பயணம் சம்பந்தப்பட்ட இடங்களை வாசிப்பதிலும் அதீத விருப்பம் எனக்கு உண்டு. அந்த வகையில் ‘உயிர்மை’ இலக்கிய இதழில் ‘அங்கோர் வாட்’ கோயிலைப் பற்றியும் ‘போரோபுடூர்’ கோயிலைப்பற்றியும், ‘பிரம்மனன்’ கோயிலைப்பற்றியும் ஒரு முறை வாசிக்க நேர்ந்தது.

அப்போதே அந்த இடங்களுக்கு சென்று வரவும் நம் வரலாற்று கல்வெட்டுகளை காண வேண்டும் எனவும் ஏக்கம் குடி கொண்டது. இதில் அங்கோர் வாட்டைத்தவிர மற்ற இருக்கோயில்கள் இந்தோனேசியாவின் ஜோக்ஜகார்த்தா மாநிலத்தில் உள்ளன. கடந்த மாதத்தில் ஜோக்ஜகார்த்தா சுற்றுலாத்துறை அமைச்சு, ஜோக்ஜகார்த்தா சுற்றுலாத்தளத்தைக் குறித்து மலேசிய இந்தியர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் மலேசிய பத்திரிகை செய்தியாளர்களை அழைத்திருந்தது. அவ்வமைச்சு தேர்வு செய்தவர்களில் நான் வேலை செய்யும் பத்திரிகை சார்பாக எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்து.

சுற்றுப்பயணத்தில் சுற்றிப்பார்க்கும் இடம்தான் பிரதான நிலை வகிக்கிறது. அந்த வகையில் ஜோக்ககார்த்தா இயற்கை வளங்களும், எரிமலைகளும், சண்டி என்று சொல்லகூடிய கோயில்களும் என எந்தக்குறையும் வைக்கவில்லை. ஆனால் நான் அங்கு பார்த்த மனிதர்கள் மலேசிய மலாய்க்காரர்களைவிட வேறுபட்டிருந்தனர். வேறுபட்டிருந்தனர் என்பதை அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நான் கூறும் வேற்றுமை உருவத்தில், உணவில், பழக்கவழக்கத்தில், மட்டுமல்ல தமது மதத்திலும் அவர்கள் அத்தனை பிடிப்பானவர்கள் அல்ல என்பதை காணமுடிந்தது.

நான் சென்ற எல்லா இடத்திலும் செராய்-இஞ்சிக் கலந்த பானத்தை பருகக் கொடுத்தார்கள். அந்தத் தண்ணீர் எனக்கு சற்றும் பழக்கமில்லாவிட்டாலும், முதல் தடவை சற்று சிரமப்பட்டு குடித்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அந்தத் தண்ணீரை குடித்தே ஆக வேண்டிய சூழல் நேர்ந்ததால் அதைக் குடிப்பதற்குப் என்னை பழக்கப்படுத்திக்கொண்டேன். இந்த மாதிரி எந்தவித பூர்வீக பானத்தையும் மலாய்க்காரர்கள் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை. மேலும் வெகுவிரைவாக மேற்கத்திய பாணியை அவர்கள் பின்பற்ற தொடங்கிவிட்டனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.

மூன்று நாட்களான எனது பயணத்தில், நான் ஜோக்ஜகார்த்தா சென்றடைந்ததிலிருந்து, மறுபடியும் ஜோக்ஜகார்த்தா விமான நிலையத்திற்கு வரும் வரை என்னுடன் இருந்தவள், எங்களின் வழிக்காட்டியாக இருந்த திதின் எனும் இந்தோனேசியப் பெண். ஜோக்ஜகார்த்தா பெண்கள் பாத்தவரைக்கும் அழகிகளாகவே இருந்தனர். அவர்களிடன் அந்த மண்ணின் மனம் கலந்து வீசியது. என்னதான் அங்கும் நவீனம் நுழைந்து விட்டாலும் அதில் அவர்களின் கலாச்சாரத்தை சரிபாதி கலந்துதான் வைத்திருந்தனர்.

ஆனால் திதின் ஒரு பேரழகி அல்ல. குள்ளமானவள். பற்கள் சற்று எடுப்பாக இருந்தது.  ஆனால் அவளிடம் அந்த மண்ணுக்குண்டான பாரம்பரியம் இருந்தது. போரோபுடூர், பிரம்மனன் போன்ற 7-ஆம், 8-ஆம் நூற்றாண்டு கலைகோயில்களின் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் எனும் பெருமையும் கர்வமும் அவளின் பேச்சிலும், எங்களிடம் அதனைப் பற்றி விளக்கம் கொடுக்கும்போதும் தெரிந்தது. ஆனால் திதினிடம் ஓர் இனிமையான குணமும் இருந்தது. அதை அவளிடம் பழகுபவர்களால் உணர முடிந்தது. அவள் என் வயதை ஒத்தவளாக இருந்தபடியால் எங்கள் இருவருக்கும் பலவிஷயங்கள் ஒத்துப்போனது.

நாங்கள் இருநாடுகளுக்குண்டான பல விஷயங்கள் குறித்து பரிமாறிக்கொண்டோம். மலேசியாவில் வியாழன் கிழமை மட்டும் கட்டாயம் அரசு துரையைச் சார்ந்தவர்கள் பாத்தேக் துணியிலான ஆடையை அணிய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் அங்கு தினமும் பாத்தேக் துணியைத்தான் அணிகிறார்கள். அது நவீன உடையாக இருந்தாலும் கட்டாயம் பாத்தேக் வகையிலான துணியில்தான்  அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி நானும் திதினும் வெகுநேரம் சிலாகித்துக்கொண்டிருந்தோம். அவள் ஆங்கிலம் சரளமாக பேசினாள். ஆனால் ஆங்கில மொழிக்கு அவளின் நாக்கு பழக்கப்படவில்லை என்பது தெரிந்தது.

“எங்கள் ஜோக்ஜகார்த்தா மற்ற மாநிலங்களைவிட மிகவும் சிறந்தது. அங்கு 134 பல்கலைக்கழகங்களும் 400-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கூடங்களும் இருக்கிறது. கல்விக்கு பேர்போன மாநிலம் எங்களின் மாநிலம்” என்றாள். அந்தப் பெருமையில் கொஞ்சம், தமிழர்களுக்கே உண்டான ஆணவம் தெரிந்தது. (தமிழர்கள் என்றால் ஆணவமா? என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி எழுப்பினால், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் கூறும் ஆணவம் தமிழன் என்று கூறும்போது ஏற்படும் கம்பீரத்தை)

நான் கேட்டேன், “ திதின் இங்கு, நான் காண்பவர்கள் அனைவரும் இந்தோனேசியர்களாக இருக்கிறார்களே? இந்தியாவிலிருந்து வந்து வாழும் தமிழர்கள் இங்கு இல்லையா?”

“இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகப்படியாக பாலியில்தான் வசிக்கிறார்கள். இங்கே மிகவும் குறைவு. ஆனால் இந்து மதத்தைத் தழுவிய இந்தோனேசியர், அவர்களின் பரம்பரைகள் என நிறையபேர் ஜோக்ஜகார்த்தாவில் இருக்கிறார்கள்” என்றாள்.

கொஞ்ச நேரம் மௌனித்த திதின் பிறகு பேசினாள், “ நானே ஓர் இந்துதான். சமீபத்தில்தான் நான் இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டேன்” என்றாள். “உன் பெயர் என்ன”? இது நான். “திதின்” இது அவள். “இஸ்லாம் மாறியப் பிறகும் முன்பும் இருந்த பெயர்கள் என்ன?” மீண்டும் நான். எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பும் பின்பும் என்று பெயர்கள் மாற்றுவதில்லை. நாங்கள் பிறக்கும் போது, இருக்கும் மதத்தை கொண்டுதான் எங்களுக்கு பெயர் வைக்கிறார்கள்.  பிறகு நாங்கள் மதம் மாறினாலும் அதே பெயரோடுதான் இருக்கிறோம். பெயர் எங்களின் அடையாளமாகிறது. மதம் மாறியதற்காக நாங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்வதில்லை என்றாள் திதின். “நீ ஏன் மதம் மாறினாய்?” என்றேன். காதல் திருமணத்தில் மதம்மாற வேண்டிய சூல்நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவள் கூறினாள். அப்படி என்றால் உனது முழுப்பெயர் என்ன என்றேன். அவள் சிரித்துக்கொண்டு திதின் அம்பிகை என்றாள். கோயிலுக்கு போவாயா என்று எனது குழந்தைத்தனமான கேள்வியைக் கேட்டேன். அவளுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. ‘அதில் ஐகிரி நந்தினி நந்தித மேதினி’ என்று மஹிஷாசுர மர்த்தினி  மந்திரம் ஒலித்தது. நான் மீண்டும் எனது கேள்விகளை அவளிடம் கேட்கவில்லை.

2 comments for “அவள் பெயர் அம்பிகை

  1. ஸ்ரீவிஜி
    December 2, 2013 at 2:07 pm

    அங்கே முஸ்லீம்கள் தெருவோறங்களில் இருக்கின்ற விநாயகர் சிலையை கையெடுத்து வணங்கி, பூ போட்டுச்செல்வார்கள். பாதுகாக்கப்படுகின்ற வரலாற்றுச்சின்னங்களாக இந்து பௌத்த ஆலயங்களின் கம்பீரம் அங்குள்ள முஸ்லீம்களின் நல்ல மனதைப் பறைசாற்றுகின்றன.

  2. December 3, 2013 at 6:09 pm

    அங்குள்ள மக்களுக்கு நம் நாட்டில் வசிக்கும் மலாய்க்காரர்களை அவ்வளவாக பிடிப்பதில்லை என்றே நினைக்கிறேன். இந்து வரலாறை இன்னனும் கற்றுக்கொடுப்பதாகவும் கூறினர். அதற்கான வகுப்புக்கள் நடக்கின்றன.சுற்றுலா துறையில் வேலை செய்ய விரும்புவர்கள் அந்த வகுப்பினில் சேரலாம்.

    யோக்-ஜகர்தா இன்னமும் என் கண் முன் கம்பீரமாக நிற்கின்றது. <3

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...