மாற்றத்தை நோக்கியதே இலக்கியம்

மூலம் S.M. ஷாகீர் | மொழியாக்கம்: அ.பாண்டியன்

கட்டுரையாளரைப் பற்றி: S.M. ஷாகீர் – இயற்பெயர் ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான் (Syed Mohd Zakir Syed Othman). 4.2.1969 கோத்தா பாருவில் பிறந்தவர். 1990 முதல் எழுதி வருகிறார். இதுவரை 22 இலக்கிய தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவரது ‘மெரெங்குஹ் லாங்கீட்’ என்னும் சிறுகதை தொகுப்புக்கு (1994/1995) பெர்டான இலக்கிய விருது கிடைத்துள்ளது. ‘செகுந்தும் கெம்பாங் டி சாயாப் ஜிப்ரேல்’ என்னும் மற்றொரு சிறுகதை தொகுதி கிளாந்தான் மாநில இலக்கிய விருதை பெற்றுள்ளது. இதுவரை Merengkuh Langit (1995), Sekuntum Kembang Di Sayap Jibril (2001), Menyirat Nirmala (2004) ஆகிய மூன்று சிறுகதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

இவரது இலக்கிய கட்டுரை ஒன்று PENA வெளியிட்ட Idealisme Penulis Muda என்னும் கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ‘Sastera Harus Radikal’ என்னும் நீண்ட கட்டுரையின் ஒரு பகுதி வல்லினம் வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது – நன்றி PENA
__________________________________________________________________________________

மாற்று சிந்தனையை உருவாக்குதல் என்பதன் பொருள் வழக்கத்தில் உள்ள பொதுப்போக்குச் சிந்தனையை எதிர்த்தல் என்று பொருள்படாது. மரபு சார்ந்த இலக்கியப் படைப்புகள், மலாய் இலக்கிய வெளியில் சுயமாக நிற்கும் தகுதி உடையன என்பதில் சந்தேகம் இல்லை. மரபான போக்குடைய படைப்புகள் பொதுவாக யதார்த்தவியலை அடிப்படையாகக் கொண்டவை. அவை வழக்கமாக ‘இனிமையும் மேன்மையும்’ (dulce et utile) போற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.

20-ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான நவீன மலாய் இலக்கியத்தை நோக்கும்போது, ASAS 50, 60-ஆம் ஆண்டு படைப்பாளிகள், 70-ஆம் ஆண்டு படைப்பாளிகள், 80-ஆம் ஆண்டு படைப்பாளிகள் ஆகிய அனைவருமாக சேர்ந்து யதார்த்தவியலை அடிப்படையாகக்கொண்ட எழுத்துப் போக்கை உருவாக்கி இருப்பது தெரிகிறது. இவ்வகையான போக்கு, பொது இலக்கிய கோட்பாடாக நிறுவப்பட்டு சமகால இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மரபான இலக்கியம் என்பது உன்னத வாழ்வியலை விளக்கிக்கூறும் மனித உறவுகள், இயற்கை, திணை, போன்ற கூறுகளைத் தொடர்புபடுத்தியதாகவும், யதார்த்த வாழ்வின் அழகியல்களை பின்புலமாகக் கொண்டதாகவும், பண்பாட்டுக் கூறுகளைக் கருவாகக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மரபான இலக்கியத்தில் இவ்வகைச் சிந்தனையானது தனிக் கொள்கைகளையும் பிரிவுகளையும் உருவாக்கக் கூடியதாகும். அதேவேளையில், அது வட்டார அழகியல் இயல்பு கொண்டதாகவும் போராட்டம், அவலம், விதியின் வலிய போக்கு போன்றவற்றை வரித்துக்கொண்டதாகவும் அமைந்துள்ளது.

ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சிக் காலமே யதார்த்தவியல் இலக்கியங்களின் தோற்றுவாய்க்கு வரலாற்றுத் தடமாக விளங்குகின்றது. இக்காலகட்டத்தில் மில்டன், ஸ்பென்சர், சிட்னி, ஸ்செல்லி, கர்வெந்தர் போன்ற இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் தோன்றிப் புகழ்பெற்றன. இப்படைப்புகளில், விவசாய வாழ்க்கை, திணை வகைகள், போன்ற வட்டாரத் தனித்தன்மைகள் மிளிர்திருந்தன. அவை மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்புகளை வெளிப்படுத்தியதோடு மனிதனையும் இயற்கையையும் படைத்து காப்பவன் இறைவனே என்னும் கருத்தை உட்பொருளாகக் கொண்டிருந்தன. யதார்த்தவியலை, மனித வாழ்வின் மிக அசலான வண்ணங்களை வெளிப்படுத்தும் இலக்கிய முயற்சியாகக் கொள்ளலாம். யதார்த்தவியலே நவீன இலக்கியத்தின் அடிப்படை என்றும் கூறலாம்.

தொழிற்ப் புரட்சி தொடங்கிய காலத்தில், இலக்கியப் போக்கிலும் மாற்றங்கள் உருவாகின. இலக்கிய வடிவங்கள் பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்ந்தன. கற்பனை நவிற்சி வாதம் (Romanticism) மீயதார்த்தவாதம் (surrealism) அபத்தவாதம் (absurdism), உணர்ச்சி வெளியீட்டுவாதம் (expressionism), போன்ற பல்வேறு கோட்பாடுகள் தோன்றி வளர்ந்தன. இவ்வகைக் கோட்பாடுகள் இலக்கிய வெளியில் இன்றியமையாதவை. அதே சமயம், சிந்தனைப் போக்கு, அரசியல்-சமூக-பொருளாதாரச் சூழல் போன்றவற்றின் அடையாளமாகவும் குறியீடாகவும் இலக்கியக் கோட்பாடுகள் இருக்கின்றன. இலக்கியக் கோட்பாடு என்பது படைப்புக்கலை வேறுபாட்டை மட்டும் காட்டுவதற்கு பயன்படுவதாகாது. அவை அப்படைப்புகளின் கொள்கை வேறுபாட்டையும் பறைசாற்றுகின்றன. “any classification, even a bad one, is better than no classification at all” என்கிறார் லேவி-ஸ்ரவ்ஸ்சின்.

நிறுவப்பட்ட நவீன மலாய் இலக்கியம், அசாஸ்-50 எழுத்தாளர்களின் படைப்புகளாலும், அதன் பின் வந்த சஹனூன் அமாட், அரேனாவதி, ஏ.சாமாட் சைட், அசிசி ஹஜி அப்துல்லா, அப்துல்லா ஹுசேன், எஸ்.ஓத்மான் கிளாந்தான், ஃபாதிமா பூசு, அன்வார் ரிட்வான் போன்ற பல படைப்பாளர்களின் படைப்புகளாலும் யதார்த்தவாதத்தில் முதிர்ந்த நிலையை அடைந்துள்ளது. இப்படைப்புகள் அனைத்துமே வட்டாரத்தன்மை மிகுந்தும், மலாய் வாழ்க்கை அடையாளங்கள் மிக்கனவாகவும் இருந்தன. கால ஓட்டத்தில் இப்போக்கு அதன் இயற்கைத் தன்மைக்கு ஏற்ப ஒரே சாயலை இலக்கிய உலகில் வடிக்க ஆரம்பித்தன. திடமான வடிவத்தோடு, ஒரே இலக்கிய அச்சு போல் செயல்பட்ட இப்போக்கு இரு வகை ‘மொழி விளையாட்டுகளின் ’ வழி பண்பாட்டு அதிகாரமாகவும் தன்னை நிறுவிக்கொண்டது.

முதலாவதாக துணிபுரை (authority of assertion) செய்வதும் அடுத்து, கூறியது கூறலுமாக (gregariousness of repetition) தன் அதிகாரத்தை மலாய் இலக்கியத்தில் செலுத்தியது. ஆனால் இவ்வகை மொழி விளையாட்டுகளை மொழியியல் முகமூடிகள் (masques langagiers) என்று கூறலாம். இப்போக்கு இறுதியில், இலக்கிய வெளியில் ஓர் அதிகார சக்தியாக உருவெடுத்தது.

நிறுவப்பட்ட இலக்கிப் போக்கில் இருந்து வெளியேறி புதுப் பாதை அமைக்கும் முயற்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலரால் எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இக்கட்டுரை 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதத்தொடங்கிய இளம் எழுத்தாளர்களின் புதிய முயற்சிகள் பற்றியே கவனம் செலுத்துகிறது. சில புதிய எழுத்தாளர்கள் பழைய போக்கில் இருந்து விடுபட்டு புதிய முயற்சிகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர். மொழி, வடிவம், பாணி என்று பல பரிசோதனை முயற்சிகளை அவர்கள் கையாள்கின்றனர்.

இவ்வகை இலக்கியங்களை பரிசோதனைப் படைப்புகள் என்று வகைப்படுத்துவது தவறாகாது. ஸேன் கஸ்தூரி மொழி ஆளுமையில் சிறந்து விளங்குகிறார். அதேபோல் டாயெங் ரம்லியாகில் தனி பாணியிலும் முகமது நஸ்ருடின் டாசுகி வடிவம் மற்றும் மொழியிலும், மர்ஸ்லி என். ஓ. தனி பாணி வடிவிலும் அஸ்மாஹ் நோர்டின் கதை பாணியிலும் தனித்துத் தெரிகிறார்கள். நிறுவப்பட்ட இலக்கியப் பாதையில் இருந்து விலகி நடக்கும் இந்த முயற்சியில் மிக அண்மையில் எழுதத் தொடங்கி வெற்றி பெற்றிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சைனால் ரஷீட் அஹ்மது, மாவார் ஷாஃபி, ஃபைசால் தெஹ்ரானி, மற்றும் அஸ்மான் ஹுசேன் போன்றோர் ஆவர். சைனால் மொழி, பாணி மற்றும் சிந்தனைகளைத் தனது இலக்கியக் கொள்கைகளுடன் கலந்து எழுதுகிறார். மாவார் கடின சொல்லாட்சியில் உறுதியாக இருக்கிறார். இவர்களிலிருந்து வேறுபட்டு, அஸ்மானும் ஃபைசாலும் தங்களது பாதையைக் கடின மொழிப் பயன்பாடு மற்றும் தெளிவற்ற வடிவம் போன்றவற்றை நோக்கி அமைக்காமல், சீரான சிந்தனையையும் கதை பாணியையும் நோக்கிச் செலுத்துகின்றனர். இருவருமே வாசகனை நேரடியாகச் சென்றுச சேரக்கூடிய எளிய மொழியையே பயன்படுத்துகின்றனர். அஸ்மானின் கதைப் போக்கு சீரானது. அது உலகியல் அழகுகளை உள்ளடக்குகிறது. ஆனால் ஃபைசாலின் கதைப் போக்கு கலவையானது. தலைமறைவு உலகம் தொடங்கி இஸ்லாமிய புனிதப் போர்வரை அது செல்கிறது.

துணிச்சலான இந்த இலக்கிய ஆக்கங்களை எளிமையான ஒரே கோணத்தில் பார்த்துவிட முடியாது. அது கொண்டுள்ள பண்முகச் சிறப்புகளை ஆய்ந்து வெளிக்கொணருவது அவசியம். விமர்சகர், திறனாய்வாளர், வாசகர் ஆகிய எல்லாத் தரப்பும் மரபாக நோக்கும் ‘இனிமையும் மேன்மையும்’ (dulce et utile) மட்டுமே அளவாக எடுத்துக்கொண்டால், இப்படைப்புகள் புதிய பாதையில் பயணப்பட்டதன் உள்ளார்ந்த நோக்கம் அறியப்படாமலே போய்விடும். நிறுவப்பட்ட இலக்கியத் தளத்தில் இருந்து விலகியதன் வழி (மொழி விளையாட்டுகளை துறந்ததன் வழி) ஒரு படைப்பு அடையும் புதிய எல்லைகள் மிக விரிவானது.

அண்மைய ஆண்டுகளில் இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் தரம் குன்றியனவாக இருப்பதாக எழும் குற்றச்சாட்டுகளில் ஓரளவு உண்மை உண்டு. அனால் இதே காலகட்டத்தில் புதிய எழுத்தாளர்கள் சில தரமான படைப்புகளையும் தந்துள்ளனர் என்பதும் உண்மைதான். சஹாரில் அஸ்ரீன் சனின், முகமது லுஃப்தி இசாக், நஸ்மி யாக்கோப், சைஃபுலிஸான் தாஹீர், சைஃபுலிஸான் யாஹாயா, சல்மான் சுலைமான், சிதி ஜச்மினா இப்ராஹிம், ஶ்ரீ ரஹாயு முகமது யூசோப், சிடி ஹஜார் முகமது சாக்கி, அமாலியா ஃபௌசா, ஜுலியானா முஹமட், மற்றும் கஃபிரா இட்ரிஸ், உம்மு ஹானி, ஜிமைடி ஷா, அமிசா குஸ்ரி யூசோப், அஞ்சான் அஹசானா, அப்துல் ரஹிம் இட்ரீஸ் போன்றோர் மிகச் சிறந்த படைப்புகளைத் தந்துள்ளனர். மேலும் வான் மர்சூக்கி வான் ரம்லி, சனாசன்சாலி, ரோசாய்ஸ் அல் அனாமி போன்ற படைப்பாளிகள் நம்பிக்கைக்குரிய படைப்புகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் நிறுவப்பட்ட மரபான இலக்கியத்தில் இருந்து விலகி புதுப் போக்குப் படைப்புகளை தந்தவர்களில் முக்கியமானவர்கள், சைனால் ரஷீட் அஹ்மது, ஷாஹாரில் ஹஸ்ரில் சனின், முஹாமட் லுஃப்தி இஷாக் மற்றும் ஜிமைடி ஷா ஆகியோராவர். இவர்களது படைப்புகள், மரபான இலக்கிய நுகர்ச்சி கொண்டோருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. சைனால் அறியப்பட்ட படைப்பாளியாகிவிட்டார். ஷாஹாரில், லுஃப்தி மற்றும் ஜிமைடி ஆகியோர் DBP ஏற்பாட்டில் நிகழும் மிங்கு பெனுலீஸ் ரெமாஜா (இளம் எழுத்தாளர் வாரம்)-தில் கண்டெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

இறுதியாக, எப்போதும் மரபுமீரா இலக்கியங்களை மட்டுமே நிலைநிறுத்த முயலும் குரல்கள் இலக்கியத் தளத்தை முரண்படு மெய்ம்மை (Paradox) நிரம்பியதாக மாற்றுகின்றன. அதோடு அவை புதுமையும் துணிச்சலும் உள்ள இலக்கியங்கள் தோன்றவிடாமல் தடுத்து விடுகின்றன. வகுக்கப்பட்ட அறநெறிப் பண்புகளைக் கடுமையாகப் பின்பற்றும் வரையரையைக் கொண்ட இலக்கியங்களை உயர்த்திப்பிடிக்கும் நிலையில் நாம் உலகின் பல உன்னத இலக்கியங்கள் வகுக்கப்பட்ட எல்லா அறக்கோட்பாடுகளையும் மீறி படைக்கப்பட்டவையே என்னும் உண்மையை மறந்துவிடுகிறோம். உலகம் நம்பும் உயர்நெறித் தொகுப்பை உள்ளீடாகக்கொண்ட இலக்கியமே மலேசிய சிறந்த இலக்கியம் என்னும் தவறான அளவுகோலை நாம் கொண்டிருந்தால், கண்டிப்பாக காலாவதியான இலக்கியத்தையே இங்கு எதிர்ப்பார்க்க முடியும். சிறந்த இலக்கியத்தைத் தேர்வு செய்யும் பணியில், நாம் நன்னெறி கோட்பாடுகளின் குறுகிய அரசியல், சமூக வரையரைகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது. மாறாக இலக்கியத்தின் அடிப்படை உயர்தன்மையும் புதுமை நோக்கும் கொண்ட பரந்த அளவுகோல்களுக்கு மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...