தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறையும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் அக்கறையின்மையும்!

interviewடேவான் பகாசா டான் புஸ்தகா (DBP) தேசிய மொழி காப்பகத்தின் கீழ் Jabatan Pengembangan Bahasa Dan Sastera எனும் தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறை 2009-ஆம் ஆண்டு நிருவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் முதன்மையான நோக்கங்களிள் ஒன்று மலேசிய நாட்டின் பல்லின மக்களிடையே தேசிய மொழியையும் தேசிய இலக்கியத்தையும் வளப்படுத்துவதோடு விரிவாக்கம் செய்வதாகும். இத்துறையின் பணிகளைத் தெரிந்து கொள்ளவும் இந்தியர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளும் வகையில் அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அபாங் சலேவுடீன் பின் ஹஜி அபாங் சொக்கிரான் (Datuk Abg. Sallehuddin Bin Hj. Abg. Shokeran) அவர்களைச் சந்தித்து உரையாடினோம். அவர் கூறிய தகவல்கள்…

“ தேசியமொழியையும் தேசிய இலக்கியத்தையும் மேலும் வளப்படுத்தவும் பல்லின மக்களிடையே பயன்பாட்டின் அடிப்படையில் மொழி ,இலக்கிய பங்கை விரிவாக்கம் செய்வதற்கும் DBP மொழி மற்றும் இலக்கிய விரிவாக்கத்துறையை ஏற்படுத்தியுள்ளது. இத்துறையின் முதன்மையான நோக்கங்களில் மலேசியாவில் வாழும் பல்லின மக்களிடையே தேசியமொழி பயன்பாட்டையும் தேசிய இலக்கிய ஆர்வத்தையும் தூண்டி அவர்களின் திறமைகளை வெளிகொணர்ந்து தேசியமொழியின் மாண்பை உயர்த்தும் வகையில் பல பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

இத்துறை DBP -யால் 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நான்தான் முதன்முதலில் இப்பகுதிக்கு தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டேன். சீன, இந்திய, சபா, சரவாக் சார்ந்த நம் நண்பர்கள் தேசியமொழி மற்றும் தேசிய இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவது குறைவு. தேசிய இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு கொள்வது குறைவாக உள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்து அவர்களை ஆர்வத்துடன் பங்கெடுக்கச் செய்வதே எங்களின் நோக்கம்” என டத்தோ அபாங் சலேவுடீன் கூறினார்.

“பல்லின மக்கள் தேசிய மொழியிலும் தேசிய இலக்கியத்திலும் வளமும் திறனும் பெற பல்வேறு நடவடிக்கைகளையும் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ‘Festival Bahasa Dan Sastera’ எனும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இது குறிப்பாகத் தனியார் சீன இடைநிலைப்பள்ளிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி. மேலும் ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் சீனப்பள்ளிகளுக்காகவும் கதைச் சொல்லும் போட்டி, கவிதை படைக்கும் போட்டி என பல போட்டிகளையும் நடத்தி வருகிறோம். இந்திய மாணவர்களுக்காகத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தைத் தொடர்புக்கொண்டு சில நிகழ்ச்சிகளையும் தமிழ்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் நடத்தும் திட்டத்தில் இருக்கிறோம். இதற்கு தமிழ்ப்பள்ளி தலைமயாரிரியர் மன்றத்தைச் சார்ந்த திரு.ஜெயபாலன் அவர்கள் உறுதுணையாக இருக்கிறார். ‘காவியன்’ அமைப்போடும் இணைந்து சில திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தொடர்ந்து திரு ST.பாலா அவர்களைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும் Seni Teater எனப்படும் அரங்க கலையில் மாணவர்களை அவர் ஈடுபட செய்கிறார். அவரின் இந்த முயற்சி தொடர்ச்சியாக அமைந்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. இதன் தொடர்பாக மலேசிய கல்வித்துறையில் கூட அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரோடு இணைந்து செயலாற்றுவதில் நாங்களும் பெருமை கொள்கிறோம். சீனர், இந்தியர் மட்டுமல்லாமல் பூர்வகுடியினருக்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்” என பல்வேறு தகவல்களைக் கூறிய டத்தோ அபாங் சலேவுடீன் இளம் எழுத்தாளர் வாரம் குறித்தும் விரிவாகக் கூறினார்.

“Minggu Penulis Remaja” எனும் இளம் எழுத்தாளர் வாரம் தற்போது எங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் தேசியமொழியில் இலக்கியம் படைக்கும் திறனும் ஆர்வமும் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமையை மேலும் வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எல்லா இனத்தவர்களும் பங்கேற்கும் வண்ணம் இது அமைந்துள்ளது. இதில் பங்கேற்கும் திறமையானவர்களை ‘போகோர்’ இந்தோனேசியாவில் நடக்கும் ‘மாஸ்த்ரா’ (MASTERA – Majlis Sastera Asia Tenggara) எனும் இலக்கிய நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கிறோம். இதன் மூலம் தேசிய இலக்கியம் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வார்கள் என்பது உறுதி. இது அவர்களுக்கு ஆர்வத்தையும் அனுபவத்தியும் நிச்சயம் வழங்கும். அதனூடே சிறந்த தேசிய இலக்கியவாதிகளை உறுவாக்கும் களமாக அமையும் என்றே நம்புகிறோம்.” என நம்பிக்கைப் பொங்க தனது கருத்தினைத் தெரிவித்தார். மேலும் இந்தியர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் தன் கருத்தைக் கூற தவறவில்லை.

“உண்மையைச் சொல்லிதான் ஆக வேண்டும். இந்தியர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. சீனர்கள்தான் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி, பட்டறை ஆகியவற்றிலும் இந்திய சமுதாயத்தினரின் பங்கு வருத்தம் அளிக்கும் வகையில்தான் உள்ளது எனலாம். ஒரு வேளை மற்ற பள்ளிகளை விட தமிழ்ப்பள்ளிகள் பட்டணத்தைவிட்டு தூரமாக இருப்பதால் மாணவர்கள் இவ்வாறான நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாத சாத்தியங்களும் இருக்கலாம் என்று கருதுகிறோம். அதனால் அடுத்த ஆண்டு தொடங்கி நாங்களே தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று அவர்களுக்கான திட்டங்களைச் செயலாற்றலாம் என்று முடிவெடுத்துள்ளோம். Minggu Penulis Remaja எனும் இளம் எழுத்தாளர் வார நிகழ்சியிலும் இந்தியர்களின் பங்களிப்பு மிக குறைவுதான். சென்ற ஆண்டில் இளவரசன், சனிஷா என்ற இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து பயன் பெற்றனர்.

கண்டிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் உள்ள மாணவர்களில்பால் கவனம் செலுத்தி தேசியமொழியில் அவர்களை மேம்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும். மேலும் மொழிபெயர்ப்புத்துறையைப் பார்த்தீர்களானால் முகவும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. படைப்புகளையும் மொழிபெயர்ப்பு , பதிப்பு தொடர்பான உதவியையும் நாங்கள் வழங்கி வருகிறோம். ஆனால் மலேசிய தமிழ் படைப்பாளிகளின் படைப்புகளோ அல்லது ஆக்கப்பூர்வமான சேர்ந்து நடத்துவதற்கான திட்டங்களோ எங்களுக்கு வருவதில்லை. முன்பு அகரமுதழி தயாரிப்பில் தமிழ் எழுத்தாளர் சங்கம் எங்களோடு இணைந்திருந்தாலும். அதன் பின் அவர்களுடைய பங்களிப்பும் குறைந்துதான் வருகிறது. நல்ல திட்டங்களை இந்திய மாணவர்களுக்குக் கொண்டு வருவார்களேயானால் அதை பரிசீலனை செய்து நிச்சயம் அவர்களஓடு இணைந்து செயல் படுவோம்” என டத்தோ அபாங் சலேவுடீன் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். மேலும் அடுத்தாண்டு திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில்…

“ இந்திய சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் தேசியமொழியிலும் தேசிய இலக்கியத்திலும் புலமை வாய்ந்த ஆளுமைகளாக உதயசங்கர் S.B (Uthaya Sankar SB), சரோஜா தேவி (Saroja Thevy), மற்றும் இராஜ ராஜேஸ்வரி (Raja Rajeswary) எனவும் சீன சமுதாயத்தில் லிம் சுவீ திம் (Lim Swee Tim), ஜோங் சோங் லாய் (Jong Chong Lai) போன்றோரையும் அடையாளப்படுத்த முடியும். ஆனால் இவர்களுக்குப் பிறகு தேசியமொழியிலும் இலக்கியத்திலும் பெயர் சொல்லும் வண்ணம் யாரும் இல்லை என்பதே உண்மை. ஆக அடுத்த தேசியமொழி மற்றும் இலக்கிய ஆளுமைகளை உருவாக்குவதில் இவ்வாறான நடவைக்கைகள் மிக அவசியம். ஆதலால் இந்திய/தமிழ் சமுதாய மக்களைச் சென்றடைய காவியன் அமைப்போடும் சீன மக்களைச்சென்றடைய PERSEKTIF எனப்படும் சீன அமைப்போடும் இணைந்து அடுத்த ஆண்டுகாணத் திட்டங்களைத் தீட்டியுள்ளோம். இந்தியர்/தமிழ் சமுதாயத்திற்காக காவியனோடு இணைந்து தமிழ்ப்பள்ளிகளில் மொழி வளப்படுத்தும் நிகழ்ச்சி முதல் பள்ளியாக Klang River தமிழ்ப்பள்ளியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அடுத்து இளம் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை மொழிபெயர்ப்பு தொகுப்பு, சிறுகதை பட்டறை, இளம் எழுத்தாளர்களுடனான சந்திப்பு, வல்லினம் எனும் தமிழ் இலக்கிய வெளியிடும் மலாய் இலக்கிய இதழ் தொடர்பான கலந்துரையாடல் என திட்டமிடப்பட்டு அதை செயலாற்றவும் தயாராகவுள்ளோம்.” என உற்சாகமாகக் கூறினார்.

தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறை அமைப்பின் இந்தத் திட்டங்களுக்கு உள்நாட்டு தமிழ் அமைப்புகள் அக்கறைக் காட்ட வேண்டும் என்பதே நமது விருப்பமும் எனக்கூறி விடைப்பெற்றோம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...