வீட்டு நாற்காலி

“மொதல்ல பாப்பாவ எங்க அம்மா வீட்ல இருந்து கூட்டிட்டு வந்துருறேன். இந்த வீட்ல என்கிட்ட பேச ஆளே இல்ல” என்று அவள் என்னைப் பார்க்காமல் என் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜாடை பேசினாள்.  நான் முகத்தை இறுக வைத்துக்கொண்டு அலமாரியில் தேடிக்கொண்டிருந்தேன்.

“ஏங்க ஏதாவது பேசுவீங்களா இல்ல இனி இப்படித்தானா?” என்று கேட்டவளைத் தாண்டி ஏதும் சொல்லாமல் போகும்போது என் கையை அவள் எட்டிப் பிடித்து “சொல்லுங்க..” என்றாள் 

“என்ன சொல்லணும்?” 

“இனி இப்படித்தான் இருக்கப்போறீங்களா?” 

“இங்க நான் என்ன சொல்லமுடியும்? இந்த வீட்டுல நான் வெறும் டிரைவர் வேலைக்காரன் தான?” 

“ஐயோ சாமி.. இப்பவே பத்திரம் ரெடி பண்ணுங்க; நான் எங்க கையெழுத்து போடணுமோ அங்க போட்டுர்றேன். வெளிநாட்டில இருந்தீங்களேன்னு நான் இங்க அலைஞ்சு திரிஞ்சு காசை சிதற விடாம சொத்து உருவாக்கி வெச்சா; நான் என்னமோ தூக்கிட்டுப் போற மாதிரி பேசுனா?” 

“பேச்ச மாத்தாத, உன் பேர்ல இப்போ தனிப்பட்ட முறைல வீடு கடை காம்ப்ளெக்ஸ்ன்னு ரெண்டு சொத்து இருக்கு. அடுத்து வாங்குற சொத்தை என் பேர்ல எழுதுகிறேன்னு சொன்னதுக்கு ரெண்டுபேர் பேருலையும்தான் எழுதிக்கணும்ன்னு சொன்னா நான் வேற எப்படி புரிஞ்சிக்கிறது? அதுவும் அப்பா அம்மா ஊர்ல இருந்து வந்தப்ப… அப்படி என்ன சொத்துமேல ஆசை? அவங்களையும் நீ என்ன நல்லாவா நடத்துன? அப்பா எத்தனை மீனு சாப்பிடுவாருன்னு மொதக்கொண்டு எல்லாம் நம்பர் சொல்லனுமா?

“ஏங்க! அர்த்தம்புரியாம பேசாதீங்க. இன்னாரு இவ்ளோ சாப்பிடுவாங்கன்னு சமையல் பண்றவங்களுக்கு தெரியணும். தேவையில்லாததை எல்லாம் பெருசு பண்ண வேண்டாம்.” என்றாள்

“எல்லாம் பாதி பதில் தான்.” என்றேன்

“ஆமா, பதில் சொல்லி இங்க அஞ்சாறு ஆகப்போகுது.” என்று சலித்துக்கொண்டு தொடர்ந்தாள். “சொத்து உருவாக்குறமே, வீட்டு பொம்பள பேருலையும் இருந்தா எதிர் காலத்துல பாதுகாப்பா இருக்குமேன்னு அக்கறையில சொன்னா… ஊர் உலகத்துல இல்லாததையா நான் சொன்னேன். எங்க வீடல்ல எல்லாம் அப்படித்தான்.”

“இந்த பாரு! உங்க வீட்டுப் புராணத்தை உங்க வீட்டோட வெச்சுக்கோ. இங்க வேண்டாம். இப்படி சுத்தி வளைச்சு பேசுறதுக்கு; எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்லிடு..”

“ஓவரா பேசவேணாம். நம்பிக்கை இல்லாமையா நான் பிள்ளை பெத்து இங்க உக்காந்துட்டு இருக்கேன்.”

“நான் எதைப் பத்தி பேசினா நீ எதைப் பத்தி பேசுற. இதுக்குதான் நான் யார்கிட்டையும் பேச விரும்பல. நீயே இந்தப் பணங்காசை வெச்சுக்கோ.”

“ஏங்க, நீங்க நாளைக்கே பத்திரத்தை ரெடி பண்ணுங்க, இருக்கறது எல்லாம் உங்க பேர்லயே மாத்திடுவோம்.”

“கண்டிப்பா பத்திரம் ரெடி பண்றேன், உனக்கு கையெழுத்துப் போட மனசு வருதான்னு நான் பாக்கணும்.”

“நான் ஒன்னும் விளையாட்டுக்கு சொல்லல.”

“பாப்போம்.” என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்.

எனது அமைதி சிகிச்சை வேலை செய்திருந்தது. உள்தொடைகள் இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருந்தது. நான் பிரச்சினையின் மையத்திற்கு வந்ததென்னவோ உண்மைதான். இருப்பினும் கனமானதோர் நிச்சயமற்ற தன்மை என்னைப் பீடித்திருந்தது. அவளை வென்று காட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கில்லை. சிறுவயதிலிருந்தே நான் விளிம்பில் மட்டுமே இருந்துள்ளேன். நண்பர்களிடையில் உறவினர்களிடையில் அலுவலகத்தில் என்று எல்லாப்பக்கமும். என் இருப்பு மேடையேறியதில்லை; மையமாக அமைந்ததில்லை. ஆனால் அதற்கு எல்லாத்தகுதியும் எனக்குண்டு. என்னிடம் நல்ல உயரம், நல்ல நிறம், மிகச் சிறந்த மொழி, அதாவது மொழிகள் இருந்தன. எங்கள் குடும்பத்தில் நான்கு மொழிகள் தெரிந்த ஒரே ஆண் நான்தான். குறைந்த வயதிலேயே வசதி சம்பாதித்துள்ளேன். கிச்சென்ற உடல், காற்றில் பறக்கும் மினுமினுப்பான சிகை. இது ஏதும் அவளிடம் இல்லை. ஆனாலும் நான் அவளுக்குப் பக்கவாட்டில்தான்.

அவள் என்ன நினைப்பாள்? இப்போது என்ன நினைத்துக்கொண்டு இருப்பாள்? அவள் நினைத்தாள் என்னை விரட்டி விட முடியும்? என்னால் முடியுமா? முடியாமல் என்ன… தொலைத்துவிடுவேன் தொலைத்து.

இப்போது வீட்டிற்குச் சென்றால் இருப்பாளா? கிளம்பிச் சென்றுவிடுவாளோ? நாளை பஞ்சாயத்து நடக்குமோ? கடவுளே.. நடந்தால் என்ன? நம்மிடம் நியாயம் இருக்கிறது. எந்த வீட்டில் சொத்து மனைவி பெயரிலும் கடன் ஆண் பெயரிலும் இருக்கும்? நான்தான் கிடைத்தேனா? என் சார்பில் பேச யார் யார் வருவார்? சொத்து அவள் பெயரில் அல்லவா இருக்கிறது. ஐயோ என் குழந்தை! இந்தச் சண்டை இப்போது தேவைதானா? இன்னொன்று வாங்கவிருக்கும் வேளையில்? இப்போதுதான் தேவை. என்ன! எல்லாவற்றையும் அவளே வைத்துக்கொள்ள எண்ணமா? அப்படியானால் என் மதிப்பு என்ன? நான் யார் இங்கே?  நான் எவ்வளவு இட்டிலி சாப்பிடுவேன்? எனக்கு தெரியாது. அவளுக்கு தெரிந்திருக்கும். யார் யார் என்னென்ன சட்டை எப்போது வாங்கி கொடுத்தார்கள் என்பதெல்லாம் அவளிடம் ஒரு கணக்கு இருக்கும். நாளை பத்திரம் தயார் செய்தே ஆகா வேண்டும். எப்படித் தயார் செய்வது? முன்பின் பழக்கம் இல்லையே. பதிவு அலுவலகம் எங்கு உள்ளது. யாரைப் பிடிப்பது? முருகா!!. இப்படி யாராவது இருப்பார்களா? ஆனால் அவளுக்குத் தெரியும். யாரைப் பிடித்தால் எந்த வேலை நடக்கும் என்று. அவளிடம் போய்க் கேட்க முடியுமா? இதுவெல்லாம் தெரியாததினால்தான் எல்லாம் அவள் கட்டுப்பாட்டில் உள்ளது.

அன்றிரவு நான் வீடு நுழையும்போது புத்தக அறையில் இருந்து வந்த வெளிச்சம் அவள் அங்குதான் இருக்கிறாள் என்று காண்பித்தது. அது உண்மையில் அவள் அறை. நான் அங்கு செல்வதே இல்லை. அவளுக்கென்று ஓர் அறை. எனக்கே எனக்கு என்று பிரத்தயேகமாக இங்கு என்னதான் உள்ளது? சமையல் அறை சென்றேன். ஏதோ சமைத்திருந்தது. கண்டிப்பாக இன்று அதைத் தொடக்கூடாது. நான் டீவி முன்பு அமர்ந்து எனது பிளே ஸ்டேஷனை ஆன் செய்தேன். கொஞ்சம் சத்தம் கூட்டி வைத்து விளையாடினேன். கல் நெஞ்சக்காரி வெளியே வரவேயில்லை. கொஞ்ச நேரங்கழித்து வெளியே வந்தாள். நான் முழுக்கவனத்தையும் அவள் மேல் வைத்து பிளே ஸ்டேஷன் விளையாடிக்கொண்டிருந்தேன். 

“ஏங்க சாப்பாடு எடுத்து வைக்கட்டா?”

என் பிடிவாதப் பாவனைப் பிடிப்பை இன்னும் இறுக்கிக்கொண்டேன். கொஞ்ச நேரம் என்னை வெறிக்கப் பார்த்துவிட்டு அவள் படுக்கை அறைக்கு சென்றுவிட்டாள். கதவுகள் சாத்தப்படாமல் இருந்தது. அந்த அறைக்குள் நடக்கும் நிழலாட்டத்தையும் அரவத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தேன். நெஞ்சில் பல அபச்சொற்கள். அந்த அபச்சொற்களுடன் அப்படியே தூங்கிப்போனேன்.

மறுநாள் அபச்சொற்களுடனேயே எழுந்தேன். ஆனால் அதன் வீரியம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. அந்நாளை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அவள் எழும் முன்னரே நான் சட்புட்டென்று கிளப்பி எங்கள் காம்ப்ளெக்சிற்கு சென்றுவிட்டேன். எட்டுக் கடைகளை வாடகைக்கு விட்டிருந்தோம்; விட்டிருந்தாள். அங்கு உள்ளோர்களுக்கு என்னை அடையாளம் தெரியுமா? தெரியவில்லை. சிலர் அவளின் கணவனாக என்னை அறிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சாப்பாட்டு நேரம் வரை அங்கேயே இருந்தேன். பத்திரம் எழுதுமிடம் ஒன்று பார்த்தவுடன்தான் எனக்கு நினைவே வந்தது. ஆனால் சென்று விசாரிக்கத் துணியவில்லை. உண்மையைச் சொன்னால் என்ன கேட்பது எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

மனதிற்குள் அபச்சொற்களைத் தேடிப்பார்த்தேன். ஒன்றுகூட எழவில்லை. சலித்துக்கொண்டு வீடு திரும்பினேன். அன்று வானிலை ஏனோ மந்தமாக இருந்தது. உள்நிலையும்தான். 

வீட்டிற்குள் சென்றதும். “எங்கேங்க போயிருந்தீங்க? போனையும் வீட்டிலேயே விட்டுட்டு..” என்றாள்.

“அட! நம்ம காம்ப்ளக்ஸ் வரைக்கும் வாக்கிங் போயிருந்தேன்.” எங்கிருந்து எனக்கு பேசும் ஆர்வம் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் வந்திருந்தது.

“என்னையும் எழுப்பி விட்டுருக்கலாமுல்ல? நானும் வந்திருப்பேன்.”

“எழுப்பலாம்ன்னுதான் நினச்சேன். ஆனா நீ நல்ல தூங்கிட்டு இருந்த..”

“காபி போடட்டா தோசை சுடட்டா?”

“காபியே போடு..”

காபி கையில் கிடைத்தது. மேலும் ஏதாவது பேசுவாள் என்று நினைத்தேன். ஒன்றுமில்லை. அசௌகரியக் கணங்களைத் துளிர்க்க விடக்கூடாது என்று நானே ஆரம்பித்தேன். “நம்ம பக்கத்து காம்ப்ளெக்ஸ் இருக்குல்ல?” அவளை நோக்கி நன்கு திரும்பி அமர்ந்து சற்று முன் குனிந்து ஏதோ ரகசியம் சொல்பவன் போல, “ப்ச்.. அதான் திவ்யா காம்ப்ளெக்ஸ்..” அவள், “ஆமா… ஆமா…” என்று ஆர்வப் பாவனையுடன் என் பக்கத்தில் நகர்ந்தமர்ந்தாள்.

“அந்த காபிளெக்ஸ்ல இருக்குற முதல் கடை, அந்த டாகுமெண்ட் ரைட்டர் ஆபிஸ்.”

“ஆமா..”

“அவன் காரு பைக்குன்னு நம்ம பார்க்கிங்லயே நிறுத்துறான் போல. நான் அவன்கிட்ட சண்டைக்கு போய்ட்டேன். ஆதான் இன்னைக்கு லேட் ஆகிடுச்சு. கைய ஓங்குறான்; கெட்ட வார்த்தைல பேசுறான். நானும் விடல. பெரிய சண்டை ஆகிடுச்சு. நல்ல வேல நம்ம காம்ப்ளெக்ஸ்ல யாரும் அந்நேரத்திற்கு கடைய தொறக்கல. அவன் ஆவூ-ன்னு சத்தம் போட்டான். நானும் கைய ஓங்க; அவன் பயந்து வண்டிய எடுத்துட்டான்.”

“என்ன தைரியம் பாருங்க அவனுக்கு.. நல்ல வேல நீங்க அங்க போனீங்க. நீங்க எவ்ளோ கஷ்ட்டப் பட்டு சம்பாரிச்சது. நாம பைசா பைசாவா சேத்து வைச்சு கட்டுனது. கண்டவன் வந்து நாட்டாமை பண்ணவா.”

“ஹக்காங்… பார்றேன்…”

“ஒன்னு பண்ணுங்க.. நீங்க டெய்லி கொஞ்ச நாள் காம்ப்ளெக்ஸுக்கு போயிட்டு வாங்க. அப்பத்தான் எல்லாம் சரிவரும். நம்ம நடமாட்டம் அங்க கொஞ்சமாவது வேணும்.”

“அது தான் நானும் நெனச்சேன்..”

“போகும்போது நல்ல வெள்ளை சட்டை போட்டுட்டுப் போங்க. சும்மா டீசட்டையோட அலையாதீங்க. அதுவும் நீங்க இப்போ போட்டுக்கிட்டு இருக்கிறது உங்க சித்தப்பா வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு வாங்கிக்கொடுத்தது. இதெல்லாம் வேண்டாம். வெள்ளைஞ்சொள்ளையுமா இருந்தாதான் ஒரு கிரிப் இருக்கும்.”

“செஞ்சுட்டாப் போவுது..”

உருவாகி வந்த இந்தச் சுமூகநிலை எனக்கு கசப்புணர்வை ஊட்டியது. நான் டாகுமெண்ட் ரைட்டர் என்று சொல்லியும் அவள் அதைக் கடந்து வந்து இயல்பாகப் பேசியது எனக்கு சஞ்சலத்தை உண்டாக்கியது. 

அவள் சொன்னதுபோல், இல்லை இல்லை, நான் நினைத்ததுபோல் தினமும் காம்ப்ளெக்ஸ் சென்று வந்தேன்; அவ்வப்போது வெள்ளைச் சட்டை அணிந்து சென்று வந்தேன். அங்கு சென்று வந்தால் என்ன நடந்தது என்று அவள் கேட்பாள். கேட்காதபோது நானே முன்வந்து சொன்னேன். சிலநாட்கள் சொல்லும் உந்துதலைப் பல்லைக் கடித்துக்கொண்டு கட்டுப்படுத்தினேன். 

“காம்ப்ளெக்ஸ கிளீன் பண்ண வர்ற அம்மா ஒழுங்காவே வேலை செய்ய மாட்டேங்குது. கூட்டி குவிச்சு வெச்சுட்டு போயிடுது. அள்ள மாட்டேங்குது. இதெல்லாம் போய் நான் எப்படிச் சொல்றது.”

“அந்த அம்மாகிட்ட எல்லாம் நீங்க பேச வேண்டாம். அது க்ரிப்பா இருக்காது. நான் பாத்துச் சொல்லிக்கிறேன். அந்த டாகுமெண்ட் ரைட்டர் இன்னும் நம்ம காம்ப்ளெக்ஸ் பார்கிங்கிலயா நிறுத்துறான்?”

“நான் இருக்குறப்ப நிறுத்தறது இல்லைபோல… கேமராவுல பாக்கணும்.”

“ஏங்க, டாகுமெண்ட் ரைட்டர் -ன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் நியாபகம் வருது.” நான் கருத்தைக் கூர்தீட்டி என்ன சொல்ல வருகிறாள் என்று பார்த்தேன். “பணத்தை சும்மா பேங்க்லையே வெச்சுகிட்டு இருக்க வேண்டாம். நாளுக்கு நாள் மனை விலை எறிகிட்டேதான் போகும்.”

அவள் எங்கே வருகிறாள் என்று எனக்கு புடிபட்டது. ஆகமொத்தத்தில் நான் நினைத்தது இல்லை. என் எண்ண ஓட்டங்களை முகத்தில் வராவண்ணம் பார்த்துக்கொண்டேன்.

அவள், “நாம ஒரு நாலஞ்சு புரோக்கர் கிட்ட இப்பமே சொல்லி வெச்சாத்தான் ஆகும். நாமளும் தெரிஞ்சவங்ககிட்டச் சொல்லி வைப்போம்.”

எனக்கு அவள் யோசனைக்கு ஆமாம் என்று சொல்ல விருப்பம் சுத்தமாக இல்லை. என்றாலும் அவள் சொல்வதுதான் உண்மை. இதே வசனத்தைத்தான் எங்கள் உறவினர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். “ஏன் அவசரப்படணும்? இப்போ நம்மகிட்ட எவ்ளோ இருக்கு? அட் லீஸ்ட் ஒரு ஒன்னாவது கையிலே இருப்பு இருந்தாதான் நாம நல்ல இடமா; நறுக்குன்னு வாங்க முடியும். ஒன்னு கையில முழுசா சேருறதுக்கு எப்படியும் இன்னும் ஒரு வருஷம் ஆகிடும்.” எனக்கு மறு சொல் சொல்லிய திருப்தி. முகத்தில் காண்பிக்காமல் கட்டுப்படுத்தினேன்.

அவள், “நான் இல்லைன்னு சொல்லல்ல. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாம தேட ஆரம்பிச்ச உடனேவா கிடைக்கப் போவுது. தேடிட்டே இருப்போம். எவனாவது வயிற்று வலிக்காரன் விப்பான். நாம முந்திகிட்டா நமக்கு லாபம்.” என்றாள்.

“பைத்தியகாரிச்சி மாதிரிப் பேசாத. இருக்கறதெல்லாம் சொரண்டி மனையில போட்டுட்டா அப்புறம் அவசர காலத்துல என்ன பண்ணுவையாம்?” கொஞ்சம் எல்லை மீறினேன்.

அவள் பொறுமையாக, “அவசரத்துக்கு என் நகை இருக்கு. அப்புறம் அப்பா என் பேர்ல போட்டு வெச்சிருக்காரு. நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்புறம் உங்க இஷ்ட்டம். நான் சொல்றத சொல்லிட்டேன்.”

அவள் நகை… அப்பா… என்று சொல்லியதைக் கொஞ்சம் மெது மெதுவாக அரைத்து அதன் நீக்கு போக்குகளை ஆராய்ந்தேன். அதற்குள் அவள் தொடர்ந்தாள், “அப்பா தெரமா இருக்கும்போதே நாம ஏதாவது வாங்குனாத்தான், அவர் நமக்கு ஏதாவது செய்வாரு. நான் என்ன ஒரே மகளா அவருக்கு? நாம லேட் பண்றது நமக்குத்தான் நட்டம்.”

இதற்கு உடனே ஆமோத்திக்கக் கூடாது. ஆனால் நான் முடிவெடுத்திருந்தேன். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் அவள் முடிவை ஏற்றிருந்தேன். “அவரை நாம எதிர்ப்பார்க்கக் கூடாது. நம்ம காசை வெச்சே எதுவா இருந்தாலும் பண்ணிக்கலாம்.”

“எங்க அப்பா எனக்குன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவாரு. அவர் என்ன உங்களுக்கா கொடுக்கப் போறாரு? அதை விடுங்க. நான் ஆச்சு எங்க அப்பா ஆச்சு. நாளைக்கே நான் அந்தப் பழைய ப்ரோக்கரையே வரச்சொல்றேன்.”

“என்ன சரீங்களா?”

என் சரியை அவள் கேட்டு வாங்கினாள். “சரி…” என்றேன்.

முதலில் எனக்கு உள்ளுக்குள் கிளர்ச்சியாக இருந்தது. பிறகு மனதில் இறுக்கம் ஒன்று கூடி வந்தது. வருகிற லட்சுமியை வேண்டாம் என்று சொல்வதா? நல்ல காரியத்தை ஒத்திப் போடுவதா? என் பிடியை விட்டுக்கொடுப்பதா? அவள் தயவு இல்லாமல் நான் தனிச்சியாகச் சொத்து வாங்க முடியாதா? முடியாமல் ஏன்? கண்டிப்பாக முடியும். நம்மைக் கேட்டுத்தானே அவள் செய்கிறாள். ஆனால் அவள்தானே இதைச் செய்கிறாள். உண்மையிலேயே அவள் என்னைக் கேட்டாளா? என்ன இது அனாவசியக் குழப்பம். நான் இல்லாமல் அவள் எங்கே?

நான் இன்னும் மையத்தில்தான் இருக்கிறேனா? மையத்தில்தான் இருந்தாக வேண்டும். அது தவிர வேறு இடம் வேண்டாம். இது அவள் முடிவல்ல; என் முடிவு. அல்லது என் முடிவுபோல் உள்ள அவள் முடிவா? முருகா…. என் முடிவென்றால் அடுத்த சொத்தை என் பெயரில் மட்டும் கிரயம் செய்ய முடியுமா? அப்படி செய்ய துணிந்தால் அவள் நகை தருவாளா? அவள் அப்பன் பணம் தருவானா? இது தேவையில்லாத கேள்வி. ஆஸ்தி உருவாக்கும் எண்ணம் உள்ளவன் சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும் சரி, அது எப்படி நடந்தாலும் சரி நான் மையத்திற்கு வர வேண்டும்.

நான் வெள்ளைச் சட்டையைப் போடுவதைத் தவிர்த்தேன். அவள் சவரம் செய்யச் சொன்னால், நான் தாடி வளர்த்தேன். அவள் இனிப்பு வாங்கிவரச் சொன்னால், நான் காரம் வாங்கி வந்தேன். அவள் இல்லாமல் நானே ப்ரோக்கரிடம் பேசினேன். ஆனால் எனக்குத் தெரியும் அவள் ப்ரோக்கரிடம் தனியாக போனில் பேசியிருப்பாள். என் சம்பளத்தை வருமானத்தை அவளிடம் சொல்லாமல் தவிர்த்தேன். அவள் புரிந்துகொண்டாளோ என்னமோ அவள் கேட்பதில்லை. 

அவளிடம் ஒரு இருநூறு பவுன் இருக்காது? யாருக்கு வேண்டும் பவுன். அவள் அப்பன் எவ்வளவு தருவான்? 

நான் என் இஷ்டப்படி இருந்தேன். அவள் ஏதும் கேட்கவில்லை. ஏதோ என் துணிகரத்தை அவள் அனுமத்திப்பதுபோல அவள் ஏதும் கேட்பதில்லை. எனக்கு என் மீதே கோபம் வந்தது.

எனக்கு மையத்தைத் தந்துவிட்டு மனைக் கிரயத்தை அவள் தட்டிச் செல்வாளோ? மையம் தவிர்க்கமுடியாத அத்தியாவசியம். அப்படியானால் மனை?


மையமுமற்ற விளிம்புமற்ற இழுபறி நிலை இரண்டு நாட்கள் இருந்தது. பிறகு ஒரு கச்சித நாளில் அவளே ஆரம்பித்தாள். “ஏங்க, நம்ம புரோக்கர் கூப்பிட்டிருந்தாரு…” கருத்து தீட்டிய கண்களுடன் அவள் என்னை நோக்கி நின்றிருந்தாள். அவள் மேலே ஏதும் சொல்லவில்லை. “என்னவாம்? எனக்கு கூப்பிடலை?” என்றேன்.

“அவரு கொஞ்சம் பழைய டைப்பு. உங்க நம்பர் அவர்கிட்ட இல்லாமல் இருக்கும்.”

“அவனுக்கு ஏன் நீ இப்போ வக்காலத்து வாங்குற? நான் அத்தனை தடவை கூப்பிட்டேன் அவனுக்கு.”

“சரி.. விஷயம் என்னன்னு கேளுங்க.”அவள் சடசடவென்று தொடர்ந்தாள். “செல்வபுரம் காலேஜுக்கு எதிர்லயே அஞ்சு செண்ட்டு மனை ஒன்னு இருக்கும் போல. பார்ட்டிக்கு அவசரமாம்.”

எனக்கு மனைமீதிருந்த ஆர்வத்தை விட அந்த புரோக்கர் மேல் இருந்த கோபம்தான் பெரிதாக இருந்தது. “அவன் சரியான ஆளா? ஏமாத்திடப் போறான்.”

“அதுக்குதான் பத்திர ஜெராக்ஸ் கேட்டிருக்கேன்.”

அதை வைத்து இவள் என்ன செய்வாள்? இதைப் போய் எப்படி அவளிடம் கேட்பது. நான் ஒன்றும் சொல்லவில்லை.

அவள் “ஒரு லீகல் ஒபினியன் வாங்கிடலாம்.” என்றபோதுதான் எனக்கு தெரிய வந்தது லீகல் ஒபினியன் எல்லாம் வாங்க வேண்டுமா என்று.

ஆர்வம் அவளை முழுதுமாக பீடித்திருந்தது. “விக்கிற பார்ட்டி சும்மால்லாம் ஜெராஸ் தர மாட்டான். அஞ்சு பத்துன்னு வாங்கிட்டுதான் தருவான். நான் புரோக்கர்கிட்ட வாங்கிட்டு வரச்சொல்லிட்டேன்.”

அஞ்சு பத்தா? இவள் ஆயிரத்தில் பேசுகிறாளா லட்சத்திலா? “எல்லாம் நீயே சொல்லிட்டா என்கிட்டே ஏன் கேக்குற?” எனக்கு இது மட்டும்தான் கேட்க வந்தது.

“அட… நீங்களே பேசுங்க.. நான் என்ன வேண்டாம்னு சொன்னேனா?” 

இது பரிகாசமா உண்மையா? பரிகாசமேதான். என்னைப் பேசச்சொன்னால் எனக்கு எதுவும் தெரியாது என்ற நினைப்பு. “வரட்டும் பாப்பம்…”  அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் “எனக்கு காம்ப்ளெக்சில் கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வர்றேன்.” என்று சொல்லியவுடன் சொல்லியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது. அது செயற்கையாக இருந்தது. சொல்லியதால் கிளம்பிச் சென்றேன். 

ஒன்றும் புரியாத நிலை. கையறு நிலை. உலகம் முந்திச் செல்ல நான் திக்கு தெரியாமல் குழம்பி நிற்கும் நிலை. அலுவலகம்தான் எனக்கு இயல்பான இடம். அலுவலகம் கூட இல்லை, அங்கே இருக்கும் எனது மேஜைதான். அங்கே மட்டும்தான் என்னால் இயக்கப்படும் உலகம் உள்ளது. அங்கிருந்து அரை இன்ச் நகர்ந்தாலும் கூட என்னை இயக்கும் உலகம் விரிந்துகொள்கிறது. அவ்வுலகத்தின் முதல் இருக்கையில் அவள் தான் அமர்ந்திருக்கிறாள். அமர்ந்து இதோ இப்படிப் பரிகாசம் செய்கிறாள். ச்சை…

கோபம் சஹசரத்தில் அதிதீவிரமாகக் கொப்பளிக்க காம்ப்ளெக்ஸ் வந்தடைந்தேன். அங்கே நடு பார்க்கிங்கில் அந்த டாகுமெண்ட் ரைட்டர் அவனது காரை அளவுபார்த்து நிறுத்திக்கொண்டிருந்தான். நான் வண்டியை நிறுத்தாமல் சைடு ஸ்டாண்டு போட்டும் போடாமலும் விட்டுவிட்டு எகிறி குதித்துத் தொண்டை நரம்புகள் புடைக்க “ஏன்டா வெண்ணெ! சோறுதான திங்குற? குணமாச் சொன்னா கேக்கமாட்டியா? எந்த மயித்துக்கு இங்க வந்து உன் வண்டியப் போடுற?”  கார் ஜன்னல் கண்ணாடியை டம்டமென்று குத்தினேன்.

அவன் அனாயசமாக இறங்கி. “இங்க தாண்டா நிறுத்துவேன். உன்னால ஆனா மயிரைப் பாரு. என்ன புடிங்கிடுவ? சின்னப் பையன்னு பாத்தா ரொம்ப ஓவராத்தான் போறான்..”

சின்னப் பையனா? சின்னப் பையன் இப்போ என்னப் பண்ணப் போறான்னு பாக்குறையா?” என்று சொல்லும்போது என் உள்தொடை நடுக்கம் மேல் நெஞ்சிற்கும் நடு முதுகிற்கும் படர்ந்திருந்தது. உண்மையிலேயே எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. “இன்னும் பத்து நிமிஷத்துல உன்ன போலீஸ் தூக்கும் பாரு” 

“போலீஸ் தான? நல்லா போ… எப்படிப் பாத்தாலும் பஞ்சாயத்து கட்சி ஆபிஸ்லதான் நடக்கும். அங்க பாத்துக்குவோம்.” அவன் சிரித்துவிட்டு நகர்ந்தான். எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் பார்வை என்னை இப்போது இயக்கிக்கொண்டிருந்தது. நான் போனை எடுத்து நம்பர்களை துழாவினேன். என்ன பார்க்கிறேன் என்று தெரியவில்லை. காதில் வைத்தேன், எடுத்தேன், மீண்டும் போனைப் பார்த்தேன். காதில் வைத்தேன் எடுத்தேன். மீண்டும் போனைத் துழாவினேன். அப்படிச் செய்துகொண்டே அவசர அவசரமாக அங்கிருந்து நடையாகவே நகர்ந்தேன்.

தக்க சமயத்தில் அவள் அழைத்தாள். “எங்க இருக்கீங்க? எப்போ வருவீங்க?”

“ஒரு தகராறு ஆகிடுச்சு நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன். நான் அப்புறம் பேசுறேன்.” என்று சொல்லிவிட்டு போனைத் துண்டிக்காமல் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று நின்றேன்.

“ஏங்க ஏங்க… போனைக் கட் பண்ணாதீங்க… என்ன பிரச்சனை? நானும் வாறேன். நான் இல்லாம எங்கயும் போகாதீங்க…”

நான் நடந்ததை எனக்குத் தகுந்தவாறு சொன்னேன். கோபமாய் இருப்பதாகச் சொன்னேன். நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொன்னேன். அவள் என்னிடம் மன்றாடி என்னைப் பொறுக்கச் சொன்னாள். நானும் பொறுத்துக்கொண்டேன். அது மன்றாட்டா அல்லது மெல்லிய அதிகாரமா என்று நான் இருக்கும் பதட்டத்தில் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

“இன்னும் அஞ்சு நிமிசத்துல நான் அங்கு இருப்பேங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்” என்றாள். எனக்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது.

அரைமணி நேரம் கழிந்து எங்கள் பெரிய ஃபோர்ட் காரில் பவனி வருபவள்போல் மெதுவாக வந்து பார்க்கிங்கில் சரி பார்த்து நிறுத்தினாள். அவள் காரை விட்டு இறங்கும்போது அவள் கண் முன் இருக்கவேண்டும் என்ற உந்துதலைத் தடுக்காமல் அவள் முன் வந்து நின்றேன். அவள் புடவையில் இருந்தாள். கையில் மிடுக்கான பணப் பை வைத்திருந்தாள். ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டு இன்னும் கூட உயரமாகத் தெரிந்தாள். பெருங்கூட்டு உடம்புக்காரி இன்னும் பெரியதாகவே தெரிந்தாள். 

“அந்த ஆளு கடை பக்கத்து காம்ப்ளெக்ஸ்ல தான இருக்கு? இதுதானா அவன் காரு?” என்றாள். நான் பதில் சொல்வதற்குள்ளாக என் நுண்ணிய அசைவுகளை வைத்தே புரிந்துகொண்டு நேரே அங்கே சென்றாள். எனக்கு படபடப்பாக வந்தது. அவள் பின்னால் சென்றேன். அந்த தடியனும் அதே சமயம் வெளியே வந்தான். இவளை அவன் பார்த்தவுடனே அவன் “இந்தப் பாருமா.. ஏதா இருந்தாலும் கட்சி ஆபிஸ்ல வெச்சு பேசிக்கலாம்.” என்றான்.

அவள் புருவங்களைச் சுருக்கி உன்னித்துப் பார்த்து தக்க இடைவேளை விட்டு ஒருமூச்சு சிரிப்பு பாவித்து “கட்சி ஆபிஸா?  எது? நீ குப்பை கொட்டிக்கிட்டு இருக்குற கட்சில நாங்க அதிகாரத்தில் இருக்கோம். எந்த ஆபிஸ்? எங்க! நீ முன்னால போ பாப்போம்?”

அவன் தடுமாறும் இடைவேளையில் என்னைப் பார்த்து, “ஏங்க அந்த பில்டிங் ஓனருக்கு போனப் போடுங்க என்று அங்கிருக்கும் எல்லோருக்கும் கேட்கும்படியாக ஆணையிட்டாள். நான் போனை எடுத்து என்ன தேடுகிறேன் என்று தெரியாமலே நெரண்டினேன். அதற்குள் அவளே போன் போட்டு காதில் வைத்தாள். ‘யாரிடம் பேசப் போகிறாள்? கட்சி ஆபிசில் இவளுக்கு யாரைத் தெரியும்? கட்சி ஆபிஸுக்குதான் பேசுகிறாளா? எந்தக் கட்சி? எதற்கு பில்டிங் ஓனர் என்று சொன்னாள்? வாய் தவறி சொல்லிவிட்டாளா? வாய் தவறியா? இவளா?’

போனை காதோரம் வைத்திருந்த அவள் முகம் மெல்லிய புன்னகையாக மாறியது. மறுமுனையில் யாரோ எடுத்துவிட்டார்கள்.

“ஆங்… மாமா.. எப்படி இருக்கீங்க? நான் ஓகே தான்… நான் அக்காவுக்கு போட்டேன்னு நினைச்சேன். நீங்களே எடுத்தது நல்லதாப் போச்சு.” மாமா என்று சொல்கிறாளே? அந்த பில்டிங் ஓனர்தான். அவனை மாமா என்று அழைக்கும் அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறாள்.

“ஒண்ணுமில்லீங்க…. உங்க காம்ப்ளெக்ஸ்ல வாடகைக்கு இருக்குற அந்த டாக்குமெண்ட் ரைட்டர் கொஞ்சம் ராங்காப் பேசுறாப்புல… லேடீஸ்ன்னு கூட பாக்காம…. என் வீட்டுக்காரர் தான் போலீஸ் போலாமுன்னு சொன்னாரு… ஆமாங்க அவரு கொஞ்சம் கோவமாத்தான் இருக்காரு… அந்த டாக்குமெண்ட் ரைட்டர கொஞ்சம் என்னனு கேளுங்க மாமா… சரிங்க…. சரிங்க…. சரிங்க… ரைட்டுங்க.. ரைட்டுங்க மாமா… சரிங்க.. அக்காகிட்ட நான் அப்புறம் பேசுறேன்னு சொல்லுங்க..” என்று விட்டு அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு என்னிடம் வந்தாள். அவன் தலைகுனிந்து அப்பால் சென்றான்.

நான் சொல்லின்றி செயலின்றி நின்றேன். 

“இதுக்கெல்லாமா போலீஸ் போவாங்க? போறதுக்குத்தான் போகணும். இதுக்குதான் வெள்ளைச் சட்டை போடச் சொன்னேன். சும்மாவா அதை துவைச்சு கஞ்சி போட்டு அயன் பண்ணி வெச்சுருக்காங்க?”

“சரி.. சரி.. ” என்றேன். “அதோ அந்த கிளீன் பண்ற அம்மா வந்துருக்குப் பாரு.”

இவளது விசை அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டது. “என்னம்மா… கூட்டி குமிச்சு வெச்சா மட்டும் போதுமா? யாரு அள்ளுறது. நான் வேண்ணா வந்து பண்ணட்டா?” என்றாள். அப்புறம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அதாவது ஆணையிட்டுக் கொண்டிருந்ததாள். எங்கிருந்தோ யாரோ ஒரு பையன் வந்து ஒரு நாற்காலியையும் ஒரு உயரமான முக்காலியையும் போட்டான். நான் கவனித்தேன். அதை அவள் கவனித்தது போலவே தெரியவில்லை. நாற்காலி அவள் பக்கம் இருந்தது. அதை எப்படி என் பக்கம் இழுப்பது என்று யோசிக்கும்போது அந்த ப்ரோக்கர் எங்கள் அருகில் வந்து நின்றான்.

நான் “என்ன?” என்றேன்.

“மேடம் கிட்ட பேசணும்” என்றான். 

“என்ன சொல்லுங்க..” என்றேன்

“மேடம் வரச் சொல்லிருந்தாங்க.”

அவள் திரும்பி, “வாங்க சார். என்ன? கொண்டுவந்தீங்களா?” என்று கேட்டாள்.

“இந்தாங்க..” என்று இரண்டு கட்டு ஜெராஸ் நீட்டினான். அவள் வாங்கிக்கொண்டு அந்த நாற்காலியில் அமர்ந்தாள். ஒரு கட்டை என்னிடம் நீட்டினாள். என்னவென்று கேட்காமலேயே வாங்கிக்கொண்டேன். இப்போது அந்த நாற்காலி அவளிடம். அவளை எழுந்திருக்கச் சொல்லவேண்டும். இந்த முக்காலி முதுகு வலிக்கும். எனக்கு ஆகாது.

அவன், “மேடம்…” என்று இழுத்தான்.

அவள் தேவைக்கு அளவாக நிமிர்ந்து. “ஓஹ்..” என்று விட்டு என்னைப் பார்த்து. “ஏங்க, ஒரு பத்து ரூவா அவருக்கு இப்போதைக்கு குடுத்திடுங்க. நம்ம ஆளுதான்.” என்றாள். நான் மேற்பாக்கட்டில் கை வைக்கப் போனேன். “பத்தாயிரம்…” என்று அழுத்திச் சொன்னாள். நான் பேண்ட் பாக்கட்டில் இருந்து எடுத்து எண்ணி அவனிடம் நீட்டினேன். அவன் அவளை நோக்கியவாறு என்னிடம் வாங்கிக்கொண்டான்.

வாங்கியவன் எண்ணி விட்டு, “மேடம் பத்தொம்பது நோட்டுதான் இருக்கு.” என்றான். அவள் என்னைப் பார்க்க. நான் அவனை முறைத்துக் கொண்டு இன்னொரு நோட்டை நீட்டினேன். அவன் என்னிடம் வாங்கிக்கொண்டு அவளிடம் “தேங்க்ஸ் மேடம். நான் வாறன். பார்த்துட்டு சொல்லுங்க” என்றுவிட்டு அப்படியே திரும்பிக்கொண்டு சென்றான்.

அவன் அப்படி திரும்பிக்கொண்டு சென்றது எனக்கு ஏராளம் சொன்னது. நான் தேவையில்லாத ஐந்தாம் சக்கரம் போல் உணர்ந்தேன். அலையலையாய் அடித்த உணர்வுகள் என்னை உணர்வின்மை நோக்கி உந்தியது. என்னை எப்படி இருத்திக்கொள்வது? நான் ஈனமான குரலில், “அந்த டாக்குமெண்ட் ரைட்டர பார்த்த பாவமா இருக்கு. எப்பவாச்சியும்தானே கார நிறுத்துறான்..” என்றேன். உண்மையில் இந்தப் பிரச்சனை தொடங்கியபோதே என்னுள் தோன்றிய குரல்தான் அது.

அவள், “ஏங்க, நான் சொன்னேனே அந்த மனையோட ஜெராஸ் பத்திரம். கவனமா படிச்சுப் பாருங்க நானும் பாக்குறேன். ஏதாவது வில்லங்கம் இருக்கான்னு. அப்புறமா ஒரு லீகல் ஒபினியன் வாங்கிக்குவோம். பார்ட்டியோட சிட்டிங் பேசும்போது அப்பத்தான் அடிச்சுப் பேச முடியும். ஏன் நிக்கிறீங்க உக்காருங்க..”

“இல்ல நான் நின்னுக்கிறேன்.” என்று விட்டு அந்த நகல் பத்திரத்தைப் பார்த்தேன். எனக்கு தலை கால் புரியவில்லை. அதன் எழுத்து புரியவில்லை. இது வேறு ஏதோ மொழி. அதற்கு பழகியவர்கள்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும் போல.

நான் என்னிடம் உள்ள பத்திரத்திற்கு நேராக முகத்தை வைத்துக்கொண்டு என் ஆயிரம் கண்களால் அவளைக் கவனித்தேன். அவள் ஒரு கண்ணை மட்டும் என் மீது வைத்து மீதி அனைத்து ஆயிரம் கண்களையும் பத்திரத்தின் மீது வைத்திருந்தாள்.

நான் மெதுவாக அந்த முக்காலியில் அமர்ந்தேன். 

3 comments for “வீட்டு நாற்காலி

  1. Rajkumar Ayyaswamy
    January 6, 2022 at 9:27 am

    ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!’ என்னும் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் நினைவில் ஓடுகிறது. தெளிந்த நீரோடை போல் கதையோட்டம். அருமை!

  2. kaliyaperumalveerasamy
    January 9, 2022 at 3:15 pm

    தெரிந்த தெளிந்த நீரோடை போகுற போக்குல போக வேண்டியதுதான் தனியா பிரிஞ்சா சாக்கடையாக வேண்டியதுதான்.

  3. செல்வா
    January 11, 2022 at 3:00 pm

    நாற்காலிக்கும் முக்காலிக்கும் உள்ள வித்தியாசம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...