“இல்லி ஆஞ்சநேயர் கோயில் சாரி தேவாலயா எல்லிட்டு” அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டபோது என்னுடைய கன்னடம் நிச்சயம் அவரை எரிச்சல் படுத்தியிருக்கலாம்.
“பரவால்ல தமில்லையே கேளு. ஆஞ்சநேயர் அதோ ஓரமா நிக்காரு பாரு. வேணும்னா போய் கும்பிட்டுக்கோ. அடுத்த வாட்டி நீ கேட்டா அவரும் இங்க இருக்க மாட்டாரு” பேசிக் கொண்டே வாயில் கொஞ்சம் புகையிலையைத் திணித்துக் கொண்டார். ஆமாம் மெட்ரோ வேலை நடப்பதில் கோயில் இடிக்கப் பட்டு ஆஞ்சநேயர் மட்டும் ஓரமாக தனிமையில் யாரோ ஏற்றிய மண்விளக்கின் முன்னே அதே கைக் கூப்பிய நிலையில் நின்றுகொண்டிருந்தார். இதே கோயிலில் நான் பதட்டமாய் ஒளிந்து நின்ற போதுதான் ராமய்யா என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போதைய நிலையில் அவரை நம்புவதைத் தவிர வேறு வழியுமில்லை.
எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து மடிவாலா சென்று கொண்டிருந்த பேருந்தில் கர்வேபாவிபாள்யா வரவும் அறை நண்பன் அழைத்து அங்கே சிறிய அளவில் கலவரம் ஆரம்பித்துக் கொண்டிருந்ததைச் சொன்னான். அவனுடைய புதிய ராயல் என்பீல்ட் ஏற்கனவே உடைக்கப் பட்டிருந்தது. இங்கே வருவதைவிட அலுவலகத்தில் இருப்பதே பத்திரமாக இருப்பதற்கான வழி எனச் சொல்லிவிட்டான். நானோ பாதி வழியில் பேருந்தில் இருந்தேன். எதற்காக இறங்கினேன் என்பதற்கு இன்றும் என்னுள் விடையில்லை. ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் இருமாநிலத்திற்கும் ஏற்பட்ட பிரச்சினையில், பேருந்தில் இருந்து இறங்க, உள்ளுக்குள் நிலையழிந்து, எதிரில் பத்தடிக்கு வணங்கியபடி நின்ற ஆஞ்சநேயரைப் பார்த்ததில் சுசீந்தரம் நினைவில் எழ உள்ளே சென்றுவிட்டேன்.
என்ன அவர் கருங்கல்லில் எழும்பி வெண்ணெய் பூசி நிற்பார், இவர் சிமெண்டால் எழும்பி நீல நிறத்தில் நின்றார்.
உள்ளே சென்று பார்க்கையில் வயதான ஆண்களும், பெண்களும் மாத்திரம் தூண்களுக்கடியில் கம்பளி போர்த்தி குழந்தை போல படுத்துக்கிடந்தனர். வெளியே சாலையில் அங்கேயும் இங்கேயும் போனபடியிருந்தவர்களின் கைகளையே கண்கள் மொய்த்தன. யார் கையிலும் கம்பும் தடியும் இல்லை. இருந்தும் உடல் முழுவதும் நடுங்கியது முகத்தில் காட்டிக் கொடுத்தது. ” தமிழ்ல பேசி தொலைச்சிராத டா. அப்புறம் பொச்சுலேயே மிதிப்பாங்க” ஈரோடு நண்பன் சொன்னதும் ஞாபகம் வர ஊரில் பேசும் மலையாளத்தை வாயில் வர வைத்தேன்.
“இவிடே ஆட்டோ ஏதும் கிட்டுமோ. மடிவாலா போனும்” அந்தக் கோயிலில் அவர் மட்டும் பேண்ட் ஷர்ட் அணிந்து தனியாய்த் தெரிந்தார். “ஆட்டோ இல்ல, இல்லி ஒண்டு சமஸ்யிட” அவர் வாயைத் திறக்கும் போது சாராய வாடை என்னையும் போதை ஆக்கியது. என் கண்கள் நிறையவும், “தமிலா சகோதரா” அவர் கேட்கவும், அடிவயிறு கலங்கியதை என்றும் மறக்கமுடியாது. வீட்டில் கோழிக் கறி வைத்த அடுத்த நாள் காலையில் எழுந்து தோப்புக்கு ஓடும்போது எப்படி இருக்குமோ அப்படி உணர்ந்தேன்.
“இல்லா, நேனு மலையாளி” வாயில் பல மொழிகள் பிறந்தன. “பயப்படாதே சகோதரா, இவங்களுக்கு வேறு பணியில்ல. கொஞ்ச நேரம் எல்லாம் ஓகே ஆய்டும்” சொல்லிவிட்டு அவர் நான் அமர்ந்திருந்த திண்டின் அருகேயே படுத்து உறங்கிவிட்டார். அவரும், குறட்டையும், பற்களைக் கடிப்பதும் இன்னும் பீதியைக் கொடுத்தது. அப்பா இறந்த பின் இன்று தான் பற்களைக் கடிக்கும் அந்த எரிச்சல் படுத்தும் ஒலியைக் கேட்கிறேன். செப்டம்பர் மாதம் குளிரும் அதிகரித்தது. கூடவே லேசான மழைத் தூறலும்.
அப்பா இறந்த பிறகு விடுமுறை தினங்களில் மாமாவுடன் சமையல் வேலைக்குச் செல்வதில் அலாதிப் பிரியம். கையிலும் கொஞ்சம் காசு புரளும், அதுவே அம்மைக்கு கொஞ்சம் உபகாரமாக இருக்கும். கூடவே தேங்காய் உடைக்கும்போது கிடைக்கும் தேங்காய் தண்ணீரைப் போதும் போதும் எனும் அளவுக்கு குடிக்கலாம். ரசம் வைக்க, பருப்பு வேக வைத்த நீரையும், தேங்காய் தண்ணீரையும் சேர்க்கும் பழக்கம் ஊரில் உண்டு. அதில் கிடைக்கும் ருசி அப்பப்பா. அதிலே மிதக்கும் குடை மிளகாயும், அதனால் சற்றே இறங்கும் எரிப்பும், நாக்கு ரசத்திற்கே அதிகம் ஏங்கும். என் வேலை அவியலுக்கும், வாழைக் காய் தொவட்டலுக்கும், புளிசேரிக்கும், பச்சடிக்கும் தேவையான அளவு தேங்காய் திருவுவது. பாயாசத்திலும் கொஞ்சம் நெய்யில் வதக்கிய தேங்காய் சேர்ப்பதுண்டு. மாலை நான்கு ஐந்து மணிக்கு காய்கறி வெட்ட ஆரம்பிக்க வேண்டும், பிறகு இரவு எட்டு மணிக்கெல்லாம் தேங்காய் உடைத்து அதன் நீரை பெரிய குத்துப் போனியில் ஊற்றி சேர்த்து வைப்பேன். தேங்காய் துருவியப் பிறகு ஒரு கையாள் மாதிரி உருளியில் கிண்டவும், பாத்திரங்களை மாற்றி வைக்கவும் என வேலை போகும். எல்லா வேலையும் முடிந்ததும், சோறை பனையோலைப் பாயில் கொட்டி ஈரவேஷ்டியை கொண்டு மூடிவிடுவோம். பின்னர் பந்தி ஆரம்பிக்கும் சமயம் வரை கொஞ்சம் உறங்கலாம். பந்தி ஆரம்பித்தால் மாமா மீண்டும் சமையல் கட்டுக்கு சென்று விடுவார். அவரோடு நானும் சென்று எண்ணெய் கொதிக்கும் பெரிய சட்டியில் பப்படம் பொரிப்போம். மாமாவிடம் பேசிக் கொண்டே இருக்கலாம். இன்ஜினியரிங் முடித்த பிறகு வெளியூருக்கு வேலைக்கு செல்ல விருப்பமேயில்லை. மாமாவுடனே சமையல் வேலைக்குச் செல்லவே விருப்பம்.
முடியுமா?
வாங்கிய எஜுகேஷன் லோன் வட்டிக்குக் குட்டி போட்டு பெரும் தொகையில் நிற்க எப்படியோ போராடி பெங்களூருவில் ஐ.டி கம்பனியில் வேலை கிடைக்க, மாதாமாதம் கொஞ்சம் பணம் அனுப்பிச் சீக்கிரம் லோனை முடித்துவிடலாம் என எண்ணிய வேளையில்தான் பாழாய்ப் போன ஆற்றில் அணை கட்டும் பிரச்சினை வர, பாருங்கள்! இந்தக் கோயிலில் அப்பனைப் போலவே பல்லை நறநறவென்று கடிப்பவர் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறேன்.
அவர் ஏதோ வீட்டில் உறங்கி எழுந்தவனைப்போல கைகளை நீட்டிச் சோம்பல் முறித்து எழுந்தார். நாற்பதுக்கு அருகில் வயது இருக்கலாம். முடி கொஞ்சம் நரைத்து இருந்தாலும், சீராக வெட்டிய முடி. அப்பாவைப் போலவே தெரட்டு முகவாக்கு, ஒழுங்காய்ச் சவரம் செய்த முகம். கட்டையாய் மீசை. “டைம் என்னாச்சு சகோதரா, ஸ்ரீ ராம ராம”, பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தேன். “நான் என்ன உன்ன கொல்லவா போறேன்” சிரித்துக் கொண்டே கைகளைத் தேய்த்து கக்கத்தில் சொருகிக் கொண்டார். இந்த இரவு முழுக்க கோயிலில் எப்படியும் நேரம் தள்ளிவிடலாம் என நினைத்தாலும் குளிர் அதிகம் இருந்தது அந்த நம்பிக்கையைக் குலைத்தது. பேருந்து சாலையில் ஓடுவது தெரிந்தாலும் மடிவாலா இறங்கி அறைக்கு நடக்க எப்படியும் பத்து நிமிடம் எடுக்கும். ஆக அறைக்குச் செல்லவும் பயம் அப்பிக் கிடந்தது. “குளிர்ல கிடந்து என்ன செய்வ, வா என் வூட்டுக்கு போலாம். காலைல எல்லாம் சரி ஆய்டும். அப்புறம் போ. எல்லாம் குடிச்ச கிக் இருக்குற வரைதான். கிக் போய்ட்டா பயம் வந்திரும். எத எத உடச்சோம், யார அடிச்சோம்னு நினைச்சு ரெண்டு நாளுக்கு வெளிய வர மாட்டாங்க” அவர் பேசிக் கொண்டே நடக்கும்போது கூடவே நானும் நடந்தேன்.
ஏதோ நினைவு வந்தவராய் அடிவயிற்றில் கை வைத்து பார்த்தார். என்னவோ தட்டுப் பட சிரித்துக் கொண்டே பீடியைப் பற்ற வைத்தார். “இதுவே வேலையாய் போச்சு சகோதரா. அடி ஒடைன்னு சொன்னவன்லாம் காலு மேல கால் போட்டு உக்காந்து இருப்பான். இவனுங்களுக்கு சொந்தமா மனை கிடையாது. நிறைய துட்டு கிடையாது. சொன்னதால செய்வான். இதுல என்ன சுகமோ”. மதியம் சாப்பிட்டது, ராத்திரி நேரம் வயிறு அதிகம் கொதித்தது “இங்க ஹோட்டல் எதுவும் இருக்கா” பசியில் எதைப் பற்றி யோசித்தாலும் அது சாப்பாடை நோக்கியே இழுக்கும். கேட்க நினைத்தது வேறு, கேட்டது வேறு. “இங்கயும் தமில் ஆளுங்க இருக்காங்க. ஹோட்டல் எல்லாம் மூடி இருக்கும். மனேயல்லி போய் பாத்துக்கலாம்” அவர் சொன்னது போலவே கடைத் தெருவில் எல்லா கடைகளும் பூட்டிக் கிடந்தது. “அண்ணா ஒரு பீடி தரீங்களா”, சிரித்துக் கொண்டே கையில் ஒரு பீடியை நீட்டி தீப்பெட்டியையும் கொடுத்தார். ஜெர்கின் அணிந்து இருந்தாலும் குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் உடலை நெருக்கியது. பீடி பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்து சூடான புகையை விழுங்கியதும் உடல் கொஞ்சம் சூடானது.
இரண்டு இழுப்பு, மூன்று நான்காய் நீளவும் ஒரு நண்பனோடு பேசுவது போல சகஜம் ஆனேன். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு கன்னடரோடு பெங்களூருவின் பெயர் தெரியா வீதியில் நடப்பதை வித்தியாசமாகத்தான் உணர்ந்தேன். “அண்ணே, உங்க பேரு”, “ராமைய்யா, நின்ன பேரு”, “சிவதாணு”. எங்குமே மனித நடமாட்டமில்லை. சில நிமிடங்கள் நடந்த பிறகு அவரின் குடியிருப்பை அடைந்தோம். பழைய இரண்டு மாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் அவரின் வீடு. அவர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவர், “வா சகோதரா. என்ன தயக்கம்”. ஷூவை கழட்டி வெளியே போட்டு உள்ளே சென்றேன். “குடிப்பிங்களா. ரம் இருக்கு” என்றார். அந்த வீடு சுத்தமாக இருந்தது. பெரிய அறையில் தனியாய் சமையலறை. அறையின் ஒரு பக்கம் கழிவறை. இரண்டு பேர் படுக்குமளவு மெத்தை விரிந்து கிடந்தது. அறையின் நடுவே கிடைமாட்டமாகப் போன கயிற்றில் அவரின் ஆடைகள் தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டில் சுவற்றில் மாட்டப் பட்டிருந்த இரண்டு படத்தில் ஒன்று காந்தியினுடையது, மற்றொன்று ஸ்ரீராமருடையது.
வழக்கமான பணி, பொழுதுபோக்கு, சினிமா பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போதே உடுத்திக் கொள்ள சாரம் கொடுத்தவர், அடுப்பில் அரிசியைக் களைந்து உலை வைத்தார். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் எடுத்துக்கொண்டு கத்தியை அருகில் வைத்துக் கொண்டே இரு குவளையில் ரம்மை ஊற்றி நீரையும் நிரப்பி, தொட்டுக் கொள்ள உப்பில் ஊர வைத்த எலுமிச்சை பழத்துண்டையும் கொடுத்தார். ஒரு பெக் செல்லவும் ரம் உடலைச் சூடாக்கியது. அவர் என் ஊரைக் கேட்டார் “நாகர்கோயில், கன்னியாகுமரி பக்கம்” என்றேன். பதிலுக்கு அவர் “எனக்கு ராம்துர்க்” என்றார். “கன்னியாகுமரி வரணும். அங்கே சன்ரைஸ் சன்செட் ரெண்டும் பாக்கலாம்ல. அப்படியே ராமேஸ்வரம் போகணும். ராமர் பிரதிஷ்டம் செஞ்ச சிவன் சிலை அங்கதானே இருக்கு”, நானும் ஆமாம் என தலையாட்டினேன்.
“ராம்துர்க், பேரே நல்லாருக்கு. ராமர் அங்கே வந்தாரா”, “ஆமாம், வந்தாரு அயோத்தி விட்டு வெளிய வந்ததும் ராம்துர்க்ல கொஞ்ச வருஷம் இருந்தாரு. அதான் ஊரு பேரே ராம்துர்க். நீங்க போட்ட ஜெர்கின் லெதரா சகோதரா”, “இல்லண்ணா, மிக்ஸ்ட் மெட்டரியல்தான். நல்ல தமிழ் பேசுறீங்கனா”, “ஆமா, பாக்க லெதர் மாறி இருக்கு. கூட வேலை செய்றவங்க கார்மென்ட்ல எல்லோரும் தமிழ் ஆளுங்க. இங்க வந்து வருஷம் ஹதிநைடு வருஷம் ஆச்சுப்பா. நல்ல பேசுறனா” சிரித்துக் கொண்டே தோளில் தட்டினார். ஒரு சில மணி நேரம் முன்னர் நடந்த எதுவுமே நடக்காததைப் போல நிம்மதியாக இருந்தது. நாங்கள் மேலும் பேச, உள்ளுக்குள் சென்ற அடுத்த அடுத்த குவளை ரம் உதவியது.
அவர் கதையைத் தொடர்ந்தார், “ராமர், சீதாதேவி, லெக்ஷ்மணன் எல்லோரும் ராம்துர்க் வந்த நேரம் பயங்கரமான குளிர்காலம். வனவாசம் வந்ததால அவங்க கிட்ட என்ன இருக்கும். நாங்க ஆடு மேய்க்கற குறுபா இனம். செம்மறி ஆட்டோட ரோமத்த எடுத்து அதுல கம்பளி செஞ்சு விக்கறது, விவசாயம் நடக்கிற பூமியில ஆட்ட மேய விட்டு அதோட புழுக்கைல கிடைக்கிற உரத்துக்கு அவங்க கொடுக்கிற துட்டுன்னு எங்க காலம் கழிஞ்சது. பாத்தியா பேசிட்டு எங்கயோ போய்ட்டேன். ராமர், சீதாதேவி, லெக்ஷ்மணன் யாருக்குமே ராம்துர்க் குளிர தாங்க முடியல. அப்போ நீலப்பாங்கிற ஒருத்தர் ஆடு மேய்க்க போனவரு மூணு பேரையும் காட்டுல பாத்து இருக்காரு. வந்தவங்க யாரு… தெய்வம். அந்த கடாட்சம், தேஜஸ் நீலப்பாவை இழுத்துட்டு. இந்த பூமில பெருசா என்ன இருக்கு, மலையும் காடும் தவிர. முழுக்க மேச்சல் பூமி. பாத்தவரு கையோட மூணு பேரையும் தன்னோட குடிக்கு கூட்டிட்டு வந்து, தன் கையாலேயே செம்மறி ஆட்டு ரோமம் எடுத்து கம்பளிப் போர்வை செஞ்சு கொடுத்தாரு.
ராமர் சீதா தேவிக்கு கம்பளி போர்த்தி விட்ட இடத்துல பாறைல அவங்க நின்னுட்டு இருந்த தடம் அப்படியே இன்னும் மலைல இருக்கு. சீதாதேவிக்கு குளிர் குறையவும் நல்ல சந்தோசம். நாங்க நெய்யுற கம்பளி எப்பவும் இதே மாதிரி நல்ல குளிர் தாங்கும்ன்னு பிளெஸ்ஸிங் பண்ணாங்க. தெய்வத்தோட வாக்கு. பலிக்காதா, இப்போவும் ராம்துர்க் கம்பளிக்கு டெக்கான் முழுக்க அவ்வளவு பேரு. அப்படியே அந்த நன்றிக்கு ராமர் நீலப்பா கிட்ட உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்கனு கேட்டு இருக்காரு. அப்போ ஆடு மேய்க்க போகும் போது தாடகிங்கிற ராட்சசி ஆடுகள கடத்தி கொல்றது, நீர் நிலைகள நாசம் பண்ணுறத பத்தி சொல்லி இருக்காரு. ராமரும் லெக்ஷ்மணனும் துர்கா தேவிய வேண்டி இரண்டு நாள் விரதம் இருந்து ஒரு பௌர்ணமி நாள் அன்னைக்கி ரெண்டு பேருமா, குறுபா மாதிரி ஆடு மேய்க்க காட்டுக்குள்ள போனாங்க. தாடகியும் வந்தா. அப்புறம் பெரிய சண்டை போச்சு. கடைசி யார் ஜெயிப்பா தெய்வம்தானே. அவளக் கொன்னு அவளுக்கு மோச்சம் கொடுத்தாங்க. அவ அப்படியே மலை ஆகிப்படுத்துட்டா. பின்ன ராமர் வந்து துர்கா தேவிய வழிபாடு செஞ்ச இடம், ஊருக்கே ராம்துர்க்னு பேர் வந்துச்சுனு சொல்வாங்க. இந்த கதைய எங்க அஜ்ஜா கூட ஆடு மேய்க்க போகும்போது சொன்னாரு. ஸ்ரீ ராம ராம” கதையைச் சொல்லி முடிக்கும் வரை இடைமறிக்கத் தோன்றவில்லை. அதைக் கேட்கும் போது என்னையறியாமல் ஊரில் எழும்பி நிற்கும் தாடகை மலை ஞாபகம் வந்தது. ஏறத்தால இதே கதையை எனக்கு ஆச்சி சொன்னாள், என்ன அதில் கம்பளி எல்லாம் இல்லை.
பேசிக் கொண்டு இருந்ததில் இங்கே வந்த காரணம் மறந்துப் போயிற்று, கலவரம் என்ன ஆனதோ! “நாளைக்கு எல்லாம் சாதாரணம் ஆய்டுமா அண்ணா”, “எப்படி ஆகாம போகும். உங்க ஊர்காரங்க சும்மா இருப்பாங்களா. இந்நேரம் எல்லா மந்திரி வீடும் கலகலக்கும். பாரு நாளைக்கு அடிச்சவனே உன்ன பாத்து சிரிப்பான். ராம்துர்க்ல இருந்த வர இந்த பிரச்சினை எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சது வேற பிரச்சினை. அது மஹாராஷ்டிராக்கும் நமக்கும். இங்கே உள்ளவனுக்கு அது தெரியாது. விவசாயம் பண்றவனுக்கு தண்ணி வேணும். அரசியல் பண்றவனுக்கு விவசாயி வேணும். அதுக்கு தண்ணி மேலே அரசியல் நடக்குது சகோதரா. நீ பயப்படாத, மனுஷன்தானே. இன்னைக்கு என்ன பண்ணோம்னு நாளைக்கி மறந்துருவான்” சொல்லிவிட்டு அவர் சிரிக்கவும், அந்த சிரிப்பு அப்பாவின் அதே தொனியில் ஒலிக்க, கூடவே உள்ளே சென்ற ரம்மும் சேர நானும் சிரித்தேன்.
“உங்களுக்கு இந்த பிரச்சனைலாம் பெருசா தெரியலையாண்ணா”.
“விவசாயிக்கு ரெண்டு ஊருலயும் ஒரே வயிறுதானே சகோதரா. எல்லாம் மந்திரி மார சொல்லணும்”.
“ஊர்ல எல்லோரும் இருக்காங்களா. நீங்க மட்டும் இங்க இருக்கீங்க”. இந்தக் கேள்வியை, இந்தத் தருணத்தில் நான் கேட்டிருக்க கூடாது. அமைதியைத் தொடர்ந்தவர், சமையலறையில் அரிசியை வடித்து விட்டு வந்தார். எதுவும் பேசாமல் வெங்காயம், தக்காளி நறுக்கினார். தேர்ந்த சமையல்காரனைப் போல. கத்தரிக்காயைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்தவர், அதை நீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டார். “அதிதி நீங்க. பசிக்கா சகோதரா”.
“இல்லண்ணா நேரம் ஆகட்டும். ஒரு பீடி மட்டும் கொடுங்க”.
“போன மாசம் தான் ஊருக்கு போய்ட்டு வந்தேன். மூத்த பொண்ணுக்கு கலியாண வயசு. கிடைக்கிற துட்ட அப்படியே அனுப்புவேன். இன்னும் ஒரு பொம்பள பிள்ள இருக்கு. எல்லாம் ராமர் பாத்துப்பாரு. ஸ்ரீ ராம ராம. கம்பளி எல்லாம் இப்போ மவுசு இல்ல. ராம்துர்க் கம்பளிக்கு அப்படி ஒரு பேரு உண்டு. ராமரும் சீதாதேவியும் போர்த்திக் கிட்ட கம்பளி. எவ்வளவு குளிரையும் தாங்கும். இப்போ எல்லாம் கார்மெண்ட்ஸ்ல இருந்து வருது. எல்லாமே கொள்ள லாபம். எங்க கம்பளி யாருக்கு வேணும். சரி விவசாய பூமில ஆடு கொண்டு விட்டா துட்டு கிடைக்கும். இப்போ அதுவும் இல்ல. எல்லாம் கெமிக்கல் வந்தாச்சு. ஆடும் ஹோட்டலுக்கு கறிக்குத்தான் போது. பெங்களூரு வந்து ஹதிநைடு வருசம் ஆச்சுப்பா. ஊரு முழுக்க கார்மெண்ட்ஸ் கம்பனி தான். அங்கேயே வேலை பாக்கலாம். என்னோட பூமில ராஜாக்கு சமமா இருந்த என்னால அங்க வாழ முடியல. மேய்ச்சலும் இல்ல. கம்பளியும் இல்ல. நானும் அங்க இல்ல. ஸ்ரீ ராம ராம” இதுவரையிலும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த ராமய்யா தளர்ந்த குரலில் மெதுவாகச் சொன்னார்.
சிறிய வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகிட்டு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம் வதக்கும் மணம் வரவும் அந்த அறை இயல்பானது. தாளிக்கும் மணம் என்னுள்ளே எப்போதும் பழைய நினைவுகளைக் கிளறி விடும். அந்த வீட்டில் தேங்காய் இருந்தது, பொறிக் கடலையும், காய்ந்த வத்தலும் இருக்க தொவையல் அரைத்து விட்டேன். அவர் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லித் தடுத்தும் கேட்காமல் செய்தேன். அவரின் வட கர்நாடகா படேனேகாயி கொஜ்ஜுவும் கூடவே தொவையலும். இருவரும் விரும்பி சாப்பிட்டு நீண்ட நேரம் சமையலைப் பற்றியே பேசினோம். நீண்டு போன பேச்சில் அடுத்தடுத்து பீடியும் இழுக்க நேரம் அறியாமல் உறங்கிவிட்டோம்.
காலை எந்திருக்கும்போது இரவு நடந்த எதுவும் நினைவில் இல்லை. அலைப்பேசியில் அலுவலகம் விடுமுறை எனும் குறுந்தகவல், நேற்று நிகழ்ந்த சிறிய அளவிலான கலவரம் காரணமாய் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாய் வந்திருந்தது. அவருக்கும் வேலையில்லை. மாலை வரை மிச்சம் இருந்த ரம்மும், பேசித் தீரா சமையலும் இருக்க, போதாதா இன்னும் நெருக்கமானோம். பிறகு நான் விடைப்பெற்று கிளம்பிய நாளில் இருந்து மாதம் ஒருமுறையாவது அண்ணனைச் சந்திப்பது கட்டாயமானது.
வருடம் இருமுறை ஊருக்குச் செல்வார். அடிக்கடி செல்லலாமே எனக் கேட்டால் “ரெண்டு பொண்ணு சகோதரா? ரெண்டு தடவ போறதே எவ்வளவு துட்டு ஆகுது”. அவரின் முதல் கொள்கையில் யாரிடமும் கடனாகவோ, தேவையற்றோ பணம் பெறக் கூடாது. முதல் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகி, அவர் திருமணத்திற்கு ராம்துர்க் வரச் சொல்லி வற்புறுத்தி அழைத்தார். அதே நாள் ஊரில் வேறு கல்யாணம் இருக்க, செல்ல முடியவில்லை. ஊருக்கு செல்லும் முன் அவரை நேரில் சந்தித்து கையில் ஐந்தாயிரம் திணித்தேன். ஒருவகையில் எனக்கு அது கைம்மாறாகப் பட்டது. அவரோ வேண்டாம் என்று மறுத்தார். “சகோதரா இந்த துட்டு என்ன தொந்தரவு செய்யும். நாங்க கல்யாணத்துக்கு துட்டு வாங்குறது கிடையாது. கைல இருக்கிறத வச்சு செய்வோம்”. “எங்க ஊருல கொடுப்போம். தம்பி தந்ததா நினச்சுகோங்க”. பதினைந்து நாள் கழித்து தான் திரும்பி வந்தார். வந்தவர் அன்றைக்கே அலைப்பேசியில் அழைத்து வரச் சொன்னார். அதற்குள் மெட்ரோ பணிக்கு கோயில் இடிக்கப்பட்டு ஆஞ்சநேயர் ஓரமாய் நிற்கிறார்.
வீட்டில் நுழையவே சிரித்துக் கொண்டே கையில் ஒரு பையைக் கொடுத்தார். நான் பிரித்து பார்க்கும் போதே “ரொம்ப சந்தோஷம் சகோதரா, கல்யாணம் நல்லா நடந்துச்சு. நீங்க வேற துட்டு கொடுத்தீங்களா, தொந்தரவு நிக்கல. அதான் ராம்துர்க் கம்பளி கொண்டு வந்தேன். கனம் இல்லாம, பர்ஸ்ட் கிளாஸ் கம்பளி. நான் சொல்லிருக்கேனா ராமரும் சீதாதேவியும் போர்த்திகிட்ட அதே பர்ஸ்ட் கிளாஸ் கம்பளி. எங்க வீட்டுல நெஞ்சது. இனி தொந்தரவும் இருக்காது. துட்டையும் மத்த விஷயமும் உச்சிட்டவாகி வாங்க கூடாது. கொடுத்தவங்களுக்கு அது நம்ம மேல எதிர்பார்க்க வைக்கும். எங்க அஜ்ஜா சொல்லிக் கொடுத்தது” நிம்மதியான புன்னகை அவரின் பூரணத்தைக் காட்டியது. ராம்துர்க்கில் விடுதலை பெறுவதற்கு முன் ஏற்பட்ட கலவரம் ஒன்றில் காந்தியின் எதிர்வினை, பின் அவரின் கொள்கையின் உடன்போக்கு எல்லாமும் அவரின் தாத்தாவை காந்தியைத் தொடரவைத்திருக்கிறது. தொடர்ச்சியின் நீட்சியாய் காந்தி படமும் இவரின் வீட்டில் தொங்குகிறது.
அவர் பேசிமுடிக்கவும் அந்தக் கேள்வி என் நாவின் முனையில் இருந்து வெளியேறியது, அன்றைக்கு கோயிலிலிருந்து ஏதேச்சையாய் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றாலும், அதற்கான உந்துதல் என்ன? என்பதை நான் அறிய சொல்லி மனம் வாட்டியது. “அண்ணே கலவரம் அன்னைக்கு எதுக்கு உடனே என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர சம்மதிச்சீங்க”, என் முகத்தை ஓரிரு நொடி பார்த்தவர், “உனக்கு அப்படியே எங்க அஜ்ஜா முகச்சாடை”. அவர் கொடுத்த கம்பளி கைகளில் இருந்தது. அதைத் தடவிய போது ஏனோ உள்ளுக்குள் ராமமந்திரம் ஓடியது, ஸ்ரீ ராம ராம.