தீர்வை

“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது.  

அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால் இருந்த என்னை குழம்பிய முகத்துடன் திரும்பி பார்த்தான். நான் அவனருகே சென்று பணிவாக, “யெஸ் சார். இங்க வரிக்கான கணக்கை இப்டி ஒரு விளையாட்டு வச்சி தான் தீர்மானிப்பாங்க. அதுதான் ஊர்க்காடு ஜமீனின் வழக்கம்” என ஆங்கிலத்தில் சொன்னேன். அவனுக்கு தமிழ் தெரிந்தாலும் அவனிடம் நான் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். அதற்காகவே என்னை பணியில் அமர்த்தியிருந்தான். அவனுக்கு மொழிபெயர்த்து சொல்லும் பணி.

ஜமீனின் அருகே நின்ற கர்ணம் மெய்மெய்யப்ப பிள்ளை கரை படிந்த தன் வாயின் வெற்றிலை எச்சிலை ஒதுக்கி, “இது இன்னைக்கி நேத்து கணக்கில்ல தொர, திருமல நாயக்கர் காலத்துல இருந்து இதாக்கும் கணக்கு” என்றார். அவர் பேசியது துரைக்கு சற்று முக சுழிப்பை ஏற்படுத்தியது. அவன் பெருச்சாளி போன்ற சிறிய குண்டு கண்களை சுருக்கினான். நான் பிள்ளை சொன்னதை மொழிபெயர்த்து சொன்னேன்.

நான் தொடர்ந்தேன், “சார், வஸ்தாரின்றது ஊர்க்காடு ஜமீனுக்கு மட்டுமே உள்ள விளையாட்டு. இங்க இவங்கள வரிசைக்காரங்கன்னு சொல்லுவாங்க. ஜமீனோட காவல் படையில சுப்புத் தேவர் வஸ்தாரி வரிசை, ஐயங்கார் வஸ்தாரி வரிசைன்னு இரண்டு வரிசைக்காரங்க உண்டு. இவங்க தான் இங்க ஒவ்வொரு ஐப்பசி மாச திருவிழாக்கும் புலிவேஷங் கட்டி சிலம்ப கம்ப பிடிச்சு ஆடி வர்றது. இவங்க கூட சண்டை போட்டு யாராச்சும் ஜெயிச்சிட்டா அவங்க நிலத்துல விலையிறதுக்கு அதுக்கப்பறம் வரி கொடுக்க வேண்டியது கெடையாது. ஆனா ஜமீனோட வஸ்தாரி வரிசைய ஜெயிக்கிறது அவ்வளவு சுலபமுமில்லை” என்றேன்.

என்னை கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்த துரை, ஒரு கணம் திரும்பி என் முகத்தைப் பார்த்துவிட்டு, “தட்ஸ் இண்டிரஸ்டிங்” என ஜமீனை நோக்கி சிரித்தான்.

கணக்குப் பிள்ளை என்னருகில் வந்து, “என்னல சிலுவ, நம்மல பாத்து மூஞ்சிய பிதுக்குதான். என்ன சொல்லுதான் அந்த கரை வாயன்” என்றார்.

நான், “ரெட்ட சம்சாரிக் காரனெல்லாம் ஜெயில்ல பிடிச்சு போட்டிட்டு, அவங்க பொண்டாட்டிய எனக்கு கெட்டி கொடுக்கேன்னு சொல்லுதாரு பிள்ள” என்றேன்.

என்னருகில் இருந்த தவசிப்பிள்ளைக்கு அது கேட்டுவிட்டது, சத்தம் வெளிவராமல் சிரித்தார்.

மெய்யப்பப் பிள்ளை, “சாதியத்தவனுக்கு பேச்ச பாத்தியாலே, சங்கருத்திருவேன் தாயோளி. ஒங்க அம்மைக்கு கொள்ளி போட ஒன் உசிரு வேணுமின்னா மரியாதையா இரி” என முறைத்தார்.

“பிள்ள அங்கன கண்ணார் பக்கத்துல கையில துப்பாக்கி வச்சிட்டு நிக்கானுவல்ல போலீஸு, அவனுவளுக்கு ஒன்னும் தெரியாது. தொர சுடுன்னு சொன்னா ஒம்ம மண்டைய பாத்து மொத்தமா சுடுவானுவ. எஞ் சங்க அறுத்தா தலை செதரி சாவிங்க, அப்றம் ஒம்ம பொண்டாட்டிய யாரு பாத்துக்கிறது” என்றேன்.

மெய்யப்பப் பிள்ளை கோவமாக முகத்தை திருப்பிக் கொண்டார். அவரருகே நின்ற தவசிப்பிள்ளை தலைகுனிந்து சிரித்தப்படி இருந்தார்.

ஜமீன் அரண்மனைக்கு முன்பான வாசல் திடலில், ஊர்க்காடு ஜமீனுக்கு சொந்தமான பதினெட்டு பட்டியும் கூடியிருந்தது. முதல் தளத்தில், பதினெட்டு பட்டியின் கணக்குப் பிள்ளைகளும் கையில் கோப்புடன் நின்றிருந்தனர். ஐப்பசி மாதம் மூன்றாம் திங்கள் எப்போதும் தீர்வை கணக்கு பார்க்க கூடும் நாள். ஐப்பசியை கடந்தால் அறுவடையில் பாதி நெல் கணக்குப் பிள்ளையின் வீட்டிற்குள் போய் மறைந்துக் கொள்ளும் என்பதால் இந்த நடைமுறை அமலில் இருந்தது. அன்றே ஜமீனின் படைவீரர்கள் வஸ்தாரி வரிசை காட்டும் நாளாகவும் கடைபிடிக்கப்பட்டது. வஸ்தாரியை எதிரித்து ஜெயிப்பவர்களுக்கு அந்த ஆண்டு முதல் தீர்வை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். ஜமீனின் வரிசையை எதிர்த்து நிற்பவர்களுக்கு அவர்கள் தாக்குபிடிக்கும் நேரம் பொறுத்து தீர்வை கணக்கை தீர்மானிப்பர்.

ஜமீனும், துரையும் பட்டத்து அரண்மனையின் இரண்டாம் தளத்தில் இடவலமாக அமர்ந்திருந்தனர். நாங்கள் மூவரும் அவர்களுக்கு பின்னால் சற்று தூரத்தில் தள்ளி நின்றிருந்தோம். வெளியே ஊர்க்காடு முப்பிடாதி அம்மன் கோவில் திடலில் விழாவிற்காக ஊர் கூடியிருந்தது. பட்டத்து யானை அரண்மனையின் முன் அலங்காரத்துடன் நிற்க வைக்கப்பட்டிருந்தது. தோட்டி கருப்பன் வந்து துரையின் குதிரையை அலங்காரம் செய்ய இழுத்து சென்றான். ஜமீன், கணக்குப் பிள்ளையிடம் துரைக்கும் ஒரு யானை அலங்காரம் செய்யும் படி தோட்டியிடம் கட்டளையிடச் சொன்னார்.

கோட்டியப்ப தேவர், “நீங்க இன்னைக்கி முழுக்க இருந்து வஸ்தாரி வரிசை காட்றத பாக்கலாம். இங்க இருந்து அம்பை வண்டி மலைச்சம்மன் கோவில் வர புலி வேஷம் கெட்டி ஆடி போவாங்க. என்னென்ன நடக்கும்முன்னு கணக்கு பிள்ளையும், சிலுவையும் ஒங்களுக்கு சொல்லுவாங்க” என்றார். நான் அதனை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தேன். சுற்றி என்ன நடந்தாலும் துரையிடம் பணித்து காட்டும் வித்தையை இத்தனை ஆண்டில் என் உடல் தன்னியல்பாக கற்றிருந்தது.

நான் ஜமீன் சொன்னதை திருப்பி சொன்னதும் துரை மீண்டும், “இண்டிரஸ்டிங், ஐ யெம் ஹியர் டூ வாட்ச் இட்” என்றான். கரை படிந்த அவனது பற்கள் வெளியே தெரிந்தன. அவனது பெருச்சாளி கண்களை உருட்டி உருட்டி திடலைப் பார்த்தான். ஜமீன் மீசையை நீவிக் கொண்டே அதே பெருமிதத்துடன் கணக்கு பிள்ளையிடம் முறையாக கவனிக்கும் படி சொன்னார்.

தவசிப்பிள்ளை மெய்யப்பப் பிள்ளையிடம், “வரிசை பாக்க வந்த சாக்குல தீர்வை கணக்க பாத்திட்டா மாட்டிக்குவோமே பிள்ளை” எனக் கேட்டதும். மெய்யப்ப பிள்ளை நான் அருகிலிருப்பதை சுட்டிக் காட்டி முறைத்தார், “நீரே போய் எங்கப்பன் குதிலுக்குள்ளன்னு சொல்லுவேரு போலயே. தீர்வ நோட்ட கண்ல காட்டாம இரியும். அவன் வஸ்தாரி வரிசைய தான் பாக்க வந்திருக்கான். நான் பைய அதை காட்டி அவன அனுப்பி விட்டுறேன். நீரு பேசாம கூட மட்டும் இரியும்” என்று மெய்யப்ப பிள்ளை தவசிப்பிள்ளையிடம் மெதுவாக சொல்லியதும் என் காதில் விழுந்தது.

ஜமீன் துரையிடம் திடலைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

“நீரு மொத வெத்தலைய துப்பிட்டு வாரும் இல்லென்ன நெசதுக்கும் ஓஞ் சம்சாரத்துக்கு நாந்தான் கஞ்சி ஊத்தணும்” என்றேன் மெய்யப்ப பிள்ளையிடம்.

“நான் இல்லயினாலும் அவளுகளுக்கு கஞ்சி குடிக்க தெரியும் நீ ஓஞ்சோலிய பாரு” என என் வலது தோல்பட்டையை கையிலிருந்த கோப்பால் இடித்து என்னை தள்ளிவிட்டு அங்கிருந்து அரண்மனைக்கு பின் பக்கமாக சென்றார்.

ஜமீனின் சுப்புத் தேவர் வஸ்தாரி வரிசையும், ஐயங்கார் வஸ்தாரி வரிசையும் புலி வேஷம் கட்டி திடலில் ஒவ்வொருவராக இறங்கி வந்தனர். சுப்புதேவர் வஸ்தாரி வரிசைக்காரர்கள் கையில் சிலம்ப கம்புடனும், ஐயங்கார் வஸ்தாரி வரிசைகாரர்கள் கையில் மாட்டை வண்டியில் பூட்டும் நோக்கா போலிருந்த பெரிய தடித்த கம்புடனும் வந்தனர். ஐயங்கார் வஸ்தாரி வரிசையின் சிவன்பாண்டி தேவர் கதாநாயகராக இரட்டை வால் கட்டியிருந்தார். சுப்புத் தேவர் வரிசையின் சுடலைமுத்து அவர் பின்னால் வந்தார். ஊர்க்காடு ஜமீனில் சிவன்பாண்டிக்கு அடுத்ததாக இருப்பவர் சுடலைமுத்து. அவர் சிவன்பாண்டியின் நோக்கா கம்பையும் தூக்கி வந்தார்.

தவசிப்பிள்ளை சிவன்பாண்டியனை கையசைத்து முன்னே வர சொன்னார். அவர் பட்டத்து அரண்மனையின் முன் வந்து குனிந்து துரை, ஜமீன் இருவரையும் நோக்கி வணங்கினார். துரையிடம் சிவன்பாண்டி இரட்டை வால் கட்டியிருப்பதை சுட்டிக் காட்டி, “இதே மாரி ரெண்டு வால் கட்டி எதிர்ல வாரது இவர சண்டைக்கு அழைக்கவாக்கும். இவங்க முன்ன யாரு இரட்டை வால் கெட்டி புலி வேஷம் போட்டு வந்தாலும் அவங்க இவங்கட்ட சண்டைக்கு வாராங்கன்னு அர்த்தம்” என்றார் பிள்ளை.

துரை அதனை உன்னிப்பாக கவனிப்பதற்காக வலப்பக்கமாக சரிந்து கண்களை சுருக்கினான். கோவிலில் தொடங்கியிருந்த மேளச் சத்தமும் சேர்ந்து பிள்ளையின் குரலை மட்டுப்படுத்தியது. அவர் சொல்லி முடித்ததும் மேல் தளத்திலிருந்து துரை சிவன்பாண்டியனை நோக்கி கையசைத்தான். சிவன்பாண்டி தேவர் துரையை நோக்கி தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிட்டு கீழே விழுந்து வணங்கி, பின் புலி போல் கைகாலை முன்னசைத்து எழுந்து சுடலைமுத்துவிடமிருந்த உருளை கம்பை வாங்கி சுற்றினார்.

அவர் சுற்றும் போது அந்த தடித்த கம்பு சக்கரம் போல் சுழன்றது. அவரை போல் அஜானுபாகுவான உடல் கட்டு கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்து உருளை கட்டை. ஐயங்கார் வரிசை மட்டும் இந்த வகை தடித்த கம்புகளைப் பயன்படுத்தினர். சுப்புதேவர் வரிசை இதனை சிலம்பால் தடுக்கும் வித்தை மட்டும் அறிந்திருந்தனர். தடித்த நீல் உருளை கட்டையில் கை பிடிக்கும் நடுபக்கம் மட்டும் மெல்லிசாக இருந்தது. அடித்தால் உடல் தடித்துவிடும் கம்பின் ஒரு நுணி நாடியில் அடித்து படுக்க வைக்கும் வித்தையை மட்டும் ஐயங்கார் வரிசை செய்தனர்.. அந்த கம்பை, சிவன்பாண்டி வலது கையிலிருந்து இடது கைக்கு எளிதாக மாற்றி சுற்றும் தோறும் அவரது தோள்பட்டையின் புஜங்கள் எழுந்து அமைந்தது. அத்தனை வலிமையான புஜங்கள் இல்லாமல் அந்த கம்பை தூக்க முடியாது. மேலிருந்து பார்ப்பதற்கு மாட்டு வண்டியின் சக்கரம் சுழல்வது போலிருந்தது. சிவன்பாண்டி கால்களை மடித்து தலைக்கு மேலாக கம்பை சுற்றி வந்து ஆட்டம் காட்டினார்.

வெற்றிலை துப்பிவிட்டு என்னருகே வந்து நின்ற கர்ணம் மெய்யப்ப பிள்ளை வாயை சட்டையில் துடைத்துக் கொண்டு துரையிடம், “இன் ஆல் செவண்டீன் ஜெமீன் நோ புலி சண்டை டூ சிவன்பாண்டி வஸ்தாரி வரிசை” என்று சொல்லிவிட்டு திரும்பி பெருமிதத்துடன் தவசிப்பிள்ளையும், என்னையும் பார்த்தார். நான் அதை ஆங்கிலத்தில் துரையிடம் சொன்னேன். துரையின் கரை படிந்த பற்கள் எல்லாம் வெளியே தெரிய மெய்யப்ப பிள்ளையை நோக்கி சிரித்தான். துரை சிரித்ததும் பிள்ளை பூரித்து போனார்.

அவர் மேலும் சொல்லத் தொடங்கினார், “முன்னூறு வருஷம் முன்ன இருந்து தீர்வை கணக்கு இங்க இப்படி தான் நடக்குது. அப்ப மதுரையில திருமலை நாயக்கரு ஆட்சியாக்கும். மைசூரு நாயக்கரு பெரும் படைக் கொண்டு மதுர கோட்டைய தாக்கிருக்காரு. திண்டுக்கல் பாளையக்காரும், இராமநாதபுரம் சேதுபதியும் சேந்து மதுர கோட்டைய காப்பாத்திட்டாங்க. திருமலை நாயக்கரு ரெண்டு பேத்தையும் திரும்ப தாக்க சொல்லி பெரும் படைய திரட்ட சொல்லிருக்காரு. அத்தன படை மதுரை நாயக்கருட்ட இருந்தும் ஈட்டி படைய தலைம தாங்க ஆளில்ல.”

“அப்ப இங்க ஊர்க்காடு வஸ்தாரி செஞ்சவங்கல்ல சுப்புதேவரும், ஐயங்காரும் சுத்துபட்டி எல்லா பாளையக்காரங்களுக்கும் பிரசித்தம். எதுக்க நிக்க எந்த பாளையத்துல இருந்தும் ஒருத்தன் வரமாட்டான். மதுரையில இருந்து கூட வரமாட்டான்னா பாத்துகிடுங்க. இராமநாதபுரத்துல இருந்து வந்த நாளு பேத்த ஐயங்காரு வரிசை குத்தாலிங்கத் தேவர் கழுத்தில ஒரு நெரம்பு போட்டுல அடிச்சாரு அந்தானைக்கி அவங்க படுத்த படுக்கையாக்கும். ஆறு மாசத்துல அவங்க பொணமாயிட்டாங்க.”

“இந்த சேதி கேட்டு இராமநாதபுரம் சேதுபதி சுப்புதேவரையும், ஐயங்காரையும் போருக்கு ஈட்டி படைக்கு தலைமை தாங்க சொல்லி கேட்டுகிட்டாரு. ரெண்டு பேரும் யாருக்கும் வித்தைய கத்துதர மாட்டோம் வந்து சண்டை மட்டும்ன்னா போடுதோம்னு சொல்லி ஒத்துக்கிட்டாங்க. சேதுபதி அதுக்கு சம்மதிச்சதும் போய் மைசூரு கோட்டை படையில பாதி பேத்த அடிச்சிட்டு வந்தாங்க. அன்னைக்கு போர் முடிஞ்சி திரும்பி வந்ததும் இராமநாதபுரம் சேதுபதி நேரா மதுரை போகாம ஊர்க்காடு கிளம்பி வந்து சுப்பு தேவரையும், ஐயங்காரையும் பொன்னும், பணமும் வச்சி இராமநாதபுரம் வர சொன்னாரு. அவங்க ஊர்க்காடு செமீனுக்கு திருநீறு அடிச்சி சத்தியம் பண்ணவங்க, ரெண்டு பேரும் அவங்க வித்த ஊர்க்காடுக்கு மட்டுந் தான் சொந்தம்னு சொல்லி வர மறுத்துட்டாங்க.”

“இத கேட்ட திருமலை நாயக்கரு எங்க ஊர்க்காடு பாளையக்காரர் கோட்டி லிங்க சேதுராயர மதுரை வரச் சொல்லி, இனி ஒங்க பாளையத்துக்கு தீர்வ கெடையாது. அவங்க ரெண்டு வரிசை காரகட்டையும் நீயும் தீர்வை வாங்கக் கூடாதுன்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டாரு. அப்பல்லாம் ஆறுக்கு ஒன்றை பாட்டமாக்கும் தீர்வை கணக்கு அவ்வளவு செழிச்ச பூமிலா. நாயக்கரு எதுவுமே எனக்கு வேணாம்ன்னு சொல்லிட்டாரு. அன்னையில இருந்து இங்க இது தான் கணக்கு. ரெண்டு வரிசைக்காரங்கட்டையும் தீர்வை வாங்கிறது கிடையாது. அவங்கள யாராச்சும் ஜெச்சாங்கன்னா அவங்களுக்கும் தீர்வை கெடையாது.”

சிவன்பாண்டி தேவர் கீழே அருகிலிருந்த சுடலைமுத்துவுடன் பொய்யாட்டம் ஆடிக் கொண்டிருந்தார். இருவர் கைகளும் மாட்டு வண்டியின் நடுவில் இருக்கும் போர் கம்பை எடுத்துச் சுழற்றியது. சிவன்பாண்டி தேவரின் கையில் இருந்த கொம்பு அவர் கைப்பட்டதும் ஓசை எழுப்பியது. அந்த ஓசை எழும்போது அவரது காலை தரையில் அறைந்தார். அந்த கம்பை ஒற்றை கையில் தூக்கிக் கொண்டு அவர் காலை தூக்கி அறைவது பீமன் கதையை தூக்கி அறைவது போலிருந்தது சுடலைமுத்து அதனை தன் சிலம்பம் கொண்டு தடுத்தார். சிவன்பாண்டி வேண்டுமென்றே சுடலைமுத்துவிற்கு நேக்கு காட்டினார். அவர் இடது கை முட்டியை மடக்கி தன் கம்பை மேலே தூக்கி அடிக்க வர சுடலைமுத்து அதனை சிலம்பால் தடுக்க ஓங்கி வலது கையை மடிக்கி மாற்றி பள்ளவெட்டு வெட்டினார். அதனை எதிர்பாராத சுடலைமுத்து பின் வாங்கி தடலில் இருந்து ஓடி வந்ததும் கூட்டம் மொத்தமும் சிரித்தது.

தவசிப்பிள்ளை என்னிடம்,  “இந்த வேடிக்க எல்லா வருஷமும் நடக்குறது தான் கேட்டியா ஆனா சிவன்பாண்டியோட அடி பொய்யா விழுறதில்ல. அதுக்கு ஒசரமாக்கும் எதிர்ல நிக்கிறவன் தலதெரிச்சு ஓடுறது. இத்தனைக்கும் சுடலைமுத்து சிவன்பாண்டியோட இடது கைய்யி மத்தவன் எதிர்ல நின்னா என்னா ஆவான்னு பாத்துக்க” என்றார்.

சிவன்பாண்டியின் கம்பு தரையில் அரைப்பட்டதும், ஓசை இரைச்சலாக மாறி எல்லோர் காதையும் இரைத்தது. அது எழுப்பும் ஒருவித இரைச்சல்தான் இந்த விளையாட்டின் சூட்சமம். அந்த இரைச்சல் சத்தம் எதிரியை கதி கலங்கச் செய்துவிடும். அதன்பின் இவர் எதிரியின் நாடி பார்த்து தாக்குவார்.

ஊர்க்காடு ஐயங்கார் வஸ்தாரி வரிசையை வெல்வது அத்தனை சுலபமல்ல. அவர்கள் எதிரியின் அடி தங்கள் மேல் படாமல் தடுக்கும் வித்தை அறிந்தவர்கள். எதிரியின் சிலம்பு அவர்கள் மேல் ஒரு அடி படாது மாறாக இவர்கள் வஸ்தாரி கொம்பு எதிரியின் கழுத்தில் பட்டால் கழுத்து நரம்பு வீங்கிவிடும் அதனை எந்த நரம்பு வைத்தியனாலும் குணப்படுத்த முடியாது. வர்ம வைத்தியருக்கும் அதனை முறிக்கும் வித்தை தெரியாது. ஆறு மாதம் படுத்த படுக்கையாகி மெல்ல உயிரை விட வேண்டும். இதனை மெய்யப்ப பிள்ளை துரையிடம் சொல்லி முடித்த போது அவர் தீவிரமான முகத்துடன் இருவரும் சண்டை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

துரை என்னிடம், “எத்தனை பேர் இவங்கள ஜெயிச்சு பேஷ்குஷ் விலக்கு வாங்கிருக்காங்க?” எனக் கேட்டார்.

நான் அதனை மெய்யப்ப பிள்ளையிடம் கேட்டதும் அவர், “நோ சார். நோ புலி சண்டை டூ சிவன்பாண்டி வஸ்தாரி வரிசை” என்றார். நான் துரையிடம், “யாரும் இதுவரை தீர்வை விலக்கு வாங்கியதில்லை மாறாக இரட்டிப்பான தீர்வையை தான் ஜமீனுக்கு கொடுக்கின்றனர்” என்றேன்.

அதனைக் கேட்ட ஜமீன் பெருமிதத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு, “அவங்க வஸ்தாரி வரிசைய எதிர் கொண்டு ஜெயிக்கிறது அத்தன லேசுபட்ட காரியமில்லன்னு சொல்லு. சேதுபதியே இத கண்டு அரண்டு பேயிருக்காருன்னா பாத்துக்கிடும்.” என்றார். ஜமீன் அதை சொன்னதும் துரை அதனை அமோதிப்பது போல் ஜமீனை பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தான்.

முப்பிடாதி அம்மன் கோவிலில் உச்சி கால பூஜை தொடங்கியது. பூஜை முடிந்ததும் புலி வேஷம் கெட்டி வரிசையாக எல்லோரும் ஆடிக் கொண்டு அம்பாசமுத்திரம் வண்டி மலைச்சம்மன் கோவில் வரை செல்வார்கள். அவர்கள் பின்னால் ஜமீன் யானையில் செல்ல மற்றவர்கள் அவர்களை தொடர்ந்து வருவார்கள். அதற்குள் வஸ்தாரியை எதிர்க்க இரட்டை வால் புலி வேஷம் கெட்டி எதிரில் வர வேண்டும். ஒற்றை வால் மட்டும் வைத்து வருபவர்கள் பின்னால் பொய்யாட்டம் போட்டு ஆடி வருவார்கள்.

துரையின் முகத்தில் தீவிரம் கூடி யோசனையில் ஆழ்ந்தான். அந்த தீவிரம் ஜமீனுக்கு மேலும் பெருமிதத்தை கூட்டியது.

பிள்ளை தொடர்ந்தார், “பொதுவா நம்ம செமீன்ல சிவப்பாண்டி தேவர யாரும் எதித்து நிக்கிற வழக்கம் கெடையாது. ஆனா எட்டு வருஷ மின்னாடி சிவபாண்டிய எதித்து நிக்க வந்தான் சுப்பன். நாடாக்க பய, அப்டி யாரோ எதித்து நிக்கிற வகைமுறயில்லேலா இங்க, ஆனா வேஷங் கெட்டி வந்திட்டான். சிவபாண்டிக்கு மீச துடின்னா அப்டி ஒரு துடி, இப்பமே அவன கொல்லுதேன்னு சொல்லி சுப்பன் செல்ம்பாலையே அவன தாக்கி அங்கயே கொன்னாரு. அதுக்கு பொறவு எதித்து நிக்க ஆள் வாரதில்ல. திரும்பவும் சுப்பனோட பையன் ரெண்டு வருஷம் மின்னாடி வேஷங் கெட்டுறத ஊர்க்காரங்க பாத்து ஜமீன்ட்ட இழுத்திட்டு வந்தாங்க. ஜமீன்தான் அவன பெரிய மனசு பண்ணி உசிர காப்பாத்திக்கன்னு மன்னிச்சு விட்டாரு. என்ன இருந்தாலும் பிள்ளக்குட்டி காரணுல்லா.”

அதனை முழுவதும் கேட்ட துரை ஏதோ சிந்திப்பதுபோல் தன்னுள் ஆழ்ந்திருந்தார். பின் என்ன நோக்கி, “இஸ் ஹி சுயர் தட் சவுண்ட் இஸ் காசிங் தீ ஃட்ரபில் டூ எனிமீஸ்” எனக் கேட்டான்.

நான், “யெஸ், சுயர்” என்றேன்.

அவன் அந்த விளையாட்டில் மூழ்கி அதனை முழுதும் ஆராய தொடங்கிவிட்ட ஆர்வம் முகத்தில் தெரிந்தது. நீண்ட யோசனையை தொடர்ந்து ஜமீனை நோக்கி, “ஐ கேன் டிஃபீட் தெம். ஐ மீன் ஐ வில் மேக் தெம் லூஃஸ். அவங்கள ஜெயிக்கிறது சுலபம்” என்றான். ஜமீன் புரியாதவராக என்னைப் பார்த்தார். நான் அதனை திரும்ப சொல்ல முயற்சித்தேன். ஜமீனின் முகம் கோபத்தில் சிவக்கத் தொடங்கியதும் நான் அமைதியானேன். ஜமீன் துரையை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்து பின் அமைதியானார். மெய்யப்பபிள்ளையும், தவசிப்பிள்ளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு பின் என்னைப் பார்த்தனர்.

நான் புரியாதவனாக துரையிடம், “இது நீங்க நினைக்கிற மாதிரி அத்தன சுலபமான விளையாட்டில்ல. இந்த வித்தை இவங்க வரிசைக்கு மட்டும்தான் தெரியும். ஜெமீனுக்கு கூட அவங்க வித்தை என்னனு தெரியாது. இத்தன வருஷமா இவங்கள ஜெயிசிக்க இங்க ஆளே இல்ல” என்றேன்.

துரை என்னை மறுப்பதுபோல் தலையசைத்தான். அதற்கு மேல் அவனிடம் பேச நான் முனையவில்லை. ஜமீனின் இடது கை மீசையை வேகமாக நீவிக் கொண்டிருந்தது. கோபத்தில் கண்கள் சிவக்கத் தொடங்கின.

கீழே முப்பிடாதி அம்மன் கோவில் பூஜைக்காக ஜமீன் கோட்டியப்ப தேவர் எழுந்த போது, துரை அதனை ஓரக்கண்ணால் கவனித்தவனாக, “இட்ஸ் ஈஸி டூ மேக் தெம் லூஃஸ் சிலுவை” என்றான் என்னைப் பார்க்காமல். கருப்பான ஜமீனின் முகம் சுண்டிவிடும் சிவப்பு பழமாக மாறியது.

எழுந்த வேகத்தில் துரையிடம், “அவங்கள நீங்க ஜெயிச்சு காட்டிட்டா நான் இந்த போகத்துக்கான தீர்வைய ஆறுக்கு ஆறு பாட்டாம் நெல்லா சர்க்காருக்கு தாரேன். எனக்கும், எனக்காக இருக்க இந்த பதினெட்டு பட்டிக்கும் ஒரு குண்டு மணி நெல்லு கூட வேண்டாம்” என்றார்.

அப்படி ஜமீன் சொல்வார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என அவர்களது முக பாவம் காட்டியது. மெய்யப்ப பிள்ளையும், தவசிபிள்ளையும் செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டிருந்தனர். துரை தன் இருக்கையில் இருந்து எழுந்து அந்த சவாலுக்கு தனக்கு சம்மதம் என ஜமீனிடம் தெரிவித்தான்.

அவன், “மொத்த நெல்லும் எனக்கு வேண்டாம் ஆனா நான் ஜெயிச்சிட்டா இனி வரி கணக்கு நான் வைக்கிறது. காலத்துக்கும் நீங்க தோத்தவங்கட்ட வாங்குற ஆறுக்கு இரண்டு கணக்கு வச்சி சர்க்காருக்கு நீங்க வரி அனுப்பணும்” என்றான்.

ஜமீன் நிதானமானார் அவர் முகத்தில் புன்னகை பரவியது அவனிடம் திரும்பி, “அந்த முப்பிடாதி மேல ஆணையா இதுக்கு நான் கட்டுப்படுறேன். நான் தொத்துட்டா இனி தீர்வை ஒங்க கணக்காக்கும், இனி இந்த ஊர்க்காடு ஜமீன்ல ஒரு வஸ்தாரி வரிசையும் இருக்காது. மாறா நீங்க தோதுட்டா எங்க ஜமீனுக்கு தீர்வையே வாங்கக்கூடாது” என்றார்.

துரை மெல்லிய புன்னகையுடன் அதற்கு சம்மதித்தான்.

***

துரைக்கும், ஜமீனுக்குமான ஒப்பந்தம் முப்பிடாதி அம்மன் கோவில் திடலில் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. முரசு சத்தம் அங்கிருந்து கிளம்பி சுற்றியுள்ள பதினெட்டு பட்டிக்கும், பதினெட்டு ஜமீனுக்கும் எனத் தொடர்ந்து சென்றது. திடீரென புதிய சவால் எழுந்ததால் தீர்வை திருவிழா அடுத்த திங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. திரும்ப அதே திடலில் போட்டி சிவன்பாண்டிக்கும், துரை கூட்டி வருபவனுக்கும் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. துரை தன் அலுவலகத்தில் தீர்வைக்கான ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்து ஜமீனுக்கு கையொப்பமிட்டு அனுப்பினான்.

ஊர்க்காடு ஜமீனிலிருந்து கொக்கரக்குளத்தில் இருக்கும் தன் அலுவலகத்திற்கு திரும்பிய துரை அங்கே இரண்டு நாட்களாக தனித்தவனான். யாரையும் உள்ளே விடாது இருக்கும் படி என்னிடம் சொல்லியிருந்தான். நானும் உள்ளே செல்லவில்லை. அவனும் அவனது அறையை விட்டு வெளியே வரவில்லை.

மூன்றாம் நாள் வெளியே வந்தவன் சுப்பன் மகன் சுண்டனை அலுவலகத்திற்கு அழைத்து வர சொன்னான். அவனுடன் ஜமீனையும், சிவன்பாண்டி தேவரையும், அவர்கள் வரிசை குழுவையும் இங்கே ஒரு விருந்து ஏற்பாடு செய்திருப்பதாக அழைத்து வரச் சொன்னான்.

நான் அவனிடம், “அவங்கள்லாம் மறவர் குலம், உயிரு போனாலும் ஜமீனுக்காகதான் போகும்னு திருநீறு எடுத்து சத்தியம் பண்ணவங்க. அதுனால உயிரு போற வரைக்கும் போராடுவாங்க. என்ன நடத்தாலும் ஊர்க்காடு ஜமீனுக்கு மாறா துரோகம் செய்ய மாட்டாங்க.” என்றேன்.

அவன் என்னை கவனித்ததாக தெரியவில்லை, தனக்கு தெரியும் என்பது போல் தலையசைத்தான். நான் அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேச விரும்பவில்லை. என் பணியை மட்டும் செய்தேன். துரை மீண்டும் தன் அறைக்குள் தன்னை முடக்கிக் கொண்டான். மறுநாள் மதியம் துரையின் வீட்டில் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடானது. 

ஜமீன் தன் குதிரை வண்டியில் வந்து இறங்கினார். அவருக்கு பின்னால் தனியே மாட்டு வண்டியில் மெய்யப்ப பிள்ளையும், தவசிப்பிள்ளையும் வந்தனர். சிவன்பாண்டி தேவர் முன்னே வர சுடலைமுத்து தேவர் தன் வஸ்தாரி வரிசைக்காரர்களுடன் பின்னால் நடந்து வந்தார்.

வண்டியை விட்டு இறங்கும் போதே ஜமீனின் முகம் இறுகியிருந்தது. அவரது இடது கை மீசையை விட்டு இறங்கவில்லை. அவர் இறங்கியதும் ஓடி வந்து மெய்யப்ப பிள்ளையும், தவசிப்பிள்ளையும் அவர் பின்னால் வந்து கை கட்டி நின்றனர். வரிசைக்காரர்கள் இரு அணியாக பின்னால் திரண்டு நின்றனர். சிவன்பாண்டி தேவர் அவர்களின் முன்னால் நின்று மீசையை முறுக்கிக் கொண்டிருந்தார். சுடலைமுத்து சிவன்பாண்டி பின்னால் நின்றார்.

நான் ஜமீன் முன் சென்று முகமன் சொல்லும் வழக்கம் இல்லாததால் கை கட்டி ஓரமாக நின்றேன். ஓரக்கண்ணால் என்னைப் பார்த்த ஜமீன் உள்ளே போக எத்தனித்த போது, அப்போது தான் அவர்கள் வருகையை அறிந்தவனாக துரை உள்ளிருந்து வந்தான். ஜமீன் இறுகிய முகத்துடன் துரையிடம், “அந்த சுண்டன் பயல ஆட வைக்கிறதா கேள்விப்பட்டேன்” என்றார்.

துரை சிரித்தப்படி, “யெஸ். ஹி ஃபைட் வெல்” என்று இரு கையையும் சிலம்பை பிடித்து வரிசைக்காட்டுவதுபோல் காற்றில் முன்னும் பின்னுமாக அசைந்து காட்டினான்.

மெய்யப்ப பிள்ளை முன்னால் வந்து, “அப்படி வழக்கம் இங்க கெடையாது பாத்துகிடுங்க” என்றார். அவரது வாயிலிருந்து வெற்றிலை எச்சில் ஒழுகியது. அதனைக் கண்டதும் துரை அருவெறுப்படைந்தான். அதனை புரிந்துக் கொண்ட ஜமீன் பிள்ளையை முறைத்தார். பிள்ளை பின்னால் தள்ளிச் சென்றார்.

“அவன் உசிரு அன்னைக்கே களத்துல போகவேண்டியது. நான் தான் காப்பாத்துனேன். இப்ப ஒங்க மூலமா போகபோகுது எல்லாம் அவன் விதி.” என்றார் ஜமீன். துரை பதில் பேசாமல் எல்லோரையும் உள்ளே வரவேற்றான்.

ஜமீன் உள்ளே சென்ற போது அங்கே நாற்காலியில் சுண்டன் அமர்ந்திருந்தான். ஜமீனைக் கண்டதும் கையைக் கட்டி வாயைப் பொத்தி பின்னால் எழுந்து நகர்ந்துக் கொண்டான்.

அதனைக் கண்டதும் கோட்டியப்ப தேவரின் முகம் தன்னிச்சையாக துடித்தது. கணக்குப் பிள்ளையிடம், “நாடா பயல்லாம் நம்ம மின்னாடி ஒக்காருற நெலமை வந்திரிச்சு. அவன் களத்துல சாவணும். துடிச்சு துடிச்சு சாவணும். படுக்கையாகி சாவ கூடாது களத்துலயே அவன கொல்லணும். இல்லேன்னா ஜமீன்னு ஒன்னு ஊர்க்காடுல இருக்குறதுல அர்த்தமில்ல” என மெல்ல சொன்னது என் காதில் விழுந்தது.

துரை தான் அந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்க வேண்டும், ஆனால் அவன் அதனைக் கவனித்தவனாக காட்டிக் கொள்ளவில்லை. அங்குள்ளவர்களுக்கு வருந்திற்கான கட்டளைகளை ஏவிக் கொண்டிருந்தான். நன்கு அலங்கரிக்கப்பட்ட சாப்பாடு மேசையின் முன் நாற்காலியில் துரையும், ஜமீனும், துரையின் அழைப்பின் பேரில் வந்த மற்ற துரைமார்களும் அமர்ந்திருந்தினர். விருந்து முழுவதும் ஜமீன் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். துரை சிவன்பாண்டியின் வரிசையைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தான். அவரது கம்பில் இருந்து வரும் ஓசையை பற்றி வியந்து சொன்னான்.

விருந்து முடிந்தது துரை சிவன்பாண்டி தேவரை அழைத்து பேசிக் கொண்டிருந்தான். சிவன்பாண்டியின் கம்பை வாங்கிப் பார்த்து அதனை அவர் அசைப்பது போல் அசைத்துப் பார்த்தான். துரையால் அதனை ஒரு கையால் தூக்க முடியவில்லை. இரண்டு கையால் தூக்கி அசைக்க முயற்சித்தார், அவரால் முடியவில்லை.

திரும்ப துரை தட்டிய போது கைதட்டும் ஓசை தான் எழுந்தது. அதனை வாங்கி சிவன்பாண்டி தேவர் கை முட்டியை மடக்கி பின்னால் இழுத்து முன்னால் காற்றில் கொண்டு வந்து கால் தட்டியதும், “டடார்…” என்ற ஓசை அறையை நிறைத்தது. துரை அதனை வியந்து விருந்துக்கு வந்திருந்த மற்ற துரைமார்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். சிவன்பாண்டி மீண்டும் ஒரு முறை வஸ்தாரியை சுற்றி ஓசை எழச் செய்தான். இம்முறை சிவன்பாண்டியின் கையிலிருந்து ஓசை எழுந்ததும் சுற்றி அதிர்ந்தது. துரை ஓசை அடங்கியதும் தன் காதிலிருந்து கையை எடுத்து ஓசை வந்த மகிழ்ச்சியில் கையை தட்டினான். ஜமீன் ஓர விழிகள் அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தன. துரை சிவன்பாண்டியின் கையிலிருந்து அதனை வாங்கி சுற்றிப் பார்த்தான் ஓசை எழாத போது அவன் முகம் சுருங்கியது. சிவன்பாண்டி பெருமிதத்தில் மீசையை முறுக்கிக் கொண்டிருந்தார்.

ஜமீன் சாப்பிட்டு முடித்தது, பிள்ளையின் செல்லத்திலிருந்த வெற்றிலையை வாங்கி சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார். அவர் மெய்யப்ப பிள்ளையை அருகில் அழைத்து ஏதோ சொன்னதும், பிள்ளை சிவன்பாண்டியை நோக்கி ஜாடைக் காட்டினார். சிவன்பாண்டியின் விழிகள் என்ன என்பது போல் பிள்ளையிடம் கேள்வி எழுப்பின. மீண்டும் மீண்டும் தன் கம்பை சுழற்றி ஓசை எழச் செய்தான். ஜமீன் அவரை மட்டும் நோக்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. துரை தன் மகிழ்ச்சியின் மூலம் சிவன்பாண்டி அதனை தொடர்ந்து செய்தான். பின்னால் இருந்த பிள்ளை கை செய்கையால் சிவன்பாண்டியிடம் ஏதோ சொல்ல, துரை சிவன்பாண்டியின் ஆட்டத்தை பற்றி அங்கிருந்த மற்ற துரைக்காரர்களிடம் வியந்துக் கூறிக் கொண்டிருந்தான்.

ஜமீனின் முகம் கோவத்தில் சிவக்கத் தொடங்கியது, சிவன்பாண்டியை பார்த்து, “ஏலே சிவபாண்டி எனக்கு வாய் கொப்ளிக்க தண்ணி எடுத்திட்டு வாலே” என்றார்.

சிவன்பாண்டி தன் அருகிலிருந்த சுடலைமுத்துவை ஏவினார். சுடலைமுத்து ஏவியது தான் தாமதம் ஜமீன் தன் கையிலிருந்த பிரம்பை சிவன்பாண்டியின் முதுகில் மாறி மாறி பதிய செய்துவிட்டு துரையை நோக்காமல் அங்கிருந்து வெளியேறினார். பிள்ளை அவர் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றார். அங்கு எல்லோர் முன்னும் கைகட்டி அடி வாங்கிய சிவன்பாண்டி முகத்தை உயர்த்தாமல் வெளியேறினார். சுடலைமுத்து துரையை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் சிவன்பாண்டியின் பின்னால் சென்றான்.

***

அறிவித்தது போல் ஊர்க்காடு ஜமீனின் பட்டத்து அரண்மனை முன்னால் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் திடலில் போட்டிக்காக ஊர் கூடியது. முரசறைந்து சுற்றியுள்ள எல்லா ஜமீன்களுக்கும் அறிவித்ததால் கூட்டம் ஐந்து மடங்காக கூடியிருந்தது. ஊத்துமலை ஜமீனும், சிங்கம்பட்டி ஜமீனும் வந்திருந்தனர். அவர்களுக்கான இருக்கையும் தனியே அலங்கிரிக்கப்பட்டது.

சுண்டன் அரண்மனை முன்னால் வந்து ஜமீன், துரை இருவரையும் வணங்கி முப்பிடாதி அம்மனை வணங்கிவிட்டு திடலின் நடுவே கையில் சிலம்ப கம்புடன் வந்து நின்றான். திடல் நடுவே வந்த சிவன்பாண்டியின் முகம் கணத்திருந்தது. அவருக்கு பின்னால் சுடலைமுத்து சிவன்பாண்டியின் கம்பை தூக்கி வந்தான்.

சிவன்பாண்டி தேவர் அகஸ்தியர் மலையிருக்கும் மேற்கு திசை நோக்கி தன் கையிலிருந்த கொம்பை அசைத்து முதல் வரிசைக்காட்டி வணங்கினார். பின் தங்கள் வஸ்தாரி வரிசையின் மூத்தவரான சுப்பாண்டி தேவரின் காலில் விழுந்து திரும்பி திடலில் நடுவே தன் கையிலிருந்த கம்புடன் சுற்றி வந்தார். எதிரிலிருந்த சுண்டன் கையில் சிலம்பை வைத்துக் கொண்டு அப்படியே நின்றான்.

ஜமீன் திடலுக்கு இறங்கி சென்று சிவன்பாண்டியை வாழ்த்தினார். சிவன்பாண்டியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அணைப்பது போல் அவரது காதில் ஏதோ சொன்னார். சிவன்பாண்டி அவரை ஆமோதிப்பது போல் பணிவாக தலையாட்டினார்.

திரும்பி வரும் போது ஜமீனின் முகத்தில் பதற்றமும், புன்னகையும் ஒரு சேர இருந்தது தெரிந்தது. அவர் இரண்டையும் மறைக்க இடது கையால் மீசையை நீவிக் கொண்டிருந்தார். துரை சிரிப்புடன் ஜமீனின் அருகில் சென்று அமர்ந்தான். அவன் முகத்தில் குடியிருந்த பரவசம் ஜமீனை மேலும் இறுக்கம் கொள்ள செய்தது. மெய்யப்ப பிள்ளையும், தவசிப்பிள்ளையும் என்னருகே பேசாமல் இருந்தனர்.

சுடலைமுத்து பணிவாக சிவன்பாண்டியின் முன்னால் சென்று கம்பை கொடுத்தான். அவன் கையிலிருந்து கம்பை வாங்கிய சிவன்பாண்டி, இடது கையை தன் காலில் அடித்ததும் ஒருவித சத்தம் எழுந்தது.

தவசிப்பிள்ளை என்னிடம், “அந்த சத்ததுலதான் ஏதோ சூட்சமம் இருக்கு. ஒரு கட்டதுல்ல அவரு அடிப்பாரு பாரு அந்த சுண்டன் பய கழுத்துலயே… அத்தோட அவன் விழுந்தான். பனை மர யெசக்கி அடிச்ச மாதிரி தான் கணக்கு. அவன் அதுக்கு பொறவு எந்திரிக்க மாட்டான்” என்றார்.

சிவன்பாண்டி அவனை சுற்றி சுற்றி வந்தார். அவர் கையில் கம்பில்லாமல் காற்றில் கையை அசைப்பது போலிருந்தது. ஆனால் அவர் காலை அறைந்த போது கம்பில் இருந்து எழுந்த சத்தம் முன் போலில்லாமல் “டிஷ்ஷ்…” என ஒலித்தது. சிவன்பாண்டி அந்த ஓசை கேட்டு பின் வாங்குவது மேல் முற்றத்தில் இருந்து தெரிந்தது. ஜமீன் குழப்பமாக திரும்பி பிள்ளையை பார்த்தார். சத்தம் மாறி வந்ததும் சிவன்பாண்டி எச்சரிக்கையாகி நிறுத்தினார்.

சிவன்பாண்டி முன்னேற தொடங்கினார், அவர் முன்னேறியும் சுண்டன் முன்னேறாமல் அவன் இடத்திலேயே நின்றான். சிவன்பாண்டி முதல் அடியை ஓடி வந்து கால் குத்தி முண்டா கொடுத்து சுண்டனின் வலதுகால் நோக்கி தன் கம்பை பள்ளவெட்டு வெட்டினார். அசையாமல் இருந்த சுண்டன் அவர் கை அவனை நோக்கி வரும் திசையை கவனித்து தன் சிலம்பை வைத்து அதனை மறைத்தான். சிவன்பாண்டியின் கொம்பு சுண்டனின் சிலம்பில் படும்போது அவரது கால் தரையை அறைந்து மீண்டும் அவர் கம்பிலிருந்து “டிஷ்ஷ்…” என்ற ஓசையை எழுப்பியதும் சிவன்பாண்டி பின் வாங்கினார். சுண்டன் அசையாமல் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.

சிவன்பாண்டி அடிப்பதை ஜமீன் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். துரை தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான். அவன் சிவன்பாண்டியின் கம்பும், சுண்டனின் சிலம்பும் அசையும் தோறும் அதைப் போலவே தன் கைகளை அசைத்துக் கொண்டிருந்தான். ஜமீன் அவனை இருக்கையில் அமரும்படி சொன்னார். அவன் அதை சட்டை செய்யவில்லை. ஜமீன் தன் பக்கத்திலிருந்து ஊத்துமலை ஜமீனிடம் ஏதோ சொல்ல இருவரும் சிரித்தனர்.

மெய்யப்ப பிள்ளை என்னருகே வந்து, “என்ன விபரீதம் நடக்க போகுதோ?” என்றார். இப்போது அவர் வெற்றிலை போடாமல் இருந்தார். இரு கைவிரல்களும் ஒன்றை ஒன்று பிசைந்துக் கொண்டிருந்தன.

நான் அவரிடம், “நமக்கென்ன பேசாம ஆட்டத்த மட்டும் பாருங்க” என்றேன். ஊர், திடலை சுற்றி ஆரவாரம் செய்துக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு முறையும் சிவன்பாண்டி தேவர் பலத்தை கூட்டி எதிரில் நின்ற சுண்டன் மேல் அடிக்கும் போதும் அவரது கொம்பிலிருந்து எழும் ஓசைக் கூடிக் கொண்டே வந்தது. எதிரில் நின்றவனுக்கு அந்த ஓசை கேட்டதாகவே தெரியவில்லை. அவன் லாவகமாக அவரது அடியை தடுத்துக் கொண்டு மட்டும் நின்றான். சிவன்பாண்டி அந்த ஓசை எழுந்ததும் முன் அடியிலிருந்து பின் வாங்கினார். அவரது கம்பிலிருந்து எழும் வித்யாசமான ஓசை அவருக்கு இரைச்சல் ஆவது அவர் பின் வாங்குவதிலிருந்து தெரிந்தது. பின் மூர்க்கமாக ஓடி வந்து தாக்கினார். அந்த ஓசை கேட்டதும் அவரே பின் வாங்கினார். இப்போது அவர் காலை தரையில் அடிப்பதை நிறுத்தியிருந்தார்.

மெய்யப்ப பிள்ளை தவசிப்பிள்ளையிடம், “ஏதோ தெய்வ குத்தம் நடந்து போச்சின்னு நினைக்கேன். சிவப்பாண்டி ஆட்டத்துல ஏதோ மாத்தம் தெரியுதே” என்றார்.

முதல் முறை காலடித்து அமத்தி சுண்டன் கழுத்தை நோக்கி போன சிவன்பாண்டியின் கொம்பை, தன்னை வலப்பக்கமாக வளைத்து இடது கை முட்டியின் அருகே சிலம்பை கொண்டு வந்து சுண்டன் தடுத்ததும் ஜமீனின் முகம் இறுகி, மீசை நீவுவதை நிறுத்தினார்.

இரண்டாவது முறை வலப்பக்க முட்டியை தூக்கி தன் சிலம்பால் அதனை தடுத்தான். இதனை சிவன்பாண்டி தேவரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவர் பின் வாங்கினார். ஒவ்வொரு முறை அவர் கொம்பை அடிக்கும் போதும் எழும் ஓசையை கேட்டு அவர் தலை சுற்றுவது போல் ஆடி பின் நிதானமானார். அவரது உடல் ஒவ்வொரு வரிசை காட்டிய பின்னும் ஆடி அமைந்தது. ஜமீனின் உதடுகள் துடிக்கத் தொடங்கின.

எதிரில் நின்ற சுண்டன் அசையாமல் அங்கேயே நின்றான். சிவன்பாண்டி தேவர் தன் கொம்பை சுழற்றி ஓசை எழுப்பினார். மூன்றாவது முறை அவர் ஓடி வந்து ஓசையை கூட்டி அடித்த போது அவன் முற்றிலுமாக தலையை பின்னால் குனிந்து சிலம்பால் தடுத்து அவரை பின்னால் தள்ளி விட்டான். ஜமீன் தன் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

ஜமீன் எழுந்ததும், சிவன்பாண்டி அரண்மனையை நோக்கி திரும்பினார். அவரது தலை காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. சுண்டன் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான். முதல் முறையாக திடலில் ஊர் மக்களின் ஆரவார சத்தம் மேல் எழுந்தது. இப்போது சிங்கம்பட்டி, ஊத்துமலை என அருகிலிருந்த ஜமீனின் முகமும் இறுகியது. சிவன்பாண்டி சுண்டனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

துரை இரு கையை தட்டி ஓசையை எழுப்பினான். அங்கு நடப்பது அனைத்தும் அவன் சொல்லி நடப்பது போல் இருந்தது. ஜமீன் வேறெங்கும் இல்லாமல் திடலை நோக்கி வெறித்திருந்தார். துரை பாதிக் கண்ணால் ஜமீனைப் பார்த்துக் கொண்டிருந்தது பின்னால் இருந்து தெரிந்தது. மெய்யப்ப பிள்ளையும், தவசிப்பிள்ளையும் அருகில் தளர்ந்திருந்தனர். திடலை சுற்றி ஊர் மொத்தமும் ஆரவாரத்துடன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

திரும்பி வந்து சிவன்பாண்டி தாக்கியபோது கொம்பின் ஒரசல் சத்தம் கேட்டு கீழே விழுந்தார். விழுந்தவுடன் எழுந்து சிவன்பாண்டி தேவர் மீண்டும் மூர்க்கமாக வஸ்தாரியை எதிரில் நின்ற சுண்டன் மேல் தாக்கினார். அவன் அதனை தன் சிலம்பு கொண்டு தடுப்பது மட்டும் போதுமானதாக இருந்தது. சுண்டன் ஒவ்வொரு அடியாக தடுக்க ஜமீன் கண்முன்னே தளர்ந்துக் கொண்டு வந்தார். சிவன்பாண்டி தேவர் மேலும் மூர்க்கமாக அடித்தார். மூர்க்கத்தின் ஓசை கூடக் கூட ஜமீன் மேலும் தளர்ந்தார். திடலில் சிவன்பாண்டி தளர்வதும் தெரிந்தது. அந்த ஓசை துரையை குதூகலிக்க செய்தது அவன் எழுந்து கைகளை தட்டி ஆர்பரித்தான்.

சிவன்பாண்டி மீண்டும் கம்பை தூக்கி சிலம்பில் அறைந்த போது அந்த ஓசை கேட்டு சிவன்பாண்டி தலைசுற்றி விழுவது போல் ஆனார்.

திடலில் முக்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சுப்பாண்டி தேவரின் கைகள் அகஸ்தியர் மலையை நோக்கி கூப்பி சன்னதம் கொள்வது போல் ஆடிக் கொண்டிருந்தன. அவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து, “தெய்வமே, தெய்வமே” என அலறுவது அரண்மனைக்கு கேட்டது. ஜமீனின் சிரிப்பு மொத்தமாக அடங்கி தன் இருக்கையிலேயே தளர்ந்தவர் ஆனார்.

சுண்டன் எதையும் கவனிக்காமல் சிவன்பாண்டியை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். ஜமீன் அங்கிருந்து வேகமாக உள்ளே சென்றார். துரை கைகளை தட்டிக் கொண்டு மாடத்தின் விழும்பில் நின்றுக் கொண்டிருந்தான். சிவன்பாண்டி கம்பை ஓங்கி ஒலி எழுப்பும் தோறும் அவரது உடல் பின் வாங்கி அதிர்ந்தது. சிவன்பாண்டியின் உடல் அதிரும் தோறும் துரையின் உடல் சிலிர்த்து. அவன் உடல் ரோமங்கள் புல்லரிப்பது போல் எழுந்தது. அவன் துள்ளி காற்றில் எழுந்து மிதப்பது போல ஆடிக் கொண்டிருந்தான்.

ஊர்க்காடு வஸ்தாரி வரிசையின் முன்னால் நின்ற சுடலைமுத்து தண்ணீர் எடுத்து முன்னால் சென்றதும் சுப்புத்தேவர் முறைத்தார். சிவன்பாண்டி எழுந்து முன்னேறி வந்து சொட்டையடித்து இடது கையை சுண்டனின் நெஞ்சை நோக்கி கொண்டு சென்ற அதே கணம் தன் கை நாடியை முண்டா கொடுத்து கழுத்து தசையோரம் வலது பக்க கம்பை கொண்டு சென்றார். சுண்டன் ஒரே அடியில் இரண்டு கைகளையும் சிலம்பால் அடித்து தடுத்தது தான் தாமதம். சுப்பாண்டி தேவர் நிதானமாகி, ”தெய்வ குத்தமாயிருச்சி இனி ஐயங்கார் வஸ்தாரி வரிசை ஊர்காடு ஜமீன்ல இருக்காது” என்று அங்கிருந்து வேகமாக நடந்தார்.

சிவன்பாண்டி கம்பை அசைக்காமல் அதனை வெறித்துப் பார்த்தார். சுண்டன் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான். சிவன்பாண்டி ஆள் தள்ளாடிக் கொண்டே சுண்டனை வெறித்த விழிகளோடு ஜமீனின் அரண்மனை பக்கம் திரும்பி துரையை பார்த்து, தன் கையிலிருந்த கம்பை வீசிவிட்டு அங்கிருந்து தள்ளாடிய படி நகர்ந்தார். ஜமீன் எதுவும் சொல்லாமல் தன் அரண்மனைக்குள் சென்று மறைந்தார்.

***

கொக்கிரக்குளத்தில் துரை தன் நாற்காலியில் அமர்ந்து தன் கோப்புகளை சரிப்பார்த்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தான். பாளையங்கோட்டை கலெட்டருக்கு சில கோப்புகளை சேர்க்கும் படி என்னிடம் ஆணையிட்டான்.

நான் செல்லாமல் அவன் அருகே நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். உருட்டி உருட்டி பார்க்கும் பெருச்சாளி விழிகள் கோப்புகளை மேய்ந்த வண்ணம் இருந்தன.

மூந்நூறு வருடங்களாக ஜெயிக்க முடியாத ஐயங்கார் வஸ்தாரி வரிசையை சுண்டன் ஜெயித்தது அன்றிரவே பதினெட்டு பட்டியிலும் பேச்சாகியது. அடுத்த நாள் காலையில் பாளையங்கோட்டையிலுள்ள அனைத்து ஜமீன்களுக்கும் செய்தி பரவியது.

ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்ப தேவர் இரவோடு இரவாக காணாமல் போயிருந்தார். சிவன்பாண்டி தேவர் அந்த முப்பிடாதி அம்மன் கோவில் திடலில் இருந்த புளிய மரத்தில் தூக்கிட்டுக் கொண்டதை மெய்யப்பப் பிள்ளை செய்தி அனுப்பியிருந்தார். ஜமீன் பொதிகை மலை அடுக்கத்தில் பைத்தியம் பிடித்து ஓடிக் கொண்டிருந்ததை பார்த்ததாக வதந்தி பரவியது.

எனக்கு சிவன்பாண்டி அடிக்கும் கம்பின் ஓசை அவருக்கே எப்படி இரைச்சலாக மாறியது என அறியும் ஆவல் பிறந்தது.

கோப்புகளில் இருந்து கண்ணை நிமிர்த்தியவன் என்ன என்பது போல் என்னைப் பார்த்தான்.

நான் சிவன்பாண்டி தேவர் தூக்கிட்டுக் கொண்ட செய்தியை அவனிடம் சொன்னேன். சரி என்பது போல் தலையசைத்தான்.

“ஜமீனும் காணாம போயிட்டாரு” என்றேன்.

ஒரு கண திடுக்கிடலுக்கு பின், “சரி அவரோட பேரன் கோட்டியப்பனை இனி ஜமீனாக அறிவிச்சிரலாம். நாளைக்கு இங்க வந்து பதிவு பண்ண சொல்லு” என்றான். அவன் அத்தனை சாதாரணமாக அவையனைத்தையும் எடுத்துக் கொள்வான் என நான் எதிர்பார்க்கவில்லை.

நான் மெல்ல அவனிடம், “அந்த வஸ்தாரி கலை அவங்களுக்கு சாமி மாரியாக்கும்” என்றேன். அவன் தெரியும் என்பது போல் தலையசைத்தான்.

“அந்த ஓசை அவருக்கே எப்படி இரைச்சலா மாறுச்சி?” எனக் கேட்டேன்.

அவன் தனக்கு தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினான். உதட்டில் சிறு புன்னகை அரும்பியது. துரை மௌனமாக கோப்புகளைப் பார்த்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். நான் அவன் அருகில் மௌனமாக நின்றேன்.

“அவனுக்கு பழக்கப்பட்ட ஓசைய மட்டும் தான் அவனால கேக்க முடியும். அதை தவிர அவனால வேற எதுவும் கேக்க முடியாது” என்றான். நான் புரியாதவனாக அவனைப் பார்த்தேன்.

நான் ஒடைந்துவிடுபவன் போல், “நீங்க அழிச்சது அந்த ஜமீன மட்டுமில்ல. அவங்க தெய்வத்த, அவங்க தெய்வமா நினைச்ச அவங்க வஸ்தாரி வரிசைய” என்றேன்.

என்னைப் பார்க்காமல் கோப்புகளை மேய்ந்த வண்ணம், “அவங்க சாமி அன்னைக்கே சிலையாயிருச்சி. இனி அந்த சாமி அவங்களுக்கு அருள் குடுக்காது. அது நான் பாராட்டும் போது, ஜமீன் சிவன்பாண்டிய பிரம்பால அடிச்சதுமே முடிவாயிருச்சு.” என்றான். நான் சந்தேகமாக அவனைப் பார்த்தேன்.

அவன், “இல்லை, நீ சொன்ன மாதிரி சிவன்பாண்டி ஜமீனுக்கு சத்தியம் செஞ்சவன். அவனை நம் பக்கம் இழுத்திருக்க முடியாது. அவனோட அந்த கம்பை மட்டும் தான் இழுக்க முடிஞ்சிது” என்றான். என்னுள் எரிச்சல் கூடியது. நான் அவனை சுட்டெறிப்பது போல் பார்த்தேன்.

“யார்” என்றேன். இப்போது என் உடலில் இருந்த எரிச்சல் குறைந்து நடுக்கம் பரவத் தொடங்கியிருந்தது.

“சிவன்பாண்டியின் அடுத்து இருந்த சுடலைமுத்து” என்றான்.

அதனைக் கேட்டதும் அங்கிருந்து ஓடிவிடுபவன் போல் திரும்பி நடக்கத் தொடங்கினேன். அவன் தீவிரமான முகத்துடன் என்னை நோக்கி எச்சரிப்பவனாக, “இந்த தீர்வையின் கணக்கு இனி எப்போதும் சர்க்காரின் இரகசியம்” என்றான்.

நான், என் உடலை சட்டென திருப்பி கைகளைக் கட்டி நின்று “யெஸ் சார்” என்றேன். அந்த பாவனை இயல்பாக என்னுள் கூடியது. என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவனது கோப்புகளுக்குள் மீண்டும் மூழ்கினான்.

***

  • கண்ணார் – குறு வாய்க்கால்
  • கர்ணம் – கணக்கர்
  • பேஷ்குஷ் – ஆண்டிற்கான மொத்த வரியை குறிக்கும் சொல்
  • வஸ்தாரி – அடிமுறை. திருநெல்வேலி மாவட்டம் ஊர்க்காடு ஜமீன் காவல்படையை சேர்ந்த மறவர் இனத்தால் செய்யப்படும் ஒரு வகை சிலம்பக்கலை. ஊர்க்காடு ஐயங்கார் வரிசை, சிலம்புடன் சண்டையிட மாட்டு வண்டியில் இரண்டு மாட்டையும் பூட்டும் பெரிய கோல் (நோக்கா) போல் இருக்கும் ஆயுதத்தை பயன்படுத்துவர்.

 ***

8 comments for “தீர்வை

  1. Manimaran
    January 1, 2022 at 5:12 pm

    வரலாற்றுச் சம்பவங்களில் உள்ள கண்டறியப்படாத இடைவெளிகளை வரலாற்றுப் பிரக்ஞையோடு கூடிய புனைவு கொண்டு பொருத்திப் பார்க்கும் போது ஒரு பதிலி வரலாறாகவே தோற்றம் கொள்ளும் மாயம் உண்டு. அந்தக் கலை உங்களுக்கு மெருகேறி வருகிறது நவீன். இந்தக் கதையின் சிறப்பம்சமும் அதுவே. மனமார்ந்த வாழ்த்துகள்.

    • kaliyaperumalveerasamy
      January 4, 2022 at 7:11 am

      ஆண்டான் அடிமை என்ற மனநிலை காட்டும் அடிப்படையில் மூழ்கிய நம் முன்னோர்களின் எச்சேதிகாரம் தந்திரத்தாலும் திட்டமிட்டப்பட்டும் மிக எளிமையாக தோற்கடிக் பட்டதை தீர்வை சிறுகதையின் மூலம் பதிவு செய்வதோடு இப்படி ஒரு செய்தி அல்லது வழக்கம் இருந்ததையும் வெளிப்படுத்திய ஆசிரியருக்கு நமது சமூகம் கடமைப்பட்டுள்ளது

  2. January 2, 2022 at 11:57 am

    வாழ்த்துக்கள் நவீன்.
    கதை விறுவிறுப்பாக ஒரு திரைப்படத்தின் காட்சியைப் போல் செல்கிறது. வஸ்தாரி என்னும் அடிமுறை ஆட்டம் பற்றிய வரலாற்றுப் பக்கங்களில் ஒளிந்து கிடக்கும் கலையை ஆதாரமாகக் கொண்ட கதை. மிக நுணுக்கமான செய்திகள், தகவல்கள், அழுத்தமான பாத்திரப்படைப்புகள். அவர்களின் குணாதிசயங்கள்.
    சாதிய வன்மங்கள், குல நம்பிக்கைகள் போன்றவை அழகாக ஊடுபாவியுள்ளன.
    மனித மனங்களின் கீழ்மை என்றுமே கலையின் கருப்பொருளாக இருந்து வந்துள்ளது. இதிலும் அதிலொன்றுதான் கருப்பொருள்.
    கதை சொல்லும் திறன் கூர்மையாகவும், வாசகனை அடுத்து என்ன நிகழும் என்று அறியத்தூண்டும் பரபரப்பும், விறுவிறுப்பும் கொண்டதாகவும், சுவாரசியத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. ரசித்து வாசிக்க வைக்கக் கூடிய கதை. காட்சிகள் விவரிக்கப்படும் போது சித்திரங்களாக மனதில் விரிகிறது.

  3. பார்த்திபன்
    January 3, 2022 at 2:41 pm

    சிறுகதையின் முக்கிய இயல்புகளில் ஒன்று அதன் பிரதிநிதித்தன்மை. ஒரு கை நீர் மட்டும் மொண்டு அதில் கடலின் அலைநெளிவுகளைக் காட்டுதல். கதையின் முடிவில் தாமஸ் துரை வெல்வது அப்படிப்பட்ட ஒன்று. இத்தகைய துரைகளின் தொடர்ச்சியான வெற்றிகள் தான் தமிழ்நாட்டின்/ இந்தியாவின் காலனிய‌ வரலாறாக இருந்திருக்கிறது. அவர்கள் களத்தின் வெற்றிகளை விருந்தறைகளில் தீர்மானிக்கின்றனர். அதேசமயம் அவர்களின் வெற்றிகளைத் தொற்றிக்கொண்டு இன்னொரு தரப்பு மேலே வருகிறது. சிலுவையும் சுண்டன் நாடாரும் வளர்வதற்கான வாய்ப்பையும் இக்கதை தொட்டுக் காட்டுகிறது.

    நல்ல கதை. வாழ்த்துக்கள் நவீன்.

  4. பெ.மேகநாதன்
    January 3, 2022 at 9:43 pm

    வெள்ளையன் நம்மைக் கொண்டு தானே நம்மை வீழ்த்தினான். நெல்லைச் சீமையில் அது அவனுக்கு மிக மிக சுலபமாக இருந்தது. துரை செய்த சூழ்ச்சியை அறிய கதையின் இறுதிப் பகுதியை கடும் கோபத்துடன் வாசித்தேன். கொடுத்த வாக்கும் குலத்தின் மானமும் மறவர் இனத்தின் இரு கண்கள் என்பதை பதவியைத் துறந்த ஜமீன்தார் மூலமும் உயிரைத் துறந்த தேவர் மூலமும் காட்டியிருக்கிறார் ஆசிரியர். ஆசிரியரின் வாக்கியங்கள் எல்லாம் காட்சியைக் காட்டும் வீடியோக்கள். கதையை வாசிப்பது போல் இல்லாமல் மாடத்தின் ஓரத்தில் நின்று பார்ப்பது போன்று இருந்தது. ஆசிரியருக்கு என் உளம் கனிந்த நன்றி.

  5. P.Meganathan
    January 3, 2022 at 10:14 pm

    வெள்ளையன் நம்மைக் கொண்டு தானே நம்மை வீழ்த்தினான். நெல்லைச் சீமையில் அது அவனுக்கு மிக மிக சுலவமாக இருந்தது. துரை செய்த சூழ்ச்சியை அறிய கதையின் கடைசிப் பகுதியை கோபத்துடன் வாசித்தேன். கொடுத்த வாக்கும் குலத்தின் மானமும் மறவர் இனத்தின் இரு கண்கள் என்பதை பதவி இழந்த ஜமீன்தார் மூலமும் உயிரைத் துறந்த தேவர் மூலமும் காட்டியிருக்கிறார் ஆசிரியர். வாசிப்பது போல் இல்லாமல் மாடத்தின் ஓரத்தில் நின்று பார்ப்பது போன்று உணரவைத்தது நவீன் அவர்களின் எழுத்து நடை. ஆசிரியருக்கு என் உளம் கனின்த நன்றி.

  6. Aravin Kumar
    January 9, 2022 at 8:29 am

    தீர்வைக்கணக்கு சிறுகதையை வாசித்தேன். பலவீனமான நரம்புகளைப் பார்த்துச் சுண்டி வீழ்த்தும் சிலம்ப வரிசை போல, ஒடுங்கி போயிருக்கும் மனிதர்களை வீழ்த்துகிறான் துரை.

    ஒவ்வொருவருன் சமநிலைப்புள்ளியையும் குலைக்கும் சாகசமாகவே இதைக் கையாள்கிறான். இதுவே காலனிய வரலாற்றுக்குப் பின்னான முதன்மைக்காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். சத்தியம் தளைக்கின்ற சமூகத்தைச் சாகச மனநிலை வெற்றி கொள்கிறது .

    சிறப்பான கதை

  7. Balaji Raju
    February 6, 2022 at 11:21 pm

    அன்புள்ள நவின்,

    வரலாற்றின் ஒரு துளியை எடுத்துக்கொண்டு, அதில் புனைவுக்கான சில சாத்தியங்களைச் சேர்த்து இன்னொரு சிறுகதையைக் கொடுத்திருக்கிறீர்கள். நாம் பள்ளியிலுருந்து கேட்டுக்கொண்டிருக்கும் ‘Divide and Conquer’ எனும் உத்திதான் கதையின் அடிப்படை. இதில் வஸ்தாரி வரிசை, சிலம்பாட்ட நுணுக்கங்கள் என கதை முழுக்க கற்றுக்கொள்ள வாசகனாக நிறையத் தகவல்கள் விரவிக்கிடக்கின்றன.

    கதையில் சிவன்பாண்டித் தேவரின் கைகளில் உள்ள நோக்கா, அது ஏற்படுத்தும் சப்தம் இரண்டின் குறியீட்டுத்தன்மைகளையும் எண்ணிப்பார்க்கிறேன். நம் மண்ணின், நம் மக்களின் இடையே இருக்கும் வேற்றுமைகளை உணர்த்தும் ஒன்றாக, அதிகாரத்தின், வலிமையின் மேல் தளத்தில் இருக்கும் ஒருவன் பலகீனமானவர்களை வீழ்த்தும் தன்மைக்கு சாட்சியாகவும் இவை என்னுள் விரிகின்றன. நோக்கா என்பது அதன் புனிதப்படுத்துதல்களுக்கப்பால் இயல்பில் வெறும் ஆயுதம்தான்.

    சிவன்பாண்டித் தேவரின் மனம் நோக்காவின் ஓசைகளுக்கு இயைந்துகொடுபது ஏன்? ஆயுதங்களின் ஓசை என்பது வசீகரமாக நம்மை ஈர்க்கும் ஒன்றுதான். துரை இந்த நோக்காவைப் பயன்படுத்தித்தான் ஜமீனை வீழ்த்துகிறான் என்பது கதைக்குள் நடந்தேறுகிறது. அவன் இந்த நோக்கவைத் தொட்டுப் பார்க்கிறான், அதன் இயல்புகளைக் கூர்மையாக அவதானிக்கிறான், அதன் உறுதித்தன்மையைப் பாரட்டிக்கொண்டே தனக்கான திட்டங்களையும் வகுத்துக்கொள்கிறான் இல்லையா?

    சிலுவை தன்னை அறியாமல் துரையின் கட்டளைகளுக்குக் கட்டுப்படும் காட்சியைச் சொல்லி கதை முடிந்திருந்தது. அவன் சில நொடிகள் அறச்சீற்றம்கொள்கிறான், அடுத்த நொடி அவனுடைய பழக்கப்பட்ட மனம் துரைக்கு செவி சாய்க்கிறது. இது எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தும் ஒன்றாக இருக்கிறது, நாமெல்லோருமே சிலுவையின் இன்னொரு வடிவமாக வாழ்வின் பல தருணங்களில் இருக்கிறோம் என்பது எத்தனை உண்மை.

    சிலம்பாட்டத்தின் நுணுக்கங்களை விவரிக்க நீங்கள் பெரும் எத்தனம் எடுத்துக்கொண்டிருந்தது எனக்குப் புரிகிறது, அதைக் காட்சிகளாகவும் கூர்மையாக விரித்திருக்கிறீர்கள்.

    ஆயுதங்களின் வலிமை – அதன் விளைவுகள், அதிகாரத்தின் குரலுக்கு செவிசாய்த்தல், நம்முடைய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் நம்பும்தன்மை என எல்லாச் சூழல்களுக்குமான பொதுத்தன்மைகள் கதைக்குள் இருக்கின்றன, வாழ்த்துகள் நவின்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...