ஈயச் சுவடுகளில் இரண்டு நாள்

மலேசிய இந்தியர்களின் சஞ்சிக்கூலி வாழ்க்கை பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில் புதைந்திருப்பதுபோல சீனர்களின் வாழ்க்கையைத் தேட ஈய லம்பங்கள்தான் பொருத்தமானவை. மலேசியத் தமிழ் இலக்கியங்களில் ரப்பர் காடுகளும் அதில் நிகழ்ந்த வாழ்வியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு ஈய லம்பங்கள் குறித்தோ அதில் சீனர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தோ எளிய அறிமுகங்கள் கூட இல்லை என்றே சொல்லலாம். ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் இன்னொரு இனத்தின் வரலாற்றையும் அவர்களது வாழ்வியல் சிக்கல்களையும் இலக்கியத்தினுள் பதிவு செய்யாமல் இருப்பது மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒருவகை பின்னடைவுதான். இலக்கியங்கள் ஒருபுறம் இருக்க, விரிவான ஆய்வு நூல்களோ வரலாற்று ஆவணத்தொகுப்புகளோ தமிழில் இதுவரை வெளியிடப்படவில்லை. (ஜெயந்தி சங்கரின் மிதந்திடும் சுய பிரதிமைகள் சிங்கப்பூரில் நடந்த ஒரு முக்கிய முயற்சி) ஆய்வுகள் உடலென்றால் இலக்கியங்கள் ஆன்மா. உடலையும் ஆன்மாவையும் ஒருங்கே அறியாத ஓர் இனத்துடன் 60 ஆண்டுகளுக்கு மேலாக நாம் வாழ்ந்துகொண்டிருப்பது ஆச்சரியம்தான்.

மலேசிய சீனர்களின் ஈய சுரங்க வாழ்க்கை சுவடுகளை அறிய அவர்கள் விட்டுவந்த தடயங்களை சென்று காண்பது அவசியம் எனத் தோன்றியது. அதற்கு ஏற்றவை ஈய சுரங்கம் சார்ந்த இடங்கள்தான். பாட நூல்களில் உள்ள தகவல்களைத் தாண்டி சீனர்களின் ஈய சுரங்கத்துடனான வாழ்வியலை ஓரளவு நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு இரண்டு நாள் பயணம் ஒன்றைத் திட்டமிட்டேன். டிசம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தில் சரவணன், முத்து, பூபாலன் ஆகிய நண்பர்களும் இணைந்துகொண்டனர்.

நான் முதலில் கோப்பேங் செல்ல திட்டமிட்டிருந்தேன்.

கோப்பேங், கம்பார் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம். நான் முதலில் கோப்பேங்கைத் தேர்ந்தெடுக்க முக்கியமாக மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது, பேராக் மாநிலத்தில் முதன்முதலில் ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட நகரங்களில் கோப்பேங் நகரமும் ஒன்று. இரண்டாவது அங்கு அருங்காட்சியகம் ஒன்று இயங்கி வருகிறது. சீன கலைப் பொருட்கள், பழைய தளவாடங்கள், சீன எழுத்து ஓவியங்கள், காலனித்துவக் காலத்திற்கு முந்தைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு உள்ளன. மூன்றாவது பொதுவாக இதுபோன்ற பழமை மாறாத நகரங்களில் சீன உணவுகளும் அசல் சுவையோடு இருக்கும்.

சரியாக அதிகாலை 6.45க்குப் புறப்பட்டு 8.30 அளவில் கோப்பேங் சிறுநகரை அடைந்தோம். 1890-ஆம் ஆண்டு வரை கிந்தா பள்ளத்தாக்கில் கோப்பெங் ஒரு முன்னணி ஈயச் சுரங்க நகரம்தான். மேற்கொண்டு தொடர்வதற்கு முன் ‘கிந்தா பள்ளத்தாக்கு’ என்றால் என்னவென்று இங்கு விளக்கிவிடுதல் அவசியம்.

கிந்தா பள்ளத்தாக்கு என்பது பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா, கம்பார், கோலாகங்சார், பேராக் தெங்ஙா ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்குப் பகுதி. உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு இந்தக் கிந்தா பள்ளத்தாக்குதான். 1820-ஆம் ஆண்டுகளில் கிந்தா பள்ளத்தாக்கு பகுதியில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், உலக மக்களின் பார்வை இங்கே திரும்பியது. பல கோடிஸ்வரர்கள் உருவாக இந்தப் பள்ளத்தாக்கு காரணமாக அமைந்தது. ஈய சுரங்கம் கொடுத்த பலனால் பேராக் மாநிலத்தில் தைப்பிங், பத்து காஜா, கம்பார், தஞ்சோங் ரம்புத்தான், தம்பூன், துரோனோ, ஜெலாப்பாங் போன்ற நகரங்கள் கிடுகிடுவென வளர்ச்சி கண்டதுபோலதான் கோப்பேங் நகரமும் வளர்ச்சி அடைந்தது. ஆனால் கால ஓட்டத்தில் ஈப்போ நகரத்தின் துரித வளர்ச்சியால்  கோப்பேங் நகரின் புகழ் மங்கியது. இன்றும் அந்த மங்கிய ஒளி கொண்ட கோப்பேங்கைத்தான் காண முடியும்.

நாங்கள் காலையில் சேர்ந்தபோது நகரம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருந்தது. மனித நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. அங்கிருந்த சந்தையின் அருகில் உள்ள உணவகங்களில்தான் சுவையான உணவுகள் கிடைக்கும் என வாசித்திருந்ததால் ‘வான்தான் மீயும்’ காப்பியும் குடித்தோம். உணவை உண்டு முடிக்கும் முன்னரே திரு. பாங் சி கொங் (Phang See Kong) என்னை அழைத்தார்.

பாங் சி கொங்

பாங் 82 வயது சீனர். 2009ஆம் ஆண்டில் அவர் தன் நண்பர்களின் உதவியுடன் கோப்பேங் அருங்காட்சியகம் அமைய காரணமாக இருந்தவர். இந்த தனியார் அருங்காட்சியகம் எல்லா நாட்களிலும் திறப்பதில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும். ஆனால் நாங்கள் சென்றதோ வியாழக்கிழமை என்பதால், முன்னமே அவர் எண்களைத் தேடிப்பிடித்து அழைத்தேன். தன் முதுமை காரணமாக மற்ற நாட்களில் வந்து திறப்பதன் சிக்கலைக் கூறினார். நான் என் தேவையை எடுத்துக்கூறியதும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் ஏதாவது காரணம் சொல்வார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் காலை 9.30க்கு நேரம் சொன்னவர் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே அழைத்து, தான் வந்துவிட்டதைச் சொல்லவும் ஆச்சரியமானது. விரைந்து அவ்விடம் சென்றோம்.

இன்னும் பழமை மாறாத கடை வரிசைகள் உள்ள  Eu Kong சாலையில்தான் அந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கோப்பேங் சந்தையில் இருந்து இரண்டு நிமிடங்களில் நடந்துவிடலாம். திரு.பாங் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். அருந்த நீர் கொடுத்தார். தான் எழுதிய நூலான ‘A meander down memory lane’ என்ற நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார். அது சீனத்தில் எழுதப்பட்ட நூல். வாசித்து விளக்க யாரையாவது தேட வேண்டும். நாங்கள் அந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டோம். இந்த அருங்காட்சியகம் கோப்பேங் நகரின் வரலாற்றை 1850 தொடங்கி சொல்கிறது.

கோப்பேங், கம்பார் மற்றும் ஈப்போவை விட பழமையான நகரம். நகரமாக உருவாகும் முன்னர் இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் செமாய் பூர்வக்குடியினர். அவர்களோடு சுமத்திரா தீவைச் சேர்ந்த மண்டலின் மற்றும் ரவா மக்களும் வாழ்ந்துள்ளனர். அதன் பின்னரே சீனர்களும் தமிழர்களும் இங்கு குடியேறினர். இந்தப் பகுதியை நகரமாக மாற்றிவர்கள் பிரிட்டிஷார்தான். 268 கடைவீடுகள், எட்டு பிரதான சாலைகள் என அமைத்ததோடு பல்வேறு வசதிகளையும் செய்துக்கொடுத்தனர். தமிழர்களின் கவனம் எப்படி தோட்டத்தைவிட்டு வெளியில் செல்லாமல் இருக்க திரைக்கட்டி படம் ஓட்டுவதும் கள் விற்பனை செய்யும் கடைகளைத் திறப்பதையும் பிரிட்டிஷ் அரசு வாடிக்கையாகக் கொண்டிருந்ததோ அதேபோல நகரத்திலும் திரையரங்கம், சூதாட்ட மையம், விபச்சார விடுதிகள், அபின் நுகரும் மையங்கள் என கேளிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரு.பாங் பெரும்பாலும் நினைவு தவறிதான் இருந்தார். ஆங்கிலத்தில் உரையாடினார். நண்பர் பூபாலன்தான் அவரிடம் பல கேள்விகள் கேட்டார். அவரிடம் பேசியவரை சீனர்கள் தமிழர்களைப்போல ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்படவில்லை எனத் தெரிந்தது. ஜப்பானியர் காலத்தில்தான் கோப்பேங் சீனர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர் என்றார். 1900-ஆம் ஆண்டுகளில் கோப்பேங் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன என்றவர் அக்காலக்கட்டத்தில் ‘no tin no Gopeng’ (ஈயம் இல்லாவிட்டால் கோப்பேங் இல்லை) ‘no rubber no job’ (ரப்பர் இல்லாவிட்டால் வேலை இல்லை) என்பதுதான் கோப்பேங் மக்களின் தாரக மந்திரம் எனக்கூறி சிரித்தார்.

தமிழர்களும் ஈய சுரங்கங்களில் வேலை செய்தனரா எனக்கேட்டார் பூபாலன். பிரித்தானியர்களுக்குச் சொந்தமான ஈயச் சுரங்கங்களில் தமிழர்கள் வேலை செய்தனர் என தன் நினைவுகளை மீட்டார். “அப்போது நாங்கள் சகோதரர்களாகப் பழகினோம். இன வேற்றுமையெல்லாம் எங்களிடம் இல்லை” என்றவர் எங்களைக் கூர்ந்து பார்த்தார்.

முதலில் கோப்பேங்கில் டூலாங் முறையில்தான் ஈயம் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஈய கப்பலைக் கொண்டு தோண்டப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கிய ஈய உற்பத்தி நகரமாக கோப்பேங்  கருதப்பட்ட சூழலில் ஜப்பானியர் ஆதிக்கம், கம்யூனிஸ்ட் தாக்கம் எனக் கடந்து 1980களில் ஈய விலையின் சரிவும் ஈய வளத்தின் குறைபாடும் இந்நகரின் வளர்ச்சிக்குத் தடையாகின. எண்பதுகளுக்குப் பிறகு வளர்ச்சி காணாத நகரமாகத்தான் கோப்பேங்கை பார்க்க முடிகிறது. இளைஞர்கள் வெவ்வேறு வேலை வாய்ப்புகளைத் தேடி பெருநகரங்களை நோக்கிச் செல்ல இன்று இந்த ஊர் ஒருவகையில் முதியவர்கள் வாழும் நகரமாகத்தான் தோற்றம் தருகிறது.

அருங்காட்சியகத்தில் இருந்த பழம் பொருட்கள் அனைத்தையும் பார்வையிட்டோம். சில படங்கள் பிடித்துக்கொண்டோம். அவ்விடத்தைவிட்டு வெளியேறியபோது எதிர்கொண்ட மந்தமான காலையின் மௌனமான அசைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக ஒரு மனநிலையைக் கொடுத்தது.

திரு.பாங் கூறியவற்றில் ஈயக் கப்பல் முக்கியமானது. மலேசியாவில் ஒரு காலத்தில் 123 ஈயக்கப்பல்கள் இருந்தன. மலேசியாவில் உள்ள வளங்களைச் சுரண்டி எடுத்துச்செல்ல பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட கப்பல்கள் அவை. இன்று இரண்டு கப்பல்கள் மட்டுமே உள்ளன. ஒன்று டெங்கிலில் பாழடைந்த நிலையில் உள்ளது. மற்றுமொன்று கம்பாரில் உள்ள ஈயக்கப்பல்.

பேராக் மாநில அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் அந்தக் கப்பலைக் காண எங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் காலை மணி 11.30. நாங்கள் கோப்பேங்கில் இருந்து புறப்பட்டு 11 மணிக்கெல்லாம் தஞ்சோங் துவாலாங் பகுதியை அடைந்திருந்தோம்.

ஈய கப்பல்

மலேசியாவில் இருந்த ஈய வளத்தை முதலில் அபகரிக்க நினைத்தது டச்சுக்காரர்கள்தான். பங்கோர் தீவில் உள்ள டச்சுக்கோட்டைக்கு நான் நான்கைந்து முறை சென்றுள்ளேன். அந்தக் கோட்டை 1670களில் கட்டப்பட்டது. பேராக் மாநிலத்தில் எடுக்கப்படும் ஈயத்தை பதுக்கி பராமரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கோட்டை அது. டச்சுக்காரர்கள் அவ்வளத்தை அபகரிப்பதை விரும்பாத உள்நாட்டினர் அக்கோட்டையைச் சேதப்படுத்தினர். 1749ஆம் ஆண்டு மீண்டும் அக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டு கடுமையான காவல் இடப்பட்டது வரலாறு. ஆனால் டச்சுக்காரர்களால் இந்த ஈய வணிகத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை. 19ஆம் நூற்றாண்டில் நுழைந்த ஆங்கிலேயர்களுக்கு அது சாத்தியப்பட்டது.

பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் நிறைய ஈய வயல்கள் புதிது புதிதாய்த் தோன்றிய காலம் அது. அவற்றில் ஆங்கிலேயர்களின் முதலீடும் இருந்தது. இந்த ஈய வயல்களில் வேலை செய்ய சீனாவில் இருந்து பெரும் எண்ணிக்கையில் சீனர்கள் வந்து குவிந்தனர்.

சீனாவில் பாரம்பரிய ஈய லம்பங்களில் வேலை செய்து அனுபவப்பட்ட அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள பிரிட்டீஷ் முதலாளிகளும் உள்ளூர் பணக்காரர்களும் முன்வந்தனர். ஈய கனிம வேலையில் முன் அனுபவம் பெற்ற சீன முதலாளிகளுடன் கூட்டு வணிகத்தில் உள்ளூர் மலாய் செல்வந்தர்கள் ஈடுபட்டனர். மேலும், ஈய சுரங்கங்களில் வேலை செய்ய வந்த சீனர்கள் தென்னிந்திய தோட்ட தொழிலாளர்கள்போல சஞ்சிக் கூலிகளாக கொண்டுவரப்படவில்லை. அவர்கள், சீன முதலாளிகளே நிர்வகித்த பல ஈய லம்பங்களில் ஒப்பந்த கூலிகளாக வேலை செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவர்கள் அந்த முதலாளியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு பல்வேறு சொந்த தொழில்களில் ஈடுபட்டனர். ஈய சுரங்கங்களில் வேலை செய்ய வந்த சீனர்கள் நீண்ட வீடுகளில் தங்கினர். அவர்கள் பெரும்பாலும் ஒரே ஊர்காரர்களாகவும் ஒரே சீன உட்பிரிவு இனங்கள் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். அதன் காரணமாக இங்கு வேலை செய்த சீனர்களில் வெவ்வேறு சுரங்க தொழிலாளிகளுக்குள் பகைமையும் பாதுகாப்பின்மையும் இருந்தது. ஆகவே, இங்கு ஈய லம்பங்களில் வேலை செய்ய வந்த சீனர்கள் தங்களுக்குள் இரகசியக் கும்பல்களைத் தோற்றுவித்துக் கொண்டனர். உள்ளூர் மலாய்ச் சமூகத்தின் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். அதனால் இரகசியக் கும்பல்களின் மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன.

இதே காலக்கட்டத்தில் பேராக் அரசிலும் பதவிச் சிக்கல்கள் மேலோங்கி இருந்தன. ஆங்கிலேயர்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள்தான் சாதகமானவை. சிக்கலைத் தீர்க்க ஆங்கிலேயர்கள் அழைக்கப்பட்டனர். 1874 ஆம் ஆண்டு பேராக், பங்கோர் தீவில் ஒரு பேச்சு வார்த்தை நடைபெற்று ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி ராஜா மூடா அப்துல்லா பேராக் அரசின் அதிகாரப்பூர்வச் சுல்தானாக நியமிக்கப்பட்டார். மேலும், ஆங்கிலேயர்களின் இந்த உதவிக்கு பேராக் அரசு ஓர் ஆங்கிலேய மேலாளரை (British Resident) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளை போடப்பட்டது. அன்று முதல் ஈய வளங்கள் மெல்ல மெல்ல பிரிட்டிஷ் கைக்கு மாறியது. ஈயம் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கப்பல்கள் மூலம் தோண்டப்பட்டன.

ஈய கப்பல்கள் மலாயாவுக்கு வரும் முன்னர் நான்கு முறைகளில் ஈயம் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் ஆக மரபான முறை ஈய சட்டியைக் கொண்டு அலசுதல் ஆகும். இந்தச் செயல்பாடு பொதுவாக ஆற்றில் அல்லது சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈயத்தை  மண்ணில் இருந்து பிரிக்க தட்டில் உள்ள மண் சல்லடை போடப்படும் முறை இது. இம்முறையால் அதிகமான ஈயத்தை எடுக்க முடியாது. எனவே இது சிறிய அளவில் மட்டுமே லாபத்தைக் கொடுத்தது. இரண்டாவது, ஈயம் உள்ள மண் பகுதிகளைத் தோண்டி எடுக்கும் முறை. இதற்கு மிக அதிகமான உடல் உழைப்பாளிகள் தேவை. ஏறக்குறைய ஒரு மலையையே வெட்டி எடுக்கும் அளவுக்கு இப்பணிகள் நடைபெறும். வெட்டி எடுக்கப்படும் மண்கட்டிகள் மலையிலிருந்து கீழே எடுத்துவரப்பட்டு லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். அங்குள்ள தொழிலாளர்களால் அது பிரித்து எடுக்கப்படும். மூன்றாவது நீர் அடிக்கும் முறை. அதிக அழுத்தம் கொண்ட நீர் சக்தியைக் கொண்டு ஈயம் உள்ள மலையடிவாரங்களில் பாய்ச்சி கற்களை உடைத்து எடுப்பார்கள். உடைபட்ட கல்லில் இருந்து ஈயத்தைப் பிரித்து எடுப்பார்கள்.

பொதுவாக இந்த மூன்று முறைகளையும் பாட நூல்களிலேயே வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தக் கப்பல் குறித்த விரிவான அறிமுகம் எந்தப் பாடநூலிலும் இல்லை என்பது வருத்தமானது.

சரியாக 11.30க்கு நாங்கள் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டோம். நுழைவு கட்டணம் உண்டு. ஆச்சரியமாக நிறைய பேர் அந்தக் கப்பலைப் பார்க்க தினமும் வருகின்றனர். வழிகாட்டி எங்களைக் கப்பல் உள்ளே அழைத்துச் சென்றார். கப்பல் நான்கு அடுக்குகளைக் கொண்டது. ஆனால் நாங்கள் கீழ்த்தளத்தை பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டோம். 2017இல்தான் இந்தக் கப்பல் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

1913இல் இதுபோன்ற முதல் கப்பல் மலேசியாவில் இறங்கியது. அப்படி முதல் கப்பல் இயங்கிய நகரம் இந்த தஞ்சோங் துவாலாங்தான். நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தது ஐந்தாவது கப்பல். இது, 1938இல் இயங்கத் தொடங்கியது. ஐந்தாவது கப்பல் என்பதால் இதனை TT5 என அழைக்கின்றனர். இக்கப்பலை ஒரு மிதவை தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும். 83 வருடங்களாக அப்படி நீரில் மிதந்தபடி நிற்கும் அதிசயத்தினுள் நாங்கள் இருந்தோம்.

நாற்பத்து நான்கு ஆண்டுகள் இந்தக் கப்பல் இயங்கியுள்ளது. ஆனால் இதன் பயணம் 30 கிலோ மீட்டர் மட்டுமே. இது அதிக தூரம் பயணம் செய்யாது. குறிப்பிட்ட பகுதியில் ஆழ ஆழ தோண்டி இருக்கின்ற வளங்களையெல்லாம் சுரண்டி எடுக்கும். நாங்கள் இருந்த கப்பலே பிரமாண்டமானது என நினைத்துக்கொண்டிருக்க அது நடுத்தரமானதுதான் என்றார் வழிகாட்டி. இந்தக் கப்பல் மூன்று அளவில் உள்ளன. சிறியது, நடுத்தரமானது, பெரியது. பெரியது எப்படி இருக்கும் என கற்பனை செய்யவே ஆச்சரியமாக இருந்தது.

கப்பலின் உட்புறப்பகுதி

இந்தக் கப்பலின் அன்றைய கணக்கில் இன்று மதிப்பிட்டால் விலை 40 லட்சம் ரிங்கிட். கப்பல் நூறு சதவிகிதம் இரும்பால் ஆனது. எல்லா வகையான கனிமங்களையும் சுரண்டி எடுக்கக் கூடிய ஆற்றல் பெற்றது. கப்பலில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு மங்குகள் ஒவ்வொன்றும் இரண்டு டன் எடை கொண்டவை. அந்த மங்குகள் சில வெளியே நாற்காலிகள் போல கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.  நான் அதில் உட்கார்ந்துகூட பார்த்தேன். அதுவே இப்போது தலைக்கு மேல் ரம்பத்தின் பல்போல தொங்கி கிடந்தது. இந்த மங்குகள் குட்டையின் ஓரங்களில்தான் சுரண்டுகின்றன. சுரண்டிய மண்ணில் இருந்து ஈயம் பிரிக்கப்பட்டு மிஞ்சியவை மீண்டும் குட்டையில் கொட்டப்படுகின்றன. எது ஈயம் என்பது தொழிலாளர்களுக்குத் தெரியுமாம். அவை பெரிய கட்டிகளாக பழுப்பு நிறத்திலோ கறுப்பு வண்ணத்திலோ இருக்கும். பொறுக்கப்பட்ட ஈயத்தைச் சுத்தம் செய்தல் பதப்படுத்துதல் போன்ற அனைத்து பணிகளும் இந்தக் கப்பலிலேயே நடந்துள்ளன. ஒரு நாளைக்கு 20 முதல் 30 டன் வரை ஈயம் எடுக்கப்பட்டுள்ளது.

கழிவுகளை வெளியேற்றும் பகுதி

இன்று அமைதியாக மிதக்கும் இக்கப்பல் ஒரு காலத்தில் இருபத்து நான்கு மணி நேரமும்  ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது என்றார் வழிகாட்டி. இந்தக் கப்பலில் மூன்று ஷிப்டுகளில் வேலைகள் நடந்துள்ளன. ஒரு ஷிப்டில் ஐம்பது பேர் பணியாற்றியும் உள்ளனர். அதில் அனைவருமே ஆண்கள். எனவே ஓயாத இரைச்சலும் சத்தமுமாகவே இந்தக் கப்பல் உயிர்ப்புடன் இயங்கியுள்ளது. முதலில் நிலக்கரியால் இயங்கிய இக்கப்பல், பின்னர் டீசல் துணையுடன் இயங்கும்படி மாற்றியமைக்கப்பட்டது. எனவே, இதன் சத்தத்தின் உக்கிரமும் அதிகம். அதை சமாளிக்க அங்கு இரும்பு மணியை ஒலிப்பதன் மூலமாகவே கட்டளைகளைப் பிறப்பித்தனர். மணி ஒலிக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் ஓர் ஆங்கில முதலாளிக்குக் கீழ் மூன்று ஆங்கில நிர்வாகிகள் இருப்பர். அவர்களே மொத்த கப்பலையும் நிர்வகித்தனர். ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே மலேசியர்களுக்கு பதவி உயர சாத்தியமானது.

இந்தக் கப்பலின் மிகப்பெரிய சவால் மழைதான். முழுக்க இரும்பால் ஆன இக்கப்பலில் மின்னல் தாக்கி பலர் மடிந்துள்ளனர் என்றார் வழிகாட்டி. மேலும் பல பாகங்களைப் பிணைத்திருக்கும் இரும்பு கயிறுகள் அறுந்து பலரது உயிரை காவு வாங்கியுள்ளது. ஒரு இரும்புக்கயிறு அறும்போது அது கப்பல் முழுவதும் சுழன்றடிக்கும் வேகத்தை கற்பனை செய்யவே பயமாக இருந்தது.

கப்பலில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள் ஆங்கிலம், சீனம், தமிழ், ஜாவி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இதுபோன்ற கப்பல்களில் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என மூவினத்தவரும் வேலை செய்ததால் விதிமுறைகளும் மூன்று மொழிகளில் உள்ளன என்றார் வழிகாட்டி.

மும்மொழி விளக்கங்கள்

கப்பலை விட்டு வெளியேறியது ஒரு நகரத்தைவிட்டு வெளியேறியதுபோலதான் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கப்பல் பழுதடைந்திருந்ததால் பயணிகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்போது பழுது பார்த்து மீண்டும் உள்ளே நுழைய அனுமதி கொடுக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி பழுதாகும் என்றார் வழிகாட்டி. “ஒருவேளை அடியில் துளை விழுந்தால் கப்பல் அப்படியே கவிழ்ந்துவிடும். உள்ளே இருப்பவர் தப்புவது சிரமம். இதன் கனம் அப்படி” எனச்சொல்லி சிரித்தார்.

அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் கம்பார் ஈய அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது மணி மதியம் ஒன்றை நெருங்கிவிட்டது. கம்பாருக்கு சில முறை நண்பர் கங்காதுரையைப் பார்க்க சென்றதுண்டு. மலேசியாவில் சீனர்கள் குறித்தும் அவர்கள் இலக்கியம் குறித்தும் ஓரளவு எழுதியவராக கங்காதுரையைச் சொல்லலாம். கம்பாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார்.

கம்பாரும் ஒருகாலத்தில் ஈயத்தால் புகழ்பெற்ற நகரம்தான். சீனகண்டனீஸ் மொழியில் ‘காம் பாவ்’ என்றால் விலை உயர்ந்த தங்கம் என்று பொருள். அந்தக் கால கட்டத்தில் கம்பார் பகுதியில் ஈயம் அளவுக்கு மீறிக் காணப்பட்டதால் சீனர்கள் ‘காம் பாவ்’ என்று அழைத்தனர். அதுவே மருவி கம்பார் ஆனது என நம்பப்படுகிறது.

இந்த இடத்தில் சீனர்களின் மலாயா குடிபெயர்வு தொடர்பாக ஓர் எளிய அறிமுகத்தைக் கொடுத்துவிடுவது நல்லது.

மலாய்க்காரர்களுக்கு அடுத்து மலேசியாவின் இரண்டாவது பெரும்பான்மையான இனமாக சீன மக்கள் திகழ்கின்றனர். மலாயாவுக்கு முதலில் வந்த சீனராக செங் கே (Zheng He 1371–1435) குறிப்பிடப்படுகிறார். இவர் சீனத்து கடற்படைத் தலைவரும் கடலோடியும் ஆவார். இவர் மேற்கொண்ட கடல் பயணங்களில் மலாக்காவுக்கு ஐந்து முறை வருகை செய்துள்ளார் எனக்கூறப்படுகிறது. அடுத்ததாக 15-ஆம் நூற்றாண்டில் சீன இளவரசி, ஹங் லீ போ, மலாக்கா சுல்தானுக்கு (மன்சூர் ஷா) மணமுடித்து வைக்கப்பட்டபோது (1459) முதலாம் அங்கீகரிக்கப்பட்ட சீன குடியிருப்பு அமைக்கப்பட்டது. ஹங் லீ போ அரச உதவியாளர்களையும் உடன் அழைத்து வந்தார். ஹங் லீ போவின் உதவியாளர்கள் சுல்தான் மன்சூர் ஷாவின் ஆண் உதவியாளர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் மலாக்கா-சீனர் சந்ததியை உருவாக்கினர். இந்த சந்ததியின், புலம்பெயர்ந்த சீனர்களின் முதல் வகுப்பினர். அவர்களின் பரம்பரை இன்று ‘பாபா- ஞோன்யா’ என்று குறிப்பிடப்படுகின்றனர். மலாய் சீன பாரம்பரிய கலப்பினரான இவர்கள் மலாக்கா, பினாங்கு போன்ற நகரங்களை மையமாக கொண்டு வாழ்ந்தனர்.  இதற்கடுத்து 19ஆம் நூற்றாண்டில்தான் இரண்டாவது குடியேற்றம் தொடங்குகிறது.

அக்காலக்கட்டத்தில் உள்நாட்டு குழப்பங்கள் சீனாவை ஆழமான பொருளாதார வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது. அரசியல் சூழலில் நிலையற்ற தன்மையும் சிக்கலான வாழ்நிலையும் சீனர்களை புலம்பெயர வைத்துள்ளது. அதே காலக்கட்டத்தில் ஈய லம்பங்களால் கிடைக்கும் செல்வச் செழிப்பு கவரவே சீனர்களின் பெரும் குடிப்பெயர்ச்சி மலாயாவை நோக்கி தொடங்கியது. ஆனால் முன்பே குறிப்பிட்டது போல அவர்கள் இந்தியர்களைப்போல பிரிட்டிஷ் பிரஜைகளாக வரவில்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது. எனவே அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு அதிகம் கட்டுப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. அவர்கள் உழைக்க வந்தனர்; உழைத்தனர். வளமான வாழ்க்கை வாழ்ந்தனர். அந்தச் சான்றுகளைதான் இந்த அருங்காட்சியகத்தில் காண முடிந்தது.

ஈய அருங்காட்சியகம் முன்

இந்த அருங்காட்சியகம் தொடக்ககாலம் முதல் ஈயம் எடுக்கும் முறைகளை உருவ பொம்மைகள் வழி விளக்கப்படுத்தியிருந்தது. ஈய சட்டியில் எடுக்கும் விதத்தை நாமே செய்து பார்க்கும் வகையில் உருவாக்கி வைத்திருந்தனர். மேலும் மலைகளைச் சுரண்டி ஈயம் எடுக்கும் மாதிரி அமைப்பு அதன் பிரமாண்டத்தை உணர்த்தியது. முக்கிய ஆவணங்கள், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஈயத்தின் விலை என பத்திரங்களும் பட்டியல்களும் ஏராளம் இருந்தன. இந்த அருங்காட்சியகம் முன்னாள் ஈய சுரங்க முதலாளிகளில் ஒருவராக இருந்த தான் ஶ்ரீ Hew See Tong மூலம் தொடங்கப்பட்டு சீனர்களின் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்றது. ரப்பருக்கு இப்படியான ஒரு அருங்காட்சியகத்தை இதுவரை யாரும் அமைக்கவில்லை என்ற ஏக்கம் இந்த இடத்தை விட்டு புறப்படும்போது ஏற்படாமல் இல்லை.

மலைகளைச் சுரண்டி ஈயம் எடுக்கும் மாதிரி அமைப்பு

அங்கிருந்து புறப்பட்டு ஈப்போ நகருக்குச் சென்றோம். மதியம் இரண்டு மணிக்கு மேல் எங்களுக்கு நல்ல நேரம் இல்லை என எங்காவது எழுதப்பட்டிருக்க வேண்டும். அடுத்தடுத்து இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டன. முதலாவது, ஈப்போவில் மிகப்பிரபலம் எனச் சொல்லப்படும் ‘நாசி வாங்க’ (Nasi Vanggey) என்ற உணவில் கிடைத்த ஏமாற்றம். இன்று நாடு முழுவதும் ‘நாசி வாங்க’ என்ற பெயரில் கடைகள் திறக்கப்பட்டாலும் ஈப்போவில் உள்ளதுதான் அசலானது. இதற்கு வேறெங்கும் கிளைகளும் கிடையாது. நண்பர்கள் சரவணனும் பூபாலனும் நீண்ட வரிசையில் நின்றுதான் ‘நாசி வாங்க’ வாங்கினர். ஒருகாலத்தில் வெளியில் நின்றபடி வாடிக்கையாளர்களை கடைகாரர் ‘வாங்க வாங்க’ என அழைப்பதால் இந்தப்பெயர் வந்ததாக அங்குள்ளவர்கள் கூறினர். இந்த உணவை ‘நாசி கஞ்சா’ என்றும் குறிப்பிடுகின்றனர். அந்த உணவு தரும் மயக்கம் அப்படிபட்டதாம்.  ஆனால், எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் உணவு சுவைக்க வேண்டும் அல்லவா? வாயில் வைத்தவுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். திருமுத்து சபிக்காத குறையாக சாப்பிட்டு முடித்தார். “நாசி வாங்கன்னு சொன்னா இனிமே போங்கன்னு சொல்லனும்” எனப் புழம்பியபடி சாப்பிட்டு முடித்தார்.

நாசி வாங்க

தங்குவதற்கு நான் முன்பதிவு செய்த வீடு அனைவருக்கும் பிடித்திருந்தது. பொதுவாக இந்த விசயத்தில் சரவணன்தான் கெட்டிக்காரர். நாங்கள் மேற்கொள்ளும் பயணங்களில் விடுதிகளை, வீடுகளை அவர் தேர்ந்தெடுத்தால் அது சோடை போனதில்லை. எனவே இம்முறை எதையோ சாதித்த திருப்தியில் தெம்பாக இருந்தேன். எங்களுக்குச் சாவியைக் கொடுத்தவர் ஒரு தமிழ் பெண். சாவியைக் கொடுக்கும்போதே “வீடு சுத்தமாக இருக்க வேண்டும்; துண்டு அழுக்கானால் பணம் கழித்துக்கொள்ளப்படும்” என்றார் அதட்டலாக. பல்வேறு தங்கும் வீடுகளில் பல்வேறு கட்டளைகளைச் செவிமடுத்துள்ளோம். இது புது ரகமாக இருந்தது. அதெப்படி துண்டு அழுக்காகாமல் குளிப்பது எனக்குழம்பினாலும் அந்த பயண மனநிலையைக் குழைக்க வேண்டாம் என அமைதியாகத் தலையாட்டி அவரை வழியனுப்பினோம். “துண்டு கவனம்” என மீண்டும் கடுமையாக வலியுறுத்திவிட்டே சென்றார். நிம்மதியாக சோஃபாவில் அமர்ந்தபோதுதான் வரவேற்பறையில் காமிரா பொருத்தப்பட்டிருப்பதை கவனித்தோம். அது அத்து மீறலாக இருக்கவே முகக்கவரியைக் கொண்டு காமிராவை மூடினோம். அடுத்த ஐந்து நிமிடத்தில் ‘துண்டு’ அக்கா வந்தார். ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அவரிடம் பேச விரும்பாமல் வீட்டு உரிமையாளரை வரச்சொன்னோம். இதென்னடா சற்று முன்னர் சமத்தாக பேசியவர்கள் இப்படி சத்தம் போடுகிறார்கள் என சமாதான சிரிப்பை வீசினார். எதுவும் வேலைக்கு ஆகாததால் வீட்டு உரிமையாளரை அழைக்கச் சென்றார். கொஞ்ச நேரத்தில் வீட்டு உரிமையாளருடன் சச்சரவு ஆரம்பமானது. அவர் சீனர். நிலமை மோசமாவதை உணர்ந்துகொண்டபின் அந்தச் சீனர் கும்பிட்டு வணங்கி வாங்கிய முன்பணத்தை திரும்பக் கொடுத்தவுடன் வேறு விடுதியில் சென்று தங்கும்படியானது. ‘என் பெருமையில் எருமை மேய’ என நொந்துகொண்டேன்.

மறுநாள் காலை மழைத்தூரலில் விடிந்தது. தங்கியிருந்த ‘சீம்சூன்’ Seemsoon அறைக்கு நேராக இருந்த பெரிய மரத்தில் ஏராளமான குருவி கூடுகள் இருந்தன. மழையால் காலையில் உணவு தேடி பறக்க முடியாத அவற்றின் கூச்சல் கேட்டுதான் விழித்தேன்.

நாங்கள் இருப்பது பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவில். ஜப்பானியர் ஆட்சிகாலத்தில்தான் ஈப்போ தலைமை பட்டணமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்புவரை தைப்பிங் நகரமே பேராக்கின் தலைநகரம். தைப்பிங்கில்தான் மலேசியாவின் முதல் ரயில் சடக்கு 1885-ல் பிரிட்டீஷ் அரசால் அமைக்கப்பட்டது. ‘பேராக்’ என்பதை வெள்ளி எனப் பொருள் கொள்ளலாம். வெள்ளி என்பது  ஈயத்தைக் குறிக்கிறது. அப்போது லட்சக்கணக்கில் சீனர்கள் குடியேறினர். இன்றும் இந்த நகரில் 70 விழுக்காட்டினர் சீனர்கள்தான். நான் இங்குதான் கல்லூரியில் படித்த காலத்தில் இரயில்வே நிலையம், மாநகர் மன்றம், கிந்தா இந்தியர் விளையாட்டு அரங்கம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் சென்றுள்ளேன். இந்த ஊரில் புகழ்பெற்ற உணவான ‘தௌக்கே சிக்கனை’ தேடிச்சென்று சாப்பிட்டிருக்கிறேன். பெரும்பாலும் உணவு இங்கு விலை மலிவு.

நான் கல்லூரியில் படித்தபோது சென்ற மற்றுமொரு முக்கிய இடம் சம் பொ தொங் (Sam Poh Tong) குகை கோயில். ஒரே ஒருமுறை மட்டுமே அங்குச் சென்றுள்ளேன். இந்தப் பயணத்தில் அங்குச் சென்று காணும் திட்டம் இருந்தது. அதற்கு முன் பசியாற வேண்டும்.

சம் பொ தொங் ஆலயம்

ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது. பழைய கட்டடங்கள் இன்று உணவகங்களாக, காப்பி கடைகளாக, பலகாரக்கடைகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

1880களின் தொடக்கம் வரை ஈப்போ ஒரு சிறிய சந்தை, சில கூரை வீடுகள், சில நூறு மக்களைக் கொண்ட மிகச்சாதாரண கம்பம்தான். மாட்டு வண்டிகள் ஓடும் இரு சாலைகள் மட்டுமே கோப்பேங் மற்றும் பத்து காஜாவை இணைத்தன. சாலைகள் முறையாக இல்லாததால் ஈய தொழிலும் வளம்பெறவில்லை. அதோடு சீனர் ரகசிய குழுக்களுக்கிடையிலான சண்டைகளும் இந்நகர எழுச்சிக்குத் தடையாக இருந்தன.

இந்த குழு சண்டைகள் ஓய்ந்த அதே காலத்தில் 1880களில் ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஈப்போ வேகமாக வளரத் தொடங்கியது.  1888 இல் ஒரு நகரமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஈய விலை இறக்கத்தால் பேராக் சரிவை நோக்கி விழுந்தது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க மலேசியாவில் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாக இருக்கும் ‘ஈப்போ பழைய நகரம்’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கும் ‘வைட் காப்பி’ தோன்றிய ஈப்போ பழைய நகரில் காலையில் காப்பி அருந்தச் சென்றோம். 

‘Ipoh Old Town White Coffee’ என்ற உணவகம் மலேசியாவில் மட்டும் 200 கடைகள் உள்ளன. சீனா, ஆஸ்திரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா என ஏகப்பட்ட கிளைகள்.

இங்கு உருவான ‘வைட் காப்பி’யை வெள்ளை காப்பி என்பதற்கு பதில் ‘வெள்ளி காப்பி’ என அழைக்கலாம். ஈய சுரங்கத்தில் வேலை செய்ய வந்த சீனர்களால் உருவாக்கப்பட்ட காப்பி என்பதால் இந்தப் பெயர். காப்பி கொட்டைகள் உள்நாட்டில் விளைந்த செம்பனையில் தயாராகும் வெண்ணெயில் வறுக்கப்பட்டு காப்பி தயாரிக்கப்படுகின்றன. பழைய ஈப்போ நகரத்தின் இச்சாலை இன்று  Jalan Bandar Timah என அழைக்கப்படுகிறது.

இங்கு Nam Heong மற்றும் Sin Yoon Loong ஆகிய இரு காப்பி கடைகளும் பழமையானவை; பிரபலமானவை. இதே சாலையில் இப்படி ஏராளமான காப்பி கடைகள் இருந்தாலும் இந்த இரு கடைகளிலும் அதன் தனித்துவம் காரணமாக கூட்டம் நிறைந்திருந்தது. Nam Heong இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தொடங்கப்பட்ட காப்பி கடை. Old Town Coffee உணவகத்தின் வேர் இந்தக் கடையில் இருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. Sin Yoon Loong 1937இல் தொடங்கப்பட்ட காப்பி கடை. நாங்கள்  Sin yoon loong என்ற கடையில் காப்பி அருந்தினோம். நிச்சயம் சுவையால் மேம்பட்டது.

இந்த இடத்தை நான் தேர்ந்தெடுக்க மற்றுமொரு காரணம் Concubine Lane. நான் ஈப்போவில் படித்த காலத்தில் சந்தித்த முதியவர்கள் இதனை ‘வைப்பாட்டி தெரு’ எனச் சொல்வதை கேள்விப்பட்டுள்ளேன். அப்போது அதன் பெயர் காரணத்தைக் கேட்டதில்லை. வைப்பாட்டி தெருவைப்பற்றி தெரிந்துகொள்ளும் முன் Yao Tet Shin குறித்து அறிய வேண்டும்.

Yao Tet Shin ஈய சுரங்க அதிபராக இருந்தவர். அதனால் சீனர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தியவர். கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடியவர் என்றும் சொல்லலாம். அவருக்கு மூன்று மனைவிகள். மூன்று மனைவிக்கும் மூன்று சாலைகளை பரிசாகக் கொடுத்தார். அதில் முதல் மனைவிக்குக் கொடுக்கப்பட்ட சாலை இன்று Lorong Hale என அழைக்கப்படுகிறது. நான் இந்தச் சாலையில் மோட்டாரில் பயணித்துள்ளேன். வெறுமையான சிறிய சந்துபாதை. வைப்பாட்டி தெருவை இன்று Lorong Panglima என அழைக்கின்றனர்.  இந்தக் குறுகிய தெரு 1908இல் உருவானது. அக்காலத்து ஈய சுரங்க அதிபர்கள் சிலர், தங்கள் ஆசை நாயகிகளுக்காகவும் இந்தத் தெருவில் உள்ள வீடுகளைப் பயன்படுத்திக்கொண்டனர். எனவே இத்தெருவில் இயல்பாக அபின், சூதாட்டம், பாலியல்தொழில்கள் நடந்தன. இன்று இந்தப் பழைய கட்டட அமைப்பு பராமரிக்கப்பட்டு உணவகங்களும் நினைவு பொருள்கள் விற்கும் பகுதியாகவும் திகழ்கிறது. இரண்டாவது வைப்பாட்டிக்கு வழங்கிய சாலை இன்று Market Lane என அழைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் இயல்பாகப் பலரும் பயணித்திருப்பார்கள். நான் சில முறை சென்றுள்ளேன். சுவரை மூன்று ஓவியங்கள் அலங்கரித்திருக்கும். மேலே வண்ணக்குடைகளால் மூடப்பட்டிருக்கும்.

வைப்பாட்டி தெரு

எங்களுக்கு நேரம் குறைவாக இருந்ததால் நான் இம்முறை ‘வைப்பாட்டி தெருவை’ காண தேர்ந்தெடுத்தேன். மேலும் அதுதான் மலாக்காவில் உள்ள jonker street போல உயிர்ப்புடன் இயங்கக்கூடியது. உள்ளே சில கடைகள், உணவுகள் என விற்கப்பட்டன. பழைய கட்டட அமைப்பைக் காண இங்கு செல்லலாம்.

மழை விடாமல் தூறல் போட்டுக்கொண்டே இருந்தாலும் பயணத்துக்கு அது பெரிய தடையாக இல்லை. எனவே ஈப்போவில் புகழ்பெற்ற சீன குகை கோயில்களைப் பார்த்துவிட்டு விரைவாகவே புறப்பட்டோம்.

இந்தக் குகை கோயில்கள் அதிகம் சுற்றுப்பயணிகளைக் கவர்பவை. பத்துமலை குகை கோயிலைப் போல சுண்ணாம்பு மலை குகையினுள் இயற்கையாக அமையப்பெற்றவை. இதில் Kek Lok Tong என்ற கோயில் 1920 முதலே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு 1960இல் இரும்பை தோண்டி எடுக்கும் இடமாக உருமாறியது. பின்னர் அத்தொழில் நிறுத்தப்பட்டவும் 1970க்குப்பின் மீண்டும் வழிபாட்டு இடமாக மாறியது.

இந்தக் குகை கோயில்களுக்குச் செல்லும்போது பௌத்த வழிபாட்டுடன் சீனர்களின் தேவதை வழிபாடுகளையும் காண முடியும். மலேசியாவில் வாழும் சீனர்கள் பெரும்பாலும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். அதற்கு அடுத்த நிலையில் சீன பாரம்பரிய வழிபாட்டினை பின்பற்றுபவர்களும் பெருவாரியாக உள்ளனர். எனவே கோயில்களும் அதற்கேற்ப கலவையாகவே அமைக்கப்பட்டுள்ளன.

போதுமான அளவு சுற்றியபிறகு மதிய உணவு எங்கு சாப்பிடலாம் என யோசித்தோம். முத்துவுக்கு மறுபடியும்  ‘நாசி வாங்க’ வாங்கிகொடுத்துவிடுவோமோ என்ற பயம் இருந்தது. கம்பாரில் ஏதாவது சாப்பிடலாம் எனப் புறப்பட்டபோது புந்தோங்கில் சாலை ஓரம் அமைந்திருந்த ஒரு இந்தியர் கடை கண்ணில் பட்டது. ஆடு, ஊடான், மீன் எனப் பட்டியல் கண்ணில் பட்டதால் காரை வளைத்துச்சென்று அங்கேயே சாப்பிட்டுவிட்டு பத்து காஜாவை நோக்கி புறப்பட்டோம்.

‘பத்து’ என்றால் கல் ‘காஜா’ என்றால் யானை. யானைக்கல் என இதற்கு அர்த்தம் சொல்பவர்கள் உண்டு. அதாவது பழங்குடி கதைகள் அடிப்படையில் கிந்தா ஆற்றின் இரு பக்கங்களில் பெரும் கல் பாறைகள் யானைகளைப்போல பூர்வக்குடிகளால் செதுக்கப்பட்டனவாம். அம்மக்கள் பயிர் செய்த கரும்புகளை நாசம் செய்யும் காட்டு யானைகளை பயமுறுத்த அந்த ஏற்பாடு எனச் சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை எனத் தெரியாவிட்டாலும் பேராக் மாநிலத்தில் ஒரு காலத்தில் யானைகள் பொது போக்குவரத்துக்கு உதவியதாக கோப்பேங் அருங்காட்சியகத்தில் கண்ட படங்கள் நினைவுறுத்தின. யானைகளுடன் தொடர்புடைய நகரம் இது என்பது மட்டும் உறுதியானது.

கெல்லீஸ் கோட்டை

கெல்லீஸ் கோட்டையை நாங்கள் வந்து அடைந்தபோது நல்ல வெயில். இது ஓர் அரண்மனை. வில்லியம் கெல்லி ஸ்மித் என்பவரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை முற்றுப்பெறாமல் இருக்கிறது. நான் பலமுறை இங்கு வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு கோட்டையைக் கட்ட விரும்பிய கெல்லியின் கனவும் காதலும்தான் ஆச்சரியப்படுத்தியது. ஆம்! அவர் இதை தன் மனைவி ஆக்னஸுக்கு பரிசாக வழங்கவே கட்டினார். அவர் காலமானதால், நிறைவுறாமல் போன கனவு எங்கள் கண்முன் பிரமாண்டமாகி நின்றது.

வில்லியம் கெல்லி ஸ்மித் (1870-1926) ஸ்கோட்லண்ட் நாட்டைச் சேர்ந்தவர். தன் 20 ஆம் வயதில் கட்டடப் பொறியாளராகத்தான் மலேசியாவுக்கு வந்தார். தொழில் முனைப்பால் பெற்ற லாபத்தில் ரப்பர் தோட்டங்களை உருவாக்கியதோடு ஈயச் சுரங்கத்தொழிலிலும் ஈடுபட்டார். 1909 ஆம் ஆண்டில் கெல்லி ஸ்மித் தனது முதல் மாளிகையாக கெல்லாஸ் ஹவுஸை கட்டினார். பின்னர் 1915இல் அவருக்கு ஒரு மகன் பிறந்த பின்னர் தமிழகக் கட்டிடக் கலையில் அரண்மனையைக் கட்ட தமிழக கட்டிடக் கலைஞர்கள் 70 பேரை மலேசியாவுக்கு அழைத்துச் வந்தார். டென்னிஸ் விளையாட்டு அரங்குடன் ஆறு மாடி கட்டடமாக எழுப்புவது அவர் திட்டம். அதன் அத்தனை சுவடுகளும் இன்றும் நம் கண்முன் இருக்கின்றன.

அப்போது சிமெண்டு இன்னும் அறிமுகம் காணாததால் வாத்து முட்டையின் வெள்ளைக்கரு, மணல், சுண்ணாம்பு, கருப்பு சீனி, தேன் ஆகியவை கலந்தே கோட்டை எழுப்பப்பட்டுள்ளது; ஆணியோ இரும்போ உபயோகிக்கபடவில்லை என கோட்டையில் இருந்த குறிப்புகள் கூறுகின்றன. 1914 முதல் 1918 வரை நடந்த முதலாம் உலகப் போரும் இந்தக் கோட்டையை எழுப்ப பெரும் தடையாக இருந்துள்ளது. பொருள்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டிருக்கிறார். 

கெல்லீஸ் மாளிகையைக் கட்டிய கெல்லி ஸ்மித்தான் மலேசியாவில் முதன்முதலாக ஓர் இந்து ஆலயத்தை உருவாக்கிய ஆங்கிலேயர். இந்த ஆலயம் ஒரு துக்ககரமான வரலாற்றின் சுவடு. அன்றைய காலத்தில் கெல்லீஸ் மாளிகையைக் கட்டிய தமிழர்களில் ஏறக்குறைய 70 பேர் ஸ்பானிய காய்ச்சலால் பலியானார்கள். (தோட்டங்களில் நெருக்கமான குடியிருப்பில் வாழ்ந்ததால் 6000 தென்னிந்திய தொழிலாளர்கள் அக்காலக்கட்டத்தில் இறந்தனர்.) இப்படி இறந்தவர்களில் இந்தக் கோட்டையைக் கட்ட வந்த நிபுணர்களும் அடங்குவர். 1918இல் இந்த நோய் தாக்கம் ஏற்பட்டதால் கோட்டையைக் கட்டும் முயற்சி மேலும் தாமதித்தது. மர்ம நோய் தாக்கும்போது இப்படி கோயில்கள் கட்டப்படுவது இயல்பு. காளியம்மன் கோயிலைக் கட்ட அனுமதி கேட்டு மறுக்கப்படவே இறுதியில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இன்றும் அந்தக் கோயில் கோபுரத்தில் வில்லியம் கெல்லி ஸ்மித் சிலை இருப்பதைக் காணலாம்.

கோபுரத்தில் வில்லியம் கெல்லிஸ்

1926இல் கெல்லி ஸ்மித் தன் மகனுடன் ஐரோப்பாவில் இருக்கும் மனைவியைப் பார்த்துவிட்டு அப்படியே இந்தக் கோட்டைக்காக தயார் செய்துள்ள பலுத்தூக்கியையும் எடுத்துவர கப்பல் ஏறினார். இடையில் அவர் போர்த்துகலுக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கு அவர் விஷக் காய்ச்சல் கண்டு டிசம்பர் 11 1926இல் இறந்தார். பலர் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறுகின்றனர். தெரியவில்லை. ஆனால் அவர் அந்த பலுதூக்கியை எடுத்து வந்திருந்தால் அதுதான் மலேசியாவின் முதல் பலுத்தூக்கியாக இருந்திருக்கும்.

நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு கம்பாரில் ‘ரொட்டி ஆயாம்’ வாங்கிக்கொண்டு பீடோரை நோக்கி புறப்பட்டோம். கம்பாரில் ரொட்டி ஆயாம் பிரபலம். அடைமழை. கம்பாரில் Claypot rice மிகப்பிரபலம். ஆனால் கடை மாலை ஆறு மணிக்கு மேல்தான் திறக்கும். எனவே பொறுமையாகவே அங்கு சென்று சேர்ந்தோம். மழை இருட்டில் சாலை கண்ணுக்குத் தெரியவில்லை. என் காரின் கண்ணாடியில் உள்ள ‘திண்தட்’ சேதம் அடைந்திருந்தது. வைப்பரிலும் பழுது என அப்போதுதான் அறிந்தேன். இருந்தாலும் சோறு முக்கியம் என்பதால் ஒருவழியாக அங்கு சென்று சேர்ந்தோம். கடைக்காரன் எங்களை மேலும் ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொல்லவும் அது சாத்தியமாகாது என பக்கத்தில் உள்ள ஒரு கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம்.

என்னால் காரை ஓட்ட முடியவில்லை. இரவில் கார் ஓட்ட பயன்படுத்தும் கண்ணாடியை வீட்டிலேயே விட்டு வந்திருந்தேன். பாதி தூரம் கடந்தபிறகு நான் திணறுவதைக் கண்ட திருமுத்து காரை ஓட்டி எங்களைக் காப்பாற்றினார். அந்த மழை எப்போதும் போல சாதாரண மழை என்றே நினைத்தோம். சிரித்து பேசியபடிதான் கடும் வாகன நெரிசலைக் கடந்தோம். மறுநாள் அது சிலாங்கூர், பஹாங் போன்ற மாநிலங்களில் ஏற்படுத்திய வரலாறு காணாத பாதிப்பு அதிர்ச்சியளித்தது. வெள்ளத்தில் வீடுகள் முற்றாக மூழ்கிய காட்சிகளை மலேசியாவில் நான் முதன்முறையாகக் கண்டேன். இந்த துன்பங்களைக் காணாத இன்னொரு காலத்து மனிதர்கள் இந்தக் காட்சிகளை வரலாறாக பதிவு எழுதி எளிதாகக் கடந்து சென்றுவிடக்கூடுமென அப்போது தோன்றியது.

3 comments for “ஈயச் சுவடுகளில் இரண்டு நாள்

  1. A. Lakshmanalal
    January 4, 2022 at 9:54 pm

    அன்புள்ள நவீன் சார், தகவல் களஞ்சியமாக இருந்தது இந்த கட்டுரை. அதிலும் “வெள்ளை காப்பி“ பற்றிய நுண் தகவல் அற்புதம். உங்கள் பேய்ச்சி நாவலை இனிதான் படிக்க வேண்டும். நன்றி-அ.லட்சுமணலால், மதுரை, தமிழகம்.

  2. sriramulu appalanaidu
    January 5, 2022 at 10:04 pm

    விரிவும் ஆழமும் கொண்ட ஒரு கட்டுரை. நல்ல போற்றுதலுக்குரிய ஒரு பதிவு. வாழ்த்துகள்.

  3. DHIWAHAR MANIVANAN
    January 6, 2022 at 12:00 am

    நான் வாழ்வது பத்து காஜா இடம் ஐயா. 18 வருடங்கள் இங்கு உள்ளேன். உங்களின் இக்கட்டுரையில் பல தகவல்களை அறிந்து கொண்டேன் ஐயா. சிறப்பு✨👌. உங்களின் இக்கட்டுரையில் குறிப்பிட்ட எல்லாம் இடங்களுக்கும் சென்று விட்டேன்.
    kek lol tong மட்டும்தான் சென்றது இல்லை… இனி செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வரலாற்றுப் பின்புலப் கட்டுரையை வழங்கியதற்கு நன்றி ஐயா. மிகவும் அருமை😍👌

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...