நினைவில் தோன்றும் அடர் வனங்களின்
கிளை ஒன்றில்,
அலைந்து தனித்த பறவையான பொழுது
அதிகாலை திறந்துவிடும் ஒற்றை ஜன்னலினூடு பாயும் குளிர் பட்டு சிலிர்க்கிறது அந்நினைவு
நினைவில் உருகி வழிந்து பெருக்கெடுக்கிறேன்
சருகுகளையும் கூழாங் கற்களையும்
அள்ளிச் சுமந்தோடுகிறேன்
சிறு மீன்கள் கொஞ்சம் தோன்றி மறைகின்றன
எதிர்ப்படும் பாறைகளில் முட்டிமோதி
சொற்கள் வெடித்துச் சிதறுகின்றன
சிதறிய சொற்கள்,
கிளைகளாகி எட்டுத் திக்கும்
எல்லா மொழிகளிலும் பெயர்ந்து கொண்டிருக்கின்றன
அதில் ஒரு துளி மட்டும் உங்களை நனைக்கலாம்.
000
நூலகத்தில் கடுந்தாகத்துடன் சிறுகதை ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னும் மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது கிணறு என்ற சொல்லை அடைய,
தாகந்தீர நீரருந்துவதற்காய் அச்சொல்லையடைய வேகமாக வாசிக்கிறேன்
மிகுந்த பிரயத்தனத்தின் பின் அப்பக்கத்தை அடைகிறேன்
தாகம் ஊற ஊற அப்பக்கம் மறு பக்கம் என கண்களால் ஓடி ஓடித் தேடுகிறேன் கிணற்றைக் காணவில்லை
எனக்கு முந்தைய வாசகர்களால்
தாகம் தீர அருந்தப்பட்ட கிணறு
நீர் வற்றி கதையின் கடைசிப் பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தது.
000
தூக்கம் அந்தரத்தில் தொங்கும் நடு நிசிப் பொழுதொன்றில்
என் கடல்
அலைகளை மடித்து மடிக்குள் வைத்து அமைதியாகிக் கிடக்கிறது
என் அடர் வனம் தோகைகளுக்குள் அனைத்தையும் அடை காத்துக்
கொண்டிருக்கிறது
என் நீள்நதி
ஓடிக் கொண்டே மீன்களுக்கு நிலாப் பாலூட்டிக் கொண்டிருக்கிறது
என் ஆகாச வானம்
நட்சத்திரங்களுடன் கதை பேசிக் கொண்டிருக்கிறது
நான்
அந்தரத்தில் தொங்கும்
என் தூக்கத்தை வெறித்தபடி கிடக்கிறேன்
நீட்சியுறுகிறது என் இரவும் இருளும்.
000
காகம் சிறகுகளை அகலித்து மூடியிருக்கும் பிரபஞ்சம்
இறந்த காகத்தை
வலசைப் பறவையொன்று
சொண்டால் மெல்ல மெல்ல
இழுத்து வருகிறது
கொஞ்சம் கொஞ்சமாய்
பகல் தெரிகிறது
கனவுகளுக்குள்ளிருந்து
வீடு திரும்புகிறார்கள் மனிதர்கள்
பனி பட்டுச் சிலிர்க்கிறது பிரபஞ்சம்
கைபேசிக் காதலர்கள் இன்னும் தொடர்கிறார்கள்
இரவைத் தூக்கிக் கொண்டு பகலுக்குள் அலைந்து திரிகிறது அப்பறவை.
இரண்டாவது கவிதை அருமை