ஆதி பூமியை வரையும் கைகள்

(அபிராமி கணேசனுக்கு ‘வல்லினம் இளம் படைப்பாளி விருது’ வழங்கப்பட்ட போது அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் முழு வடிவம்)

அ.பாண்டியன் உரை யூடியூப்பில்

கோவிட் நோய்தொற்று காலத்துக்கு முன்பே அதாவது 2020 தொடக்கமே திட்டமிடப்பட்ட இந்நிகழ்ச்சி சூழல் சரியாகும் வரை ஒத்திபோடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் , நோய்சூழல் இன்றுவரை சரியாகாவிட்டாலும் அரசின் அனுமதிக்குப் பிறகு தகுந்த முன்திட்டங்களுடன் இன்று விருதளிப்பு விழா நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி. 

வல்லினம் விருது 2014 தொடங்கி வழங்கப்படுகிறது. மலேசிய எழுத்துலகில் நீண்டகாலம் பணியாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில், வாழ்நாள் சாதனையாளர் விருதாக,  வல்லினம் விருது வழங்கப்படுகிறது. இதுவரை அ.ரெங்கசாமி, சைபீர் முகமது இருவரும் இவ்விருதைப் பெற்றுள்ளனர். இவ்வாண்டுக்கான விருதை ஐயா மா. ஜானகிராமன் பெறுகிறார். அவருக்கும் எனது வாழ்த்துகள். 

மாறாக இந்த ஆண்டு அபிராமி கணேசனுக்கு வழங்கப்படும் ‘வல்லினம் இளம் படைப்பாளிக்கான விருது’ புதியது. முதல் முறையாக இவ்விருது வழங்கப்படுகிறது.  மலேசிய அறிவுச்சூழலுக்கும் இலக்கியத்துக்கும் வலிமை சேர்க்கும் வகையில் தரமான படைப்புகளை எழுதும் இளைஞர்களை, ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது.  அதன் அடிப்படையிலேயே அபிராமி கணேசனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

அபிராமி கணேசன் மலாயாப் பல்கலைக்கழக மாணவி. அவர் இப்போது மலாயாப் பல்கலைக்கழத்தில் நூலகத்துறையில் முதுகலை பயின்று வருகிறார் என்று அறிகிறேன்.  ஆனால் இளங்கலை படிக்கும் போதே தன் எழுத்து ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். வல்லினத்தில் வெளிவந்த பல கட்டுரைகள் அவர் இளங்கலை மாணவியாக இருந்த போது எழுதியவை.  இப்போதும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அபிராமி கணேசன்  ஜூன் 2019 தொடங்கி வல்லினத்தில் இதுவரை 13 கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரின் கட்டுரைகள் இன்னமும் நூல்வடிவம் காணவில்லை. ஆனாலும் அவை நூலாக்கம் காணும் தகுதி கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

எந்தவொரு விருதின் நோக்கமும் ஒரு கலைஞனை அல்லது படைப்பாளியை முன்நிறுத்துவதோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக அப்படைப்பாளி முன்வைக்கும் கருத்து தரப்பை அல்லது பார்வை கோணத்தைப் பரவலாக்குவதே விருதுகளின் சாரம்ச நோக்கம். அவ்வகையில் வல்லினம் இளம் படைப்பாளி விருதுபெரும் அபிராமி கணேசனின்  கட்டுரைகளைச் சுற்றுச்சூழல், மொழி, சமூக அரசியல் என மூன்று  பெரும் தலைப்புகளாக தொகுத்துக் கொண்டு ஒரு வாசகனாக என் பார்வையை முன்வைக்க முயல்கிறேன். 

தமிழ்சூழலில் அதிகம் கவனம் பெறத்தவறிய முக்கிய விசயங்களைத் தொட்டு அவர் கட்டுரைகள் எழுதி வருகிறார்.  பொதுவாக தமிழில் எழுதும் இளையோர் கவிதை கதை என்று புனைவு படைப்புகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். புனைவுகளில் உள்ள கவர்ச்சி பலரையும் ஈர்ப்பது இயல்பே.  ஆனால் அபிராமி புனைவல்லாத ஆக்கங்களை அதிக ஈடுபாட்டுடன் எழுதுவது மகிழ்ச்சி. காரணம் புனைவல்லாத படைப்புகள் வாசகனுக்கு நேரடியாகவே தகவல்களையும் கருத்துகளையும் சொல்லி அறிவார்ந்த விவாதங்களை விரைவாக முடுக்கிவிட உதவுபவை. அறிவுச்சூழலில் புனைவுகளைவிட கட்டுரைகள் அதிக மதிப்பு பெற்றுள்ளதை ஆய்வுகளில் பயணிக்கும் யாரும் அறிவர்.

புனைவுகளை விட புனைவல்லாத படைப்புகள் அதிகமும் தகவல்களை சார்ந்தும் தகவல்களை வழங்குபவையாகவும் இருக்கின்றன. பொதுவாக நாம் வாழும் காலத்தை தகவல் யுகம் என்று கூறுகிறோம். அதாவது நம்மை பலதுறைகள் சார்ந்த பல்லாயிரம் தகவல்கள் சூழ்ந்துள்ளன. இணையமும் ஊடகங்களும் தினம் தினம் பல நூறு தகவல்களை நம் பார்வைக்குக் கொண்டுவந்து கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு தேவையான தகவலையும் நொடியில் தேடி அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால்,  ‘அறிந்து கொள்ளுதல்’ என்பது சிந்தனை படிநிலைகளில் முதல் படி. ஆகவே ‘அறிந்து கொள்ளுதல்’ அறிவார்த்தம் அல்ல.  மாறாக, எளிதில் கிடைக்கும் அத்தகவல்களைக் கையாளும் வகையிலும் நோக்கத்திலுமே அவற்றை  அறிவார்த்தமாக மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக மலேசியா 1957ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது என்பது ஒரு தகவல். அதற்கான தரவுகளும் உண்டு.  எனினும் அந்த தகவலாலும் தரவுகளாலும் நாம் அடையும் பயன் ஒன்றுமில்லை. ஆனால், 1957க்கும்  2022க்கும் இடைபட்ட காலத்தில் நம் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய விவாதங்களை தரவுகளுடன் முன்னெடுப்பதே அறிவார்த்தமாகும்.

கண் முன்னே தகவல்கள் குவிந்து கிடப்பதனாலேயே நாம் அறிவார்ந்த மனிதர்கள் என்ற மயக்கத்தில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது ஒரு மாயத்தோற்றம் மட்டுமே. தகவல் யுகம் என்பது ஒரு கடல் என்றால் ஊடகங்கள் தினம் தினம் நம் கண் முன் வீசிக் கொண்டிருக்கும் தகவல்கள் கடல் அலை ஒதுக்கிவிட்டுப் போகும் குப்பைகளுக்கு நிகரானவை. குப்பைத் தகவல்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாகத்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தகவல் யுகத்தின் உள்ளீடுகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத சாமானியர்களாகப் பலர் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்கிறார்கள்.

அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களும் நொறுக்குத் தகவல்களையும் கேளிக்கை தகவல்களையும் குறைவில்லாமல் நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன. பரபரப்பு அரசியல் செய்திகளையும் உணர்வுகளைத் தூண்டும் சார்பு கருத்துகளையும் தகவல்களாக அவை தந்து கொண்டே இருக்கின்றன. அவை நமக்கு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது, அல்லது அந்தப் பலநூறு தகவல்களால் நமக்கு என்னதான் பயன் என்ற கேள்விகள் இன்றி வாசகரும் அவற்றைத் தம் மூளையில் சேகரித்துக் கொள்கிறார்கள்.

மாறாக,  தகவல் அறிந்த மனிதராக உலவுவதையே ஒரு கெளரவமாக நினைப்பவர்கள் அதிகம்.  ஆனால் இவ்வகை உதிரித்தகவல்கள் ஒருபோதும்  அறிவார்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்க உதவாது.  அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க தகவல் யுகம் என்ற கடலின் மேல் பரப்பில் மிதந்துவரும் குப்பைகளை ஒதுக்கிவிட்டு ஆழம் சென்று தேடலை நிகழ்த்த வேண்டியுள்ளது. அவ்வகை தீவிரத் தேடலை நிகழ்த்துவதன் வழி பெறப்படும் தகவல்களின் ஒருங்கிணைவுதான் அறிவார்ந்த செயல்பாட்டுக்கு வித்திடுகின்றன.

அபிராமி கணேசனின் படைப்புகள் செறிவான தகவல்களாலும் புள்ளிவிபரங்களாலும் ஆனவை. ஆனால் அவர் முன்வைக்கும் நுண்தகவல்கள் வாசகரை அடுத்த கட்டச் சிந்தனைக்கு நகர்த்துகின்றன. நாம் அதிகம் அறிந்திராத ஆளுமைகளைப் பற்றியும் சுற்றுச் சூழல் சீரழிவு பற்றியும் தனது எழுத்தின் வழி வாசகர்களை தீவிர சிந்தனைக்கு இட்டுச்செல்கிறார்.

ஒரு படைப்பு வாசகனை தீவிர சிந்தனை நோக்கி நகர்த்த அமையவேண்டிய அடிப்படை கூறுகளில் முதன்மையானது என நான் நினைப்பது, அது அதிகாரதரப்புக்குச் சாமரம் வீசுவதாகவோ பிரச்சாரச் சாதனமாகவோ இருந்துவிடக்கூடாது என்பதுதான்.  அதேபோல், வெகுஜனம்  அறிந்த அல்லது விரும்பும் கருத்துகளை மெருகூட்டி எழுதும் படைப்புகளாகவும் அவை இருக்கக்கூடாது. அசல் தன்மையும் விவாதப் போக்கும் இருக்க வேண்டும். அபிராமி கணேசன் இந்த பிரக்ஞையுடனேதான் தன் கட்டுரைக்கான கருப்பொருளை தேர்வு செய்கிறார். ஷூனார், சிசில் ராஜேந்திரா, கே.எஸ் மணியம், கிரேண்டா, புருனோ மன்சர் போன்ற, மாற்றுக் கருத்துகளைத் துணிந்து வெளிப்படுத்தும் பல்துறை ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் வழி அவர் தன் நிலைபாட்டை தெளிவாக உணர்த்துகிறார்.  அவர் ஒரு சிறந்த கட்டுரையாளராக பரிணமிக்க இது நல்ல துவக்கம் என நான் நினைக்கிறேன்.

மேலும்  அபிராமியின் கவனம் சுற்றுச் சூழல் சார்ந்தும் தீவிரமாக வெளிப்படுகின்றது. மலேசியாவில், குறிப்பாக தமிழ்ச்சூழலில்,  சூழியல்  சார்ந்த கட்டுரைகள் இளையோரால் மிகக்குறைவாகவே படைக்கப்படுகின்றன. அபிராமி கணேசன் சூழியல் பற்றிய கூர்மையான பார்வையோடு கட்டுரைகள் படைக்கிறார். அவர் வல்லினத்தில் இதுவரை பதின்மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் எட்டு கட்டுரைகள் சூழியல் தொடர்பானவை. மிகப்பெரிய தேடலையும் உழைப்பையும் கோரும் விரிவான கட்டுரைகள் அவை.

சூழியலில் மையமாக இருக்கும் பழங்குடி மக்கள், வனம், பறவைகள், பருவநிலை மாற்றம் என அவரின் சூழியல் சார்ந்த கண்ணோட்டம் விரிவாகிச் செல்கின்றது. மேலும்  சூழியல் சீர்கேட்டிற்கு எதிராக குரல் எழுப்பும் தனிமனிதர்களின் போராட்டங்களையும் அவர் கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.   மலேசியாவில் மட்டுமின்றி அனைத்துலக கவனம் பெற்று, பின்னர் மர்மமான முறையில் காணாமல் போன புருனோ மன்சர் வனப் பாதுகாப்பு போராட்டங்களையும், உலக நாடுகளின் கவனத்தைத் தனது சூழியல் போராட்டங்களின் பக்கம் ஈர்த்த கிரெட்டா துன்பெர்க் என்ற சுவீடன் சிறுமி பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை.

அபிராமி கணேசனின் மேலும் ஒரு கட்டுரை மழைக்குருவிக் கூடுகளை வியாபாரம் செய்வது பற்றியது. மலேசியாவில் 90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மழைக்குருவிக் கூடு வியாபாரம் மிகவும் பிரமலமானது. குருவி கூட்டில் இருந்து ஊட்டச்சத்து மருந்து தயாரிக்கும் முறையை வியாபாரம் ஆக்கியதும் அதன் தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது.  குறிப்பாகச் சீனர்களின் சிறந்த சத்துணவு தேர்வாக இது இருக்கிறது.

குகைகளில் கூடுகட்டும் மழைக்குருவிகளை செயற்கையாகக் கவர்ந்து கட்டிடங்களில் கூடுகட்ட வைத்து  அக்கூடுகளை அணைத்துலக சந்தைக்கு அனுப்பும் வியாபாரம் பெரும் லாபம் தரும் வணிகமாக மாறியுள்ளது.  ஆனால் அந்த வியாபாரத்தால் ஏற்படும் இயற்கை சமநிலைச் சிதைவும் சூழியல் அச்சுறுத்தலும் சூழியலாளர்களின்  கண்டனங்களை எதிர்கொள்கிறது. அபிராமி மழைக்குருவி கூடு வியாபாரம் பற்றியும் அதன் சூழியல் ஆபத்துகள் பற்றியும் விரிவான கட்டுரையைத் தகவல் செறிவுடன் எழுதியிருக்கிறார்.

அதே போல் செம்பனை மர நடவால் ஏற்படும் தீமைகளையும்  தனது  மற்றுமொரு கட்டுரையில் எழுதியுள்ளார். 70ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்நாட்டின் முக்கிய உற்பத்தியாக இருந்த  ரப்பர் நடவு நிறுத்தப்பட்டுச் செம்பனை தோட்டங்கள் உருவாகின.  ஆனால் செம்பனைப் பயிர் இயற்கை சமநிலையை சீர்குழைப்பது பற்றிய விமர்சனம் பல சூழியலாளர்களிடமும் இருக்கிறது. பெரும் வனப்பகுதிகளை அழித்து அந்த மண்ணின் இயல்பைச் செம்பனை மரங்கள் வளருவதற்கேற்றதாக மாற்றுவதானால் உண்டாகும் சூழியல் சிக்கல்கள் கவனிக்கப்படுவதில்லை. செம்பனைமரத் தோட்டங்கள் பார்வைக்குப் பசுமையாக இருந்தாலும் அவை சூழியலுக்குத் தீமையையே செய்கின்றன என்பதை அபிராமியின் கட்டுரை உணர்த்துகிறது.

மலேசியா போன்ற வளரும் அல்லது நாகரீக மோகம் நிரம்பிய நாட்டில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மனிதத் திரளாக பழங்குடிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் வாழ்விடங்களில், தங்களின் மரபான பழக்கவழக்கங்களுடன் அமைதியாக வாழமுடியாத நிலையில் எல்லாவித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.  வேட்டைச் சமூகமாகவும்  அடிக்கடி இடப்பெயர்வு செய்யும் விவசாய சமூகமாகவும் வாழும் இவர்களின் உரிமைகளை நிலைநாட்ட அவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்வது அவசியம். தீபகற்ப மலேசியாவிலும் போர்னியோ தீவுக் காடுகளிலும் வாழும் இம்மக்களைப் பற்றியும் இன்றைய அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் பற்றியும்  விரிவான மூன்று கட்டுரைகளை அபிராமி எழுதியுள்ளார். ஓராங் அஸ்லி என்று பொதுவாக குறிப்பிடப்படும் மலேசிய பழங்குடிகள், பல்வேறு வட்டார வழக்குகளில் பேசுபவர்களாகவும்,  பலவித பண்பாடுகளையும் பண்டிகைகளையும் கொண்டாடும் குறுங்குழுக்களாகவும் வாழ்கின்றனர். பல குறுங்குழுக்கள் அழிவு நிலையை எட்டியுள்ளன. நாட்டு வளர்ச்சிக்கு ஈகையாக தங்கள் உரிமைகளை இழக்க வேண்டிய கட்டாயத்தில் இவர்களை அரசுகளும் முதலாளித்துவச் சிந்தனாவாதிகளும் தினமும் நெருக்கிக் கொண்டிருக்கின்றனர். அபிராமி கணேசனின் கட்டுரைகள் அவர்களின் வாழ்வியலை மேலும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவுகின்றது. 

அபிராமி கணேசனின் பெரும் உழைப்பில் உருவான மற்றும் ஒரு முக்கியமான கட்டுரை மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையும் தமிழ் நூலகமும் உருவான பின்னணியை விளக்கும் கட்டுரையாகும். இந்நாட்டில் தமிழ் மொழி பற்றிய உணர்ச்சிமிகு உரையாடல்களில் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் முயற்சியில் தொடங்கப்பட்ட ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதியைப் பற்றி துணுக்குத் தகவல்கள் பலவற்றை குறிப்பிடுவதை நம்மில் பலரும் அறிவோம். எழுத்தாளர்களும் மேடைப்பேச்சாளர்களும் கோ.சாவின் முயற்சியின் சாரத்தை மட்டும் குறிப்பிடுவதே வழக்கம்.  ஆனால் அந்த நிதி திரட்டலின் சவால்களையும் பங்களித்த உணர்வாளர்களின் முழுவிபரமும் கிடைப்பது அரிது. இதுவரை இந்நாட்டு ஊடகங்கள் எதிலும் முழுமையான பட்டியல் வெளிவந்தது கிடையாது. அபிராமி கணேசன் அந்த நிதி திரட்டலின் முழுத் தகவல்களையும் அக்காலகட்ட தமிழ்முரசு நாளிதழ்களில் இருந்து திரட்டி பெரும் தொகுப்பாக உருவாக்கியிருக்கிறார். அந்த கட்டுரையும் கட்டுரையை விரிவாக்கும் இணைப்புகளும் வல்லினத்தில் உள்ளன. இன்று ஆய்வாளர்கள் யாரும் அந்த கட்டுரையின் வழி அரிய பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மேல் ஆய்வுகளைச் செய்ய முடியும்.  இது அபிராமி கணேசனின் பெரும் முயற்சி என்று பாராட்டலாம்.

அபிராமி கணேசனின் கட்டுரைகள் கடின உழைப்பில் உருவான தகவல் களஞ்சியமாக இருப்பது சிறப்பு. அது அக்கட்டுரைகளில் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் கூட்டுகிறது. ஆனாலும் ஒரு வாசகனாக எனக்கு சில வகையில் அவர் தன் எழுத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றுகின்றது. முதலாவதாக அவர் கட்டுரைகளில் நேரடி அனுபவங்கள் குறைவாகவும் தேடலின் வழி பெறப்பட்ட தகவல்கள் அதிகமாகவும் உள்ளன. அவர் இளையவர் என்பதால் சூழியல் சார்ந்த நேரடி அனுபவங்களைப் பெறக்கூடிய எல்லா வாய்ப்பும் அவருக்கு உள்ளது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகளை அவர் அமைத்துக் கொள்ளலாம்.  

மேலும், அவர் அக்கட்டுரைகளில் தன்னைப் பிணைத்துக் கொள்ளாமல் தள்ளி நின்று எழுதும் முறையையே கடைபிடிக்கிறார். கல்விக்கூட ஆய்வேடுகளுக்கு இதுபோன்ற கட்டுரைகள் பொருந்தும்.  ஆனால், பொது வாசிப்புக்கு இது அன்னிய தன்மையையும் பாடநூல் கட்டுரை போன்ற மனப்பதிவையும் தருகின்றது. மேலும் அபிராமி கணேசன் கட்டுரைகளில் தொடர்புறுத்தல் முறையில் வேறு நூல்களில் எழுதப்பட்ட குறிப்புகளையும் பிணைத்துக் கொண்டு எழுதுவது சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. எடுத்துக்காட்டாக தியோடர் பாஸ்கரின் சூழியில் கட்டுரைகளை ஒரு மேற்கோளாகச் சொல்லலாம். ஒரு பறவையையோ அல்லது விலங்கையோ பற்றி எழுதும் போது செறிவான அறிவியல் தகவல்களுடன், மரபிலக்கிய மேற்கோள்கள், நேரடி அனுபவங்கள் என ஒன்றோடு ஒன்று சேர்ந்தே வரும் வகையில் தியோடர் பாஸ்கர் எழுதும் கட்டுரைகளை மிகச்சிறந்த முன்மாதிரியாக குறிப்பிடலாம்.

அபிராமி கணேசன் தன் எழுத்துப் பயணத்தின் தொடக்கத்தின் இருப்பவர். அதோடு அவர் சலிப்பறியா உழைப்பாளி.  கடின முயற்சிகளின் வழி தன்னை வளர்த்துக் கொள்ள தயங்காதவர். எழுத்துப்பணிகளுக்கு வெளியிலும் அறிவுச்சமூகத்துக்குத் தேவையான பல செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் 1999 முதல் 2020  வரை மேற்கொள்ளப்பட்ட தமிழியல் ஆய்வுகளை சஜெச்ட் பேஸ் அனலீஸில் முறையில் ஆய்வு செய்து தொகுத்துள்ளார். மலாயா பல்கலைக்கழக NLFCS தமிழ் நூலக உருவாக்கத்திலும் அவர் பெரும் பங்காற்றியுருக்கிறார். மேலும் மலாயா பல்கலைக்கழக நூலகர் விஜயலெச்சுமி முயற்சியில் வெளியிடப்படும் ஒலிப்பேழை கதை வாசிப்பு யூடியூப் சேனலிலும் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்.    கார்டூனீஸ்ட் ஷூனார் சொல்வது போல… ‘விமர்சனம் செய்வது என்பது ஒரு செயற்பாடல்ல, மாறாக அது ஒரு பொறுப்பு’ என்ற தெளிவோடு பொறுப்புணர்ந்து எழுதுபவர் அபிராமி கணேசன்.. அவர்  மலேசியாவில் மட்டுமின்றி தமிழறிந்த அனைவராலும் அறியப்படவேண்டும். அதற்கான எல்லா தகுதிகளும் அவரிடம் உண்டு. 

வல்லினம் இளம் படைப்பாளி விருதுபெரும் அபிராமி கணேசனுக்கு என் வாழ்த்துகள்.  நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...