யோக முத்ரா

காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி யோகா மெத்தையை (Yoga Mat) எடுத்துக் கொண்டு வீட்டின் பால்கனியைத் திறந்தேன். காலை பனியைப் பார்த்து அதிக நாளாகிவிட்டது. பனி எங்கும் படர்ந்திருந்தது. பனியைப் பார்த்ததும் மனதில் ஓர் அமைதி பிறந்தது. அது யோகா செய்வதற்கான மனநிலை. உடனே வாகனத்தை நோக்கி நடந்தேன். என் வாகனம் முழுக்க பனித்துளிகளால் ஈரமாக இருந்தது. பனித்துளிகளைப் பார்த்தாலே சிறுவயதிலிருந்தே ஏதேனும் பெயரை எழுதி அல்லது படம் வரைவது வழக்கம். அப்படி எழுதும்போதெல்லாம், புதிய பேனா வாங்கி எழுதும் முதல் வார்த்தைப் போல் உற்சாகம் பிறக்கும். அன்று பனித்துளிகள் மேல் எழுதிய வார்த்தை ‘யோகா’. யோகா மனதில் மட்டுமில்லாமல் சிந்தனையிலும் பதிய வாகனம் முழுக்க எழுதினேன். பனிச் சூழ்ந்திருந்த வெளியில் வாகனத்தில் நுழைவது ஐஸ்பெட்டிக்குள் நுழைவது போல் ஜில்லென்று இருந்தது.

வாகனத்தின் உட்புறத்திலும் குளிர் சூழ்ந்திருக்கும். எஞ்சினை முடுக்கினால் வானகம் உஷ்ணமாகி பனி விலகிவிடும். ஆக, இயந்திரத்தைத் தட்டாமல், சிறிது நேரம் குளிரை உள்வாங்கி கொண்டிருந்தேன். பனித்துளிகளின் மேல் எழுதிய வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. வாகனத்தை உடனே திடலுக்குச் செலுத்தினேன். வழியில் நிறைய புதிய முகங்களுடன் காட்சியளிக்கும் தானா ராத்தா கடைவீதி வெறிச்சோடிப் போயிருந்தது. எப்பொழுதும் சுற்றுப் பயணிகளின் கூட்டமும், சத்தமும் சூழ்ந்திருக்கும் வீதி அது. ஏதோ 30 வருடங்களுக்கு முன் அமைதியான சூழ்நிலையில் உள்ளூர்வாசிகள் மட்டும் இருந்த கடைவீதிகள் போல் காட்சியளித்தது. எங்கள் ஊருக்குள் புதியதாக யாராவது வந்தால் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். ஆனால் இப்போதெல்லாம் சுற்றுப் பயணிகள் கூட்டத்தில் உள்ளூர்வாசிகளை அடையாளம் காண்பது பெரும்பாடு.

கேமரன் மலையில் இருக்கும் திடல்களில் அதுதான் பெரியது. மாவட்ட ரீதியான போட்டிகள் அனைத்தும் இங்குத்தான் நடைபெறும். நான் நடக்க, சைக்கிள் ஓட்ட, பூப்பந்து விளையாட, யோகா செய்ய, நண்பர்களுடன் விளையாட, பெண் சாரண இயக்கத்தில் அணிவகுப்புச் செய்ய, இப்படி எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த திடல் அது. என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடம் இது. என்னுடைய நிறைய வெற்றிகள் பல தோல்விகளைப் பார்த்த இடம். திடலுக்குப் பக்கத்திலேயே நான் படித்த தமிழ்ப்பள்ளியும் இடைநிலைப்பள்ளியும் அமைந்திருக்கும். இந்தத் திடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. திடலுக்கு அப்பால் மலை மீது சுப்பிரமணிய ஆலயம் இருக்கும். கோயில் மணியோசைத் திடல் வரைக்கும் கேட்கும். திடல், பள்ளி மற்றும் சுப்பிரமணிய ஆலயம் இவை மூன்றும்தான் பதினேழு வயது வரை என்னுடைய உலகமாக இருந்தது. திடலுக்குச் சென்றாலே ஆயிரம் நினைவுகளை மீட்டெடுக்க முடியும்.

வாகனத்தின் கடிகாரம் சரியாகக் காலை மணி 6.45யைக் காட்டியது. திடலில் முழுக்க பனிச் சூழ்ந்திருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு என் மனதின் அமைதியை என் கண்களின் அசைவின் வழி உணர்ந்தேன். கண்கள் இமைப்பதைக்கூட மறந்திருந்தேன். மனதிலிருந்த எல்லா பாரங்களும் குறைந்து முகத்தில் சிறு புன்னகையை வர வைத்தது. சிந்தனையில் நிறைய ராகங்களும் பாடல்களும் வந்து போயின. வாகனத்திலிருந்து கீழே இறங்கி, கரிவளியை வாய் வழியாக விட்டேன். அது நீராவியாக வெளியேருவதை வாகனத்தின் கண்ணாடியில் பார்க்க முடிந்தது. என் உடலைவிட வெளி காற்றுக் குளிர்ச்சியாக இருந்தது. கரிவளி நீராவியாக மாறி வெளியேருவதைப் பார்க்க, பலமுறை மூச்சை இழுத்து வாய் வழியாக விட்டேன். வாகனத்திலிருந்து இறங்கி, சூரியன் உதிக்கும் திசையை நோக்கி யோகா மெத்தையை (Yoga Mat) விரித்தேன். மூச்சுப் பயிற்சி செய்ய வஜ்ராசனாவில் அமர்ந்தேன். சுமார் 5,600 square feet கொண்ட திடலில் அப்பொதெல்லாம் நிற்க இடம் இருக்காது. இன்று நான் மட்டும் திடலில் இருந்தது மன அமைதியைக் கொடுத்தாலும், இந்த நிலை நீடித்தால் என்ன நேரும் என பதற்றம் பற்றியது.

மார்ச் 18, 2020இல் மலேசியாவில் முதன் முறையாக கோவிட்-19 தொற்றின் காரணமாக ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தபோது பலரும் செய்வதறியாது வீட்டில் முடங்கி இருந்தனர். ஆனால் எனக்கு மட்டும் ஊரடங்குச் சட்டம் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. 7 வருடங்கள் கழித்து, 5 நாட்களுக்கு மேல் அப்பாவின் வீட்டில் தங்கும் வாய்ப்புக் கிட்டியது. வாய்ப்பு என்று சொல்லவதை விட வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போதெல்லாம் கேமரன் மலையில் தொற்றின் பரவல் முற்றிலும் இல்லை. ஊரடங்கு மூன்று மாதங்களாவது நீடிக்கும். கேமரன் மலையிலேயே இருப்பது நல்லது என மருத்துவராகப் பணிபுரியும் தோழியிடமிருந்து குறுந்தகவல் வந்தது. தலைமையாசிரியரிடம் பேசி அனுமதி பெற்றுவிட்டேன். மேலும், இணைய வழி கற்பித்தலை எங்கு இருந்தாலும் செய்யலாம் எனும் தகவலையும் அப்பாவிடம் பகிர்ந்து கொண்டேன்.

 அப்பாவின் அனுமதியுடன் அன்று அறைக்குள் சென்றேன். அம்மா மறைவுக்குப் பிறகு இதுவரை  யாரும் அங்கிருக்கும் ரேடியோவில் கேசட்டுகளைப் போட்டுக் கேட்டதில்லை. இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தால் அதற்கு அவசியமும் இல்லை. வழக்கம் போல கேசட்களைச் சரி செய்து அடுக்கி வைத்தேன். அதில் A musical rendition எனும் பாட்டு கேசட் ஒன்று தேன்பட்டது. அது சத்குரு ஜக்கி வசுதேவ் இயற்றும் Sound of Isha-வின் உடையது. அம்மாவின் சங்கீத கேசட் சேகரிப்பில் இது எப்படி வந்தது என அப்பாவிடம் கேட்டபோது, அதையெல்லாம் கலைக்காதே எனச் சொல்லி போர்வையைப் போத்தி திரும்பி படுத்தார். கேசட்டை உடனடியாக எடுத்து, ரேடியோவில் போட்டேன். ரேடியோ வேலை செய்தது.

‘நான் தூங்கனும், நாளை கேளு’ என அப்பா சொல்லி கம்பளியைச் சரி செய்தார்.  காதில் எதையும் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘அம்மாவும் இப்படித்தான், புடிச்சப் பாட்ட பக்கத்தில் ஒரு ஆளு படுத்திருக்காங்கனுக்கூட பாக்காமல், ரேடியோவின் சத்தத்தைக் கூட்டிக் கேப்பா, நாளடைவில் அவ போடும் எல்லாப் பாட்டும் எனக்குத் தாலாட்டாக மாறியது. இப்ப தாலாட்டும் இல்ல, தூக்கமும் இல்ல’ என அப்பாவின் புலம்பல் கேட்டது.

‘கொஞ்ச நேரம் அப்பா…ஐந்து நிமிடம்… இந்த மந்திரம் ஆத்மா வரைக்கும் போகுது’, எனச் சொன்னதும், குளிரால் காது வரைக்கும் கம்பளியைப் போர்த்திக்கொண்ட அப்பா, கம்பளியை விளக்கி, “அப்படி என்ன பாட்டு?” எனக் கேட்டார்.

சத்தம் போடாதீர்கள் எனச் செய்கையைக் காட்டிக் கொண்டே ரேடியோவின் ரிவைண்ட் விசையைத் தட்டினேன். அப்பாவும் யோக சூத்திராவைக் கேட்க தயாராக இருந்தார்.

சத்குரு ஜக்கியின் குரல் மீண்டும் ஏதோ செய்தது. இப்பொழுது இசைக்குக் கவனம் கொடுக்காமல், அவர் என்ன சொல்கிறார் எனக் கூர்மையாகக் கேட்க ஆரம்பித்தேன்.

சத்குரு ஜக்கி: உலகில் எவ்வளவோ விடயங்கள் உள்ளன, எவ்வளவோ செயல்களை ஒரு மனிதன் செய்யலாம், ஆனால் ஏன் யோகாவைச் செய்ய வேண்டும்?

நம்மில் சிலர் பாடல் பாடுகிறோம், நடனம் ஆடுகிறோம், நூல் எழுதுகிறோம். நாம் செய்யும் அனைத்தும் சொல்லும் அனைத்தும், நமது மன வெளிப்பாடாக அமைகின்றது. இவை அனைத்தும் நாம் யாரென்ற அடையாளத்தைக் காட்டுகின்றது. ஆனால், யோக எனப்படுவது இதற்கு அப்பாற்பட்டதாகும். யோகா என்பது மன வெளிப்பாடு அல்ல. அது ஒரு வழிமுறை. அது ஓர் அர்த்தமுள்ள ஒன்றாகும். யோக என்பது ஒரு வகையான தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமே ஒருவர் ஒருவரின் வாழ்க்கையின் வடிவத்தை மாற்றியமைக்க முடியும். அடிப்படையை மாற்றியமைக்கும் ஆற்றலை யோகா கொண்டுள்ளது.

வாழ்க்கையின் அற்புதமான இந்த யோகா நமது வாழ்க்கையில் பாதியிலிருந்துதான் தொடங்குகின்றது. பணம், வீடு, வாகனம், திருமண வாழ்வு, திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் வாழ்வு போன்ற அனைத்தும் இருந்தால், நாம் வாழ்க்கையில் அனைத்தையும் சாத்தியப்படுத்திவிடலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள், ஒரு கட்டத்தில் இவை அனைத்தும் வாழ்க்கையை மாற்றியமைக்கப்போவதில்லை என உணர்ந்திருப்பர். இத்தருணத்தில்தான் பலர் இச்செயல்கள் அனைத்தும் நாம் யார் என்பதற்கான வெளிப்பாடுகளே தவிர, அவை மாற்றத்திற்கான கருவிகள் அல்ல என்பதனை உணர்வர். நாம் யார் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றல் அடிப்படையிலிலே வெளிக்காட்டப்படுகின்றது. ஆனால், வாழ்வில் மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றால்…இப்பொழுது யோக தேவையாகிறது.

அப்பாவின் முகத்தை ஒரு முறை பார்த்தேன். அப்பாவின் கண்களில் தூக்கம் இல்லை. ரிவைண்ட் விசையை அழுத்தி மீண்டும் கேட்டேன். கேட்டுக் கொண்டே அம்மாவின் படத்தை என்னை அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்ன வாணிமா, என்ன ஆயிடுச்சி, நீ இப்படியெல்லாம் அழ மாட்டியே?” என அப்பா நகர்ந்து என் பக்கம் வந்தார்.

உடனே, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு… “இந்த ஊரடங்குச் சட்டத்தின்போது, வீட்டைச் சுத்தம் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா சுத்தம் செய்ய வேண்டியது வீட்டையல்ல அப்பா, என் உடலையும் மனதையும்”, என அப்பாவிடம் சொன்னேன். அப்பாவின் கண்களும் கலங்கியிருந்தது. அதற்குப் பிறகு அம்மாவின் படத்திற்கு முன் நிற்க முடியவில்லை. உடல் முழுதும் கூசியது.

திடலில் சூரியன் உதிக்கும் திசையை நோக்கி யோகா மெத்தையை விரித்து மூச்சுப் பயிற்சி செய்ய வஜ்ரசனாவைப் போட்டேன். மனதையும் சிந்தனையும் ஒருநிலைப் படுத்த கொஞ்சம் சிரமப்பட்டேன். மனம், சிந்தனை, உடல் இவை அனைத்தும் வெவ்வேறு திசையை நோக்கி பயணிப்பவை. அவற்றை ஒருநிலை படுத்த பயிற்சி வேண்டும். காரணம் இவை ஒவ்வொன்றும் மற்றவையுடன் சார்ந்திருந்தால் மட்டுமே ஒரு செயலில் ஈடுபட முடியும். மனம் சொல்வதை உடல் கேட்க வேண்டும், உடல் சொல்வதைச் சிந்தனை கேட்க வேண்டும். ஆக, உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் தயார்படுத்த வேண்டுமென உணர்ந்து வஜ்ராசனாவில்அமர்ந்தபடி மூச்சுப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். மூச்சை உள்ளிழுக்கும்போது குளிர் காற்று மூச்சிக் குழாய் வரைக்கும் சென்று குளிர் பற்றியது. நுரையீரலிலிருந்து வெளியேறும் காற்றின் உஷ்ணம் மூக்கின் நுனியில் உணர முடிந்தது. 21 முறை மூச்சுப் பயிற்சியைச் செய்து முடித்த பிறகு, கண்களை மெல்ல திறந்தேன். புல்வெளி பனித்துளிகள்.வஜ்ராசனாவிலிருந்து எழுந்து பனித்துளிகளை ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்தேன். இரு கைகளிலும் புல்வெளிலுள்ள பனித்துளிகளைப் பற்றினேன்.  கைகள் பனித்துளிகளால் நனைந்திருந்தது. அவற்றைக் கன்னத்தில் வைத்துக் கொண்டேன். குளிர் கன்னத்தில் பரவியது. சிறுவயதிலிருந்தே இந்தப் பழக்கம் எனக்கு  உண்டு. பனித்துளிகளைக் கன்னத்தில் வைப்பது, தோழிகளின் கன்னத்தில் பூசுவது போன்ற விளையாட்டுகளை மிகவும் சுவாரசியமாக விளையாடுவேன். என் தோழிகளுக்கும் அந்தப் பழக்கம் உண்டு. அப்படி விளையாடிய தருணங்கள் எல்லாம் கண் முன் வந்து போயின. என்னையும் என் தோழிகளையும் வளர்த்த பள்ளியை ஒரு முறை எட்டிப் பார்த்து, பெரும் மூச்சுடன் மீண்டும் யோகா மெத்தையின் மேல் நின்றேன். இப்பொழுது 21 முறை சூரிய நமஸ்காரம் என மனம் சொன்னது. மூளை முடியுமா எனக் கேட்டது. வலிகள் உருவாகும் வரை உடல் எதற்கும் தயாராக இருக்கும். பெரும்பாலும் மனம் சொல்வதைத்தான் மூளை கேட்கும். ஆக, செய்து முடித்தே ஆக வேண்டும் என்று முதலாவது சுற்று சூரிய நமஸ்காரத்தை ஆரம்பித்தேன். யூடியூப்பில் சூரிய நமஸ்காரத்திற்குகான எண்ணிக்கையைக் காட்டும் விடியோ ஒன்றை முடுக்கினேன். யோகாவில் சுவாச முறை மிகவும் முக்கியம். 108 சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு இம்மாதிரியான வீடியோக்கள் உறுதுணையாக இருக்கும். இதனால் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், செய்யும் ஹாசனங்களிலும் சுவாச முறையிலும் கவனம் செலுத்த முடியும். யோகாவை இசையுடன் செய்வது தியானம் போல் இருக்கும். இசையில்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது. என் மனதையும் என் சிந்தனையையும் ஒரு நிலைப்படுத்த எனக்கு இசை வேண்டும். ஆக, Anitha Bokepalli-யின் சேனலைத் தட்டி சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தேன்.

நான்காவது சுற்று சூரிய நமஸ்காரம் செய்யும்போது, முழுமையாக விடிந்திருந்தது. அவ்வளவு பெரிய திடலில் நான் மட்டும் யோகா செய்து கொண்டிருக்கையில், தூரத்தில் ஒருவரின் தலை தென்பட்டது. அது ராமசந்திரன் சாராகத்தான் இருக்க வேண்டும். அவர் வரவை நான் எதிர்ப்பார்த்தேன். ராமா சார் அப்படியே இருக்கிறார். அதே முகம், அதே கம்பீரம், அதே சிரிப்பு, அதே உற்சாகத்துடன் மெதுவோட்டத்தை ஆரம்பித்தார். சார் என்னைக் கடந்துதான் ஓட வேண்டும் இருந்தாலும் யோகா செய்வதை நிறுத்தவில்லை, ஆனால் என் கண்கள் மட்டும் அவரை நோக்கியே இருந்தது.

‘சார்! எப்படியிருக்கிங்க…?’ எனத் தூரத்தில் ஓடி வரும் சாரை நோக்கி உரக்கக் கத்திக் கேட்டேன்.

‘யாரு…. வாணியா?’ என ராமா சார் கேட்டுக் கொண்டே ஓடிவந்தார். அவர் கண்களில் ஆச்சரியம். 86 கிலோவுக்கு மாறியுள்ள என் உடலைப் பார்த்த ஆச்சரியம் அது.

‘ஆமா சார், நல்ல இருக்கிங்களா?’ எனக் கூறி யோகாவை நிறுத்த முயன்றேன்.

‘நிறுத்தாதே! தொடர்ந்து செய், நானும் ஓடிட்டு வரேன். இப்போதான் ஆரம்பிச்சேன்.” எனச் சொல்லி என்னைக் கடந்து சென்றார்.

ஆரம்பித்ததை எந்த இடையூரையும் காரணம் காட்டி நிறுத்தக் கூடாது என சார் பள்ளி நாட்களில் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சாரைப் பார்த்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

“நல்லது சார்” எனச் சொல்லி ஐந்தாவது சுற்று சூரிய நமஸ்காரத்தைத் தொடர்ந்தேன். லேசாக மூச்சு வாங்கியது. நுரையீரல் வேகமாகத் துடிப்பதை உணர முடிந்தது. அது சூரிய நமஸ்காரத்தாலா அல்லது சாரைப் பார்த்த சந்தோஷத்தாலா எனத் தெரியவில்லை. உடலிலுள்ள தசைகளில் வலியை உணர்ந்தேன். இந்த 7 வருடங்களில் உடலில் எங்கு அதிக கொழுப்புகள் சேர்ந்திருக்கிறது என்று ஐந்தாவது சுற்றிலேயே தெரிய வந்தது. வலிகள் மூளை வரைக்கும் சென்று, போதும் நிறுத்து என கட்டளை இட ஆரம்பித்தது. ஆறாவது சுற்றை ஓய்வெடுத்துச் செய்யலாமா எனத் தோன்றியது. ராமா சார் ஒன்றாவது சுற்றை முடித்து அடுத்த சுற்றை ஆரம்பித்தார். நான் யோகாவை நிறுத்தினால் அவர் பார்த்து விடுவார். அது கொஞ்சம் அவமானத்தைக் கொடுக்கும். ஆகையால், மூளை சொன்னதைக் கேட்காமல், உடலை மனம் சொன்னதற்கேற்ப தள்ளினேன்.

ராமா சார் சிரித்துக் கொண்டே, “இது எத்தனையாவது முறை” எனக் கேட்டார்.

“ஆறாவது சார், இன்னும் பதினைந்து இருக்கு,” எனச் சொன்னேன்.

சார், நான் கஷ்டப்பட்டுச் செய்வதை உணர்ந்திருப்பார். எத்தனை பேருக்கு யோகா சொல்லிக் கொடுத்திருப்பார். என்னுடைய உடல் அசைவிலேயே அவருக்குத் தெரிந்திருக்கும்.  கொஞ்சம் வெட்கமாக இருந்தது, ஆனால் இப்போவாவது செய்கிறேனே என மனம் ஆறுதல் படுத்தியது. ஏதோ ஒரு வழியாக 21 முறை சூரிய நமஸ்காரம் செய்து முடித்தேன். உடல் முழுக்க வலியிருந்தது ஆனால், திட்டமிட்டப்படி 21 முறை செய்து முடித்தேன் எனத் திருப்தி இருந்தது. ராமா சார் ஏறக்குறைய 10 வட்டமாவது மெதுவோட்டத்தில் அடித்திருக்க வேண்டும். கொஞ்சம் நேரம் சவாசனத்தில் இருந்து, எழுந்து உட்காந்திருந்தேன். கண்களை மூடிக்கொண்டேன்.

நான் சிறுமியாக இருந்தபோது சனி ஞாயிறுகளில் சமய வகுப்புகளைத் தொண்டாக நடத்தி வருவார் ராமா சார். மாதத்தில் முதல் வாரம் யோகாவை அறிமுக செய்வார். அப்படிச் செய்யும் போதெல்லாம். என்னைக் கொஞ்சம் கூடுதலாக கவனிப்பார். என்னால் யோகாகச் சிறப்பாகச் செய்ய முடியும் என பலமுறை கூறியுள்ளார்.

“பரதநாட்டியம் ஆடுபவர்களுக்கு யோகா சுலபம். ஆனால், நீ பரதநாட்டியத்தால் யோகாவைச் செய்யவில்லை. உன் உடல் யோகாவிற்கானது. நீ யோகா செய்யும்போது அதன் அதிர்வை என்னால் உணர முடிகிறது. யோகாவை விட்டு விடாதே,” என யோகாவை முறையாகவும் கற்று நன்கு பயிற்சியும் எடுத்த ராமா சார் சொல்வதை வெறும் பாராட்டாகத்தான் அந்த வயதில் புரிந்து கொண்டேன்.

எனக்கு இன்னும் நினைவு இருந்தது. அது 2001. ஈப்போவில் யோகா முகாமில் நான் யோகாவிற்கும் பரதநாட்டியத்திற்கும் உள்ள ஒற்றுமைகளைச் சமர்ப்பித்த விதத்தால் அவர் என்னை வெகுவாகப் பாராட்டினார்.  அந்தப் பெண்ணா நான் என ஒரு நிமிடம் யோசித்தேன். நான் பேசிய உரையை ஒரு நிமிடம் யோசித்தேன். அந்த உரை பிசிறில்லாமல் மனதில் மீண்டும் கேட்டது

“நண்பர்களே…யோக முத்ரா என்பது யோகக் கலையில் ஒரு பாகமாகும். முத்ரா என்றாலே இறைவழிபாட்டின்போது விரல்களை ஒரு வகையாக வைத்துக் கொள்ளும் முறையைக் குறிக்கிறது. கை அசைவுகளைத்தான் முத்திரைகள் என நாட்டியத்தில் கூறப்படுகிறது. முத்திரை நாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும். பரதநாட்டியத்தில் அடவு, அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும். கை விரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் பயன்படுத்துவது முத்திரைகள். அனைத்து இந்திய பாரம்பரிய நடனங்களுக்கும் பொதுவான அடிப்படை முத்திரைகள் உண்டு. சில பிரித்தியேக முத்திரைகளைத் தேவதாசிகள் மட்டும் பயன்படுத்தினார்கள். அவர்கள் முதலில் கோயில்களில் கடவுள் மற்றும் தெய்வங்களுக்கு முன்னால் சமர்ப்பித்தார்கள். காலப் போக்கில் அரச சபையிலும் அரசர்களின் பொழுதுபோக்கிற்காகவும் முத்திரைகளைப் பொது நிலையில் உபயோகிக்கும் நிலை வந்தது. அதே முத்திரைகளை யோக முத்ராவிலும் பயன்படுத்துகிறார்கள்.

யோக முத்ராவைப் பற்றி சொல்வதற்கு முன், நம் கை விரல்களைப் பற்றி முதலில் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தகவல் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது.

நமது கை விரல்கள் பஞ்ச பூதங்களைப் பிரதிபலிப்பவை. அதற்குக் காரணம் நம்முடைய ஐந்து விரல்களும் குறிப்பிட்ட சில உடல் உறுப்புகளுடன் தொடர்புடையவை. இருதயம், சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் மூளை போன்றவைக்கும் நம் கை விரல்களுக்கும் நரம்புகளின் மூலம் தொடர்புகள் உள்ளன. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு விரலை மற்ற விரலுடன் சேர்ந்து தொடுவதால் நம் உடலில் சில அதிர்வுகள் உருவாகிறது. அதன் மூலம் நம் உடல் முழுக்க ஆற்றல் பாய்கிறது. இத்தகைய ஆற்றல் இரத்த ஓட்டச் சுழற்சியைச் சிறப்பாக்குகின்றது. மறைமுகமாக நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளையும் உருவாக்குகிறது. சில யோசனைகள், நிகழ்வுகள், செயல்கள் அல்லது உயிரினங்களைத் தொடர்பு கொள்வதற்கு வெவ்வேறு வகையான முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று நாட்டியம் ஆடும் அனைவரும் பஞ்ச பூதங்களைப் பிரதிபலிக்கும் விரல் முத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும்தான் ஆடுகிறார்கள்.

இப்போது, முதல் யோக முத்ராவைப் பார்ப்போம். இதன் பெயர் ஃயான் முத்ரா. இந்த முத்ரா நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் தூக்கமின்மையைத் தடுக்கிறது. நாட்டியத்தில் இந்த முத்திரையை ‘ஹம்சஸ்ய ஹஸ்தா’ என்பார்கள். இதனைப் பார்ப்பதற்கு அன்னம் போல் இருக்கும். நூல் கட்டுதல், தீபம் ஏற்றுதல், முத்துக்களைக் கோர்தல், காதல், திகில் போன்ற சம்பவங்களைக் காட்ட நாட்டியத்தில் இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவார்கள்.

இரண்டாவதாக, வாயு முத்ரா. இது உடலில் உள்ள நீரின் அளவைச் சமன் செய்வதாகவும், வீக்கம் அல்லது தசைகளைச் சுருக்குவதாலும்ஏற்படும் வலியைப் போக்குமாம் இந்த முத்ரா. இது பெண்களுக்கான முத்ரா எனக் கூட சொல்லலாம். காரணம் இந்த முத்ரா அழகை மேம்படுத்தவும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுமாம். இதை பார்ப்பதற்குச் சிவனின் திரிசூலம் போல் இருப்பதால் நாட்டியத்தில் ‘திரிசூல ஹஸ்தா’ என அழைப்பார்கள். சூலத்தைக் காட்டவும் சிவதாண்டவங்களிலும் இந்த முத்திரையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

அடுத்ததாக, பிரித்வி முத்ரா. இந்த முத்ராவைச் செய்தால், பொறுமை அதிகரிக்குமாம். உடலிலுள்ள தசைகளும் எலும்புகளும் வலுவடையச் செய்யும். நாட்டியத்தில் இதனை மயூரா ஹாஸ்தா என்று கூறுவர். மயூரா என்றால் மயில். நாட்டியத்தில் மயிலைக் காட்ட இந்த முத்திரையைத்தான் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் ஜடையைக் கலைத்தல், நெற்றியில் குங்குமத்தைப் பூசுதல், ஆற்றில் உள்ள நீரைச் சிதறுதல் போன்ற சம்பவங்களைக் காட்ட இந்த முத்திரையை நாட்டியத்தில் பயன்படுத்துவார்கள்.

அடுத்த யோக முத்ரா இந்தியர்களுக்கானது, முக்கியமாக மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கானது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் செய்ய வேண்டிய யோக முத்ரா, அபனா முத்ரா. இது நீரிழிவைக் கட்டுப்படுத்தும் முத்ரா மட்டுமில்லை, மலச்சிக்கலையும் குணப்படுத்துமாம். இது சிம்ஹமுகா ஹாஸ்தா என்று நாட்டியத்தில் கூறப்படுகிறது. யானை, மான், முயல் போன்ற மிருகங்களை நாட்டியத்தில் காட்ட இந்த முத்திரையைப் பயன்படுத்துவார்கள்.

இறுதியாக, பிராண முத்ரா. இந்த முத்ரா வைட்டமின் குறைபாடு மற்றும் சோர்வை நீக்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் கண்களின் சக்தியை மேம்படுத்துகிறது. கண் தொடர்பான நோய்களையும் குறைக்கிறது. இதனைக் கத்தரிமுக ஹாஸ்தா என நாட்டியத்தில் கூறுவர். இறப்பு, பிரிவு, சண்டை போன்ற சம்பவங்களைக் காட்ட இந்த முத்திரையை நாட்டியத்தில் பயன்படுத்துவார்கள். அவ்வளவுதான், யோக முத்ராவின் முக்கிய ஐந்து முத்ராக்களையும் பார்த்துவிட்டோம்”

எனக் கூறி ராமா சாரைப் பார்த்துத் தலையை ஆட்டினேன். நண்பர்களின் கரவோசையைவிட ராமா சாரின் கனிந்த முகம் மகிழ்ச்சியூட்டியது.

கண்களைத் திறந்தபோது ராமா சார் காலணிகளைக் கழற்றி புல்வேளியில் வஜ்ராசனாவில் உட்கார்ந்து யோக முத்ரா செய்யவதற்கு முன் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சார், சிறிய சிரிப்புடன் கனிவாக என்னைப் பார்த்தார்.

நான் முத்ராக்களைச் செய்யும் அத்தனை விரல்களாலும் சூரியனில் மறைந்துவிட்ட பனித்துளிகளைத் தேடிக் கொண்டிருந்தேன்.

1 comment for “யோக முத்ரா

  1. Aravin Kumar
    March 10, 2022 at 11:03 am

    புனைவுக்கே உரிய அனுபவ விவரிப்பு சிறப்பாக இருந்தது. பனி கடந்த காலத்தை உணர்த்தும் நினைவேக்கத்தின் படிமமாக மாறுகிறது
    பாடல் தாலாட்டாக மாறும் விந்தையும் அனுபவமும் அன்பும் ஆகிய இரண்டின் சேர்மானம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...