இலக்கியத்திலும் திரைப்படத்திலும் பால் புதுமையினர், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடிகள் என மையச் சமூகத்துக்கு வெளியே அதிகமும் அறியப்படாமல் இருக்கும் விளிம்பு நிலையினரை முன்வைத்துப் புனையப்படும் படைப்புகள், தாம் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்காகவே சிறந்த படைப்பு எனும் தகுதியைப் பெறுவதைக் காண முடிகிறது. ஆனால், படைப்பின் கலை ரீதியிலான வெற்றி என்பது அந்தப் பிரதி முன்வைக்கும் களத்தையும் பேசு பொருளையும் நம்பகமான முறையில் சித்தரித்து மனித ஆதாரவுணர்ச்சிகளைச் சென்று தொடும்போதே நிகழ்கிறது. எழுத்தாளர் ம.நவீனின் இரண்டாவது நாவலான ‘சிகண்டி’ மலேசியத் திருநங்கைகள் குறித்து அணுகியிருக்கும் முறையை இரண்டாவது வகையிலே அளவிட முடிகிறது.
செல்வ வளமும் செழிப்பும் மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தப்படும் கோலாலம்பூர் போன்ற பெருநகரங்களுக்கு அடியில், குற்றச் சம்பவங்கள், குண்டர் கும்பல், வன்முறை என இயங்கும் இருள் உலகான ‘செளவாட்’ எனும் நகரத்தில் அடைக்கலமாகி இருக்கும் தீபனிலிருந்து சிகண்டி நாவலின் கதை தொடங்குகிறது.
கெடா மாநிலத்தில் இருக்கும் லுனாஸ் சிற்றூரில் பிறந்து வறுமையின் காரணமாய் நண்பர்களின் கேலிகளுக்கும் தாழ்வுணர்வால் உந்தப்பட்டும் தீபனின் பால்யம் கழிகிறது. தாத்தாவின் பழைய சைக்கிளைப் பள்ளிக்கு எடுத்துச் செல்வது, குடும்ப வன்முறைக்கு இடையில் வளர்வது ஆகிய இக்கட்டான சூழலிலும் பால்யம் எனும் பரவசத்தைத் தக்க வைக்க முனைகிறான் தீபன். வறுமையும் குடும்பச் சூழலும் சேர்ந்து பால்யத்தின் ஒட்டை உடைக்கிறது. அவன் தன் அப்பாவைக் கைநீட்டி அறையும் கணம்தான் பால்யம் அவனை விட்டு விலகும் முதல் தருணம்.
காமம் உடலுக்குள் ஏற்படுத்தும் அதீத கிளர்ச்சியினால் உடற்குறையுடைய தனபாலனின் தங்கை மீது நிகழ்த்துகின்ற வன்புணர்வு அடியாழத்தில் குற்றவுணர்வாகத் தேங்கிவிடுகிறது. தன்னுள் அந்தரங்கமாக உள்ள இருளை மறைக்க, புறத்தில் சூழ்ந்த இருளுலகை நாடுகிறான். உடலாற்றல் அனைத்தையும் காமம் வழியே நிகழ்த்தத் துடிக்கும் வேட்கையினால் செளவாட் நகர பிலிப்பினோ விலைமாதிடம் கொள்ளும் வன்புணர்வு அருவருப்பானதாக அமைகின்றது. அவை இரண்டும் சேர்ந்து தீபனின் ஆண்மையை வடியச் செய்து விடுகிறது. தன் ஆண்மையை மீட்டெடுக்க சரா என்ற செல்வாக்குள்ள திருநங்கையை பகடையாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அதன் வழி, சிகண்டியின் முற்பகுதி வாழ்வில் நிகழ்ந்துவிடும் அநீதியொன்றுக்கான அறியாக்கண்ணியாகவும் தீபன் அமைந்துவிடுகிறான். அவனைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாய வலையில் பிணைந்த தீபனின் அக,புற உலகைச் சித்தரிப்பாக நாவல் அனைத்து திசையிலும் விரிகிறது.
நாவலில் வரும் தீபனின் மாமா ரய்லியும் நாவலில் முக்கிய பாத்திரம்தான். குடும்பச் சூழலும் மாறி வரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரத்தாலும் பொருளியல் சூழலால் நெருக்குதலும் சேர்ந்து உள்ளொடுங்கி போயிருக்கிறார் மாமா. அவரால் தன் தேவைகளை நிறைவேற்ற முடியாது என அறியும் தீபன், கோலாலம்பூரில் செளவாட் நகரில் திருட்டுப் பொருட்கள், போலிப் பொருட்கள் ஆகியவை விற்கும் காராட் இரவுச் சந்தைக்குச் செல்கின்றான். காராட் சந்தையில் அடியாளாக இருக்கும் காசியின் அறிமுகம் கிடைக்கிறது. சந்தையின் முதலாளியான ஷாவ் எனும் சீன முதலாளியால் விற்பனை உதவியாளனாகிறான். சொற்ப வருமானத்துக்காகத் தொண்டை நரம்புகள் புடைக்கக் கூவி கூவி பொருட்களை விற்கின்றான். பின்னர் ஷாவ் நடத்தும் விபச்சார விடுதியைக் கண்காணிப்பவனாகிறான். காசி அறிமுகம் செய்யும் போதை மருந்து, மதுபான விடுதிகள் உலகம் என செளவாட் நகரில் இயங்கும் இருள் உலகம் தீபனுக்கு முடிவில்லாத பரவசத்தை அளிக்கத் தொடங்குகிறது.
செளவாட் நகரின் புற மாற்றங்களுக்கு இடையிலும் அந்த நிலத்தில் ஆழக் காலூன்றியவளாகத் திருநங்கையான ஈபு எனும் சிகண்டி அமைகிறாள். மலேசியா முழுவதிலுமிருந்து சமூகத்தாலும் குடும்பத்தாலும் புறக்கணிக்கப்பட்டுச் செளவாட் நகருக்கு வரும் திருநங்கைகளுக்கு உறவுக்கொடி தந்து ஆதரவளிக்கின்றாள். ஈபு செளவாட் நகரின் தைப் சாலையில் நாசி லெமாக் கடையும் மறைவாகப் போதைப்பொருள் வணிகமும் செய்து வருகிறாள். சிகண்டியின் அரவணைப்பில் மகளென்னும் உறவுக்கொடியில் இருக்கும் சராவைத் தீபன் காதலிக்கத் தொடங்குகிறான். பெண்ணுடலுக்கான மென்மையும் நளினமும் இயல்பிலே அமைந்த சராவைத் திருநங்கையென அறிந்த மாத்திரத்தில் வெறுக்கத் தொடங்குகிறான். சராவின் மூலமாக ஈபு செய்து வரும் போதை வணிகத்தில் ஓர் அங்கமாகிறான். அவள் மூலம் கிடைத்து வரும் பணத்துக்காகவும் பொருட்களுக்காவும் காதல் நாடகத்தைத் தொடர்கிறான்.
//’சிறிய சிக்கல்கள் மொத்த பிரபஞ்சத்தின் முன் அர்த்தமற்றவை; ஆனால், திருத்தமற்ற இடைவெளிகளை நிரப்ப இப்பிரபஞ்சம் சிறிய சிக்கல்களையே கருவிகளாகக் கொள்கின்றன’’// எனப் புத்தத் துறவி தீபனிடம் சொல்லும் வரிகளே நாவலின் தத்துவமாக விரிகிறது. இதனுடன் சிகண்டி நாவல் எதைப் பிரபஞ்சத்தின் சமநிலையாக முன்வைக்கிறது என்ற கேள்வியும் உடன் எழுகிறது. பிரபஞ்சத்தின் சமநிலையாக அறம் திகழ்வதையே நாவல் முன்வைக்கிறது. எங்கு அறம் தப்பியது என்பதையே நாவலின் முதல் பாகம் வலுவாகச் சொல்கிறது. அதன் தொடர்ச்சிகள் கனவு காட்சிகளாக நாவல் முழுவதும் விரிகின்றன.
நாவலில் வரும் கனவு காட்சிகள் ஒவ்வொன்றும் உக்கிரமானவை. அதில், எதையும் உடல் வலுவால் சாத்தியமாக்கிக் கொள்ளும் திமிருடன் வாழ்கிறான் வீரன். மாரிமுத்துவின் முறைப்பெண் புதம்மாவை வன்புணர்ந்து திருமணமும் செய்து கொள்கின்றான். ஓவியனான மாரிமுத்துவின் கையையும் உடைத்து விடுகின்றான். புதம்மா வயிற்றில் வளரும் மாரிமுத்துவின் குழந்தையையும் வீரன் பறித்து விடுகின்றான். அதே சமயம், சிகண்டியின் அக்காவைப் புணர முயலுகின்றான். வலிய உயிரின் தாக்குதலிலிருந்து தப்ப, எளிய உயிர்கள் தங்கள் இயல்பாற்றலை மிஞ்சி கொள்ளும் கண நேரப் பாய்ச்சலாகச் சிகண்டியின் மாமா குட்டப்பன் வீரனை அடித்து வீழ்த்துகின்றான். அந்த வஞ்சினத்தாலே குட்டப்பனையும் அவன் மனைவியையும் (சிகண்டியின் அக்காள்) வீரன் கொல்கின்றான். வீரனின் நெறியே தீபனையும் வழிநடத்துகின்றது. பாலியல் இச்சை வெறியாகத் திரண்டு இருவரை வன்புணரும்போது தீபன் தன் தாத்தா வீரனைப் போலவே செயல்படுகிறான். மாரிமுத்துவின் மகனான தீபனின் மாமாவும் நிகழ்காலத்தில் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறான். இவையனைத்தும் கூர் கொள்ளும் புள்ளியாக அன்னையின் ரூபமாக இருக்கும் சராவின் கொலை அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு சம்பவமும் மையமாகத் திரண்டு தீபனில் நிலைகொள்கிறது. இவ்வாறாக அறம் என்பது நுண் மையங்களாக நிலைகொண்டு ஒரு முழுமைப்புள்ளியில் தன்னைத்தானே நிகர் செய்து கொள்கின்றது. அந்த அறத்தின் கதையாடலாகவே சிகண்டி நாவல் அமைகிறது.
இந்த நாவலில் செளவாட் நகரமும் ஒரு பாத்திரமாக நாவல் முழுதும் பயணிக்கிறது. மார்ட்டின் தோட்டமாக இருந்து, பின்னர் ஈயலம்பத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பாகவும் பின் கடைவரிசை வீடுகளாக நவீனத் தோற்றம் கொள்வது வரையிலான ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அடைந்த புற மாற்றங்களும் நாவலில் காட்சியாகியுள்ளது. அந்த நிலம் அடைகின்ற தோற்றத்திற்கேற்ப மனிதர்களும் மாறிவிடுகின்றனர். மார்ட்டின் தோட்டத்தின் மாறுதல் பகுச்சரா மாதாவின் வருகைக்குப் பின்னரே ஏற்படுகிறது. சிகண்டி தனக்கான தெய்வமாகப் பகுச்சராவைத் தோட்ட மதுரைவீரன் ஆலயத்தில் எழுந்தருளச் செய்கிறாள். தோட்ட மக்கள் பகுச்சராவை அகற்ற எண்ணியதிலிருந்து தோட்டம் சிதையத் தொடங்குகிறது. பகுச்சராவின் ரூபமாகவே தோற்றமளிக்கும் சிகண்டி, அன்னை எழுந்தருளியுள்ள நிலத்தையே காக்க எண்ணுகின்றாள். பின்னாளில் குற்றச் சம்பவங்களும் வன்முறையும் மிகுந்த செளவாட் நகராகத் தோட்டம் மாறியப் பின்னரும் பகுச்சரா எழுந்திருக்கும் சுவரை அங்கிருக்கும் அறையொன்றில் வைத்திருக்கின்றாள்.
உலகியலோடு மனிதர்களின் பிணைப்பு என்பது அவரவரின் பால் அடையாளம் சார்ந்தே முடிவு செய்யப்படுகிறது. குடும்பக் கடமைகள் தொடங்கி சமூகத்தில் இடம், தொழில் எனப் பாலடையாளமே அனைத்தும் தீர்மானிக்கிறது. உலகியலில் விலகி ஆன்மீகம், கலை ஆகியவற்றிலிருந்து ஈடுபடுகின்றவர்களுக்கே பாலடையாளத்தைத் துறத்தலென்பது சாத்தியமாகிறது. சிகண்டி நாவலில் வரும் பாத்திரங்கள் தங்கள் பாலடையாளத்தை அல்லது பாலியல் ஆற்றலைத் தொலைக்கின்ற போதும் என்னவாக மாறுகின்றனர் என முன்வைக்கும் உளவியல் முக்கியமானது. தன்னைப் பெண்ணாக உணரும்போதே அன்னையாகத் தன்னை முன்னிறுத்தவே சிகண்டி விரும்புகின்றாள். உறவுகளை இழக்கின்றபோதும் வாழ்விடம் பறிக்கப்படுகின்றபோதும் கருணையான அன்னையாக இருக்கிறாள். தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்குச் சிக்கல் நிகழும்போது தண்டிக்கும் வன்மையான அன்னையாக மாறுகின்றாள். அவளது வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பறிக்க எண்ணும் வைட் கோப்ராவைக் கொடுரமாகக் கொல்கிறாள்.
இதற்கு நேர் எதிராகத் தன் உடல் சென்று தொடக் கூடிய பாலியல் இன்பத்தை நுகர்ந்த பின்னர் தீபனில் இருக்கும் பால்யத்தின் பரவசம் அகன்றுவிடுகிறது. அதன் பின்னால் ஆண் என்னும் அடையாளமே அவனுக்குப் போதுமானதாகிறது. ஆணாகப் பாலியல் இன்பத்தை அடைய முடியாதபோது தன் இருப்பின் மீதே ஐயமெழுகிறது. ஆண்மையைத் தொலைத்து விடும்போது ஏற்படும் வெறுமையைக் குரூரத்தாலும் வன்முறையாலும் இட்டு நிரப்புகிறான் தீபன். ஆண்மையை மீட்க செய்யும் வழிமுறைகள் ஒவ்வொன்றும் உடலில் தீவிரத்தை மட்டுமே ஏற்படுத்தி ஓய்கின்றன. அவனது ஆண்மையை ஆழ்மனதின் குற்றவுணர்வே கரந்துவிடுகிறது. உடலில் ஏற்படும் தீவிரமே பூனையின் மென்மையான தோலை வருடிக் கொல்லவும் குரங்கின் பார்வையில் வெளிப்படும் இறைஞ்சுதலைத் தாண்டிக் கொல்லவும் செய்கிறது.
உடல் அளவிலும் மனதளவிலும் தங்களைப் பெண்களாகவே வெளிப்படுத்திக் கொள்ளும் திருநங்கைகளுக்குப் பெண் எனும் ஏற்பைச் சமூகம் எளிதில் வழங்குவதில்லை. அவர்களைச் சமூகத்தில் ஓரங்கமாகக் கருதி இயல்பு வாழ்க்கைகுள் அனுமதிக்கவும் மதம், பண்பாடு, பால் அரசியல் என தடைகள் தொடர்கின்றன. இந்தச் சூழலில்தான் திருநங்கையர் மையச் சமூகத்துக்கு வெளியே விபச்சாரம், குற்றச் சம்பவங்கள் ஆகியவற்றில் ஈடுபட நேர்கிறது. இவையே திரைப்படங்கள் போன்ற வெகுஜன ஊடகங்களில் காட்டப்பட்டுத் திருநங்கைகளின் அடையாளமாகப் பொதுப்புத்தியில் பதிவாகியிருக்கிறது. இந்தத் துருவப்படுத்தல்கள் இன்றி, திருநங்கைகளின் அகவுலகை நம்பகமான முறையில் நெருங்க முயன்ற படைப்பாகச் சிகண்டி அமைகிறது. தாய்மையும் கண்டிப்பும் நிறைந்த அன்னைத்தெய்வமாகவே சிகண்டி எனும் ஈபு காட்டப்படுகிறாள். வாழ்விடப் பறிப்பு, தனக்கானத் தெய்வத்தைக் காப்பது எனத் தெய்வச் சாகசங்களுக்குச் சற்றும் குறைவில்லாத வாழ்க்கையைக் கொண்டிருக்கிறாள். இதற்கு மறுமுனையில் தன் பரதநாட்டியத்தின் வாயிலாகப் பால் அடையாளங்கள் துறந்து கடவுளாகவும் மாறி அதி உன்னத நிலையை உணரும் சரா நிகழ் உலகின் நெருக்கடியில் தன் உடலில் பிணைந்திருக்கும் ஆண் உறுப்பை நெருடலாக எண்ணுகிறாள். இப்படி மனதளவிலும் தான் சார்ந்திருக்கும் கலையாலும் பெண்ணாகத் தன்னை உணரும் திருநங்கையர், பாலுறுப்புகளே பாலடையாளத்தைத் தீர்மானிப்பவையாகத் தொடரும் சமூகச் சூழலில் எதிர்கொள்ளும் அக, புற நெருக்கடிகளை நாவல் தொடுகிறது. மேலும், தேவையற்றவை என வீசப்படும் பொருட்களையெல்லாம் கைவினைப்பொருட்களாகச் சரா மாற்றுகிறாள் என்ற சித்திரிப்பு அவள் அகத்தை நெருங்கச் செய்கிறது. அவளின் பால் அடையாளத் திரிபால் வேண்டாம் எனப் பெற்றோரால் ஒதுக்கப்பட்டவுடன் நடனம், அன்பு என்றே தன் இருப்பையும் பொருள் மிக்கதாக்குகிறாள்.
பெண்ணாக உணர்ந்து கொண்ட தன்னைப் பெற்றோர்கள் ஒதுக்கியவுடன் ஈபுவுடன் உடனிருக்கும் நிஷாவும் சராவைத் தன் மகளெனவே எண்ணி அன்பு செலுத்துகிறார்கள். வங்கியில் கடன் பெற்றுக் காதலனிடம் பறிக்கொடுத்துவிட்ட பின்னரும் நிஷா இன்னொரு காதலனைத் தேடிக் கொள்கிறாள். அவளிடம் கொடுப்பதற்கு அளவில்லாத அன்பும் தாய்மையும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்க காதல், அன்பு எனச் சமூகம் அதனைச் சாமர்த்தியமான பொய்களால் சுரண்டுகிறது. அந்தச் சுரண்டலையும் தாண்டி, போலியான தற்காலிக உறவுகளெனத் தெரிந்தும் அதற்குத் தன்னைத் தின்னக் கொடுக்கிறார்கள். தீபனின் சுயநலம் தெரிந்தபோதும் திருமணம் வேண்டாம் என்று மறுதலித்து அவன் பிணைந்திருக்கும் இடரிலிருந்து சரா விடுவிக்க எண்ணுகிறாள். மலேசியத் திருநங்கைகளின் அறியப்படாத வாழ்வெளியைத் தன் புனைவுக்குள் ஆசிரியர் சாத்தியமாக்கியிருக்கிறார். அவர்களுக்கான தெய்வமாகப் பகுச்சரா மாதாவின் முழுமையான அம்சமும் பொருந்திய காவல் தெய்வமாக ஈபு விளங்குகிறாள். தானாகப் பாலுறுப்பை அகற்றிக்கொண்டு குழிக்குள் ஒரு நாளிரவு இருக்கும் தாயம்மா கை எனும் சடங்கைச் செய்து உயிருடன் திரும்புகிறாள். இந்திய தொல்மரபில் தங்கள் புனிதத்தன்மையை மெய்பிக்க உயிருக்கு ஆபத்தாகக் கூடிய பல சடங்குகளைச் செய்யும் நாட்டார் தெய்வ மரபொன்றின் நீட்சியாகவே தாயம்மா கை எனும் சடங்கைக் காண முடிகின்றது.
சிகண்டி காட்டும் மற்றொரு முக்கிய உலகம் குற்றச் செயல்கள் நிகழும் உலகம். வானுயர்ந்த கட்டிடங்கள், செல்வச்செழிப்பு மிகுந்த நகரத்தில் சூட்சும வெளியாக மறைந்திருக்கும் இருள் உலகைக் காண தனித்த பார்வைக் கோணத்தை முன்வைக்க வேண்டியதாகிறது. காட்சி ஊடகப் பாதிப்பு மிகுந்த சூழலில் திரைப்படங்களும் தொடர்களும் ரசிகர்களை விருவிருப்பில் ஆழ்த்த காட்டும் அதிவேகக் கொள்ளை, கொலை காட்சிச் சித்தரிப்புகளுக்கு மாறாக மிகவும் நிதானமாக நிகழும் கொலைகளுக்கான திட்டமிடல் தொடங்கி கொலையும் நம்பகமான முப்பரிமாண இருள் உலகொன்றைக் கண் முன்னால் நிகழ்த்துகிறது. நகரின் மொத்த இயக்கத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டவர்களே அல்லது அறியும் வேட்கை மிகுந்தவர்களே இருள் உலகை எளிதில் நெருங்க முடிகிறது. குண்டர் கும்பல்களுக்குள் இடையில் நிகழும் சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள நடத்தப்படும் டேபள் டாக், கடன் கட்ட முடியாதவர்களை அச்சுறுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரத்தின் நடைமுறைகள் என குற்றவுலகின் உள்மடிப்புகளை நாவல் அளிக்கிறது. திட்டமிட்ட குற்றங்களை நிகழ்த்துவதற்கு முன்னர் தோன்றும் பரிதாபமே பயமாக மாறுகிறது. குற்றச் சம்பவங்களை ஆற்றும்போது தன்னினைவுடன் கூடிய பயமொன்று மனிதனை இயக்க வேண்டுமென்கிறான் காசி. இதைக் குற்றச் செயல்களைத் தொழிலாகக் கொண்டவர்களின் உளவியல் குறித்த மிக முக்கியமான அவதானமாகச் சொல்லலாம்.
மலேசியாவில் இந்தியர்களைப் போன்றே மலேசியாவில் குடியேறி பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சீனச் சமூகத்தின் வாழ்வு குறிப்பாகப் பண்பாட்டு வெளி மலேசியத் தமிழிலக்கியத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டதில்லை. வணிகச் சமூகமாக மலேசியாவில் இருக்கும் சீனர்களில் பெரும்பான்மையோர் பெளத்த, தாவோ, நாட்டார் வழிபாடு வழியிலான மத நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். சீனர்களின் மத நம்பிக்கைகளில் முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது. சீன நாட்காட்டியின் ஏழாவது மாதத்தின் 15-வது நாளன்று `நரகத்திலிருந்து வெளிவரும் இறந்து போன தங்கள் முன்னோர்களின் ஆவிகளின் இளைப்பாறுதலுக்காக உணவுகள் படைக்கப்பட்டுப் போலி காகித நாணயங்கள் எரிக்கப்படும். ஆவிகளின் துயரையும் துன்பத்தையும் குறைத்து அவர்களை மகிழ்விக்கவும் இச்சடங்கு மேற்கொள்ளப்படும். அந்த மாதத்தின் பதினைந்து நாட்களுமே கூத்து நடைபெறும். சிகண்டி நாவலில் மியோ ஷான் எனும் சீன இளவரசியின் கதை கூத்து வடிவில் அமைகின்றது. சீன நாட்டார் தெய்வ மரபும் மலாய் பேசும் இந்தோனேசியா, மலேசியா, புருனை உட்பட நுசாந்திரா மக்களின் நாட்டார் தெய்வ மரபும் சேர்ந்து உருவான நா தோக் கோங் (Na Tuk Kong) எனப்படும் காவல் தெய்வ வழிபாடும் நாவலில் வருகிறது.
குவான் யின் எனப்படும் சீன அன்னைத்தெய்வ வழிபாடும் மலேசியாவில் மிக பிரபல்யமானது. வரலாற்று நோக்கில் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பெளத்த போதிச்சத்துவரையே சீன நாட்டார் மரபு குவான் யீன் எனும் அன்னையாகச் சுவிகரித்துக் கொண்டது. செளவாட் நகரில் பகுச்சரா அன்னை எழுந்தருளிய இடத்திலே குவான் யீன்னும் எழுகிறாள். இந்தச் சித்தரிப்பே நாவல் நிகழும் களமான செளவாட் நகரை அன்னையர்களின் நிலமாக மாற்றுகிறது. நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் அன்னையுடன் ஏதேனும் ஒருவகையில் பிணைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். தன் நிலத்தில் இருக்கும் குடிகளுக்கான நீதியையும் அன்னை நிலைநாட்டுகிறாள்.
திருநங்கைகளின் தெய்வமாக வணங்கப்படும் பகுச்சரா மாதாவும் அன்னையெனப் பல வண்ணங்களைக் காட்டி நாவலில் வெளிப்படுகிறாள். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு மாற்றுப் பாலுறுப்பு அறுவைச்சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகளுக்குப் பண உதவியும் புகலிடமும் உறவுக்கொடியளித்துத் தன்னுடன் பிணைத்து அன்னையாகிறாள். அவள் வீற்றிருக்கும் நிலத்தைச் சீன முதலாளி பிடுங்கும்போது வன்மையான முகத்தைக் காட்டித் தண்டிக்கிறாள். பகுச்சரா அன்னையின் முழுமைச் சராவில் நிகழுகிறது. இறைச் சந்நிதியின் முன்னால் பரதநாட்டியம் ஆடும்போது உள்ளிருந்து இயக்கும் இசையொன்று கூடி தாண்டவமும் லாஸ்யாவும் வெளிப்பட்டு அன்னையுடன் இரண்டற கலந்துவிடுகிறாள்.
நாவலில் அளிக்கப்படும் நுண் தருணங்களும் சித்தரிப்புகளுமே நாவல் வாசிப்பில் நம்பகத்தன்மையை மேம்படுத்தி வாசகனுக்கு நிகர் வாழ்வனுபச் சூழலொன்றை உருவாக்குகிறது. அதிலும் வாசகர்கள் பெரிதும் அறியாத களமும் வாழ்வெளியும் காட்டப்படும்போது நுண் சித்திரிப்புகள் மிக அவசியமானதாகிறது. விலை உயர்ந்த விபச்சார விடுதியின் சூழலை விளக்கும்போது இஞ்சி கலந்த மசாஜ் எண்ணெயின் வாசம் தொடங்கி இருளில் மெல்லிய ஒளி பரப்பி நிற்கும் மெழுகுவர்த்திகள் எனக் காட்சியொன்றை விவரிப்பதில் தேர்ந்த கவனம் செலுத்தியிருக்கிறார். காட்சியூடகங்களின் ஆதிக்கம் மிகுந்தவிட்ட சூழலில், புனைவு வெளிக்குள் வாசித்த சித்தரிப்பை முன்னரே பார்த்துப் பழகிப் போய் மூளையில் பதிந்திருக்கும் காட்சியோடு பொருத்திப் பார்க்கும் மனநிலை வாசிப்பின்போது உடன் நிகழ்வாகவே அமைகிறது. அந்த மனநிலைக்கு முற்றிலும் அந்நியமான காட்சிச் சித்திரிப்புகளைப் புனைவுக்குள் கொண்டு வருவது புனைவின் சவாலாக இருக்கிறது. சிகண்டி நாவலில் காட்சி ஊடகம் தீண்டாத நுண் தருணங்கள் நிறையவே இடம் பெற்றிருந்தன. தீபனின் போதை பழக்கத்தால் ஒன்று தொட்டு மற்றொன்றென விழிப்பும் தன்னிலையழிவுக்கும் என முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும் எண்ணச்சரடுகளை விவரித்தப் பகுதிகளைக் குறிப்பிடலாம். அவனுள் இருக்கும் அச்சத்தைக் களைந்து உள்ளிழுத்துக் கொள்ளும் இருளுலகு காலமும் வெளியுமற்று இருப்பதும் பின்னர் மனதுக்குள் தேங்கி நிற்கும் குற்றவுணர்வையும் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் பெரிதாக்கிக் காட்டிக் கொண்டே செல்வதான சித்தரிப்பு (பக்கம் 123-125) போதை மிகுந்தவனொருவனின் அகத்தைச் சரியாகக் காட்டுகிறது. புலனுணர்வு மிகுந்திருக்கும் அதிகாலை விழிப்பில் பிரிவாற்றாமையால் வாடும் சங்கக்காலத் தலைவி கேட்ட நொச்சி இலை உதிரும் சத்தத்தைக் கூடலில் எழும் முனகல் ஒலியுடன் ஒப்பிடும் ஆண்மையற்றவனின் அகப்பதிவும் பொருந்தி போவதாக இருந்தது. கூட்டத்தில் மருந்துகளை விற்கும் அமீர்கானின் குரலுக்கேற்ப அன்சாரியின் உடல் தாளம் அமைந்திருந்தது என்பதும் சிறப்பானதாக இருந்தது. யானை, காகம், குரங்கு, மான் என விலங்குகள் குறித்த அவதானம் நாவல் முழுதும் அமைகிறது. மனிதனுக்குள் உறைந்திருக்கிற விலங்கியல்பை வெளிப்படுத்துகிறது. மேலும், பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்திருக்கும் தற்கால நிலைக்குப் பின்னும் விலங்கியல்பே மனிதனை இயக்குகிறது என்பதாகவும் அமைந்திருந்தது.
சிகண்டி நாவலில் வரும் கதைமாந்தர்களில் பெரும்பான்மையானோர் தாங்கள் மேற்கொள்ளும் செயல்களில் காட்டும் கலை நேர்த்தியால் மேம்பட்டவர்களாகக் காட்டப்படுகின்றனர். மீன் தலையை ஆய்ந்து மெதுவாக உண்ணும் மாமா, மோட்டார் பந்தயத்தில் காசி காட்டும் துணிகரச் சாகசம், நாசி லெமாக் செய்வதில் ஈபு காட்டும் நேர்த்தி, மாரிமுத்து வரையும் ஓவியம், வீரனின் அசாதாரண உடல் வலு என ஒவ்வொரு பாத்திரமும் ஏதாவது ஒரு மிகைப்பட்ட ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து முற்றிலும் தனித்துத் தன் இயல்புக்கேற்ற கலை நேர்த்தியைக் கொள்ள தக்கவளாகச் சராவையே அணுக்கமாக உணர முடிகிறது. தன்னை முற்றாகப் பெண்ணாக எண்ணுபவளின் உடலிலும் பெண்மைக் கூடிவருகிறது. குற்றங்கள் நிகழும் உலகில் இருந்தாலும் தீப தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தாலும் அவளது ஆன்மா ஆழப் பற்றியிருக்கும் நடனத்தால் உள்ளுக்குள் வேறொருவளாகவே இருக்கிறாள். பரத நாட்டியம் அளிக்கும் பரவசத்தால் பால் பேதம் மறந்து கடவுளுக்கு அணுக்கமானவளாகத் தன்னை உணர்கிறாள். அந்த நிலைக்குச் சற்றும் குறைவில்லாததாக அமைவது, தன் ஆன்ம கழிவுகளை அகற்றிக் கொள்ளும் கழுவாயாக அம்மாவை உணரும் தீபனின் அகம். உடல் அளிக்கும் ஆற்றலனைத்திலும் உச்சம் காணத் துடிக்கும் பருவமொன்றில் தன்னை இழக்கின்றான். காமம், போதை, நுகர்வு எனத் தன்னை மூழ்கடிக்கும் உடல் சார்ந்த போகத்திலிருந்து மீட்டெடுப்பவளாக அம்மாவையே காண்கிறான்.
சிகண்டி நாவலில் பல இடங்களில் சூழலுக்கு முரணான அபத்த நகைச்சுவை வெளிப்படுகிறது. தீபனின் அம்மாவை அவனது அப்பா கொச்சையான சொற்களால் ஏசி அடிக்கும்போது பின்னணியில் எம்.ஜி.ஆரின் அன்பே வா படத்தின் பிஷ் நடனம் ஒடுவதும் சண்டை முடிந்த பின் ‘அன்பே வா முடிந்து வீடு அமைதியாக இருந்தது’ ஆகிய சித்திரிப்பும் சூழலின் யதார்த்ததை அபத்த நகைச்சுவையாக முன்வைக்கிறது. ஒவ்வொரு நாளும் தன் சகோதரிகளைப் போல பொருளியலால் மேம்பட்ட வாழ்வை அடைய முடியாத நிலையை எண்ணி அத்தை, அண்ணாமலை படத்தில் ரஜினியின் சவால் விட்டு முன்னேறும் காட்சிகளைக் கண்டு மனம் ஆற்றிக் கொள்கிறாள்.
சிகண்டி நாவலில் வரும் திருநங்கையர் குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டுத் திரளாக வாழ்கிறார்கள். ஒரிடத்தில் திரளாக வாழும்போது தமக்குள்ளே பல வேறுபாடுகளும் சச்சரவுகளும் எழக்கூடும். செளவாட் நகரில் ஒன்றாக வாழும் திருநங்கைகளுக்குள் அம்மாதிரியான முரண்பாடுகள், ஒரே தொழில் புரிவதால் ஏற்படும் போட்டிகளும் இருந்திருக்கும், அதை நாவலில் போதைப்பொருள் தொழில் வினியோகத்தில் ஈடுபடும் திருநங்கைகளுக்குள் ஏற்படும் பரஸ்பர எச்சரிக்கையுணர்வு எனக் காட்டப்படுகிறது. அவ்வாறே ஈபான் இனத் திருநங்கையரைப் போட்டியாக எண்ணிப் பின் ஏற்றுக்கொள்கின்றனர். ஈபு போன்ற திரளில் ஆளுமையாக உருவாகின்றவரின் குரலுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும் தனித்தனியான குரல் எல்லா சமூகத்தில் இருக்கக்கூடும். அவ்வாறு சகத் திருநங்கையர்களுக்குள் நிகழும் தொழில் போட்டி, கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் மாற்றுக் குரலை இன்னும் துலக்கமாக நாவல் காட்டியிருக்கலாம். மேலும், நகரில் ஆண்மையைப் பெருக்கவும் மீட்கவும் பல வணிக வழிமுறைகள் இயங்குகின்றன என்பது நகர மக்களின் வாழ்வுமுறையை ஒட்டிய முக்கியமான அவதானமாக இருக்கிறது. பதின்மத்தைத் தாண்டிய தீபன் ஆண்மையின்மையால் உணரும் பதற்றத்தைப் போலவே நகரத்தில் பலரும் உள்ளூர உணரக்கூடும். ஆண்மையின்மை என்பது திட்டமிட்டு மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தும் வணிக உத்தியாகவும் இருக்கிறது. இவற்றையும் ஒட்டி நாவல் பயணித்திருந்தால் ஆண்மை06யின்மை என்பதன் பதற்றம், கொந்தளிப்புப் புலப்பட்டிருக்கும். இவற்றை நாவலின் எல்லையை விரித்துப்பார்க்கும் வாசகப் பார்வையாகவே முன்வைக்க விரும்புகின்றேன்.
பிரபஞ்சத்தின் இயக்கத்தில் திட்டமிட்ட விதியொன்று இயங்குகிறதென்பதைச் சிகண்டி நாவல் முன்வைக்கிறது. சமூகத்தின் பார்வையில் பொருளற்றவையென நிகழும் சிறு செயல்களுக்குப் பின்னால் பிரபஞ்சம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அப்படியான ஒழுங்கு முறையைப் படைக்கின்ற அன்னையே நிகர் செய்யக்கூடும் என்ற அறிதலே பழங்குடிச் சமூகத்தின் நம்பிக்கையாக இருந்தது. இந்நாவலில் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளை அன்னையராகச் சித்திரித்துப் பிரபஞ்சம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்கை நிலைநாட்டும் சிகண்டி அன்னையின் தரிசனமாகவே சிகண்டி நாவல் விளங்குகிறது.
இதுவரை சிகண்டி நாவலை ஒட்டி வந்த விமர்சனங்களில் இதுவே கூர்மையானது எனக் கருதுகிறேன்.நாவலின் அனைத்து அம்சங்களையும் தொட்டுக்காட்டி விரிவான ஒரு சித்திரத்தைக் காட்டுக்கிறார் அரவின் குமார். நாவலில் எழும் குறைகளை நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார். திருநங்கையிரிடையே பரஸ்பர உறவே காட்டும் நாவலாசிரியர் அவர்களிடையே நிகழ்ந்திருக்கக்கூடிய உட்கலவரத்தைத் தொடவில்லையென்றும். ஈபுவின் முற்றதிகாரத்தையே முக்கியமாக காட்டும் நாவல் , அந்தச் சமூகத்தில் எழுக்கூடிய பிற உபரி அதிகாரக் குரலை காட்டத் தவறியுள்ளத்தையும் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் தீபன் கூடுமான அளவு தன் ஆண்மைக்குறைவை நிவர்த்திக்க போதுமான அளவு சிகட்சை முறைகளைக் கையாண்டிருக்கிறார் என்று எனக்குப் படுகிறது. மற்றபடி நாவலை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட தேர்ந்த விமர்சனம் இது.