வல்லினம் விருது விழா 2022: சில நினைவுகள்

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. அ. ரெங்கசாமிக்கு முதல் வல்லினம் விருது வழங்கப்பட்டதோடு வல்லினத்தின் முதல் ஆவணப்பட முயற்சியும் அவரது வாழ்வைப் பதிவு செய்யும் திட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. அவ்விருது விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகக் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை கலந்து கொண்டார். பின்னர், 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதின் வழி ‘வல்லினம் விருது’ தனக்கான குறிப்பிடத்தகுந்த அடையாளத்தைப் பெற்றுக் கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தலைமை ஏற்ற அவ்விழாவின் வழி, உலகம் முழுவதும் வல்லினம் விருது குறித்த அறிமுகம் கிடைத்தது. ஜெயமோகனும் தன் தளத்தில் ‘விஷ்ணுபுரம் விருதைப் போன்ற முக்கியத்துவம் கொண்டது’ எனக் குறிப்பிட்டது இன்னும் நினைத்து மகிழக்கூடியது.  இதை தொடர்ந்து, 2022இல் எழுத்தாளர் மா. ஜானகிராமன் அவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிலும் சமூகச் செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் கிடைத்த வரவேற்பு வல்லினம் விருதை மலேசியாவில் குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய அங்கீகாரமாக உயர்த்தியது. எனவே தைப்பிங் நகரில்,  உலகப் பிரசித்தி பெற்ற பூங்காவில் அமைந்துள்ள கிராண்ட் பேரொன் விடுதியில் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு இந்த விருது விழாவைப் பிப்ரவரி 27 ஏற்பாடு செய்தோம்.

கோவிட் தொற்று காரணத்தால் விடுதி மண்டபத்தில் 110 பேர் மட்டுமே  நுழைய அனுமதி என நிர்வாகம் முன்னமே திட்ட வட்டமாகக் கூறிவிட்டதால் மிகுந்த கவனத்துடன் வருகையாளர்களைத் தேர்ந்தெடுத்தோம். தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் சேர்க்க அரசியல் தலைவர்களையோ ஊடக பிரபலங்களையோ அழைப்பது மலேசிய இலக்கியச் சூழலில் ஒரு பண்பாடாகவே இருந்து வந்தது. 2009-ஆம் ஆண்டு தொடங்கியே வல்லினம் இந்தச் சூழலுக்கு முரணான எண்ணம் கொண்டிருந்தது. இலக்கிய நிகழ்ச்சிகளில் இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களுமே முதன்மையானவர்கள். எனவே பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருமே இவ்விழாவின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம்.

மீரா மற்றும் தினேஷ்வரி

விழாவுக்கு முன்பாக, இரண்டு நாட்கள் நடைபெற்ற நாவல் முகாமில் பங்கெடுத்த நண்பர்களே இவ்விழாவை முன்னெடுக்கும் பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர். முகாம் முடிந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் விழா என்பதால் மண்டபம் அவசரமாகப் புதிய வடிவம் பூண்டது. அரவின், சண்முகா ஆகியோர் மேடையை ஒழுங்குப்படுத்த சுந்தரி, புஸ்பவள்ளி, பாரதி ஆகிய மூவரும் விருதுக்கான சில அடிப்படை வேலைகளில் மும்முறமாகியிருந்தனர். சல்மா தினேசுவரி அறிவிப்பாளர் பணிக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். மீராவும் தினேஷும் வருகையாளர் பதிவு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிமலன் மற்றும் திவாகர் நூல் விற்பனைக்கான முன் ஏற்பாடுகளில் மூழ்கினர். விடுதி அறை பொறுப்பு அ. பாண்டியனது என்பதால் அதை ஒட்டிய பணியில் இருந்தார். தென்னரசு தன் நண்பர்களோடு ஜானகிராமன் நூல்களை முதல் மாடிக்கு எடுத்து வரும் பணியில் இறங்கியிருந்தார். விருது பணம், கேடயம் ஆகியவை ஷாலினி பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புகைப்படம் பிடிக்க ரேவினை கேட்டிருந்தேன். அவர் துப்பறியும் நாளிதழின் புகைப்படக்காரர் போல ஆங்காங்கே மறைவாக நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தார். எல்லாமே அவரவர் பொறுப்பில் சரியாக நடந்து கொண்டிருந்தது.

சல்மா தினேசுவரி

மதியம் ஒரு மணிக்கெல்லாம் கூட்டம் சேரத் தொடங்கியது. பெரும்பாலும் அறிமுகமான நண்பர்கள். பி.எம். மூர்த்தி, வித்யாசகர் ஆகியோருடன் மா. ஜானகிராமன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். உத்ராபதி அவர்கள் தான் அழைத்து வந்த மலேசியத் தமிழ் இலக்கியக் கழக பேராக் மாநில உறுப்பினர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். சுவாமி பிரம்மானந்தா, மணிஜெகதீசன், குமாரசாமி ஆகியோர் உணவருந்தியபடி பேசிக் கொண்டிருந்தனர். கீழ்த்தளத்தில் இருந்த சோஃபாவில் மா. சண்முகசிவாவும் கோ. புண்ணியவானும் உரையாடிக் கொண்டிருந்தனர். மை ஸ்கில்ஸ் அறவாரிய இயக்குனர் தேவா தன் மாணவர்கள் சிலருடன் வந்திருந்தார். நான் எல்லாரையும் வரவேற்பதில் பரபரப்பாக இருந்தேன். மண்டபத்தில் நுழைந்த அ. பாண்டியன் புதிய உடையும் புத்துணர்ச்சியுடன் இருந்தார். நான் அதே டி-சட்டையில் இருப்பதைப் பார்த்தபிறகு உடையை மாற்றி வரக்கூறினார். எனக்கு ஏதோ வேலைகள் மிச்சம் இருப்பதாகவே தோன்றியது ‘பரவாயில்லை’ என்றேன். பாண்டியன் மாற்றியே தீர வேண்டும் என்றதால் காரில் வைத்திருந்த வெள்ளை சட்டைக்கு மாறினேன்.

ம. நவீன்

நிகழ்ச்சி சரியாக 2 மணிக்குத் தொடங்கியது. பொதுவாக வல்லினம் நிகழ்ச்சிகள் திட்டமிட்ட நேரத்தில் நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் முடியும். என் நினைவில் இருமுறை தாமதமாகியதுண்டு. அதற்கான காரணகர்த்தாக்களை இப்போது பழி சொல்வது வீண்.

நிகழ்ச்சி அறிவிப்பாளரான சல்மா தினேசுவரி என்னை அழைக்கும் முன்பே நான் மேடையின் ஓரம் போய் நின்றுவிட்டேன். கிரேண்ட் பேரோன் விடுதி அத்தனை இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. மாலை 5க்குள் விடுதியைக் காலி செய்துவிட வேண்டும். அதிக பட்சம் 15 நிமிடம் தாமதமாக்கலாம் என விதிமுறைகளைத் தூவியிருந்தது. எனவே நிகழ்ச்சியைச் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். மேலும் முகாம் நடக்கும் முன்பே நிர்வாகத்திற்கும் எனக்கும் சிறிய பிணக்கு. அங்குள்ள வெண்பலகையில் ‘2022’ என எழுத அவர்களிடம் ‘இரண்டு’ எண் போதவில்லையாம். “இதெல்லாம் ஒரு காரணமா? இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது… தயார் செய்” எனச் சத்தமிட்டேன். இத்தனை கறாராக இருக்கும் என் மீது நிர்வாகத்திற்கு ஒரு கடுப்பு இருக்கும் என்பது அனுமானம்.

மா. சண்முகசிவா

வரவேற்புரையில் ஏன் இந்த விருது விழா கொண்டாடப்படுகிறது எனப் பேசினேன்.  மா. ஜானகிராமன் மற்றும் அபிராமி ஏன் இவ்விருதுகளைப் பெற தகுதியானவர்கள் எனச் சுருக்கமாகக் கூறினேன். பேசிக் கொண்டிருக்கும்போதே மைக் சிறிய ‘கிர்ச்’ ஓசையுடன் செயலிழந்தது. சுற்றிலும் தேடினேன். பல கட்டளைகளை விதித்த விடுதி பொறுப்பாளனைக் காணவில்லை. கோபத்தில் படபடப்பு கூடியது. முடிந்த வரை குரலை உயர்த்திப் பேசி திட்டமிட்டதைவிட சுருக்கமாக உரையை முடித்துக் கொண்டேன். ம.நவீன் உரையைக் காண

அடுத்து மா. சண்முகசிவாவின் உரை. அவர் ஏற்கனவே தணிந்த குரலில் பேசக்கூடியவர். மைக் இல்லாமல் அவர் குரல் எழும்பி ஒலிக்கவே இல்லை. நான் பொறுப்பாளனுக்குக் கைப்பேசியில் அழைத்தேன். வருவதாகச் சாவகாசமாகப்  பதில் கூறினான். அதற்குள் இரு மலாய் இளைஞர்கள் விடுதி பெயர் அச்சிட்ட உடையுடன் புகுந்து மைக்கையும் மின் கம்பிகளையும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படிப் பார்த்தால் அவை இயங்கத் தொடங்கும் என யாராவது சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும். எரிச்சலடைந்து விடுதி முகப்புக்கு ஓடினேன். இல்லை படிகளில் தாவி பறந்து சென்று சத்தமிட்டேன். “பணத்தை மட்டுமே முன்னமே கொடு என  வாங்கி விடுகிறீர்கள். இதுதான் உங்கள் சேவையா?” என்றேன். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் முதலில் அவர்களிடம் பிரச்சனையைச் சொல்லியிருக்க வேண்டும். எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உலகத்துக்கே தெரியும் என  நானே முடிவெடுத்துக்கொண்டது தவறாகிவிட்டது. அதற்குள் அந்த தொழில்நுட்ப பணி செய்யும் மலாய் இளைஞன் வந்துவிட்டதாகத் தகவல் வரவும் மீண்டும் மேலே படியில் ஓடினேன். லிப்டில் ஏற பொறுமையில்லை.

அ. பாண்டியன்

அந்த இளைஞனும் மின் கம்பியையும் மைக்கையும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் “முன்பு இயங்கியது அல்லவா?” என்றான். அந்த வாக்கியம் அவனுக்கே அபத்தமாக இருந்திருக்க வேண்டும். மீண்டும் மின் கம்பிகளை உற்று உற்று பார்த்தான். அவர்களுக்குத் தெரிந்த ஒரே தொழில்நுட்ப பணி அதுவாகவே இருக்க வேண்டும். “இதோ நான் வேறொருவனை அழைத்து வருகிறேன்” எனக் கூறிவிட்டு சென்றான். எனக்கு மன அழுத்தம் ஏறியது. இந்த மைக் எனக்கு ஒரு சிக்கல் இல்லை. ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக முயன்று இயக்கிய ஆவணப்படத்தை ஒளிபரப்ப முடியாது எனத் தெரிந்தவுடன் முற்றிலும் தளர்ந்துவிட்டேன். சண்முகசிவா மைக் இல்லாமலேயே உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு வகையில் இயல்பாக இருந்தார். கூட்டமும் இயல்பாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் மற்றுமொரு பருத்த மலாய் இளைஞன் வந்தான். ஆனால் அவனுக்கு ஏதோ வேலை தெரிந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் மைக் ‘கிக்கிரிக்’ என வேலை செய்யத் தொடங்கியது. ஆனால் அதன் அலை மாறி மாறி வந்ததால் சண்முகசிவாவின் குரல் எதிரொலித்தும் ஒடுங்கியும் பல வண்ணங்களில் வெளிப்பட்டது. ஓரளவு மைக் தயாரான பிறகு சண்முகசிவாவின் நேரம் முடிந்திருந்தது. சண்முகசிவாவின் உரையில் அபிராமி குடும்பத்தினர் நெகிழ்ந்திருந்தனர். அவர் அபிராமி கணேசனின் கட்டுரைகளை வாசித்துவிட்டு வந்திருந்ததால் அதன் தரத்தையும் உள்ளடக்கத்தையும் ஒட்டி விரிவாகப் பேசிப் பாராட்டினார். அபிராமிக்கு அது ஊக்கம் கொடுத்திருக்க வேண்டும். மா. சண்முகசிவா உரையைக் காண

தொடர்ந்து அ.பாண்டியன் உரை இடம் பெற்றது. அபிராமி கட்டுரைகள் குறித்து விரிவாகப் பேசினார். நான் படியில் ஏறி இறங்கி ஓடியதால் கால்கள் வலித்தன. ஓரமாக அமர்ந்தேன். இனி இந்த விடுதி நிர்வாகம் சொல்வதைக் கேட்க வேண்டியதில்லை என முடிவெடுத்துக்கொண்டேன். தாமதமாகத்தான் மண்டபத்தைக் காலி செய்வதென திட்டம். எவனாவது சட்டம் பேசினால் சச்சரவுதான் என உறுதியாகிவிட்டது. அ.பாண்டியன் உரையைக் காண

அபிராமி கணேசன்

ஷாலினிக்கு முன்னமே நிகழ்ச்சி குறித்த நிரல் நினைவில் இருந்ததால் அவர் அடுத்தடுத்துப் பணிகளுக்குத் தயாராக இருந்தார். அபிராமி கணேசனுக்கு விருது வழங்கப்பட்டபோது பாதி கடலை கடந்துவிட்ட நிறைவு. தேவா விருதை எடுத்து வழங்கினார். இரண்டாயிரம் ரிங்கிட்டுடன் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. இளம் எழுத்தாளர் விருது

அபிராமியின் ஏற்புரை மிக இயல்பாக அமைந்திருந்தது. அடுக்கடுக்காகப் பல நிகழ்வுகளை நினைவுப்படுத்தி பேசினார். தன் எழுத்து தன்னை எப்படி மாற்றியது என அவர் குறிப்பிட்ட இடம் முக்கியமானது.  அபிராமி கணேசன் ஏற்புரை

ஆனால் நிரலில் ஏதோ ஒன்று குறைவதாக என் மனதுக்குத் தோன்றியது. சல்மா தினேசுவரியிடம் சென்று “ஏன் தேவா இன்னும் பேசவில்லை?” என்றேன். “ஐயோ அவரைக் கூப்பிட மறந்துவிட்டேன்” என்றார். எனக்குத் தலையே சுற்றிக்கொண்டு வந்தது. விருது வாங்கிய பிறகும் வாழ்த்தலாம் என்பதால் தேவாவின் உரை பொறுத்தமாகவே அமைந்தது. அவரும் அபிராமியின் கட்டுரையை வாசித்துவிட்டே வந்திருந்தார். வல்லினம் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்துச் சில ஆலோசனைகள் கூறினார். தேவாவின் வாழ்த்துரை

தேவா

நிகழ்ச்சியின் மையத்தில் இருந்தோம். ஒரு நிகழ்ச்சியில் சில முடிவுகளை அப்போதைய சூழல் பொருத்தே எடுக்க வேண்டியிருக்கும். எனவே நூல் வெளியீட்டில் முதல் நூல்களைப் பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அப்போதுதான் முடிவு செய்தேன். இந்த முதல் நூல் பெறுதல் என்பது பொதுவாகவே மலேசியாவில் பணம் வசூல் செய்யும் அங்கம் எனச் சொல்லலாம். 50 ரிங்கிட் பெருமானம் உள்ள நூலை 1000 ரிங்கிட் கொடுத்து வாங்குவார்கள். வல்லினத்தின்  நடைமுறைகளில் ஒன்று,  நூலின் அடக்கவிலை எதுவோ அந்தத் தொகையில் நூல்களை வாங்க வேண்டும் என்பதாகும். முதல் நூலுக்குப் பணம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக முதல் நூலைப் பெற்றுக்கொள்ள அழைப்பதன் வழி அந்நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் சிலரை நாங்கள் கௌரவிக்கிறோம். அப்படி இம்முறை பி.எம். மூர்த்தி, ‘தென்றல்’ வித்யாசகர், உத்ராபதி ஆகியோரை அழைத்தோம். நூல் வெளியீடு

நூலைச் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் வெளியிட்டு மூவருக்கும் நூல்களை வழங்கினார். தொடர்ந்து அவரே வாழ்த்துரையும் வழங்கினார். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

நிகழ்ச்சியில் தொடர்ந்து மா. ஜானகிராமன் அவர்களின் ஆவணப்படம் ஒளிபரப்பானது. ஏறக்குறைய 2 மணிநேரம் 40 நிமிடங்கள் கொண்ட அப்படத்தை 20 நிமிடத்துக்குச் சுருக்கியிருந்தோம். ஆவணப்படம் பலரையும் மனம் கணக்கச் செய்தது. விளக்கு ஒளிர்ந்தபோது பலர் விழிகள் பனித்திருந்தன. அந்த ஆவணப்படத்தை இயக்கிய அரவின் குமாரையும் ஒளிப்பதிவு செய்த செல்வத்தையும் அரங்கின் முன் அழைத்து அறிமுகம் செய்தேன். கைத்தட்டல்களால் தங்கள் மனதின் கனத்தை அரங்கத்தினர் தளர்த்திக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஒளியேறிய ஆவணப்படத்தைக் காண

வருகையாளர்களில் ஒரு பகுதியினர்

நிகழ்ச்சியில் தொடர்ந்து கி. இளம்பூரணன் அழைக்கப்பட்டார். மா. ஜானகிராமனின் ஆளுமை குறித்து அவர் உரை விரிவாக அமைந்தது. கி. இளம்பூரணன் உரை.

அவ்வுரைக்குப் பின்னர் மா. ஜானகிராமன் அவர்களுக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டது. டாக்டர் மா. சண்முகசிவாவும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியும் விருதை வழங்கினர். ஐயாயிரம் ரிங்கிட் பணமும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. வல்லினம் விருது

கி. இளம்பூரணன்

நிகழ்ச்சியில் நிறைவாக மா. ஜானகிராமன் அவர்களின் உரை அமைந்தது. சுருக்கமான கூர்மையான உரை. கச்சிதமான ஏற்புரை. அவ்வுரையுடன் சரியாக மாலை 4.30க்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.  வழக்கமான வல்லினத்தின் நிலையைத் தளர்த்தி ஜானகிராமனின் நூல்களை அதிக விலை கொடுத்து வாங்கலாம் என அறிவித்தோம். அது அவரது தொடர் ஆய்வு பணிக்கு உதவியாக இருக்கும் எனக் கருதியதால் அந்த தளர்வை செய்தோம். பலரும் உற்சாகமாக வாங்கினர். மா. ஜானகிராமன் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார். அவர் பல முறை நூல்களை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை. அவரிடம் நூலில் கையெழுத்து வாங்கவும் படம் பிடித்துக் கொள்ளவும் வாசகர்கள் வரிசையில் நின்றனர். அவர் உற்சாகமாக தன் அடுத்த திட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.   அவரது உற்சாகம் எங்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அபிராமியும் நெகிழ்ந்திருந்தார். அறிமுகம் இல்லாதவர்கள் எல்லாம் தன்னுடன் படம் எடுத்துக்கொள்வதை ஆச்சரியமாகச் சொன்னார். அவர் கண்களில் ஒளி. மா. ஜானகிராமன் உரை

மா. ஜானகிராமன்

நிகழ்ச்சி சீக்கிரமே நிறைவடைந்தாலும் நான் அவ்வளவு சீக்கிரம் வெளியேறக்கூடாது என திட்டவட்டமாக இருந்தேன். யாரையும் அவசரப்படுத்தவில்லை. நிகழ்ச்சிக்குப் பின்பான உற்சாக உரையாடல்கள் தொடர்ந்தபடி இருந்தன. மாலை 5.30க்கு மெல்ல மெல்ல கூட்டம் களையத் தொடங்கியது. அந்த மலாய் இளைஞன் குறித்து விடுதியில் புகார் செய்வதுடன் விடுதியைக் குறித்தும் இணையத்தில் புகார் எழுத வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். எல்லா கோபமும் கரைந்து காணாமல் போயிருந்தது. இந்தத் தவறுக்கெல்லாம் அவன்தான் என்ன செய்வான்? ஒருவேளை இந்தத் தவறிலிருந்து அவன் கற்றுக்கொள்ளக் கூடும். எல்லாருமே அப்படித்தானே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...