நாவல் முகாம்: ஒரு பதிவு

செப்டம்பர் 2020இல் நாவல் முகாமுடன் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ரஷ்ய இலக்கியங்கள் குறித்து உரையாடலாம் என்ற எண்ணம் இருந்ததால் நகர சூழலை விட்டு ஒதுங்கிய இடமாகத் தேடினோம். அது கனமான தலைப்பாக இருக்கும் என்பதால் நகர இரைச்சல் ஏற்றதல்ல என்பது அனுமானம். முகாமுக்காக நண்பர் கங்காதுரை கண்டடைந்த இடம்தான் தைப்பிங் கிராண்ட் பேரொன் தங்கும் விடுதி. உலகில் புகழ்பெற்ற பூங்காவுடன் ஒட்டி அமைந்திருந்த அந்த விடுதி எல்லாருக்கும் பிடித்துப்போனது. பெரும்பகுதி பணத்தைச் செலுத்தியப்பின்னர் கோவிட் தொற்று மேலும் தீவிரமாகியிருந்தது. எனவே நிகழ்ச்சியைத் தள்ளி வைக்க வேண்டிய நிலை.

இடையில் ஓரிருமுறை நிகழ்ச்சியை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என முயன்றும் முடியவில்லை. கோவிட் நிலையில்லா அலைகளை எழுப்பிக்கொண்டே இருந்தது. விடுதி நிர்வாகமும் பணத்தைத் திரும்பச் செலுத்த வழியில்லை எனக் கறாராகக் கூறவும், காலம் அனுமதிக்கும் வரை காத்திருந்தோம். இந்த ஒன்றரை ஆண்டுகளில் முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்த சிலர் வெவ்வேறு காரணங்களால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்களுக்கு மாற்றாகச் சிலரை இணைத்துக் கொண்டோம். கல்லூரி மாணவர்கள் சிலருக்குக் கட்டணமில்லா நுழைவை அனுமதித்தோம். இப்படி ஒருவழியாக 28 பங்கேற்பாளர்களுடன் நாவல் முகாம் பிப்ரவரி 26 தொடங்கியது.

நாவல் முகாமில் இருந்த மற்றுமொரு சவால், அதை வழி நடத்தக்கூடிய பயிற்றுனர்களான சு. வேணுகோபால் மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொள்ள முடியாததுதான். அவர்கள் இல்லாமல் ரஷ்ய இலக்கியங்கள் குறித்துப் பேச வாய்ப்பில்லை. எனவே, முகாமின் உள்ளடக்கத்தை மேலும் எளிமை செய்தோம். மலேசியாவில் எழுதப்பட்ட ஐந்து நாவல்களை ஒட்டி முகாமை வடிவமைத்தோம். அதனடிப்படையில் முகாமை வழிநடத்தும் இருவரின் உரைகளை முன்னமே பதிவு செய்து தயார்ப்படுத்தியிருந்தோம். ஆனால் அப்படிப் பதிவு செய்த ஒன்று எந்த அளவுக்குச் சிறந்த பங்களிப்பைக் கொடுக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது.

26.2.2022 (சனிக்கிழமை) பத்துமலையிலிருந்து காலை ஏழு மணிக்குப் புறப்படுவதாகத் திட்டம். ஏறக்குறைய மூன்றரை மணி நேர பயணம். சிலாங்கூரில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிலர் அவரவருக்கான பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர். வடக்கிலிருந்து அ.பாண்டியன், கோ.புண்ணியவான், ஹரிராஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜொகூரிலிருந்து பாரதி வந்திருந்தார். இடையில் காலை பசியாறல், சிறு சாலை நெரிசலைக் கடந்த பிறகு காலை 11.30க்குத் தைப்பிங்கில் இருந்தோம். நிகழ்ச்சி சரியாகப் பன்னிரெண்டு மணிக்குத் தொடங்க வேண்டும் என்பது திட்டம். வெவ்வேறு இடங்களில் சாலை நெரிசல்களால் சிலர் வரத் தாமதமானது. பத்து நிமிடம் காத்திருந்துவிட்டு முகாமைத் தொடங்கினோம்.

முகாம் தொடக்கம்

ம.நவீன்

இந்த முகாமின் நோக்கம் நாவலை எழுத வைப்பதல்ல; ஒரு நாவலை எவ்வாறு அணுகுவது என வழிகாட்டுவது. நல்ல நாவலின் உட்கூறுகளை அறிந்துகொள்வது. அதன் வழி நல்ல நாவல் எது என்பதை வாசகர்களே ஊகிக்க வகை செய்வது.’ என முகாமின் நோக்கத்தை நான் விளக்கினேன். பின்னர் ஒவ்வொரு நண்பர்களாகத் தங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தைச் செய்து கொண்டனர். ஏறக்குறைய அனைவர் குறித்தும் சிறு அறிமுகம் கிடைத்தவுடன் முதல் அங்கத்தைத் தொடங்கினோம்.

ஜா. ராஜகோலபாலன் உரை – முதல் பகுதி

தொடக்கமாக ராஜகோபாலன் அவர்கள், பதிவு செய்யப்பட்ட காணொலி வாயிலாக நாவல் என்றால் என்னவென்ற சிறிய அறிமுகத்துடன் தனது விளக்கங்களைத் தொடங்கினார்.

எந்தக் கலை வடிவத்திற்கும் வரையறையோ சட்டகமோ இல்லை என்ற அவர், அத்தகைய சட்டகங்களை மீறியே படைப்பூக்கம் வெளிபட வேண்டும் என்றார். எனவே இந்த நாவல் முகாம் எவ்வாறு நாவல் இருக்க வேண்டும் என்ற விதிகளைச் சொல்ல நடத்தப்படவில்லை என்றவர், ஒரு நாவல் எனும் கலை வடிவம் எவ்வாறு இருந்து, எவ்வாறு வளர்ந்து, தன்னுள் என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதைத் தெளிவுப்படுத்தினார்.

நாவல் என்பது தத்துவத்தின் கலை வடிவம் அல்லது ஒரு சமூகத்தின் கூட்டு விவாதத்தின் கலை ரீதியிலான வெளிப்பாடு என எளிமையான வரையறையை வழங்கிய ராஜகோபாலன், ஒரு நாவல் தன் பேசுபொருள் சார்ந்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து மொத்தமான பார்வையை வாசகனுக்கு அளிப்பதைத் தெளிவுப்படுத்தினார். அதாவது, ஒரு பேசுபொருள் சமூகத்தின் பல்வேறு அடுக்கில் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பன்மைத்துவப்பட்ட பார்வையை நாவல் தொகுத்து வழங்குவதை அவர் குறிப்பிட்டு விளக்கினார். அதோடு இந்தப் பார்வையைத் தகவலாக வழங்காமல் கலை ரீதியாக வெளிப்படுத்தும்போதுதான் அது நாவலுக்கான அம்சத்தைக் கொண்டுள்ளது என்றார். இப்படி வாழ்க்கையைக் குறித்த முழுமையான பார்வையைக் கொடுத்துத் தரிசனங்களை வாசகன் உணரச் செய்வதுதான் நாவல் என்றார். மானுட வாழ்வின் உணர்வுப் பரிமாணங்களைச் சூழல்களின் அடிப்படையில் விரிவாகவும் ஆழமாகவும் காட்டி, அவற்றின் வெளிப்பாடுகளை உச்சமாகவும், குறியீட்டு ரீதியாகவும் காட்டி, இவை ஒன்றுக்கொன்று முரண்படும் இடங்களின் வழியே விரியும் மொத்த பார்வைகளையும் உணரும்படி நாவல் கொடுப்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

நாவல் குறித்த இந்த வரையறைகளை உள்வாங்கிக்கொள்ள அதன் உள்ளீடுகளை எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில் அவரது உரையின் தொடர்ச்சி இருந்தது. அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் ஆகிய மூன்று உள்ளீடுகளின் அடிப்படையில் அவர் நாவலுக்குத் தான் வழங்கிய வரையறையைத் தெளிவுப்படுத்தினார் ராஜகோபாலன். அவரின் விளக்கத்தைக் கீழ்க்கண்டவாறு சுருக்கலாம்:

அனுபவம், தத்துவம், தரிசனம் ஆகிய சொற்களை அன்றாட நடவடிக்கைகளிலும் ஆன்மீக வாசிப்பிலும் அறிந்திருப்போம்.  அதன் வழி அவற்றின் பொருளையும் நாம் அறிவோம்.  ஆனால் இலக்கியத்தில் புழங்கும் அனுபவம், தத்துவம், தரிசனம் ஆகிய சொற்களின் பொருள் முற்றிலும் வேறானது. அவை இலக்கியத்தில் தனித்த பொருளுடன் பயன்படுத்தப்படுகின்றன. 

அ. அனுபவம்

ஒரு காட்சியைக் கண்டவுடன் நேரடியாக அதை எழுத்தில் வெளிப்படுத்தினால் அது மனப்பதிவு மட்டுமே. அது அனுபவமல்ல. ஒரு மனப்பதிவில் பல்வேறு கேள்விகளைப் பொருத்தி, அந்த இடையறாத கேள்விகளுக்குப் பதில் கொடுத்து, நமக்குள் நாம் விவாதித்து, அந்த வினாக்கள் நமக்குள் சில மனமாறுதல்களை உண்டாக்கி, அந்த அழுத்தத்தால் வெளிப்படும் இறுதி ஒன்றையே அனுபவம் என்கிறோம். அதாவது, நமது மனப்பதிவு இடையறாத வினாக்கள் வழி பலவிதங்களில் உருமாற்றம் கண்டு எழுத்தாளனைத் துளியளவாவது நிலையழியச் செய்து வெளிபடுவதே நாவலில் சொல்லப்படும் அனுபவம்.

இணையம் வழி பட்டறை

இந்த அனுபவத்தை வாசகருக்குக் கொடுக்க மூன்று வழிமுறைகள் உள்ளன. முதலாவது வர்ணனை. ஒரு சூழலை, ஒரு கதைமாந்தரை வாசகனுக்குக் காட்சிப்படுத்துதலை வர்ணனை என்கிறோம்.   இரண்டாவது விவரணை. ஒரு சூழலை அல்லது நிகழ்வை அவற்றுக்குரிய தரவுகளோடு இணைத்து உணரச் செய்தல் விவரணை ஆகும்.  மூன்றாவது சூழல். சம்பவங்கள் நிகழும் காலம், இடம், அமைவிடம், காலநிலை, பொருட்கள், உணர்வு நிலைகள் முதலியவற்றை உள்ளடக்கியது சூழல்.

. தத்துவம்

நாவலில் ஒரு தரிசனம் உண்டு. தரிசனத்தின் தர்க்கபூர்வமான அடிப்படை விளக்கம் அல்லது நிரூபணத்தைத் தத்துவம் எனலாம். நாவலின் தரிசனத்தை வாசகனுக்கு உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் சம்பவங்களின் தொகுப்பிற்குள் இருக்கக் கூடிய ஒரு தர்க்க முறைமையைத்தான் நாம் தத்துவம் என்கிறோம். எலியின் உயிர் வேதனையைச் சொல்லும் அதே நேரம் பூனையின் பசியை எது விவாதிக்கிறதோ அதுவே தத்துவம். இந்த முரண்தான் தத்துவச் சிக்கல். தரிசனம் இந்த இரண்டு அம்சத்தையும் ஒருங்கே கொண்டு வெளிப்படுவது. இதை இலக்கியத்தில் உணர்வு நிலைகள், சூழ்நிலைகள், முரண்கள், காலப் பரிமாணங்கள் போன்றவை வழியே விளக்கப்படலாம்.

தரிசனத்தை முன்வைத்து மட்டுமே நாவல் எழுதப்பட்டால் அது வெறும் நீதிக்கதை மட்டுமே. நீதிக்கதை தரிசனத்தை நோக்கியே விவாதமற்று குவியும். தர்க்கம் உள்ளே நுழைந்து தத்துவப்பூர்வமான விளக்கத்தைச் சம்பவங்கள் மூலமாக வைக்கும்போதுதான் தரிசனம் துலங்கி வருகிறது.    

. தரிசனம்

நிர்மலா முரசி

நாவல் என்பது ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட தரிசனங்களையோ முன்வைக்கிறது.  ஒரு வரியோ அல்லது ஒரு கருத்தோ மிக ஆழமாக ஒரு பெரும் திறப்பை நமக்கு அளிப்பதையே தரிசனம் என்கிறோம். தரிசனத்தை முன்வைத்து நாவல் எழுதப்படவில்லை; மாறாக நாவல் தான் அமைத்துக் கொண்ட பயணத்தின் வழியாக அந்த உண்மையை அடைகிறது. உதாரணமாக, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தரிசனங்களில் ஒன்றான அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனும் தரிசனத்தை அடைய மொத்த காப்பியமும் பங்கு வகிக்கிறது. அதை ஒரு வாசகன் ஆழமாக உணரவே அத்தனை கூறுகளும் பங்காற்றுகின்றன.

நாவல் நிகர் வாழ்க்கையை அளிக்கிறது. தரிசனம் நம்மை வந்து சேர நாவல் கொடுக்கும் இந்த நிகர் வாழ்வின் விரிவு அவசியம்.

தரிசனத்தை இன்னும் எளிமையாக இப்படிப் புரிந்துகொள்ளலாம்.

சூழல் மற்றும் தருணங்களே நாம் கொண்டுள்ள கருத்துகளை உருவாக்குகின்றன. உதாரணமாகத் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும். இந்தக் கருத்தை நமது வாழ்வில் ஏதாவது தருணத்தில் இருந்து உருவாக்கியிருக்கலாம். நமது வாழ்வில் நடந்த நிகழ்வுகள், தருணங்கள் வழி அதை உணர்ந்து சொல்லியிருக்கலாம். ஆனால் இந்தக் கருத்துக்கு மாற்றான அபிப்பிராயமும் இன்னொருவர் அனுபவத்தில் ஏற்பட்டிருக்கும். தவறு செய்த ஒருவர் தண்டனை எதுவும் பெறாததை அவர் முன்வைக்கக் கூடும். பலரின் அனுபவத்தின் வழி விவாதப் பொருளாக மாறும் ஒரு கருத்து இப்போது தனித்து எடுத்து வைக்கப்படுகிறது. இந்தக் கருத்து மானுட உணர்வுகளின் உச்சங்கள், ஆழம், விரிவு வழியே நாவல் வெளிப்பட செய்கிறது. இந்தக் கருத்து அனைத்துத் தருணங்களுக்கும், காலத்துக்கும் பொருள் தரும்படி நின்றால் அது தரிசனம் (VISION) எனலாம்.  இந்தத் தரிசனம் துலங்கி வரக்கூடியது. ஒரு நாவல் இப்போது தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற கருத்தைச் சார்பெடுத்துப் பேச வேண்டும் என்றில்லை. அதற்கு மறு தரப்பிலிருந்தும் பேசலாம்.

ராஜகோபாலன் அவர்களின் விளக்கத்திற்குப் பின்னர், அது குறித்துச் சிறு விவாதம் செய்தோம். அவரவருக்குப் புரிந்த அளவில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். நான் கிழவனும் கடலும் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அனுபவம், தத்துவம், தரிசனம் ஆகியவற்றை எளிமையாக விளக்க முயன்றேன்.

இரு நாவல்கள் விவாதம்

தொடர்ந்து செல்வன் காசிலிங்கத்தின் மிச்சமிருப்பவர்கள் குறுநாவல் குறித்து நிர்மலா முரசி பேசினார். அந்நாவலில் தான் அறிந்து கொண்டவைகளைப் பகிர்ந்து கொண்டார். ஹிண்ட்ராப் போராட்டம் குறித்தும் அது உருவாகி வந்த விதம் குறித்தும் தான் இந்நாவலில் அறிந்து கொண்டதாகக் கூறினார்.

அரவின் குமார் மற்றும் சண்முகா

நாவல் என்பது அறியாத தகவலைச் சொல்வதா? ஏற்கனவே அறிந்து கொண்ட ஒன்றை அப்படியே எழுத்தில் காட்டுவதா?’ என்ற கேள்வியின் அடிப்படையில் விவாதத்தை முடுக்கிவிட்டேன். ஹரிராஸ்குமார் மிகத் தெளிவாக நாவலின் பணி அதுவல்ல என விளக்கினார். நாவல் என்பது ஒரு கலை வடிவம். ஒரு செய்தியைச் சொல்ல நம்மிடம் இணையம், அனுபவ நூல்கள் என ஏராளமாக உள்ளன. இன்று யூடியூப் போன்ற ஊடகங்களின் வழி அந்த நிகழ்வை இன்னும் தீவிரமாகவே உணரலாம். எனவே அதையே மீண்டும் எழுத்தில் நிகழ்த்தி காட்டுவதாலும் அது உருவாகி வந்த விதத்தைச் சொல்வதாலும் சிறந்த புனைவாக உருவாவதில்லை. அதற்குள் ஒரு கலைஞனாக செல்வன் காசிலிங்கம் என்ன செய்துள்ளார் என்பதே முக்கியம். இந்தக் கருத்தை இன்னும் சரியாக உள்வாங்க இந்நாவல் குறித்து சு. வேணுகோபால் பேசிய உரையை ஒளியேற்றினேன்.

சு. வேணுகோபால் உரை

இந்த உரைக்குப் பிறகு, நாவல் ஒரு வரலாற்றுத் தருணத்தைக் கொண்டிருந்தாலே அது நல்ல நாவல் என்ற மனநிலையிலிருந்து அந்த வரலாற்றின் வழியாக ஒரு நாவலாசியர் எவ்வித தரிசனத்தை முன்வைக்கிறார் எனப் பார்க்க வேண்டிய அவசியத்தை அனைவரும் ஓரளவு உணர்ந்தனர்.

தொடர்ந்து அரவின்குமார் ரிங்கிட் நாவலைப் பற்றி பேசினார். இந்நாவலில் அவர் முதன்மையாக இரு விமர்சனங்களை முன்வைத்தார். முதலாவது நாவலில் வரும் கதாப்பாத்திரங்களுக்குப் போதுமான உளவியல் தருணங்கள் கூடிவரவில்லை. இரண்டாவது ரிங்கிட் என்பது நாவலில் வரும் நிகழ்காலத்திற்குள் ஒரு படிமமாக மாறவில்லை. அரவின் குமாரின் உரைக்குப் பின்னர் சு.வேணுகோபாலின் விளக்கம் ஒளிபரப்பப்பட்டது.

சு. வேணுகோபால் உரை

சு. வேணுகோபால் விளக்கம்

மூன்று மணிக்குத் தேனீர் இடைவேளை. பெரும்பாலோர் முகத்தில் களைப்பு இருந்தது. ராஜகோபாலன் உரை முன்னமே கிடைத்திருந்தால் முகாமுக்குத் தயார் செய்து வந்த உரைகளை இன்னும் நேர்த்தியாகச் செய்திருப்போம் என்பது நண்பர்களின் ஏக்கமாக இருந்தது. அதனால் என்ன அடுத்த முகாமில் பார்த்துக்கொள்ளலாம் எனச் சமாதானம் செய்தேன். ஓய்வுக்குப் பிறகு ராஜகோபலன் அவர்களின் நாவல் விளக்கத்தின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது.

நாவலின் கூறுமுறை

இந்தப் பகுதியில் ராஜகோபாலன் நாவலின் கூறுமுறைகளை விளக்கினார். அதனைக் கீழ்க்கண்டவாறு சுருக்கலாம்.

கோ. புண்ணியவான்

நாவலில் மொழி, வெளிப்பாடு, நடை, கால ஒழுகு ஆகியவை கூறுமுறைகளாக உள்ளன. இந்த நான்குமே நாவலில் கண்ணுக்குப் புலப்படக்கூடியவை. இந்த நான்கின் வழியாகத்தான் முதல் அங்கத்தில் பார்த்த அனுபவம், தத்துவம், தரிசனம் ஆகியவை உணர்த்தப்படுகின்றன. எனவே இந்த நான்குமே நாவலைப் புனைய தேவைப்படும் அத்தியாவசிய கருவிகள்.

அ. மொழி

நாவல் தனது வெளிப்பாட்டிற்கான மொழியின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது. நமக்குத் தெரிந்த மொழியில் எழுதுவதல்ல நாவல். நாவலுக்கு நியாயம் செய்யும் வகையில் அதன் மொழி இருக்க வேண்டும். மொழியின் வழியாகத்தான் நாவல் வெளிப்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளைக் கூர்மையாக்கிக்கொள்கிறது. அப்படி வட்டார மொழி, காலத்திய மொழி, சூழல் மொழி, பொதுமொழி, பேச்சு வழக்கு மொழி என அதில் பலவிதம் உள்ளன.  இம்மொழியைத் தேர்ந்தெடுக்க கதை நிகழும் காலம், சம்பவங்கள் நிகழும் காலம், கதைமாந்தர் இயல்பு, சமூகப் பின்னணி, கதைக்களன், கலாச்சார /பண்பாட்டுப் பின்னணி போன்ற காரணிகளை அதன் ஆசிரியர் அறிவது முக்கியம். அவ்வகையில் நாவலின் ஓட்டத்தை மீறாத, தனித்துத் தெரியாத உள்ளடங்கிய மொழி நாவலுக்குப் பொருத்தமானது.

ஆ. வெளிபாடு

நாவலின் சம்பவங்கள், நிகழ்வுகள் எவர் மூலம் வெளிப்படுகின்றன என்பது முக்கியமானது. நாவலின் ஆசிரியர் தன் நாவலின் அம்சங்கள் உரையாடல் வழியே  அல்லது விவரிப்பு வழியே வெளிப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.  சுய விவரிப்பு, உரையாடல், ஆசிரியர் கூற்று, சூழல் விவரிப்பு, குறிப்புணர்த்தல், படிமம்/உருவகம்  போன்ற கூறுகள் அனைத்தும் இந்த வெளிப்பாட்டுக்குத் துணை இருப்பவை.



சுப்புலட்சுமி மற்றும் மாலா

இ. நடை

மொழியுடன் தொடர்புடைய வாக்கிய அமைப்பு முறைகள் மற்றும் வெளிப்பாட்டு வடிவங்களை நடை என்கிறோம். அதாவது வாசகனுக்குச் சிந்தனை வழியாகவும் சம்பவம் வழியாகவும் உரையாடல் வழியாகவும் ஒரு விசயத்தைக் கடத்த முடியும். எந்த வடிவத்தைப் பயன்படுத்தி நாம் நாவலை நகர்த்திக்கொண்டு செல்கிறோம் என்பதே நடை. இதில்  சொல்லாட்சிகள், உவமைகள், கதைமாந்தர் உடல்மொழி, மனநிலை, சூழல் ஆகியவை  வெளிப்படும். அதே சமயம் வர்ணனைகளில் மற்றும் விவரணைகளில் கூர்மையாக வெளிப்படும்.

ஈ. கால ஒழுகு

நவீன நாவல்கள் முழுவாழ்வின் விரிவைக் காட்ட முயல்கின்றன. வெவ்வேறு காலப் பரிமாணங்களைப் பேசுவதன் வழி படைப்பை விரிவாக்குகின்றன; ஆழமாகவும் மாற்றுகிறது. படைப்பின் சம்பவங்களும் நிகழ்வுகளும் பயணிக்கும் பாதையே காலம். நாவல் பல பரிமாணங்களிலும் காலத்தைக் காட்டுவதன் மூலம் மையத் தரிசனமும், ஆழமும், விரிவும் துலங்கி வரும் என்பதால் காலத்தைக் கையாளுவதில்) கவனம் தேவை.

ராஜகோபாலன் அவர்களின் இந்த உரை நிகழும்போது நானும் அ.பாண்டியனும் பங்கேற்பாளர்களுக்கான அறை பிரிப்பதில் கொஞ்சம் வேலையாக இருந்தோம். ஆனால் பதிவு செய்யப்பட்ட இந்த உரைகளுடன் பங்கேற்பாளர்கள் அவ்வளவு தீவிரமாக இணைவார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குக் காரணம் ராஜகோபாலன் தயார் செய்து வைத்திருந்த குறிப்புப் பகிர்வுகள்தான். சொல்லும் கருத்துகளை மிகக் கூர்மையாகத் தகுந்த உதாரணங்கள் வழி அவர் அழுத்தம் கொடுத்துப் பகிர்ந்தது புரிதலுக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தியது.

அ. பாண்டியன்

இரு நாவல்கள் விவாதம்

ராஜகோபாலனின் இந்த உரைக்குப் பிறகு கையறு மற்றும் அக்கினி வளையங்கள் ஆகிய நாவல்கள் குறித்த உரையாடல் தொடங்கியது. கையறு நாவல் குறித்து ஆதித்தன் மகாமுனியும் அக்கினி வளையங்கள் குறித்து சல்மா தினேஷ்வரியும் உரையாற்றினர்.

ஆதித்தன் மகாமுனி

ஆதித்தன் தன் உரையில் நாவல் நடக்கும் களமான ரயில் தண்டவாளம் அமைக்கும் பகுதியில் உள்ள தகவல் போதமைகளைச் சுட்டிக்காட்டினார்.  நாவலில் நேதாஜி குறித்த குறிப்புகள், உணவுத் தயாரித்தல் குறித்த விவரணைகள், பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும் நிகழ்வுகள் குறித்த வர்ணனைகள் இடம்பெறாததைக் குறிப்பிட்டுப் பேசினார். அதுபோல ஜப்பானியர்களின் மனநிலை, அவர்களின் கல்வி முறை, மலேரியா காய்ச்சல் குறித்த விரிவான விளக்கம் இருப்பதையும் கோடிட்டுக் காட்டினார். ஆதித்தனைத் தொடர்ந்து பலரும் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

சல்மா தினேசுவரி

அ. ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவலைவிட கோ. புண்ணியவானின் கையறு மேம்பட்ட கலை வடிவம் என நான் பேசினேன். ஒப்பீட்டளவில் ரெங்கசாமியின் நாவல்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. ஆனால் அதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ரெங்கசாமிதான். அவர் சொல்வதைத்தான் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் நினைக்கின்றனர்; பேசுகின்றனர். மாறாக, ஒரு துயர் நிலத்தில் மனிதர்கள் தன்னியல்பாக அடையக்கூடிய கீழ்மைகளையும் இருளையும் பேச அவர் அனுமதிப்பதில்லை. அதுபோல சயாம் மரண இரயில் என்ற ஆர். சண்முகத்தின் நாவல் ஜனரஞ்சக இலக்கியம் மட்டுமே என்றேன். அதுபோல சயாம் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை எழுத்தில் கொண்டு வருவது சவாலானது என்றாலும் எழுத்தாளன் அந்தச் சவாலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றேன்.

தொடர்ந்து சல்மா தினேஸ்வரி அக்கினி வளையங்கள் குறித்துப் பேசினார். ஏற்கனவே அவர் அந்நாவலுக்கு எழுதிய கட்டுரையின் சாரமாக அந்த உரை அமைந்தது.

கட்டுரையை வாசிக்க

ஓய்வு

இந்த உரைக்குப் பிறகு, வகுக்கப்பட்ட அறை சாவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாலை 5.30 முதல் இரவு 8.00 வரை ஓய்வு. அதற்குள் குளித்துவிட்டு இரவு உணவை எடுத்துக்கொண்டு முகாம் அறைக்குள் வந்துவிட வேண்டும். மூன்று பேர் வராததால் நானும் அ.பாண்டியனும் தனி அறைகள் எடுத்துக்கொண்டோம். அறைக்குச் சென்ற பிறகு மீண்டும் ஒருதரம் இரண்டாவது பாகத்தை ஒளிபரப்பி செவிமடுத்தேன். இந்த முகாமுக்கு வந்தவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கு முழுமையாகத் தகவல்களை வழங்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். தவறான புரிதலையோ குத்துமதிப்பான விளக்கங்களையோ வழங்குவது முகாமின் நோக்கத்தைக் குழைக்கும்.

இதுபோன்ற முகாம்களைப் பெரிய இலக்கிய ஆளுமைகள் முன்வந்து நடத்த வேண்டும். அவர்களே அதற்கு மையமாக இருக்க வேண்டும். அப்படி யாரும் இணைய முடியாத சூழலில் அதன் நோக்கம் சிதறிவிடாமல் இருக்க கூடுதலான உழைப்பு அவசியமானது. எனவே ஒவ்வொரு அமர்வுக்கு முன்பும் நான் என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். அ.பாண்டியன், கோ.புண்ணியவான், கி.இளம்பூரணன் போன்ற நண்பர்கள் உடனிருந்தது பெரும் ஆறுதல்.

ஏழு மணிக்குக் கீழே இறங்கினேன். இரவு உணவு சுமாராகவே இருந்தது. அறையில் இருந்த குளியல் தொட்டியில் மிதந்துவிட்டு வந்ததால் புத்துணர்ச்சி திரும்பியிருந்தது.

சிகண்டி

பொதுவாக நான் நேர ஒழுங்கை முறையாகக் கடைப்பிடிப்பவன். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுதான். நாம் ஒரு நேரத்தைத் திட்டமிட்ட பிறகு பெரும்பாலோர் அதனைப் பின்பற்றுகின்றனர். குறிப்பிட்ட சிலர் தாமதமாக வரும்போது சரியான நேரத்திற்கு வந்த பங்கேற்பாளர்களுக்கு என்ன மரியாதை? நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்காததற்கு என்ன காரணம் சொன்னாலும் அது நமது நேர நிர்வாகச் சிக்கலில்தான் உள்ளது. நமக்குப் பணத்தைக் கொடுக்கும் பதவி உயர்வைக் கொடுக்கும் ஒன்றுக்கு நேரத்தை ஒருபோதும் சமரசம் செய்வதில்லை. கோப்புகளைக் கையில் சுமந்து கொண்டு வரிசையில் நின்று காத்திருப்போம். ஆனால் கலை அல்லது அறிவு செயல்பாடு என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது.  அதில் சாவகாசத்தைக் கடைப்பிடிக்கிறோம். அதில் தாமதப்படுத்துவதை ஒரு சாகசமாகவும் சாமர்த்தியமாகவும் நினைக்கிறோம்.

தொடர்ந்து முகாமில் தாமதங்கள் ஏற்படுவது எனக்குக் கடும் எரிச்சலைக் கொடுத்தது. நான் இதை மென்மையாக அணுகக்கூடியவன் அல்ல. அது எனக்கே தெரியும். அதனால் உணவு பொறுப்பாளர் புஸ்பவள்ளியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து அடுத்த அமர்வைத் தொடங்கினேன்.

இவ்வமர்வில் சிகண்டி குறித்து கி.இளம்பூரணன் பேசினார். என் பல்வேறு சிறுகதைகளில் உள்ள பகுதிகளைச் சுட்டிக்காட்டி அது நாவலில் எவ்வாறு புதிய இடங்களைத் தொடுகிறது எனச் சுட்டிக்காட்டினார். நாவலின் இருளுலகம் அவருக்குக் கொடுத்த அனுபவத்தைத் துல்லியமாக விளக்கினார். முகாமுக்கு வந்த பலரும் நாவலை வாசித்திருந்தது மனநிறைவை கொடுத்தது. நாவலில் வரும் தீபனின் கதாப்பாத்திரம் உண்மையில் அந்த வயதில் அத்தனை மனக்கொந்தளிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் உண்டா என்ற கேள்வியைச் சண்முகாவிடம் பாண்டியன் முன்வைத்தார். அவர் அவ்வயது இளைஞன் என்பதால் அதன் நம்பகத் தன்மையை அறிய முயன்றார். அது நம்பகமானதுதான் என பதில் வந்தது.

இரண்டு காணொலிகள்

ஏறக்குறைய இரவு மணி 9.30ஐ நெருங்கியபோது அன்றைய அட்டவணைபடி மேலும் இரு காணொலிகள் இருந்தன. முதலாவது அக்கினி வளையங்கள் குறித்த சு. வேணுகோபாலின் காணொலி. அதனை முதலில் ஒளிபரப்பினேன். அடுத்து நாவலின் உத்திகள் குறித்த ராஜகோபலனின் இறுதி காணொலி.

சு. வேணுகோபால் அக்கினி வளையங்கள் குறித்து

இதில் உருவகம், கதாப்பாத்திர உருவாக்கம், தகவல்கள் என விரிவாக விளக்கினார். இந்தக் காணொலி ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தபோதே தென்னரசுவிடமிருந்து அழைப்பு வந்தது. தென்னரசு வல்லினம் விருது பெரும் மா. ஜானகிராமன் அவர்களை அழைத்து வரும் பொறுப்பை ஏற்றிருந்தார். அவரை விடுதியில் இறக்கிவிட்டு விடைபெற்றார். ஜானகிராமனை அ. பாண்டியன் பொறுப்பில் விட்டுவிட்டு நான் அன்றைய முகாமை முடித்து வைக்கச் சென்றேன்.

எனக்கும் சோர்வாகவே இருந்தது. இறுதி விளக்கங்களைக் கூறிவிட்டு அன்றைய அமர்வை முடித்துக்கொண்டோம். கண்கள் செருகின. ஆனால் ஜானகிராமன் இன்னும் இரவு உணவு உண்ணாமல் இருந்தார். எனவே அவரை அழைத்துக்கொண்டு நான், பாண்டியன், செல்வம், நிமலன் இரவு உணவகத்தைத் தேடி அலைந்தோம். தைப்பிங்கில் குறிப்பிடத்தக்க உணவு கொய்தியாவ் கோரெங். அவருடன் நாங்களும் சாப்பிட்டோம்.

அறைக்குத் திரும்பியபோது இரவு 11.00ஐ நெருங்கியது. நாளை காலையில் 8.00 மணிக்கு முகாம் தொடங்கும். நேரலை வழியான சந்திப்புகளை முன்னமே சோதித்துப் பார்த்துவிட்டது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. விருது விழாவுக்குக் கொஞ்சம் பூக்கள் வாங்க வேண்டியிருந்தது, அப்போதுதான் நினைவுக்கு வந்தது. கனவு முழுவதும் பூக்கள்.

இரண்டாவது நாள் முகாம்

மா. சண்முகசிவா

இரண்டாவது நாள் முகாமுக்கும் சிலர் தாமதமாக வந்ததால் என்னால் அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சோற்றை எது கொடுக்குமோ அதற்காகக் கடைப்பிடிக்கும் ஒழுங்கை அறிவுத்துறைக்காகக் கொடுக்காவிட்டால் அது நம்மைவிட்டு விலகியே நிற்கும் எனக் கடுமையாகவே பேசி விட்டேன். இப்படிப் பேசிய பிறகுப் பின்னர் நான் வருந்துவதுண்டு. ஆனால் இம்முறை கோபம் அதிகரித்தபடியே சென்றது.

இந்த முகாமுக்காகப் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. விடுதி நிர்வாகத்துடன் சிக்கல்கள் இருந்தன. அனுப்பி வைக்கப்பட்ட வீடியோவை முகாமின் நேர ஒழுங்குக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துச் செறிவாக்குவது கடும் பணிச்சுமை. கோவிட் தொற்றினால் கடைசி நேரத்தில் வர முடியாது எனச் சொன்னவர்களால் குறைந்தது 500 ரிங்கிட்டாவது நட்டமானது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்து நேரலையில் இம்முகாமுக்கு இணையும் நண்பர்கள் அக்கறை மற்றும் அன்பின் அடிப்படையிலேயே அதைச் செய்கின்றனர். அவர்கள் இணையும் நேரம் இந்திய நேரம் அதிகாலை 6.00 மணி. அப்படியிருக்கும்போது எல்லா உழைப்பின் மேலும் ஒரு அனாவசியத் தன்மையை வீசிவிட்டு நுழைவது அத்தனையையும் அவமதிப்பது போன்றது.

மூன்று இளம் எழுத்தாளர்கள்   

ஹரிராஸ்குமார், ஆதித்தன், அரவின்குமார்

இரண்டாம் நாள் முதல் அமர்வாகப் புதிதாக எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களான அரவின் குமார், ஹரிராஸ்குமார் ஹரிஹரன், ஆதித்தன் மகாமுனி ஆகியோருடன் உரையாடல் நிகழ்ந்தது. அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். தாங்கள் இலக்கியத்துக்கு வந்த வழி குறித்துக் கூறினர். இலக்கியத்தில் ஏற்படும் சர்ச்சைகள் குறித்த அவர்கள் நிலைபாடு, இளைஞர்கள் தனித்துவமாகச் செயல்படாதிருக்க அவர்கள் முன் இருக்கும் தடைகள் என விரிவாக ஒரு மணிநேரம் உரையாடல் தொடர்ந்தது. அவர்களது நம்பிக்கையான பதில்களால் பங்கேற்பாளர்களும் உற்சாகம் அடைந்தனர்.

கேள்வி – பதில் அங்கம்

சரியாக 9.00 மணிக்கு சு. வேணுகோபால் மற்றும் ஜா. ராஜகோபாலன் ஆகியோர் நேரலையில் இணைந்தனர். முதலில் ராஜகோபாலன் சிகண்டி குறித்த தன் கருத்துகளை முன்வைத்தார். தான் நாவல் குறித்து விளக்கிய பகுதிகளோடு சிகண்டி எவ்வாறு ஒத்துப்போகிறது எனக் கூறினார். தொடர்ந்து சு. வேணுகோபால் கையறு நாவல் குறித்துப் பேசினார். அதன் நேர்மறை எதிர்மறை தன்மைகளை ஒட்டி அவர் உரை இருந்தது. தொடர்ந்து பங்கேற்பாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.

தினேஷ்வரி, நாவலில் வரக்கூடிய தரிசனங்கள் எதிர்மறையானதாக இருக்கலாமா? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ராஜகோபாலன் எதிர்மறை வாழ்வோ இருளுலக வாழ்வோ இருக்கலாம். ஆனால் அதிலிருந்து மீண்டு எழும் நேர்மறையான அம்சமே தரிசனமாகும் என்றார். தொடர்ந்து அரவின் குமார் அதிக புற வாழ்வின் அனுபவம் இல்லாத தனக்கு ஒரு நாவலை எவ்வாறு நிலம் சார்ந்து உருவாக்குவது என்ற தயக்கம் உள்ளதை ஒட்டி கேள்வியை முன்வைத்தார். அக உலகத்தை விரிவாக்குவதன் வழியாகத்தான் அந்த இடைவெளியை நிரப்ப முடியுமென ராஜகோபாலன் கூறினார். இப்படித் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்க விடுதி முறைபடி உணவு தயாராக வெளியில் இருந்ததால் மூன்று மூன்று பங்கேற்பாளராக அனுப்பி வைத்தேன். அப்போதும் சிலர் கலந்துரையாடல் முடிந்த பிறகுதான் செல்வோம் எனப் பிடிவாதமாக இருந்தனர். அது நல்ல பிடிவாதம்தான். ஆனால் நேரம் விரைவாகத் துரத்திக் கொண்டிருந்தது.

புதிய பங்கேற்பாளர்கள் 

முகாமின் இறுதி அங்கமாகக் கல்லூரியில் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்களான திவாகர், மனோ, சத்தியா மற்றும் இளம் ஆசிரியர்களான ஷாலினி, மீரா, டினேஷ்வரி ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அவர்களிடம் இருக்கக் கூடிய அடிப்படையான கேள்விகளுக்குப் பிற பங்கேற்பாளர்கள் பதில் வழங்க பணிக்கப்பட்டது.

இந்த அங்கம் நடந்துகொண்டிருக்கும்போதே எழுத்தாளர் மா.சண்முகசிவா உள்ளே நுழைந்தார். விருது விழாவின் சிறப்பு விருந்தினரான அவர் முகாமில் கலந்துகொள்பவர்களைச் சந்திப்பதற்காகச் சற்று முன்னமே வந்துவிட்டார். புதிய படைப்பாளிகளைச் சந்திப்பதில் அவருக்கு எப்போதும் இருக்கும் ஆர்வத்துடன் சில கருத்துகளை முன்வைத்தார். மனத்தடைகள் இல்லாமல் எழுதுவதன் அவசியத்தைக் கூறினார்.

நிறைவு

பங்கேற்பாளர்கள் அனைவரும் முகாமில் தாங்கள் பெற்றுக்கொண்டதைச் சுருக்கமாகக் கூறினார். சரியாக 12.15க்கு முகாம் நிறைவு பெற்றது.

1 comment for “நாவல் முகாம்: ஒரு பதிவு

  1. March 12, 2022 at 12:20 am

    நான் கவனித்த வரையில் , இளைஞர்களான ஹரிராஸ்குமார், ஆதித்தன், அரவின்குமார் ஆகியோரிடம் இலக்கியம் குறித்தும் அதனை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் தெளிவு இருப்பதைக் காண்கிறேன்… வெறுமனே வெட்டிவேடிக்கை பேச்சில் அவர்கள் தங்களை இணைத்து கொண்டதில்லை. அவர்கள் அதனைப் பொருட்படுத்துவதும் இல்லை. முக்கியமாக அவர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள்; வாசித்தது குறித்து பேசுகிறார்கள்(எழுதுகிறார்கள்). மிக முக்கியமாக அவர்களிடம் உரையாட முடிகிறது. மூவருக்கும் என் வாழ்த்துகள்… ?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...