“நான் ஒரு திரிபுவாதி” – அக்கினி சுகுமார்

மலேசிய இலக்கியச் சூழலில் அக்கினியின் எழுத்துகள் தனித்துவமானவை. மலேசியப் புதுக்கவிதை வரலாற்றின் தொடக்கக் காலத்தில் அதன் போக்கை தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக இயங்கியவர் பின்னாட்களில் அறிவியல் கட்டுரையாளராக வெகுமக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டார். நகைச்சுவையான பாணியில் சிக்கலான தகவல்களையும் எளிய மக்களிடம் சேர்க்கும் வல்லமை உள்ள எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இவர். கவிதை, நாவல் என இவர் புனைவுகளில் இயங்கியிருந்தாலும் கட்டுரை துறையில் இவர் மலேசிய அ-புனைவுலகுக்குக் கொடை செய்தவர் என தாராளமாகக் கூறலாம். 2019இல் மரணித்த அவரது இறுதி நேர்காணல் இது.

உங்கள் இளமை காலத்தை நினைவுகூற முடியுமா?

அக்கினி: என்னுடைய இளமை காலம் என்பது இரு வேறு பகுதிகளைக் கொண்டது. ஒன்று மலாயா; மற்றொன்று தமிழகம். என் மூதாதையர்கள் குறிப்பாக என் தாத்தா, தமிழ்நாடு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எனும் ஊரிலிருந்து இந்நாட்டிற்கு சஞ்சிக்கூலியாக வந்தவர். என் தந்தையும் தாயாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். குடும்பம் இங்கு உருவானது. எனக்கு ஒரு மூத்த சகோதரியும் சகோதரரும் இருக்கிறார்கள். நாங்கள் ஈப்போவில் பிறந்தோம். நான் கைக் குழந்தையாக இருந்தபோது, எங்கள் தாயார் மீண்டும் தமிழகத்துக்கே சென்றுவிட்டார். அவர் எங்கு இருக்க விரும்பினாரோ, எங்களையும் அங்கு அழைத்துச் சென்றுவிட்டார். தந்தை மட்டும் இங்கிருந்து எல்லா தந்தைகளைப் போலவே சம்பாதித்து அனுப்புவார். தாயார் எங்களை தமிழகத்தில் வளர்த்தார்.

ஐந்து வயதில் நான் ஈப்போவில் என் தந்தை வேலை செய்த கடையில் கொஞ்ச காலம் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவ்வயதில் எனக்கு நினைவில் உள்ள விடயமென்றால் ‘பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும்போது அழுகின்றாய்’ என்னும் பாட்டுதான். அந்தக் காலத்தில் அதுதான் பிரபலமான பாட்டு. அதேபோல ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’ என்ற பாடல். இந்த இரண்டு பாடல்களையும் இரண்டு வரிகளில் மட்டுமே பாடத் தெரியும்.

அதிலும், ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’ பாடல் பாடும்போது என் தந்தை ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் ‘பிறக்கும் போது அழுகின்றாய் இறக்கும்போதும் அழுகின்றாய்’ என்று மேல் மாடியில் நின்று பாடினால், தந்தையாரிடம் வேலை செய்கிறவர்கள், “உன் மகனுக்கு ஐந்து வயதிலெல்லாம் என்ன ஆயிற்று?” எனக் கேட்பார்கள். என் தந்தையும் அங்கிருந்து வந்து ‘இந்தப் பாட்டெல்லாம் உனக்கு எதற்கு?’ என்று தலையில் கொட்டிவிட்டுப் போவார்.

பிறகு நான் தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது ஆறு வயது பையனைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டுமென்று சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்திற்குச் சென்ற நினைவுகள் அப்படியே உள்ளன. நான் தமிழ்நாட்டுப் பையனைப்போல பள்ளிக்கூடம் செல்லவில்லை. மலேசியப் பையன் போல தமிழ்நாட்டின் கிராமத்துப் பள்ளிக்குச் சென்றேன். காலில் ஒரு பக்கம் வெள்ளையாகவும் இன்னொரு பக்கம் கருப்பாகவும் இருக்கும் காலணியை மாட்டிக்கொண்டு, மலாயாச் சட்டையை அணிந்துகொண்டு, தோலில் புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். எனது உடை, காலணி, பள்ளிப்பை போன்றவற்றால் பள்ளிக்கூடத்தில் நான் ஒரு வேடிக்கை பொருள்போல கவனிக்கப்பட்டேன். ஆசிரியர்கூட அருகில் வந்து சட்டையைத் தொட்டுப்பார்த்து, `நன்றாக இருக்கிறது தம்பி, எங்கு வாங்கினாய்?’ எனக் கேட்பார்.

தமிழ்நாட்டில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எதையும் சொல்கிறபடி செய்யும் பையனாக இருந்ததாக எனக்கு நினைவில்லை. எதையாவது ஏறுக்குமாறாய் செய்துகொண்டே இருப்பேன். ஆனால் இப்படி நான் குறும்பாக இருப்பதே எங்கள் வீட்டில் பலருக்குப் பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான் சட்டெனக் கேள்வி கேட்டுவிடுவது அவர்களுக்குப் பிடித்திருந்தது. தெளிவாகப் பேசுவதாகச் சொல்வார்கள். என்னுடைய பாலிய வாழ்க்கை இப்படித்தான் வீட்டில் நல்ல பிள்ளையாகவும் தெருவில் ராங்கி பிடித்தவனாகவும் இருந்தது.

கல்விச்சூழல் பற்றி சொல்லுங்கள்.

அக்கினி: கல்வியில், சிறந்த மாணவனாக விளங்கினேன். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தப் பிறகு கரூரில் ஓர் அரசுக் கல்லூரிக்குச் சென்றேன்.  கல்லூரி வாழ்க்கை அல்லவா! முதலில் ஆட்டம்; பிறகு படிப்பு. அப்போதே முதல் நான்கு மாணவர்களில் ஒருவனாக வருவேன். அதனாலேயே என் குடும்பத்தில் எனக்கு மதிப்பு அதிகம். ஏனெனில் உறவினர்களில் யாரும் முதல் நான்கு நிலையில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களாக இல்லை.

எங்கள் குடும்பம் வசதியான குடும்பம் எனச் சொல்ல முடியாது. தாத்தா பாட்டி வசதியானவர்கள். என் அப்பா அப்படியல்ல. எங்கள் தாத்தாவிடம் அப்பா ஒரு வேலையாளாக இருந்தவர். அப்பா, அம்மா இல்லாததால் எங்கள் தாத்தா எங்கள் அப்பாவைப் பிள்ளையாகத் தத்தெடுத்து, அவரை மலாயாவுக்கு கொண்டு வந்து, இங்கு அவருக்கு கடையில் வேலை கற்றுக்கொடுத்து, கூடவே வைத்திருந்தார். குறிப்பிட்ட காலம் வந்ததும் அவரின் மகளையே கட்டிக்கொடுத்துவிட்டார். சம்பாதிக்க வேண்டும், பணம் சேர்க்கவேண்டும் என்கிற எண்ணம் எங்கள் தாத்தாவிற்கு இருந்தது போல எங்கள் தந்தைக்கு இருக்கவில்லை. முடிந்த அளவிற்கு எங்கள் தாத்தாவின் பணத்தையும் எங்கள் தந்தையார் அழித்திருப்பார் என்றே நம்புகிறேன். குடும்பத்தில் கொஞ்சம் வறுமை இருந்தது. ஆனால் அது அப்பட்டமாக வெளிப்படாமல் இழையோடிக்கொண்டிருந்தது. ஆக வெளியில் யாருக்கும் அது தெரியாது. நல்ல துணிமணிகள், கைக்கடிகாரங்கள் என அணிந்திருந்தாலும் வறுமை இருக்கத்தான் செய்தது.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரண்டாம் ஆண்டு காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக இங்கு அரசாங்கக் கொள்கைகள் மாறின. தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்களின் கடப்பிதழின் கெடு முடிந்துவிட்டால் அதனைப் புதுப்பிக்க மலேசியா வந்தாக வேண்டும் என்கிற கட்டாய நிலை ஏற்பட்டது. அதனால் வேறு வழியில்லாமல் கடப்பிதழைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் படிப்பைத் தொடரலாம் என்றெண்ணினேன். ஆனால் மலேசியா வந்த நான், மீண்டும் தமிழகம் செல்லவில்லை. அதன் பிறகு வாழ்க்கை இங்கேயே அமைந்துவிட்டது.

‘நமது குடும்பத்தில் எப்போதும் வறுமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்பாவும் எத்தனை காலம்தான் உழைத்துக் கொண்டிருப்பார்? மலேசியா செல்லும் நீ அங்கே உள்ள வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அங்கேயே படித்து, அங்கேயே இருந்துவிடு’ என எங்கள் தாயாரும் சொல்லிவிட்டார். குடும்பத்தை நான் இதன்வழி காப்பாற்றுவேன் என அம்மா நம்பியிருக்கலாம். ஆனால் என்னைப்பற்றித்தான் எனக்கு தெரியுமே. இருந்தும் எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இருந்தது; வாசிப்பின் மீதும் ஆர்வம் இருந்தது. நூலகத்திற்குச் சென்றால் நாவல்களை விரும்பிப் படிப்பேன். தீவிர வாசகனாக இருந்தேன். மலேசியா வந்த பிறகும் அப்படித்தான் இருந்தேன். இரவு நேர வகுப்பிற்குச் சென்று ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தேன்.

வாசிப்புப் பழக்கம் எங்கு யார் வழி உருவானது?

அக்கினி:  எனக்கு தாய்மாமா ஒருவர் இருந்தார். இளம் வயதிலேயே பள்ளி ஆசிரியர் ஆகிவிட்டார். ஏறக்குறைய இருபத்து மூன்று அல்லது இருபத்து நான்கு வயது இருக்கும். அவர் பொதுவுடமைவாதி. தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். அவருக்கும் எனக்கும் ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகள் வயது இடைவெளி இருக்கும். அப்படியிருந்தும் என்னை அவரது தோழனாகக் கருதினார். எங்குச் சென்றாலும் என்னையும் மிதிவண்டியில் வைத்து கூட்டிச்செல்வார். யாருக்கும் தெரியாமல் அவர் புகைபிடிப்பார். அதனை வெளியில் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே மிட்டாய்கள் வாங்கிக் கொடுப்பார்.

அவருடனேயே சுற்றிக்கொண்டிருந்ததால் அவர் வைத்திருந்த கார்ல் மார்க்ஸ், லெனின், ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள், பொதுவுடமை சார்ந்த புத்தகங்கள், நாவல்கள் என என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லுவார். அந்த வயதில் அந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது சில விடயங்கள் புரியும்; சில விடயங்கள் புரியாது. குறிப்பாக ரஷ்யப் பெயர்கள். அது என் வாயில் நுழையவே இல்லை. ஆனால் அந்தக் கதாபாத்திரங்கள் மனதில் நின்றன. இதென்ன தொல்லையாக இருக்கிறதே என நினைக்கும் பொழுதுதான் எங்கள் ஊரிலேயே இருந்த சின்ன நூலகத்தில் என்னை மாமா சேர்த்துவிட்டார். அவரே அதற்கான கட்டணத்தைக் கட்டி என்னை உறுப்பினர் ஆக்கினார். நானும் பள்ளிக்கூடம் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டு, நூலகத்தில் நுழைந்து ஒரு சுற்று சுற்றி, ஒரு மணி நேரத்தை அங்குச் செலவு செய்துவிட்டு பள்ளிக்குச் செல்வேன். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும் மீண்டும் ஒரு மணி நேரத்தை நூலகத்தில் செலவழிப்பேன். அந்தத் தனியார் நூலகம் சாலையோரத்தில் இருக்கும்.

நாவல்கள் மீது ஆர்வம் ஏற்பட மற்றொரு காரணம் எனது தாயார். அவர் மிகத் தீவிரமான டாக்டர்.மு.வ.வின் வாசகி. தினமும் வேதம் படிப்பதுபோல அவரது புத்தகத்தைப் பத்துப் பக்கங்களாவது படித்துவிடுவார். அப்போது நான் நாவல் படிக்காவிட்டாலும், `கரித்துண்டு’ முதல் `கள்ளோ காவியமோ’ வரை நாவல்களின் பெயர்கள் எல்லாம் என் நினைவில் இருக்கும். பின்னர் இதே நூல்களை நான் நூலகத்தில் எடுத்துப் படித்த காலக்கட்டங்களில், ‘மு.வ’தான் தொடக்க காலங்களில் எனக்கு அறிமுகமானார். என் அம்மாவின் தாக்கம் எனக்கு வந்தது. மு.வ- வுக்கு பிறகு அகிலன் என படிக்கலானேன். ஆனால் எனக்கு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நா.பார்த்தசாரதி. அந்தக் காலத்தில் அவர்களைப் படித்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய வேட்கை, லட்சியம்.

இடைப்பட்ட காலங்களில் ஜெயகாந்தனும் அவரது நூல்களும் எனக்கு அறிமுகம் ஆகின. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், சமூகம் என்பது நான்கு பேர், தப்புத்தாளங்கள், இலக்கணம் மீறிய கவிதை, ஜெயகாந்தனின் கட்டுரைகள் என என்னை ஈர்த்தன. அவர் கம்யூனிஸ்டாக இருந்ததும் அது அவரது கதைகளில் வெளிப்பட்டதும் ஈர்ப்புக்கான காரணமாக இருக்கலாம். நான் ஒரு தீவிரமான ஜெயகாந்தன் ரசிகனாகவே இருந்தேன். மலேசியாவிற்கு வந்த பிறகும் ஜெயகாந்தன் ரசிகனாகவே இருந்தேன்.

மலேசிய எழுத்தாளர்கள் பலரையும் போலவே, இளமைக் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தும் ஜெயகாந்தன் வழி இலக்கியத் தூண்டுதல் பெற்றுள்ளீர்கள். குடும்ப வறுமையைப் போக்க வேலைக்கு எங்குச் சேர்ந்தீர்கள்?

அக்கினி: மலேசியா வந்தபின் இரண்டு வாரங்கள் மட்டுமே சுவாரசியமான கலாச்சார  பேதம் தெரிந்தது. பிறகு வேரைப் பிடுங்கி வேறிடத்தில் நட்ட கதையாகிப் போனது. அப்போது நான் பத்தொன்பது அல்லது இருபது வயது பையன். என்னை அப்படியே இன்னொரு நாட்டிற்கு கொண்டு வந்து வேறு மொழிகள், வேறு வகையான முகங்கள் என முற்றிலும் மாறுபட்ட இடத்தில் புழங்கவிட்டது எனக்குப் பிடிக்கவில்லை. திரும்பத் தமிழகம் சென்றுவிட வேண்டும் என்றே விரும்பினேன். தந்தையாரிடம் முறையிட்டேன். வறுமையில் அவரால் டிக்கட் வாங்கிக் கொடுத்து படிப்பைத் தொடர அனுப்பக்கூடிய நிலையில் இல்லை. அப்படிச் சென்றால் அம்மா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதும் அப்பாவிற்கு தெரியும். எனக்கு நண்பர்களே கிடையாது. அப்படியொரு காலகட்டத்தில் என் தந்தையுடன் வி.எஸ்.மணியம் எனும் புத்தகம் படிக்கக்கூடிய நண்பர் ஒருவர் இருந்தார். அவரின் நட்பு கிடைத்தப் பிறகு மீண்டும் புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலேசியாவின் சூழலுக்கு நான் தயாராவதற்கு எனக்கு உதவியாக இருந்தவர் மலாக்காவைச் சேர்ந்த ஒரு பாடகர். அவர் பெயர் திரு. தாமஸ் மெத்யூஸ். இன்னமும் இருக்கிறார். அவருக்கு ஓர் இசைக்குழு  பழைய பெட்டாலிங் ஜெயாவில் இருந்தது. அங்கு ஒத்திகைக்குச் செல்வார். என்னையும் அழைத்துச் செல்வார். இந்தச் சூழல் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஒரு வருட காலம் இப்படியே கழிந்தது.

பிறகு எனக்கு ஒரு வேலை வேண்டும் என்கிற சூழல் வந்தது. தமிழிலேயே படித்து வளர்ந்த பையன் என்ன வேலை செய்ய முடியும் என்ற குழப்பம் அப்பாவுக்கு இருந்தது. ஆரம்பத்தில் அப்பாவிற்குப் பழக்கமான சீனரின் கார் பழுது பார்க்கும் கடையில் வேலைக்குச் சேர்ந்தால் தொழில் பழகிக்கொள்வேன் என நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். இதற்கு இடையில் என்னுடன் இருந்த நண்பர் வி.எஸ்.மணியம் எனக்கு அது சரியாக வராதென்று முடிவெடுத்துப் பத்திரிகை அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுக்க அழைத்துக் கொண்டு சென்றார்.

எனக்கு நினைவு இருக்கிறது. 1972-கடைசியில் என்னை முதன் முதலாக அவர் லெபோ அம்பாங்கில் இருந்த ‘தமிழ்நேசன்’ பத்திரிகைக்கு அழைத்துப் போனார். மணிமன்றத்தில் இருந்தவர் என்ற அடிப்படையில் பிழைத்திருத்தும் பகுதியில் பணியாற்றிய கவிஞர் காரைக்கிழாரிடம் பேசினார். காரைக்கிழாரும் அது இங்கு சரிபட்டு வராது என்றும் இங்கு வேலைக்கு ஆள் எடுக்கும் முறையும் வேறுபட்டது என விளக்கி, வேண்டுமெனில் ‘தமிழ்மலர்’ என்னும் மற்றொரு பத்திரிகையில் முயற்சிக்கலாம் என்றார்.

அங்கும் ஒரு தடவை சென்றோம். அங்கிருந்த நிர்வாகியைச் சந்தித்தபோது வேலை இல்லை என்று சொல்லிவிட்டார். சோர்ந்துபோய் பேருந்து நிலையத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தோம்.  அப்போது அந்தப் பத்திரிகையைச் சார்ந்த ஒருவரைப் (அவர் எடிட்டர் பி.எல்.கே.ராஜன் என்பது பிறகு தெரியவந்தது) பார்த்ததும் எனது நண்பர் நாங்கள் வந்திருந்த விபரத்தைக் கூறினார். அவரும் ஒரு கணம் என்னைப் பார்த்துவிட்டு “வேலை கொடுக்க  மாட்டார்கள் ஐயா” என்றார். எங்களுக்கும் மேலும் ஏமாற்றமாக இருந்தது. இருந்தும் அவர் என் நண்பரிடம் ஒரு யோசனைக் கூறினார். இரண்டு வாரம் கழித்து மீண்டும் அலுவலகம் வந்து, பையன் தொழில் கற்றுக்கொள்ள விரும்புகிறான், சம்பளம் ஏதும் வேண்டாம். தொழில் கற்றுக்கொண்டால் போதும் எனச் சொல்லச் சொன்னார். சம்பளம் வாங்காமல் வேலைக்கு ஆள் கிடைக்கிறது என நினைத்துக்கொண்டு உடனே வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்றார். அது எனக்குப் பிடிக்கவில்லை. என் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வந்திருக்கும் நான் சம்பளம் இல்லாத வேலையை ஏன் செய்ய வேண்டுமென இருந்தேன். பிறகு எனது நண்பர் என்னைச் சமாதானம் செய்தார். முதலில் இடம் கிடைப்பதுதான் முக்கியம். அதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால் என் அப்பா என்னை கார் பட்டறையில் சேர்த்துவிடுவார் என்றார்.

ஒரு வாரம் கழித்து வந்து அனுபவத்திற்காக சம்பளம் இல்லா வேலை கேட்டோம். வேலை கிடைத்தது. நிலைமை கருதி நானும் அதற்கு ஒப்புக்கொண்டு இரண்டு மாத காலம் வேலை செய்தேன்.

எப்படி இருந்தது பத்திரிகை துறை அனுபவம்?

அக்கினி: பெரிய வேலை எல்லாம் கிடையாது. சில இளைஞர்களும் முதியவர்களும் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அதுதான் ஆசிரியர் குழுமம் என்பது எனக்குத் தாமதமாகவே தெரிந்தது. அவர்களுக்கு எதுவும் தேவையென்றால் கீழே உள்ள சிற்றுண்டியில் வாங்கிகொண்டு வரவேண்டும். வந்திருக்கும் கடிதங்களைப் பிரித்து முறைப்படி அடுக்கி வைக்க வேண்டும்.  அந்தக் காலத்திலேயே டெலிபிரிண்ட் என ஒன்று இருந்தது. அனைத்துலக செய்தி நிறுவனங்களுக்கான மிசின் அது. அது இயங்கிகொண்டே இருக்கும். உலகச் செய்திகள் அதில் வந்துகொண்டேயிருக்கும். சமயங்களில் அதனுள்ளே காகிதங்கள் மாட்டிக்கொள்ளும். நான் அதனைச் சுத்தப்படுத்த வேண்டும். மீண்டும் பேப்பர் ரோலை அதனுள்ளே வைக்க வேண்டும். இந்த வேலையைச் சந்தோசமாகச் செய்தேன். என்னால் செய்ய முடிந்த வேலை. 

கடிதம் பிரித்து அடுக்கும் வேலைகூட அப்போது கடினமாகத்தான் இருந்தது. ஏனெனில் அப்போதைய கடிதம் அடுக்கும் வேலை இப்போதுபோல அல்ல. அப்போதெல்லாம் பத்திரிகை அலுவலகங்களுக்குக் கடிதங்கள் வந்தால் இரண்டு சாக்கு மூட்டைகளில் வரும். குறைந்தது நாள் ஒன்றுக்கு எழுநூறு கடிதங்கள். சுற்றுவட்டாரத்தில் இருக்கிற அனைத்துத் தோட்டங்களில் இருந்தும் கடிதங்கள் வரும்.

தோட்ட மக்களும் பெண்களும் அதிகமாக எழுதுவார்கள். வந்திருக்கும் கடிதங்களை எடுத்துப் பிரித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பவேண்டும். அதுவே பெரிய வேலையாகவும் போராட்டமாகவும் இருந்தது. ஆனால் எனக்குச் சம்பளம் இல்லை. இரண்டு மாதம் கழித்து, என் வேலையைக் கவனித்த நிர்வாகம் எனக்கு அறுபது வெள்ளி சம்பளம் கொடுத்தது. அப்போது அந்தப் பணம் எனக்கு பெரிய தொகை. அறுபது வெள்ளி சம்பளத்தில் வேலையைத் தொடங்கினேன். என்னுடைய பத்திரிகைத்துறை அனுபவமும் அப்படித்தான் உருவானது.

 அன்றைய பத்திரிகை தொழில்நுட்பங்கள் குறித்து கொஞ்சம் விளக்குங்கள்.

அக்கினி: அப்போதைய பத்திரிகை உலகம் முற்றிலும் வேறு. அப்போதைய உலகச் செய்தி நிறுவனங்கள் தரமாக இருந்தன. நாம் அவர்களுக்கு சந்தாதாரர்கள் ஆவதன் மூலமாக நமக்கு டெலிபிரிண்ட் கொடுக்கப்படும். அதன் மூலம் நமக்கு உலகச் செய்திகள் வந்துகொண்டிருக்கும். நாம் அதனை மொழிபெயர்த்துக் கொள்ளலாம். உள்ளூர் செய்திகள் நமக்கு வேண்டுமெனில் அன்றைய காலக்கட்டத்தில் ‘மலாய் மெயில்’ (malay mail), எக்கோ(ECHO), என்.எஸ்.டி (N.S.T) பத்திரிகைகளை எடுத்து வைத்துக்கொண்டு அதில் வந்துள்ள செய்திகளை மொழிபெயர்த்துப் பயன்படுத்துவோம். இதுதான் ஆரம்பக்காலத் தமிழ்ப் பத்திரிகைகளின் நிலை. ‘கம்போசிங்’ எனும் அச்சுக்கோர்க்கும் பகுதியில் இருபது பேர் வேலை செய்வார்கள். ஆசிரியர் பகுதியில் பத்து, பன்னிரெண்டு பேர் இருப்பார்கள். அதில் நான்கு பேர் நிருபர்களாக இருப்பார்கள்.

அவர்களில் ஒருவர் வழக்குகள் குறித்த செய்திகளைக் கொண்டு வருவார். மற்றவர் பொதுவான நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கொண்டு வருவார்கள். பொங்கல், திருவிழா, ம.இ.கா நிகழ்ச்சிகள், எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகள், சமூக அமைப்புகளின் நிகழ்ச்சிகள், மணிமன்றத்தின் நிகழ்ச்சிகள், திராவிடக் கழக நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளைக் கொண்டு வருவதுதான் அவர்களின் வேலை. இவைதான் அன்று எங்களுக்கு செய்திகள். புகைப்படக் கலைஞர்கள் இரண்டு பேர் இருப்பார்கள். அவர்கள் படங்களைக் கொண்டு வருவார்கள். இப்போது போல் அல்ல. அப்போது படங்களைக் கழுவி எடுத்து பயன்படுத்த வேண்டும். அவர்கள் சொந்தமாக ‘டார்க் ரூமை’ வைத்திருப்பார்கள். அங்கேயே கெமிக்கல் போட்டு கழுவவேண்டும். அதிலிருந்து சில படங்களைப் பிரிண்ட் போட்டு பயன்படுத்திக்கொள்வார்கள்.

அச்சுக்கோர்க்கும் பகுதிக்குக் கொடுக்கப்படும் கையெழுத்துப் பிரதிகளைப் பிரித்து, அச்சுக்கோர்த்து அந்த அச்சுகளை முறைப்படுத்தி, பிறகு அதனை பிரேம் செய்வார்கள். பெரிய இரும்பு சட்டம் இருக்கும். அந்தச் சட்டத்திற்குள்ளே முறையாக பெரிய தலைப்பு, சின்னத் தலைப்பு என வைத்து, ஒவ்வொன்றாக அடுக்கி, தலைப்புகளின் கீழே அதன் செய்திகளை அடுக்கி நேர்த்தியாக்குவார்கள். ஈயத்தினால் ஆன ராடு கோடு போடப் பயன்படும். பிரேமை நன்றாக இறுக்கி பயன்படுத்த வேண்டும். தவறுதலாக எடுத்துவிட்டால் அடுக்கியது எல்லாமே கொட்டிவிடும். மீண்டும் முதலில் இருந்து செய்ய வேண்டும். ஆபத்தான வேலை. யாரையும் அருகில் வரவிட மாட்டார்கள். அதனை மீறி யார் மூலமாவது தவறுதலாக கொட்டிவிட்டால் அவ்வளவுதான். இருபது பேரும் சேர்த்து நம்மை ‘வெளுத்து’ விடுவார்கள். அதனாலேயே அங்குச் செல்வதென்றால் பயப்படுவோம். அவர்கள் கைகள் பெரும்பாலும் மையாகத்தான் இருக்கும். ஆக, நாங்கள் அங்குச் சென்றால், செல்லமாக நம்மைத் தட்டிக்கொடுத்து மையுடன் அனுப்புவார்கள். நம்மை மையாக்கினால்தான் அவர்களுக்குச் சந்தோசம். அதுதான் அவர்களுக்குப் பொழுதுபோக்கு.

அச்சுக்கோர்த்ததில் மை தடவி கைகளால் மாதிரிக்கு அச்செடுத்து அச்சுக்கோப்பவர்களே பிழைத்திருத்தம் படிப்பார்கள். அதன் பிறகு பிழைத்திருத்தப் பகுதிக்கு சென்று திருத்தம் பெற்று வந்ததின் அடிப்படையில் எழுத்துகளை மாற்றி கோர்த்துக் கொடுப்பார்கள். அங்கு ஓர் அச்சு இயந்திரம் இருக்கும். தாலாட்டுவது போலே அந்த இயந்திரம் அசையும். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு ஐநூறு, அறுநூறு பிரதி எடுக்கும். அன்றைய சூழலில் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் நாளிதழ் வரைதான் விற்கப்படும். அந்த ஏழாயிரம் நாளிதழ்களை அச்சடித்து முடிக்க விடியற்காலை மணி நான்கு அல்லது ஐந்தாகி விடும்.  அதன் பிறகு சந்தையில் நாளிதழ்கள் விற்கப்படுவது எல்லாம் வேறு செயல்வடிவங்கள்.

இதற்கு அப்பால் ஞாயிறு பதிப்பு என இருக்கும். இப்போது வழக்கில் இருப்பது மாதிரிதான். அதுதான் பெரிய அளவில் விற்பனையாகும். தினசரி பத்திரிகையை விட மூன்று நான்கு மடங்கு அதிகமாக விற்பனையாவது ஞாயிறு பதிப்புதான். அந்தக் காலத்தில் ஞாயிறு பதிப்புகள் வாங்கி படிக்கின்ற குடும்பங்கள் அதிகம் இருந்தன. இந்த ஞாயிறு பதிப்புகள்தான் பத்திரிகைகளுக்கு அப்போதைய வருமானமாக இருந்ததாகவும் நான் நினைக்கிறேன்.

பத்திரிகை அலுவலகத்தில் கடிதங்களைப் பிரிப்பது, ஆசிரியர் குழுவில் வேலை செய்கிறவர்களுக்கு உதவி செய்வது, சிற்றுண்டியிலிருந்து அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுப்பது, மேஜைகளைத் துடைத்து வைப்பது, டெலிபிரிண்டைப் பார்த்துக்கொள்வது என இருந்த எனக்கு எதிர்காலத்தில் என்ன செய்வது என்ற குழப்பம் இருந்தது.  மொழி பெயர்க்கவும் முயன்றேன். முடியவில்லை; கடினமாக இருந்தது.

எப்படி உங்கள் நிலையை வளர்த்துக்கொண்டீர்கள்?

அக்கினி: கடிதங்களைப் பிரித்துக்கொண்டிருந்த சமயம், பி.எல்.கே ராஜன் மொழிபெயர்ப்பில் எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். உண்மையிலேயே அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். ஆனால் எழுத்துச் சோம்பல் உள்ளவர். அவருக்கு என்னை மாதிரி ஒரு ஆள் கிடைத்தவுடன் என்னை அழைத்து அவர் பக்கத்தில் வைத்துக்கொண்டு, சொல்லச் சொல்ல எழுது என்பார். தகவல் இலாகாவில் இருந்து அறிக்கைகளை அனுப்புவார்கள். இன்று மந்திரி எங்கெல்லாம் செல்லவிருக்கிறார் போன்ற விபரங்கள் அதில் இருக்கும்.  அதை வைத்துதான் செய்தியாக்குவோம். இயல்பாகவே நானும் கொஞ்சம் வேகமாக எழுதக்கூடியவன். அவர் சொல்லச்சொல்ல நானும் துரிதமாக எழுதிக்கொண்டே போவேன்.

நான் எழுதும்போது அந்தச் செய்திகளின் தன்மை புரிந்தது. உலகச் செய்திகளை நான் படிக்காமலேயே தெரிந்துகொண்டேன். அந்தச் செய்திகளின் கட்டமைப்பு எப்படி உள்ளது எனவும் தெரிந்துகொண்டேன். அந்தக் காலகட்டத்தில் வியட்நாமில் உச்சக்கட்ட போர் நடந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தென் வியட்னாம் வட வியட்னாம் என பிரிந்திருந்தன. தென் வியட்நாம் வீழப்போகும் நேரம். அமெரிக்கப் படைகள் அங்குத் தோற்றுக்கொண்டிருந்தன. அப்படியொரு காலக்கட்டம் அது. கம்போடியா, லாவோஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் நடக்கும் போர்கள், கம்யூனிஸ்டுகளுக்கும் அமெரிக்கர்களுக்கும் நடக்கும் போர் என இவையெல்லாம் எனக்கு அத்துபடியாகிவிட்டது. எனக்கு பல விடயங்கள் தெரிந்திருப்பது எனக்கே பிரமிப்பாக இருந்தது.

இந்தக் கட்டமைப்பு எனக்கு கை வந்தப் பிறகு நானே செய்திகளை எழுத ஆரம்பித்தேன். சொந்தமாக சின்னச் சின்ன செய்திகளை எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். அப்போது துணை ஆசிரியராக அப்துல் லத்திப் என்பவர் இருந்தார். அவரும் எனக்கு கொஞ்சம் உதவி செய்தார்.

ஆதி.குமணனுடனான நட்பு எவ்வாறு ஏற்பட்டது?

அக்கினி: ஆசிரியர் குழுவில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அதில் என்னை ஓரளவிற்கு கவர்ந்த கொஞ்சம் இறுமாப்பான மனிதர் குமணன்.  அவர் அங்கு அதிகமாக யாரிடமும் பேச மாட்டார். அவர் வருவார்; அவரது மேஜை சுத்தமாக இருக்கவேண்டும்; அவ்வளவுதான். அவர் வந்து அவரிடத்தில் அமர்வார். பிறகு நேராகச் சென்று டெலிபிரிண்டில் இருந்த செய்திகளை அவரே எடுத்துக்கொள்வார். என் வேலை டெலிபிரிண்டில் வந்தவற்றைப் பிரித்து வைக்க வேண்டும். நான் அதைச் செய்தாலும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவராகத்தான் அதனை செய்ய விரும்புவார். அவரே செய்திகளை எடுத்துக்கொண்டு அவரே அதனை சரிப்படுத்தி, அடுக்கி வைத்து செய்திகளை மொழிபெயர்ப்பார். மிகவும் அழகான கையெழுத்திற்கு உரியவர். வேகமாக எழுதுவார். சுமார் மூன்று மணிநேரம்தான் வேலை செய்வார். அந்த மூன்று மணி நேரத்தில் செய்திகளை எழுதிக் கொடுத்துவிட்டு எழுந்து சென்றுவிடுவார். அவர் திரும்ப எப்போது வேலைக்கு வருவார் எனத் தெரியாது. யாரும் அவரைக் கேள்வி கேட்க மாட்டார்கள். மற்றவர்கள் அப்படிக் கிடையாது. காலை ஏழிலிருந்து எட்டு மணி நேரம் வரை வேலை செய்யவேண்டும். ஆனால் அவர் மட்டும் மூன்று மணி நேரத்திற்குள் வேலையை செய்து முடித்து விட்டு இடத்தை காலி செய்து விடுவார். பிறகு ஒரு மணி நேரம் கழித்து திரும்ப வந்து எழுதிவிட்டு கிளம்புவார். அவர் இயல்பாகவே எழுதுவதில் துரிதமாக இருந்தார். மொழிபெயர்ப்பு வீச்சு அவரிடம் அதிகமாகவே இருந்தது. ஆக, ஒரு மனிதர் ஐந்தாறு மணி நேரத்தில் செய்யக்கூடிய வேலையை மூன்று மணி நேரத்தில் செய்துவிடுவார். ‘என்னுடைய வேலையை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னமே முடிச்சிட்டேன்ல’ என்பதுதான் அவரது பாணி. ஆகவே அவரைக் குறித்து கேள்வியை யாரும் எழுப்ப மாட்டார்கள். அவரின் வேலையையும் அவர் சரியாக செய்துவிடுவார்.

பிறகு ஒரு நாள் குமணன் (ஆதி.குமணனை அப்போதெல்லாம் குமணன் என அழைப்போம்; முழுப்பெயர் குமண பூபதி), “இந்தியாவில் இருந்து இங்கு வந்திருக்கிறாயே, எங்குத் தங்குகிறாய்? எப்படி வேலைக்கு வருகிறாய்?” எனக் கேட்டார். அப்பா ஓர் இடத்திலும் நான் நண்பருடன் வேறோர் இடத்திலும் தங்கியிருப்பதாகவும், வேலைக்குப் பேருந்தில் வருவதாகவும் கூறினேன். அதற்கு அவர், தமக்குத் தெரிந்த அறை இருப்பதாகவும் என்னை அங்கு வந்து தங்கிக்கொள்ளும்படியும் சொன்னார். நிர்வாகத்திடம் அவர் பேசிக்கொள்வதாகச் சொன்னார். நானும் அவர் சொன்ன இடத்தைச் சென்று பார்த்தேன். அது ஸ்டோர். அங்குத் தங்க முடியாது. அவருக்கும் அது ஸ்டோர் எனத் தெரியவில்லை. பிறகு என்ன யோசித்தாரோ தெரியவில்லை. அவருடைய அறையிலேயே ஒரு பக்கத்தில் தங்கிக்கொள்ளச் சொன்னார்.

1973 ஆம் ஆண்டில் “என்னுடைய அறையில் நீ தங்கிக்கொள்” எனும் வார்த்தையிலிருந்து ஆரம்பித்த நட்பு அப்படியே வளரத் தொடங்கியது. அவரிடம் இருந்தும் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அவரும் படிக்கக்கூடியவர். தினமும் படிப்பார். அது எனக்கு பிடித்திருந்தது. நிறைய நாவல்கள் படிப்பார்.

எழுத்தாளராக எப்படி பரிணாமம் எடுத்தீர்கள்?

அக்கினி:  பாலு என்பவர் அந்த நாளிதழில் வேலை செய்தார். அவர் ஞாயிறு பதிப்பு ஆசிரியர். அவர் எனக்கு சிறு சிறு வேலைகளைக் கொடுப்பார். அதுவும் நான் அவரது நம்பிக்கைக்கு ஆளான பிறகுதான். “தம்பி, இந்த வாரம் ‘நினைவில் நிலைத்தவை’ அவ்வளவு நன்றாக இல்லை. நீ சொந்தமாக எழுதித் தருகிறாயா? உன் நினைவில் நிலைத்தது குறித்து எழுதிக்கொடு” என்பார். நமது நினைவில் நிலைத்தது என்ன? அதனை எப்படிக் கோர்வையாக எழுதுவது? போன்ற சிக்கல் எனக்கு இருந்தது. நான் என்னை எழுத்தாளனாக நினைத்து இங்கு வந்தவன் இல்லை. வேலையும் கூலியும் கிடைத்தால் மட்டும் போதும் என்று வந்தவன்.

என்னை அவர் ஊக்கப்படுத்தினார். சில விசயங்களை எழுதினேன். திருத்தி வெளியிடுவார். எனக்கு அச்சமயம் நிறைய கவிதைகள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அந்தக் காலத்தில் பாரதியாரின் கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு காசி ஆனந்தன் கவிதைகள் பிடித்திருந்தது. இருவரும் என்னை அதிகமாகவே ஆக்கிரமித்தவர்கள். இவர்கள் கவிதைகளைப் படிக்கும் பொழுது, நாமும் எழுதலாமே என்ற ஆசை வந்தது. சின்னதாய் எழுத ஆரம்பித்தேன். கவிதை இலக்கணப் புத்தகங்களைக் கஷ்டப்பட்டு படித்து எழுத ஆரம்பித்தேன். விவேகானந்தர் பற்றி, மகாத்மா காந்தி பற்றி, பாட்டி சொன்ன கதைகள் போன்றவற்றை சின்ன கவிதையாக எழுத முயன்றேன். சில கவிதைகள் நன்றாக வந்தன. அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நான் தமிழ் மலரில் இருந்தபோது அவற்றை அதிலேயே பிரசுரம் செய்வார்கள். இதுதான் என் எழுத்திற்குத் தொடக்கக் காலம் என வைத்துக் கொள்ளுங்கள். அதே காலகட்டத்தில் நான் ஆசிரியர் பகுதிக்கு வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டிருந்தேன். ஒரே காலகட்டத்தில் எனக்கு மொழிபெயர்ப்பு சவாலான ஒன்றாக இருந்தது. அதனைக் கற்றுக்கொள்ளாமல் பத்திரிகை உலகில் வாழ முடியாது எனப் புரிந்தது. இரவு பகலாக அமர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். அடுத்த நாள் திருத்துவேன். அதனைப் பத்திரிகையில் பிரசுரிக்க மாட்டார்கள். குப்பைத்தொட்டியில் போடுவார்கள். ஆனாலும் நான் சரியாகச் செய்துள்ளேனா எனக் கவனிப்பேன்.

அப்போது குட்டிக் கதைகள் எழுதுபவர்கள் குறைவு. அப்படி எழுதுகின்றவர்களையும் யாரும் வரவேற்பதும் கிடையாது. ஆனால் அவ்வகை கதைகளை எழுத முயன்றேன். அது பிடித்திருந்தால் ஞாயிறு பத்திரிகையில் திருத்தி பிரசுரிப்பார்கள். ஒரு காலகட்டத்தில் அங்குப் பெரிதாக எதையும் சாதிக்கக்கூடிய வகையில் இல்லை. அன்றைய காலகட்டத்தில் மலேசியாவில் மரபுக்கவிதைகள் மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தன. மலேசியாவில் எழுத்தாளன் என்றால் அவன் மரபுக் கவிஞன் மட்டுமே.  அதன் பிறகுதான் சிறுகதையாளன், நாவலாசிரியன்.

ஒரு பத்திரிகையாளராக அந்தக் கால இலக்கியச் சூழலில் நீங்கள் அவதானித்துக்கொண்டவை பற்றி சொல்லுங்கள்.

அக்கினி: அந்தக் காலம் என்றால், நான் பத்திரிகை துறைக்கு வந்த அந்த 1973-ஆமலாண்டு தொடக்க காலகட்டம்தான். அப்போது நான் கருத்தூன்றிப் பார்த்த எழுத்தாளர்கள் என்றால் அவர்கள் மரபுக் கவிஞர்கள்தான். அவர்கள்தான் ஆழமாக வேரூன்றி இருந்தார்கள். பரவலாகவும் இருந்தார்கள். பல விடயங்களை எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருந்தார்கள். அதன் பிறகு சிறுகதை எழுதுகின்ற கொஞ்சப் பேர். பத்திரிகைகளுக்குத் தொடர்கதை எழுதுகிறவர்களைத்தான் நாவல் எழுத்தாளர்கள் எனக் குறிப்பிடப்படுவார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான மரபுக்கவிஞர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஆதிக்கத் துறையாக கவிதை விளங்கியது. மிகவும் கட்டுக்கோப்புகளை உள்ளடக்கிய கவிதைகளை எழுதி, பெருமையாகப் பேசுவார்கள். இதுபோன்ற பிள்ளைத்தமிழ் யாரும் எழுதியது இல்லை, இதுபோன்ற வெண்பாக்கள் யாரும் எழுதியது இல்லை, இதுபோல பாசுரங்கள் எழுதியவர்கள் யாருமில்லை எனப் பேசிக்கொள்வார்கள். அதையெல்லாம் பார்க்கும் பொழுது பாட்டி சொல்லும் கதையை எழுதிக்கொண்டிருக்கும் நாம், எப்போது அந்த இடத்தை அடைவது என்ற ஏக்கம் எழுந்தது. அது வேறோர் உலகம். நான் இருந்த உலகம் வேறு.

இந்தச் சூழலில்தான் நான் குமணனுடன் தங்கியிருந்த சமயம் தமிழகத்திலிருந்து வந்த சிற்றிதழ்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் நவீனக் கவிதைகள் அதிகம் இடம்பெற்றன. மரபுகளை மீறி கருத்துகளை மட்டுமே தாங்கி வலியுறுத்தக்கூடிய வடிவமைப்பிலான கவிதைகள் சிற்றிதழ்களில் வந்துகொண்டிருந்த சமயம். ஆதி.குமணன் நல்ல கவிஞர்; மரபிலும் எழுதக்கூடியவர். கட்டுரையாளராகவும் இருந்தார். சொல்லப்போனால் கவிஞர்களுடனான சண்டைகள் வரும்பொழுது ஆதி.குமணன் அதில் சண்டை போடுபவராக இருப்பார். அதையெல்லாம் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும்.

அவரிடமிருந்து கிடைத்த சிற்றிதழ்களைப் படித்தபோது, நவீன கவிதைகளின் வீச்சு என்னைக் கவர்ந்தது. இதில் என்னை நிரூபிக்க முடியும் எனத் தோன்றியது. நான் அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். எனக்கு அது இயல்பாகவே வந்தது. அப்போது இருந்தவர்கள் அதனை உரைவீச்சு எனவும் சொல்லுவார்கள். நவீன கவிதைகளின் புத்தகங்களையும் எனக்கு ஆதி.குமணன் கொடுத்தார். தமிழகத்தில் வளர்ந்து வரும் நவீன கவிதைகள் போல இங்கும் வரவேண்டும் என பேசினார். ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால், அவற்றை பத்திரிகைகளில் பிரசுரிக்க யாருமில்லை. அப்போது இருந்தது மூன்று பத்திரிகைகள்தான். தமிழ் நேசன், தமிழ் மலர், தமிழ் முரசு. இந்த மூன்றுமே உரைவீச்சு என அப்போது சொல்லப்படுகின்ற நவீன கவிதைகளைப் பிரசுரிக்கமாட்டார்கள். 1973, 1974 அது வழக்கிலேயே இல்லை. எங்காவது ஒன்று, இரண்டு வந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. காஜாங்கில் இருந்து கமலநாதன் வசன கவிதையாக சிலவற்றை எழுதியிருக்கிறார். அவர் எழுதியதுதான் மலேசியாவின் முதல் புதுக்கவிதை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர் ஆதிக்கம் மிக்க பள்ளி ஆசிரியர், பத்திரிகை அலுவலகம் சென்று, தகராறு செய்தாவது தம் கவிதையைப் பிரசுரம் செய்ய வைத்துவிடுவார். ஒருவேளை நவீன கவிதைகளைப் பத்திரிகைகள் பிரசுரித்தால், பிரசுரிக்கக்கூடாததைப் பிரசுரித்ததுபோல மரபுக் கவிஞர்கள் பேசுவார்கள்.

நானும் அவ்வாறு நவீன கவிதைகள், வசன கவிதைகள் எழுதி ஆதி.குமணனிடம் காண்பிப்பேன். ஆனால் யார் பிரசுரம் செய்வார்கள்? இதில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. இதனை எப்படி நாளிதழில் பிரசுரிப்பது என யோசித்தோம். ஆதி.குமணன் அதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

தமிழ் மலர் நிர்வாகத்திடமே பேசி, புதன்கிழமையன்று மட்டும் தனியாக ஒரு பக்கத்திற்குள்ளாக அவர் புதன் மலரைத் தயாரிப்பார். அதில் சின்னச் சின்ன செய்திகள், கண்ணதாசனின் செப்பு மொழி, அவரது கட்டுரைகள், வலம்புரிஜானின் கட்டுரைகள் என இடம்பெறும்.  ஆதி.குமணனின் தந்தையாருக்கும் அப்போது தமிழ் மலர் பத்திரிகையின் அதிபரான ஆறுமுகம்பிள்ளைக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆறுமுகம்பிள்ளை கோவில்களில் சொற்பொழிவு செய்பவர்; ஆதி.குமணனின் தந்தையோ திராவிடக் கழகத்தவர். எப்படித்தான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதோ தெரியவில்லை. ஆறுமுகம்பிள்ளையைப் பொறுத்தவரை நண்பரின் பிள்ளை என்பதால் ஆதி.குமணனுக்கு சிறப்புரிமைகள் இருந்தன. இருந்தும் ஆதி.குமணன் அதை தனக்காகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார். ஆனால் புதுக்கவிதைக்காக அதை பயன்படுத்தினார் எனச் சொல்லலாம்.

அவரின் வேண்டுகோளுக்கு நிர்வாகம் சம்மதித்து, கடிதமும் கொடுத்துவிட்டது. நாம் இணைந்து செய்யலாம் என்றார். ஏற்கனவே அதிக வேலை, அதில் இதையெப்படி செய்வது? என்றேன். இந்த உறுதிக் கடிதத்தை ஏன் வாங்கினேன் தெரியுமா? எனக் கேட்டார். ஏன்? என்றேன். அதில் நீ கவிதை எழுதலாமே என்றார். இது நமக்கான பகுதி, நாம் எழுத நினைக்கும் நவீன கவிதைகளை இங்கு நாம் பிரசுரிக்கலாம் என்றார். இதனைப் பிரசுரித்து சண்டை சச்சரவு வந்தாலும் நம் கருத்தைச் சொல்ல களம் உள்ளது என்றார். நிறைய எழுத என்னை ஊக்குவித்தார்.

நானும் தொடர்ந்து எழுதினேன்; அவரும் எழுதினார். புதியவர்கள் சிலரும் எழுத ஆரம்பித்தார்கள். பிரச்சனைகளும் வந்தன. ஆறுமுகம்பிள்ளைக்கு அதிகமான புகார் கடிதங்களும் வந்தன. அப்போது மரபுக் கவிதையில் ஆதிக்கம் உள்ள கவிஞர்கள் பெரும்பாலும் பினாங்கைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நேராகச் சென்று ஆறுமுகம்பிள்ளையிடமே சொல்லிவிட்டார்கள். ஆறுமுகம்பிள்ளையும் அழைத்து, கவிதைக்கு இலக்கணம் முக்கியம் என அறிவுறுத்தினார்.

அன்று பலர் புதுக்கவிதை வளர்ந்த சூழலைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள். இலக்கணம், மொழி எல்லாம் கெட்டுவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் மொழி இலக்கணத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கவிதை இலக்கணம் என்பது எழுதுபவர்களைப் பொருத்தது. அதனை கவிதையாகப் பார்ப்பது அவரவர் பொறுப்பு. கவிதைக்கு என ஒரு இலக்கணம் உருவாகியது போல நவீன கவிதைக்கும் உருவாகட்டுமென நாங்கள் எழுதுவதை நிறுத்தவில்லை.  அது எங்கள் வளர்ச்சிக்கு வித்திட்டதுபோல இருந்தது. எனக்கு ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.  புதுக்கவிதைக்கான சிறிய வட்டம் இவ்வாறு உருவானது.

நீங்கள் பார்த்த ஆதி.குமணன் பற்றி சொல்லுங்கள். அவர் ஆளுமை கட்டமைந்த விதம் பற்றி சொல்லுங்கள்.

அக்கினி: அந்தக் காலகட்டத்தில் ஆதி.குமணன் இளம் வயதிலேயே நாளிதழின் துணை ஆசிரியராக இருந்தார். ஆனால் இயற்கையாகவே அவருக்குள் ஓர் ஆளுமை இருந்தது. சில நண்பர்கள் மட்டும்தான் அவருக்கு இருந்தார்கள்.  அந்தக் காலகட்டத்தில் அவருக்கு நண்பராக இருந்தவர்களில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் நூலகப் பணியாலராக இருந்து மர்மக் கதைகள் எழுதிய மெ. அறிவானந்தம், கவிஞர் அமுத இளம்பருதி என சிலரைச் சொல்லலாம்.

ஆதி.குமணன் பத்திரிகை நிர்வாக முறையிலும், பத்திரிகைகள் மக்களுக்கு எத்தகையச் சேவை ஆற்றவேண்டும் என்பதிலும் மாறுபட கருத்துக் கொண்டவர். அந்தக் காலத்தில் இருந்த நிர்வாக முறையே அவருக்குப் பிடிக்காது. பத்திரிகை நடத்துபவர்கள் அவர்களைக் குறித்து செய்திகளைப் பிரசுரித்துக்கொள்ளக்கூடாது என எண்ணினார். ஆனால் அன்றைய சூழலில் அதுதான் நடந்தது. ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை மொழிபெயர்த்து தமிழில் பிரசுரிப்பது போன்வற்றிலும் அவருக்கு உடன்பாடு கிடையாது. இந்தச் சூழலில் அவருக்குள் ஒரு மாற்றம் உருவாகியது.

தமிழ் மலரில் அப்போது தொழிற்சங்கம் கிடையாது. பிற பத்திரிகைகளில் ஊழியர்களுக்கென்று தொழிற்சங்கம் இருந்தது. தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் எதிராக இருந்தவர்தான் ஆறுமுகம்பிள்ளை. அப்படியான தொழிற்சங்கம் இல்லாததால் பல தொழிலாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. அச்சுக்கோர்ப்பவர்களின் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு நிறைய பாதிப்பும் இருந்தன.

அவர்களுக்குத் தொழிற்சங்கம் இருந்தால் அவர்களின் பிரச்சனையைப் பேசலாம், குறிப்பாகச் சம்பள பிரச்சனையைப் பற்றி பேசலாம், கூடுதல் நேர ஊதியத்தைப் பேசலாம் என நினைத்தனர். அவர்களின் சிக்கல்களை அறிந்தவர் ஆதி.குமணன். நாம் தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாம், நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். நிர்வாகம் அடிக்கடி மாறியது. அதனால் பாதிப்புகள் ஏற்பட்டன.  தொழிற்சங்கத்தின் தேவை அதிகமாகவும் அங்குள்ளவரையே தலைவராக நியமித்து ஆதி.குமணனை செயலாளராக நிறுத்தி தொழிற்சங்கத்தை உருவாக்கினோம். இப்படியான தகவல் நிர்வாகத்திற்கு தெரிந்ததும் பத்து, பதினொரு பேரை உடனடியாக வேலையை விட்டு நீக்குவதற்கு முயற்சி செய்தனர்.

இந்த நிர்வாகம் நமது பேச்சை கேட்காது, அவர்கள் நம்மைப் பழிவாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். இதை தடுக்க நாம் மறியல் செய்யத்தான் வேண்டும் என ஆதி.குமணன் சொல்லிவிட்டார். வேலைக்கு அப்பாற்பட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும், மறியல் செய்யலாம் என முடிவெடுத்தோம். குறிப்பாக மதிய உணவு நேரத்தில் அந்த நிறுவனத்திற்கு எதிராக மறியல் செய்தோம். 1975-இல் மதிய நேரத்தில் அந்த மறியல் நடந்தது. ஓய்வு நேரத்தில் முப்பது நாற்பது தொழிலாளர்கள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு வெளியில் மறியல் செய்வோம். பிறகு உணவு நேரம் முடிந்ததும் வேலையைச் செய்ய ஆரம்பிப்போம். இப்படியே ஒரு வாரம் நடந்தது. எங்களைப் பார்த்த மக்கள் என்ன, ஏது என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அந்த வருத்தங்கள் அப்படியே திரண்டு ஓராண்டு காலத்திற்குப் பிறகு பலரை ஓரே சமயத்தில் வேலையை விட்டு நீக்கும் நிலைமை நிர்வாகத்திற்கு வந்தது. அப்படியொரு காலகட்டத்தில் வேறு வழியே இல்லையென முழு நேர வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தோம். அப்படி வேலை நிறுத்தம் செய்வது என்றால் முன்னமே கடிதம் கொடுக்கவேண்டும்.  மூன்று முறை கடிதம் கொடுத்துவிட்டு பதினான்கு நாட்களுக்கு பிறகு வேலை நிறுத்தம் செய்யலாம் என்பது விதிமுறை. அந்த விதிமுறையைப் பின்பற்றி மறியல் செய்தோம். மலேசிய வரலாற்றில் பத்திரிகைத் துறையில் நடந்த நீண்ட நாள் வேலை நிறுத்தம் இதுதான். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தம் நீடித்தது. அப்போதும் பத்திரிகை நிர்வாகம் வேறு ஆட்களை ஏற்பாடு செய்து பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தது.

நீதிமன்றத்திற்கு அந்தச் செய்தி சென்றது. வழக்காடு மன்றம் சென்ற கொஞ்ச காலத்திலேயே எங்களின் தொழிலாளர் தரப்பு தோல்வி அடைந்துவிட்டது. இதன் மூலமாக வேலை நிறுத்தத்தில் வெளியில் வந்து நின்ற 45 பேருக்கு வேலை போனது. உண்மையான ஆதி.குமணன் உருவாவதற்கான அடிப்படைக் காரணம் அங்குதான் தோன்றியது. இன்று அவரைப் போராட்டவாதியாக எல்லோரும் பேசுவதற்கு அந்தச் சம்பவம்தான் அடிப்படைக் காரணமாக இருந்தது.

அந்த 45 பேருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் என்ன பதில் சொல்வதென அவர் மிகவும் வருத்தத்தோடு இருந்தார். வேலை நிறுத்தம் செய்து, வழக்கில் தோல்வி கண்டு, இந்த ஆறு மாதத்தில் அவர்கள் வேலை இழந்து கஷ்டப்படும் நிலைக்கு நாம் கொண்டுவந்து விட்டோமே என்கிற எண்ணம் வந்த பொழுது அந்தச் சூழலை ஆக்ககரமாக மாற்ற முடிவு செய்தார். இத்தனை தொழிலாளர்கள் இருக்கும் பொழுது நாம் வாரப் பத்திரிகை தொடங்கலாமா என என்னிடம் தன் திட்டத்தைக் கூறினார்.

என்னை, குடும்பம் பிள்ளைகளுடன் அதிக சிரமத்தில் உள்ளவர்களைத் தேர்வு செய்ய சொன்னார். அவர்களை முதலில் கணக்கெடுத்துக்கொண்டு, அதன் பிறகு குடும்பம் இல்லாத ஊழியர்கள் யாரெனப் பார்க்கச் சொன்னார்.  அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை பிறகு முடிவெடுக்கலாம் என்றார்.

14 பேரைத் தேர்வு செய்து அவரிடம் சொன்னேன். பிறகு நானும் அவரும் ஒரு சட்டகம் போட்டோம். வார இதழ் தொடங்கி யாருக்கு என்ன வேலை கொடுக்கலாம் என முடிவு செய்தோம். வெளியில் வேலை செய்யலாம். வாரப் பத்திரிகை என்பதால் ஓய்வு நேரத்தில் இங்கு வந்து வேலை செய்யலாம். அதற்கு ஏற்றாற்போல சின்ன அலாவன்ஸ் கொடுக்கலாம். அந்த அடிப்படையில் வேலைகள் முடுக்கப்பட்டன. இதற்கு இன்னொரு காரணமும் அவருக்கு இருந்தது. அது வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய ஒன்று.

அந்தக் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்த ஒரே பத்திரிகை சங்கமணிதான். தொழிலாளர்கள் போராட்டத்தில் இருக்கும்போது அப்போதிருந்த தமிழ் நேசன் செய்தி போடாது. வேறு பத்திரிகைகளிலும் செய்தி வராது. போராட்டத்தில் பங்கெடுத்த இத்தனை தொழிலாளர்களுக்கு வேலையில்லை என்ற தகவலை எங்குக் கொண்டு போடுவது? எனக் கேள்வி வந்தபோது நானும் ஆதி.குமணனும் சங்கமணிக்குச் சென்றோம். தொழிற்சங்கப் பத்திரிகைதான் நம் செய்தியைப் போடுவார்கள் எனச் செய்திகளை இரண்டு தடவை கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் பிரசுரம் ஆகவில்லை. பிறகு நேராகவே நானும் அவரும் பி.பி நாராயணனைச் சந்தித்தோம். நாங்களும் தொழிற்சங்கவாதிகள்தான் என்றோம். கஷ்டத்தில் இருக்கிறோம் நாங்கள் கொடுத்த செய்தியைக் கூட பிரசுரிக்கவில்லையே எனக் கேட்டோம். அவர் எங்களை அலட்சியமாகத்தான் எதிர்கொண்டார். ஆராய்ந்து பார்த்தபோது ஆறுமுகப்பிள்ளையின் பத்திரிகைக்கு எதிராக செயல்பட்டால், அந்தப் பத்திரிகையில் தன்னைப் பற்றி எழுதுவிடுவார்களோ எனும் பயம் அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்று புலப்பட்டது.

வெளியில் வந்தபோது ஆதி.குமணன் ஒரு வார்த்தை சொன்னார். “பாருங்கள்… முதலாளித்துவத்துக்கு எதிராக நியாயங்கள் இருந்தாலும் செய்தியைப் போட யாரும் இல்லை. பத்திரிகைகள் முதலாளிகளின் கைகளில் இருக்கும்வரைதான் இந்தப் பிரச்சனை. அதுவே ஒரு பத்திரிகையாளன் கையில் இருந்தால் அவனது பிரச்சனையை அவன் பார்த்துக்கொள்வான்தானே. நம்மைப் போன்ற ஊழியர்களுக்கு நாம்தான் பத்திரிகை நடத்த வேண்டும். இப்போதைக்குப் தினசரி பத்திரிகை நடத்த முடியாது, ஆனால் நாம் வாரப் பத்திரிகை நடத்தலாம்” என்றார். பத்திரிகை நடத்தும் யோசனை இங்கிருந்துதான் வந்தது. நண்பர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போடலாமா எனச் சிந்தித்துக்கொண்டிருந்த நேரம் அது. ரஹீம் என்னும் நண்பர் இருந்தார். அவருக்கு மருந்து பாட்டில் செய்யும் தொழிற்சாலை இருந்தது.  அவர் எங்கள் பிரச்சனையில் தலையிட்டு, நானும் உங்களின் நண்பன்தானே, ஏன் உதவி கேட்பதால் என்ன பிரச்சனை? என்றார். நாங்களும் தாராளமாகச் செய்யலாம் என்றோம்.

உடனே அவரிடம் இருந்த பணத்தையும் சேர்த்து பதினாறாயிரம் வெள்ளி திரட்டிக் கொடுத்தார். அதை வைத்து நாங்கள் பத்திரிகை ஆரம்பித்துவிட்டோம். நாங்களும் எங்கள் பங்குக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்தும் இந்தப் பத்திரிகைக்கு இவ்வளவு பணம் தேவையில்லை என்று மறுத்துவிட்டார். பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என எனக்கும் ஆதி.குமணனுக்கும் ஏறக்குறைய இரண்டு வாரம் யோசனையாக இருந்தது. ஆதிக்குப் பிடித்த பெயர் வசந்தம். எனக்கு பிடித்தது வானம்பாடி. வானம்பாடி என்னும் பெயர் சினிமா பெயர் என்பதால் அவர் வேண்டாம் என்றார். அது எல்லோருக்கும் உடனே சினிமா நினைவுகளைக்கொண்டு வரும் என்றார். இறுதி நேரத்தில் ஏனோ தெரியவில்லை, வானம்பாடியாகவே இருக்கட்டும் என்றார். இப்படிக்கூட பத்திரிகைக்கு பெயர் வைத்துக்கொள்ளலாமா என்கிற கேள்வியும் ஆச்சர்யமும் பலருக்கு வந்தது. இப்படியாக, வானம்பாடி எனும் வாரப்பத்திரிகை உருவானது.

வானம்பாடிக்கு மலேசிய புதுக்கவிதை வரலாற்றில் தனி இடம் உண்டு அல்லவா? கொஞ்சம் வானம்பாடி பற்றி விளக்குங்கள்.

அக்கினி: இந்த வானம்பாடி என்னும் பெயர் எனக்குள் எப்படி வந்தது என யோசிக்கிறேன். 30 கவிஞர்களின் நவீன கவிதைகள் தொகுப்பு அப்போது தமிழகத்திலிருந்து வந்தது. அந்தத் தொகுப்பினுடைய பெயரே வெளிச்சங்கள் என இருக்கும். உள்ளே ‘இது வானம்பாடிகளின் மானுட கீதம்’ என எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்த நூல் கிடைத்தது; படித்தேன். அந்தப் புத்தகத்தில் இருந்த கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் மு.மேத்தா எழுதிய, ‘தேசப் பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ என்னும் கவிதை அவ்வளவு பிடித்திருந்தது. இப்படியாக பல கவிஞர்களின் கவிதைகள் அதில் இருந்தன.  அந்தச் சொற்றொடர் எனக்கு பிடித்திருந்தது. ‘வானம்பாடிகளின் மானுட கீதம்’ எனும் சொற்றொடர் அடிப்படையில் ஒரு முழக்கமாக தமிழ்நாட்டின் சஞ்சிகைகளில் எல்லாம் வெளிவந்துகொண்டிருந்தன. அதை நான் எடுத்துக்கொண்டேன்.

வானம்பாடி பத்திரிகை நடத்துவதற்கான உரிமம் பெற்றோம். அதுவும் சிக்கல்களுக்கு பின்னரே கிடைத்தது. எங்களுக்கு அரசாங்கத்தின் பதிப்பு அனுமதி கிடைக்கவில்லை. தான்ஶ்ரீ எஸ்.சுப்ரமணியம் அப்போது செனட்டராக இருந்தார். எங்களுக்காக பரிந்துரை செய்து மூன்று வாரத்தில் பெற்றுக் கொடுத்தார்.

வானம்பாடியில் நிறைய புதுக்கவிதைகளைப் பிரசுரிக்க முடிந்தது. நிறை எழுத முடிந்தது. பெட்டாலிங் மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இடம் பார்த்து வார இதழுக்கான அலுவலகம் அமைத்தோம். எங்களுக்குள்ளேயே வேலைகள் செய்தோம்.

ஆதி.குமணன், நான், இராஜகுமாரன், பாலு ஆகிய நான்கு பேர் ஆசிரியர் குழுவில் இருந்தோம். பிறகு அச்சுக்கோர்க்கும் பகுதியில் பதினான்கு பேர் எனப் பத்திரிகையை ஆரம்பித்து சில இதழை அச்சிட்டு வெளியிட்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போலல்ல, மிக மோசமான தோல்விக்குள்ளானோம். பத்திரிகைகள் போய் சேரவில்லை; யாரும் வாங்குவதும் இல்லை. சம்பளம் கொடுப்பதே சிக்கலாக இருந்தது. இப்படியாக நிறைய போராட்டங்கள். நாங்களும் சோர்வான நிலைக்கு வந்துவிட்டோம். ஏனோ அது மக்களை ஈர்க்கவில்லை. மேலும் இப்படியே போய்க்கொண்டிருக்க முடியுமா என யோசித்தோம்.

ஒவ்வொருமுறை வானம்பாடியைப் அச்சடித்தபின் நானும் ஆதி.குமணனும் எல்லா ஏஜண்டுகளுக்கும் கடைகளுக்கும் பிரதிகளைக் கொடுத்துவிட்டு வருவோம். கோலாலம்பூரில் அப்போது 200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. சுங்கை பீசியில் தொடங்கி வடக்கு ஜிஞ்ஜாங் வரைக்கும் கடைகள் இருக்கும். சாயங்காலம் மூன்று மணிக்கு தொடங்கி இரவு மணி பத்துக்குள் பத்திரிகைகளை எடுத்துப்போக வேண்டும். புடுராயாவில் மட்டுமே 12 புத்தகக் கடைகள் இருந்தன. நாங்கள் எங்கள் வாகனத்தை தூரமாக வைத்துவிட்டு பேப்பர்களைத் தோள்களில் சுமந்துகொண்டு போவோம். கடைகளுக்குப் புதிய பத்திரிகைகளைக் கொடுத்து பழைய பத்திரிகைகளை எடுப்போம். கிட்டதட்ட மிகப்பெரிய போராட்டம் அது. மிகப்பெரிய உழைப்பு அது. வித்தியாசமான போராட்டமும் கூட.

பலருக்கு ஆதி.குமணன் யாரென்று தெரியாது. அவரது எழுத்துகளைத் தெரியும். அவர் அக்கம் பக்கம் எழுதினார், பார்வை எழுதினார். பார்வை பக்கத்தில் அரசியல் சமூகம் சார்ந்து எழுதுவார், விமர்சிப்பார். படிப்பவர்களுக்குப் பிடித்திருந்தது. ஆதி.குமணன் பிரபலம் ஆகிக்கொண்டே இருந்தார்.  ஆனால் அவர் யாரென்று யாருக்கும் தெரியாது.

புடுராயாவில் பத்திரிகை இறக்குவதற்கு சென்றால் தாமதாகிவிடும். தாமதாக வந்தால் யார் பத்திரிகை வாங்குவார்கள் என அங்குள்ள கடைக்காரர்கள் எங்களைத் திட்டுவார்கள். எங்களை அழைத்து ‘பசங்களா ரெண்டு பேரும் சரியாவே இல்லை. ஒழுங்காவே வியாபாரம் பார்க்கத் தெரியல. முதல்ல ஆதி.குமணன்கிட்ட போன் பண்ணி உங்கள பத்தி புகார் செய்யனும்’ என்று ஆதியிடமே சொல்லுவார்கள். நாங்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம். பக்கத்து கடைகளில் செல்லும் பொழுது அங்குள்ள கடைக்காரர் ‘யோவ்… ஆதிகுமணன் நல்லாத்தான் எழுதியிருக்காருய்யா. போய் அவர்கிட்ட சொல்லுய்யா’ என்று ஆதிகுமணனிடமே சொல்வார்கள். இதை நாங்கள் இருவரும் ரசிப்போம். அப்படிப்பட்ட சூழலில் பத்திரிகையின் குறைந்த விற்பனை எங்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

அப்போதுதான் ஆதி ஒரு முடிவு எடுத்தார். முதல் பக்கத்தில் செய்தி போடும் முறையை மாற்ற வேண்டும் என்றார். என்னையும் யோசிக்க சொன்னார். அப்போது ஆங்கிலத்தில் ‘நியூ திரில்’ எனும் மாதப்பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதில் முன்பக்கத்தில் வரைமுறையற்ற செய்திகளைப் போடுவார்கள். நம்ப முடியாத விசயங்களையெல்லாம் போடுவார்கள். ஏன் அந்த மாதிரி போடக்கூடாது? என ஆதியிடம் கேட்டேன். அவருக்கு உடன்பாடில்லை. அவர் திராவிடக் கழகத்தில் இருந்து வந்தவர். மூட நம்பிக்கையான விசயங்களைப் போடுவதை அவர் விரும்பவில்லை.

விற்கப்படாத வானம்பாடிகள் ஸ்டோரில் குவியும் எண்ணிக்கையைப் பார்த்து அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். ‘சுகு நீ சொன்ன மாதிரியே செய்துகொள்’ என்று முதல் பக்கத்தை என்னிடமே விட்டுவிட்டார்.

அப்படி ஒரு பொறுப்பைக் கொடுத்ததும் எனக்கு ஒரே சந்தோசம். அவர் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக பல இதழ்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அந்தச் செய்திகளையே கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் எழுதினேன். நிறைய செய்திகள் வித்தியாச வித்தியாசமாய் இருந்தன.

‘வேட்டைக்குப் போன வேட்டைக்காரனை கங்காரு சுட்டுவிட்டது’ என்ற தலைப்பு. வேட்டைக்காரனைக் கங்காரு எப்படி சுட்டிருக்க முடியும்? என ஆர்வத்தை தூண்டும். வேட்டைக்காரன் துப்பாக்கியைப் பக்கத்தில் வைத்துள்ளான். கங்காரு தப்பித்து ஓடும்பொழுது அதன் கால்பட்டு துப்பாக்கி வெடித்தது. இதுதான் நடந்த சம்பவம். மக்கள் வாங்க ஆரம்பித்தார்கள். விற்பனை அதிகரித்தது. அப்போதைய காலகட்டத்தில் உலகெங்கும் பல அதியங்களும் அறிவியல் முன்னேற்றங்களும் நடந்தன. செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற அன்றையப் புதிய மருத்துவ வளர்ச்சி குறித்த செய்திகள் பலரையும் ஈர்த்தது. நிறைய எழுத்தாளர் இந்த நவீன மருத்துவம் மற்றும் அறிவியல் வளர்ச்சியைத் தாக்கி எழுதினார்கள். நாங்கள் எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தோம். வானம்பாடியின் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்தது. மற்ற மாநிலங்களிலும் நாடு தழுவிய அளவில் விற்பனை உயர்ந்தது.

உண்மையிலேயே உற்சாகமான காலகட்டம் அது. மிகப்பெரிய வெற்றியை வானம்பாடி எங்களுக்குத் தேடி கொடுத்தது.

வானம்பாடி புதிய இலக்கிய வட்டத்தை உருவாக்கியது அல்லவா?

அக்கினி: உண்மைதான். வானம்பாடி உச்சநிலைக்கு சென்று கொண்டிருந்த சமயம் எனக்கு எழுத்தின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். புதுக்கவிதைகள் நிறைய எழுத ஆரம்பித்தேன். நிறைய கவிஞர்கள் உருவாகக்கூடிய வாய்ப்பும் இருந்தது. வானம்பாடிக்கு நிறைய பேர் எழுதினார்கள். இச்சமயம் புதுக்கவிதை பயணத்தில் என்னோடு இணைந்து துணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் சிங்கப்பூர் இளங்கோவன். அவர் என்னைவிட ஆற்றல்மிக்க கவிதைகளை இயற்றக்கூடியவர். அவரது கவிதைகள் மிகவும் மேம்பட்ட விசயங்களையும், மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் பேசக்கூடிய நல்ல கவிதைகளாக இருந்தன.

அதே காலகட்டத்தில் தோட்டபுற மக்களின் வாழ்க்கைச்சூழல், அதன் நினைவுகள் என எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து எழுதுபவராக கோ.முணியாண்டி இருந்தார். அடுத்தவர் துரை முனியாண்டி. அவர்தான் சின்னச் சின்ன கவிதைகளை எழுதக்கூடியவர். அது குத்தலாகவும் கிண்டலாகவும் இருக்கும். கெடாவில் இருந்து கனலன். புதுக்கவிதை துறையில் ஒரு கூட்டமே உருவாயிற்று. சொல்லப்போனால் வானம்பாடிதான் புதுக்கவிதைகளுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது. அவ்வப்போது இராஜகுமாரனும் ஆதிகுமணனும் புதுக் கவிதைகள் எழுதினார்கள்.

அன்று நிறைய எதிர்ப்புகள் இருந்தன. ‘இலக்கணத்தை மீறி எழுதுகிறார்கள்’ ‘கவிதையா இது?’ ‘மரபுகளை மீறிவிட்டார்கள்’ என மற்ற பத்திரிகைகளில் எழுதுவார்கள். மோசமான குறியீடுகளுடன் எங்களை எழுதுவார்கள். ஆனால் நாம் அதைப்பற்றி கவலைப்பட்டதெல்லாம் கிடையாது. ஏனெனின் அன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு புதுக்கவிதை பிடித்திருந்ததது. அந்த வடிவம் பிடித்திருந்தது.

அந்த வடிவம் நிறைய இளைஞர்கள் மத்தியில் போகும்பொழுது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இதன் மூலம் இந்த வடிவம் செல்வாக்கு பெற்றுவிடும் என்பது மரபுக் கவிஞர்களின் வருத்தம். அப்போது இருந்த தமிழ்ப் பத்திரிகைகளில், முரசு மலேசியாவில் நின்றுவிட்டது. தமிழ் மலரும் மாறி தினமலர் ஆகிவிட்டது. நேசன் மட்டும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களும் இந்த வளர்ச்சியில் பங்கெடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களும் புதுக்கவிதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வழியாக வானம்பாடிதான் புதுக்கவிதைக்கு பெரிய அடித்தளத்தைக் கொடுத்தது. இந்த நாட்டில் சிறந்த கவிஞர்களை உருவாக்கியது வானம்பாடி இயக்கம்தான்.

இன்னொரு வகையில் நான் ஒருவரை இங்கு நினைவுகூர வேண்டும். புதுக்கவிதை என்று சொன்னாலே அன்றைய காலகட்டத்தில் பைரோஜி.நாராயணன்தான் நினைவுக்கு வருவார். காரணம் அவர் எங்களுக்கு முந்திய தலைமுறையைச் சார்ந்தவர். வானொலியில் வேலை செய்து கொண்டிருந்த காலகட்டதிலேயே, சில புதுக்கவிதைகளை மேற்கோள்காட்டி தன்னுடைய சினிமா நிகழ்ச்சியில்கூட விமர்சனம் செய்வார். இந்தக் கவிதைகளைப் பார்த்தீர்களா? இது இப்படியாக இருந்தது எனப் பேசுவார். அவருக்கு புதுக்கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. நிறைய கவிதைகளை வாசிப்பதோடு எங்களுக்கு நிறைய ஊக்கமும் கொடுப்பார்.

இந்தப் புதுக்கவிஞர்கள் எல்லாம் அவ்வப்போது சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோமே தவிர இயக்கமாகவோ அல்லது அமைப்பாகவோ செயல்பட வேண்டும் என்கிற யோசனை எல்லாம் எங்களுக்கு கிடையாது. எல்லோரும் ஏறக்குறைய ஒரே வயதை ஒட்டியவர்கள், குறைந்த வயதுக்காரர்கள். எங்களில் இருந்து கொஞ்சம் மேம்பட்டு சிந்திக்கின்றவர் எம்.ஏ.இளஞ்செல்வன். அவர் ஓர் ஆசிரியர். அவரின் பாணியே வேறு.

எம்.ஏ.இளஞ்செல்வனின் ஆளுமை எவ்வாறு வானம்பாடியையும் புதுக்கவிதை சூழலையும் மேம்படுத்தியது?

அக்கினி: புதுக்கவிதையை ஓர் அமைப்பு ரீதியில் கொண்டு போகலாமே என்று ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பை அவரே உருவாக்கி எங்களையெல்லாம் அதில் சேர்த்து அரவணைத்தார். இறுதியாக 1978ஆம் ஆண்டு சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி மண்டபத்தில் ஒரு புதுக்கவிதை மாநாட்டையும் எழுத்தாளர் சீ.முத்துசாமி மற்றும் நீலவண்ணனுடன் இணைந்து நடத்தினார்.

அந்த மாநாட்டில் வானம்பாடியில் கவிதை எழுதிய எங்களைப்போன்ற புதுக்கவிதையாளர்கள் எல்லாம், சிறப்பாக அழைக்கப்பட்டோம். எனக்கு எழுத்தின் மூலம் அறிமுகமான கவிஞர் கோ.முனியாண்டியை அங்குதான் நேரடியாக சந்தித்தேன்.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களாக இரா.தண்டாயுதம், எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு, எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமாகிய எம்.துரைராஜுவும் கலந்துகொண்டார்கள்.

அதில் முக்கியமான இன்னொருவர்தான் பைரோஜி.நாராயணன். அவர் புதுக்கவிதையின் நல்ல விமர்சகர். அவரும் ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த மாநாட்டை ஒட்டி ‘புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்’ எனும் புதுக்கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. சொல்லப்போனால் அந்த புதுக்கவிதைத் தொகுப்புதான் மலேசியாவின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு என நான் நினைக்கிறேன். அதன் பிறகுதான் பிற தொகுப்புகள் வரத் தொடங்கின.

இந்த மாநாடுதான் எங்களை ஒட்டுமொத்தமாக ஒன்றுபடுத்தவும், சரியான திசையை நோக்கி புதுக்கவிஞர்கள் முன்னேறவும் அடித்தளமாக அமைந்தது. உபரியாக இருந்தவர்கள் எல்லாம் ஒன்றுபட்ட காலம் அது. பிறகு கூலிம்மில் இரண்டாவது புதுக்கவிதை மாநாடு நடந்தது.

அந்த மாநாட்டில் நாங்கள் எல்லோரும் பங்கேற்றோம். சிங்கையில் இருந்து இளங்கோவன் வந்திருந்தார். பெரிய சர்ச்சைக்குப் பிறகு அவரது ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது. அதுவே அம்மாநாட்டில் வெளிச்சத்தைக் கொடுத்தது. அரு.சு.ஜீவானந்தமும் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைச் சமர்ப்பித்தார். அந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தொடர்ந்து மூன்றாவது இலக்கியச் சிந்தனை மாநாடும் நடத்தப்பட்டது. அது சித்தியாவானில் மஞ்சோங் பகுதியில் நடைபெற்றது. கோ.முனியாண்டி அதில் தன்னை முழுக்க இணைத்துக்கொண்டார்.

சுகுமாராக இருந்த நீங்கள் அக்கினி என்றே பெரும்பாலும் இலக்கியச் சூழலில் அறியப்படுகிறீர்கள். அக்கினியும் அக்கினிக்குள் கவிதையும் எப்படி உருவானது?

அக்கினி: அவ்வப்போது மரபுக்கவிதைகளை சின்னச் சின்னதாக சுகுமார் என்ற பெயரில் எழுதிக்கொண்டு இருந்தேன். எந்தப் பெயர் பிடித்திருக்கிறதோ அந்தப் பெயரில் கவிதை எழுதிவிடுவேன். ஆனால் இதெல்லாம் முறையல்ல என ஆதி.குமணன் எனக்கு சுட்டிக்காட்டினார். ‘எழுதினால் ஒரே பெயரில் எழுத வேண்டும். உன் பெயர் பிடிக்கவில்லையெனில் ஏதாவது புனைப்பெயரில் எழுது’ என்றார்.

அந்தச் சமயத்தில்தான் ஒரு புதுக்கவிதையில் என் பெயரை அக்னி என மாற்றிக்கொண்டு எழுதினேன். அந்தப் பெயரில் கவிதை பிரசுரம் ஆனது. ஆதி கூப்பிட்டார். அக்னி என்பது வடமொழிச்சொல், அதை பெயரில் வைத்துக்கொண்டு தமிழ்க்கவிதை எழுதுகிறாயா நீ? என்றார். பிடித்திருந்தது வைத்துக்கொண்டேன் எனச் சொன்னேன். சரி வைத்துக்கொள், ஆனால் அதனை தமிழ்ப்படுத்து என்றார். எனக்குப் புரியவில்லை. அக்னி என்கிற பெயரை அக்கினி எனத் தமிழில் மாற்றிக்கொள்ளச் சொன்னார். அன்று வேடிக்கையாக இருந்தாலும் பின்னாளில் அந்தப் பெயரிலேயே அறியப்பட்டேன். எனக்கு அக்கினி என்னும் பெயர் அப்படித்தான் வந்தது.

என்னுடைய புதுக்கவிதை தமிழ் மலரில் தொடங்கியது. நான் சில முயற்சிகளையும் செய்திருந்தேன். புதுக்கவிதையை ‘தனி ஆவர்த்தனம்’, ‘நித்தியகன்னி’ என்ற தலைப்புகளில் இரண்டு தொடர்களாக எழுதினேன். தமிழ்நாட்டில் கூட அந்தச் சமயத்தில் புதுக்கவிதைகள் தொடராக வந்ததில்லை.

கனா மகுடங்கள் உங்களது புதுக்கவிதை தொகுப்பு. பெரும்பாலும் திசையற்று சுழன்ற நீங்கள் அக்காலக்கட்டத்தில் எப்படித் தொகுப்பை வெளியிடும் உந்துதல் பெற்றீர்கள்?

அக்கினி: 1980-களில் வானம்பாடி விட்டு வெளியேறி, 1981-ல் தமிழ் ஓசை என நாங்கள் தொடங்கினோம். ஆதி.குமணன், இராஜகுமாரன், நான் சேர்ந்து தினசரி பத்திரிகை ஆரம்பித்தோம். வானம்பாடி மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு முன்னேற முடியாது எனத் தெரிந்தபோது அதன் உரிமையாளரான ரஹீமிடமே ஒப்படைத்துவிட்டு தினசரி பத்திரிகை ஆரம்பித்தோம்.

நாங்கள் ஆரம்பித்த தமிழ் ஓசையிலும் நான் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். அதோடு செய்திப் பிரிவுகளையும் பார்த்துக்கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் சிங்கை இளங்கோவன் அவரது கவிதைகளைத் தமிழகத்தில் கொடுத்து புத்தகமாக்கிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் எழுதுவது முக்கியமில்லை, அவை புத்தகங்களாக வந்தால்தான் ஆவணமாக இருக்கும். நாளை நமக்குக்கூட அடையாளம் வேண்டுமென்றால் அந்தப் புத்தகம் வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது எனக்கிருந்த பொருளாதாரச் சூழலில் அது சாத்தியப்படவில்லை.

இந்தச் சூழலில்தான் இராஜகுமாரனும் என் கவிதைகளைப் புத்தகமாக்கச் சொன்னார். பல கவிதைகள் எழுதியுள்ளேன். அவை காணாமல் போகாமலிருக்க தொகுப்பு புத்தகமாக்க வேண்டும் என்றார். அப்போதும் என்னால் சம்மதிக்க முடியவில்லை. பிறகு அவரே அவற்றை எல்லாம் எடுத்து அவர் வைத்திருந்த சிறிய பதிப்பகத்தின் மூலமாக புத்தகமாகப் பதிப்பித்து அவராகவே வெளியிட்டார். அந்தத் தொகுப்பிற்கு ‘கனா மகுடங்கள்’ என்று பெயரிடப்பட்டது. தமிழ் மலர், வானம்பாடி, தமிழ் ஓசை ஆகியவற்றில் எழுதிய கவிதைகள் அவை. அதுதான் என் முதல் புத்தகம். கவிதைகளைப் பொருத்தவரை அதுதான் எனது கடைசி புத்தகமும் கூட.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் கழித்து இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இராஜகுமாரன் அப்போது என்னை வற்புறுத்தி புத்தகம் எழுதச் சொன்னது நல்லதுதான். கவிதைகளைச் சேர்த்து வைக்கும் பழக்கம் இல்லாததால் நிறைய கவிதைகளை இழந்திருக்கிறேன். எழுத்தாளனுக்கு ஆவணப்படுத்ததுதல் முக்கியம். அதில் அலட்சியம் கூடாது என்பதை 30 ஆண்டுகள் கழித்து கற்றுக்கொண்டேன்.

நூல் பதிப்பு என்றவுடன் வானம்பாடியில் தொடங்கப்பட்ட குறுநாவல் பதிப்புத்திட்டம் நினைவுக்கு வருகிறது. உங்கள் குறுநாவலும் அம்முயற்சியில் இடம்பிடித்துள்ளது. கொஞ்சம் பின் சென்று அது பற்றி கூறுங்கள்.

அக்கினி: வானம்பாடி சில படைப்பளர்களை உருவாக்கிய அதே காலகட்டத்தில் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியதை புத்தகமாக்க பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தமிழகத்தில் புத்தகத்தைக் கொடுத்து பொருட் செலவோடு அச்சடித்து, அங்கிருந்து இங்கே கொண்டு வந்து, வாசகர்களுக்கு விற்பதோ வெளியீட்டு விழா செய்வதோ, குதிரைக் கொம்பான வேலை. உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புகளைப் புத்தகமாக்குவது குறித்து ஆதி.குமணன் ஒருமுறை திட்டம் கொண்டுவந்தார். இதனை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் வெறும் புத்தகங்களைத் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வந்தால் மட்டும் போதாது. அது வாசகர்களுக்குப் போய்ச்சேர இயக்கங்கள் எதாவது செய்யவேண்டும். முடிந்தால் புத்தகங்களை அவர்களே எடுத்து வெளியீடு செய்ய வேண்டும் என்றார். அந்தச் சிந்தனையில் வானம்பாடியில் ஒரு திட்டத்தை ஆரம்பித்தோம். ஆதி.குமணனின் தலைமையில் மாதம் ஒரு எழுத்தாளரின் நாவல் என்கிற திட்டம்தான் அது.

சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் உங்கள் நாவலை எங்களிடம் கொடுத்து புத்தகமாக்க விரும்புகிறீர்களா எனக் கேட்போம், பிறகு எங்களால் இவ்வளவு தொகையைக் கொடுக்க முடியும் எனத் தொகையைக் கொடுப்போம். அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு அவர்களின் நாவலை வாங்கி வெளியிடுவோம். அவர்களுக்கு எந்தச் செலவும் இருக்காது. புத்தகத்திற்கான உரிமையையும், எங்களால் முடிந்த தொகையையும் எழுத்தாளருக்கு கொடுத்துவிடுவோம். பிறகு அந்த நாவலை புத்தகமாக்கி எல்லா கடைகளுக்கும் கொண்டு போய் சேர்ப்போம். அந்தப் புத்தகத்தைப் பரவலாக்கும் வேலையை வானம்பாடி செய்யும்.

இதன் அடிப்படையில் பல எழுத்தாளர்கள் முன் வந்தார்கள். அவர்களின் நாவல்களை மாதம் ஒன்றென வெளியிட்டுக்கொண்டிருந்தோம். மக்களுக்கும் விருப்பமான திட்டமாக இருந்தது. அதோடு நிறைய வாசகர்களை அந்த நாவல்கள் சென்றடைந்தன. கடைகளில் வைப்பதும் விற்கப்படும். வானம்பாடி இதழை அனுப்பும்போது நாவலையும் அனுப்பிவிடுவார்கள். வானம்பாடி இதழுக்கான வசூலைச் செய்யும்போது நாவலுக்கான விற்பனைத் தொகையையும் வசூல் செய்துவிடுவார்கள்.

ஒரு சமயம் ஓர் எழுத்தாளர் சரியான நேரத்தில் நாவலை அனுப்பி வைக்க முடியாததால் அந்த மாதம் துண்டு விழுவதாக இருந்தது. அப்போது ஆதி. குமணன் என்னை அழைத்தார். இம்முறை நாவல் வெளிவருவது தடைப்படும்போல தெரிகிறது, நீ கவிதைகளை எழுதுவதை நிறுத்திவிட்டு நான்கு நாட்களில் நாவலை எழுதிக் கொடு என்றார்.

ஏற்கனவே சிறுகதையை முயற்சி செய்து மிக மோசமாக தோல்வி கண்டு இந்த வம்பே வேண்டாமென கவிதை எழுதிக்கொண்டிருக்கும் என்னைப் போய் நாவல் எழுதச் சொல்லிவிட்டாரே. மறுபடியும் தோற்கனுமா என நினைத்தேன். ஆனால் அவரிடம் உடனே சொல்ல முடியவில்லை. பத்திரிகையாளனாக இருந்துகொண்டு தேவையான நேரத்தில் உதவி செய்யாவிட்டால் எப்படி?

எப்போதோ படித்த ஆங்கில நாவலின் தாக்கம். அதைத் தமிழ் மயப்படுத்தி ‘பட்டுப்புழுக்கள்’ என்ற நாவலை எழுதினேன். அது அந்த மாதம் வெளிவந்தது.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்தத் திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அதில் நாங்கள் மட்டுமே சம்பந்தப்படவில்லை. அதற்கு அப்பால் அந்த நிறுவனத்தை நடத்துகிற முதலாளியும் சம்பந்தப்பட்டிருக்கிறார். வேறு வழியின்றி அந்தத் திட்டத்தை நாங்கள் நிறுத்தும்படியானது வருத்தம்தான். அந்தத் திட்டம் தொடர்ந்திருந்தால் பத்து ஆண்டுகளில் நமக்கு குறைந்தது நூறு நாவல்களாவது கிடைத்திருக்கும். இந்த நாவல் திட்டத்தின் கீழ்தான் ‘தூரத்து நிலவு’ எனும் நாவலை ராஜகுமாரன் எழுதியிருந்தார்.

மீண்டும் உங்கள் கவிதை உலகுக்கு வருவோம். முழு வீச்சுடன் தொடங்கிய உங்கள் கவிதை உலகு தேக்கம் கண்டது வருத்தமானது. அதே சமயம் நீங்கள் ஒரு அறிவியல் கட்டுரையாளராகப் பரிணாமம் எடுத்ததும் முரண் இயக்கம் அல்லவா!

அக்கினி: என்னுடைய எழுத்தார்வம் என்பது புதுக்கவிதை என்கிற ஒரே இலக்கை நோக்கி கூர்ந்த பார்வையில் போய்க்கொண்டிருந்தது. அதில் வெற்றி பெறவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. சில நல்ல கவிதைகளை என்னால் கொடுக்க முடிந்தது. கவிதைகளால் நான் பரவலாக அறியப்பட்டவன் ஆனேன்.

ஆனால் நான் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் தாக்கம் என்பது வேறு. செய்திகளோடு நான் கட்டிப்புரண்டு கொண்டிருந்த காலம் அது. அன்றாடச் செய்திகளை என்னுடைய பார்வையின் கீழ் நான்தான் செய்யவேண்டியிருந்தது. அதுதான் கவிதைகளிலிருந்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக வைத்தது. காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை செய்திகளோடு போராட்டமாகவே இருக்கும். கவிதைகள் குறித்து பேசுவதும் எழுதுவதும் குறைந்துகொண்டே வந்தது. இதனை என் நண்பர்களான சிங்கை இளங்கோவன், கோ.முனியாண்டி போன்றோர் அறிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் ‘தொழிலையும் கவிதையையும் ஒன்றாக்கிக்கொள்ளாதே’ என ஆலோசனை கூறுவார்கள். தொழிலின் அழுத்தம் கவிதையைப் பாதிக்கக்கூடாது. அது ஒரு நல்ல கலை என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதேசமயம் இயல்பாகவே பத்திரிகைக்குக் கட்டுரை தேவை. நிறைய செய்தி அனுபவங்கள் இருந்ததால் நிறைய தகவல்கள் தெரிந்திருந்தது. அவசரமாக ஒரு கட்டுரையோ ஒருவரின் பின்னணியோ எழுத வேண்டும் என்றால், அதற்கு தேவையான தகவல்களை ஏற்கனவே என் மனதில் சேமித்து வைத்திருப்பேன். ஆக, கட்டுரை எழுதுவது என்பது எனக்கு எளிமையாக வந்தது. அவசரத்திற்கு கட்டுரை எழுதிக் கொடுப்பதில் தொடங்கி, ஞாயிறு மலருக்கு வாரா வாரம் கட்டுரை எழுத ஆரம்பித்தேன். இப்படியாக கவிதைகளில் இருந்து திசைமாறி கட்டுரைக்குள் நுழைந்துவிட்டேன்.

இயல்பாகவே எனக்குப் பன்முகத்தன்மை இருந்துள்ளது எனலாம். வெளிநாட்டு செய்திகளை வழங்குபவனாகவும் இருந்துள்ளேன், விளையாட்டு செய்தியாளனாகவும் இருந்துள்ளேன், உள்ளூர் செய்தியாளனாகவும் இருந்துள்ளேன். சமயம் சார்ந்தும் எழுதியுள்ளேன், சமயத்திற்கு எதிரானவற்றையும் எழுதியிருக்கிறேன். மாறுபட்ட கருத்துகளை நாத்திக கோணத்திலும் பார்த்திருக்கிறேன். இவை எல்லாம் எனக்கு கட்டுரை எழுதுவதை எளிமையாக்கிக்கொண்டே இருந்தன. இதன் தேவையும் பத்திரிகைகளில் இருந்தது. வாரா வாரம் கட்டுரை எழுதத் தொடங்கி பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதினேன். வாசகர்களும் என் கட்டுரைகளில் இருக்கும் எளிமையை விரும்பினார்கள். ஆதி.குமணனும் என்னை ஊக்கப்படுத்தினார். அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை, அரசியல் மாற்றங்களை கட்டுரைகளில் எழுதுவது காலப்போக்கில் அதனை பழைய செய்திகளாக மாற்றிவிடும் அபாயம் இருந்தது. ஆக, நான் எழுதும் கட்டுரைகளில் எனது பாணியை எனது அடையாளத்தைப் புகுத்தினேன். எதை வேண்டுமானாலும் எழுதுபவன் பின்னாட்களில் எதன் மூலமும் அறியப்படமாட்டான் என்பதை நான் உணர்ந்திருந்தேன். எல்லாக் கலையும் தெரிந்தவனுக்கு கடைசியில் எந்தக் கலையும் கைகொடுக்காது எனச் சொல்வார்கள்.

பன்முகத் தன்மையில் இருந்து மீண்டும் ஒன்றை அடிப்படையாக கொண்டு கட்டுரைகள் எழுதலாமே என்றெண்ணி அறிவியல் கட்டுரைகளை எழுத முயன்றேன். அதற்கு ஒரு வரவேற்பு இருந்தது. இரசித்தவர்கள் எல்லாம் படித்தவர்களாக இருந்தார்கள். சாதாரண வாசகர்கள் அதனைப் படிக்கவில்லை. பள்ளி ஆசிரியர்கள் அதனை நினைவில் வைத்து சந்திக்கும்போது பகிர்ந்துகொள்வார்கள்.

அறிவியல் கட்டுரைகள் எனக்கு கைவருவதை நான் கண்டறிந்தேன், பிறகு அறிவியல் சார்ந்த புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். பிரபலமான ஆங்கில சஞ்சிகைகளில் எல்லாம் ஒரு பக்கம் அறிவியலுக்காக இருக்கும். ஆனால் நாம்தான் பண்டைய அறிவியலையும் நடைமுறை அறிவியலையும் கண்டுகொள்வதில்லை.

நம்மை நோக்கி ஒரு விண்கல் வேகமாக வருகிறது என்றால், அது எவ்வளவு வேகத்திற்கு வந்தால் எனக்கென்ன எனக் கேட்பவர்கள்தான் அதிகம். அதே விடயத்தை ‘கவுண்டமணி எத்தினால் செந்தில் விழுவாரே அந்த வேகத்தில் அந்த விண்கல் நம்மை நோக்கி வருகிறது’ என்று சொன்னால், அந்த உவமையை வைத்துதான் விண்கல்லையே இங்கு பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கிண்டலும் நகைச்சுவையும் தேவையாக இருந்தது. அதனைத்தான் அறிவியல் கட்டுரையில் நான் புகுத்தினேன். பல ஆசிரியர்கள் என் கட்டுரையைப் படித்து அதன் எளிமையை மாணவர்களிடம் சொல்வதாகச் சொல்லியுள்ளார்கள். காலப்போக்கில் கவிதை உலகம் என்னை மறந்தாலும் நான் எழுதிக்கொண்டிருக்கும் அறிவியல் உலகம் என்னை மறக்காது என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டு. அறிவியல் கட்டுரை எழுதுகிறவர்களும் அதனை தொடர்ச்சியாக செய்வதில்லை. நான் பதினைந்து ஆண்டுகளாக அறிவியல் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் வேறு வேறு ஊடகங்களை நோக்கி செல்வதால் அறிவியல் கட்டுரை எழுதுவதின் தொடர்ச்சி கொஞ்சம் தடைப்பட்டு இடைவெளி உருவாகியுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு நான் மீண்டும் அறிவியல் கட்டுரைக்கு வருவேன்.

உங்கள் ஈழப்பயணம் குறித்த தொடர் மிகப்பிரபலம். அதன் வழி வெளிவந்த ‘மண்ணே உயிரே’ நூலும் குறிப்பிடத்தக்க ஆவணம். ஈழப் போராட்ட காலத்தில் நிகழ்ந்த உங்கள் பயணம் பற்றி கூறுங்கள்.

அக்கினி: நான் ஒரு செய்தியாளனாக இருந்த காலகட்டத்தில் என்னை மிகவும் பாதித்த இரண்டு விசயங்கள் உண்டு. ஒன்று, தங்கள் தாயகத்தை உருவாக்குவதற்காக நூற்றாண்டு காலம் போராடிய பாலஸ்தீனியர்களின் போராட்டம். பாலஸ்தீன மண்ணில் தொடங்கிய ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக திசைமாறி ஈழ மண்ணிற்கு வந்தது. அந்தக் காலத்தில் ஈழ மக்களின் போராட்டம், தலைவர் பிரபாகரனுடைய தலைமைத்துவம், சிங்கள இராணுவத்திற்கு எதிராக அவர் நடத்திய போர்கள் இவற்றைப் பற்றிய செய்திகள் எழுத வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. அதேபோல வாசகர்களுக்கும் அங்கு என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இருந்தது. அதனை குறித்த செய்திகளைத் தொடர்ச்சியாக எழுதிய பிறகு அதிலிருந்து தொகுத்து நிறைய கட்டுரைகள் ஈழம் குறித்து எழுதினேன். கிட்டத்தட்ட ஒரு செய்தியாளனாக ஈழப் போராட்டத்தில் மூழ்கிவிட்டேன். அது குறித்து இன்னும் அதிக விடயங்களை நாம் எழுதவேண்டும் என அவர்களைப்பற்றி அதிகம் அக்கறை எடுத்து தெரிந்து கொள்கிறேன். அதனை சார்ந்தவர்களையும் தொடர்புகொண்டேன். அப்படியான சூழலில்தான் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

தமிழீழத் தலைவர் பிரபாகரனுக்கும் அப்போது பிரதமராக இருந்த ரனிலுக்கும் போர் நிறுத்த தற்காலிக சமரசம் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு தமிழீழ மக்களுக்குத் தேவை சுய ஆட்சியா அல்லது தனி நாடா போன்ற பிரச்சனைகளைப் பேசலாம் என முடிவானது. அனைத்துலக நாடுகளின் முயற்சி குறிப்பாக நார்வே இதில் முழுமூச்சாக ஈடுபட்டது.

அந்த ஒப்பந்தம் கிளிநொச்சியில் கையெழுத்தாகப் போகிறது. இதற்காக உலக நாடுகளிலிருந்து நிறைய பத்திரிகையாளர்கள், ஊடகவியளாலர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் போன்றோர் அந்தத் திசையை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் நமக்கு அங்குப் போகக்கூடிய ஆற்றல் இல்லை. அதோடு மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்று நம் ஊடகங்கள் பலமுள்ளதோ வளமானதோ அல்ல. இந்தச் சமயத்தில் ஆதி.குமணன் என்னை அழைத்து, இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. தமிழீழப் போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தாகும் அந்த மாநாட்டுக்கு நம்மில் யாராவது போனால் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பதாகக் கூறினார். அதோடு சில காரணங்களால் அவரால் செல்ல முடியாது என்றும் என்னைச் சென்று வரச் சொன்னார். நானா என ஆச்சரியத்துடன் கேட்டேன். ஈழம் குறித்து செய்திகளைத் தொடர்ந்து எழுதுபவன் நீ என்பதால் நீதான் செல்ல வேண்டும் எனச் சொல்லி சிரித்தார். நான் புறப்படுகிறேன் என்றேன்.

நான்கு நாட்களில் அங்குச் சென்று கையெழுத்து உடன்படிக்கையைப் பார்த்துவிட்டு செய்தி சேகரிக்க வேண்டும். அவரமாக கிளம்பியதால் சரியாக முன்னேற்பாடுகள் செய்ய முடியவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிக்குச் செல்ல சிறப்பு பெர்மிட் வாங்க வேண்டும். என்னிடம் அது இல்லை. இராணுவ அனுமதி பெறுவதற்கு மூன்று வாரத்திற்கு முன்னதாகவே நாம் பதிவு செய்ய வேண்டும். கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே எனச் சொந்த முயற்சி எடுத்தோம். என்னுடன் புகைப்பட கலைஞர் மலையாண்டி வந்திருந்தார். அனுமதி இருக்கிறதோ இல்லையோ இந்த மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம். இங்கிருந்து கொழும்பு சென்று அங்கிருந்து வவுனியா சென்றோம். ஆனால் வவுனியாவைத் தாண்டிப் போக முடியாது. இராணுவமும் அனுமதிக்காது. அனுமதி வாங்குவதற்கு அங்குள்ள தமிழ் எம்.பிகளைப் பார்த்தோம். அவர்களும் கைவிரித்து விட்டார்கள். ஆகக் கடைசியாக வவுனியாவில் தமிழ் கலெக்டர் இருந்தார். அவர்தான் மாவட்ட ஆட்சியாளர். ஒரு தமிழர். சிறந்த நெறியாளர். நான்கு ஐந்து மணி நேரம் காத்திருந்து அவரைச் சந்தித்தோம். அவரும் சாத்தியமில்லை என்றார். அதற்கான அனுமதியைக் கொழும்பிலேயே பெற்றிருக்க வேண்டும் என்றார். இராணுவத்திடம் மூன்று வாரங்களுக்கு முன்னமே விண்ணப்பிக்க வேண்டும் என்றவர் தன்னால் உதவ முடியாது என்றார். நாங்கள் அங்கேயே இரண்டு மணிநேரம் காத்திருந்தோம். அவரும் வெளியில் வரும்போது எங்களைப் பார்த்து இன்னும் புறப்படாததைக் குறித்துக் கேட்டார். எங்களுக்குப் புறப்பட மனமில்லை என்றோம். அதோடு எங்களுக்கு எங்குச் செல்வது எனவும் தெரியவில்லை. மீண்டும் எங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னோம்.  என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எங்களுடைய தகவல்களை வாங்கிக்கொண்டார்.  அவர் முயற்சி செய்வதாகவும் ஆனால் அது 20% மட்டுமே வெற்றி பெறும் என்றும் கூறினார். 80% வெற்றி பெறாது, இருந்தும் நீங்களும் நானும் தமிழன் என்பதால் முயற்சிக்கிறேன் என்றார்.

மாலை ஐந்து மணிக்கு கொழும்பில் இருந்து எங்களுக்கான அனுமதி படிவம் அவருக்கு தொலைநகலில் வந்தது. அனுமதிக் கடிதத்தைக் கையில் கொடுத்துவிட்டு போகலாம் என்றார். ஆனால் அது போகக்கூடிய நேரம் அல்ல. ஐந்து மணிக்கு எல்லைகளை அடைத்துவிடுவார்கள்.

அனுமதி வாங்கிவிட்டு வெளியாகும் போதுதான் அங்குள்ள கவுன்சலர் எங்களைப் பார்த்தார். அனுமதி கிடைத்ததா எனக் கேட்டார். கிடைத்திருக்கிறது என்றேன். அதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் கூறினார். அப்படிக் கிடைத்திருக்கிறது என்றால் உங்களுக்காக அவர் அதிக சிரத்தை எடுத்திருக்கிறார் என்று பொருள். இராணுவத்தின் உச்ச தளபதியிடம் பதினைந்து நிமிடம் உங்களுக்காக அவர் சண்டையிட்டார். உங்களுக்கு அனுமதி கிடைக்கவேண்டும் எனப் பிடிவாதமாக பேசினார். நிச்சயம் அவருக்கு அது கெட்ட பெயரைக்கூட கொடுத்திருக்கும் ஆனால் உங்களுக்காக அவர் அப்படிச் செய்தார் என்று கவுன்சிலர் கூறினார்.

அங்கிருந்து வெளிவந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து எப்படியாவது 30 நிமிடத்தில் ராணுவ எல்லைக்குச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் அதை கடக்க வேண்டும் என்றும் கூறினோம். அதை விட்டால் மறுநாள் காலைதான் அங்குச் செல்ல முடியும்.

ஆட்டோவும் வேகமாகச் சென்றது. எங்கள் நல்ல நேரம் முகாமுக்கு அருகில் விபத்து ஏற்பட்டிருந்தது. வாகனங்கள் நெரிசலால் நின்றுவிட்டன. நாங்கள் ஆட்டோவில் சென்றதால் கீழே இறங்கி வரிசையின் முன்வந்து விட்டோம். அங்குச் சென்று பார்த்தால் முகப்பை அடைத்திருந்தார்கள். ஆனால் அப்போதும் பரிசோதனை நடந்துகொண்டிருந்தது. பக்கத்தில் விசாரித்தோம். இன்று அரை மணி நேரம் கூடுதலாகக் கொடுத்திருப்பதாக கூறினார். விபத்தின் காரணமாக ஐந்து மணிக்கு மூட வேண்டிய எல்லை இன்று ஐந்தரை மணி வரை திறந்திருக்கும் என்றார். நாங்கள் உள்ளே சென்றோம்.

எங்கள் பயணம் ஆரம்பமானது. நிறைய பேரை எங்களால் சந்திக்க முடிந்தது. மறுநாள் அதிகாலையில் 3 மணியிலிருந்து பிறகு மதியம் 3 மணி வரைக்கும் இடைக்கச்சை எனும் இடத்தில் மாந்தோப்பு மண்தரையில்தான் எல்லோரும் படுத்திருந்தோம்.

கையெழுத்து ஒப்பந்தப்பாரத்தில் கையெழுத்திட பிரபாகரன் வந்திருந்தார். அண்டன் பாலசிங்கம் வந்திருந்தார். தமிழ்ச்செல்வனும் இருந்தார். மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொண்டு எங்களால் செய்திகளை அனுப்ப முடிந்தது. செய்திகளை நண்பர் மூலமாக கொழும்புக்கு அனுப்பி அங்கிருந்து மலேசியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தோம். ஏனெனில் கொழும்பிற்கும் அதற்கும் 9 மணி நேரப் பயணம். இந்தச் சிரமத்திற்கு அப்பால் வந்துவிட்டு எப்படி தலைவரை பார்க்காமல் செல்வது? எனக்கு நான்கு நாள்தான் அனுமதி. இங்கிருந்து கைபேசியும் பேச முடியாது. அந்த வசதியும் கிடையாது.

எப்படியாவது வாய்ப்பு கிடைத்தால் தலைவரைச் சந்தித்து ஒரு பேட்டி எடுக்க எண்ணினோம். அங்குள்ள முக்கியமானவர்களிடம் பேசி அங்குத் தங்க தயாரானோம். எங்களை ஒரு வீட்டில் தங்கவைத்து இரண்டு பாதுகாவலார்களையும் கொடுத்தார்கள். இப்படியே இரண்டு நாள் தங்கிவிட்டோம். அடுத்த நாள் தலைவரைப் பார்க்காமல் புறப்படமாட்டோம் என்றோம்.

அந்த வட்டாரத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தோம். எளிதாக தலைவரைப் பார்க்க முடியாத சூழல். ஏனெனில் அக்காலகட்டம் ஆப்கானிஸ்தானில் பேட்டி எடுப்பது போல நுழைந்து அங்குள்ள தலைவரை மனித வெடிகுண்டாக மாறி கொன்றுவிட்டார்கள்.

இப்படியே 22 நாட்களாகிவிட்டன. யாருக்கும் தகவலும் சொல்ல முடியவில்லை. வீட்டிலும் குழப்பம் ஏற்பட்டது. 4 நாட்களில் வரவேண்டிய நான் 22 நாட்கள் ஆகியும் வரவில்லையெனில் நினைத்துப் பாருங்கள்.

இதற்கிடையில் நார்வேயிலிருந்து துணையமைச்சர் எரிக் சொல்ஹேம் என்பவர் வந்திருந்தார். அவரைச் சந்தித்தோம். அவரும் நமக்கு உதவ முடியாது என்றார். அது தவறு என்று கூறிவிட்டார். அவரால் அனுமதி வாங்கிக்கொடுக்க முடியாவிட்டாலும் அவரைப் பேட்டி கொடுக்கச் சொல்லி பேட்டி எடுத்தேன்.

திடீரென ஒருநாள் அரசியல் கட்சி பொறுப்பாளர் ஒருவர் அழைத்தார். ஒரு விருந்து இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளும்படி கூறினார். நார்வேயில் இருந்து துணையமைச்சர் எரிக் சொல்ஹேமும் வருகிறார் என்றார். அங்குச் சென்றோம். அரை மணி நேரம் கழித்து அங்கு அண்டன் பாலசிங்கம் வந்தார். அவருக்குப் பின் தமிழ்ச்செல்வன் வந்தார். அவரையும் ஒரு பேட்டி எடுத்தேன். சில மணி நேரம் கழித்து கிளம்புவதற்குத் தயாரானபோது ஒருவர் எங்களை அழைத்தார். நண்பர் ஒருவர் எங்களைச் சந்திக்க அழைத்ததாக கூறினார். அவர் அழைத்த இடத்திற்குச் சென்றோம்.

காலியான, சுத்தமான அறை. முழுக்கவும் வெள்ளை அடித்திருந்தார்கள். எங்களுக்கு அச்சம் வந்துவிட்டது. எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தோம். பின்புறமிருந்து யாரோ நடந்து வரும் ஓசை. திரும்பிப் பார்த்தோம். எங்கள் கண்களையே எங்களால் நம்ப முடியவில்லை. மனம் அவர் யாரென உணரவில்லை. அவர் பாட்டுக்கு வந்து சிரித்துவிட்டு கைக்கொடுத்தார். ”எப்படி இருக்கிங்க…? 20 நாள் எப்படி இருந்தது? இங்க தங்கியிருந்தது எல்லாம் நல்லபடியாக இருந்ததா?” எனக் கேட்டார்.

அப்போதுதான் என் எதிரில் நிற்பது பிரபாகரன் என்று மனம் சொன்னது. அந்தச் சந்திப்பை அத்தனை நாட்கள் கழித்து நான் எதிர்பார்க்கவில்லை என்று அவரிடம் கூறினேன். நாங்கள் இங்கு வந்திருப்பதும் இங்கு தங்கியிருப்பதும் அவருக்கு தெரியுமெனவும் தகவல் வந்ததாகவும் கூறினார். எனக்கு பல்வேறு பணிகள் இருந்தன. அதனால்தான் உங்களைக் காக்க வைத்துவிட்டேன் என்றார். நீங்கள் எங்கள் போராட்டம் குறித்து எழுதிக்கொண்டிருப்பதும் எங்களுக்கு தெரியும். எங்களை மீறி எந்தத் தகவலும் செல்லாது. எங்களை வந்தடையாமலும் இருக்காது என்றார். உலகின் எந்த மூலையில் இருந்து எங்களுக்கு ஆதரவு வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.  அப்போது அண்டன் பாலசிங்கமும் வந்துவிட்டார். தமிழ்ச்செல்வனும் வந்துவிட்டார். அவருடன் படம் எடுத்துக்கொண்டு அவரிடம் ஒரு பேட்டி கொடுக்கும்படி கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பது இல்லை, அப்படியான நடைமுறையும் இல்லை” என்றார். நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன் அதை நீங்கள் எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். ஈழத்துக்கு ஆதரவு தரும் என் சகோதரரை நான் வரவேற்கிறேன், அவ்வளவுதான் என்றார். அது போதுமென அவருக்கு கைக்கொடுத்துவிட்டு 45 நிமிடம் பேசினேன். நாடு குறித்து நம்மை குறித்தும் விசாரித்தார். தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படிப் பேசுகிறார்கள்? என விசாரித்தார். மலேசியத் தமிழர்கள் கலப்பு இல்லாமல் நல்ல தமிழ் பேசுவதை சொல்லி மகிழ்ந்தார். விடைபெற்றோம். 20 நாட்களாய் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சொன்னதும், பிரபாகரன் அவரின் உதவியாளரை அழைத்து செட்டிலைட் மூலம் என் குடும்பத்தில் உள்ள யாரையாவது அழைத்து நான் நலமோடு இருப்பதாக என்னைச் சொல்ல வைக்கும்படி சொன்னார். நான் பத்திரிகைக்காரன் என்பதால் செட்டிலைட் மூலம் தொடர்புகொண்டு இதன் மூலம் எதிரிகளுக்குத் துப்பு ஏதும் கிடைத்துவிட வாய்ப்புள்ளது என நினைத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

அங்கிருந்து 22 நாட்களாய் நான் எங்கிருந்தேன், என்ன செய்தேன் எனக் குறித்துக்கொண்டேன். இயக்கத்தின் முதியோர் இல்லம், குழந்தைகளின் காப்பகம், உடல் பாதிப்பு உள்ளவர்கள் இல்லம், அவர்களுக்கு செயற்கை கால்களைத் தயாரிக்கக்கூடிய இடங்கள், பாடசாலைகள் என எல்லா இடங்களையும் சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். போர் நடந்த இடங்கள் என இடங்களையும் பார்த்து வைத்துக்கொண்டு குறிப்பு எழுதிக்கொண்டேன்.

கோலாலம்பூரில் வந்து இறங்கினோம். எனக்கு ஒரே ஆச்சரியம். என்னைப் பார்த்த நண்பர்கள் அங்கு வந்திருந்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியாயினர். எனக்கு கைக்கொடுத்துவிட்டு அவர்களின் கைக்கு முத்தம் கொடுத்துவிட்டு சென்ற நபர்களை முதன் முதலாகப் பார்த்தேன். ஏனெனில் இது தலைவரைத் தொட்டக் கையல்லவா!

தலைவரை நேசிப்பவர்கள் இங்கு அத்தனை பேர் இருக்கிறார்கள். என்னைத் தலைவரின் பிரதிநிதியாகப் பார்த்தார்கள். அதன் பொருட்டே, என் அனுபவத்தை மக்கள் ஓசையில் கட்டுரையாக எழுதினேன். ஆதி.குமணன் எனக்கு அனுமதி அளித்தார். உள்துறை அமைச்சிலிருந்து சிக்கல் வரலாம் ஆனால் அப்படியாகாமல் எழுத வேண்டியது என் பொறுப்பு என்று கூறிவிட்டார். 25 வாரங்களுக்கு அதனை ஒரு தொடராக எழுதினேன்.

தமிழ்ச்செல்வன் தமது நண்பர் மூலமாக எனக்கு தகவல் அனுப்பினார். நான் எழுதிய தொடரைப் புத்தகமாகவோ ஆவணமாகமோ பதிவு செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டதார். பிறகு அவர், அப்படி என்னால் அதனைப் புத்தகமாக்க முடியவில்லையென்றால் அதன் உரிமையைக் கொடுக்க சொன்னார். அவர்கள் அதனை ஆவணமாக்கிக் கொள்வதாகச் சொன்னார்கள்.

அதனை நாமே புத்தகமாக்குவதுதான் சரி என முடிவெடுத்து வேலையில் இறங்கினேன். அதற்கு எனக்கு பெரும் உதவியாக இருந்தவர் ஓவியர் சந்துருதான். என் துணைவியார் பத்மினி எல்லாவற்றையும் தொகுத்துக் கொடுத்தார். அந்தப் புத்தகத்தை வடிவமைத்தவர் சந்துரு. காலம் தாழ்த்தாமல் அந்தப் புத்தகத்தை வெளியிட முடிவெடுத்தேன். அது என் வாழ்வின் முக்கியமான அங்கம். இன்றளவும் அந்த புத்தகத்தை அப்படித்தான் கருதுகிறேன். என் வாழ்நாளின் முக்கியமான புத்தகம் அது.

ஒரு வாசகனாக தொடர்ந்து உங்களை அவதானித்ததில் உங்களிடம் குறிப்பிட்ட ஓர் அரசியல் இல்லை என அறியமுடிகிறது. பொதுவுடமை திராவிடம் போன்ற இயக்கச் சிந்தனை உள்ளவர்களிடம் இணைந்திருந்த நீங்கள் உங்களை அவ்வாறு காட்டிக்கொண்டதும் இல்லை. அதற்கு முற்றும் முரணான தோற்றத்திலும் அறியப்பட்டுள்ளீர்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?

அக்கினி: நிச்சயமாய் நான் ஒரு தெளிவற்ற மனிதன். பொதுவுடமைவாதிகள் என்னைப் போன்றவர்களைத் திரிபுவாதி என்பார்கள். ஆம், அதுவும் உண்மைதான். நான் ஒரு திரிபுவாதி. உண்மையில் என் மாமா முக்கிய ஈர்ப்பு சக்தியாக விளங்கினார். அவர் ஒரு கம்யூனிஸ்ட். அதன் பிறகு எனக்கு வழிகாட்டியாக இருந்து நீ மேலும் எழுதி மேலே வர முடியுமென நம்பிக்கை ஊட்டியவர் ஆதி.குமணன். அவர் ஒரு நாத்திகர். இதற்கு அப்பால், நான் நாத்திகத்திலும் கால் பதிக்க முடியாமல் ஆத்திகத்திலும் கால் பதிக்க முடியாமல் பொதுவுடமை குறித்தும் அக்கறை இல்லாமல் ஒரு பொறுப்பற்ற உலகத்தில்தான் இருந்திருக்கிறேன். எனக்கு இப்போதுகூட தோன்றுகிறது. கொள்கை என்பது என்ன? ஏதோ ஒன்றில் பிடிவாதமாக இருப்பதா? பிடிவாதம்தான் கொள்கை என்பதா?

உதாரணத்திற்கு, என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நான் சைவம். என்னைக் கொண்டு வனாந்திரத்தில் விட்டுவிட்டாலும்கூட நான் அங்குக் காய்கறிகளைத்தான் தின்று கொண்டிருப்பேன். இல்லையென்றால் உயிரை விட்டுவிடுவேன் எனச் சொல்லமாட்டேன். நான் அங்குப் பார்ப்பேன், ஏதும் கிடைக்கவில்லையென்றால் வேட்டையாடி விடுவேன். எந்தச் சூழலில் வாழ்கிறேனோ அந்தச் சூழலில் வாழப் பழகிக்கொண்டவன். என்னால் வாழ மட்டுமே முடியும். அதையெல்லாம் கொள்கை என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எனக்கு இது பிடிக்காது, எனக்கு இது பிடிக்கும் என நீண்ட காலத்திற்கு எதுவும் இல்லை. இன்று பிடிப்பது நாளை பிடிக்காமல் போகலாம், இன்று பிடிக்காதது நாளை பிடிக்கலாம். நான் ஓர் எதார்த்தமான மனிதன்தான். நான் சென்ற இடத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன். அப்படி எனக்கென்று தனிப்பட்ட ஆன்மீகத்தை பார்த்தால் அது தெளிவானது அல்ல. அது களங்களானது. என்னை நன்கு கவனித்தால் என்னைச் சுற்றிலும் என் பெற்றோர் உட்பட பெரியார் கொள்கை கொண்டவர்கள். வீட்டில் சாமி படம் இரண்டு இருந்தால் அந்தப் பக்கம் பெரியார் படம் இரண்டு இருக்கும். சாமியைக் கூம்பிட்டு விட்டு இந்தப் பக்கம் வந்து பெரியாரை கும்பிட்டு விட்டு போய்கொண்டே இருப்பார்கள். சாமிக்கு உள்ள மரியாதை பெரியாருக்கும் கிடைத்தது. அவரும் சாமியாகிவிட்டார். கல்யாணம் செய்தால் சீர்திருத்த கல்யாணம்தான் செய்வார்கள். மூக்குக் குத்துவது, காது குத்துவது போன்றவை செய்யத் தயங்குவார்கள். பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள்தான் வைப்பார்கள்.

எனக்கு கொள்கை ரீதியில் ஆரம்பத்தில் நாத்திகத்தின் தாக்கம் உள்ளது. மாமா கம்யூனிஸ்ட் என்பதால் அந்த பார்வையும் இருந்தது. பத்திரிகைக்கு வந்த பின் எதார்த்தமான பார்வையும் எனக்குக் கிடைத்தது.

இதற்கு இடையில் என்னால் நம்ப முடியாதது என்னவென்றால், மக்கள் என்னை ஆன்மீகவாதியாகப் பார்த்தார்கள். ஏன் அப்படி எனத் தெரியவில்லை. அதின் என் துணைவியாருக்கும் கொஞ்சம் பங்கு உள்ளது. திருமணத்திற்கு முன் கோவிலுக்கு செல்லும் பழக்கம் குறைவாகவே இருந்தது. எனக்கும் தெய்வத்திற்கும் இருக்கும் உறவு ரகசியமானது. நான் ஏன் அதை வெளிக்காட்ட வேண்டும் என யோசிக்கிறவன்.

திருமணத்திற்குப் பின் மனைவி கோவிலுக்கு செல்வதால் உடன் செல்வேன். கோவிலில் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருப்பேன். தலையில் கொட்டு விழும். கோவிலுக்கு வந்துட்டு சாமி கூம்பிடாம என்ன வேடிக்கை? என்பார். அவரின் திருப்திக்காக அரையும் குறையுமாக சாமி கும்பிட்டேன். குழந்தைகள் வந்தப் பிறகு அவர்களுக்காக கோவிலுக்குச் செல்லும்படியானது. வேண்டுதல்களுக்காக செல்லும்படியானது. வேறு வழி இல்லை, சென்றுதான் ஆக வேண்டும். இது என் சமூக கடப்பாடு. இப்படி போய்க்கொண்டெ இருந்த சமயம் சில நன்னெறி கருத்துகளைப் படிக்க ஆரம்பித்தேன். அவை எல்லாம் சமயம் சார்ந்தே இருந்தன. நீ பொறாமைப் படாதே என்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? பொய் சொல்லாதே என்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? அது மனித மாண்பு அல்லவா.

அப்படிப் பார்க்கும்போது சமயம் சாராத நன்னெறிகள் குறித்து எழுதுவோம் எனத் தோன்றியது. அதனைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது தலைநகரில் நன்னெறி குறித்த கருத்தரங்கம் நடப்பதாக தெரிந்தது. அங்குச் சென்றேன். அங்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது பிரம்மகுமாரிகளின் தியான அமைப்பு செய்யும் நிகழ்ச்சி அதுவென. சரி வந்துவிட்டோம். கேட்டுவிடலாமே என்று அமர்ந்தேன்.

சமயச் சின்னங்கள் அணிந்திருந்தாலும் அவர்கள் பேசுவது சமயத்திற்கு அப்பால் இருந்தது. அது எனக்குப் பிடித்திருந்ததால் அவர்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன். பிறகு அவர்களில் ஒருவனாகிவிட்டேன்.

ஒரு மனிதனுக்கு இந்த வகையான நன்னெறிகள் எவ்வளவு தேவை என்று நிறைய எழுத ஆரம்பித்தேன். பிறகு கொஞ்ச காலம் கிருஷ்ணா பக்தி இயக்கம் நடத்தும் பயிற்சிகளில் கலந்து கொண்டேன். ஒரு முறை மட்டும் ஒருவரைப் பேட்டி கண்டு போட்டேன். அந்தப் பேட்டி அவர்களுக்குப் பிடித்துப்போனது. அன்று தொடங்கி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அழைத்துவிடுவார்கள். அங்கு பஜனை பாடுவார்கள். கேட்பதற்கு சுகமாக இருக்கும்.  பிறகு அவர்கள் ஆன்மிக ‘ரீட்ரிட்’ நடத்துவார்கள். எங்காவது மூன்று நாட்கள் தங்கி பயிற்சி மேற்கொள்வார்கள். ஆன்மீகத் தலைவர்கள் வருவார்கள். அவர்களின் உரை இடம்பெறும். அதன் தலைவர் சிக்காகோவில் இருக்கிறார். அவரையும் நான் பேட்டி கண்டுள்ளேன். அவர்கள் மத்தியிலும் நான் சிறந்த ஆன்மீகவாதியாகத் தெரிந்தேன். கிருஷ்ண பக்தனாகக் காட்சியளித்தேன்.

என்னை எங்காவது பார்த்துவிட்டால் எனது தோழர் நாத்திகர் தீப்பொறி பொன்னுசாமி கேட்பார், எப்படி நீ இப்படி மாறிட்ட? எழுதும்போது இப்படியும் எழுதற அப்படியும் எழுதற. அதெப்படி உனக்கு மட்டும் வருது! நல்ல நாத்திகன் மாதிரியும் இருக்க நல்ல ஆத்திகன் மாதிரியும் இருக்க! ஒரே சமயத்தில் எப்படி இப்படி இரண்டு வகையான பார்வையோடு உன்னால் இருக்க முடியுது? என்று.

என்னால் அவருக்குப் பதில் சொல்ல முடியாது. முரட்டுக் கோவக்காரர். இதற்கு பதில் சொன்னால் கன்னத்தில் தட்டிவிடுவார். இரண்டு அறை விடுவார். பத்திரிகையில் இருப்பதால் இப்படி எழுதித்தானே ஆக வேண்டும் எனப் பதில் சொன்னாலும், அவர் டேய் உனக்கு ரெண்டும் கைவருது என்பதால், எவ்வளவு சாதூரியமா செய்ற தெரியுமா? ஆனா இதுக்கு எல்லாம் உனக்கு கைக்கொடுத்தது உன்னோட படைப்பு அறிவு தான்டா. படைப்புவாதி. அதனால நீ எதை எழுதினாலும் எனக்கு கவலை இல்லை என்பார். எல்லா திட்டும் திட்டிவிட்டு கடைசியாக என்னை படைப்பாளி எனச் சொல்லித்தான் அனுப்புவார்.

நான் யார்? இங்கும் இல்லை; அங்கும் இல்லை. கவிஞராகவும் இல்லை; கட்டுரையாளனாகவும் இல்லை. பத்திரிகையாளனாகவும் ஒன்றும் செய்யவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்தாலும் இதற்கெல்லாம் நான் சேர்த்து வைத்து கண்டுபிடித்த ஒரு அடையாளம் இருக்கிறது. ஆமாம், நான் எதார்த்தவாதி. வாழ்வில் என்னவெல்லாம் இயலுமோ அதையெல்லாம் செய்துவிட்டு போகக்கூடிய எதார்த்தவாதி எனச் சொல்லி தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் உங்களை முழுக்க ஊடகத்துறையிலேயே இணைத்துக்கொண்டிருக்கிறீர்கள். தொடக்கம் முதல் உங்கள் அந்த நெடிய பயணம் பற்றி சொல்லுங்கள்.

அக்கினி: என் வாழ்வில் எனக்குத் தெரிந்த தொழில் பத்திரிகைத் தொழில். ஊடகவியல்தான் எனக்குத் தெரிந்த, புரிந்த தொழில். இதிலிருந்து எடுத்து வெளியில் போட்டால் மீனைப்போல துள்ளித்துள்ளி செத்துவிடுவேன். 20 வயதில் தொடங்கிய பயணம் இப்போது 62 வயதாகிறது. இதுவரை செய்த ஒரே தொழில் பத்திரிகையாளன்தான். ஒரு திசையில் பயணித்துக்கொண்டு பல கோணங்களில் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன், அவ்வளவுதான். அப்படி நான் ஆரம்பித்தது தமிழ் மலர் 1973 தொடக்கத்தில், அங்கிருந்து அப்படியே புறப்பட்டு தொழிற்சங்கப் போராட்டம். பிறகு வானம்பாடி எனும் வாரப்பத்திரிகை ஆரம்பிப்பதில் ஓர் உறுப்பினராக நான் இருந்திருக்கிறன். ஆதி.குமணன் கூடவே இருந்து பயணப்பட்டிருக்கிறேன். அங்கிருந்து புறப்பட்டு மறுபடியும் ஒரு தினசரி பத்திரிகையாக தமிழ் ஓசை என்னும் பத்திரிகையை நாங்கள் தொடங்கினோம். அதிலும் ஆதி.குமணனின் தலைமையில் நான் இருந்தேன். அந்தப் பத்திரிகையும் வழக்கு நீதிமன்றம் எல்லாம் சென்று மூடப்பட்ட பிறகு, மீண்டும் மலேசிய நண்பன் பத்திரிகை வந்தது. பினாங்கில் சரியாக நடத்தப்படாமல் முடங்கிய மலேசிய நண்பன் பத்திரிகை உரிமத்தைச் சிக்கந்தர் பாஷாவிடம் இருந்து வாங்கி ஆதி.குமணன் தலைமையில் மீண்டும் தொடங்கினோம். புது வடிவத்தில் மலேசிய நண்பனைக் கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் அதில் நான் செய்தி ஆசிரியராக இருந்தேன். ஆதி.குமணனின் மறைவுக்குப் பிறகு என்னுடைய பாதையில் திருப்பங்களும் இடையூறுகளும் வந்தன. என்னுடைய பாதையை நானே தேர்ந்தெடுக்கவேண்டிய காலகட்டம் வந்தது. அதுவரை என் திசையை நிர்ணயித்தவர் ஆதி.குமணன்தான். அவரின் மறைவுக்குப் பிறகு எந்தத் திசையில் போவது என எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒரு தலைமை இல்லை. நானே முடிவெடுத்தேன். அவருடைய பெயரைப் பயன்படுத்தி, பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தோம். தமிழ்க் குரல் என்னும் பத்திரிகை. நான் ஆசிரியராக இருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அந்தப் பத்திரிகை வெளிவந்தது. பங்குதாரர்களிடம் ஏற்பட்ட குழப்பத்தால் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தபடியால் அதிலிருந்து விலகி சிறிது காலம் ஓய்வில் இருந்தேன். பிறகு தமிழ் நேசனில் சேர்ந்தேன். அவர்களுக்கு அவர்களின் வேலையை வெளியில் கொடுத்து செய்ய வேண்டியது இருந்ததாலும் எனக்குப் பத்திரிகை அனுபவம் இருந்ததாலும் என்னை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்போது தமிழ்க் குரலில் என்னுடன் வேலை செய்தவர்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள்.

தமிழ் நேசன் எனக்கும் ஆதி. குமணனுக்கும் ஒத்து வந்ததே கிடையாது. இருவேறு துருவங்களாகவே இருந்தவர்கள் நாங்கள். அது எனக்குத் தயக்கத்தைக் கொடுத்தது. ஆனால் எனக்கு கீழே பத்து பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்களே! என்னை நம்பி தமிழ்க் குரலுக்கு வந்தவர்கள் அவர்கள். அவர்களும் ஆறுமாதம் வேலையில்லாமல் இருந்தார்கள். என் மனசாட்சி என்னை உறுத்தியது. இதைத்தான் முன்பு தமிழ் மலரில் இருந்தபோது ஆதி.குமணன் செய்தார். ஆனால் என்னால் அவர் போன்று பத்திரிகையை உருவாக்கும் ஆற்றல் இல்லை. ஏற்கனவே ஒன்றை உருவாக்கி மூடிவிட்டு அமர்ந்திருக்கிறேன். எனவே தமிழ் நேசன் கொடுத்த வாய்ப்பு இந்தப் பத்து பேருக்கும் பயன் தரும் என நினைத்தேன். அரசியல் ரீதியாக கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் நேசன் கொடுத்த வெளி வேலைகளை இவர்களை வைத்துச் செய்ய ஆரம்பித்தேன். ஓராண்டுக்கு மேலாக நாங்கள் அந்த வேலையை செய்தோம். அடுத்ததாக சில காரணங்களால் அனைவரையும் தமிழ் நேசனுக்கே வரச் சொன்னார்கள். இனியும் தனியாகச் செய்தால் சம்பளம் கொடுப்பதில் சிக்கல் வரலாம் என்றார்கள். தமிழ் நேசனிலேயே எங்களுக்குத் தனியாக ஒரு மாடியை ஒதுக்கிக்கொடுத்தார்கள்.

காலப்போக்கில் என்னை ஆசிரியர் குழுவில் சேரும்படி சொன்னார்கள். என் பத்திரிகைத் துறை அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்கள். என்னை ஆசிரியர் குழு ஆலோசகராக நியமித்தார்கள். சிறிது காலத்தில் அதுவும் போனது.

அச்சு ஊடகங்களில் நீண்ட காலம் வேலை செய்துவிட்டேன். அதனால் எனக்கு அலுப்பும் அதன் மீது வெறுப்பும் வர ஆரம்பித்தது. இனியும் இங்கு இருக்கவேண்டுமா என யோசித்தேன். மீண்டும் சிறிது காலம் ஒதுங்கியிருந்தேன். அப்போது உமா பதிப்பகத்தின் உரிமையாளர் டத்தோ சோதிநாதன் அழைத்தார். என் எழுத்துகள் மீது அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர். ஓய்வாக இருக்கும் பொழுது என்னுடன் வாருங்கள். எங்கள் மாத இதழில் உங்கள் பங்கினைக் கொடுக்கலாம் என்றார்.

அந்த மாத இதழில் ஓராண்டு வேலை செய்து வந்தேன். அது மாணவர்களின் இதழ். விற்பனையும் எல்லைக்கு உட்பட்டதுதான். நான் ஒரு விசாலமான பத்திரிகையாளன். ஜனரஞ்சகமாக, வியாபார ரீதியாக பத்திரிகைகளைப் பார்ப்பவன். பத்திரிகை எல்லா தரப்பையும் அடைய வேண்டுமென நினைப்பவன். லட்சியப் பத்திரிகையாளன் அல்ல.

அப்போது தாய்மொழி என்னும் தினசரி வந்தது. டத்தோ கே.வி.எஸ் நடத்தினார். அதற்கு சில ஆலோசனைகள் தேவைப்பட்டது. டத்தோ கே.வி எஸ்.ஸின் நண்பர் என்னைச் சந்தித்துப் பேசினார். சந்தித்தோம். பேசினோம். பத்திரிகைக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கச் சொல்லிக்கேட்டார். என்னை ஆசிரியராக இருக்க முடியுமா என்றார். எனக்கு இப்போது அதில் விருப்பம் இல்லை என்றேன். ஆனால் ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என்றேன். என்னுடன் பத்திரிகையாளராக பணிபுரிந்த எஸ்.பி.சரவணனை அவருக்கு முன்மொழிவு செய்தேன். ஏழெட்டு மாதம் அங்கேயே இருந்து பத்திரிகைக்கான கட்டமைப்பை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

அங்கும் என் பணி முடிந்ததும் வெளியேறி சிறு காலம் ஓய்வில் இருந்தேன். விவசாய இதழுக்காக என் உதவி தேவை என்றார்கள். விவசாயம் என்றால் என்ன? எப்படி விவசாயம் செய்யலாம்? என்கிற அடிப்படையில் அந்த விவசாய இதழை டத்தோ சரவணன் வெளியிட நினைத்தார். அவர் அப்போது ‘நாம்’ என்னும் விவசாய அமைப்பை அமைத்து நடத்திக்கொண்டிருந்தார். தகவல்களை உள்ளடக்கிய மாதாந்திர சஞ்சிகையை உருவாக்க வேண்டும் என்றார். ஆனால் எனக்கு விவசாய அனுபவம் கிடையாது என்றேன். இருந்தும் சந்தித்துப் பேசலாம் என்றார். அவருடன் சேர்ந்து மூன்று, நான்கு விவசாய சஞ்சிகைகளை உருவாக்கினோம். நவீன விவசாயம் எப்படிச் செய்வது, உரத்தை எப்படிப் பயன்படுத்துவது போன்ற பயனான விசயங்கள் உள்ளடக்கிய இதழ் அது. விவசாயத்தால் வெற்றி பெற்றவர்களைப் பேட்டி கண்டோம். விவசாயம் எவ்வளவு உயரிய தொழில் என அங்குத் தெரிந்துகொண்டேன்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஊடகத்தொழிலை விட்டுவிட்டு ஒதுங்கி ஓய்வு பெற்றுவிடலாம் என நானும் என் துணைவியாரும் முடிவு செய்துதோம். வீட்டில் ஓய்வாக அமர்ந்துகொண்டோம். நான் நன்றாகச் சமைப்பேன். அது எனக்குப் பிடித்தமான கலையும் கூட. நாங்களே சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். பரபரப்பான சூழலில் அத்தனைக் காலம் வாழ்ந்துவிட்டு இப்போது இலகுவாக வாழ முடியவில்லை. அப்போதுதான் இணையத்தில் ஏதும் செய்யலாம் என்று தோன்றியது.  நானும் என் துணைவியாரும் வீட்டில் இருந்துகொண்டே இணையத்தில் செய்திப் பத்திரிகையை நடத்தினோம். அக்கினி.ஹெட்லைன்.டாட்.காம் என்ற பெயரில் நடத்தினோம். அன்று நாங்கள் படித்த செய்திகளைச் செய்தியாகவும் செய்தி விமர்சனமாகவும் எழுதினோம். முகநூலில் அது வெளிவரவும் அதற்கும் ஒரு குறிப்பிட்ட வாசகப் பரப்பு உருவானது. இந்த சமயத்தில் வணக்கம் மலேசியாவில் வாய்ப்பு வந்தது.

வேலைக்காக அல்லாமல் பொதுவாகவே அவருக்கு ஆலோசனை தேவை என்றார். என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? எனச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏன் யாரோ செய்யலாம் என்கிறீர்கள்? நீங்களே செய்துவிடுங்கள்! என்று கூறினார். இணைய இதழுக்கு நான் புதியவன் என்றாலும் அங்கு நிறைய விசயங்கள் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். உடனுக்குடன் செய்திகளை வெளியிடலாம். படிக்கின்ற வாசகர்களை பார்த்தால் 40 வயதுக்கும் கீழ்ப்பட்ட இளைஞர்கள். அவர்களுடன் பயணிப்பது சுறுசுறுப்பாக இருக்கிறது. மாற்று உலகத்தில் இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறேன். எது எப்படியோ ஊடகப்பயணம் என்னை பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

உங்கள் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.

அக்கினி: நான் தனிமைப்படுத்தப்பட்ட மனிதன். மலேசியா வந்தும் அப்பாவைப் பிரிந்து தனியாக வாழ்ந்தேன். எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தது வாழ்க்கை. எந்தக் கோணத்திற்கும் யார் இழுப்பிற்கும் போகக்கூடிய வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நிறைய எழுத்தாள நண்பர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் எம்.ஏ.இளஞ்செல்வன். அவரோ நவீன சிறுகதைகள் எழுதக்கூடியவர். நானோ நவீன கவிதைகள் எழுதக்கூடியவன். எங்களுக்குள் சிந்தனையும் ஒத்துப்போனது. ஓசையில் இருக்கும்போது அவர் ஒருமுறை என்னை அழைத்தார். அவரது அண்ணன் மகளுக்கு இங்கு வேலை கிடைத்துள்ளதாகவும் என்னிடம் அவரைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படியும் சொன்னார். நானும் இன்று வரை பத்திரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் வேலைக்கு வந்தார். நாங்கள் பழகினோம். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒருவரையொருவர் விரும்பினோம். ஆனால் அவர் வீட்டில் பெண் கொடுக்க யோசித்தார்கள். ஊரில் உள்ள பையன், விட்டுவிட்டு ஓடினால் என்ன செய்வது எனக் கேட்டார்கள். ஆதி.குமணனிடம் சென்னேன். அவர் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு யார் அந்த பெண் என்றார். நானும் இவர்தான் என பத்மினி ராஜமாணிக்கத்தை காட்டினேன். நம் அலுவலகத்தில் உனக்கு கீழ் வேலை செய்பவரா? என்றார். ஆமாம் என்றேன். அவரும் எங்கள் காதல் குறித்து அரசல் புரசலாக கேள்விப்பட்டதாகச் சொன்னார். எல்லாம் உண்மைதான் என்றேன். உடனே அவர், உன்னைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிதானே அனுப்பினார்கள் என்றார். நானும் ஆமாம் நான் நல்லபடியாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்றேன். இளஞ்செல்வன் தனது நண்பர் எனவும் அவரே அவரிடம் பேசுவதாகவும் கூறி, இவள் அவரது அண்ணன் மகள்தான், எளிதாகப் பேசிவிடலாம் என ஆதி.குமணன் குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்தது கடைசியாக இளஞ்செல்வனிடம் சென்றது. ஒரு படைப்பாளன் என் மகளுக்கு அமைந்தது மகிழ்ச்சிதான் என்றார். அவரது அண்ணனிடம் பேசுவதாகச் சொன்னார். எம்.ஏ.இளஞ்செல்வன் தலையீட்டுக்குப் பின் அவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவித்தார்கள். திருமணத்திற்கு பிறகுதான் என் வாழ்க்கை நேர்பட்டது. கல்யாணத்திற்கு முன்னமேகூட என் சம்பளத்தை சீக்கிரம் முடித்துவிட்டு மனைவியிடம் பணம் வாங்குவேன். அதையே அவர் திருமணம் முடிந்தும், நான் அப்போதே செலவாளி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஒருவகையில் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது திருமண வாழ்க்கையும் என் மனைவி பத்மினியும்தான். அன்றும் இன்றும் பிள்ளைகளை எங்களின் சொத்தாக நினைக்கிறோம். எங்களுக்குக் கிடைக்காதது அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என நினைத்தோம். நாங்கள் இருவருமே எழுத்தாளர்கள். இருப்பதைக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள். நல்ல கல்வி பிள்ளைகளுக்குத் தேவை என்று அக்கறை எடுத்துக்கொள்பவர்கள். மூன்று பிள்ளைகளும் பெரியவர்களாகிவிட்டார்கள். ஆளுக்கு ஒரு திசையில் இருக்கிறார்கள். இப்போது எங்களுக்கு ஓய்வான காலம். இலக்கியம் பேசுகிறோமோ இல்லையோ உலகத்தில் எல்லாவற்றையும் பேசிவிடுகிறோம். இந்தக் குடும்ப வாழ்க்கை எங்களுக்கு முழுமையானது. நிறைவுக்குப் பக்கத்தில்கூட போகமுடியாத வாழ்க்கை என்றால் அது ஊடகத்துறை வாழ்க்கை. அதற்கு நிறைவும் எல்லையும் கிடையாது. குடும்ப வாழ்க்கை ஒரு எல்லைக்குள் வந்துவிட்டது. யாரென தெரியாத இருவர் விருப்பப்பட்டு கல்யாணம் செய்து குடும்பமாகி வாழ்கிறோம். இங்கு வருத்தத்திற்கு இடமே இல்லை. திரும்பிப்பார்த்தால் மகிழ்ச்சிகள் கொட்டிக் கிடைக்கின்றன. அவ்வளவு அனுபவங்கள்.

இன்றைய மலேசியப் படைப்புலகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அக்கினி: இன்று படைப்பாளிகளிடமிருந்து விலகி இருந்தாலும் நான் இந்த விசயங்களை கவனிப்பது உண்டு. இன்றைய இலக்கிய வட்டங்களில் மாறுபட்ட தாக்கம் இருக்கிறது. இது அனைத்துலகத் தாக்கம் எனலாம். வட்டத்திற்குள்ளாக இருந்த காலம் போய் இப்போது பறந்து விரிந்து இருக்கிறார்கள். இளைஞர்களாக இருப்பது ஒரு காரணம். கணினி சார்ந்த உலகம் என்பதும் மற்றொரு காரணம். இன்று இலக்கியப் பார்வை விரிந்திருக்கிறது. நவீன இலக்கியத்தில் எங்கோ தொலைதூரத்தில் போய்விட்டார்கள் எனச் சொல்லும் அளவிற்கு நம் நாட்டில் இருக்கிறார்கள். புதுக்கவிதைகள் கூட 15 ஆண்டுகாலம் உச்சத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து கீழே வந்து, துணுக்குக் கவிதைகளும் விகடங்களும் எனும்படியான கவிதைகளாக மாறி ஆழ்ந்த பார்வையோ சமூக பார்வையோ இல்லாமல் விலகிப்போயிருந்த நேரத்தில் திடீரென ஒரு வட்டம் உருவாகி, மொழிப் பார்வையும் இலக்கியப் பார்வையும் அல்லாமல் உளவியல் ரீதியிலான பார்வையும் வைத்து அதில் கவிதை படைக்கிறார்கள். அப்படியான ஒரு தரப்பு உருவாகியுள்ளது. நம்மால் வர முடியாமல் போச்சே என்பது மாதிரியான ஏக்கத்தை கொடுக்கிறார்கள். சில இடங்களில் தோய்வுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் தாண்டி நல்ல படைப்பாளர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு நல்ல படைப்புகளைக் கொடுக்க முடியும். உலக அரங்கிற்கு செல்லக்கூடிய வாய்ப்பு நமக்கு அதிகம் இருக்கிறது. இந்த நம்பிக்கை இவர்களிடம் இருந்துதான் கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க முடியவில்லையே என்கிற வருத்தமும் உண்டு.

 பெரும் அனுபவம்; விரிந்த வாழ்க்கை உங்களுக்கு. ஆனால் இவற்றை அதன் நுண்மையோடு புனைவாக்கும் கவிதையை விட்டது குறித்து வருத்தம் உண்டா?

அக்கினி: என்னை பொருத்தவரை என் வாழ்க்கையில் மிகப்பெரிய விசயங்களை நான் தெரிந்தே இழந்திருக்கிறேன். தெரியாமல் இழந்தவர் ஒரு மடங்கு வருத்தப்படுவார்கள் என்றால் என்னை போன்று தெரிந்தே இழந்தவர்கள் நான்கு மடங்காக வருத்தப்படுவார்கள். ஒரு தப்பைத் தெரிந்தே செய்தாலும் அதற்கான தண்டனையை அவர் எதிர்க்கொண்டுதான் ஆக வேண்டும். அந்த வகையில் இது எனது தண்டனைக் காலம். என்னுடன் இருந்து என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு முக்கியமானதை நானே ஒதுக்கிவிட்டு ஐயயோ போச்சே! என வருத்தப்படும் காலம் இது. அது என் கவிதை. அதனை விட்டு விலகிவிட்டோமே என்கிற வருத்தம் எனக்கு எல்லா காலத்திலும் உண்டு. இதற்கு நான் மட்டும்தான் பொறுப்பு. ஒரு ஊடகவியளாலனுக்குத் தெரிந்த தொழில் ஊடகத்தொழில். செய்தி எழுதுவது செய்தியாளனின் வேலை. ஆனால் அதற்கு அப்பாலும் நமக்கு படைப்பிலக்கியம் வருகிறது என்றால் அது பெரிய விசயம். படைப்பாளர்களும் பத்திரிகையாளர்கள் வேறு வேறு. பத்திரிகையாளன் நிஜ உலகத்தில் வாழ்வான். படைப்பாளன் அவர்களின் நிஜத்தில் உள்ள இன்னொரு உலகத்தில் வாழ்வான். ஆனால் இவை இரண்டும் ஒரு சேர உள்ளவர்கள் வெகு சிலர்.  அப்படி வெகு சிலரில் நானும் ஒருவன். ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளிலும் நான் வெற்றியாளனாக போய்க்கொண்டிருந்தேன். ஊடகம் என்னை அமுக்கி முன்னோக்கி தள்ளிய வேகத்தில் நான் முன்னாடிச் சென்று என்னுடைய படைப்பாளியைப் பின்னால் விட்டுவிட்டேன். முக்கியமாக கட்டுரை எழுதுதல் என்னை ஆக்கிரமித்து கவிதைகளைக் கவனக்குறைவாக விட்டதனால், அது என்னை மீறி எவ்வளவோ தூரம் சென்றுவிட்டது. என்ன நிறைவோடு வாழ்ந்தாலும் அது எனக்கு இழப்புதான்.

இன்று நாம் அமர்ந்து யோசித்து மனதை ஒருநிலைப்படுத்தினால் கூட இரண்டு நாளில் மீண்டும் கவிஞனாக வருவேன் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் வேதனையை குறைக்க முடிகிறது. அப்படியான நம்பிக்கையில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். வயதும் ஓடிவிட்டது. எப்படி எட்டிப்பிடிப்பேன் எனத் தெரியவில்லை. இந்த ஊடகத்துறையைத் தூக்கிப்போட்டு விட்டு மூன்று நான்கு ஆண்டுகள் நான் வாழ்ந்தால் அந்த நாட்கள் கவிதைக்குரிய நாட்களாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையின் முடிவில் அந்தக் கடைசி காலகட்டத்தில், அந்த நேரத்தில் என் நினைவு சரியாக இருந்தால் நான் இழந்தது என்னவென்று நீங்கள் கேட்டால் கவிதை என்பேன்.

நேர்காணல் : ம.நவீன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...